செப்டெம்பர் 22 1747, ராணியால் பணியமர்த்தப்பட தனியார் கப்பல் 'ஸ்விஃப்ட்', வில்லியம் ஜான்ஸனின் தலைமையில் டார்செட் பகுதியில் பூல் எனும் இடத்தில் கடத்தல்காரர்களை கண்காணிக்கும் பணியிலிருந்தது. அரசரின் சுங்கத் துறை தனியார் கப்பல்களை தங்கள் பணிக்காக ஒப்பந்தம் செய்திருந்தது. பலநேரங்களில் இந்த முடிவு பின்னடைவைத் தந்தது ஏனென்றால் இந்தத் தனியார் கப்பல்களே திடீரென கடத்தலில் ஈடுபடுவதுண்டு. மாலை ஐந்துமணிக்கு திரீ பிரதர்ஸ் எனப் பெயர்கொண்ட சந்தேகத்துக்குரிய படகு வருவதைக்கண்டு ஸ்விஃப்ட் அதை நெருங்கியது. திரீ பிரதர்ஸ் காற்றின் வேகத்தைப் பயன்படுத்தி தப்பிச்செல்ல முயன்றது. ஸ்விஃப்ட் பின்தொடர்ந்தது. படகை சுற்றி வளைக்க ஆறு மணிநேரங்கள் ஆகின. அதன்பின்னும் நிற்காமல் சென்றது 'திரீ பிரதர்ஸ்'. துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னரே சரணடைந்தது.
மாலுமி ஜான்சனும் அவரது ஆட்களும் திரீ பிரதர்ஸுக்குள் சென்றபோது ஏழுபேர் அங்கிருந்தனர். முப்பத்தொன்பது பீப்பாக்களில் பிராண்டியும் ரம்மும் இருந்தன. குதிரைகளில் ஏற்ற வசதியாக கயிற்றால் கட்டிவைக்கப்பட்டிருந்தன. அதைவிட முக்கியமாக நீர்புகாத பைகளில் எண்பத்திரண்டு பொதிகள் இருந்தன. பின்னர் எடையிட்டபோது இரண்டு டன்கள் தேறின. அவற்றில் தேயிலை இருந்தது.
திரீ பிரதர்ஸ் குயெர்ன்ஸே எனும் கப்பலிலிருந்து அந்த சரக்கை எடுத்து வந்திருந்தது. பூல் துறைமுகத்தில் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்காக திரீ பிரதர்ஸ் முடக்கப்பட்டது. தேயிலை அங்கே துறைமுக மேடையில் சுங்க அலுவலகத்தில் கிடந்தது.
இரண்டு வாரங்களுக்குப் பின் அறுபது கடத்தல்காரர்கள் பூலுக்கு அருகிலிருந்த சார்ல்ட்டன் காட்டில் கூடினர். பலரும் ஹாக்கஸ்ட் கேங்கை சார்ந்தவர்கள். ஹாக்கஸ்ட் கேங்க் கென்ட் நகரத்தை சார்ந்தது. உள்நாட்டில் ஹேஸ்ட்டிங் மற்றும் மெயிட்ஸ்டோனுக்கும் நடுவில் அமைந்திருந்தது. அவர்கள்தான் திரீபிரதர்ஸின் கடத்தலை ஒருங்கு செய்தவர்கள். அவர்கள் குதிரைமீது துப்பாக்கிகளும் பிற ஆயுதங்களும் ஏந்தி வந்தனர். பாதிபேர் பூல் செல்லும் சாலைகளை கண்காணிக்க பணிக்கப்பட்டனர். அதிகாலை வேளையில் மீதி கும்பல் நகரத்தினுள் சென்றது. சுங்க அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. அங்கிருந்த முப்பத்தி ஏழு தேயிலை மூட்டைகளை குதிரைகளில் ஏற்றியது. ரம்மையும் பிராண்டியையும் விட்டுவிட்டு தேயிலையுடன் சாவகாசமாக வடக்கு நோக்கி சென்றது.
சாலிஸ்பரிக்கு பாதி தொலைவிருக்கையில் ஃபார்டிங்பிரிட்ஜ் எனும் சிறுநகரை அடைந்தனர். மக்கள் வாய்பார்க்க கூடினர். தானியேல் சார்ட்டர் எனும் பாதணிகளைச் செய்பவர் கடத்தல்காரர்களில் ஒருவரை அடையாளம் கண்டுகொண்டார். ஜான் டையமண்ட் அவருடன் முன்பு வேலைபார்த்தவர். இருவரும் கைகுலுக்கினர். சார்ட்டருக்கு ஒரு சிறிய தேயிலை பை தரப்பட்டது. பின்னர் கும்பல் பயணத்தை தொடர்ந்தது. அடுத்த கிராமத்தில் அவர்கள் கொள்ளைப்பொருட்களை பிரித்தெடுத்தனர். பங்குபோடுவதில் சர்ச்சை எழுந்தது. கொஞ்சம் தேயிலை சுங்க அலுவலகத்திலேயே பங்குபோடப்பட்டிருந்தது. தராசில் எடைபோட்டு கொள்ளை பிரிக்கப்பட்டு எல்லோருக்கும் வழங்கப்பட்டது. அனைவரும் தங்கள் பங்குகளைப் பெற்றுக்கொண்டு தத்தம்வழியே சென்றனர்.
தேயிலைக்காக இதைப்போன்ற பல கடத்தல்களும் 1740களில் நிகழ்ந்தன. 1744ல் ஒரு சுங்க அதிகாரி சோர்ஹமில் கடத்தல்காரர்கள் கையில் சிக்கினார். அவருக்குத் தகவல் தந்த இருவரையும் மரத்தில் கட்டிவைத்து அடித்து பிரான்ஸின் கரையில் விட்டு வந்தனர். இங்கிலாந்து பிரான்ஸுடன் போர்புரிந்துகொண்டிருந்த காலம் அது. 1745ல் மூன்று சுங்க அதிகாரிகள் கிரின்ஸ்டெட் கிரீன் எனும் இடத்தில் மதுக்கூடத்தில் தாக்கப்பட்டனர் பின்னர் கொள்ளையடிக்கப்பட்டனர். 1746ல் சான்ட்விச் நகரத்தில் பதினொன்றரை டன் தேயிலையை 350 குதிரைகளில் ஏற்றும்போது ஹாக்கஸ்ட் மற்றும் விங்ஹம் கும்பல்களுக்கிடையே சச்சரவு ஏற்பட்டது. ஒன்பதுபேர் காயமடைந்தனர். 1747ல் மெயிட்ஸ்டோனில் நான்கு படைவீரர்களை கடத்தல்காரர்கள் சுட்டுவீழ்த்தினர்.
அரசரின் சுங்க அலுவலகம் கொள்ளைபோவதென்பது புதிய சிக்கலாக இருந்தது. அதனால் அரசின் வருமானம் பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். தகவல்தருபவர் குற்றவாளியாய் இருந்தால் விடுதலையும் பெரிய சன்மானமும் வாங்குவதாக அறிவிப்பு விடப்பட்டது. ஜான் டையமண்ட் சந்தேகத்தின்பேரில் சிசெஸ்டரில் கைதானார்.
தானியேல் சார்ட்டர் ஒரு வாயாடி. அவர் தேயிலையை பரிசாகப் பெற்றது சுங்கத்துறையினரின் கவனத்திற்கு வந்தது. மாஜிஸ்ட்டெரெட்டின் முன்பு அவர் நிறுத்தப்பட்டார். மிரட்டப்பட்டபோது ஒரு சிறு தொகைக்கு டையமண்டை காட்டித்தர முடிவெடுத்தார். விளைவு தூக்குத்தண்டனை.
பிப்ரவரி 14, 1748ல் தானியேல் சார்ட்டர் வில்லியம் கேய்லி எனும் சுங்க அதிகாரியுடன் சிச்செஸ்டருக்கு சென்றார். வழியில் ரோலான்ட்ஸ் அரசமாளிகையின் அருகில் அவர்கள் ஓய்வெடுத்தனர். அவர்கள் தங்கிய விடுதியின் முதலாளி ஒரு பெண்மணி. அவரின் மகன்கள் கடத்தல்காரர்கள். அவருக்கு இருவரின் மேலும் சந்தேகம் இருந்தது. தகவல் சொல்லியனுப்பினார். ஒரு கும்பல் வந்து சேர்ந்தது. இரு பயணிகளையும் தனித்தனியாகப் பிரித்தனர். சார்ட்டர் உண்மையை ஒப்புக்கொண்டார். இருவரையும் குடிக்க வைத்தனர். இருவரும் போதையில் உறங்கும்போது அவர்களது பைகளிலிருந்து தீர்ப்புத்தாள்கள் எடுக்கப்பட்டன. சார்ட்டருக்கும் கேய்லிக்கும் ஒரு சிறிய தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் கொள்ளைக்காரர்களின் மனைவிகள் இருவர் வஞ்சத்துடன் இருந்தனர். 'நம்மள தூக்குல போட வந்த இந்த நாய்கள தூக்குல போடுங்க' என்றனர். டையமண்டுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது தெரியும்வரைக்கும் இருவரையும் தங்களுடன் வைத்திருக்க கொள்ளையர்கள் முடிவெடுத்தனர். அதன்பின்னர் டையமண்டுக்கு என்ன நேர்கிறதோ அதையே இருவரும் சந்திக்க நேரும். வில்லியம் ஜாக்ஸன், வில்லியம் கார்ட்டர் மேலும் ஐந்துபேர் ஆளுக்கு வாரம் மூன்று காசு செலவழிக்க ஒப்புக்கொண்டனர்.
தூங்கிக்கொண்டிருந்த இருவரையும் எழுப்ப ஜாக்சன் அவர்களின் படுக்கையில் ஏறி குதிமுள்ளை நெற்றியில் இறக்கினான். இருவரையும் இரத்தம் சொட்டச்சொட்ட குதிரை சாட்டைகளால் விளாசினர். கேய்லியையும் சார்ட்டரையும் கைகளையும் கால்களியும் கட்டி குதிரையில் ஏற்றினர். வழியெங்கும் சாட்டையடி விழுந்துகொண்டிருந்தது. சசெக்ஸ் மாவட்டத்தின் ரேக் எனும் இடத்தை அடைந்தனர். மொத்தம் பதினைந்து மைல்கள். பயணத்தில் பலமுறை இருவரும் குதிரைகளின் கீழ் தலைகீழாக விழுந்துகிடந்தனர். குதிரைகளின் கால்கள் அவர்களின் முகத்தில் அறைந்தன. முதலில் இருவரையும் மேலே ஏற்றி சரிசெய்தனர். பின்னர் இருவரும் குதிரையின் மேலே உட்கார வலுவில்லாமல்போக ஆளுக்கொரு கொள்ளைக்காரருடன் பயணிக்கச் செய்தனர். அவ்வப்போது யாரேனும் ஒரு கொள்ளைக்காரர் அவர்களது விரையை நெறித்தனர்.
ரேக்கில் ரெட் லையன் எனும் விடுதியின் சொந்தக்காரர் கடத்தல் தேயிலைகள் புதைக்கப்படும் இடத்தை காட்டினார். சார்ட்டர் முதலில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். பின்னர் கேய்லி விளக்கின் மற்றும் மெழுகுத்திரிகளின் மங்கிய வெளிச்சத்தில் புதைக்கப்பட்டார். நீண்டநாட்களுக்குப் பிறகு அவரின் உடல் வெளியெடுக்கப்பட்டபோது அந்த சுங்க அதிகாரியின் உடல் நின்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது கைகள் முகத்தை மூடியிருந்தன. அவர் உயிருடன் புதைக்கப்பட்டிருந்தார்.
கொள்ளையர்கள் சந்தேகம் வராதபடிக்கு ஊருக்குத் திரும்பினர். இரண்டு நாட்களுக்குப்பின் மேலும் சில நண்பர்களோடு கார்ட்டரை முடித்துக்கட்ட ரேக் திரும்பினர். ஒரு துப்பாக்கியில் நூல்களைக் கட்டி கார்ட்டரின் நெற்றியில் குறிபார்த்து வைத்துவிட்டு அனைவரும் ஒரேநேரத்தில் நூல்களை பிடித்திழுப்பது என முதலில் முடிவு செய்யப்பட்டது. அவ்வகையில் எல்லோருமே கொலையில் சரியாகப் பங்கெடுத்ததாகும். பின்னர் துப்பாக்கியால் சுடுவது மிகவும் மனிதாபிமானமுள்ள செயலாக கருதப்பட்டதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
தொடர்ந்து யாரேனும் ஒரு கடத்தல்காரர் கார்ட்டரை தாக்கிக்கொண்டிருந்தார். பீதியில் கார்ட்டர் முழங்காலிட்டு செபம் செய்ய ஆரம்பித்தான். ஜான் காபி அதைக்கண்டு அவனது மூக்கை அறுத்தான். குதிரையில் தூக்கிப்போட்டு அவரை ஒரு கிணற்றுக்கு எடுத்துச் சென்றனர். ஐந்துபேர் சேர்ந்து ஒரு சுருக்குக் கயிற்றை தயார் செய்தனர். கார்ட்டரை கிணற்றின் மேல் தூக்கிலிட முயன்றனர். கால்மணிநேரம் தொங்கியபின் கார்ட்டர் உயிரோடிருந்தார். எனவே அவர்கள் அக்கயிற்றை வெட்டி விட்டு தலைகீழாக கிணற்றுக்குள் வீசினர். கிணற்றின் உள்ளிருந்து கார்ட்டர் முனகிக்கொண்டிருந்தார். கடைசியாக கற்களும், தடிகளும் கிணற்றினுள் வீசப்பட்டன.
அந்த காலத்துக்கே இவை மிகையான காட்டுமிராண்டித்தனங்களாக கருதப்பட்டன. உடல்கள் கிடைத்தபோது செய்தித்தாள்கள் பரபரத்தன, குறிப்பாக கேய்லியின் உயிருடன் புதைக்கப்பட்ட உடல் கிடைத்தபோது. தகவல் தருபவர்களுக்குப் பெரும் சன்மானம் அறிவிக்கப்பட்டது. சில கொள்ளையர்கள் மரணதண்டனைக்குப் பயந்து சாட்சிகளாக முன்வந்தனர். எட்டு கொள்ளைத் தலைவர்கள் பிடிக்கப்பட்டனர்.
சிச்செஸ்டரில் 16 ஜனவரி 1749ல் வழக்கு விசாரணை ஆரம்பித்தது. இரண்டு நாட்கள் கழித்து ஜாக்ஸனும் கார்ட்டரும் வில்லியம் கேய்லியை கொலைசெய்ததாகவும் டாப்னெர், காபி மற்றும் ஹாமண்ட் டானியெல் சாட்டரைக் கொலை செய்ததாகவும் தீர்ப்பு வந்தது. மீதமுள்ளவர்களில் ஒருவர் குற்றமற்றவர் என்றும் மற்ற இருவரும் கொலைக்குத் துணைபுரிந்தவர்கள் எனவும் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. துணைக்குப்போனவர்களுக்கு சற்று குறைந்த தண்டனையே வழங்கப்பட்டது. அவர்களை வெறுமனே தூக்கிலிட்டு புதைக்க வேண்டும். மற்றவர்களை தூக்கிலிட்டு எச்சரிக்கைக்காக அப்படியே தொங்கவிட வேண்டும். இந்தத் தண்டனை எல்லோராலும் கொடுமையானதாகக் கருதப்பட்டது. அப்படி தொங்கவிடப்பட்டவர்களின் உடலை புதைப்பது சட்டவிரோதமானது. காபியும் ஹாமண்டும் தங்கள் கடத்தலை நிகழ்த்திய கடற்கரையில் தொங்கவிடப்பட்டனர். ஜாக்சன் தூக்கிலிடப்படும் முன்பே இறந்துபோனான், இருப்பினும் அவனது உடல் சங்கிலியில் கட்டப்பட்டு எல்லோரும் பார்க்க தொங்கவிடப்பட்டது.
அந்த வருடம் ஏப்ரிலில் ஹாக்கஸ்ட் கேங்கைச் சார்ந்த வேறு ஐந்து பேர், பூல் சுங்க அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த சிறிய குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டனர். அவர்களை ஓல்ட் பெய்லிக்கு அழைத்துச் சென்று கொலைகாரர்களை நடத்தியதைப்போலவே நடத்தினர். ஒருவர் விடுவிக்கப்பட்டார். வேறொருவருக்கு, பின்னர் மன்னிப்பு வழங்கப்பட்டது. மீதம் மூவருக்கும் டைபர்னில் வைத்து மரணதண்டனை வழங்கப்பட தீர்ப்பானது. மரணத்திற்குப் பின் ஒருவர் புதைக்கப்படவும் இருவரின் உடல்கள் சங்கிலியில் தொங்கவிடப்படவும் வேண்டும். இவர்களில் ஒருவனான வில்லியம் பெயர்லோ மரணதண்டனைக்கு முந்தைய இரவில் தன்னைக் காணவந்தவர்களுக்கு தைரியம் சொல்ல புன்னைகையுடன் சொன்னான் 'நாங்கள் இனிமையான காற்றில் தொங்கிக்கொண்டிருப்போம், நீங்கள் உங்கள் கல்லறைகளில் அழுகிக்கொண்டிருப்பீர்கள்'.
18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கடத்தல்காரர்கள் இத்தனை ஆபத்துக்களையும் தாண்டி செயல்பட்டுக்கொண்டிருந்தது நூறாண்டுகளுக்கு முன்பு பிரித்தானியர்கள் முற்றிலும் அறிந்திராத ஒரு பொருளுக்காக என்பதே ஒருவேளை முக்கிய அம்சமாகப்படுகிறது.
13 மே 1662-ல் பதினான்கு பிரித்தானிய போர்க்கப்பல்கள் போர்ட்ஸ்மவுத் துறைமுகத்தை வந்தடைந்தன. மூன்றுவாரங்களுக்கு முன்பு அவை லிஸ்பனிலிருந்து கிளம்பியிருந்தன ஆனால் புயலின் காரணமாய் அவை வழிமாறி கார்ன்வாலில் இருந்த மவுன்ட் பேயில் நங்கூரமிட நேர்ந்தது. அப்போது மக்கள் அந்தக் கப்பல்களை வரவேற்று பீரங்கி முழக்கங்களுடனும் வானவேடிக்கைகளுடனும் கொண்டாடினர். முதன்மைக் கப்பலின் பெயர் ராயல் சார்லஸ். அதிலிருந்த மரியாதைக்குரிய பயணி போர்ச்சுகல் அரசர் நான்காம் யுவானின் மகள் காத்தரின் ஆஃப் பிரகன்சா. கரையிறங்கியதும் அவள் தன் வருகையைத் தெரிவிக்க ஒரு கடிதம் எழுதினாள். அது அவளது வருங்கால கணவர் இரண்டாம் சார்லசுக்கு ஆள்மூலம் அனுப்பப்பட்டது. அந்த இரவில் லண்டனில் இருந்த அனைத்து மணிகளும் அடித்தன, வீடுகளுக்கு முன் கொண்டாட்ட நெருப்புகள் மூட்டப்பட்டன. அந்த இரவிலும்கூட இரண்டாம் சார்லஸ் நிறைமாத கர்ப்பவதியாயிருந்த தன் காதலி லேடி காசில்மெயினின் வீட்டில் இரவுணவருந்தினார். அவள் வீட்டின் முன் நெருப்பு கொளுத்தப்படவில்லை.
ஆறு நாட்கள் கழித்து சார்லஸ் ஒருவழியாய் போர்ட்ஸ்மௌவுத்தை வந்தடைந்தார். அன்று காலை இரகசிய கத்தோலிக்க சடங்கில் அவர்கள் திருமணம் நடைபெற்றது. அதே நாளில் பின்னர் அவர்களின் திருமணம் மீண்டும் ஒருமுறை லண்டனில் நடைபெற்றது. இம்முறை இலண்டனின் புராட்டஸ்டண்ட் பிஷப் முன்னிலையில்.
சார்லஸ் இத்திருமணத்திற்கு பெரும் வரதட்சிணையைக் காட்டி ஈர்க்கப்பட்டார். அவருக்கு ஐந்து லட்சம் பவுண்டுகள் வாக்களிக்கப்பட்டன. காமன்வெல்த்தின் நிர்வாகச் செலவுகளுக்கான கடன்களையும் பிற கடன்களையும் அடைக்க அந்தக் காசு தேவைப்பட்டது. அந்தக் காசில் பாதி மட்டுமே காத்தரினுடன் அனுப்பப்பட்டபோது, அதுவும் பணமாக அல்லாமல் சர்க்கரையும், மசாலாப் பொருட்களுமாக அனுப்பப்பட்டபோது, திருமணம் தடைபடவிருந்தது. காத்தரினின் வரதட்சிணையில் வேறு பொருட்களும் அடங்கியிருந்தன. அவற்றில் ஒன்று ஒரு பெட்டி தேயிலை. ஏனென்றால் காத்தரின் தேயிலைக்கு அடிமையாயிருந்தாள்.
ஐரோப்பாவிற்கு தேயிலை ஆச்சர்யப்படவைக்கும்வகையில் பிந்தி வந்தது. சீனாவில் மிக சாதாரணமான பானமாக அது ஆகி பல நூறு வருடங்கள் கழித்தே ஐரோப்பாவிற்கு தேயிலை வந்தது. தேயிலை குறித்து அறியப்பட்ட முதல் குறிப்புகள் 1559ல் எழுதப்பட்ட ஒரு வெனிசிய புத்தகத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 'நேவிகேஷியோன் எற் வியாகி'. அதை எழுதியவர் ஜியம்பட்டிஸ்டா ரமூசியோ.. அவர் அரேபியர் ப்ருவர் 'சாய் கட்டய்' குறித்து தனக்குச் சொன்னதை இவ்வாறு எழுதியுள்ளார்:
”அவர்கள் அந்த மூலிகையை காய்ந்ததாகவோ பச்சையாகவோ எடுத்து நீரில் நன்கு வேகவைக்கின்றனர். இந்தக் கலவையில் ஒன்றோ இரண்டோ கோப்பைகளை காலையில் வெறும் வயிற்றில் எடுத்தால் அது காய்ச்சலை, தலைவலியை, வயிற்று வலியை, அல்லது பக்கவாட்டிலோ, முட்டிகளிலோ ஏற்படும் வலிகளைக் களையும், மேலும் அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சூடாகக் குடிக்க வேண்டும்”
தொடர்ந்து வந்த பதினாறம் நூற்றான்டின் தசாப்தங்களில் கிழக்கிலிருந்து திரும்பி வந்த பல பயணிகளின் தேயிலை பற்றிய சிறு குறிப்புகளை எழுதியுள்ளனர். குறிப்பாக போர்த்துகீசிய வியாபாரிகளும், மறைபரப்பாளர்களும். இருப்பினும் டச்சுக்காரர் ஜான் ஹுயிகன் வான் லின்ஸ்கொட்டென் தான் முதன்முதலாய் தேயிலையை இறக்குமதி செய்யக் காரணமாயிருந்தார். அவரது டிஸ்கோர்ஸ் ஆஃப் வாயேஜஸ் 1595ல் வெளிவந்தது. மூன்றுவருடங்களில் அதன் ஆங்கிலப் பதிப்பும் வந்தது. அதில் அவர் கிழக்கில் போர்ச்சுக்கலின் பரந்த அரசாண்மையை விளக்கியிருந்தார். பல வரைபடங்களும், விவரணப்படங்களும், அங்கிருந்த அதிசயிக்கத்தக்க பொருட்கள் குறித்த தகவல்களும் அதில் அடக்கம். அவர் குறிப்பிட்டவற்றில் ஒரு பொருள் சீனர்களாலும் ஜப்பானியர்களாலும் பயன்படுத்தப்பட்டது. 'சஓனா: ஒரு பானத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர், ஒரு (மண்) பாண்டம் நிறைய சூடான நீர், அதை எவ்வளவு தாங்க முடியுமோ அவ்வளவு சூடாக அருந்துகின்றனர், குளிர்காலமானாலும் கோடையானாலும் சரி'.
1596ல் டச்சுக்காரர்கள் ஜாவாவில் வியாபரத்தைத் துவங்கினர். அங்கு கிடைத்த பொருட்களைத் தவிர சீன, ஜப்பானிய பொருட்களும் ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டன. 1606வாக்கில் முதல் தேயிலை ஏற்றுமதி ஹாலந்தை வந்தடைந்தது. அதற்கும் முன்பே தேயிலையை தனிநபர்கள் கொண்டுவந்திருக்கலாம் என்றாலும் இதுவே முதன்முறையாக வியாபாரத்திற்காக தேயிலை ஐரோப்பாவிற்கு வந்தது.
அடுத்து வந்த தசாப்தங்களில், கிழக்கு நாடுகளில் வியாபாரத்தில் முதன்மையாக இருந்த டச்சுக்காரர்கள் அதன் உதவியுடன் ஐரோப்பாவில் முதன்மையான தேயிலை அருந்துபவர்களாகவும் ஆகினர். ஆயினும் அதன் அசாதாரண விலையின் காரணமாக தேயிலை பணக்காரர்களின் பண்டமாகவே விளங்கியது. விரைவில் அதன் பயன்பாடு அண்டை நாடுகளுக்குப் பரவியது. தனக்கென தனித்த வியாபாரத் தொடர்புகளைக் கொண்டிருந்த போர்ச்சுக்கல்லுக்கும் அது பரவியது. பிரான்ஸில் 1650ல் தேயிலை ஒரு நாகரிகப் பொருளாகியது. கர்தினால் மஜரின் முதல் முதன் மந்திரி பதிமூன்றாம் லூயிஸ் வரைக்கும் அனைவரும் பருகினர். பின்னர் பதினான்காம் லூயிஸ் தேயிலைக்கு அடிமையானார். அவரது தேயிலைப் பாண்டம் தங்கத்தாலானது.
பிரித்தானியர்கள் தேயிலையை மிக மெதுவாகத்தான் கண்டடைந்தனர். 1650க்கு முன்பு அதன் பயன்பாடு குறித்த எந்தத் தகவலுமில்லை. முதல் தரவு 23 செப்டம்பர் 1658ல் மெர்கூரியஸ் பொலிட்டிக்கஸ் எனப்படும் லண்டன் செய்தித்தாளில் வெளியிடப்பட்ட விளம்பரத்திலிருந்து கிடைக்கிறது:
”உன்னதமானதும், எல்லா மருத்துவர்களாலும் அங்கீகரிக்கப்பட்டதுமான சீன பானம், சீனர்களால் ட்ச்சா என்றும் பிற நாடுகளால் தே அல்லது டீ என்றும் அழைக்கப்படும் பானம் லண்டன் ராயல் எக்ஸேஞ்சுக்கு அருகிலிருக்கும் ஸ்வீட்டிங்ஸ் ரென்ட்ஸிலுள்ள சுல்தானெஸ் ஹெட் காபி ஹவுஸில் விற்கப்படுகிறது”.
1652 லண்டனின் முதல் காபி ஹவுஸ் உருவாக்கப்பட்டது. அடுத்த பத்து வருடங்களில் பல காபி ஹவுஸ்கள் உருவாகின. அந்த நூற்றாண்டு முடிவில் பலநூறு கடைகள் உருவாகியிருந்தன. குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்கு ஒரு கடை என்ற கணக்கில் இருந்திருக்கலாம். வியாபாரமும் அரசியலும் பேசப்படுமிடங்களாக அவை இருந்தன. முதலில் காபி மட்டுமே விற்கப்பட்டது பின்னர் சாக்கலேட்டும் தேநீரும் விற்கப்பட்டன. முதல் தேயிலை எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை. ஒருவேளை ஐரோப்பியக் கண்டத்திலிருந்தே வந்திருக்கலாம். ஒருவேளை கிழக்கிலிருந்து திரும்பிவந்தவர்கள் கொண்டுவந்திருக்கலாம்.
காபிக் கடைகள் 'பார்சல்' காப்பியும் தந்தன. சாமுவேல் பெப்பிஸ் அவரது நாட்குறிப்பில் 25 செப்டெம்பர் 1660ல் இவ்வாறு எழுதியுள்ளார்: 'அதன் பின்னர் ஒரு கோப்பை தேநீர் (ஒரு சீன பானம்) வாங்க ஆள் அனுப்பினேன், அதை நான் முன்பு குடித்ததேயில்லை'. மதுக்கூடங்களிலிலும் காபிக்கடைகளிலும் அதிக நேரம் செலவிட்ட பெப்பிஸ், தேநீர் குடித்திருக்கவில்லை என்பது 1660ல் அது ஒரு ஆர்வக்கோளாறாக மட்டுமே இருந்ததைக் காட்டுகிறது.
கேத்தெரீன் ஆஃப் பிரகன்சாதான், அவளது வரதட்சிணைத் தேயிலையைக் கொண்டு, அரசவையில் தேயிலையை அறிமுகம் செய்தாள். அங்கிருந்து அது அலைபோலக்கிளம்பி உயர்குடிகளிடம் பரவியது. முதலில் பணக்காரர்களின் பானமாக இருந்தது பின்னர் நடுத்தர மக்களிடம் வந்தது. அரசியாக அடுத்தவருடம் கேத்தர்ரினின் பிறந்தநாளுக்கு எட்மன்ட் வாலெர் ஒரு கவிதை எழுதினார்:
தேநீர் இரண்டிலும் சிறந்தது, பாடுவாள் அவள் அதன் புகழ்பாக்கள்
அரசிகளில் சிறந்தவள், தளிர்களில் சிறந்தது,
கடன்பட்டிருக்கிறோம் நாம் வழிகாட்டிய அந்த வீர நாட்டிற்கு,
அரசியின் வரதட்சணையுடன் வேறு பரிசுகளும் இருந்தன. ஆப்ரிக்காவின் டாஞ்சியெர் வியாபாரக் குழுமம்; பிரேசிலிலும் கிழக்கிந்தியாவிலும் வியாபாரம் செய்யும் உரிமை - அதற்கு முன்பு அவ்வுரிமை போர்த்துகீசியர்களுக்கு மட்டுமே உரியதாய் அவர்களால் கருதப்பட்டது ; மேலும் பாம்பேயும்(மும்பை) ஒரு பரிசாக வழங்கப்பட்டிருந்தது. பிரித்தானியா தேயிலை வியாபாரத்தில் கொடிகட்டிப்பறக்க இந்தக் கடைசிப் பரிசு பெரிதும் உதவியது.
போர்ச்சுகீசியர்கள் பாம்பே தீவில் 1509ல் தரையிறங்கினர். 'எங்கள் குழு சில பசுக்களையும் புதர்களில் மறைந்திருந்த சில கறுப்பர்களையும் பிடித்தது, அவர்களில் நல்லவை எடுத்துக்கொள்ளப்பட்டன மற்றவை கொல்லப்பட்டன.' தொடர்ந்த தாக்குதல்களுக்குப் பின் ஆட்சியிலிருந்த சுல்தான் 1534ல் ஏழு தீவுகளை போர்ச்சுகலின் அரசருக்கு அளிக்க முன்வந்தார். அங்கிருந்த மீனவர்களும் விவசாயிகளும் வழக்கம்போல செயல்பட்டுக்கொண்டிருந்தனர். மதபோதகர்கள் ஆலயங்களைக் கட்டினர், கோயில்களை மூடச் செய்தனர், மேலும் தீவிலிருந்த மக்களில் பலரை விரும்பச் செய்து அல்லது வற்புறுத்தி கிறித்துவத்தை ஏற்கச் செய்தனர். ஒரு பணக்கார போர்ச்சுகீசியர் பீரங்கிகள் காவல் காத்த சொகுசு வீடொன்றைக் கட்டினார். ஒரு அரச திருமணத்திற்கு அது ஒரு மோசமான பரிசென்றே கருதப்படலாம் ஆனால் பிரித்தானியர்கள் பின்னர் அந்தத் தீவுகளை இணைத்து அதை ஒரு துறைமுகமாக்குவர், அது உலகின் மாபெரும் துறைமுக நகரமாக உருவெடுக்கும். கிழக்கிந்திய கம்பெனி ஏற்கனவே கிராம்வெல்லுக்கு இந்தியாவின் மேற்குக்கடற்கரையில் ஒரு தளம் வேண்டி விண்ணப்பித்திருந்தது. இப்போது இரண்டாம் சார்லெஸ் அதை வழங்கினார். அவர் பாம்பேயை கம்பெனிக்கு 'கிரீன்விச்சிலிருந்த பங்களாவிற்கும் வருடாவருடம் செப்டம்பர் முப்பதாம் தேதி செலுத்தப்பட வேண்டிய பத்து பவுண்ட் (ரூபாய்) மதிப்புள்ள தங்கத்திற்கும்' ஈடாக எழுதித் தந்தார்.
கிழக்கிந்திய கம்பெனி 1600ல் ஒரு வியாபார நிறுவனமாக முதலாம் எலிசபெத் ராணியின் ஆணையின்படி உருவாக்கப்பட்டது. அதற்கு 'இன்டீஸ்' பகுதியில் வியாபாரம் செய்ய முற்றதிகாரம் வழங்கப்பட்டது. இன்டீஸ் என்பது ஆப்ரிகாவின் மேற்குக்கும் தென்னமெரிக்காவின் கிழக்குக்கும் இடைப்பட்ட பகுதி. உடனடியாகவே அதன் கப்பல்கள் இப்போது இந்தோனேசியா என அழைக்கப்படுகிற பகுதிக்கு இலாபம் மிகுந்த மசாலா பொருட்களை வாங்கக் கிளம்பின. அங்கே 'ஃபாக்டரீஸ்' என அழைக்கப்பட்ட வியாபாரக் கூடங்களை அமைத்தது.
1608ல் இந்தியாவின் மேற்குப்பகுதியிலிருந்த சூரத்தை கம்பெனி சென்றடைந்தது. அங்கே சந்தைகள் அரிய பொருட்களால் நிறைந்திருந்தன. முத்துக்கள், வைரங்கள், தங்கம், தந்தம், வாசனைப்பொருட்கள் மற்றும் ஓப்பியம். எல்லாவற்றையும்விட விரும்பத்தக்கவகையில் விதவிதமான இந்தியத் துணிவகைகள் அங்கிருந்தன. இந்தியர்களிடமும், பிரித்தானியர்களிடமும் இல்லாதது ஒன்றே ஒன்றுதான் மசாலாக்கள். உடனடியாக ஆங்கிலேயர் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கும், இன்னும் கிழக்கே சென்று மசாலா பொருட்களுக்கு பண்டமாற்றவும் இந்தியத் துணிகளை வாங்கிக்குவித்தனர். கொஞ்சம் மசாலாக்கள் இந்தியாவில் வாங்கிய துணிகளுக்கு விலையாகத் தரப்பட்டது. மீதம் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதியானது. 1619ல் கம்பெனி சூரத்தில் இந்தியாவின் முதல் 'ஃபாக்ட்டரியை' அமைத்தது.
இரண்டாம் சார்லஸ் பதவியில் மீண்டும் அமர்ந்தபோது கம்பெனி ஒரு சங்கடமான நிலையை எதிர்கொண்டது. காமன்வெல்த்துக்கு உட்பட்டு கம்பெனி வியாபாரம் செய்ய வழங்கப்பட்ட அரசாணையை விட்டுவிட்டு கிராம்வெல்லிலிருந்து பெறப்பட்ட ஆணையின் பெயரில் இயங்கியது. இதனால் கம்பெனி சட்டபூர்வமானதா எனும் சந்தேகம் எழுந்தது. பரிசுகள் தேவைப்பட்டன. அதன்படி அரசருக்கு £3,210 செலவில் ஒரு தட்டும், அவரது சகோதரருக்கு £1,62 மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்பட்டன. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடையாளமாக 1661ல் அரசர் கிழக்கிந்தியாவில் வியாபாரம் செய்துவந்த இலண்டன் வியாபாரிகளின் கம்பெனிக்கும் அதன் ஆளுநருக்கும் 'கிழக்கிந்தியாவிலிருந்து வரும் வியாபாரம் மற்றும் போக்குவரத்திற்கு இதன்பின் என்றென்றைக்கும், முழுமையான, அவர்களுக்கு மட்டுமேயான ' உரிமையை வழங்கினார்.
இரண்டாம் சார்லஸ் மிகவும் நன்றியுடையவராயிருந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர் கம்பெனிக்கு புதிய, அசாதாரண அதிகாரங்களை வழங்கினார். கம்பெனி தனது சொந்த போர்க்கப்பல்களையும், வீரர்களையும், ஆயுதங்களையும் பயன்படுத்தவும் அதன் படைத்தலைவர்களுக்கு 'அவர்கள் வியாபாரம் செய்யும் பகுதிகளில் (கிறித்துவரல்லாத) சிற்றரசர்களுடனோ மக்களுடனோ மேற்குறிப்பிட்ட ஆளுனர் அல்லது கம்பெனிக்கு சாதகமாகும் வகையில் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ளவோ அல்லது போர் புரியவோ; அல்லது தங்கள் குடியிருப்புக்களைப் பாதுகாக்க காவற்படைகளை அமைத்துக்கொள்ளவோ' அதிகாரம் வழங்கப்பட்டது. இச்சலுகைகளைக்கொண்டு கிழக்கிந்திய கம்பெனி உலகிலேயே சக்திவாய்ந்த 'கார்ப்பரேட்' ஆக மாறும் திறன் பெற்றது, பன்னாட்டு தேயிலை வணிகத்திலும் வலுமிக்கதாய் மாறவிருந்தது.
--------------------------
17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்துக்குள் தேயிலை இறக்குமதி சிறிய அளவிலேயே இருந்தது. 1664ல் கம்பெனி 100பவுண்ட் தேயிலையை முதன் முதலாக சீனாவிடமிருந்து வாங்கியது. ஜாவாவிலிருந்து அது ஏற்றுமதியாகும். வருடாந்திர அறிக்கைகளின்படி மூன்றிலக்க அளவிலேயே வாங்கப்பட்டது. 1678ல் 4,713 பவுண்ட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பல வருடத் தேவைக்கதிகமான அளவு இது. 1685ல் 12,070பவுண்டுகள் வாங்கப்பட்டன. அதுவும் தேவைக்கதிகமானதாயிருந்தது. அந்த நூற்றாண்டின் இறுதிவரை இவ்வாறு அதிகமான அளவு இறக்குமதி செய்வதும் சந்தையில் பொருள் மிகுதியாகக் கிடைப்பதுமாயிருந்தது. 1690ல் 38,390 பவுண்ட்கள் இறக்குமதியாயின ஆனால் 1699ல் 13,082பவுண்ட்கள் மட்டுமே இறக்குமதியாயின.
கம்பெனி தேயிலை ஏலத்தை 'மெழுகுதிரியைக் கொண்டு' நடத்தியது. ஒரு மெழுகு திரி கொளுத்தப்பட்டும். அது ஒரு அங்குலம் எரிந்து முடியும்வரைக்கும் ஏலங்கள் ஏற்கப்பட்டன. சந்தையில் தேயிலை வரத்து மேலும் கீழுமாகச் சென்றுகொண்டிருந்ததால் விலையும் மேலும் கீழுமாகச் சென்றது. 1673ல் சராசரி விலை பவுண்டுக்கு £1.19 ஆனால் 1679ல், 1678ல் தேயிலை அதிக அளவில் இறக்குமதியானபின்பு 1679ல் 7பென்ஸ்கள் (பிரித்தானிய பைசா) மட்டுமே இருந்தது.
தேயிலை விற்பனை வரியின்மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. 1660 முதல் 1689வரை கடைகளில் விற்கப்பட்ட தேநீர் மீது பானம் எனும் வகையில் வரி விதிக்கப்பட்டது. ஒரு கேலனுக்கு 3பென்ஸ். இந்த முறை கடினமானது மட்டுமல்ல தேநீரின் மணத்துக்கு அது பாதகமாய் அமைந்தது. வரி வசூலிப்பவர்கள் ஒரு நாளைக்கு இருமுறையே கடைகளுக்கு வந்தனர். ஆகவே தேநீர் பேரல்களில் அடைத்து வைக்கப்பட்டு வேண்டும்போது சூடாக்கி வழங்கப்பட்டன. 1689 முதல் தேயிலைக்கு நேரடியாக வரி விதிக்கப்பட்டது. முதலில் இவ்வரி பவுண்டுக்கு 25பென்ஸ் என்ற கணக்கில் அதிகமானதாயிருந்தது. கிட்டத்தட்ட விற்பனை நின்றுபோய்விட்டது. 1692ல் அது பவுண்டுக்கு 5பென்ஸாக குறைக்கப்பட்டது. பின்னர் வந்த பல போர்களுக்கு செலவிட பணம் தேவைப்பட்டதால் மீண்டும் அது உயர்ந்து 1711ல் பழைய வரிக்கே வந்தது.
சில்லறை விற்பனை விலை ஏலத்திலும் வரிவிதிப்பிலும் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளால் மிகவும் பாதிக்கப்பட்டது. அதேபோல தேயிலையின் தரமும் இதில் பங்குவகித்தது. இருக்கும் தரவுகளின்படி பதினேழாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் அதன் விற்பனை விலை பவுண்டுக்கு £3ஆக இருந்தது. நூற்றாண்டின் இறுதியில் அதன் விலை பவுண்டுக்கு £1. இந்த விலையில் பணக்காரர்கள் மட்டுமே தேயிலை அருந்த முடிந்தது ஏனென்றால் அப்போது ஒரு கைதேர்ந்த தொழிலாளருக்கு வாரம் £1 கிடைத்தால் அவர் அதிர்ஷ்டசாலி. அதே போல சாதாரண கூலிவேலைக்கு 40பென்ஸ்கள் கிடைப்பதே அரிது.
விலை அதிகமாயிருந்தும் அதிக மக்கள் தேநீர் அருந்தியிருந்தனர். ஏனென்றால் தேநீர் ஒரு பானமாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது. முன்பு இங்கே குறிப்பிடப்பட்ட பெப்பிஸ், 1667ல் வீடு திரும்புகையில் அவர் மனைவி தேநீர் தயாரித்துக்கொண்டிருந்தார். திருவாளர் பெல்லிங் இது சளிக்கும் இழுப்புக்கும் நல்ல மருந்தென்று சொல்லியிருந்தார்'.
தாமஸ் காரவே தேயிலையை பானமாகவும், இலையாகவும் லம்பார்ட் தெருவிலிருந்து பிரிந்த எக்சேஞ் சந்தில் அவரது காபிக்கடையிலிருந்து விற்றுக்கொண்டிருந்தார். 200 வருடங்களுக்கும் மேலாய் அந்தக் கடை இருந்தது. அந்த இடத்தில் தற்போது ஒரு நினைவுத் தகடு பொறிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வெட்டுக்கிளி சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. 1660 வாக்கில் 'தேயிலை வளர்ப்பு, அதன் தன்மைகள் மற்றும் நன்மைகள் குறித்த துல்லிய விவரணை' எனும் தலைப்பில் எழுதப்பட்ட ஒரு அழுத்தமான கட்டுரையில் காரவே கீழுள்ளவாறு தேயிலையின் நன்மைகளை புகழ்பாடுகிறார்:
- அது உடலை உற்சாகத்துடனும் இச்சையுடனும் வைத்துள்ளது.
- தலைவலிக்கும் தலைச்சுற்றுக்கும் தலைக்கனத்திற்கும் சுகமளிக்கிறது.
- மண்ணீரலில் ஏற்படும் தடைகளை நீக்குகிறது.
- சர்க்கரைக்கு மாற்றாக கலப்படமற்ற தேனுடன் உண்டால் சிறுநீரங்களையும், சிறுநீர்க்குழாய்களையும் சுத்தம்செய்து சிறுநீற் கற்களை அகற்றுவதிலும் வல்லதாகும்.
- தடைகளை அகற்றி சுவாசத்தை எளிமையாக்குகிறது.
- கண்களில் நீர் வருவதை குறைத்து பார்வையை தெளிவடையச்செய்யும்.
- ஈரலையும் சுத்தப்படுத்துகிறது.
- நரம்புகளின் அல்லது வயிற்றின் தளர்ச்சியை நிவர்த்தி செய்து வலுவாக்கி, நல்ல பசியையும் செரிமானத்தையும் தருகிறது, குறிப்பாக குண்டானவர்கள் அல்லது அதிக மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு இது உதவும்.
- தீவிரக் கனவுகளை இது அழிக்கிறது, மூளையை இலகுவாக்குகிறது, நியாபகசக்தியை அதிகரிக்கிறது.
- உறக்கமின்மையை குணமாக்குகிறது பொதுவான அயர்ச்சியை குறைக்கின்றது, ஒரு கோப்பை குடித்தால் போதும் இரவுகளிலெல்லாம் விழித்திருந்து படித்துக்கொண்டிருக்கலாம், உடம்பைக் கெடுக்காமல்.
- குளிர் ஜுரங்களைத் தடுக்கிறது, குணமாக்குகிறது, தேநீரைக் குடித்துவிட்டு மிக மென்மையான வாந்தியைத் தூண்டி அதன் வாடையை முகர்ந்தால் வெற்றிகரமாக இதை உணரமுடியும்.
- பாலையும் தண்ணீரையும் கொண்டு செய்யப்படும்போது இது உள்ளுறுப்புகளை வலுவாக்குகிறது, உணவு உண்பதைக் குறைக்கிறது, குடலின் வலிகளை அல்லது வயிற்றுப் பிடிப்பை அல்லது தளர்ச்சியை நீக்குகிறது.
- சரியாக எடுத்துக்கொண்டால் உடலில் நீர் பிடிப்பிற்கும் ஸ்கர்வி போன்றவற்றிற்கும் நல்லது, இரத்தம் மற்றும் சிறுநீரின் வழியாக நோய்த்தொற்றை வெளியேற்றுகிறது.
- வாயுவினால் ஏற்படும் வலிகளை நீக்குகிறது, பித்தப்பையைப் பாதுகாப்பாக சுத்தம் செய்கிறது.
1682ல் எழுதப்பட்ட ஜான் சேம்பர்லினுடைய 'காஃபி, தேநீர், சாக்கலேட், புகையிலையின் வரலாறு' புத்தகத்தில் இவரைப்போல பல தேநீர் ஆர்வலர்களை மேற்கோள்காட்டி தேநீரை '(உடல்) வறட்சியை உருவாக்குவது, வயோதிகத்தை வருத்துவது, ஐரோப்பிய பானங்களுக்கு அந்நியமானது' என விலக்கும் விமர்சகர்களை புறம்தள்ளுகிறார். சேம்ப்பர்லின் தேநீரை ஒரு ஊக்கியாக முன்வைக்கிறார் 'அது நம்மை உற்சாகமாகவும் உயிர்ப்புடனும் வைக்கிறது, தூக்கத்தை விரட்டுகிறது, அதைக் குடிப்பவர்கள் அறிவார்ந்தவர்களே' கேஃபீனின் விளைவுகளும், தேநீரின் மருத்துவ பலன்கள் அல்லது அதன் மோசமான விளைகள் குறித்த விவாதங்களும், அடுத்த நூற்றாண்டில் தீவிரமடைந்தன.
1699ல் ஜான் ஓவிங்டன் தேநீர் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார் 'அண்மையில் அதைக் குடிப்பது இங்கே வழக்கத்துக்கு மிகவும் மாறாக உள்ளது, வித்தகர்களும் வியாபாரிகளும் இதைக் குடிக்கின்றனர். இது அரசவையின் தனிவிருந்துகளிலும், பொதுமக்களுக்கான கேளிக்கையிடங்களிலும் அருந்தப்படுகிறது'. இருப்பினும் அந்த நூற்றாண்டின் கடைசி வருடத்தில் வெறும் 13,082 பவுண்டுகளே தேயிலை இறக்குமதி செய்யப்பட்டதென்பது தேயிலை இன்னும் ஒரு புதிய வினோதமாக இருந்ததையே காண்பிக்கிறது.
--------------------------
மொழிபெயர்ப்பு: சிறில் அலெக்ஸ்
நன்றி - கிழக்கு பதிப்பகம்.
இக்கட்டுரை கிழக்கு பத்திப்பகம் வெளியிட்ட ‘தே: ஒரு இலையில் கதை‘ என்ற நூலிலிருந்து வெளியிடப்பட்டது.
ராய் மாக்ஸம் (1939): வரலாற்று எழுத்தாளர். இவரின் புகழ்பெற்ற The great hedge of India, A brief history of tea, The Theft of India: The European conquests of India ஆகிய நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. The Freelander என்ற நாவலும் எழுதியுள்ளார்.
சிறில் அலெக்ஸ்: தமிழ் மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர். ராய் மாக்ஸமுடைய உப்புவேலி, 'தே: ஒரு இலையின் கதை' ஆகிய நூல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வந்துள்ளது.