சடகோப முத்து ஶ்ரீநிவாசன் விசிஷ்டாத்வைதி, (வைணவ தத்துவவாதி) வைணவ தத்துவ உரையாசிரியர். வேதாந்தத்தில் உபநிஷதங்கள், பிரம்ம ஸூத்திரம், பகவத் கீதை, ஆகிய மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்னும் மூன்று முதன்மை நூல்கள். இவற்றிற்கு சங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகிய பெரும் தத்துவ ஆசிரியர்கள் தங்களின் தரிசனத்தை முன்வைத்து உரை எழுதியிருக்கின்றனர். ராமானுஜர் அவருக்கு முன் இயற்றப்பட்ட பிரம்ம சூத்திர உரைகளை திரட்டி விரிவாக விசிஷ்டாத்வைத தத்துவத்தை முன்வைத்து பிரம்ம ஸூத்திரத்திற்கு உரை எழுதினார். அந்த பிரம்ம சூத்திர உரை 'ஶ்ரீபாஷ்யம்' என அறியப்படுகிறது. ஶ்ரீபாஷ்யம், ராமானுஜர் காலத்தில் இருந்த தத்துவ தரப்புகளான அத்வைதம், பௌத்தம், சாங்கியம் உட்பட அனைத்து தத்துவ பிரிவுகளையும் எதிர் தரப்பாகக்கொண்டு, மறுத்து விசிஷ்டாத்வைதத்தை முன்வைக்கிறது.
முத்து ஶ்ரீநிவாசன் ஶ்ரீபாஷ்யம் உட்பட ராமானுஜர் இயற்றிய வேதார்த்த சங்க்ரஹம், கத்யத்ரயம் மற்றும் அஷ்டச்லோகி, ஸந்தியாவந்தனம் ஆகிய நூல்களுக்கு மரபான வைணவ தத்துவ அடிப்படையில் தமிழில் உரை எழுதியுள்ளார். அவ்வுரைகளை அனைவரும் வாசிக்கும் படி எளிய தமிழில் செய்துள்ளார். பத்துவருடத்திற்கும் மேலாக பிராமணர், வைணவர்களுக்கு மட்டும் அல்லாது அனைவருக்கும் ஶ்ரீபாஷ்யம் உட்பட வைணவ தத்துவ பாடங்களைப் பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
|
முத்து ஶ்ரீநிவாசன் |