சு. தியடோர் பாஸ்கரன் தமிழின் முன்னோடி சூழலியல் ஆளுமை. தமிழில் சூழலியலை முதன்மைப்படுத்தி எழுதியவர். சூழலியலுக்கான சொற்றொடர்களை உருவாக்கியவர். சினிமாவின் மீது பண்பாட்டு நோக்கில் ஆய்வுகள் செய்திருக்கிறார். நாடகங்களை பற்றியும் ஆய்வுகள் செய்திருக்கிறார். தன்னுடைய இளமை முதல் வரலாற்றில் ஆர்வமுடைய பாஸ்கரன், பிரபல ஆங்கில பத்திரிக்கைகளில் வரலாற்றுக் கட்டுரைகளை 1967 முதல் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான தொடர் செயல்பாடுகளின் மூலம் அவர் இத்துறைகளுக்கு பெரும் பங்களித்திருக்கிறார். பொதுவாக இந்த தளங்களில் எழுதப்படும் மிகை உணர்வுகள் தவிர்த்து தரவுகளின் அடிப்படையில் அழகியல் ரசனையுடன் எழுதியவர்.
சு. தியடோர் பாஸ்கரன் தாராபுரத்தில் 1940-ஆம் ஆண்டு பிறந்தார். மனைவி திலகா, மகள் நித்திலா, மகன் அருள். முதல் நூலான The Message Bearers 1981-ல் வெளியானது. பத்துக்கும் மேல் சூழலியல் நூல்கள் வெளிவந்துள்ளது. ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் எழுதுபவர். ஆங்கில நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்பாக தண்டோராக்காரன், பாம்பின் கண் மற்றும் தமிழில் கையிலிருக்கும் பூமி, கல் மேல் நடந்த காலம் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. கானுறை வேங்கை, சோழர் கால செப்புப் படிமங்கள், யானைகளும் அரசர்களும் ஆகிய நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.
இரண்டு முறை இயற்கைக்கான உலக நிதியகத்தின் (WWF) அறங்காவலராக இருந்தார். 2014-ல் கனடா இலக்கிய தோட்டத்தின் இயல் விருது தியடோருக்கு அளிக்கப்பட்டது. அஞ்சல்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது பெங்களூருவில் மனைவியுடன் வசிக்கிறார்.
தாய் தனலெட்சுமி, தந்தை சுந்தரராஜுடன் பாஸ்கரன் - 1941 |
நீங்கள் எழுத வந்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாகிவிட்டது தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். இந்த பயணத்தை எப்படி உணர்கிறீர்கள்?
ஐம்பது ஆண்டுகள்னு நினைத்துப் பார்க்கும்போதே ரொம்ப திருப்திகரமா இருக்கு. முதல்முதல்ல சென்னையில் இருந்த கசடதபற குழுவான, கிரியா ராமகிருஷ்ணன், சா கந்தசாமி, ஞானக்கூத்தன் இவர்களோடு பழக்கம் ஏற்பட்டது. அப்பொழுது யுனைடட் ஸ்டேட்ஸ் இன்ஃப்ர்மேஷன் சர்வீஸ் அரங்கத்தில் திரையிட்ட DANCE OF SIVA படத்தை பார்த்தேன், கலை வரலாற்றுக்கு ஆனந்த குமாரசாமியின் பங்களிப்பைப் பற்றிய படம். கிரியா ராமகிருஷ்ணனிடம் அந்தப்படத்தைப் பற்றி பேசும்போது அவர், இதைப் பற்றி எழுதேன் என்றார். இல்லை எனக்கு எழுதவருமா தெரியலை என்றேன், அவர் நீ எழுது என்றார்.
அப்போது திருச்சியில் இருந்தேன் அந்த இரவிலேயே உட்கார்ந்து எழுதியதுதான் "சிவதாண்டவம்- ஓர் அஞ்சலி" என்ற கட்டுரை. பின்னர் சில கட்டுரைகள் அதிலே எழுதினேன், தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். ஐம்பது ஆண்டுகளில் இந்த எழுத்துப்பணி எனது வாழ்வை செறிவாக்கியிருக்கிறது. அதில் எனக்கொரு பெரிய வசதி என்னவென்றால், நல்ல வேலை இருந்தது, சில நாட்கள் தான் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பொதுவாக நான் ஐந்து மணிக்கு மேல் அலுவலகத்தில் இருக்க வேண்டிய அவசியம் அந்த காலத்தில் எனக்கு ஏற்படவில்லை. அதுவும் தொடர்ந்து எழுத காரணமாக இருந்தது.
வேலை பளுவை பற்றி சொன்னீர்கள், தற்பொழுது மென்பொருள் துறையில் ஒருநாளைக்கு 15 மணிநேரம் வேலை செய்யவேண்டியிருக்கிறது. நமது ஊரில் எழுத்தாளர் என்பது தனி வேலையும் இல்லை. இங்கு ஒரு எழுத்தாளர் தனது பொருளியல் தேவைகளுக்கான பணியையும், சொந்த வாழ்வையும் கவனித்துக்கொண்டு எழுத வேண்டும். வேலையின் அழுத்ததையும் எழுத்தையும் ஓரே சமயம் கையாள்வது சாத்தியமா?
சாத்தியமாகியிருக்கிறது என்று தான் சொல்வேன். இன்றைய தலைமுறை எழுத்தாளர்களும் பலர் அதிக பணிச்சூழலில் இருந்துகொண்டே தொடர்ந்து எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். அவ்வாறு எழுத வேண்டும் என்றால், முதலில் உங்களுக்கு எழுத்தின் மேல் பெரிய ஈடுபாடு இருக்கவேண்டும்.
சென்ற தலைமுறையில் சார்வாகனை எடுத்துக்கொள்ளுங்கள் அவருக்கு கடுமையான நேரத்தை செலவிடும் வேலைதான் இருந்தது, ஆனாலும் அற்புதமான கதைகளை எழுதினார். அதே போல சுஜாதா, தி ஜானகிராமன், அகிலன் இவர்களையும் சொல்ல முடியும். எழுத்தில் முக்கியமான அம்சம் ஈடுபாடுதான், இரண்டாவது எழுதுவதை நீங்கள் அனுபவிக்க ஆரம்பிக்க வேண்டும், அது ரொம்ப முக்கியம்.
மார்டிமர் வீலர், மயிலை சீனி. வேங்கடசாமி, காலா கலேல்கர் என வரலாற்று மனிதர்கள் அனேகரை சந்தித்துள்ளீர்கள். அவர்களுடனான நேரடிச்சந்திப்புகள் உங்களில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது? அத்தனை வரலாற்று மனிதர்களை சந்தித்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
மார்ட்டிமர் வீலர் |
அவர்களையெல்லாம் சந்தித்த பொழுது என் வாழ்வில் முக்கியமான தருணம் இதுன்னு உணரவில்லை, அவர்களெல்லாம் மறைந்த பின் எவ்வளவு முக்கியமானது அவை என்று உணர்ந்தேன். மயிலை சீனி வேங்கடசாமியின் எளிமையும், சாந்தமான நடைமுறையும் என்னை ஈர்த்தன. வரலாறு முதுகலை படிக்கும்போதுதான் மார்ட்டிமர் வீலரை 1959-ல் சந்தித்தேன். அவரிடம் நாங்கள் வரலாறு மாணவர்கள் என்று சொன்னோம். அதிக நேரம் பேச முடியவில்லை.
அப்போது சென்னை அருங்காட்சியகம் பெரிய வரலாற்று தளம் போல இயங்கிக்கொண்டிருக்கும். South indian society for archaeology மூலமாக மாதம் ஒருமுறை அங்கு கூடுகை நடைபெறும். அங்கு நடந்த அருங்காட்சியக ஆய்வாளர் கருத்தரங்கு ஒன்றில்தான் வீலரை (Mortimer Wheeler) சந்தித்தேன். அங்கு தான் உலகப்புகழ் பெற்ற கிரேஸ் மார்லி (Grace Marley) மற்றும் பிற வரலாற்று ஆசிரியர்களையும் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
கிரேஸ் மார்லி |
கிரேஸ் மார்லி பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை சேர்ந்தவர், சுதந்திரமடைந்த பிறகு நேரு அவரை அழைத்துவந்து தேசிய அருங்காட்சியகத்திற்கு இயக்குனராக நியமித்தார். வெகுநாள் கழித்துதான் அவர்களெல்லாம் வரலாற்று மனிதர்கள் என்று உணர்ந்தேன். ஆனால் இவர்கள் யாரும் என்னை பெரிதாக பாதிக்கவில்லை. இவர்கள் அனைவரையும் நான் மதித்தேன். ஆனால் அவர்கள் பலருடைய வரலாற்றியல், வரலாறு எழுதும் முறையில் எனக்கு உடன்பாடு இல்லை.
மயிலை சீனி வேங்கடசாமி |
என்னை அதிகம் பாதித்தவர் சுரேஷ் பிள்ளை என்ற வரலாற்று ஆய்வாளர் தான். அவர் ஒரு மேதை. அவர் தமிழ் இலக்கியத்தில் முதுகலை படித்தார், பின் தொல்லியல், கோவில் கட்டடக்கலை படித்தார். ஒரு கோவிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து நமக்கு புதுவிதமான புரிதல்களையெல்லாம் தருவார். அவர் தான் நாம் சரித்திரம் எழுதும் முறை ஒரே வழியில் போய்க்கொண்டிருக்கிறது, இது தவறு என்று சுட்டிக்காட்டினார். அவருடைய தாக்கம் தான் எனக்கு அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறேன் .
அப்பவே எனக்கு வரலாறு மேல ஒரு ஈடுபாடு இருந்தது. அப்பாவிடம் நான் எனக்கு வரலாறு படிக்கணும்னு சொன்னேன். அப்பா எங்கெல்லாம் வரலாறு நன்றாக கற்பிக்கும் கல்லூரிகள் இருக்கிறது என விசாரித்து, பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் காலேஜில் சேர்த்தார். அது சரியான கணிப்பு. அங்கு இரண்டு வருடம் நான் வரலாறு படித்தேன். கிரேக்க வரலாறு, ரோமானிய வரலாறு இவையெல்லாம் படித்தேன், பிறகு சென்னைக்கு வந்து மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் எனது படிப்பை தொடர்ந்தேன்.
அஞ்சல் துறை விழாவில் தியடோர் பாஸ்கரன் - கோவை 1979 |
உங்கள் இளமைக்காலம் முதல், தொடர்ந்து சமணத்தலங்களுக்கு சென்றிருக்கிறீர்கள், இந்த ஆர்வம் எப்படி வந்தது?
நான் வேலூரில் இருந்தபொழுது அங்கு சமணத்தலங்கள் அதிகமாக இருந்ததை கவனித்தேன். ஆர்மாமலையை முதலில் பார்த்தேன் அது சமணர்கள் இருந்த குகை என்று தெரிந்துகொண்டு அதைப்பற்றி படிக்க ஆரம்பித்தேன். அப்படித்தான் ஈடுபாடு வந்தது. நான் ஒரு கிருஸ்தவனாகத்தான் பிறந்தேன், ஆனால் சமணம் எனக்குப் மிகப் பிடித்த சமயம்.
ஏனென்றால் அது எல்லா மனிதனையும் சமமாக நடத்தியது. யோசித்துப் பாருங்கள், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு தத்துவம் கொண்டு வந்திருக்காங்க. உலகத்தில எல்லா இடத்திலேயும் மனிதன் படிநிலையை ஏற்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தில் அதுவும் இந்தியாவில் பத்தாம் நூற்றாண்டு ஜாதி கட்டுமானம் அவ்வளவு இறுக்கமாக இருந்த காலம், அதற்கு முன்பே இவர்கள் "பிறப்பொக்கும்" என்று சொன்ன சமயம் அது.
ஜீவபந்து ஸ்ரீபால் |
அதனால்தான் எனக்கு சமணம் மீது அதிக ஆர்வம் வந்தது. அந்த சமயம் சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் பற்றி படித்தேன். அப்போதெல்லாம் யாருடைய எழுத்தையாவது படித்தால் உடனே போய்ப் பார்த்துவிடவேண்டும் என்று கிளம்பிவிடுவேன். ஸ்ரீபால் என்னுடைய ஆர்வத்தை பார்த்து விட்டு எனக்கு சில முக்கியமான புத்தகங்களை எல்லாம் கொடுத்தார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பேன். நான் சென்று வந்த சமண தலங்களை பற்றியெல்லாம் கேட்பேன். முக்கியமாக தமிழ் சமணத்தை பற்றி நிறைய சந்தேகங்கள் கேட்பேன். அவர் உயிரோடிருந்தவரை அவரை சந்தித்துக்கொண்டே இருந்தேன்.
இப்பொழுதும் சமணத்தையும், பௌத்தத்தையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். நான் இவற்றில் அறிஞன் கிடையாது, எனக்காக நான் படிக்கிறேன். ஜென் பௌத்தம் மீதும் தனி ஈடுபாடு உண்டு. சில ஜென் பட்டறைகளில் கலந்து கொண்டிருக்கின்றேன்.
வரலாற்று இடங்களுக்கு தொடர்ந்து பயனம் செய்துள்ளீர்கள். உங்கள் துவக்க கால பயணங்களை ஒப்பிடுகையில் இப்போது அந்த இடங்களின் பராமரிப்பு மேம்பட்டதாக நினைக்கிறீர்களா?
இந்து சமயத்தை பொறுத்தவரை ஒரு பெரிய சமய மறுமலர்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இதில் ஒரு வெளிப்பாடு கோவில்கள் தூய்மையாக பராமரிக்கப்படுவது. கோவில்கள் மீதான கவனம் கூடியிருக்கிறது, ஆனால் வரலாற்றுத்தளங்கள் அப்படி மேம்பட்டிருப்பதாக சொல்ல முடியாது. வழிபாட்டில் உள்ள முக்கியமான கோவில்கள் நிச்சயம் மேம்பட்டிருக்கின்றன. சென்ற வருடம் திருவண்ணாமலை கோவிலுக்கு போயிருந்தேன். ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இருந்ததை விட பலமடங்கு சுத்தமாக இருக்கிறது.
அறுபதுகளில் நிறைய கோவில்களுக்கு போயிருக்கிறோம், பல ஆலயங்கள் கேட்பாரற்று அப்படியே திறந்து கிடைக்கும், பராமரிப்பின்றி மிகவும் மோசமாக இருக்கும், இன்று அப்படி இல்லை. அதே சமயம் கோவில்களை பற்றிய ஆய்வுகளில் புதிய பார்வையுடன் ஒன்றும் வரவில்லை. தொ. பரமசிவனின் அழகர்கோவில் போன்ற வெகு சில ஆய்வுகளைத் தவிர. தஞ்சை கோவிலை சுற்றியே பல முடிச்சுகள் இருக்கிறது, அதை ஏன் முழுவதுமாக கட்டாமல் நிறுத்தினார்கள்? அப்படி நிறுத்தும் போது இராஜராஜன் உயிரோடு தான் இருந்தார். தலைநகர் ஏன் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றப்பட்டது? என்று இதுபோல பதிலில்லாத பல கேள்விகள் இருக்கிறது. இது போன்ற கேள்விகளை எடுத்துக்கொண்டு வரலாற்றுத்துறையில் ஆராய்ச்சி பண்ணலாம்.
ஆனால் அதற்கு நமக்கு பொறுமையும், மத சகிப்புத்தன்மையும் வேண்டும், அது நமது நாட்டில் இப்போது மிகவும் குறைவு. தனக்கு ஒவ்வாத ஒன்றை சொல்லிவிட்டால் உடனே சண்டை போட ஆரம்பித்துவிடுகிறார்கள் அதுவும் ஆய்வுகளுக்கு தடையாக இருக்கிறது. புதிய தளங்களில் ஆய்வுகள் நடப்பதில்லை, நமது கையில் உள்ள வரலாறு நம்மை புகழ்வதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பௌத்தம் குறித்தும் சமணம் குறித்தும் மிகக்குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. தஞ்சை கோவிலில் இருக்கும் புத்தர் புடைப்பு சிற்பங்கள் பற்றி நானே எழுதியிருக்கிறேன். எளிய கேள்விகளில் துவங்கி இன்னும் ஆழமாக செல்ல முடியும். நாம் கல்வெட்டுகளோடு நின்றுவிடக்கூடாது. இலக்கியத்திற்கு செல்லலாம், ஊர்ப்பெயர்களை எடுத்துக்கொள்ளலாம்.
ஊர்ப்பெயர்களை பட்டியலிட்டால் நிறைய தகவல்களை எடுக்க முடியும். தருமபுரி, சத்தியமங்கலம் போன்று கிராமங்களை பட்டியலிட்டால் எவ்வளவோ புத்த, சமண பெயர்கள் கிடைக்கிறது. திருக்குறளையே இன்று யாரும் தொடுவதில்லையே, அதை ஒரு புனிதப்பொருளாக பாவித்து அப்படியே விட்டுவிடுகிறோம். வித்தியாசமா சொன்னால் சண்டை வந்துவிடும், எதற்கு வம்பு என்ற எண்ணம்தான். நீங்களே யோசிக்கலாம், தொன்மை இந்தியாவில், மதம் சாராத அறநூல் ஏதாவது இருந்திருக்கிறதா என்று.
கல்வெட்டு ஒன்றை படி எடுக்கும் பாஸ்கரன், மகாதேவமலை 1970 |
சூலழியல், வரலாறு ஆகியவை போலவே நீங்கள் சினிமாவை பண்பாட்டு ஆய்வாக தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு சினிமா மீதான ஆர்வம் எப்படி எந்த வயதில் தொடங்கியது? முதல் சினிமாவை உங்கள் அம்மா மடிமீது அமர்ந்து பார்த்ததாக கூறியிருக்கிறீர்கள்.
என்ன படம்னு நீங்க கேக்கலையே. மீரா தான் நான் பார்த்த முதல் படம். எனது அம்மா மடியில் உட்கார்ந்து பார்த்த படம். 1970-ல் திருச்சியில் இருந்தப்போ கோட்டைக்கு பக்கத்தில் ஒரு சிறிய புத்தகக்கடையில் The Contemporary cinema அப்பிடிங்கற புத்தகம் வாங்கி படிச்சேன், Penelope houston எழுதினது. அதைப்படித்த பொழுது அட இதுதான் சினிமாவா என்று ஒரு புரிதல் கிடைத்தது. அதனுடைய தாக்கத்தை நீங்க என்னுடைய சிவதாண்டவம் கட்டுரையில் பார்க்கலாம்.
Penelope Houston |
பிறகு எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் வெளிநாட்டு படங்களையெல்லாம் பார்த்தேன். அதில் சில கிளாஸிக்குகளையும் பார்க்க முடிந்தது. பிறகு எனக்கு council of historical research-ல் ஒரு நல்கை கிடைத்தது, மற்றவங்க இதுவரை முயற்சி செய்யாத தளமாக இருக்க வேண்டும் என யோசித்தேன். அப்போது நிறைய மேலை அறிஞர்கள் தமிழ்நாட்டு வரலாற்றில் ஆய்வு செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுடையது மேம்பட்ட அணுகுமுறை, பொருளாதாரம் ஒரு பிரச்சனையாக அவர்களுக்கு இல்லை. ஆனால் தமிழ் சினிமா குறித்து அவர்களுக்கு படிக்க முடியாது, மொழிப்பிரச்சனை.
தமிழ்நாட்டு ஆவணக்காப்பகத்தில் சுதந்திரத்துக்கு முன்பு எப்படி சினிமா பயன்படுத்தப்பட்டது என்று தேடினேன். அது முற்றிலும் வேறு திசைக்கு என்னை இட்டுச்சென்றது. தென்னிந்தியாவில் சுதந்திரப்போராட்டமே இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். உண்மை அதுவல்ல, நாம் பங்கெடுத்தோம். நாடகம் மூலமாக, சினிமா மூலமாக பங்கெடுத்தோம், விடுதலைப்போர் இங்கு சாமான்யர்கள் சார்ந்தே வளர்ந்தது. அது வெகுமக்களின் கலாச்சாரத்தில் வெளிப்பட்டது. தண்டோராக்காரன் புத்தகம் இதைத்தான் பேசுகிறது.
பிறகு சினிமா பற்றி தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன், வெவ்வேறு கமிட்டிகளில் இடம் கிடைத்தது. சினிமா எனது பெருவிருப்புக்குரியது என்றாகியது. எழுத்து வேலைகளை தனியாக செய்துகொண்டிருந்தேன். சினிமா மக்களை மிகவும் பாதித்திருக்கிறது. ஒரு ஹார்டு டிஸ்க் நிரம்பியிருப்பதைப்போல அது நம் வாழ்வின் அனைத்துப்பகுதிகளையும் அதன் தாக்கம் இருக்கின்றது.
சினிமாவை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை, பள்ளிகளில் அதைப்பற்றி நாம் சொல்லித்தரவில்லை. ஓவியம், சங்கீதம், நடனம் இவையெல்லாம் பள்ளியில் சொல்லித்தரப்படுகிறது, சங்கீதத்துக்கு துறையே இருக்கிறது ஆனால் சினிமா கண்டுகொள்ளப்படவே இல்லை, அதனால்தான் அதன்மீதான ரசனை இவ்வளவு குறைவாக இருக்கிறது. அதிகமாக சினிமா ஆய்வோ, எழுத்தோ முன்னெடுக்கப்படாத காரணம் கல்விப்புலம் சினிமாவை முழுமையாக நிராகரித்ததுதான்.
தேன் நிலவில் மனைவி திலகாவுடன் பாஸ்கரன்- கொடைக்கானல் 1967 |
உங்களைப் போலவே வரலாற்றில் ஆர்வம் உடைய நண்பர் வட்டம் உங்களுக்கு இருக்கிறது. உங்கள் நண்பர்கள் பற்றி சொல்லுங்கள்.
முக்கியமா சொல்லனும்ன்னா ஜோப் தாமஸ். திருநெல்வேலிகாரர். இரண்டுபேருமே ஆறு வருடம் பாளையங்கோட்டை மற்றும் சென்னையில் ஒன்றாக வரலாறு படித்தோம். அவர் சென்னை அருங்காட்சியகத்தில் வேலைக்கு சேர்ந்தார். நான் சென்னை ஆவணக்காப்பகத்தில் வேலைக்கு சேர்தேன். அப்போதிலிருந்தே இருவரும் வரலாற்றிடங்களுக்கு சென்று வருவோம்.
பின்னர் சுரேஷ் பிள்ளையுடன் நட்பு ஏற்பட்டது. அவர் இறக்கும் வரை எங்கள் நட்பு தொடர்ந்தது. அடிக்கடி சந்தித்து வரலாறு, ஆய்வுகள் சார்ந்து உரையாடிக்கொண்டிருப்போம்.
சுரேஷ் பிள்ளை |
பின் அமேரிக்காவில் எனக்கொரு முக்கியமான தோழர் இருக்கிறார். தாமஸ் டிரவுட்மன் (Thomas Trautmann). அமேரிக்காவில் யுனிவர்சிடி ஆஃப் மிஷிகனில் வரலாற்று பேராசிரியராக இருந்தார். கௌண்டில்யரும் அர்த்தசாஸ்திரமும் (kautilya and the Arthasastra), திராவிட உறவுமுறைகள் (Dravidian Kinship) ஆகிய நூல்களை எழுதியவர். என்னை அவருடைய யுனிவர்சிட்டிக்கு அழைத்து இருமாதம் இருக்கச் செய்தார். என் மேல் நிறைய பாதிப்பை செலுத்தியவர். எனக்கு உந்துதலாக இருந்திருக்கிறார். அடிக்கடி இந்தியா வருவார்.
சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு என்பது நமக்கு தலைமுறையாக வந்தது கிடையாது. இந்த தலைமுறைக்கு முந்தைய தலைமுறை இயற்கையின் திடீர் அழிவின் மேல் ஏற்பட்ட அக்கறை. இந்த தலைமுறை எவ்வாறு சூழலியல் மேல் அக்கறை எடுத்துக்கொள்கிறது?
1972-க்கு ஆண்டு ஸ்டாக் ஹோம் மாநாட்டிற்கு பின் தான் சூழலியல் பற்றியும் காட்டுயிர் பாதுகாப்புகள் பற்றியும் இந்தியாவில் பேசப்பட்டு சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 1980-ல் தான் பள்ளியில் சூழலியல் பாடமாக்கப்பட்டது. அதனால் சூழலியல் மேல் ஒரு கவனம் இங்கே உருவாகியது. அதே சமயம் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னன்னா நாம் காடு, காட்டுயிர்களை பாதுகாத்திருக்கிறோம், ஆனால் மற்ற அனைத்து வகையிலும் சூழலியலை அழித்துக்கொண்டிருக்கிறோம். இதுதான் முரண்பாடு. நாம் ஒருவகையில் சூழலியலை பற்றி பேசிக்கொண்டே மறுபுறம் அதை சீரழிக்கின்றோம். அந்தமானில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் காடுகளை அழித்து துறைமுகமும் விமானநிலையமும் கட்டப்படுகின்றன.
எதை விடவும் போர் மிக அதிகாக சூழலியலை பாதிக்கக்கூடியது. எந்த நாட்டில் நடந்தாலும் அது சூழலியலுக்கு அழிவுதான். சுற்றுசூழலை முழுமையாக அழிக்க கூடியது போர். நாமே மூன்றுமுறை பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட்டிருக்கிறோம்.
டெல்லி எவ்வளவு மோசமாக சுற்றுச்சூழல் பாதிப்பை அடைந்திருக்கிறது என்று பாருங்கள். நதிகளை எடுத்துக்கொள்வோம், கங்கையை சுத்தம் செய்வோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம் ஆனால் இன்னும் கங்கை மிக அசுத்தமான நதிகளில் ஒன்றாக நீடிக்கிறது. காவிரியை எடுத்துக்கொண்டால் நான் சிறுவயதில் கரூர் அருகில் இருக்கும் வாங்கல் என்ற ஊருக்கு என் தாத்தா வீட்டிற்கு செல்வோம் அங்கு காவிரி எப்போதும் கரைக்கு கரை நீர் நிறைந்து சென்றுகொண்டிருக்கும். காவிரி காய்ந்து போய் பார்த்ததே இல்லை.
அதனால் எத்தனை புத்தகம் வந்தாலும், சூழலியல் பற்றி நிறைய பேர் பேசினாலும், டீவி ஷோக்கள் வந்தாலும் அது மேம்படும் அறிகுறிகளைக்காணோம்.
அப்போது சுற்று சூழலை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்?
சூழலியல் மேல் அக்கறை கொண்டவர்கள் மிக குறைவாகவே இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு சூழலியல் மேல் அக்கறை வர வேண்டும். நம்மிடம் ஒரு பூமி தான் உள்ளது, அதை அழித்து விட்டு வேறு எங்கு நாம் செல்வது. அதனால் சுற்றுசூழல் மேல் கரிசனமும் அக்கறையும் மக்களுக்கு வர வேண்டும். அதை அவர்களிடம் அரசாங்கம் தான் கொண்டு செல்ல வேண்டும்.
சூழலியல் செயல்பாட்டாளர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இத்தனை பெரிய அரசாங்கத்தை எதிர்க்க முடியுமா? அரசாங்கத்திடம் சூழலியலாளர்கள் தொடர்ந்து சூழலியல் அக்கறையை முன்வைக்க வேண்டும். அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயல் பட வேண்டும். காலச்சுவட்டில் ஒரு சூழலியல் கட்டுரை எழுதி விட்டால் அனைத்தும் மாறி விடுமா? சூழலியலாளரும் அரசாங்கமும் பொதுமக்களும் இணைந்தால் சூழலியலில் மாற்றம் கொண்டு வரலாம்.
மனைவி திலகாவுடன்- சிக்கிம் காங்டாக் நகரில் 1998 |
சூழலியல் முன்னோடியான மா.கிருஷ்ணனுடன் நீண்ட கால நட்பில் இருந்துள்ளீர்கள். அவருடனான நட்பு எவ்வாறு ஏற்பட்டது. நீங்கள் சூழலியலில் ஈடுபட அவருடைய நட்பு எவ்வளவு பாதிப்பை செலுத்தியது?
மா. கிருஷ்ணன் அன்றைய கேமராக்களை ரிப்பேர் செய்வார். அப்போது என்னுடைய கேமரா பழுதாகி விட்டது நண்பன் ஒருவன் மா. கிருஷ்ணனிடம் அழைத்து சென்றான். அவரை பார்த்த போதே அவர் ஆளுமை மேல் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. அவரை தொடர்ந்து சந்தித்து கொண்டிருந்தேன். பொதுவாக நாம் பேசிக்கொள்வதுண்டு பணம், அந்தஸ்துகளில் ஒருவருக்கு ஆசையில்லை என்று. அவர் உண்மையில் அவ்வாறு இருந்தார். பணம் அந்தஸ்துக்களின் மேல் மோகம் இல்லாதவராக இருந்தார்.
மா. கிருஷ்ணன் |
கிருஷ்ணன் மிக எளிய வாழ்கையை அமைத்துக்கொண்டார். அதிலேயே மிக சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தார். அவருடைய சுயசரிதை நம்மிடம் இல்லை. அவர் எழுதவில்லை. அவருடைய காலத்தில் காட்டுயிர்களை வேட்டையாடுவார்கள். அந்த அனுபவங்களை கற்பனை கலந்து சாகச நூலாக வெளியிடுவார்கள். மா. கிருஷ்ணன் ஒருவர் தான் அந்த சமயத்தில் காட்டையும் காட்டுயிர்களையும் வேட்டை என்ற பெயரில் கொல்லாது அவற்றை பற்றி எழுதியவர். அவற்றின் மேல் கரிசனத்துடன் எழுதியவர். காடும் காட்டுயிர்களும் மனிதனின் பொழுதுக்போகிற்கானவை அல்ல என்று சொன்னவர்.
எழுத்தாளர் ராஜ்கௌதமன் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக அ. மாதவையாவை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றார். அவரை வரவேற்ற கிருஷ்ணன், ராஜ் கவுதமனிடம் உணவு உண்ணுமாறு வேண்டிவிட்டு சொன்னார், நான் சைவம் ஆனால் நீங்கள் விரும்பினால் உங்களுக்காக அசைவ உணவை வரவழைக்கிறேன் என்று. கௌதமனுக்கு அந்தக்கணமே தன்னுடைய ஆய்வை மாதவையாவிடமிருந்து கிருஷ்ணனுக்கு மாற்றிவிடலாமா என்று தோன்றியதாக பதிவு செய்திருக்கிறார்.
அவரை கடைசியாக போய்ப்பார்த்த போது சுருண்டு படுத்திருந்தார், படுத்தபடியே பேசினார். எனக்கு அந்தக்காட்சி நெஞ்சைப்பிழிவது போல் இருந்தது. அவர் நெஞ்சு ஏறியேறி இறங்கியது பேசவே மிகவும் சிரமப்பட்டார். அவர் அப்படி செய்ததே இல்லை. அந்த வார இறுதியிலேயே இறந்துவிட்டார்.
பாஸ்கரன் (கண்ணாடியில்) உடன் தம்பி ஜெயகரன் - நார்த்தாமலை 1965 |
உங்கள் ஐம்பது ஆண்டு கால எழுத்தில் பெரும்பாலானவை சூழலியல் சார்ந்தவை. இத்தனை ஆண்டு காலத்தில் அதற்கு ஏதாவது எதிர்வினை வந்திருக்கிறதா? குறைந்த அளவிலாவது நீங்கள் திருப்தி அடையும்படி சூழலியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக கருதுகிறீர்களா?
என்னை மனுஷ்யபுத்திரன் 2002-ல் உயிர்மைக்காக சூழலியல் கட்டுரைகளை எழுதி தர முடியுமா என்று கேட்டார். எனக்கு அப்போது இவற்றை எழுத தயக்கமாக இருந்தது. ஏனெனில் ஏற்கனவே புழங்கும் ஒரு மொழி ஒரு புதிய கரிசனத்தை பற்றி பேச வேண்டும் என்றால் அதற்கான தனிமொழி இருக்க வேண்டும். இப்போது பெண்ணியம் சார்ந்து பேச வேண்டும் என்றால் பெண்ணியத்தை பற்றி பேச முதலில் இந்த மொழி தயார்ப் படுத்தப்பட வேண்டும்.
அந்த வகையில் சூழலியல் பற்றி தமிழில் எழுத எனக்கு தயக்கம் இருந்தது. இந்த மொழி சூழலியலுக்கு தயாராக இல்லாமல் இருந்ததாக நினைத்தேன். Sustainable development, carrying capacity, climate change ஆகிய சொற்கள் இங்கு அறிமுகமில்லாமல் இருந்தன. அதற்கான தமிழ் கலைச்சொற்களை உருவாக்கி நிலை நிறுத்த வேண்டும்.
இங்கே ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னே இருந்த இயற்கை சார்ந்த சொற்களையும், சொற்றொடர்களையும் மீட்டெடுக்க எண்ணி ஒரு இயக்கம் போல் இதை முன்னெடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அது இப்போது இங்கே நிகழ்ந்துள்ளதாக, பயன் கொடுத்துள்ளதாக நினைக்கிறேன்.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் அல்லது அதற்குப்பின் சுற்றுச்சூழலில் முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா?
வனவிலங்குகள் பொதுவெளியில் வந்தது பெரும் ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஏனெனில் இதற்கு முன் எப்போதும் நீங்கள் அவை இங்கே வந்து சென்று கொண்டிருந்த காலங்களை அறிந்து வைத்திருக்கவில்லை.
பருவநிலை மேம்பாடு, கானுயிர் மேம்பாடு குறித்து முந்தைய தகவல்களை ஒப்பிட்டு துறை வல்லுநர்கள் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை இரண்டே நன்மைகள்தான் நடந்தது.
கோவிட் தொற்று காலத்தில் முக்கியமாக சுற்றுலா இல்லாமலானது, அதன் காரணமாக சுற்றுலாவின் பெயரால் நடக்கும் சூழல் மாசு குறைந்தது.
கோவிட் தொற்றால் நாம் அனைவரும் சுகாதாரத்தை அறிந்துகொண்டோம், அது மேம்பட்டிருக்கிறது. பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகள் கூட அனைவரும் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள கற்றுக்கொண்டார்கள். மற்றபடி கோவிட் தொற்றுக்குப் பின் இங்கே பெரும் மாற்றம் நிகழ்ந்ததாக தெரியவில்லை.
இயற்கை தன்னைத் தானே மீட்டெடுக்கும் என்ற கூற்றை நீங்கள் ஆதரிப்பீர்களா?
இதற்கான பதில் ஆம் இல்லை இரண்டும் தான். ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. சென்னை தாம்பரத்தில் 1930-ல் 400 ஏக்கர் நிலத்திலிருந்து மரங்களை வெட்டி அங்கே கல்லூரி கட்டினார்கள். இப்போது அந்த இடத்தில் மரங்கள் மீண்டும் முளைத்துள்ளன, முன்பு இருந்ததைப் போலவே. கடலோர காடு உருவாகியுள்ளது. நாம் இடையூறு செய்யாமலிருந்தால் போதும். அந்த வெட்டப்பட்ட மரங்கள் வளரும். அதுதான் மீண்டும் வளர்ந்ததே என்று நாம் திரும்பி அனைத்தையும் அழித்துவிடக் கூடாது. அப்போது அது அழிவு தான்.
சில பிழைகளை திருத்தவே முடியாது, உதாரணமாக மழைக்காடுகளை சொல்வேன், ஊட்டி, வால்பாறையில் இருந்த நிறைய மழைக்காடுகளை அழித்துவிட்டோம், அதை இப்போது மீட்டெடுக்கவே முடியாது. ஒரு மழைக்காடு உருவாக பல்லாயிரம் வருடங்களாகும். அந்த காட்டை யாரும் தொடாமல் இருக்கும் பட்சத்தில் இயற்கை நிகழ்த்தும் ஒரு உச்சபட்ச சாத்தியம் தான் மழைக்காடுகள். பல நாடுகளில் இயற்கையாகவே இருந்தவை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன, இன்று அங்கு மழைக்காடுகள் இல்லை. நம் நாட்டில் இன்னும் இருக்கிறது, அருணாச்சலப்பிரதேசத்திலும், பொள்ளாச்சியிலும் இன்னும் இருக்கிறது. இவற்றை காப்பாற்றிவைக்க வேண்டும்.
கானுயிர் பாதுகாப்பு மேம்பட்டுள்ளது. வெறும் நானூறு மட்டும் இருந்த வேங்கைப்புலிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய மூவாயிரம் உள்ளது இன்றைக்கு. இதுவரை பார்க்காத இடங்களிலெல்லாம் புலியை பார்க்கமுடிகிறது. வேங்கை, சிறுத்தை போன்ற கானுயிர்களின் நிலை பரவாயில்லை. ஆனால் இவற்றின் வாழிடங்களைத்தவிர பிற எல்லாவற்றையும் அழித்துவிட்டார்கள்.
காப்பு காடுகளுக்கு வெளியேயும் காட்டுயிர் வாழ்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது. தமிழ்நாட்டிலேயே சில உயிரினங்கள் அற்றுப்போய் விட்டன. வரகுக்கோழி, கானமயில் அவற்றை இப்போது மீட்பது கடினம்.
தமிழகத்தில் தொடர்ந்து நிகழும் அகழ்வாய்வுகளால் தமிழ் வரலாற்று ஆய்வுப்புலத்தில் ஏதேனும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள், புதிய திறப்புகள் ஏற்பட்டுள்ளதா?
இரண்டாம் உலகப்போர் காலத்தில் தொல்லியல் துறைக்கு கொடுக்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டது. அப்போது பல ஆய்வுகளை நிறுத்தினார்கள், அதன் பின் தொல்பழங்காலம் குறித்த ஆய்வில் பெரிய தேக்கம் நிலவியது. ஆதிச்சநல்லூர் மற்றும் அரிக்கமேடு ஆய்வுகளில் பிரிட்டீஷ் காலத்தில் செய்யப்பட்டவை. பின்னர் பெரிதாக நமது ஆய்வுகள் முன்னகரவில்லை. நமக்கு தெரிந்தபடி இங்கிருந்த நாகரிகத்தின் தொன்மையை காட்டுகின்றது. தற்போது அகழப்பட்டவை குறித்து இன்னும் துறை வல்லுநர்கள் கருத்துக்கள் வெளிவரும் போதுதான் சொல்ல முடியும்.
உங்களுடைய காலத்தில் தான் ஆவணப்படங்கள் அலையென எழுந்து வந்தன. இந்தியா குறித்து, தனி நபர்கள் குறித்து பல படங்கள் வந்தன. தற்போது வரும் ஆவணப்படங்கள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தமிழைப் பொறுத்தவரை ஆவணப்படம் மௌனப்பட காலகட்டத்திலேயே வந்துவிட்டது. அது ஒரு தனி துறையாகவே வளந்துகொண்டிருக்கிறது. அருமையான படங்கள் வந்திருக்கின்றன, நமது ஊரில் பட்வர்த்தன், ரமணி. ரமணி தெரியுமா உங்களுக்கு. அவர் சுந்தர ராமசாமி குறித்து படம் எடுத்திருக்கிறார். அம்ஷத் குமார் பாரதியைப்பற்றி எடுத்திருக்கிறார். இது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.
அதிலும் சிறு கேமராக்கள் வந்தபிறகு ஆவணப்படங்கள் நிறைய எடுத்திருக்கிறார்கள், சமீபத்தில் The Elephant whisperers-னு ஒரு படம் ஆஸ்கர் விருதிற்கு போயிருக்கிறது. ஆவணப்படங்களுக்குன்னு ஒரு இலக்கணம் இருக்கு. உதாரணமா எல்லீஸ் ஆர் டங்கன் பற்றிய ஒரு ஆவணப்படம் An American in Madras ரொம்ப அருமையாக உருவாக்கப்பட்டிருக்கும்.
இயல் விருது, டொராண்டோ, 2014 |
காலநிலை மாற்றம் பற்றி?
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், தொழிற்புரட்சி வந்த பிறகான மனிதகுலத்தின் சூழலியல் தவறுகளின் மொத்தவிளைவு தான் காலநிலை மாற்றம். இதற்கு நாம் ஒவ்வொருவரும் பங்களித்திருக்கிறோம். அதை குறைப்பதற்கு இப்போது யோசிக்கிறோம், Kyoto protocol எல்லாம் அதைப்பற்றி வந்ததுதான். இந்த சுற்றுச்சூழலை நாசம் செய்துவிட்டு பழைய நிலைக்கு சென்றுவிட முடியாது, நாம் செய்யக்கூடியது ஒன்றே, மேலும் இது மோசமாகாமல் பார்த்துக்கொள்ள முயற்சிப்பது.
அணு யுத்தத்தை விட மோசமான அச்சுறுத்தல் தான் காலநிலை மாற்றம். உலகம் முழுவதும் இதை பன்னாட்டு அளவில் பேசுகிறார்கள். ஆனால் உலக அளவில் சில தலைவர்களுக்குத்தான் அதன் முக்கியத்துவம் தெரிகிறது.
காலநிலை மாற்றம் குறித்து மிக முக்கியமான ஒரு ஆவணப்படம் வந்துள்ளது, An Inconvenient Truth. அதை எடுத்தது அமெரிக்காவில் துணைத் தலைவராக இருந்த அல்கோர். நீங்கள் பார்க்கலாம் யூடியூபில் இருக்கிறது. எப்படி காரணமில்லாமல் மழை பெய்கிறது, வெள்ளம் வருகிறது, பறவைகளும் விலங்குகளும் இயல்பிலிருந்து வித்தியாசமாக நடந்துகொள்கின்றன என்று. இந்த பிரச்சனை குறித்து இந்தியா சில பன்னாட்டு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது. உலகின் சில மேம்பட்ட நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா இந்த விஷயத்தில் பரவாயில்லை, விழிப்புணர்வு இருக்கிறது. புத்திசாலிகள் இதுகுறித்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
சூழலியல் குறித்து பேசினால் மட்டும் போதாது, நாம் செயல்படவேண்டும் என்றால் எங்கிருந்து துவங்க வேண்டும்?
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் குறித்து நாம் கற்பிக்க வேண்டும். அடிப்படையாக நம் பள்ளியில் குழந்தைகளில் இருந்து துவங்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அவலம் ஒன்று உண்டு, அண்டை மாநிலங்கள் துவங்கிய பிறகும் கூட சுற்றுச்சூழல் கல்வி தமிழக பள்ளிகளில் கற்பிக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் தலைமை செயலருக்கு சுற்றுச்சூழல் கற்பிக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பித்துள்ளது. சுற்றுச்சூழல் ஒரு பாடநூல் அல்ல அது ஒரு விழிப்புணர்வு.
இரண்டாவது அணு சக்தியை வைத்துக்கொண்டு காலநிலை மாற்றம் குறித்து பேசுவதே தவறு, அது பெரிய சூழலியல் மாசுக்கான காரணி. விமானப்பயணங்களை எப்படி குறைக்க முடியும் என்று பார்க்க வேண்டும், இன்றுள்ள தொழில்நுட்பத்தில் இணையக் கூட்டங்கள் எளிதாக நடத்த முடியுமே. போருக்கான செலவுகளை அரசுகள் குறைக்க வேண்டும். பெரும்பாலான நாடுகள் இவற்றை பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் சுவிஸர்லாந்து, நியூசிலாந்து போன்ற சிறு நாடுகள் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இதை கடைப்பிடிக்கின்றன.
சந்திப்பு: அனங்கன்
Poster design & Photos: லக்ஷ்மி நாராயணன்