
‘பாகவத மேளா’ செவ்வியல் நடனம், இசை உதவியுடன் நிகழும் மேடைக்கலை வடிவம். தொடங்கியது முதல் இப்போது வரை இக்கலை ஆலயம் சார்ந்து இயங்கி வருகின்றது. வழக்கிலுள்ள செவ்வியல் கலைவடிவங்களில் இல்லாத இசைக்கோர்வை, நடன அமைப்பு, தனித்துவமான ராக நிரவல்கள் எல்லாம் இணைந்து பாகவதமேளா என்னும் கலைவடிவை தனிச்சிறப்புள்ளதாக ஆக்குகின்றது. நாடகமும் நடனமும் இணைந்த இந்த கலைவடிவம் ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்து வருகிறது. இக்கலைக்கான அனைத்துப்பங்களிப்புகளும், அதாவது நடனம், நடிப்பு, இசை இப்படியாக இவை அனைத்தும் இதுநாள்வரை ஆண்களால் மட்டுமே செய்யப்படுகின்றது. முற்காலத்தில் ஆண்கள் நடனமாடுவதற்கு இருந்த மிகச்சில வாய்ப்புகளில் இதுவும் ஒன்று என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். தொழில்முறைக்கலையாக இல்லாமல் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் மீதான பக்தியின் வெளிப்பாடாகவே பாகவத மேளா இன்றளவும் நிகழ்த்தப்படுகின்றது.