“இந்திய உளவியல்” என தனியாக ஒரு அறிவுத்துறை இல்லை. ஆனால் நம்முடைய மதம், யோகம், ஆன்மீகம் என இவையனைத்தும் 80 சதவிகிதம் உளவியலை மட்டும்தான் பேசியிருக்கின்றன. மேற்கத்திய உளவியல் மனதை நனவுமனம் (conscious mind), ஆழ்மனம் (subconscious mind), நனவிலி (Unconscious mind) என மூன்றாக பிரித்திருக்கின்றனர். உபநிடத ரிஷிகள் ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷூப்தி, துரியம் என மனதை நான்காக பிரித்திருக்கிறார்கள். யோக வாசிஷ்டம் போன்ற நூல்கள் ஜாக்ரத், ஜாக்ரத்-ஸ்வப்னம், ஸ்வப்னம், ஸ்வப்ன-ஜாக்ரத், சுஷூப்தி, துரியம், துரியாதீதம் என இன்னும் நுட்பமான பிரிக்கின்றன. அதில் ’ஜாக்ரத்’தை நனவுமனம் என்றும், ஜாக்ரத்-ஸ்வப்னம் முதல் ஸ்வப்ன-ஜாக்ரத் வரை உள்ளவற்றை ஆழ்மனம் என்றும், சுஷூப்தியை நனவிலி என்றும் சொல்லலாம். துரியம் என்ற ஒரு நிலையைப்பற்றி மேற்கத்திய உளவியலாளர்களுக்கு தெரியவே தெரியாது. நனவுமனதிற்கும் நனவிலிக்கும் இடையில் ஆழ்மனதிலிருந்து பீறிட்டு வெளிப்படும் எந்த பூடகத்தன்மையும் அற்ற ஒரு நேரடியான உணர்வை ’intuition’ என்ற பெயரில் அழைக்க அவர்களில் சிலர் சம்மதிக்கிறார்கள். என்னுடைய வகுப்புகளில் மேற்கத்திய உளவியல், இந்திய உளவியல் இரண்டிற்கு சமானமான முக்கியத்துவத்தை அளிக்கிறேன்.
மேற்கத்திய உளவியலின் முக்கிய போதாமை அது ஆய்வுப்பொருளாக நோய்பீடிக்கப்பட்ட மனதை எடுத்துக்கொள்ளும் என்பதுதான். ஆனால், இந்திய உளவியல் ஆரோக்கியமான, மிகத் திடமான உடல்கொண்ட யோகிகளுடைய மனதை ஆய்வுக்கான மாதிரியாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய வகுப்புகளில் முதலில் மேற்கத்திய உளவியலுக்கு நெருக்கமான நனவிலியை மாணவர்களுக்கு தத்துவார்த்தமாக அறிமுகப்படுத்துவேன். வில்லியம் ஜேம்ஸ் (William James) நனவிலியைப்பற்றி சொல்கிறார் என்றாலும் அது லிப்னிட்ஸ் (Leibnitz) போன்றவர்களின் தத்துவார்த்தமான கருதுகோள்களைப் பற்றிய விளக்கங்கள் மட்டும்தான். அவை உளவியல் அடிப்படை கொண்டவை அல்ல. ஒரு குழந்தை வளரும் போது அது சுதந்திரமாக செயலாற்றிய இடங்களிலிருந்து பெற்றோர் வெளியேற்றுகிறார்கள். அதற்கு இணக்கமாக இருந்த பல விஷயங்களும் விலக்கப்படுகின்றன. குழந்தைப்பருவத்தில் எளிதாக கிடைத்த பல அனுபவங்கள் பின்னர் விலக்கப்படுவதால் அவை சுத்தமாகவே இல்லாமலாகின்றன. அதனால் உருவாகக்கூடிய விழைவுகளும், குற்றவுணர்வுகளும் தனிமனிதனின் நனவிலியில் சென்று அங்கு மறைந்துகொள்ளும். ஃப்ராயட்டின் அபிப்பிராயத்தில் இன்ப நாட்டமும் அதற்கு நேர் எதிரான தன்னையே சிதைத்துக்கொள்ளக்கூடிய விழைவும் நனவிலியில் மறைந்திருக்கிறது. நம்முள் ஆழத்தில் உறையும் இன்பநாட்டமும், தன்னையே சிதைத்துக்கொள்ளும் விழைவையும் லிபிடோ (Libido) என்கிறார் ஃப்ராய்ட். நம் விழைவுகளை, அடிப்படை உணர்வுகளை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான உள ஆற்றலை அளிப்பது லிபிடோதான். உளநோய்களின் அடிப்படைக் காரணங்களை கண்டறியத்தான் ஃப்ராய்ட் நனவிலி பற்றிய விளக்கம் அளித்தார் என்றாலும் ஃப்ராய்டிற்கு நோய் பீடிக்காத நல்ல உளநிலை கொண்டவர்களின் நனவிலி பற்றியும் நல்ல ஆழமான அறிவு இருக்கிறது. ஃப்ராய்டுடன் பணியாற்றிய மற்ற ஆய்வாளர்களின் மறைமுகமான எதிர்ப்புகளால் அவரால் நனவிலி பற்றிய அவரது ஆய்வுகளை அவ்வளவாக வெளிப்படுத்த இயலவில்லை. ஆனால் ஆழ்மனம் என்ற கருதுகோளை ஃப்ராயிடால் சுத்தமாக ஏற்க இயலவில்லை.
இங்கு நமது வகுப்பின் பேசுபொருள் சார்ந்து ஃப்ராயிடை விட உளவியலாளர் யுங்கை (Carl Jung) ஆராய்வது நமக்கு மேலும் பொருத்தமாக இருக்கும். நியூட்டன் ஒரு ஆப்பிள் மரத்திலிருந்து வீழ்வதைப் பார்த்து ஈர்ப்புவிசை என்ற கருதுகோள் நோக்கி வந்து சேர்ந்தார் என்று சொல்லப்படுகிறது. அதுபோல, சோஃபோக்லீஸின் (Sophocles) ’ஈடிபஸ் ராஜா’ என்ற நாடகத்தின் கதாநாயகனான ஈடிபஸின் கதையிலிருந்து Oedipus complex-ஐ மேற்கத்திய உளவியல் கண்டுபிடிக்கிறது. யுங் அதோடு நிற்காமல் கிரேக்கத் தொன்மங்களில் உள்ள கதாபாத்திரங்களிலும், சம்பவங்களிலும் மனித மனதின் ஆழத்தை கண்டுபிடிக்க முயன்றார். அவருக்கு தொன்மங்கள் குறிப்பாக கிரேக்க தொன்மங்களில் உள்ள பல விஷயங்கள் உளவியல் ரீதியான குறியீடுகள் என்று தோன்றியது. தொன்மங்களை குழந்தைப்பருவத்துடனும் தனிமனிதனின் கனவுகளுடனும் இணைத்துக்கொண்டு மனதின் சிக்கல்களை நனவிலியில்தான் தேடவேண்டும் என ஃப்ராய்ட் நினைத்தார். நனவிலியில் குழந்தைப்பருவ அனுபவங்கள் சென்று பதிவாகின்றன. வளர்ந்துவரும் ஒரு தனிமனிதனின் நினைவுகள் பலவற்றை நனவிலி மறைத்துவைத்து மறதியை ஏற்படுத்தும் என்றும் ஃப்ராய்ட் கண்டுபிடித்தார்.
நனவிலிக்கு தனியாளுமையின் கட்டுப்பாட்டில் இல்லாத பிரத்யேகமான சலனங்கள் உண்டு. நனவுமனதைவிட பலமடங்கு சிக்கலான நனவிலிக்கு நுண்மையை தொட்டுணரும் ஆற்றல் உண்டு என்பதை ஃப்ராய்ட் கண்டுகொண்டார். சி.ஜி.யுங் ஆரம்பகாலங்களில் இந்த ஆய்வுகளிலெல்லாம் ஃப்ராய்டின் நம்பிக்கையான மாணவராக இருந்தார். தொன்மங்களில், தனிமனிதனின் கனவுகளில் உள்ள உளவியல் சார்ந்த குறியீட்டுத்தன்மையும் அவற்றின் புதிர்த்தன்மையும் ஃப்ராயிட் வழியாக யுங்கிற்கு கிடைத்த மனிதமனம் சார்ந்த அரிய ரகசியங்கள். ஃப்ராயிட்டிலிருந்து முரண்பட்டு அவரை விட்டுவிலகிய பிறகு யுங் உளவியல் நோய்களுக்கான காரணங்களை கண்டுபிடிக்க தொன்மங்களை பயன்படுத்தவில்லை. ஆனால், யுங்கிற்கு தொன்மங்கள் மேல் பொதுவான ஆர்வம் இருந்ததால் அவற்றை பரிசோதித்துக்கொண்டும் இருந்தார்.
இந்திய பௌராணிக மனதை புரிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதலில் யுங் ரிக்வேதத்தில் புருஷ-சூக்தத்தை ஆராயத்தொடங்கினார். அதிலிருந்து ஆழ்படிமங்களின் (archetypes) அடிப்படைகளை விளக்கினார். இந்திய புராணமரபு வழியாக யுங் கண்டுபிடித்தது உலகத்தந்தை என்ற கருதுகோள். சூரியனை உயிர்க்குலங்களின் தந்தை என உபநிடதங்கள் சொல்வது யுங்கிற்கும் ஏற்புடையதாக இருந்தது. அந்த சூரியனின் ஆற்றலையே உயிரின் ஆதிகாரணமாக அறிவியல் தத்துவார்த்தமாக விளக்கமளிக்கும். காமவிழைவை ஃப்ராய்ட் லிபிடோவுடன் அடையாளப்படுத்தினார். உயிர்குலங்களையெல்லாம் தொட்டெழுப்பக்கூடிய சூரியனின் ஆற்றலை யுங் லிபிடோ என்றார். ஸ்வேதாஸ்வதர உபநிடதத்திலிருந்துதான் (Shvetashvatara Upanishad) யுங்கிற்கு ஆழ்படிமங்கள் பற்றிய தெளிவான சித்திரம் கிடைக்கிறது. அவர் தன் ‘Symbols of transformation’ என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில் ஸ்வேதாஷ்வதர உபநிடதத்தை ஆராய ஆரம்பிக்கிறார். ஸ்வேதாஷ்வதர உபநிடதத்தின் மூன்றாம் அத்தியாயம் 11 முதல் 15 வரையுள்ள மந்திரங்கள் யுங் லிபிடோவை புரிந்துகொள்ள பயன்படுத்துகிறார்.
அங்குஷ்டமாத்ர꞉ புருஷோ(அ)ந்தராத்மா ஸதா ஜனானாம் ஹ்ருதயே ஸந்னிவிஷ்ட꞉ ।
ஹ்ருதா மன்விஶோ மனஸாபிக்லுப்தோ ய யேதத் விதுர் அம்ருதாஸ்தே பவன்தி ||
“பெருவிரல் அளவிற்கே உள்ள ஒருவன்தான் உயிர்குலங்களின் இதயத்தில் குடியிருக்கும் அந்தராத்மா. அவன் அறிவின் தலைவன், மனதால், இதயத்தால் பாதுகாக்கப்படுபவன். இவ்வாறு அவனை அறிபவர்கள் அமுதம் பருகியதுபோல அழிவற்றவர்களாக இருப்பார்கள்.” - ஸ்வேதாஷ்வதர உபநிடதம், 3.13.
இந்த மந்திரத்தை வாசிக்கும் ஒரு இந்திய பக்தன் தன் இதயத்தில் இருக்கும் இறைவனை நினைவுகூர்வான். ஆனால், ஃப்ராய்டியன் முறைப்படி ஆய்வு செய்யும் யுங்கிற்கு அப்படித்தோன்றுவதில்லை. ருத்ரனும் சிவனும் ஒன்றுதான் இல்லையா? சிவனை பூஜைசெய்வதற்கு நாம் சிவலிங்கத்தை பயன்படுத்துகிறோம். சிவலிங்கத்தின் உருவத்துடன் சரியாகப் பொருந்துவது கட்டைவிரல் மட்டும்தான்! பேய்க்கதைகளில் வரும் tom-thumb என்ற கதாப்பாத்திரம் கட்டைவிரல் மட்டுமே கொண்ட மனிதன். அந்த பேய்க்கதைகளில் அவனது சேட்டைகள் அனைத்தும் லிபிடோவுடன் தொடர்புடையது. இந்த உபநிடத ஆய்விலிருந்து யுங் காமவிழைவை ஏற்படுத்தும் குறியீடுகளுக்கு செல்கிறார். அதிலிருந்து குறியீடுகளைப்பற்றிய பொதுவான ஆய்வுகளுக்கு சென்றுவிடுகிறார். ருத்ரத்திலும் பகவத்கீதையிலும் சொல்லப்படும் ஆயிரம் கண்களுடையவன் (சகஸ்ராக்ஷன்) என்ற கருதுகோளை கௌதமரின் சாபத்தால் ஆயிரம் யோனிகளை பெற்ற இந்திரனாக யுங் கருதுகிறார். இந்திரன் சாபவிமோசனத்தால் ஆயிரம் கண்களுடையவனாக ஆவதை மனதில் வைத்துக்கொண்டு எகிப்தில் உள்ள ஹோரஸ்ஸின் சிற்பத்திற்கு சென்றுசேர்கிறார். ஹோரஸும் ஆயிரம் கண்களுடையவன். பகவத்கீதை 14ஆம் அத்தியாயம் 4ஆம் ஸ்லோகத்தில் இவ்வாறு உள்ளது:
”ஓ அர்ஜுனா, எல்லா யோனிகளிலும் எவையெல்லாம் உடல்களாக ஆகின்றனவோ அவற்றிற்கு மகத்தான பரம்பொருள் யோனியை அளிக்கிறார். நான் விந்துவை அளிக்கும் தந்தை ஆவேன்.”
இந்த மந்திரங்களின் அடிப்படையில் யுங் தாயையும் தந்தையையும் first archetypes (முதல் ஆழ்படிமங்கள்) என்று எண்ணியதில் தவறில்லை. ஆனால் யுங் அதோடு நின்றுவிடுவதில்லை. கோதேவின் (Goethe) காவியாமான ஃபௌஸ்டை (Faust) ஆராய்கிறார். அந்த காவியத்தில் ஃபௌஸ்டிற்கும் மெபிஸ்டோஃபிலிஸுக்குமான (Mephistopheles) உரையாடலை யுங் உதாரணமாக எடுத்துக்கொள்கிறார்.
மெபிஸ்டோஃபிலிஸ்: வணக்கம். நீங்கள் விடைபெற்றுச் செல்வதற்குள் சாத்தானை அறிந்துவிடுவீர்கள். அது தெளிவாகவே உணரமுடிகிறது. இந்த சாவியை எடுத்துக்கொள்ளுங்கள்.
ஃபௌஸ்டை: இந்த சின்ன சாவியா? எதற்கு?
மெபிஸ்டோபிலிஸ்: இதைப் பிடியுங்கள். இதை வைத்துக்கொள்வதால் எந்த மதிப்புக்குறைவும் வரப்போவதில்லை.
ஃபோஸ்ட் : இது ஜொலிக்கிறது. என்னுடைய கையிலிருந்து பெருகுகிறது.
மெபிஸ்டோபிலிஸ்: இது விலைமதிப்பற்றது. உங்களுக்கு உடனே எல்லாம் புரிந்துவிடும். மற்ற எல்லாவற்றிலிருந்தும் உங்களை விலக்கி சரியான இடத்தை தொட்டறிய இந்த சாவி உதவும். இதனுடன் சேர்ந்து இறங்குங்கள். இது உங்களை அன்னையரிடம் சென்று சேர்க்கும்.
இங்கே தந்திரமானவனாக காணப்படும் மெபிஸ்டோபிலிஸ் சாத்தானே தான். இங்கே விலைமதிப்பற்ற, புனிதம் நிறைந்த, மாயத்தன்மை கொண்ட சாவி காமவிழைவையும் பிறப்பையும் குறிக்கிறது. உபநிடதங்கள் இம்மாதிரி ஒளித்து வைத்து விளையாடுவதில்லை.
உபநிடதங்கள் பிரபஞ்ச சிருஷ்டியையும், உயிர்குலங்கள் இணைசேரல் வழியாக உருவாக்கக்கூடிய சிருஷ்டியையும் ஒரே மாதிரித்தான் எண்ணுகின்றன. சாந்தோக்ய உபநிடதத்தில் 2ஆம் அத்தியாயம் 13ஆம் பாகம் முதல் மந்திரம்
உபமந்த்ரயதே ஸ ஹிங்காரோ ஞபயதே ஸ ப்ரஸ்தாவ: ஸ்த்ரியா ஸஹ ஶேதே ஸ உத்கீத: ப்ரதி ஸ்த்ரீ ஸஹ ஶேதே ஸ ப்ரதிஹார: காலம் கச்சதி தந்நிதனம் பாரம் கச்சதி தந்நிதனம் ஏதத் வாமதேவ்யம் மிதுனே ப்ரோதம்
அழைத்தல் ஹிங்காரம்; வேண்டுதல் ப்ரஸ்தாவம்; பெண்ணுடன் சேர்ந்து படுத்தல் உத்கீதம்; பெண்ணுடன் முகத்தோடு முகம் நோக்கி படுத்தல் ப்ரதிஹாரம். பொழுதுபோக்குதல் நிதனம், முடிவை எட்டுதலும் நிதனம். வாமதேவ்ய ஸாமன் எனப்படும் இது இணையரை அடிப்படையாகக் கொண்டது
இங்கே ரிஷிகள் குறியீடுகள் போன்ற எந்த மறைத்துவைக்கும் திரைகள் எதுவும் இல்லாமல் எது பரமார்த்தமோ அது எப்படி எல்லாம் வெளிப்படுமோ அதை அப்படியே விவரிக்கிறார்கள். அது யுங்கினை திகைக்க வைக்கிறது. கிருஸ்துவத்தின் அடித்தளம் பாவ விமோசனம். அங்கு பாவத்தின் இடத்தில் சாத்தானும் விமோசனத்தின் இடத்தில் தெய்வமும் இருக்கின்றன. யுங் உபநிடதங்களில் உள்ள நேரடியான வெளிப்பாட்டை கண்டு ஸ்தம்பித்துவிடுகிறார். Hermis, Hifestrass, Vieland, Melampus, Tom-thumb, Hercules, Oedipus, Dionysus போன்ற கிரேக்க தொன்மக்கதாப்பாத்திரங்களுக்கு சென்று உபநிடதங்களில் உள்ள முரண்பாடுகளுக்கு பதிலிவடிவங்களை கண்டுபிடிக்க முயற்சிசெய்கிறார். இத்தனைக்கும் யுங்கின் தனியாளுமையில் உள்ள நிருபணவாதத்தன்மை (empirical) கொண்ட ஆய்வாளரை விட மிகப்பெரியது அவருக்குள் இருக்கும் நுண் இறைவாதத்தை (mysticism) மதிக்கும் உளவியலாளர். ஆனால், அவருடைய ஆழத்தில் அதைவிட பெரியதாக கிறிஸ்தவத்தின் ’பாவ உணர்வு’ (sense of guilt) என்ற கருதுகோள் இருக்கிறது. அதனால், வேறு எங்கும் வெளியேற வாய்ப்பற்ற நம்பிக்கையாளன் அவருக்குள் இருக்கிறான்.
அந்த காரணத்தால்தான் சி.ஜி.யுங் ஃப்ராய்டுடன் ஒத்துழைத்து வேலைசெய்ய இயலவில்லை. யுங்கியன் உளவியலின் (Jungian psychology) முதல் அடிப்படை ”எல்லா நனவிலியிலும் நிறைந்திருக்கும் காமத்தின் முடிவில்லாத வீரியம்” என்ற கருதுகோள்தான். அந்த கருதுகோளை விளக்கத்தான் உபநிடதம், திபத்திய தந்திரயானம், உலகம் முழுக்க நிறைந்திருக்கும் தொன்மங்கள் போன்றவற்றை அவர் பயன்படுத்துகிறார். அவருடைய ஆராய்ச்சிகளும் அவதானிப்புகளும் கண்டுபிடிப்புகளும் கரைகாணாத கடல் போல அத்தனை விசாலமானது என்றாலும் அவருடைய பல அவதானிப்புகளும் கருதுகோள்களும் ஆழமில்லாதவை என்று நான் நினைக்கிறேன். ஃப்ராய்டிற்கு யுங் போல இவ்வளவு விரிவான தொன்ம அறிமுகமோ நூல் அறிமுகங்களோ இல்லை. ஆனால் நனவிலி பற்றி ஃப்ராய்ட் முன்வைத்த இரண்டு வலுவான கருதுகோள்கள் இன்றும் எந்த மாற்றமுமில்லாமல் உறுதியாக நிலைகொள்கின்றன. அவை கத்தெக்சிஸ் (cathexis), உன்னதமாக்கல் (Sublimation).
யுங் தன்னுடைய ‘The symbols of transformation’ என்ற புத்தகத்தில் ஃப்ராய்டின் ’லிபிடோ’ என்ற கருதுகோளை கடுமையாக விமர்சிக்கிறார். “மனிதனுடைய எல்லா இன்பத்திற்கான விழைவுகளிலும் கத்தெக்சிஸ் நிறைந்திருக்கிறது” என்பது ஃப்ராயிட்டின் தத்துவம். அதை சி.ஜி.யுங்கால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆனால், அது அப்படியல்ல என்று சொல்ல யுங்கிற்கு போதுமான காரணங்களும் இல்லை. நமக்கு கத்தெக்சிஸ் பற்றி இன்னும் உறுதியான, அனுமானிக்கக்கூடிய அம்சங்கள் கிடைக்கவில்லை என்பதுதான் யுங்கின் விமர்சனம். இந்த விஷயத்தில் ஃப்ராய்ட் நிபுணராக இல்லாமலிருக்கலாம். என்றாலும் ஃப்ராய்ட் யூகித்தவரை சரிதான். யுங் சாந்தோக்ய உபநிடதம் போன்ற ஒரு உபநிடதத்தையாவது புரிந்துகொண்டிருந்தார் என்றால் அவர் ஏகப்பட்ட பிழைப்புரிதல்களிலிருந்து தப்பித்திருப்பார். ஃப்ராய்ட் சொல்லக்கூடிய உணர்வுச்சுத்தீகரணமும், உன்னதமாக்கலையும் யுங், ஃப்ராய்ட் இருவரும் புரிந்துகொண்டதைவிட எவ்வளவோ ஆழமாகவும் உறுதியாகவும் உபநிடதம் கையாண்டிருக்கிறது.
ப்ரதிமயெழும் கரணபர்வீணனாளும்
ரதிரதமேரியஹந்தரம்யரூபம்
ப்ரதி புரமே பெருமாரிடுன்னஜஸ்ரம்
கேள்வி (செவிமடுத்தல்) முதலான புலன்களாகிய குதிரைகளைப் பூட்டி, ஆன்மாவின் எதிரொளிப்பான அகமெனும் தேரோட்டி செலுத்துகின்ற இன்பமெனும் (ரதி) தேராகிய உடலில் வாழும் தன்முனைப்பு விழைவை உண்டாக்கும் பொருள்களில் எல்லாம் வெளிப்பட்டபடி எப்போதும் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறது
ஒரு ரதி தன்னெயஹந்தயிந்த்ரியாந்த:
கரணகளேபரமென்னிதொக்கெயாயி
விரியுமிதின்னு விராமமெங்கு, வேறா
மறிவவனென்னறிவோளமோர்த்திடேணம்
இன்பமென்னும் (ரதி) ஒன்றே, தன்முனைப்பாகவும் புலன்களாகவும் அகச் செயல்பாட்டுக் கருவிகளாகவும், உடலாகவும் விரிகின்றது. இது முடிவுக்கு வருவது எப்போது? அறிவு அறியப்படுவதாகும் வரைதான் அறிபவன் வேறாக இருக்கிறான் என்பதை உணர வேண்டும்.
நாராயணகுருவின் ஆத்மோபதேச சதகத்தில் 69, 70-ஆம் மந்திரங்களை மேலே கொடுத்திருக்கிறேன். இது ஃப்ராய்டின் கத்தெக்சிஸ்ற்கு நல்ல உதாரணம். இந்திய உளவியல் குறிப்பிடக்கூடிய உன்னதமாக்கலை நாராயணகுரு 70ஆம் மந்திரத்தில் கடைசிவரியில் சுட்டிக்காட்டுகிறார். 69ஆம் செய்யுளில் சொல்லக்கூடிய ‘ஆத்மபிரதிம’ என்ற சொல்லாட்சி சாந்தோக்ய உபநிடதத்தில் ‘சாயாத்மாவ்’ என்ற சொல்லுக்கு நிகரானது.
இது உபநிடதத்தில் உள்ள கத்தெக்சிஸ். இதுதான் ஆயிரம் யோனிகள் கொண்ட இந்திரனின் உலகம். மனிதமனதைத்தான் இந்திரன் என்று அழைக்கிறோம். தேவர்களின் அரசன் இந்திரன். புலன்களைத்தான் தேவர்கள் என அழைக்கிறார்கள். ’திவ்’ என்றால் ஒளிர்வது என்று பொருள். துய்க்கும் மனதை யோகத்தில் அமரும் ஞானியாக ஆக்கும்போது ஆயிரம்யோனிகள் கொண்ட இந்திரன் ஆயிரம் கண்கள் கொண்ட இந்திரனாக ஆகிவிட்டிருப்பான். கூடவே முப்பத்து முக்கோடி தேவர்களும் விழிப்படைந்து விட்டிருப்பார்கள்.
புலன்களின் தூண்டுதலால் உருவாகும் அறிதல் இன்பமானதாகவோ, துன்பமானதாகவோ ஆவது நியூரான்களில் இருக்கும் முன்னறிவுகளால்தான். மூளையில் மட்டும் ஆயிரம் கோடி பிரகாசமான ’தகவல்துளிகள்’ ஒளிர்கின்றன என இதைப்பற்றி நவீன உடலியங்கியல் சொல்கிறது. இதோடு ஒப்பிட்டால் நாம் சொல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற எண்ணிக்கை அவ்வளவு ஒன்றும் கூடுதலானது என்று சொல்லிவிடமுடியாது. முன்னறிவை என்று மேலே சொல்லியிருப்பதை முன்ஜன்ம அறிதல் என்று நம் இந்திய மரபில் அழைக்கிறோம். ஒரு ஆய்வாளரின் கண்களில் முந்நூறு கோடி வருடங்களுக்கு முன்பு இருந்த பாக்டீரியா முதல் இன்றுவரை உள்ள உயிர்க்குலங்களின் சங்கிலியில் புதிய அறிவுகளை சேகரிப்பதும், நிரந்தரமான புதுமையாக்கலும் அறுபடாமல் தொடர்ந்தபடியே இருக்கிறது. நம் மூளையில் உள்ள நியூரான்கள் வழியாக அது நம்மிடமும் வந்து சேர்ந்திருக்கிறது. அந்த ஒட்டுமொத்தத்தைத்தான் நாம் அறிவின் சாரம் என்று இன்று அழைக்கிறோம். விந்துவின் வழியாக உயிர் உற்பத்தி நிகழும்வரை இந்த அறிவுச்சேகரமும், புதுமையாக்கலும் தொடரும். கத்தெக்சிஸ்-ற்கும் உன்னதமாக்கலுக்கும் காரணமாக அமைவது இந்த அறிவுச்சேகரமும், புதுமையாக்கலும்தான்.
கார்ல் யுங் சிவலிங்கம், கட்டைவிரல், ஆண்குறி, குள்ளன் (dwarf) இவற்றையெல்லாம் சமானமான குறியீடுகள் என்று எண்ணிக்கொள்கிறார். ஆனால் இந்தியாவின் உருவக-மொழி குறியீடுகளை அதன் நுண்மையான வேறுபாடுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றை மிக துல்லியமாகவே பயன்படுத்தியிருக்கிறது. உதாரணமாக, உலகப்புகழ்பெற்ற நடராஜ தாண்டவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நடராஜரின் காலடியில் கிடப்பது ஒரு குள்ளன். Hysteria வந்த ஒரு முயலகன். (அதீதமான, கையாளமுடியாத உணர்வெழுச்சியையும், அச்சத்தையும் உளவியலில் hysteria என்று சொல்லப்படுகிறது) Hysteria-வை லிபிடோ என்ற உளஆற்றலாக யுங் எண்ணியதில் தவறில்லை. நடராஜரின் கால்களை மாயத்தன்மைகொண்ட, உயிரின் உற்பத்தி சக்தியாக யுங் நினைக்கிறார். அதாவது, யுங் அந்த கால்களை ஆண்குறியோடு தொடர்புபடுத்தி யோசிக்கிறார். ஆனால் இந்திய பண்பாட்டில் கால்கள் அடிப்படை, வழி, பாதுகாப்பு போன்றவற்றின் குறியீடு. நாம் மதிப்புடன் நினைப்பது. தாண்டவமாடும் நடராஜனை சிதம்பரத்தில் நடனமாடுவதாகத்தான் நாம் உருவகித்திருக்கிறோம். சிவனின் பாதம் முதல் புருவம் வரை ஒவ்வொன்றையும் குறியீடுகளாக விரித்து எண்ணிறந்த உருவங்களை கற்பனைசெய்ய இயலும். அவை ஒவ்வொன்றும் தாண்டவ ஸ்தானங்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு ஸ்தானத்திற்கு குறிப்பிட்ட தனித்தன்மையும் முக்கியத்துவமும் உண்டு. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகனை அதீதமான உள ஆற்றலாக எனக்கொண்டால், அதன் உச்சத்தில் நிகழும் சாந்தமான உன்னதமாக்கலின்(sublimation) உருவகம்தான் சிவனின் சடைமுடியில் உள்ள சந்திரப்பிறை. அப்படி மிகத்தீவிரமான சுத்தீகரணத்திலிருந்து மிக நளினமான உன்னதமாக்கல்வரை செல்லும் ஆரோஹனத்தின் உருவகம்தான் நாம் காணும் நடராஜர் சிலை. இவையெல்லாம் யுங்கின் கண்ணில்படவே இல்லை.
தமிழில் அழகிய மணவாளன்
குறிப்பு: நித்ய சைதன்ய யதி 1970-களில் அமெரிக்காவில் உள்ள போர்ட்லாண்ட் அரசு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அழகியல் அனுபவம் சார்ந்த வகுப்புகளை எடுத்தார். ஆங்கில தலைப்பு “Experiential Aesthetics - The imprisoned splendour of the unconscious”. வகுப்பு எட்டு வாரங்கள். நித்ய சைதன்ய யதி தான் எடுத்த வகுப்புகளை எழுத்துவடிவில் சுருக்கமாக பதிவுசெய்துவைத்திருக்கிறார். இது மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது.கத்தெக்சிஸ் (Cathexis) - ஒரு தனிமனிதனின் மனதில் குறிப்பிட்ட கருத்திலோ, வேறு ஒரு தனிநபரிலோ ‘லிபிடோ’ என்ற உள ஆற்றல் குவியும் முறைமையை ஃப்ராய்ட் ’cathexis’ என்றார். நம்மை ஆழமாக பாதிக்கும் விஷயங்களில் அதீதமான உள ஆற்றலும், நம்மை அவ்வளவாக தீண்டாத குறைந்த உள ஆற்றலும் செலவிடப்படுவதாகவும் அதை தீர்மானிப்பது ‘cathexis’ என்ற செயல்முறைதான் என்பது ஃப்ராய்டின் கருதுகோள்.
நித்ய சைதன்ய யதி (1923-1999)
சிந்தனையாளர், தத்துவ அறிஞர், அத்வைதி, ஆன்மிகவாதி, கவிஞர். நடராஜ குருவின் நேரடி சீடர். நாராயண குருவின் தத்துவ பள்ளியைச் சேர்ந்தவர். தத்துவத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு கொல்லம் ஶ்ரீ நாராயண கல்லூரியிலும், சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். நாராயண குருவின் தத்துவ நூல்களுக்கும் பகவத் கீதை, உபநிஷதங்களுக்கும், சங்கரரின் சௌந்தர்ய லஹரிக்கும் விரிவான உரைகள் எழுதியுள்ளார். ஆங்கிலம், மலையாளம், தமிழ் என இருநூறுக்கும் மேலான குருவின் நூல்கள் வெளியாகி உள்ளது.