Sunday, 5 March 2023

சிவதாண்டவம்: ஓர் அஞ்சலி - தியடோர் பாஸ்கரன் (முதல் கட்டுரை)


இந்தியக் கலைகளின் நோக்கங்களை இந்தியருக்கும் சேர்த்து இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகத்துக்குப் புலப்படுத்தியவர் ஆனந்த  குமாரசாவாமி. அவரின் நூற்றாண்டு நினைவை ஒட்டி சிதானந்த தாஸ் குப்தா 1968-ல் தயாரித்த படம் ’Dance of Siva: A Tribute to Ananda coomaraswamy’. இதை அமெரிக்க தகவல் நிலையம் அண்மையில் (1975) திரையிட்டது.

புவியியல் வல்லுனராக கனிவளத்தைத் தேடி இலங்கையில் காடு மலைகள் எனச் சுற்றிய குமாரசாமி, அங்கு கேட்பாரற்றுக் கிடக்கும் சிற்ப-கட்டிடக்கலைச் செல்வங்களுக்கு அறிமுகமாகிறார். ஈழத்துக்கலை அவரை இந்தியக் கலைக்கும் அதிலிருந்து தூரக் கிழக்கு நாடுகளின் சிற்பச்  செல்வங்களுக்கும் இட்டுச் செல்கிறது. இந்நாடுகளின் கலை வரலாற்றின் அடித்தளத்தில் இழைந்தோடும் பொதுத்தன்மை அவரை ஈர்க்கிறது. ஒரு கலாச்சாரத்தின், ஒரு தத்துவத்தின் வெளிப்பாடே கலைப் பொருட்கள் என்று உணர்ந்த குமாரசாமி அக்கலைப்பொருட்களை கூர்ந்து நோக்குவதன் மூலம் அவற்றின் தத்துவ அடிப்படையை எட்ட முயல்கிறார். அவரது வாழ்வு முழுவதும் இம்முயற்சியே. சரமாரியாக வெளிவரும் அவருடைய நூல்கள் ஒரு புதிய உலகத்தையே  திறக்கின்றன. அவ்வாறு அவர் நடராஜர் கருத்தமைப்பு (concept) பற்றி தத்துவார்த்தமாக எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பே படத்தின் தலைப்பாக அமைகின்றது.

சிதானந்த தாஸ்குப்தா

சிதானந்த தாஸ்குப்தா கல்கத்தா பிலிம் சொசைட்டியின் பாரம்பரியத்தில் வந்தவர். திரைப்படக்கலை பற்றிய கோட்பாடுகளை நன்கு கற்றுணர்ந்த பிறகே ‘மெகபோனில்’ கை வைக்கும் கலைஞர்களில் ஒருவர். எல்லா நுண்கலைகளையும் தன்னுள் அடங்கும் ‘திரைப்பட மொழியை’ நன்கு கற்றவர். அம்மொழியில் அவர் இயற்றிய கவிதையே இப்படம்.

தாஸ்குப்தா ஒரு சினிமா டைரக்டருக்குக் கிடைத்திருக்கும் பலவித சாதனங்களையும், உத்திகளையும் (காட்சி படிமங்கள், சப்தம், சங்கீதம், சுற்றுப்புற ஒலிகள், உரையாடல்கள், வர்ணனைகள், துணைத்தலைப்புகள் அசலனப்படங்கள்) என அவற்றின் தன்மையறிந்து, நேரமறிந்து அளவோடு பயன்படுத்துகிறார்.

சொல்லவந்ததைக்  கச்சிதமாக அழுத்தமாகச் சொல்கிறார். சில இடங்களில் காட்சிப் படிமங்களும் வர்ணனையும் இணைந்து சினிமாவின் அசுரசக்தியைக் கணப்பொழுதில் வெளிப்படுத்துகின்றன. ‘இந்தியக் கலை தொய்ந்திருந்தது’ என்று கூறும்போது, பூ வரிமானம் நிறைந்த ஒரு கல்தூண் புல்பூண்டுகள் மறைக்கத் தரையில் கிடப்பது காட்டப்படுகிறது. கவனிப்பாரற்றுக் கிடக்கும் கல்தூண் குமாரசாமியின் கவனத்தை ஈர்ப்பது போல் காற்றில் அச்செடிகள் அசைகின்றன. 

ஆனந்த குமாரசாமி

திரைப்பட மொழிக்கு, அறிவைத் தாண்டி, உணர்வைத் தூண்டும் ஒரு தன்மை உண்டு, சங்கீதம் போல. சில காட்சிகள் படத்திற்கு சம்பந்தமற்றவை போல மேலோட்டமாக தோன்றினாலும், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் டைரக்டர் சொல்ல வருவதை ஆத்மார்த்தரீதியாக உணரவைத்து விடக்கூடியது இம்மொழி.   உதாரணம் இலங்கையரின் மேனாட்டு மோகத்தைக் குமாரசாமி கடுமையாக கண்டித்தார் என்பதை காட்ட வரும்போது, பரந்த ஒரு நீர்ப்பரப்பில் மேல் ஒரு மேககூட்டம் போல் மெல்லப் பறந்து அமர்கிறது ஓர் நீர் வாத்துக்கூட்டம்.  காட்சிப் படிமங்களைத் துணைத் தலைப்புகளாகவும்  உபயோகிக்கிறார் தாஸ்குப்தா. ஜாவாவிலுள்ள  ப்ரம்பானன் (prambanan) சிற்பக்கலையைக்  காண்பிக்கும்முன் ஒரு தூரக்கிழக்கு பெண்ணின் முகம் திரையில் பளிச்சிட்டு மறைகிறது.

காமிராவின் பல அசைவுகளும் சினிமாவுக்கு பலமளிக்கும் வகையில் கையாளப்படுகின்றன. சிறுவன் குமாரசாமி இலங்கையில் என்று கூறுகையில் வெற்றுடம்புடன் வயலில் வேலை செய்யும் குடியானவர்கள் மேல் சில விநாடிகள் தங்குகிறது. பிறகு பின்னோக்கி zoom. வயல்வெளி பரந்து விரிகிறது. இருமருங்கிலும் தென்னை மரங்கள். குடியானவர்கள் கருப்பு புள்ளியாகி மறைகிறார்கள். zoom தொடர்கின்றது. மலை சூழ்ந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவே ஒர் வயற்பரப்பு. காட்சி மாறுகிறது.

காட்சி மாறும்போது ‘மயங்கித் தெளிதல்’ (fade-in, fade-out) முறையையும் ‘கரைதலையும்’ (desolve) அழுத்தமாகக் கையாளுகிறார். ஈழத்துக் கலைச்செல்வங்கள் மூலம் குமாரசாமி இந்தியக்  கலைப் பாரம்பரியத்திற்கு வருகிறார் எனக் கூற வரும்போது சிக்ரியா சுவரோவியப் பெண்ணின் உருவம் ‘மயங்கி தெளிந்து’ அஜந்தாவின் கருப்பு ராஜகுமாரி வெளிப்படுகிறாள்.  குமாரசாமியின் மிஸ்டிக் இயல்பை காட்ட அவருடைய கருப்பு-வெள்ளை புகைப்படம் ஒன்று காட்டப்படுகிறது. பின் கேமரா மெதுவாக ஊர்ந்து அப்பிடத்தில் இருக்கும் ஒரு பழுப்புப்புள்ளியை ராட்சத க்ளோஸ்-அப்பில் காட்டுகிறது. இப்பள்ளி ஒரு சூட்சும வடிவமாக மாறித் திரையில் சில விநாடிகள் தங்கி மறைகிறது. குமாரசாமியின் மறைவு பற்றி சொல்லும் போது அடுத்தடுத்து ‘கரைதல்’ மூலம் சில கடலலை காட்சிகள் காட்டப்படுகின்றன. கடைசி கடலலைக் காட்சியில் காமரா மேல் நோக்கிப் போய் மேகமற்ற நீல வானத்தில் நிலைக்கிறது.

இந்தியா, இலங்கை, தூரக்கிழக்கு நாடுகளின் சிற்பக் கலையின் பொதுத்தன்மையை சினிமாமூலம் விளக்குகிறார் தாஸ் குப்தா. வங்காளப் பாலா (Pala)  சிற்பத்தையும், பல்லவர் கோவிலையும், பொலரூனருவா புடைப்புச்சிற்பத்தையும், போராபுதூரையும் ஒரே மூச்சில் கண்டு கிரகிக்க முடிகிறது. அர்த்தம் பொதிந்த காமிரா கோணம் நறுக்குத் தெறித்தாற் போன்ற எடிட்டிங், இக்கிரகிப்பை எளிதாக்குகின்றன. முகலாயச் சிற்றோவியங்கள் பெரிதாக்கப்பட்டால் (blow-up) அவை உருப்படம் (portrait) அல்லது நிலைக்காட்சி (landscape) ஆகவும், ராஜஸ்தானியச் சிற்றோவியங்கள் சுவரோவியங்களாகவும் (murals) காணப்படும் என்று அவ்விரு ஓவியங்களின் தனித்தன்மைகளை விளக்கிய குமாரசாமியின் கூற்றை சில நொடிகளில் திரைப்பட மொழியில் கூறிவிடுகிறார் தாஸ் குப்தா.


சினிமா ஓரு முழுமையான அனுபவம். ஒரு படத்தில் இசை அல்லது எடிட்டிங் மட்டுமே நன்றாக இருந்தது என்று கூறுவது பொருத்தமற்றதாகப் படுகிறது. ஆனால் அவை இச்சினிமா ஏற்படுத்தும் கருவிகள் என்பதில் சந்தேகம் இல்லை. உதாரணமாக, ராக-ராகினி சிற்றோவியங்களைக் காட்டும் காட்சி. இச்சிற்றோவியங்கள் பருவகாலங்களைப் பிரதிபலிக்கும் தன்மை உடையவை. பளிச் பளிச்சென்று தொடர்ந்து பல சிற்றோவியங்கள் காட்டப்படுகின்றன. பருவ கால வரிசையில் கடைசியாக ஒரு சிற்றோவியம் மழைகொட்டும் காட்சி. இதன் இசை (ரவிசங்கர்) இக்கால மாற்றங்களுக்கேற்ப ஒலித்து அந்த சினிமா அனுபத்தை ஆழமுள்ளதொன்றாக்குகிறது. 

ஆனந்த குமாரசாமி ஒரு விஞ்ஞானி; வேதாந்தி; கலைவரலாற்றாசிறியர். இந்தியக் கலைக்குப் புத்துயிர்ப்பூட்டியவர். இவரது வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதுடன் ஓவிய, சிற்பத்துறைக்கும், இந்தியக்கலைக்கும் அவர் ஆற்றிய பணிக்கும், அவர் நோக்கங்களுக்கும் ஒரு சீரிய அறிமுகமாக அமைகிறது இக்கவிதாஞ்சலி.

குறிப்பு:

சிவதாண்டவம்: ஓர் அஞ்சலி - தியடோர் பாஸ்கரனுடைய முதல் தமிழ் கட்டுரை. கசடதபற இதழில் மார்ச் மாதம் 1975-ஆம் ஆண்டு பிரசுரமாகியது. தேவபிச்சை என்ற பெயரில் இதை பிரசுரித்துள்ளார். மேலும் சில கட்டுரைகளையும் தியடோர் பாஸ்கரன் இதே பெயரில் பிரசுரித்துள்ளார். Theo: கடவுள்- தேவன், Doron: பரிசு- பிச்சை. தியடோர் என்ற லத்தின் சொல் தமிழில் தேவபிச்சை.

Photo courtesy: (கசடதபற) விமலாதித்த மாமல்லன்