பா.ஜம்புலிங்கம் முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில், குறிப்பாக சோழநாட்டுப் பகுதியான திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகளையும், பௌத்தம் தொடர்பான தடயங்களையும் கண்டுபிடித்து ஆவணப்படுத்தி வருகிறார். கள ஆய்வு மூலம் சோழமண்டத்தில் கண்டடைந்த புத்தர் சிலைகளை தொகுத்து ‘சோழ நாட்டில் பௌத்தம்’ என்ற நூலினை 2022-ல் வெளியிட்டுள்ளார். புத்தர் சிலைகளுக்கான தேடலில் இவர் கண்டடைந்தவற்றை தொகுக்கும் இந்த புத்தகம் தமிழக அளவில் ஒரு முன்மாதிரி. எழுத்தாளர்கள் அ மார்க்ஸ், எஸ் ராமகிருஷ்ணன் இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் குறித்து எழுதியிருக்கின்றனர். இதுவன்றி ஜம்புலிங்கம் நண்பர்களுடன் இணைந்து 'தஞ்சையில் சமணம்' என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். அறிவியல் கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.
ஜம்புலிங்கம், மனைவி பாக்கியவதி |
உங்களுடைய இளமைக்காலம் பற்றி சொல்ல முடியுமா?
என்னுடைய சொந்த ஊர் கும்பகோணம். தாத்தா கணக்குப்பிள்ளையாக இருந்தார். அப்பா பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நிலையான வருவாய் இல்லாமல் இருந்தார். நான் கல்வி கற்று வேலைக்குச் சென்றால் தான் குடும்பம் மேலெழ முடியும் என்ற சூழல். ஆனாலும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை குறும்பாகத் தான் இருந்தேன். நான் பள்ளிக்கல்வி முடிக்க எனது தாத்தாவின் கண்டிப்பும் அரவணைப்பும்தான் காரணம். எங்களுடைய தெருவிற்கு சம்பிரதி வைத்யநாத அக்ரஹாரம் என்று பெயர். பிராமணர்கள் வசிக்கும் வீதி. அனைத்துப் பிள்ளைகளும் படிக்கும்போது நானும் என்னுடைய சில நண்பர்கள் மட்டும் குறும்பு செய்துகொண்டு படிப்பில் கவனமின்றி இருந்தோம். என்னை வளர்த்தது தாத்தாவும் ஆத்தாவும் தான். என்னுடைய அத்தையும் என்மேல் அன்பாக இருப்பார்கள். நான் குறும்பாக இருந்தாலும் என் மேல் அன்பு செலுத்தும் சூழலால் எனக்கும் படிக்க வேண்டும் என்று தோன்றியது. படிப்பின் மேல் ஆர்வமும் ஏற்பட்டது.
பள்ளிப்படிப்பு முடிந்து கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் சேரலாம் என்று நினைத்தபோது சொந்தக்காரர்களும், வீட்டில் உள்ளவர்களும் பையன் காலேஜில் சேர்ந்தால் கெட்டுப்போய் விடுவான், வெத்தல சீவல் போடுவான், பசங்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவான் என்று சொல்லி என்னைச் சேர்க்கவில்லை. என்னுடன் படித்தவர்கள் அனைவருமே கல்லூரிக்குச் சென்றுவிட்டார்கள். வியாபாரத்தில் பெரியாளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாத்தா என்னை ஒரு கடையில் சேர்த்துவிட்டார். நான் கடையில் உட்கார்ந்துகொண்டு ஏக்கத்தோடு என் நண்பர்கள் கல்லூரிக்குச் செல்வதைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.
கடையில் சில மாதங்கள் வேலை பார்த்திருப்பேன். ஒரு நாள் என் நண்பன் கும்பகோணம் காலேஜில் லேட் அட்மிஷன் போடுவதாகச் சொன்னான். என்னை காலேஜில் சேர்க்கவில்லை என்றால் காவேரியில் குதித்துவிடுவேன் அல்லது ஊரை விட்டு ஓடிவிடுவேன் என்று வீட்டில் சொன்னேன். வேறுவழியில்லாமல் சேர்க்க ஒப்புக்கொண்டார்கள். அப்போது எங்கள் கல்லூரியில் விடியவிடிய அட்மிஷன் நடந்தது. P.U.C.இல் எனக்கு அளவையியல் (Logic) பாடத்தில் சீட் கிடைத்து, சேர்ந்தேன். அதிக கவனம் எடுத்துக்கொண்டு படிக்கவில்லை என்றாலும் ஓரளவு படித்துவிடுவேன், அதனால் எங்கள் நண்பர்கள் குழுவில் இருந்த எட்டு பேரில் நான் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றேன். P.U.C.க்குப் பிறகு B.A. எக்கனாமிக்ஸ் இங்கிலீஷ் மீடியம் தேர்ந்தெடுத்தேன் அதுவரை தமிழ் மீடியமே படித்ததால் மூன்று மாதம் சிரமமாகவே இருந்தாலும் சமாளித்துப் படித்துவிட்டேன். அதே சமயம் தட்டச்சும், சுருக்கெழுத்தும் கற்றுக்கொண்டிருந்தேன். துவக்க காலத்தில் எனக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தவை இந்த இரண்டும்தான். கடைசி வருடப்படிப்பின் போது வீட்டில் மாமா, தாத்தா, அப்பா ஆகியோருடைய தொடர் மரணங்கள் என்னை நிலைகுலைய வைத்தன. புத்தகத்தைத் திறந்தாலே இறந்தவர்களின் முகம் நினைவுக்கு வரும், அழுகை வந்துவிடும். அப்போது என்னுடைய சொந்தத்தில் உள்ள மாமா ஒருவர் என்னுடைய படிப்பையும், தகுதிகளையும் பார்த்துவிட்டு எனக்கு வேலை வாங்கித்தருவதாகச் சொன்னார். சொன்னபடி சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலையும் வாங்கிக்கொடுத்தார். சில நாட்கள் அங்கு வேலை பார்த்தேன். பின் கோயம்புத்தூர் முதலிய சில ஊர்களில் வேலை பார்த்துவிட்டு கடைசியாக தமிழ்ப் பல்கலைக்கழத்தில் தட்டச்சு சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்தேன்.
வரலாற்றிலும், ஆய்வின் மேலும் உங்களுக்கு எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது. பௌத்த ஆய்வை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள்?
எங்கள் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கிற்கு திரு ஐராவதம் மகாதேவன் அழைக்கப்பட்டிருந்தார். நான் தான் அவருக்கு உதவியாளனாக நியமிக்கப்பட்டேன். நிறைய அறிஞர்கள் வந்திருந்தனர். அப்போது எனக்கு ரிசர்ச், செமினார் போன்ற வார்த்தைகளுக்குப் பொருள் தெரியாதென்றாலும் அங்கு நடப்பதைக் கூர்மையாக கவனித்துக்கொண்டிருந்தேன். கருத்தரங்கத்திற்கு வந்திருந்த அறிஞர்கள் தஞ்சைப் பெரிய கோவி்லைப் பார்கக சென்றார்கள். உடன் திரு ஐராவதம் மகாதேவன் அவர்களும் வந்தார். முன்னர் பல முறை பெரிய கோவிலுக்குச் சென்றபோதிலும் அப்போதுதான் சோழர் கால ஓவியங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்வுகூட எனக்கு வரலாற்றின் மேல் ஆர்வம் ஏற்பட ஒரு தூண்டுதலாக இருந்திருக்கலாம்.
அலுவலகப்பணியாக கார்த்திகேசு சிவத்தம்பி ஐயாவின் ‘Literary History in Tamil’ என்ற நூலைத் தட்டச்சு செய்யும் வாய்ப்பு எனக்கு வந்தது. அவர் பெரிய அறிஞர் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அருகில் அவர் அமர்ந்திருக்க, நான் தட்டச்சு செய்வேன். சந்தேகம் வரும்போதெல்லாம் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன். அவர் என்னிடம், “இதற்கு முன் எனக்காகத் தட்டச்சு செய்தவர்கள் கேள்விகள் கேட்டதில்லை, நீ நிறைய கேள்விகள் கேட்கிறாய். இந்த அம்சம் உன்னை வளர்க்கும். தொடர்ந்து உனக்கு சந்தேகம் இருக்கும் இடங்களை கேட்டுத் தெரிந்துகொண்டே இரு” என்று கூறினார். அவர், தன் மகனைப் போல என்னைத் தட்டிக்கொடுப்பார். அவரைப் போன்ற நிறைய ஆளுமைகளுடன் பழகவும், வரலாறு சம்பந்தமான பலவற்றைப் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களைப் போன்றோருடன் பேச வேண்டும் என்று இல்லை, அவர்களின் அருகில் அமர்ந்திருந்தாலே நிறைய கற்றுக்கொள்ள முடியும். நான் பழகிய ஆளுமைகள் எல்லாம் எத்தனை பெரிய அறிஞர்கள் என்று அப்போது எனக்குத் தெரிந்திருந்தால் இன்னும் கவனமாக நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொள்வேன்.
பல்கலைக்கழத்தில் பதிப்புத்துறை தொடங்கி பல துறைகளில் வேலைப்பார்த்தேன். தேர்வுப்பிரிவில் வேலை பார்த்தபோது ஆய்வாளர்களுடன் கிடைத்த நட்பும், அவர்கள் அளித்த பல துறைகளைச் சார்ந்த ஆய்வேடுகளைக் காணும் வாய்ப்பும் என் ஆய்வினை ஆர்வத்தோடு தொடர ஒரு காரணமாக அமைந்தது.
ஒரு காலகட்டத்தில், வேலை பார்த்துக்கொண்டே பகுதி நேரத்தில் முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளலாம் என்ற விதியைப் பல்கலைக்கழகத்தில் கொண்டுவந்தார்கள். அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, Ph.D. முடித்தேன். பல்கலைக்கழகச் சூழல் என்பது கலை, இலக்கியம், அறிவியல், கல்வெட்டு போன்ற பல துறை அறிஞர்களைக் கொண்டிருந்தது. இவ்வாறாக பல துறைகள் பற்றிய அறிவு என்னைச் சுற்றி இருந்தபோது, எனக்கு வரலாற்று ஆய்வின் மேல் ஆர்வம் ஏற்பட்டது. கல்கியை விரும்பி வாசித்ததனால் M.Phil.க்கு கல்கியின் வரலாற்று நாவல்களைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள நினைத்தேன். ஆய்வேட்டினை ஆங்கிலத்தில் அளிக்க வேண்டியிருந்ததால், ஆய்வேட்டின் தலைப்பை மாற்றவேண்டிய சூழல் ஏற்பட்டது. கல்கியின் நாவல்கள் என்ற வகையில் ‘பொன்னியின் செல்வன்’ சம்பந்தமாக யோசித்துக்கொண்டிருந்தபோது நாகை புத்த விகாரம் நினைவிற்கு வந்தது, உடனே பௌத்தம் சம்மந்தமாக ஆய்வு செய்ய முடிவெடுத்து ‘Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur district’ என்ற தலைப்பைத் தெரிவு செய்தேன். தொடர்ந்து ‘சோழ நாட்டில் பௌத்தம்’ என்பது என் Ph.D. ஆய்வேட்டின் தலைப்பானது.
ஜம்புலிங்கம்-1980 |
நீங்கள் பௌத்தம் பற்றி ஆய்வு செய்த போது குறைவாகவே பௌத்தம் சார்ந்த ஆய்வுகள் தமிழகத்தில் நடந்துகொண்டிருந்தது. உங்களுக்கு ஆய்வு குறித்தான நெறியாளர்கள் இருந்தார்களா. ஆய்வை எங்கிருந்து தொடங்கினீர்கள். ஆரம்பகட்ட சவால்கள் என்னவாக இருந்தன?
தலைப்பினைத் தேர்ந்தெடுத்தபின்னர் பல அறிஞர்கள் என்னிடம் இது ஓர் அரிய துறை, இத்துறையில் குறைவான ஆய்வுகளே வந்துள்ளன என்று கூறினர். நெறியாளர்கள் இருந்தனர். ஆய்விற்காக எனது பெயரைச் சேர்த்தவுடனேயே நூலகத்திலிருந்து பௌத்தம் சார்ந்த நூல்களை எடுத்துக்கொண்டு தான் வீட்டிற்குச் சென்றேன். எப்போதும் சரஸ்வதி மஹாலில் உட்கார்ந்து கொண்டு நூல்கள் வாசித்து குறிப்பெடுத்துக்கொள்வேன். ஆரம்பத்தில் அஜந்தாவில் ஆரம்பித்து பௌத்தம் சார்ந்த குறிப்புகளை எடுக்கத் துவங்கினேன். சில நண்பர்கள் ஆய்வின் எல்லைக்குள் நூல்களைத் தேர்வு செய்து படிக்கவேண்டும் என்று கூறினர். குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள், “களப்பணி மூலமாக பல அரிய தகவல்களைக் கொணரலாம். அதுதான் ஒரு வரலாற்றாய்வாளரின் முக்கியப்பங்களிப்பாக இருக்க முடியும். முடிந்த அளவு களப்பணி வழியாக ஆய்வு செய்ய முயற்சி செய்யுங்கள்’’ என்றார்.
அவர் சொன்னவற்றை மனதில் வைத்துக்கொண்டு புத்தகங்களில் இருந்து குறிப்பெடுக்கத் துவங்கினேன். அடிப்படையான பௌத்தம் பற்றிய தகவல்களுக்கு மயிலை சீனி வேங்கடசாமியின் கையைப் பிடித்துக்கொண்டேன். அவர் பட்டியலிட்டிருந்த புத்தர் சிலைகளை ஆதாரமாகக்கொண்டுதான் எனது தேடலைத் துவங்க முடிந்தது. நான் பணியாற்றிய இடத்துக்கு அருகிலேயே இருந்த தஞ்சை கலைக்கூடத்தில் இரண்டு சிலைகள் இருந்தன. அவற்றைப் பதிவு செய்வதே முதலில் சிரமமாக இருந்தது. எனது ஆய்வைத் துவங்கிய 1993இல் என்னிடம் புகைப்படம் எடுக்க கேமராவும் இல்லை. விடுமுறை எடுத்துக்கொண்டு புகைப்படக்காரரையும் அழைத்துக்கொண்டு சென்று, புத்த சிலைகளைப் பற்றி பதிவு செய்யத்துவங்கினேன், அதற்கான பொருட்செலவும் அப்போது தடுமாற்றம் தருவதாகவே இருந்தது.
முதலில் புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகளுக்கிடையேயான வேறுபாடு தெரியாமல் இருந்தது. புத்தகங்களை வாசித்துதான் வேறுபாட்டைத் தெரிந்துகொண்டேன். தொடர்ந்து நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் இருந்ததால், புத்தர் சிலை குறித்த தகவல்கள் வந்திருந்த பத்திரிகை செய்திகளை சேகரித்துக்கொண்டேன். திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்வுக்காக வெளியூர் சென்றாலும் முதலில் அங்குள்ளவர்களிடம் நான் நலம் விசாரிப்பதற்கு பதிலாக உங்கள் ஊரில் புத்தர் சிலை ஏதும் உள்ளதா என்றுதான் கேட்பேன். சில சமயங்களில் துக்க நிகழ்வுக்கு சென்றபோதுகூட இதே வேலையாக இருந்திருக்கிறேன். அவர்கள் சொல்லும் தகவல்களை எனது கையில் எப்போதும் இருக்கும் குறிப்பேட்டில் எழுதிக்கொள்வேன். அந்தத்தகவல்கள் வழியாக சங்கிலித்தொடர்போல மனிதர்களை அறிமுகம் செய்துகொள்ள முடிந்தது. சமயத்தில் அவர்கள் நினைவில் இருந்து கூறும் தகவல்கள் தவறாகவும் இருக்கலாம், ஆனால் எந்தத் தகவலையும் சேகரித்த பின்பு அந்த இடத்திற்கு போய் பார்க்காமல் இருந்ததில்லை.
ஆரம்ப காலத்தில் என்னை ஆய்வுப்புலத்தில் ஊக்கப்படுத்தியவர்களுள் கும்பகோணம் சேதுராமன் முக்கியமானவர். அவர் பெரும் வணிகர், ஆய்வாளரும் கூட. அவரைப் பார்க்க நேரம் கேட்டிருந்தேன். முதலில் எனது தேவையை கேட்டுப்புரிந்துகொண்டவர் உற்சாகமாக சரி ஒரு நாள் உனக்காகவே நேரம் ஒதுக்குகிறேன், அன்று நீயும் நானும் மட்டுமே பேசுவோம் என்றார். அதுபோலவே நேரமும் ஒதுக்கி நான் கேட்ட பல தகவல்களைத் தந்தார். அவர் பேசும் போது சில சமயங்களில் நான் குறிப்பெடுக்காமல் இருந்தேன். ஏன் குறிப்பெடுக்கவில்லை என்று கேட்டபோது, எனது ஆய்வுப்பரப்புக்குள் இல்லாததால் நான் குறித்துக்கொள்ளவில்லை என்றேன். அப்போது அவர் “அனைத்துத் தகவல்களையும் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். நான் சொல்லும் தகவல் உனக்கு எப்படி பயன்படும் என்று இன்று உனக்குப்புரியாது” என்றார். அப்போதிருந்து அனைத்து தகவல்களையும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கல்வெட்டுகள் குறித்து சந்தேகம் கேட்டபோதெல்லாம் அவரே எழுந்துசென்று தேடி அவரிடமிருந்த கல்வெட்டுப்படிகளை எடுத்துக்காட்டினார்.
ஆய்வு செய்யும்போது எனக்கு அவர் கூறிய அறிவுரை மிகவும் பயனுள்ளதாக மாறியது. உதாரணமாக நான் புத்தர் சிலைகளைத் தேடிப்போகும்போது சமணத் தீர்த்தங்கரர் சிலைகளும் கிடைத்தன. அதை ஒதுக்கவில்லை, மாறாக நண்பர் தில்லை கோவிந்தராஜனுடன் இணைந்து அவற்றையும் ஆவணப்படுத்தினேன். தொடர்ந்து நண்பர் மணிமாறனுடன் இணைந்து நாங்கள் மூவரும் ‘தஞ்சையில் சமணம்’ என்னும் நூலை வெளியிட்டோம். இவ்வாறு செய்ததில் சமணத்திற்கும் பங்களிப்பாற்ற முடிந்தது. களப்பணியில் 21 புத்தர் சிலைகளைக் கண்டறிந்தேன் என்றால் 13 தீர்த்தங்கரர் சிலைகளையும் கண்டறிந்துள்ளேன்.
பல்கலைக்கழகப் பணியில் இருந்து கொண்டே ஆய்வு செய்தபோது பணிகளை பாதிக்காத வகையில் சில வரையறைகளை எனக்கென்று ஏற்படுத்திக்கொண்டேன். களப்பணியின்போது எடுக்கப்பட்ட குறிப்புகளைப் பார்த்தால் விடுமுறை நாள்களில் நான் சென்றது தொடர்பான விவரங்களும் குறிக்கப்பட்டிருக்கும். விடுமுறைகளைப் பயன்படுத்தியோ அல்லது விடுப்பு எடுத்தோதான் பணிக்காலத்தில் களப்பணிக்கு சென்றிருக்கிறேன்.
எழுமகளூர் புத்தர் |
புத்த சிலைகளைத் தேடி அடையாளப்படுத்த ஆரம்பித்தவுடன் உங்கள் ஆய்வுச் சூழல் எவ்வாறு மாறியது. சிலைகள் பற்றிய தகவல்கள் எவ்வாறு உங்களுக்குக் கிடைத்தது.
நமக்கான தகவல் எந்த திசையிலிருந்து வேண்டுமானாலும் வரலாம். சமயத்தில் எனக்கு தகவல் சொன்னவரை எனக்கு முன்பின் தெரிந்திருக்காது அவர் ஒரு சக பேருந்துப் பயணியாகவும் இருப்பார். நாளிதழ் செய்தியாகவும் இருக்கும். தினமணியில் ஒரு கோவிலைப் பற்றிய கட்டுரை வந்தது. விக்கிப்பீடியாவில் கோவில் தொடர்பாக அதிக கட்டுரைகள் எழுதிய நிலையில், அங்கு சென்று அக்கோவிலைப் பற்றி குறிப்புகளை எடுத்து, விக்கிப்பீடியாவில் பதிய எண்ணி, அங்கு சென்றேன். அந்த ஊருக்குச் சென்றதும் முதலில் அப்பகுதியில் புத்தர் சிலை இருக்கிறதா என்று தேடினேன். குளத்தருகே ஒரு சிலை இருப்பதாகக்கூறினர். அவ்வாறு பார்த்ததுதான் எழுமகளுர் புத்தர் சிலை. பின்னர்தான் கோவிலுக்குச் சென்றேன்.
அதுபோல புதூர் புத்தரைக் கண்டுபிடித்ததும் ஒரு ஆச்சரியம்தான். மழவராயநல்லூரைச் சேர்ந்த சிங்காரவேலன் என் ஆய்வினைப் பற்றிக் கேள்விப்பட்டு, களப்பணியில் இணைய ஆர்வமாக இருந்தார். அவர் சொன்ன தகவலைக்கொண்டு தேட ஆரம்பித்தோம். வாடகைக்கு எடுத்துக்கொண்ட சைக்கிளில் ஊர் முழுக்கச் சுற்றினோம் கிட்டத்தட்ட மூன்று வெவ்வேறு இடங்களில் தேடியும் புத்தர் சிலையைக் காணமுடியவில்லை. அய்யனார் சிலையைத்தான் கண்டோம். இறுதியாக பார்த்த சிலைக்கு அருகில் இருந்தவர் இன்னொரு சிலை ரயில்வே கேட் பக்கத்தில் இருப்பதாகச் சொன்னார். அங்கு சென்று பார்த்தோம். அது ஒரு புத்தர் சிலை. அங்கிருந்த பெண்மணி ஒருவர் எங்கிருந்து வருகிறோம் என்று கேட்டு மோர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார், திரும்ப சைக்கிளை விடும்போதுதான் கடைக்காரர் சொன்னார், கிட்டத்தட்ட இருபத்தைந்து கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் மிதித்து கடந்திருக்கிறோம் என்று. அடுத்த மூன்று நாட்கள் கால்வலி இருந்தாலும் புதிய ஒரு புத்தரைக் கண்ட மகிழ்ச்சியில் அது பெரிதாகத் தெரியவில்லை. சமயங்களில் புதிய சிலையைக்காண பல கிலோமீட்டர் தூரம் சென்று பார்ப்பேன், நான் ஏற்கனவே கண்ட சிலையாகத்தான் இருக்கும். முதல்முறை அதை வேறு ஊர்களின் வழியே சென்று கண்டிருப்பேன், அடுத்த முறை வழிதான் மாறியிருக்கும். சிலை முதல் முறை பார்த்த அதே சிலையாகத்தான் இருக்கும், கோட்டப்பாடி என்னும் ஊரில் இப்படி நடந்திருக்கிறது.
1978ஆம் ஆண்டு தொல்லியல் அறிஞர் திரு ஸ்ரீதரன் அவர்கள் மெயில் ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார். அந்தத்தகவலை வைத்துக்கொண்டு நண்பர்கள் உதவியுடன் பெரண்டாக்கோட்டை என்னும் இடத்தில் உள்ள சிலையைப் பார்த்தேன். அந்த புத்த சிலையை சாம்பான் என்னும் பெயரில் மக்கள் வழிபடுகிறார்கள்.
குடந்தை சேதுராமன் அவர்கள் பல ஆண்டுகள் முன்பாகவே திருநாட்டியத்தான்குடியில் ஒரு புத்தர் இருந்ததாகக் கூறியிருந்தார். பின்னர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களும் அதைப் பற்றிக் கூறியதோடு, அந்த புத்தர் சிலையைக் காண அழைத்துச் சென்றார். அச்சிலையைப் பற்றிய செய்தி நாளிதழ்களில் வெளியானது. நாங்கள் தேவாரப்பாடல்பெற்ற சிவத்தலங்களை குழுவாகச்சென்று பார்ப்பதுண்டு. அப்படி திருநாட்டியத்தான்குடி கோவில் வாசலில் இறங்கியதும் குழுவின் தலைவரிடம் சொல்லிவிட்டு முன்னர் பார்த்த சிலையைத் தேடி ஓடினேன். அங்கிருந்து ஒன்றரை கிலோமீட்டரில் அச்சிலை இருந்தது. ஆனால் தலை காணாமற்போயிருந்தது. அதற்கு மிக அருகில் மற்றொரு சிலையும் இருப்பதாகக் கூறினர். ஆனால் அதைப் பல வருடங்கள் கழித்துத்தான் பார்க்க முடிந்தது.
நீங்கள் கண்டு பிடிக்கும் புத்த சிலைகளை ஆவணப்படுத்த என்ன செய்கிறீர்கள்? நீங்கள் கண்டுபித்த சிலைகள் இன்று என்ன நிலமையில் உள்ளன? எங்கு இருக்கின்றன? எந்தப் பகுதியில் சிலைகள் அதிகம் கிடைத்திருக்கின்றன.
ஆரம்ப காலத்தில் நான் கண்டுபிடித்த சிலைகள் பற்றிய செய்திகளை தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு அளித்துவந்தேன். பின்னர் ஆங்கிலப் பத்திரிக்கைகளுக்கும் அளிக்க ஆரம்பித்தேன். சிலையை கண்டடைந்தவுடன் தகவல்களைப் பதிவு செய்து விடுவது எனது பழக்கம். அப்போதுதான் சிலை பற்றிய தகவல்கள் நிலைக்கும். நான் கண்டறிந்த சிலைகள் சில அந்த இடத்தில் இப்போது இல்லை, அருங்காட்சியகத்துக்கு சென்றிருக்கின்றன, சில சிலைகள் சிதைந்துவிட்டன, சில சிலைகள் எங்கு போயின என்பதும் தெரியவில்லை. பழையாறை பகுதியில் தான் இன்றும் அதிக புத்தர் சிலைகள் கிடைக்கின்றன, திருவலஞ்சுழி, முழையூர், பட்டீஸ்வரம், கோபிநாதப்பெருமாள் என வரிசையாக அந்தப்பகுதியில் சிலைகள் கிடைத்துள்ளன. இறுதியாக முழையூரில் புத்தரின் தலைப் பகுதியைக் கண்டோம். 50 செமீ உயரமுள்ள அந்த தலைப்பகுதியை நிமிர்த்தி வைக்க, சிலை இருந்த செய்தியைத் தெரிவித்து என்னை அழைத்துச் செல்ல திரு ச.செல்வசேகர் உதவினார்.
பதிமூன்று வருடங்களுக்கு முன்பு எனது மகன்களால் எனக்காக ஒரு வலைப்பூ துவங்கப்பட்டது. நான் இதுவரை செய்த ஆய்வுகள் அனைத்தையும் இன்றளவும் செய்யும் விஷயங்களையும் உடனுக்குடன் பதிவேற்றி விடுகிறேன். இந்த ஆய்வைத் துவங்கி முப்பது வருடமாகிறது இப்பொழுதும் என்னிடம் புத்தர் சிலையைப்பற்றி ஒரு தகவல் தெரிவித்தால் தாமதிக்காமல் அங்கு சென்றுவிடுவேன். சிலையைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்யும்போது அங்குள்ள மக்களிடம் அந்த புத்தர் சிலைக்கு வழிபாடு உண்டா, என்ன பெயரில் அவர்கள் அந்த சிலையை அழைக்கிறார்கள், சிலையைப் பராமரிக்கின்றார்களா ஆகிய கேள்விகளைக் கேட்பது வழக்கம்.
எனக்கடுத்து தொல்லியல் ரீதியாக பௌத்தத்தை ஆய்வு செய்ய வருபவர்கள் இன்னும் இதை விரிவாக்கி ஆய்வு செய்யலாம். அதற்கான வலுவான அடித்தளத்தை செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
உங்களுடன் களப்பணியில் நண்பர்கள் இணைவதுண்டா?
ஆரம்ப கால ஆய்வுகளின்போது புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் உதவியோடு சிலைகள் குறித்த தகவல்களை சேகரித்திருக்கிறேன். களப்பணியில் என்னுடன் சிலைகளைத் தேடி நிறைய நண்பர்கள் வந்திருக்கிறார்கள். என்னுடைய மகன்கள் வந்திருக்கிறார்கள். என்னுடன் களப்பணிக்கு வரும் ஒவ்வொருவரும் எனக்கு முக்கியமானவர்கள் தான். அவர்களது பெயரை நான் பதிவு செய்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறேன். புதிதாக பலரையும் ஆய்வில் ஈடுபடுத்தவே முயற்சி செய்கிறேன். என்னால் சிலராவது ஆய்வுக்கு வரவேண்டும் என்பதே எனது ஆசை. அதே சமயம் உறுதியற்ற செய்திகளை எனது பெயருடன் நண்பர் ஒருவர் வெளியிட்ட கசப்பான அனுபவமும் உண்டு. ஆனால் இயன்றவரை நட்பார்ந்த சூழலையே பேணுகிறேன், சமயங்களில் எனது நண்பர்கள் கண்டறிந்த வேறு சிலைகளை, பின்னர் புத்தர் சிலை என்று நான் அடையாளப்படுத்தியதுண்டு. எந்த சமயத்திலும் யாருடைய நட்பையும் பாதிக்கும்படி நான் நடந்துகொள்வதில்லை.
நீங்கள் கண்டுபிடித்த புத்தர் சிலைகளில் தனித்துவம் மிக்க சிலை என்று நீங்கள் கருதும் சிலை எது?
தமிழ்நாட்டில் பெரும்பாலான புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்தில் இருப்பவை. ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியன்பட்டினத்தில் நின்ற கோலத்தில் புத்தர் சிலை ஒன்றைக் கண்டோம். தனித்துவமிக்க சிலைகள் என்றால், இரு சிலைகளைச் சொல்லலாம். ஆய்வு துவங்கிய காலம் முதல் சென்னை செல்லும் பைபாஸில் ஒரு சிலை உள்ளது என்று நண்பர்கள் கூறுவார்கள், அது மானம்பாடியில் உள்ள புத்தர் சிலை. அழகிய வேலைப்பாடுடன் ஏழடுக்குப் பீடத்துடன் உள்ள சிலை.
நான் கண்டுபிடித்ததிலேயே அதிகம் பெருமைப்படுவது முசிறி அருகே மங்கலம் என்னும் கிராமத்தில் கண்டுபிடித்த மீசையுள்ள புத்தர் சிலைதான். தமிழகத்தில் இது போன்ற வேறு சிலை கிடையாது. மீசையுடன் இது ஒன்றுதான் உள்ளது. இதை புத்தர் என்று நிறுவ கடுமையான கேள்விகளை எதிர்கொண்டேன். சிற்பியின் கலை ரசனையாகவும் மாறுபடுத்திக்காட்டும் உத்தியாகவும் புத்தருக்கு மீசையை செதுக்கிருக்கலாம் என்று சொன்னேன். மீசையுடனும் புத்தர் சிலைக்கான அனைத்துக்கூறுகளுடனும் இருந்த அந்தச் சிலையை புத்தர் தான் என்று ஏற்றுக்கொள்ளச்செய்ய நிறைய விளக்க வேண்டியிருந்தது. ஆய்வுக்கு வரையறைகள் மட்டுமல்ல எல்லைகளும் உண்டு. ஆய்வாளன் தன் கையிலுள்ள சான்றைக்கொண்டே எப்போதும் பேசமுடியும், எப்போதுக்குமான இறுதியான முடிவை அவன் சொல்ல முடியாது.
மீசையுள்ள மங்கலம் புத்தர் |
நீங்கள் தகவல் சேகரித்து வெளியிட்ட பின் சிலைகள் பற்றிய மாற்றுக் கருத்துகள் வந்துள்ளனவா?
நான் ஆய்வு செய்து வெளியிட்ட தகவல்களுக்கு நானே மாற்றுக் கருத்து தெரிவித்திருக்கிறேன். மயிலை சீனி. வேங்கடசாமி தன்னுடைய நூலில் கும்பகோணம் பகவ விநாயகர் கோவிலில் உள்ள சிலையை புத்தர் என்று எழுதியுள்ளார். நானும் எனது M.Phil ஆய்வேட்டில் அவர் கூறியதை அப்படியே கூறியிருந்தேன். பின்னர் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அது புத்தர் இல்லை என்று உறுதியாகியது. எனது முனைவர் பட்ட ஆய்வில் இதை மாற்றித்தான் குறிப்பிட்டேன். மயிலை சீனி வேங்கடசாமியின் கருத்தை மாற்றி எழுத ஒருகணம் தயக்கமாகத்தான் இருந்தது, இருந்தாலும் ஆய்வு எப்போதும் இவ்வாறு தான் முன்செல்கிறது.
நீங்கள் புத்தர் சிலைகள் கண்டுபிடித்த இடங்களில் உள்ள மக்களின் உணர்வு என்னவாக இருந்தது. நீங்கள் புத்தருடைய சிலை என்று ஆவணப்படுத்திய பின் அங்கு ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா?
நிறைய இடங்களில் மக்கள் ஆய்வுக்கு உதவியிருக்கிறார்கள். ஒரு இடத்தில் அங்குள்ள மக்கள் சிலையை அணுக அனுமதிக்கவில்லை. அங்குள்ள படித்த பெண் ஒருவர்தான் அவர்களிடம் பேசி சிலையைப் பார்க்க உதவினார். ஒருமுறை ஆட்டோ ஓட்டுனரின் உதவியுடன் வாய்க்காலைக் கடந்துபோய் சிலையைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் சிலைகள் உள்ள இடங்களில் பாம்பு குறித்த பயம் அதிகமாக இருக்கும். சில இடங்களைக் கடக்க நாய்கள் அனுமதிக்காது. ஒரு இடத்தில் தண்ணீர் இல்லாத ஏரியில் இறங்கி நடக்க முயற்சி செய்தபோது உள்ளூர்வாசி ஒருவர் ஓடிவந்து கடிந்துகொண்டார், அங்கு புதைமணல் இருப்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. இந்த இடங்களுக்கெல்லாம் என்னை அழைத்துப்போங்கள் என்று கேட்கும் நண்பர்களிடம் எப்போதும் சொல்வது சில இடங்களைத்தான் பார்க்க வசதியுள்ளது. சில இடங்களை நாம் விரும்பியவுடன் பார்க்க வசதியோ, சூழலோ இல்லை என்பேன்.
மக்களுக்கு புத்தர் இடங்களுக்கேற்ப வெவ்வேறு வகைகளில் பொருள் படுகிறார். சில இடங்களில் மக்கள் புத்தர் என்று தெரிந்துகொண்டே அவர்களுக்கு ஏற்ற வகையில் வழிபடுகின்றனர். சில இடங்களில் வேறு பெயர்கள் இருக்கும். இன்னும் சில இடங்களில் அவர் மக்களோடு மக்களாக இயல்பாக இருக்கிறார். பல இடங்களில் புத்தரின் சிலைகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. சிதைத்திருப்பதற்குக் காரணம் சமயக்காழ்ப்பு எனலாம். நான் கலை ரசனை இல்லாத தன்மை என்று சொல்வேன்.
சில கிராமங்களில் நாங்கள் ஆவணப்படுத்திய பின் மக்கள் இந்த சிலை முக்கியமானது என்று அறிந்துகொண்டு அவற்றைப் பாதுகாக்க முன்வருகிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இடத்துக்கு சிலையை பார்க்க போனபோது, நான் யார் எதற்காக வந்திருக்கிறேன் என்று தகவல்களை கேட்டபின்னே அனுமதித்தார்கள், அவர்களில் ஒருவர் என்னை நினைவில் வைத்திருந்தார். மக்களிடம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதையே எனது இத்தனை ஆண்டுகால உழைப்பிற்கான பலனாகக்கருதுகிறேன்.
நீங்கள் கண்டுபிடிக்கும் சிலைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
சிலைகளைப் பாதுகாப்பது என்பது அந்தப்பகுதியில் உள்ள ஆர்வலர்களை சார்ந்து இருக்கிறது. சில இடங்களில் சிலைகள் கவிழ்ந்து கிடக்கும், அவற்றைத் தனியாக ஒருவரால் நிமிர்த்தி விடக்கூடமுடியாது. வரலாற்றுச்சின்னங்களைப் பாதுகாப்பதில் மக்களின் ஆர்வமும் அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் ஒத்துழைப்பும்தான் முதன்மையானது.
மயிலை சீனி. வேங்கடசாமி பட்டீஸ்வரம் புத்தரைக்குறித்து எழுதுகையில் அது ஒரு கிராம தேவதை கோவிலில் உள்ளதாக எழுதிவிட்டார், பெயர் குறிப்பிடவில்லை. அதற்காக நானும், நண்பர்களும் பட்டீஸ்வரம் பகுதியில் பல்வேறு வகைகளில் அலைந்தோம், பின்னர் அங்கிருந்த முத்துமாரியம்மன் கோவிலில் பார்த்தோம். முன்பு கோவிலின் வெளிப்புறத்தில் இருந்த சிலை தற்போது பாதுகாப்பு கருதி கர்ப்பகிரகம் அருகிலேயே வைத்து பாதுகாக்கப்படுகிறது.
மணலூர் புத்தர் சிலை |
உங்கள் ஆய்வு எல்லைகளை ஏன் நீங்கள் விரிவாக்கிக்கொள்ளவில்லை?
எனது ஆய்வுமுறைதான் அதற்கு முக்கியக்காரணம், நான் தொழில்முறை ஆய்வாளன் அல்ல. எனக்குக்கிடைத்த நேரத்தில் தொடர்ந்து பணிசெய்திருக்கிறேன். நான் ஒரு புத்தர் சிலையை முதல்முறை கண்டுவிட்டால் அதை அப்படியே விட்டு விடுவதில்லை, குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் சென்று பார்ப்பேன். பல புதிய விஷயங்களை எனது முதல் பயணத்தில் இல்லாமல் அடுத்தடுத்த பயணங்களிலேயே கண்டறிந்திருக்கிறேன். இது எனக்கு மிகவும் முக்கியமாகப்பட்டது. நான் சில சமயம் கடலூர், இராமநாதபுரம் பகுதிகளில் பயணித்து சிலைகளைக் கண்டபோது, திரும்பச்சென்று பார்க்க சிரமமாக இருந்தது. கொரோனா நோய்த்தொற்று காலத்துக்குப் பிறகும், வயது கருதியும் நீண்ட பயணங்களைத் தவிர்க்க வேண்டியதாயிற்று. ஆகவே எனது ஆய்வுக்கான எல்லையை வரையறுத்துக்கொண்டேன்.
நான் செய்ததில் முக்கியமான பணியாக இதுவரை ஆய்வாளர்கள் கண்டறிந்த சோழ நாட்டு புத்தர் சிலைகளை எல்லாம் அட்டவணைப்படுத்தியுள்ளேன். அவற்றின் இன்றைய நிலையை நான் உறுதி செய்திருக்கிறேன். சிதைந்தவை, புதிதாக கண்டறியப்பட்டவை அவற்றோடு தொடர்புடைய வருடங்கள் என்று அனைத்துத்தகவல்களும் கொண்ட முழுமையான பட்டியல் அது. ஆய்வில் எனக்குப் பின்வருபவர்களுக்காக நான் சேகரித்து வைத்த பெரும்செல்வம் அது.
தமிழ் நாட்டில் சமீபத்தில் எங்காவது புத்த விகாரம் இருந்த எச்சத்தைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளதா?
திருவிளந்துறையில் ஒரு கோவில் இருந்த செய்தி கும்பேஸ்வரர் கோவிலுள் உள்ள பதினாறாம் நூற்றாண்டு செவ்வப்ப நாயக்கர் கல்வெட்டால் அறியப்படுகிறது. ஆனால் இன்று அந்த ஊரில் கோவில் இல்லை. இதுவே மன்னர் காலத்தில் தமிழகத்தில் எழுப்பப்பட்ட இறுதி புத்தர் கோவிலாக இருக்கலாம்.
தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், திருவிடை மருதூர் ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோவில்களில் புத்தர் சிலைகள் உள்ளன. அவை புராணத்தோடு சம்பந்தப்பட்டவை என்ற கருத்தும் உள்ளது. அது தவிர புத்தர் கோவில்கள் என்று சொன்னால், நம்மிடம் செப்பேடுகளில் உள்ள புகழ்பெற்ற நாகப்பட்டின சூடாமணி விகாரம். இன்று அதன் எச்சங்களைக்கூட காண முடியவில்லை. பூம்புகாரில் மட்டுமே விகாரையின் எச்சங்களைப் பார்க்கலாம். புத்தர் சிலைகள் கிடைக்கும் இடங்கள் எல்லாம் புத்தர் கோவில்கள், விகாரைகள் இருந்து அழிந்திருக்கவேண்டும் என்பது எனது எண்ணம்.
உங்கள் வாழ்க்கைக்கு புத்தர் உதவியிருக்கிறாரா?
புத்தர் எனது வாழ்வில் முப்பது ஆண்டு காலமாக உடனிருக்கிறார், எங்களுக்குள் உள்ள பிணைப்பு ஆச்சரியமானதுதான். எனது வழிபடுதெய்வம் வேறாக இருந்தாலும், காலப்போக்கில் புத்தர் எனக்குள் அமைதியை, நிதானத்தை, பக்குவத்தை வளர்த்திருக்கிறார்.
சந்திப்பு - தாமரைக்கண்ணன், புதுச்சேரி
நன்றி - எழுத்தாளர் கே. ஜே. அசோக்குமார்
முனைவர் பா.ஜம்புலிங்கம் வலைதளம்
சோழ நாட்டில் பௌத்தம் (ponnibuddha.blogspot.com)
பா.ஜம்புலிங்கம் நூல்கள்
- சோழநாட்டில் பௌத்தம் - புது எழுத்து பதிப்பகம்- 2022
- தஞ்சையில் சமணம் - ஏடகம் பதிப்பகம்- 2018