Saturday, 29 July 2023

துளிதுளிக்‌ கால்கள்‌ - பெரியசாமித் தூரன்


நாட்டு விடுதலை இயக்கம்‌ வெள்ளமெனப்‌ பெருகி அலைமோதிக்கொண்டிருந்த காலத்தில்‌ பாரதியார்‌ சென்னைக்கு வந்து சேர்ந்தார்‌. விடுதலை இயக்கம்‌ அவரைக்‌ கவர்ந்தது. அதன்‌ விளைவாக உணர்ச்சி பொங்கும்‌ பல தேசியப்‌ பாடல்களை அவர்‌ பாடினார்‌.

இப்பாடல்கள்‌ பேச்சு மேடைகளில்‌ எல்லாம்‌ ஒலித்தன. மக்களின்‌ உணர்ச்சியை எளிதில்‌ தூண்டிவிட இவை பெரிதும்‌ உதவின. அதனால்‌ பாரதியார்‌ மிகச்சிறந்த தேசபக்திப்‌ பாடல்களைப்‌ படைப்பவர்‌ என்றே அக்காலத்‌தில்‌ மக்களுக்கு அறிமுகமானார்‌. 

அவருடைய மற்றப்‌ பாடல்களை அவை வெளிவந்த காலத்திலேயே மக்கள்‌ பெரிதும்‌ கவனிக்கவில்லை. பின்னர்தான்‌ அவருடைய பக்திப்பாடல்கள்‌, குயில்‌ பாட்டு, கண்ணன்‌ பாட்டு, பாஞ்சாலி சபதம்‌ முதலான சிறந்த கவிதைப்‌ படைப்புகளும்‌, மக்கள்‌ மனத்தில்‌ மெதுவாக இடம்‌ பெறலாயின. கவிதை என்ற முறையிலே உயர்ந்த ஸ்தானம்‌ வகிக்கத் தகுந்தவை அப்பாடல்கள்‌. அவை வெளியானதும்‌ பெரும்பான்மையான மக்களின் உள்ளத்தை ஈர்க்காமலிருந்தது ஆச்சரியந்தான்‌. இதைவிட ஆச்சரியம்‌ என்னவென்றால்‌, அவருடைய உரைநடை இலக்கியம்‌ இன்றுவரை அதிகமாகக்‌ கவனிக்கப்பெறாமலும்‌ அதற்குரிய மதிப்பைப்‌ பெறாமலும்‌ இருப்பதுமாகும்‌. "எளிய பதங்களைக்கொண்டு, எளிய நடையில்‌ காவியம்‌ செய்து தருவோன்‌, தாய்மொழிக்குப்‌ புதிய உயிர்‌ தருவோனாகின்றான்‌" என்று பாரதியார்‌ எழுதியிருக்‌கிறார்‌. 

எளிய பதங்களைக்கொண்டு எளிய நடையில்‌ உரைநடை இலக்கியம்‌ செய்வோனும்‌, தமிழுக்கு உயிர்‌ தருவோனாகின்றான்‌. பாரதியார்‌ இந்த இருபணிகளையும்‌ நல்ல முறையிலே திறம்பட செய்திருக்கிறார்‌ என்பதை அறியும்போதுதான்‌ அவருடைய முழுப்பெருமையும்‌ நமக்குத்‌ தோன்றும்‌. கவிதையை மட்டும்‌ கவனித்தால்‌ பாரதியார்‌ தமிழுக்குச்‌ செய்த சேவையை முழுமையாக அறிந்துகொள்ள இயலாது.

சாதாரணமாக எந்த மொழியிலும்‌ பேச்சு நடைக்கும்‌, எழுத்து நடைக்கும்‌ வித்தியாசமிருப்பதைக்‌ காணலாம்‌. ஆனால்‌, இந்த வித்தியாசம்‌ தமிழிலே மிகப்பெரிதாக அக்‌காலத்தில்‌ இருந்தது. எழுத்துநடை பேச்சுநடையை ஒட்டியதாக இருக்கக்கூடாது என்றே படித்தவர்கள்‌ எண்ணியிருந்தனர்‌.

டாக்டர்‌ உ. வே. சாமிநாதய்யர்‌ போன்ற மிகச்‌சிலர் துணிந்து, எளிய தமிழிலே எழுத முன்வந்தனர்‌. ஆனால்‌ கொச்சையல்லாத பேச்சுநடைக்கு அதிகம்‌ மாறுபட்டில்லாத தமிழ்நடையிலே வலிமையோடும்‌ அழகோடும்‌ எண்ணத்‌ தெளிவோடும்‌ எழுதலாம்‌ என்பதை நன்கு நிலைநாட்டியவர்‌ பாரதியாரே ஆவார்‌,

'தமிழருக்கு' என்ற கட்டுரையை அவர்‌ எப்படித்‌ தொடங்குகிறார்‌, பாருங்கள்‌:

"தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே. உனக்கு நல்ல காலம்‌ வருகின்றது. உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர்கள்‌ பிறந்திருக்கிறார்கள். தெய்வங்கள் கண்ட கவிகள்‌, அற்புதமான ஸங்கீத வித்வான்கள்‌, கைதேர்ந்த சிற்பர்‌, பல நூல்‌ வல்லார்‌, பல தொழில்‌ வல்லார்‌, பல மணிகள்‌ தோன்றுகிறார்கள்‌. அச்சமில்லாத தர்மிஷ்டர்‌ பெருகுகின்றனர்‌. உனது ஜாதியிலே தேவர்கள்‌ மனிதர்‌களாக அவதரிக்கிறார்கள்‌. கண்ணை நன்றாகத்‌ துடைத்துவிட்டு நான்கு பக்கங்களிலும்‌ பார்‌. ஒரு நிலைக்கண்ணாடியிலே போய்ப்‌ பார்‌."

மனத்திலே உண்மையான ஆழ்ந்த உணர்ச்சி இருக்க வேண்டும்‌. தெளிவு இருக்கவேண்டும்‌. அவ்வாறிருந்‌தால்‌, தெளிந்த நடையிலே, எளிமையான முறையிலே அதை வெளியிடத்‌தோன்றும்‌. "எளிய நடையைக்‌ கண்டு நான்‌ பயப்படவில்லை. அதை நான்‌ தாழ்வாகவும்‌ கருதவில்லை. எண்ணத்திலே கருத்திலே எனக்குத்‌ தெளிவிருக்‌கிறது. அதனால்‌ எல்லோருக்கும்‌ புரியும்படியாக நான்‌ எழுதத்‌ தயங்குவதில்லை" என்று ஓர்‌ ஆங்கில அறிஞர்‌ எழுதுகிறார்‌. பாரதியாரின்‌ வசன நடையிலே இந்த ஆழ்ந்த உணர்ச்சியையும்‌ தெளிவையும்‌ காணலாம்‌.

'தமிழ்‌' என்னும்‌ கட்டுரையிலே பாரதியார்‌ எழுதுவதைப்‌ பாருங்கள்‌:

"உலகத்திலுள்ள ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத்‌ திறமையிலே மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத்‌ தமிழராகிய நாம்‌ சிகரம்போல்‌ விளங்குகிறோம்‌. எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கம்‌ உண்டு. இவற்றிலே தமிழைப்போல வலிமையும்‌ திறமையும்‌ உள்ளத்‌ தொடர்பும்‌ உடைய பாஷை வேறு ஒன்றுமேயில்லை.

இந்த நிமிஷம்‌ தமிழ்‌ ஜாதியின்‌ அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பறவாமல்‌ இருப்பதை நான்‌ அறிவேன்‌. போன நிமிஷம்‌ தமிழ்‌ ஜாதியின்‌ அறிவொளி சற்றே மங்‌கியிருந்ததையும்‌ நானறிவேன்‌. ஆனால்‌, போன நிமிஷம்‌ போய்த்‌ தொலைந்தது. இந்த நிமிஷம்‌ ஸத்யமில்லை. நாளை வரப்போவது ஸத்யம்‌. மிகவும்‌ விரைவிலே தமிழின்‌ ஒளி உலக முழுவதிலும்‌ பரவாவிட்டால்‌ என்‌ பெயரை மாற்றி அழையுங்கள்‌."

சிறுசிறு வாக்கியங்களிலே அழகாகவும்‌, உள்ளத்தில்‌ எளிதில்‌ பதியுமாறும்‌ எழுதுவதிலே பாரதியார்‌ மிக வல்லவர்‌. சிட்டுக்குருவியைப் பற்றி அவர்‌ எப்படி எழுதுகிறார்‌ என்று நோக்குவோம்‌:

"சிறிய தானியம்‌ போன்ற மூக்கு; சின்னக்‌கண்கள்‌; சின்னத்‌ தலை; வெள்ளைக்‌ கழுத்து; அழகிய மங்கல்‌ - வெண்மை நிறமுடைய பட்டுப்‌ போர்த்த முதுகு, கருமையும்‌ வெண்மையும்‌ கலந்த சாம்பல்‌ நிறத்தாலாகிய பட்டுப்‌ போர்த்த முதுகு; சிறிய தோகை; துளிதுளிக்‌ கால்கள்‌.

இத்தனையும்‌ சேர்ந்து ஒரு பச்சைக்‌ குழந்தையின்‌ கைப்பிடியிலே பிடித்துவிடலாம்‌. இவ்விதமான உடலைச்‌ சுமந்துகொண்டு என்‌ வீட்டிலே இரண்டு உயிர்கள்‌ வாழ்கின்றன. அவற்றில்‌ ஒன்று ஆண்‌, மற்றொன்று பெண்‌. இவை தம்முள்ளே பேசிக்‌கொள்கின்றன. குடும்பத்துக்கு வேண்டிய உணவு தேடிக்கொள்கின்றன. கூடு கட்டிக்கொண்டு, கொஞ்சிக்‌ குலாவி மிக இன்பத்துடன்‌ வாழ்ந்து, முட்டையிட்டுக்‌ குஞ்சுகளைப்‌ பசியில்லாமல்‌ காப்பாற்றுகின்றன.

சிட்டுக்குருவி பறந்து செல்வதைப்‌ பார்த்து எனக்கு அடிக்கடி பொறாமை உண்டாகும்‌. ஆஹா! உடலை எவ்வளவு லாகவத்துடன்‌ சுமந்து செல்‌கின்றது! இந்தக்‌ குருவிக்கு எப்போதேனும்‌ தலைநோவு வருவதுண்டோ? ஏது, எனக்குத்‌ தோன்றவில்லை. ஒரு முறையேனும்‌ தலைநோவை அனுபவித்த முகத்திலே இத்தனை தெளிவு இருக்க நியாயமில்லை.

தெய்வமே, எனக்கு இரண்டு சிறகுகள்‌ கொடுக்க மாட்டாயா? நான்‌ இச்சைப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேனா? ஆஹா! எத்தனை தேசங்கள்‌ பார்க்கலாம்‌! எத்தனை நாடுகள்‌, எத்தனை பூக்கள்‌! எத்தனை மலைகள்‌, எத்தனை சுனைகள்‌, எத்தனை அருவிகள்‌, எத்தனை நதிகள்‌, எத்தனை கடல்வெளிகள்‌!"

நம்‌ உள்ளத்திலே பதிகின்ற வாக்கியங்கள்‌ அல்லவா இவை! பேசுவது போலவே அமைந்த நடை.

அவருடைய கதைகளிலும் கட்டுரைகளிலும்‌ இந்தச்‌ சிறப்பை எங்கும்‌ காணலாம்‌. "உள்ளத்தில்‌ ஒளியுண்டானால்‌ வாக்கினிலே ஒளியுண்டாகும்‌" என்று அவர்‌ பாடியதற்கு அவருடைய எழுத்துகளே தக்கச்‌ சான்றாகும்‌.

'ஞானரதம்‌' என்ற நூல்‌ இம்மாதிரியான உரைநடைக்கு ஒரு தனிஇலக்கணமாக அமைந்திருக்கிறது. இந்நூலின் பெருமையைப்பற்றிப்‌ பல ஆண்டுகளுக்கு முன்பே “அமிர்தகுணபோதினி" என்னும்‌ பத்திரிகையில்‌ எஸ்‌.ஜி.ராமாநுஜலு நாயுடு எழுதியிருப்பதாவது:

"ஞானரதம்‌ என்ற தலைப்பெயருடன்‌ தமிழ்நாடு என்றும்‌ கண்டிராத துள்ளிக்குதிக்கும் ஒரு புதிய கந்தர்வநடையில்‌, இயற்கையின்‌ அழகுகளைப் பற்றியும்‌ நெருங்கிய நண்பர்களின்‌ மனமாறுபாடுகளைப் பற்றியும்‌ அற்புதமான கற்பனையுடன்‌ வாரந்தோறும்‌ 'இந்தியா'வில்‌ எழுதி வந்தார்‌. அவற்றை ஒருங்குசேர்த்து 'ஞானரதம்‌' என்ற புத்தகமாக வெவியிட்டார்‌. அகற்கு இணையான நூல்‌ தமிழ்‌ மொழியிலில்லை. சொற்சுவை, பொருட்சுவை நிரம்பியது. பாச்சுவை பரவிய நளின நடையால்‌ அமைந்தது."

'ஞானரதம்‌' முழுவதையும்‌ திரும்பத்திரும்பப் படித்து அதன்‌ சுவையை அனுபவிக்கவேண்டும்‌. ஆதலால்‌ அதிலிருந்து இங்கு மேற்கோள்‌ காட்டாது, பாரதியாரின்‌ சிறு சிறு வாக்கியங்களின்‌ அழகிற்கு வேறோர்‌ உதாரணம்‌ காட்டுகிறேன்‌. மாலை வேளையில்‌ சூரியன்‌ மறையுந்‌ தறுவாயில்‌ மேற்கு வானத்திலே தோன்றும்‌ அழகைப்‌ பாரதியார்‌ வருணிக்கிறார்‌:

“பார்‌! ஸூர்யனைச்‌ சுற்றி மேகங்களெல்லாம்‌ தீப்பட்டெரிவது போலத்‌ தோன்றுகிறது! ஆஹா! என்ன வர்ணங்கள்‌! எத்தனைவித வடிவங்கள்‌! எத்தனை ஆயிர விதமான கலப்புகள்‌! அக்கினிக்‌ குழம்பு! தங்கம்‌ காய்ச்சிவிட்ட ஓடைகள்‌! எரிகின்ற தங்கத்‌ தீவுகள்‌!

நீல ஏரிகள்‌! கரும்‌ பூதங்கள்‌! எத்தனை வகை நீலம்‌! எத்தனைவிதச்‌ செம்மை! எத்தனை வகைப்‌பசுமை! எத்தனை வகைக்‌ கருமை! நீல ஏரியின்மீது மிதக்கும்‌ தங்கத்‌ தோணிகள்‌! எரிகின்ற தங்க ஜரிகைக்‌கரைபோட்ட கரிய சிகரங்கள்‌! தங்கத்‌ திமிங்கிலங்கள்‌ மிதக்கும்‌ கருங்கடல்‌! எங்கு பார்த்தாலும்‌ ஒளித்திரள்‌ வர்ணக்‌ களஞ்சியம்‌! போ, போ, என்னால்‌ வர்ணிக்க முடியாது.” வர்ணிக்க முடியாது என்று கூறி அழகாக வர்ணிக்கும்‌ திறமை அவரிடத்தில்‌ சிறந்து காணப்படுகிறது.

ஆழ்ந்த உணர்ச்சியும்‌, நல்ல அனுபவமும்‌, தெளிந்த எண்ணமும்‌ இல்லாமல்‌, சொல்‌ அலங்காரத்தை வைத்துக்‌ கொண்டே அழகான நடை எழுதிவிடலாம்‌ என்று சிலர் நினைக்கிறார்கள்‌. அது தவறு. அப்படி எழுத முடிந்தாலும்‌ அது உயிரில்லாத உடம்புக்கு அணிகளைப்‌ பூட்டுவது போலத்தான்‌ இருக்கும்‌. அதிலே உயிரிருக்காது.

மேலே கூறிய உணர்ச்சி முதலியவைகள்‌ இருந்தாலே போதும்‌, நடை தானாகவே அமைந்துவிடும்‌ என்று வேறு சிலர்‌ கருதுகிறார்கள். எண்ணத்‌ தெளிவிருக்கும்போது அதை நன்கு மனத்தில்‌ பதியும்படி கூறும்‌ வன்மை எளிதாக அமைகிறததென்றாலும்‌, அந்த வன்மையைக்‌ கலைத்‌ திறமையாலும்‌ பயிற்சியாலும்‌ பெருக்கும்போதுதான்‌ மிகச்சிறந்த நடை தோன்றுகிறது.

பாரதியாரிடத்திலே இந்தக்‌ கலைத்திறமையையும்‌ காணலாம்‌. நேருக்கு நேராகப்‌ பேசுவதுபோலப்‌ பின்னல்‌களில்லாமல்‌ உணர்ச்சிகளை அனைவரும்‌ புரிந்துகொள்ளும்‌ படியாக எழுதவேண்டும்‌ என்ற நிச்சயத்தின்பேரில்‌ இந்தத்‌ திறமை உருவாகியிருக்கிறது. ஓர்‌ உதாரணம்‌:

"உன்னுடைய ஆன்மாவும்‌ உலகத்தினுடைய ஆன்மாவும்‌ ஒன்று. நீ, நான்‌, முதலை, ஆமை, ஈ, கருடன்‌, கழுதை எல்லாம்‌ ஒரே உயிர்‌. அந்த உயிரே தெய்வம்‌.

ஒன்றுகூடிக்‌ கடவுளை வணங்கப்‌ போகுமிடத்து மனிதரின்‌ மனங்கள்‌ ஒருமைப்பட்டுத்‌ தமக்குள்‌ இருக்கும்‌ ஆத்மவொருமையை அவர்கள்‌ தெரிந்து கொள்ள இடமுண்டாகுமென்று கருதி முன்னோர்‌ கோவில்‌ வகுத்தார்கள்‌.

ஊரொற்றுமை கோவிலால்‌ நிறைவேறும்‌. வீட்டுக்குள்‌ தனியாகச்‌ சிலை வைத்துக்‌ கும்பிடுவது குடும்ப ஒருமை உண்டாகும் பொருட்டாக,

கவனி! நல்ல பச்சைத்‌ தமிழிலே சொல்லுகிறேன்‌. ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில்‌ பெண்‌ தெய்வம்‌ எல்லாம்‌ எனது தாய்‌, மனைவி, சகோதரி, மகள்‌ முதலிய பெண்களினிடத்தே வெளிப்படாமல்‌ இதுவரை மறைந்து நிற்கும்‌ பராசக்தியின்‌ மகிமையைக்‌ குறிப்பிடுகின்றன. அம்மன்‌ தாய்‌. அவளைப்‌போலவே நம்முடைய பெண்கள்‌, மனைவி, சகோதரி, மாதா முதலியோர்‌ ஓளிவீச நாம்‌ பார்க்கவேண்டும்‌ என்பது குறிப்பு."

உரைநடையைப்பற்றி பாரதியாரே எழுதியிருப்பதை கவனியுங்கள்‌. அவர்‌ கூறுகிறார்‌: 

"தமிழ்‌ வசன நடை இப்போதுதான்‌ பிறந்து பல வருஷமாகவில்லை. தொட்டிற்‌ பழக்கம்‌ சுடுகாடு மட்டும்‌. ஆதலால் இப்போதே நமது வசனம்‌ உலகத்‌தில்‌ எந்க பாஷையைக்காட்டிலும்‌, தெளிவாக இருக்கும்படி முயற்சிகள்‌ செய்யவேண்டும்‌. கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான்‌ உத்தமம்‌ என்பது என்‌ கக்ஷி. எந்த விஷயம்‌ எழுதினாலும்‌ சரி, ஒரு கதை அல்லது தர்க்கம்‌, ஒரு சாஸ்திரம்‌, ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும்‌ வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால்‌ நல்லது.

சொல்லவந்த விஷயத்தை மனதிலே சரியாகக்‌ கட்டிவைத்துக்‌ கொள்ளவேண்டும்‌. பிறகு, கோணல்‌, திருகல்‌ ஒன்றுமில்லாமல்‌ நடை நேராகச்‌ செல்லவேண்டும்‌. உள்ளத்திலே நேர்மையும் தைர்யமும்‌ இருந்தால்‌, கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும்‌. தைர்யம்‌ இல்லாவிட்டால்‌ வசனம்‌ தள்ளாடும்‌. சண்டிமாடு போல ஓரிடத்தில்‌ வந்து படுத்துக்கொள்ளும்‌. வாலைப்‌ பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது. வசன நடை, கம்பர் கவிதைக்குச்‌ சொல்லியது போலவே தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம்‌ இவை நான்குமுடையதாக இருக்கவேண்டும்‌. இவற்றுள்‌ ஒழுக்கமாவது தட்டுத்‌ தடையில்லாமல்‌ நேராகப்‌ பாய்ந்து செல்லும்‌ தன்மை."

நடை ஆற்றொழுக்காகச்‌ செல்லவேண்டும்‌ என்பதற்குப்‌ பாரதியாரின்‌ உரைநடையே நல்ல எடுத்துக்காட்டாகும்‌. இந்த ஆற்றொழுக்கோடு பல கட்டுரைகளில்‌ நகைச்சுவையும்‌ குமிழிட்டெழுவதை நாம்‌ காணலாம்‌.

'பெண்‌' என்ற கட்டுரையிலே பிரமராய வாத்தியாரின்‌ கர்ஜனையைப் பற்றிப்‌ பாரதியார்‌ எழுதுகிறார்‌:

"இவர்‌ இந்தத்‌ தெருவில்‌ வார்த்தை சொன்னால்‌ மூன்றாவது தெருவுக்குக்‌ கேட்கும்‌. பகலில்‌ பள்ளிக்‌ கூடத்து வேலை முடிந்தவுடனே வீட்டுக்கு வந்து, ஸாயங்காலம்‌ ஆறு மணி முதல்‌ எட்டு மணி வரை தன்‌ வீட்டுத்‌ திண்ணையில்‌ சிநேகிதர்களுடன்‌ பேசிக்‌கொண்டு, அதாவது கர்ஜனை செய்து கொண்டிருப்‌பார்‌. பிறகு சாப்பிடப்‌ போவார்‌. சாப்பிட்டுக்‌ கை அலம்பி, கை ஈரம்‌ உலர்வதற்கு முன்பு, மறுபடி திண்ணைக்கு வந்து சப்தம்‌ போடத்‌ தொடங்கிவிடுவார்‌. இவருடைய வீட்டுத்‌ திண்ணைக்கு அக்கம்‌ பக்கத்தார்‌ 'இடிப்‌ பள்ளிக்கூடம்‌' என்று பெயர்‌ வைத்திருக்கிறார்கள்‌. இந்த இடிப்பள்ளிக்கூடத்திற்கு வந்து மாலைதோறும்‌ நாலைந்து பேருக்குக்‌ குறையாமல்‌ இவருடைய பேச்சைக்‌ கேட்டுக்‌ கொண்டிருப்‌பார்கள்‌. அந்த நாலைந்து பேருக்கும்‌ இன்னும்‌ காது செவிடாகாமல்‌ இருக்கும்‌ விஷயம் அநேகருக்கு ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது."

அதே கட்டுரையில்‌ பர்தா வழக்கத்தைப்பற்றி அவர்‌ வேடிக்கையாகக்‌ குறிப்பிடுகிறார்‌ :

"துருக்கி தேசம்‌ தெரியுமா? அங்கே நேற்றுவரை ஸ்திரிகளை மூடிவைத்திருப்பது வழக்கம்‌. கஸ்தூரி மாத்திரைகளை டப்பியில்‌ போட்டு வைத்திருக்கிறார்‌களோ இல்லியோ, அந்த மாதிரி திறந்தால்‌ வாசனை போய்விடும்‌ என்று."

இவ்வாறு நகைச்சுவை ஆங்காங்கு மிளிர்வதை அவருடைய கட்டுரைகளிலும்‌ கதைகளிலும்‌ காணலாம்‌. ஞானரதத்திலேயும்‌ சிறந்த நகைச்சுவைப்‌ பகுதிகள்‌ இருக்‌கின்றன. ஏதாவது ஒரு விஷயத்தை அழுத்தமாகச்‌ சொல்ல வேண்டுமானால்‌ பாரதியார்‌ அதற்கு வெகு திறமையோடு வசனத்தைக்‌ கையாளுகிறார்.

'கண்கள்‌!' என்ற கட்டுரையில்‌ பாரதியார்‌ கூறுகிறார்‌ :

"பொய்‌ இல்லாவிட்டால்‌ பார்வை நேராகும்‌. கவனி! பொய்‌ தீர்ந்தால் நேரே பார்க்கலாம்‌. பயம்‌ தீர்ந்தால் நேரே பார்க்கலாம்‌. கவனி! பொய்‌ தீர்ந்தால் பயம்‌ தீரும். பயம்‌ தீர்ந்தால் பொய்‌ தீரும்‌.

நேரே பார்த்தால்‌ விரோதக்‌ குறியென்று யோக்யன்‌ ஏன்‌ நினைக்கவேணும்‌? அகத்தின்‌ அழகு முகத்தில்‌ தெரியும்‌. உன்‌ மனசில்‌ என்ன இருக்கிறதென்று தெரிந்துகொள்ளும்‌ பொருட்டாக உன்‌ கண்ணை நேரே பார்க்கிறேன்‌. விரோதமில்லை. அவமரியாதை இல்லை, விஷயம்‌ தெரிந்து கொள்ளும்பொருட்டு."


மேலும்‌ பகவத்‌ கீதை முன்னுரையில்‌ பாரதியார்‌ எழுதுவதையும்‌ ஆராய்ந்து பாருங்கள்‌:

"பற்று நீக்கித்‌ தொழில்‌ செய்‌; பற்று நீக்கி; பற்று நீக்கி; பற்று நீக்கி-இதுதான்‌ முக்கியமான பாடம்‌. தொழில்தான்‌ நீ செய்து தீரவேண்டியதாயிற்றே! நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித்‌ தொழிலில்‌ மூட்டுவதாயிற்றே! எனவே அதை மீட்டும்‌ மீட்டும்‌ சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின்‌ வலைகளில்‌ மாட்டிக்கொள்ளாதே. அவற்றால்‌ இடர்ப்படாதே. அவற்றால்‌ பந்தப்படாதே. தளைப்படாதே. இதுதான்‌ முக்கியமான உபதேசம்‌. எல்லாவிதமான பற்றுக்களையும்‌ களைந்துவிட்டு மனச்சோர்வுக்கும்‌, கவலைக்கும், கலக்கத்திற்கும்‌, பயத்துக்கும்‌ இவையனைத்திலும்‌ கொடியதாகிய ஐயத்துக்கும்‌ இடங்கொடாதிரு!"

பாரதியார்‌ பல சுவையான கதைகள்‌ எழுதியுள்ளார்‌. வேடிக்கைக்‌ கதைகள்‌ என்றே சிலவற்றை நகைச்‌சுவையோடு படைத்திருப்பதையும்‌ காணலாம்‌. அந்தக்‌கதைகளின்‌ உரைநடைக்காகவே அவற்றைப்‌ போற்றிப்‌படிக்கலாம்‌.

'காந்தாமணி' என்னும்‌ கதை தொடங்குவதைப்‌ பாருங்கள்‌:

"காந்தாமணி, உங்கப்பா பெயரென்ன? என்று பாட்டி கேட்டாள்‌. ஒரு கிணற்றங்கரையில்‌ நடந்த ஸங்கதி. கோடைக்காலக்‌ காலை வேளை. வானத்திலே பால ஸூர்யன்‌ கிரணங்களை ஒழிவில்லாமல்‌ பொழிந்து விளையாடுகிறான்‌. எதிரே நீல மலை, பச்சை மரங்கள்‌ பசுக்கள்‌ பல மனிதர்கள்‌ சில கழுதைகள்‌ இவற்றின்‌ தொகுதி நின்றது.

'மன்னார்கோவிலிலே உங்கப்பாவுக்குப்‌ பெண்‌ கொடுக்கப்போற மாமனாருடைய பெயரென்ன?' என்று அந்தப்‌ பாட்டி கேட்டாள்‌. அதற்குக்‌ காந்தாமணி 'அவர்‌ பெயர்‌ கோவிந்தராஜய்யங்‌காராம்‌. அந்த ஊரிலே அவர்‌ பெரிய மிராசாம்‌. அவருக்கு ஒரே பெண்தானாம்‌. கால்‌ முதல்‌ தலைவரை வயிர நகை சொரிந்து கிடக்கிறதாம்‌. தேவ ரம்பை போல்‌ அழகாம்‌ அந்தப்‌ பெண்‌' என்றாள்‌...

'மன்னார்குடிப்‌ பெண்‌ திரண்டு மூன்று வருஷமாய்‌ விட்டதாக இந்த ஊரிலேகூட பலமான ப்ரஸ்தாபம்‌. ஆண்பெண்‌ எல்லோரும்‌ ஒரே வாக்காகச்‌ சொல்லுகிறார்கள்' என்றாள்‌ அவர்‌ மனைவி.

அப்பா அதற்கு 'நெவர்‌ மைண்ட்‌. அந்தக்‌ குட்டி திரண்‌டிருப்பதைப் பற்றி நமக்கு ரட்டை ஸந்தோஷம். நமக்குப்‌ பணம்‌ கிடைக்கும்‌. ஆண்‌ பிள்ளை பிறக்கும்‌. குட்டி ஏராளமான அழகு. இந்த மாதிரி இடத்திலே ஐடோன்‌ கேர்‌, எடேம்‌ எபெளட்‌ சாஸ்த்ரங்கள்‌. நாம்‌ நம்‌ சாஸ்தீரங்களைப்‌ புல்லாக மதிக்கிறோம்‌ என்றார்‌' என்று காந்தாமணி சொன்னாள்‌."

ஆங்கிலத்தைத்‌ தமிழில்‌ இடையிடையே புகுத்தி எழுதுவதற்குப்‌ பாரதியாரே முன்னோடியாக இருக்கிறார்‌.

தமிழைப்போல வலிமையும்‌ உள்ளத்‌ தொடர்புமுடைய பாஷை வேறொன்றுமில்லை என்று பாரதியாரே கூறியதற்கு எடுத்துக்காட்டாக அவருடைய கட்டுரைகளில்‌ ஒன்றிலிருந்து ஒரு பகுதியை இங்கே தருகிறேன்‌.

பாரதியார்‌, 'எனது ஈரோடு யாத்திரை' என்று ஒருசுவையான கட்டுரை எழுதியிருக்கிறார்‌. அதில்‌ அவர்‌ தமது அனுபவத்தைக்‌ கூறுகிறார்‌:

"ஈரோட்டுக்குப்‌ போய்ச்‌ சேர்ந்தேன்‌. அது கொங்குநாடு. அதற்கும்‌ தென்பாண்டி நாட்டிற்கும்‌ யாதொரு வேற்றுமையும்‌ தென்படவில்லை. கட்டைவண்டி ஓன்று கிடைத்தது. கட்டை வண்டியில்‌ ஒரு மனிதன்‌ நிமிர்ந்து உட்கார இடமில்லை. ஒன்றரை அடி நீளம்‌. மாடு ஒரு பூனைக்குட்டி போன்று இருந்தது. நான்‌ ஒன்று, வண்டிக்குடையவன்‌ இரண்டு, அவனுக்குக்‌ கீழே கூலிக்கு வண்டி ஓட்டும்‌ சிறுவன்‌ ஒருவன்‌; எங்கள் மூவரையும்‌ மூன்று பர்வதங்களாக நினைத்து அந்த மாட்டுப்பூனை இழுத்துக்கொண்டு போயிற்று. போய்ச்‌ சேருமுன்னே மாடு வெயர்த்துப்‌ போய்‌விட்டது. அதன்‌ மேலே குற்றஞ்‌ சொல்வதில்‌ பயனில்லை. அது சிறு ஜந்து. அதன்‌ மேலே நாங்கள்‌ மூன்று தடிமனிதரும்‌ ஒரு கழுத்தளவுக்குச்‌ செய்யப்‌பட்ட விதானத்தையுடைய வண்டியும்‌ சவாரி பண்ணுகிறோம்‌."

பாரதியார்‌ உரைநடையிலே பலவகையான விஷயங்‌களைப்பற்றி எழுதியுள்ளார்‌. சுவைத்து அனுபவிக்கக்‌ கூடிய கதைகள்‌, கட்டுரைகள்‌, அரசியல்‌ துணுக்குகள்‌, கேலியும்‌ கிண்டலும்‌ உள்ள வாசகங்கள்‌ மிகப்பல இருக்கின்றன. அவற்றிலெல்லாம்‌ தமிழுக்குப்‌ புதுமையான சிறந்த, எளிய, உள்ளத்‌ தொடர்புடைய உரைநடையை அவர்‌ கையாண்டிருக்கிறார்‌. கவிதைத்‌துறையிலே வழிகாட்டியாக இருப்பதுபோல, நல்ல உரைநடை எழுதுவதிலும்‌ அவர்‌ வழிகாட்டியாக விளங்குவதை நாம்‌ நன்கு கவனித்துப்‌ பயன்‌ பெறவேண்டும்‌.

பெரியசாமித் தூரன்


பாரதியாரின்‌ உரைநடை - பெரியசாமித் தூரன்

பாரதியாரின் உரைநடை என்னும் பெயரில் பெரியசாமித் தூரன் எழுதிய கட்டுரை இது. அவருடைய 'பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு' என்னும் நூலில் இடம்பெற்றுள்ள முதல் கட்டுரை. 1982ஆம் ஆண்டு வானதி பதிப்பகம் வெளியிட்டது. கலைக்களஞ்சியம், குழந்தை இலக்கியம், தமிழ் இசைப்பாடல்கள் எனப் பல தளங்களில் தமிழுக்கு பங்களித்தவர் தூரன். பாரதியார் படைப்புகளை தொகுக்கும் முயற்சியோடு, பாரதியின் படைப்புகளை திறனாய்வு செய்த ‘பாரதி-ஆய்வு’ இயலின் முன்னோடியும் தூரன் தான். அனைவரும் பாரதியை கவிஞராக மட்டுமே கண்ட காலத்தில் அவரது உரைநடை குறித்தும் எழுதியிருப்பதுதான் தூரனின் தனித்தன்மை. தான் நோயுற்றிருந்த போதிலும் பாரதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த நூலை வெளியிட்டிருக்கின்றார் தூரன்.

பெரியசாமித் தூரன் - தமிழ்.Wiki