இதுவரை நாம் பார்த்த அனுமானம், விளக்கம், ரியலிசம் மற்றும் அறிவியல் மாற்றங்கள் ஆகியவை ‘அறிவியலின் பொது தத்துவங்களை’ சேர்ந்தது. இவை வேதியியல் அல்லது நிலவியல் போன்ற குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டுமல்லாமல் பொதுவாக உள்ள அறிவியல் ஆய்வுகளின் இயல்பு மீது கவனத்தை செலுத்துகின்றன. எனினும் குறிப்பிட்ட துறைகளை சார்ந்த சுவாரஸ்யமான தத்துவார்த்த கேள்விகளும் உள்ளன. அவை ’தனி-அறிவியல்களின் (Special sciences) தத்துவம்’ எனப்படுகின்றன. இக்கேள்விகள் பாதி தத்துவார்த்தமாகவும், பாதி புறவய-உண்மைகளையும் (empirical facts) சார்ந்தது. இதுவே அவற்றை மிகவும் சுவாரஸ்யமானதாக ஆக்குகின்றன. இப்பகுதியில் இதுபோன்ற மூன்று கேள்விகளை ஆராய்ந்து பார்க்கலாம், இயற்பியல், உயிரியல் மற்றும் உளவியல் ஆகிய துறைகள் ஒவ்வொன்றிலும் ஒரு கேள்வியைப் பார்க்கலாம்.
நியூட்டன் மற்றும் லீப்னிஸ் |
அறுதி வெளி (absolute space) பற்றி லீப்னிஸ் மற்றும் நியூட்டன்
நாம் பார்க்கப்போகும் முதல் தலைப்பு கோட்ஃப்ரைட் லீப்னிஸ் (Gottfried Leibniz, 1646-1716) மற்றும் ஐசக் நியூட்டன் (1642-1727) ஆகிய 17ஆம் நுற்றாண்டின் தலைசிறந்த அறிவியலாளர்களுக்கு இடையில் நடைபெற்ற காலம் மற்றும் வெளியின் இயல்புகளைக் குறித்த விவாதம். இந்த பகுதியில் ’வெளி’யை பற்றிய விவாதத்தை மட்டுமே நாம் பார்க்கவிருக்கிறோம். காலம் பற்றிய விவாதமும் இதற்கு இணையான ஒன்றே. Principles of Natural Philosophy என்ற தன்னுடைய புகழ்பெற்ற நூலில் ’வெளி’யை பற்றிய அறுதியாளர்களின் (absolutist) கருத்தை நியூட்டன் ஆதரிக்கிறார். இந்த கருத்தின் படி, வெளி என்பது பொருள்களுக்கு இடையில் உள்ள இடம் சார்ந்த தொடர்பை தாண்டியும் அதற்கு மேலாகவும் அறுதி இருப்பைக் கொண்டுள்ளது. நியூட்டனின் கருத்தில் வெளி என்பது ஒரு முப்பரிமாண பெட்டியைப் போன்றது. கடவுள் பொருள்வய பிரபஞ்சத்தை படைத்து அந்த பெட்டியில் வைத்துள்ளார். தானியங்களை உணவுப்பெட்டிக்குள் போடுவதற்கு முன்பே அந்த பெட்டி இருப்பதைப் போல, பொருட்கள் உருவாவதற்கு முன்பும் வெளி இருந்தது என்பதை இது சுட்டுகிறது. நியூட்டனின் கருத்துப்படி ’வெளி’க்கும் தானியப்பெட்டி போன்ற சாதாரண பெட்டிக்கும் உள்ள வேறுபாடு என்பது பெட்டி தெளிவாக எல்லைக்குட்பட்ட பரிமாணங்களைக் கொண்டது, ஆனால் வெளி அனைத்து திசைகளிலும் முடிவற்று விரிந்திருப்பது.
வெளி பற்றிய அறுதியாளர்களின் பார்வை மற்றும் நியூட்டனின் தத்துவத்தில் பலவற்றுடனும் லீப்னிஸ் கடுமையாக முரண்படுகிறார். வெளி என்பது பொருட்களுக்கு இடையில் உள்ள இடம் சார்ந்த தொடர்புகளின் ஒட்டுமொத்தம் மட்டுமே என்கிறார் லீப்னிஸ். இடம் சார்ந்த தொடர்புகளுக்கான உதாரணங்கள்: மேல், கீழ், இடது மற்றும் வலது பக்கங்கள் - இவை பொருள்கள் ஒவ்வொன்றும் அவைகளுக்குள் கொண்டுள்ள தொடர்புகள். வெளி பற்றிய இந்த சார்பியல்வாதிகளின் (relationist) கருத்து சுட்டுவது என்னவென்றால், பொருள் முதன்முதலில் படைக்கப்படுவதற்கு முன்பு ’வெளி’ என்ற ஒன்று இருக்கவில்லை. கடவுள் பொருள்வய பிரபஞ்சத்தை படைத்த பிறகே வெளி தனது இருப்புக்கு வருகிறது; அதற்கு முன் வெளி என்பது கிடையாது, பொருள்களைக் கொண்டு நிரப்பப்படும் வரை வெளி காத்திருக்கவில்லை என லீப்னிஸ் சொல்கிறார். எனவே வெளி என்பது வழக்கமாக கருதும் பெட்டி போன்றதும் அல்ல, தனித்திருப்பதும் (entity) அல்ல. லீப்னிஸின் பார்வையை பின்வரும் ஒரு ஒப்புமையின் மூலம் புரிந்து கொள்ளலாம். ஒரு சட்டரீதியான ஒப்பந்தம் இரண்டு தரப்புகளுக்கான தொடர்பைக் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு அதில் ஒரு தரப்பு வீட்டை விற்பவர் என்றும், மறுதரப்பை வாங்குபவர் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதில் ஏதேனும் ஒரு தரப்பைச் சேர்ந்தவர் இறந்துவிட்டாலும் அந்த ஒப்பந்தம் இல்லாமலாகிவிடும். எனவே வாங்குபவருக்கும் விற்பவருக்கும் உள்ள தொடர்பை சாராமல் ஒப்பந்தம் தனித்து இருக்கிறது என சொல்வது அசட்டுத்தனமானது. ஒப்பந்தம் என்பது வெறும் ஒரு தொடர்பு மட்டுமே. இதைப்போலவே ’வெளி’யும் பொருள்களுக்கு இடையில் உள்ள இடம்சார் தொடர்பை தாண்டியதோ மற்றும் அதற்கு மேலானதோ அல்ல.
நியூட்டன் அறுதி வெளி பற்றிய கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியதற்கு முக்கியமான நோக்கம் அறுதி இயக்கத்தையும் (Absolute motion) சார்பியக்கத்தையும் (Relative motion) வேறுபடுத்துவதே. சார்பியக்கம் என்பது ஒரு பொருளின் இயக்கம் வேறொரு பொருளை சார்ந்திருப்பது. சார்பியக்கத்தைப் பொருத்தவரையில் ஒரு பொருள் நிஜமாகவே நகர்கிறதா இல்லையா என கேட்பதில் ஒரு அர்த்தமும் இல்லை - ஒரு பொருள் மற்றொரு பொருளைப் சார்ந்து நகர்கிறதா என்று மட்டுமே நாம் கேட்கமுடியும். இதை புரிந்துகொள்ள இரண்டு நபர்கள் இணையாக சீரான வேகத்தில் நேரான சாலையில் ஓடுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். சாலையோரம் நின்றுகொண்டிருக்கும் ஒரு பார்வையாளரைப் பொருத்தவரை அந்த இருவரும் நிஜமாகவே இயக்கத்தில் இருக்கிறார்கள் - ஏனென்றால் அவர்களுக்கும் அந்த பார்வையாளருக்கும் இடைப்பட்ட தொலைவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் அவ்விரு நபர்களைப் பொருத்தவரை அவர்கள் இயக்கத்தில் இல்லை. அவர்களுக்கு இடையில் உள்ள தொலைவு மாறாமல் இருக்கிறது. அவ்விரண்டு நபர்களில் ஓவ்வொருவருடைய இடமும் மற்றவரை சார்ந்து மாறாமல் அப்படியே உள்ளது. அவர்கள் அதே வேகத்தில் அதே திசையில் ஓடிக்கொண்டிருக்கும் வரை அவர்களின் இடம் மாறாமல் இருக்கும். எனவே ஒரு பொருள் வேறொரு பொருளை பொருத்து சார்பியக்கத்தில் இருக்கலாம், ஆனால் மற்றொரு பொருளை பொறுத்து நிலையான இடத்தில் இருக்கும்.
சார்பியக்கம் உள்ளது என்றால் அறுதி இயக்கமும் இருக்கும் என நியூட்டன் நம்பினார். பொதுபுத்தி இதை ஏற்றுக்கொள்கிறது. இரண்டு நபர்கள் சார்பியக்கத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள் - ஒருவர் கிளைடரில் பறந்து கொண்டிருக்கிறார், மற்றொருவர் அதை கீ்ழே நின்று பார்க்கிறார். இங்கு சார்பியக்கம் சமச்சீரானது. ஏனென்றால் பார்வையாளரைப் பொறுத்து கிளைடர் நகர்ந்துகொண்டிருப்பதைப் போலவே கிளைடரைப் பொறுத்து அந்த பார்வையாளரும் நகர்ந்துகொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் நகர்வது பார்வையாளரா இல்லை கிளைடரா என்ற கேள்வி எழுகிறது. இங்கு தான் நமக்கு அறுதி இயக்கம் என்ற கருத்து தேவைப்படுகிறது.
அறுதி இயக்கம் என்றால் என்ன? நியூட்டனின் கருத்துப்படி, அறுதி இயக்கம் என்பது அறுதி வெளியை சார்ந்து ஒரு பொருளின் இயக்கம். எல்லா நேரத்திலும் ஒவ்வொரு பொருள்களும் அறுதி வெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் என நியூட்டன் கருதினார். காலப்போக்கில் ஒரு பொருள் அறுதி வெளியில் தனது இடத்தை மாற்றினால் அது அறுதி இயக்கம்; மற்றபடி அப்பொருள் அறுதி இயக்கமின்மையில் (Absolute rest) இருக்கும். ஆகவே அறுதி இயக்கத்திலிருந்து சார்பியக்கத்தை வேறுபடுத்த வேண்டுமெனில் ’வெளி’யை பொருள்களுக்கு இடையில் உள்ள தொடர்பை தாண்டியும் அதற்கு மேலாகவும் உள்ள ஒரு தனிப்பொருள் (entity) என்று நாம் கருத வேண்டும். நியூட்டனின் இந்த தர்க்கம் ஒரு முக்கியமான ஊகத்தின் மீது அமர்ந்துள்ளது என்பதை கருத்தில் கொள்க. அது என்னவென்றால், எல்லா இயக்கங்களும் எதோ ஒன்றுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்’. சார்பியக்கம் என்பது வேறு பொருள்களை சார்ந்திருக்கும் இயக்கம். அறுதி இயக்கம் என்பது அறுதி வெளியை சார்ந்து இருக்கும் இயக்கம். இதன்படி நியூட்டனுக்கு அறுதி இயக்கமும் ’சார்பு’ உடைய ஒன்றே. இதன் விளைவாக, ஒரு பொருள் அறுதி இயக்கம் அல்லது சார்பியக்கம் ஆகிய எந்த இயக்கத்தில் இருந்தாலும் அது அந்த பொருளைப் பற்றிய ’கறாரான உண்மை’யாக இருக்காது என நியூட்டன் கருதினார்; அது அப்பொருள் மற்றொன்றுடன் கொண்டுள்ள தொடர்பைப் பற்றியதாக மட்டுமே இருக்க முடியும். மற்றொன்று என இங்கு குறிப்பிடுவது வேறொரு பொருளாகவோ அல்லது அறுதி வெளியாகவோ இருக்கலாம்.
லீப்னிஸ் சார்பியக்கத்திற்கும் அறுதி இயக்கத்திற்கும் இடையில் வேறுபாடு இருப்பதை ஒத்துக்கொள்கிறார். ஆனால் அறுதி இயக்கத்திற்கு அறுதிவெளியை சார்ந்து இருக்கும் இயக்கம் என விளக்கமளிப்பதை நிராகரிக்கிறார். இதற்கு அறுதிவெளி என்ற கருத்தை ஒத்திசைவற்றது என்கிறார் லீப்னிஸ். இந்த பார்வைக்கு ஆதரவாக அவர் நிறைய வாதங்களை முன்வைக்கிறார். அவற்றில் பல வாதங்கள் இறையியல் தன்மை கொண்டவை. தத்துவார்த்தமாக பார்க்கும் போது லீப்னிஸுடைய ஒரு வாதம் மிக சுவாரஸ்யமானது: ’பண்புகள் முற்றும் ஒருங்கமை விதி’ (principle of the identity of indiscernibles - PlI) என லீப்னிஸ் அழைப்பதுடன் அறுதிவெளி முரண்படுகிறது. சந்தேகமேயில்லாமல் ’பண்புகள் முற்றும் ஒருங்கமை விதி’யை (PII) சரி என லீப்னிஸ் கருதுவதால் அறுதிவெளியின் கருத்தாக்கத்தை அவர் நிராகரிக்கிறார்.
இரண்டு பொருட்களின் பண்புகள் முற்றிலும் ஒருங்கமைந்துள்ளன என்றால் அவை சமமானது என PII சொல்கிறது. அதாவது அவை இரண்டும் உண்மையில் ஒரே பொருள். பண்புகள் முற்றிலும் ஒருங்கமைந்துள்ள இரண்டு பொருள் என்று சொல்வதன் அர்த்தம் என்னவென்றால் அவ்விரண்டு பொருள்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காண முடியாது - அவை இரண்டும் ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்டுள்ளன என்பதே. எனவே PII சரியென்றால் முற்றிலும் வேறுபட்ட இரண்டு பொருள்கள் நிச்சயமாக சில பண்புகளிலாவது வேறுபட்டிருக்கும் - இல்லையென்றால் அவை ஒரே பொருளே, இரண்டு பொருள்கள் அல்ல. அனைத்து பண்புகளிலும் ஒரேமாதிரியாக உள்ள இரு வேறு பொருள்களுக்கு உதாரணம் ஒன்றைக் கண்டுபிடிப்பது நிச்சயமாக சுலபமல்ல - ஒரேமாதிரியான பொருள்களை பெருமளவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலிருந்து வரும் இரு பொருள்கள் கூட எண்ணிலடங்கா வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். எனினும் PII உண்மையா என்பது ஒரு சிக்கலான கேள்வி. இது தத்துவவாதிகள் இன்னமும் விவாதித்துக்கொண்டிருக்கும் ஒன்று. இதற்கான விடை ’எது பண்பு என குறிக்கப்படுகிறது’ என்பதையும் குவாண்டம் இயற்பியலின் கடினமான சிக்கல்களையும் பொறுத்தது. ஆனால் லீப்னிஸ் இந்த கொள்கையை எந்த பயன்பாட்டுக்கு முன்வைக்கிறாரோ அதன் மீது மட்டுமே நாம் இங்கு கவனம் செலுத்தப்போகிறோம்.
நியூட்டனின் அறுதிவெளி கருத்துக்கும் PII-க்கும் உள்ள முரணைக் காட்ட லீப்னிஸ் இரண்டு சிந்தனை-சோதனைகளை பயன்படுத்துகிறார். முதல் சோதனைக்காக லீப்னிஸ் இவ்வாறு கற்பனை செய்யச் சொல்கிறார்: இரு வேறு பிரபஞ்சங்கள் உள்ளன, அவை இரண்டுமே சம அளவில் ஒரே மாதிரியான பொருட்களைக் கொண்டுள்ளன. முதல் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் அறுதிவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கின்றன. இரண்டாவது பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் தனது இடத்தை வேறொரு இடத்திற்கு சம அளவில் நகர்த்துகின்றன, உதாரணத்திற்கு இரண்டு மைல்கள் கிழக்கு நோக்கி நகர்த்துகின்றன என கொள்வோம். இங்கு இவ்விரு பிரபஞ்சங்களும் வேறுவேறானவை என சொல்ல முடியாது. எனென்றால் நியூட்டனே ஒப்புக்கொண்டது போல அறுதிவெளியில் ஒரு பொருளின் இடத்தை நம்மால் அவதானிக்க முடியாது. ஒவ்வொரு பொருளும் அவை மற்றவற்றை சார்ந்து இருக்கும் இடத்தை மட்டுமே அவதானிக்க முடியும். இந்த சார்பு இடங்கள் இரண்டு பிரபஞ்சங்களிலும் சமமாக உள்ளது. எனவே நாம் வாழ்ந்து கொண்டிருப்பது பிரபஞ்சம் ஒன்றிலா அல்லது இரண்டிலா என்பதை எந்த அவதானிப்பு அல்லது பரிசோதனையும் சொல்லாது.
இரண்டாவது சோதனையும் முதல் சோதனையைப் போலவே உள்ளது. நியூட்டனின் கருத்தை நினைவுபடுத்துங்கள். அறுதி வெளியில் சில பொருள்கள் இயக்கமின்மையிலும், சில பொருள்கள் நகர்ந்து கொண்டும் இருக்கும். இதற்கு பொருள் என்னவென்றால், ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு பொருள்களும் திட்டவட்டமான அறுதி திசைவேகத்தை (Absolute velocity) கொண்டிருக்கும். (திசைவேகம் என்பது ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு பொருள் நகரும் வேகம். எனவே அறுதி திசைவேகம் என்பது ஒரு குறிப்பிட்ட திசையில் அறுதிவெளியில் ஒரு பொருள் நகரும் வேகம்.) இப்போது இரு வேறு பிரபஞ்சங்கள் இருப்பதாகவும், அவை இரண்டும் சம அளவில் ஒரே மாதிரியான பொருள்களைக் கொண்டிருப்பதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். முதல் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட அறுதி திசைவேகத்தை கொண்டிருக்கின்றன. இரண்டாவதில் ஒவ்வொரு பொருளின் அறுதி திசைவேகமும் ஒரு நிலையான அளவில் உயர்த்தப்படுகின்றன. உதாரணத்திற்கு மணிக்கு 300 கிலோமீட்டர் வீதம் ஒரு குறிப்பிட்ட திசையில் உயர்த்தப்படுகின்றன என கொள்வோம். மீண்டும் இவ்விரு பிரபஞ்சங்களும் வேறுவேறு என சொல்ல முடியாது. ஏனென்றால் நியூட்டனே ஒத்துக்கொண்டது போல அறுதிவெளியை சார்ந்து ஒரு பொருள் எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை அவதானிக்க முடியாது. ஒவ்வொரு பொருளும் அவை மற்றவற்றை சார்ந்து எவ்வளவு வேகத்தில் நகர்கிறது என்பதை மட்டுமே அவதானிக்க முடியும் - அந்த சார்பு திசைவேகம் அவ்விரு பிரபஞ்சங்களிலும் சமமானதே.
இந்த இரண்டு சோதனைகளிலும் நியூட்டன் சொல்வதை வைத்தே அவ்விரு பிரபஞ்சங்களும் வேறுவேறானவை என நம்மால் சொல்ல முடியாது, அவ்விரு பிரபஞ்சங்களும் மிகச்சரியாக ஒருங்கமைபவை என்பதை லீப்னிஸ் காட்டுகிறார். எனவே PII சரியானது என்றால் நியூட்டனின் கோட்பாடு ஒரு தவறான விளைவைக் கொண்டுள்ளது, ஒரே ஒரு பொருள் மட்டுமே உள்ள போது இரண்டு பொருள்கள் உள்ளன என்று அது சொல்கிறது. ஆதலால் நியூட்டனின் கோட்பாடு தவறானது என லீப்னிஸ் வாதிடுகிறார்.
இதன் விளைவாக, அறுதிவெளி என்பதை ஒரு வெற்றுக்கருத்து என லீப்னிஸ் வாதிடுகிறார். ஏனென்றால் அது அவதானிக்க கூடிய வேறுபாடு எதையும் ஏற்படுத்தவில்லை. அறுதிவெளியில் பொருள்களின் இடத்தையும் அவற்றின் அறுதிவெளி சார்ந்த திசைவேகத்தையும் எப்போதுமே கண்டறிய முடியாதபோது அறுதிவெளியை மட்டும் நம்புவது ஏன்? ’அவதானிக்க-இயலா தனிப்பொருள்கள், அவற்றின் இருப்பினால் அவதானிக்க முடிகின்ற வகையில் ஒரு வேறுபாட்டை ஏற்ப்படுத்தும்போது மட்டுமே அவற்றை நாம் அறிவியலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற நியாயமான கொள்கைக்கு லீப்னிஸ் வருகிறார்.
ஆனால் அறுதிவெளி அவதானிக்க கூடிய விளைவுகளைக் கொண்டுள்ளது என்றும் அதை தன்னால் காட்ட முடியும் என்றும் நியூட்டன் கருதினார். இதுவே ’சுழலும் வாளி’ (Rotating bucket) என்ற அவருடைய புகழ்பெற்ற வாதத்தின் மையம். ஒரு வாளியில் முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளது, அந்த வாளி அதனடியில் உள்ள துளையில் கயிற்றால் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளது என கற்பனை செய்ய சொல்கிறார் (கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்).
ஆரம்பத்தில் வாளியும் நீரும் இயக்கமின்மையில் உள்ளன. பின்பு கயிறு பல முறை நன்கு முறுக்கப்பட்டு விடப்படுகிறது. முறுக்கப்பட்ட சுருள் தளரும் போது வாளி சுழலத் துவங்குகிறது. முதலில் வாளியிலுள்ள நீர் நிலையாக அப்படியே இருக்கிறது. நீரின் மேல் தளம் சமமாக உள்ளது. இப்பொழுது நீரை சார்ந்து வாளி சுழன்றுகொண்டிருக்கிறது. ஆனால் சில நேரங்கள் கழித்து வாளி தனது சுழற்சியை நீருக்கு கொடுக்கிறது. பிறகு நீர் வாளியுடன் இணைந்து சுழலத் துவங்குகிறது. இப்போது நீரும் வாளியும் ஒன்றையொன்று சார்ந்த இயக்கமின்மைக்கு மறுபடியும் சொல்கின்றன. படத்தில் காட்டப்பட்டது போல, சுழலும் போது நீரின் விளிம்பு மேல்நோக்கி வளைந்து உயர்கிறது.
இங்கு நீரின் விளிம்பு உயர்ந்ததற்கு என்ன காரணம்? என நியூட்டன் கேட்கிறார். தெளிவாகவே இது நீரின் சுழற்சியுடன் சம்பந்தப்பட்டுள்ளது. சுழற்சியும் ஒரு வகை இயக்கமே. நியூட்டனுக்கு ஒரு பொருளின் இயக்கம் எப்பொழுதும் எதோவொன்றை சார்ந்தே இருக்கும். எனவே நாம் இவ்வாறு கேட்கலாம்: எதை சார்ந்து நீர் சுழல்கிறது? வாளியை சார்ந்தல்ல. ஏனென்றால் நீரும் வாளியும் சேர்ந்தே சுழல்கின்றன, ஆதலால் அவை இரண்டும் சார்பு இயக்கமின்மையில் உள்ளன. எனவே நீர் அறுதிவெளியை சார்ந்து சுழல்கிறது என நியூட்டன் சொல்கிறார். அதுவே நீரின் விளிம்பை மேல்நோக்கி வளைக்கிறது. எனவே அறுதிவெளி அவதானிக்க கூடிய விளைவுகளை உண்மையிலேயே ஏற்படுத்துகிறது.
நியூட்டனின் இந்த விவாதத்தில் ஒன்று விடுபட்டுள்ளது என நீங்கள் கருதலாம். வாளியை சார்ந்து நீர் சுழலவில்லை என்பது உண்மைதான், ஆனால் ஏன் அது அறுதிவெளியை சார்ந்து சுழல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது? இங்கு நீரானது இந்த பரிசோதனையை செய்து கொண்டிருக்கும் நபரை சார்ந்தும் சுழல்கிறது, பூமியின் மேற்பரப்பை சார்ந்தும் சுழல்கிறது மற்றும் நிலையாக உள்ள நட்சத்திரங்களை சார்ந்தும் சுழல்கிறது. எனவே இதில் எதோ ஒன்று நீரின் விளிம்பு உயர்ந்ததற்கு காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா? ஆனால் நியூட்டன் நீரின் விளிம்பு உயர்ந்ததற்கு வேறு ஒரு எளிமையான பதிலை வைத்திருந்தார். சுழலும் வாளியைத் தவிர வேறு எதுவுமே இல்லாத ஒரு பிரபஞ்சத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்பிரபஞ்சத்தில், நீரின் வளைந்த மேல்தளத்திற்கு காரணம் மற்ற பொருள்களை சார்ந்து நீரின் சுழற்சி உள்ளது என்று விளக்கமளிக்க முடியாதல்லவா. ஏனென்றால் அங்கு வேறெந்த பொருளுமே கிடையாது. மேலும் தற்போதுள்ள நிலைக்கு முன்பு இருந்ததைப் போலவே நீர் வாளியை சார்ந்து ஒய்வு நிலையில் உள்ளது. இங்கு நீர் ஒன்றை சார்ந்து சுழல்வதற்கென மீதமிருப்பது அறுதிவெளி மட்டுமே. ஆனால் ஏன் நீரின் மேற்பரப்பு வளைகிறது என்பதை இதனால் விளக்க இயலவில்லை. இருந்தாலும் இங்கு நாம் அறுதி வெளியை நம்பித்தான் ஆக வேண்டும்.
இதன் விளைவாக, ’அறுதிவெளியில் ஒரு பொருளின் இடம்’ மற்றும் ’அறுதிவெளியை சார்ந்த ஒரு பொருளின் திசைவேகம்’ ஆகியவை கண்டறிய முடியாமல் இருக்கிறது என்றாலும் ஒரு பொருள் அறுதிவெளியை சார்ந்து முடுக்கமடைகிறது (accelerating) என்பதைக் கண்டறிவதற்கான சாத்தியம் இருக்கிறது என்று நியூட்டன் சொல்கிறார். ஒரு பொருள் சுழலும் வேகம் நிலையாக இருந்தாலும் அது சுழலும்போது முடுக்கமடைகிறது என்பதே இதற்கு பொருள். ஏனென்றால் இயற்பியலில் முடுக்கம் என்பது திசைவேகத்தின் மாற்ற விகிதம் (Rate of change of velocity) என வரையறுக்கப்பட்டுள்ளது. திசைவேகம் என்பது ஒரு நிலையான திசையில் ஒரு பொருளின் வேகம். சுழலும் பொருள்கள் அது இயங்கும் திசையை மாற்றிக்கொண்டே இருப்பதால் அந்த பொருள்களின் திசைவேகம் நிலையானதல்ல, அவை முடுக்கமடைகின்றன. நீரின் வளைந்த மேற்பரப்பானது முடுக்கமடைந்த இயக்கத்தினால் ஏற்படும் ’நிலைமாற்ற விளைவுகளு’க்கான (Inertial effects) உதரணமாகும். இந்த விளைவிற்கு மற்றொரு உதாரணமாக விமானம் புறப்படும் போது நாம் இருக்கையை நோக்கி பின்புறம் தள்ளப்படுவதாக உணர்வதை குறிப்பிடலாம். இந்த நிலைமாற்ற விளைவுகளுக்கு சாத்தியமான ஒரே ஒரு விளக்கம் என்று நியூட்டன் நம்பியது: ’பொருளின் முடுக்கம் அறுதிவெளியை சார்ந்து நிலைமாற்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது’. ஒரு பொருளை மட்டுமே கொண்ட பிரபஞ்சத்தில் அப்பொருளின் முடுக்கம் சார்ந்து இருக்கும் ஒன்று அறுதிவெளி மட்டுமே.
நியூட்டனின் வாதம் வலுவானது, ஆனால் இறுதியானது அல்ல. வேறெந்த பொருளுமே இல்லாத பிரபஞ்சத்தில் ’சுழலும் வாளி’ பரிசோதனை செய்யும் போது நீரின் விளிம்பு மேல்நோக்கி வளைவாக உயரும் என்பது நியூட்டனுக்கு எப்படி தெரியும்? இந்த உலகில் நாம் கண்டறிந்த நிலைமாற்ற விளைவு வேறெந்த பொருளுமே இல்லாத உலகிலும் அப்படியே இருக்கும் என்று நியூட்டன் எளிதாக ஊகித்துவிட்டார். இது வெளிப்படையாகவே அவ்வளவு வலுவில்லாத ஊகம். நியூட்டன் எடுத்துக்கொண்ட இந்த உரிமையை பலர் கேள்விகேட்டுள்ளனர். எனவே நியூட்டனின் வாதம் அறுதிவெளியின் இருப்பை நிரூபிக்கவில்லை. மேலும் இது நிலைமாற்ற விளைவுக்கு ஒரு மாற்று விளக்கத்தை வழங்க லீப்னிஸின் ஆதரவாளர்களுக்கு முன் ஒரு சாவாலை வைக்கிறது.
கூடவே லீப்னிஸ் அறுதி இயக்கத்திற்கும் சார்பியக்கத்திற்குமான வேறுபாட்டை அறுதிவெளியை குறிப்பிடாமலேயே விளக்க வேண்டும் என்ற சவாலையும் எதிர்கொள்கிறார். இந்த சவாலுக்கு லீப்னிஸ் பின்வருமாறு எழுதுகிறார்: ’மாற்றத்திற்கான உடனடி காரணம் ஒரு பொருளிலேயே இருக்கும் போது’ அந்த பொருள் உண்மையான அல்லது அறுதியான இயக்கத்தில் உள்ளது. முன்பு பார்த்த கிளைடரில் பறப்பவர் மற்றும் பார்வையாளர் உதாரணத்தை நினைவுபடுத்துங்கள். இதில் இருவரும் மற்றவரை சார்ந்து இயக்கத்தில் உள்ளனர். இதில் யார் ’உண்மையில்’ நகர்கிறார்கள் என்பதை தீர்மானிக்க நாம் மாற்றத்திற்கான உடனடி காரணம் கிளைடரில் உள்ளதா இல்லை பார்வையாளரிடமா என முடிவுசெய்ய வேண்டும் என்கிறார் லீப்னிஸ். எப்படி அறுதி இயக்கத்தை சார்பியக்கத்திலிருந்து வேறுபடுத்துவது என்பதற்கான இந்த பரிந்துரை அறுதிவெளி பற்றிய அனைத்து குறிப்புகளையும் தவிர்க்கிறது. ஆனால் இது மிக தெளிவானதல்ல. ஒரு பொருளின் ‘மாற்றத்திற்கான உடனடி காரணம்’ என சொல்வதன் அர்த்தம் என்ன என்பதை லீப்னிஸ் சரியாக விளக்கவில்லை. இவர் நியூட்டனின் பின்வரும் ஊகத்தை நிராகரிப்பதையே நோக்கமாக கொண்டிருப்பதால் இவ்வாறு விளக்காமல் விட்டிருக்கலாம்: ஒரு பொருளின் இயக்கம் அறுதி இயக்கமாக இருந்தாலும் சார்பியக்கமாக இருந்தாலும் அது அப்பொருள் வேறு ஒன்றுடன் கொண்டுள்ள தொடர்பை பற்றிய ஒரு உண்மையாக மட்டுமே இருக்க முடியும்.
அறுதி/சார்பு சர்ச்சையின் புதிரான விஷயங்களில் ஒன்று என்னவென்றால் இந்த சர்ச்சை பல ஆண்டுகளை கடந்தும் முடிவடைய மறுக்கிறது. நியூட்டனின் வெளி பற்றிய கருத்து அவருடைய இயற்பியலுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. லீப்னிஸின் பார்வைகள் நியூட்டனுடைய கருத்துக்கான ஒரு நேரடி எதிர்வினை. எனவே 17ஆம் நூற்றாண்டிலிருந்து துவங்கி இயற்பியலில் அடைந்த முன்னேற்றங்கள் இச்சிக்கலை தற்போது தீர்த்திருக்கும் என ஒருவர் கருதலாம். ஆனால் அது நிகழவில்லை. ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு இந்த சிக்கலுக்கான தீர்வை லீப்னிஸுக்கு ஆதரவாக கொடுத்தது. ஒரு காலத்தில் ஐன்ஸ்டின் கொடுத்த தீர்வு பரவலாக ஏற்கப்பட்டிருந்தாலும் சமீப காலமாக இதன் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறன்றன. அசலான நியூட்டன்/லீப்னிஸ் விவாதம் நடந்து 300 வருடங்களுக்கு மேலான பிறகும் அந்த விவாதம் தொடர்கிறது.
=================
அறிவியல் தத்துவ வரலாறு பேராசிரியரான Samir Okasha எழுதிய Philosophy of science நூலில் இருந்து சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்ட பகுதி
மொழிபெயர்ப்பு: தாமரைக்கண்ணன், அவிநாசி