கலாமண்டலம் ஈஸ்வரன் உண்ணி ‘மிழாவு’ இசைக்கலைஞர். புராண
இதிகாசங்களுடன் சமகால சமூக விமர்சனமும் கலந்த ‘சாக்கியார் கூத்து’ என்ற
கதைசொல்லல் வடிவத்தை நிகழ்த்தக்கூடிய கலைஞர். ஈஸ்வரன் உண்ணி 1959ல் ஆண்டு பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணாபுரத்தில் பிறந்தார். தாய்
மண்ணம்பட்ட பார்த்தல வாரியத்து சின்னம்மு வார்யஸ்யார். தந்தை பச்சையில்
வாரியத் கிருஷ்ணன் வாரியார். 13 வயது வரை பள்ளிக்கல்வி கற்றார். அந்த
கல்வியை நிறுத்திவிட்டு ஷொர்ணூரில் உள்ள கேரள கலாமண்டலத்தில்
சேர்ந்தார். மிழாவுக்கான ஐந்து வருட கல்வி கற்ற பின்னர், மத்திய அரசின்
உதவித்தொகையில் மேலும் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கலாமண்டலத்தில் பயின்றார்.
மொத்தம் கலாமண்டலத்தில் இருந்த 8 ஆண்டுகளில் கூடியாட்டத்திற்கான மிழா
இசைபோக சாக்கியார் கூத்து, பாடகம் போன்ற கதைசொல்லல் சார்ந்த
கலைவடிவங்களையும் கற்றுக்கொண்டார். மனைவி ஷோபா, இரண்டு மகள்கள். தற்போது
ஷொர்ணூரில் வசிக்கிறார்.
மிழாவு இசை கருவி
பைங்குளம் ராமசாக்கியாரிடமும், மாணி மாதவ சாக்கியாரிடமும் சாக்கியார் கூத்தையும்,
மாணி மாதவ சாக்கியாரின் மகன் நாராயணன் நம்பியாரிடம் மிழா இசையையும்
கற்றுக்கொண்டார். சம்ஸ்கிருத இலக்கணத்தையும் காவிய நாடகங்களையும்
கற்றுக்கொடுத்தது பேராசிரியர் உண்ணிகிருஷ்ணன் இளயது. அச்சுண்ணி பொதுவாளிடமும்
செண்டை கற்றுக்கொண்டார். திமிலை என்ற தாள இசைக்கருவியை வைத்து நிகழ்த்தப்படும்
’பஞ்சவாத்திய-திமிலை’ என்ற இசைவடிவத்தை அப்பு மாராரிடமும், கோங்காடு
விஜயனிடமும் கற்றுக்கொண்டார்.
மிழாவு தனி இசை நிகழ்ச்சியில் ஈஸ்வரன் உண்ணி
1981ல் திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்கி என்ற நிகழ்த்துகலைகளை கற்றுக்கொடுக்கும்
அமைப்பில் மிழா கற்றுத்தந்த முதல் ஆசிரியர் ஈஸ்வரன் உண்ணி.
1982ல் கேரள கலாமண்டலத்தில் மிழா கற்றுத்தரும் வகுப்பில் விரிவுரையாளராக ஆனார்.
கேரள கலாமண்டலத்தின் மிழா கற்றுக்கொடுக்கும் துறையின் தலைவராக இருந்து
பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றார்.
பைங்குளம் ராமச்சாக்கியார் கூடியாட்டத்தை கேரள கோவில்களுக்குள் மட்டுமே
நிகழ்த்தப்படும் கலை என்ற நிலையை மாற்றி அதை வெளியே கொண்டுவந்தவர். அதன் பகுதியாக
1980ல் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெய்ன் போன்ற நாடுகளில் கூடியாட்டம்
நிகழ்த்தப்பட்டது. ஈஸ்வரன் உண்ணியும் அந்த கூடியாட்ட அணியில் மிழா இசைத்தார்.
மிழா, கூடியாட்டத்திற்கான பங்களிப்பிற்காக கேரள சங்கீத நாடக அகாதமி விருதையும்,
2014ல் சாக்கியார் கூத்திற்கான கலாசாகர் விருதையும் பெற்றார்.
‘மிழா’ சாக்கியார் கூத்திற்கும், கூடியாட்டத்திற்கு பின்னணி இசைக்கருவியாக
மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. 1993ல் ஈஸ்வரன் உண்ணி மிழாவை வைத்து தனி
இசைவெளிப்பாடான மிழா தாயம்பகாவை நிகழ்த்தினார். 2005ல் மிழாவின் எல்லாவகையான
தாளவகைமைகளும் அவற்றின் சாத்தியங்களையும் நிகழ்த்திக்காட்டும் ‘’மிழா கேளி’’ என்ற
கலைவடிவத்தை உருவாக்கினார். மிழாவின் அழகியல் சாத்தியங்களையும், அந்த கருவியின்
தொழில்நுட்ப அம்சங்கள், தாளவடிவங்களை ஆராய்ந்து மிழவொலி என்ற நூலையும்
எழுதியிருக்கிறார்.
ஈஸ்வரன் உண்ணி
உங்களுக்கு மிழாவு மீதான ஆர்வம் எப்படி உருவாகியது?
ஆரம்பத்தில் எனக்கு மிழா கற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இல்லை.
பள்ளிக்கல்வியில் எனக்கு ஆர்வமே இல்லை, ஆசிரியர்கள் என்னை எப்போதும்
கிண்டல் செய்தபடியே இருந்தார்கள். எனக்கு கலைஞனாக ஆகவேண்டும் என்றுதான் ஆசை. நான் முதலில் ’கோட்டக்கல் பிஎஸ்வி நாட்டிய சங்கத்தில்’ கதகளிக்கான
பின்னணி இசைக்கருவியான செண்டை படிப்பதற்கான நேர்முகத்தேர்விற்கு போனேன்.
(கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை கதகளி கற்றுத்தரும் நிறுவனம் ஒன்றை நடத்துகிறது, அதன் பெயர் பி.எஸ்.வி நாட்டிய சங்கம்). என்னை அவர்கள் தேர்வு
செய்யவில்லை. பின் ’கலாநிலையம்’ போனேன். (இரிஞ்ஞாலக்குடாவில் உள்ள
கூடல்மாணிக்கம் கோவில் ’கலாநிலையம்’ என்ற நிகழ்த்துகலை கற்றுத்தரும் நிறுவனத்தை
நடத்துகிறது. கேரளத்தில் சில முக்கியமான கோவில்களில் அவற்றிற்கான கதகளி
கற்றுத்தரும் நிறுவனமும், கதகளி நிகழ்த்தும் அணியும் இருக்கும்). நான்
செல்வதற்கு ஒருநாள் முன்பே நேர்முகத்தேர்வு முடிந்துவிட்டிருந்தது. பின்
குருவாயூரில் கதகளிக்கான முன்னோடி வடிவமான ‘கிருஷ்ணனாட்டம்’ என்ற
நிகழ்த்துகலையை கற்றுக்கொள்வதற்காக போனேன், அங்கு என்னை
தேர்வுசெய்யவில்லை. என் சொந்த ஊர் பாலக்காடு அருகே ஸ்ரீகிருஷ்ணாபுரம். இவ்வளவு இடங்களுக்கு நேர்முகத்தேர்விற்கு போய்
எங்குமே இடம் கிடைக்காதது எனக்கு பெரிய வருத்தமாக இருந்தது. பள்ளிப்படிப்பை
தொடரவும் விருப்பமில்லை. ஏதாவது ஒரு கலையை கற்றுக்கொள்ளவேண்டும் என்று
பிடிவாதமாக இருந்தேன். அப்பாவுக்கும் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை.
கலாமண்டலத்தில் செண்டை கற்றுத்தருகிறார்கள் என்ற அறிவிப்பு
செய்தித்தாளில் வந்தது. கலாமண்டலத்தில் கூடியாட்டம் கற்பிக்கும்
ஆசிரியர், மிழா இசையில் நிபுணத்துவம் கொண்ட பி.கெ. நாராயணன் நம்பியார்
என் தந்தையின் நண்பர். அதனால் எனக்கு கலாமண்டலத்தில் கூடியாட்டத்திற்கான மிழா
இசையை கற்றுக்கொள்ளும் வகுப்பில் இடம் கிடைத்தது. நான் அங்கு சேர்ந்தது
என் பதிமூன்றாவது வயதில். நான் அதைக்கற்றுக்கொண்டதன் பின்னணியை சொல்கிறேன்.
நான் கேரளத்தில் ஆலயத்தை அடிப்படையாகக்கொண்ட அம்பலவாசிகள் என்ற பிரிவில்
வாரியார் சாதியை சேர்ந்தவன். கூடியாட்டத்தை சாக்கியார் சாதியை
சேர்ந்தவர்கள் மட்டுமே நிகழ்த்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. கூடியாட்டத்திற்கான இசைக்கருவியான மிழாவை ’நம்பியார்’ சாதியை
சேர்ந்தவர்கள் மட்டுமே இசைக்க அனுமதி இருந்தது. கூடியாட்டத்தை ஆலயத்தில்
மட்டுமே நிகழ்த்தவேண்டும். குறிப்பிட்ட சாதிகளில் மட்டும் நிகழ்த்த அனுமதி
இருந்ததால் 1900களில் கூடியாட்டம் தேங்கிப்போன கலைவடிவமாக
ஆகிவிட்டிருந்தது. கூடியாட்டம் பற்றி பேசும்போது அதைப்பற்றி விரிவாக
சொல்கிறேன். அந்த தேக்கநிலையிலிருந்து கூடியாட்டத்தை மீட்டவர்கள் கூடியாட்ட
கலைஞர் மாணி மாதவ சாக்கியாரும்(1899-1990) அவரது மகன் பி.கெ.நாராயணன்
நம்பியாரும்தான்(1927-2023). சாக்கியார் சாதி அல்லாதவர்களும் கூடியாட்டம்
கற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மாணி மாதவ சாக்கியார் கலாமண்டலத்தில்
தொடங்கினார். கோவிலுக்கு வெளியே கூடியாட்டத்தை நிகழ்த்தினார். இந்த முயற்சி
ஆரம்பக்கட்டத்தில் பழமைவாதிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. மாணி மாதவ
சாக்கியார் சாதிவிலக்கம் செய்யப்பட்டார். ஆனால் ‘கலாமண்டலம்’ என்ற அமைப்பிற்கு
கேரளத்தின் முக்கியமான கலைஞர்களின், லட்சியவாதிகளின், அரசியல் ஆளுமைகளின்,
நிலவுடைமையாளர்களின் ஆதரவும் இருந்ததால் ஓரளவுக்கு மேல் எதிர்ப்புகள்
நீடிக்கவில்லை.
அந்த மீட்டுருவாக்கத்தின் பகுதியாகத்தான் பி.கே.நாராயணன் நம்பியார்
மிழா இசையை நம்பியார் சாதி அல்லாத பிறரும் கலாமண்டலத்தில் தன்னிடம்
கற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். நான் கலாமண்டலத்தில் சேர்ந்தது
அந்த அறிவிப்பை பார்த்துதான்.
பி.கே.நாராயணன் நம்பியார்
நான் கலாமண்டலத்தில் 1972ல் சேர்ந்தேன். என்னைத்தவிர யாருமே மிழாவு
கற்றுக்கொள்வதற்கு வரவில்லை. எனக்கு முன் ஒரே ஒருவர், நம்பியார் ஜாதியை
சேர்ந்தவர், படிப்பை முடித்துவிட்டு கிளம்பிவிட்டார். எனக்குமே மிழா
கற்றுக்கொண்டால் என்ன கிடைக்கும் என்று ஒன்றும் தெரியாது. எனக்கு நல்ல
ஆசிரியர்கள் அமைந்தார்கள். என் ஆசிரியர் பி.கே.நாராயணன் நம்பியாரிடம்
நான் மிழா கற்றுக்கொண்ட நாட்கள் மிகத்தீவிரமானவை. மிழா இசை என்று தனியாக ஒன்று
இல்லை. அது கூடியாட்டம் நிகழ்த்தும்போது அதன் பின்னணியில்
இசைக்கப்படுவது. கூடியாட்டத்தில் கதாபாத்திரத்தின் அபிநயத்தில் உள்ள நுண்ணிய மாறுபாடுகளுக்கு ஏற்ப மிழா இசையின் தாளம்
மாறவேண்டும். கதைசந்தர்ப்பத்தின், கதாபாத்திர மனநிலையின் நுட்பங்களை
உணர்த்தும்படி மிழா இசைக்க வேண்டும். கதாபாத்திரத்தின் கைமுத்திரையின், உடல்மொழியின், கண்ணசைவின், முக அசைவுகளின் சலனம் ஒலிவடிவில் மிழாவில்
திகழவேண்டும். சில கதைச்சந்தர்ப்பங்களில் கதாபாத்திரம் தன் அபிநயத்தால் நிகழ்த்தமுடியாத நுண்மைகளை, மிழா இசை தன் தாளம் வழியாக நிகழ்த்தும். அதனால்
மிழா இசை கற்றுக்கொள்வது என்பது வெறும் இசைப்பயிற்சி என்பதாக மட்டுமல்லாமல்
அதன் பகுதியான கூடியாட்டத்தின் அபிநய சாத்தியங்களையும், சம்ஸ்கிருத
நாடகங்களின் இலக்கியத்தன்மையையும் கற்றுக்கொள்ள முடிந்தது.
கேரள கலாமண்டலத்தில் மட்டும் மொத்தம் 8 ஆண்டு கற்றேன். இங்கேயே ஆசிரியராக
ஆகிவிட்டேன். நடுவில் ஒரு வருடம் திருவனந்தபுரத்தில் உள்ள ’மார்கி’ என்ற
செவ்வியல் நிகழ்த்துக் கலைகளை கற்றுத்தரும் நிறுவனத்தில் மிழா இசையை
கற்பித்தேன். 1981ல் மீண்டும் கலாமண்டலத்திற்கே வந்துவிட்டேன்.
கேரளத்தில் முதல்முறையாக நம்பியார் சாதி அல்லாத வேறு ஜாதியை
சேர்ந்தவர்களில் மிழா கற்றுக்கொண்டது நான்தான். நம் பழைய மரபில்
பிராமணர், ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என நால்வருணங்களாக பிரித்தார்கள். இன்று நவீன இந்தியாவில் OBC, SC, ST என்ற பிரிவுகள் உண்டு. அப்படி பழைய, புதிய
பிரிவினைகளில் எல்லா பிரிவைச்சேர்ந்தவர்களும் மிழா இசையை கற்றுக்கொள்ள
என்னிடம் வருகிறார்கள். கர்நாடகத்திலிருந்து ஒரு இஸ்லாமிய மாணவன் படிக்க
வந்தான். கூடியாட்டக்கலைஞர் மார்கி மது சாக்கியார் என் மாணவர்தான்.
மாணிமாதவ சாக்கியார்
உங்கள் ஆசிரியர்கள் பற்றி சொல்லுங்கள்?
நான் மிழா கற்றுக்கொண்டது ஆசிரியர் நாராயணன் நம்பியாரிடம். அவர்
தந்தை கூடியாட்ட கலைஞர் மாணி மாதவ சாக்கியார். மாணி மாதவ
சாக்கியாரிடமும், பைங்குளம் ராம சாக்கியாரிடமும் நான் சாக்கியார்
கூத்தை கற்றுக்கொண்டேன். மாணிமாதவ சாக்கியார் கூடியாட்டம், சாக்கியார்
கூத்து இரண்டிலுமே நிபுணர். கதகளி கலைஞர் கிருஷ்ணன்நாயருக்கு அவர் முக
அபிநயமும், கண் அபிநயமும் கற்றுத்தந்தார் .
கலாமண்டலத்தில் 1965லிருந்து கூடியாட்டம் கற்றுத்தர ஆரம்பிக்கிறார்கள். நான்
1972ல் சேர்கிறேன். நான் வந்து சேர்ந்தது செண்டை கற்றுக்கொள்வதற்காக, ஆனால்
என்னை மிழா கற்றுக்கொள்ள சேர்த்துவிட்டார்கள். என்னுடன் சேர்ந்து படித்தது நாணு சாக்கியார், அவர் கூடியாட்ட அபிநயம் கற்றுக்கொண்டார். நானும்
அவரும் மட்டும்தான். வேறு யாரும் கற்றுக்கொள்ளவரவில்லை. கூடியாட்டம்
கற்றுக்கொள்பவர்கள் சமஸ்கிருதம் படிக்கவேண்டும். அமரகோசம், பால பிரபோதனம்,
பஞ்சமகா காவியங்கள், பின் சமஸ்கிருத நாடகங்கள், ஆஸ்சர்ய சூடாமணி,
தோரணயுத்தம், பாலிவதம் போன்ற கூடியாட்டத்திற்கு தேவையான நாடகங்கள், பின்
கைமுத்திரைகள், முக அபிநயம், கண் சாதகம், நவ ரசங்களை வெளிப்படுத்துதல் ஆகியவை
கற்றுக்கொள்ள வேண்டும். நான் இரண்டு வருடங்கள் கூடியாட்டத்தில் அபிநயம்
கற்றுக்கொண்டேன். பின் மிழா இசையை கற்றுக்கொண்டேன். சாக்கியார் கூத்திற்கான
பிரபந்தங்களும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
நீங்கள் ஏன் தொடர்ந்து கூடியாட்ட அபிநயம் கற்றுக்கொள்ளவில்லை?
எனக்கு மிழா இசைப்பதில்தான் ஆர்வம் இருந்தது. ஆனாலும் எனக்கு கூடியாட்டத்தின்
எல்லாவகையான கை முத்திரைகளும் தெரியும், எல்லா வகையான முக
அபிநயங்களையும் எப்படி நிகழ்த்தவேண்டும் என்றும் தெரியும்.
ஈஸ்வரன் உண்ணி
கூடியாட்டம் தவிர மிழாவு வேறு என்னென்ன சடங்குகளுக்கு
பயன்படுத்தப்பட்டிருந்தது? கேரளத்தின் இசைக்கருவிகளான இடைக்கா, செண்டை,
குறுங்குழல், திமிலை போன்றவை கோவில் வழிபாட்டின் பகுதியாகவும் உள்ளன.
மிழா கோவில் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறதா?
இல்லை. மிழா எந்த சடங்கிற்கும் பயன்படுத்தப்படுவதில்லை. அது சாக்கியார் கூத்து,
கூடியாட்டம், நங்கையார்கூத்து இந்த மூன்று கலைவடிவங்களுக்கு மட்டுமே
பயன்படுத்தப்பட்டது. அந்த வழக்கத்தை மாற்றியவர் என் ஆசிரியர் பி.கே.நாராயணன்
நம்பியார். கர்நாடக சங்கீதத்தில் குரலிசையில் கச்சேரி நிகழ்த்துவது போல இங்கு
கேரளத்தில் செண்டை என்ற தாளக்கருவியை வைத்து தாளக்கச்சேரி
நிகழ்த்தப்படும். அதற்கு தாயம்பகா என்று பெயர். அது இல்லாமல் மத்தளம்,
இடைக்கா, திமிலை, இலைத்தாளம், கொம்பு போன்ற இசைக்கருவிகள் இணைந்து
பஞ்சவாத்தியம் என்ற இசைவடிவமும் உண்டு.
அவ்வாறு மிழாவை வைத்து தாயம்பகா நிகழ்த்திப்பார்க்கலாம் என்ற எண்ணத்தில்
என் ஆசிரியார் நாராயணன் நம்பியார் மிழா தாயம்பகாவை 1993 ஆம் ஆண்டு
நிகழ்த்தினார். அப்படி கூடியாட்டத்திற்கும் சாக்கியார் கூத்திற்கும் மட்டுமாக
இசைக்கருவியாக இருந்த மிழா தனி இசைக்கருவி என்ற அந்தஸ்தை இந்த தாயம்பகா
நிகழ்வு வழியாக அடைந்தது. தொடர்ச்சியாக மிழா தாயம்பகா இன்றும்
நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
தாயம்பகா நிகழ்வு
நீங்களும் மிழாவில் நிறைய புதிய முயற்சிகள் செய்திருக்கிறீர்கள்..
ஆமாம் தாயம்பகாவை தொடர்வது மட்டுமில்லாமல் நான் சில புதிய இசை வடிவங்களையும்
மிழா வழியாக நிகழ்த்திப்பார்த்திருக்கிறேன்.
இங்கே மத்தளத்தை வைத்து மட்டும் நிகழ்த்தப்படும் கேளி என்ற இசைவடிவம் உண்டு. கேரள இசைமரபில் கர்நாடக சங்கீகத்தில் உள்ள தாளங்களுடன்
சேர்ந்து தனியான புதிய சில தாளவகைமைகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். அப்படி
இங்குள்ள தாள வகைமைகளில் ஒன்றான செம்பட தாளத்தையும் அதன்
சாத்தியங்களையும் நிகழ்த்திக்காட்டுவதுதான் கேளி என்ற இசைவடிவம்.
ஐந்து மத்தளங்கள் கொண்ட பஞ்ச மத்தள கேளி அல்லது பத்து மத்தளங்கள் கொண்ட
தசமத்தள கேளி உண்டு. இந்த இசைவடிவத்தை மத்தளத்திற்கு
பதிலாக மிழாவை வைத்து நிகழ்த்தலாமே என்று யோசித்தேன். கூடியாட்டக்கலைஞர் பைங்குளம் ராமச்சாக்கியாரின் 25ஆம் ஆண்டு நினைவு விழாவில்
கலாமண்டலத்தில் அதை நானும் வேறு சில மிழா இசைக்கலைஞர்களும் இணைந்து
‘மிழா கேளி’ நிகழ்த்தினோம்.
மிழாவில் எல்லாவகையான தாள சாத்தியங்களையும், மிழா இசையை ஒரு தனி
இசை வெளிப்பாடாக, சுதந்திரமாக, எந்த துணை இசைக்கருவிகளும் இல்லாமல் நிகழ்த்தமுடியுமா என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அதை ‘மிழா ஒலி’
என்ற பெயரில் 2001ஆம் ஆண்டு பைங்குளம் ராமச்சாக்கியாரின் நூறாவது
பிறந்தநாள்விழாவில் ஒருங்கிணைத்தேன்.
கேரளத்தில் தாளவாத்தியங்களை வைத்து, குறிப்பாக செண்டையை பிரதானமான
இசைக்கருவியாக பயன்படுத்தி, கோவில் உற்சவங்களில் ’மேளங்கள்’ என்ற
நிகழ்வு உண்டு. பஞ்சாரி மேளம், பாண்டி மேளம் போன்ற கூட்டான
இசைவடிவங்களில் கிட்டத்தட்ட ஐம்பதிலிருந்து நூறு வரை இசைக்கலைஞர்கள்
பங்கேற்பார்கள். 2007ஆம் ஆண்டு பஞ்சாரி மேள நிகழ்வில் செண்டை, இலைத்தாளம்,
குறுங்குழல் போன்ற இசைக்கருவிகளுடன் மிழாவை இணைத்தேன்.
கேரளத்தில் நிறைய தாளவாத்தியக்கருவிகள் உண்டு. அவற்றை இணைத்து கூட்டான
கலைவடிவமாகவும், தனிக்கலைஞர்களின் வெளிப்பாடுகளாகவும் வெவ்வேறான கலைவடிவங்கள்
உண்டு. ஆனால் இந்த இசைக்கருவிகளில் மிழா உட்படவே இல்லை. அவ்வளவு புராதானமான
தாளவாத்திய கருவியை வைத்து எந்த இசைவடிவமும் உருவாகவில்லை என்பது பெரிய
இழப்பு. ஒருவகையில் என் ஆசிரியர் நாராணயன் நம்பியாரும் நானும் மிழா சார்ந்த
இசைவடிவங்களை நிகழ்த்துவது வழியாக அந்த இழப்பை நிகர்செய்ய முயற்சித்தோம்
என்று சொல்லலாம்.
குடும்பத்துடன் ஈஸ்வரன் உண்ணி
'மிழா ஒலி’ என்ற நூலை நீங்கள் எழுதியுள்ளீர்கள் அந்த நூல் பற்றி விரிவாக
சொல்லமுடியுமா?
அந்த நூல் 2009ம் ஆண்டு வெளியானது. மிழா பற்றி பேராசிரியர்களும் வெளிநாட்டு
ஆய்வாளர்களும் ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதியிருக்கலாம், தெரியவில்லை. ஆனால்
மிழா இசைப்பவர்கள் அதில் நிபுணத்துவம் கொண்டவர்கள்கூட அதை புத்தகமாக
எழுதவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அல்ல. மிழா இசையைப்பற்றி
தர்க்கபூர்வமான கருத்துகளுடன், அதிகாரப்பூர்வமான தகவல்களுடன் நான் ஒரு நூல்
எழுதினால் அது பின்வரும் தலைமுறைக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்று
தோன்றியது. மிழா என்ற இசைக்கருவியின் தொழில்நுட்பம் சார்ந்த
தகவல்களும், வரலாற்றில் அது உருவாகிவந்த பின்னணியையும், அதன்
உருமாற்றங்களையும் அந்த நூலில் விரிவாக விளக்கியிருக்கிறேன். முக்கியமாக மிழா
இசையின் அழகியல்ரீதியான சாத்தியங்களை, அது கூடியாட்டத்திற்கு செய்யக்கூடிய
பங்களிப்பு, அதன் தாள சாத்தியங்கள் இவை சார்ந்த என் அனுமானங்களையும்,
என் ஆசிரியர்களின் கருத்துகளையும் அதில் விரிவாக பேசியிருக்கிறேன். நான்
கிட்டத்தட்ட நாற்பது வருடம் மிழா இசையிலேயே புழங்கியவன், அதன்
கலைஞர்களை அறிந்தவன், அந்த அனுபவங்கள் இந்த நூலை எழுத உதவியாக
இருந்தது.
மிழா பற்றி பழைய இலக்கியங்களில் குறிப்பு உண்டா?
சிலப்பதிகாரத்தில் மிழாவு பற்றியும் குறிப்பு உண்டு. நீங்கள் தமிழில் அதை
முழவு என்று சொல்வீர்கள். இங்கு மலையாளத்தில் கண்ணச்ச ராமாயணத்திலும்,
சாரங்கதேவரின் சங்கீத ரத்னாகரம் என்ற நூலிலும் மிழாவு பற்றி
குறிப்பிடப்படுகிறது, இசைக்கருவிகளிலேயே மிகமிக பழைமையானது
மிழாதான்.
கேரளத்தில் முழக்குன்னு(முழக்குன்று) என்ற ஊர் இருக்கிறது, அதன் பெயர்
மருவியிருக்கிறது. அந்த ஊரின் பழைய பெயர் மிழாக்குன்னு(மிழாக்குன்று). அதற்கு
முன்பு அந்த ஊருக்கு ‘ம்ருதங்க சைலம்’ என்று பெயர். ம்ருத+ அங்கம் என்றால்
ம்ருத் = மண், அங்கம் = அமைப்பு. மண்ணால் செய்யப்பட்டது என்று பொருள்.
மிழாவைத்தான் அந்த ஊர் குறிக்கிறது. இப்போதைய மிழா தாமிரம், செம்பு
போன்ற உலோகக்கலவையால் உருவாக்கப்படுகிறது. ஆனால் மிகப்பழைய காலத்தில் மிழா
களிமண்ணால்தான் செய்யப்பட்டது.
கடம் என்ற இசைக்கருவியும் மண்ணால் செய்யப்பட்டதுதானே?
ஆனால் கடம் மிகச் சமீபத்தில் உருவான இசைக்கருவி. மிழா மிகமிகப்பழைய
இசைக்கருவி. இசைக்கருவிகளிலேயே மேலே வானைப்பார்த்து இருக்கும் கருவி
மிழாதான். மிருதங்கம், மத்தளம் போன்ற இசைக்கருவிகள் பக்கவாட்டில்
இசைப்பவை. கடம் நேர் தலைகீழாக. மிழாவு விண்ணைப்பார்த்தபடி சுயம்புவாக
உருவானது என்பது எங்கள் நம்பிக்கை. கேரள நம்பிக்கைப்படி மிழா பிராமணன்,
நித்யபிரம்மச்சாரி. பிரம்மச்சர்யம் அனுஷ்டித்து ஓம் என்ற பிரணவ
மந்திரத்தால் நாதப்பிரம்மத்தை உபாசனை செய்யும் ஒரே வாத்தியம்.
நான் சொன்ன முழக்குன்னு என்ற ஊரில் மிருதங்க சைலேஸ்வரி என்ற தேவி கோவில்
உண்டு. கதகளி ஆட்டக்கதைகளை எழுதிய கோட்டயம் தம்புரானின் ஊர் (இது பழசிராஜா
குடும்பத்தை சேர்ந்த வடகேரளத்தில் தலச்சேரிக்கு அருகே உள்ள கோட்டயம்
அரசகுடும்பம், தெற்குகேரளத்தில் உள்ள கோட்டயம் அல்ல). மிழாவ் அங்கு தோன்றியது,
சுயம்புவாக. அங்குள்ள பகவதியின் பெயர் ’போர்க்கலி’. கதகளி தொடங்கும்போது
பாடப்படும் கடவுள் வாழ்த்துப்பாடலான “மாதங்கானனம்“ என்ற பாடலில் போர்கலி
என்ற பகவதி குறிப்பிடப்படுகிறாள். இப்படி இந்த பகவதி தெய்வம் மிழாவோடு
தொடர்புபடுத்தப்படுவது போல பாணாசுரன் ஆயிரம் கைகளால் மிழா இசைத்ததான் என்ற
தொன்மமும் உண்டு. அந்த தொன்மம் குஞ்சன் நம்பியாரின் துள்ளல் பாடல்களில்
குறிப்பிடப்படுகிறது.
மிழாவு இசைக்கும் பாணாசுரன் - சிதம்பரம்
பாணாசுரன் தொன்மைக்கதையை விரிவாக சொல்லமுடியுமா?
பாணாசுரன் சிவபக்தன், அவன் கேரளத்தில் மூன்று சிவன்கோவில்களை உருவாக்கினான்
என்ற நம்பிக்கை உண்டு. கடுத்துருத்தி, வைக்கம், ஏற்றுமானூர். அந்த மூன்று
கோவில்களின் அளவும் நிகரானது. ஒரே சமயத்திலேயே அவன் மூன்று கோவில்களிலும்
சிவலிங்கத்தை நிறுவினான். தன் இரண்டு கைகளால் வைக்கத்திலும் ஏற்றுமானூரிலும்
சிவலிங்கத்தை நிறுவினான். அதேசமயம் கடுத்துருத்தியில் அவன் தன் வாயாலும்
சிவலிங்கத்தை ஸ்தாபித்தான். தனது பக்தியால் சிவனை தன் கோட்டையின் காவலுக்கு
அமர்த்தியவன். பாணனுக்காக சிவன் விஷ்ணுவிடம் போர்புரிந்ததாக கதைகள்
உண்டு.
ஒருமுறை சிவன் தாண்டவம் ஆடும்போது சிவபக்தனான பாணன் மிழா இசைத்தான், இதுவரை
எங்கும் கேட்டிராத அற்புதமான இசை. சிவன் மகிழ்ந்துவிட்டார். உனக்கு
மிழாவிசைக்க ஆயிரம் கைகள் உருவாகட்டும் என்று வாழ்த்துகிறார். அன்றிலிருந்து
சிவன் ஆடும்போதெல்லாம் பாணன் தன் ஆயிரம் கைகளாலும் மிழா இசைக்கிறான். இது
இங்குள்ள தொன்மம், இந்தக்கதைகளுக்கெல்லாம் மூலம் எதுவென்று எனக்குத்தெரியாது.
மிழாவு இசைக்கும் பாணாசுரன் - கங்கை கொண்ட சோழீச்சரம்
கூடியாட்டம் என்ற கலை பற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா?
சமஸ்கிருத நாடகங்களை விரிவான கைமுத்திரைகளுடன், கண்ணசைவுகளும், முக
அசைவுகளும் கொண்ட அபிநயத்துடன், ஒப்பனையுடன் அரங்கில் நிகழ்த்துவது தான்
கூடியாட்டம். கூடியாட்டம் மூன்று பகுதிகளால் ஆனது: முதலில்
பிரபந்தக்கூத்து. இதில் அபிநயம் இல்லை, இது ஒரு கதைசொல்லல் வடிவம். அதை
நிகழ்த்துவது அங்கதத்தை பிரதான இயல்பாக கொண்ட ‘விதூஷகன்’ என்ற
கதாபாத்திரம். இந்து புராண இதிகாசங்களையும், அரசாட்சி, விவசாயம், நெறிகள்,
களியாட்டம், உணவு என பொதுவான விஷயங்களையும் அங்கதத்துடன், விமர்சனங்களுடன்
அரங்கில் சொல்வதுதான் பிரபந்தகூத்து. இரண்டாவது, நங்கையார் கூத்து. இதில்
நம்பியார் சாதியை சேர்ந்த பெண்கள் நிகழ்த்தும் தனிநபர் அபிநயம். இந்திய
புராணங்களின் வெவ்வேறு கதைச்சந்தர்ப்பங்களை (காளிய மர்த்தனம், அகலிகை
மோட்சம்) அபிநயங்களால் நிகழ்த்துவார்கள். மூன்றாவது, கூடியாட்டம். இதுதான்
நேரடியாக சமஸ்கிருத நாடகத்தை அபிநயத்துடன் நிகழ்த்துவது, இதில் சூத்ரதாரன்
என்ற பிரதான கதாப்பாத்திரமும் மற்ற கதாப்பாத்திரங்களும் உண்டு.
கைமுத்திரைகளுடன், முகபாவங்களுடன் விரிவாக நிகழ்த்தப்படுவது.
கூடியாட்டத்தில் கதாபாத்திரங்களுக்கு இடையேயான உரையாடல் நீளமான
சம்ஸ்கிருத வரிகளால் ஆனது. அதை அபிநயிப்பவர் சொல்லிக்கொண்டே கைமுத்திரைகளுடன்
அபிநயமும் பிடிக்கவேண்டும். பின்னணியில் கதாபாத்திரத்தின் அபிநயத்திற்கும்,
அதன் மனநிலைக்கும் ஒத்திசையும்படி மிழா இசைக்கப்படும். இந்த மூன்றையும்
(பிரபந்தகூத்து, நங்கையார்கூத்து, கூடியாட்டம்) சேர்ந்து கூடியாட்டம்
என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கூடியாட்டமும் சுமார் 40 நாட்கள்
தொடர்ச்சியாக இரவில் நிகழும். இன்று அவ்வளவு நாட்கள் கூடியாட்டம்
நிகழ்த்தப்படுவதில்லை. கூடியாட்டத்தின் கதைசொல்லல் வடிவமான பிரபந்தகூத்து
இன்று நிகழ்த்தப்படுவதில்லை. இன்று நங்கையார்கூத்து தனி கலைவடிவமாக தனியாக
மேடைகளில் நிகழ்த்தப்படுகிறது. இன்றைய மொத்த கூடியாட்டமும்
நான்குமணிநேரம்தான். வெறுமனே அபிநயம் சார்ந்த பகுதி மட்டும்தான்
இன்று நிகழ்த்தப்படுகிறது.
கூடியாட்டம்
கூடியாட்டம் இப்போது எந்த நிலையில் இருக்கிறது? கதகளி போல அவ்வளவு அதிக
கூடியாட்ட நிகழ்வுகள் இன்று இல்லை என்றுதான் தோன்றுகிறது?
இப்போது ஓரளவு கூடியாட்டம் மீட்கப்பட்டுவிட்டது. ஆனால் கதகளி அளவுக்கு
அதற்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதால் கதகளி போல கூடியாட்டம்
தொடர்ந்து நிகழ்த்தப்படுவதில்லை. 1970களில் நான் கலாமண்டலத்தில் சேர்ந்த
காலத்தில் கூடியாட்டதின் நிலை மிக மோசமாக இருந்தது. அதற்கு முன்பு நிலவுடைமை வலுவாக இருந்த காலத்தில் கூடியாட்டமும் சாக்கியார்கூத்தும்
மிகப்பிரபலமான செவ்வியல் நிகழ்த்துகலைகள். திரிச்சூர் வடக்குநாதன் சிவன்
கோவிலிலும், இரிஞ்ஞாலக்கூடாவில் உள்ள கூடல்மாணிக்கம் கோவிலிலும், குருவாயூர்
கோவிலிலும் கூத்தம்பலம் உண்டு. அங்கு மட்டுமே கூடியாட்டத்தை
நிகழ்த்தவேண்டும். பிராமணர்களும், அம்பலவாசி சாதிப்பிரிவை சேர்ந்தவர்களும்
மட்டுமே பார்க்க அனுமதி இருந்தது. நிலவுடைமை சாதியான நாயர்களுக்குகூட ஆலய
நுழைவு அனுமதி இல்லாத கோவில்களில்தான் கூடியாட்டம் நிகழ்ந்தது.
கூடியாட்டத்தின் அபிநயத்தை சாக்கியார் சாதி ஆண்கள் மட்டுமே
கற்றுக்கொள்ள முடியும்.கூடியாட்டத்தில் பெண் கதாபாத்திரங்களையும், அதிலுள்ள நங்கையார் கூத்து
என்ற தனி அபிநயப்பகுதியையும் நம்பியார் சாதிப்பெண்களான
’நங்கையார்கள்’தான் கற்றுக்கொள்ளமுடியும். சாக்கியார் சாதிப்பெண்களான
‘இல்லோத்தம்மா’க்களுக்கு கூடியாட்டத்தில் அனுமதி இல்லை. விசித்திரமான
வழக்கம்.
சாக்கியார் சாதி ஆண்களும், நம்பியார் சாதி பெண்களும் நிகழ்த்தும்
அபிநயம். நம்பியார் சாதி ஆண்கள் மிழா இசைக்கவேண்டும். அவர்களுக்கு
அபிநயத்தில் அனுமதி இல்லை. சாக்கியார் சாதிப்பெண்களுக்கு எதிலுமே அனுமதி
இல்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல 1950ஆம் ஆண்டு மாணி மாதவ சாக்கியார்
கூடியாட்டத்தை ஆலயங்களுக்கு வெளியே கொண்டுவந்தார், கலாமண்டலத்தில் அதை
அனைவரும் கற்கும்படி செய்தார். இது வெளியே நிகழ்ந்த மாற்றம்.
இன்னொருபக்கம் கூடியாட்டம் வெறும் ஆலயச்சடங்குபோல
நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்தது. அதன் கலைப்பெறுமதி இல்லாமலாகிக்
கொண்டிருந்தது. கூடியாட்டத்தில் அபிநயித்த கலைஞர்களின் அடுத்தடுத்த
தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு அதை கலைவடிவமாக உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டும்
என்ற அக்கறை இல்லாமலானது. மாணி மாதவ சாக்கியார் கலாமண்டலத்தில் அதை கற்றுத்தர
ஆரம்பித்தபிறகுதான் கலைத்தன்மை கொண்ட வடிவமாக கூடியாட்டம் இன்று
எஞ்சியிருக்கிறது. 40 நாட்கள் நிகழ்ந்துகொண்டிருந்த கூடியாட்டங்களை 6
மணிநேரம் செறிவாக நிகழ்த்தும்படி அவர் முறைமைப்படுத்தினார். அவரது
வழியில் அவரது மகனும் என்னுடைய ஆசிரியருமான பி.கே.நாராயணன்
நம்பியாரும் மிழா இசையை முறைமைப்படுத்தினார்.
கூடியாட்டம்
கூடியாட்டத்தில் நிகழ்ந்த முறைமைப்படுத்துதல் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக
சொல்லமுடியுமா?
1900களின் கூடியாட்டத்தின் நிலையை சொல்கிறேன். இதை நான் சொல்லவில்லை, என்
ஆசிரியர்கள் எனக்கு சொன்னதை சொல்கிறேன். ஒரு கோவிலில்
கூடியாட்டம் நிகழ்கிறது என்றால் அதை அபிநயிக்கும் சாக்கியார் ஒருபகுதியை
சேர்ந்தவராக இருப்பார், மிழா இசைக்கும் நம்பியார் வேறொரு பகுதியை சேர்ந்தவராக
இருப்பார், நங்கையார் வேறொரு பகுதியிலிருந்து வருவார். (கூடியாட்டத்தில் மிழா
இசைக்கு துணை இசையாக இலைத்தாளம் பயன்படுத்தப்படுகிறது. அதை இசைப்பது
நங்கையார் பெண்கள்). நங்கையார் தன் இலைத்தாளத்தில் தனியாக தாளம்
பிடித்துக்கொண்டிருப்பார். மிழா வேறொரு தாளத்தில்
இசைக்கப்பட்டுக்கொண்டிருக்கும், அபிநயிப்பவர் அவருக்கே உரிய தனி தாளத்தில்
அபிநயித்துக்கொண்டிருப்பார். எந்த கவனமும் இல்லாமல் அவரவர்போக்கில் ஆட்டத்தை
நிகழ்த்திக்கொண்டிருப்பார்கள். அதை முறையாக கற்றிருக்கமாட்டார்கள்.
கூத்தம்பலம் உள்ள கோவில்களில் கூடியாட்டம் கண்டிப்பாக நிகழ்த்தப்பட வேண்டும்,
அந்த காரணத்திற்காக மட்டும் மரியாதையுடனும் பக்தியுடனும் கிட்டத்தட்ட
அனுஷ்டானம் மாதிரிதான் செய்தார்கள். கூடியாட்டத்தில் அபிநயிக்கும்
சாக்கியாரின் கைமுத்திரைகள் இயந்திரத்தனமாக நூல் சுற்றுவதுபோல
நிகழ்ந்துகொண்டிருந்தது. அதை நூல் சுற்றுதல் என்று கிண்டலாக சொல்வார்கள்.
கைமுத்திரையும் முக அபிநயமும் ஒத்திசையாமல், எந்த ஃபாவத்தையும்
வெளிப்படுத்தாமல் நிகழ்த்தப்படுகிறது என்று அர்த்தம். கூடியாட்ட அபிநயத்தை
ஒத்திசைவுகொண்டதாக, பாவம் சார்ந்ததாகவும் அதன் செவ்வியல் வடிவை மீட்டது மாணி
மாதவ சாக்கியார்தான். ’நாட்டிய கல்பத்ருமம்’ என்ற கூடியாட்ட அபிநயம் சார்ந்த
நூலை எழுதினார். ஒருவகையில் கலாமண்டலம் என்ற நிறுவனம்தான் அந்த மீட்பை
மேற்கொள்ள உதவியாக இருந்தது.
மிழா இசையிலும் இதுதான் நிலை. ஒரே தாளம், சுத்தமாக கலைத்தன்மையே இல்லாதபடி
நிகழ்ந்துகொண்டிருந்தது. கூடியாட்டத்தில் ஏழுவகையான தாளங்கள்
பயன்படுத்தப்படும். முறையாக கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், பாரம்பரியமாக
ஏகதாளம் என்ற ஒரே ஒரு தாளவகைமை கற்றுத்தரப்பட்டிருக்கும்.
கைப்பழக்கம் போல அந்த தாளத்தை மிழாவில் இசைப்பார்கள். கூடியாட்டம்
நிகழ்த்தும் கதாப்பாத்திரத்தின் கைமுத்திரைக்கோ, உணர்வுநிலைக்கோ ஏற்றபடி
மிழாவின் தாளம் ஒத்திசையவேண்டும். ஆனால் பெயருக்கு என்று மிழாவை
இசைக்கும்போது அவ்வாறு ஒத்திசையவில்லை. சில சந்தர்ப்பங்களில் மிழாவு
இசைப்பவரின் தாய் தந்தையோ, நெருங்கிய உறவினர்களோ இறந்துவிட்டால் அந்த
தீட்டின் காரணமாக அவர் மிழாவு இசைக்கக்கூடாது. ஆனால் கூடியாட்ட நிகழ்விற்கு
வழிவழியாக அந்த குடும்பம் மிழா இசைக்க கடமைப்பட்டது என்பதால் அதை
நிறுத்தவும் முடியாது. அவரின் குடும்பத்தில் சின்ன குழந்தைகள் இருப்பார்கள்,
குழந்தைகளுக்கு தீட்டு இல்லை. அவர்களை மிழாவு இசைக்கச்செய்வார்கள்.
அவர்கள் மிழாவை வெவ்வேறு தாளத்துடன் இசைப்பார்களா என்ன? அந்த குழந்தைகளை
ஏகதாளத்தில் (சீரான இடைவெளியில் மிழாவில் தட்டுவது) மிழா
இசைக்கச்சொல்வார்கள், ஒரு சம்பிரதாயம் அவ்வளவுதான். அப்படி கூடியாட்டத்தை
கடவுளுக்காக, பக்திக்காக மட்டுமே நிகழ்த்திக்கொண்டிருந்தனர். எந்த
அடிப்படையிலும் முறைப்படுத்தப்படாமல் சிதறிக்கிடந்த மிழா இசையை என் ஆசிரியர்
முறைமைப்படுத்தினார்.
உதாரணமாக, கூடியாட்டத்தில் கதாப்பாத்திரத்தின் கைமுத்திரைகளுடன்,
அதன் சலனங்களுக்கு ஏற்ப, கதாப்பாத்திரத்தின் உடல் அசைவுகளுக்கும்,
பாவத்திற்கும் ஏற்ப மிழாவின் தாளமும் ஒத்திசையவேண்டும். மிழா இசையில் ஏழு
வகையான தாளங்கள் உண்டு: ஏகதாளம், த்ரிபுடா, அடந்தை, செம்பை, செம்படை,
லட்சுமி, துருவம். கதைச்சந்தர்ப்பத்திற்கும் கதாப்பாத்திரத்தின் மனநிலைக்கும்
ஏற்றபடி தாளங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதையெல்லாம் என் ஆசிரியர் நாராயணன்
நம்பியார் முறைமைப்படுத்தினார்.
கேரள கலாமண்டல கூத்தம்பலம்
நீங்கள் சம்ஸ்கிருதமும் கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டீர்கள்.
கூடியாட்டத்திற்கு சம்ஸ்கிருதம் எந்தளவு கற்றிருக்க வேண்டும்?
சமஸ்கிருதம் மட்டுமல்ல. கூடியாட்டம் கற்றுக்கொள்பவர்கள் பிராகிருதம்,
சமஸ்கிருதம், மலையாளம் மூன்றையும் படிக்க வேண்டும். பிராகிருதம்
சமஸ்கிருதத்திற்கு முன்பு உள்ள மொழி அல்லவா. கூடியாட்டத்தில் பிரதான
கதாப்பாத்திரத்திற்கு சம்ஸ்கிருதம் மட்டும் போதும். ஆனால் விதூஷகன் சம்ஸ்கிருதத்துடன் பிராகிருதமும், மலையாளமும் பயன்படுத்தவேண்டும். பிராகிருதத்திலும் சம்ஸ்கிருதத்திலும் உச்சரிப்பில்
மட்டும்தான் வேறுபாடு.
உதாரணமாக ராமாயணத்தின் யுத்தகாண்டத்தில் ஒரு கதைச்சந்தர்ப்பத்தை
சொல்கிறேன். ராம ராவண யுத்தத்தில் ராவணனின் தலை ராமனின் அம்பால்
அறுபடுகிறது. அமிர்தகலசம் இருப்பதால் ராவணனின் தலை வெட்டப்பட்டாலும்
மீண்டும் மீண்டும் தோன்றியபடியே இருக்கும். ’ராமா... போருக்கு வா’ என
அறைகூவியபடிதான் மீண்டும் ராவணனுக்கு தலை உருவாகிறது. லூனம் என்றால்
அறுப்பது. சமஸ்கிருதத்தில் ’ஶீக்ர’ என்பதை ’ஶிட்ட’ என்று
உச்சரித்தால் அது பிராகிருதம். ’த்ருஷ்டம் த்ருஷ்டம்’ சமஸ்கிருதம். ‘திட்டம்
திட்டம்’ பிராகிருதம். ’ருஷ்டேன’ சம்ஸ்கிருதம், ’ருட்டேன’ பிராகிருதம்.
போரில் ராவணனின் தலை துண்டிக்கப்படும்போது மீண்டும் தோன்றுவதை தேவர்கள்
விண்ணிலிருந்து பார்க்கிறார்கள். தலை துண்டிக்கப்படும்போது
மகிழ்ச்சியடைகிறார்கள். மீண்டும் தலை தோன்றும்போது வருத்தமடைகிறார்கள்.
“ககனம் ககனாகாரம் சாகரம் சாகரோபமா
ராம ராவணயோர் யுத்தம் ராம ராவணயோர் இவ”
வானத்திற்கு துல்லியமான உவமை வானம்தான். கடலுக்கும் கடல்தான் உவமை. அது போல
ராமராவண யுத்தத்தை வேறு எதனோடும் ஒப்பிடமுடியாது, அதை ராமராவணப்போருடந்தான்
ஒப்பிட வேண்டும்.
இந்தியாவின் பழைய சம்ஸ்கிருத நாடகங்கள் இப்போது கேரளத்தில்
கூடியாட்டத்தில் மட்டுமே நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. மற்ற இடங்களில்
ஏன் வழக்கொழிந்து போனது?
முதலில் பிராகிருத மொழியிலும் நாடகங்கள் நிகழ்ந்திருக்கிறது. பின்னர்
சம்ஸ்கிருதத்தில் நிகழ்த்தப்பட்டது. அனேகமாக இந்தியாவின் எல்லா
மாநிலங்களிலும் சம்ஸ்கிருத நாடகங்கள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால்
காலப்போக்கில் அது கேரளத்தில் மட்டுமே நிகழ ஆரம்பித்தது. குறிப்பிட்ட
காரணமாக நாம் எதையும் சொல்ல நம்மிடம் ஆதாரங்கள் இல்லை. சம்ஸ்கிருத நாடகங்களை
நிகழ்த்துவதற்கான விரிவான முறைமைகள் நம்மிடையே இருந்தது. கி.பி 10ஆம்
நூற்றாண்டில் தனஞ்செயன் என்பவர் எழுதிய ’தஶரூபகம்’ என்ற நூல் சமஸ்கிருத
நாடகங்களின் வெவ்வேறு வடிவங்கள் பற்றியும், அவற்றை அரங்கில் நிகழ்த்துவதற்கான
முறைமைகளும், விதிமுறைகளும் கொண்ட நூல்.
நாட்டிய சாஸ்திரத்தின் முதல் அத்தியாயத்தில் ஒரு தொன்மக்கதை இருக்கிறது.
பிரம்மா நான்கு வேதங்களை படைக்கிறார். தேவர்களுக்கு நால்வேதங்கள் மட்டும்
போதுமானதாக இல்லை. அவை ஓதுவதற்கானவை, எங்களுக்கு ரசனைக்கான சில
வேண்டும் என்று பிரம்மாவிடம் கேட்கிறார்கள். அதனால் ரசிப்பதற்கான ஐந்தாவது
வேதமான நாட்டியவேதத்தை பிரம்மா உருவாக்கினார். இந்திரனின் கஜ உற்சவத்தில்
நாட்டியவேதத்திற்கான அரங்கேற்றம் நிகழ்ந்தது. அதற்கான கதை தேவர்களுக்கும்
அசுரர்களுக்குமான போர். அந்த நடன நிகழ்வின் பார்வையாளர்கள் தேவர்களும்
அசுரர்களும்தான். தேவர்களின் அம்புகளால் அசுரர்கள் பயந்து ஓடிப்போகும் பகுதி
நாடகத்தில் அபிநயிக்கப்பட்டது, இதைப்பார்த்து தேவர்கள் அசுரர்களை கேலிசெய்து
சிரித்தனர். கோபமடைந்த அசுரர்கள் அரங்கை சேதப்படுத்தினர். நாட்டிய
அரங்கேற்றம் பாதியிலேயே நின்றாகிவிட்டது. பின்னர் பிரம்மா நடனத்தை
பரதமுனிவருக்கு கற்றுக்கொடுத்தார். அவருக்கு 105 மைந்தர்கள். அவர்
மைந்தர்களுக்கு கற்றுக்கொடுத்தார் (அதனால்தான் கூத்தம்பலத்திற்கு 105 தூண்கள்
உண்டு). அவர்களும் அவர்களின் மாணவர்களும் பூமியில் நாட்டிய மண்டபம் அல்லது
கூத்தம்பலத்தை உருவாக்கினர். எட்டு திக்குகளோடு பாதாளம், விண் இவை
சேர்த்து பத்து திசைகளிலிருந்தும் அசுரர்கள் அதை தாக்கமுடியாத அளவுக்கு
தேவர்கள் அதற்கு காவலிருந்தனர். இந்திரனின் கஜ உற்சவத்தில் நின்றுவிட்ட அந்த
நிகழ்வு இங்கு மீண்டும் நிகழ்த்தப்படுகிறது. தேவ அசுர போர். பூமியில்
நிகழ்ந்த முதல் நாடகம் அதுதான். இது உருவாவதற்கான காரணம் தேவர்களின்
கலைகளை ரசிக்கவேண்டும் என்ற விழைவுதான். ”சாமாஜிக ஆஶ்ரயோ ரசா..” கலையனுபவம்
ரசிகர்களை அடிப்படையாகக்கொண்டு இயங்குவதுதான்.
ராவணனுக்கும் ஜடாயுவிற்குமான போர்- கூடியாட்டம்
கூடியாட்டத்தில் என்னென்ன நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன?
கேரளத்தை சேர்ந்த ஶக்திபத்ரன் ’ஆஶ்சர்ய சூடாமணி’ என்ற சம்ஸ்கிருத நாடகத்தை
எழுதியவர். அவர் எழுதிய நாடகங்களில் ராமாயணம் சார்ந்த நாடகங்கள் மட்டும்
இங்கு கேரளத்தில் கூடியாட்டமாக நிகழ்த்தப்படுகிறது. வேறு எங்கு பகுதியிலும்
அவரது நாடகங்கள் நிகழ்த்தபடுவதே இல்லை. பாஸனின் நாடகங்களான சாருதத்தம்,
அபிமாரகம், கர்ணபாரம், ஊருபங்கம், பஞ்சராத்ரம், தூத கடோத்கஜம் போன்ற
நாடகங்கள் கூடியாட்டமாக நிகழ்த்தப்படுகின்றன.
சம்ஸ்கிருத நாடகங்களில் பத்து வகைமைகள் உண்டு, அவற்றை ’தஶ ரூபகங்கள்’
என்பார்கள். “நாடகம் சத் பிரகரணம் பான பிரஹசனம் நிப வ்யாயோக சமவாகாதோ வீத்
அங்க்யேனோ ஸ்ம்ருதம்” நாடகம், பிரகரனம், அங்கம், பிரஹசனம் என 10
வகைமைகள்.
மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய ’மத்தவிலாசம்’ பிரஹசன வகைமையை சேர்ந்தது. அதாவது
அங்கத நாடகம். கேரளத்தில் உள்ள சில சிவன் கோவில்களில் ‘மத்தவிலாசம்’
கூடியாட்டமாக நிகழ்த்தப்படுகிறது. குழந்தை பாக்கியத்திற்காக, நினைத்த காரியம்
நிறைவேறுவதற்காக மத்தவிலாசம் கூடியாட்டம் நேர்ச்சையாக
நிகழ்த்தப்படுகிறது. அதை மூன்று நாட்கள் நிகழ்த்துவார்கள். முதல்நாள்
காலை புறப்பாடு, இரண்டாவது நாள் நிர்வஹணம்(flashback), கடைசி நாள் காபாலி
என்ற சடங்கும் உண்டு. அப்படி மூன்று நாட்கள். முன்பு மத்தவிலாசம் 40
நாட்கள் நிகழ்ந்தது. என் ஆசிரியர்களில் ஒருவரான நாணு
நம்பியார்தான் அதை முறைமைப்படுத்தி 3 நாட்கள் நிகழும் கூடியாட்டமாக
ஆக்கியவர்.
பாஸனின் நாடகங்களில் ‘பிரதிக்ஞா யெளகந்தராயனம்’ என்ற நாடகத்தின் மூன்றாம்
அங்கத்திற்கு பெயர் ‘மந்திராங்கம்’. அந்த பகுதி மட்டும்
கூடியாட்டத்தில் நிகழ்த்தப்படுகிறது. அதை திரிச்சூர் அருகே
சேர்ப்பு என்ற ஊரில் உள்ள பெருவனம் மகாதேவர் கோவிலில் கடமூர் ராமசாக்கியார்
என்பவர் கூடியாட்டமாக நிகழ்த்திக்கொண்டிருந்தார், அவர் இறந்துவிட்டார்.
மந்திராங்கம் நாடகம் கூடியாட்டமாக 41 நாட்கள் நடக்கக்கூடியது. அவரின் அடுத்த
தலைமுறைக்கு ஆர்வம் இல்லையா, இவர் கற்றுக்கொடுக்கவில்லையா என்று தெரியவில்லை.
ஆனால் அவர்கள் அதை தொடரவில்லை. அவ்வளவுதான் இனி கூடியாட்டத்தில் மந்திராங்கம்
நாடகம் நிகழ்த்தமுடியாது.
நாட்டிய சாஸ்திரத்தில் மரணமோ, யுத்தமோ நிகழ்த்த அனுமதியில்லை. ஆனால்
கூடியாட்டம் நாட்டிய சாஸ்திரம் உருவாவதற்கு முன்பே உருவாகிவிட்ட கலை, அதனால்
கூடியாட்டத்தில் பாலிவதம் போன்ற கதைகளில் போர் உண்டு. ராம ராவண போர் உண்டு.
நாட்டிய சாஸ்திரத்தில் கொல்வதற்கு அனுமதியில்லை. கூடியாட்டத்தில் கொலை உண்டு.
இதை வைத்து சாஸ்திரம்(இலக்கணம்) உருவாவதற்கு முன்பே நாட்டியம்(கலை)
உருவாகிவிட்டது என்று என் ஆசிரியர்கள் சொல்வார்கள்.
மந்திராங்கம்
மந்திராங்கம் கூடியாட்டத்தின் கதை என்ன? அதுபோல தொடர வாய்ப்பில்லாத பிற
கூடியாட்ட அங்கங்கள் உள்ளனவா?
வத்ஸம் என்ற நிலப்பகுதியின் அரசன் உதயனனுக்கும் அவனின் அண்டைநாட்டு அரசன்
மகாசேனனுக்கும் இடையேயான கதை. மகாசேனன் தன் மகள் வாசவதத்தையை
மணந்துகொள்ளும்படி உதயனனிடம் கேட்க அவன் அதை மறுத்துவிடுகிறான். அதனால்
மகாசேனன் உதயனனை கடத்திக்கொண்டுவந்து பாதாளச்சிறையில் அடைக்கிறான்.
உதனனை வற்புறுத்தி தன் மகளுக்கு திருமணம் செய்துவைத்துவிடலாம் என்று மகாசேனன்
நினைக்கிறான். உதயனனுக்கு விஷ்ணுத்ராவன், வசந்தகன், யோகந்தராயனன், ருமவான்
என்று நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசனை சிறையிலிருந்து
மீட்கும் திட்டங்களை ஆலோசிக்கிறார்கள். அதில் விஷ்ணுத்ராவன் என்ற அமைச்சர்
தற்கொலை செய்துகொள்கிறான். ’என் அரசர் இறந்துவிடுவார் என்று நினைக்கிறேன்,
அவர் இல்லாமல் நான் வாழவிரும்பவில்லை’ என்று சொல்லி தற்கொலை செய்துகொள்வான்.
யோகந்தராயனன் வத்ஸநாட்டு வீரர்களை மகாசேனனிடம் அனுப்பி அந்த அரசில் குதிரை
ஓட்டுபவர்களாக, ராணுவவீரர்களாக சேர வைக்கிறான். அவர்கள் வேறு சில
வீரர்களையும் சேர்த்து மகாசேனனை வீழ்த்தி தன் அரசனை மீட்க
திட்டமிடுகிறார்கள். இதற்கிடையில் உதயனன் வாசவதத்தையை காதலிக்க
ஆரம்பிக்கிறான். சிறையில் இருக்கும் உதயனன் வாசவதத்தைக்கு வீணை வாசிக்க
கற்றுத்தருகிறார். அவளுக்கு கல்வி கற்றுத்தருவதும் அவர்தான். மெல்ல உதயனன்
அவளை காதலிக்க ஆரம்பித்துவிடுகிறான். அவனை சிறையிலிருந்து மீட்பதற்கான
அமைச்சர்களின் திட்டமும், உதயனனுக்கும் வாசவதத்தைக்கான காதலும்தான்
மந்திராங்கம்.
கேரளத்தை சேர்ந்த ஶக்திபத்ரர் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து ஆஶ்சர்யசூடாமணி என்ற சம்ஸ்கிருத நாடகத்தை எழுதியவர். அதில் ஏழு
காண்டங்கள்/அங்கங்கள் உண்டு. அதில் ஆறாவது அங்கம் அங்குலியாங்கம்.
ராமன் தன் மோதிரத்தை அனுமன் வழி சீதைக்கு கொடுக்கிறார். அனுமன் இந்திய
பெருங்கடலை கடந்து இலங்கையில் சீதையை கண்டு ராமனின் அங்குலியத்தை (மோதிரம்)
கொடுத்து அவளிடமிருந்து சூடாரத்னம்/ சூடாமணி மாலையை வாங்கிக்கொண்டு, இலங்கையை
எரித்து திரும்ப ராமனிடம் வந்து சீதையின் சூடாமணியை அவரிடம் கொடுக்கும்வரையான
பகுதி அங்குலியாங்கம். அதை இப்போது குருவாயூரிலும், திருப்ரயாரில் உள்ள
ராமர்கோவிலில் மட்டுமே இப்போது நிகழ்த்துகிறார்கள். திருப்ரயாருக்கு
தனித்தன்மை உண்டு. அந்த கூடியாட்டம் முக்கிய தெய்வமான ராமனின் சன்னிதிக்கு
எதிராகத்தான் நிகழ்த்தப்படும். அதனால் அந்த கூடியாட்டத்தின் பார்வையாளர்
ராமன் என்பது ஐதீகம்.
கூடியாட்டம் நிகழும் கோவில்களில், அந்த கோவிலுக்கே நியமிக்கப்பட்ட
குறிப்பிட்ட சாக்கியார் குடும்பம் உண்டு, அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்
அங்கே அதை நிகழ்த்தமுடியும். கோவிலின் தந்திரி சில சடங்குகள் செய்து அந்த
குடும்பத்தை நியமிப்பார். அப்படி திருப்ரயாரில் கூடியாட்டம்
நிகழ்த்துவது மாணி என்ற குடும்பத்தின் பொறுப்பாக இருந்தது. சமீபகாலத்தில் அதை
நிகழ்த்திக்கொண்டிருந்தவர் மாணி வாசுதேவ சாக்கியார். அவர் என்னுடைய
மாணவர்தான். சென்ற கார்த்திகை மாதம் அவருக்கு உடல்நிலை
சரியில்லாமலாகிவிட்டது, அவரால் நிகழ்த்தமுடியவில்லை. அவரது வாரிசுகள்
கூடியாட்டம் கற்றுக்கொள்ளவில்லை. பல தலைமுறைகளாக எந்த தடையுமில்லாமல்
திருப்ரயார் கோவிலில் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்த கூடியாட்டம் இப்போது
நின்றுவிட்டது. இப்போது அந்த கோவில் தந்திரி வேறு ஒரு சாக்கியார் குடும்பத்தை
சேர்ந்த இரிஞ்ஞாலக்குடை ரஜனீஷ் சாக்கியாரை நியமித்திருக்கிறார்.
மந்திராங்கம் கூடியாட்டம் இப்போது நிகழ்த்தப்படுவதில்லை. சமஸ்கிருத நாடகமான
‘ப்ரதிக்ஞா யௌகந்தராயணம்’ என்ற நாடகத்தின் ஆறாம் அங்கம்தான் மந்திராங்கம்.
அந்த அங்கத்தை கிட்டத்தட்ட 40 நாட்கள் கூடியாட்டமாக நிகழும். ஆறாம்
அங்கம்தான் பிரதானம் என்றாலும் கூடியாட்டத்தில் அந்த சமஸ்கிருத நாடகத்தின்
மற்ற அங்கங்களின் கதைச்சந்தர்ப்பங்களும் நிகழ்த்தப்படும். கூடவே
கூடியாட்டத்தில் தனியான கதைச்சந்தர்ப்பங்கள் உண்டு. தனிக்கலைஞர்களின்
கற்பனைகளும், படிமங்களும், அங்கதம் நிறைந்த அம்சங்களும் உண்டு. மலையாளத்தில்
சொல்லி அபிநயிக்கும் பகுதிகளும், சம்ஸ்கிருதத்தில், பிராகிருதத்தில் சொல்லும்
பகுதிகளும் தனித்தனியாக உண்டு. அதனால் கூடியாட்டம் நிகழ்த்துபவர்
சமஸ்கிருத நாடகத்தை முழுக்க படித்திருக்க வேண்டும். அது மட்டும் போதாது.
மந்திராங்கம் நாற்பது நாட்களுக்கான கூடியாட்ட வடிவத்தையும், அதன்
மனோதர்மங்களையும் அறிந்திருக்கவேண்டும். உண்மையில் அதை கற்றுக்கொள்ள
ஒரு மனித ஆயுள் போதுமானதா என்ற சந்தேகம் கூட எனக்கு உண்டு. அதனால் அதை படித்து நிகழ்த்துபவர்களே குறைவு. அன்றைய வழக்கப்படி சன்மானம்
ஒன்றேகால் ரூபாய். ஆனால் கூடியாட்டத்தை நிகழ்த்தியவர்கள் அதை ஆத்மார்த்தமாக
பக்தியுடன் நிகழ்த்தினார்கள், பணம் அன்று பிரதானமான விஷயமாக இல்லை. மேலும்
அவர்களுக்கு வேறு திசைதிரும்பங்கள் இல்லை, தங்கள் கலையிலேயே முழுநேரமும்
இருக்க முடிந்தது. நான் மேல்பத்தூர் நாராயணன் பட்டத்திரி என்ற சம்ஸ்கிருத
காவிய ஆசிரியரின் நாற்பது நூல்களுக்கு உரை எழுதியிருக்கிறேன். என் நேரம்
முழுக்க கலைக்காக செலவளிக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்தில் கலை
கற்றுக்கொள்ளும் இளைஞர்களுக்கு நிறைய திசைதிருப்பல்கள், சவால்கள்.
சில கூடியாட்டங்கள் காலப்போக்கில் நிகழ்த்தப்படாமலே ஆகிவிட்டது. பாசனின்
நாடகங்களில் பஞ்சராத்ரம் என்ற நாடகம் உண்டு, அது எனக்கு விவரம் தெரிந்த
காலத்தில் எங்குமே நிகழ்த்தப்படவே இல்லை. முன்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது
என்று கேள்விப்பட்டிருக்கிறேன், முன்பு யார் நிகழ்த்தினார்கள் என்று
தெரியாது, ஏன் இப்போது நிகழ்த்துவதில்லை என்றும் தெரியாது. ஊருபங்கம்,
ப்ரதிக்ஞா யௌகந்தராயணம் (மந்திராங்கம்), சாருதத்தம், அபிமாரகம் போன்ற
சம்ஸ்கிருத நாடகங்கள் முன்பு இந்தியா முழுக்க அரங்குகளில் வெவ்வேறு
வடிவங்களில் நிகழ்த்துப்பட்டுக்கொண்டிருந்தன என்று ஆசிரியர் சொல்லி
கேட்டிருக்கிறேன். இப்பொது சக்திபத்ரனின் ஆஸ்சர்ய சூடாமணி
நாடகத்திலிருந்துதான் அதிகமான கூடியாட்டங்கள் நிகழ்த்தப்படுகிறது.
சூர்பனகாங்கம், ஜடாயு வதம், பாலிவதம்(வாலிவதம்), தோரணயுத்தம் (லங்காதகனம்)
இந்த பகுதிகள் நிகழ்த்தப்படுகின்றன.
ஸ்ரீஹர்ஷனின் நாகானந்தம் என்ற நாடகத்தின் எழுத்துப்பிரதியில் கொஞ்சம்
பகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. பெரும்பாலான பகுதிகள் அழிந்துவிட்டன.
என் ஆசிரியர்களில் ஒருவரான கூடியாட்ட கலைஞர் பைங்குளம் ராம சாக்கியார் 36
நாட்கள் நிகழ்ந்துகொண்டிருந்த நாகநந்தத்தை 6 மணிநேரமாக சுருக்கி
நிகழ்த்தினார். பாஸனின் பரகாயப்பிரவேசம். பகவதஜ்ஜுகீயம் போதாயனர் எழுதிய
நாடகம், பௌத்த மதம் பற்றிய பகடிகள் நிறைந்தது. இவையெல்லாமே செவ்வியல்
படைப்புகள். இவற்றை பற்றி சொல்லும்போதே அதன் கலைத்தன்மையும், தீவிரமும்
என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. இதைப்பற்றி பேச ஆரம்பித்தால் ரொம்ப திசைமாறி
எங்கெங்கோ போய்விடும்.
இதைப்பற்றி உங்களிடம்தான் கேட்கமுடியும் வேறெங்குமே இவற்றை பற்றிய விரிவான
குறிப்புகள் கிடைப்பதில்லை.
இவற்றை பற்றிய நான் சொல்வது என் திட்டவட்டமான கருத்துகள் அல்ல, நான்
இப்படி இருக்கலாமே என்று ஊகங்களை மட்டுமே சொல்லமுடியும். என் ஆசிரியர்கள்
சொன்னதை உங்களிடம் சொல்கிறேன். அவை காலத்தால் மிகப்பழையவை. கூடியாட்ட மரபும்
பழையது. அதனால் திட்டவட்டமாக எதையும் சொல்லிவிடமுடியாது.
பாஸனின் நாடகங்கள் மிகப்பழையவை, துவக்க காலத்தவை. அவை இங்கு நீடிக்கின்றன,
ஆனால் புகழ்பெற்ற காளிதாசனின் நாடகங்கள் ஏன் கூடியாட்டமாக
நிகழ்த்தப்படுவதில்லை?
காளிதாசன் வாசிப்புக்கு இனியவனாக இருக்கலாம், மேடையில் கலைஞனின் தேவைகள்
வேறு. அவன் அபிநயிப்பதற்கான வாய்ப்பு தரக்கூடிய வரிகளே அவனுக்கு தேவை. அவன்
அவற்றை விரித்தெடுக்கும் வேலையைத்தான் செய்கிறான். காளிதாஸின் நாடகங்களில்
உள்ள உவமைகள் மேடையில் அபிநயத்திற்கு உரியவை அல்ல. பாஸனின் நாகாநந்தம்,
ஸ்வப்ன வாஸவதத்தம் போன்ற நாடகங்களில் சில பகுதிகளை கூடியாட்ட கலைஞர்கள்
மாணி மாதவ சாக்கியாரும், ராமச்சாக்கியாரும் கூடியாட்டத்தில்
முறைமைப்படுத்தினர். பாஸனுடைய நாடகங்கள் சிறப்பானவை, அதனால் மற்றவை நல்ல
நாடகங்கள் இல்லை என்று சொல்லமுடியாது. இருவருக்குமான காலவேறுபாடும் இதற்கான
காரணமாக இருக்கலாம்.
ஆஶ்சர்ய சூடாமணி நாடகம் பற்றிய ஒரு தொன்மம் உண்டு. சங்கரர் ஆஶ்சர்யசூடாமணி
நாடகத்தை பார்க்கிறார். ஒன்றுமே பேசவில்லை, அந்த நாடகத்தை எழுதிய ஶக்திபத்ரர்
மிகவும் சங்கடப்பட்டு சங்கரருக்கு பிடிக்கவில்லை என்று நினைத்து அந்த
நாடகச்சுவடிகளை எரித்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. வேறொரு
சந்தர்ப்பத்தில் ஆஶ்சர்ய சூடாமணி நாடகத்தை தான் மீண்டும் பார்க்க விழைவதாக
சங்கரர் சொன்னபோது சக்திபத்ரர் அவரிடம் உங்களுக்கு பிடிக்கவில்லை
என்பதால்தான் நாடகத்தின் சுவடியை எரித்துவிட்டேன் என்று சொல்கிறார். சங்கரர்
இந்த நாடகம் தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் அவர் முன்பு
கேட்டதை அப்படியே நினைவிலிருந்து சொல்லி, பின் அது எழுத்துவடிவமாக
ஆனது என்ற தொன்மம் உண்டு.
சம்ஸ்கிருத நாடகங்கள் இந்தியா முழுக்க நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்தது.
இந்தியாவில் உள்ள பிராந்திய மொழிகள் செவ்வியல்தன்மை கொண்டதாக ஆனதும்
சமஸ்கிருதத்திற்கான ஆற்றல் குறைந்து கொஞ்சம்கொஞ்சமாக அது இல்லாமல் ஆனது.
ஆனாலும் கேரளத்தில் மட்டும் சமஸ்கிருத நாடகங்கள் தொடர்ந்து
நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சமஸ்கிருத நாடகங்களை
நிகழ்த்துவதற்கென்றே இங்கு தனி சாதியான சாக்கியார்கள் இருந்தார்கள்
என்பதுதான். இது என்னுடைய ஊகம்தான் என்பதை சொல்லிக்கொள்கிறேன். ஒவ்வொரு
சாக்கியார் குடும்பமும் குறிப்பிட்ட கோவிலில் கூடியாட்டம் நிகழ்த்த
பாத்யதைப்பட்டது. அதனால் குடும்பத்தில் பிறக்கும் வாரிசுக்கு சிறுவயதிலேயே
சம்ஸ்கிருத கல்வி உண்டு. அந்த சாதி தாய்வழியில் தாய்மாமன், அவரது சகோதரியின்
மகன் என வழிவழியாக நாடக மரபை பேணியது. அப்படி இந்தியா முழுவதும்
நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்தது கேரளத்தில் மட்டும் நிகழ்த்தப்படுவதாக
சுருங்கிவிட்டது.
நங்கையார் கூத்து
நங்கையார் கூத்து என்பது என்ன?
அது கூடியாட்டத்தின் பகுதியாக இருந்தது. இப்போது தனி கலைவடிவமாக
நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அது நம்பியார் சாதியின் பெண்களான ‘நங்கையார்’
நிகழ்த்துவதால் அப்பெயர். நான் முன்பு குறிப்பிட்டதுபோல இது தனிக்கலைஞனின்
அபிநய வடிவம். ராமாயணம், பாகவதம் இவற்றில் உள்ள கதைச்சந்தர்ப்பங்களில்
ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு அதை விரிவான அபிநயங்களுடன் நிகழ்த்துவது.
இந்த கலைவடிவம் எப்படி உருவானது என்பது சார்ந்த தொன்மம் உண்டு. இது
தொன்மம்தான் வரலாற்றுப்பூர்வமான தகவல் என்று நினைத்துக்கொள்ளவேண்டாம். அரசர் குலசேகரவர்மன் நல்ல அபிநயத்திறன் கொண்ட நங்கையார் பெண்ணை (நம்பியார்
சாதியில் உள்ள பெண்) காதலிக்கிறார். சாமவேத பிராமணர்கள் இறந்தால்
சுடுகாட்டில் சுடலைக்கூத்து என்ற சடங்கு நிகழ்த்தப்படும். அந்த சடங்கை
செய்வது நங்கையார் பெண்கள். சுடுகாட்டை தூய்மையாக்குவதற்காக தக்ஷணாயனத்தில்
(தெற்குதிசையில்) பந்தல் கட்டி நிகழ்த்தப்படும் சடங்கு அது.
மலையாளத்தின் முதல் மணிப்பிரவாள காவியமான ஸ்ரீகிருஷ்ணசரிதத்தை நங்கையார் பெண்கலைஞர் அபிநயத்துடன் நிகழ்த்துவதுதான் அந்த சடங்கு.
குலசேகர வர்மன் தான் காதலிக்கும் அந்த நங்கையார் பெண் சுடலைக்கூத்து
நிகழ்த்துவதை காண்கிறார். இவ்வளவு நல்ல கலைவடிவம் ஏன் சுடுகாட்டில்
நடத்தப்படவேண்டும் என்று நினைத்த அரசர் தன் அதிகாரத்தால் அதை கோவில்
கூத்தம்பலத்தில் நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகள் செய்கிறார்.
அப்போதிலிருந்து கூடியாட்டம் நிகழும் அரங்கில் நங்கையார்
பெண்களால் ஸ்ரீகிருஷ்ணசரிதம் என்ற காவியம் (கிருஷ்ணனின் பிறப்பு
முதல் விண்புகுதல்வரை) தொடர்ச்சியாக அபிநயத்துடன் நிகழத்தொடங்கியது.
அப்படித்தான் நங்கையார்கூத்து என்ற கலைவடிவம் உருவானது என்ற ஒரு தரப்பு
உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன் தென்கேரளத்தில் உள்ள ஒரு நம்பூதிரி
இறந்ததும் அங்கே சுடலைகூத்து என்று ஒன்றை நங்கையார் பெண்
நிகழ்த்தியிருக்கிறார். அதனால் சுடலைக்கூத்து இன்னும் அதே வடிவில்
எஞ்சியிருக்கிறது, அது வேறு நங்கையார் கூத்து வேறு என்ற தரப்பும்
உண்டு. சுடலைக்கூத்து முறைமைப்படுத்தப்பட்டு குலசேகர வர்மனின்
ஆணைப்படி நங்கையார்கூத்தாக ஆனது என்றுதான் என்னை கற்பித்த ஆசிரியர்கள் எனக்கு
சொன்னார்கள்.
சாக்கியார்கூத்து என்பது அபிநயம் இல்லாத கதைசொல்லல் வடிவம். நங்கையார்
கூத்து என்பது அபிநயம் சார்ந்த கலைவடிவம். இவை இரண்டுமே ஏன் கூத்து
என்று சொல்லப்படுகிறது?
கூத்து என்ற சொல் குழப்பக்கூடியது. பொதுவாக அந்த சொல்லுக்கு நிகழ்த்துதல்
என்று பொருள். பார்வையாளர்கள் முன் நிகழ்த்தப்படுவது. கதைசொல்லலாக
நிகழ்த்தப்படுவது சாக்கியார் கூத்து. அபிநயமாக நிகழ்த்தப்படுவது நங்கையார்
கூத்து.
நங்கையார் கூத்து - மிழாவுடன் ஈஸ்வரன் உண்ணி
நங்கையார் கூத்து போல வேறு ஏதேனும் கூத்து வடிவங்கள் கேரளத்தில்
உள்ளதா?
விருத்திக்கூத்து என்று ஒரு கலைவடிவம் உண்டு. அது பாரதப்புழா ஆற்றின்
வடக்குபக்கம் சாமூதிரிப்பாட்டின் காலத்தில் நிகழ்ந்தது. அது பாரதப்புழா
ஆற்றின் தெற்கே பிரம்மச்சாரிக்கூத்து என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது.
கோட்டயம் கடம்மூர் கோவில் யட்சிக்கு ஒரு கூத்தம்பலம் உண்டு, அங்கு அது
இப்போதும் நிகழ்கிறது. என் ஆசிரியர்கள் கடமூர் ராமசாக்கியாரும், நாணு
நம்பியாரும்தான் அதை நிகழ்த்திக்கொண்டிருந்தனர். இப்போது நாணு
சாக்கியார் சில பகுதிகளை நிகழ்த்துவார். பின் ஆசிரியரின் மகனும் சேர்ந்து
அடியந்திரமாக நிகழ்கிறது. நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கான
நேர்ச்சையாக பிரம்மச்சாரிக்கூத்து நிகழ்த்தப்படுகிறது. இதுவும்
விருத்துக்கூத்து ஒரே நிகழ்வுதான், ஒரே கதைதான், ஒரே அபிநயம்தான். ஆனால் வேறுவேறு இடங்களில் நிகழ்கிறது என்பது மட்டும்தான் வித்தியாசம்.
கூடியாட்டத்தின் ஒருபகுதியாக விதூஷக கூத்து என்று ஒன்று உண்டு. அதை பிரபந்த
கூத்து என்றும் சொல்வார்கள். ஒரு கதைசொல்லல் வடிவம். அதுதான் பின்னர்
சாக்கியார் கூத்தாக ஆனது. சுடலைக்கூத்தை நங்கையார்கூத்தாக
மாற்றிய குலசேகர வர்மன் என்ற அரசர்தான் விதூஷகன் என்ற
கதாப்பாத்திரத்தை கூடியாட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.
பறக்கும்கூத்து என்ற ஒரு நிகழ்வு உண்டு. கண்ணூருக்கு அருகே கூத்துபரம்பு என்ற
இடத்தில் குஞ்சன் நம்பியார்தான் கடைசியாக 64 கயிறுகளை வைத்து பறக்கும்கூத்தை
நிகழ்த்தினார் என்று சொல்லப்படுகிறது. நாகானந்தம் நாடகத்தில் ஜீமூதவாகனனின்
கதை உண்டு. குஞ்ஞன் நம்பியார் அதை நிகழ்த்தினார். மேலே இருந்து ஜீமூதவாகனனை
கொத்தவதற்காக பருந்து வட்டவடிவில் பறப்பதுபோன்ற அபிநயத்தை அந்தரத்தில்
நிற்கும்படி கயிறுகளால் கட்டப்பட்ட குஞ்சன் நம்பியார்
நிகழ்த்தியிருக்கிறார். அரங்கில் ஒரு பட்டுத்துணி இருக்கும், அதை
ஜீமுதவாகனனாக உருவகித்து வட்டமாக பறந்துவந்து அதை எடுத்து பின் வட்டமாக
திரும்பவும் பறந்து மேலே போவது நிகழ்த்தப்படும்.
கூடியாட்டத்தின் பகுதிகள், அதன் அபிநய விதிகள் பற்றி விரிவாக
சொல்லமுடியுமா?
பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரத்திலிருந்தும் கேரளத்தின் ‘ஹஸ்த லக்ஷண தீபிகா’
என்ற நூலிலிருந்தும் கூடியாட்டத்தில் முஷ்டி, சிகரம், முத்ராக்யம்,
கர்த்தரிமுகம் என 24 அடிப்படை கைமுத்திரைகள் உண்டு. அந்த அடிப்படை
முத்திரைகளிலிருந்து 500 வரை கை முத்திரைகள் உண்டு. ஸ்ரீகண்டி, கைசிகி, இந்தளம் என 21 ராகங்கள் கூடியாட்ட அபிநயத்தில்
பயன்படுத்தப்படுகிறது.
நம் மரபில் தர்ம, அர்த்த, காம, மோட்சம் (அறம் பொருள் இன்பம் வீடுபேறு) என
நான்கு புருஷார்த்தங்கள் உண்டு. அது ஒரு லட்சிய உருவகம். அதை பகடி செய்வதுபோல
வினோதம்(கேளிக்கை), அஷனம்(உணவு), வஞ்சனம்(சூழ்ச்சி), ராஜசேவா(அரசனுக்கு சேவை
செய்வது) என்ற நான்கு புருஷார்த்தங்கள் கூடியாட்டத்தில் உருவாக்கப்பட்டது.
அதை புருஷார்த்தகூத்து என்றும் சொல்வார்கள். கூடியாட்டத்தில்
சுபத்திரா தனஞ்சயம், தபதி சம்வரணம் என்ற நாடகங்களுக்கு விதூஷகனின்
பிரவேசனம் புறப்பாடுடன் நிகழ்த்தப்படும்.(ஒரு கதாப்பாத்திரம்
நடனத்திற்கான நுட்பமான அடவுகளுடன் அறிமுக ஆவதை புறப்பாடு என்று
சொல்வார்கள்). அதைத் தொடர்ந்து ஐந்து நாட்கள்: விவாதம், வினோதம், அஷனம்,
வஞ்சனம், ராஜசேவா என்ற ஐந்து புருஷார்த்தங்கள் நிகழ்த்தப்படும். விவாதம்
என்பது என்ன விவாதிக்கவேண்டும், யாரோடு விவாதிக்கலாம் என்பதற்கான வரையறையை
அளிக்கிறது. ”அசமான சமானேன விவாதோ நைவா, பரராஷ்ட்ரே, பரக்ருஹோ, யாத்ராமத்யே,
நதிமத்யே” - “உங்களுக்கு நிகர் இல்லாதவர்களுடன், வேறு அரசை சேர்ந்தவரிடம்,
வேறு இல்லத்தில், பயணத்தின் இடையே, நதியின் நடுவில் நீங்கள்
விவாதிக்கக்கூடாது” என விவாதத்திற்கான நெறிமுறைகளை மக்களுக்கு
அறிவுறுத்துவதற்காக நிகழ்த்தப்படுவது விவாதம் என்ற புருஷார்த்தம்.
வினோதம் - மனிதன் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும், திருமணம் செய்தால்
மட்டும் போதாது, சில சந்தர்ப்பங்களில் மனைவியை ஏமாற்ற வேண்டும், பிற பெண்களை
ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் மனைவிகளாக ஆன பெண்களை ஏற்கக்கூடாது என ஆண்பெண் உறவு
சார்ந்த பகுதிகள் விதூஷகனால் பகடியாகவும், சிருங்காரத்துடனும்
சொல்லப்படும். இவற்றை வேஷ்யாவினோதம் என்று சொல்வார்கள். அது
பொழுதுபோக்குக்கான பகுதி. இதை பொழுதுபோக்கு என்று சொல்லமுடியுமா என்பது
வேறு கேள்வி? எப்படிப்பட்ட விலைமாதர்களை ஏற்கவேண்டும், உண்மையில் விலைமாதர்
யார்? எப்படிப்பட்ட பெண்களை விலைமாதராக வகைப்படுத்தமுடியும் இப்படிப்பட்டவை
பார்வையாளர்களை பொறுத்து மிக விரிவாக நிகழ்த்தப்படும்.
அடுத்து வஞ்சனம். சூழ்ச்சி. அது முதலில்
நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்தது பின் ஏதோ ஒரு அரசனின் ஆட்சிக்காலத்தில் அது
நிகழ்த்தப்படாமல் ஆகிவிட்டது. யாரை ஏமாற்றுவது? எப்படி துரோகம்
செய்யவேண்டும்? சூழ்ச்சியின் வெளிப்பாடுகள் என்னென்ன? கூத்தின் இந்த அம்சம்
மக்களுக்கு சூழ்ச்சியை கற்பிப்பதுபோல ஆகிவிட்டது, அதனால் சூழ்ச்சி
அதிகமாகியது. அதனால் அரசன் சூழ்ச்சி என்ற புருஷார்த்தத்தை நிகழ்த்தவேண்டாம்
என்று ஆணையிட்டார் என்ற செவிவழிச்செய்து உண்டு. நிகழ்த்தவேண்டாம்
என்றாலும் கூடியாட்டத்தில் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்த ஒன்றை அப்படியே
நிறுத்துவதும் சாத்தியமில்லை. அதனால் விதூஷகன் “நான்
ஏமாற்றிவிட்டேன்” என்ற ஒரே சொற்றொடரை சொல்லி சூழ்ச்சி என்ற புருஷார்த்தத்தை
நிகழ்த்திவிட்டதாக கற்பிதம் செய்யப்படும்.
கூடியாட்டத்தின் இசைகுறித்து சொல்லுங்களேன்.
குறிப்பிட்ட ராகங்களை கூடியாட்டத்தில் குறிப்பிட்ட கதைச்சந்தர்ப்பங்களில்
மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற விதிமுறை உண்டு. கூடியாட்டத்தின் மிழா
இசையில் 7 தாளங்கள். எந்தெந்த ராகங்களை என்னென்ன தாளங்களில்
பயன்படுத்தவேண்டும் என்பதற்கும் விதிமுறைகள் உள்ளது. வேளாதூளி என்ற
ராகத்திற்கு அடந்தைதாளம் தான் பயன்படுத்தவேண்டும். வேளாதூளி என்றால்
தூரத்தில் இருப்பவருக்கு அறிவுறுத்தும் தொனியில் உரக்க சொல்லப்படுவதற்காக
பயன்படுத்தப்படுவது.
இப்போது கூடியாட்டத்தில் நிறைய ராகங்களும் தாளங்களும் பயன்படுத்தப்படுவதே
இல்லை, யாருக்கும் ஆர்வம் இல்லை, அவ்வளவாக கூடியாட்ட நிகழ்வுகளும்
நடத்தப்படுவதில்லை. கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுகிறார்கள் என்றாலும்,
காலமாற்றத்தால் இந்த கலை சுருங்கியபடியே இருக்கிறது. விமர்சனமாக சொல்லவில்லை, ஆனால் இதுதான் இன்றைய நிலை.
ஏன் கற்பிப்பவர்கள் யாரும் இல்லையா?
கற்பிப்பவர்கள் நிறையபேர் உண்டு. ஆனால் மாணவர்களுக்கு அவ்வளவு ஆர்வமில்லை.
அரசியல் செயல்பாடுகள் இப்படி நிறைய திசைதிருப்பங்கள். எங்கள் தலைமுறையில்
நாங்கள் முழுநேரமும் கலையிலேயே இருந்தோம், அதற்கே நேரம்போதாமல் இருந்தது.
கூடியாட்டத்தில் ராகங்கள் என்றால் எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள்?
இங்கு கூடியாட்ட கதாப்பாத்திரத்தின் recitation தானே இருக்கிறது, அதை
எப்படி ராகங்கள் என்று சொல்லமுடியும்?
இது கர்நாடக சங்கீதத்தில் ராகங்கள் என்று சொல்லப்படும் அர்த்தத்தில்
சொல்லவில்லை. கதைசந்தர்ப்பத்தை, கதாப்பாத்திரமனநிலையை பொறுத்து
சொல்வதில் உள்ள தொனியின் மாறுபாடுகளைத்தான் ராகங்கள் என்று
கூடியாட்டத்தில் நாங்கள் சொல்கிறோம். இது இன்னும் விரிவாக பேசக்கூடிய
அளவுக்கு ஆழமான விஷயம். ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன். கூடியாட்டத்தில் ஒரு
கதைச்சந்தர்ப்பத்தை எடுத்துக்கொள்வோம். ராமன் தன் சகோதரர்களுடன் காட்டில்
விஸ்வாமித்திருடன் சென்றுகொண்டிருக்கிறார்கள். வழியில் தாடகை என்ற அரக்கியை
கண்டதும் விஸ்வாமித்திரர் பயந்து ராமனிடம் ’ராமா, இவள் ஒரு அரக்கி’ என்று
சொல்லும் இடம். இங்கு வேளாதூளி ராகம் பயன்படுத்தப்படும். பதற்றம் நிறைந்த
அவசரமாகவும், சத்தமாகவும் சொல்வது. விஸ்வாமித்ரரின் பதற்றத்தையும்,
எச்சரிக்கையுணர்வையும் அந்த ராகம் வெளிப்படுத்துகிறது. கதகளியில்
24 கைமுத்திரைகள் போலவே கூடியாட்டத்திலும். ஆனால் கதகளியில் ஒரு
சொல்லின் விகுதிகளுக்கு தனி கைமுத்திரை இல்லை, கூடியாட்டத்தில் அவை
எல்லாவற்றிற்குமே கைமுத்திரை உண்டு.
ஈஸ்வரன் உண்ணி - ராமசாக்கியார் நினைவு தின விழாவில்
கூடியாட்டம் சம்ஸ்கிருத நாடகங்களிலிருந்து உருவாக்கப்பட்டது. அதற்கு ஏதேனும்
எழுத்துவடிவங்கள் உண்டா?
கூடியாட்டத்தில் சமஸ்கிருத நாடகங்களை அபிநயித்து நிகழ்த்துவதின் முறைமைகளை
பாரம்பரியமாக ஆசிரியரிடமிருந்தும், அரங்கில் நிகழ்த்துவதற்கான
கையேடுகளிலிருந்தும் கலைஞர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அந்த கையேடுகள்
ஆட்டப்பிரகாரங்கள் என்றும், க்ரம தீபிகா என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு
நாடகத்திற்கு தனியாக ஆட்டப்பிரகாரங்கள் உண்டு. குறிப்பாக ராமாயணத்தை
அடிப்படையாகக்கொண்ட கூடியாட்டங்களுக்கு பொதுவான க்ரமதீபிகா உண்டு. கூடியாட்டம் நிகழ்த்தும் கலைஞர் நாடகத்திலிருந்து மறைபிரதிகளை எப்படி
வாசித்தறிவது என்பது சார்ந்தும், கதாப்பாத்திர ஒருமை போன்ற நாடகம் என்ற இலக்கிய
வடிவம் சார்ந்த அலசல்கள் ஒருபக்கம். இன்னொருபக்கம் அபிநயத்திற்கான
கையேடு. நாடகத்தின் ஒவ்வொரு அங்கமும், ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுக்குமான வரையறை
(instruction manual), ஒவ்வொரு கதைத்தருணத்தையும் சொல்லும்முறை, உச்சரிப்பு
மாறுப்பாடுகள், குரல் மாறுபாடுகள், கதாப்பாத்திரம் நிற்கும் முறை, அமரும் முறை, முக அபிநயங்கள், கண்ணசைவுகள், கைமுத்திரைகள் வழியாக வெளிப்படுத்தவேண்டிய பாவம்,
என்னென்ன வகையான உணர்வுமாற்றங்களை நிகழ்த்த குறிப்பிட்ட
கதாப்பாத்திரத்திற்கு அனுமதி இருக்கிறது, எவற்றிற்கு அனுமதி,
கதாப்பாத்திரத்தின் உடை, முக ஒப்பனைகள், மேடை அமைப்பு, மேடையில் தேவையான
பொருட்கள். இவைதான் சாக்கியார்களுக்கான உயிர்மூச்சு.
அங்குலியாங்கம் கூடியாட்டம் அனுமன்
கூடியாட்டம் தொடங்குவதற்கு முன் ஏதேனும் சடங்குகள் உண்டா?
சம்ஸ்கிருத நாடகத்தில் சூத்ரதாரன் என்றால் அனைத்து அங்கங்களையும் இணைக்கும்
சரடுபோன்றவன், பிரதான கதாப்பாத்திரம். அவன் நாடகத்தின் முதல் அங்கத்திலிருந்து
கடைசிவரை இருப்பவன். கூடியாட்டத்தில் சூத்ரதாரனாக அபிநயிப்பது சாக்கியார்.
ஆனால் மிழா இசைக்கும் நம்பியார்தான் ‘ஸ்தாபனா சூத்ரதாரன்’, அதாவது
கூடியாட்டம் என்ற ஒட்டுமொத்த அமைப்பிற்கான பிரதான அங்கம். கதாப்பாத்திரங்களை நிகழ்த்தும் சாக்கியார் நம்பியார் அனுமதித்தபிறகுதான்
அபிநயம் நிகழ்த்தமுடியும். சாக்கியார் நம்பியாரிடம் அனுமதி
பெற்றுக்கொண்டு அபிநயிக்கத்தொடங்குவார்கள். நம்பியார் மிழா
இசைக்கத்தொடங்குவது சாக்கியாரிடம் கேட்டுவிட்டுதான், அதேபோல அபிநயிக்கும்
சாக்கியார் தலையில்கெட்டு என்ற சடங்காக தலைஆபரணத்தை நம்பியாரிடம்
கேட்டுவிட்டுதான் அணிவார். இப்படி பரஸ்பரம் இருவரும் புரிந்துகொண்டு
நிகழ்த்துவார்கள். அதில் இவர் பெரியவர், அவர் சிறியவர் என்று இல்லை, இவர்கள்
ஒன்றிணைந்து நிகழ்த்துவது, அதனால்தான் கூடியாட்டம் என்ற பெயர்.
கூடியாட்டம் நிகழ்த்துதலில் உள்ள தனித்தன்மையான அம்சம் என்ன?
கூடியாட்டம் தொடங்குவது ஒரு குறிப்பிட்ட கதையின் உச்சபட்ச நாடகீய
தருணத்திலிருந்துதான். அதற்குமுன்பு உள்ள பகுதிகள் நிர்வஹனம்(Flashback)
என்ற பெயரில் நிகழ்த்தப்படும். அதாவது கதாப்பாத்திரங்களின் தன்னுரைகளாக அது
நிகழ்த்ப்படும். ராவணன் தன்னைப்பற்றி, தான் பிரம்மனிடம் வரம் வாங்குவது, கைலாய மலையை தூக்குவது, தன் மகன் இந்திரனை வெல்வது என
அனைத்து சம்பவங்களும் ராவணனின் தன்னுரை வழியாகவே சொல்லப்படுன். கதகளியில் அதை தன்றேட ஆட்டம் என்பார்கள். அந்த தன்னுரை முடியும்போது ஏதோ ஒரு
சத்தம் கேட்கும், ஒரு தூதன் வருவான், பின் அவனும் ராவணனும் உரையாடும்
பகுதிகள் ஆரம்பிக்கும்.
கதகளி கலைஞர்கள், உதாரணமாக கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் தன் சுயசரிதையில்
கதகளியில் முக அபிநயமும், கண்களுக்கான அபிநயமும் போதுமான அளவு
கற்றுத்தரப்படுவதில்லை என்று உணர்ந்ததும், அவர் அடிப்படையான கதகளி பயிற்சி
முடிந்தபிறகு ஆறு மாதங்கள் கூடியாட்ட கலைஞர் மாணி மாதவ சாக்கியரிடம் கண்களின் அபிநயங்களும், முக அபிநயங்களும் கற்றுக்கொண்டதாக குறிப்பிடுகிறார்.
கூடியாட்டத்தில் கண்களுக்கான அபிநயங்கள் அவ்வளவு விரிவானவையா? கூடியாட்டத்தில்
கண்ணசைவுகளும் அது வழியாக நிகழ்த்தப்படும் அபிநயமும் எவ்வளவு பிரதானமானது?
”ஷினி ஷலபோ ஜ்வாலா சக்ரை ந விக்ரியதே” என்ற வரி சுபத்திரா தனஞ்செயம் நாடகத்தில்
உள்ளது, அது ஆசிரமத்தைப்பற்றிய வர்ணனை. அங்கு வேள்வித்தீயில் ஈ வந்து விழுகிறது. நெருப்பில் விழுந்தால் சாதாரண ஈக்கள் பொசுங்கிவிடும்.
ஆனால் இங்கு நெருப்பில் விழுந்த ஈ மீண்டும் அதிலிருந்து பறக்க முடிகிறது. அக்னி
பொதுவாக தகனன், எதை போட்டாலும் அவற்றை செறித்துக்கொள்ளக்கூடியது நெருப்பு.
ஆனால் இங்குள்ள ஈக்கள் நெருப்பால் தகிப்பிக்கப்படாமல் மீண்டும் பறக்கின்றன, இது
எவ்வளவு ஆச்சர்யமானது. அதாவது இங்கு பார்வையாளர்களில் அத்புத
ரசம்(ஆச்சர்யம்) உருவாகவேண்டும். கூடியாட்டத்தில் ஈக்கள்
நெருப்பில் குதிப்பது பிரதானமாக நிகழ்த்தப்படும். கண்ணசைவுகள் வழியாக தீ
எரிவதையும், ஈ கொஞ்சம் கொஞ்சமாக பறந்து பறந்து தீயில் குதிப்பதையும், மீண்டும்
தீயிலிருந்து மீண்டு பறக்க ஆரம்பிப்பதும் கண்ணசைவுகள் வழியாகவே
நிகழ்த்திக்காட்டப்படும். எட்டுவகையான கண்பயிற்சிகள் உண்டு. வட்டமாக,
குறுக்காக, பக்கவாடுகள், மேல் கீழ் இப்படி. அவற்றை சின்னவயதிலிருந்தே
கற்றுக்கொள்ளவேண்டும்.
குறிப்பிட்ட திசைநோக்கி கண்களை சுழற்றுவதை, அந்த எண்ணத்தை சுழற்சியாக மாற்றும்
உளஆற்றலை நாங்கள் ’வாயு’ என்று சொல்வோம். கதாப்பாத்திரத்தின் அகச்சலனங்களை
உடலில் பிரதிபலிக்க வாயு என்ற ஆற்றலின் பங்கு உண்டு.
ஆனால் கூடியாட்டத்தில் கண்ணசைவுகள் வழியாக நிகழ்த்தப்படும் நுண்ணிய விவரணைகள்,
அதன் மாறுபாடுகளை பார்த்து புரிந்துகொள்ளும் பார்வையாளர்கள் இன்று இல்லை,
அதுதான் பிரச்சனை. கலைவடிவம் பார்வையாளர்களின் ரசனைவட்டத்திற்கு
சுருங்கக்கூடாது. பார்வையாளன் கலையின் நுட்பம் நோக்கி தன்னை உயர்த்திக்கொள்ள
வேண்டும். பார்வையாளர்கள் கூடியாட்டத்தின் செவ்வியல்தன்மை நோக்கி தங்களை
விரிவுபடுத்திக்கொள்ளவில்லை. அதனால்தான் கூடியாட்டம் இன்று மலையாள
கலாச்சாரத்திற்கு அவ்வளவு அந்நியமானதாக, மிக குறைவாக நிகழ்த்தப்படக்கூடிய,
பார்வையாளர்கள் அற்ற கலைவடிவமாக இன்று சுருங்கிவிட்டது. உதாரணமாக, உங்கள் இருவருக்கும் தாய்மொழி தமிழ். தமிழில் ஒரு விவாதத்தை நிகழ்த்துகிறீர்கள். ஆனால்
எனக்கு மலையாளம் மட்டும்தான் தெரியும். உங்கள் விவாதத்தில் நான் தமிழே
தெரியாமல் கலந்துகொள்ளவிரும்புகிறேன் என்றால் அது சாத்தியமா? ஒன்று நான்
தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும், அதன் பிறகு நான் உங்கள் விவாதத்தை கவனிக்கலாம்.
எனக்கு தமிழ்படிக்க ஆர்வுமும் இல்லை அல்லது நான் கற்றுக்கொள்ள விழைகிறேன், ஆனால்
சொல்லித்தர ஆள் இல்லை. அல்லது சொல்லித்தர ஆள் உண்டு, எனக்கு ஆர்வம் இருக்கிறது,
கற்றுக்கொள்ள நேரமில்லை. நானே கற்றுக்கொண்டாலும் சில சொற்களின் பொருள்
தெரிவதில்லை. தமிழில் மொழி அழகு உண்டு, பண்பாட்டு தனித்தன்மைகள் உண்டு. ஒவ்வொரு
மொழிக்கும் அதுபோன்ற தனித்தன்மையும் அழகுகளும் உண்டு. அவற்றை அந்தந்த
மொழிகளில், வடிவத்தில்தான் முழுமையாக ரசிக்கமுடியும், அதை வேறொரு வடிவத்திற்கு
மாற்றினால் அதன் முழுமையை இழந்துவிடும்.
ஆஶ்சர்ய சூடாமணி கூடியாட்டத்தில் சூர்ப்பனகை
எல்லா செவ்வியல் வடிவங்களும் நாட்டார் மரபுகளை தங்களுக்குள் கொண்டிருக்கும்.
கூடியாட்டம் மிகப்பழைய செவ்வியல் நிகழ்த்துகலை வடிவம். அதனால் இதில்
நாட்டார்கலைகளின் பாதிப்பு, காலத்தால் பின்னர் உருவான செவ்வியல் கலைகளைவிட
அதிகமாக இருக்கிறது என்று சொல்லலாமா? உதாரணமாக, கூடியாட்டத்தில்
சூர்பனகையின் ஒப்பனை மிக நாட்டார்தன்மை கொண்டதாக இருக்கிறது. ஒரு
செவ்வியல்கலையில் இவ்வளவு நாட்டார்தன்மை சாத்தியமா?
கூடியாட்டம் உருவான 2000 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் சொல்வதுபோல
நாட்டார்கலை, செவ்வியல்கலை என்ற கறாரான பிரிவினையே இல்லை. கூடியாட்ட ஒப்பனையில்
தேங்காய் சிரட்டையை எரித்தால் வரக்கூடிய அளவு கருப்பு சூர்பனகைக்கு. அன்று
எப்படி ஒப்பனை செய்யப்பட்டதோ அதேபோலத்தான் இப்போதும். ஒரு மாற்றமும் இல்லை.
கூடியாட்டத்தின் பாதிப்பில் பல நாட்டார்கலைகள் பின்னர் உருவாகி
வந்தன. அதன் பாதிப்பால் பின்னால் உருவான நாட்டார் கலைகளை பார்த்துவிட்டு,
கூடியாட்டத்தில் நாட்டார் அம்சங்கள் உண்டு என்று எப்படி சொல்லமுடியும்.
நேர் தலைகீழாகத்தானே நிகழ்ந்திருக்கிறது. நாட்டார் கலைகள் மக்களின்
வாழ்க்கைமுறையின் பகுதியாக இருந்தது. அவை மேன்மையானவையா தாழ்ந்தவையா என்று
விவாதிக்க நான் விரும்பவில்லை. கதகளி போன்ற செவ்வியல்கலை கூடியாட்டத்தை
இன்னும் அழகுபடுத்துவது வழியாக உருவான கலைவடிவம். கதகளியைவிட அழகுபடுத்தபட்ட
கலை வேறு இல்லை. கதகளி ஒவ்வொரு கைமுத்திரையும் மிக நளினமான அசைவுகளுடனே
காட்டப்படுகிறது. கூடியாட்டம் முதலில் உருவானது, கூடியாட்டத்தின்
பலவீனங்களை, அதன் எல்லைகளை புரிந்துகொண்டு அதை தீர்ப்பதற்காக உருவானது கதகளி.
கதகளி
கூடியாட்டத்தில் அபிநயிப்பவரே பாடவேண்டும், கூடியாட்டத்தின் அந்த எல்லையை
கதகளி தனிப்பாடகரை அறிமுகப்படுத்துவது வழியாக தாண்டிச்சென்றது.
கூடியாட்டத்திலிருந்து மேலும் இசைத்தன்மைகொண்டதாக ஆகியது, செண்டை மத்தளம்
வழியாக தாளங்களும் செறிவானதாக ஆகியது. அதேபோல ஒப்பனையும் கூடியாட்டத்தைவிட
அழகானதாக ஆகியது. கூடியாட்டத்தில் ஒப்பனையில் இன்று பெரிய மாற்றம் வரவில்லை,
கிட்டத்தட்ட அதே பழைய வடிவத்திலேயே தொடர்கிறது. கூடியாட்டத்திலிருந்து கதகளி
போல லாஸ்யத்தை, நளினத்தை அடிப்படையாக்கொண்ட பல கலைவடிவங்களும் உருவாகின.
பாரதவர்ஷம் என்ற நிலப்பரப்பு பழைமையானது, இன்றைய மாநிலங்களும், இந்தியா என்ற
நாடும் புதியது. எந்த கலையும் மக்களில் கலையனுபவத்தை ஏற்படுத்த வேண்டும். மதம்,
ஜாதிகள் இவை உருவானது மிகப்பின்னால்தான். கூடியாட்டம் அதற்கெல்லாம் முன்னால்
உருவான கலைவடிவம். அவ்வளவு பழைமையானதாக இல்லாவிட்டால் பரதமுனிவர் தன்
மைந்தர்களுக்கு அதை கற்றுத்தர வேண்டிய அவசியமே இல்லையே? நாம் பிரிவுகளாக
பிரித்துக்கொண்டே போகிறோம். ஹிந்து மதம், முஸ்லிம் மதம், லெனினிஸம்,
மார்க்ஸிஸம் என நாம் வகுத்துக்கொண்டே இருக்கிறோம், இந்த கலையின்
சாராம்சத்தை உணர்ந்துகொள்ள, கற்றுக்கொள்ள, அதை ரசிக்க நாம் தகுதி கொண்டவர்கள்
அல்ல. நமக்கு அந்த ஆற்றல் இல்லை. அதற்கு பதிலாக வேறொன்றை உருவாக்கி என்னென்னமோ
செய்துகொண்டிருக்கிறோம். பழைய மலையாள சினிமாப்பாடல்களின் சந்தமும்,
கவித்துவமும் இன்றைய சினிமாவில் இல்லை. இன்றைய ரசனையை மோசமானது என்று
சொல்லவில்லை, வேகமான தாளமும், திட்டவட்டமான அர்த்தம் இல்லாத வரிகளும் கொண்ட
பாடல்கள் இன்றைய காலகட்டத்திற்கு மிக விருப்பமானதாக இருக்கிறது.
கலையனுபவம் என்பது முழுக்கமுழுக்க தனிநபர் சார்ந்தது, அகவயமானது. ஒருவருக்கு
பிடித்திருப்பது மற்றவருக்கு பிடிக்கவேண்டுமென்பதில்லை. வெவ்வேறான
வழிகளில் கலையனுபவம் சாத்தியமாகிறது. வழிகள் வேறுவேறு, ஆனால் கடைசியாக
கிடைக்கும் அந்த அனுபவம் ஒன்றுதான். விருப்பங்கள் வெவ்வேறானவை. ஒவ்வொருவரின்
ரசனையும் வெவ்வேறானது. ஒருவர் அடைந்த கலையனுபவத்தை மற்றவர் அறியமுடியாது. அதை
அனுபவிக்கும்போதுதான் ’அனுபூதி’ என்ற நிலையை கலாரசிகன் அடைகிறான். நடனம் என்பது
கற்பிக்கப்படுவதால் அல்ல, நிகழ்த்தப்படுவதால் அல்ல, அது தூய கலாரசிகனின்
கலையனுபவத்திலேயே முழுமையடைகிறது.
நேர்காணல் - அழகிய மணவாளன், தாமரைக்கண்ணன் புதுச்சேரி
கேரள கலாமண்டலம்
1900-களின் தொடக்கத்தில் நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சி போன்ற
பல்வேறு காரணங்களால் அழிந்துகொண்டிருந்த கேரள செவ்வியல் நிகழ்த்துகலைகளான
கூடியாட்டத்தையும், கதகளியையும் மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்ற
முனைப்பில் மலையாள கவிஞர் வள்ளத்தோள் நாராயண மேனோனும், முகுந்த ராஜா என்ற
அரசகுடும்பத்தைச்சேர்ந்தவரும் இணைந்து 1927ல் தொடங்கப்பட்ட அமைப்பு. இந்திய அரசின் deemed university ஆக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கதகளி,
கூடியாட்டம், நங்கையார்கூத்து, துள்ளல், மோகினியாட்டம் போன்ற கேரள
நிகழ்த்துகலைகளையும், பரதநாட்டியம், குச்சிப்புடி போன்ற தென்னிந்திய
நிகழ்த்துகலைகளையும் கற்பிக்கிறது. செண்டை, மத்தளம், மிழா போன்ற தாளவாத்திய கருவிகளை தனிக்கலைவடிவங்களாகவும், நிகழ்த்துகலைகளுக்கான பின்னணி
இசைவடிவம் என்ற நிலையிலும் கற்பிக்கிறது.
அழகிய மணவாளன் தமிழ் மொழிபெயர்ப்பாளர். மலையாளத்தில் இருந்து
கட்டுரைகள், கதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறார். தமிழில்
கட்டுரைகள் எழுதி வருகிறார். பி.கே. பாலகிருஷ்ணனின்நாவலெனும் கலைநிகழ்வு எனும் நூல் இவரது மொழிபெயர்ப்பில்
வெளிவந்துள்ளது.