சோழர்காலத்தில் தொடங்கி அவர்கள் காலத்திலேயே வலுவடைந்த பிரிவினை வலங்கை, இடங்கை பிரிவினை. அதே போல் ராமானுஜர் தொகுத்தளித்த ஶ்ரீவைணவ மரபினுள் தென்கலை, வடகலை பிரிவு நெடுங்காலமாக நீடித்து இன்றுவரை வந்துள்ளது. இந்த பிரிவினை பொது பார்வையில் ஜாதி வேற்றுமையாகவும், கோயில் அதிகாரத்திற்கான சண்டையாகத் தெரிந்தாலும் இந்த இருபிரிவினருக்கும் வைணவ தத்துவ அடிப்படியில் சில மாறுபாடுகள் உள்ளன.
வைணவத்தில் தென்கலை, வடகலை உட்பிரிவு எப்போது எந்த காலத்தில் தொடங்கியது என்று தெரியவில்லை. சிலர் வேதாந்த தேசிகர் இயற்றிய வைணவ தத்துவ நூல்களிலிருந்துதான் இன்று இருக்கும் தத்துவ வேறுபாடுகள் தொடங்கியதாக கூறுகின்றனர். இருபிரிவுகளின் திருமண் எனப்படும் நாமத்தின் இன்றைய வடிவமும் எக்காலத்திலிருந்து வந்திருக்கிறது என்று தெரியவில்லை. சோழர்காலத்திலும் அதற்கு முந்திய காலத்திலும் திருமண் இந்த வடிவத்தில் இடப்பட்டது என்பதற்கான சான்றுகள் சிற்பத்திலோ செப்பு படிவங்களிலோ இருப்பதாக தெரியவில்லை. இன்னும் பழைய கோவில்களில் பெருமாளுக்கு கஸ்தூரிதிலகமும் சாற்றும் வழக்கமுள்ளது. சோழ-பாண்டியருக்கு பின் வந்த நாயக்கர் காலத்தில் திருமண் அவர்களுடைய கோயில் திருப்பணிகளில் நாயக்க மன்னரின் சிலைகளிலும்ளிலும் நெற்றியிலும் காணமுடிகிறது.
பொதுவாக ஊர்த்வபுண்டரம் என கீழிருந்து மேலாக நெற்றியில் மண்ணை குழைத்து இடும் வழக்கம் இருந்தது. (ஊர்த்துவபுண்டரம் பற்றி விரிவாக வேறு கட்டுரையில் பார்க்கலாம்) அந்த வழக்கம் ராமானுஜருக்கு பின் வைணவம் வலுவான தத்துவ அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு சமய சம்பிரதாயங்களுக்குள் சென்றபோது இன்றைய திருமண்ணின் வடிவம் வந்திருக்கலாம்.
இந்திய ஆறு தரிசனங்களில் கடைசி தரிசனம் உத்தரமீமாம்சை எனப்படும் வேதாந்தம். வேதாந்தம் வேத்ததின் இறுதிப்பகுதியான உபநிஷத்திலிருதந்து திரண்டெழுந்தது. அதன் பின் புத்த, சமண சமய தத்துவங்கள் இந்தியாவில் வளர்ந்து பரவியிருந்து ஆயிரம் வருடங்கள் நீடித்தன. பின் வந்த சங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று ஆசிரியர்களும் வேதாந்தத்தில் மாயை, முழுதளித்தல் (சரணாகதி), பக்தி என தங்களின் புதுதத்துவங்களை இணைத்து மேலும் வேதாந்தத்தை வளர்த்தெடுத்தனர்.
மூன்று ஆசிரியர்களும் வேதாந்த தத்துவங்களை ஏற்கின்றனர். பிரம்மம், ஜீவாத்மா, முக்தி ஆகியவற்றை தங்களின் தத்துவங்களில் அடிப்படையாக கொண்டுள்ளனர். அதே போல் மூவரும் வேதாந்தத்தின் அடிப்படை நூல்களான பிரஸ்தானத்ரயம் என்னும் உபநிஷத், பிரம்மசூத்திரம், பகவத்கீதை ஆகியவற்றிற்கு தங்களின் தத்துவ தரிசன அடிப்படையில் உரை எழுதி உள்ளனர்.
அதில் சங்கரரை தவிர்த்து ராமானுஜரும் மத்வரும் பிரம்மமாக நாராயணனை பார்க்கின்றனர். சங்கரருக்கும் ராமானுஜருக்கும் பிரம்மத்தை பற்றிய வரையறையிலும், பிரபஞ்ச கோட்பாட்டிலும், ஜீவாத்மாவின் குணங்களிலும், முக்தி, முக்திகான வழி ஆகியவற்றில் இருவருக்கும் வேறுபாடு இருக்கிறது.
சங்கரருடைய ஆசிரியர் கோவிந்தபகவத்பாதர் அவருடைய ஆசிரியரான கௌடபாதர் ‘மாண்டூக்ய காரிகா’-வில் மாயா தத்துவத்தை முன்வைக்கிறார். அதை மேலும் வளர்த்தெடுத்து தனது தரிசனமாக அத்வைதமாக சங்கரர் தொகுத்தளித்தார். பிரம்மம் தவிர்த்து இப்பிரபஞ்சம் மாயை என்பதும் அம்மாயயை ஜீவன் (ஆத்மா) விலக்கி பிரம்மத்தை அறியும் போது அவனும் பிரம்மமாகிறான்.
அந்த இரண்டற்ற நிலை அத்வைதம் என எளிமையாக கூறலாம். சங்கரர் பிரம்மம் ஏன் தனித்தது, மாயை என்பது என்ன என்பதற்கு பிரம்மசூத்திர சங்கர பாஷ்யத்தில் (உரையில்) விரிவாக உபநிஷத் வரிகளைக்கொண்டு விளக்குகிறார். அவருடைய வழிவந்த பத்மபாதர் ஆகியோர் மேலும் சங்கர பாஷ்யத்தை விரித்தெழுதியிருக்கின்றனர். சங்ரருக்கு பின் அத்வைதம் மேலும் சில உட்பிரிவுகளாக வளர்ந்தது. பாஸ்கரரால் உபாதிவாதம் என்றும், யாதவபிரகாசரால் பரிணாமவாதம் என்றும் அத்வைதம் உட்பிரிந்தது . சங்கரருக்கும் பத்மபாதருக்கும் பின் யாதவபிரகாசர் போல பிரம்மசூத்திரத்திற்கு மேலும் அத்வைத நோக்கில் சில உரைகள் எழுதப்பட்டுள்ளன.
ராமானுஜர் யாதவபிரகாசரிடம் வேதாந்தம் பயின்றார். அவர் தன்னுடைய ஆசிரியர்களின் வரிசையை வியாசரிடமிருந்து (பாதராயனர்) தொடங்குகிறார். அந்த ஆசிரியநிரை, வியாசர் (பாதராயனர்), போதாயனர், குஹதேவர், பாருசி, ப்ரம்மநந்தி, த்ரமிடாச்சார்யர், நம்மாழ்வார், நாதமுனிகள், யமுனைத்துறைவர் (ஆளவந்தார்) என வருகிறது. ராமானுஜரை அடுத்து நஞ்சீயர், நம்பிள்ளை, சுதர்சனபட்டர், வேதாந்த தேசிகர் , என நீள்கிறது ராமானுஜ வேதாந்தமாகிய விசிஷ்டாத்வைத தத்துவமரபு.
விசிஷ்டாத்வைத தத்துவ நூலான யதீந்த்ர மத தீபிகா இவ்வாறு ஆரம்பிக்கிறது:
”நாராயணனே புலனறிவுடைய உயிர்கள் (சித்) புலனறிவற்ற பொருள்கள் (அசித்) என அனைத்து குணங்களும் நிரம்பிய பிரிதற்ற பிரம்மமாக இருக்கிறான். அவனே பக்தியாலும், தன்னை முழுதளித்தலாளும் (சரணாகதியால்) மகிழ்வடைந்து முக்தியடைய தூண்டும் செயலாகிறான். அவனே மூன்று காலங்களையும் உலகையும் கடந்த உருவமின்மையை உடலாகக்கொண்டு, இறுதியில் அடையப்பட வேண்டிய முக்தியாகிறான்.”
ராமானுஜ வேதாந்தம் சித், அசித், ஈஸ்வரன் என்ற மூன்றின் கொள்கையின் அடிப்படையில் அமைந்தது. சித், உலகனைத்தும் உள்ள உயிர். அசித் - உலகு, பொருள். ஈஸ்வரன் - பிரம்மம், அதாவது நாராயணன். பிரம்மத்திடமிருந்து பிறந்ததினால் உலகும், உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் பிரம்மம் போன்றே உண்மையானது. அதனிடம் தோன்றி அதனால் இயக்கப்பட்டு அதனிடமே ஒன்றிணைகிறது. பிரம்மம் குணங்களால் நிறைந்து பல உருக்கள் எடுக்கிறது. அதனிடம் நாராயணனிடம் சேர்வதற்கு பக்தியும், தன்னை முழுதளித்தலும் வழியாகிறது.
இத்தத்துவத்தை ராமானுஜர் பிரம்ம சூத்திரத்திற்கும், பகவத் கீதைக்கும் எழுதிய உரைகள் வாயிலாகவும், வேதார்த்த சங்க்ரகம், வேதாந்த தீபம், கத்யத்ரயம் ஆகிய விசிஷ்டாத்வைத நூல்கள் மூலமாகவும் மிக விரிவாக எழுதி சங்கர அத்வைதத்திற்கு மட்டுமல்லாமல் பௌத்தம், ஸாங்கியம் என அவர் காலத்தில் இருந்த அத்தனை தரப்பினருக்கும் விரிவாக விளக்கம் அளித்து தன் தரப்பை நிறுவுகிறார்.
ராமானுஜரின் தத்துவ தரிசனத்தை தென்கலை, வடகலை ஆகிய இருபிரிவினரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதே சமயம் பக்தி சரணாகதி ஆகிய தத்துவ தரிசனத்தில் இருபிரிவினருக்குள் சில வேற்றுமை ஏற்படுகிறது. அவை பக்தி, சரணாகதி ஆகியவற்றை பின்பற்றும் முறைகளாலும், பக்தி சரணாகதி வழிமுறைகளை கடைப்பிடித்து முக்தியை எவ்வாறு அடைவது என்பது பற்றியும், பின் முக்தி எப்படி வழங்கப்படுகிறது என்பதிலும் வேற்றுமைகள் வருகிறது. அதை தொகுத்து அதன் சாரத்தை இங்கே மிக சுருக்கமாக பார்க்கலாம். ஏனெனில் தங்கள் தத்துவ கொள்கைகளை விளக்குவதற்காக பல ப்ரமாணங்களும், சூத்திரங்களுக்கு பாஷ்யமும் இரு பிரிவினரின் ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். அவை இத்தத்துவத்தை மட்டும் பயில்பவர்களுக்கானதாகவே இருக்கிறது. ஆனால் நாம் அதன் சாரத்தை தொகுத்துக்கொள்ள முடியும். அதை இங்கு பார்பபோம்.
வடகலை
ஶ்ரீவைணவத்தில் நாராயணனை ஶ்ரீமன் நாரயணன் என்றே குறிப்பிடுவது மரபு. திருமகளுடன் இணைபிரியாமல் தன் மார்பில் அணிந்துகொண்டுள்ளதால் திருவாழ் மார்பன் என அழைக்கப்படுபவன் நாராயணன். அதனால் வைணவத்தில் திருமளுக்கு நாராயணன் அளவிற்கே சிறப்பு இடம் உண்டு.
அந்நிலையில் திருமகள் நாராயணனுடன் எப்போதும் சேர்ந்திருப்பவள். திருமகளுடன் இணைந்திருக்கையிலேயே நாராயணன் முழுமையோடு இருக்கிறான். திருமகளும் நாராயணனைப் போல உண்மையானவள் அழிவற்றவள். நாராயணனுடன் எங்கும் உலகெங்கும் நிறைந்திருப்பவள். அவள் விரும்பினால் தனியாக சுதந்திரமாகவே முக்தியை அளிக்க கூடியவள் என்று வடகலை பிரிவினர் கூறுகின்றனர்.
அதனை அடுத்து, நாராயணனை அடைவதற்கு நம்மால் இயன்றவரை பக்தியாலும் சரணாகதியாலும் முயல வேண்டும். அவன் பாதங்களை தழுவி, விடாமல் பற்றிக்கொள்ள வேண்டும். இந்த வழி ‘மர்கட நியாயம்’ என சொல்லப்படுகிறது. அதாவது மர்கடம் என்றால் குரங்கு. குரங்கு தன் குட்டிகளை பிடித்துக்கொண்டு செல்வதில்லை மாறாக குட்டிகள்தான் தன் தாயின் வயிற்றை பிடித்துக்கொண்டு செல்லும். அந்த குரங்கு குட்டிகள் போல் நாம் நாராயணனின் பாதங்களை விடாது பிடித்துக் கொள்ளவேண்டும் என்பதால் இது மர்கட மார்கம்.
கைவல்ய நிலை என்று ஜீவன் முக்தியடைந்து சென்றடையும் ஒரு நிலையைப்பற்றி விசிஷ்டாத்வைதம் கூறுகிறது. அந்த கைவல்ய நிலையை வடகலை பிரிவினர் இவ்வாறு விளக்குகின்றனர்: ஜீவன் முக்தியடைந்த பிறகு வைகுண்டத்திற்கு அருகிலோ அல்லது பிரபஞ்சத்தின் அணுவில் எங்கோ கலந்துவிடுவது தான் கைவல்ய நிலை. அவ்வாறு முக்தியடைந்த ஜீவன் வைகுண்டத்தில் நுழைந்து பெருமாளை சென்றடைவதில்லை என்பதனால் கைவல்ய நிலை என்பது தாழ்ந்ததே என்று கருதுகின்றனர்.
அடுத்து முக்தியை அடைவதற்கு பக்தி, சரணாகதி (ப்ரபத்தி-முழுதளித்தல்) ஆகிய இரண்டில் எதை பின் பற்றினாலும் முக்தியை அடையமுடியும். சரணாகதியை மேற்கொண்ட பிறகு நாராயணனை மட்டும் சார்ந்திருப்பதாக உறுதிகொள்ள வேண்டும். அவன் மேல் முழு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். முக்திக்கான வேறு வழிகளை பின்பற்றக் கூடாது. முக்திக்கான தன்முனைப்பு செயல்களை முழுமையாக கைவி்ட வேண்டும்.
ஆத்ம வலிமையுள்ளவர்கள் முடிந்தவரை பக்தியை மேற்கொள்ளலாம். அதே சமயம் தன்னுடைய உலகியல் சடங்குகளையும் விடாமல் செய்து வர வேண்டும்.