Wednesday, 25 January 2023

ஆடல் - தாமரைக்கண்ணன், புதுச்சேரி

"உலகம் யாவையும் தன் உடலாகக் கொண்டவனை, 
கேட்பதனைத்தும் மொழியாக ஈந்தவனை, 
நிலவையும் உடுக்களையும் அணிகளாக்கி நிற்கும், 
நாம் வணங்கும் தூய அறிவே ஆனவனுக்கு,
மங்களம் மங்களம் மங்களம் "
                                                                - நடராஜர் தியான ஸ்லோகம் 

கோயில் கட்டிடக்கலை, சிற்பம், பண்ணிசை, ஆடல் என கலைகளில் நீண்ட மரபும், வெவ்வேறு படிநிலைகளாக செவ்வியல் கலை வளர்ச்சியும் உடையது தமிழ்நாடு. அதில் ஒரு கலையாக ஆடலும் இங்கு உள்ள கோவில் பண்பாடுடன் இணைந்து வளர்ந்து வந்துள்ளது. அக்கலை மொழியறியா தொல்குடி மக்களிடம் தொடங்கி தெய்வங்கள் வரை நிகழ்ந்துகொண்டிருப்பது. ஆடலுக்கும் தெய்வங்களுக்குமான பிணைப்பை பேசுவது இந்த கட்டுரையின் நோக்கம்.

 

எந்த வடிவமும் ஒழுங்கும் அற்ற கல்லை கடவுளின் வடிவமாக கொண்டது தொடங்கி நமது கற்பனையின் மூலமும், கைவினை தொழிலின் எல்லை வரையும் சென்று இன்று கடவுளை பல்வேறு வடிவங்களாக்கி வைத்திருக்கிறோம். எல்லாக் கலைகளும் அவ்வாறே இயற்கையான உந்துதலால் தூண்டப்பட்டு, இயற்கையை போலச்செய்வதாகவும் தோன்றி, அதன் எண்ணிறந்த வடிவச் சாத்தியங்களை புனைந்து, படிப்படியாக செம்மையாக்கம் பெற்று அதன் உச்சங்களை அடைந்திருக்கிறது.


ஒவ்வொரு கலையும் தன் உச்சம் வரை சென்று அங்கிருந்து அடுத்து மேற்செல்ல வழியில்லாததால் தன் கைகளை நீட்டி அருகில் இருக்கும் கலைகளை சந்தித்து உரையாடுகிறது. விழுதுகளாக தன்னை சிறு பின்னமாக்கி மண்ணுக்கு செலுத்துகிறது, வேர்களை பாவி பண்பாட்டில் ஆழ்ந்த பாதிப்பை செலுத்துகிறது, காய்ந்து உதிரும் சருகுகள் மூலம் தான் அடைந்த ஒன்றை சிதைத்தும் பார்க்கிறது, தன் விதைகளை மட்டும் தான்கண்ட அந்த உச்சநிலை அழகியலை, அதன் கருத்துவடிவை துளியும் மாறாது கடத்துவதாக ஆக்கி அமைந்திருக்கிறது.


செவ்வியல் நடனம் என்னும் போதே ஒரு தமிழ் மனதில் பரதநாட்டியம் என்ற சொல்லும் தொடர்ந்து ஒரு நடராஜர் சிலை உருவமும் மனதில் தோன்றக்கூடும். நமது ஆழ்மனம் இந்த கலைவடிவை இவ்வாறு ஒரு குறியீடென ஆக்கி வைத்திருக்கிறது. இந்த உரையாடல் வழி நாம் தமிழ்நிலத்தின் தெய்வங்களையும் அவற்றின் ஆடல்களையும் தொகுத்துப்பார்க்க முயற்சிப்போம். 


நடனம் என்பது ஆதிமனிதனின் உற்சாகத்தின் வெளிப்பாடாக இருக்கலாம், குழுவாக இணைந்து வாழும்போதே நடனம் இருந்ததை பாறை ஓவியங்களின் வழி அறிகிறோம். குரவை என்றும் துணங்கை என்றும் சங்க பாடல்களில் சொல்லப்பட்ட ஆடல் வகைகள் அவ்வாறுதான் தோன்றியிருக்க வேண்டும்.


இந்து மரபில் இலக்கியம், இசை, நடனம் ஓவியம், கட்டிடம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளும் கடவுளை உருவகிக்க பயன்பட்டிருக்கின்றன, பக்தியின் வெளிப்பாடாகவும், சடங்குகளின் தொடர்ச்சியாகவும், ஒரு நேர்த்திக்கடனாகவும் நன்றி வெளிப்பாடாகவும் கூட இவை செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் நடனமும் இசையும் இலக்கியமும் மொழியும் கடவுள்களால் மனிதர்களுக்கு அளிக்கப்பட்டதாக நம்பிக்கையும் புராணங்களும் உண்டு. 


"ஆய கலைகள் அறுபத்திநான்கினையும் ஏய உய்விக்கும் என்னம்மை..” என்கிறது சரஸ்வதி அந்தாதி.


செவ்வியல் கலைகள் அவ்வாறு முதல் ஆசிரியனாக கடவுளை கூறும் கதைகள் ஒருபுறமிருக்க நாட்டார் தெய்வங்கள் தனது வழிபாட்டுக்கான கலைகளையும், இசைக்கருவிகளையும் வரமாக வேண்டிப்பெற்ற கதைகளும் தமிழ்நாட்டில் கிடைக்கப்பெறுகிறது. 


பகுதி 1: செவ்வேள் ஆடல்


தஞ்சை நாயக்கர்கள் வரலாறு செவ்வப்ப நாயக்கர் என்னும் நாயக்க மன்னரிடமிருந்து துவங்குகிறது. விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக துவங்கிய இந்த ஆட்சி, பின்னர் தனித்த ஆட்சியாக தொடர்ந்தது. மதுரை நாயக்கர்களுக்கு பெண்கொடுக்க மறுத்து நிகழ்ந்த ஒரு போர் காரணமாக தஞ்சையில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. 


செவ்வப்ப நாயக்கர் கிருஷ்ணதேவ ராயரின் உறவினர், இவர் தமிழகத்தில் செய்த கோவில் திருப்பணிகளில் இரண்டு மிகமுக்கியமானவை. முதன்மையானது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய ராஜகோபுரத்தை கிருஷ்ணதேவராயர் ஆணையின் பேரில் கட்டியது. இரண்டாவது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய வளாகத்தில் முருகனுக்கான தனி ஆலயமான கந்தக்கோட்டம் எடுத்தது.


செவ்வப்பரால் கட்டப்பட்ட திருவருணை கோபுரத்தில் கொடிப்பின்னலில் உள்ள ஒரு முருகன், அதன் கீழே விஜயநகர ஆட்சியின் முத்திரை. 


தஞ்சை பெரிய கோவில் சோழப்பேரரசின் ராஜராஜனால் கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு பொ.யு.1010. பின்னர் வந்த செவ்வப்ப நாயக்கர் அங்கு முருகனுக்கான கோவில் கட்டிய காலம் பொ.யு. 1561-ஆம் ஆண்டு எனக்கொள்ளலாம் . இந்த கோட்டத்தை வீரப்ப நாயக்கர் மேற்பார்வையில் கட்டியவர் அதிர வீசி ஆச்சாரி என்பவர். இந்த கோவிலின் முன்பாக உள்ள மண்டபம் மல்லப்ப நாயக்கர் மண்டபம் எனப்படுகிறது . இந்த மண்டபம் தற்போது முருகன் கோவிலுடன் சுவரால் இணைக்கப்பட்டு இருப்பதை காணலாம், இந்த இணைப்பு பின்னர் தஞ்சையில் ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர்கள் காலத்தில் நடந்ததாக ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியம் கருதுகிறார். 


இராஜராஜன் வாயில் (தஞ்சை பெரிய கோவிலின் நுழைவு வாயில்களில் ஒன்று) செவ்வப்ப நாயக்கரால் திருப்பணி செய்யப்பட்டது, அதன் காரணமாக அங்கு அந்த வாயில் கோபுரத்தில் மயில்மேலமர்ந்து அருளும் முருகனை வணங்கும் உருவம் செவ்வப்ப நாயக்கர் என்பார்கள், குறிப்பாக முருகனிடத்தில் அவருக்கிருந்த பக்தி காரணமாகத்தான் இந்தக்கோவிலை கட்டினார் என்று சொல்லும் விதமாக. 


பெருவுடையார் ஆலய கோபுரமாகிய தட்சிண மேருவுடன் (வலது), செவ்வப்ப நாயக்கர் எடுத்த முருகன் ஆலயம் (இடது) 


இந்த முருகனுக்கான தனி ஆலயத்தில் மையக்கருவறையில் இருந்த சிலை தற்போது இல்லை, மாறாக ஆலயத்தின் கர்ணக் கூடுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட முருகனின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன (இந்த 52 வடிவங்களும் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய இராஜராஜேச்சுரம் நூலின் பக்கங்கள் 183 - 195-ல் புகைப்படத்துடன் விளக்கப்பட்டுள்ளன). ஒன்று அல்லது இரண்டு அடி உயரம் உள்ள இந்த சிலைகளை நீங்கள் அருகில் பார்க்க இயலாது, வலம் வரும்போது சற்று தள்ளி நின்று அண்ணாந்து பார்க்க வேண்டும். முருகனின் இத்தனை வித்தியாசமான உருவங்களை ஒரே இடத்தில் பார்க்கும்படி உள்ள ஆலயம் தஞ்சை பெரியகோவில் மட்டுமே, இதனால் தான் இந்தக் கோவில் ஒரு கலைப்பெட்டகமாகவும் திகழ்கிறது. இந்த முருக உருவங்களில் ஐந்து வடிவங்கள் முருகனின் ஆடும் கோலத்தை காட்டுகின்றன. தமிழகத்தில் முருகன் தன் தெய்வ அடையாளங்களோடு ஆடும்படி செதுக்கப்பட்டுள்ள சிலைகள் இவைமட்டும் தாம். 


1. இரு கைகளிலும் மலர்களை ஏந்தி குழந்தை வடிவில் நடனமாடும் முருகன் உருவம் சோமாஸ்கந்த வார்ப்புருக்களில் நடுவில் இருக்கும் முருகனை ஒத்திருக்கிறது. இதே உருவில் நிற்கும் முருகனும் இத்தொகுதியில் உள்ளார், ஆனால் இருகால்களையும் குதித்தெழ முனையும் பாவத்தால் இதை ஆடும் முருகன் என தெளிவுபடுத்துகிறார் பாலசுப்ரமணியன். சிறிய மாற்றங்களுடன் இரண்டு முறை ஒரே உருவம் வடிக்கப்பட்டுள்ளது . பரதநாட்டியத்தில் பயிற்றுவிக்கப்படும் தட்டி மெட்டடவு என்னும் நடன அடவை நினைவுபடுத்தும் இரு சிலைகள் இவை.


2. ஆயுதங்களோ, மலரோ ஏந்தாத இரு கைகளுடன் ஆடும் முருகன், வலது கையை உட்பக்கமாக மடக்கி மறு கையை வீசி இடதுகாலை உயர்த்தி ஆடுகிறார். கண்ணனின் குடக்கூத்து வடிவோடு ஒப்பிடக்கூடியதாக இச்சிற்பம் உள்ளது.


3. மயில் பின்னே நிற்க ஒருகரத்தில் கோழியை ஏந்தி ஆடும் முருகனின் கோலம் விந்தையானது, இந்த சிற்ப அமைதி மழுவை உயர்த்தி நிற்கும் காலசம்கார மூர்த்தியின் உருவத்தோடு ஒப்பிடத்தக்கது.


4. ஒருகையில் மலரோடு, மயில் பின்னே நிற்க ஆடும் குழந்தை முருகன் சிலை, இதையொத்த ஆடல் மகளிர் வடிவை திருவையாறு தூண் குறுஞ்சிற்பங்களில் காணலாம்.


இதே முருகனின் கோட்டத்தில், முருகனின் நடனக்கோலங்களுடன் இணைத்துப்பார்க்கும்படி நடனமாடும் வேறு தெய்வங்களாக நர்த்தன கணபதி மற்றும் வெண்ணை உருண்டையோடு காளிங்க நர்த்தனம் ஆடும் கண்ணன் போன்ற சிறிய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன . காலசம்ஹார மூர்த்தியின் வடிவம் ஒன்று மார்க்கண்டேயன் கதையுடன் சேர்த்து வடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆடும் முருகனின் இரு வடிவங்கள் கோபுரத்தின் சுதை வடிவங்களிலும் உள்ளன.


கோபுரத்தில் உள்ள முருகனின் நடன உருவங்கள்


நர்த்தன கணபதி, காளிங்கநர்த்தன கிருஷ்ணர் 

ஒரு கடவுள் ஏன் நடனம் ஆடவேண்டும் என்பதற்கு பல காரணங்களை சொல்லலாம், அந்த நடன மரபின் முதல் ஆசிரியனாக இருப்பது, வழிபாட்டு சடங்கின் ஒரு பகுதியாக ஆடுவது, புராணக்கதை தருணங்கள், தத்துவத்துடன் நடனத்தை பிணைப்பது இப்படி, இவை ஒவ்வொன்றிற்கும் முருகக்கடவுளின் நடனங்களையே உதாரணமாக சொல்ல முடியும்.


கும்பகோணம் சாரங்கபாணி கிழக்கு கோபுரம் திப்பதேவ மகாராயர் என்பவரால் எடுக்கப்பட்டது, இதன் காலம் பதினான்காம் நூற்றாண்டு . விஜய நகர அரசரான இரண்டாம் தேவராயரின் (ஆமாம் பெயரே தேவராயர் தான், கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்கு 63 ஆண்டுகள் முன்பு வரை ஆட்சி செலுத்தியவர்) காலத்தில் மகாமண்டலேஸ்வரராக இருந்தவர் திப்பதேவ மகாராயர். ஆனால் இந்தக்கோபுரம் அருகிலிருந்த சைவக்கோவிலில் இருந்து இடம்பெயர்ந்த ஒன்று என்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் கூறுகிறார். இந்த ஆலயத்தின் அருகிலிருந்த சோமநாதர் ஆலயத்திலிருந்து இந்த கோபுரம் இடம் பெயர்க்கப்பட்டது என்பது கோபுரத்திலுள்ள கல்வெட்டு ஆதாரங்களால் நிறுவப்பட்டுள்ளது, இவ்வாறாக 12-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்கனால் சைவ ஆலயத்தில் கட்டப்பட்ட கோபுரம், 14-ஆம் நூற்றாண்டில் வைணவ திருப்பதிகளில் ஒன்றுக்கு இடம் பெயர்ந்துள்ளது.


திப்பதேவரால் எடுக்கப்பட்ட கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் ஆலய கிழக்கு கோபுரம். 


கோபுரங்களில் பரதநாட்டியத்தின் 108 கரணச்சிற்பங்களை செதுக்கும் மரபு தமிழ்நாட்டின் கோவில்களில் காணப்படுகிறது. தஞ்சை பெரியகோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், திருவதிகை வீரட்டேஸ்வரர் கோவில், குடந்தை சாரங்கபாணி கோவில் ஆகியவற்றில் இந்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் மிகச்சரியாக 108 கரணங்களும் செதுக்கப்படாமல் எண்ணிக்கை குறைவாகவும், ஒரு கோவிலுக்கும் மற்றோர் கோவிலுக்கும் கரண அமைப்புகளில் வித்தியாசங்களும் காட்டப்பட்டும் அமைந்துள்ளன. 


தில்லையின் இரு கோபுரங்கள், மற்றும் திருவதிகையில் ஆடும் உருவங்கள் நடனப்பெண்களுடையவை. தஞ்சையில் நான்கு கரங்களுடன் ஆடுபவர் சிவபெருமான். ஆனால் இருகரங்களுடன் குடந்தை கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தில் ஆடும் ஆண் வடிவம் யாருடையது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்தக்கரண சிற்பங்களை ஆய்வு செய்தவர்கள் இவை கண்ணன், சிவன், தண்டு மகரிஷி என்னும் நந்திகேஸ்வரர் இவ்வாறு வெவ்வேறு ஆய்வு முடிவுகளை முன்வைத்திருக்கின்றனர். 


சோமேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாலும், பூத கணங்கள் சூழ ஆடும்படி இருப்பதாலும் இது கிருஷ்ணர் அல்ல என்று நிறுவப்பட்டது. பின்னர் சிவபெருமானை ஆகம விதிப்படி இருகரங்களுடன் வடிக்கக்கூடாது என்பதாலும், தஞ்சையில் நான்கு கரங்களுடன் மட்டுமே வடித்திருப்பதாலும் சிவன் அல்ல என்று மறுக்கப்பட்டது. சிவச்சின்னங்களை கொண்டு இரு கரங்களுடன் ஆடுவதால், பரத புராணங்களின்படி இது தண்டு மஹரிஷி என்பது இறுதியாக கூறப்பட்ட கருத்து. 


இங்கிருந்து முன்னகர்ந்து ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் இந்தக்கரண சிற்பங்கள், முருகனுடையவை என்கிறார். அதற்கு ஆதாரமாக அவர், கரண சிற்பங்களின் அணிகளான சன்னவீரம், கண்ணி மாலை முதலியவற்றை குறிப்பிடுகிறார். இவை பொதுவாக ஆண் தெய்வங்களில் முருகனைக் குறிக்க மட்டும் பயன்படும் அணிகள், பெண் தெய்வங்களில் கொற்றவைக்கு சன்னவீரமும், சப்தமாதர்களில் ஒரு தெய்வமாகிய முருகனின் அம்சமான கௌமாரிக்கு கண்ணி மாலையும் அடையாளங்களாக திகழும்.


குடந்தை கோபுர கரண சிற்பங்கள் 



கோபுரத்தின் வேதிகைப் பகுதியில் இந்தக்கரண சிற்பங்கள் வரிசையாக அமைந்திருக்கையில், அவற்றில் சில, முக்கியமாக பத்தியில் முதலும் இறுதியாக வரும் இடங்களில் கரண சிற்பத்தை சுற்றிலும் அழகிய தலைப்பு அலங்காரமும், அவற்றில் சிறு உருவங்கள் செதுக்கப்பட்டும் உள்ளது. ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் அவ்வாறான ஒரு அமைப்பு காணப்படுகின்றது. சுற்றிலும் உள்ள சிறு உருவங்கள் சிவசம்பந்தமானவை. அவ்வாறு சிவனும் பார்வதியும் பார்த்திருக்க பூதகணங்கள் தாளமிட அருகில் விநாயகரும் ஆடும் ஒரு சிற்பத்தின் உதவியோடு கும்பகோணம் சாரங்கபாணி ஆலய கிழக்கு ராஜகோபுர சிற்பங்கள் அனைத்தும் முருகனின் ஆடல் என்றே பாலசுப்பிரமணியன் தனது ஆய்வு முடிவை முன்வைக்கிறார்.

அம்மையப்பர் பார்த்திருக்க நடனமாடும் விநாயகர், கரணம் காட்டும் முருகன் 

இறுதியாக இக்கருத்தை உறுதிசெய்ய இரு நூல் ஆதாரங்களை தருகிறார் குடவாயிலார். “உ.வே.சா. பதிப்பித்த பரதசேனாபதீயம் நூலில் அம்பிகை விநாயகருக்கும், முருகனுக்கும் நடனம் கற்பித்த செய்தி உள்ளது. முருகன் அதன்வழி சித்தஐம், காத்திரஜம், வாகாரம்பம், புத்தியாரம்பம் என்னும் நான்கு வகை பாவங்களையும். புத்தியாரம்ப அனுபவத்தில் மூன்று பிரபந்தங்களை பிரித்து தன்பெயரால் வாயுதேவன், மதங்கன், அனுமன் முதலிய முனிவர்களுக்கு உபதேசித்தார் என்பதை பரதசேனாதிபதீயம் பாடல் மூலம் உணர்த்துகிறது.”


இந்த கோபுரப்பணியை மேற்கொண்ட திப்பதேவ மஹாராயர் சமஸ்கிருதத்தில் எழுதிய பரதநாட்டியம் தொடர்பான ‘தால தீபிகா’ என்னும் நூலில் (பரதார்ணவம் என்னும் பெயரும் இந்நூலுக்கு உண்டு) ‘குஹேச பரத லட்சணம்’ என்னும் மற்றோர் நடன நூலின் பகுதிகள் இடம்பெறுகிறது. திப்பதேவர் தானே நாட்டிய நூல் இயற்றும் அளவு நாட்டியத்தில் ஆர்வமும், திறனும் உடையவராக இருப்பதும், அவர்காலத்திற்கு முன்பே உள்ள ‘குஹேச பரத லட்சணம்’ என்னும் நூல் பற்றி அவர் அறிந்துள்ளதும் அந்த கரண சிற்பங்கள் முருகனுடையவை என்னும் கருத்தை நிறுவப் பயன்படுகின்றன. 


மேலும் குஹேச பரத லட்சணம் என்னும் நூலின் பெயராலும், பரதசேனாபதீயம் நூலில் சொல்லப்பட்டுள்ள தகவல்களாலும் முருகனை குருமுதல்வனாகக் கொண்ட நடன மரபு ஒன்று இருந்துள்ளது என்று குடவாயில் பாலசுப்ரமணியம் கருதுகிறார்.



கற்சிற்பங்களில் முருகனின் நடனத்தை கண்டோம், அடுத்த பகுதியில் உலோகச்சிற்பங்களை பார்க்கலாம்.


தாமரைக்கண்ணன், புதுச்சேரி

தாமரைக்கண்ணன், புதுச்சேரி



உதவிய நூல்கள் : - கோபுரக்கலை மரபு, குடவாயில் பாலசுப்ரமணியன் - இராஜராஜேச்சரம், குடவாயில் பாலசுப்ரமணியன்


- மேலும்