பொ.யு. 640-ஆம் ஆண்டு புத்த சமய நூல்களை சேகரிக்க யுவான் சுவாங் இந்தியா வந்தார். இந்தியாவில் பல இடங்களுக்கு பயணித்து அவற்றை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். அவர் காஞ்சிபுரம் வந்தபோது நூறு புத்த மடாலயங்கள் இருந்தது எனவும், காஞ்சியில் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்களில் பெரும்பாலானவை திகம்பர சமணக்கோயில்கள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த எண்ணிக்கை உத்தேசமானதாக கூட இருக்கலாம். ஆலயங்கள் என்று சொல்வது மடாலயங்களாகவும் இருக்கலாம். இந்தக் குறிப்புகள் சுட்டுவது போல் 7-ஆம் நூற்றாண்டில் புத்த, சமணர்கள் தென்னகங்களில் நிறைந்திருந்தனர் என்பது உண்மையையே.
இப்போது தமிழகத்தில் புத்த மடாலயங்கள் சுத்தமாக ஒன்றும் இல்லாமலானாலும், சமண தீர்த்தங்கரர்களின் கோயில்கள் தொண்ட மண்டலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவைகளில் ஜைனகாஞ்சி அல்லது ஜினகாஞ்சி என்று அழைக்கப்படும் திருப்பருத்திக்குன்றம் ஆலயம் பல்லவர் காலம் முதல் இன்று வரை வழிபாட்டிற்குரியதாக உள்ளது.
‘தமிழக ஓவியங்கள் - ஒரு வரலாறு’ என்ற ஐ. ‘ஜோசப்தாமஸ்’ எழுதிய நூலை வாசித்துக் கொண்டிருந்த போது திருப்பருத்திக்குன்றம் செல்லலாம் என்று தோன்றியது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஒரு நாளில் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் சென்றேன். (14-11-22)
மழை இல்லை என்றாலும் வானம் கருமை சூழ்ந்திருந்தது. சில இடங்களில் மழைத்துளிகள் பெய்தன. பைக் பயணம் செய்ய விருப்பப்படுபவர்கள் இந்த வானிலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எட்டு மாதம் வெயில் பொழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் வான், நீர் நிறைந்து, சூல் கொண்ட பெண் போல மழை நீரை மேகங்களில் தாங்கிக்கொண்டிருப்பாள். காற்று வெம்மை குறைந்து ஈரப்பதம் கொண்டிருக்கும். நிலம் வறட்சியிலிருந்து மீண்டு பச்சை சூடியிருக்கும். குளிர் காற்றை உடல் உணரும்போது உடல் எடையற்றதாக மாறிவிடும்.
திருப்பருத்திக்குன்றம் வர்த்தமானர் ஆலயம் காஞ்சிபுரத்துக்கு வெளியில் உள்ளது. அங்கிருந்த முன்னாள் ஏரி குப்பைகளோடு மழை நீர் நிறைந்து தன் கடைசி காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த பெட்டிக்கடைக்கார அம்மாவிடம் விசாரித்து ஆலயத்துக்குச் சென்றேன். வர்த்தமானர் ஆலயம் கல்சுற்றுச்சுவரும், கல்அதிஷ்டானம் மேல் மூன்றுநிலை கோபுரத்துடனும் இருந்தது. வெளியில் இருந்த தொல்லியல் துறைப் பலகையில் ஆலயத்தை பற்றிய குறிப்புகள் இருந்தன. ஆலயத்துக்குள்ளே செல்லும்போது கருமை நிறம் கொண்ட ஒரு வயது நாய் என்னை வரவேற்றது. ஆலய பூசகர் (சமண மரபில் உபாத்தியாயர்) கருவறையின் உள்ளே நின்று இருவருக்கு கோவிலின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். என்னை அருகிருந்த கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட நீரில் கைகால்களை சுத்தம் செய்து கொள்ளச் சொன்னார்.
இவ்வாலயம் பல்லவர் காலத்தில் முதலில் கட்டப்பட்டிருக்கலாம். சோழர் காலத்திலும் விஜயநகர ஆட்சி காலத்திலும் விரிவாக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த கல்வெட்டுகளில் பழமையானது சோழர் காலத்தது. பொ.யு. 1131-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. கோயிலை சுற்றி இருபதுக்கும் மேல் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவை கோயிலுக்கு தானம் வழங்கியதைப் பற்றியது. 1517-ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் இக்கோயிலுக்கு ஒரு கிராமத்தை தானமாக வழங்கியதை குறித்த கல்வெட்டும் உள்ளது.
திருப்பருத்திக்குன்றம் ஆலயம், பலிபீடம், கொடிமரம், சங்கீத மண்டபம், முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவற்றுடன் பிற சந்நிதிகளும் கொண்ட ஆலய வளாகம். உபாத்தியாயர் என்னை கருவறைக்கு அழைத்தார். உள் கருவறையில் பழைய கருங்கல்லாலான வர்த்தமானர் சிலையும், அர்த்தமண்டபத்தில் புதிதாக பளிங்கில் செய்யப்பட்ட வர்த்தமானரும் இருந்தனர். அங்கிருந்த பழைய கல் சிலை சன்னதியில் செப்புப்படிவங்களுடன் மூலையில் இருந்தது. பழைய சிலை சேதமடைந்ததால் புதிதாக செய்யப்பட்டதாகச் சொன்னார். இங்கே வர்த்தமானரை, த்ரைலோக்யநாதர் என்று அழைக்கிறார்கள்.
அர்த்தமண்டபத்தில் 24 தீர்த்தங்கரர்கள் கொண்ட மேருவும், க்ஷேத்ர பாலகரும் இருந்தார்கள். வர்த்தமானருக்கு வலதுபுறம் தர்மதேவதையுடைய கருவறையும், இடதுபுறம் புஷ்பதந்தருடைய கருவறையும் உள்ளன. இந்தக் கோவிலின் கருவறை அதிஷ்டானம் கல்லாலானது, தூங்கானை மாடம் என்னும் கஜப்ருஷ்ட பாணியைக் கொண்டது, சமணக்கோவில்களில் இப்படிக்காண்பது அரிது.
கஜப்ருஷ்ட பாணியில் விமானம் |
பூசகர் எனக்கு வர்த்தமானருக்கு அடுத்துள்ள திரிகூட பஸ்தியை திறந்து காண்பித்தார். எங்களை முந்திக்கொண்டு கிருஷ்ணன் உள்ளே ஓடினான். அந்நாய்க்கு நான் கிருஷ்ணன் என்று பெயர் வைத்துக்கொண்டேன். பூசகரும் அவனும் தான் இந்த கோயிலை பார்த்துக் கொள்கிறார்கள். அவனை அங்கே போகாதே என்று சொல்லி கத்தினாலும், அவன் அருகில் வந்து விட்டு சிறிது நேரத்தில் மீண்டும் ஓடி தூரத்தில் நின்று, நாங்கள் ஒழுங்காக நடந்து கொள்கிறோமா என்று பார்த்துக்கொண்டிருந்தான். கோயில் முழுவதும் என்னை அழைத்துச் சென்றதும் அல்லாமல், தனக்குப் பிடித்த கூழாங்கற்களை எனக்கு எடுத்து வந்தும் கொடுத்தான். நான் மறதியாக மண்டபத்தில் விட்டு வந்துவிட்ட என்னுடைய தோள் பையை கொண்டு வந்து என்னிடம் பத்திரமாக சேர்த்துவிட்டான்.
மூன்று கருவறைகளை ஒன்றாகக் கொண்ட அமைப்பை திரிகூடபஸ்தி என்று சொல்வார்கள். திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள திரிகூடபஸ்தி பத்மபிரபர், வாசுபூஜ்யர், பார்ஸ்வநாதர் ஆகியோருடைய கருவறைகளை கொண்டது. தீர்த்தங்கரர்கள் ஐந்தடியில் சுதையால் செய்யப்பட்டு வண்ணங்கள் பூசப்பட்டிருந்தனர். அருகில் பெரிய முகங்கள் கொண்ட சாமரதாரிகள் சாமரம் வீசும் நிலையில் இருந்தனர். அவர்களுக்கும் புதிதாக வண்ணம் தீட்டப்பட்டிருந்தது.
நேமிநாதர் |
திருச்சுற்றில் பிரம்மதேவனுக்கு சிறு சன்னிதியும், கருவறைக்கு பின்னால் குரா மரம் ஒன்றும் உள்ளது. ஆதிநாதர், ஆலயத்தின் இடது திருச்சுற்று மண்டபத்தில் சன்னதியும், சாந்தி மண்டபமும் கொண்டுள்ளார். ஆதிநாதர் சன்னதியின் கடைக்கோடியில் முனிவாச அறைகள் உள்ளன. முகமண்டபத்துடன் கூடிய முனிவாச அறைகளில் தீர்த்தங்கரர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று திருப்பருத்திக்குன்றம் பிற்கால சோழ, நாயக்கர் பாணி ஓவியங்களுக்காக முதன்மையாக அறியப்படுகிறது. அவை செவ்வகவடிவில் முகமண்டபத்துடன் ஒட்டி கட்டப்பட்டுள்ள சங்கீத மண்டபத்தின் மேற்கூரையிலும், திரிகூடபஸ்தி சன்னதி முகப்பிலும் வரையப்பட்டுள்ளன.
இந்த சங்கீத மண்டபம் விஜயநகர அரசர் இரண்டாம் ஹரிஹரர் காலத்தில் கட்டப்பட்டது. விஜயநகர அரசின் படைத்தளபதியாக இருந்த ‘இருகப்பர்’ இங்கே இசை நிகழ்ச்சிகள் நடத்த இச்சங்கீத மண்டபம் கட்டியதாக சொல்லப்படுகிறது. சங்கீத மண்டபத்தில் உள்ள அரச சிற்பம் அவருடையதாக இருக்கலாம் என்று ஊகிக்கின்றனர்.
சங்கீத மண்டபத்தின் மேற்கூரையில் மூன்று பிரிவுகளாக ஆதிநாதர், வர்த்தமானர், நேமிநாதர் ஆகியோருடைய கதைகள் பகுதி பகுதியாக வரையப்பட்டுள்ளது. கூடுதலாக தர்மதேவி வரலாறு இதர ஓவியங்கள் என ‘தொண்ணூற்றி ஒன்று’ ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளது. அந்தந்த ஓவியத்தின் கீழ் ஓவியத்திற்கான விளக்கம் கிரந்தத்தில் எழுதி இருக்கிறார்கள்.
இரண்டாயிரத்துக்கு பின் கோயில் மீண்டும் புணரமைப்பு செய்யப்பட்ட போது ஓவியங்கள் இயற்கை கலவையால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் ஓவியங்களை முழுவதும் காண முடிகிறது. இந்த ஓவியங்களின் சிறப்பியல்பாக, அவை தனித்த ஒழுங்கில் ஒன்றன் கீழ் ஒன்றாக தீட்டப்பட்டுள்ளதையும், ஓவியத்தில் உள்ள உருவங்கள் ஒப்பீட்டளவில் சீராக வரையப்பட்டுள்ளதையும் சொல்கின்றனர்.
சமண ஆலயங்களில் வரைப்படும் சமவசரண அமைப்பு இங்கே ழுழுமையாக காண கிடைக்கிறது. தீர்த்தங்கரர் தான் கேவலஞானம் அடைந்தவுடன் உயிர் குலங்களை நோக்கி அறவுரை ஆற்றுவதை குறிப்பது சமவசரண அமைப்பு. ஞான உரை கேட்க மானுடர் மட்டுமல்லாமல் மான், மரம் என அனைத்து உயிர்க்குலங்களும் கூடி இருக்க பேரன்புடன் அனைவரையும் நோக்கி ரிஷபநாதர் தன் ஞானத்தை பொழிகிறார்.
சமவசரணம் |
சமணத்தில் ரிஷபநாதர் பெரும் தந்தையாக சித்தரிக்கப்படுகிறார். மானுடம் வாழ உழவு, தொழில், ஒவியம், சிற்பம், மொழி என வாழ்வியலை மானுடருக்கு கற்று தருகிறார். அனைத்தையும் கற்றுத்தந்து அவற்றை துறந்து கைகளை வானை நோக்கி விரித்து விண் கீழ் அமர்ந்துள்ளார்.
தமிழக ஓவியங்களில் பிள்ளைபேற்று அறையை இங்கு தவிர வேறெங்காவது வரைந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இரு தீர்த்தங்கர்களின் ஈற்றறை காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இருபெண்கள் அன்னையினரின் இருகைகளை பிடித்துக்கொண்டிருக்க பிள்ளை வெளிவரும் இடத்தில் திரை இட்டு மறைத்துக்கொண்டுள்ளனர்.
பிரம்மயக்ஷன் |
இங்கே இந்திரன் தன் வஜ்ராயுதத்தை ஆசனத்துக்கு கீழ் ஒளித்துவைத்து விட்டு தாமரை மலர் ஏந்தி இந்திராணியுடன் தேவ மகளிர் சூழ ஜராவதத்தின் மேல் வருகிறான், தன் இருபது கைகளில் தனித்தனி முத்திரைகள் பிடித்து தனக்கும் நடனம் வருகிறதா என்று ஆடிப் பார்க்கிறான்.
ரிஷபநாதர் ஓவியங்களுக்கு கீழ் நேமிநாதருடைய வாழ்க்கை சித்தரிப்புகள் வரைப்பட்டுள்ளன. நேமிநாதருடைய சகோதரர் என்பதால் கண்ணனுடைய கதையும் ஒவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. அவை வழக்கமான கண்ணனின் கதையிலிருந்து வேறுபட்டு சிறு மாற்றத்துடன் சமணர்களின் கண்ணன் கதையாக தீட்டப்படுள்ளது. கண்ணன் சக்கரமாகவும் குதிரையாகவும் வரும் அசுரர்களை கொல்லும் காட்சியில் அவர்களுடன் கிச்சுகிச்சுமூட்டி விளையாடுவது போலவே உள்ளான்.
ஓவியங்களில் தேவமகளிர் தங்களின் பணிகளை செம்மையாக செய்யும் முனைப்புடன் நடனம் கோலாட்டம் ஆடுவது. சமணர்களின் அட்டமங்கலங்களையும் மலர்களையும் ஏந்தி செல்வது, தீர்த்தங்கர்ருக்கு சாமரம் வீசுவது என, அவர்கள் தங்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த பெரும் ஓவியம் பிரம்மயக்ஷன் எனப்படும் பிரம்ம தேவனுடையது. சமணர்களின் யக்ஷர்களும் அழகு மீசையுடன் புன்னகைப்பவர்களாகவே இருக்கிறார்கள். யக்ஷன் யானை மேல் ஒரு காலை கீழே நீட்டி வசதியாக அமர்ந்துள்ளார். யானை துதிக்கையில் சங்கிலியை கொண்டு செல்கிறது.
நான் ஓவியங்களை பார்ப்பதை பார்த்து கோயில் உபாத்தியாயர் ஓவியங்களைச் சொல்லி விளக்க ஆரம்பித்தார். அப்படியே எங்களுடன் வந்து கொண்டிருந்த கிருஷ்ணனுடனும் பேசியபடி வந்தார். இதில் அவர் அடிக்கடி திட்டுவது என்னையா அவனையா, என்று வேறு எனக்கு சந்தேகமா இருந்தது. என்னைப் பற்றி விசாரித்த பின், தன் வீடு அருகில் உள்ளதாக சொன்னார். ஓவியங்களின் விளக்க புத்தகம் ஒன்றையும் எனக்கு அளித்தார்.
அருகிலுள்ள சந்திரபிரபாவர் ஆலயம் மூடப்பட்டிருந்தது. அதனால் அங்கே செல்ல முடியவில்லை. அந்த ஆலயமும் பல்லவர் காலத்திலிருந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. சங்கீத மண்டபத்தில் கழுத்துவலிக்க தலையை பின்னால் சாய்த்து ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். கிருஷ்ணன் என்னை பார்த்துக் கொண்டிருந்தான். வான் கருமை கொண்டபடியே வந்தது சீக்கிரம் மழை வரும் போல் இருந்தது. மழையில் நனைந்து கொண்டே கோயில் சிற்பங்களை பார்ப்பது மேலும் அதன் அழகைக்கூட்டுவது. அருகில் கச்சிப்பேடு கைலாசநாதர் கோயில் செல்ல எண்ணியிருந்தேன். கிருஷ்ணனும் வருகிறானா என்று கேட்கவேண்டும்.