Monday, 29 July 2024

பெனிசிலியமும் பெனிசிலினும் - லோகமாதேவி

பெனிசிலியம்
கோக்கனட் க்ரூவ் இரவு விடுதி அன்று வழக்கத்துக்கு மாறாக நிரம்பியிருந்தது. அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டு ஒரு வருடமாயிருந்த 1942-ன் அந்த நவம்பரில் அமெரிக்கர்கள் நன்றி தெரிவிக்கும் வார இறுதி கொண்டாட்டத்தில் இருந்தார்கள். 

பாஸ்டனில் கோக்கனட் க்ரூவ் என்னும் அந்த இரவு விடுதி மிகப் பிரபலமானது. அங்குத் திரை நட்சத்திரங்களும் அரசியல் பிரமுகர்களும் பாடகர்களும் வழக்கமாகக் கூடுவார்கள். நவம்பர் 28 அன்று 600 பேர் மட்டும் இருக்க முடிந்த அந்த இடத்தில் போரிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்த ராணுவ வீரர்களும், புதுமணத் தம்பதியினரும் பாடகர்களுமாகச் சுமார் ஆயிரம் பேர் கூடியிருந்தனர். 

சமீபத்தில் விரிவாக்கப்பட்ட தரைத்தளமும் ஒரு சிறு முதல்தளமும் கொண்டிருந்த அந்த விடுதியின் உரிமையாளர் நிழலுலக தாதாக்களுடன் தொடர்பில் இருந்தவர், எனவே அவ்விடுதிக்கான உரிமம் பெறப்பட்டிருக்கவில்லை, பாதுகாப்பு விதிமுறைகளும் வெகுவாக மீறப்பட்டிருந்தன. உலகப் போர் சமயமாதலால் தட்டுப்பாட்டில் இருந்த குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படும் ஃப்ரியானுக்கு (Freon) பதில் எளிதில் தீப்பிடிக்கும் மெத்தைல் குளோரைடு பயன்படுத்தப்பட்டிருந்தது.

தரைத்தளத்தின் விதானம் எடையற்ற காகித அட்டைகளால் உருவாக்கப்பட்டிருந்தது. அன்றைய கொண்டாட்டத்திற்கு விடுதி ஒரு கடற்கரை தீவைப் போலக் காட்சிப்படுத்தப் பட்டிருந்ததால் நியான், துணி, காகிதம் மற்றும் பிளாஸ்டிக்கால் செயற்கையாக உருவாக்கப்பட்ட, காய்ந்த ஓலைகள் இணைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களும், தேங்காய்க் கொப்பரைகளில் அமைக்கப்பட்ட பிரகாசமான விளக்குகளுமாக விடுதி ஜொலித்தது.

தரைத்தளத்தின் ஒரு மூலையில் தன் காதலியை முத்தமிட விரும்பிய ஒரு இளம் ராணுவ வீரர் அங்கிருந்த பிரகாசமான குமிழ் விளக்கொன்றை கழட்டி அந்த இடத்தை இருட்டாக்கி இருந்தார்.

இரவு 10.15க்கு அந்த இருட்டான மூலையை கவனித்த மது பரிமாறிக்கொண்டிருந்த ஒருவர் தனக்கு உதவி செய்துகொண்டிருந்த 16 வயது சிறுவனான ஸ்டான்லியிடம் அந்த விளக்கை மீண்டும் மாட்டச்சொன்னார். இருட்டில் விளக்கைப் பொருத்த முயன்ற ஸ்டான்லி தீக்குச்சியை உரசி வெளிச்சம் உருவாக்கி அந்த விளக்கை மாட்டினான்.

தீக்குச்சியிலிருந்து பறந்த ஒரு தீப்பொறி காய்ந்த ஓலைகளில் பற்றி மளமளவென அந்த விடுதியின் விதானமும் தென்னை மரங்களும் பற்றிக்கொண்டன. கொண்டாட்டத்தில் இருந்தவர்கள் தீயை கவனிக்கும் முன்பு தீ முதல் தளத்துக்குப் பரவியது.

கூடுதலாக ஆட்கள் உள்ளே வரக் கூடாது என்பதற்காக வாசல் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. குளிர்சாதனப்பெட்டியின் மெத்தைல் குளோரைடும் பிளாஸ்டிக்கும் காகிதங்களுமாக 12 நிமிடங்களில் அந்த விடுதி முழுக்க தீக்கிரையானது. ஒரே ஒரு சிறு வாசல் வழியே தப்பிக்க முயன்றவர்களால் அந்த வாசலும் அடைபட்டு தீப்பிடித்த சிறிது நேரத்திலேயே அன்று மதியம் திருமணம் செய்து கொண்டிருந்த புதுமணத்தம்பதிகள், 15 வயதேயான ஒரு சிறுவன் உள்ளிட்ட 492 நபர்கள் உடல் கருகியும் விஷப்புகையை சுவாசித்தும் இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தார்கள்.பலர் நாற்காலிகளில் உட்கார்ந்தபடி கையில் மதுக்கோப்பையுடன் அப்படியே இறந்திருந்தார்கள்.

எரிந்து கருகிய பாஸ்டன் கோக்கனட் க்ரூவ்
பொதுமக்களும் காவல் துறையினரும் முழுவீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தப்பிப்பிழைத்த பலருக்கு தீவிரமான தீக்காயங்கள் இருந்தன.

1993- சிக்காகோவின் திரையரங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து 602 உயிர்களைப் பலி கொண்டது அதன் பிறகு அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான இரண்டாவது பெரிய தீ விபத்து இதுதான்.

தீக்காயமுற்று உயிருக்குப் போராடியவர்கள் மாசசூசெட்ஸ் (Massachusetts) பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அந்தத் தீ விபத்து நடந்த உடனயே அரசு Merck பன்னாட்டு மருந்து நிறுவனத்தை எத்தனை பெனிசிலின் கையிருப்பில் இருக்கிறதோ அத்தனையையும் போஸ்டனுக்கு அனுப்ப உத்தரவிட்டது. அப்படியே கையிருப்பில் இருந்தவற்றை அனுப்பிய அந்நிறுவனம் மேலும் அதிக பெனிசிலினை தயாரிக்கவும் முனைந்தது.

இரவும் பகலுமாக மிகக்கடுமையாகப் பல பணியாளர்கள் உழைத்து 3 நாட்களுக்குப் பிறகு 1942 டிசம்பர் 1 அன்று ஒரு குளிரூட்டபட்ட வாகனத்தில் 32 லிட்டர் பெனிசிலின் ஊசி மருந்து நியூஜெர்ஸி மருந்து நிறுவன வளாகத்திலிருந்து போஸ்டனை நோக்கிப் பயணித்தது. அந்த வாகனத்துக்கு முன்னும் பின்னும் காவல் வாகனங்கள் பாதுகாப்பளித்து தொடர்ந்து வந்தன. அதிகாலை இருட்டில் அந்த வாகனத்தின் மருந்துகள் மாசசூசெட்ஸ் மருத்துவர்களால் பெறப்பட்டு உடனடியாகப் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஏறக்குறைய மரணத்தைச் சந்தித்திருந்த பலர் காப்பாற்றப்பட்டார்கள். மறுநாள் போஸ்டன் குளோப் மற்றும் டைம் நாளேடுகள் விலைமதிப்பற்ற அற்புத மருந்து எனப் பெனிசிலினைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது.

இதுதான் பெனிசிலின் என்னும் முதல் நுண்ணுயிர்க்கொல்லி மருந்து அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களைக் காப்பாற்றிய முதல் நிகழ்வு. உலக மருத்துவ வரலாற்றின் மிக முக்கியமான சிகிச்சை அளிக்கப்பட காரணமாயிருந்த அந்த விபத்து பல முதல்முறையானவைகளை தொடங்கி வைத்தது பெனிசிலினின் முதல் பரவலான உபயோகம், விடுதிகள் அடுக்ககங்கள் மற்றும் கட்டிடங்களுக்கான முறையான பாதுகாப்பு விதிகளின் ஒழுங்கமைப்பு, மருத்துவமனைகளிலேயே செயல்பட துவங்கிய ரத்தவங்கிகள், எல்லாக் கட்டிடங்களிலும் அவசரகால வழிகள் அமைக்கப்படுவது ஆகியவை அப்போதிலிருந்துதான் கட்டாயமாக்கப்பட்டன.

அதன்பிறகு அமெரிக்க அதிபரின் நேரடிப் பார்வையில் உலகப் போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பெருமளவில் பெனிசிலினை தயாரிக்க Merck, Squibb, Pfizer மற்றும் Lederle நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

I4 மாதங்களில் ஏராளமாகப் பெனிசிலின் தயாரிக்கப்பட்டு சந்தைப் படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் பல்லாயிரம் வீரர்களின் உயிரைப் பெனிசிலின் காப்பற்றியது. பெனிசிலின் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதோடு Merck, Pfizer, Glaxo and Sandoz போன்ற மிக முக்கியமான மருத்துவ மற்றும் அறிவியல் நிறுவனங்கள் உருவாகவும் உதவியது. மருத்துவ வரலாற்றின் இந்தக் குறிப்பிடத்தக்க நிகழ்வு அத்தனை எளிதில் நடந்துவிடவில்லை

உலகின் முதல் நுண்ணுயிர் எதிர்ப்பியான பெனிசிலினை 1928-ல் தற்செயலாகத்தான் அலெக்சாண்டர் ஃபிளெமிங் பெனிசிலியம் பூஞ்சையிலிருந்து கண்டறிந்தார்.

எனினும் நுண்ணுயிர் திர்ப்பிகளை அதற்கு முன்பே பலர் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிரான சிகிச்சையில் உபயோகப்படுத்தி இருக்கின்றனர்.

பூஞ்சையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட முதல் இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பி பெனிசிலின்தான். ஆனால் 1910-ல் பெனிசிலின் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே சால்வர்சன் (Salvarsan / 606) என்னும் சந்தைப்பெயரில் பால் எர்லிச், சா ஹசிரோ ஹட்டா (Paul Ehrlich & Sa Hachiro Hata) ஆகியோரால் நோயெதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 

அலெக்ஸாண்டர் ஃப்ளமிங்

சிபிலிஸ் என்னும் பால்வினை நோயை உருவாக்கும் பாக்டீரியாவுக்கு (Treponema pallidum) எதிரான சிகிச்சையில் சால்வர்சன் வெற்றிகரமான நுண்ணுயிரெதிர்ப்பியாகப் பயன்பாட்டில் இருந்தது. பெனிசிலின் புழக்கத்துக்கு வந்தபின்னர்தான் இதன் பயன்பாடு வெகுவாகக் குறைந்தது.

பண்டைய நாகரிகங்கள் பலவற்றில் பூஞ்சைகளைக்கொண்டு பாக்டீரியா தொற்றை குணமாக்குவது அதன் அறிவியல் அடிப்படை தெரியாமலேயே புழக்கத்தில் இருந்தது.

பண்டைய கிரேக்கம், இந்தியா மற்றும் எகிப்தில் சமையலறையில் பூசணம் பிடித்த நீலப்பச்சை நிறத்திலிருந்த ரொட்டித் துண்டுகளைச் சேமித்து வைத்திருந்து. வெட்டுக்காயங்கள், கொப்புளங்களுக்கு அதன் சிறு துண்டை நீரில் கரைத்துப் பூசி சிகிச்சையளிக்கப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் இந்தியா, எகிப்து மற்றும் கிரேக்கத்தில் போர் வீரர்களின் காயங்களுக்குப் பூசணம் பிடித்த ரொட்டித் துண்டுகளைக் கரைத்துப்பூசி சிகிச்சை அளித்தற்கான ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. 

17-ம் நூற்றாண்டில் போலந்தில் சிலந்தி வலையையும் பூசணம் பிடித்த ரொட்டித்துண்டையும் குழைத்துப் பூசி பல வெட்டுக்காயங்களுக்கும் கொப்புளங்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டதை ஹென்ரிக் (henryk Sienkiewicz) அவரது ’’with fire and sword’’ என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். சிலந்தி வலையில் பூஞ்சைக்காளான் ஸ்போர்கள் சிக்கிக்கொண்டிருக்கும் என்பதை அவர்கள் எப்படியோ அறிந்திருந்தனர்.

இப்படி பூஞ்சைகளைக் கொண்டு சிகிச்சையளிப்பதை முதலாம் சார்லஸின் மருந்தாளுனரும், அரசாங்க தாவரவியலாளருமான ஜான் பார்கின்சன் 1640-ல் அவரது தியேட்ரம் பொட்டானிகம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். 

அறிவியல் ரீதியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் கண்டுபிடிப்புக்கள் 1870-லிருந்தே ஐக்கியநாடுகளில் தொடங்கி இருந்தது. சர் ஜான் ஸ்காட் (Sir John Scott Burdon), உயிர்களின் தன்னிச்சையான தோற்றம்குறித்த ஆய்வுகளின்போது பூசணம் பிடித்த வளர்ப்பு ஊடகங்கள் பாக்டீரிய வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதை கண்டறிந்தார்.

இவரது அறிக்கைகளை வாசித்த (கிருமிநாசினியை கண்டு பிடித்தவரான) ஜோசஃப் லிஸ்டரும் (Joseph Lister), பூசணம் பிடித்த சிறுநீர் பாக்டீரியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதை கண்டறிந்து தெரியப்படுத்தினார். அந்தப் பூஞ்சை Penicillium glaucum என்பதையும் 1871-ல் லிஸ்டர் கண்டறிந்தார், மேலும் இந்தப் பூஞ்சையின் நுண்ணுயிர் எதிர்க்கும் செயல்பாட்டை லிஸ்டர் மனிதர்களுக்கும் சோதனை செய்து பார்த்தார்.

1877-ல் எல்லென் ஜோன்ஸ் என்னும் பெண்மணியின் ஆறாக்காயங்களுக்கு பெனிசிலியம் க்ளாக்கம் பூஞ்சையை ஆய்வகத்தில் வளர்த்தி அதன் சாறெடுத்து அந்தக் களிம்பைப் பூசி குணப்படுத்திய லிஸ்டர் அவரது அந்தக் கண்டுபிடிப்பைப் பிரசுரிக்கவில்லை.

இவரைப்போலவே 1873-ல் வில்லியம் ராபர்ட்ஸ் (என்ஸைம் என்னும் பெயரை உருவாக்கியவர்) 1875-ல் ஜான் டிண்டல், 1876-ல் ராபர்ட் கோச், லூயி பாஸ்டர் ஆகியோரும் பூஞ்சைகள் பாக்டீரியாவுக்கு எதிராகச் செயல்படுவதை கண்டறிந்தார்கள். 

1895-ல் நேபிள்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவரான வின்சென்ஸோ (vincenzo tiberin) அர்சானோ (Arzano) பிரதேசத்தின் ஒரு குடிநீர்க்கிணற்றின் சுவர்களில் படிந்திருக்கும் பூஞ்சைகளைச் சுத்தம் செய்து அகற்றிய பின்னர் அந்த நீரைக் குடித்தவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கும் வலியும் இருந்ததையும் மீண்டும் கிணற்றின் சுவர்களில் பூஞ்சை வளர்ந்த பின்னர் அப்படி வயிற்றுப்போக்கும் வலியும் ஒருபோதும் வராமலிருந்ததையும் கவனித்தார். தொடர்ந்த ஆய்வுகளுக்குப் பின்னர் கிணற்றுச்சுவரில் வளர்ந்த பூஞ்சைகள் பெனிசிலியம் மற்றும் அஸ்பர்ஜில்லஸ், இவை பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அழித்தன என்ற இவரின் ஆய்வறிக்கை யாருடைய கவனத்திற்கும் வரவில்லை. 


கனடாவை சேர்ந்த உயிரியலாளர் கிளிஃப் (A E Cliffe) 1908-ல் ஐரோப்பாவின் பெரும்பாலான பண்ணை வீடுகளின் சமையலறையில் பூசணம் பிடித்த கஞ்சியும் ரொட்டியும் சேமிக்கப்பட்டிருந்ததையும் காயங்கள், கீறல்கள், கொப்புளங்களுக்கு அதன் சிறு துண்டை நீரில் கரைத்து பூசி சிகிச்சை அளிக்கப்படுவதையும், அப்படி பூசிய பின்னர் அந்தக் காயம் விரைவில் ஆறிவிடுவதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய ஐரோப்பாவில் பூசணம் பிடித்த தானியங்களைக் கொண்டு சமைக்கப்பட்ட கஞ்சியையும் இப்படி புண்களை ஆற்றும் சிகிச்சையில் பயன்படுத்தினர்.

1929-ல் பிரண்டா என்னும் பெண்ணின் முகத்தில் உண்டாகி இருந்த பாக்டீரியா தொற்று எந்தச் சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் அதிகரித்துக்கொண்டே போனபோது கடைசி முயற்சியாக அவர்களின் குடும்ப மருத்துவரான ஜேம்ஸ் (James Twomey) மாவுக்கஞ்சியை கொதிக்க வைத்துப் பல நாட்கள் ஆறவைத்து அது பூசணம் பிடித்தபின்னர் அந்தக் கஞ்சியை குழைத்து முகத்தில் பூசியபோது ஒரு வாரத்தில் அவள் முழுக்க குணமானாள். 1989-ல் பிரிட்டிஷ் நுண்ணுயிரியலாளர் மில்டன் (Milton Wainright) அந்தக் கஞ்சியில் வளர்ந்திருந்தது பெனிசிலியமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

பெனிசிலின் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்கினால் கண்டுபிடிக்கப்பட்ட அதே காலகட்டத்தில் (1924) பெல்ஜிய பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆன்றே (Andre Gratia) மற்றும் சாரா (Sara Dath) பூஞ்சைகளின் பாக்டீரியாவுக்கெதிரான செயல்பாடுகுறித்து ஆய்வறிக்கை வெளியிட்டார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வளர்ப்பு ஊடகம் தொலைந்துபோனது.

பெனிசிலின் கண்டறியப்படும் வரைக்கும் இந்த ஆய்வுகள் எந்த முக்கியத்துவமும் பெறவில்லை.

1921-ல் லண்டன் செயின்ட் மேரி மருத்துவமனை ஆய்வகத்தில் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் பணிபுரிந்துகொண்டிருந்தார் ஸ்காட்லாந்தின் இயற்கை அழகு மிகுந்த ஒரு பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த அவர் சூழலைக் கூர்ந்து கவனித்து ரசிக்கும் இயல்பை இளமையிலேயே பெற்றிருந்தார்.

நிதிப் பற்றாக்குறையால் மருத்துவம் படிக்க முடியாமல் இருந்த ஃபிளெமிங்கிற்கு அவரது உறவினர் ஒருவரின் சொத்து கிடைத்தபோது தாமதமாக மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.

மருத்துவப்படிப்பை முடித்தபிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் ஃபிளெமிங் உதவியாளராகச் சேர்ந்தார். சால்வர்ஸன் அப்போதுதான் சிபிலிஸ்க்கு எதிரான சிகிசையில் பயன் பட்டுக்கொண்டிருந்தது. ரைட் ஆய்வுக்குழுவினரின் முறிமருந்துகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருந்தனர், எனினும் அப்போது சிகிச்சையில் இருந்த ரசாயன நச்சுமுறி மருந்துகளால் இரத்தத்தின் வெள்ளையணுக்கள் அழிந்து இறப்பு மேலும் அதிகமாவதை ஃபிளெமிங் நிரூபித்தார்.

பக்க விளைவுகளற்ற நச்சு முறிமருந்துகளின் மீது ஃபிளெமிங்கின் கவனம் திரும்பியது. செயிண்ட் மேரி ஆய்வகத்தில் பணியில் இணைந்த ஃபிளெமிங் பல பெட்ரி தட்டுக்களில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை வளர்த்து அவற்றிற்கெதிராகச் சீழ், கண்ணீர், உமிழ்நீர், சளி போன்ற உடல் திரவங்களின் செயல்திறனை ஆராயத் துவங்கினார். 1922-ல் அப்படியான ஒரு நச்சு முறிமருந்தான லைசோஸைம் நொதியை அவர் கண்டுபிடித்தார்,

அந்த ஆய்வின் ஒரு பகுதியாகத்தான் Staphylococcus aureus என்னும் பாக்டீரியா, ஊடகத்தில் வளரும் விதங்களில் இருந்த வேறுபாட்டை அவர் ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆய்வின் முடிவுகளை System of Bacteriology சஞ்சிகையில் கட்டுரையாகப் பிரசுரிக்கவும் ஒப்புக்கொண்டிருந்தார். ஆய்வகத்தில் பல பெட்ரி தட்டுக்களில் அந்தப் பாக்டீரியா வளர்ந்து கொண்டிருந்தது.

1928, ஆகஸ்ட்டில் தன் குடும்பத்தினருடன் விடுமுறைக்காகச் சொந்த ஊரான சஃபோல்க்’கிற்கு ஃபிளெமிங் சென்றிருந்தார். ஊருக்குப் போகும் முன்பு அந்தப் பாக்டீரியாக்கள் இருந்த பெட்ரி தட்டுக்களை சூரிய ஒளி படாத இடத்தில் மேசையில் வைத்துவிட்டு சென்றிருந்தார்.

விடுமுறைக் காலத்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு அந்த மருத்துவமனையின் உயர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்ததால் செப்டம்பர் 1-ம் தேதி புதிய பணியில் சேர ஃபிளெமிங் மருத்துவமனைக்குத் திரும்பினார். 

அவருடன் முன்பு மருத்துவ உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த டேனியலும் (Daniel Merlin Pryce) அன்று உடனிருந்தார். இருவருமாகப் பாக்டீரியாக்கள் வளர்ந்திருந்த பெட்ரி தட்டுக்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கையில் அவற்றில் ஒன்றின் மூடி திறந்திருந்ததையும் அந்தத் தட்டு முழுக்க நீலப்பச்சை பூசணம் பிடித்திருப்பதையும் டேனியல் பார்த்தார்.


அதை ஃபிளெமிங்கிற்கு அவர் சுட்டிக்காட்டியபோது பூஞ்சை வளர்ந்திருந்த அந்தத் தட்டில் பாக்டீரியா வளரவில்லை என்பதை இருவரும் கண்டார்கள். அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் அப்போது டேனியலிடம் ’’இது வேடிக்கையாக இருக்கிறது’’ என்றார். டேனியல் பதிலுக்கு ’ஆம் இப்படித்தான் நீங்கள் லைசோஸைமையும் கண்டுபிடித்தீர்கள்’’ என்றார்.

மீண்டும் விடுமுறையை தொடர்ந்த, அந்தக் கண்டுபிடிப்பின் தீவிரத்தை அப்போது உணர்ந்திருக்காத, ஃபிளெமிங் தன் ஆய்வகத்துக்கு செப்டம்பர் இறுதியில் திரும்பினார்.

முன்பு வளர்ந்திருந்த அந்த நீலப்பச்சை பூஞ்சையான பெனிசிலியத்தை உபயோகித்து மீண்டும் பாக்டீரியா வளர்ச்சியை ஆராய்ந்தபோது அந்தப் பெனிசிலியத்தின் ஏதோ ஒன்று பாக்டீரியாக்களை வளரவிடாமல் அழிப்பதை உறுதி செய்தார். 

தொடர்ந்து அந்த ஆராய்ச்சியில் பல வகையான பாக்டீரியாக்களை வளர்த்த அவர் இறுதியாகப் பெனிசிலியம், குறிப்பிட்ட சில பாக்டீரியாக்களுக்கு எதிராக மட்டும் செயல்புரிவதை உறுதி செய்தார். 

ஃபிளமிங் பாக்டீரியாக்களில் ஆராய்ச்சி செய்துவந்த வல்லுநர் என்பதால் பூஞ்சைகளைக் குறித்த அந்த ஆய்வில் அவரால் ஆழமாக ஈடுபடமுடியவைல்லை. பெனிசிலியத்தின் எது பாக்டீரியாக்களை அழிக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை. இருந்தும் 1929, மார்ச் 7-ல் அந்தக் குறிப்பிட்ட (அப்போது ஆன்டிபயாடிக் என்று பெயரிடப்பட்டிருக்காத) ஒன்றுக்கு பெனிசிலின் என்று பெயரிட்டார். பிற்பாடு ஒரு நேர்காணலில் ’’ஏன் பெனிசிலின் என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்ற கேள்விக்கு ’எப்படி டிஜிட்டாலிஸிலிருந்து டிஜிடாலின் கண்டுபிடிக்கப்பட்டதோ அதுபோலவே பெனிசிலியத்திலிருந்து பெனிசிலின்’ என்றார்.

ஆனால் ஃபிளெமிங் கண்டுபிடித்தது பெனிசிலியத்தின் எந்தச் சிற்றினம் என்பதில் குழப்பம் நிழவியது அது நொட்டேட்டம், ரூப்ரம், கிரைசோஜீனம், கிரைசோஜினத்திலேயே சிறிய கொனிடியாக்களை கொண்டது, சயனோஃபல்வம், மீலியாகிரைனம் அன்று பலர் பலவிதமாகக் குறிப்பிட்டார்கள்.

ஃபிளெமிங் இந்த ஆரய்ச்சியை குறித்து சக ஆராய்ச்சியாளர்களிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டபோது யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை, மாறாக அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று சொன்னார்கள். 

ஃபிளெமிங் 1929, பிப்ரவரி 13 அன்று இதைக் குறித்த ஆய்வுக்கட்டுரையை மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் முன்பாகச் சமர்ப்பித்து தனது கண்டுபிடிப்பையும் விளக்கினார், அந்தக் குழுவினர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மே 1929-ல் ஃபிளெமிங் மீண்டும் அந்த ஆராய்ச்சியைக் குறித்த கட்டுரையை British Journal of Experimental Pathology-க்கு அனுப்பினார். அந்தக் கட்டுரையில் பெனிசிலியத்தின் பாக்டீரியாவுக்கெதிரான செயல்பாட்டைக் குறித்து அதிக கவனம் கொண்டிருந்த ஃபிளெமிங் அதன் மருத்துவ உபயோகங்கள் குறித்த தனது தெளிவின்மையையும் குறிப்பிட்டிருந்தார்.

பெனிசிலின் தனியே பிரித்தெடுத்தல்

ஃபிளெமிங்கிற்கு வேதியியல் ஆய்வுகளில் அத்தனை பரிச்சயமில்லை அவரே ’’நான் ஒரு பாக்டீரியாலஜிஸ்ட் மட்டும்தான் வேதியியலாளரல்ல’’ என்று சொல்லியும் இருக்கிறார். எனவே பெனிசிலியம் பூஞ்சையின் வேதியியல் இயல்புகளை ஆராய டிசம்பர் 1928-ல் ஸ்டூவர்ட் (Stuart Craddock), என்பவரை ஆய்வக உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். 

அடுத்து ஜனவரி 1929-ல் உயிர்வேதியியலாளரான ஃப்ரெட்ரிக்கையும் (Frederick Ridley) இணைத்துக்கொண்டார். ஆனால் பெனிசிலின் அடையவிருந்த உலகப்பிரசித்தி குறித்து எந்த யூகமும் இல்லாத இருவரும் ஃபிளெமிங்கை விட்டுவிட்டு வேறொரு ஆய்வகத்தில் பணியில் சேர்ந்து கொண்டனர்.

எனவே ஃபிளெமிங் பெனிசிலியத்தின் வேதிப்பண்புகளை ஆராயாமல் அப்படியே விட்டுவிட்டு அதன் உயிரியல் பண்புகளை மட்டும் ஆராய்ந்தார்.

ஆனால் ஆய்வகத்துக்கு வெளியே பெனிசிலியம் எப்படி பெட்ரி தட்டுகளுக்கு வந்திருக்கக்கூடும் எனப் பலவிதமான யூகங்கள் உருவாகின. ஃபிளெமிங் ஆய்வகத்தை அத்தனை தூய்மையாக வைத்திருக்காதவர் என்று அனைவருக்கும் தெரியும்.

ஒரு சாரார் ஃபிளெமிங் குடித்துவிட்டு கழுவ மறந்த காபி கோப்பையிலிருந்து பெனிசிலியம் உருவாகி இருக்கலாம் என்றார்கள். 1945-ல் ஃபிளெமிங் அந்தப் பூஞ்சையின் ஸ்போர்கள் பிரேய்ட் (Praed) சாலையை நோக்கித் திறந்திருந்த ஜன்னல் வழியே வந்திருக்க கூடும் என்றார். இந்த ஜன்னல் கருத்து அதன்பின்னர் பல கட்டுரைகளிலும் 1945-ல் வெளியான நூலான The Story of Penicillin -லும் இடம்பெற்றது எனினும் ஃபிளெமிங்கின் உதவியாளரான டேனியல் அந்த ஜன்னல் அப்போது மூடியே இருந்தது என்பதை பிற்பாடு தெரிவித்தார்.

அந்த இரண்டடுக்கு மாடி கட்டிடத்தின் மற்றொரு தளத்தில் பணிபுரிந்த ரொனால்டு (Ronald Hare) அந்த ஜன்னலின் முன்பாக இருந்த மிகக் கனமான மேசையினால் அந்த ஜன்னல் ஒருபோதும் திறக்கப்படவே இல்லை என்பதை 1970-ல் குறிப்பிட்டார்.

ஃபிளெமிங்கின் ஆய்வகம் இருந்த தளத்தின் கீழ்த் தளத்தில் இயங்கிய ஆய்வகத்தில் ஆஸ்துமாவுக்கு காரணமானவை என்று கருதப்பட்ட பெனிசிலியம் உள்ளிட்ட பல பூஞ்சைகளில் ஆய்வு நடந்தது, பூஞ்சைகள் பல பெட்ரி தட்டுக்களில் அங்கு வளர்க்கப்பட்டன. அந்த மருத்துவமனையில் அப்போதுதான் இணைந்திருந்த பூஞ்சையியலாளர் ஜான் பேட்ரிக் (John Patrick La Touche) பெனிசிலியத்தின் ஸ்போர்கள் காற்றில் பறந்து வந்து கதவு வழியே ஃபிளெமிங்கின் ஆய்வகத்துக்குள் நுழைந்திருக்கலாமென யூகித்தார். அவர் ஃபிளெமிங்கின் ஆய்வக பெட்ரி தட்டுக்களில் வளர்ந்திருந்தது பெனிசிலியம் ரூப்ரம் (Penicillium rubrum) என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் அது நொட்டேட்டம்தான் என்னும் உறுதியான கருத்தும் நிலவியது.

பெனிசிலியம் பூஞ்சையின் சாற்றைக் கொண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஃபிளெமிங் அந்தப் பூஞ்சைச்சாறு பல பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயல்புரிவதை அறிந்தார். அப்போது உலகெங்கிலும் பாக்டீரியா தொற்றுக்கெதிரான முறிமருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

1933-ல் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் நோயியல் பிரிவில் பணியாற்றிய ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளரான ஃப்ளோரேவிடம் (Howard Florey), வேதியியலளரான செயின் (Ernst boris chain) உதவியாளராக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை கண்டுபிடிக்கும் ஆய்வில் இணைந்தார். ஃப்ளொரே அவரிடம் ஃபிளெமிங் 1922-ல் கண்டுபிடித்திருந்த லைசோஸைமின் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளை ஆராயச்சொல்லி இருந்தார்.

1929-ல் ஃபிளெமிங் பெனிசிலியம் பூஞ்சையின் பாக்டீரிய எதிர்ப்பைக் குறித்து எழுதிய பழைய கட்டுரையை இருவரும் வாசித்தார்கள். அதன்பின்னர், ஃப்ளோரேவும் செயினும் பெனிசிலினின் மருத்துவ உபயோகங்களை முன்கூட்டியே யூகித்தார்கள்

எனவே நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கும் ஆராய்சிக்காக ராக்ஃபெல்லர் அறக்கட்டளையில் (Rockefeller Foundation) 25000 டாலர் உதவித்தொகையை பெற்று, ஒரு ஆராய்ச்சி குழுவை அமைத்து ஆய்வில் ஈடுபட்டார்கள். 

அக்குழுவில் அவர்கள் இருவருடன் நார்மன் ஹீட்லி (Norman Heatley) உள்ளிட்ட 6 பேர் இருந்தார்கள். அக்குழு பெனிசிலியம் ரூபென்ஸிலிருந்து (P. rubens) பழுப்புப் பொடியை உருவாக்கி அந்தப் பொடி பாக்டீரிய வளர்ச்சியை ஆய்வகத்திலும், பாக்டீரிய நோய்களை எலிகளிலும் குணமாக்கியதை கண்டறிந்தார்கள்.1939-ல் நடைபெற்ற இந்த ஆய்வுகளை 1940-ல் The Lancet மருத்துவ சஞ்சிகையில் இக்குழுவினர் வெளியிட்டனர்

1941-ல் பெனிசீலியம் பூஞ்சையிலிருந்து அதிக அளவில் பெனிசிலினை உற்பத்தி செய்யும் வழிமுறைகளை இக்குழு வெளியிட்டது.1942-ல் அக்குழு துய பெனிசிலினை பிரித்தெடுத்து அதன் மூலக்கூறு சூத்திரமான C24H32O10N2Ba என்பதையும் வெளியிட்டது.

இந்த மூலக்கூறு சூத்திரத்தில் பெனிசிலினின் சல்ஃபர் குறிப்பிடப் பட்டிருக்காததால் பல மாதங்களுக்குக் குழப்பம் நிலவியது. பின்னர் அதே குழு அந்த மூலக்கூறை திருத்தி C5H11O2SNHCl என்று சரியாக வெளியிட்டது. 

1942 ஜூனில் அக்குழு British Journal of Experimental Pathology- யில் வெளியிட்ட கட்டுரையில் இந்தத் தூய பெனிசிலின் பிரித்தெடுக்கப்பட்டதையும், அதன் பாக்டீரிய தொற்றுகளுக்கெதிரான மருத்துவ உபயோகங்களையும் விவரித்திருந்தது.


பெனிசிலினின் மருத்துவ சிகிச்சைகள்

ஜனவரி 1929-ல் ஃபிளெமிங்கின் உதவியாளராக இருந்த கிரடோக்கிற்கு மூக்கு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மூக்கினுள் பாக்டீரியத் தொற்று உண்டாகி இருந்தது. ஃபிளெமிங் அவருக்குப் பென்சிலின் ஊசியை அளித்தார் ஆனால் அவருக்கு அந்தச் சிகிச்சை பலனளிக்கவில்லை. பிற்பாடு அந்தத் தொற்று பெனிசிலினால் குணப்படுத்த முடியாத (Haemophilus influenzae) பாக்டீரியாவினால் உண்டானது என்பது தெரிய வந்தது.

நவம்பர் 1930-ல் இங்கிலாந்தின் தெற்குப் பகுதி மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த நோயியலாளரும் ஃபிளெமிங்கின் முன்னால் மாணவருமான பெய்னி (Cecil George Paine), ஃபிளெமிங்கிடமிருந்து பெனிசிலின் இருந்த பூஞ்சைச்சாற்றை கேட்டுப்பெற்று மூன்று குழந்தைகள் உட்பட சிலரின் கண் நோயைக் குணப்படுத்தினார்.

அதற்கு 9 வருடங்கள் கழித்துத்தான் ஆக்ஸ்போர்டு குழுவினர் 1940, ஆகஸ்ட் 24-ல் லேன்செட் சஞ்சிகையில் "Penicillin as a chemotherapeutic agent என்னும் ஆய்வுக்கட்டுரையில் பெனிசிலின் மருத்துவ உபயோகத்தை வெளியிட்டனர்.

அடுத்த ஆண்டு ரோஜா பாத்தியில் தலைகுப்புற விழுந்து முகமெங்கும் முட்கள் கிழித்த காயம் புரையோடிப்போன ஆல்பெர்ட் அலெக்ஸாண்டர் (Albert Alexander) என்னும் காவலர் இந்த ஆய்வுக்குழுவினரிடம் சிகிச்சைக்கென 1941 பிப்ரவரி 12 அன்று அழைத்து வரப்பட்டார்.

அவருக்கு முன்பு அளிக்கப்பட்ட அனைத்து வகையான சிகிச்சைகளும் பயனற்றுப்போய் முகம் மற்றும் தலையெங்கும் சீழ் பிடித்திருந்தது. மிக மோசமான பாக்டீரியத் தொற்றினால் பாதிக்கப்பட்டதால் அவரது ஒரு கண் அறுவை சிகிச்சையில் நீக்கப்பட்டிருந்தது.

அதுவரை மனிதர்களில் தீவிர சிகிச்சைக்கெனப் பெனிசிலினை உபயோகப்படுத்தி இருக்காத அக்குழுவினர் தயங்கினாலும் அலெக்ஸாண்டரின் கவலைக்கிடமான நிலையை உத்தேசித்து அவருக்குப் பெனிசிலினின் முதல் ஊசியை அளித்தார்கள்.

முதல் ஊசியிலேயே உடல்நிலையில் நலல முன்னேற்றம் இருந்தது எனினும் துரதிர்ஷ்டவசமாகப் பெனிசிலின் கையிருப்பு சில நாட்களுக்கு மட்டுமே இருந்ததால், ஐந்து நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது, மீண்டும் பெனிசிலினை உருவாக்கும் முயற்சியில் ஆய்வுக்குழுவினர் இருந்தபோது சிகிச்சை தொடராததால் அலெக்ஸாண்டர் 1941 மார்ச் 15 அன்று அன்று நோய் முற்றி மரணமடைந்தார்.

பிறகு கிடைத்த குறைந்த அளவிலான பெனிசிலினைக் கொண்டு அதிக மருந்து தேவைப்படாத குழந்தைகளுக்கு அக்குழுவினர் வெற்றிகரமாகச் சிகிச்சையளித்தனர். பெனிசிலின் மிக மிகக் குறைந்த அளவில் கிடைத்துக் கொண்டிருந்த இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பொதுமக்களுக்கும் ராணுவத்தினருக்கும் சிகிச்சை அளிக்கப் பெனிசிலின் தட்டுப்பாடு நிலவியது

1942 ஆகஸ்டில் முதல் வெற்றிகரமான பெனிசிலின் சிகிச்சை நடந்தது. நரம்பு மண்டலத்தில் தீவிரமான பாக்டீரியா தொற்று உருவாகி இருந்த ஹேரி (Harry Lambert) என்பவருக்கு ஃபிளெமிங் சிகிச்சை அளித்தார். ஃப்ளோரேவிடமிருந்து தூய பெனிசிலின் ஊசியைப் பெற்று ஃபிளெமிங் அவருக்கு முதுகுத்தண்டுவடத்தில் செலுத்தினார். மறுநாளே உடல்நிலையில் நல்ல முன்னேற்றமிருந்தது, ஹேரி ஒரு வாரத்தில் முழுக்க குணமடைந்தார். இந்தச் சிகிச்சையின் விவரங்களை 1943-ல் லேன்செட் சஞ்சிகையில் வெளியிட்டார்.

உடனே அரசு ஃபிளெமிங்கை தலைவராகக் கொண்ட பெனிசிலின் குழுவை அமைத்தது. அக்குழுவில் ஃப்ளோரேவும் ஹீட்லியும், செயினும் பிற விஞ்ஞானிகளும், மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக இருந்தார்கள். 

ஃப்ளொரேயும் ஃபிளெமிங்கும் ஹீட்லியும் எத்தனை முயன்றும் மருந்து நிறுவனங்கள் பெனிசிலினை தயாரிக்க அதிகஅளவில் முன்வரவில்லை. ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் பெனிசிலினின் அளவுக்கும் பெனிசிலின் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது.

குழுவில் இருந்த நார்மன் ஹீட்லி உயிர்வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றிருந்தார். அந்த ஆய்வகத்தில் ஆராய்ச்சி மட்டுமல்லாது பெனிசிலின் தயாரிப்புக்கான எல்லா வேலைகளிலும் ஹீட்லி தன்னை மனமுவந்து ஈடுபடுத்திக்கொண்டார். மின்சாரப் பழுது, குழாய்கள் பதிப்பது இவற்றோடு மரவேலைகளைக்கூட அவர் செய்தார்.

பெனிசிலியம் வளர்க்க கொள்கலன்கள் பற்றாக்குறையானபோது ஹீட்லி நோயாளிகளின் கழிகலன்களில் கூடப் பெனிசிலியம் பூஞ்சையை வளர்த்தார்.

1940-ல் சீனக்களிமண்ணில் 500 வளர்ப்புக்கலங்களை வடிவமைத்து 6 பெண்களை உதவிக்கு அமர்த்திக்கொண்டு அவற்றில் பெனிசிலியத்தை வளர்த்தார். (அந்தப் பெண்கள் மருத்துவ வரலாற்றில் ‘penicillin girls’ எனக் குறிப்பிடப்பட்டனர்) 

வளர்ந்த பெனிசிலியத்திலிருந்து பெனிசிலினை பிரித்தெடுக்க அவரே தயிர் கடையும் மத்து, குடிநீர் பாட்டில்கள், ரப்பர் மற்றும் கண்ணாடிக் குழாய்களை இணைத்து ஒரு கருவியை வடிவமைத்தார். அதில் பெனிசிலின் தயாராகி புட்டி நிறைந்ததும் தெரிவிக்க ஒரு அழைப்பு மணியையும் இணைத்திருந்தார். அந்தக் கருவி 6 அடி உயரத்தில் ஒரு நூலகத்திலிருந்து வாங்கிவந்த புத்தக அலமாரியுடன் இணைத்து நிற்க வைக்கப்பட்டிருந்தது. 

1941-ல் ஹீட்லியின் இந்த ஆய்வகத் தயாரிப்பிலிருந்து மட்டுமே சுமார் 2 மில்லியன் யூனிட் பெனிசிலின் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் பின்னரே ஹீட்லியும் ஃப்ளோரேவும் அமெரிக்காவிற்கு பெனிசிலின் தொழிற்சாலை உற்பத்திக்கான பேச்சுவார்த்தைக்கெனப் புறப்பட்டுச் சென்றார்கள்.

போர்க்காலமென்பதால் ஃப்ளோரேயும் ஹீட்லியும் பெனிசிலியம் பூஞ்சையைச் சோதனைக்குழாய்களில் எடுத்துச்சென்றால் பிடிபடும் சாத்தியங்கள் இருந்தன. எனவே அவர்கள் இருவரும் அணிந்திருந்த கோட்டின் உட்புறத்தில் பெனிசிலியம் பூஞ்சையைத் தேய்த்துக்கொண்டு அமெரிக்காவிற்கு பயணித்தார்கள்.

அமெரிக்க மருந்து நிறுவனங்களின் முதலாளிகளைச் சந்தித்து பென்சிலின் தயாரிப்பின் சந்தை நிலவரத்தை விளக்கியபோது அவர்கள் வெகு ஆர்வமாக அதைத் தயாரிக்க முன்வந்தார்கள். 

எனினும் ஜூலை மாத இறுதியில் அந்தப் பெனிசிலியத்தின் சிற்றினமான நொட்டேட்டம் மிகக் குறைவாகவே பென்சிலினை அளித்தது. பூஞ்சையியலாளர் கென்னெத் (Kenneth Briyan Reper) பென்சிலியத்தின் பல சிற்றினங்களை மருந்து நிறுவனங்களுக்கு அளித்தார். 

பெனிசிலின் வரலாற்றில் குறிப்பிடப்படும் பெனிசிலியம் கிரைசோஜீனம் எனப்படும் பொன்னிறப் பூஞ்சை அப்போதுதான் பெனிசிலின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டது. 

அந்தப் பெனிசிலியத்தை ஆய்வக உதவியாளர் மேரி கொண்டுவந்தார், அவரே பூசாண மேரி (Moldy mary) என்று புகழ்பெற்றார் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று சொல்லிய கென்னெத் அந்தப் பூசணம் பிடித்த பழம் அருகிலிருந்த பழக்கடையிலிருந்து ஒரு பெண்ணால் கொண்டு வரப்பட்டது என்றார். P. notatum சிற்றினத்தைவிட P. chrysogenum 6 மடங்கு அதிக பெனிசிலினை அளித்தது.

1941-லிருந்து 43-க்குள் கென்னெத்தும் பிற விஞ்ஞானிகளும் இணைந்து பெருமளவில் பெனிசிலின் தயாரிப்பதை சாத்தியமாக்கினார்கள். பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு 

1942, ஆகஸ்டில் ஃப்ளோரே streptococcal meningitis எனும் பாக்டீரியத் தொற்றினால் இறக்கும் தருவாயில் இருந்த ஒரு நோயாளியைப் பெனிசிலின் அளித்துக் குணப்படுத்தினார். இந்தச்செய்தியை வெளியிட்ட டைம்ஸ் நாளிதழ் ஆக்ஸ்ஃபோர்டிலிருந்து பெனிசிலின் உருவாகியதாகக் குறிப்பிட்டிருந்தது. ஃப்ளொரே, செயின் ஆகியோரின் பெயர்கள் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருக்கப்படவில்லை.

செயின்ட் மேரி மருத்துவமனையில் ஃபிளெமிங்கின் மேலதிகாரி உடனடியாகத் தலையிட்டு இந்த விஷயத்தில் ஃபிளெமிங்கிற்கே எல்லாப்புகழும் சேரவெண்டுமென நாளிதழ் அலுவலகத்தில் தெரிவித்தார். ஃபிளெமிங் மகிழ்ச்சியுடன் நிருபர்களுக்குப் பெனிசிலின் கண்டுபிடிப்பைக் குறித்து பேட்டியளித்தார்.

ஃப்ளோரே பேட்டியளிக்காததோடு ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி குழுவினர் யாரும் எந்தப் பேட்டியும் கொடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகளையும் விதித்தார். எனவே பெனிசிலின் கண்டுபிடிப்பு முழுக்க ஃபிளெமிங் என்னும் ஒற்றை மனிதரால் தான் சாத்தியமானது எனும் சித்திரம் பொதுவெளியில் உருவானது. உண்மையில் ஃபிளெமிங் 1931-ல் பெனிசிலியம் குறித்த ஆய்வை நிறுத்திக்கொண்டார். அதன்பின்னர் புளோரேவும், செயினும்தான் முழுவீச்சில் அந்த ஆய்வில் இருந்தனர்.

அப்போதுதான் துரதிர்ஷ்டவசமாக 1942 நவம்பரில் கோக்கனட் க்ரூவ் தீவிபத்து உண்டாகி பெனிசிலினின் உயிர்காக்கும் செயல்பாடு உலகிற்கு தெரிய வந்தது.

பிற்பாடு காதலர்கள் ’’என்னை எல்லா துயரங்களிலும் இருந்து விடுவிக்கும் பெனிசிலின் நீ’’ என்றெல்லாம் கடிதம் எழுதிக்கொண்டார்கள்

பெனிசிலினின் வேதிவடிவம் 1942-ல் எட்வர்ட் ஆப்ரஹாமினால் (Edward Abrahaam) கண்டறியப்பட்டது. பின்னர் மூன்று வருடங்கள் கழித்து பெனிசிலினின் திருத்தப்பட்ட வேதிவடிவத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த டோரதி மேரி (Dorothy mary Hodgkin) கண்டறிந்தார். 

அதே சமயத்தில் பல பல்கலைக்கழகங்கள், மருந்து நிறுவனங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களில் பெனிசிலினின் வேதி வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்தனை முடிவுகளும் science இதழில் வெளிவந்த போதுதான் பல விதமான பெனிசிலின்கள் இருப்பதும் அவை அனைத்திற்கும் beta-lactam என்னும் வடிவம் பொதுவாக இருப்பதும் தெரியவந்தது.

ஐக்கிய பேரரசில் பெனிசிலின் Penicillin I, Penicillin II, Penicillin III மற்றும் Penicillin IV என அவை கண்டுபிடிக்கப்பட்ட காலத்தை வரிசைக்கிரமமாக ரோமானிய எண்களால் குறிப்பிடப்பட்டு பெயரிடப்பட்டது.

அமெரிக்க விஞ்ஞானிகள் பெனிசிலினை, F G, K, X என்று அவை எதிலிருந்து பெறப்பட்டதோ அதைக்குறிக்கும் ஆங்கில எழுத்துக்களுடன் குறிப்பிட்டார்கள்.

இப்படி பெனிசிலினுக்கு இரண்டு விதமான பெயர்கள் இருந்தது குழப்பத்தை உண்டு பண்ணியது.1948-ல் செயின் இந்தக் குழப்பத்தைப் போக்க ரோமானிய எண்களையும் ஆங்கில எழுத்துக்களையும் நீக்கிவிட்டு பெனிசிலினுக்கு பின்னொட்டாக அதன் வேறுபட்டிருக்கும் R பக்கச்சங்கிலியை குறிப்பிடலாம் என்னும் முறையை அறிமுகப்படுத்தினார்.


பின்னர் ஆஸ்திரியாவில் வாய்வழி மருந்தாக எடுத்துக் கொள்ளும் வடிவத்தில் பெனிசிலின் v 1952-ல் கண்டுபிடிக்கப்பட்டது. 1957-ல் வேதிப்பொருட்களிலிருந்து செயற்கை பெனிசிலின் தயாரிப்பும் கண்டறியப்பட்டது.

பெனிசிலினின் பெயரில், வேதி வடிவத்தில், மூலக்கூறு சூத்திரங்களில் குழப்பம் இருந்ததைப் போலவே பெனிசிலினுக்கு காப்புரிமை பெறுவதிலும் சிக்கல்களும் குழப்பங்களும் இருந்தன. 

செயின் பெனிசிலினுக்கு காப்புரிமை வாங்க முயன்றார். ஆனால் ஃப்ளோரேவும் பிறரும் அப்படி பெனிசிலின் கண்டுபிடிப்பை ஒருவர் சொந்தம் கொள்வது சரியல்ல பெனிசிலின் பொதுமக்களின் பயன்பாட்டில் இருக்க வேண்டும், காப்புரிமை பெற வேண்டியதில்லை என்று வாதிட்டனர்.

மேலும் பல முக்கியஸ்தர்களை செயின் சந்தித்து இதுகுறித்து கேட்டபோதும் பெனிசிலின் என்னும் உயிர்காக்கும் மருந்துக்கு அப்படி அவர் காப்புரிமை பெறுவது அறமற்ற செயல் என்றுதான் சொல்லப்பட்டது. மனம் தளராத செயின் மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைவரை அணுகினார் அவரும் அறமில்லாத செயல் என்று குறிப்பிட்ட பின்னர் செயின் அந்த முடிவைப் பல கசப்பான அனுபவங்களுக்குப் பின்னர் கைவிடுவதாக அறிவித்தார்.

1945-ல் மோயர் பெனிசிலியம் பூஞ்சையிலிருந்து பெனிசிலினை பெருமளவில் தொழிற்சாலைகளில் தயாரிக்கும் முறைகளுக்குக் காப்புரிமையை பிரிட்டிஷ் காப்புரிமை அலுவலகத்திலிருந்து பெற்று அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்கு விற்றார். 

இதைக்கேள்விப்பட்ட ஃபிளெமிங் ``பெனிசிலினை நான் கண்டறிந்து மக்களின் நலனுக்காக அளித்தேன் அதை ஏன் இன்னொரு நாட்டின் லாபம் சம்பாதிக்கும் வணிக முதலாளிகளுக்கு அளிக்க வேண்டும்?`` என்று கேட்டார்.

பெனிசிலின் இரண்டம் உலகப்போரின் ஆயிரக்கணக்கான இறப்புக்களையும், ஆயிரக்கணக்கானோருக்கு ஆறாத புண்களால் கைகால்கள் வெட்டியகற்றப்படுவதையும் நிறுத்தியது. பெனிசிலின் கண்டுபிடிப்புக்காக ஃபிளெமிங், ஃப்ளோரே மற்றும் செயின் 1945-ல் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ஃபிளெமிங் தனது நோபல் ஏற்புரையில் வருங்காலத்தில் பெனிசிலின் எல்லோரும் வாங்கக்கூடிய வகையில் மருந்துக்கடைகளில் கிடைக்கலாம் அப்போது அதைக் குறித்து அறிந்திருக்காத சாமான்யர்கள் பெனிசிலினை அதிகமாக உபயோகித்து பெனிசிலினால் எதிர்க்கப்படவேண்டிய பாக்டீரியாக்கள் பெனிசிலினுக்கான எதிர்ப்பைப் பெற்று விடும் அபாயம் இருப்பதாக எச்சரித்திருந்தார். அந்த ஆபத்து பின்னர் நிகழ்ந்து விட்டிருந்தது

அவர்களுக்கு நோபல் பரிசுடன் பலநூறு விருதுகளும் பாராட்டுகளும் அங்கீகாரங்களும் குவிந்தன. ஃபிளெமிங்கிற்கு ஆறாம் ஜார்ஜ் மன்னரால் நைட் பட்டம், 25 கெளரவ பட்டங்கள், 26 பதக்கங்கள், 18 விருதுகள், 13 அலங்கார பதக்கங்கள்,89 அறிவியல் அமைப்புக்களின் உறுப்பினர் பதவிகள் ஆகியவை அளிக்கப்பட்டன.

1999-ம் ஆண்டில் டைம் சஞ்சிகை வெளியிட்ட 20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் ஃபிளெமிங் இருந்தார். 2002 ஆம் ஆண்டில் பிபிசியால் மக்களின் வாக்களிப்பின் மூலம் தேர்வுசெய்யப்பட்ட பிரித்தானியாவின் முக்கியமான 100 நபர்களின் பட்டியலிலும் ஃபிளெமிங் இருந்தார். செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் சுற்றுப்பாதைக்கு இடையே அமைந்துள்ள ஒரு சிறுகோளுக்கு 91006 ஃபிளெமிங் எனப் பெயரிடப்பட்டது. 

பாராட்டுகளிலும் புகழிலும் ஆர்வமற்றிருந்த ஃப்ளோரேவுக்கு நைட் பட்டம் அளிக்கப்பட்டது. எடின்பர்க் பலக்லைக்கழகத்தின் கேமரூன் பரிசு, லிஸ்டர் பதக்கம், பல்வெறு பல்கலைக்கழகங்களின் கெளரவ பட்டங்கள், ராயல் மருத்துவ சொஸைட்டியின் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல கெளரவங்கள் அளிக்கபட்டன.

செயினும் ஸ்வீடன் மருத்துவக்கழகத்தின் வெள்ளிப்பதக்கம், பாஸ்டர் நிறுவனத்தின் பதக்கம், பல நினைவு விருதுகள், பால் எரிலிச் நூற்றாண்டு விருது. லண்டன் மருந்து நிறுவனங்களின் தங்கப்பதக்கம், இத்தாலியின் பதக்கவிருது, ராயல் சொசைட்டியின் உறுப்பினர் பதவி, பல பல்கலைக்கழகங்களின் கெளரவ பட்டங்கள் ஆகியவற்றை பெற்றார்.

ஆனால் ஹீட்லியின் பெயரும் பெனிசிலின் கண்டுபிடிப்பில் அவரது பங்களிப்பும் முற்றிலும் மறக்கப்பட்டது.

1990-ல் அவரது 79-வது வயதில்தான் மருத்துவர் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்ட மருத்துவத்துறைக்கான கெளரவ டாக்டர் பட்டம் 800 வருடங்களுக்குப் பின்னர் முதன்முறையாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினால் அளிக்கப்பட்டது

1964-ல் ஹோட்கின் மேரி எக்ஸ்ரே கதிர்களை உபயோகித்து பெனிசிலின் உள்ளிட்ட பல உயிர்வேதிப்பொருட்களின் வடிவங்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றார்.

2000-ம் ஆண்டின் இறுதியில் ஸ்வீடனின் புகழ்பெற்ற மூன்று சஞ்சிகைகள் பென்சிலினை கடந்த ஆயிரமாண்டு காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவித்திருந்தன. 

பெனிசிலினுக்குப் பிறகு ஸ்ட்ரெப்டோமைசின் உள்ளிட பல நுண்ணுயிர் எதிர்ப்பிக்கள் கண்டுபிடிக்கபட்டன. எனினும் பிற்காலத்தில் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு விதியின் கரங்களால் நகர்த்தப்பட்டு திறந்திருந்த கதவின் வழியே அந்தக் கீழ்த்தளத்து ஆய்வகத்திலிருந்து காற்றில் ஃப்ளெமிங்கின் ஆய்வகத்துக்கு வந்து சேர்ந்து, வளர்ந்து ஃப்ளெமிங்கினால் காணப்படவேண்டி காத்துக்கொண்டிருந்த பெனிசிலியப் பூஞ்சை மருத்துவ வரலாற்றை மாற்றியமைத்தது.

மேலதிகத் தகவல்களுக்கு:


லோகமாதேவி தமிழ் எழுத்தாளர், தாவரவியலை நவீன தமிழ் இலக்கிய மொழியில்  அறிமுப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார். தமிழ் தாவரவியல் அகராதியை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அவ்வகையில் தமிழ் தாவரவியலில் முன்னோடி. துறைசார்ந்த நூல்கள் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறார். பொள்ளாச்சி அருகே வேடசந்தூர் என்ற ஊரில் வசிக்கிறார். 

தமிழ் விக்கி பக்கம்: லோகமாதேவி - Tamil Wiki

லோகமாதேவி இணையதளம்: அதழ் (logamadevi.in)