Sunday, 5 March 2023

கல் மேல் நடந்த எழுத்து - அனங்கன்


(கல் மேல் நடந்த காலம், நூலை முன்வைத்து) 

தஞ்சை கும்பகோணம் பகுதிக்கு  கடந்த வருடம் பயணம் செய்திருந்தேன்.  சோழர்கள் எடுப்பித்த பெரும் கோவில்கள் முதல் கட்டிட கலையின் துள்ளியங்கள் என சொல்லத்தக சிற்றாலயங்கள் வரை சென்று பார்த்தேன். இந்த வருடம் அவ்வாறு பயணம் சென்று புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மதுரையை சுற்றிய குன்றுகளில் இருக்கும் சமணச் சின்னங்களை பார்த்து விட்டு வந்தேன். அதற்கான பயணத் தயாரிப்பில்  நூல்களை படித்தும் புரட்டிப்பார்ப்பதும் இணையத்தில் தகவல் சேகரித்து பயணத்திட்டத்தை வகுத்துக்கொள்வது வழக்கம்.

இம்முறை பயணத்திற்கான தயாரிப்பு நூல்களில் தியடோர் பாஸ்கரன் எழுதிய ”கல் மேல் நடத்த காலம்” என்ற அழகிய  நூலும் அடக்கம். அவர் தன்னுடைய இளம் வயதில் 30mm கேமராவுடன் பைக்கில் சமண சின்னங்கள் உள்ள இடங்களுக்கு சென்று அவ்விடங்கள் பற்றி  எழுதிய இக்கட்டுரைகள் எனக்கு மிக அனுக்கமானவையாக இருந்தன. 


”கல் மேல் நடந்த காலம்” தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்திலும் தன்னுடைய எழுத்து வாழ்க்கையின் ஆரம்கட்டத்திலும் எழுதிய வரலாற்று கட்டுரைகள் அடங்கியது. தமிழ் சூழலியலின் முன்னோடியாகவும், சினிமாவின் பண்பாட்டு ஆய்வாளராவும் இருக்கும் தியடோர் பாஸ்கரனை நேர்த்தியான வரலாற்று எழுத்தாளராக காட்டும் நூல் இது. இன்றைய இணைய பெருக்க காலத்தில் வரலாறு ஏதோ மர்மமாக இயங்கியதாகவும் மயாஜாலங்கள் நிரம்பியதாகவும் சித்திரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிற சமயத்தில் இவருடைய கட்டுரைகள் தரமான தகவல்களாலும் அழகியல் நோக்கிலும் எழுதப்பட்டவையாக உள்ளது.

சித்தன்னவாசல் சமணப் படுக்கை

சமணத்தில் ஆர்வம் கொண்ட பாஸ்கரன் சித்தன்னவாசல், ஆர்மாமலை குந்தவை ஜிநாலயங்களுக்கு சென்று வந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார்.  அவ்விடங்களுக்கு மிக சமீபத்தில் தான் நான் சென்று வந்திருந்தேன். இவர் காட்டும் எழுபதுகளின் சித்திரங்கள் வரலாற்று இடங்களின் அன்றைய நிலைமையைக் காட்டுகிறது.  இன்று  அந்த இடங்கள் பெருமளவில் மாற்றத்தை கொண்டிருப்பது திருப்தியும் அளிக்கிறது. சித்தன்னவாசல் குகையில் அவசர தம்பதியர் பிண்ணிப் பிணைதுள்ளதையும், குந்தவை ஜிநாலயத்தில் மாடு மேய்ப்பவர்கள் சமைப்பதற்காக ஓவியங்கள் நிறைந்த குகையில் தீமூட்டி கரிபடர்ந்துள்ளதையும் இவருடைய எழுத்தின் மூலமாகவே இன்று நாம் அறியமுடிவது நம் நல்லூழ். அக்கால கட்டத்தில் வரலாற்று இடங்களின் மேல் உள்ள நம்முடைய கவனம் எவ்வாறு இருந்துள்ளது என்றும் இதன்மூலம் தெரிகிறது.

தியடோர் பாஸ்கரன் பெரும்பாலும் பிரபலமான ஆங்கில பத்திரிக்கைகளில் எழுதியவை இக்கட்டுரைகள். அங்கு சுறுக்கமாகவும் நேர்த்தியாகவும் இத்தனை சொற்களுக்குள் சொல்லப்பட வேண்டும் என்று காட்டாயம் இருந்திருக்கலாம். அதனாலேயே அவருடைய கட்டுரைகள் சொல்ல வந்த செய்தியிலிருந்தே ஆரம்பித்து அதன் மையத்தை சொல்லிவிட்டு கச்சிதமாக முடிகின்றது. அவர் மொழி வரலாற்று தகவல்களையும் சிற்பங்களில் அழகியலையும் இணைத்து  சிடுக்குகள் இல்லாமல் வாசிக்கும் இன்பத்தை அளிக்கும் படி  உள்ளது.

ஜுனாகட் அசோக சாசனம்

இந்த கட்டுரைகளில் உள்ள அசோகரின் சாசனம் பற்றிய கட்டுரை பாஸ்கரனால் தொடர்ந்து எழுதி முன்வைக்கப்பட்டுக் கொண்டிருப்பது. அசோகர் உயிர் கொல்லாமை, சுற்றுச்சூழல் பேணல், காட்டுயிர் பாதுகாப்பு பற்றி செதுக்கிய ஜுனாகட் சாசனத்தை பற்றியது ‘தேவர்களுக்கு பிரியமான அசோகர்’ என்ற கட்டுரை. பாஸ்கரன் சுற்றுச்சூழல் பற்றிய வரலாற்றை அசோகரிடமிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்கிறார். அசோகர் போருக்கு எதிராகவும் சுற்றுச்சூழல் பேணுதலுக்காவும் கல்வெட்டுகள் செதுக்கி மக்கள் கூடும் இடங்களில் கூவி அறிவித்த அதே சொற்கள் தான் பாஸ்கரன் எனக்கு அளித்த பேட்டியில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி சொன்னது.

அவர் செய்த இரண்டு முக்கிய நேர்காணல்கள் இந்த நூலில் இருக்கிறது. தாமஸ் டிரவுட்மன் (Thomas Trautmann) அவருடைய நெருங்கிய நண்பர் அமேரிக்க வரலாற்று பேராசிரியர். மேற்கத்திய பேராசிரியர்களுக்கும் ஆராச்சியாளர்களுக்கும்  இந்தியாவின் மேல் உள்ள அதே ஈர்பால் புதிய முறையில் இந்தியாவின் வரலாற்றை அனுகி அறிய  திராவிட மொழிகளில் ஆய்வு நடத்தியவர். நேர்காணலில் சம்ஸ்கிருத-ஆங்கிலத்தின் மொழி ஒற்றுமைகளைக் கூறுகிறார். உறவுகள் சார்ந்த சொற்களிலிருந்து அன்றைய உறவுமுறைகள் எவ்வாறு இருந்திருக்கலாம் என்று தான் எழுதிய திராவிட உறவுமுறைகள் (Dravidian kinship) நூல் பற்றிய அறிமுகத்தையும் அளிக்கிறார்.

ஃபின்லாந்தை சேர்ந்த மொழியியலாளர் அஸ்கோ பர்பொலாவுடனான (Asko Parpola) நேர்காணலில், சிந்து நாகரீக முத்திரைகள் ஒரு எழுத்தப்பட்ட மொழி என்று தான் கருதுவதாகவும் அதற்கான நிரூபனமும் உள்ளதாக சொல்கிறார். சம்ஸ்கிருதம், ஜைமினி ஸாம வேதமும் அறிந்த அவருடைய நேர்காணல்  இன்றும் முக்கியமானதாகவே உள்ளது.

நூலில் இரு ஆளுமைகளை பற்றி வருகிறது. ஒன்று ரோஜா முத்தையா. அவரைக்காண பாஸ்கரன் 1975-ஆம் ஆண்டு கோட்டையூர் செல்கிறார். தமிழ் ஆய்வாளர்கள் மேல் மதிப்பும் நம்பிக்கையும் இல்லாத முத்தையா பாஸ்கரனுக்கு கொஞ்சமே புத்தகத்தை தந்ததும் அவர் தந்த பழைய சினிமா பத்திரிகைகளிலிருந்து தனது ஆய்வுக்கு தொடக்கம் கிடைத்ததையும், முத்தையா விற்ற புத்தகங்கள் அமேரிக்க, லண்டன் பல்கலைகழக நூலகங்களில் இருப்பதும் வாசிக்க சுவாரசியமானவை. பின்னாளில் தான் பணிஓய்வு பெற்ற பின் ரோஜா முத்தையா பெயரால் அமைந்த நூலகத்தில் பணியாற்றுகிறார் பாஸ்கரன். தான் முதன்முதலில் முத்தையாவைச் சந்தித்தபோது அவர் இதை எண்ணியிருக்கப் போவதில்லை.        

இன்னொருவர் கால்டுவெல். கால்டுவெல் தமிழ் மக்களை புரிந்துகொள்ள தமிழ் நிலங்களில் நடந்தே பயணம் செய்கிறார். கொடைக்காணலில் மலை மேல் கழுதை பாதையின் முடிவில் தனக்கு பிரியமான வீடொன்றை கட்டிக்கொள்கிறார். இடையங்குடியிலேயே தனது வாழ்வை கழித்த கால்டுவெல் அங்கேயே அவரது சபையைச் சேர்ந்தவர்களால் உடல் அடக்கம் செய்யப்படுகிறார். கால்டுவெல் கட்டிய ஆலயம் கால்டுவெல் கட்டினார் என்பதற்கு எந்தவித அறிவிப்பு பலகையும் அங்கு இல்லாத காரணத்தினால் மதுரை தென்னிந்திய திருச்சபை பேராயருக்கு பாஸ்கரன் கடிதம் ஒன்றும்  எழுதியிருக்கிறார். 

சிற்ப அழகியல் கட்டுரைகளில் நேர்த்தியாக வந்துள்ளது ‘தமிழ் அரச பரம்பரையினரின் உருவ சிற்பங்கள்’ என்ற கட்டுரை. இன்று சிற்பவடிவியல் (Iconography) சார்ந்து நல்ல புரிதலும் தகவல்களும் கொண்ட நூல்கள் தமிழில் எழுதப்பட்டுவிட்டது. ஆயினும் இந்த கட்டுரை பாஸ்கரன் சிற்பங்களை அழகியல் ரசனையுடன் விவரிப்பதனால் முக்கியமானதாகிறது.


அவர் பின்னாளில் எழுதிய சினிமா பற்றிய பண்பாட்டாய்வுக்கு எடுத்துக்காட்டாக அவர் தமிழில் எழுதிய முதல் கட்டுரை ’சிவதாண்டவாம் - ஓர் அஞ்சலி’ கட்டுரை இருக்கிறது. இக்கட்டுரை மார்ச் 1975-ல் கசடதபற இதழில் பிரசுரமாகியது. இந்திய கலை, தத்துவ அறிஞர் ஆனந்த குமாரசாமி பற்றி எடுக்கப்பட்ட ஆவணப் படத்தின் மதிப்புரையே இக்கட்டுரை. மேலும்  ஜோப் தாமஸ்யுடைய தமிழக ஓவிய வரலாறு நூலின் மதிப்புரையும், அவருடைய மற்றொரு நண்பர் சுரேஷ் பிள்ளையின் கல்வெட்டுப் பற்றிய மொழிபெயப்பு கட்டுரையும் இந்நூலில் இருக்கின்றன.

இந்த நூலை வாசிக்கும் போதே இயல்பாக இன்றைக்கும் அன்றைக்குமான வேறுபாடு தான் மனதில் எழுகிறது. இன்று ஒரு கேமராவுடன் கோவில்களுக்கும் வரலாற்று இடங்களுக்கும் சென்று ஏதேதோ மர்மக்கதைகளை சொல்லி பிதற்றிக்கொண்டு அதை இணைத்தில் பதிவிடுபவர்கள் இருக்கிறார்கள். சிற்பங்களில் வீணை வாசிக்கிறேன் ஸ்வரஜாலம் காட்டுகிறேன் பேர்வழி என்று கல்லால் சிற்பங்களை அடித்து உடைக்கும் மூடர்கள் நிறைந்திருக்கும் சூழல்  இருக்கிறது.

தியடோர் பாஸ்கரன் காலத்தில் ஓவியங்களை சுரண்டி ஆண்மைக்கு மருந்தாக அளித்தவர்களும், வரலாற்று இடங்ளில் தீமூட்டி சமைத்தவர்கள் இருந்தார்கள் என்றால் இன்று சமணப் படுக்கைகள் உள்ள இடங்களில் தங்கள் பெயர்களை கிறுக்கியும் அங்கேயே குடித்து விட்டு மது புட்டிகளை உடைத்து விட்டு செல்பவர்களர்கள் உள்ளனர். அவர் காலத்தில் அவ்விடங்கள் பற்றி தொடர்ந்து எழுதி அந்த வரலாற்று இடங்களின் முக்கியத்துவத்தை உணரவைத்திருக்கிறார்கள்.

நாம் அதை தொடர்ந்து எடுத்து செல்ல வேண்டும். வரலாற்று சார்ந்து தமிழின் பி்ரபல வெகுஜன பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுத வேண்டும். அதே சமயம் வரலாற்றில் ஆர்வமும் அதன் தகவல்களில் உண்மைத் தன்மையும் கொண்ட அழகியல் ரசனையுடன் எழுத வேண்டும். இன்று நம்மிடம் தரமான வரலாற்று ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அளிக்கும் வரலாற்று தகவல்களிலிருந்து தங்கள் தனி ரசனையும் பார்வையையும் கொண்ட வரலாற்று எழுத்தாளர்கள் எழுத வர வேண்டிய அவசியத்தை இந்நூல்  உணர்த்துகிறது.

அனங்கன்