குருகு இதழ் ஓராண்டை நிறைவு செய்திருக்கின்றது, எழுத்தாளர்களும் வாசக நண்பர்களும் தங்களது வாழ்த்துக்களை அனுப்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களது அன்பு. குருகு இதழின் ஓராண்டு செயல்பாட்டை மதிப்பிடும்படி உள்ள இந்தப்பார்வைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்
“சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது” எனத் தம் கவிதை பற்றிக் குறிப்பிடுவார் பாரதியார். அதேபோல எல்லா வகையிலும் புதுமையாகச் சற்று வேறுபட்ட இலக்கிய இதழாகப் பயணம் செய்து கொண்டு இருக்கிறது குருகு இணைய இதழ். சிறப்பான பயணக் கட்டுரைகள், கனமான தத்துவ உரையாடல்கள் போன்றவை இந்த இதழின் சிறப்பியல்புகள். கலை, தத்துவம், வரலாறு என்பனவற்றைத் தன் முகப்பில் தாங்கி வரும் குருகு மேற்கண்ட மூன்றிலும் பலப் புதிய கருத்துகளைத் தாங்கி வருகிறது. இதழ் அமைப்பும் படைப்புகளுக்கேற்ற படங்களைத் தேடிப்பிடித்து வெளியிடும் உழைப்பும் பாராட்டத்தக்கவை.
அனங்கன் கட்டுரையின் நடை படிக்கச் சலிக்காமல் செல்கிறது. அவர் வாகனத்திலேயே நாமும் பயணிப்பது போல நம்மை அழைத்துச் செல்கிறார். எருதின் தடம்—3-இல் குந்தவை பற்றிய செய்திகள் புதியவையாகும். வீமன் குந்தவை, பொன்னியின் செல்வன் குந்தவை, விமலாதித்தன் மனைவி குந்தவை என்னும் மூன்று குந்தவைகளக் காட்டுகிறார். அவர்களுள் அதிகம் பேசபப்டும் பொன்னியின் செல்வன் குந்தவை மால், அரன், அருகர் ஆகிய மூவருக்கும் தலா ஒரு கோயிலெழுப்பி இருக்கிறார் என்று அனங்கன் எழுதுகிறார்.
போளூர் போகும் வழியில் பார்த்த யோக ராமர் பற்றியது புதிய செய்தியாகும். மேலும் பல சமணத்தலங்களிலும் தருமதேவி கையில் மலருடன் குடிகொண்டிருப்பதும் அறிய வேண்டிய அரிய செய்தி.
இதழ்-10-இல் வந்துள்ள ஜெயமோகனின் “நவீன மொழியியல் ஓர் அறிமுகம் என்னும் கட்டுரை மிகவும் கனமான கட்டுரையாகும். 8-4-23-இல் வெளிவந்துள்ள ஓ.ரா,ந. கிருஷ்ணன் அவர்களின் நேர்காணல் பல புதிய செய்திகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. எந்தவிதப் பாசாங்கும் இல்லாத நேர்காணல் அது. “பௌத்தம் மீண்டும் இந்தியாவில் எழ வாய்ப்பில்லை; அவ்வளவு ஆழமாக இந்துமதம் இங்கே வேரூன்றி விட்டது” என்று வெளிப்படையாக, நேர்மையாக அவர் பேசி இருக்கிறார்.
அதேபோல தியோடர் பாஸ்கரனும் நம்மைப் பற்றிய கருத்தைத் துணிவாகக் கூறுகிறார். “சூழலியல் பற்றிப் பேசிக் கொண்டே மறுபுறம் அதைச் சீரழிக்கிறோம்”என்று அவர் 5-3-23 –இல் வெளியான இதழில் பேசுகிறார்.
புதுவை தாமரைக்கண்ணனின் செவ்வேள் ஆடல் கட்டுரையில் அவர் உழைப்பு தெரிகிறது. அனிருத்தனை மீட்கக் கன்ணன் குடக் கூத்தாடினான் என்பதுதான் அனைவரும் அறிந்த பொதுவான செய்தியாகும். கண்ணன், இலட்சுமி, பிரத்தியும்னன், துர்க்கை, இந்திராணி ஆகிய அனைவருமே நடனமாடினார்கள் என்று 30-12-23- இதழ் காட்டுகிறது.
அவிநாசி தாமரைக்கண்ணன் எழுதியுள்ள ”கிறிஸ்துவின் சித்திரங்கள்” என்னும் கட்டுரை [30-12-23] மிக முக்கியமானது. இதுவரை அதிகம் வெளிக்கொண்டு வரப்படாத பல ஓவியங்களை அக்கட்டுரையில் காட்டியிருக்கிறார். குறிப்பாக 17-ஆம் நூற்றாண்டில் ஸ்பானிஸ் ஓவியர் வெல்ஸ்குவேஸ் வரைந்த ஓவியம் முக்கியமானது. இயேசு மீது சித்ரவதை இல்லை. ஆனால் அவரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. தசை பிய்ந்து தெறித்துக் காணப்படுகிறது. இது பார்ப்பவருக்குப் பரிவை உண்டாக்குகிறது. அதில் கீழே மண்டியிடும் சிறுவன் மனித ஆன்மாவின் குறியீடு என்று கட்டுரை ஆசிரியர் கூறுகிறார்.
இது போல இதுவரை நாம் பார்க்காத அரிய சிலவற்றையும், இதுவரை நமக்குத் தெரியாத பல ஆன்மிக, தத்துவ, வரலாற்றுக் கருத்துகளையும் நமக்குப் படைத்தளிப்பதுதான் குருகு இதழின் மகத்தான பங்களிப்பாகும். அதற்காக இந்த இதழின் ஆசிரியர் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கதை, கவிதை போன்றவற்றைத் தாங்கி வரும் இதழ்களைக் கூடத் தொடர்ந்து நடத்திவிடலாம். ஆனால் இது போன்று தனக்கென ஒரு தனிக் குறிக்கோளைக்கொண்டு வெளிவரும் இதழ் ஒன்றினைத் தொடர்ந்து நடத்துவது ஒரு பெரிய வேள்வி செய்வதற்கு ஒப்பாகும். ”குருகு” இதழின் பணி தொய்வின்றித் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
************
தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் எண்ணற்ற இதழ்கள் வருவதும் போவதுமாக இருந்துள்ளது. அதில் ஒரு சில இதழ்களின் பெயர்கள் காலத்தைத் தாண்டி நீடித்திருப்பதற்கு முக்கிய காரணங்கள் என அதன் நோக்கம், உள்ளடக்கம் மற்றும் செயல்பாடுகளை கூறிப்பிடலாம். இணைய இதழ்களின் வருகைக்குப் பிறகு சிற்றிதழ்களின் போக்கில் உருவாகிவந்துள்ள மாற்றங்களையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனால், அன்று முதல் இன்று வரை அச்சு மற்றும் இணையச் சிற்றிதழ்கள் என்பவை பெரும்பாலும் புனைவு இலக்கியத்தையே பிரதானமாகக் கொண்டு இயங்கி வருகின்றன. அதில் வெளிவரும் கட்டுரைகள் பெரும்பாலும் புனைவுச்சார்ந்தே இருக்கின்றன. விதிவிலக்காக எப்போதாவது வெவ்வேறு கலை வடிவங்கள் பற்றிய கட்டுரைகள் படைப்புகள் வந்திருக்கலாம். ஆனால், முழுமையாக அப்படி செயல்பட்டவைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதில் சிலருக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். சிலருக்கு புனைவு சார்ந்து இயங்குவது மட்டுமே விருப்பமாகவும் இருக்கலாம். யாரையும் குறைகூறுவது நோக்கமல்ல.
குருகு இணைய இதழ் அந்த வகையில் தனித்துவமான ஒன்றாக இயங்கிவருகிறது. கலாச்சாரம், பண்பாடு, சிற்பம், ஓவியம், முக்கியமாக தொல்லியல் சார்ந்த விஷயங்களைப் பற்றி முக்கிய உரையாடல்களை தமிழ் சமூகத்தில் தொடர்ந்து நிகழ்த்த முயன்றுகொண்டிருக்கிறது. அதற்காக அவர்கள் செலுத்தும் உழைப்பு போற்றத்தக்கது. குறிப்பாக தென் இந்தியாவின் வரலாறு, தொல்லியல், சிற்பம், நடனம் சார்ந்த பல்வேறு கலைஞர்களின் நேரடியாக சென்று உரையாடி வெளியிட்டுள்ள நேர்காணல்கள் தனித்துவமான ஒன்றாகவே நினைக்கிறேன்.
இந்தியாவின் பழமையான கலாச்சார விஷயங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு அதன் வரலாறு மற்றும் உண்மைத்தன்மையை மடைமாற்றுவதாற்கான வேலைகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சூழலில் (இது அனைத்து மதம், மக்கள், மொழி ஆகியவற்றிற்கும் பொருந்தும்) குருகு மாதிரியான இதழ்களின் முக்கியத்துவம் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
தொடர்ந்து செயல்படும் குருகு குழுவிற்கு எனது அன்பும் வாழ்த்துகளும்.
*****
குருகு இணைய இதழ் ஒராண்டை நிறைவு செய்திருக்கிறது. இணைய இதழ்கள் புற்றீசல்கள் போல பெருகிவரும் இச்சூழலில் குருகு ஒரு வருடத்திலேயே தனக்கென ஒரு தனித்த கண்ணியமான இடத்தை பெற்றிருக்கிறது. இதழ் வடிவமைப்பு, உள்ளடக்கம் ஆகியவை மிகச் சிறப்பாக இருக்கின்றன. இணைய இதழ்களில் பல வருடங்களாக தொடர்ந்து எழுதி வருபவள் என்னும் முறையில் குருகுவின் சிறப்பம்சங்களாக நான் கருதுபவை:
1. ஆசிரியர் குழுவின் அர்ப்பணிப்பு
படைப்புக்களின் பொருட்டு தொடர்ந்து பயணிப்பது, படைப்பாளிகளுடன் மிக மரியாதையான தொடர்பில் இருப்பது, தேவைப்படுகையில் நேரில் பிரபலங்களை சந்திப்பது இவற்றை குருகு ஆசிரியர் குழுவினரை போல பிறர் செய்து நான் கேள்விப்பட்டதில்லை.
2. பிரசுரமாகும் படைப்புகளின் எண்ணிக்கை
பல இணைய இதழ்களைப் போல பல கட்டுரைகளை ஒரேயடியாக குருகு பிரசுரிப்பதில்லை. எத்தனை முக்கியமானவைகளாக இருப்பினும் ஒரே இதழில் ஏராளமான கட்டுரைகள் வருகையில் அவற்றில் பெரும்பாலானவைகளை வாசிக்க முடியாமல் போய்விடும் சாத்தியங்கள் அதிகம். குருகுவில் வெளியாகும் கட்டுரைகள் சலிப்பேற்படுத்தும் அளவில் இல்லாமல் சுவாரஸ்யமாக வாசிக்க சாத்தியமான எண்ணிக்கையிலும், தரத்திலும் மட்டுமே வெளியாகின்றன.
3. குருகுவில் பங்களித்திருப்பவள் என்னும் முறையில் மற்றுமோர் இன்றியமையாத சிறப்பம்சமாக ஆசிரியர் குழு படைப்பாளிகளை அணுகுவதும் படைப்பை பெறுவதற்கான அவர்கள் கையாளும் வழிமுறைகளும் படைப்பாளிகளுடனான் அவர்களின் தோழமை நிறைந்த தொடர்பையும் சொல்லுவேன்.
குருகுவில் பிரசுரமாவதற்கான கட்டுரைகளை மிக தோழமையும் மரியாதையுமாக அணுகிப் பெறுகிறார்கள். தேவைப்படும் சில திருத்தங்களை அனுமதியுடன் செய்துவிட்டு நிறைகளை படைப்பாளியிடம் தெரிவிக்கிறார்கள் இது மிகவும் வரவேற்கத்தக்கது. பல இணைய இதழ்களில் ஒருவழிப்பாதைதான். ஒருபோதும் அவர்கள் கட்டுரைகளை வாசிப்பதும் கருத்துச்சொல்வதும், பாராட்டுவதும் திருத்தங்கள் சொல்லுவதும் இல்லை. குருகு அந்த விதத்தில் மிக பாராட்டுக்குரியது.
4. குருகுவின் சிறப்பிதழ்கள்
இதுவரை வெளியாகி இருக்கும் சிறப்பிதழ்கள், குறிப்பிட்ட இலக்கிய ஆளுமையை மிகவும் பெருமைப்படுத்தும் விதமாக முழுமையாக அவர் குறித்த ஒரு பெருஞ்சித்திரத்தை அளிப்பதாக அமைந்திருக்கிறது.
‘குருகு’ என்னும் கச்சிதமான, நினைவில் நிற்கும், இலக்கிய பரிச்சயமுள்ளவர்களால் எளிதில் அடையாளம் காணமுடியும் பறவையொன்றின் ஒரு சொல்லிலான பெயரும் அதன் ஒற்றைப்பூஞ்சிறகும் லோகோவில் இருப்பதும் சிறப்பு.
இனி வரும் இதழ்களில் வாசக எதிர்வினைகளுக்கான ஒரு பக்கம் இருந்தால் நல்லது. குருகு இணைய இதழ் மேலும் சிறப்பாக பல தளங்களிலும் விரிவான படைப்புக்களுடன் வளரட்டும் .
அன்பும் ஆசிகளும் ஆசிரியர் குழுவினருக்கு!
*********
அழகிய மணவாளன், மொழிபெயர்ப்பாளர்
இன்றைய நவீனத்தமிழ்ச்சூழலில் ஒருபக்கம் பண்பாடும், வரலாறும் மிகையாக அரசியல்படுத்தப்பட்டுவிட்டன. பௌத்த சிந்தனை என்றவுடன் உடனடியாக இந்து மதத்தின் சாதியமும் ஒடுக்குமுறையும் என்று பேச ஆரம்பிக்கிறார்கள். சூழலியல் என்று சொன்னவுடன் உடனடியாக முதலாளித்துவ சதி என்று சொல் காதில் விழுகிறது. இன்னொருபக்கம் சமூக ஊடகங்கள் மொழி சார்ந்தும், பண்பாடு சார்ந்தும் அறிவியல்நோக்கு அற்ற பெருமிதங்களையும், முன்முடிவுகளையும் மிகையுணர்ச்சியையும் ஆய்வுகள் என்ற பெயரில் முன்வைக்கின்றன. கலை, பண்பாடு, மதம் சார்ந்த ஆய்வுகளில் அந்தந்த துறைகளின் தர்க்கப்பூர்வமான ஆய்வுமுறைமைகளுடன், எந்த அரசியல்படுத்தலும், முன்முடிவும் இல்லாமல் அசலான பங்களிப்பாற்றிய ஆய்வாளர்கள் நினைவுகூறப்படுவதே இல்லை. அவ்வாறு மறக்கப்பட்ட, அரசியல் இயக்கங்கள் நினைவுகூற விரும்பாத, அரசியல்படுத்தப்படமுடியாத, மிகைப்படுத்திவிடமுடியாத அசலான ஆய்வாளர்களை முன்னிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் தமிழ்ப்பண்பாடு சார்ந்தும், வரலாறு சார்ந்தும் அறிமுகப்படுத்திக்கொள்ள விழையும் ஒருவர் இயல்பாகவே சமூக ஊடகங்களும், அரசியல் இயங்களும் உருவாக்கிய வெளியில் சிக்கிக்கொள்ளவே வாய்ப்பு மிகுதி. கீழடி அகழ்வாராய்சி சார்ந்து தெரிந்துகொள்ள விழைபவர் மிக சீக்கிரமே மிகையான தமிழ்ப்பெருமித உணர்வு கொண்டவராக அவர் அறியாமலேயே ஆகிவிட்டிருப்பார்.
அந்தவகையில் குருகு இதழின் பணி இன்றியமையாதது என்று நினைக்கிறேன். சமூக ஊடகங்களும், அரசியல் இயக்கங்களும் உருவாக்கிய மாயச்சூழலால் மறக்கப்பட்டுவிட்ட ஆய்வாளர்களின் கட்டுரைகளையும், அவர்களின் நேர்காணலையும் வெளியிட்டிருக்கிறார்கள். குருகு இதழில் வெளிவந்த பா.ஜம்புலிங்கம் என்ற வரலாற்றாய்வாளரின் நேர்காணல் வழியாகத்தான் வரலாற்றாய்வு முறைகள் மட்டுமல்ல அவற்றின் எல்லையையும் அறிந்துகொண்டேன். குருகு இதழில் வெளிவந்த தியோடர் பாஸ்கரின் நேர்காணல் வழியாக நம்மிடம் சூழியல் மிகையான பேச்சு மட்டுமாகவே இருக்கிறது, நம் செயல்பாடுகள் நம் சூழியல் பிரக்ஞையின்மையையே காட்டுகிறது என்ற விந்தையை உணர்ந்துகொள்ள முடிந்தது.
குருகு இதழின் பரப்பு மிக அதிகம். மானுடவியல் தொடங்கி சிற்பவியல், வரலாற்றாய்வு, மொழியியல், மதம், தத்துவம் என எல்லா அறிவுத்துறைகளின் முன்னோடிகளை அறிமுகப்படுத்தும் சிறப்பிதழ்கள் வெளிவந்திருக்கிறது. கூடவே அறிவியலின் இயங்குமுறை என்ன, அதன் அடிப்படைத்தத்துவம், அவை உருவாகி வந்த வரலாறு இவற்றை விளக்கும் தத்துவவாதி சமீர் ஒகாஸாவின் கட்டுரைகள் நல்ல மொழிபெயர்ப்பில் தொடராக வெளியாகின்றன. நவீன வாசகனுக்கு அடிப்படைத்தேவையான அறிவியல்நோக்கை உருவாக்கிக்கொள்ளவும், மிக எளிதாக நாம் சென்றுசேர வாய்ப்புள்ள போலி அறிவியல்தன்மையிலிருந்து (pseudoscience) காத்துக்கொள்ளவும் இந்த மொழிபெய்ர்ப்பு கட்டுரைத்தொடர் உதவும் என்று எனக்கு தோன்றுகிறது. அதுபோக குருகு ஆசிரியர் புதுச்சேரி தாமரைக்கண்ணன் சிற்பவியல், ஓவியங்கள் வழியாக முருகன் என்ற தெய்வ உருவகம் எப்படி உருவாகி வளர்ந்தது என்ற சித்திரத்தை அளிக்கும் கட்டுரைத்தொடரும்; குருகு ஆசிரியர் அவிநாசி தாமரைக்கண்ணன் கிருஸ்துவின் பழைய, நவீன ஓவியங்கள் வழியாக கிருஸ்துவின் உருவகங்கள் எப்படி உருமாறி, பரிணாமம் அடைந்து வந்திருக்கிறது என்பதை விளக்கும் கட்டுரைத்தொடரும் நான் விரும்பி வாசிக்கும் தொடர்கள்.
*********
நவீன தமிழிலக்கிய சூழலில் தீவிர இலக்கியத்தை முன்னிறுத்தி பல்வேறு தரப்புகளை பிரதிபலிக்கும் குரல்களை வெளிப்படுத்தும் இதழ்கள் ஏராளம் உள்ளன. இந்த இதழ்களில் பிரதான இடம் இலக்கியத்துக்கே என்பதால் பிற அறிவுத்துறைகள் சார்ந்து பொதுவாசகன் வாசித்து அறிந்து கொள்வதற்கான தீவிர இதழ்கள் குறைவே. அந்த வகையில் இணையத்தில் வெளியாகும் மின்னிதழ்களில் குருகு தனி இடத்தை கொண்டுள்ளது.
கடந்த ஓராண்டாக நடத்தப்படும் குருகு கலை வரலாறு தத்துவம் ஆகிய தளங்களில் தீவிரமான விஷயங்களை அறிமுகம் செய்து விவாதிக்கும் பரப்பை உருவாக்கும் களமாக தன்னை நிலைநாட்டி கொண்டுள்ளது. இது மேலும் தொடர வேண்டும் என்பது வாசகனாக என்னுடைய எதிர்பார்ப்பு.
இலக்கிய வாசகனாக இலக்கியத்துக்கப்பால் இலக்கிய ஆக்கங்களின் பேசுப்பொருட்களுக்கான களங்களை அமைத்து கொடுக்கும் தத்துவ, வரலாறு, கலைத்துறைகளில் எப்போதும் ஓர் மெல்லிய ஆர்வம் கொண்டவனாக இருக்கிறேன். இந்த அறிதல்கள் படைப்புகளை ஆழ்ந்து வாசிக்க மேலும் உதவுகிறது. மேலும் அறிவுதளத்தில் வெவ்வேறு துறை அறிமுகங்கள் அறிவியக்கத்தில் ஈடுபட வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுக்கிறது. அந்த வகையில் குருகு இதழ்களின் வாயிலாக நிறைய அறிமுகங்களையும் கற்றல்களையும் அடைந்தேன் என்றே சொல்ல வேண்டும்.
தத்துவம் சார்ந்த பகுதியில் ஆனந்த் ஶ்ரீனிவாசன் அவர்கள் மொழிப்பெயர்ப்பில் வெளியான குரு நித்ய சைதன்ய யதியின் தெய்வ தசகம் தொடர் எப்போதும் ஆர்வமுடன் படிக்கும் பகுதிகளில் ஒன்று. இன்று வரை அப்பகுதியின் கதவுகளை தட்டுபவனாகவே உள்ளேன். திறந்து செல்ல இன்னும் கற்க வேண்டும். அந்த கற்றலுக்கான ஊக்கத்தையும் நம் மரபில் நாரயண குரு போன்ற ஞானியர்கள் அத்வைதத்தின் உருவகங்களை காலத்திற்கேற்ப மறு ஆக்கம் செய்து ஆழப்படுத்தியுள்ளனர் என்பதை புரிந்து கொள்ளமுடிந்தது. இன்னொருபுறம் அவிநாசி தாமரைக்கண்ணனின் மொழிப்பெயர்ப்பில் வெளியாகும் சமீர் ஒகாஸாவின் அறிவியல் தத்துவம் பகுதிகள் வழமையாக நம் கல்விமுறையில் அறிவியல் என்பதை தொழில்நுட்பம் என புரிந்து கொள்வதை தாண்டி அதன் சாரமான அடிப்படை கேள்விகளும் அவற்றில் இருந்து எழும் சிக்கல்களையும் அறியவும் விளங்கி கொள்ளவும் வழி திறந்து கொடுத்தது.
கலை சார்ந்த பகுதிகளில் புதுச்சேரி தாமரைக்கண்ணனின் ஆடல் தொடரையும் இராமநாதனின் செட்டிநாட்டு நகரத்தார் வீடுகள், அணிகலன்கள் குறித்த கட்டுரை தொடரும் அவிநாசி தாமரைக்கண்ணனின் மொழியாக்கத்தில் வெளியான ஆனந்த குமாரசாமியின் ராஜபுத்திர ஓவியங்கள் குறித்த கட்டுரை தொடரும் என் வாசிப்பில் முக்கியமாகப்பட்டன. ஆடல் கட்டுரை தொடரில் உள்ளம் விட்டு வாசித்த இரண்டு பகுதிகள் ஞானசம்பந்தர் குறித்தும் சோமஸ்கந்தர் படிமம் குறித்தும் அமைந்த கட்டுரைகள். ஞானசம்பந்தரின் சித்திரம் எப்படி சைவ இலக்கியத்தில் தனித்து வளர்ந்து நிற்கிறது என்பதை சிலைகள் கல்வெட்டுகள் இலக்கியங்கள் என விளக்குவதும் சோமஸ்கந்தர் படிமத்தின் வளர்ச்சி பரிணாமத்தை தொட்டு விரித்து எழுவதும் புதிய உலகை அறிமுகப்படுத்திய நல்ல கட்டுரைகள். ஆனந்த குமாரசாமியின் ராஜபுத்திர ஓவியங்கள் குறித்த கட்டுரை ஓவிய உலகத்தில் இந்திய ஓவியங்களின் தனித்தன்மை சார்ந்தும் அதில் ராஜபுத்திர நில அமைப்பு சார்ந்த தனித்துவம் ஆகியவற்றை அறிய தந்தது. இராமநாதன் எழுதிய நகரத்தார் குறித்த கட்டுரைகள் உள்ளூர் கலை வெளிநாட்டு தொடர்புகளால் பாதிக்கப்பட்டு வளர்ந்துள்ள உதாரணத்தின் அண்மைக்கால நிகழ்வாகவும் வெறும் பெயராக மட்டுமே என் செவிகளில் ஒலித்த சமூகத்தை குறித்து பார்வைகளை உருவாக்கவும் வழிக்கோலியது.
இதற்கு அடுத்தபடியாக குருகு இதழ்களின் நேர்க்காணல் பகுதியை தனியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும். நேர்காணலுக்கான கேள்விகளை மிகுந்த சிரத்தையுடன் தயாரித்து கொண்டு சென்று நேர்க்காணல் பெறும் ஆளுமையை வாசகருக்கு அறிய தருகிறார்கள். இதுவரையிலான பத்து இதழ்களில் ஆய்வாளரான கரசூர் பத்மபாரதி முதற்கொண்டு சூழியல் அறிஞர் தியடோர் பாஸ்கரன் பௌத்த அறிஞர் ஒரா.நா.கிருஷ்ணன் நவீன நாடக செயல்பாட்டாளர் வெளி ரங்கராஜன் பௌத்த சிலைகளின் ஆவணப்படுத்துநரான பா.ஜம்புலிங்கம் தொல்லியல் அறிஞர் ரா.பூங்குன்றன் தமிழறிஞர் பா.சரவணன் விசிஷ்டாத்வைதியான சடகோப முத்து சீனிவாசன் என வெவ்வேறு களங்களில் தீவிரமாக செயல்பட்ட\செயல்படும் முக்கிய ஆளுமைகளை வாசக கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவர்களின் அறிவுலகம் குறித்த புரிதலையும் மேலதிகமாக தேடிச்செல்லும் ஆர்வத்தையும் உருவாக்கி உள்ள இந்நேர்காணல்கள் சிறப்பென்று உணர்கிறேன்.
இதுதவிர சூழியல் அறிஞர் தியோடர் பாஸ்கரன் அவர்களுக்கொன்றும் தமிழ் விக்கி தூரன் விருது விழாவை ஒட்டி மு.இளங்கோவன் மற்றும் எஸ்.சிவக்குமார் குறித்து ஒன்றும் என இரண்டு சிறப்பிதழ்களை கொண்டு வந்துள்ளது. அவற்றில் தியோடர் பாஸ்கரன் அவர்களின் இதழை சற்று நெருக்கமாக உணர்கிறேன். இவை தவிர ஓவியர் ஜெயராம் எழுதிய மலம் குறித்த கட்டுரை, அ.கா.பெருமாள் அவர்களின் கொடுங்கல்லூர் கண்ணகி குறித்த கட்டுரையும் அரவிந்தரின் மொழியாக்க கட்டுரைகளும் நான் மிகவும் ரசித்தவை.
***********
சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன் அவர் பண்பாடு குறித்த வழக்கமான வெற்று பெருமிதங்களை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். கலாசாரம் பற்றி ஐந்து நிமிடமாவது உங்களால் பேச முடியுமா என்று கேட்ட பொழுது அவரால் பேச முடியவில்லை. இதற்குக் காரணம் வெறும் கூச்சல்கள் மட்டும் தான் இருக்கிறதே தவிர மேலதிகமாக அதனுடைய ஆழத்தன்மை புரியாமல் சமுதாயத்தில் இப்படி மொழி, பண்பாடு, என்று பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள், உண்மையில் பண்பாடு, கலாச்சாரம் இவற்றிற்கு பின்னால் இருக்கக்கூடிய மையம் என்னவென்று நமக்குத் தெரியவில்லை எனவே அதனுடைய தொடர்ச்சியையும் நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. இத்தருணத்தில் தான் குருகு பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் முதன்மையாக எடுத்துக்கொண்டு இயங்குகிறது
சங்க இலக்கியத்தில் ஒன்றான கலித்தொகை பண்பாடு என்பதற்கு தரக்கூடிய விளக்கம் பண் எனப்படுவது பாட அறிந்து ஒழுகல் என்பது . அந்தப் பண்பாட்டையும் அதை சார்ந்து இருக்கக்கூடிய கலாச்சாரத்தையும் பேசுகிறது இந்த குருகு இதழ். கேரளத்தை சேர்ந்த என்னுடைய தோழனிடம் நாராயணகுரு யார் என்று கேட்டதற்கு தெரியவில்லை என்று சொன்னான், இத்தருணத்தில் தான் தெய்வச் சதகம் என்ற நாராயண குருவின் பாடல்களுக்கான உரையை மொழியாக்கம் குருகு செய்கிறது. ஆன்மிகத்தை இன்றைக்கு அரசியல் வழியாக மட்டுமே பார்க்கும் ஒரு குணம் உருவாகி வருகிறது. அந்தக் கண்ணாடி வழியாக பார்க்கும் குணத்தை குருகு இதழ் உடைக்கிறது, மெய்யான மதம் என்பது என்ன அதனுடைய ஆழம் என்ன என்று பேசுகிறது. கிறிஸ்துவின் சித்திரங்கள் மூலமாகவும் செவ்வேள் ஆடல் என்று முருகனின் ஆடல் பற்றியும் வெளியாகும் கட்டுரைகள் இந்த திறப்பை அளிக்கின்றன. ஒவ்வொரு இதழிலும் பண்பாடு, கலாச்சாரம், மதம் சார்ந்த ஒருவரிடம் பேட்டிகள் எடுப்பது குருகு இதழின் தனித்தன்மை.
சரி ஆன்மிகம் மட்டும் தான் குருகு பேசுகிறதா என்றால் அறிவியலைப் பற்றியும் பேசுகிறது அறிவியலுக்கும் பண்பாட்டுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு என்ன. அதன் வழியாக இன்றைக்கு எப்படி நாம் புரிந்து கொள்ளலாம் என்று ஒரு தெளிவான பார்வையை அறிவியல் கட்டுரைத்தொடர் அளிக்கிறது.
வரலாறு என்பது முடிந்து போன ஒன்றாக நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் வரலாறு என்பது அப்படி கிடையாது அந்தக் கோட்டின் மேலே தான் நான் நடந்து கொண்டிருக்கிறோம் என்ற புரிதலையும், இன்றைய யூடியூப் பேஸ்புக் வரலாற்றை தாண்டி நாம் எந்த வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு பார்வையையும் குருகு இதழ் தருகிறது.
வெளியுலக இரைச்சலில் நாம் பண்பாடு, ஆன்மிகம் குறித்த உண்மையை கண்டறிய முடியாது, அதற்காகவும் குருகு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று வாழ்த்துவோம் .
************
சசிகுமார், வாசகர்
தத்துவம் மற்றும் அறிவியலில் ஆர்வம் இருந்தாலும் அதை எங்கு தொடங்குவது என்று தெரியாமல் இருந்த நேரம். தீவிர இலக்கியம் படிக்க ஆரம்பித்து ஆறு மாதங்களுக்குள் குருகு என்ற மின்னிதழ் பற்றி ஜெயமோகன் தளம் வழியாக அறிந்து வைத்திருந்தேன்.
அறிவியலின் அடிப்படைகள் பற்றி தேடி கொண்டிருக்கும் போது தான் தாமரைக்கண்ணன் (அவிநாசி) அவர்களின் அறிவியல் மொழிபெயர்ப்பு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அதனை தொடர்ந்து செவ்வேள் ஆடல், ஆய்வாளர் மு. இளங்கோவன் கட்டுரைகள் என குருகு நான் வாசிக்கும் கட்டாய மின்னிதழில் ஒன்றானது.
பொதுவாக நம்முடைய சூழலில் புனைவுக்கு இருக்கும் வெளிச்சமும், அறிமுகமும் அபுனைவுக்கு இருப்பதில்லை. ஒரு இலக்கிய வாசகர் தன்னுடைய புனைவு ஆர்வத்தை தீர்த்து கொள்ள இங்கு பல இதழ்கள் இருக்கின்றன. இதில் அபுனைவுக்கு மட்டும் ஒரு தனி மாத இதழ் என்ற ஒன்றே குருகு இதழை தனித்து காட்டுகிறது.
நம் கவனத்தை சிதறடிக்க துடிக்கும் பல்வேறு ஊடகம் சூழ்ந்திருக்கும் இச்சூழலில் ஆழ்ந்த வாசிப்பையும், நம்முடைய கவனத்தை ஒருமுகமாக எதிர்பார்க்கும் இதழ் குருகு. ஒவ்வொரு கட்டுரையை வாசித்து முடித்த பின்னர் அதன் மேலதிக வாசிப்புக்கு நம்மை தூண்டுவதால் இந்த கட்டுரைகளை மேலும் தரம் கொண்டதாக இருக்கின்றன.
முக்கியமான ஆளுமைகளின் நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள், தத்துவ அறிமுகங்கள் என அபுனைவின் எல்லா விரிவான தளங்களில் மாதத்தில் ஆறிலிருந்து எட்டு தரமான கட்டுரைகளை உருவாக்குவது என்பது பெரும் நேரத்தையும் உழைப்பையும் கோரும் வேலை.
தீவிர இலக்கியத்தின் சாராம்சமான தொடர் உழைப்பும், தேடல் மீது பெரும் பற்றும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை இலக்கியத்தின் ஒரு துளியாக பொருத்தி பார்க்கும் ஒரே மனங்கள் சேர்ந்து நடத்தும் இந்த குருகு இதழ் ஓராண்டை நிறைவு செய்ததற்கு வாசகனாக என் வாழ்த்துக்கள்.
*********