Sunday, 14 May 2023

எருதின் தடம் - 3: குந்தவை ஜிநாலயம், அனங்கன்


தொண்டை மண்டலத்தில் உள்ள சமணத்தலங்களில் முக்கியமானது சோழ இளவரசி 'குந்தவை'யின் பெயரால் அறியப்படுகின்ற 'குந்தவை ஜினாலயம்' என்னும் திருமலை சமணக் கோயில்கள். இம்முறை அங்கே செல்வதாக திட்டம். தாமரைக்கண்ணன் (புதுவை) வெளியூரிலிருந்து வந்து மேல்மருவத்தூரில் எனக்காகக் காத்திருந்தான். ஆண்டாள் என்னை ஊமை, செவிடு என்று திட்டி அழைக்கப் போவதில்லை என்றாலும் மார்கழியில் (28-12-22) அதிகாலை எழுந்து விட்டால் எனக்கு அவள் நினைவு வந்துவிடுகிறது. குளிர்ந்த நீரை வாரி தலையில் விட்டுக்கொண்டு பைக்கில் கிளம்பினேன்.

கடைசி இரண்டு நாள் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததால் பனிப் புகைமூட்டம் குறைந்திருந்தது. இருப்பினும், திருநீர்மலையின் நுனி மட்டும் தெரியும் அளவிற்கு மலையைப் போர்த்திய மெல்லிய துணி எனப் பனி சுற்றியிருந்தது. எப்போதும் இருள்பிரியா நேரத்தில் எங்காவது செல்வது எதனாலோ ஒரு உற்சாகத்தை அளிக்கிறது. அனைவரும் உறங்க நாம் விழித்திருப்பதால் இருக்கலாம். உலகம் செயல்பட ஆரம்பிப்பதற்குள் நாம் விழித்துகொண்டதால் இருக்கலாம். எவ்வாறெனினும் அதிகாலை இருள் விட்டெழும் ஒளி ஆத்மனை நேரடியாக சென்று சேர்வதை உணரமுடிகிறது. 

வெயில் காலத்தை விட பனிக்காலம் ஏதோ ஒன்றை மறைத்து வைத்திருப்பது போல் எங்கும் படர்ந்து ஒர் மறை உணர்வைத் தருகிறது. தன் உடல் பற்றிய உணர்வில்லா கிழவியைப் போல பளிச்சென்று எழுந்து விடுகிறது வெயில் காலம். ஆனால் பனிக்காலம், முன்தெரியா ஆணிடம் கன்னிப்பெண் தன்னை காட்டும் உணர்வுடன் மெல்ல மெல்ல வெளிப்படுகிறது.

வரலாற்றில் மூன்று குந்தவைகள், முதலாமவள் அரிஞ்சய சோழரின் மனைவியாகிய கீழைச்சாளுக்கிய இளவரசி வீமன் குந்தவை. புகழ்வாய்ந்த இரண்டாமவள் பொன்மாளிகைத்துஞ்சிய தேவரான சுந்தரசோழரின் மகளும் ராஜராஜசோழனின் அக்காவும் வல்லவரையன் வந்தியத்தேவனின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகன் குந்தவை, அதாவது பொன்னியின் செல்வன் குந்தவை. மூன்றாமவள் ராஜராஜசோழனின் மகளும் சாளுக்கிய விமலாதித்தனின் மனைவியுமான குந்தவை. இம்மூவரில் ராஜராஜனின் தமக்கை மட்டுமே அதிகமாக நிவந்தங்கள் அளித்துள்ளதாகத் தெரிகிறது, சமணப்பள்ளிகளுக்கும் இவர் ஏராளமான நிவந்தங்கள் அளித்துள்ளார். அந்த நிவந்தங்கள் அளிக்கப்பட்ட ஆண்டும் இவருடைய காலத்துடன் பொருந்துகிறது. அதனால் தொண்டை மண்டலத்தில் ஏராளமான திருப்பணிகளுக்கு நிவந்தம் அளித்தவர் பராந்தகன் ‘குந்தவை’ பொன்னியின் செல்வியே என்று ஆய்வாளர்கள் நினைக்கின்றனர். திருமலை சமணக்கோயிலில் முதலாம் ராஜேந்திரன் கால கல்வெட்டு ஒன்று ‘குந்தவை ஜிநாலயம்’ என்று திருமலை சமணக்கோயிலைக் குறிப்பிடுகிறது. மற்றபடி யார் இந்த கோயில்களைக் கட்டியது என்று எந்த தகவலும் இல்லை.

தாமரையை மேல்மருவத்தூரில் சந்தித்தேன். செஞ்சி-வந்தவாசி சாலை வழியாக குந்தவை ஜிநாலயம் செல்லும் திட்டம். சாலையில் திரும்பும் போது தாமரை ஓங்கூர் சுவாமியின் ஜீவசமாதி என்னும் பலகை தட்டியைப் பார்த்து அங்கு செல்லலாம் என்று சொன்னான். இந்த ஓங்கூர் சாமிகள் ஜெயகாந்தனின் விழுதுகள் குறுநாவலில் வரும் சாமிதானா என்று தெரியவில்லை, சாமிகளுக்குள் என்ன வேறுபாடு. அவர் சமாதிக்கு செல்லும் வழி கிட்டத்தட்ட ஜெயகாந்தன் சொல்லுவது போல் தான் இருந்தது. ஆனால் சமாதி மலை மேல் இல்லை யாரையும் தொந்தரவு செய்யாமல் ஒரு மாமரத்துக்கடியில் தகரக்கொட்டகையில் ஓங்கூர் சுவாமிகள் துயில்கொண்டிருந்தார். பக்கத்தில் குளம் ஒன்றிருந்தது. அதுவும் சுவாமிகளைச் சேர்ந்தது தான்.

ஓங்கூரில் பத்துக்கும் மேற்பட்ட பானை வனையும் குடும்பங்கள் உள்ளன. உள்ளே செல்லும் சாலை முழுவதும் அப்போது செய்த களிமண் பானைகளைக் காயவைத்திருந்தனர். அவை களிமண்ணின் ஈரப் பளபளப்பில் வெயில் பட்டு மினுங்கியது. வீட்டுக்கு முன் கூரை வேய்ந்து சக்கரம் வைத்திருந்தனர். வானம் இருநாட்களுக்குப் பின் மழை விட்டிருந்ததால் அனைவரும் சக்கரம் சுற்றிக்கொண்டிருந்தனர். ஓங்கூர் சாமி சமாதியில் லிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. சிறிது நேரம் சுவாமியுடன் அளவளாவி விட்டு புறப்பட்டோம்.

சென்னையிலிருந்து குந்தவை ஜிநாலயம் செல்வதற்கு செஞ்சி-வந்தவாசி சாலை சரியானது அல்ல. ஒன்று காஞ்சிபுரம் வழி சென்று இருக்க வேண்டும் இல்லையென்றால் மேல்மருவத்தூரிலேயே போளூர் சாலையைப் பிடித்திருக்க வேண்டும். நான் மேல்மருவத்தூரில் திரும்பி சேத்துப்பட்டு வழி போகும் சாலையில் போளூர் செல்ல எண்ணி இருந்தேன். அங்கே சேத்துப்பட்டு அருகில் யோக ராமர் கோயில் இருப்பதாக அறிந்திருந்தேன். தாமரை செஞ்சி-வந்தவாசி வழி செல்லலாம் என்று சொல்லியிருந்தான். இச்சாலை சற்று சுற்றுதான் என்றாலும் வந்தவாசி பகுதியில் சமணக் கோயில்கள் மிகுதியாக இருக்கும் என்று கூறியிருந்தான்.

நாங்கள் மேல்சித்தாமூர் செல்லும் போது அகலூர் எங்கள் பயணத்திட்டத்தில் இல்லை. சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது கோயிலின் மானஸ்தம்பத்தை பார்த்து அங்கே சென்றோம். அந்நினைவில் எங்காவது மானஸ்தம்பம் கண்ணில் படுமா என்று வானைப் பார்த்துக் கொண்டே வந்தோம், ஒரு மூங்கில் கம்பு கூட கண்ணில்படவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் மூங்கில் அரிது என்று நினைக்கிறேன். காலை 4:30 மணிக்கு கிளம்பி பத்து மணி ஆகியும் இன்னும் ஒரு கோவிலும் வரலாற்றுத் தடம் என்று சொல்லி ஒரு கல்லுருளியைக்கூட பார்க்கவில்லை.

சில சமணத் தலங்கள் கண்ணில் பட்டாலும் அவை மையச்சாலையில் இருந்து பிரிந்து, உள் சாலையில் மேலும் சில கிலோமீட்டர்கள் சென்று பார்க்க வேண்டியிருந்தது. சென்று வந்தால் நேர விரையமாகி குந்தவைக்கு துரோகம் செய்தது போல் ஆகிவிடும். அதனால் சாலையை விட்டு மிக விலகாமல் இருக்கும் தாதாபுரம் சென்று குந்தவையே எடுப்பித்த கரிவரதராஜ பெருமாளையும், ரவிகுல மாணிக்க ஈஸ்வரனையும் காண நினைத்தோம்.

தாதாபுரம் செல்லும் வழியில் இடதுபுறம் குந்தவை பேரேரி நீர் நிறைந்து நீண்டிருந்தது. தாதாபுரம் என்று சொல்லப்படும் ஊரின் பெயர் ராஜராஜபுரம். தன் தம்பியின் பெயரில் குந்தவை இங்கு மூன்று ஆலயம் அமைத்திருந்தாள். மால், அரன், அருகர் ஆகியோருக்கு ஜனநாயகரீதியில் தலா ஒரு கோயில் எடுப்பித்திருந்தாள். மூன்று கோவில்களில் இப்போது ஜிநாலயம் கிடைக்கவில்லை. கரிவரதராஜ பெருமாள் ஊரின் மேற்கிலும், ரவிகுல மாணிக்க ஈஸ்வரர் கிழக்கு திசையிலும் எழுந்தருளியுள்ளனர். ஜினாலயமும், புத்த விகாரமும் தெற்கு வடக்கில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. சோழர்கள் அப்படி செய்திருக்கக் கூடியவர்கள் தான்.

ஆண்டாள் எவ்வளவு பாடியும் கரிவரதர் இன்னும் திருக்கண் மலர்ந்தருளவில்லை. நாங்கள் சென்று திருப்பள்ளியெழுச்சி செய்ய வேண்டியிருந்தது. கரிவரதர் கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஊருக்கு என்று ஒரு பூசகர் தான். அவர் எந்த ஸ்வாமியை துயில்நீக்க சென்றிருக்கிறார் என்று தெரியவில்லை. கோயில் முன் அதன் பாதுகாவலன் பப்பி அரைமயக்க நிலையில் கண்மூடியிருந்தார். அவருடைய ஆளுகைக்கு கீழ் தான் இப்போது குந்தவை விண்ணகர் இருக்கிறது. தன் காவல் பணியை சிறப்புற செய்பவர் பப்பி. நாங்கள் என்ன நோக்குடன் இங்கே வந்துள்ளோம் என்பதை எங்கள் பின்பக்கம் நுகர்ந்தே தெரிந்து கொண்டார்.

நாங்கள் பப்பியின் பரிசோதனைக்கு உட்பட்டிருந்த போது பப்பிக்கு, பப்பி என்று பெயரும் வைத்து அவரைப் பணிக்கு நியமித்த வைஷ்ணவி, கோயில் சாவியுடன் வந்து கோவிலைத் திறந்து காண்பித்தாள். பெருமாள் கோவிலை பராமரிப்பவருடைய மகள். 12ஆம் வகுப்பு படிக்கிறாள். இந்த கோவில் யார் கட்டியது என்று கேட்டேன் குந்தவை என்று சரியாகச் சொன்னாள். ஆனால் கல்வெட்டுகள் பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டாள். பொன்னியில் செல்வன் பார்த்ததாகவும் பரிட்சை இருப்பதால் இரண்டாம் முறை பார்க்க முடியவில்லை என்றும் கூறினாள்.

குந்தவை விண்ணகர்

கரிவரதராஜப் பெருமாள் கோயில் கல்வெட்டில் ‘ஶ்ரீகுந்தவை விண்ணகர் ஆழ்வார் திருக்கோயில்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே பத்துக்கும் மேல் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. விளக்கெரிப்பதற்கு 900 ஆடுகள் குந்தவையால் நிவந்தம் அளிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரனும், குலோத்துங்கனும் நிவந்தம் அளித்துள்ளனர். கோயில் புதுப்பிக்கப்பட்டிருந்தது. கோபுரத்தில் அதிஷ்டானம் மட்டும் இருக்கிறது. கோயில் பலிபீடம், கருடன் சந்நிதியை அடுத்து முகமண்டபம், அர்த்தமண்டபம் மற்றும் கருவறையைக் கொண்டது. அர்த்தமண்டபத்தில் சோழர்களின் அழகிய நான்கு-தூண் உள்மண்டம் இருக்கிறது. நெடுமால் ஆறடியில் நீள்முகத்துடன் ஶ்ரீதேவி, பூதேவியுடன் நின்றிருந்தார். கருவறைக்கு வெளியில் யோக நரசிம்மரும், நம்மாழ்வாரும், ராமனுஜரும் இருந்தனர்.

கருவறை மண்டபங்களை நான்குபுறமும் யானையும் யாளியும் தாங்கியிருக்கிறது. விமானத்தின் கிழ்பீடத்திலிருந்து கல்வெட்டுகள் ஆரம்பித்துவிட்டன. கோஷ்ட்ட குமுத பஞ்ரங்களில் ஓவியங்கள் என கண்ணனின் சிறு மினியேச்சர் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. சிறுபுடைப்பு சிற்பமாக பெண்ணொருத்தி சிம்மம் மேல் ஒரு கைவைத்து நின்றிருந்தாள் அவளை குந்தவை என்று சொல்ல ஆசை தான் ஆனால் சான்றில்லை.


கோயிலை சுற்றி வந்து பார்த்துக்கொண்டிருந்தோம். எங்களுடன் வைஷ்ணவியும் கூட வத்துகொண்டிருந்தாள். கோயிலைப் பற்றி தாமரை அவளுக்கு சொல்லிக்கொண்டிருந்தான். இங்குள்ள கல்வெட்டுக்களைத் தெரிந்துகொண்டு இங்கு வருபர்களுக்கு சொல்லிக் காட்டும் படி சொன்னான். இவ்வளவையும் பொறுமையாக கேட்டுக்கொண்டாள். அவளிடம் கூறிக்கொண்டு கிளம்பினோம். அருகிலிருந்த பப்பி தன் தூக்கத்தையும் துறந்து தன் சென்னிற மேனி வாட இதுவரை எங்களுக்கு அனுமதியும் பாதுகாப்பும் அளித்து, இப்போது பெருந்தன்மையோடு என் கால்களையும் நக்கி விடையும் அளித்தார்.

அங்கிருந்து ஊரின் கிழக்குதிசையில் உள்ள ரவிகுல மாணிக்க ஈஸ்வரன் ஆலயத்திற்கு சென்றோம். ‘ரவிகுல மாணிக்கம்’ என்பது ராஜராஜனின் சிறப்புபெயர். ஈஸ்வரனின் ஆலயம் 1004ஆம் ஆண்டு குந்தவையால் கட்டப்பட்டது என்று எழுதிவைத்திருந்தனர். தொண்டை மண்டல பகுதியில் குந்தவை நிறைய ஆலயங்களுக்கு நிவந்தம் அளித்துள்ளாள். ஏரிகள் வெட்டியிருக்கிறாள். ஆலயங்கள் எடுப்பித்திருக்கிறாள். இந்தப் பகுதியை ராஜராஜன் அவளுக்கு என்று ஒதுக்கிவைத்து விட்டார் போல.

ஆலயம் நடைதிறக்கப்படவில்லை. ஆலய முகமண்டபம் நான்கடி மேல் அமைந்திருந்தது. இருபுறம் படிகள் அமைத்திருந்தனர். மண்டபத் தூண்களில் விதவித கோலங்கள் எழுதப்பட்டிருந்தன. மகாலக்ஷ்மியும் இரு நிருத்ய கணபதிகளும் இருந்தனர். சோழர்களின் தனிச்சிறப்பான பெரும் கட்டுமானங்கள் கொண்ட கோயில்கள் பேசப்பட்ட அளவு அவர்கள் செய்நேர்த்தியுடன் செய்திருக்கும் சிறு ஆலயங்கள் மேல் கவனம் விழவில்லை.

குடமாடுகூத்தன்

இச்சிறுஆலயத்தில் சின்னஞ்சிறு புடைப்புச் சிற்பமாக கண்ணப்ப நாயனார், முருகன், சோழரின் பாணியில் சங்கநிதி, பத்மநிதி, நடன அசைவின் நெளிவுடன் குடமாடுகூத்தன், வீணா தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் செதுக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள தக்ஷிணாமூர்த்தியில் மூட்டுப்பகுதியிலிருந்து பாதம் வரை குருடன் ஒருவன் தடவிப்பார்த்தான் என்றால் மானுடன் ஒருவன் அமர்ந்திருப்பதாகவே நினைப்பான். மானுட உடற்கூறியலின் அத்தனை அருகில் சோழர்கள் தங்கள் சிற்பக்கலையின் மூலம் வந்திருக்கின்றனர். இங்குள்ள கொற்றவை, ஹொய்சாளர்களின் மாவுக்கல் சிற்பம் என நுண்ணிய செதுக்கல்கள் கொண்ட சிற்பம். அவளே வில் என ஒருபுறம் வளைந்து குண்டுமுகத்தில் புன்னகைக்கிறாள். எருமை அவளின் எடை தாளாமல் நாக்கைத் தள்ளிக்கொண்டிருக்கிறது.

கொற்றவை

கொற்றவையையே பார்த்துக்கொண்டிருந்ததில் பூசகர் சிவபூஜையை முடித்துக்கொண்டு மற்ற சந்நிதிக்குச் சென்றுவிட்டார். அவர் மீண்டும் வர நேரம் ஆகும் போல் இருந்ததால் ஈசனை வெளியிலிருந்தே தரிசித்துவிட்டு கிளம்பினோம். ஊருக்கு வெளியில் கோயிலில் கண்ட சப்தகன்னிகளில் ஒருவரின் சிற்பம் இருந்தது. தாதாபுரத்திலிருந்து வந்தவாசி சென்று குந்தவை ஜிநாலயம் செல்ல வேண்டும். காலையிலிருந்து எங்கும் செல்லாமல் வீணடித்ததற்கு குந்தவையாலேயே எடுப்பிக்கப்பட்ட இரு ஆலயங்களைப் பார்த்தது குந்தவை ஜிநாலயம் செல்லும் வரை தாங்கும்.

செஞ்சி-வந்தவாசி அடுத்து போளூர் சாலையைப் பிடித்தோம். இந்த சாலையில் நெற்கதிர்கள் நெல்மணிகளின் எடை தாங்காமல் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தன. சில வயல்களில் அப்போது தான் நாற்று நட்டிருந்தனர். அதுவும் பள்ளிக்கூட பசங்கள் ப்ரேயரில் வரிசையாக நிற்பது போல் சமத்தாக வரிசைமாறாமல் நின்றுகொண்டிருந்தன. தை நெருங்குவதால் கரும்பும் மிகுதியாக விளைந்திருந்தது. செஞ்சி வந்தவாசி பகுதிகளில் பெரும்பாலும் ஒருபோகம் தான் பயிர் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். மொட்டை போட்ட குழைந்தைகள் ஒன்றோடு ஒன்று முட்டி ஒட்டி நின்றிருப்பது மாதிரி மொட்டைப் பாறைகளாலான மலைகள் நிறைந்திருந்தது. மழை முடிந்து மண்ணின் நீர் மேல் மட்டத்தில் இருக்கும் போதே பயிரிட்டுக்கொள்ள வேண்டும்.

போளூருக்குச் சென்று கொண்டிருக்கும் போது சாலையின் வலதுபுறம் ஒரு பெரும் கோபுரம் தெரிந்தது. அங்கு சென்று வர முடிவெடுத்து பைக்கை கோபுரத்தின் முன் நிறுத்தினேன். கோவில் உள்ளிருந்து கண்களே சிவந்து விடும் அளவிற்கு சிவப்பு நிற ஆடை அணிந்த பக்தர்கள் பீரிட்டுக்கொண்டு வெளி வந்துகொண்டிருந்தனர். மேலும் சிவப்பு நிறம் கொண்ட இரு ஆந்திர மாநிலத்து பஸ்களும் வந்து நின்றன.

பக்தர்கள், அவர்கள் போகிற வழியில் உள்ளதால் வந்து காணும் அதிர்ஷ்டசாலிக் கடவுள் யார் என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. செவ்வாடைகளைப் பிளந்து கொண்டு உள்ளே சென்றோம். எப்படியும் முன்னூறு பக்தர்கள் இருந்திருப்பார்கள் ஆனாலும் அத்தனை பேரையும் ஆலய வளாகம் செரித்து மனிதக் கூட்டமே தெரியாமல் ஆக்கிவிட்டது. திருச்சுற்று சுவரும் இரு கோபுரங்களும் கொண்ட பெரிய கோயில். ஆலய கோபுரத்தில் எழுதப்படிருந்த சிற்பமும் கோபுரமுமே அவை நாயக்கர் காலத்தியது என்று காட்டியது. ஆலயத்தினுள் நுழைந்தவுடன் வலப்பக்கம் யாளிகள்கொண்ட படிக்கட்டுகளுடன் 100 கால் மண்டபமும் இடப்பக்கம் ஊஞ்சல் மண்டபமும் இருக்கிறது. நேரே கருவறைக்குச் சென்று உள்ளே இத்தனை பெரிய கோலுக்குள் ஒளிந்திருக்கும் நபரைப் பார்க்க ஆவலாக இருந்தது. துவாரபாலகருக்கு தெரியாமல் உள்ளே எட்டிப்பார்த்தால் ராமன் கால்வலி தாளாமல் இங்கு அமர்ந்திருக்கிறான். அவன் வலி தாளாமல் சற்று கண்வளர்ந்திருப்பதை யோகம் என்று சொல்லி விட்டதால் இன்னும் கண்களை இறுக்கிக்கொண்டுவிட்டான். நான் பார்த்துவைத்திருந்த கோவில் தான் என்றாலும் நாங்கள் அதைக் கடந்துவிட்டதாக நினைத்திருந்தேன்.

நெடுங்குணம் யோக ராமர் ஆலயம்

யோக ராமர் அருகில் தம்பி வில்லேந்தி நிற்க தன் இடபக்கம் சீதையோடு இருக்கிறார். கீழே அனுமன் சமத்துப்பிள்ளையாக சுவடிக்கட்டுடன் அமர்ந்திருக்கிறார். ராமருக்கு தமிழகத்தில் இத்தனை பெரிய ஆலயம் இங்கு தான் இருப்பதாக அரச்சகர் சொன்னார். ராமன் ஒருகையை மார்பில் யோக முத்திரையுடன் இடது கையை பூமியைத் தொட்டவாறு இருந்தான். நெடு நேரம் நின்று பார்த்தும் புன்னகை மாறா அருள் அவனுடையது, அளப்பரியவன் தான். 

கருவறையைச் சுற்றி சிறு திருச்சுற்று இருந்தது. கோயிலுக்கு எங்களுக்கு முன் வந்த பக்தர்களும் எங்களுக்குப் பின் வந்த பக்தர்களும் வந்த சுவடு தெரியாமல் வந்த வேகத்தில் கருவறைக்கு சென்று ஆலயத்திருந்தே கிளம்பி விட்டார்கள். மூலக்கருவறையில் இருக்கும் தெய்வத்திடம் மட்டும் தான் அவர்கள் பேச்சுவார்த்தைகள் எல்லாம், மற்ற சுற்று தெய்வங்கள் வழியில் வந்து மறித்தாலும் சரி அவர்களுடன் எந்தவித பேச்சும் இல்லை. ஆலயத்தில் ஒருவரும் மீதமில்லை; நானும் தாமரையும் தான். ஆலயத்தை சுற்றி வந்து சிற்பத் தூண்களைப் பார்க்க ஆரம்பித்தோம். ஆலய சிற்பங்களை செய்யும் போது சிற்பிக்கும் ஆலயத்தை எடுப்பித்த நாயக்க அரசருக்கும் சண்டை நடந்திருக்க வாய்ப்பிருப்பது போல் தெரிகிறது. அவ்வாறு இல்லை என்றாலும் சிற்பி தன் ஆசிரியரிடம் சண்டைபோட்டுக்கொண்டு கல்வியின் பாதியில் வந்திருக்க வேண்டும். 

ஆலயத்தை சுற்றிவிட்டு ஊஞ்சல் மண்டபதில் அமர்ந்துகொண்டோம். மார்கழி மாத மதியம் என்பதால் அத்தனை வெயில் இல்லை. ஆனாலும் தொடர் பயணத்தில் தாமரை களைத்திருந்தான். கோயில் மண்டபங்கள் தூங்குவதற்கு அற்புதமானது. ஆலயம் பெரிதாக இருப்பதால் வெக்கை, ஊரின் சத்தம் ஆகியவை குறைவாகத்தான் இருக்கும். எந்த வித முயற்சியும் இல்லாமல் உறக்கம் வந்து ஆட்கொள்ளும். அந்த ஆலயத்தில் இருந்த சில நல்ல சிற்பங்களில் ஒன்று அங்கிருந்த யோக ராமர் தூண் சிற்பம் அதுவும் சேதமடைந்திருந்தது வருத்தமாக இருந்தது. தாமரை ராமனுக்குக் கீழேயே துயில ஆசைப்பட்டான்; அந்த சிற்பத்தில் அனுமார் இல்லாத குறையை சரி செய்வதற்கு.

*************

குந்தவை ஜினாலயம் அமைந்துள்ள திருமலை மழைவானம் இல்லாத வறண்ட வான்நிலை உள்ள பூமியைச் சேர்ந்தது. இங்கு சுற்றியுள்ள மலைகளில் பெரும் கற்காலம், புதிய கற்காலம், உலோக காலம் ஆகிய வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் வரலாற்றுக் காலம் வரையான வரலாற்றுத் தடயங்கள் நிறைய கிடைத்துள்ளன.

தமிழகத்தில் சமணம் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள், திருமலை, திருப்பருத்திக்குன்றம், திருநறுங்கொண்டை, மேல் சித்தாமூர் ஆகிய நான்கு சமணத்தலங்களுக்கும் செல்ல வேண்டும். இந்த ஆலயங்கள் ஒரு சித்திரத்தை அளிக்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் சமணம் படிப்படியாக வளர்ந்து வந்ததையும், எக்காலத்திலும் அதற்கு ஆதரவு இருந்ததையும் தெரிந்து கொள்ளலாம். திருமலையில் ஒற்றை சமண ஆலயம் அல்ல, ஆலயங்களின் தொகுப்பே உள்ளது. சமணர்கள் ஸ்ரீசைலம் எனக் கூறும் இந்த திருமலையின் மீது இரு ஆலயங்கள் உள்ளன. படிக்கட்டுகள் வழியே சென்றால் முதலில் நேமிநாதரைக் காணலாம். தமிழகத்தின் மிகப்பெரிய நேமிநாதர் இவர். சமணத்தீர்த்தங்கரர்கள் மொத்தம் 24 பேர் இருந்தாலும், சிலருக்கு மட்டுமே அதிக கோவில்கள், முதலாமவரான ரிஷபதேவர், இறுதியில் வந்த மகாவீரர் இவர்களைத் தாண்டி தமிழ்நாட்டில் பார்ஸ்வநாதரை அதிகம் பார்க்கலாம், அடுத்தாற்போல சந்திரபிரபர் மற்றும் மல்லிநாதர். இந்த அருகர்களோடு நேமிநாதரும் தமிழகத்தில் அதிகம் கோவில் கொண்டுள்ளார். 

தமிழில் 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூல் ஒன்றுக்கு இந்தத் தீர்த்தங்கரர் பெயர்தான் இடப்பட்டுள்ளது. குணவீர பண்டிதர் எழுதிய இலக்கண நூலின் பெயரே நேமிநாதம். நேமிநாதருக்கு சென்னை மயிலாப்பூரில் ஒரு ஆலயம் இருந்து பின்னர் அழிந்ததாகச் சொல்கிறார்கள். மயிலாப்பூரைச் சேர்ந்த அவிரோதியாழ்வார் நேமிநாதர் மீது அந்தாதி நூல் ஒன்று எழுதியிருக்கிறார், பெயர் திருநூற்றந்தாதி. மு.இராகவையங்கார் பதிப்பித்த திருக்கலம்பகம் முதலிய சமண நூல்கள் மயிலையில் இருந்த நேமிநாதர் ஆலயத்தைப் பற்றி பதிவு செய்கின்றன. தற்போது அந்த ஆலயச் சிலைகள் மேல்சித்தாமூரில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலான சிலைகளில் ஆழியண்ணல் (நேமிநாதர்) பெரிய உருவத்தினராகவே வடிக்கப்பட்டு இருக்கிறார், தீர்த்தங்கரர் குறித்த தொன்மங்களில் ஒன்றாக இது இருக்கலாம். திருமலையில் நேமிநாதர் 16 அடி உயரச்சிலையாக மலையிலேயே செதுக்கப்பட்டுள்ளார். அசப்பில் பார்த்தவுடனே நமக்கு சிரவணபெலகோலா நினைவுக்கு வரும், இருந்தாலும் இவர் பாகுபலியாகிய கோமதீஸ்வர் இல்லை. நேமிநாதர், சிகாமணி நாதர் என்னும் பெயரால் இங்கு அழைக்கப்படுகிறார். பாறையிலிருந்தே இருபுறமும் சுவர் எழுப்பி ஒற்றை சன்னதியாக கோவில் எடுத்திருக்கிறார்கள். அவ்வாறு அல்லாமல் வெறுமனே விட்டிருந்தால் மழையில் நீர் வழிந்து செல்வது அவருக்கு இருபுறமும் பூமாலை சாற்றியது போல் இருந்திருக்கும். ஆலயத்தின் இடப்புறம் நீண்ட கல்வெட்டு காணப்படுகிறது. ஆழியண்ணலின் பாதங்களில் நின்றோம், அவர் சிரம் எங்கோ மலை முகடுகளைத் தாண்டி விண்ணில் இருந்ததைப்போல தெரிந்தது. 

மறமே முனிந்து மயிலாபுரி நின்று மன்னுயிர்கட்கு
அறமே பொழியும் அருட்கொண்டலே அதரஞ் சிவந்த
நிறமே கரியவொண் மாணிக்கமே நெடுநாள் ஒளித்துப்
புறமே திரிந்த பிழையடி யேனைப் பொறுத்தருளே 

 - திருநூற்றந்தாதி முதல் பாடல் 

திருமலை நேமிநாதர்

அங்கிருந்து வலது புறமாக செல்லும் படிகளில் போனால் இன்னும் சிறிது தூரத்தில் பார்ஸ்வநாதருக்கான சிறிய ஆலயம் உள்ளது. அதைக்காண செல்லுகையில் வளைவு ஒன்றில் பெரிய உருண்டைக்கல் ஒன்று நின்றிருந்தது. கீழே இறங்கிக் கொண்டிருந்த குடும்பத்தின் சிறுவர்கள் அதை உருட்டித்தள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். பார்ஸ்வநாதருக்கு எப்போதும் தலைக்குப் பின்னால் ஐந்துதலை பாம்புக்குடை ஒன்று இருக்கும், அது அவரது அடையாளம். அவரைக்கடந்தால் மலையுச்சி, அங்கு திருமலையில் முக்தியடைந்த மூன்று சமண ஆசிரியர்களின் பாதங்கள் வடிக்கப்பட்டு அருகிலேயே அவர்களது பெயரைத் துதிக்கும் கிரந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த மலை உச்சியில் மலர் மரங்கள் இரண்டு இருந்தது. வெள்ளை நுனி, சிவந்த அடி, மஞ்சள் இதழ்கள் கொண்ட தடிமனான பூக்கள், மணமானவை. பருவத்தில் இலைகள் ஒன்றுமில்லாது பூக்கள் மட்டும் கொத்துக்கொத்தாக இருக்கும் மரங்கள். நாங்கள் சென்றபோது திகம்பரமாக நின்றன, இலையோ பூவோ ஏதுமின்றி. அங்கு அமர்ந்திருந்தோம், குருகு இதழ் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். மலைஉச்சிகளெல்லாம் மனித மனத்துடன் ஆடுபவை, ஆழங்களை சென்று காண்பவை, நாம் பழகிய மனிதர்கள், முன்னுணராத எண்ணங்களை வெளிப்படுத்தும் தருணங்களை எப்போதும் கண்டிருக்கிறேன். மலைக்கு கீழ் பேரேரி ஆகாயத்தின் ஆடிபோல் கிடந்தது. 


மலைக்கு திருமலை என்ற பெயர் வழங்கியது போல ஊருக்கு வைகாவூர் என்ற பெயர் இருந்திருக்கிறது. மலைக்கு எதிர் வலமாக சென்றால், கட்டுமானக்கோவிலுக்கு செல்லலாம். ராஜ கோபுரத்தை அடையும் முன்னரே, கோவிலின் இடப்புறம் பஞ்ச பரமேஷ்டிகளின் சிறு ஆலயம் ஒன்றுள்ளது. ராஜ கோபுரத்தில் முழுக்கவே கிளிகளின் கூச்சல். கீழே இருந்த கோவிலில் மூலவர் பெரிய கருவறையை நிறைத்து அமர்ந்திருந்தார், சுற்றியும் வண்ணங்கள் பொழிந்து நின்ற கருவறையில் வெண்ணிற சுதைவடிவ மகாவீரர். அருகில் யட்சர்களின் வடிவங்கள். அவரது ஆசனம் குறித்து குடவாயில் பாலசுப்ரமணியம் நூலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. அவரது பாதங்களைத் தொட்டேன், குளிர்ந்த மெழுகு பூசியிருந்தவை போன்ற பாதங்கள். 

மேல் தளத்திற்கு, படிகள் மூலம் சென்றோம். சிறிய தோட்டம் ஒன்றை அமைத்து முதல் தளத்தை தொல்லியல் துறை நன்கு பராமரிக்கின்றது. இங்குள்ள கோவிலே நேமிநாதருக்கு எடுக்கப்பட்ட பழைய கட்டுமானக்கோவில். பலிபீடம் தாண்டி முகமண்டபத்தில் ஐந்தடி உயரத்தில் உள்ள பெரிய கல்லொன்றில் நேமிநாத தீர்த்தங்கரர் அமர்ந்திருக்கிறார். அவருக்குப் பின்னால் மூங்கில் இலைகள் செதுக்கப்பட்டிருந்தன. முன்பு கருவறையில் அமைந்த சிலை இது என்கிறார்கள். சிறிது மேலே சென்று சுனைகளோடு இருந்த இரு சிறிய குகைகளைப் பார்த்தோம். அங்கிருந்த பூக்கள் வித்தியாசமாக இருந்தன. 

கருவறை வாயில் திறக்க நேரமிருந்தது, பக்கவாட்டில் இருந்த தனிச்சன்னதிகளில் தீர்த்தங்கரர்களோடு யட்சியும் இருந்தனர், பிற்காலப்பணி. அங்கிருந்து ஓரத்தில் படிகள் மேலேறின. பாறைச் செதுக்கு சிறப்பங்கள் முன் படியமைத்து அறையாகக்கட்டி குகைச்சன்னதியாக ஆக்கியிருந்தனர். மிகக்குறுகலான அறைக்குள் வரிசையாக தர்மதேவி, பாகுபலி, மகாவீரர், பார்ஸ்வநாதர் ஆகியோர் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டுமே சென்று பார்க்கக்கூடிய அறை இது. உண்மையிலேயே கருவறையின் உள்ளிருக்கும் அனுபவத்தை தரக்கூடியது. முன்பு மேல்சித்தாமூர் மலைநாதர் ஆலயத்திலும் இதே நால்வரைப் பார்த்திருக்கிறோம். இவை சோழர் காலச்சிலைகள், பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த வரிசையில் உள்ள பாகுபலியின் சிலை எழிலார்ந்தது, அவரது கால்களில் சுற்றியுள்ள கொடிகள் அழகியவை. அவர் தலைக்கு மேல் இடப்புறம் இரு யானைகளும் மக்களும் செதுக்கப்பட்டுள்ளனர், அழகிய களிறும் பிடியும் பெருங்கை பிணைத்திருக்கின்றன. வலப்புறம் அருகரைப் பார்த்து வியக்கிற தந்தை தனது தோளில் குழந்தையை ஏற்றி வைத்திருக்கிறார், அருகில் தாய். அழகிய குடும்பம். சந்தேகத்திற்கிடமின்றி இத்தொகுதியில் அழகிய சிற்பம் இது. 

பாகுபலி
இத்தொகுதியில் மகாவீரரின் முக்குடையும், அவர்மீது பொழியும் மலர்களும் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. மலர்கள் பொழிவது போன்று வேறெங்கும் காணமுடிவதில்லை, சிற்பி புதுமையாக இதை செய்திருக்கிறார். அடுத்து நிற்கும் பார்ஸ்வ நாதரின் மீது கமடாசுரன் பாறையை வீச முயல்கிறான், பத்மாவதி யட்சி அவரைக்காக்க குடைபிடித்து நிற்கிறாள். தரணேந்திர யட்சன் மண்டியிட்டு பணிகிறான். எந்தக்கவலையுமற்ற நிலையில் பார்ஸ்வர் புன்னகைக்கிறார். தொகுதியின் முதலில் உள்ள தர்மதேவி யட்சி ஒரு கரத்தில் மலருடன், மறுகையில் அருகிலுள்ள கமுகு மரத்தைப் பற்றியபடி அதில் ஒருகாலையும் ஊன்றி நிற்கிறாள். இவளது கீழே வாகனமாகிய சிம்மம் நிற்கிறது. தர்மதேவியின் குழந்தைகளும் பணிப்பெண்ணும் கீழே நிற்கிறார்கள். மேல் சித்தாமூரைப் போல நளினமாக அல்லாமல் இங்கு தர்மதேவி கம்பீரமாக வடிக்கப்பட்டிருக்கிறாள். குழந்தைகள் யாவரும் அன்னையிடம் அடையும் சொல்லொண்ணா மையலை அடைந்தேன்.

திருமலை - தர்மதேவி

மீண்டும் முதல் தளத்திற்கு வந்து அங்கிருந்து சமண ஓவியங்கள் உள்ள குகைத்தளத்திற்கு மேலேறிச்செல்ல வேண்டும். வளைந்து மேலேறிய படிகள் சற்று விசாலமான காற்றோட்டமுள்ள இடத்திற்கு இட்டுச்சென்றன. பெரிய குகையாக இருந்த பகுதியை செங்கற்கள் கொண்டு நீட்டி மூன்று அறையாக அமைத்திருந்தனர். ஒரு சிறிய சன்னதி, முகப்பு பகுதியின் ஓரத்தில் இருந்தது. அதன் பின்னும் முன்னுமாக நீண்ட ஐம்பது பேர்வரை வசதியாக தங்குமிடம் உள்ளது. மேல் விதானமெங்கும் வண்ண ஓவியம், நாம் தரைவிரிப்பு வைத்திருப்பதுபோல அவர்கள் பூக்கள் கொண்ட கூரை விரிப்பு செய்திருக்கிறார்கள். ஒரு பூவுக்குள் இருப்பது போல் இருந்தது.

சன்னதியின் அருகிலேயே வாசல் விட்டு அடுத்த பகுதி. இது வரிசையாக அருகர்களும் யட்சியும் சுதை வடிவில் நின்றிருந்த இடம். திருமலையின் கோவில்கள் அனைத்துமே சுட்ட பட்டை செங்கற்களால் கட்டபட்டவை. கோயிலின் அதிஷ்டான பீடம் மட்டும் கல்லாலானவை. அந்த சுட்டசெங்கல்லை செதுக்கி தீர்தங்கரர்களைச் செதுக்கியிருந்தனர். தற்போது பீடங்களின் எச்சங்கள் மட்டும் உள்ளது. தர்மதேவியின் சுதைசிற்பம் பின்னால் உள்ள சுவர்முழுவதும் தர்மதேவியின் கதை ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன, இப்போது சில இடங்கள் மட்டும் மீதம் உள்ளன. 

திருமலை ஓவியம் - அக்னிலா, சமணத் துறவிகள்

இந்த இடத்திலிருந்து ஒரு சுவர் பிரிந்து அடுத்த வெளிப்பகுதி செல்கிறது. சாளரம் உள்ள அந்தப்பகுதியிலும் அடுத்த அறையிலும் சுவர்கள் முழுதும் ஓவிய எச்சங்கள், பல சிதைந்த, சில முழுமையான ஓவியங்கள். அருகர் ஞானமடைந்ததை அறியும் சமவசரண அமைப்பின் ஓவியமும் ஜ்வாலா மாலினி ஓவியமும் முக்கியமானவை. சில ஓவியங்கள் தொடர்ச்சியாக படக்கதையாக வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் சோழர் காலத்திலும் அதன் பின் விஜயநகர காலத்திலும் வரையப்பட்டவை. சில இடங்களில் சோழர் ஓவியங்கள் மேலேயே விஜயநகர ஓவியங்கள் வரையப்பட்டிருப்பதாகத் தெரிந்தது.

ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென இந்திப்பாடல் ஒன்று வீறிட்டு அலறியது, இந்தி பட பாடல் மெட்டில் ஜைனரை பாடிக்கொண்டிருந்தது. ஏதென்றறியாது பதறி சிறிது நேரத்தில் ஆலயம் திறந்து விட்டதை உணர்ந்து சிரித்துக்கொண்டே கீழே சென்றோம். 

பெயரறியாத பல்லவர் காலத்து கல்வெட்டு ஒன்று இவ்வூரில் கிடைத்த பழைய கல்வெட்டாகும், காலம் ஒன்பதாம் நூற்றாண்டு. அதன் பின் சோழர் கல்வெட்டுகள். சமண ஆலயங்களின் வரலாற்றைப் பதிவு செய்தவரான ஏ.ஏகாம்பரநாதன் இந்த ஆலயத்தைப் பற்றி பல கல்வெட்டு செய்திகளைத் தருகிறார். ஆய்வாளர் ர.பூங்குன்றனால் கண்டறியப்பட்ட பொ.யு.881ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று மலைக்கோவிலுக்கு பொன் தானம் அளிக்கப்பட்டதை சொல்கிறது. இதுவே திருமலையில் கிடைக்கும் காலத்தால் மூத்த கல்வெட்டு. இதை பல்லவர் காலத்ததாக அனுமானிக்கின்றனர். தொடர்ந்து முதல் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன் ஆகிய சோழ அரசர்களின் காலத்தைய கல்வெட்டுகளும், பிற்கால பாண்டியர் மற்றும் சம்புவரையரின் கால கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.


கன்னரதேவன் மூன்றாம் கிருஷ்ணன் காலத்ததும் தொடர்ந்து பல சிற்றரசர்களது கல்வெட்டுகளும் நாயக்கர் கால கல்வெட்டுகளும் இங்குள்ளன. முக்கியமாக அதியமான் வம்சாவழியில் வந்த விடுகாதழகிய பெருமான் என்னும் மன்னன் இக்கோவிலுக்கு பலவகை தானங்கள் செய்திருக்கிறான். இவனது முன்னோரான எழினி என்னும் மன்னன் செய்த யட்சன் யட்சி சிற்பங்களை இவன் செப்பனிட்டு அளித்ததாக கல்வெட்டு உள்ளது. ஆகவே நீண்டகாலம் அதியர்குடிக்கு இந்த ஆலயம் முக்கியமானதாக இருந்திருக்கலாம். கல்வெட்டுகள் கோவிலுக்கான திருப்பணிகள், ஆலயத்தில் உள்ள சிலைகள் மற்றும் உலோகப் படிமங்கள் கொடையாக அளித்தமை, பாசன வசதிகள் செய்தது முதலிய செய்திகளைத் தருகின்றன. மன்னர்களின் மனைவியர், சிற்றரசர்கள், துறவியர் இவர்களோடு மன்னரின் பணியாளர் தானமளித்த செய்தியும் இங்கே உள்ளது. 

திருமலை ஆலயத்தின் அருகக்கடவுள் சிகாமணிநாதராகிய நேமிநாதர். இவரது காவல் யட்சி தருமதேவி. ஆச்சரியமாக தருமதேவி திருமலை ஆலயத்தில் சிகாமணிநாதருக்கு இணையாக சமண இலக்கியங்களில் வாழ்த்தப்படுகிறாள். இந்த யட்சியின் கதை, இவள் சோமசர்மன் எனும் அந்தணனின் மனைவி, பெயர் அக்னிலா. இவள் அருக முனிவர்களை உணவிட்டு உபசரிக்கிறாள். இதைப் பொறுக்காத கணவனால் துன்புற்று வீட்டை விட்டு வெளியேறி மலையுச்சியில் இருந்து வீழ்ந்து இறக்கிறாள். மறுபிறப்பில் யட்சியாகப் பிறந்து, நேமிநாதரின் காவல் யட்சியாக திகழ்கிறாள். அக்னிலா, தர்மதேவி யட்சியாக மாறியபின்னரும் இவளது குழந்தைகளும் பணிப்பெண்னும் இவளுடன் இருக்கிறார்கள். இவளை அணுகும் கணவன் இவள் தெய்வநிலையை அடைந்தது கண்டு இவளைப் பணிந்து இவளது வாகனமான சிங்கமாக மாறுகிறான். கிட்டத்தட்ட காரைக்காலம்மையை நினைவுறுத்தும் கதை, பற்றாக்குறைக்கு தர்ம தேவி கையில் மாங்கனிகளை கொண்டுள்ள சிற்பங்களும் உண்டு.   தமிழகத்தில் பல சமணத்தலங்களில் தருமதேவி காணப்படுகிறாள். சோழர் கால சிற்பமாகவும். சுதை வடிவிலும் இந்த ஆலயத்தில் உள்ள தருமதேவியின் கதையே ஓவிய வடிவிலும் தீட்டப்பட்டுள்ளது. முதல்தள கருவறை திறந்திருந்தது. ஆலயத்தின் வழிபாட்டு முறைகளை பூசகரிடம் கேட்டுகொண்டேன். அருகரை வணங்கி விட்டு ஆலயத்திலிருந்து வெளியே வந்தோம். 

தர்மதேவி - கழுகுமலை

வழக்கமாக இந்து கோவில்களில் புராணங்களை இடங்களோடு தொடர்புபடுத்துதல் தொடர்ந்து நடக்கும். மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் யமனை கொன்றது திருக்கடவூரில்தான் என்பார்கள். இப்படிச் சொல்லும்போது நிலத்தோடு அந்தக்கடவுளை பிணைக்கிறார்கள், பாரதப் பண்பாடு என்னும்  மைய ஓட்டத்தில் இந்த தொடர்புபடுத்துதல் வாயிலாக திருக்கடவூர் என்னும் சிறிய ஊரை இணைத்துவிடுகிறார்கள்.  அரிதாக தமிழகத்தில் திருமலை ஆலயத்தில் தர்மதேவி யட்சியை இந்த இடத்துடன் தொடர்புபடுத்தியிருக்கிறார்கள், அக்னிலா தருமதேவி யட்சியாக திருமலையில் மீள்பிறப்பெடுத்ததாக கதைகள் வழங்குகின்றன. இலக்கியங்கள், வழிபாடு, கதைகள், ஓவியம் மூலமாக திருமலையில் உள்ள தர்மதேவி யட்சி சிகாமணிநாதருக்கிணையாக பேருருக்கொள்வதை பார்க்கலாம். இவற்றின் வாயிலாக சமணம் தீர்த்தங்கரர்களுக்கு இணையாக பெண்தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க நேர்ந்ததை அறிய முடிகிறது. திடீரென திருமலை மலையுச்சியில் உள்ள மரத்தின் கீழ் ஒரு பெண் குழந்தைகளுடன் நிற்கும் காட்சி மின்வெட்டாக கண்ணில் வந்துபோனது.    

அங்கிருந்து திருமலையில் உள்ள பெரும் திகம்பர சமண மடத்தை பார்த்து விட்டு வயல்களின் வழியே ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். பயணத்தில் திரும்புதல் என்பது ஊருக்கு மட்டுமானது அல்ல. வானம் செம்மையிலிருந்து கருஞ்செம்மைக்கு மாறிக்கொண்டிருந்தது. செவ்வானம் நீர் நிறைந்த வயல்களில் பிரதிபலித்து மண்ணையும் சிவப்பாக்கியது. மண்ணில் செல்கிறோமா வானில் செல்கிறோமா என்னும் மயக்கத்துடனேயே மைச்சாலையை நோக்கிச் சென்றோம்.


அனங்கன்
தாமரைக்கண்ணன், புதுச்சேரி

முந்தைய பகுதிகள்: