***************
நகரத்தார் சமுதாயத்தினர் பயன்படுத்தும் ஆபரணங்கள் என்று பார்த்தால் இதனை மூன்றாகப் பிரிக்கலாம் அவை பெண்டிர் அணிமணிகள், ஆடவர் அணிமணி, குழந்தைகள் அணிமணி.
ஆண்கள் அணி மணிகள் என்று எடுத்துக் கொண்டோமானால் முற்காலத்தில் கவுடு (கழுத்திலணிவதும் பொற்குவளையில் பூட்டிய உருத்திராட்சமணி்), கழுத்துச் சங்கிலி, குருமாத்து என்ற கைச்சங்கிலி, தங்கச்சங்கிலி, வைர மோதிரம், தங்க மோதிரம், அரும்புதடை, ரத்தினமோதிரங்கள், நவரத்தின மோதிரம், உருத்ராட்ச மாலை, நவகண்டி மாலை, மகரகண்டியும், தங்க அரைஞான் கயிறு, ரத்தினகடுக்கன், முடிச்சுகடுக்கன் போன்றவை அணிகளை பயன்படுத்தி இருக்கின்றனர்.
நகரத்தார் ஆண்கள் கார்த்திகைபுதுமை, உபதேசம்கேட்டல், திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் கட்டாயம் பயன்படுத்தும் அணிகளாக அன்று இருந்தவை மயூரகண்டி, மகரகண்டி, முத்து மாலை, புலிநகம் போன்றவை இருந்துள்ளன. மேலும் அக்காலத்தில் தலைப்பாகை அணியும் வழக்கம் நகரத்தார் மத்தியில் இருந்தது, தலைப்பாகையை விசேஷ காலங்களில் நன்கு அலங்கரித்து பயன்படுத்தியுள்ளனர். அந்த தலைப்பாகையில் வடநாட்டு நகைகளாக கருதப்படும் கலிங்க துராயையும் பயன்படுத்தியுள்ளனர் இவற்றை ரத்தினக் கற்கள், மரகதம் மட்டும் அல்லாது பட்டை தீட்டப்படாத வைரம் போன்ற கற்கள் கொண்டு செய்தும் பயன்படுத்தி உள்ளனர். இவற்றை ஆடவர்கள் மட்டும் இல்லாது பெரியவர்களும் தங்களின் விழாக்களில் உபயோகித்துள்ளனர். இவற்றோடு மாணிக்கம் மரகதம் வைரம் போன்ற நவரத்தின கற்களை கொண்டு நேர்த்தியாக வடிவமைத்து பயன்படுத்தியுள்ளனர்.
தற்கால வழக்கத்தில் மகரகண்டி, மயூரகண்டி, தாழிபதக்கம், தங்க அரைஞாண் கயிறு போன்றவையின் பயன்பாடு இல்லை. தற்காலத்தில் மகரகண்டி, மயூரகண்டி என்பது மயில் பதக்கம் என்ற பெயரில் பயன்படுத்துகின்றனர். இந்த பதக்கத்தின் மையப்பகுதியில் தோகை விரித்த மயில் உருவம் காட்டப்பட்டுள்ளது இதனையே திருமணத்தின்போது ஆடவர்கள் அணிகின்றனர் அதுபோல் தற்காலத்தில் பெரியவர்கள் தங்களது மணி விழாக்களில் கவுரிசங்கம் மட்டுமே அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
காலப்போக்கில் இன்று தோடு தொங்கட்டான் மாட்டல் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. வெகுசிலரிடம் மட்டுமே கொப்பு போடும் பழக்கம் இன்று இருக்கின்றது. மூக்கினில் அணி பூட்டுவது என்பது நகரத்தார்கள் மத்தியில் குறைவாகவே அக்காலத்தில் இருந்துள்ளது. பெரும்பாலும் மூக்கின் இரு பகுதியிலும் வைர மூக்குத்தி அணிவது வழக்கில் இருந்துள்ளது. இந்த வழக்கம் பெரும்பாலும் நாயக்கர்களின் தாக்கத்தால் நகரத்தார் மத்தியில் ஏற்பட்டிருக்க வேண்டும்.
நகரத்தார் பெண்களின் பயன்பாட்டில் இருந்த கழுத்தணி வகைகள் சில உள்ளன. அவை
சவுடு- தங்கத்தால் செய்த ஒரு வகை கழுத்தை நெருக்கி அணியப்படும் அணி. இதன் மையத்தில் சிறு மாணிக்கபதக்கம் மட்டும் கொண்டிருக்கும் பிற சமூகத்தினர் இதனை அட்டிகை என்று அழைப்பர் .
மணிக்கோவை/ நெல்லிக்காய் மாலை - தங்க மணியும் பவளமும் இணைத்து கோர்க்கப்பட்ட அணிகலன்.
கை கட்டை - சிறிய அளவிலான தங்கம் மணிகளும் பவளமும் சேர்த்த செய்யப்பட்ட ஒரு வகை அணி.
இடைச்சூரி / காரி - வெள்ளியால் செய்த மணிகளை இடையில் கோர்த்து அணிந்துகொள்வது.
கண்டசரம்- கழுத்தை ஒட்டி அணியும் ஒரு வகை அணி. மாணிக்கம், வைர கற்கள் கொண்டு சற்றும் பட்டையாய அணியப்படும்.
பூச்சரம் - இதுவும் மரகதம், மாணிக்கம், வைர கற்கள் கொண்டு சற்று பெரிய அளவில் பட்டையாய் செய்யப்பட்டு அதில் அரும்புகள், பூக்கள், கொடிகள் என்று மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட அணி.
மங்களசரம்- வைரத்தாலியும் அதன் துணை உறுப்புகளாக தாயத்து, பொட்டு மற்றும் சங்கிலிப்பகுதியையும் மாணிக்கம், வைரக்கற்கள் கொண்டு செய்து அணியப்படும் அணிகலன்.
இவற்றுள் சவுடு, இடைச்சூரி, கைக்கடை போன்றவை அன்றைய காலகட்டத்தில் தினமும் பயன்படுத்தும் கழுத்தணிகளாக இருந்து வந்துள்ளன. திருமணமான பெண்கள் தங்களின் தாலியில் காசுகள், ரத்தினம் தாயத்துகள், பவளங்கள், பவளமணிகள் போன்றவற்றை தங்களது தாலியோடு சங்கிலியுடன் இணைத்து அணிந்து வந்துள்ளனர். மற்ற சமூகத்தவர்களை போல அக்காலக்கட்டத்தில் ஆச்சிகள் மத்தியிலும் காசுமாலை, மோகனமாலை, நவரத்தினமாலை, மாங்காய்மாலை, முத்துமாலை, பாசிமாலை போன்ற கழுத்தணிகள் புழக்கத்தில் இருந்துள்ளது.
தற்காலத்தில் சவுடு, மணிக்கோவை, நெல்லிக்காய் மாலை, கை கட்டை, இடைச்சூரி, காரி போன்றவை வழக்கில் இல்லை. நகரத்தார் சமூகத்தில் தங்கச் சங்கிலியில் தாலியை கோர்த்து அணியும் பழக்கம் உள்ளது திருமணத்தின்போது பெரிய தாலி சின்ன தாலி என்று இரண்டு தங்கத்தாலி அணிவிக்கப்படும் இதில் ஒன்றை மட்டுமே அன்றாட வாழ்வில் அணிந்து கொள்ளும் வழக்கம் இன்றுவரை உள்ளது. நகரத்தார் தாலி என்பது பிற சமூகத்தைவிட சற்று வேறுபட்டு நடுவில் வீடு போன்ற அமைப்பும் இருபுறமும் மகாலட்சுமி பொட்டும் உடையதாக காணப்படுகின்றது.
கையில் அணியும் அணிகளாக அன்று பயன்பாட்டில் இருந்தவை திருகுகாப்பு, கங்கணம்காப்பு, தங்ககாப்பு, ரத்தினகாப்பு, தங்கத்தாலான தோள்வளை, தின பயன்பாட்டிற்கான வெள்ளியாலான தோள்வளை மற்றும் அரும்புதடை, வங்கிமோதிரங்கள், ரத்தினமோதிரங்கள், வெள்ளி அரும்புதடை போன்றவை இருந்துள்ளன.
அக்காலகட்டத்தில் நகரத்தார் பெண்கள் தலையணியாக பயன்படுத்தியவை நெத்திச்சுட்டி, சூரியசந்திர பிறை, சடைநாகம், ராக்கொடி, குஞ்சம் போன்றவை சிறு வயதினர் பயன்படுத்திய தலையணிகளாகும். குறிப்பிடத்தக்க தலையணி என்றுபார்த்தால் பிறைசிதேவி என்னும் ஒருவகை தலையணி அக்கால பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இது ராக்கொடியை ஒத்த ஒருவகை அணியாகும் இது இப்பகுதியில் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்காலத்தில் இவ்வகையான தலையணிகள் நகரத்தார் மத்தியில் பயன்பாடில் இல்லை.
நகரத்தார் ஆச்சிமார்கள் மத்தியில் காலில் அணியப்படும் அணிகலன் என்று பார்த்தோமானால் திருமணத்திற்கு முன்பு பெண்கள் தண்டை, கொலுசு போன்ற அணிகலன்களை பயன்படுத்தியுள்ளனர். திருமணத்திற்குப்பின் ஆச்சிமார்கள் தண்டை, கொலுசு போன்ற அணிகலன்கள் அணிவது கிடையாது. திருமணத்தின் அடையாளமாக காலில் வெள்ளி மிஞ்சிகளை மட்டுமே அணியும் வழக்கம் இருந்துள்ளது. அதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தோமானால் சிலப்பதிகார காப்பிய நாயகியான கண்ணகியின் நினைவாக காலில் தண்டை, சிலம்பு, கொலு போன்றவற்றை தவிர்த்ததாக கூறுகின்றனர்.
சிலம்புச் செல்வர் மா.பொ.சி, வா.சுப மாணிக்கனார், சோம.லே போன்ற தமிழ் அறிஞர்கள் கூற்றுப்படி நகரத்தார்கள் கண்ணகியின் வழிவந்தவர்கள் என்றும் காப்பியத்தில் சொல்லப்பட்ட கோவலன் கண்ணகியின் வாழ்வியல் முறைகளில் சுட்டப்பட்ட பல நிகழ்வுகள் தற்காலத்திலும் நகரத்தார் மத்தியில் காணமுடிகின்றது என்றும் நகரத்தார்கள் பூம்புகார் நகரை பூர்வீகமாகக் கொண்டதையும் கொண்டு இதனோடு ஒப்புமைப்படுத்தி கூறியுள்ளனர். ஆனால் தற்காலத்தில் காலில் கொலுசு அணியும் வழக்கம் திருமணத்திற்குப் பின்பு பல ஆச்சிமார்கள் மத்தியில் உள்ளது. வெகுசிலரே தொன்மை மாறாது இந்த வழமையை பின்பற்றி வருகின்றனர். அது போல் உச்சித்திலகம் (தலைவகுட்டில் குங்குமம்) இடுதல் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குமுகாயத்தில் முற்காலத்தில் இல்லாத வழக்கமாக இருந்துள்ளது. நகரத்தார் குமுகாய பெரிய பெண்கள் மற்றும் அவர்களின் பழைய புகைப்படங்கள் போன்றவை உற்று நோக்கும் போது இந்த உச்சித்திலகம் இடும் வழக்கம் இவர்கள் மத்தியிலும் இல்லை.
இங்கு குறிப்பிடப்பட்ட பல நகைகள் தற்காலத்தில் வழக்கொழிந்து பயன்பாட்டில் இல்லையென்றாலும் இவற்றை நம்மால் இன்றும் சில படைப்புகளில் நம்மால் காண முடிகின்றன எடுத்துக்காட்டாக கொத்தமங்கலம் ராசாத்தாள் படைப்பு வீட்டில் இன்றும் பிறைசிதேவி, மணிக்கோவை, நெல்லிக்காய் மாலை, தோள்வளை, சிவகண்டி போன்ற தொன்மையான நகைகள் இன்றும் காணமுடிகிறது.
நகரத்தார் குமுகாயத்தில் குழந்தைகளுக்கு தங்கதோடு , வைரதோடு, சங்கிலி, காப்பு, மோதிரம், தங்க அரைஞாண் கயிறு, தங்கத்தண்டை, ஐம்பொன் தண்டை போன்ற அணிகலன்களையும் அத்தோடு முற்காலத்தில் குழந்தைகளுக்கு கழுத்தில் ஐம்படைத் தாலியும் அணிவிக்கப்பட்டது. அதில் சங்கு, சக்கரம், கதை, வில், வாள் இடம் பெற்றிருக்கும். பின்னாளில் தங்க அரைஞாண் கயிற்றில் இதனை இணைத்து பயன்படுத்தப்பட்டது.
அணிகலன்களின் பெயர்களை குறிப்பிடும் போது நகரத்தார்கள் சில தனித்துவமான தமிழ் சொல்லாடல்களை இன்றுவரை பயன்படுத்துகின்றனர். தங்க வளையல், மெட்டி, உத்திராட்சம் போன்றவற்றை நகரத்தார்கள் காப்பு, மிஞ்சி, கவுடு என்று அழைக்கும் வழக்கம் உள்ளது அதுபோல் கழுத்துரு, மங்களச்சரம், பூச்சரம், கண்டசரம், வைரக்காப்பு போன்ற நகைகளை பெரிய நகைகள் என்று குறிக்கும் வழக்கமும் உள்ளது.
திரிமூர்த்திகளில் காத்தல் கடவுளாகிய திருமாலின் ஆயுதங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. தற்காலத்தில் இந்த ஐம்படைதாலியை பிள்ளைகளுக்கு அணிவிக்கும் வழக்கம் வெகு சிலரிடமே உள்ளது. பிள்ளை பிறந்த 16 நாட்களுக்குள் காது குத்தி பிள்ளைக்கு பொன் நகைகள் அணிவித்து தூக்கும் பழக்கம் இன்றுவரை நகரத்தார் வழக்கத்தில் இருந்து வருகிறது.
நகரத்தார்கள் அக்காலத்தில் பயன்படுத்திய அணிகலன்கள் பெரும்பாலும் நவரத்தினகற்கள் கொண்டு செய்யப்பட்டவை குறிப்பாக மாணிக்கம், மரகதம், பவளம், முத்து இவற்றையே அதிக பயன்பாட்டில் இருந்துள்ளன. வைரத்தின் பயன்பாடு அணிகலன்களில் மிகக்குறைவாகவே காணமுடிகிறது. இவை நகரத்தார்கள் கிழக்காசிய நாடுகளில் செய்த வணிகமே இதற்கு முக்கியக்காரணமாக அமைந்தது. அங்கு கிடைத்த மிகவும் உயர்ந்த ரக மாணிக்கம், பவளம், மரகதகற்களையே அணிகளில் பயன்படுத்தினர்.
முதலாம் உலகப்போரின் காரணமாகவும் அதற்கு பின் சில பத்தாண்டுகளில் வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியாலும் நகரத்தார்களுக்கும் தெற்காசிய நாடுகளுக்குமான தொடர்பு மெல்ல துண்டிக்கப்படும் போது நகரத்தார் மத்தியில் இந்த மாணிக்க கற்கள் மரகத கற்களின் பயன்பாடு சற்று குறைய தொடங்கி வைரக்கற்களை பயன்படுத்தும் வழக்கம் வந்தது. இது தற்போது வரை நகரத்தார்கள் மத்தியில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இன்று நகரத்தார்கள் மத்தியில் மாணிக்க கற்கள் கொண்டு செய்த நகைகளை காண்பதே அரிதாகிவிட்டது.
|
திருவண்ணாமலை அண்ணாமலையார் |
மேலும் இந்த மாணிக்கக் கற்களின் பயன்பாடு நகரத்தார் மத்தியில் அதிகம் இருந்ததற்கான சான்றாக இருப்பவை நகரத்தார் திருப்பணி செய்த கோவில்களின் இறைவனுக்கு அவர்களால் வழங்கப்பட்ட அணிகள். பெரும்பாலான கோயில்களை நகரத்தார் திருப்பணி செய்யும் போது அங்குறையும் இறைவனுக்கு வைரநகைகளை காட்டிலும் மாணிக்க கற்கள் பதித்த நகைகளையே அதிகம் செய்து அர்ப்பணித்துள்ளனர். எடுத்துக்காட்டாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நகரத்தார்களின் திருப்பணிக்கு மிகச் சிறந்த சான்றாகும் இங்கு அண்ணாமலையாருக்கு அணிவிக்கப்படும் ரத்தின கிரீடம், கர்ண பத்திரம், மகரகண்டி, தாளிப்பதக்கம் போன்றவை நகரத்தார்களின் கொடைகளே. அது மட்டுமல்லாது திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில், சிக்கல் சிங்காரவேலவர் கோவில் போன்றவை நகரத்தார்களின் திருப்பணியே. அங்கும் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நகை வகைகளில் அதிகம் மாணிக்ககற்கள் கொண்ட நகைகளையே நம்மால் காண முடிகிறது.
மேலும் செட்டிநாட்டில் உள்ள பல திருக்கோயில்களில் நகரத்தார்கள் மாணிக்க கற்கள் கொண்ட நகைகளையே இறைவனுக்கு சமர்ப்பித்துள்ளனர். செட்டிநாட்டு பகுதிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் உ.சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயில் அம்மனுக்கு நகரத்தார்கள் செய்து வைத்த ஜுவாலை கிரீடம், கண்டனூர் சிவாலயத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு நகரத்தார்கள் செய்துவைத்த பெரும்பான்மையான நகைகள் மாணிக்க நகைகளே.
|
சிக்கல் சிங்காரவேலர் |
நகரத்தார்கள் கடவுளிடம் தாங்கள் கொண்டிருந்த பக்தி போலவே எந்த சமரசமும் இன்றி, உயர்ந்த மாணிக்கம் மற்றும் மரகத கற்களால் செய்த நகைகளையே இறைவனுக்கு சமர்ப்பித்திருக்கிறார்கள். சிந்து, ஹரப்பா நாகரீகத்திளிருந்து இன்று வரை நீடித்துள்ள தங்கத்தின் மேல் உள்ள, இந்திய மக்களின் ஆசையை காணும் போது காலத்தின் ஊடாக பயணிப்பதற்கு அது எதையோ தன்னுள் கொண்டுள்ளதோ என்று தோன்றுகிறது.
இராம. நா. இராமநாதன்
கட்டுரையாளர் இராம.நா.இராமநாதன், செட்டிநாட்டில் உள்ள தெக்கூர் இவரது பூர்வீகம். பெற்றோருடன் சிதம்பரத்தில் வசிக்கிறார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புத்துறை பொறியாளர் பணி. அணிகலன்களை குறித்து தொடர்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிவருகிறார். செட்டிநாட்டு கலாசாரம் மற்றும் குடந்தை நாகநாதசுவாமி ஆலய சிற்பங்களை கம்பன் பாடல்களோடு ஒப்பிட்டு இவர் எழுதிவரும் பதிவுகள் முக்கியமானவை.