பாடல் - 4
ஆழவும் போலெ ஞங்ஙளும்
மாயயும் நின் மஹிமயும்
நீயுமென்னுள்ளிலாகணம்
ஆழமும் போலே நாங்களும்
மாயையும் உன் பெருமையும்
நீயும் என்னுள்ளில் சேரவேண்டும்
ஆழியும் திரயும் காற்றும் ஆழவும் போலெ: கடலும் அதில் தோன்றி மறையும் அலைகளும், அலைகள் தோன்றக் காரணமாயுள்ள காற்றும், கடலின் அகமாகிய ஆழமும் எவ்வாறானவையோ, அதுபோலவே
ஞங்ஙளும் மாயயும் நின் மஹிமயும் நீயும்: (கடலைப் போன்ற) நாங்களும் (அலையைப் போன்ற) மாயையும் (கடலில் அலைகளை உண்டாக்கும் காற்றைப் போல கண்ணுக்குப் புலப்படாத) உனது பெருமையும் (கடலின் ஆழத்தினை ஒத்த) நீயும்
என்னுள்ளில் ஆகணம்: ஆகிய பரம்பொருள் எங்களால் அறியப்பட வேண்டும். அதாவது, அனைத்தும் நானென்ற போதம் எங்களுக்கு கைகூட வேண்டும்.
(கடலும் அலையும் காற்றும் ஆழமும் என்பனவற்றில், கடலைப் போன்றவர்கள் நாங்கள், அலையைப் போன்றது மாயை, காற்றைப் போன்றது இறையின் பெருமை, கடலின் ஆழத்தைப் போன்றது கண்டறிய முடியாத தெய்வம் என்பதை நாங்கள் உணர வேண்டும். அதன் மூலம் இருமையின்மையை நாங்கள் உணரவேண்டும்.)
கடலுக்கும் அலைக்கும் உள்ள உறவு வேதாந்தத்திற்கு அணுக்கமான ஒரு உவமை. தனித்ததும், முழுமையும் ஒரே தத்துவத்தில் கலந்திருப்பதை உணர்த்தவே அலையும் கடலும் ஆழமும் இங்கே சுட்டப்படுகின்றன. அலை என்பது தனித்த ஒன்று, கடல் முழுமையானது. எல்லா அடிப்படைக் கூறுகளும் தானேயன்றி பிறிதல்ல என்று காண்கின்ற அறிவே ‘நாம்’ என்ற எண்ணத்தை உருவாக்குவது. அது கடலைப் போலவே முழுமையானது. கற்பனையில் தோன்றும் வேற்றுமை எண்ணம்தான் ‘நான்’ ‘நான்’ என்று பிரித்துப்பார்க்க வைக்கும் அறிவு. அது அலையைப் போல தனிப்பட்ட ஒன்று. ‘வேந்தாந்த சார’த்தில் தனித்த அறிவை கீழ்மையானது என்பார் சதானந்த ஸ்வாமிகள். தனிப்பட்டதிலும் முழுமையிலும் ஒன்றேபோல் கலந்திருக்கும் ஒரு மெய்மையுண்டு. அலையிலும் கடலிலும் ஆழம் எவ்வாறு ஒன்றெனவே அடங்கியிருக்கிறதோ அதுபோலவே அனைத்திலும் உறையும் ஒரு நுண்ணறிவாக தெய்வத்தை உணரவேண்டும். எல்லாவற்றிலும் ஒருபோலே திகழும் பொருளாகிய இந்த தனி மெய்மையையே “ஏஷஸர்வேஶ்வர ஏஷ ஸர்வ்வஞ்ஞ ஏஷோ அந்தர்யாமேஷ யோனி: ஸர்வ்வஸ்ய ப்ரபவாப்ய யௌ ஹி பூதானாம்’ (அனைத்துக்கும் இதுவே இறை; இது அனைத்தையும் அறிவது; அனைத்திலும் உள்ளுறைவது; அனைத்திற்கும் மூலமாக இருப்பது இது; இருப்பவை அனைத்திற்கும் முதலும் முடிவுமாக இருப்பது) என்றும் “ஶாந்தம் ஶிவமத்வைதம்சதுர்த்தம் மன்யந்தே ஸ ஆத்மா ஸ விஞ்ஞேய:’ (அமைதியானது; அருள்வடிவானது; இருமையற்றது; இதுவே ஆன்மா; அகம்; இதுவே அறியத்தக்கது) என்றும் கூறுகிறது மாண்டூக்ய உபநிடதம்.
புத்தறிவியல் கண்ணுக்குப் புலப்படக் கூடியதை முதன்மைச் சான்றாகக் கொள்கிறது. ஊகித்தறியக் கூடிய பொருள்களைக் காட்டிலும், புலன்கள் வழியே அறியக்கூடிய பொருள்களை மனம் உறுதியாக ஏற்றுக்கொள்கிறது. ஆனால் புலன்கள் வழியாக அறியக்கூடியவை எல்லாம் எப்போதும் மெய்யென்றிருக்க வேண்டியதில்லை. புலன்களின் திறனுக்கு ஓர் எல்லை உண்டு. அதற்கப்பால் உள்ளவற்றை உணரவேண்டுமென்றால் பிற சான்றுகளை பயன்படுத்த வேண்டி வரும். வேதாந்திகள் ப்ரத்யக்ஷம், அனுமானம், உபமானம், அர்த்தாபத்தி, அனுபலப்தி, சப்தம் என்ற ஆறு சான்றுகளை துணைக்கொள்வர். கண்டறிதல், நடைமுறையோடு இணைத்து கணக்கிட்டு அறிதல், காரிய-காரணத்தோடு ஒப்பிடல் என்பனவற்றை புத்தறிவியலாளர் பயன்படுத்துவர். முக்கோணத்தில் மூன்று கோணங்கள் உள்ளதை கண்டு அறியமுடியும் என்றாலும் கோணங்களின் தொகை 180 பாகை என்பதை கணக்கிட்டுதான் அறியமுடியும். புலன்களையும் மனதையும் இவ்வாறு ஒன்றிணைக்க வேண்டிய சூழல் அறிவியலைக் கற்கையில் எழும். அதில் புலன்களுக்கான இடம் மிகப் பெரிதாகவும் மனதின் உய்த்துணரும் ஆற்றலுக்கான இடம் சிறிதாகவும் இருக்கையில் experiment என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஆய்வு முறை உதவுகிறது. நேர் மாறாக புலன்கள் வழி அறிதல் வலுவற்றதாக இருக்கையில் மனதின் தன்னுணர்வையும் அனுபவத்தின் வழி உண்டாகும் அறிவையும் சார்ந்திருக்க வேண்டி வருகிறது. அப்போது ஒலியை (சப்தம்) கைக்கொள்ளும் அனுபவமே சான்றாக இருக்கிறது.
ப்ரமாணசாஸ்திரத்தில் (அறிவுவாதத்தில்) ப்ரத்யக்ஷத்தையும் (புலனறிவையும்) சப்தத்தையும் (ஒலியையும்) இரண்டு துருவங்களாகக் கருதினால், இவை இரண்டும் இணையும் மையப்புள்ளியே உபமானம் எனப்படுவது. வீட்டில் வளர்க்கும் பசுவைப் போன்றதே காட்டில் உள்ள எருமையும் என்று கேட்டறிந்த பின்னர், காட்டில் திரியும் எருமையை நேரில் காணும்போது ஒலியும் புலனறிவும் ஒன்றாகின்றன. இதனால்தான், இயற்பியலாளர் ஆய்வையே தமது முக்கியக் கருவியாகக் கொள்வது போலவே, வேதாந்திகள் உபமானத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை பயன்படுத்துகின்றனர். மேலே விவரித்த பாடலில் உள்ளது வேதாந்த விவாதத்திற்கு மிகவும் உதவும் ஒரு உவமை.
வேதாந்தத்தில் - பேசுபொருளுக்கேற்ப, (தவறான) ஊகத்தை (அத்யாஸம்) நுட்பமாக விவரிக்க - கயிற்றில் தெரியும் அரவு, பானையில் அடங்கியுள்ள மண், மணியை ஒத்திருக்கும் படிகம், வெள்ளியெனத் தோன்றும் முத்துச்சிப்பி, ஆகாயத்தில் காணப்படும் நீலம், பாலையின் கானல்நீர், விதையிலிருந்து எழுந்துவரும் செடி, நீரிலெழும் அலை என்பனவற்றை எடுத்துக்காட்டுகளாக பயன்படுத்துவது வழக்கம். ஒரு பொருளின் மீது அதில் இல்லாத ஒரு பண்பை ஏற்றுவதே தவறான ஊகம் (அத்யாஸம்) எனலாம். மேலே கூறப்பட்ட எல்லா எடுத்துக்காட்டுகளும் இந்த தத்துவத்தை சுட்டி நிற்பவையே. என்றபோதும், காரியகாரணங்களை ஒப்புவைத்து இருமையற்ற நிலையை கண்டறியும் நுண்ணறிவுள்ள தத்துவஞானி தனிப்பட்ட காரணங்களுக்காக தனக்குத் தேவையான உவமையை தேர்ந்தெடுக்கிறார்.
இங்கு கடலும் அலையும் உவமானமாக முன்வைக்கப்பட்டுள்ளதிலும் இந்த நுட்பம் அடங்கியுள்ளது. இறையைப் போற்றுபவரும் இறைவனிடம் இறைஞ்சுபவரும் கானல்நீரைப் போலவோ, கயிற்றரவு போலவோ சற்றும் மெய்யல்லாத, தோற்றத்தை மட்டுமே கணக்கில் கொள்வார் என்றால் அந்த வேண்டுதல் பொருளற்றதாகவும் பயனற்றதாகவும் மட்டுமே ஆகும். வேண்டுகின்ற பக்தன் இறைவனைப் போலவே மெய்யாக இருந்தால் மட்டுமே வேண்டுதல் பொருத்தமானதாக அமையும். அலையும், கடலும் என்ற உவமையில் அலையோ கடலோ இல்லாதவை அல்ல. கடலென்பது பொதுவானது (சாமான்யம்), அலை என்பது அதில் உள்ள பண்பு (சிறப்புக் கூறு - விசேஷம்). பிரம்மத்தை பண்புகளற்றதாக வேதாந்திகள் உருவகிப்பர் என்றபோதும், இறையை அப்படித்தான் அறியவேண்டும் என்பதில்லை. சங்கரர் கடலில் தோன்றி மறையும் அலையை வடிவமாக (பாவரூபமாய்) மட்டும் கருதினார். ஆனால் ராமானுஜரோ அதே அலையை அழகுவடிவான (பாவஸ்வருபம்) அழிவற்ற மெய்மையாகக் கருதினார். தத்துவநோக்கில் சங்கரரின் நிர்விஶேஷ பிரம்மமும் அத்வைத சித்தாந்தமும்தான் குருவுக்கு ஏற்பானவை என்றபோதும் அனைத்து நற்பண்புகளையும் (சமஸ்த கல்யாண குணங்களையும்) மாயை என்று சொல்லாமல் விஷ்ணுவின் தோற்றமாக கற்பனை செய்து பரம்பொருளைப் போற்றும் ராமானுஜ தத்துவத்தை அதேபோல் ஏற்றுக்கொள்வதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இல்லை. புறக்காட்சி தனிப்பட்ட ஒன்று என்றும் முரண்பாடானது என்றும் எண்ணவைக்கும் இவ்விரண்டு சித்தாந்தங்களிலும் அடங்கியிருக்கும் முரணை எளிதில் களைய நாராயண குருவின் ஆத்மோபதேச சதகத்தில் வரும் பின்வரும் பாடல்கள் உதவுவன:
[உலகிற்கு வேறொரு மெய்மையில்லை]
தனுவி ‘லதென்ற’ ‘தி’ ‘தென்ற’ தென்னு சர்வ்வம்
தனுதயொழிஞ்ஞு தரிச்சிடுன்னு, சாக்ஷா
லனுபஶாலிகளாமிதோர்க்கிலாரும் (பாடல் - 48)
உடலெனும் அடையாளம் இழந்து
அது எனது இது எனது என அனைத்தையும் அறிகிறது
இது கொண்டு நோக்கில்
அனைவரும் மெய்யுணர்வு கொண்டோரே]
அத்துகள்களுக்குள் அடங்கிய உலகிலும் வேற்றுமை ஒன்றில்லை]
அத்வைத வேதாந்தத்தில் மீமெய்மையின் மேலேற்றப்படும் உலகியல் மெய்மையை பல வகையான எடுத்துக்காட்டுகள் வழியே விளக்குவதை காணமுடியும். கயிற்றில் கண்ட பாம்பு என்ற உவமையில் பாம்பென்பது நிச்சயமாக இல்லாத ஒன்று. இருப்பது கயிறு மட்டுமே. பாம்பின் உருவ ஒற்றுமை முதலான சில பண்புகள் கயிற்றில் தெரிவது நமது முன்நினைவுகளால் மட்டுமே. பண்பொற்றுமையை வரையறுக்கும்போது, பாம்பின் குணம் இங்கே சிறிதும் இல்லை என்று சொல்ல இயலாது. அதனால் கயிற்றில் பாம்பு நிச்சயமாக இல்லை என்று உரத்துக் கூறாமல் மெய்மை-பொய்மைக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக (ஸதஸத்விலக்ஷணம்) சொல்லப்படுகிறது. எல்லா உவமைகளிலும் உள்ளதைப் போலவே இதிலும் ஒரு எல்லை உள்ளது. இதிலுள்ள எல்லைக் குறையை நீக்கவே வேறு உவமைகளின் தேவை ஏற்படுகிறது. இதனால்தான் வேதாந்தியான குரு மிகப் பொருத்தமான ஓர் உவமையை தேர்ந்தெடுக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு குரு கையாளும் உவமை விளக்கவியலாப் பிழைவாதத்திற்குப் பொருத்தமான அலை-கடல் உவமை. அதன் சிறப்பை விளக்குவதற்கு முன்பாக விளக்கவியலாப் பிழைவாதம் (அநிர்வசனீய க்யாதி) என்ன என்பதை சிறிது ஆராயலாம்.
இயற்கையில் இல்லாத ஒன்றை உள்ளது போல காண்பது எவ்வகையான பிழை என்பதை ஒவ்வொரு தரிசனமும் ஒவ்வொரு வகையில் விளக்கும். அதை பொதுவாக பிழை வாதம் (க்யாதிவாதம் - Theory of error) எனலாம். மெய்-பிழைவாதம் (ஸத்க்யாதி வாதம்), அபிழைவாதம் (அக்யாதி வாதம்), பிறிதுபிழைவாதம் (அன்யக்யாதி வாதம்), அகப்பிழைவாதம் (ஆத்மக்யாதி வாதம்), பொய்-பிழைவாதம் (அஸத்க்யாதி வாதம்), விளக்கவியலாப் பிழைவாதம் (அநிர்வசனீயக்யாதி வாதம்) என்ற ஆறு வகையான பிழைவாதங்கள் பிரபலமானவை. அகப்பிழைவாதம் பொதுவாக அறிவியலாளருக்கும், பௌத்தத்தில் வைபாஷிகர்களுக்கும், சௌத்திராந்திகர்களுக்கும், யோகாசார பௌத்தர்களுக்கும் ஏற்புடைய ஒன்று. ஆனால், மாத்யமிகரது சித்தாந்தம் இதற்கு பதிலாக பொய்-பிழைவாதத்தை ஏற்கிறது. நியாய தரிசனத்தை ஏற்பவர் பிறிதுபிழைவாதத்தை போற்றுகின்றனர். பூர்வமீமாம்சகர் அபிழைவாதத்தை முன்வைக்கின்றனர். மெய்பிழைவாதம் ராமானுஜருடையது. அத்வைத வேதாந்திகள் ஏற்பது விளக்கிவியலாப் பிழைவாதம்.
மெய்பிழைவாதத்திற்கும் விளக்கவியலாப் பிழைவாதத்திற்கும் இடையிலான வேறுபாடு மிகமிக நுட்பமான ஒன்று. அதனை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். விளக்கவியலாதது என்ற பெயர்க்காரணத்தால் வரையறுக்கவியலாதது என்பதைவிட அறுதியிட்டுக் கூறமுடியாதது என்று கொள்வதே பயனுள்ளதாய் இருக்கும். முத்துச்சிப்பி என்று அறிவது வரைதான் வெள்ளி நிலைபெற்றிருக்கிறது. எதுவரை வெள்ளி நிலைநிற்கிறதோ அதுவரை முத்துச்சிப்பியை அறிவதுமில்லை. இவ்விரு அறிதலும் சேர்ந்து ஒரே சமயத்தில் நிலைநிற்பதில்லை. முத்துச்சிப்பியில் துளியும் வெள்ளி இல்லை என்றநிலையிலும் வெள்ளிக்கு உரித்தான ஒரு பண்பை புலன்கள் வழியே தொடர்புறுத்திக் கொள்ளக்கூடிய மறைவான ஓரு காரணம் முத்துச்சிப்பியில் இருக்க வேண்டும். இங்கு விளக்கவியலாமையும், அறுதிப்பாடு இன்மையும் மறைந்திருக்கும் அதன் காரணத்தை (அறியாமையை) சுட்டிநிற்பவை. இதற்கு நேர் எதிராக ராமானுஜரது கருத்துப்படி, முதலில் வெள்ளியை காணும்போதும் பின்னர் முத்துச்சிப்பியை காணும்போதும் நம்மிடம் உள்ளது அனுபவம் மட்டுமே. முதலில் வெள்ளி அனுபவ அறிவாகிறது, பின்னர் முத்துச்சிப்பி அனுபவ அறிவாகிறது. இங்கு இவ்விரண்டு அறிதல்களும் ஒன்றைத்தொடர்ந்து ஒன்று நிகழ்கிறதென்பதையன்றி வேறில்லை.
சாளக்கிராமத்தை முதலில் கல்லாகத்தான் காண்கிறோம். அப்போது அது கல் மட்டுமே. நம் உடலை உடலெனக் காண்கிறோம். அப்போது அது உடல் மட்டுமே. உடலின் உள்ளுறையும் தன்னொளி கொண்ட ஆன்மா உடலை அறிவது போல தன்னையும் அறிகிறது; உடலை ஆன்மாவிலிருந்து வேறுபட்ட ஒன்றாகவும் அறிகிறது. அதிலடங்கியிருக்கும் ஒவ்வொரு அணுவிலும் வாழும் விஷ்ணுவே சாளக்கிராமத்தில் ஒவ்வொரு அணுவிலும் அடங்கியிருக்கிறான் என்று எப்போது அறிகிறோமோ அப்போதுதான் அனைத்துக்கும் இறையாகிய, அனைத்தையும் படைப்பவனாகிய, எல்லா நற்குணங்களின் வடிவாகிய விஷ்ணுவே சாளக்கிராமத்தில் இருக்கிறான் என்பதையும் சாளக்கிராமத்தில் மெய்யென இருப்பது விஷ்ணுவே என்றும் அறிகிறோம். சாளக்கிராமத்தை கண்டதும் மெய். அதில் விஷ்ணுவை கண்டதும் மெய். சாளக்கிராமம்தான் விஷ்ணு. எல்லா சிறப்புகளுக்கும் இருப்பிடமாய் உள்ள இறைவனில் பல்வேறு பண்புநலன்கள் அமைந்திருக்கும் என்பதில் ராமானுஜருக்கு மறுப்பேதும் இல்லை.
தெய்வ தசகத்தின் முக்கியமான பாடலான இதில் நாராயண குரு பயன்படுத்தியுள்ள அலை-கடல் என்ற உவமை சங்கரரின் கோட்பாட்டை ராமானுஜரின் கோட்பாட்டோடு இணைத்து ஏற்றுக்கொள்ளும்படி செய்கிறது.
கயிற்றில் அரவு இல்லை என்பதை ஒரு குழந்தைகூட எளிதில் சொல்லிவிட முடியும். என்றாலும் அலையில் நீரில்லை என்றோ, நீர் அலையல்ல என்றோ எவராலும் கூற முடியாது. வேதாந்தத்திற்கு, மற்ற பல உவமைகளைக் காட்டிலும் இந்த உவமை பெரிதும் அணுக்கமான ஒன்றாக உள்ளதை எளிதில் உணரமுடியும். தெய்வ தசகத்தில் முன்வைக்கப்படும் தெய்வம் வறட்டு வேதாந்திகள் உயிரற்ற இயல்நிகழ்வான ஒரு வடிவம் என்று ஒதுக்கித் தள்ளும் தெய்வமல்ல. உணவு, உடை முதலானவற்றை குறைவற அளித்துக் காக்கும் அருள்கொண்ட நாதனை கயிற்றில் கண்ட அரவெனவோ, ஆகாயத்தில் கண்ட மலரெனவோ, மணியைப் போன்ற படிகமெனவோ வெறும் மடமை என்று ஒதுக்கவிட முடியாது. அதனால்தான் இங்கே அலையிலும், கடலிலும் உள்ள ஒற்றை மெய்மையான ஆழத்தோடு தெய்வத்தை ஒப்பு வைக்கிறார் குரு. தெய்வம் தனித்ததிலும், முழுமையிலும், உள்ளுறைபவனாக, ஒளிவடிவினனாக, என்றுமுள மெய்மையான மெய்ப்பொருளாக இருக்கிறான்.
இந்த உவமையில் பொதுவாக வேதாந்திகள் பயன்படுத்துவதைவிட தெளிவான வேற்றுமை ஒன்று உள்ளதை கவனிக்க வேண்டும். பொதுவாக கடலும் அலையும் என்ற இரண்டு கூறுகளை மட்டுமே எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் குருவோ இங்கே கடலும், அலையும், காற்றும், ஆழமும் என்ற நான்கு உவமைக் கூறுகளை கைக்கொள்கிறார். மாண்டூக்ய உபநிடதத்தில் கூறப்படும் சதுஷ்பாதப்ரயோகம் போல குறுக்குநெடுக்காகவும் மேல்கீழாகவும் உள்ள இரண்டு கண்களின் யோகத்தில் ஏற்படும் நாலு துருவங்களையும் சமநிலைப் படுத்தும் ப்ரம்மவித்யா ரகசியத்தை அறிந்தவருக்கு மட்டுமே இதன் நுட்பமும் பெருமையும் புரியும்.
கிறிஸ்தவத்தில் தேவன் துறக்கத்தில் உறையும் பிதாவாகவும் படைப்பாளனாகவும் இருக்கிறான். அந்த தெய்வம் மிக உயர்ந்த வானில் ஒளிர்வதாகவும் பூமி அவனது கால்பீடமாக இருப்பதாகவும் உருவகிக்கப்படுகிறது. இஸ்லாத்தில் அல்லா எந்த உருவமும் இல்லாமல், இங்கு காணப்படுவதிலிருந்தெல்லாம் வேறுபட்ட பரம்பொருளாய் உள்ளான். தெய்வத்தை அதன் படைப்புகளிலிருந்து வேறுபட்ட ஒன்றாக சித்தரிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களில் சொல்லப்படும் படைப்பையும் படைப்பாளனையும் புரிந்துகொள்வது எளிது. அதை தத்துவரீதியாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது வேறு. ஆனால் கடலிலும், அலையிலும், ஆழமென்ற நிலையிலும் தெய்வம் நிறைந்திருக்கிறது என்ற அத்வைதப் பார்வையின்படி தெய்வத்தை படைப்பவனாகக் கருதுவது கடினம். பானை வனையும் குயவன் பானையிலிருந்து வேறுபட்டவனாக இருக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் அத்வைதவாதிகளான கௌடபாதரும் சங்கரரும் படைப்புவாதத்தை ஏற்றுக்கொள்ளாமல் அபடைப்பு வாதத்தையும் (அஜாதிவாதம்) உருமாற்ற வாதத்தையும் (விவர்த்தவாதம்) முன்வைத்தனர். அவர்களது வழியில் வந்த நாராயண குரு தெய்வத்தின் படைப்புச் செயலை எப்படி விளக்குகிறார் என்பதை கவனமாக பரிசீலிக்க வேண்டும்.
உலகம் தோன்றியதைப் பற்றி சிந்திக்காத மக்களே இல்லை. யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என எல்லோரும் பொதுவாக ஏற்கும் பழைய ஏற்பாட்டில் உள்ள படைப்பு நூலில் முதலில் சொல்லப்படுவது: “ஆதியில் தெய்வம் ஆகாயத்தையும் பூமியையும் படைத்தது. பூமி பாழாயும் சூன்யமாயும் இருந்தது. ஆழத்தில் தெய்வத்தின் இருள் உண்டாகியிருந்தது. ஒளி உண்டாகட்டும் என்று தெய்வம் எண்ணியது, ஒளி உண்டானது. ஒளி நல்லதென்று தெய்வம் கண்டது. தெய்வம் ஒளியையும் இருளையும் பிரித்தது. தெய்வம் ஒளிக்கு பகலென்றும் இருளுக்கு இரவென்றும் பெயரிட்டது. மாலை வந்தது, விடிந்தது, முதல் நாள். இவ்வாறு ஆறு நாட்களில் தெய்வம் மனிதன் உட்பட்ட அனைத்தையும் வரிசையாக படைத்தது. ஏழாம் நாள் தெய்வம் தனது படைப்புகளை எல்லாம் நிறுத்திக்கொண்டது.”
நித்ய சைதன்ய யதி |
யவன தத்துவவாதிகளுக்கும் உலகின் தோற்றம் என்பது முதன்மையான கருத்தியலாக இருந்தது. ‘எல்லாவற்றிற்கும் முன்பாக நீர் உண்டானது. நீர் அனைத்துமானது’ என இவ்வாறாக, இறையின் உதவி ஒன்றும் இன்றி உலகம் தோன்றியதை விவரிக்கிறார் தேலீஸ். அவரைத் தொடர்ந்து வந்த அனக்ஸிமனீஸ், அனெக்ஸிமாண்டர் போன்றவர்களுக்கும் தெய்வம் வேண்டும் என்று தோன்றவில்லை. முதல் பொருளான நீருக்கு மாறாக தீயோ வாயுவோ உண்டாகியிருக்க வேண்டுமென்ற சந்தேகம் மட்டுமே இருந்தது. ரிக்வேத காலத்திலேயே இந்தியர்கள் உலகத் தோற்றம் குறித்து சிந்திக்கத் தொடங்கியிருந்தனர். ரிக்வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் உள்ள 72, 81, 90, 121, 129-ஆவது ஸூக்தங்கள் உலக உற்பத்தி தொடர்பானவை. ரிக்வேதத்திற்குப் பிறகு ப்ருஹதாரண்யகம், சாந்தோக்யம், கடம், கௌஷீதகீ, தைத்திரீயம் போன்ற உபநிடதங்களிலும் உலகத் தோற்றம் குறித்த கவித்துவமான குறிப்புகள் உள்ளன. சாந்தோக்ய உபநிடதம் 7.10.1-இல் இந்த பூமி (ப்ருத்வி) எதுவோ, வெளி (அந்தரீக்ஷம்) எதுவோ, துறக்கம் (த்யோவ்) எதுவோ, மலைகள் எவையோ, தேவரும், மானுடரும் எவரோ, பறவைகளும், விலங்குகளும், புற்களும், மரங்களும், புலி முதலான வனவிலங்குகளும் விட்டில்களும் கரப்பான் பூச்சிகளும் எறும்புகளும் எவையோ இவை எல்லாம் கண்ணுக்குத் தெரியும் நீர்வடிவங்களே என்று சொல்லப்பட்டிருப்பது தேலீஸ் கூறும் உலகத்தோற்றம் பற்றிய தரிசனத்தை மந்திர வடிவில் எழுதியிருப்பது போன்றுள்ளது. படைப்பிலிருந்து படைப்பாளியை வேறொன்றாகக் கருதாத சாந்தோக்ய உபநிடதத்தில் பிரம்மாண்டம் முழுவதும் ஒரு முட்டையிலிருந்து பிரிந்ததாக காட்டப்படுகிறது (3.9.12). இந்த உலகெலாம் படைப்புக்கு முன்பு இன்மையென இருந்தது. அது பின்னர் மெய்யானது. அது நிகழ்ந்தது. அது அண்டமென ஆனது. அந்த அண்டம் ஒரு வருடகாலம் கிடந்தது. அது பலவாக உடைந்தது. அந்த அண்டத்தின் கபாலங்கள் (முட்டை ஓடுகள்) வெள்ளியும் பொன்னுமாக ஆயின. அவற்றில் எது வெள்ளியானதோ அந்தக் கபாலம் ப்ருத்வி என்றானது. எந்தக் கபாலம் பொன்னானதோ அது துறக்கமானது. கருவின் பருவடிவத் திரையானது மலைகளானது. கருவறை என்பது மேகங்களோடு கூடிய பனியானது. தமனிகள் எல்லாம் நதிகளாயின. கருவின் சிறுநீர்ப்பையிலிருந்த நீரென்பது கடலானது. இவ்வாறாக எல்லா படைப்புகளும், அவற்றிற்குக் கருவியாக இருந்த பொருளும், இன்மையிலிருந்து மெய்மை தோன்றியதும் எல்லாம் ஒருங்கே விவரிக்கப்பட்டிருக்கிறது.
ப்ரஹ்மணஸ்பதி, விஶ்வகர்மா, புருஷன், ஹிரண்யகர்பன் என பலவிதமாக கற்பிக்கப்பட்ட அடைமொழிகளோடு, படைப்புவாதம் என்பது வேத-உபநிடதங்களிலேயே முளைவிட்டெழுந்துவிட்டிருந்தது. என்றாலும் படைப்பாளியான தெய்வத்திற்கு முதலிடம் கொடுத்து, அறிவும் பொருளும் படைப்புக்குக் காரணம் (அபின்னநிமித்தோபாதானகாரணம் - both material and intelligent cause) என்ற அத்வைத சித்தாந்தத்தில் ஈஶ்வரனின் இடம் என்ன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. அதனை அடுத்த பாடலில் நாராயண குரு நிறுவுகிறார்.
தமிழில் - ஆனந்த் ஶ்ரீநிவாசன்
தெய்வ தசகம் : நாராயண குரு - தொடர்கள்
தெய்வ தஶகம்: தெய்வம் - இறை, தஶகம்- பத்து. பத்து இறைப்பாடல்கள் என்பது பொருள். தமிழில் பத்துப் பத்துப் பாடல்களாக பாடப்பட்ட தேவார பாடல்களை ‘பதிகம்’ என்பர்.
நாராயண குரு (1856-1928)
இந்திய தத்துவ ஆன்மீக ஞானியரில் முக்கியமானவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி கேரள சமூகத்தை இருபதாம் நூற்றாண்டுக்கு ஏற்ப தகவமைத்த முன்னோடி. மதச் சீர்திருத்தவாதி, சமூக சீர்திருத்தப் போராளி, அறிவியக்கத் தலைவர், மாபெரும் இலக்கிய ஆசிரியர் என பன்முக ஆளுமை அவருடையது. நாராயண குருவின் மாணவர்களே கேரளத்தில் எல்லா அறிவுத்துறைகளிலும் முன்னோடிப் பங்களிப்பை நிகழ்த்தியவர்கள்.
நித்ய சைதன்ய யதி (1923-1999)
நடராஜ குருவின் நேரடி சீடர். நாராயண குருவின் தத்துவ பள்ளியைச் சேர்ந்தவர். தத்துவத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு கொல்லம் ஶ்ரீ நாராயண கல்லூரியிலும், சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். நாராயண குருவின் தத்துவ நூல்களுக்கும் பகவத் கீதை, உபநிஷதங்களுக்கும், சங்கரரின் சௌந்தர்ய லஹரிக்கும் விரிவான உரைகள் எழுதியுள்ளார். ஆங்கிலம், மலையாளம், தமிழ் என இருநூறுக்கும் மேலான குருவின் நூல்கள் வெளியாகி உள்ளது.
ஆனந்த் ஶ்ரீநிவாசன்
தமிழ் மொழிபெயர்ப்பாளர். இலக்கிய பிரதி மேம்படுத்துனர், திருத்துனர். எழுத்தாளர் ஜெயமோகனின் 25,000 பக்க நாவலான ‘வெண்முரசு’க்கு தன் மனைவி சுதாவுடன் இணைந்து திருத்துனராக இருந்தார். நித்ய சைதன்ய யதியின் படைப்புகளை தமிழில் கொணர்வதற்காக ‘நித்ய சைதன்யம்’ என்ற இணைய தளம் நடத்தி அதில் நித்யாவின் படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார். கன்னட எழுத்தாளர் ஹெச்.எஸ்.சிவபிரகாஷின் ‘குரு’, வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரியின் ‘உயிர்த்தெழல்’ ஆகிய நூல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.