Saturday, 29 July 2023

மலேசியத்‌ தோட்டப்புறத்‌ தமிழ்ச்‌ சமூகம்‌ - மு. இளங்கோவன்

மலேசியத்‌ தோட்டப்புறத்‌ தமிழர்கள்‌

இயற்கை வளம்‌ நிறைந்த நாடாகவும்‌, முடியாட்சி நடைபெறும்‌ நாடாகவும்‌, இருப்பது மலேசியாவாகும்‌. இங்கு மலாய்‌ இனத்தவர்களும்‌, சீனர்களும்‌, இந்தியர்களும்‌ வாழ்கின்றனர்‌. கி.பி.10-ஆம்‌ நூற்றாண்டில்‌ சோழப்‌ பேரரசனான இராசேந்திர சோழன்‌ கெடாவின்‌ மீது படையெடுத்து, வெற்றிகொண்டதாக வரலாறு குறிப்பிடும்‌. பதினைந்தாம்‌ நூற்றாண்டு முதல்‌ சுல்தான்களின்‌ ஆட்சி மலேசியாவில்‌ நடைபெறுகின்றது.

போர்ச்சுக்கீசியர்கள்‌ கி.பி.1511-ல்‌ மலாக்காவை கைப்பற்றினர்‌. ஆங்கிலேயர்‌ பினாங்கினை முதன்முதல்‌ கைப்பற்றி 1786-ஆம் ஆண்டு வேரூன்றினர். 1914-ஆம்‌ ஆண்டிற்குள்‌ மலேசியா முழுவதும் ஆங்கிலேயர் வசம்‌ ஆனது. இரண்டாம்‌ உலகப் போரின்பொழுது ஜப்பானியரின் கட்டுப்பாட்டில் மலேசியா இருந்தது. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு பணிபுரியவும், மலேசியாவில் சாலைகள் அமைக்கவும், நிலங்களைத் திருத்திப் பயிரிடவும், காபித்தோட்டம், ரப்பர்த்தோட்டம், கரும்புக்காடுகளில் பணிபுரியவும் ‘சஞ்சிக்கூலிகளாக’ இந்தியாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வந்தனர்‌. இந்தியர்களுள்‌ பெரும்பான்மையினர் தமிழர்களாவர்.

மலேசியாவில்‌ தமிழர்கள்‌

மலேசியாவில்‌ 22 இலட்சம்‌ தமிழர்கள்‌ வாழ்கின்றனர்‌. பினாங்கு, பேராக்‌, சிலாங்கூர், சிங்கப்பூர்‌, நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், ஜொகூர், மலாக்கா, கெடா ஆகிய மாநிலங்களில்‌ தமிழர்களின்‌ எண்ணிக்கை மிகுதியாக உள்ளது. 1830 ஆம்‌ ஆண்டு முதற்கொண்டு தமிழர்களின்‌ வருகை அமைந்துள்ளது. மலேசியாவில்‌ 1887-ல்‌ தமிழில்‌ கற்பிக்கும்‌ பள்ளி முதலில்‌ தொடங்கப்பட்டது. இன்று 523 பள்ளிகள்‌ உள்ளன.

மலேசியாவிற்கு வந்த தமிழர்கள்‌ தொடக்க காலத்தில்‌ பல்வேறு இன்னல்களைச்‌ சுமந்தனர்‌, இவர்கள்‌ அனுபவித்த துன்பங்களை இவர்கள்‌ வரலாறாக எழுதி வைக்கவில்லை. எனினும்‌ இவர்கள்‌ பாடிய தோட்டப்புறப்‌ பாடல்களில்‌ இவர்களின்‌ சோகம்‌ தோய்ந்த வரலாறு பதிவாகியுள்ளது.

தோட்டப்புறப்‌ பாடல்கள்‌

தமிழகத்தில்‌ வழங்கும்‌ நாட்டுப்புற மக்களின்‌ பாடல்களை நாட்டுப்புறப்‌ பாடல்கள்‌, நாட்டார்‌ பாடல்கள்‌ என்பது மரபாக உள்ளது. மலேசியாவைப்‌ பொறுத்தவரை இங்கு ரப்பர்த்‌ தோட்டங்கள் அதிகம் என்பதாலும், இங்குள்ள ரப்பர்த்‌ தோட்டங்களில் பாடிய மக்களின்‌ பாடல்கள்‌ என்பதாலும்‌ இவற்றைத் தோட்டப்புற பாடல்கள் என்று அழைப்பது மரபு. பால்காட்டு பாடல்கள் எனவும்‌ முத்தம்மாள்‌ பழனிசாமி தம்நூலில்‌ குறிப்பிடுகின்றார்‌.

ரப்பர்த் தோட்டப்‌ பாடல்கள்‌

தொடக்க நாளில்‌ ரப்பர்த்‌ தோட்டங்களில்‌ பணிபுரியத் தமிழகத்திலிருந்து வந்த மக்கள் ரப்பர்த் தோட்டங்களிலேயே தங்க வைக்கப்படுவர். தொழிலாளர்கள்‌ வசிக்கும் வீடுகள் வரிசையாக இருக்கும். இதனை ஆங்கிலத்தில்‌ '௯லி லைன்ஸ்' என்று குறிப்பிடுவார்கள்‌.

ரப்பர்த்தோட்ட ஆபிசுக்கு அருகில்‌ இந்த வீடுகள்‌ அமைக்கப்பட்டிருக்கும்‌. காலையில்‌ எழுந்துவந்து கங்காணி மணியடிப்பர். முதல்மணி அடித்ததும்‌ தொழிலாளர்கள்‌ எழுந்து காலைக் கடமை முடித்து, தொழிலுக்கு உரிய பொருள்களுடன் அலுவலகத்திற்கு வந்து பெயர்கொடுக்க வேண்டும்‌. அதனைப்‌ ”பெரட்டு” என்று சொல்வார்கள்‌. தோட்டத்தில்‌ பெரியதுரை, சின்னதுரை, குமாஸ்தா என அதிகாரிகள்‌ இருப்பார்கள்‌. கைக்குழந்தைகள்‌ உள்ள தாய்மார்கள்‌ தங்கள்‌ குழந்தைகளை ஆயாக்‌ கொட்டகையில்‌ கொண்டுபோய்‌ விட்டுப்‌ பணிக்குச்‌ செல்வார்கள்‌. பெண்கள்‌ இடுப்பில்‌ கோணியால்‌ அமைந்த பை ஒன்றைக்‌ கட்டியிருப்பார்கள்‌. அதற்குப்‌ பெயர்‌ 'பட்டைச்சாக்கு’ என்பதாகும்‌. மரத்தைச்‌ சீவுவதற்கு உளி வைத்திருப்பார்கள்‌. மரத்தில்‌ காயம்படாமல்‌ சீவி, அந்தப்‌ பாலைச்‌ சேகரிக்க ஒரு பாத்திரத்தைப்‌ பொருத்துவார்கள்‌. முதல்‌ நாள்‌ சீவிய பால்மரத்திலிருந்து வரும்‌ பால்‌ காய்ந்துபோய்‌ பட்டையுடன்‌ இருக்கும்‌. அதனைப்‌ பெண்கள்‌ சேகரிப்பர்‌.

ஆண்கள்‌ ஒரு நாளைக்கு சற்றொப்ப நூற்றுக்‌ கணக்கான பால்மரம்‌ சீவுவார்கள்‌. உணவுக்குப்‌ பிறகு பட்டை ஆய்வார்கள்‌. சங்கு ஒலி எழும்பியதும்‌ மரத்துக்கு மரம்‌ சென்று வடிந்த பாலினைச்‌ சேகரிப்பார்கள்‌. பாலினை வாளியில் ஊற்றி, ஒரு நீண்ட கழியில்‌ கட்டி பால்‌ பதனிடும்‌ இடத்திற்குக்‌ கொண்டு செல்வார்கள்‌. பால்‌ சேகரிப்பதைக்‌ கங்காணிகளும்‌ சிலபொழுது துரைமார்களும்‌ வந்து கவனிப்பார்கள்‌.

பால்‌ வெட்டும்‌ பொழுதும்‌, பிற தொழில்களைச்‌ செய்யும்‌ பொழுதும்‌ பாடல்களை பாடுவர். இவ்வாறு பாடப்படும்‌ பாடல்களில்‌ தமிழகத்தில் அமைந்த தங்களின்‌ சிறப்பான வாழ்க்கை, பெற்றோர்‌ பாசம்‌, உறவினர்களின் நினைவுகள்‌, பயண அனுபவங்கள்‌, கங்காணிகளிடம்‌ படும்‌ துன்பம்‌, கள்குடி முதலியன உள்ளடக்கமாக உள்ளன.


தோட்டப்புறப்‌ பாடல்களின்‌ பொதுத்தன்மை

மலேசியத்‌ தமிழர்களின்‌ துயர்‌ மிகுந்த வாழ்க்கையை எதிரொலிப்பவையாக தோட்டப்புறப்‌ பாடல்கள் விளங்குகின்றன. தங்களை ஏமாற்றி அழைத்து வந்தார்கள்‌ எனவும்‌, கப்பலில்‌ கணக்கின்றி மக்களை ஏற்றினார்கள்‌ எனவும்‌, கப்பல்‌ பயணம்‌ நீண்டநாள்‌ இருந்ததாகவும்‌, இரயில்‌ பயணங்களிலும்‌ தாங்கள்‌ வரவேண்டியிருந்தது எனவும்‌, குளிக்காமலும், துணி துவைக்காமலும்‌ இருந்ததால்‌ கட்டியிருந்த துணிகளில் சீலைப்பேன் உண்டானது எனவும்‌, சொறி சிரங்குடன் வாழ்ந்ததாகவும்‌ குறிப்பிடுகின்றன.

உழைப்புக்குக்‌ கூலியாக ஒரு நாளைக்கு அறுபது காசு கொடுப்பதையும், பனைமட்டை ஓலையில்‌ அமைந்த வீடுகளில்‌ வசித்ததையும், பஞ்சம்‌ ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்ததையும்‌ ஜப்பான்‌ ஆட்சியின் நெருக்கடிகளும் தோட்டப்புறப் பாடல்களில் பதிவாகியுள்ளன. ஆட்டு மாட்டு மந்தையைப் போல் தங்களை அடைத்துவைத்து, ஏழு மணியிலிருந்து வேலை செய்யச் சொல்லித் துன்புறுத்துவதை ஒரு பாடல் பதிவு செய்துள்ளது. போர்க்காலங்களில் கணவனை இழந்த பெண்களும், பிள்ளைகளை இழந்த தாய்மார்களும் புலம்பிய புலம்பல்கள் பாடல்களாகப் பதிவாகியுள்ளன.

ரப்பர்த் தோட்டங்களில் வேலை செய்யும் மக்களை கூலி என்று பெயர் சொல்லி அழைப்பது ஆங்கிலேயர் வழக்கம். தமிழகத்திலிருந்து வந்த தமிழர்களை இரயிலில் ஏற்றி உரிய இடங்களுக்குக் கொண்டு சென்றுள்ளனர். உப்பு, புளி இல்லாத உணவளித்து, அதனை உண்ணாதவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். சுவை இல்லாத உணவைத் தின்ன இயலாமல் மக்கள் பட்டினியில் வாடியுள்ளனர். பால் மரங்களைக் கீறும்பொழுது அழுத்திக் கீறிவிட்டால் மரத்தில் காயம்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி கங்காணி திட்டுவதை ஒருபாடல் பதிவு செய்துள்ளது, அடித்துள்ளதைப்‌ பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. சீனியை உண்ணவரும்‌ காக்காவை விரட்டுவதற்கு ஆள்‌ தேவை என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்துள்ளனர்‌. ஆனால்‌ இங்கு வந்தவுடன்‌ பத்தடி நீளமுள்ள மண்வெட்டியைக்‌ கொடுத்து கால்வாய்‌ வெட்டச்‌ சொன்னார்கள். இவ்வாறு மண்வெட்டி பிடித்ததால்‌ கைகள்‌ கொப்பளித்து, காயமான வரலாற்றை ஒரு நாட்டுப்புறப்‌ பாடல் பதிவு செய்துள்ளது.

கடும்‌ குளிரில்‌ கட்டுவதற்குத்‌ துணியில்லாமல்‌ வாழ்ந்துள்ளனர். உழைத்த காசு கையில்‌ இருந்தாலும்‌ அதனைக்‌ கொண்டு எதனையும்‌ வாங்க முடியாதபடி அவர்கள்‌ காடுகளில்‌ தங்கியிருந்துள்ளனர். நகரத்‌ தொடர்பு அவர்களுக்கு இல்லை. அவர்கள்‌ உண்ட உணவு கல்லும்‌ மண்ணும்‌ கலந்திருந்த அரிசியில்‌ சமைக்கப்பட்டுள்ளது. பரங்கிக்காயைக்‌ கொண்டு குழம்புவைத்து, பட்ட மிளகாய்‌, கிழங்கு வத்தல்‌ கொண்டு உணவு தரப்பட்டுள்ளது. அதனை உண்ணமுடியாமல்‌ பலரும்‌ வாந்தியெடுத்துள்ளனர்‌. இத்தகு சமையலைச்‌ செய்த சமையல்காரன்‌ குடும்பம்‌ நாசமாய்ப்‌ போகட்டும்‌ என்று சபிக்கும்‌ ஒரு பாடலையும்‌ மலேசியத்‌ தோட்டப்புறப்‌ பாடல்களில்‌ காணமுடிகின்றது.

தோட்டப்‌ புறத்து மக்களின்‌ காலைப்பொழுது

தோட்டுப்புறத்து மக்களின்‌ காலைப்பொழுது துன்பத்துடன்‌ ஒவ்வொரு நாளும்‌ விடிந்துள்ளதைத்‌ தோட்டப்புறப்‌ பாடல்கள்‌ குறிப்பிடுகின்றன. காலையில்‌ எழும்‌ இவர்கள்‌ உரிய கருவிகளை எடுத்துக்கொண்டு, பெயரைப்‌ பதிவு செய்துகொண்டு அவசரம்‌ அவசரமாக ஓடியுள்ளதைக்‌ கீழ்வரும்‌ பாடல்‌ உணர்த்துகின்றது.

"காலைக்கருக்கலில்‌ 
கங்காணி மணியடிக்க
அரக்கப்‌ பறக்க அடுப்பு மூட்டி,
அரைகுறையாய்‌ போட்டுகிட்டு,
பால்காட்டு கைலி சட்டை
பட்டைச்‌ சாக்கை மேலே கட்டி
காண்டா வாளி தோளில்‌ மாட்டி,
கஞ்சிப்‌ பானை கையிலெடுத்து,
நின்று நினைக்கையிலே
நெஞ்சமெல்லாம்‌ களக்குதடி
அலற அலற ஆசைப்‌ பிள்ளையை,
ஆயாக்‌ கொட்டகை விட்டு விட்டு
பெரட்டிலே பேர்கொடுத்து, |
பெரிய துரைக்கு சலாம்‌ போட்டு
அஞ்சிப்‌ பதுங்கிநின்னு
அய்யா மாருக்கு சலாம்போட்டு
ஓடிஓடி மரம்‌ வெட்டி
உட்கார்ந்து பட்டை ஆய்ந்து
பறக்கப்‌ பறக்கப்‌ பால்‌ எடுத்து,
பக்கமெல்லாம்‌ நோகுதடி"

காட்டு வாழ்க்கையின்‌ கொடுமை

மலேசியத்‌ தமிழர்கள்‌ தங்கள்‌ வாழ்க்கையைத்‌ தோட்டப்புறங்களில்‌ கழிக்க வேண்டிய கட்டாயத்தில்‌ இருந்தார்கள்‌. மலேசிய நாடு இன்று உள்ள அளவில்‌ வளர்ச்சிகளையும்‌ வசதிகளையும்‌ பெற்றிருக்காத நிலை இருந்தது. குளிரிலும்‌, பசியிலும்‌ வாழ்ந்த அவர்களின்‌ துன்ப நிலையினைக்‌ கீழ்வரும்‌ பாடல்‌ குறிப்பிடுகின்றது.

மக்களைப்‌ பிரிந்தோம்‌
துக்கமடையிறோம்‌
மாதா, பிதா மலாய்‌ நாட்டிலே..(மக்களைப்‌!)
தப்பித்துப்‌ போக வழிதெரியாம
தவிக்கிறோம்‌ சீயம்‌ நாட்டிலே - அய்யா
 எப்படிப்‌ பிழைப்போம்‌ காட்டிலே - எங்கு
 குளிரறியோம்‌ - சீயம்‌ நாட்டிலே.
 கட்டத்‌ துணியில்லாம கஷ்டப்‌ படுகிறோம்‌
 கடவுள நாம்‌ என்ன செய்திடுவோம்‌....
 கல்லும்‌ மண்ணும்‌ கலந்த அரிசியும்‌
 கழுவாமே போட்டாக்குவார்‌ - அவர்‌
 ஆக்கின சோத்தைச்‌ சாப்பிடப்‌ போனா
 ஆவென்று வாந்தி எடுத்திடுவார்‌- அய்ய
 சோத்தில்‌ புழுவைப்‌ பார்த்திடுவார்‌- சிலர்‌
 சொல்லாம அள்ளி சாப்பிடுவார்‌,
 பாசாத்‌ தண்ணியும்‌ பரங்கிக்‌ காயும்‌
 பக்குவமுடனே சேர்த்திடுவார்‌
 பட்ட மிளகாயும்‌ கிழங்கு வத்தலும்‌
 பாராமே அள்ளிக்‌ கொட்டிடுவார்‌ - அய்ய
 சமையல்காரர்‌ மோசமே- அய்ய
 சமையல்காரர்‌ மோசமே- உங்க
 புள்ள குட்டியெல்லாம்‌ நாசமே! (மக்களை)

தோட்டப்புறங்களில்‌ ஜப்பானியர்களின்‌ கொடுமை

மலேசியாவில்‌ ஜப்பானியர்கள்‌ ஆட்‌சிசெய்த பொழுது இந்தியர்கள்‌ பல்வேறு துன்பங்களுக்கு ஆளானார்கள்‌ என்று தோட்டப்புறப்‌ பாடல்கள்‌ குறிப்பிடுகின்றன. மூன்று மாதம்‌ தங்க வேண்டும்‌ என்று சொல்லி எங்களை அழைத்து வந்தார்கள்‌. இப்பொழுது மூன்று ஆண்டுகள்‌ ஓடிவிட்டன. வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுப்‌ பண்ணு உண்டு சாகும்படி எங்கள்‌ வாழ்க்கை அமைந்துவிட்டதே என்று ஒரு பாடல்‌ அழுகின்றது.

தோட்டத்தில்‌ தமிழர்கள்‌ எதிர்கொண்ட துன்பங்கள்‌

தேயிலைத்‌ தோட்டம்‌, கரும்புத்தோட்டம்‌ இவற்றில்‌ பணிபுரிய கப்பலில்‌ வந்த தமிழர்களை உள்நாட்டுக்குள்‌ இரயிலில்‌ கொண்டுவந்துள்ளனர்‌. முதலில்‌ இவர்களைக் குறித்த விவரங்களைப்‌ பதிவு செய்து ஏழுநாள்‌ மண்டபத்தில்‌ இருக்கச்செய்து, ஆளுக்குப்‌ பத்து ரூபாய்‌ முன்பணம்‌ கொடுத்து ஆடைகொடுத்துத்‌ தங்கவைத்துள்ளனர். இருபது மைலுக்கு ஒரு 'காம்ப்‌' (camp) இருந்துள்ளன. மூங்கில் காடுகளும் அதிகம் இருந்துள்ளன. அதனைக் கடக்கும் போது சேறும்‌ சகதியுமாக இருந்துள்ளது. நட்டுவாக்களி, பூரான், அட்டை கடித்துத்‌ துடித்துள்ளனர். சுட்ட கருவாடு, இணைத்து சோறு உண்டுள்ளனர்‌. துரைமார்கள்‌ பூட்ஸ்‌ காலால்‌ உதைத்து மக்களை அச்சுறுத்தியுள்ளதையும்‌ ஒரு பாடல்‌ காட்டுகின்றது. இக்கொடுமைகளுக்கு உட்பட்டு வாழ்வதைவிட கயிறுகொண்டு தூக்கில்‌ தொங்கிவிடலாம்‌ போல்‌ உள்ளது என்று ஒரு தோட்டத் தொழிலாளி வருந்தியுள்ளார்‌. பெண்களைக்‌ கங்காணிமார்கள்‌ பாலியல்‌ கொடுமைக்கு ஆட்படுத்தியதையும்‌ தோட்டப்புறப்‌ பாடல்கள்‌ தெரிவிக்கின்றன.

உழைப்பாளர்களின்‌ வேதனை

தாய்நாட்டில்‌ ஏற்பட்ட பசி, பஞ்சம்‌ போக்கவும்‌, உழைத்து முன்னேறவும்‌ மலையக மண்ணுக்கு வந்த தமிழர்களைக்‌ குறைந்த ஊதியத்துக்கு, கடுமையான வேலை வாங்கியுள்ளதைத்‌ கீழ்வரும் பாடல்‌ எடுத்துரைக்கின்றது. இதில் அவர்களில்‌ பயண வாகனமும்‌, அக்கால ஊதிய விகிதங்களும், உழைப்பின்‌ மிகுதியும்‌ பதிவாகியுள்ளன.

பாலுமரம்‌ வெட்டலான்னு
பழைய கப்பல்‌ ஏறி வந்தோம்‌
நாப்பத்‌ தஞ்சு காசு போட்டு
நட்டெலும்ப கழட்டு றானே
முப்பத்‌ தஞ்சு காசு போட்டு
மூக்கெலும்ப கழட்டுறானே

சயாம்‌ - பர்மா இரயில்‌ பாதை குறித்த நாட்டுப்புறப்‌ பாட்டுகள்‌

இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபொழுது ஜப்பானியர்கள் தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் வகையில் 415 கி.மீ. நீளமுள்ள பாதையை அமைத்தனர். சற்றொப்ப 180,000 தெற்கு ஆசியத் தொழிலாளர்களும், 60,000 போர்க் கைதிகளும் இப்பணிக்குப் பயன்படுத்தப்பட்டனர். 

வலுக்கட்டாயமாக வேலை வாங்கியதாலும்‌, காலரா, போதிய உணவின்மை, விலங்குகளின்‌ தாக்குதல்‌, ஐப்பானியர்களின்‌ கடுமையான தண்டனைகளால்‌ ஒரு இலட்சத்துக்கும்‌ மேற்பட்டவர்கள் இறந்தனர்‌. பாலம்‌ அமைக்கும்‌ காலங்களில்‌ ஆங்கிலேயே, அமெரிக்கப்‌ படைகளின்‌ தாக்குதலால்‌ பாதைகள்‌ அடிக்கடி அழிக்கப்பட்டன. அப்பொழுது பணியிலிருந்த மக்களும்‌ அழிந்தனர்‌.

மலேசியாவில்‌ தோட்டப்‌ பணிகளில்‌ இருந்த தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச்‌ சென்று இப்பணிகளில்‌ ஈடுபடுத்தியுள்ளனர்‌. கணவனை இழந்த பெண்ணும்‌, மகனை இழந்த தாயும்‌ புலம்பும்‌ வகையில்‌ பல தோட்டப்புறப்‌ பாடல்கள்‌ உள்ளன. ஜப்பானியர்களின்‌ கொடுமையையும்‌, இயற்கையால்‌ ஏற்பட்ட பாதிப்புகளையும்‌ இந்த நாட்டுப்புறப்‌ பாடல்கள்‌ குறிப்பிடுகின்றன.

பர்மா-சயாம்‌ பாதை அமைக்கச்‌ சென்றவர்கள்‌ மலைப்பாதைகள்‌ அமைக்கும்பொழுதும்‌, மிகப்பெரிய மரங்களில்‌ ஏறி, மரத்தை அறுக்கும்பொழுதும்‌ இறந்தவர்களின்‌ எண்ணிக்கை மிகுதியாகும்‌. மரம்‌ அறுக்க மரத்தில்‌ ஏறியவர்கள்‌ ஆற்றில்‌ விழுந்து இறந்துள்ளனர்‌ என ஒருபாடல்‌ குறிப்பிடுகின்றது.

தோட்டப்புறப்‌ பாடல்களில்‌ யுத்தச்‌ செய்திகளின்‌ பதிவுகள்‌

இரண்டாம்‌ உலகப்‌ போரின்பொழுது ஆங்கிலேயப்‌ படைகளும்‌, அமெரிக்கப்‌ படைகளும்‌ ஜப்பான்‌ படைகளைத்‌ தாக்கியதையும்‌ ஜப்பானியர்கள்‌ விமானங்களிலிருந்து குண்டுமழை பொழிந்ததையும்‌ பல தோட்டப்புறப்‌ பாடல்களில்‌ காணமுடிகின்றது. முதுகில்‌ வெடிகுண்டுகளைக்‌ கட்டிக்கொண்டு கப்பல் புகைக்கூண்டில்‌ குதித்துக்‌ கப்பலை வெடிக்கச்‌ செய்த செய்திகளை ஒரு பாடல்‌ குறிப்பிடுகின்றது.

முத்துசாமி கங்காணி, கருப்புச்சட்டை கதிர்வேலு கங்காணி, சாமிவேல்‌ கங்காணி, அங்கமுத்து கங்காணி என்று பல்வேறு கங்காணிகளின்‌ பெயரைத்‌ தோட்டப்புறப்‌ பாடல்கள்‌ குறிப்பிடுகின்றன. தோட்‌டப்புறங்களில்‌ வீராயி, இராமாயி, நாககன்னி, பாலாயி, எல்லம்மா, காத்தாயி வீரம்மா போன்ற பெண்கள்‌ பணிபுரிந்தனர்‌ என்று தெரியவருகின்றன. முனியாண்டி, முனியன்‌, காத்தான், அய்யனார்‌, காளி போன்ற சிறு தெய்வ நம்பிக்கைகளை பெற்றிருந்தனர்‌. தைப்பூசம்‌ பார்ப்பதைப்‌ பற்றிய பல குறிப்புகள் தோட்டப்புறப்‌ பாடல்களில்‌ கிடைக்கின்றன.

நாகப்பட்டினம்‌, காரைக்கால்‌, சிதம்பரம்‌, புத்தூர்‌ போன்ற பகுதிகளில்‌ வாழ்ந்தவர்களிடம்‌ பினாங்கில்‌ சீனிக்குக்‌ காக்கா ஓட்டும்‌ வேலை என்று கூறி ஆளுக்குப்‌ பத்து ரூபா முன்பணம்‌ கொடுத்து அழைத்து வந்து, இங்கு வேலை வாங்கினர்‌. வேலை செய்யாதவர்களைச்‌ சவுக்குமரங்களில்‌ கட்டிவைத்து கங்காணிகள்‌ அடித்தனர்‌ என்று சில பாடல்கள்‌ குறிப்பிடுகின்றன. பெண்களைக்‌ கங்காணிகள்‌ பாலியல்‌ விருப்பத்திற்கு உட்படுத்த நினைத்ததையும்‌ சில பாடல்கள்‌ குறிப்பிடுகின்றன.

கள்ளுக்கடைப்‌ பாடல்‌

தோட்டப்புறங்களில்‌ பணிசெய்த தொழிலாளர்கள்‌ கள்குடித்தும்‌, மதுகுடித்தும்‌ வாழ்ந்துள்ளனர்‌ என்பதைப்‌ பல பாடல்கள்‌ குறிப்பிடுகின்றன. மது குடித்தவர்கள்‌ மனைவியை அடித்துள்ளதையும்‌ குழந்தைகளை அடித்துள்ளதையும்‌, பிற பெண்களுடன்‌ வாழ்ந்துள்ளதையும்‌ சில பாடல்கள்‌ குறிப்பிடுகின்றன.

தாலாட்டுப்‌ பாடல்கள்‌

மலேசியத்‌ தோட்டப்புறங்களில்‌ வாழ்ந்த பெண்கள்‌ குழந்தைகளைத்‌ தாலாட்டும்‌ வகையில்‌ பல பாடல்களைப்‌ பாடியுள்ளனர்‌. குறிப்பிட்ட வயதுவரை குழந்தைகளைத்‌ தங்கள்‌ கையில்‌ வைத்திருக்க வேண்டிய நிலை இருந்தாலும்‌ அவர்களும்‌ தோட்டத்‌ தொழிலில்‌ ஈடுபடவேண்டிய தேவை இருந்ததால் ஆயா கொட்டகையில்‌ கொண்டுபோய்‌ குழந்தைகளைப்‌ போட்டுவிட்டு, அவர்கள்‌ பணிக்குச்‌ சென்றுள்ளதைத்‌ தோட்டப்புறப் பாடல்கள் தெரிவிக்கின்றன. பணி முடிந்த பிறகு தங்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு குடியிருப்புப்‌ பகுதிக்கு வரவேண்டும். குழந்தைப்‌ பாசமும்‌, தொழில்‌ செய்யவேண்டிய கடமையும்‌ தோட்டப்புறப்‌ பெண்களை வாட்டி வதைத்துள்ளன்‌.

கும்மிப் பாடல்கள்‌

தோட்டப்புறங்களில்‌ வாழ்ந்த பெண்கள்‌ கும்மிப்‌ பாடல்கள்‌ பலவற்றை பாடியுள்ளனர்‌. இப்பாடல்கள்‌ தமிழகத்தில்‌ வழங்கும்‌ பாடல்களைப் போல்‌ உள்ளன. சில பாடல்களில்‌ தமிழகத்தில்‌ வழங்கும் பாடலின்‌ சாயலைக்‌ காணமுடிகின்றது. இறை வழிபாட்டுப் பாடல்களாகவும்‌, தோட்டப்புறப்‌ பின்புலங்களை நினைவூட்டும் பாடல்களாகவும்‌ இப்பாடல்கள்‌ உள்ளன. தோட்டப்புறங்களின்‌ மேலதிகாரிகளான துரைமார்களைப்‌ புகழ்ந்து ஒரு தோட்டப்புறப்‌ பாடல்‌ பதிவாகியுள்ளது.

சுரை படர்ந்ததைப்‌ பாருங்கடி
சுரை சுத்திப்படர்ந்ததைப்‌ பாருங்கடி
சுரை கொடி வரிசைபோல
துரைக்குச்‌ சொல்லு வரிசை பாருங்கடி!
பீர்க்கம்‌ படர்ந்ததைப்‌ பாருங்கடி
பீர்க்கம்‌ பின்னிப்‌ படர்ந்ததைப்‌ பாருங்கடி
பீர்க்கம்‌ கொடி போல நம்ம துரைக்குப்‌
பிள்ள பிறந்ததைப்‌ பாருங்கடி!

ஒப்பாரிப்‌ பாடல்கள்‌

தோட்டப்புறப்‌ பாடல்களில்‌ குறிப்பிடத்தக்க அளவில்‌ ஒப்பாரிப்‌ பாடல்கள்‌ கிடைத்துள்ளன. இழப்புகளும்‌, துன்பங்களும் நிறைந்த வாழ்வில்‌ சோகத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை அதிகம்‌ இருந்திருக்கும்‌. தோட்டப்புறங்களில்‌ வாழ்ந்தவர்கள் அடிக்கு உயிர்‌ இழப்புகளை அதிகம் சந்திக்க வாய்ப்பு உண்டு. காட்டில்‌ துயர்‌ நிறைந்த வாழ்க்கை, இழப்புகளைச்‌ சந்திக்க வேண்டிய சூழல்‌ நிலவியதால்‌ ஒப்பாரிப் பாடல்கள்‌ தோட்டப்புறங்களில்‌ அதிகம்‌ பதிவாகியுள்ளதில் வியப்பில்லை. இப்பாடல்களில்‌ தமிழகப்‌ பாடல்கள்‌ பலவற்றின் செல்வாக்கைக்‌ காண முடிகின்றது. பெண்கள்‌ தங்கள்‌ பெற்றோரை நினைத்து அழுததையும்‌, தங்கள்‌ குழந்தைகளை நினைத்து அழுததையும்‌, அண்ணனை நினைத்து அழுததையும்‌ பல பாடல்களில்‌ காணமுடிகின்றது.

இறை நம்பிக்கைப்‌ பாடல்கள்‌

மலேசியத்‌ தோட்டப்‌ புறங்களில்‌ பல சாதிகளைச்‌ சேர்ந்த மக்கள்‌ வாழ்ந்துள்ளனர்‌. மொழியால்‌ இவர்கள்‌ தமிழர்கள்‌ என்று ஒரு பிரிவுக்குள்‌ அமைந்தாலும்‌, செய்யும்‌ தொழிலாலும்‌ பின்பற்றும்‌ பழக்க வழக்கங்களாலும் வேறுபட்டவர்களாக இருந்துள்ளனர்‌. இவர்கள்‌ தத்தம்‌ குலமரபுகளுக்கு ஏற்பத்‌ தங்கள்‌ குலதெய்வங்களை வழிபட்டுள்ளனர்‌. முனியாண்டி, முனி, கருப்புசாமி, ஐயனார், மாரியம்மன்‌, காளியாயி உள்ளிட்ட தெய்வங்களை வழிபட்டுள்ளனர்‌. இத்‌தெய்வங்களை வழிபடுவதற்குரிய பூசை முறைகள்‌, பலியிடல்‌ போன்றவற்றைச்‌ செய்துள்ளனர்‌. முருகன்‌, பிள்ளையார்‌, இராமன்‌, வள்ளி, விநாயகர், ஸ்ரீ அரங்கநாதர், ஆதிபராசக்தி, அய்யப்பன்‌ போன்ற பெருந்தெய்வங்களை வழிபடும்‌ பாடல்களையும்‌ தோட்டப்புற மக்கள்‌ பாடியுள்ளனர்‌.

மு.இளங்கோவன்

மு.இளங்கோவன் தமிழறிஞர்களை ஆவணப்படுத்துவதை தனது வாழ்நாள் பணியாகச் செய்து வருகிறார். 2023ம் ஆண்டுக்கான தமிழ் விக்கி தூரன் விருது வழங்கப்படவுள்ளது. அவரது 'தொல்லிசையும் கல்லிசையும்' நூல் 2019ல் வெளிவந்தது, தமிழாய்வு, இசைத்தமிழ் தொடர்பான 19 கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. "மலேசியத் தோட்டப்புறத் தமிழ்ச் சமூகம்" என்ற இந்தக்கட்டுரை அவற்றுள் ஒன்று. மலேசியத் தமிழ் சமூகத்தின் நாட்டார் வழக்காறுகளை, அதன்மூலம் அறியக்கூடிய சமூக வரலாற்றுத் தகவல்களை இந்த கட்டுரை பேசுகிறது. 

மு. இளங்கோவன் தமிழ் விக்கி
மு. இளங்கோவன் வலைத்தளம்
மு. இளங்கோவன்- வல்லினம் பேட்டி