Monday, 29 July 2024

அவ்வை நோன்பு - செந்தீ நடராசன்


"தவழ்ந்த தையிலும் 

மறந்தா மாசியிலும்

அசந்தா ஆடியிலும்"


இந்த மாதங்களில் செவ்வாய்க்கிழமை இரவுகளிலும் இந்நோன்பு எடுக்கிறார்கள். பொதுவாகப் பத்து மணிக்குமேல் ஆரம்பித்து, காலை நான்கு, ஐந்து மணி வரை நடக்கிறது. பல பெண்கள் சேர்ந்து கூட்டாக எடுக்கிறார்கள். விரதம் எடுப்பவர் எண்ணிக்கை ஒற்றைப் படையாக வரும்படி சேர்ந்து எடுப்பார்களாம். 


இந்த விரதத்தில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நோன்பின் விவரங்கள் ஆண்களுக்குத் தெரியாமல் பாதுகாக்கப்படுகின்றன. தெரிவித்தால் கண் அவிந்து போகும் என்பன போன்ற நம்பிக்கைகள் மூலம் நோன்பு தொடர்பான விவரங்களும் கதைகளும் இரகசியங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன.


நோன்பின் முக்கியமான அம்சம் கூழும் கொழுக்கட்டையும் தயாரித்தல். அதற்குத் தேவையான பொருட்களை ஒவ்வொருவரும் தனித்தனியே கொண்டு வருகிறார்கள். தனித்தனியாகவே கொழுக்கட்டைகளைத் தயாரித்துப் படைத்து உண்கிறார்கள். நோன்பிற்குத் தேவையான நெல்லை,


'அகங்கை கொண்டு மூணுபிடி 
புறங்கை கொண்டு மூணுபிடி'


எடுத்து,


‘ஏறு பொழுதிலே போட்டு 

இறங்கு பொழுதிலே வாரி 

எல்லாரும் உண்டு தின்னு 

உறக்கமான பிறகு

குற்றித் திரிச்சி’


நோன்புக் கொழுக்கட்டை செய்கிறார்கள். அவிக்கும்போது மாராப்புக் கட்டிக்கொண்டு (மார்புக்குறுக்கே சேலையைக் கட்டிக்கொண்டு) நின்று அவிக்கிறார்கள். கோட்டாற்றுச் செட்டி சமுதாயத்தினரிடையே இன்றும் நெல்லை வெறுங்கல்லில் போட்டுக் குத்தி மாவாக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பது குறிப்பிடத் தக்கது.


நோன்புக் கொழுக்கட்டை உப்புப் போடாமல் செய்யப்படுகிறது. பலவிதமான உருவங்களில் செய்கிறார்கள். உருவங்களின் வகைகளைக் கேட்கும்போது பெரும்பாலும் மழுப்புகிறார்கள். 'வீட்டில் உள்ள சாமான்களெப்போல நூறு விதமா செய்வான்னு எழுதிக்கியேன். உடம்பிலே உள்ள அவயவம் மாதிரி வகைக்கு மூணு செய்து போடணும். குறிப்பாகக் கிழவி உருவம், கிழவன் உருவம், ஆண் குறி, பெண் குறி, கை, கால், காது, பாடை, கவைக்கம்பு, மண்டையோடு, சட்டி, அம்மி, குழவி, அகல் விளக்கு முதலியன. இவற்றை மாவு பிசைந்து செய்து, கொதிக்கிற நீரில் போட்டு எடுப்பார்களாம். கொழுக்கட்டை அவித்து மிஞ்சும் நீரில் கூழ் தயாரிப்பர்.


நோன்பிருக்கும் அறையில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து, முன்னே விடுபூ, கும்பம், கும்பத்தின்மீது தேங்காய், வெற்றிலை, பாக்கு, களபம், குங்குமம், சூடன், சாம்பிராணி, திரி, திருநீறு முதலியவைகளை உபயோகிக்கிறார்கள். சுவரில் கண்ணாடி ஒன்றைச் சாய்த்து வைத்து, அதில் கிழவியின் உருவத்தை வரைந்து வைப்பார்கள். கும்பத்திலும் வரைந்து வைப்பதுண்டு. 


பெண்கள் குளிக்கின்ற ஏழு குளத்து மண்ணை எடுத்து அவ்வையின் உருவம் செய்யப்படும். அவற்றின்மீது கண்மலர் முதலியன சாத்துவதும் உண்டு. நோன்பல்லாத நேரங்களில் ஒரு மரப்பேழையில் நெல்லைப் போட்டு அதனுள் வைப்பார்களாம். நோன்புக்குப் பேழையைத் திறந்தால் பேழை முழுவதும் நெல் நிரம்பி வழியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. (நோன்பைத் தொடர வசதியில்லாதவர்கள், உருவத்தை ஆற்றிலோ, குளத்திலோ போட்டுவிடுவார்கள்). நோன்பிற்குப் பயன்படும் முக்கியமான வேறு இரண்டு பொருள்கள் புங்கை இலைகளும், புளியிலைகளும். அதனோடு சேர்த்து அரளி இலைகளையும் பயன்படுத்துவதுண்டு.


நோன்பு எடுப்பவர்கள் மஞ்சள் வெயில் வருவதற்கு முன்னதாகவே சாப்பிட்டு விடுவார்கள். பிறகு மாலையில் குளித்து, சுத்தமாக நோன்பு எடுக்கும் அறைக்கும் வந்து சேர்வார்கள். அந்த அறை ஆண் நடமாட்டமில்லாத ஒன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். கதவைப் பூட்டி விடுவது வழக்கம்.


நோன்பின் போது ஒருத்தி கதை சொல்லுவாள். மற்றவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். கதை சொல்பவர்தான் இந்த நோன்பை நடத்தி வைப்பவர். அவர் பெரும்பாலும் வயதானவராக - விதவையாக இருக்கிறார். வாவரசியாக இருந்தாலும் முதியவராக இருப்பது தான் வழக்கம்.


கதை சொல்லும் போது எல்லாருடைய கையிலும் புங்கையிலை புளியிலைகளைக் கொடுத்து வைத்து விட்டுக் கதை சொல்லுவார்கள். கதை, இடத்திற்கு இடம் சிறு வேறுபாடுகளை உடையதாகவோ, விரிந்தோ அல்லது சுருங்கியோ காணப்படுகிறது.


கதையில் மூன்று பகுதிகளை நாம் காணலாம். முதல் பகுதி, முதன் முதலில் நோன்பு எடுத்தவளைப் பற்றியதாகவும், நோன்பின் சடங்குகளுக்கு ஒரு விளக்கம் போலவும் அமைந்திருக்கிறது. இரண்டாவது பகுதி அவ்வாறு நோன்பு எடுப்பதால் விளையும் நன்மைகளை விளக்குவதுபோல் அமைந்துள்ளது. மூன்றாவது பகுதி நோன்பு சரிவர எடுக்காததால் ஏற்படும் தீமைகளை விளக்குகிறது.


முடிவில் அவித்த கொழுக்கட்டை நிறைந்த தனித்தனிப் பாத்திரங்களின் மேல், அவித்த அகல்விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றப்படும். ஒவ்வொன்றிலும் ஒரு பிள்ளையார் கொழுக்கட்டையும் இருக்கும். சூடன் காட்டப்படும், கதை கேட்டவர்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கும் புங்கையிலை, புளியிலைகளை (அரளி இலை) அவ்வையாரம்மன் முன் போட்டு,


“வண்ணாத்திக்குப் போன செல்வம் எங்களுக்கு வரட்டும்” என்றோ,

“கன்னிக்குள்ள செல்வம் எங்களுக்கு வரட்டும்” என்றோ சொல்வார்கள்.


கொழுக்கட்டையோடு, அதை அவித்த நீரில் கூழும் தயாரித்துப் படைப்பார்கள். கடைசி விரத நாளில் சர்க்கரைக் கூழைத் தயாரித்து "தேவியை உயர்த்துகிறேன்” என்று சொல்லவேண்டும் என்றும் ஒரு பகுதியினர் கூறுகிறார்கள். 


உதிரிப்பூக்களை (விடுபூ) அர்ச்சிப்பதுபோல் போடுவதில்லை. வேறுமனே விளக்கின்முன் வைத்திருப்பார்கள். பிறகு அதை ஆற்றிலோ குளத்திலோ கொண்டு போட்டு விடுவார்கள்.


கும்பத்திலுள்ள நீரை விரதம் எடுக்கும் வீட்டின் வாழ்வரசி முகம் கழுவினால் செல்வம் வரும் என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கிறது. பொதுவாகத் தண்ணீரையும் பூவையும் கூரைமீது கொட்டுவதுதான் பழக்கத்தில் இருக்கிறது.


நோன்பு முடிந்ததும் முதலில் கொழுக்கட்டையை ஒரு கன்னிக்குத் தின்னக் கொடுப்பார்களாம். வீட்டிற்குக் கொழுக்கட்டைகளைக் கொண்டுவரக்கூடாது என்பது பொதுவான நம்பிக்கை. “சுண்ணாம்புக்காரி வருவதற்கு முன்னாலே" (“உப்புக்காரன் வருவதற்கு முன்னாலே”) தின்றுவிட வேண்டும்" என்பார்கள். அப்படியே கொண்டு வந்தாலும் ஆண்களுக்குக் கொடுப்பதில்லை.


நோன்பின்போது ஒரு மூதாட்டி கதை சொல்ல, மற்றவர்கள் கேட்கிறார்கள். நோன்பெடுக்கும் எல்லா நாட்களிலும் இதே கதையைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.


"ஒரு ஊரிலே ஏழு அண்ணன் தம்பிமார்களுக்கு ஒரு தங்கை. அண்ணன்கள் விறகு வெட்டி, பாடுபட்டு குறுணி நெல் கொண்டு வருவார்கள். தங்கை அதை வாங்கிக் குத்தக் குத்த உமியாகப் போய் விடும். கால்படி குறுநொய்தான் மிஞ்சும். அதைக் காய்ச்சி எல்லாரும் குடிப்பார்கள்."


ஒரு நாள் ஒரு கிழவி பிச்சைகேட்டு வருகிறாள். அவளிடம் தங்கை,


"அள்ளிப்போட, நுள்ளிப்போட 

ஒண்ணுமில்லையே

குத்தலும் குளியலுமா கிடக்கு 

போடமுடியாது"


என்கிறாள், 


அதற்கு அந்தக் கிழவி, 

"உரக்களத்திலெ உமி கெடக்கு 

உமியைப் புடைச்சுப்பாரு 

அதிலே கெடைக்கதே எனக்குப் போடு"


என்கிறாள். அவள் சொன்ன மாதிரி செய்ததிலே கொஞ்சம் அரிசி கிடைக்கிறது. அதை அவளுக்குப் போடுகிறாள். அப்போது அந்தக் கிழவி, அவ்வையை நினைச்சு நோன்பு இரு.... நெல்லு உமியா போகாது என்கிறாள். (‘என்னை நினைத்து விரதம் எடு. உனக்கு

எல்லாச் செல்வமும் உண்டாகும்' என்கிறாள்).


உடனே தங்கை "என்னிடம் சாமான்கள் ஒன்றும் இல்லையே” என்று கூற,


கிழவி, “வாணியனைக் கூப்பிட்டு எண்ணெய் வாங்கு." பிறகு பணமில்லை என்று திருப்பிக் கொடுத்து விடு. கிண்ணத்தில் மீதி யிருக்கும் எண்ணெயை எடுத்து விரதம் இரு. (இதேபோல் பூ முதலிய சாமான்களை வாங்க உத்தி சொல்கிறாள்).


அதன்படி அவள், மஞ்சள் வெயில் வருவதற்கு முன்னரே- மத்தியானமே - சாப்பிட்டு, அதற்குப் பிறகு குளித்து சாந்தமாக


"அகங்கை கொண்டு மூணு சரங்கை

புறங்கை கொண்டு மூணு சரங்கை

அள்ளி மூணு சரங்கை

நுள்ளி மூணு சரங்கை"


நெல்லை எடுத்து,


ஏறு பொழுதிலே போட்டு

இறங்கு பொழுதிலே வாரி

எல்லாரும் உண்டு தின்னு

உறக்கமான பிறகு

குத்தித் திரிச்சி


விரதமிருக்கிறாள்.


இரவில் விரதத்திற்குத் தீபம் எடுப்பதற்காக வெளியில் வந்து புங்க மரத்திலே ஒரு காலும் புளிய மரத்திலே ஒரு காலும் வைத்துப் பார்க்கிறாள். அப்போது தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிகிறது. அதை நோக்கிப் போகிறாள். அது ஒரு சுடுகாடு. அங்கே ஒரு பிரேதம் எரிந்து கொண்டிருக்கிறது. அப்போது பிரேதத்திலிருந்து பிரித்துப் போட்ட பாடை, கவைக்கம்பு, சட்டி முதலியன அவளைத் தடுக்கிறது. அவள் 'நான் விரதம் எடுக்கப் போறேன்.' அதுக்குத் தீபம் வேணும் என்றதும் ‘எங்களையும் விரதத்திலே சேர்த்துக்கோ' என்று சொல்கின்றன. (அதனால்தான் நீர் கொழுக்கட்டை அவிக்கும்போது பாடை மாதிரி எல்லாம் செய்து போடுகிறோம்).


திரும்பி வரும்போது அவள் ஏறி நின்ற புங்க மரமும் புளியமரமும் கிளைகள் முறிந்து விழுந்து 'எங்களையும் நினைத்து நோன்பு எடு' என்கின்றன. அவள் சம்மதிக்கிறாள். பிறகு வீட்டில் வந்து விரதம் எடுக்கிறாள். அதனால் அவர்களுக்கு செல்வமெல்லாம் கிடைக்கிறது.


கதையில் அடுத்துவரும் பகுதி விரதத்தினால் விளையும் நன்மைகளை விளக்குவதாக அமைகிறது.


ஒரு நாள் தங்கை விரதமெடுத்துக் கொண்டிருக்கும்போது, அண்ணன்கள் வந்து கதவைத் தட்டுகிறார்கள்.


'தங்கச்சீ, தங்கச்சீ!', 'ஆராங்கு' (மீன்) கொண்டு வந்திருக்கோம். கதவைத்திற என்கிறார்கள்.


அதற்கு அவள், 'நான் கதவைத் திறக்க முடியாத நிலையிலே இருக்கேன். கொண்டு வந்ததெ மதிலெட்டிப் போட்டு விட்டுப்போ என்கிறாள். அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். மறுநாள் பார்த்தால் மீனெல்லாம் தங்கமாக மாறியிருந்தது. அப்படி அவர்களுக்குச் செல்வம் வந்தது. அதை வைத்து அண்ணன்மார்களுக்கும் கல்யாணம் நடக்கிறது. அவளுக்கும் நடக்கிறது.


வாழ்வு வந்தது பற்றி மற்றொருகதை 


ஒருநாள் இவர்கள் ஊருக்கு ஒரு ராசா வருகிறார். அவர் தாகத்திற்குத் தண்ணீர் கேட்டு விடுகிறார். நோன்பு இருந்த வீட்டிலிருந்து ஒரு செம்புத் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அந்த ஒரு செம்புத் தண்ணீரை ராசா, வீரர்கள், யானை, குதிரையெல்லாம் குடித்த பிறகும், ஒரு செம்புத் தண்ணீர் மிஞ்சியது. இந்த அதிசயத்தைப் பார்த்த ராசா விசாரித்தறிந்து அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறார். 


சரிவரச் செய்யாத நோன்பின் விளைவு


அடுத்து வரும் பகுதி சரிவர நோன்பு அனுஷ்டிக்காததால் ஏற்படும் விளைவுகளை விளக்குகிறது.


தங்கைக்காரி கல்யாணம் ஆகிப் போகும்போது மதினிமார்களிடம் நோன்பிருக்கச் சொல்லி விட்டுப் போகிறாள். அவர்கள் வேலைக்காரியிடம் கொடுத்து விரதம் இருந்த கொழுக்கட்டையைக் கொண்டு வரச் சொல்கிறார்கள். பிறகு அதைத் தின்று பார்த்து விட்டு,


"கற்கண்டும் கற்பூரமும் தின்னவாயாலெ 

உப்பில்லாத கொழுக்கட்டையைத் தின்பதா"


என்று சொல்லி, வண்ணாத்தி மாற்றில் சுற்றிக் கல்லுக்கடியில் வைத்து விடுகிறாள். வண்ணாத்தி மாற்று எடுத்துப் போகிறாள். அவளுக்குச் செல்வமெல்லாம் கிடைக்கிறது. இவர்கள் ஏழையாகி விடுகிறார்கள். அண்ணன்மார்கள் மீண்டும் காட்டுக்கு விறகு வெட்டப் போகிறார்கள்.


தங்கை மாடிவீட்டில் நின்று தலைச் சிக்கு எடுத்துக்கொண்டு இருக்கும்போது அண்ணன்களைக் கண்டு, கூப்பிட்டு விவரம் அறிகிறாள். பிறகு மதினிமார்களிடம் விளக்கமாக நோன்பு எடுக்கும் முறையைச் சொல்லிக்கொடுக்கிறாள். அப்படி விரதம் எடுத்ததினால் போன செல்வம் மீள்கிறது.


இன்னும் சில கதை வேறுபாடுகள்


உப்பில்லாத கொழுக்கட்டை என்று அண்ணிமார்கள் ஆற்றிலே வண்ணான் துவைக்கிற கல்லில் எறிந்துவிட்டு வந்து விடுகிறார்கள். மறுநாள் வண்ணாத்தி போய் பார்க்கும்போது அது தங்கமாகக் கிடக்கிறது.


ருசியில்லை என்று உப்புப் போட்டுக் கொழுக்கட்டை செய்த தினால் ஐஸ்வரியம் எல்லாம் போய்விட்டது.


இவ்வாறு கதை சொல்லி முடித்ததும் பூசையை முடிக்கிறார்கள் அதன் பிறகு அவரவர் செய்த கொழுக்கட்டையை அவரவரே தின்கிறார்கள். வீட்டில் ஆண்களுக்குக் கொடுப்பதில்லை. ஆண்களுக்காக வீட்டில் வந்து சர்க்கரை போட்டு வேறு கொழுக்கட்டை செய்து தருவதுண்டு.


நிர்வாணம்


பொதுவாக இந்த விரதம் பற்றிப் பரவலாக ஆண்களிடம் இருக்கும் நம்பிக்கை, விரதத்தின் போது பெண்கள் ஆடைகளின்றி இருப்பார்கள் என்பதாகும். பெரும்பான்மையான இடங்களில் விசாரித்ததில் அது பொய் என்றே மறுக்கிறார்கள். ஒரு இடத்தில், 'முன்னே எப்பயோ, இப்ப அப்படியில்லை' என்று சொன்னார்கள். ஒரே ஒரு இடத்தில் மட்டும் பூசை நடத்தும் பெண்மணி மட்டும் 'பூசை வேளையில் தனியாக ஆடையின்றிப் பூசை செய்து முடிப்பார்' என்று கூறினார்.


இந்த அவ்வை நோன்பில் காணப்படும் முக்கிய அம்சங்களை ஆராய்கின்றபொழுது, அதில் மத வழிபாட்டிற்கு முற்பட்ட இனக்குழு வாழ்வுக்குரிய சடங்காசாரங்களின் எச்சங்கள் மிகுதியாக இருக்கக்காண்கிறோம்.


இந்த நோன்பினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது மிக அழுத்தமான நம்பிக்கை. மேலும் குழந்தைப்பேறு விழைவோரும் இவ்விரதம் எடுப்பதுண்டு. 


இந்த நோன்பு, 'அவ்வை' என்னும் செழிப்பைத் தரவல்ல தாய்த் தெய்வத்தை முன்னிறுத்தி, செழிப்புப் பெருகுவதற்குரிய சடங்காசாரங்களை உள்ளடக்கியதாகத் தோற்றமளிக்கிறது. 


1. 'அவ்வை' உருவம் செய்வதற்குப் பெண்கள் குளிக்கின்ற ஏழு குளத்து மண்ணைப் பயன்படுத்துகிறார்கள். நீரும், மண்ணும் எடுக்கிறார்கள். பெண்கள் குளிக்கும் குளத்தின்மண் என்பதால் அதன் செழிப்பு அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. (பெண் செழுமையைப் (fertility) பெருக்கும் சக்தியுள்ளவள் என்பது இனக்குழு நம்பிக்கை)


2. வழிபடாதவர்கள் அவ்வையாரம்மனை மீண்டும் ஆற்றிலோ குளத்திலோ போட்டு விடுகிறார்கள். செழுமையின் சின்னமாக எடுக்கப்படும் ஆற்று மண்ணால் ஆன உருவத்தில், சடங்குகளின் மூலம் மேலும் செழுமையை ஏற்றி மீண்டும் அதைக் குளத்திலோ ஆற்றிலோ சேர்த்துவிடும் மரபையே இது நினைவூட்டுகிறது. காலப் போக்கில் ஒவ்வொரு முறையும் உருவம் செய்யும் வேலை, ஆண்கள் அறியாமல் செய்ய வேண்டுமென்ற சிரமம் இவை காரணமாக மீண்டும் மீண்டும் ஆற்றில் எறிதல் தவிர்க்கப்பட்டிருக்கலாம். மகாராஷ்டிரம், கர்னாடக மாநிலங்களில் வினாயகரைச் செய்து விழா எடுத்து ஆற்றிலோ, குளத்திலோ அல்லது கிணறுகளிலோ கரைந்துவிடும் பழக்கம் இதனோடு ஒப்பிட்டு எண்ணத்தக்கது.


3.கும்பத்து நீரைக் கூரையில் கொட்டும் பழக்கம் 'இயற்கையைப் பார்த்து இதுபோல் நீயும் மழையைக் கொட்ட வேண்டும்' என்பதுபோல் செய்தல் மந்திரச் சடங்காகத் தென்படுகிறது.


4.நோன்பில் பயன்படும் புங்கையிலையை இன்றும் வித்து நெல் சேமிக்கும்போது, 'அந்து' முதலிய பூச்சிகளால் அழிவேற்படாமல் இருப்பதற்காகக் கலந்து காயப்போட்டுச் சேமிக்கப் பயன்படுத்துகிறார்கள்.


5.கொழுக்கட்டை அவியும்போது 'அவிஞ்சுட்டுதா என்று கேட்கக்கூடாது,' 'விளைஞ்சிட்டுதா என்றுதான் கேட்கணும்’ என்கிறார்கள்.


நாகரிகத்திற்கு முந்தையகாலத்தில் இனக்குழு வாழ்க்கையில் முதலில் விவசாயத்தைச் செய்தவர் பெண்களே என்பது மானுடவியலார் கூற்று. சமுதாயத் தலைமை பெண்ணுக்கு இருந்த பெண்ணாதிக்க சமுதாயத்தின் எச்சமாகவே, செழிப்புக் கடவுளர்களாகத் தாய் தெய்வ வழிபாடுகள் ஒரு வழிபாடும், சடங்கும் (worship and rites) இயைந்த ஒரு நோன்பாக இது காட்சியளிக்கிறது.


(1) அவ்வை உருவம் ஒரு திருந்திய வடிவம் இல்லை. ஏகதேசம் கூம்பு வடிவமாகவே அமைந்திருக்கிறது. அதன்மேல் கண்மலர் முதலியன வைப்பதுண்டு.


(2) கொழுக்கட்டைகளில் கிழவன் - கிழவி உருவங்கள் செய்து போடப்படுகின்றன.


(3) மேலும் ஆண்-பெண் குறிகள் போலவும் செய்து போடுகிறார்கள். இனக்குழு மக்களின் நம்பிக்கையில் ஆண்-பெண் குறிகள் செழிப்புக்கு (productivity) அடையாளங்களாகத் திகழ்ந்து வந்திருக்கின்றன.


(4) சுவரில் மஞ்சணையினால் பெண் உறுப்புப்போல் ‘தீற்றுவார்கள்’ என்றும் சூலாயுதம் மாதிரி போடுவார்கள் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. சூலாயுதம் ஒரு வேட்டைக் கருவி என்பதைவிட நிலத்தைக்கிளறும் விவசாயக் கருவியாகவே தோற்றமளிக்கிறது. பெண்களின் விவசாயக் கருவிகளாகக் குத்துக் கம்பு, கம்புடன் இணைத்துக் கட்டுவதற்கேற்ற கூரிய கல், இரு புறமும் மேடாகவும் நடுவில் பள்ளமும் தோண்ட வல்ல சூலாயுதம், பெண் விவசாயத்தின் விவசாயக் கருவிகளின் வளர்ச்சியாகக் கருதப்படுகின்றது. பெண் தெய்வங்களின் கைகளிலேயே பெரிதும் சூலாயுதம் காட்சியளிக்கிறது. காளி, சூலி என்றும் அழைக்கப்படுகிறாள். (சூலாயுதத்தின் இரு வளைந்த பகுதிகள் மண்ணைக் கிளறவும் நடுப்பகுதி ஆழத் தோண்டவும் பயன்படுகிறது).


(5) தானியங்கள் மிகுந்த சிரமத்திற்குப் பிறகும் குறைவாகவே கிடைக்கின்ற ஒரு நிலையை நோன்புக் கதை பிரதிபலிப்பது கவனிக்கத்தக்கது. நோன்பிற்கு எடுத்துக்கொள்ளும் நெல்லின் அளவு அகங்கை கொண்டு மூணுபிடி, புறங்கை கொண்டு மூணுபிடி என்று ஒரு குறைந்த அளவாக இருக்கிறது. மேலும் அதை உரல், உலக்கை, திருவை முதலிய கருவிகளைப் பயன்படுத்தாமல் மாவாக மாற்றவேண்டும் என்ற நம்பிக்கை அக்கருவிகள் கண்டு பிடிக்கப்படாத மிகத் தொன்மையான ஒரு காலத்தின் எச்சம் இந்த நோன்பு என்பதைச் சுட்டுகிறது.


 (6) கொழுக்கட்டை உப்பில்லாததாகச் செய்ய வேண்டும் என்பதும் மேற்சொன்ன கருத்தை வலியுறுத்துவதாக அமைகிறது.


மாந்திரீக நம்பிக்கைகள்


இனி இந்த நோன்பில் பல மாந்திரீக நப்பிக்கைகளும் (faith in magical power) இடம் பெற்றிருக்கக் காண்கிறோம். 


 (1) நோன்பு நள்ளிரவில் நடைபெறுகிறது.


(2) நோன்பிற்குப் பயன்படும் தீபம் சுடுகாட்டுத் தீபம் என்று கதைப்பகுதி விளக்குகிறது.


(3) கொழுக்கட்டை வடிவங்களில் பாடை, கவைக்கம்பு, மண்டையோடு கிழவன் உருவம், கிழவி உருவம் முதலியன இடம் பெறுகின்றன.


(4) பலியைக் குறியீடாக்கும் (symbolising the sacrifice) வகையில் உடல் உறுப்புக்கள் மாதிரி கொழுக்கட்டைகள் செய்து போடப்படுகின்றன.


(5) இவையெல்லாம் முன்னோர்களின் ஆவியை எண்ணி வழிபடுவதால், அவர்களின் சக்தி தங்களுக்குத் துணைவரும் என்ற இனக்குழு மக்கள் நம்பிக்கையின் பிரதிபலிப்புகளாகத் தோன்றுகின்றன. இன்றும் சில கோயில்களில் கை, கால், கண்மலர் முதலிய உருவங்களை வாங்கிப் போடுவதன் மூலம் தங்கள் உடல் உறுப்புக்களின் நலன் பெருகும் என்ற நம்பிக்கையையும், இத்துடன் எண்ணிப் பார்க்க வேண்டும்.


இந்த நோன்பில் காலப் போக்கில் பொருளாதார வளர்ச்சிக்கேற்பச் சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்த காலங்களில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்க இடமிருக்கிறது.


ஆரம்ப காலத்தில் சமுதாயத் தேவையாக இருந்தவை உணவுப் பொருட்களே. வேட்டைச் சமுதாயம் முதற் கொண்டு அதிக மக்களைப் பெறுவது, உணவுத் தேட்டத்தை அதிகரிக்கும் வழி வகையாகவே இருந்து வந்திருக்கிறது. எனவே இந்த நோன்பில் உணவுக்குத் திண்டாடும் ஒரு பெண்ணுக்கு அதிக உணவுப் பொருள் அடைவதற்கு வழி வகையாகவே இந்த நோன்பு கற்பிக்கப்படுகிறது.


காலப் போக்கில் தங்கத்திற்கு மதிப்பு உயர்ந்துவிட்டபிறகு "செல்வச் செழிப்பு தங்கத்தின் மூலம் பெற இயலுமென்றும் அதற்கு மாந்திரீக சக்தியுடைய இந்த நோன்பு, மீனையே தங்கமாக மாற்றித்தரவல்லது என்ற நம்பிக்கையை வளர்ப்பதாக மாறுகிறது. 


இனி அவ்வை நோன்பின் 'அவ்வை' என்ற பெயர் தொடர்பான கருத்துக்களைக் கவனிப்போம்.


முன்பே குறிப்பிட்டது போல் 'அவ்வை' என்பது இனக்குழு மக்களின் எச்சமான செழிப்பைத்தரும் பெண் தெய்வ (fertility Goddess) வழிபாடாகவே தோற்றமளிக்கிறது. 

'அவ்வை' என்ற சொல்லிற்குத் ‘தாய்' என்ற பொருள் தமிழில் வழங்குகிறது. 


நாட்டார் வழக்காற்றின் அடிப்படையில் ‘அவ்வை' என்னும் சொல்லுடன் ‘முதுமை' என்ற பருவமும் இணைத்து எண்ணப்படுகிறது. பழந்தமிழில் வழங்கிய 'ஆய்' என்ற தாயைக் குறிக்கும் சொல்லினும் தனிப் பொருளுடன் 'அவ்வை' என்ற சொல் வழங்கப்பட்டிருக்கவேண்டும் என்று எண்ண இடமிருக்கிறது. அவ்+ஐ என்பதில் உள்ள 'ஐ' எனுஞ் சொல் தலைமையைக் குறிக்கிறது. எனவே தமிழ் நாட்டின் பெண்ணாதிக்க சமுதாய காலத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த தாயைக் குறிக்கும் சொல்லாக 'அவ்வை' என்ற சொல் வழங்கப்பட்டிருக்குமோ எனுங்கருத்தை அறிஞர்களின் ஆய்வுக்கு முன்வைக்கிறேன்.


இன்னொன்று, அவ்வை நோன்பு, நாடெங்கிலும் பெண்களுக்கே உரிய, அவர்களால் இரகசியமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும், சமய வழிபாடுகளோடு தொடர்பில்லாத ஒரு நோன்பாகத் திகழ்கிறது. என்றாலும், அவ்வையாருக்குத் தமிழ் நாட்டில் மூன்று கோயில்கள் இருக்கும் செய்தியையும் அறிகிறோம். அவற்றுள் இரண்டில் மட்டும் அவ்வையார் சிலை இன்றும் இருக்கிறது. இவ்விரண்டு கோயில்களைத்தவிர அவ்வையாருக்குத் தமிழகத்தில் வேறெங்கும் கோயில்கள் இருப்பதாகத் தெரியவில்லை.


மேலே குறிப்பிட்ட கோயில்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே அமைந்துள்ளன. ஒன்று தாழாக்குடி என்னும் ஊரின் அருகே இருக்கிறது. மற்றொன்று ஆரல்வாய்மொழிக்கு அருகேயுள்ள முப்பந்தல் என்னும் ஊரில் உள்ள இசக்கியம்மன் கோயிலின் உட்பிரகாரத்தில் இருக்கிறது. இவை தவிர அவ்வைக்குரிய குகைக் கோயில் ஒன்று அழகியபாண்டிபுரம் அருகேயுள்ள குரத்தியறையில் இருக்கிறது.


முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலினுள் இருக்கும் அவ்வை சிலை அக்கோயிலுக்குரியது இல்லை. இசக்கியம்மன் கோயிலுக்குத் தென்கிழக்கில் ஒரு உடை மரத்தின் அடியில் இருந்த கோயிலின் இடிபாடுக்குப் பின்னர்தான், அந்தச் சிலை கோயிலினுள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிகிறது. இன்றும் மூலக் கோயிலில் வைக்கப் பட்டிருக்கும் அடையாளச் சின்னத்திற்கு முதல் வழிபாடு நடத்திய பிறகுதான், இங்கு பூசை நடைபெறுகிறது.


தாழக்குடி, முப்பந்தல் ஆகிய இரு இடங்களிலும் அவ்வையார் குடியிருப்பு, குறத்தியறை என்றே சொல்கிறார்கள். அங்கிருந்து அவ்வையார் இங்கெல்லாம் வந்து தங்கினாள் என்று ஊர் மக்கள் வழக்காற்றில் பேசப்படுகிறது. 


குரத்தியறை மலையில் அமைந்துள்ள குகையில் ஒரு அவ்வையார் சிலையை வழிபடுகிறார்கள். ஆனால் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் அதை ஆய்ந்தபோது அது ஒரு பெண் சிலையில்லை என்பது தெரியவந்தது. சங்கு, சக்கரத்துடன் கூடிய பெருமாளின் சிலையாகவே இருக்கிறது.


அங்கு வழங்கும் கதையில் அந்தச் சிலையின் பின்புறம் ஒரு குகை இருந்தது என்றும், அதில் அவ்வையார் வசித்து வந்தாள் என்றும், அவள் ஊர் மக்களுக்குத் திருமணத்தின்போது நகை ஆடை முதலியன இரவலாகக் கொடுத்து வந்தாள் என்றும், அவற்றைத் திருப்பி வைத்துச் செல்லும்போது வழக்கத்திற்கு மாறாக ஒருவன் ஒளிந்திருந்து பார்த்தான் என்றும் அவ்வையின் கைகள் துணிகளை எடுக்கும்போது கண்டேன் கண்டேன் என்று கத்தினான் என்றும், அவள் அடைத்தேன் அடைத்தேன் என்று குகை வாசலை மூடிவிட்டாள் என்றும் ஒரு கதை வழங்குகிறது.


அந்தப் பாறையின் கோயில் வாசலின் இடப்புறம் ஒரு விநாயகர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. வலப்புறம் பாறையை உடைத்து அழிக்கப்பட்ட அடையாளம் இருக்கிறது.


பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள், அம்மலை உச்சியில் நாழி ஊற்று இருப்பதைச் சான்றுகாட்டி, இங்கு குகை இருந்திருக்க வேண்டும் என்றும், அது சமணப் பெண் துறவிகள் வாழ்ந்த பள்ளி அறையாக இருந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்கள். ஊரின் பெயரும் குரத்திகள் (சமணப் பெண் துறவிகள்) வாழ்ந்த இடமாகையால் குரத்தியறை என்பதே சரியானது என்றும் அதற்குச் சான்றாகத் திரு. செ. சதாசிவம் அவர்கள் 'சேரநாடும் செந்தமிழும்' நூலில் குறிப்பிட்டிருப்பதைச் சான்று காட்டி அந்தப்பள்ளிக்குச் சொந்தமான நிலங்களைக் குறிக்கும் பள்ளிச் சந்தம் பற்றியோ, சமணர் இருக்கை பற்றியோ, இருந்த கல்வெட்டுக்கள் பிற்காலத்தில் இந்த இடம் வைணவர் ஆளுகைக்கு உட்பட்ட போது அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்கள். 


அவ்வூர் மக்களும் இங்கிருந்துதான் அவ்வையார் தாழாக்குடிக்கும், ஆரல்வாய்மொழிக்கும் போனதாகச் சொல்கிறார்கள். 


இன்னும் தாழாக்குடி மற்றும் முப்பந்தல் அவ்வைக்கு நைவேத்தியப் பொருட்களில் மிக முக்கியமானது கூழும், கொழுக்கட்டையுமே. முப்பந்தல் கோயில் இசக்கிக்குப் பலிப் பொருட்கள் படைப்பதாக இருந்தாலும், முதலில் சுத்த 'சைவப் படையல் அவ்வைக்குப் படைத்துப் பூசை முடித்த பிறகுதான், பலிகள் நடைபெறும்' என்று கூறுகிறார்கள். 


ஆனால் இங்கு வழிபடப்படும் அவ்வைச் சிலையின் திருந்திய வடிவிற்கும், அவ்வையாரம்மனின் திருந்தாத உருவுக்கும் அதிக வேறுபாடு இருக்கிறது. நோன்பு அவ்வையின் உருவம் திருந்தா வடிவமாக மண்ணில் செய்யப்பட்டதாக இருக்கிறது.


நோன்பில் செய்யப்படுவதுபோலக் கூழும் கொழுக்கட்டையும் கோயிலில் படைக்கப்படுகிறது என்ற ஒற்றுமையைத் தவிர பிற நோன்புச் சடங்குகள் எதுவும் இந்தக் கோயில்களில் பின்பற்றப் படுவதில்லை. அது பற்றிய அறிவு கோயில் பூசாரிகளுக்கும் இல்லை. அவர்கள் சங்க காலப் புலவர் ஔவையாரே இத்தெய்வம் என்கிறார்கள்.


இவற்றிலிருந்து நாம் ஒன்று ஊகிக்க இடம் இருக்கிறது. நாகரிகத்திற்கு முந்தைய காலத்தின் பிற்பகுதியிலிருந்தே, அதாவது கி.மு. 322க்கு முன்பிருந்தே சமணம் தமிழகத்தில் பரவி இருந்திருக்கிறது. சமணரும் பௌத்தரும், வைதீக மதத்தினரைப் போலல்லாமல், தமிழ் மொழி கற்று, தங்கள் மதங்களைத் தமிழ் மூலமே தமிழரிடம் பரப்பியிருக்கிறார்கள். அந்தந்த இடங்களில் உள்ள இனக்குழு மற்றும் பிரதேச மக்களின் சமய சடங்காச்சார நம்பிக்கைகளைத் தங்களோடு ஐக்கியப் படுத்திக் கொண்டு சமணர்கள் தங்கள் சமயத்தை வளர்த்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சாத்தன் வழிபாடு, நாகர்களின் நாகராஜா வழிபாடு இயக்கி (யக்ஷி) வழிபாடுகளைக் குறிக்கலாம்.


ஜீவபந்து டி.எஸ். ஸ்ரீபால் அவர்களின் இளங்கோவடிகளின் சமயம் யாது என்ற நூலில் சிவன், நெடுமால் போன்ற தெய்வங்களைச் சமணர்களின் குல தெய்வங்கள், சிறு தெய்வங்கள் என்று குறிப்பிடுகிறார்.


நாகராஜா கோயில் கல்வெட்டிலிருந்து நாகர் வழிபாட்டிற்குச் சமணர்களான குணவீர பண்டிதனும், கமலவாகனப் பண்டிதனும் நந்தா விளக்கு எரிக்க எண்ணெய் முதலியன வழங்கியதாக அறிகிறோம். 


எனவே நாகரிகத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு இனக்குழுச் சடங்காசாரத்தின் எச்சமாக விளங்கும் அவ்வை நோன்பைத் தமிழகத்தில் பரவிய சமண மதம் உள்ளடக்கிக் கொண்டிருக்கலாம்.


சமண சமயம் அவ்வை நோன்போடு இயைந்ததற்குச் சான்றுகளாகத் தோன்றுவன.


1. சமணப் பள்ளியாகிய குரத்தியறையுடன் தொடர்புடைய அவ்வைக் கோயில் வழிபாடும், அங்கு கொழுக்கட்டையும், கூழும் நைவேத்தியப் பொருட்களாக இருப்பதுவுமாகும்.


2. அவ்வை நோன்புக் கதையில் ஒரு கிழவி பிச்சை கேட்டு வருகிறாள். அவள் அவ்வை நோன்பு பற்றி விளக்கி நோன்பு எடுக்கச் சொல்கிறாள். 'என்னை நினைத்து நோன்பு எடு' என்று சொன்னதாகவும் வருகிறது. அந்தக் கிழவி வெறும் பிச்சைக்காரியாக இருக்க முடியாது. பிச்சையேற்கும் சமணப் பெண் துறவியே ஆதல் வேண்டும்.


தமிழர்களின் வழக்காற்றில் தாய் என்ற பொருளிலும், வழிபடு தெய்வமாகவும் குறிக்கப் பெற்ற 'அவ்வை' என்னும் சொல்லையே சமணப் பெண் துறவிகளுக்கும் சமணர்கள் பயன்படுத்தியிருக்கலாம். அதன் மூலம் தங்கள் சமணப் பெண் துறவிகளுக்கும் சமுதாயத்தில் மதிப்பும் பயபக்தியும் ஏற்பட வழிவகுக்க முயன்றிருக்கலாம்.


"நந்தியே பிண்டி வாமன் நன்னெறி வழாது நோற்பாள்

 கந்தியே அவ்வை அம்மை கன்னியே கௌந்தி என்ப "


என்பது சூடாமணி நிகண்டு.


அவ்வை என்னும் பெயர், நோன்பிலும் சமண சமயத்திலும் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட மயக்கத்தால், பிச்சை ஏற்க வரும் துறவி, 'என்னை நினைந்து விரதம் இரு' என்று சொன்னதாகக் கதையில் திரிபு ஏற்பட்டிருக்கலாம்.

 

3. சில இடங்களில் கதையில் மீன் தங்கமாவதற்குப் பதில், ‘விறகு' தங்கமாவதாகக் கதை மாற்றிப் பேசப்படுகிறது. இது சமணத்தின் ஆதிக்கத்தால் கொல்லாமையை வலியுறுத்தும்விதமாக கதையில் ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம்.

 

4. இவற்றிற்கெல்லாம் மேலாக அவ்வை நோன்போடு தொடர்புடையதுபோல, அதற்கு இணையாக அவ்வையைப்பற்றி மற்றொரு கதையும் வழங்கப்படுகிறது. இந்தக் கதையை நோன்பில் சொல்வதுமுண்டு. ஆனால் நோன்புக் கதைபோல இரகசியமாகக் காக்கப்படாமல், நோன்பில்லாத மற்ற நேரங்களிலும் சொல்லத் தயங்குவதில்லை.


கதை - அவ்வையார் முதலில் ஒரு பொற்கொல்லன் வீட்டிற்கு விருந்திற்கு வருகிறாள். அவளை விருந்தேற்க விரும்பாத கொல்லன், சுத்தியலை வைத்துத் தட்டிச் சப்தம் உண்டாக்கி, அவளை வீட்டில் இருக்க முடியாமல் செய்து விடுகிறான். அவள், 'நீ இருந்தடிக்கப் பறந்து போவாய்' என்று சபித்துவிட்டுச் சென்றுவிடுகிறாள். பிறகு ஒரு ஓச்சன் வீட்டிற்குப் போகிறாள். அங்கு அவன் குழல் ஊதித் தவில் அடித்து விரட்டுகிறான். உடனே அவ்வை, 'நீ எட்டு வீடு தட்டியும் தட்டிப் போய்விடுவாய்' என்று சபிக்கிறாள். பிறகு செட்டி வீட்டிற்குப் போகிறாள். அங்கு பெண்கள் அவளை அன்போடு உபசரிக்கிறார்கள் அவ்வை மகிழ்ந்து,


"மடிச்சீலையும் பணமோடு மாராசியா இருக்கணும்”


என்று வாழ்த்துகிறாள். அதனால்தான் செட்டி குடிகளில் விரதம் எடுக்கிறார்கள். செல்வமும் அங்கு குவிகிறது. மற்றவர்களெல்லாம் தரித்திரப்பட்டுக் கிடக்கிறார்கள். சமண சமயச் செல்வாக்கு ஓங்கி இருந்த வணிக சமுதாயத்தின் மேன்மைக்கு இக்கதை காரணம் கற்பிக்கிறது.


இவையெல்லாம் அவ்வை நோன்புச்சடங்கோடு சமணர்களின் மேலோட்டமான தொடர்பையே வெளிப்படுத்துகிறது. சமண சமயத் தத்துவங்களோ பிறவோ எவ்வகையிலும் நோன்பின் சடங்கு முறைகளைப் பாதித்திருப்பதற்கான ஆதாரங்கள் தென்படவில்லை. சமணர்களின் வீழ்ச்சிக்குப் பின்னரும், இச்சடங்குகளில் மக்கள் பின்பற்றிய சைவ சமயச்சார்பின் காரணமாக மேலோட்டமான சில மாற்றங்களை இந்த நோன்பு ஏற்றிருக்கிறது. என்றாலும் அதன் அடிப்படையான, சமயங்களுக்கு முந்தைய சடங்காசாரக் காலத் (ritual period) தனித்தன்மை இந்நோன்பில் அழுத்தமாகவே வெளிப்படுகிறது. ஆண்களிடமிருந்து இந்நோன்பு இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வந்திருப்பது காரணமாக இருக்கலாம்.


செந்தீ நடராசன்


தகவல் உதவியவர்கள்


1. மு. நாராயணன் தம்பதிகள், வ.தாமரைகுளம் (கு.மா) 

2. திருமதி. கட்டியம்மாள், செல்வி ஜோதி, வடக்குத் தாமரைகுளம். 

3. திரு. கருப்பையா அவர்களின் பாட்டி, மாவடிக்கால் (நெ.மா.) 

4. திரு. ஆண்டியப்பன் பிள்ளை, கரியமாணிக்கபுரம் (கு.மா) 

5.திருமதி. மீனாட்சி அம்மாள், நாகர்கோவில், (கு.மா) 

6. திரு. விஸ்வநாத பிள்ளை, திரு. தெ.வே. பகவதி, வடிவீசுவரம்,(கு.மா) 

7. திரு. செந்திப்பெருமாள் குடும்பத்தார் வழியாக, நாகர்கோயில்(கு.மா) 

8. திருமதி. திருமலை மாவடிக்கால் (நெ.மா)

9. திருமதி. ஐயம்மாள், சிதம்பரபுரம், சங்கரன் கோவில் (நெ.மா)

10.செல்வி. தோ. மங்கை, ஆராய்ச்சிக்குழு, நெல்லை 

11.திருமதி. உஷா சொக்கலிங்கம், கோட்டாறு,(கு.மா)

12.திருமதி. ரத்தினம், செல்வி மீனா, மீனாட்சிபுரம்(கு.மா)

13. செல்வி சுதா, திருவனந்தபுரம்


பிற மேற்கோள்கள்


1.சேர நாடும் செந்தமிழும் - செ. சதாசிவம்

2.Rajaji: ‘Avvaiyar’ swarajya Vol. XIV No.32 p-9

3.S.Padmanaban: ‘Untold Stories about Kanyakumari’

4.தமிழும் சமணமும், மயிலை சீனி வேங்கடசாமி 

5.இளங்கோவடிகள் சமயம் யாது ?- டி.எஸ். ஸ்ரீபால்.


ஆய்வாளர் செந்தீ நடராசன் எழுதிய இக்கட்டுரை நா. வானமாமலை ஆசிரியராக இருந்த ' ஆராய்ச்சி' பத்திரிக்கையில் வெளிவந்தது. 2011-ல் வெளியிடப்பட்ட நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றது. கட்டுரையாசிரியரின் அனுமதியுடன் குருகு இதழில் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.


===


குறிப்பு 1 - நா வானமாமலை


அவ்வை நோன்பு பெண்கள் மட்டுமே தங்களுக்குள் எடுக்கின்ற விரதம்.* இதை அவ்வையார் விரதம்! அவ்வையாரம்மன் நோன்பு என்றும் குறிப்பிடுகிறார்கள். கழுகுமலைப் பகுதியில் இதனை ஈஸ்வரியம்மன் விரதம் எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த நோன்பு சிறப்பாக ஆடி, தை மாதங்களில் எடுக்கப்படுகிறது. மாசி மாதத்திலும் எடுப்பதுண்டு.


பெண்கள் மட்டும் பங்குகொண்டு கொண்டாடுகிற நோன்பு, ஔவை நோன்பு (Exclusively for women's ritual). இது மிக மிகத் தொன்மையானது. ஆனால் மனித சமூக வளர்ச்சிப் போக்கில் மாறுகிற சிந்தனைகளின் தாக்கம், அந்த நோன்பின் சடங்குகளிலும் சடங்குகள் தோன்றியது பற்றிய மக்கள் நம்பிக்கையை வெளியிடுகிற புனைகதைகளிலும் (Myths) காணப்படுகிறது.


ஆண்களிடமிருந்து மறக்கப்பட்டுப் பல நூற்றாண்டுகளாக இரகசியமாகக் கொண்டாடப்பட்டுவரும் அவ்வை நோன்பின் அடிப்படை நோக்கம், இன்ப ஆர்வமே (desire for a happy life) காலத்திற்குக் காலம் இன்பம் என்பதன் கருத்து மாறிவந்துள்ளது. 


வேட்டைக் காலத்தில் தானியத் தட்டுப்பாடு இருந்தது. அதிகத் தானியம் வேண்டும் என்ற கோரிக்கையே நோன்பின் குறிக்கோளாயிருந்தது. அடுத்த காலத்தில் இந்த ஆர்வம் பொன் மீனாக மாற்றப்பெறுகிறது. அதற்கடுத்த காலத்திற்குள் நோன்பின் குறிக்கோள் பொன் விறகாக மாறுகிறது. படிப்படியாக குறிக்கோள் உயர்ந்து சென்று, நோன்பின் குறிக்கோள்கள் பெரும் செல்வச் செழிப்பாக முடிகிறது.


அவ்வை என்ற சொல் சைனப் பெண் துறவியரான குறத்தியரே என்று காட்டி, சைனத்துக்கும், நோன்பிற்கும் உள்ள தொடர்பை ஆய்வாளர் குறிப்பிடுகிறார். சைனத் தொடர்பு பண்டைக்கால முதலே இருந்ததென்பதற்குச் சான்றுகள் தல மரபுகளில் உள்ளன. இதுபோக சைவச் சார்பும் இந்நோன்பிற்கு உள்ளது. ஆயினும் பண்டைக்காலப் பண்பாட்டுப் படிவுநிலைகளில் மிகவும் முற்பட்டது. மந்திரவாதமாகத் தோன்றுகிறது. பின்னர் சமய நம்பிக்கைகளின் சேர்மானங்கள் கலந்துள்ளன.


செந்தீ இரண்டு மாவட்டங்களின் சில பகுதிகளில் மட்டுமே சான்றுகளைச் சேகரித்துள்ளார். இதுபற்றிய செய்திகள் பெண்களால் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படுவதால் சான்றுகளைச் சேகரிப்பதும் கடினம், ஆயினும் போதுமான சான்றுகள், முதல் நிலை அனுமானங்களுக்கு வருவதற்குத் தேவையான அளவு கிடைத்துள்ளன. இனியும் இவ்வாய்வை செந்தீ தொடருவார் என்று எதிர்பார்க்கிறேன்.


நா. வானமாமலை



பதிப்பாசிரியர் (தே லூர்து) குறிப்பு


அவ்வை நோன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் கடைபிடிக்கப்படுகிறது செட்டிநாட்டுப் பகுதியிலும் கும்பகோணம் பகுதியிலும் இந்நோன்பு கொண்டாடப்படுகின்றது.


அங்கு குழந்தைகள் இந்நோன்பில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நிர்வாணமாக இருந்து பூசை செய்யும் பழக்கம் இப்பகுதிகளில் இல்லை. இந்தத் தகவலை எனக்குத் தெவித்தவர் காரைக்குடி அழகப்பாக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் நண்பர் தே.சொக்கலிங்கம் ஆவார். இது சமணத் தொடர்புடையது என்ற செந்தீயின்கருத்து ஏற்புடையதே. இக்கட்டுரை முன்னர் ஆராய்ச்சியில் வெளிவந்தது. தற்பொழுது சில திருத்தங்களுடன் இங்கு வெளிவருகிறது.


தே லூர்து


செந்தீ நடராசன்

செந்தீ நடராசன் (பிறப்பு: ஜூலை 06, 1940) நாட்டார் வழக்காற்றியலாளர், சமூக மானுடவியல் ஆய்வாளர், தொல்லியல், கல்வெட்டியல், சிற்பவியல், கோயிற்கலை ஆய்வாளர். மார்க்சிய பார்வையில் ஆய்வு செய்பவர். கன்னியாகுமரி மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக இருந்தார், தற்போது மாநில வழிகாட்டு குழு உறுப்பினராக உள்ளார். தமிழ்நாடு தொல்லியல் துறையின் தலைவராகப் பதவி வகித்தார்.