Saturday, 5 April 2025

தொன்மங்களின் ஆற்றல் - 3: ஜோசப் கேம்ப்பெல்


பகுதி 2 - அகவயப்பயணம்

"நரகுலகின் ஆழத்திலிருந்து இரட்சிப்பின் குரல் வரும் என்பது தொன்மங்கள் வெளிப்படுத்தும் ஒரு விஷயம். இருள் மிகுந்த தருணம்தான் மாற்றத்தின் உண்மையான செய்தி வரும் தருணம். இருள் மிகுந்த தருணத்தில்தான் ஒளி தோன்றுகிறது"

மோயர்ஸ்: என்னிடம் ஒருவர் கேட்டார், "ஏன் இந்த தொன்மங்கள் உங்களை இழுத்துக்கொண்டன? ஜோசப் கேம்ப்பெல் சொல்வதில் இருந்து நீங்கள் எதை அறிந்துகொள்கிறீர்கள்?" என்று. நான் அதற்கு "எது உண்மையென்று நான் என்னுள் அறிந்திருந்தேனோ அதையே தொன்மங்கள் வெளிப்படுத்தி, அதன் மூலமாக அவை என்னுடன் உரையாடுகின்றன" என பதிலளித்தேன். தொன்மங்கள் ஏன் இவ்வாறு இருக்கின்றன? நான் உண்மையென்று என்னுள் அறிந்தவற்றையே இக்கதைகளும் சொல்வதாக ஏன் தோன்றுகிறது? எனது இருப்பின் அடிப்படையிலிருந்து அது தோன்றுகிறதா? அதாவது எனக்கு முன்பாக இங்கு தோன்றிய அனைத்திலிருந்தும் மரபார்ந்து நான் பெற்றுக்கொண்ட நனவிலியில் இருந்து அது தோன்றுகிறதா?

கேம்ப்பெல்: நீங்கள் சொல்வது சரிதான். முப்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த க்ரோ-மேக்னன் (Cro-Magnon) இனத்து மனிதனின் அதே உடலை, அதே உறுப்புகளை, அதே ஆற்றல்களைத்தான் நீங்களும் பெற்றிருக்கிறீர்கள். ஒரு மனிதவாழ்க்கையை நியுயார்க் நகரத்திலோ அல்லது குகைகளிலோ, எங்கு வாழ்ந்தாலும் வாழ்க்கையின் மாறாநிலைகளான குழந்தைப்பருவம், பாலினமுதிர்வு, சார்ந்துவாழும் குழந்தைப்பருவம், திருமணம், உடலின் செயலின்மை, படிப்படியான ஆற்றலிழப்பு, மரணம் போன்றவற்றைத்தான் நீங்கள் கடந்து செல்கிறீர்கள். ஒரே உடலையும், உடல் சார்ந்த அனுபவங்களையும் நீங்கள் பெற்றிருப்பதனால் ஒரேவகையான படிமங்களுக்குத்தான் நீங்கள் எதிர்வினையாற்றுகிறீர்கள். உதாரணமாக, கழுகிற்கும் பாம்பிற்கும் இடையே உள்ள முரண்பாட்டை கூறும் ஒரு மாறாத படிமத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பாம்பு நிலத்துடன் பிணைக்கப்பட்டது. கழுகு ஆன்மீகப்பறத்தலில் இருப்பது. இதுதானே நாம் அனைவரும் அனுபவிக்கும் முரண்பாடு? இப்போது இவையிரண்டும் ஒன்றிணையும்போது, ஒரு பிரமாதமான டிராகன், சிறகுகள் கொண்ட ஒரு பாம்பு நமக்கு கிடைக்கிறது. இவ்வகையான படிமங்களை பூமியெங்கும் மக்கள் அடையாளம் காணமுடியும். பாலிநேசியன் அல்லது ஈரோகுவிஸ் அல்லது எகிப்திய தொன்மங்கள் என நான் எதை வாசித்தாலும் அதன் படிமங்களும் ஒன்றே, அவை பேசுகின்ற சிக்கல்களும் ஒன்றே.

Totem poles in front of the house of a chief, Alert Bay, Vancouver Island, British Columbia

மோயர்ஸ்: அந்த படிமங்கள் மேலாடையை மட்டும் மாற்றிக்கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றுகின்றன.

கேம்ப்பெல்: ஆம். ஒரே நாடகம் வெவ்வேறு இடங்களில் அரங்கேறுகையில் அந்தந்த இடத்தை சேர்ந்த நடிகர்கள் அவர்களின் இடத்திற்குரிய ஆடையை அணிந்து நடிப்பது போன்றது அது.

மோயர்ஸ்: மேலும் இந்த தொன்மப்படிமங்கள் பெரும்பாலும் பிரக்ஞைபூர்வமாக இல்லாமல் தலைமுறைதோறும் கடத்தப்படுகிறது.

கேம்ப்பெல்: இதுதான் பேரார்வத்தை தூண்டுகிறது. ஏனெனில் அந்த படிமங்கள் உங்களுடன் சேர்த்து பிற அனைத்தினுடைய ஆழ்மர்மத்தையும் பேசுகின்றன. பல விஷயங்கள் குறித்த உங்களின் எல்லா உறுதியான கருத்துக்களையும் அது அடித்து நொறுக்குவதால் அது விசித்திரமான மர்மமான பயங்கரமான ஒன்றாக இருக்கிறது.  மேலும் அது உங்களுடைய சொந்தஇயல்பையும் இருப்பையும் பற்றியதால் அது முற்றிலும் வசீகரமானதாகவும் இருக்கிறது. நீங்கள் இந்த அகவய மர்மம், அகவய வாழ்க்கை, நித்தியமான வாழ்வு போன்றவற்றையெல்லாம் சிந்திக்கத்துவங்கினால் அதற்காக பயன்படுத்திக்கொள்ள உங்களுக்கு படிமங்கள் அதிகம் இல்லை. இன்னொரு சிந்தனை அமைப்பில் ஏற்கனவே இருக்கும் படிமங்களைத்தான் நீங்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கவேண்டும்.

Egyptian stele showing harpist invoking Horus

மோயர்ஸ்: ’இந்த உலகம் நமக்காக சில செய்திகளை வைத்திருக்கிறது எனக்கொண்டு இவ்வுலகத்தை நாம் வாசிக்க வேண்டும்’ என்ற பார்வை மத்திய காலகட்டத்தில் இருந்தது.

கேம்ப்பெல்: ஆம். அது உண்மைதான். தொன்மங்கள்தான் அச்செய்திகளை வாசிக்க உதவிசெய்கின்றன. 

மோயர்ஸ்: ஒரு உதாரணம் அளியுங்களேன்.

கேம்ப்பெல்: நரகுலகின் ஆழத்திலிருந்து இரட்சிப்பின் குரல் வரும் என்பது தொன்மங்கள் வெளிப்படுத்தும் ஒரு விஷயம். இருள் மிகுந்த தருணம்தான் மாற்றத்தின் உண்மையான செய்தி வரும் தருணம். இருள் மிகுந்த தருணத்தில்தான் ஒளி தோன்றுகிறது

மோயர்ஸ்: "ஒரு இருண்ட காலத்தில், விழி பார்க்கத் துவங்குகிறது" என்று ரோத்கியின் (Theodore Roethke) கவிதை சொல்வதுபோல, தொன்மங்கள் இத்தகைய தன்னுணர்வை உங்களுக்கு அளித்திருக்கின்றன என்கிறீர்களா?

கேம்ப்பெல்: நான் தொன்மங்களுடன் வாழ்பவன். அவை எனக்கு இதை எப்போதுமே சொல்கின்றன. இதை உருவகமாகவே புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவை நீங்கள் அடையாளம் காணமுடிவதுபோல. உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து மரிப்பதில்லை. உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து மரணத்தைக் கடக்கிறார், மறுபிறப்பெடுக்கிறார். வேண்டுமானால் நீங்கள் அதை சிவனுடனும் அடையாளப்படுத்திக்கொள்ளலாம். இமயத்தில் இருக்கும் யோகிகளின் மகத்தான தியானச்சொல் "சிவமே யாம்" என்பது.

மோயர்ஸ்: பெரும்பாலான மக்களின் விருப்பத்திற்குரிய இலக்கான சொர்க்கமும் நம்முள்தான் இருக்கிறது.

கேம்ப்பெல்: ஆம். சொர்க்கமும் நரகமும் நம்முள்தான் இருக்கின்றன. அனைத்து கடவுள்களும் நம்முள்தான் இருக்கின்றனர். இதுதான் பொ.மு. 9ஆம் நூற்றாண்டில் இந்திய உபநிடதங்களின் மகத்தான உணர்தல். அனைத்து கடவுள்களும், அனைத்து சொர்க்கங்களும், அனைத்து உலகங்களும் நம்முள்தான் உள்ளன. அவை உருப்பெருக்கப்பட்ட கனவுகள். கனவுகள் என்பவை ஒன்றுடனொன்று மோதிக்கொள்ளும் ஆற்றல்களின் படிமவடிவ வெளிப்பாடு. அதைத்தான் தொன்மம் என்கின்றோம். மேலும் தெளிவாக சொல்வதென்றால், தொன்மம் என்பது உடலுக்குள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் உறுப்புகளுடைய ஆற்றல்களின் உருவகப்படிமங்கள் மற்றும் குறியீட்டுப்படிமங்களின் ஒரு வெளிப்பாடு. ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொன்றை விரும்பிக் கொண்டிருக்கும். மூளையும் அவ்வுறுப்புகளில் ஒன்றுதான்.

மோயர்ஸ்: அப்படியென்றால், கனவுகாணும் போது நாம் தொன்மத்தின் மாபெரும் கடலில் வலைவீசி மீன் பிடிக்கிறோம் அல்லவா?

கேம்ப்பெல்: ஆம். அந்த கடல் கீழே கீழே என்று வெகுஆழத்திற்கு செல்லக்கூடியது. அங்கே உங்களுக்கு கிடைக்கும் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்து மிகச்சிக்கலாக இருக்கும். "திமிங்கலத்தின் மீது நின்று சிறுமீன்களுக்கு வலையெறிவது" என்று பாலினேசியன் மக்கள் சொல்வது போல. உண்மையில் நாம் ஒரு திமிங்கலத்தின் மீதுதான் நின்று கொண்டிருக்கிறோம். பேரிருத்தலுக்கான அடிப்படையே நமது இருத்தலுக்குமான அடிப்படை. நாம் வெறுமனே புறவயமாக திரும்பியிருந்தால் ஆங்காங்கே உள்ள சிறிய பிரச்சினைகளையே நாம் காண்போம். ஆனால் அகவயமாக நாம் திரும்புவோம் என்றால் அவையனைத்திற்கும் தோற்றுவாய் நாமே என்பதைக் காண்போம்.

மோயர்ஸ்: தொன்மங்கள் கனவுக்காலத்தில்தான் உள்ளன என நீங்கள் சொல்கிறீர்கள். கனவுக்காலம் என்றால் என்ன?

கேம்ப்பெல்: அது நீங்கள் உறங்கி கனவுகாணும் போது வரும் காலம். அதில்தான் உங்கள் லெளகீகவாழ்வின் தற்காலநிலையுடன் உறவு கொண்டிருக்கும் உங்கள் ஆழுள்ளத்தின் நித்யநிலை பேசப்படுகிறது.

மோயர்ஸ்: அதை விளக்குங்கள்.

கேம்ப்பெல்: உதாரணமாக, ஒரு தேர்வில் வெற்றி பெறுவது குறித்து நீங்கள் கவலையுடன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அச்சமயத்தில் உங்களுக்கு வரும் கனவு ஏதோ ஒருவகையான தோல்வியைப் பற்றியதாக இருக்கும். மேலும் கனவில் வரும் அத்தோல்வி உங்கள் வாழ்க்கையின் பிற தோல்விகளுடன் தொடர்புடையதாக இருப்பதையும் நீங்கள் காண்பீர்கள். கனவில் அவையனைத்தும் ஒன்றாக குவிக்கப்படுகிறது. பிராய்ட் கூறுகிறார், முழு விவரிப்புடன் வரும் ஒரு கனவு உண்மையில் முழுவதுமாக விவரிக்கப்பட்டதல்ல. கனவு என்பது உங்களைப் பற்றிய ஆன்மிக விவரங்களின் தீர்ந்துபோகாத மூலம்.

இப்போது ’நான் இந்த பரீட்சையில் தேர்வேனா?’ அல்லது ’நான் இந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடுமா?’ ஆகிய தளங்களில் வரும் கனவு முற்றாக தனியுலகைச் சார்ந்தது. ஆனால் அதுவே வேறொரு தளத்தில், அதுவொரு தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. ஏனெனில் அனைத்து மக்களும் இதைப்போன்ற ஏதோவொரு வாயிலில் நுழைந்து செல்கிறார்கள். அப்போது அது ஆழ்படிம விஷயமாகிறது. ஆகவே அதுவொரு தனியுலகக் கனவாக இருந்தபோதிலும் அதிலொரு அடிப்படையான தொன்மக்கரு வந்தமைகிறது.

இந்த இரண்டு நிலைகளும், அதாவது தனிமனித அம்சம் மற்றும் பொதுப்பிரச்சினை ஆகியவை அனைத்து நாகரிகங்களிலும் காணப்படுகின்றன. இன்னொரு உதாரணம் சொல்வதென்றால், மரணத்தை எதிர்கொள்வதில் அனைவருக்கும் உள்ள பிரச்சினையை சொல்லலாம். உண்மையில் அது ஒரு பொதுமர்மம்.

மோயர்ஸ்: கனவுகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

கேம்ப்பெல்: நீங்கள் உங்களைக் கற்றுக்கொள்கிறீர்கள்.

மோயர்ஸ்: எவ்வாறு நம் கனவுகளை நாம் கவனிப்பது?

கேம்ப்பெல்: நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் கனவினை நினைவில் நிறுத்துவது, பின் அதை எழுதிவைப்பது. பின்னர் கனவின் ஒரு சிறிய காட்சியை எடுத்துக்கொண்டு அதை ஏதேனும் ஒன்றிரண்டு படிமங்கள் அல்லது கருத்துக்களுடன் இணையுங்கள். பின் உங்கள் மனதில் உதிப்பதை எழுதுங்கள். மீண்டும் மீண்டும் உதிப்பதையெல்லாம் எழுதுங்கள். அப்போது அந்த கனவு உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒருவகையில் முக்கியத்துவம் உடைய உடல்சார்ந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். ஆனால் அது உங்கள் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்ததை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். உங்களுக்கு வரும் அடுத்த கனவில் உங்களுடைய விளக்கங்கள் இன்னும் முன்னேறும்.

மோயர்ஸ்: ஒருவர் என்னிடம் தான் பணிஓய்வு பெறும்வரை கனவுகண்டதாக நினைவே இல்லை என்று கூறினார். பின்னர் அவர் தன்னுடைய ஆற்றல்கள் குவிவதற்கு இடமில்லாமல் இருப்பதை உணர்ந்து, அவர் திடீரென கனவுகளாக கண்டுகுவித்தார். நமது நவீன சமூகத்தில் நாம் கனவுகாண்பதன் முக்கியத்துவத்தை மிகையாக்க முயற்சிக்கிறோம் என நீங்கள் எண்ணுகிறீர்களா?

கேம்ப்பெல்: பிராய்டின் 'கனவுகளின் விளக்கம்' நூல் வெளிவந்ததிலிருந்தே கனவுகளின் முக்கியத்துவத்திற்கு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் கனவுகளுக்கான விளக்கங்கள் அதற்கு முன்னரே இருந்தன. மக்கள் கனவுகளைப் பற்றி மூடநம்பிக்கையான கருத்துகளைக் கொண்டிருந்தனர். உதாரணமாக "ஏதோ ஒன்று நடக்கபோகிறது, ஏனெனில் நான் அவ்வாறு கனவு கண்டேன்" என்று மக்கள் பேசுவதை நீங்கள் கேட்டிருக்கலாம்.

Sigmund Freud (1856–1939)

மோயர்ஸ்: ஏன் தொன்மம் கனவிலிருந்து வேறுபடுகிறது?

கேம்ப்பெல்: கனவு என்பது நமது நனவுவாழ்க்கையை தாங்கியிருக்கும் அந்த ஆழமான இருண்டதளத்தில் இருந்து வெளிப்படும் தனிப்பட்ட அனுபவம். ஆனால் தொன்மம் என்பது சமூகத்தின் கனவு. அதாவது தொன்மம் என்பது பொதுமைகளின் கனவு, கனவென்பது தனியுலகின் தொன்மம். உங்கள் தனியுலகத் தொன்மம் அதாவது உங்கள் கனவு சமூகத்தின் கனவுடன் ஒத்துப்போகுமானால் நீங்கள் உங்கள் சமூகத்துடன் நல்ல ஒத்திசைவில் இருக்கிறீர்கள். அப்படி இல்லையென்றால், இருண்டகாட்டிற்குள் ஒரு சாகசப்பயணம் உங்களுக்காக காத்திருக்கிறது. 

மோயர்ஸ்: அப்படியென்றால், என்னுடைய தனிப்பட்ட கனவுகள் பொதுதொன்மத்துடன் ஒத்திசைவு கொண்டிருந்தால் நான் அந்த சமூகத்தில் ஆரோக்கியமாக வாழக்கூடும். ஆனால் என்னுடைய தனிப்பட்ட கனவுகள் பொதுதொன்மத்திற்கு வெளியே நிற்குமானால்…

கேம்ப்பெல்: நீங்கள் பிரச்சினையில் இருப்பீர்கள். ஒருவேளை நீங்கள் அந்த அமைப்பிலேயே வாழும்படி கட்டாயப்படுத்தப்பட்டால், நீங்கள் நரம்புச்சிக்கலுக்கு உள்ளாவீர்கள்.

“O! how I dreamt of things impossible,” William Blake (1757-1827)

மோயர்ஸ்: ஆனால் பல தீர்க்கதரிசிகள், தலைவர்கள், நாயகர்கள் கூட நரம்புச்சிக்கல் நோயின் விளிம்பில் அல்லவா இருந்திருக்கிறார்கள்?

கேம்ப்பெல்: ஆம். 

மோயர்ஸ்: அதை எவ்வாறு விளக்குவீர்கள்?

கேம்ப்பெல்: அவர்கள் தங்களை காத்துக்கொள்ளக்கூடிய சமூகத்திலிருந்து வெளியேறி,  ’உண்மையான அனுபவத்தை’ அளிக்கும் இருண்ட காட்டிற்குள், நெருப்புலகிற்குள் நுழைகிறார்கள். ’உண்மையான அனுபவம்’ உங்களுக்கு விளக்கப்படுவதில்லை, ஆகவே நீங்கள் உங்கள் வாழ்க்கையை உங்களுக்காக உருவாக்கிக்கொள்கிறீர்கள். கடினமான சூழ்நிலைகளின்போது உங்களை அறிந்துகொள்ள நீங்கள் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட பாதையிலிருந்து வெகுதூரம் விலகிச் செல்ல வேண்டியதில்லை. ஆனால் அவர்களோ சோதனைகளை மேற்கொள்ளவதற்கான துணிவையும், முழுக்கவே புதிய மனிதசாத்தியக்கூறுகளை கண்டடைவதற்கான துணிவையும் கொண்டுள்ளார்கள். புதிய சாத்தியகூறுகளை கண்டடைந்து உங்களைப்போன்ற பிற அனைவரும் அதை அனுபவிக்க ஏதுவாக ‘விளக்கப்பட்ட அனுபவதள’த்திற்கு அளிக்கிறார்கள். இதுவே அவர்களைப் போன்ற நாயகர்களின் செயல்.

மோயர்ஸ்: கனவுகள் ஆழுள்ளத்தில் இருந்து வருகின்றன என்று நீங்கள் இதற்கு முன் கூறினீர்கள்.

கேம்ப்பெல்: வேறெங்கிருந்து அவை வரக்கூடுமென எனக்குத் தெரியவில்லை. அவை கற்பனையிலிருந்து தோன்றுகின்றன, இல்லையா? கற்பனை உடலுறுப்புகளின் ஆற்றல்களில் அடங்கியுள்ளது, மேலும் இவை அனைத்து மனிதர்களிலும் ஒரே மாதிரியாக உள்ளது. கற்பனைகள் ஒரே உயிரியல் தளத்திலிருந்து வருவதால், அவை குறிப்பிட்ட கருக்களையே உற்பத்தி செய்யுமாறு எல்லைக்குட்பட்டு உள்ளன. கனவுகளின் சில பொது பண்புகளை நாம் குறிப்பிடமுடியும், அவை எவருடைய கனவாக இருந்தாலும். 

மோயர்ஸ்: ஒரு தொன்மம் மிகப்பொதுவானதாக இருக்கும் அதே சமயத்தில் ஒரு கனவு மிகத்தனிப்பட்டது என நான் நினைக்கிறேன்.

கேம்ப்பெல்: ஒரு தனிப்பட்ட கனவு சில குறிப்பிட்ட தளங்களில் தொன்மக்கருவிற்குள் ஊடுருவுகிறது, அதை ஒரு தொன்மத்துடன் ஒப்பிடாமல் விளக்க இயலாது. சி.ஜி. யுங் (C G Jung) கனவின் இரண்டு ஒழுங்குகளைப் பற்றி பேசுகிறார். ஒன்று தனிப்பட்ட கனவு, இன்னொன்று ஆழ்படிமக் கனவு அல்லது தொன்மத்தின் பரிமாணத்திலான கனவு. நீங்கள் ஒரு தனிப்பட்ட கனவை சில இணைவுகளின் மூலமாக அதாவது அது உங்கள் சொந்தவாழ்க்கையைப் பற்றி என்ன சொல்கிறது எனக்கருதுவதன் மூலமாகவோ அல்லது உங்கள் தனிப்பட்ட பிரச்சினையுடன் தொடர்புபடுத்துவதன் மூலமாகவோ விளங்கிக்கொள்ளலாம். ஆனால் ஒரு கனவு தூய தொன்மமாக அடிக்கடி வருகையில், அது ஒரு தொன்மக்கருவை ஏந்தியிருக்கிறது அல்லது அது நம்முள்ளிருக்கும் கிறிஸ்துவிடமிருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

C.G. Jung (1875–1961)

மோயர்ஸ்: ’நமக்குள்ளிருக்கும் ஆழ்படிம மனிதனிலிருந்து வந்த ஆழ்படிம தன்னுணர்வு நாம்’ என சொல்லலாமா?

கேம்ப்பெல்: மிகச்சரி. கனவுக்காலத்திற்கு இன்னொரு ஆழமான அர்த்தம் என்னவென்றால் அது காலமின்மையின் காலம் அல்லது இருத்தலின் ஒரு முடிவிலா நிலை என்பது. இந்தோனேஷியாவின் ஒரு முக்கியமான தொன்மம் இந்த தொன்மம்சார்-யுகத்தையும் அது துண்டிக்கப்பட்டதையும் பற்றி பேசுகிறது. அதன்படி தொடக்ககாலத்து மூதாதையர்கள் பாலினங்களாக வேறுபட்டிருக்கவில்லை. அங்கே பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. பின்னர் அங்கு மாபெரும் நடன  கொண்டாட்டம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. அந்த நடனத்தின்போது அதில் பங்குகொண்டவர்களில் ஒருவர் கால்களால் மிதித்துக் கொல்லப்பட்டு, துண்டுதுண்டுகளாக கிழிக்கப்படுகிறார், அந்த துண்டுகள் மண்ணில் புதைக்கப்படுகின்றன. கொலை நிகழ்ந்த அத்தருணத்தில் மனிதர்கள் பாலினங்களாக பிளவுபட்டனர். இறப்பு பிறப்பாலும், பிறப்பு இறப்பாலும் சமன் செய்யப்படுகிறது. மண்ணில் புதைக்கப்பட்ட உடல்பாகங்களில் இருந்து உணவுத்தாவரங்கள் வளர்கின்றன. வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்வதற்கு இருத்தல், இறத்தல், பிறத்தல் மற்றும் பிற உயிரினங்களை கொன்றுபுசித்தல் ஆகிய செயல்பாடுகளை உடைய காலகட்டம் வந்துவிட்டது. தொடக்கத்தின் காலமில்லா காலமானது சமூக கூட்டுக்குற்றமான கொலையினால் அல்லது தியாகத்தினால் முடிவிற்கு வந்தது. 

இந்த தொன்மத்திலிருக்கும் ஒரு முக்கியமான சிக்கல் என்னவென்றால், பிற உயிர்களைக் கொன்றும் புசித்தும் வாழக்கூடிய இந்த வாழ்க்கையின் குரூரமான நிபந்தனைகளுக்கு மனதை சமாதானப்படுத்துவதுதான். இதற்காக நீங்கள் காய்கறிகளை மட்டுமே உட்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள், ஏனெனில் அவையும் உயிருள்ளவையே. ஆகவே வாழ்க்கையின் சாரம் என்பது அது தன்னையே உணவாக்கிகொள்வதுதான்.

வாழ்க்கை உயிர்களின் மீதுதான் வாழ்கிறது. மனித மனதையும் உணர்வுகளையும் அந்த அடிப்படை உண்மைக்கு ஏற்புடையதாக்குவது சில குரூரச்சடங்குகளுடைய செயல்பாடுகளில் ஒன்றாகும். அதில்தான் நாம் அனைவரும் உழன்றுகொண்டிருக்கும் இந்த நிலையற்ற உலகம் எழக்காரணமாயிருந்த அந்த தொடக்ககாலக் கொலையை பிரதியெடுக்கும் செய்கைகள் அடங்கியுள்ளன. 

’வாழ்வின்-உண்மை’களுக்கு மனதை சமாதானப்படுத்துவதுதான் அனைத்து படைப்புக்கதைகளிலும் உள்ள அடிப்படையான விஷயம். அந்தவகையில் அக்கதைகள் ஒன்றையொன்று வெகுவாக ஒத்திருக்கின்றன.

மோயர்ஸ்: உதாரணத்திற்கு, ஆதியாகமத்தில் (Genesis) இருக்கும் படைப்புக்கதை எவ்விதம் பிறகதைகளை ஒத்திருக்கிறது?

கேம்ப்பெல்: ஆதியாகமத்தை நீங்கள் வாசியுங்கள், பிறநாகரிகங்களின் படைப்புக்கதைகளை நான் வாசிக்கிறேன். நாம் பார்ப்போம்.

மோயர்ஸ்: ஆதியாகமம் 1: “ஆதியில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தார். அப்போது பூமி வடிவமற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் பரப்பின் மீது இருள் பரவியிருந்தது".

கேம்ப்பெல்: அரிசோனாவின் பைமா இந்தியர்களின் (Pima Indians) 'வையகத்தின் பாடல்' (The Song of the World) எனும் தொன்மக்கதையிலிருந்து: “ஆதியில் இருள் மட்டுமே எங்கும் நிறைந்திருந்தது - இருளும் நீரும் மட்டும். பின் அவ்விருள் ஒன்றிணைந்து நிலமெங்கும் அடர்ந்தது, திரளாக இணைந்து பின் பிரிந்தது, திரண்டு பின் பிரிந்தது…

Garden of Earthly Delights, Hieronymus Bosch (ca. 1450-1516)

மோயர்ஸ்: ஆதியாகமம் 1: ”நீர்த்திவலைகளின் மீது கடவுளின் ஆவி அசைந்து கொண்டிருந்தது. அப்போது கடவுள் ’ஒளி தோன்றட்டும்’ என்றார். ஒளி தோன்றியது.”

கேம்ப்பெல்: தோராயமாக பொ.மு. 8ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்து உபநிடதங்களிலிருந்து: “ஆதியில் அங்கே மனிதவடிவின் மாபெரும் தன்னிலை-பிரதிபலிப்பு (self-reflected) மட்டுமே இருந்தது. பிரதிபலிக்கையில் அது தன்னையன்றி பிற எதையும் காணவில்லை. 'இது நான்' என்பது அதன் முதல் சொல்லாக இருந்தது" 

மோயர்ஸ்: ஆதியாகமம் 1: "கடவுள் மனிதனை தன்னுருவில் படைத்தார். கடவுளின் தன்னுருவிலேயே அவர் மனிதனைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர் அவர்களை படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, ‘செழிப்புடனிருங்கள், பல்கிப் பெருகுங்கள்’ என்றார்"

கேம்ப்பெல்: மேற்கு ஆப்பிரிக்காவின் பசாரி (Bassari) இனத்து மக்களின் ஒரு தொன்மக்கதையிலிருந்து: “உனும்போட்டே (Unumbotte) ஒரு மனிதனைப் படைத்தார். ஆண் எனப் பெயரிட்டார். அடுத்து, உனும்போட்டே மானைப் படைத்து அதற்கு ஆன்டிலோப் (Antelope) எனப் பெயரிட்டார். பின் அவர் ஒரு பாம்பைப் படைத்து பாம்பெனப் பெயரிட்டார்…. பின் உனும்போட்டே அவைகளை நோக்கி, ’இப்புவி இன்னமும் வெல்லப்படவில்லை. நீங்கள் எங்கிருக்கிருக்கிறீர்களோ அங்கிருந்தபடியே இப்புவியை மென்மையாக வெல்லவேண்டும்’ என்று கூறினார். உனும்போட்டே அவர்களுக்கு அனைத்து வகையான விதைகளையும் அளித்து ’இவைகளை நட்டு வளருங்கள்’ என்றார்.”

மோயர்ஸ்: ஆதியாகமம் 2: “அவ்வாறாக விண்ணுலகமும் மண்ணுலகமும் அவற்றின் அனைத்து அமைப்பும் நிறைவு செய்யப்பட்டன. மேலும் ஏழாம் நாளில் கடவுள் தான் செய்திருந்த பணியை முழுமை செய்தார்…”

கேம்ப்பெல்: இப்போது மீண்டும் பைமா இந்தியர்களிடமிருந்து: “நான் உலகத்தை உருவாக்கினேன், இந்த உலகம் நிறைவுற்றது. இவ்வாறாக நான் இந்த உலகத்தை உருவாக்கினேன்! இவ்வுலகம் நிறைவுற்றது.”

மோயர்ஸ்: ஆதியாகமம் 1: "கடவுள் தான் உருவாக்கிய அனைத்தையும் கண்டு கவனித்தார். அவை மிக நன்றாக இருந்தது"

கேம்ப்பெல்: உபநிடதங்களில் இருந்து: "பின் அது உணர்ந்தது, உண்மையில் நானே இப்படைப்பு, ஏனெனில் நான் என்னில் இருந்து இதை ஊற்றியிருக்கிறேன். இவ்வாறாக அது இந்த படைப்பாக ஆனது. இதை அறிந்த அது நிச்சயமாக இப்படைப்பில் ஒரு படைப்பாளியாகிறது" 

அதுதான் அங்கே அறுதி உண்மை. நீங்கள் அதை அறிகையில், நீங்கள் படைப்புக்கோட்பாட்டினை உங்களிடத்தில் அடையாளம் கண்டுகொள்கிறீர்கள். அதாவது இவ்வுலகத்திலிருக்கும் இறை சக்தி எது என்பதையும், அது உங்களில் இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்கிறீர்கள். அது அழகானது அல்லவா.

மோயர்ஸ்: ஆனால் ஆதியாகமம் இவ்வாறு தொடர்கிறது: “கடவுள் ’உண்ணக்கூடாது என்று நான் உனக்கு ஆணையிட்டிருந்த அம்மரத்தின் கனியை நீ உண்டாயா?’ என்றார். அதற்கு அம்மனிதன் ’என்னுடன் இருக்கும்படி எனக்களிக்கப்பட்ட அப்பெண் அம்மரத்தின் கனியை எனக்குத் தந்தாள், நான் உண்டேன்’ என்று கூறினான். பின் கடவுள் அப்பெண்னிடம், ’நீ என்ன செய்திருக்கிறாய் என்பதை நீ அறிவாயா?’ என்றார். அப்பெண், ’பாம்பு என்னை வஞ்சித்துவிட்டது, நான் உண்டுவிட்டேன்’ என்றாள்.

நீங்கள் பழியை கடத்துவது பற்றி பேசுகிறீர்கள், அது மிக முன்பே தொடங்கிவிட்டது.

கேம்ப்பெல்: ஆம். அது பாம்பின் மீது ஏற்றப்பட்டது. பசாரி மக்களின் நூலும் இதே வழியில்தான் செல்கிறது. “ஒரு நாள் பாம்பு கூறியது ’நாமும் இக்கனிகளை உண்ண வேண்டும். நாம் ஏன் பசியுடன் இருக்க வேண்டும்?’ என்று. அதற்கு மான் சொன்னது, ’ஆனால் நமக்கு இக்கனியைப் பற்றி ஒன்றும் தெரியாது’ என்று. பின்னர் அம்மனிதனும் அவன் மனைவியும் சில பழங்களைப் பறித்து உண்டார்கள். உனும்போட்டே விண்ணிலிருந்து கீழிறங்கி வந்து கேட்டார், அக்கனியை உண்டது யார்? என்று. அவர்கள் ‘நாங்கள்தான்’ என்றார்கள். உனும்போட்டே ’அக்கனியை நீங்கள் உண்ணலாம் என்று உங்களுக்கு யார் சொன்னது?’ என்றார். அவர்கள் ’பாம்பு சொன்னது’ என்று பதிலளித்தார்கள்." இது முற்றிலும் அதே கதைதான்.

மோயர்ஸ்: இதிலிருந்து நீங்கள் எதை அறிகிறீர்கள்? அதாவது, இந்த இரண்டு கதைகளிலும் முக்கிய பாத்திரங்கள் வீழ்ச்சியின் துவக்கமென வேறொருவரை குறிப்பதைப் பற்றி?

கேம்ப்பெல்: ஆமாம். இது பாம்பினுடையதாக மாறியிருக்கிறது. இந்த இரண்டு கதைகளிலும் கடந்தகாலத்தை அகற்றிவிட்டு வாழ்க்கையைத் தொடர்வதற்கான குறியீடாக பாம்பு இருக்கின்றது.

மோயர்ஸ்: ஏன்?

கேம்ப்பெல்: வாழ்க்கையின் ஆற்றலால்தான் பாம்பு தனது சட்டையை உரித்துக்கொள்கிறது. பாம்பு தனது சட்டையை உரிப்பது புதிய பிறப்பிற்காக, நிலவு தன்னை தேய்த்துக்கொண்டாலும் மீண்டும் பிறக்கிறதே அதுபோல. அவையிரண்டும் சமமான குறியீடுகள். சில இடங்களில் பாம்பு தன் வாலைத் தானே விழுங்கி ஒரு வட்டமாக குறிக்கப்பட்டிருக்கும். வாழ்க்கையின் ஒரு படிமம் அது. வாழ்க்கை தன்னையே உணவாக்கிக்கொண்டு வளர்ந்து செல்வது. வாழ்க்கை மீண்டும் மீண்டும் துளிர்ப்பதற்கு தலைமுறைகளை கடந்து சென்றுகொண்டே இருக்கிறது. பாம்பு காலவெளியில் பிணைந்திருக்கும் அழிவற்ற ஆற்றலையும் தன்னுணர்வையும் குறிக்கிறது. அவை நிலையாக மரணத்தை வென்று மீண்டும் பிறக்கிறது. இவ்வாறு நீங்கள் பார்க்கும்போது வாழ்க்கையைப் பற்றி மிகத்திகிலூட்டும் ஏதோவொன்று இருப்பது உங்களுக்கு புரியும். ஆகவே பாம்பு குறியீடாக வாழ்க்கையின் வசீகரத்தையும் கோரத்தையும் ஒருசேர தன்னுள் கொண்டுள்ளது.

மேலதிகமாக, பாம்பு வாழ்க்கையின் முதன்மையான செயல்பாடுகளைக் குறிக்கிறது, முக்கியமாக உண்பதை. வாழ்க்கை பிற உயிர்களை புசிப்பதை உள்ளடக்கியது. நீங்கள் உண்ணும் உணவு பார்வைக்கு அழகாக இருக்கையில் நீங்கள் அதைப்பற்றி பெரிதாக எதுவும் சிந்திக்கமாட்டீர்கள். ஆனால் நீங்கள் எதை உண்கிறீர்களோ அது சமீபகாலம் வரை உயிரோடிருந்தது. இயற்கையின் அழகை நீங்கள் தரிசிக்கையில், பறவைகள் எதையோ கொத்திக்கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள், உண்மையில் அவை உயிர்களை உண்டுகொண்டிருக்கின்றன. அதேபோல பசுக்கள் மேய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், உண்மையில் அவையும் உயிர்களை உண்டுகொண்டிருக்கின்றன. பாம்பு என்பது உணவு பயணிக்கும் ஒரு கால்வாய். நிஜமாகவே இதைத்தான் பாம்பு சுட்டுகிறது, இது மட்டும்தான் பாம்பு. இது வாழ்க்கையை பற்றிய ஒரு நிஜமான அதிர்ச்சியை அளிக்கிறது, இதன் வழியாக வாழ்க்கையின் ஆதிஇயல்பை காட்டுகிறது. கொல்லப்படும் விலங்குடன் எந்த விவாதமும் இங்கு கிடையாது. வாழ்க்கை தன்னாலேயே கொன்றுண்ணப்பட்டு ஜீவிக்கிறது, மரணித்து பின் அதிலிருந்து வெளியேறி மீண்டும் ஜனிக்கிறது, அந்த சந்திரனைப் போல. இத்தகைய குறியீடுகள் சித்தரிக்க முயலும் மர்மங்களில் ஒன்று இது.

Eve Tempted by the Serpent, Lucas Cranach, ca. 1530

இன்று பெரும்பாலான நாகரிகங்களில் பாம்பிற்கு நேர்மறையான விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்தியாவில் கடும் நஞ்சுடைய அரசநாகம்கூட ஒரு புனிதமான விலங்கு, தொன்மக்கதையில் வரும் நாகராஜன் புத்தருக்கு அடுத்தபடியான இடத்தில் இருப்பவன். காலம் மற்றும் மரணத்தின் களத்தில் திகழும் வாழ்க்கையின் சக்தியை குறிக்கிறது பாம்பு. அதேசமயம் அது நித்தியமாக உயிர்ப்புடனும் இருக்கிறது. இவ்வுலகவாழ்வு அதன் நிழல் - கழன்றுவிழும் அதன் சட்டை.

அமெரிக்கப் பூர்வகுடி மரபுகளில் கூட பாம்பு பெருமதிப்பிற்குரியதாக இருந்தது. அரவுகள் நட்பு கொள்ளப்பட வேண்டிய அதிமுக்கியமான சக்தி பெற்ற ஒன்று என கருதப்பட்டது. உதாரணத்திற்கு வடஅமெரிக்க பூர்வகுடிகளான பியுப்லோ (Pueblo) மக்களின் பூசகர்களின் பாம்பு நடனத்தில் அவர்கள் பாம்புகளை தங்கள் வாயினால் அள்ளி நட்புபாராட்டி அவைகளை மலைப்பகுதிகளுக்கு அனுப்புகிறார்கள். மனிதர்களுடைய செய்திகளை மலைகளுக்கு கொண்டு சேர்ப்பதற்காக அப்பாம்புகள் அவ்வாறு அனுப்பப்படுகின்றன. அதேபோல் அவை மலைகளின் செய்திகளையும் மனிதர்களுக்கு கொண்டுவருகின்றன. மனிதனுக்கும் இயற்கைக்கும் ஆன கூடல், பாம்புகளுடன் கொள்ளும் இந்த உறவின் வழியாக தீட்டப்படுகிறது. ஒரு பாம்பு நீரைப்போல் வழிந்துசெல்வது, ஆகவே நீர்மமாக உள்ளது, ஆனால் அதன் நாவு தொடர்ந்து நெருப்பைத் தீற்றுகிறது. ஆகவே பாம்பில் நீங்கள் முரண்களின் இணையை ஒன்றாகப் பெற்றிருக்கிறீர்கள்.

Salome, Gustav Klimt (1862-1918)

மோயர்ஸ்: கிறித்துவக் கதைகளில் பாம்பு ஆசையை தூண்டுவது.

கேம்ப்பெல்: இது வாழ்க்கையின் உறுதிப்பாட்டின் மீதான நிராகரிப்பை குறிப்பது. விவிலிய மரபின்படி வாழ்க்கை கறைபடிந்தது என்றும், தோல்நீக்கமோ ஞானஸ்தானமோ செய்யப்படாத ஒருவரின் ஒவ்வொரு இயற்கைத்துடிப்பும் பாவகரமானது என்பதையும் நாம் மரபுரீதியாக பெற்றிருக்கிறோம். பாம்பு இவ்வுலகிற்குள் பாவத்தை அழைத்துவந்தது. மேலும் பெண்தான் அந்த ஆப்பிள் கனியை ஆணுக்கு அளித்தவள். இவ்விதம் பெண்ணையும் பாம்பையும் பாவத்துடன் அடையாளப்படுத்திக்கொண்டு அதன் மூலம் வாழ்க்கையை பாவத்துடன் இணைப்பதுதான் விவிலியத் தொன்மக்கதையின் திருப்பம். அதுதான் வீழ்ச்சியின் கோட்பாடாகவும் அமைந்தது.

மோயர்ஸ்: பெண் பாவகரமானவள் என்ற கருதுகோள் பிற தொன்மங்களில் உள்ளதா?

கேம்ப்பெல்: இல்லை. அது வேறெங்கும் இருப்பதாக நான் அறியவில்லை. ஒருவேளை இதற்கு நெருக்கமாக ’பேண்டோராவும் பேண்டோரா பெட்டியும்’ இருக்கலாம். ஆனால் அங்கும் அது பாவம் இல்லை. வெறும் தொல்லை மட்டுமே. விவிலிய மரபில் இருக்கும் வீழ்ச்சி என்ற கருதுகோள் ’இயற்கை கறைபடிந்தது, காமம் தன்னளவிலேயே களங்கமானது, காமத்தின் வடிவமாக இருக்கும் பெண் சீரழிவை ஏற்படுத்துபவள்’ என்கிறது.

ஏன் நன்மை தீமை பற்றிய அறிவு ஆதாம் ஏவாளிற்கு மறுக்கப்பட்டது? அந்த அறிவில்லையெனில், நாம் அனைவரும் வாழ்க்கையில் எவ்வித பங்களிப்புமில்லாமல் சிறுபிள்ளைகளாக ஏதேன் தோட்டத்திலேயே இருந்திருப்போம். பெண் இவ்வுலகிற்குள் உயிரோட்டத்தை கொண்டுவருகிறாள். ஏவாள் இந்த உலகவாழ்வின் அன்னை. முன்னதாக உங்களுக்கு ஒரு கனவுக்கால சொர்க்கம் ஏதேனின் தோட்டத்தில் இருந்தது. அங்கே காலமில்லை, பிறப்பில்லை, இறப்பில்லை, வாழ்வுமில்லை. இறந்து மறுபிறப்பெடுத்த பாம்பு தன் சட்டையை உரித்துக்கொண்டும், வாழ்வை புதுப்பித்துகொண்டும் ஏதேன் தோட்டத்தின் தலைமைமரத்தின் கடவுளானது, அங்கு காலமும் நித்தியமும் ஒன்றாக வருபவை. உண்மையில் பாம்புதான் ஏதேன் தோட்டத்தின் முதன்மையான கடவுள். இனிய மாலைப்பொழுதுகளில் அங்கு நடைபயிற்சிக்கு வரும் யஹோவா வெறும் ஒரு வருகையாளர் மட்டுமே. அந்த தோட்டம் பாம்பின் இடம். இது ஒரு மிக மிகப் பழைய கதை. பொ.மு 3500-ன் ஆரம்ப காலத்தைச் சேர்ந்த சுமேரியன் முத்திரைகளில் பாம்பும், மரமும், அன்னைத்தெய்வமும், அந்த அன்னைத்தெய்வம் அங்கு வருகை புரியும் ஒரு ஆணிற்கு வாழ்க்கையின் கனியை அளிப்பதும் காட்டப்பட்டிருக்கின்றது. அன்னைத்தெய்வத்தின் அந்த பழைய தொன்மம் அங்கேதான் இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு நான் ஒரு அற்புதமான விஷயத்தை திரைப்படம் ஒன்றில் கண்டேன். அப்படத்தில் பாம்பு வேடம் பூண்ட ஒரு பர்மிய பெண்பூசகர் தன் மக்களுக்கு மழை வேண்டி ஒரு மலைப்பாதையில் ஏறி ஒரு அரசநாகத்தை குகையிலிருந்து வரவழைத்து அதன் முகத்தில் மூன்று முறை முத்தமிடுகிறாள். அங்கே அந்த அரசநாகம் வாழ்வளிக்கும், மழை பொழியச்செய்யும், ஒரு தெய்வீக நேர்மறை உருவமாக இருந்தது, தீயசக்தியாக அல்ல.

மோயர்ஸ்: இந்த சித்திரத்திற்கும் ஆதியாகமத்தில் இருக்கும் பாம்பின் சித்திரத்திற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?

கேம்ப்பெல்: இதற்கு ஹீப்ரூக்கள் கேனான் (Canaan) பிரதேசத்திற்குள் நுழைந்து அங்கிருந்த மக்களை அடிபணிய செய்ததன் அடிப்படையில் வரலாற்று விளக்கம் ஒன்று உண்டு. கேனான் மக்களின் முதன்மை இறையுரு என்பது பெண்தெய்வம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாம்பு. இது அவர்களுக்கு வாழ்க்கை-மர்மத்தின் குறியீடு. இதை ஆண் தெய்வத்தை சார்ந்திருக்கும் இனக்குழு நிராகரித்தது. இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஏதேன் தோட்டக்கதையில் மறைமுகமாக வரும் அன்னைத்தெய்வத்திற்கு  வரலாற்றுரீதியாகவே ஒரு நிராகரிப்பு உள்ளது.

மோயர்ஸ்: ஏவாளை வீழ்ச்சிக்கு பொறுப்பாக்கியதில் பெண்ணினத்திற்கே ஒரு மாபெரும் தீங்கை இக்கதை இழைத்துவிட்டதாகத் தோன்றுகிறது. பெண்கள் ஏன் இந்த வீழ்ச்சிக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்?

கேம்ப்பெல்: ஏனென்றால் அவர்கள் வாழ்வை முன்னிறுத்துகிறார்கள். பெண்ணின் துணையில்லாமல் ஆண் வாழ்க்கைக்குள் நுழைவதில்லை. ஆகவே பெண்தான் முரண்களின்-இணைகளும் துன்பங்களும் உள்ள இவ்வுலகத்திற்கு நம்மை அழைத்து வருபவளாக இருக்கிறாள். 

மோயர்ஸ்: முரண்களின்-இணை பற்றி ஆதாம் ஏவாளின் தொன்மம் நமக்கு சொல்ல முயல்வது என்ன? அந்த தொன்மத்தின் பொருள் என்ன ?

கேம்ப்பெல்: அனைத்தும் பாவத்துடன் தொடங்கியது என்பதுதான். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், சொர்க்கத்தின் தோட்டம் எனும் தொன்ம-கனவுக்காலத்தில் இருந்து வெளியேறுவது எனலாம். அங்கே காலமில்லை. ஆணும் பெண்ணும் இரு வேறானவர்கள் என்ற அறிதலும் இல்லை. அவர்களிருவரும் வெறும் உயிர்கள் மட்டுமே. நடைமுறையில் கடவுளும் மனிதனும் அங்கு ஒன்றே. இனிய மாலைப்பொழுதில் கடவுள் அவர்களின் தோட்டத்திற்கு வந்து செல்கிறார். பின் அவர்கள் முரண்களின்-இணை பற்றிய அறிவான அந்த ஆப்பிள் கனியை உண்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் தாங்கள் இருவேறானாவர்கள் என்பதை கண்டுகொண்டு நாணத்துடன் தங்களின் நிர்வாணத்தை மறைத்துக் கொள்கிறார்கள். கவனியுங்கள், அவர்கள் இதுவரை தங்களை எதிரெதிரானவர்கள் என எண்ணியிருக்கவில்லை. இப்போது அந்நிலை வந்துவிட்டது. ஆண்-பெண் என்ற முதல் எதிரெதிர் நிலை. கடவுள்-மனிதன் எனும் இரண்டாவது எதிரெதிர் நிலை. நன்மை-தீமை எனும் மூன்றாவது எதிரெதிர் நிலை. முதல் எதிர்நிலை பாலியல் சார்ந்தது. இரண்டாவது எதிர்நிலை கடவுளுக்கும் மனிதஉயிர்களுக்கும் இடையே வந்தது. மூன்றாவது எதிரெதிர் நிலை நன்மை தீமை என்ற கருத்தாக இவ்வுலகிற்குள் வருகிறது. ஆகவே ஆதாமும் ஏவாளும் காலமற்ற ஒருமைநிலையின் தோட்டத்திலிருந்து தங்களைத் தாங்களே வெளியேற்றிக்கொண்டார்கள். இருமையை அடையாளம் கண்டதால் இது நிகழ்ந்தது என நீங்கள் சொல்லலாம். ஆகவே உலக வாழ்க்கைக்குள் நுழைய நீங்கள் முரண்களின்-இணையை புரிந்துகொள்ள வேண்டும்.

அன்னைத் தெய்வத்தை ஒரு முக்கோணமாக உருவகிக்கும் படிமம் இந்துமதத்தில் உண்டு. அம்முக்கோணத்தின் மையப்புள்ளியாக காலத்திற்குள் நுழையும் பரம்-பொருளின் ஆற்றல் இருக்கும். பிறகு இந்த முக்கோணத்தில் இருந்து இணை முக்கோணங்கள் அனைத்து திசைகளிலும் தோன்றும். ஒன்றிலிருந்து இரண்டு வருகிறது. காலச்சூழலுக்குள் இருக்கும் இவையனைத்தும் முரண்களின்-இணைகள். ஆகவே இதுதான் தன்னுணர்வு மாற்றம் என்பது. அதாவது ஒருமையின் தன்னுணர்விலிருந்து இருமைக்குள் பங்குகொள்ளும் தன்னுணர்வாக மாறுவது. பிறகு நீங்கள் காலச்சூழலுக்குள் வருகிறீர்கள்.

மோயர்ஸ்: நம் அழிவிற்கு வித்திட்ட இந்த ஏதேன் தோட்டத்து நிகழ்விற்கு முன்பு அங்கு வாழ்க்கை ஒருமையுடன் இருந்தது என்று இக்கதை நமக்கு சொல்ல முயல்கிறதா?

கேம்ப்பெல்: வாழ்வின் ஒருமை என்பது தன்னுணர்வின் தளங்களைப் பற்றியது. நடந்த எந்த நிகழ்வுடனும் அதற்கு தொடர்பில்லை. அதுவொரு தன்னுணர்வு-தளம், அதில் நீங்கள் முரண்களின்-இணையை கடந்துசெல்லும் ஒன்றுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.

மோயர்ஸ்: அந்த ஒன்று எது?

கேம்ப்பெல்: பெயரில்லாதது. பெயரிடமுடியாதது. அனைத்து பெயர்களையும் கடந்தது. 

மோயர்ஸ்: இறை?

கேம்ப்பெல்: "இறை" என்பது நம்மொழியில் இருக்கும் ஒரு தெளிவற்ற சொல். ஏனெனில், அறிந்த ஒன்றை சுட்டுவதற்காக அச்சொல் உள்ளதென தோன்றுகிறது. ஆனால் பரம் என்பது அறியஇயலாதது, அறியப்படாதது. இறை என பெயரிடப்பட்ட அனைத்தையும் கடந்ததுதான் இறை. இறை நாமரூபத்திற்கு அப்பாற்பட்டது. மாஸ்டர் ஈக்கார்ட் (Meister Eckhart) என்பவர், உயர்வான உச்சபட்ச விடுபடல் என்பது இறைக்காக இறையை விடுவதும், இறை என்ற கருத்தை அனைத்து கருத்துக்களையும் கடக்கும் ஆழ்நிலையின் அனுபவத்திற்காக விடுவதும்தான் என்று கூறுகிறார். 

வாழ்வின் மர்மம் மனிதர்கள் கொண்டிருக்கும் அனைத்து கருத்துக்களுக்கும் அப்பாற்பட்டது. நாம் அறிந்த அனைத்தும் இருப்பு-இன்மை, ஒன்று-பல, உண்மை-பொய் என்ற கருத்துசொற்களுக்குள் அடங்கிவிடுவது. நாம் எப்போதுமே முரண்களாகவே சிந்திக்கின்றோம். ஆனால் கடவுள், அந்த மேலானவர் முரண்-இணையை (முரணியக்கத்தை) கடந்தவர்.

மோயர்ஸ்: ஏன் நாம் முரண்களின் வடிவில் சிந்திக்கின்றோம்?

கேம்ப்பெல்: ஏனெனில் வேறுவகையாக சிந்திக்க நம்மால் இயலாது.

மோயர்ஸ்: அது நமது காலகட்டத்தின் உண்மையான இயல்பு.

கேம்ப்பெல்: அது நமது உண்மை அனுபவத்தின் இயல்பு.

மோயர்ஸ்: ஆண்-பெண், வாழ்வு-மரணம், நன்மை-தீமை….

கேம்ப்பெல்: ….நான்-நீங்கள், அது-இது, உண்மை -பொய் என ஒவ்வொன்றும் தனக்குரிய எதிரான ஒன்றை பெற்றிருக்கிறது. ஆனால் இந்த இருமைக்கு பின்னால் ஒரு ஒருமை உண்டு, அதன்மீதுதான் இந்த நிழல்விளையாட்டு நிகழ்கிறது என தொன்மம் சொல்கிறது. "காலம் உருவாக்கியவைகளின் மீது நித்யம் அன்புடன் இருக்கிறது (Eternity is in love with the productions of time)" என்று கவிஞர் பிளேக் (Blake) கூறுகிறார்.

மோயர்ஸ்: "காலம் உருவாக்கியவைகளின் மீது நித்யம் அன்புடன் இருக்கிறது" என்பதன் பொருள் என்ன?

கேம்ப்பெல்: நிலையற்ற இவ்வாழ்க்கையின் தோற்றுவாய் நித்யமானது. நித்யம் தன்னை இவ்வுலகிற்குள் ஊற்றிக்கொள்கிறது. இதுதான் நம்மிடம் இருக்கும் பல தெய்வங்களை பற்றிய அடிப்படையான தொன்மக்கருத்து. எனக்குள் உறைந்திருக்கும் இறையை ’உடனுறைபவன்’ என இந்தியாவில் குறிப்பிடுவர். அந்த தெய்வீகத்துடன் நம்மை இணைத்துக்கொள்ள, நாம் நம்முள் இருக்கும் நித்யத்தன்மையை அந்த தெய்வீகத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது நித்யம் அனைத்து வகையான சிந்தனைகளையும் தாண்டி நிற்கிறது. கிழக்கத்திய மகத்தான மதங்கள் அனைத்திலும் இது ஒரு முக்கிய அம்சம். நாம் கடவுளைப் பற்றி சிந்திக்க விரும்புகிறோம். கடவுள் என்பது ஒரு எண்ணம். கடவுள் என்பது ஒரு பெயர். கடவுள் என்பது ஒரு கருத்து. ஆனால் அது குறிப்பது அனைத்து சிந்தனைகளையும் கடந்த ஏதோ ஒன்றை. இருப்பின் அறுதியாக மர்மமானது அனைத்து சிந்தனைகளுக்கும் அப்பாற்பட்டது. கான்ட் (Immanuel Kant) சொல்வதைப்போல, காலவெளி கடந்ததை காலவெளிக்குள் இருந்து அறிய முடியாது. அது பொருட்தன்மையை கடந்தது. சிந்திக்கக்கூடிய அனைத்தையும் கடந்தது.

Immanuel Kant (1724-1804)

முதல்நிலை விஷயங்கள் சொல்லப்பட முடியாதவை, ஏனெனில் அவை சிந்தனையை கடந்தது. இரண்டாம்நிலை விஷயங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுபவை, ஏனெனில் அவ்வகையான சிந்தனைகள் குறிப்பிட முற்படுவது சிந்திக்க முடியாதவைகளைப் பற்றி. மூன்றாவதுநிலைதான் நாம் பேசுவது, முழுமையாக கடந்தநிலையை குறிப்பிடும் தளம், அந்த தளமே தொன்மம்.

மோயர்ஸ்: மொழியினால் அதற்கு உருவம் கொடுக்க முயலும் நமது பலவீனமாக முயற்சியை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அறிந்துகொள்ள அல்லது பெயரிடப்பட முடியாத அது என்பது என்ன?

கேம்ப்பெல்: அனைத்தையும் கடந்த ஆழ்நிலையில் இருப்பதை குறிப்பதற்கு நமது ஆங்கில மொழியில் இருக்கும் இறுதிச்சொல் God என்பது. ஆனால் God என்றால் உங்களுக்கு ஒரு கருத்து இருக்கிறதல்லவா? நீங்கள் கடவுளை ஒரு தந்தையாக எண்ணுகிறீர்கள். இப்போது கடவுள் அல்லது படைத்தவர் அன்னையாக இருக்கும் மதங்களில் இந்த முழு உலகமும் அவளது உடலாக இருக்கிறது. அவள் வேறெங்கோ இல்லை. அதேசமயம், ஆணாக இருக்கும் கடவுள் பொதுவாக வேறுஏதாவது ஓரிடத்தில் இருக்கும். ஆனால் ஆணும் பெண்ணும் ஒரு கோட்பாட்டின் இருவேறு அம்சங்களே. வாழ்க்கையை பாலினரீதியாக பிரிப்பது பின்னாளில் வந்த ஒரு பிரிவாகும். உயிரியலின்படி அமீபா ஆணுமல்ல பெண்ணுமல்ல. ஆதிகால செல்கள் வெறும் செல்களே. அவை உடல்கலவியற்ற இனப்பெருக்கத்தால் பிரிந்து இரண்டாக ஆனது. எப்போது பாலுணர்வு வந்ததென்று எனக்குத் தெரியாது, ஆனால் அது மிகத்தாமதமாகத்தான் நிகழ்ந்தது. அதனால்தான் கடவுளை பாலினத்தை வைத்து குறிப்பிடுவது அபத்தமானது என்கிறேன். தெய்வீகசக்தி பாலின பிரிவிற்கு முன்னாலேயே இருப்பது.

மோயர்ஸ்: ஆனால் கடவுளை அவன் என்றோ, அவள் என்றோ சொல்வதுதானே இந்த மாபெரும் கருதுகோளை ஒரு மனிதஉயிர் மொழிவழியாக தட்டுத்தடுமாறி புரிந்துகொள்ள இருக்கும் ஒரே வழி? 

கேம்ப்பெல்: ஆம். ஆனால் நீங்கள் கடவுளை அவன் என்றோ அவள் என்றோ நினைத்தீர்களானால் நீங்கள் கடவுளை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. அவன் அல்லது அவள் என்பது ஒரு குதிபலகை. அதை பயன்படுத்தி நீங்கள் மேலேழும்பி ஆழ்நிலைக்குள் செல்ல முடியும். ஆழ்நிலை என்பது கடந்த நிலை, இருமையைக் கடந்து அடையும் நிலை. காலவெளியில் இருக்கும் அனைத்தும் இருமை கொண்டது. ஆண் பெண் என்பதெல்லாம் ஒரு அவதாரம்தான். அதாவது கடவுளின் அவதாரம். இவ்வாறு சொல்லலாம், நீங்கள் உங்களுடைய உண்மையான மீபொருண்மைவாத (Metaphysical) இருமையின் ஒரு அம்சத்தைக் கொண்டு மட்டுமே பிறந்திருக்கிறீர்கள்.

மறைசடங்குகள் கொண்ட மதங்களில் இது இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது - ஒரு தனிமனிதன் தொடர்ச்சியாக செய்யும் சாதகங்கள் வழியாக சென்று அவனுள் ஆழ்ந்து வெகுஆழத்தின் உள்ளே தன்னை திறந்துகொள்கையில், அவன் தான் அழிபவனாகவும் அழிவற்றவனாகவும் இருப்பதை, ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பதை ஒரு தருணத்தில் உணர்ந்துகொள்கிறான்.

மோயர்ஸ்: இதைப்போல ஒரு இடம் ஏதேன் தோட்டத்தில் இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

கேம்ப்பெல்: நிச்சயமாக இல்லை. ஏதேனின் தோட்டம் என்பது காலத்தின் அறிவோ, முரண்களின் அறிவோ இல்லாத கள்ளமின்மையின் ஒரு கவியுருவகம். மேலும் அதுதான் பிரக்ஞைநிலை மற்றும் அந்த பிரக்ஞைநிலை மாற்றங்களை அறியும் மைய இடமுமாகும்.

மோயர்ஸ்: ஆனால் ஏதேன் என்பது கள்ளமின்மையின் இடம் என்றொரு கருத்து இருக்குமேயானால், அதற்கு நிகழ்ந்தது என்ன? அது அச்சத்தால் தடுமாறவில்லையா?, ஆதிக்கத்திற்கு உட்படவில்லையா, களங்கப்பட்டவில்லையா?

கேம்ப்பெல்: அதேதான். தெய்வத்தைப் பற்றி ஒரு அருமையான கதை உண்டு, 'தான்' என்ற அந்த தெய்வம் "நான் இருக்கிறேன்" என்றது. அவ்வாறு சொன்னவுடன் அது பயந்துபோனது.

மோயர்ஸ்: ஏன்?

Paradise, Peter Paul Rubens (1577-1640) and Jan Bruegel the Elder (1568-1625)

கேம்ப்பெல் : ஏனெனில் இப்போது அது காலத்தில் ஒரு இருப்பாகிவிட்டது. பின் அதுவே, "எதைக்கண்டு நான் அச்சப்பட வேண்டும், இருப்பது நான் மட்டும்தானே" என்று நினைத்தது. அவ்விதம் அது சொன்னவுடன் தன் தனிமையை உணர்ந்து, இன்னொன்று இருந்திருக்கலாம் என்று விரும்பி அந்த விழைவையும் உணர்ந்தது. பின்னர் அது தன்னைப் பெருக்கி இரண்டாகப் பிரிந்து ஆண் என்றும் பெண் என்றுமாகி இவ்வுலகத்தை பிரசவித்தது.

கருப்பைக்குள் இருக்கும் கருவின் முதல் அனுபவம் அச்சம். செக்கோஸ்லோவேக்கியாவைச் சேர்ந்த உளவியல் நிபுணரான ஸ்டானிஸ்லாவ் க்ரோஃப் (Stanislav Grof) எல்.எஸ்.டியின் (LSD) உதவியுடன் பல ஆண்டுகளாக மக்களை ஆராய்ந்திருக்கிறார். அம்மக்களில் சிலர் ஜனனத்தை மீண்டும் அனுபவித்ததை அவர் அறிந்தார். அவ்வனுபவத்தின் முதல்நிலை என்பது நான் என்றோ இருப்பு என்றோ எந்த உணர்வுமில்லாமல் ’கரு’ கருவறையில் இருப்பதே. பிறகு பிரசவத்திற்கு சற்று முன் கருவறை துடிக்க ஆரம்பிக்கையில், அது பயங்கரமான அனுபவத்தை கொடுத்திருக்கிறது. அச்சம் முதலில் தோன்றியது, அது "நான்" என்றது. அதன் பின்னர் பிறப்பின் அதிபயங்கரமான கட்டம் வருகிறது. அது பிறப்புக்குழாயின் வழியாக செல்லக்கூடிய கடினமான பயணம். பிறகுதான் ’கடவுளே, ஒளி வந்துவிட்டது!’ என்று அமையமுடிகிறது. உங்களால் கற்பனை செய்ய இயல்கிறதா? தன்னுணர்வு நான் இருக்கிறேன் என்று சொன்னவுடன் அச்சத்தை உணர்ந்தது என்று தொன்மம் குறிப்பிட்ட அந்த பழைய அற்புதம் மீண்டும் நிகழ்கிறதல்லவா? பின்னர் அது தனியாக இருப்பதை அறிந்து, இன்னொன்று வேண்டுமென்ற விருப்பத்தை உணர்ந்து, இரண்டாக ஆனது. அதுதான் ஒளியின் உலகிற்கும், முரண்களின்-இணைக்கும் வருதல்.

மோயர்ஸ்: நாம் அனைவருக்கும் பொதுவானது என எதை இக்கதை கூறுகிறது? ஒரே மாதிரியான கூறுகளைக் கொண்ட இந்த ஏராளமான கதைகளில் நாம் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது அந்த தடை செய்யப்பட்ட கனியா, பெண்ணா? உதாரணமாக இந்தவகை தொன்மங்களிலும் படைப்புக்கதைகளிலும் "அதை செய்யலாகாது" என்றொரு சொல் வருகிறது. இந்த தடைக்கு எதிராகத்தானே ஆணும் பெண்ணும் (ஆதாமும் ஏவாளும்) போராடுகிறார்கள், பின் அவர்கள் தாங்களாகவே வெளியேறுகிறார்கள். ஆண்டுக்கணக்கில் இவற்றையெல்லாம் வாசித்தபிறகும், தூரத்திலுள்ள பண்பாடுகளின் தொன்மங்களுக்கும் இதற்கு உள்ள ஒற்றுமைகளைக் கண்டு எனக்கு வியப்பாக உள்ளது.

கேம்ப்பெல்: 'ஒரு தடைசெய்யப்பட்ட விஷயம்' (The One Forbidden Thing) என்றவொரு நாட்டுப்புற கதைவடிவம் உள்ளது. அதில் ப்ளூபியர்ட் (Bluebeard) தன் மனைவியை நோக்கி "அந்த அலமாரியை திறக்காதே" என்று சொன்னதை நினைவுகூறுங்கள். ஆனால் அவள் எப்போதுமே கீழ்படிவதில்லை. பழைய ஏற்பாட்டின் கதையில் கடவுள் தடைசெய்யப்பட்டதை குறிப்பிடுகிறார். மனிதன் அந்த தடைசெய்யப்பட்ட கனியை உண்ணப் போகிறான் என்பதை கடவுள் மிகநன்றாக அறிந்திருப்பார். அதை செய்ததன் மூலமாக மனிதன் தன் சொந்த வாழ்க்கையை தானே துவக்கியவனாக ஆகிவிட்டான். உண்மையாக சொல்லப்போனால் அந்த கீழ்ப்படிதலின்மை காரணமாகத்தான் வாழ்க்கை தொடங்கியது.

மோயர்ஸ்: இந்த ஒற்றுமைகளை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?

கேம்ப்பெல்: இரண்டு வகையில் விளக்கலாம். ஒரு விளக்கம் என்னவென்றால், அடிப்படையில் மனித மனஆழம் உலகெங்கும் ஒரே மாதிரியாக உள்ளது. இந்த மனஆழம் என்பது உடல்வழியாக மனிதன் அடைந்த அகவய அனுபவம். மனிதர்கள் ஒரே மாதிரியான உடலுறுப்புகளையும், உள்ளுணர்வுகளையும், துடிப்புகளையும், முரண்களையும், அச்சங்களையும் கொண்டிருப்பதால் இது அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படையில் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.

இந்த பொதுத்தளத்திலிருந்துதான் சி.ஜி.யுங் குறிப்பிடும் ஆழ்படிமங்கள் தோன்றுகின்றன. அதுதான் தொன்மங்களின் பொதுவான கருத்துக்கள்.

மோயர்ஸ்: ஆழ்படிமங்கள் என்றால் என்ன?

கேம்ப்பெல்: அதை அடிப்படை கருத்துக்கள் அல்லது அடித்தளமான கருத்துக்கள் என விளக்கலாம். சி.ஜி.யுங் இந்த கருத்துக்களை நனவிலியின் ஆழ்படிமங்கள் என்கிறார். 'ஆழ்படிமங்கள்' என்பதே சிறந்த சொல். ஏனெனில் அடிப்படை கருத்து என்று சொன்னால் அது மனம் சார்ந்ததாகிவிடுகிறது. நனவிலியின் ஆழ்படிமம் என்பது அதற்கும் கீழிருந்து வருவது. யுங் உடைய நனவிலியின் ஆழ்படிமங்களுக்கும் பிராய்ட் கூறும் complexes-க்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், நனவிலியின் ஆழ்படிமங்கள் என்பது உடலுறுப்புகள் மற்றும் அதன் சக்திகளின் வெளிப்பாடு. ஆழ்படிமங்கள் உயிரியல்ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளன. ஆனால் பிராய்டின் நனவிலி என்பது தனிமனித வாழ்க்கையின் ஒடுக்கப்பட்ட மனச்சிக்கல்களுடைய அனுபவங்களின் தொகுப்பு. பிராய்டின் நனவிலி ஒரு தனிப்பட்ட நனவிலி, அது தன்வரலாறு சார்ந்தது. யுங் உடைய நனவிலியின் ஆழ்படிமங்கள் உயிரியல் சார்ந்தது. தன்வரலாறு அதற்கு இரண்டாம் பட்சம்.

Creation, Michelangelo, Sistine Chapel, Rome, 1508-12

உலகெங்கிலும் மனித வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் இந்த ஆழ்படிமங்கள் வெவ்வேறு ஆடைகளுடன் தோன்றியிருக்கின்றன. இந்த ஆடைகளின் வேறுபாடானது வரலாற்று நிலைகள் மற்றும் சூழல் போன்றவற்றின் விளைவால் உருவானது. இந்த வேறுபாடுகளைத்தான் மானுடவியல் ஆய்வாளர்கள் அடையாளம் காண்பதற்கும் ஒப்பிடுவதற்கும் முனைகிறார்கள்.

தொன்மங்களின் ஒற்றுமையை ஆராய Diffusion என்ற கோட்பாடு உள்ளது. உதாரணமாக, நிலத்தை உழும் செயல்முறையானது அது முதன்முதலில் தோன்றிய இடத்திலிருந்து முன்னகர்ந்து செல்கிறது. அதனுடன் இணைந்து நிலத்தை வளமாக்குதல், உணவுத்தாவரங்களை நட்டு வளர்த்தல் போன்றவற்றிற்கான தொன்மங்களும் செல்கிறது. முன்பே பார்த்ததுபோல, சில தொன்மங்கள் ஒரு தெய்வத்தைக் கொன்று துண்டுகளாக வெட்டி, பாகங்களைப் புதைத்து அதன் மீது உணவுக்கான செடிகளை வளர்ப்பது போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இத்தகையவொரு தொன்மம் வேளாண்மை அல்லது விவசாய நாகரீகத்திற்கு துணையாக இருக்கும். ஆனால் நீங்கள் இதை வேட்டைநாகரீகத்தில் காணமுடியாது. ஆகவே தொன்மங்களின் ஒற்றுமையை  ஆராய்வதில் வரலாறு மற்றும் உளவியல் சார்ந்த அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

மோயர்ஸ்: மனிதஇனங்கள் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட  படைப்புக்கதைகளுடன் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். இவ்வாறாக ஒரு கதையுடன் நம்மை இணைத்துக்கொள்கையில் நாம் என்ன எதிர்பார்கிறோம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

கேம்ப்பெல்: ஆழ்நிலையை நாம் அடைவதற்கு உதவுகின்ற உலகை வாழ்ந்து அனுபவிப்பதற்கான வழியையே நாம் எதிர்பார்க்கிறோம் என்று நான் நினைக்கிறேன். அதேசமயம், அதனுள் இருக்கும் நாமும் உருவாகிறோம். அதுதான் மனிதர்கள் விரும்புவதும், நமது ஆத்மா கேட்பதுவும் ஆகும்.

மோயர்ஸ்: அதாவது, அனைத்தையும் நமக்கு அளிக்கும் அந்த மர்மத்துடன் ஒரு ஒத்திசைவை நாம் காணவேண்டும் என்கிறீர்களா? நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் மௌனப்பெருந்தளத்தைதான் மர்மம் என நீங்கள் அழைப்பீர்களா?

கேம்ப்பெல்: ஆம். அந்த மர்மத்தை அதாவது மௌனப்பெருந்தளத்தை நான் கண்டுகொள்வது மட்டுமல்லாமல், நாமிருக்கும் சூழலிலும் உலகத்திலும் அதை உணரவேண்டும். அதோடு மட்டுமல்லாமல் இந்த தெய்வீகஇருப்பை அனுபவிப்பதற்கான தயாரிப்புகளையும் நாம் கொண்டிருக்க வேண்டும்.

மோயர்ஸ்: இந்த உலகத்திலும், நமக்குள்ளும் அதை பெறவேண்டும்.

கேம்ப்பெல்: ஆம். இந்தியாவில் முகமன் கூறுவதற்கு ஒரு அழகான முறை உண்டு. இரு கரங்களையும் சற்றே உயர்த்தி உள்ளங்கைகளை ஒன்றோடொன்று சேர்த்து மெதுவாக முன்னோக்கி வளைவார்கள். அதற்கான அர்த்தத்தை நீங்கள் அறிவீர்களா?

மோயர்ஸ்: இல்லை.

கேம்ப்பெல்: உள்ளங்கைகள் ஒட்டிய நிலை - இதை நாம் நம்முடைய பிரார்த்தனையின்போது செய்வோம், இல்லையா? முகமன் கூறும் முறையாக அது குறிப்பிடுவது என்னவென்றால், உன்னில் இருக்கும் கடவுள் இன்னொருவரிடம் இருக்கும் கடவுளை அறிகிறது என்பது. தெய்வீகஇருப்பு அனைத்திலும் உள்ளது என்பதை இந்தியர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்தியர் ஒருவரின் இல்லத்திற்குள் நீங்கள் விருந்தாளியாக நுழையும்போது, உங்களை வருகைதரும் தெய்வமாக கருதி முகமன் கூறி அழைப்பார்கள்.

மோயர்ஸ்: ஆனால் இக்கதைகளைச் சொல்லி அதை நம்பி செயல்படும் அம்மக்கள் சில எளிய கேள்விகளைக்கூட கேட்கவில்லையா? உதாரணமாக இவ்வுலகத்தை படைத்தது யார், எவ்வாறு இவ்வுலகம் படைக்கப்பட்டது, ஏன் படைக்கப்பட்டது போன்ற கேள்விகளை அவர்கள் கேட்கவில்லையா? அவர்களுடைய படைப்புக்கதைகள் இக்கேள்விகளுக்கு பதிலளிக்க முயலவில்லையா?

கேம்ப்பெல்: இல்லை. படைப்பாளி இவ்வுலகின் அனைத்திலும் உறைந்திருப்பவன் என்ற விடையை அவர்கள் கண்டடைந்தனர். நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா? "நானே இந்த படைப்பு என்பதை நான் அறிகிறேன்" என்று கடவுளே கூறிய கதையை நாம் இப்போது உபநிடதங்களில் வாசித்தோம். கடவுளை ஒரு படைப்பாகவும் உங்களை ஒரு உயிராகவும் நீங்கள் கருதினால், கடவுள் உங்களில் இருப்பதை, நீங்கள் உரையாடும் ஆண் பெண் என எவரிடமும் இருப்பதை உணர்வீர்கள். ஒரே தெய்வீகத்தின் இரண்டு அம்சங்களைத்தான் இங்கு நீங்கள் உணர்கிறீர்கள். 

தொன்மவியலின் ஒரு அடிப்படை கருத்து என்ன சொல்கிறது என்றால், தொடக்கத்தில் அனைத்தும் ஒன்றென இருந்தது, பின்னர் சொர்க்கம்-நரகம் ஆண்-பெண் என்று பல பிளவுகள் வந்தன. எவ்வாறு நாம் ஒருமையுடன் கொண்டிருந்த தொடர்பை தொலைத்தோம்? இந்த பிரிவு யாரோ ஒருவரின் பிழை என்று நீங்கள் சொல்லலாம், இது ஒரு பதில். அதாவது அவர்கள் தவறான பழத்தை உண்டார்கள் அல்லது கடவுளை நோக்கி தவறான சொற்களை சொன்னார்கள், அதனால் கடவுள் சினந்தார், பின் விலகிச் சென்றார். ஆக இப்பொழுது நித்தியம் நம்மிடம் இருந்து வெகுதொலைவில் உள்ளது. அதனுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கு ஏதேனும் ஒரு வழியை நாம் கண்டடைய வேண்டும். இந்த கேள்விக்கு இன்னொரு வித பதிலும் உண்டு. அதன்படி மனிதன் மேலே கூறியதுபோல படைக்கப்படவில்லை, அன்னைபூமியின் கருவிலிருந்து வந்தவன் என்று சொல்வது. இந்தவகை கதைகளில் மனிதர்கள் மேலேறுவதற்காக ஒரு பெரும் ஏணி அல்லது கயிறு இருக்கும். இறுதியாக ஏறும் இருவர் கொழுப்பு நிறைந்த பருமனான உடல் கொண்டிருந்தவர்கள். அவர்கள் ஏணியை பிடித்ததும் அது அறுபட்டு விழுந்தது. இப்படியாக நாம் மூலத்திலிருந்து பிரிக்கப்படுகிறோம். நேரடியாக சொல்வதென்றால், நாம் நமது மனங்களால் பிரிக்கப்படுகிறோம், அறுந்த கயிற்றை முடிச்சிடுவதுதான் சிக்கல்.

மோயர்ஸ்: தொல்காலத்தைய ஆண்களும் பெண்களும் வெறுமனே தங்களை மகிழ்விக்கும் பொருட்டு இக்கதைகளை சொல்லிக்கொண்டனரோ என நான் நினைக்கிறேன்.

கேம்ப்பெல்: இல்லை. அவை பொழுபோக்குக்கதைகள் அல்ல. அதை நாமும் அறிவோம். ஏனெனில் அவை ஒரு வருடத்தில் சில குறிப்பிட்ட காலங்களில் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் போது மட்டுமே சொல்லப்படுகின்றன.

இரண்டு வகையான தொன்மங்கள் உள்ளன. விவிலிய தொன்மம் போன்ற மகத்தான தொன்மங்கள் ஆலயம்சார் தொன்மங்கள் எனப்படும், அவை புனிதச்சடங்குகளுக்கானவை. அவை சடங்குகளுக்கு விளக்கம் அளிக்கின்றன. இதன் வாயிலாக மக்கள் தங்களுடனும், பிறருடனும், இந்த பிரபஞ்சத்துடனும்  ஒத்திசைவு கொண்டு வாழ்கிறார்கள். உருவகமாக இக்கதைகளை புரிந்துகொள்வதே இயல்பானது.

மோயர்ஸ்: படைப்புக்கதையை சொன்ன அந்த ஆதிமனிதர்கள் அக்கதைகளின் உருவக இயல்பை தங்கள் உள்ளுணர்வின் விழிப்பினால் பெற்றிருந்தார்கள் என நீங்கள் எண்ணுகிறீர்களா?

கேம்ப்பெல்: ஆம். ’இது இப்போது இப்படி உள்ளது, ஆகவே இது அப்போது அப்படி இருந்தது’ என்கிறார்கள். அதாவது ‘யாரோ ஒருவர் இவ்வுலகைப் படைத்தார்’ எனும் கருத்து. இதற்கு artificialism என்று பெயர். இதுவொரு குழந்தைத்தனமான சிந்தனை முறை. உதாரணமாக - இந்த மேசை செய்யப்பட்டது, ஆகவே இதை யாரோ செய்திருக்கிறார்கள்; இந்த உலகம் இங்கிருக்கிறது, எனவே இதை யாரோதான் செய்திருக்கவேண்டும் என்பதுபோன்ற பார்வை. இதன்படி மனிதத்தன்மை கொண்ட ஒன்று இவ்வுலகையும் இங்கிருப்பதையும் படைத்தது, செய்திருக்க வேண்டும். 

இன்னொரு பார்வை உண்டு, மனிதத்தன்மை கொண்ட எதன் தலையீடும் இல்லாமல், இவ்வுலகம் மேலிருந்து கீழே பொழியப்பட்டது என்பது. உதாரணமாக - ஒலி திண்மமாகி காற்றையும் நெருப்பையும் நீரையும் புவியையும் உருவாக்கியது, இவ்வாறு உலகம் உருவானது; முழுப்பிரபஞ்சமே ஆதிஒலியில் உள்ளடங்கியிருந்தது, பின்னர் அதன் அதிர்வுகளால் இங்குள்ளவை அனைத்தும் காலவெளியில் கட்டமைந்தன. இந்த பார்வையின் படி, "உலகம் இனி உருவாகட்டும்" என வெளியிலிருந்து மனிதத்தன்மை கொண்ட எதுவும் கூறவில்லை.

பெரும்பாலான நாகரிகங்களில் இரண்டு அல்லது மூன்று படைப்புக்கதைகள் உண்டு. ஒன்றை மட்டும் அவை வைத்திருப்பதில்லை. விவிலியத்திலும் இரண்டு உண்டு. மக்கள் அவ்விரண்டையும் ஒன்றென பாவித்தபோதிலும் அவை இரண்டு படைப்புக்கதைகளே. ஏதேன் தோட்டக்கதையின் இரண்டாம் அத்தியாயம் உங்களுக்கு நினைவிருக்கிறதல்லவா. கடவுள் தனது தோட்டத்தை பராமரிப்பதற்காக ஆதாமை படைத்து, அவனை அவ்வாறு செய்ய வைப்பதற்காக அவனை குதூகலப்படுத்தும் வழிகளை எண்ணிக்கொண்டிருந்தார். 

இது பண்டைய சுமேரியர்களிடமிருந்து கடன் வாங்கப்பட்ட மிக மிக பழைய கதை. கடவுள்கள் அவர்களுக்கு தேவையான உணவை விளைவிக்கவும் அவர்களுடைய தோட்டத்தை பராமரிக்கவும் சிலர் வேண்டுமென்று விரும்பியதால் அவர்கள் மனிதனைப் படைத்தனர். அதுதான் ஆதியாகமத்தின் அத்தியாயம் 2 மற்றும் 3-ன் பின்புலம். ஆனால் யாஹோவாவின் தோட்டக்காரன் சலிப்படைந்தான். ஆகவே கடவுள் அவனுக்காக விளையாட்டுப் பொருட்களை கண்டறிய முயன்றார். ஆகவே அவர் விலங்குகளை உருவாக்கினார். ஆனால் அதை வைத்துக்கொண்டு மனிதர்களால் செய்யமுடிந்தது அவற்றிற்கு பெயரிடுவது மட்டும்தான். அதன்பின் கடவுள் அடைந்த மாபெரும் யோசனைதான் இந்த ஆதாமின் உடலிலிருந்து பெண்ணிற்கான ஆத்மாவை எடுத்து பெண்ணை உருவாக்கியது. இது ஆதியாகமம் அத்தியாயம் ஒன்றில் இருந்து மிக வேறுபட்ட ஒரு படைப்புக்கதை. அதில் கடவுள் ஆதாமையும் ஏவாளையும் தன்னுடைய ஆண் பெண் வடிவமாக உருவாக்கினார். அங்கே கடவுள் ஆண் பெண் இருபாலுக்கும் முதன்மையானவர்.

அத்தியாயம் இரண்டானது மேலே பார்த்த அத்தியாயம் ஒன்றில் வரும் கதைக்கு வெகு தொலைவில் இருக்கிறது. ஒருவேளை அத்தியாயம்-2 பொ.மு.8ஆம் நூற்றாண்டிலோ அதற்கு முன்போ தோன்றியிருக்கலாம். ஆனால் போதனைக்கதைகள் என்றழைக்கப்பட்ட அத்தியாயம் ஒன்றின் கதைகள் பொ.மு 4ஆம் நூற்றாண்டிலோ அதற்கு பின்னரோ வந்திருக்கலாம். தன்னுணர்வு பற்றிய இந்து கதையில், தன்னுணர்வு அச்சத்தை உணர்ந்து, பின் ஆசையை உணர்ந்து, அதன் பின் இரண்டாகப் பிரிந்தது. இதற்கு நேர்ரெதிரான கதை ஆதியாகமம் அத்தியாயம் இரண்டில் உள்ளது. இதில் இரண்டாக பிரிந்தது மனிதன்தானே தவிர கடவுள் இல்லை. 

கிரேக்க மாமனிதரான அரிஸ்டோபேன்ஸ் (Aristophanes) பிளாட்டோவின் Symposium-மில் இதைப் போன்ற ஒன்றை சொல்கிறார். தொடக்ககாலத்தில் உயிர்கள் இன்றைய இரண்டு மனிதர்கள் ஒன்றாக இணைந்த வடிவத்திலிருந்தன. அவ்வடிவத்தில் மூன்று வகைகள் இருந்தன - ஆணும் பெண்ணும் இணைந்து ஒன்று, ஆணும் ஆணும் இணைந்து மற்றொன்று, பெண்ணும் பெண்ணும் இணைந்து மூன்றாவது. பின்னர் கடவுள் அவையனைத்தையும் இரண்டாகப் பிரித்தார். ஆனால் அவ்வாறு பிரிக்கப்பட்ட பிறகு அவர்கள் செய்ய நினைத்ததெல்லாம், மூலத்தில் இருந்ததைப்போலவே மீண்டும் மறுஇணைவு கொள்வதற்காக ஒருவரை ஒருவர் அணைத்துக்கொள்வதையே. ஆகவே நாம் அனைவரும் நமது மறுபாதியைக் கண்டு தழுவிக்கொள்ளவே இன்று நமது வாழ்க்கையை செலவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

-தொடரும் 

மொழிபெயர்ப்பு - பூபதி துரைசாமி

--------------------------------------------------------------

மோயர்ஸ் மற்றும் கேம்ப்பெல்


பூபதி துரைசாமி

பூபதி துரைசாமி. கோவையில் வசிக்கிறார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகளில் இருந்து கலை, இலக்கியம், வரலாறு, தத்துவம் இவற்றில் ஆர்வம் பெற்று தேடல் கொண்டிருப்பவர்.