Sunday, 3 September 2023

ஆய்வுக்கு வரையறைகள் மட்டுமல்ல எல்லைகளும் உண்டு - பா. ஜம்புலிங்கம் நேர்காணல்

பா.ஜம்புலிங்கம் முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில், குறிப்பாக சோழநாட்டுப் பகுதியான திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகளையும், பௌத்தம் தொடர்பான தடயங்களையும் கண்டுபிடித்து ஆவணப்படுத்தி வருகிறார். கள ஆய்வு மூலம் சோழமண்டத்தில் கண்டடைந்த புத்தர் சிலைகளை தொகுத்து ‘சோழ நாட்டில் பௌத்தம்’ என்ற நூலினை 2022-ல் வெளியிட்டுள்ளார். புத்தர் சிலைகளுக்கான தேடலில் இவர் கண்டடைந்தவற்றை தொகுக்கும் இந்த புத்தகம் தமிழக அளவில் ஒரு முன்மாதிரி. எழுத்தாளர்கள் அ மார்க்ஸ், எஸ் ராமகிருஷ்ணன் இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் குறித்து எழுதியிருக்கின்றனர். இதுவன்றி ஜம்புலிங்கம் நண்பர்களுடன் இணைந்து 'தஞ்சையில் சமணம்' என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். அறிவியல் கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறார். 

ஜம்புலிங்கம், மனைவி பாக்கியவதி

ஆடல் - 4: செவ்வேள் ஆடல் - தாமரைக்கண்ணன், புதுச்சேரி


சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மும்
கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்து எம்மை நன்றும் அருள்செய்வார்
அந்தண் வடுகூரில் ஆடும் அடிகளே

 - திருஞானசம்பந்தரின் வடுகூர் தேவாரம் 

கணநாதர்

திருஞானசம்பந்தருக்கும் சுந்தரருக்கும் இடைப்பட்ட காலத்தில் கணநாதர் என்னும் சிவனடியார் சீர்காழியில் வாழ்ந்தார். பெரியபுராணம் கூறும் அறுபத்திமூன்று நாயன்மார்களுள் இவரும் ஒருவர். கணநாதர் சீர்காழி தோணியப்பர் ஆலயத்திற்கு திருத்தொண்டுகள் செய்து வந்தார்.  நந்தவனத்தை பராமரிப்பது, இறைவனுக்கு மலர் தொடுத்து அளிப்பது, கோவிலை தூய்மை செய்வது, திருமஞ்சன சடங்குக்கு உதவுதல் போன்ற  கோவில்பணிகளுடன்  பதிகங்களைப் பாடவும், பதிகங்களை ஏட்டில் இருந்து ஏட்டிற்கு படி எடுக்கவும் செய்தார். அப்பணிகளுக்கு தன்னுடன் சிவனடியார்களையும் ஆட்படுத்தினார். கணநாதர் சீர்காழி தோணியப்பரை வழிபட்டதோடு திருஞானசம்பந்தரையும் நாள்தோறும் மூன்றுபொழுதும் அர்ச்சனை செய்து வழிபட்டார். 

வேதக் கடவுள்கள் - மோனியர் வில்லியம்ஸ்

வேதத்திலுள்ள வழிபாட்டு பாடல்களும் துதி பாடல்களும் எந்தெந்த தெய்வங்களுக்காக பாடப்பட்டவை என்று பார்ப்போம். வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்கள் மத்திய ஆசியாவில் ஆரிய முன்னோர்களால் வழிபடப்பட்ட தெய்வங்களாக இருக்கலாம். அவர்கள் காற்று, நெருப்பு, நீர், சூரிய கதிர்கள், புயல், மழை ஆகிய இயற்கை ஆற்றல்களை முதலில் கவித்துவமாக உருவகப்படுத்தி, பிறகு வடிவம், குணம், தனித்தன்மை ஆகியவற்றை ஏற்றி வழிபட்டுள்ளனர். இந்த ஆற்றல்கள் ஒரு தெய்வத்தின் பலவித வெளிப்பாடாகவோ அல்லது தனித்தனி தெய்வங்களின் வெளிப்பாடாகவோ கருதப்பட்டிருந்தால் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. தெய்வத்தன்மை ஏற்றப்பட்ட இந்த ஆற்றல்கள் ஒவ்வொன்றுக்கும் நிலவியல் மற்றும் பருவகாலங்களை பொருத்து முதன்மை இடம் அளிக்கப்பட்டு வழிபாடு நிகழ்த்தப்படும். காற்றிலும் வானிலும் உள்ள ஆற்றல்களுக்கே முதலில் தெய்வத்தன்மை ஏற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது. தொடக்கத்தில் அவை அவ்வளவு தெளிவில்லாத பொதுவான ஒரு ஆளுமைப் பண்பையே கொண்டிருந்தன. மதங்களுக்கு விதைகளாக இருந்த துவக்ககால முயற்சிகள் இவை. சில அசலான நம்பிக்கைகள் துவக்ககாலத்தில் சரியாக வரையறுக்கப்படாமல் இருந்தது. உதாரணமாக ’ஒன்று அல்லது பல தெய்வீக ஆற்றல்கள் இந்த பிரபஞ்சத்தை வழிநடத்துகின்றன’ என்ற நம்பிக்கையை சொல்லலாம். ஆனால் இத்தகைய நம்பிக்கைகளில் இருந்தே எல்லா மதங்களும் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். 

மோனியர் வில்லியம்ஸ்

குரு : பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள் - ஹெச். எஸ். சிவபிரகாஷ்

மனம் 

மனதைக்கொண்டு செயல்படுதல் எளியதல்ல. அதனால்தான் ஆன்மீகப் பாதையில் மனம் எனும் அறையை மிகப் பிந்தியே அறிய முற்படுகிறோம். எப்போதுமே நாம் மனதின் மூலமே செயல்படுகிறோம் என்றாலும் மனம் பருப்பொருளல்ல. உடலைப்போல மூச்சைப் போல தொட்டுணரத் தக்கதல்ல. எனவேதான் அதனுடன் செயலாற்றுதல் கடினமானதாக உள்ளது.

இக்காரணத்தால் ஆன்மீகத் தேடல் கொண்ட பலரும் தங்களது சாதனையை (பயிற்சியை) உடலுடனோ சுவாசத்துடனோ தொடங்குகின்றனர். நம் உடலைத் தொடவும் உணரவும் நம்மால் முடியும். சுவாசத்தை நம்மால் உணரமுடியும். அது தன்னியல்பில் நிகழ்வதென்றாலும் தன்னுணர்வோடு அதை நம்மால் பயிற்றுவிக்கமுடியும்.

யோகப் பயிற்சிகளை ஒரே சமயத்தில் உடல், சுவாசம், மனம் ஆகிய மூன்று தளங்களிலும் செய்வதே உரிய முறை. இம்மூன்று தளங்களுக்கிடையேயான பிணைப்பே யோகத்தின் அடிப்படை. இவற்றின் ஒருமைக்கு வலிமை சேர்ப்பது யோகம். யோக அமர்வுநிலைகள் போன்ற உடல்சார் பயிற்சிகள்கூட உடலளவில் மட்டும் செய்யப்படுமேயானால் அவற்றின் உச்சபட்ச விளைவுகளைத் தருவதில்லை. ஆசனங்களை செய்யும்போதுகூட சுவாசத்தைத் தன்னுணர்வோடு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உடலிலும் சுவாசத்திலும் என்ன நிகழ்கிறது என்பது குறித்து மனம் அறிந்துகொண்டிருக்க வேண்டும். சுவாசப் பயிற்சிகளின் சிறந்த பலன்களைப் பெறவேண்டுமென்றால் உடலுக்கான ஓய்வும் இருப்புணர்வும் கட்டாயம் தேவை.

தெய்வ தசகம் - 4 நாராயண குரு, உரை: நித்ய சைதன்ய யதி

பாடல் - 4 

ஆழியும் திரயும் காற்றும்
ஆழவும் போலெ ஞங்ஙளும்
மாயயும் நின் மஹிமயும்
நீயுமென்னுள்ளிலாகணம்

ஆழியும் அலையும் காற்றும்
ஆழமும் போலே நாங்களும்
மாயையும் உன் பெருமையும்
நீயும் என்னுள்ளில் சேரவேண்டும்

ஆழியும் திரயும் காற்றும் ஆழவும் போலெ: கடலும் அதில் தோன்றி மறையும் அலைகளும், அலைகள் தோன்றக் காரணமாயுள்ள காற்றும், கடலின் அகமாகிய ஆழமும் எவ்வாறானவையோ, அதுபோலவே

ஞங்ஙளும் மாயயும் நின் மஹிமயும் நீயும்: (கடலைப் போன்ற) நாங்களும் (அலையைப் போன்ற) மாயையும் (கடலில் அலைகளை உண்டாக்கும் காற்றைப் போல கண்ணுக்குப் புலப்படாத) உனது பெருமையும் (கடலின் ஆழத்தினை ஒத்த) நீயும்

என்னுள்ளில் ஆகணம்: ஆகிய பரம்பொருள் எங்களால் அறியப்பட வேண்டும். அதாவது, அனைத்தும் நானென்ற போதம் எங்களுக்கு கைகூட வேண்டும்.

அறிவியலில் காரணகாரியம் - சமீர் ஒகாஸா

காரணகாரிய அனுமானம் (Causal inference)

இயற்கை நிகழ்வுகளுக்கு காரணத்தைக் கண்டறிவது அறிவியலின் முக்கியமான இலக்குகளில் ஒன்று. இந்த தேடல் பலசமயம் வெற்றியடைந்துள்ளது. உதாரணமாக, ’உலக வெப்ப நிலை மாற்றத்துக்கு காரணம் புதைபடிவ எரிபொருள்களை எரிப்பது’ என்பதை பருவநிலை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்; ’ஒரு திரவத்தை வெப்பபடுத்தினால் அது வாயுவாக மாறும்’ என்பதை வேதியியலாளர்களும்; ’MMR தடுப்பூசி ஆட்டிசத்தை (autism) தடுக்கும்’ என்பதை தொற்றுநோயியல் (epidemiology) வல்லுனர்களும் கண்டறிந்தனர். காரணகாரிய தொடர்புகள் நேரடியாக அவதானிக்கக் கூடியவை அல்ல (டேவிட் ஹுயுமின் வாதம்) என்பதால் இத்தகைய அறிவியல் அறிதல்கள் கண்டிப்பாக அனுமானத்தின் முடிவுகளாகத்தான் இருக்க வேண்டும். அந்த அனுமானமே காரணகாரிய அனுமானம். நாம் சென்ற பகுதியில் பகுத்தல் மற்றும் தொகுத்தல் அனுமானங்களைப் பார்த்தோம். காரணகாரிய அனுமானம் எப்படி செயல்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.

டேவிட் ஹுயும்