அப்புறம் எங்க ஊர்ல ராமசாமி என்ற பெரியவர் இருந்தார். அவர் இந்திய குடியரசுக் கட்சிக்காரர். அதுதான் நான் பார்த்த முதல் இயக்கம். நான் வட ஆர்க்காடு மாவட்டத்தை சேர்ந்தவன். வட ஆர்க்காடு மாவட்டம் அம்பேத்கர் இயக்கங்களின் செல்வாக்கு இருந்த பகுதி. அதன் தாக்கத்தை இப்பவும்கூட அப்பகுதிகளில் பார்க்கலாம். இப்போது சென்றாலும் ஊருக்கு ஒரு பழைய செயற்பாட்டாளரை பார்த்து விட முடியும்.அவர்கள் ரொம்ப படிச்சவங்களா இருக்க மாட்டாங்க. சாதாரணமான நிலையில இருந்து உருவாகியவர்கள். அவங்களுக்கு சுயமான அறிவு பார்வை உண்டு. மேடைகளில் பேசப்பட்ட விசயங்களுக்கு பழகி, பொதுக்கூட்டங்களை கேட்டு உருவாகி வந்திருப்பாங்க. அப்படி இருக்கும்போது சின்ன வயசுல இருந்தே எனக்கு அவங்ககூட ஒரு தொடர்பு ஏற்பட்டது. ஊரில் நிறைய சின்ன பசங்களை படிக்க ஊக்குவிக்கக் கூடியவராக இருந்த ராமசாமி எங்க அப்பாவுடைய நண்பராகவும் இருந்தார். அவருடைய தொடர்பினால் நான் சிறிய வயதிலேயே செய்தித் தாள்களை படிக்கக் கூடியவனாக மாறினேன். அதில் கிடைக்கிற தகவல்களை திரட்டிச் சொல்றது,என்னிடம் உருவானது. ஐந்தாவது வரைக்கும் நான் பிறந்த கிராமத்தில் தான் படிச்சேன். அப்புறம் ஸ்கூல் போகும்போது, லைப்ரரில கூட இந்த மாதிரி நூல்களை தான் தேடிப்படிச்சேன். இயல்பாவே தி.மு.க ஆதரவு, திராவிட இயக்கம், பெரியார் புத்தகங்களை படிப்பது, அதைப் பற்றி ஊர்ல வந்து சொல்றது,சின்ன சின்ன உள்ளூர் கூட்டங்களில் பேசுவது இந்த மாதிரிதான் என் ஆரம்பம் இருந்தது.
இலக்கியம் என்று பார்த்தால் முதல் முதல் படித்தது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல் தான். அதை படிச்சிட முடிஞ்சது.இந்தியா டுடே இலக்கிய மலர் அப்போதான் வந்திருந்தது. அதில் சி.சு. செல்லப்பாவோட வாடிவாசல் நாவலை முழுமையாக வெளியிட்டிருந்தாங்க. ஆனால் அதற்குள் என்னால் போக முடியலை. ஏன்னா மேடைப் பேச்சு, பாரதிதாசன் கவிதைகள், பெரியாருடைய புத்தகங்கள், கருணாநிதி வசனங்கள், இப்படி இருந்தவனுக்கு, இந்த மாதிரி ஒரு வட்டார தமிழுக்குள் போறது சிரமமாக இருந்தது. ஆனாலும் எனக்கு தொடர்ந்து கவிதைகள் எழுதுறது. லைப்ரரி தொடர்பு இதெல்லாம் இருந்தது.
இதுக்கெல்லாம் முன்னாடியே ஊரிலிருந்த தி.மு.க. அபிமானம், அப்புறம் வைகோ கட்சியை விட்டு பிரிஞ்சப்போ நான் அவர் ஆதரவாளனா இருந்தது, இது எல்லாம் சேர்ந்து பிஞ்சுலையே பழுத்தவன் ஆகிவிட்டிருந்தேன்.எங்க ஊர்ல ஒரு அண்ணன் இருந்தார். நானும் அவருமா சேர்ந்துதான் மாநாட்டுக்கெல்லாம் போவோம்-வருவோம். மதிமுக அப்போ மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோட கூட்டணி வைத்தது. அவங்க மூலமாத்தான் எனக்கு செம்மலர், த.மு.எ.ச எல்லாம் அறிமுகமானது. அந்த பின்னணியோடு தான் மதுரைக்கு வந்தேன். அப்போ என் வாத்தியார் நீ என்ன படிக்க விரும்புகிறாய் என்று கேட்டப்போது தமிழ் படிக்கிறேன் என்று சொல்லிட்டேன். ஏன்னா எனக்கு ஆங்கிலம் தெரியாது. கவர்மென்ட் ஸ்கூல்ல இருந்துதான் வந்திருந்தேன். என்ன படிக்கனும்னு சொல்ற அளவுக்கெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. பெற்றோருக்கும் அதுக்கான பின்புலம் இல்லை. அப்போ தமிழ் படிக்குறேன்னு சொன்னப்போ அவர் இதை இதை படின்னு சொல்லி அனுப்பி வெச்சிட்டாரு. இப்படிப் பெரிசா எதுவும் திட்டமில்லாமல் தான் தமிழ் படிக்க வந்தேன். ஆனால் மதுரைக்கு வந்தப்றோம் அங்க முன்பிருந்த இலக்கிய தொடர்ச்சியில் இலக்கிய கூட்டங்கள் மாதிரியெல்லாம் போகத் தொடங்கினேன்.
சுனில்: இதுல பொதுவா நான் பார்த்தவரையில தமிழ்நாட்டுல வேற எந்த கல்லூரியையும் விட அமெரிக்கன் கல்லூரில இருந்து வர்ற மாணவன்னா அவன் இந்த நவீன இலக்கியத்தோடு தொடர்புடையவராகத்தான் இருக்கார். இப்போ எங்க எல்லாம் வந்து இந்த கல்லூரிகள்ல நவீன எழுத்தாளர்கள் அழைக்கப்படுறாங்களோ அங்க எல்லாம் ரமணா பட ஏஜென்டு மாதிரி ஒரு அமெரிக்கன் கல்லூரி மாணவன் உள்ளுக்குள்ள இருக்கான். அதனால அமெரிக்கன் கல்லூரி உங்ககிட்ட ஏற்படுத்துன தாக்கத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க.
ஸ்டாலின்: நான் அமெரிக்கன் கல்லூரியில படிக்க வேண்டுமென்று தான் மதுரைக்கு வந்தேன். ஆனால் வந்த நேரத்தில் எனக்கு இடம் கிடைக்கலை. அதனால் என் வாத்தியாருக்கு தெரிந்தவர்கள் வேலை பார்த்த – செந்தமிழ் கல்லூரியில சேர்த்துவிட்டார். ஆனால் செந்தமிழ்க் கல்லூரியில் வகுப்புகள் தவிர வேற எந்த நடவடிக்கையுமே இருக்காது. அது ஒரு கல்லூரி அவ்வளவுதான்.
அமெரிக்கன் கல்லூரியில தான் நிறைய கூட்டங்கள் நடக்கும். என்னை கொண்டு சேர்த்த ஆசிரியருடன் படிச்சவர் தான் சுந்தர் காளி. அவர் எப்போதுமே அமெரிக்கன் கல்லூரியில் இருப்பார். அங்கு நாடகம் இலக்கிய கூட்டங்கள் எல்லாம் நடக்கும். அவர் கூட எனக்கு தொடர்பு இருந்ததுனால செந்தமிழ்க் கல்லூரியை முடிச்சிட்டு அங்கே செல்லுவேன்.நகரில் நடக்கும் மற்ற கூட்டங்களுக்கும் போவேன்.ஆனால் செந்தமிழ் கல்லூரியை பற்றி என்ன சொல்லுவேன்னா அங்க எந்த பிரச்சினையுமே இல்லாததுனால ஒரு நல்ல பழைய நூலகம் இருந்தது. கிட்டத்தட்ட என்னுடைய இன்னைக்கு வரைக்குமான அடித்தளமாக அமைந்திருக்கிற வாசிப்பை அந்த மூன்று வருஷத்துலதான் தெகட்டத் தெகட்டப் படிச்சேன். அந்த லைப்ரரிய முழுசா பயன்படுத்தியவன் என்று என்னை சொல்ல முடியும். அங்கே தான் தமிழில் வந்திருந்த கோட்பாட்டு நூல்களை படிச்சேன். எஸ். வி. ஆருடைய எக்ஸிஸ்டென்ஷியலிசம்ல (இருத்தலியல்) தொடங்கி, புரியுதோ புரியலையோ எல்லாத்தையும் படிச்சேன். அப்போது தான் பெரியாரை ஒரு சிந்தனையாளரா மறுகண்டுபிடிப்பு செய்யும் வேலைகள் நடந்து வந்தன.எஸ்.வி.ஆர்., வ.கீதா எழுதிய பெரியார் பற்றிய புத்தகங்கள் எல்லாம் வருது.
ஒரு முறை ஜெயமோகன் அமெரிக்கன் கல்லூரிக்கு வந்திருந்தார். செந்தமிழ்க் கல்லூரியிலிருந்து நான் ஒருத்தன் மட்டும் அவர் கூட்டத்திற்கு வந்திருந்தேன். பின்னாட்களில் ஜெயமோகனை பார்த்தப்போ கூட “நீங்க அமெரிக்கன் கல்லூரியிலதானே படிச்சீங்க? எங்கூட சண்டையெல்லாம் கூட போடுவீங்களே?” அப்படின்னுதான் கேட்டார். அவர் கூட வம்பிழுக்க, சண்டை போடுறதுக்காகவே கிளம்பி வருவோம். அப்போ நண்பர் ஹவி என்ற கவிஞர். அவர் நவீன இலக்கியம் அறிமுகம் உடையவராக இருந்தார். அவர் மூலமாக தான் எனக்கு திரும்பவும் மாடர்ன் லிட்ரேச்சர் (நவீன இலக்கியம்) நெருக்கம் கிடைச்சிச்சு. செந்தமிழ் கல்லூரி நூலகத்தில் நான் அதிகம் படிச்சது மாடர்ன் லிட்ரேச்சர் தான். அப்புறம் எம்.ஏ. அமெரிக்கன் கல்லூரிக்கு வந்தேன். அமெரிக்கன் கல்லூரி வந்து என்னவெல்லாம் படிக்கனுமோ அதை எல்லாம் வெளியுலக தொடர்புகள் மூலமாகவும் ஏற்கனவே செந்தமிழ் கல்லூரி நூலகம் மூலமும் படிச்சிட்டு வந்திருந்தேன். இதுதான் தமிழுக்கு உள்ளே வந்த என்னுடைய பயணம்.
இதுல எனக்கு எது ரொம்ப முக்கியமென்று நினைக்குறேன் என்றால் நிறைய பேர் பழைய இலக்கியத்திடம் தான் மரபு இருக்கு, நவீன இலக்கியம் அப்படி இல்லைனு நினைக்குறாங்க.நவீன இலக்கியம் உருவாக்குகிற மதிப்பீடுகள் (விழுமியங்கள்) இருக்கில்லையா, இன்னைக்கும் என் கூட வேலை பார்க்குறவங்க கிட்ட, என் மாணவர்கள் கிட்ட எல்லாம் நான் உரையாடுவது/எதிர் பார்க்குறது அந்த மதிப்பீடுகளை தான். சகஜபாவமா இருக்குறது, மையப்படுத்தல் இல்லாமல் ஒன்றை உருவாக்குறது,சகஜமான உரையாடல் வழியாக ஒன்றை கண்டு பிடிக்கிறது.இவற்றையெல்லாம் நான் கற்றுக்கொண்டது நவீன லிட்ரேச்சர்ல இருந்து தான்.இலக்கியம் வேற அரசியல் வேறு இல்லை என்கிற புரிதலும் கூட இதன் வழியாக தான் உருவானது.
நவீன இலக்கியத்தின் இத்தகைய பண்புகள் தாம் தலித் இலக்கியத்திற்கெல்லாம் ஒரு பிளாட்ஃபார்மா மாறியது. மதுரையில் கல்லூரி படித்த போது “எழுத்து அலெக்ஸ்”ஒரு புத்தகக் கடை ஆரம்பிச்சிருந்தார். அப்போ அவர் பதிப்பகத்தார் கிடையாது. சில பதிப்பகங்களுக்கு அவர் தான் டைப் பண்ணி குடுப்பாரு. அப்போ கடையை என் கிட்டதான் விட்டுட்டு போவாரு. கடைல ஜேக்கப் என்று இன்னொரு நண்பர் இருப்பார். ஆனால் அவரும் பெரும்பாலும் கடையை என்ன பார்த்து சொல்லிட்டு போய்டுவாரு. அந்த கடைல இருந்த எல்லா புத்தகத்தையும் நான் படிச்சிடுவேன். சுந்தர ராமசாமியோட செம்மீன் மொழிபெயர்ப்பு எல்லாம் அப்போது தான் படிச்சேன். செம்மீன் என்னை பெருசா ஈர்க்கலை. அது அந்த வயசா என்னனு தெரியலை. ஆனால் மற்ற விஷயங்கள் எல்லாம் அப்போ தான் படிச்சு, அதை கூட்டங்கள்ல பேசி, அப்படித்தான் இதுக்குள்ள வர்ரோம்.
 |
எழுத்தாளர் ராஜ் கௌதமனுடன் ஸ்டாலின் |
சுனில்: இப்போ பொதுவா நீங்க சொல்ற மாதிரி தமிழ் துறைக்கு நவீன இலக்கியத்தோட தொடர்பு குறைவா இருக்குறதாத்தான் நான் பார்க்குறேன்.
ஸ்டாலின்: ஆமாம்.
சுனில்: மரபிலக்கியத்தை நோக்கித்தான் தமிழ்த் துறை இருக்கு. அதே மாதிரி பொதுவாவே நவீன எழுத்தாளர்களுக்கு மரபிலக்கியத்தின் மீதான பரிட்சயமின்மை இருப்பதையும் பார்க்க முடிகிறது. இதுல நீங்க ஒரு தமிழ் புரொபஸரா ரெண்டு தரப்பையும் பாக்குறீங்க. நீங்க என்ன நினைக்குறீங்க?
ஸ்டாலின்: பொதுவாக சொல்ல வேண்டுமானால் தமிழ் பேராசிரியர்களிலேயே சிலர் மரபிலக்கியம் தான் முக்கியம் என்று நினைக்குறார்கள். சிலர் நவீன இலக்கியம்தான் முக்கியம்னு நினைக்குறாங்க.
சுனில்: பேராசியர்களிலேயே அந்த பிரிவு இருக்கா?
ஸ்டாலின்: இருக்கு. ஆனால் அது அவங்க கருத்து இல்லை. பெரும்பாலும் எது தெரியுமோ அதிலிருந்து ஒரு முடிவுக்கு வருவதே பெரும்பான்மை.மரபிலக்கியம் நடத்தக் கூடிய பேராசிரியர்கள் பெரும்பாலானவர்களுக்கு நவீன இலக்கியத்தில் என்ன நடக்குதுன்னே தெரியாது. அதை மறைக்குறதுக்கு அவங்க, “மரபில்லாம என்ன? மரபில் இல்லாதது நவீனத்துல என்ன இருக்கு?” அப்படின்னு பேசுறாங்க. நவீன இலக்கியம் படிக்கிறவங்களுக்கு மரபிலக்கியம் தெரியாததுனால, மரபிலக்கியம் எதுக்கு படிக்கணும்னு ஒரு எண்ணம் இருக்கு. ஆனால் அப்படி இல்லை. மரபிலக்கியம் தெரிஞ்சு நவீன இலக்கியத்துக்குள்ள வரும்போது அதோட வீச்சு வேறு மாதிரித்தான் இருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் நாம உள்ளூர்த் தன்மையோட ஒரு விஷயத்தை யோசிக்குறதுக்கே இந்த மரபிலக்கியம் தேவைப்படுது. கல்விப் புலத்தில் குறைந்த பேராசிரியர்கள்தான்,இந்த புரிதலோடு இருக்காங்க. நிறைய பேருக்கு ஒரு நவீன கவிதையை வாசிக்குறது எப்படி என்பதற்கான பயிற்சியே கிடையாது. மரபான பேராசிரியர்கள் என்ன பண்றாங்கன்னா உரைகளை படிச்சிட்டு அப்படியே திரும்ப சொல்றாங்களே தவிர, சொந்தமா யோசிக்க வெக்கிற அளவுக்கு பாடம் எடுக்குறதில்லை.எனக்கு தெரிந்த ஒரு இடத்தில் ஜெயமோகனோட சங்கச் சித்திரங்கள் நூலிலிருந்து ஒரு கட்டுரையை பாடமாக வெச்சிருந்தாங்க.அதுல சங்க இலக்கியங்களை உரைகளின் வழியா புரிஞ்சுக்காம அனுபவங்களின் வழியா புரிஞ்சுக்கணும்னு அவர் எழுதுறாரு.அது மரபிலக்கியத்திற்கு எதிரான விமர்சனமாக இருக்கு என்று நினைத்தவர்கள் இருந்தார்கள். அதனை ஆக்கப்பூர்வமாக அணுகுவதற்கே சிக்கலா இருக்கு.இங்கு இத்தகைய இடைவெளிகள் பெருசா இருக்கு.
எங்க கல்லூரி நவீன இலக்கியத்துக்கு முக்கியத்துவம் குடுக்குதுங்கற பெயர் கொண்டதாலேயே, எங்களை மரபிலக்கியத்திற்கு எதிரானவர்கள் என்று பார்ப்பவர்கள் இருந்தார்கள். ஆனால் அப்படியொரு திட்டமே இருந்ததில்லை. நவீன இலக்கியம் சொல்லிக்கொடுக்கப்படவேண்டும் என்பதன் பொருள் அது மரபிலக்கியத்துக்கு எதிரா பார்க்கப்பட வேண்டும் என்பதாக மாற்றப்பட வேண்டியதில்லை.அதே மாதிரி இன்னொரு பிரச்சனை இருக்கு, மரபிலக்கியம் சொல்லிக்கொடுக்குற இடத்துல அவங்க ஏதோ ஒரு காரணத்துனால நவீன இலக்கியத்தை மறைவா வெக்கிற பழக்கம் வந்திருது. இன்னைக்கு எவ்வளவோ படைப்பாளிகள் உருவாகி இருக்காங்க. நவீன இலக்கியத்தை புரிஞ்சுக்குறதுக்கான உரையாடல் உருவாகி இருக்கு. அது போதுமான அளவுக்கு கல்விப் புலத்துல உள்வாங்கிக்கொள்ளப் படவில்லை அப்படிங்குறது ஒரு உண்மை.
பொதுவா பெண் ஆசிரியர்கள் வர்ரப்போ இது மாதிரியான பாடங்களை நடத்துறது பற்றி அவங்களுக்கு தயக்கம் இருக்கு. இதை எப்படி நடத்துறதுன்னு ஒரு சந்தேகம் இருக்கு. அது யாரோட சம்பந்தப்பட்டதுன்னா, அங்க உக்காந்து இருக்குற மாணவர்கள் சம்பந்தப்பட்டது. பாடம் எடுக்குற ஆள் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. கேக்குறவன் எப்படி அதை எடுத்துக்குவான்,நடத்துவதை எப்படி அன்டர்ஸ்டாண்ட் பண்ணிக்குறதுங்குற புரிதலே இல்லாத இந்த சூழ்நிலையில், இதை எப்படி எடுத்துக்குவாங்கங்குற பயம் இன்னைக்கு வந்திருச்சு. அதுனால என்ன பண்றாங்க அப்படின்னா, பாடத்திட்டத்த செலெக்ட் பண்ணும்போதே இதை எடிட் (திருத்தம்) பண்ற போக்குகள் எல்லாம் இன்னைக்கு வந்திருச்சு.
 |
குடும்பத்துடன் ஸ்டாலின் |
சுனில்: ஸேஃபா இருக்குறதுக்காக…
ஸ்டாலின்: ஆமாம். அப்புறம் இந்த மதம் சாராத,சாதி சாராத பிரதிகளை தேர்வு பண்ற போக்கும் வந்திருச்சு. உதாரணத்துக்கு எங்க கல்லூரியில அன்பாதவனோட ஒரு கவிதையை பாடத்துல வெச்சிருந்தோம். மாட்டுக்கறி சாப்பிடுறது தொடர்பான கவிதை. எங்க கல்லூரி தான் இதுமாதிரி புதுமையான விசயங்களில் எல்லாம் முன்னோடி. நவீன இலக்கியத்துல இருக்குற இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் பாடத்துல வெச்ச இடம். ஆனால் அதை யாரோ வெளியே சொல்லி,இந்துத்துவ அமைப்புகள் பிரச்சினை பண்ணி அதை நீக்கிட்டாங்க. இந்த மாதிரி பல பிரச்சினைகள் வருகின்றன இன்னைக்கு. பாலியல் சம்பந்தப்பட்ட பகுதிகளில்கள் ரொம்பொ வரையறைகள் வந்திருச்சு. இதுல சுனில் கேட்ட ஒரு விஷயம் எனக்கு ரொம்ப முக்கியமாக படுது. அதாவது இன்னைக்கு கல்லூரிகள்ல சங்க இலக்கியத்தை அதிகமாக ஃபோக்கஸ் பண்ற ஒரு போக்கு வந்திருச்சு.
சுனில்: அது ரொம்பொ செக்யூலரா (மதச்சார்பற்று) இருக்குறதால.
ஸ்டாலின்: ஆமாம். அப்புறம் அதுல அரசியல் ரீதியான பாதுகாப்பும் இருக்கு. சாதி, ஆபாசம் இதெல்லாம் இருக்காது. சவாலையும் தராது. ஆனால் இது எல்லாத்தையும்விட, தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னால் அதுக்கு நிறைய நிதி கொடுக்கப்பட்டது. நிறைய கருத்தரங்குகள் நடத்தன.கடந்த பத்து பதினைந்து வருடங்களில் இதற்க்காக பல கல்லூரிகளுக்கு நிதி கொடுக்கப்பட்டிருக்கு. ஆய்வரங்குகள் நடத்தப்பட்டிருக்கு. ஆனால் அவ்வளவு ஆய்வரங்குகள் பயிற்சிப்பட்டறைகள் எல்லாம் நடத்தப்பட்டு அதுல இருந்து வந்த ரிசல்ட் என்னனு பாக்கும்போது ரொம்பொ வருத்தமா இருக்கு. அதுல சங்க இலக்கியம் பற்றி பேசுறாங்க வந்திருக்காங்க போயிருக்காங்கங்குறதெல்லாம் தாண்டி அவங்க பெருசா புதிய ஆய்வுகள் ஏதும் பிறந்து விட வில்லை.
நாம் மரபான சில ஆய்வாளர்களை மதிக்க மாட்டோம். ஆனால் அவங்க செஞ்ச அளவுக்கு கூட நாம ஏதும் செய்யலை. உதாரணமாக தெ.பொ.மீனாட்சிசுந்தரம் கைலாசபதி. வ. சுப. மாணிக்கம் தமிழ்க் காதல் என்ற நூல் ஒன்றை எழுதினார். சங்க இலக்கியத்துல உள்ள அகப்பாடல்களை புரிந்து கொள்வதற்கான நூல்அது. அந்த அளவுக்குக்கூட எங்ககிட்ட இருந்து எந்த முயற்சியும் வரவில்லை.இதையெல்லாம் விட்டுட்டு சங்க இலக்கியங்களை இந்த சமூகத்தை புரிந்துகொள்வதற்கான வரலாற்று பிரதியாக மட்டுமே கொள்வதில் பிரச்சனை இருக்கிறது என்பது என்னோட கருத்து.
சுனில்: ஆமாம். அதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று டெக்ஸ்டா மாத்துறதுதான் இங்க நடந்துட்டு இருக்கு.
ஸ்டாலின்: ஆமாம். இப்போ எதை எடுத்தாலும் உடனே அதைப் போய் சங்க இலக்கியத்தோட ஒப்பிட்டு, அங்க அது இருந்துச்சுன்னா சரி. இல்லைன்னா அது தப்பு அப்படிங்குறாங்க.
சுனில்: அதாவது சங்கம் வந்து ஒரு வேலிடேஷன் பாய்ன்ட் (குறிப்புப் புள்ளி) மாதிரி ஆகிடுது. சங்க இலக்கியத்துல இருந்தா அது தமிழ் சமூகத்தோடது. இல்லைன்னா அது வெளிய இருந்து வந்ததுனு சொல்றாங்க.
ஸ்டாலின்: ஆமாம். என்னை பொருத்தவரைக்கும் சங்க இலக்கியம் முதலில் ஒரு இலக்கியம். மற்றதெல்லாம் பிறகு தான். அழகியல் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சிந்தனையை உருவாக்குன இடம் சங்க இலக்கியம். ஆனால் அது இங்க நேரடியான வரலாறாக புரிந்துகொள்ளப்படுகிறது.திணை மரபை கூட என்னவாக பார்க்கிறேன் என்றால் அது இலக்கியத்தை படைப்பதற்காகவும் புரிஞ்சுக்குறதுக்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு கற்பித நிலப்பரப்பு. ஏனென்றால் அந்த அளவு சட்டதிட்டத்தோட, ஒழுங்கோட, வரையறையோட ஒரு சமூகம் இருக்க சாத்தியம் இல்லை. அப்படி இருக்கக்கூடாதுனு நான் சொல்லலை. இருக்க முடியாது. எப்படி இருக்க முடியும்?இவ்வாறான படைப்பு ஒழுங்கை சிந்திக்கும் சூழல், மெய்யியல் எவ்வாறு உருவாயின என்று யோசிக்க வேண்டும்.
 |
ரவிக்குமார், சந்திர பான் பிரசாத், ப. சிவகாமி ஆகியோருடன் ஸ்டாலின் (2004) |
சுனில்: காரைக்குடியெல்லாம் கூட பாலைனு சொல்லுவாங்க. ஆனால் எங்களை பொருத்தவரைக்கும் இது மருத நிலம்.
ஸ்டாலின்: தமிழ் சமூகத்தை புரிஞ்சுக்குறதுக்கு சங்க இலக்கியங்களை அதிகமாக கைக்கொள்வதை விட சிற்றிலக்கியங்களை கைக்கொள்வது இன்னும் உபயோகமா இருக்கும் என்பது என் எண்ணம். ஏனென்றால் அதுதான் இன்றைய காலத்திற்கு அதிகம் நெருக்கமாக இருக்கு. நாம் இருபத்தோறாம் நூற்றாண்டுல வாழுகிறோம். நம்மை விட இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் படைக்கப்பட்டதுதான் அவை. இன்னைக்கு இருக்குற பல விஷயங்கள் அதில் சொல்லப்பட்டதாத்தான் இருக்கு. அது சரியா? தப்பா?என்கிற விவாதம் வேறு. இப்போ ஒரு கோயிலோட தல வரலாறுன்னு நீங்க எடுத்துக்கிட்டீங்கன்னா அது ஒரு முன்னூறு வருஷத்துக்குள்ள இருந்துதான் ஆரம்பிக்கிறது. அந்த தலவரலாற்றை நீங்க எங்க இருந்து புரிஞ்சுக்கணும்னா சிற்றிலக்கிய காலக்கட்டத்தில் வைத்து தான் புரிஞ்சுக்கணும். ஆனால் இங்க என்ன நடக்குதுன்னா நம்ம வாழ்க்கையில் இருக்குற கோளாறுகளையும் நல்லதையும் புரிஞ்சுக்குறதுக்கு ரொம்பொ கிட்ட இருக்குற சிற்றிலக்கியங்களை விட்டுட்டு ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால இருக்குற காலத்தை எடுத்துக்கிட்டு அதோட கனெக்ட் பண்ணி காட்டப்படுது. இது இந்த தமிழ்ச் சமூகம் தன்னை என்னவாக காட்டிக்கொள்ள விரும்புகிறது, என்னவாக முன்வைத்துக்கொள்ள விரும்புதுங்குறதோட பிரச்சினைதான்னு நினைக்குறேன்.பழையதாக இருப்பது தான் சரியாகவும், தூய்மையாகவும் இருக்கும் என்கிற எண்ணம் மட்டுமில்லை. அப்போது தான் மக்களையும் ஏற்க வைக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.
சுனில்: இதோட எக்ஸ்டென்ஷனா என்ன சொல்லலாம்னா சிற்றிலக்கியங்கள் அந்ததந்த வட்டாரங்களோட தொடர்புடையதா இருக்கு.
ஸ்டாலின்: ஆமாம். இப்போ திருபுவனத்தோட வரலாற்றை படிக்கணும்னா நீங்க சங்க இலக்கியத்துக்கு போக வேண்டியது இல்லை. திருபுவன நாதர் உலாவுக்குத்தான் போகணும். அப்போது நீங்க அந்த உலாவில் இப்படி சொல்லியிருக்கு, அப்படி சொல்லியிருக்கு, தப்பா சொல்லியிருக்கு, சரியா சொல்லியிருக்கு என்று விவாதிக்க இந்த பிரதிகள் தான் அதிகம் உதவுது..
விக்னேஷ்: சார், இப்போ உங்களோட ஒட்டுமொத்த ஆய்விலுமே இந்த தாட் பிராசஸ் (சிந்தனை முறை) இருக்கு. அதாவது பொதுவா அதிகாரத்தால ஆதென்டிகேடட்னு (அங்கீகரிக்கப்பட்டதுனு) சொல்லப்படக்கூடிய சோர்சசை (தரவுகளை) விட்டுட்டு வெகுமக்கள் லெவல்ல இருக்குற சோர்சசை எடுத்துக்குற போக்கு உங்ககிட்ட இருக்கு. இது பரவலா ஆய்வுச் சூழல்ல இன்னைக்கு வரைக்குமே அங்கீகரிக்கப்படாத ஒரு போக்குதான். இந்த மாதிரியான ஆய்வுகளுக்கான அப்ரோச் உங்களுக்கு எங்க இருந்து வருது?
ஸ்டாலின்: இதோட ரொம்ப முக்கியமான முன்னோடிகள் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள்தான். அவர்கள் தான் எளிய மக்களுடைய கண்ணோட்டத்தில் இருந்து வரலாற்றைப் பார்ப்பது, புரிந்துகொள்வது என்பவற்றை தொடக்கி வைத்தார்கள்.கணிசமான அளவு வளர்த்துகிட்டு இருந்தாங்க. இதுக்கு முன்னோடி ஜீவானந்தம் ஆரம்பித்த “தாமரை”, நா.வானமாமலை ஆரம்பித்த “ஆராய்ச்சி” இதழ். ஆராய்ச்சி இதழ்லதான் தொ.பரமசிவத்தோட தொடக்க கால கட்டுரைகள் வந்தன. ஆராய்ச்சி இதழ்களில் நா.வா. அளவுக்கு பரவலா அறியப்படவில்லை என்றாலும் அறியப்படாத சில முக்கியமான ஆய்வாளர்களும் எழுதி இருக்காங்க. உதாரணமா அதுல பி. எல். சாமி எழுதிட்டு வந்தாரு. பி. எல். சாமி வந்து தமிழ் ஆய்வை களத்துக்கு நகர்த்துனதுல முக்கியமான ஒருத்தரா இருந்திருக்காரு. இப்போ அண்மையில நான் நந்தன் பற்றின ஒரு ஆய்வுல இருக்கேன். நந்தன் பற்றி அறிவதற்கு ஒரு பெரிய சோர்சா யார் இருக்காங்கன்னா பி. எல். சாமிதான். சங்கப்பாடல்கள்ல இருக்கக்கூடிய நன்னன் – பல நன்னன்கள் – எப்படி வட மலையாள நாட்டு வெகுமக்களோட நினைவுகள்ல இருந்தாரு அப்படிங்குறத தொகுத்து எழுதி இருக்கிறார்.இந்த வகையான கட்டுரைகள் ஒரு முக்கியமான தொடக்கம். இரண்டாவது கல்கத்தாவுல தொடங்கப்பட்ட சபால்டர்ன் (விளிம்பு நிலை) ஆய்வை தமிழில் அறிமுகப்படுத்துனதுல நிறப்பிரிகை குழுவுக்கு முக்கிய பங்கு உண்டு. நான் சபால்டர்ன் ஆய்வுகளை நேரடியாக படிச்சவனில்லை. நான் வேகமான வாசிப்பு செய்பவன் கிடையாது.புத்தகத்தை படிச்சுகிட்டே இருக்குறபோது அதை கவுத்தி வச்சிட்டு அதுல வருகிற ஒரு வரி, ஒரு பேரா, அதோட கனெக்ஷன்ஸ் அப்படி யோசிச்சிட்டு இருப்பேன். அப்படி யோசிக்கும்போது என்னை அறியாமலே சில பார்வைகள், சில கோணங்கள் எல்லாம் எனக்குள் செட் ஆகிடும்.
என்னதான் வேற வேற அரசியல் பேசுறவனா இருந்தாலும் ஏன் என்னை எப்பொவுமே ஒரு சிற்றிதழ் ஆளுனு சொல்லிக்க விரும்புறேன்னா என் ஆய்வுல ஏதாவது சில நல்ல அம்சங்கள் இருக்குறதா நீங்க நினைச்சீங்கன்னா அது சிற்றிதழ் இயக்கத்துல இருந்து வந்ததுனுதான் நான் சொல்லுவேன். நான் பாப்புலர் (திரள்) அரசியலோட ஆள் இல்லை. ஆனால் பாப்புலர் (திரள்) அரசியலோட தொடர்ந்து தொடர்பில் இருக்குறவன். ஆனால் சிற்றிதழ் வழியாக அறிந்த அரசியல்தான் அதைப் பற்றியும் சில நுட்பமான புள்ளிகளை பாக்குறதுக்கு எனக்கு சொல்லி கொடுத்திருக்கு. இலக்கியம் பற்றி, நவீன வாசிப்பு கோட்பாடுகள் பற்றி, அதனுடைய பொருத்தப்பாடுகள் பற்றி நிறைய விஷயங்களை அதுதான் அறிமுகப்படுத்தி இருக்கு. சில நேரங்கள்ல அதுல தாறுமாறா தரக்குறைவான வார்த்தைகளாக் கூட இருக்கும். ஆனால் அது ஒட்டுமொத்தமா உருவாக்கி இருக்குறதைப் பார்த்தால் இன்னைக்கு இவ்வளவு சமூக வலைதளங்கள் இருந்தும் கூட தரமுடியாத ஒன்றை அது தந்திருக்கு. அப்படியான அந்த வாதங்களை படித்து உருவாகி வந்த எனக்கு அறிமுகமாகிறவர் தான் அயோத்திதாச பண்டிதர். அவரை படிக்க ஆரம்பிக்கும்போது அவரை நாட்டுப்புற தரவுகளை கொடுக்குறவராக வாசிக்கவில்லை. தலித் எழுச்சிக்கான ஒரு குறியீடாத்தான் பார்த்தேன். ரொம்பொ லேட்டாத்தான் அவரைப்பற்றிய என்னுடைய இன்றைய சிந்தனைகளுக்கு வந்தேன். அயோத்திதாசரை புரிஞ்சுகொள்வதற்கு இரண்டு பேர் எனக்கு உதவி செய்தார்கள். ஒருத்தர் டி. தருமராஜ். இன்னொருத்தர் ரவிக்குமார். டி.தருமராஜ் இன்று வரையிலும் அயோத்திதாசர் பற்றி எழுதி வருகிறார். ரவிக்குமார் ஆரம்ப நிலையில சிலவற்றை எழுதியிருக்கார். குறிப்பா இந்த வட்டார பௌத்தம் அப்படிங்குறதை பார்க்குறதுக்கு ரவிகுமாரோட சில கட்டுரைகள் எனக்கு உதவியாக இருந்தது. டி.தருமராஜனின் சில வரிகளும் சொல்லும் முறையும் வந்து நம்ம தாக்கும். அவர் தர விரும்பும் ஒட்டுமொத்த சித்திரம் ஒரு புறம் இருக்க, சிற்சில விசயங்கள் நமக்கு சில திறப்புகளை கொடுக்கும். அப்புறம் பொதுவாகவே எனக்கு வேற சில அறிவாளிகள் தொடர்பும் உருவானது. ஆனால் வெகு விரைவாகவே அதுல இருந்து விடுபட்டுட்டேன். சில கசப்பான அனுபவங்களால. இன்னைக்கு எனக்கு எந்த பெர்சனாலிடி பற்றியும் பெரிய வியப்போ ஈர்ப்போ இல்லை.
பிரபாகரன்: ஆஃப் தி ரெகார்டா யாருனு சொல்லுவீங்களா?
ஸ்டாலின்: (சிரிப்பு) அதெல்லாம் ஒன்னும் இல்லை. அ. மார்க்ஸ், ரவிக்குமார் ரெண்டு பேருடைய சிந்தனைகளுடைய தாக்கமும் என் கிட்ட ஆரம்பத்துல இருந்திருக்கு. ஆனால் ரொம்பொ சீக்கிரமாவே அதுல இருந்து விடுபட்டுட்டேன். அவங்க ரெண்டு பேரும் எனக்கு எப்படி சிந்திக்கணும்னும் சொல்லிக்கொடுத்தாங்க.எப்படி சிந்திக்கக்கூடாதுன்னும் சொல்லிக் கொடுத்தாங்க.டி.தருமராஜனும் என் அயோத்திதாசர் வாசிப்பு மீது தாக்கம் செலுத்தியவர் தான்.அவரையும் தூரத்திலிருந்து பார்த்துக் கொள்பவன் தான் நான்.
அயோத்திதாசரை அவங்க பார்வை வழியா பார்க்காம எனக்குனு சில விஷயங்களை வைத்து புரிஞ்சுகிட்டேன். அதேவேளையில் அதை நான் திட்டமிட்டு செய்யவில்லை.ஆனால் அதை தாமதமாக தான் நாம என்ன பண்ணியிருக்கோம் என்று யோசிச்சேன். ஆரம்பத்தில் சில விஷயங்களை புரிந்துகொண்டு இருக்கேன், அதுல இருந்து கொஞ்சம் நகர்ந்து வந்திருக்கேன், அதுல இருந்து சில விஷயங்களை பார்க்க முயற்சி பண்ணி இருக்கேன், அதுல இருந்து சில விஷயங்களை விளக்க முயற்சி பண்ணி இருக்கேன் என்றுத் தோன்றியது. அதுக்கு அப்புறம் என்னுடைய யோசிக்கும் முறையையே அயோத்திதாசருடைய சிந்தனைகள்தான் வடிவமைத்தது. எந்த அளவுக்கு உதவியிருக்கிறதென்றால், பிற விஷயங்களை பார்க்குறதுக்கு மட்டும் எனக்கு அயோத்திதாசர் உதவி பண்ணலை, அயோத்திதாசரை புரிஞ்சுக்கிறதுக்கே கூட எனக்கு ‘அயோத்திதாசரிய சட்டகம்’ தான் உதவி பண்ணுச்சு. அந்த சிந்தனை வழியாக பார்க்கும்போது அயோத்திதாசரை முழுக்க ஏற்பது மறுப்பதுங்குற என்ற இடத்துக்கு போகாம அயோத்திதாசரை எப்படி நாம பாக்கணும், அவருடைய பங்களிப்பை எப்படி நாம புரிஞ்சுக்கணும் அப்படின்னு எனக்கு புரிஞ்சது. என்னுடைய அயோத்திதாசரைப் பற்றிய கடைசி மூன்று நூல்களான பெயரழிந்த வரலாறு, அயோத்திதாசரின் சிந்தை மொழி, வைத்தியர் அயோத்திதாசர் போன்றவை அயோத்திதாசரைப் பற்றியதே கிடையாது. அதுல அயோத்திதாசருடைய சிந்தனைகளை புரிஞ்சுக்குறதுக்குதான் முயற்சிச்சிருப்பேன். அதுல இருந்துதான் நீங்க கேட்ட ஒரு விஷயத்தை எப்படி பார்க்கணும்ங்குறதை புரிஞ்சுக்குறேன்.
இதில் நீங்கள் கேட்டதுக்கு நேரடியாக பதில் சொல்லனும்னா, அயோத்திதாசர் மேல வைக்கப்படுகிற மாபெரும் குற்றச்சாட்டே அவர் காட்டக்கூடிய நூல்களுக்கு…
சுனில்: சான்றுகள் இல்லை…
ஸ்டாலின்: சான்றுகள் இல்லை, அவர் காட்டக்கூடிய பாடல்கள் இல்லை, அல்லது அவர் காட்டக்கூடிய பாடல்கள்ல இருக்குறதா அவர் சொல்லக்கூடிய வரிகள் இல்லை அப்படிங்குறதுதான். அயோத்திதாசர் மேல வைக்கப்படுற விமர்சனங்களுக்கு எல்லாம் நாம பதில் எழுத வேண்டியது இல்லை. அப்படின்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். முன்னாடியே சொன்ன மாதிரி முழுக்க முழுக்க ஒரு தமிழ் இலக்கிய பின்புலத்துல இருந்து உருவாகி வந்த ஆளு. எனக்கு ஆங்கில வாசிப்பு இல்லை. ஆனால் என்ன முடிவுக்கு வந்தேன்னா அயோத்திதாசர் சொல்லக்கூடிய பெரும்பான்மையான கருத்துக்கள், அதுங்க சரியோ, தப்போ எப்படியும் இருக்கட்டும். ஆனால் அவர் கதை பண்றாருன்னு நாம சொல்றோம்ல, அது எல்லாமே நம்ம மரபுல இருந்திருக்கு அப்படிங்குறதை தான் சொல்றேன். இது ஒன்று.
இரண்டாவது, சாதி பற்றிய உள்ளூர் புரிதல் என்ற என்னுடைய பார்வை இருக்கிறது இல்லையா?அதனை முழுக்க அயோத்திதாசரிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டேன். அது அயோத்திதாசரைப் பற்றின புரிதலா இல்லாம, அயோத்திதாசர் ஒரு விஷயத்தை எப்படி பார்க்குறார் அப்படிங்குறதயும், அதிலிருந்து நாம எப்படி சிந்தனைகளை வகுத்து தொகுத்து எடுக்குறது என்கிற புரிதலாக இருந்தது. புனைதல், திரிபு, திரும்பத் திரும்பச் சொல்லுதல், காலத்தால் பழமையாக்குதல் என்கிற அம்சங்கள் அவர் எழுத்தில் தொடர்ந்து ஓடிகிட்டே இருக்கிறது. ஆனால் அதை தனியாக பிரித்தெடுத்து சாதியமைப்பை புரிந்து கொள்வதற்கான சட்டகமாக கொள்ள முடியும் என்பவற்றை நானாக உருவாக்கிக்கிட்டேன். இதுக்கு முன்னாடி அயோத்திதாசர் பற்றி எழுதியவர்கள் யாரும் இந்த ஏரியாவுல வொர்க் பண்ணலை.
சுனில்: ஏறத்தாழ நீங்க சொல்றதை வெச்சு பார்க்கும்பொழுது, இடது சாரிகள் வந்து ஒரு நாட்டாரியல் பற்றிய புரிதலை அடையும்பொழுது அதுக்கு ஒரு எல்லை இருக்கு. அங்க இருந்து சபால்டர்ன் ஸ்டடீஸால அடுத்த கட்ட நகர்வுகள் நிகழ்த்தப்படுது. அதுக்கு அப்புறம் அவங்களோட எல்லைகளும் அயோத்திதாசரால நிரப்பப்படுதுனு புரிஞ்சுக்கலாம். இதுல அயோத்திதாசருடைய இந்த ஹைப்ரிட் மெதடாலஜியை உருவாக்குனது வந்து உங்களோடு தனித்துவமான பங்களிப்புனு சொல்லலாம்.

விக்னேஷ்: இதுல எனக்கு ஒரு கேள்வி இருக்கு சார். இப்போ உங்க அயோத்திதாசர் கட்டுரைகளை படிக்கும்போது நீங்க எங்க முடியிறீங்க அயோத்திதாசர் எங்க ஆரம்பிக்குறாரு. அல்லது அயோத்திதாசர் எங்க முடியிறாரு நீங்க எங்க ஆரம்பிக்குறீங்கனு தெரியாத அளவுக்கு உங்க ஆளுமைகள் கட்டுரைல பினைஞ்சு இருக்குறதை பார்க்குறேன். இதுல எனக்கு பெரிய ஆச்சரியமா இருக்குறது பாரதி மாதிரி ஒருத்தர் வந்து “பட்டணத்து பட்லர்கள்” அப்படினு சொல்லக்கூடிய அயோத்திதாசருக்குத்தான் பாரதியைவிட அதிகமான இந்திய வேர்கள் இருக்குறதா நீங்க சொல்றீங்க. பாரதிக்கு கூட தியோசாஃபிக்கல் சொசைட்டி, நவவேதாந்த சிந்தனைகளுடைய தாக்கமெல்லாம் இருக்கு. ஆனால் அயோத்திதாசருக்கு முழுக்க லோக்கல் ரூட்ஸ் (உள்ளூர் வேர்கள்) இருக்குறதா நீங்க சொல்றீங்க. அயோத்திதாசர் மாதிரி ஒருத்தருக்கும் வெஸ்டர்ன் சோர்சசை (மேற்கத்திய ஆவணங்களை) அனுகக்கூடிய வாய்ப்புகள் இருந்திருக்கு. அது கிடைக்காத இடத்துல அவர் இல்லை. அப்போ அவரு டெலிபரேட்டாத்தான் (வேண்டுமென்றே) அதெல்லாம் அவாய்ட் பண்ணியிருக்காரா?
ஸ்டாலின்: இது முக்கியமான கேள்வி. அயோத்திதாசர் மரபிலிருந்து உருவானவர், அவர் பேசுன பல விஷயங்களுக்கு மரபில் இடமிருந்தது என்று கூறுவதால் அவர் நவீனத்திலிருந்து எதுவும் பெறவில்லை என்று நினைச்சுடக் கூடாது. அந்த கான்ஷியஸ்னசோடதான் (போதத்தோடுதான்) நான் எப்பொவுமே அயோத்திதாசரை பேசுகிறேன். அயோத்திதாசர் பௌத்தத்தை அடைஞ்சதே நவீனத்தின் வழியாத்தான்.
விக்னேஷ்: ஆல்காட்.
ஸ்டாலின்: ஆமாம். இல்லைன்னா அவர் என்ன பண்ணி இருப்பாருனு நமக்கு தெரியல. மற்றவங்க எல்லாருமே வேற ஏதேதோ வழிகளை பயன்படுத்துனபோது இவரு இந்த வழியை எடுத்துகிட்டாரு. அன்றைக்கு வந்து ஐரோப்பியர்களால முன்வைக்கப்பட்ட ரெண்டு மதங்கள் வந்து கிறிஸ்தவமும் பௌத்தமும். ஆனால் கிறிஸ்தவம் வந்து ஐரோப்பிய மதமாகவே இருந்தது. ஆனால் பௌத்தம் அவங்க இங்க வந்து ஏற்றுக்கொண்ட மதமாத்தான் இருந்தது. அப்போ அவங்க அந்த மதத்தை கண்டுபிடிச்சு அதைப் பற்றின உரையாடல்கள்ல ஈடுபட்டிருந்தபோது அவங்ககூட அயோத்திதாசருக்கு ஏற்பட்ட தொடர்பு, தவிர அன்னைக்கு இருந்த அறிவுச்சூழல்ல பௌத்தம் ஏற்படுத்துன தாக்கம், இதனாலதான் அவர் பௌத்தத்தை நோக்கி போறாரு. இது முதலாவது.
ரெண்டாவது, அவரு தீவிரமான ஆங்கில அரசு ஆதரவாளர். அப்போ பொலிடிகலா பிரிட்டிஷ் ஆதரவாளரா இருந்த ஒருத்தரு. அவங்க இங்க இருந்து வெளியேறவே கூடாது, அவங்க இங்க இருந்து வெளியேறிட்டா நமக்கு நன்மையே கிடைக்காதுன்னு சொல்ற ஒருத்தரு, அவங்களுடைய கிறித்தவ மதத்தை தழுவலை, அந்த பீரியடோட தாக்கமும் அவர் கிட்ட இருக்கு. ஆனால் அந்த பீரியடோட புறநிலை தாக்கங்களை எடுத்துக்குற அவரு ஒரு கிறிஸ்தவனா மாறவே இல்லை. இது ரொம்பொ ஆச்சரியமா இருக்கு. அவர் அதை செஞ்சிருந்தா நிறைய அட்வான்டேஜு கிடைச்சிருக்கும். கிட்டத்தட்ட ரெட்டைமலை சீனிவாசன் இவர் மேல வெக்கிற விமர்சனமே அயோத்திதாசர் அரசியல் உரிமைகளை முக்கியமானதாக நினைக்கவில்லை என்பது தான். ஆனால் அயோத்திதாசர் கிறிஸ்தவம் சாராம பௌத்தத்தை தழுவுறாரு. அவர் நடத்துன தமிழன் பத்திரிக்கையில மேலை நாடுகள்ல என்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் வந்துகிட்டு இருக்குனு தொடர்ந்து எழுதக்கூடிய ஒருத்தரு, அங்க வரக்கூடிய புதிய இயந்திரங்களைப் பற்றியெல்லாம் எழுதக்கூடிய, அப்படி யாராவது எழுதி அனுப்புனாங்கன்னா அதை ஆதரிக்கக்கூடிய ஒருத்தரு, ரொம்பொ ஆச்சரியகரமா பௌத்தத்தை பற்றி யோசிக்கும்போது மட்டும் முழுக்க வெள்ளையர்களுடைய பார்வையை தவிர்த்தாரு. அது அவருடைய பண்பாட்டு பார்வையோட பலம் என்று நான் நினைக்குறேன். அம்பேத்கர் கூட பௌத்தத்தை பற்றி விளக்கும்போது நிறைய ஐரோப்பிய தியரீஸ்ல இருந்து விளக்குறதை நாம பாக்குறோம். ஆனால் அயோத்திதாசர்கிட்ட இது டோட்டலாவே இல்லாம அவர் முழுக்க இங்க இருக்குற ரெண்டு விதமான சோர்சசை எடுத்துக்குறாரு.
ஒன்று அந்த காலக்கட்டத்தின் புலமை மரபு. அந்த காலக்கட்டத்தின் புலமை மரபினர் என்று சொல்றதுக்கு காரணம் இருக்கு. அவங்கள் இன்றைக்கு இருக்குற புலமை மரபினர் கையாண்ட நூல்களை எல்லாம் கையாண்டவர்கள் இல்லை.அன்றைக்கு வாசித்த, கிடைத்த பிரதிகள் வேறாக இருந்தன. அயோத்திதாசர் அதில் இருந்தவர்.
இரண்டாவதாக மக்கள் வழக்காறுகள்ல இருந்த விஷயங்களையும் அவர் எடுத்துக்குறாரு.நாம இன்னைக்கு பிரிக்குற மாதிரி கிளாசிக்ஸ்-நாட்டுப்புறம்ங்குற (செவ்வியல்-நாட்டுப்புறம்) பிரிவெல்லாம் அவரிடம் இல்லை. எல்லாமே ஒன்னுதான். அவர் இரண்டையுமே எடுத்துக்குறாரு.
எழுத்துப் பிரதிகளை எடுத்துக்கும் போது, அது தான் அயோத்திதாசர் மேல வைக்கப்படுற குற்றச்சாட்டாகவும் இருக்கு. அவர் சொல்ற பாட்டுல இருக்கும் ஒரு வரி இன்னைக்கு கிடைக்குற நூலில் இல்லை. அவர் ‘நாரதீய புராண சங்கைத் தெளிவு’ என்று ஒரு நூலை சொல்றாரு. அப்படி ஒரு புக்கே இல்லைன்னு சொல்றாங்க. இதுல என்னன்னா அயோத்திதாசர் ஏடு படிச்சவர் மட்டுமில்லை. ஏட்டை தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய ஆளா இருந்திருகாரு. சான்றுகளையே அவர் ஏட்டுல இருந்துதான் எடுத்துக்குறாரு. அன்னைக்கு புக்கா வராத பல பாடல்களை நேரா தமிழன் இதழ்ல அவர் பிரின்ட்ல கொண்டு வராரு. “உதயணன் கதையை” ஒன்றரை வருஷம் தொடராக தமிழன் இதழில் வெளியிட்டார். அது ஏட்டிலிருந்தோ இன்னொரு நூலிலிருந்தோ வெளியிடவில்லை. ஏட்டுப் பிரதிகளிலிருந்து எடுத்து வெளியிட்டார். ஆனால் என்ன நினைக்குறாங்கன்னா அவர் காட்டுகிற ஏட்டுலேயும், இவங்க கிட்ட இருக்குற நூல்களிலும் இருக்குற பாடல்கள் ஒத்துப்போகனும்னு நினைக்குறாங்க. இதுல சரி-தப்புக்கு இடமே கிடையாது. இதுல எது சரின்னா முதல் முதல்ல ஏட்டிலிருந்து அச்சுல பதிப்பிச்சவரு எதை சரின்னு போட்டாரோ அதுதான் சரி. அச்சு வந்து ரொம்பொ அதிகாரப் பூர்வமான ஒன்னா மாறிடுது. அதுல இருக்குறதுதான் சரின்னு நினைச்சுகிட்டுதான் அயோத்திதாசர் காட்டுற ஏடுகள்லாம் தப்புங்குறாங்க. அவர் ‘பூம்பாவை பத்து’ என்று ஒரு பத்து பாடல்களை காட்டுகிறார். அது இன்னைக்கு சம்பந்தரோட பாடல்களா இடம் பெற்றிருக்கு. ஆனால் அவர் காட்டுற ஆதாரங்களை எல்லாம் பாத்தீங்கன்னா அவர் தனியா காட்டுறதுதான் சரின்னு தோன்றுகிற அளவுக்கு ஆதாரம் காட்டுறாரு. அவர் அவற்றை மொத்தமா பெளத்தம் என்று சொல்லி விடுகிறார். இது அயோத்திதாசரிடம் இருக்குற ஒரு முறை.
இன்னொன்று மக்கள் வழக்காற்றுல இருக்குற விஷயங்களையும் கணக்குல எடுத்துக்குறாரு. அந்த இடத்துல அயோத்திதாசர் ஒரு உரையாசிரியர் போல திகழ்கிறார். தமிழ்ல உரையாசிரியர் என்றால் என்ன? ஏட்டிலோ புத்தகத்திலோ இருக்குற பாட்டுக்கு விளக்கம் எழுதுறது தான். நம்மளோட இலக்கிய அறிவு எல்லாமே யாரோ ஒரு உரையாசிரியரோட உரைல இருந்து வந்ததுதானே. இவர் அதே மாதிரி இந்த சடங்குகள்ல வழக்காறுகள்ல இருக்குற விஷயங்களுக்கு எல்லாம் விளக்கம் சொல்லித்தான் எடுத்துக்குறாரு. இங்க ஏன் தேங்காய் உடைக்குறாங்க தெரியுமா? இங்க ஏன் பலிச்சோறு போடுறாங்க தெரியுமா? இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா என்றெல்லாம் சொல்றார். இதுதான் அவரோட முக்கியமான பலம்னு நான் நினைக்குறேன். கிட்டத்தட்ட எல்லாத்துக்குமே ஒரு மறுவிளக்கம் கொடுத்துதான் அவர் அதை எடுத்துக்குறாரு. அப்போ மக்கள் வழக்காறுகளுக்கு, சடங்குகளுக்கு ஒரு உரை சொல்ற மரபு ஒன்னை அவர் உருவாக்குறாரு.
ஏன் நேராக விளக்கம் சொல்ல வேண்டியதுதானே? எதுக்கு ஏற்கனவே இருந்த விளக்கத்தை மறுத்து இவர் ஒரு விளக்கம் சொல்றாருனு உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.
அவரு என்ன சொல்றாருன்னா இது ஒரு காலத்துல இது ஒரு அர்த்தம் இருந்தது. அது நல்ல அர்த்தத்துல இருந்தது. ஆனால் இன்னைக்கு அது தவறான அர்த்தத்துக்கு மாறிடுச்சு. நீங்க இன்னைக்கு அந்த தவறான அர்த்ததில் தான் அதை புரிஞ்சுகிட்டு இருக்கீங்க. அதேவேளையில் மக்கள்கிட்ட இருக்குங்குறதாலயே நாம அந்த தவறான அர்த்தத்தை எடுத்துக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் சொல்ல வருகிற விசயம். இங்க தான் இடதுசாரி ஆய்வாளர்களிடமிருந்து அயோத்திதாசர் வேறுபடுகிறார். இடதுசாரி ஆய்வாளர்கள் வழக்காற்றின் முக்கியத்துவத்தை விளக்கிய அதே நேரத்தில் மக்களால் கையாளப்பட்டது என்று கூறி அந்த வழக்காற்றை அப்படியே அங்கீகரிப்பார்கள். ஒரு பாடலை ரெகார்ட் பண்ணுனா அதை அப்படியே வரலாறா எடுத்துக்குவாங்க. ரொம்ப சிலர்தான் அதை விளக்க முயற்சி பண்ணிருக்காங்க. நா. வானமாமலை ‘முத்துப்பட்டன் கதையை’ கலெக்ட் பண்ணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வழியா பதிப்பிச்சபோது முத்துப்பட்டன் கதையில நடந்த பிற்கால சேர்க்கைகளையெல்லாம் சொல்லியிருக்காரு. ஆனால் பின்னால கல்விப் புலத்துல இருந்து வந்த நாட்டார் வழக்காற்றியல் எல்லாத்துலேயுமே என்ன பண்றாங்கன்னா: ஒரு ஊருக்கு போறது, அங்க அவங்க சொல்ற ஒரு பழமொழியை அப்படியே கலெக்ட் பண்ணிட்டு வர்ரது, அதுக்கு வரலாறுன்னு ஒரு இடத்தை கொடுத்திடுறது. ஆனால் அயோத்திதாசர் அப்படி பண்ண மாட்டாரு. அது காலம் காலமா மக்களிடம் இருக்குறதைனாலேயே அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. அதை தலைகீழாக்கம் செஞ்சு பாக்கனும், அதை உடைக்கணும், அதை பிரிக்கணும், அதை வேற விதமா இணைக்கணும் இப்படி எல்லாம் பார்க்கணும்னு என்றெல்லாம் சொல்றாரு. இப்படி செய்றதுக்கு அவருக்கு எது பயன்பட்டிருக்கணும்னு நமக்கு தோனுதுன்னா அவரு இந்த வைத்திய ஏடுகளை வெச்சிகிட்டு செய்த பயிற்சிதான். ஏன்னா ஒரு வைத்திய ஏடு எல்லாரும் படிக்கிற மாதிரி இருக்காது. அதுல ஒரே சொல்லுக்கு வெட்டி வெட்டி வெட்டி ஒரு பத்து பொருள் இருக்கும். அது ஒரு பரிபாஷைத் தன்மையோட இருக்கும். அந்த தன்மையைத்தான் அவர் இந்த லோக்கல் ஆதாரங்களை எடுத்துக்குறதுக்கு பயன்படுத்துறாரு. அவர் சொன்னதெல்லாம் உண்மைதானா அது உண்மையா இருக்க முடியுமா அப்படின்னு நீங்க கேட்டீங்கன்னா அது உண்மையாகவும் இருக்கலாம்,புனைவாகவும் இருக்கலாம்…
 |
கள ஆய்வில் ஸ்டாலின் |
சுனில்: ஆனால் அவர் எடுத்துகிட்ட சட்டகத்துக்கு அது பொருந்துது.
ஸ்டாலின்: ஆமா. இன்னொன்னு என்ன சொல்றேன்னா, நம்ம தமிழ் மரபுங்குறதே பல மரபினரால தரப்பட்டு வந்திருக்ககூடிய விளக்கங்களால் ஆனதுதான். நாம நீண்ட காலமா ஒரு விளக்கத்துக்கு பழகி வந்திருக்குறதால நம்ம என்ன நம்புறோம்னா அதுதான் சரினு நம்புறோம். உதாரணமா பரிமேலழகர் திருக்குறள்ல வர்ர இந்திரனுக்கு இந்து மதத்துல இருக்குற இந்திரன சொல்றாரு. ஆனால் சைவரா இருக்கக்கூடிய திரு. வி. க. வந்து அந்த இந்திரன் நிச்சயமாக இந்து மத இந்திரனா இருக்க வாய்ப்பில்லை, இது நிச்சயமாக ஜைன மரபுல இருக்குற இந்திரன்தான் என்று சொல்றாரு. பௌத்த மதத்தில் எல்லாத்தையும் துறந்த புத்தருக்கு இன்னொரு பெயராக இந்திரன் இருக்கு. ஜைனத்துல தீர்த்தங்கரர்களுடைய பெயராக இந்திரன் இருக்கு. அவன் எப்படி பல பெண்களை காம வேட்கையில சூரையாடுனவனா இருக்க முடியும்?அப்போ அயோத்திதாசருடைய விளக்கம் சொல்லப்பட்டு வராத காரணத்தால அவர் என்ன புதிதாக சொல்கிறார், அது உண்மை இல்லையோ என்ற சந்தேகம் நமக்கு வருகிறது. அது ஒரு வகையான விளக்கம்.
சுனில்: இதுல இருந்து யோசிச்சுப் பார்த்தால் அயோத்திதாசர் மாரியம்மனைப் பற்றி சொல்றத புரிஞ்சுக்க முடியுது. நாம சாதாரணமா சின்ன ‘ரி’ போட்டுத்தான் மாரியை எழுதுவோம். அது வந்து மாரிங்குறதை ஒரு அழிவு டெய்டியா ஆக்குது. சாதாரணமா மாரிங்குறவ நோயை கொண்டு, உடம்பு ஃபுல்லா முத்துமாரியா வந்துடுறா. அதுனால அந்த நோய் நமக்கு வந்துற கூடாதுங்குறதுக்காக அவளை வேண்டுறதாத்தான் பொதுவான பெர்செப்ஷன் (பார்வை) இருக்கு. ஆனால் அயோத்திதாசர் என்ன பண்றாரு வல்லின ’றி’ போடுறாரு. இப்போ இதுனால என்ன ஆகுதுன்னா அவ மொத்தமா இந்த நோயை மாற்றக்கூடிய தெய்வமா மாறிடுறா. இது வந்து எனக்கு ரொம்ப முக்கியமா படுது. அதாவது மொழியில ஒரு சின்ன விஷயத்தை மாத்துறதன் வழியா நாம மொத்தமாவே ஒரு விஷயத்தை பற்றின பெர்செப்ஷனையே மாத்துறோம். இதைப் பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க?
ஸ்டாலின்: அதாவது அயோத்திதாசர் அவருக்கு சாத்தியமான எல்லாவற்றையும் கையாளுறாரு. அதனாலதான் அவரிடம் வழக்காறு எழுத்து என்கிற பிரிவெல்லாம் இல்லை. நாம ஒரு பொருளை இருக்குங்குற முடிவுக்கு எப்படி வர்ரோம்? ஒன்னு நாம அந்த பொருளை பார்த்திருக்கணும். ஏதோவொரு விஷயத்துல இருந்து அறிந்திருக்கணும். அதிலிருந்து தான் நாம உண்மைங்குற இடத்துக்கே வர்ரோம். ஆனால் நான் என்ன சொல்லுவேன்னா அந்த பொருள் அங்க இல்லாம கூட இருக்கலாம். ஆனால் ஒரு பத்து பேர் இருக்கு இருக்குனு சொல்லி வர்றாங்க என்று வெச்சிக்குங்க. அது அங்க இல்லைன்னாலும் அது இருக்குனு கருதப்படும். அந்த பொருள் அங்க இருக்கலாம் இருந்தாலும் அது அங்க இல்லை இல்லைன்னு சொன்னால் அது இல்லைன்னு ஆகிடும். அப்போ நான் என்ன நினைக்குறேன்னா, ஒரு பொருள் இருப்பதனால் மட்டும் அது உண்மை ஆகிவிடுவதில்லை. அது சொல்லப்படனும், தொடர்ந்து சொல்லப்படனும், அது யாரால் சொல்லப்படுகிறது, அதிகாரப்பூர்வமானவர்களால் சொல்லப்படுகிறதா, அப்படிங்குறதையெல்லாம் பொறுத்துதான் இங்க உண்மை என்கிற ஒன்றே உருவாகுது. இப்போ இப்படி சொல்றதுனால அப்போ உண்மைங்குற ஒன்றே இல்லையா அப்படின்னு கேட்க வேண்டியது இல்லை. உண்மை இருக்கலாம். ஆனால் நாம உண்மைனு நம்பிகிட்டு இருக்குறதெல்லாம் மட்டும்தான் உண்மைனு நாம நம்ப வேண்டியது இல்லைனு சொல்றேன்.
சுனில்: உண்மைங்குறதே ஏற்பு சார்ந்ததா இருக்கு.
ஸ்டாலின்: ஆமாம். அது நெரேஷந்தான் (கதையாடல்தான்). நீங்க எதை சொல்றீங்க, எப்படி சொல்றீங்க எத்தனை முறை சொல்றீங்க அப்படிங்குறதெல்லாம் சேர்ந்தது தான் அது. அப்படி சொல்லிகிட்டே இருக்கும்போது இல்லாததுகூட இருக்குறதா கருதப்படலாம். சொல்லலைன்னா இருக்குற ஒன்னுகூட இல்லாம போய்டலாம். கிட்டத்தட்ட அயோத்திதாசர்ல இருந்து நான் பெற்றுக்கொண்ட ஐடியா இது. இன்னைக்கு பல சமூக நிகழ்வுகளை புரிஞ்சுக்க எனக்கு இது உதவுது.
சுனில்: இப்போ இந்த ஐடியாவ வந்து இன்னைக்கு ஆர்ம்ஸ்ட்ராங்க் கொலை வரைக்கும்கூட பயன்படுத்தலாம். ஒரு தரப்பு வந்து அவரை ஒரு கட்டப்பஞ்சாயத்து பண்றவரா சொல்றாங்க. இன்னொரு தரப்பு வந்து அவரை கல்விக் கொடை கொடுக்கக்கூடியவரா சொல்றாங்க. இப்போ இந்த பார்வை இருக்குல்ல, இது வந்து புராணங்கள்ல அசுரர்களுக்கு கொடுக்கப்படக்கூடிய டெஃபினிஷனுக்கு (வரையறைக்கு) நெருக்கமா இருக்கு. எனக்கு வந்து ஆர்ம்ஸ்டிராங்கை மஹாபலியோட தொடர்ச்சியா பாக்க முடியுது.
ஸ்டாலின்: ஆமாம். இதே ஆர்ம்ஸ்டிராங்கை வந்து அதிகாரப் பூர்வமாக கருதப்படக்கூடியவர்கள் பாசிடிவா சொல்ல ஆரம்பிச்சிருந்தா அதோட அர்த்தம் என்னவா இருந்திருக்கும்? அல்லது இந்த சமூகத்துல அதிகாரப் பூர்வமா ஒன்ன உருவாக்க முடியாத இடத்துல இருக்குறவங்க அவரைப் பற்றி பாஸிடிவா சொல்லும்போது அது இங்க என்னவா பார்க்கப்படுது? அப்போ யாரு சொல்றாங்க, எப்படி சொல்றாங்க, எத்தனை முறை சொல்றாங்க, இதெல்லாம் இங்கே முக்கியமாகிவிடுகிறது. அப்போ மக்களுடைய நினைவுங்குறதே என்ன? என்ற கேள்வி எழுந்துவிடுகிறது. ஜனங்களுடைய நினைவுதான் வரலாறுன்னு சொன்னால் அந்த நினைவு மாறாதது அல்ல. நினைவு மாறிக்கொண்டே இருக்கிறது. இப்போ ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி எனக்கு இருக்குற மெமரி (நினைவு) பத்து வருஷத்துல வேற ஒன்னா மாறிடுது. நான் எலவனாசூர் கோட்டைன்னு ஒரு ஊருக்கு போனேன். அங்க ஒரு சிவன் கோவில் இருக்கு. அந்த சிவன் கோவிலை பற்றி ஒரு கதை சொல்லப்படுது. அதை வந்து ஊருக்கு வெளியே ஆடு மேய்ச்சுகிட்டு இருந்த ஒருத்தர்தான் என்கிட்ட சொன்னாரு. அப்புறம் அந்த கோவிலுக்கு போனப்போ அந்த கோவிலுக்கு ரெகுலரா வரக்கூடிய வேற ஒருத்தங்ககிட்ட அந்த கோவிலுடைய தலவரலாறைக் கேட்டேன். ரெண்டு பேர் சொன்னதுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. என்ன வித்தியாசம்னு சொன்னால், அந்த ஆடு மேய்க்கிறவர் சொல்ற கதையைத்தான் இவங்களும் சொன்னாங்க. ஆனால் அதுல இருக்குற பாத்திரங்கள் நிகழ்வுகள் பலவும் அங்க அங்க மாறியிருக்கு. இது எப்படி மாறியிருக்கும்னு சொன்னால், அந்த ஊர்ல ஒரு பத்து நாள் திருவிழா நடக்குதுனு வெச்சிக்கோங்களேன், அப்போ அங்க பிரசங்கம் நடத்துறாங்க. அந்த பிரசங்கத்துல அந்த ஊர் கோவில் உருவான விதத்தையும் சொல்றாங்க. அதுல ஒருத்தர் பேசுறாரு. அப்புறம் அந்த ஊர் ரேடியோ செட்டுல தொடர்ந்து அந்த கதை சொல்லப்படுது. அப்புறம் அவங்க குடும்பத்துலேயே தலபுராணத்தை படிச்சு சொல்லக்கூடிய ஆட்கள் இருக்காங்க. அப்போ அது என்னவா ஆகிடுதுன்னா அவங்களுக்கு இந்த கோவிலைப் பற்றி இருக்குற மெமரி இருக்குல்ல அதோட இதெல்லாம் கலந்து அந்த கதையே மாறிடுது. அப்போ நினைவுல இருக்குறதாலேயே அது மாறாததுன்னோ புனிதமானதுன்னோ நாம நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. அது ஆதியில இருந்து விஷயத்தை ஆப்படியே காத்து வருதுன்னு சொல்ல முடியாது. அதுல பல விஷயங்கள் சேருது பல விஷயங்கள் போகுது. இந்த இடத்துலதான் அயோத்திதாசர் சொல்லப்படக்கூடிய கதைகளை அப்படியே எடுத்துக்குற போக்கை விட்டுடுறாரு. அவருடைய தேவைக்காகதான் அதை பண்றாருங்குறது இருக்கலாம். ஆனால் நாம அதையெல்லாம் ஒத்திவெச்சுட்டு ஒரு பொதுவான விஷயமா அதைப் பார்த்தால்கூட எப்படி நினைவுகள் வந்து மாறிகிட்டே இருக்கு, எப்படி ஒன்னோட ஒன்னு மோதுது, அப்படிங்குறதையெல்லாம் பார்க்க முடியுது. இது எல்லாத்தையும் விட மக்கள் மறக்க விரும்புகிற நினைவுகளும் இருக்கு.
இப்போ இந்த மாரி பற்றி பேசும்போது, தமிழ் பழைய மொழியாக இருந்தாலும் ஒரு மொழியாக செம்மை ஆனது இருபதாம் நூற்றாண்டில் தான். பேசுற விதத்துல, எழுத்தமைவுல, அதனுடைய ஒழுங்குல எல்லாமே இருபதாம் நூற்றாண்டுலதான் கட்டமைந்தது. அதுல ரொம்பொ மாறுனது என்னன்னா, எந்த சொல்லுக்கு எந்த ‘ல’ போடணும், எந்த ‘ர’ போடணும்ங்குறதுதான். உதாரணமா “பாலிக்கு” நாம “பள்ளிக்கு” போடுற ‘ளி’ போட்டுட்டு இருந்தோம். இப்போ நாம அப்படி போட மாட்டோம்.இருபதாம் நூற்றாண்டில் தான் இது ஆரம்பிக்கிறது. அப்போ அயோத்திதாசர் கையாளுற இந்த “மாறி” இருக்குல்லையா, அதுல எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அந்த காலத்துல எழுதுன பல பேருடைய எழுத்துக்களை நீங்க பார்த்தீங்கன்னா அப்படித்தான் இருக்கும். கிட்டத்தட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டுடைய முடிவுலதான் நாம தமிழ் சொற்களையே ஒழுங்கு பண்றோம். அது அவருக்கு பயன்படுது. அந்த சொற்களை அவர் பயன்படுத்திக்குறாரு. அது அவருடைய மெதடாலஜிக்கு (ஆய்வு முறை) உதவி பண்ணி இருக்கு. புதுசாவும் இருக்கு. இதுனாலதான் பொதுவா ஆய்வாளர்களை விட புனைவு எழுத்தாளர்கள்தான் அயோத்திதாசரால ஈர்க்கப்படுவாங்க.
 |
கள ஆய்வில் ஸ்டாலின் |
சுனில்: ஆமாம். ரொம்ப நெருக்கமா ஃபீல் பண்ணேன்.
ஸ்டாலின்: ஆனால் என்ன சொல்லுவாங்கன்னா அயோத்திதாசர் கதை சொல்றாருங்குறதை ஸ்டாலினே ஒத்துக்குறார் என்று சொல்லிடுவாங்க. (சிரிப்பு)
சுனில்: இந்த டூல்ஸ் எங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். வரலாற்று புனைவு மாதிரி விஷயங்கள்ல ஒரு இன்வர்ஷன (தலைகீழாக்கம்) பண்ணி பாக்குறதுக்கு இது உதவுது.
ஸ்டாலின்: ஆமாம். இந்த மாரிங்குற சொல்லுல ஒரு எழுத்த மாத்துறதன் மூலமா ஒரு கதையை கன்ஸ்ட்ரக்ட் (உருவாக்கம்) பண்ண முடியுது பாருங்க.
சுனில்: அது மட்டுமில்லை, இப்போ சாதாரணமாவே அருளும் தெய்வம் தண்டிக்கும் தெய்வம்னுதான் நம்ம மரபுல இருக்குற தெய்வங்களை தேவ்தத் பட்னாயக் மாதிரி ஆட்கள் கிளாசிஃபை (வகைமை) பண்றாங்க. அருளும் தெய்வம் எப்போதும் குடும்பத்தோட இருக்கு. தண்டிக்கும் தெய்வம் வந்து உக்கிரமா இருக்கு. ஆனால் அயோத்திதாசர் ஒரு சொல்லை மாத்துறதன் வழியா ஒரு தண்டிக்கும் தெய்வமா பார்க்கப்படுற தெய்வத்தை அருளும் தெய்வமா மாத்துறாரு.
 |
கள செயல்பாட்டில் ஸ்டாலின்
|
மரப்பாச்சி குழுவினர்: எனக்கு ஒரு கேள்வி இருக்கு. தமிழ்நாட்டுல ஆசீவகத்தைப் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கு. கல்வெட்டு ஆதாரங்களையெல்லாம் வெச்சு அது எங்க இருந்து வருதுன்னு சொல்றாங்கன்னா களப்பிரர் காலத்துல இருந்து வர்ரதா சொல்றாங்க. இந்த ஆசீவகத்தப் பற்றி அயோத்திதாச பண்டிதர் ஏதாவது சொல்லி இருக்காறா? அதுல இருந்து பௌத்தம் தொடர்ந்து வருதா? இதைப் பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க?
சுனில்: இது ஒரு முக்கியமான கேள்வி. இந்த ஆசீவகத்தைப் பற்றி அயோத்திதாசர் என்ன நினைக்குறாரு?
ஸ்டாலின்: அவருதான் எல்லாத்தையும் பௌத்தம் ஆக்கிடுறாரே. (சிரிப்பு).அவருக்கு தெளிவான திட்டங்கள் இருந்திருக்கு.
சுனில்: பொதுவா நீங்க எப்படி பாக்குறீங்க. இந்த ஆசீவக ட்ரெடிஷன்ங்குறதை (மரபை). நெடுஞ்செழியன் சில விஷயங்களை ரொம்ப டீடெய்ல்டா சொல்றாரே.
முருகன்: நெடுஞ்செழியன் சொல்றதுல நிறைய பேஸ் இல்லாம இருக்கே?
ஸ்டாலின்: அப்படி இல்லை. அதை நான் ஒரு தரப்பாக பார்க்குறேன். ஆனால் ஆசீவகம் தமிழ்நாட்டுல எந்த அளவுக்கு செல்வாக்கோட இருந்திருக்கும்னு எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு. ஆர்கியலாஜிகல் டிபார்ட்மன்டோட (தொல்லியல் துறை) தொடர்புடைய டாக்டர் பத்மாவதி அம்மா, ‘புதிய நோக்கில் களப்பிரர் வரலாறுனு’ ஒரு புக்கு எழுதியிருக்காங்க. கிட்டத்தட்ட அவங்க கையாண்டிருக்குறது அயோத்திதாசர் கையாண்ட மெதடாலஜிதான் (முறையியல்). ஆனால் அவங்க அப்படி அறிவித்துக் கொள்ளவில்லை. நூலின் முறையியல் என்னன்னா, எதிர் தரப்பு வெக்கிற சான்றுகளை எப்படி வாசிச்சா களப்பிரர்களை புரிஞ்சுக்க முடியும்னு நூலாசிரியர் சொல்றாங்க. அது பெரும்பாலும் பௌத்தமாத்தான் இருந்ததுங்குறாங்க. இத்தனைக்கும் அவங்க கல்வெட்டு ஆய்வாளர். அரசியல் ரீதியாகவும் பௌத்த ஆதரவாளர் இல்லை. அதுவும் நாம தெரிஞ்சுக்க வேண்டியது.
நான் வாசித்த விதத்துல. தமிழ்நாட்டுல ஆசீவகம் இருந்தது. ஆசீவகத்தப் பற்றின குறிப்புகள் இருக்கு. இதுல நாம புரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என்னன்னா, இங்க பல தரப்புகள் இருக்கு. பல விவாதங்கள் இருக்கு. அவுங்க அவுங்க, அவுங்கவுங்க தரப்புக்கான சான்றுகளை கொண்டு வர்ராங்க. அந்த சான்றுகளை வாசிக்கிறதுக்கு ஒரு முறையையும் கொடுத்திடுறாங்க. நாம தெரிஞ்சுக்க வேண்டியது இந்த முடிவுகளை மட்டும் இல்லை. முடிவுகளை வந்தடைவதற்கான முறைகள் இருக்கு இல்லையா அந்த முறைகள் எப்படி இருக்குங்குறதையும்தான். இப்போ அயோத்திதாசர் பற்றி ரொம்ப முக்கியமாக குறிப்பிட நினைப்பது அயோத்திதாசருடைய முறையோட வலுவை தான். இந்த சமூகத்தை ரொம்ப பொலிடிகலா நம்மளால ஆர்கனைஸ் (ஒருங்கிணைக்க) பண்ண முடியும். ஆனால் அதுக்கு முரண்பட்டுக்கொண்டிருக்கிற சமூகக் குழுக்களுக்குள்ள ஒரு அரசியல் ஒத்திசைவை உருவாக்குறதுக்கு நாம அரசியல் ரீதியா பல விஷயங்களை பேசி பார்க்குறோம்ல, அதை விட அவங்களுக்குள்ள இருக்குற கல்சரலான (பண்பாட்டு) விஷயங்கள் இருக்குள்ள அதை பேசி பார்க்குறது அதிக பயன் தரும். அதுக்கு அயோத்திதாசர் ரொம்ப உதவுவாருனு நான் நினைக்கிறேன். வெவ்வேற சாதிகளுக்கு இடையில் இருக்குற ஒத்த பண்பாட்டு அம்சங்கள் இருக்குல்ல அதை நாம பேசுறதில்லை. அதை நாம சுட்டிக் காடுறது இல்லை.
ஒரே சாமியை முரண்பட்டுக்கிட்டு இருக்குற ரெண்டு சாதிகள் வணங்குறாங்க. அப்போ இவங்களுக்கு ஏதோ ஒரு பொதுவான வேர் இருந்திருக்கு. அந்த வேர் வழியா இப்போ முரண்பட்டுக்கிட்டு இருக்குற இந்த ரெண்டு சாதிகளும் என்னவா இருந்தாங்க அப்படினு பார்க்குறதன் மூலமா அவங்க என்னவா இருந்திருக்காங்க அப்படிங்குறத நியாபகப்படுத்துறதுதான் நிறைய பயன் தரும்.அயோத்திதாசர் கிட்ட இருந்த பௌத்தம் பற்றியான ஒரு விளக்கம் இருக்கிறது இல்லையா. அவர் அதுக்கு பௌத்தம்னு ஒரு பெயர் கொடுக்குறாரு. நீங்க அதுக்கு வேற ஒரு பெயர் கொடுக்கலாம். நான் அதுக்கு வேற ஒரு பெயர் கொடுக்கலாம். ஆனால் எது அடிப்படையா இருக்குறதா நான் பார்க்குறேன்னா ஒரு பண்பாட்டு ரீதியான தொடர்பு எல்லா குழுக்களுக்கும் இடையில இருந்திருக்கு அப்படின்னு பார்க்குறதுக்கு அவரோட சிந்தனை உதவுகிறது இல்லையா, அதுதான் முக்கியம். அதை அவர் பௌத்தம் என்று சொல்றாரு. நீங்க அதை ஆசீவகம் சொல்லலாம்.
சுனில்: சாதி ஒரு ரிஜிட் ஸ்டிரக்ச்சர் (இறுக்கமான கட்டமைப்பு) இல்லை அப்படின்னு இது உறுதிப்படுத்துது.
ஸ்டாலின்: ஆமாம். என்னைக் கேட்டால் அரசியல் ரீதியா உருவாக்கப்படுற ஒருமைப்பாடு ரொம்ப தற்காலிகமானதா இருக்கு. ஆனால் பண்பாட்டு ரீதியான ஒருமைப்பாடுங்குறது இன்னும் ஆழமானதா இருக்க முடியும். அந்த ஆழத்தை அடையிறதுக்கு அயோத்திதாசருடைய பார்வை பத்தலைன்னு கூட நீங்க சொல்லலாம். அது வேற. ஆனால் பண்பாட்டு வாசிப்பை அவர் நிகழ்த்தினார் இல்லையா அது வந்து ரொம்ப முக்கியமானதுனு நினைக்குறேன். அத வெச்சுகிட்டு நாம உருவாக்கக்கூடிய நாவல், இலக்கியம், கலை, மற்ற செயல்பாடுகள் எல்லாத்துலேயும் இதை எப்படி கொண்டு வர்ரது அப்படிங்குறதை பத்தி யோசிக்குறதுக்கு அவர் ரொம்ப உதவியா இருக்கார். இப்போ அண்மைக்காலங்கள்ல தலித் லிட்ரேச்சரை எடுத்துகிட்டாகூட அதை எப்படி கொண்டு வர்ரது அப்படின்னு நாங்க பார்க்குறோம். எப்படி ஒரே சடங்குல இவங்க எல்லாருக்கும் தொடர்பு இருந்திருக்குனு பார்க்குறோம். இப்போ என்னுடைய சொந்த கிராமத்துல வன்னியர்கள் பறையர்கள் ரெண்டு பேரும் ஒரே சாமியை கும்பிடுறாங்க. வேடியப்பன்னு ஒரு சாமி. அந்த சாமி கும்பிடுறதுல ஒன்னா இருக்காங்க. ஆனால் வேற ஒரு இடத்துக்கு வந்தால் முரண்பட்டுக்குறாங்க. அங்க எப்படி இது இருக்கு. இதை வேற விதமா யோசிச்சு பாக்க முடியுமான்னு அயோத்திதாசரை வெச்சு பாக்குறதுதான் என் யோசனை.
முருகன்: எனக்கு ஒரு கேள்வி இருக்கு. இப்போ இந்த மஹாபலி பற்றி சொல்லிட்டு இருந்தீங்க இல்லையா. அயோத்திதாசர் வந்து ஒரு மூனு மன்னர்களை பௌத்த மன்னர்களா சொல்றாரு. மஹாபலி, நந்தன் அப்புறம் முருகன், இப்படி….
சுனில்: முருகனை மன்னனாக சொல்கிறாரா?
ஸ்டாலின்: இப்போது பழனியில் முருகன் ராஜகோலத்தில் இருந்து விட்டு பிறகு அதை கழிக்குறது நடக்கிறது இல்லையா. அந்த ராஜகோலத்தை துறந்துவிட்டு தான் முருகன் ஆண்டி ஆகுறான். அதை வந்து அயோத்திதாசர் இப்படி நீட்டித்து விளக்குகிறார். இது எல்லாமே புத்தர் கதை தான் என்கிறார். புத்தர் ஒரு நாள் ராஜாவா இருந்தாரு. திடீர்னு எல்லாத்தையும் துறந்துட்டு வரலையா. அந்த மாதிரிதான் இது. நான் என்ன நினைக்குறேன்னு சொல்றேன். இப்படியான கதைகளை உருவாக்கி வந்திருக்கிறோம் இல்லையா; அதுதான் இங்க இருந்த மிகப் பெரிய போர் முறையா இருந்திருக்கும்னு நினைக்குறேன். இந்த பெரிய போர் நடந்ததுனு நாம சொல்றதே பல நேரம் வெறும் கதையாத்தான் சொல்லப்படுகிறது. இந்த வைதீகக் கதைகளுக்கும் அவைதீகக் கதைகளுக்குமான வித்தியாசத்தை சொல்லும்போது சொல்றாங்கல்ல, அந்த மன்னனை அங்க போய் வென்றதா சொல்லப்படுதுன்னு. அப்படியெல்லாம் எந்த சான்றுமே நமக்கு கிடைக்குறதில்லை. அப்படி வென்றதா ஒரு கதைதான் சொல்லுது. அதையே நாம நிஜமா கருதி போர் நடந்ததா நம்புறோம். இப்போ நீங்க தீபாவளியை எடுத்துக்குங்களேன், அது நரகாசுரனைக் கொன்ற நாள். ஓணம்: மகாபலியைக் கொன்ற நாள். இப்படி பெரும்பாலும் நம்ம சடங்குகள் எல்லாமே கொலையை கொண்டாடுது. இதுல பெரும்பாலும் யார் கொல்லுவாங்கன்னா மகாவிஷ்ணு வந்து ஒரு அசுரனை கொல்லுவாரு. சில கதைகள்ல முருகர் சூரபதுமனை சூரசம்ஹாரம் பண்ணுவாரு. பதுமம்னாலே தாமரை. இந்த கதைகள்ல இருக்குற அசுரர்கள் யாரா இருப்பாங்கன்னா லோக்கல் அரசர்களா இருப்பாங்க. இப்படித்தான் மாற்று ஆதாரங்கள் கிடைக்காதபோது எதிர் தரப்புல இருக்குற ஆதாரங்களை எப்படி வாசிக்க வேண்டுமென்று அயோத்திதாசர் சொல்றாரு. இப்போ இதை நீங்க எதிர்மறையான கதைனு சொல்றீங்க.
ஆனால் அதுல ஒரு வார்த்தை இருக்கு. பதும ராஜன்னு சொல்றாங்க. அப்போ ‘பத்மம்’ என்றால் என்ன? தாமரை. தாமரை மீது இருப்பது யார்? அப்படின்னு லிங்க் புடிச்சு போவார். இந்த சாவு பற்றிய கதைகள்ல பெரும்பாலும் என்ன சண்டை வரும்னா, மகாவிஷ்ணுவோட அதிகாரத்தை ஒரு அரசர் ஒத்துக்க மாட்டாரு. அப்போ இந்த கதைகளில் ஏற்கனவே இருந்த அதிகாரத்திற்கும் அங்க புதுசா வருகிற அதிகாரத்திற்கும் எதிரான மோதலாப் புரிஞ்சுக்க முடியும். அசுரர்களை கொல்வது வெறும் கொலை மட்டும் இல்லை. வதம் செய்தல். எல்லா கதைகளுமே கிட்டத்தட்ட ஒரே கதையா இருக்கு. மகாபலிக்கு நடந்ததும் வதம் தான், இரண்யனுக்கு நடந்ததும் வதம்தான். ஆக்சுவலா அப்படி ஒரு போர் நடந்து வென்றதா எந்த சான்றுகளும் இல்லை. ஆனால் என்ன நடந்திருக்குன்னா அப்படி ஒரு போர் நடந்ததா கதைகள் உருவாக்கப்பட்டு அதுங்க பரப்பப்பட்டிருக்கு என்று நினைக்குறேன். அப்போ கதைகளின் இருப்பு அவ்வளவு பெருசா இருந்திருக்கிறது. அப்போ அயோத்திதாசர் மாதிரி ஒரு ஆள் வந்து கதைகளுக்குள்ள போய் வொர்க் பண்றது, கதைக்கான அர்த்தத்தை மாத்துறது, கதைகளை இன்னொன்னா மாத்துறதையெல்லாம் வெறும் கதைக்கான மேட்டரா பார்க்க வேண்டியதில்லை.
 |
2020ஆம் ஆண்டிற்கான விளக்கு விருதுடன் ஸ்டாலின் |
முருகன்: பௌத்த மன்னர்களைப் பற்றி நீங்க சொல்லும்போது பண்டிதருடைய முறைகளைப் பற்றி நீங்க சொன்னீங்க. அதுல பண்டிதர் சொல்ற மன்னர்கள்ல நீங்க நந்தனைப் பற்றி தொடர்ந்து எழுதியிருக்கீங்க. முன்னாடி தோல் காசு நந்தன்னு ஒரு கட்டுரை எழுதியிருக்கீங்க. இப்போ நீலம் இதழ்ல நந்தனைப் பற்றி ஒரு தொடர் எழுதிட்டு வர்ரீங்க. இப்போ எல்லாருமே தங்களை ஆண்ட பரம்பரைனு சொல்லிக்குற இடத்துல இருக்கோம். இப்போ இதுல நீங்க நந்தன் பற்றிய கதையை எழுதுறப்போ தலித்துகளும் ஆண்ட பரம்பரைனு நிறுவுறதுதான் உங்க நோக்கமா? இல்லை, வேற ஏதாவது இருக்கா? இங்க எழுதப்படக்கூடிய பிற நரேஷன்ல இருந்து இது எப்படி வேறுபடுது?
ஸ்டாலின்: ரொம்பொ நல்ல கேள்வி. இப்போ இந்தியாவுல எல்லா ஜாதிகளும் தங்களுக்கான மன்னர்களை தேடுற இடத்துக்கு போயிருக்காங்க. ஆனால் அதே நேரத்துல இந்தியாவில் பல சாதிகளிலிருந்தும் மன்னர்கள் இருந்திருக்காங்க.
சித்ரன்: மன்னர்களா? குழுத் தலைவர்களா?
ஸ்டாலின்: மன்னர் என்பது நாம இன்னைக்கு கொடுக்குற பெயராக இருக்கிறது. அவங்க ஒரு சிறிய பகுதியை ஆண்டவர்களா இருந்திருக்கலாம், குழுத் தலைவர்களா இருந்திருக்கலாம், போர் வீரர்களா இருந்திருக்கலாம், படைத் தளபதிகளா இருந்திருக்கலாம். ஒவ்வொரு ஜாதிகள்லேயுமே அந்த அந்த பகுதிகளுக்கு ஏற்ற மாதிரி இருந்திருக்கலாம். இன்னைக்கு அரசியல் சூழல்ல நாம என்ன பண்றோம்னா நமக்கு ஒரு வீர அடையாளம் வேணும்ங்குறதுக்காக எல்லாத்தையும் மன்னர்கள்னு ஆக்கிக்குறோம். அதே வேளைல அவங்க மன்னர்களா இருந்ததுக்கான சான்று கிடைக்குமானால் அதை சொல்றதுலேயும் தப்பு இல்லை. இப்போ மாமன்னன் நந்தன்ங்குறது ஆண்ட பரம்பரை அடையாளத்தோட நெருக்கமாகுதானு கேட்கிறார்கள்.
தமிழ்ல நந்தன் பற்றின உரையாடலுக்கு வழி செய்தவரும் அயோத்திதாசர்தான். இதை ரவிக்குமார் மொதல்ல எழுதுறாரு. அயோத்திதாசருடைய வெர்ஷனை எடுத்துகிட்டு அதை பற்றி ஒரு தொடர் எழுதியிருக்காரு. நான் அயோத்திதாசருடைய நந்தன் கதையை பார்த்தபோது மற்ற விஷயங்கள் மாதிரியே இதையும் கொஞ்சம் சந்தேகமாத்தான் பார்த்தேன். அவர் கற்பனையை முன்வைக்குறாருன்னு நினைச்சேன். ஆனால் ரெண்டு கனெக்ஷன் எனக்கு ரொம்பொ உதவி பண்ணுச்சு. ரவிக்குமாருடைய கட்டுரைகளும், பொ. வேல்சாமி அப்போ எனக்கு சில தரவுகளை கொடுத்தார். நந்திவர்மன் என்ற மன்னனை நந்தனா பார்க்குற ஒரு வழக்கம் இருக்கு, நந்தமண்டல சதகம் என்ற நூல் ஒன்று இருக்கு. அப்புறம் வலங்கை இடங்கை புராணத்துல நந்தன்ங்குற ஒரு மன்னனை பற்றின குறிப்பு இருக்கு, சுந்தர் காளி ஒரு ஆய்வுல தஞ்சை மாவட்டத்துல நடத்தப்படுற ஒரு நாடகத்துல நந்தனை மன்னனா சித்தரிக்கிற ஒரு வழக்கம் இருக்குனு சொல்றாரு. இதெல்லாம் பார்த்த பின்னாடிதான் அயோத்திதாசர் மட்டும் நந்தனை மன்னனா சொல்லலை அப்படின்னு தெரியுது. ஆனால் அயோத்திதாசரால் தான் இந்த ஐடியா திரும்ப மேலெழுந்தது. அப்புறம் என்னுடைய தொடர் பயணங்கள்ல பார்த்த விஷயங்களும் எனக்கு உதவுச்சு. அப்போ நந்தன் அப்படிங்குறவன் ஒரு மன்னனா இருந்தான் அப்படிங்குறது ஒரு அளவுக்காவது உண்மை. அவர் ஒரு பகுதியில சிற்றரசனா இருந்திருக்கலாம். அது கும்பகோணம் பகுதியா இருக்கலாம். ஆனால் இன்னொரு பக்கம் பி. எல். சாமி. தரக்கூடிய சான்றாதாரங்களின் அடிப்படையில பார்த்தோம்னா வடமலையாள நாட்டுல பரவலா அவருடைய நினைவுகள் இருக்கு. அங்கேயாவும் இருந்திருக்கலாம்.
சித்ரன்: வடமலையாள நாடுன்னா?
ஸ்டாலின்: காசர்கோடு பகுதி. அப்புறம் நந்தனை பற்றி லோக்கல்ல ஒரு கதை கிடைக்குது. அதாவது நந்தன் வாழ்ந்தான்னு சொல்லப்படக்கூடிய இடங்கள்ல மக்கள்கிட்ட ஒரு கதை கிடைக்குது. அப்புறம் அயோத்திதாசர் ஒரு கதை சொல்றாரு. அந்த ரெண்டு கதைகளும் பொருந்தி வருது. அப்போ பி. எல். சாமி காட்டக்கூடிய வடமலையாள நாட்டு நினைவுகளை பார்த்தால் அதுவும் இந்த கதையோட பொருந்தி வருது. அதைத் தவிர பார்த்தால் தமிழ்நாட்டுல பல பகுதிகளில் நந்தன் பற்றி குட்டிக்கதை இருக்கு. அந்த எல்லா குட்டிக்கதைகளிலும் ஒரு பொதுப் பெயர் வழங்கப்படுது. இப்போ உதாரணமா சொல்லணும்னா தமிழ்நாட்டுல பல இடங்கள்ல நத்தமேடுனு ஒரு ஊர் இருக்கு. இந்த நத்தமேடு எப்படி இருக்கும்னா பெரும்பாலும் நீர்ப்பாசன வசதி இல்லாத சற்றே மேட்டுப்பாங்கான, கரம்பான நிலமா இருக்கும். சுடுகாட்டுக்கு பக்கத்துல இருக்கும். ஏரி பாசனத்துக்கு வெளிய இருக்குற பகுதியா இருக்கும். நான் இந்த மாதிரி நாற்பதுக்கும் மேற்பட்ட ஊர்களை ஸ்டடி பண்ணியிருக்கேன். அதுல இருந்துதான் சொல்றேன். அந்த ஊருடைய பெயரைப் பற்றி அங்க இருக்குற லோக்கல் கதைகளை கேட்டால் ஒரே மாதிரி இருக்கு. நான் வந்து தூத்துக்குடி பகுதில ஒரு கதை கேட்டேன், சின்னமனூர்ல ஒரு கதை கேட்டேன், திருமங்கலத்துல ஒரு கதை கேட்டேன், திண்டிவனத்துல ஒரு கதை கேட்டேன், திருவள்ளூர்ல ஒரு கதை கேட்டேன், திருவண்ணாமலைல ஒரு கதை கேட்டேன், தருமபுரில ஒரு கதை கேட்டேன். நீங்க நம்புவீங்களா எல்லா இடத்துலேயும் ஒரே பெயரு ஒரே கதை திரும்பத் திரும்ப ஒரே விதமான வெர்ஷனோட புழங்குது. அப்போதான் இதுல வேற ஒரு அம்சம் பொதுவா இருக்குன்னு பார்த்தேன். இதுல இருக்குற பெயர் மட்டுமில்லை, இதுல இருக்குற இறப்பு சம்பந்தமான ஒரு ஐடியாவும் இந்த கதைகள்ல பொதுவா இருக்குறதை நான் பார்க்குறேன்.
அதாவது அந்த எல்லா கதைகள்லேயுமே ஒரு ராஜா இருக்கிறார்.அவர் போர்ல இறந்துட்டாரு, அவருடைய புதைவிடம் இதுன்னு சொல்றாங்க. அல்லது இங்க ஒரு பெரிய அரண்மனை இருந்தது அது அழிஞ்சதுங்குறதாலதான் இங்க மேடா இருக்கு அப்படின்னு சொல்றாங்க. அப்போ மேடுங்குறது ஒரு நிலப்பகுதியை குறிப்பதல்ல ஒரு அழிவின் குறியீடாத்தான் குறிப்பிடப்படுகிறது. அப்புறம் இந்த இடங்கள்ல பழைய கால பாத்திரங்கள், பொருட்கள், கருவிகள், இரும்பு, இதெல்லாம் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படியான தகவல்களையும் இந்த எல்லா இடங்கள்லேயும் பார்க்க முடியுது. அப்புறம் தமிழ்நாட்டுல மட்டும் இல்லாம கர்நாடகாவுல சில பகுதிகள், கேரளாவுல திட்டுன்னு வழங்கப்படக்கூடிய சில பகுதிகள் – உதாரணமா பட்டணம்திட்டா – இதையெல்லாம் கூட இப்படி கனெக்ட் பண்ண முடியுது. அப்போ எனக்கு என்ன ஆகுதுன்னா கதைகள்லேயும் பொதுத் தன்மை இருக்கு, இடங்கள்லேயும் பொதுத் தன்மை இருக்கு, கிடைக்கக்கூடிய பொருட்கள்லேயும் பொதுத் தன்மை இருக்கு. இது வேற எங்கேயாவது இருக்கான்னு பார்த்தால் வடக்கே நந்த வம்சம் இருக்கு. மௌரியர்களுக்கு முந்துன மரபு. அவங்களும் சின்ன சின்ன குழுக்கள் தான் அவங்க பேரரசுகள்லாம் கிடையாது. அவங்களைப் பற்றி ஒரு கதை வழங்கப்படுது. மகாபதுமன் அப்படிங்குற நந்த மன்னன் வந்து அடிப்படையில ஒரு சூத்திரப் பெண்ணுக்கும் பிராமண ஆணுக்கும் பிறந்தவர்னு சொல்லப்படுறாரு. அந்த கதைக்கும் இங்க லோக்கல்லா சொல்லப்படுற கதைகளுக்கும் இடையில இது அங்க இருந்து வந்திருக்கவோ அது இங்க இருந்து போயிருக்கவோ வாய்ப்பில்லை. ஆனால் அதுங்க ஒரே மாதிரி இருக்கு. அப்போ இந்த கதைகளுக்குள்ள ஏதோ ஒரு தொடர்பு இருக்கு. புத்தருடைய தம்பி பெயரே நந்தன் தானே. சில கதைகள்ல அவர் புத்தருக்கு அப்புறம் ஆட்சியை ஏற்றுக்கொண்டதா சொல்லப்படுது.சில கதைகள்ல அவர் புத்தரைப் பின்பற்றி துறவுக்குப் போனதா சொல்லப்படுது. அப்போ நந்தன் என்கிற பெயரை ஒரு மன்னனோட இணைச்சு பார்க்குறது இந்தியா முழுக்க வேற வேற பீரியட்ல டெவெலப் ஆகி இருக்கு. அப்போ நான் என்ன நினைக்குறேன்னா இதை ஒரே மாமன்னன் எல்லா இடத்துலேயும் ஆண்டார்னு பார்க்க வேண்டியது இல்லை. ஆனால் இந்த நந்தர்கள் எல்லாருக்கும் நடுவுல ஏதோ ஒரு பொது அம்சம் இருந்திருக்கு. ஒரே மாதிரி விளங்கிய அரசனையோ அல்லது ஒரு அரசன் அழிக்கப்பட்ட இடத்தையோ குறிப்பதற்கு நந்தன் அப்படிங்குற அடையாளத்தை மக்கள் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. இது தமிழ்நாடு முழுக்க அல்லது தமிழ்நாட்டுக்கு வெளியேயும் நடந்திருக்கக்கூடிய அரச மரபினருக்கு இடையேயான ஒரு அதிகார தலைகீழாக்கத்தை குறிக்க இந்த நந்தன்ங்குற அடையாளம் பயன்படுத்தப்படுது. அந்த எல்லா மன்னர்களும் தலித்துன்னுகூட நாம சொல்ல வேண்டியதில்லை.
ஏதோ ஒரு வகையான அதிகார தலைகீழாக்கம். இன்னும் சொல்லப்போனால் நத்தம்ங்குற பெயரே ரத்தம்ங்குற சொல்லோட மறுவடிவம்னுதான் சொல்றாங்க. அப்போ இது இந்த மொத்த சமூக வரலாற்றை புரிஞ்சுக்க உதவக்கூடிய ஒரு மாபெரும் சிம்பலா நந்தன் என்ற பெயர் இருக்கு. அப்படிங்குற முறையிலதான் நாம அவரை புரிஞ்சுகிட்டா இது மொத்தத்தையும் புரிஞ்சுக்கக்கூடிய ரூட்டு கிடைக்கும் அப்படிங்குற முறையில இதை மொத்தமாக கொண்டுகூட்டி எழுதுறேன். இது ஆண்ட பரம்பரை அரசியல் கிடையாது. இந்த மொத்த இந்திய சமூக அரசியல் வரலாற்றுல நிகழ்ந்த ஒரு மாற்றத்தை புரிஞ்சுக்குறதுக்கான சாவின்னு நினைச்சுதான் அதுல வொர்க் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் அது முடியலை. இவ்வளவு தரவுகளையும் தொகுத்து கொடுக்கும்போது இது மொத்தமா இங்க பரவி கிடந்ததுனு புரிஞ்சுக்க உதவியா இருக்கும்னு நம்புறேன். இது எல்லாமே நேரடி ஆதாரங்கள் இல்லை. இப்போ பாருங்க தமிழ்நாட்டுல வாணர்கள் அப்படின்னு ஒரு மன்னர்கள் இருந்தது யாருக்குமே தெரியாது. இப்போ தொல்லியல் ஆராய்ச்சியாளர் வெ. வேதாச்சலம் “பாண்டிமண்டலத்தில் வானாதிராயர்கள்னு” ஒரு நூல் எழுதியிருக்கார். அப்போ நம்முடைய வரலாற்று வரிசையிலேயே சொல்லப்படாத ஒரு பிரிவினர் இங்க ஒரு பெரிய மரபா இருந்தாங்கன்னு அவரு கல்வெட்டுச் சான்றுகள் கொடுக்குறாரு. அவருக்கு வானதிராயர்கள் பற்றி பெருமையா எழுதவேண்டிய எந்த அவசியமும் கிடையாது. அப்போ நம்ம நினைவுக்கே வராத பல குழுக்கள் இருக்கும்போது, இது மாதிரி ஏதோ சில குழுக்கள் இருந்திருக்கும். அவங்களுக்கு ஏன் இதுல ஒரு பொதுவான பெயர் வழங்கப்பட்டிருக்குனு நாம பாக்க வேண்டியிருக்கு. இதை ஒரு சமூக வரலாற்றின் ஒரு பகுதியாத்தான் நான் பார்க்குறேன்.
 |
தீண்டப்படாத நூல்கள் வெளியீட்டு விழா (2008 ஜனவரி)
|
முருகன்: இப்போ நீங்க சொல்லும்போதே எனக்கு ஒன்னு தோனுது. நந்தனைப் பற்றி பண்டிதர் சொல்லும்போது நந்தனை எப்படி அழிச்சாங்கன்னா ஒரு பொறிப்பந்தல் வெச்சு சூழ்ச்சியின் பெயரால அழிச்சாங்கனு சொல்றாரு. அப்போ இந்த மொத்ததையுமே இந்த சூழ்ச்சியுடைய குறியீடா பார்க்க முடியுமா?
ஸ்டாலின்: நிச்சயமா. நான் வட தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். அங்க கூத்துங்குறது ஒரு முக்கியமான விஷயம். அந்த கூத்துல பார்த்தீங்கன்னா, இறப்பு சாவுங்குறதுதான் மிகப் பெரிய விஷயமா இருக்கு. கூத்தாண்டவர் கூத்தில் இறப்புதான் முக்கியம். கர்ண மோட்சத்துலேயும் அதுதான். கர்ண மோட்சமே கருமாதிக்குதான் நடத்துவார்கள். நம்முடைய எல்லா மரபுகளிலும் இந்த சாவு அல்லது மரணத்தை நினைவுகூர்வது என்பது அடிப்படையாக இருக்கு. அதை வெச்சுத்தான் என்னுடைய பண்பாட்டுப் பலகணிகள் என்ற நூலில் நீத்தார் சடங்கை நோக்கி போனேன். சாவை ஒட்டிய தெய்வங்கள் உருவாகவும் இதுதான் காரணமாக இருந்திருக்கு. பெரும்பாலும் இந்த அம்மன் சாமிகள் எல்லாமே மரணத்தை ஒட்டி எழுந்ததா இருக்கு. நேத்துகூட என் மாணவர் ஒருவர் சொன்னார்,எங்க வீட்டுல ஒரு காலத்துல ஒருத்தர் செத்துட்டாங்கனு சொல்லி அவங்களை அம்மனாக்கி கும்பிடுறாங்கன்னு. அப்போ பெரும்பாலும் இந்த அம்மன்கள் இறப்பை ஒட்டி உருவாகக் கூடியதாக இருக்கு. அது உருவான பிறகு பக்கத்துல இருக்குற பெரிய சாமியோட சேர்ந்துக்கும். காமாட்சி அம்மன், மாரியம்மன் இந்த மாதிரி. மதுரைல நான் தினமும் கல்லூரிக்கு போய்ட்டு வர்ர வழியில ஆதி மல்லம்மாள் என்கிற காமாட்சியம்மன்ன்னு போட்டிருக்கும். காமாட்சியம்மன் பெருசா இருக்கு ஆதி மல்லம்மாள்னு சின்னதா எழுதி இருக்காங்க. அடுத்த பத்து வருஷத்துல போர்ட் மாத்தும்போது அந்த மல்லம்மாள் போய்டும். வெறும் காமாட்சியம்மன் ஆகிடும். ஆனால் அந்த மல்லம்மாள்ங்குற கேரெக்டர் இருக்குல்ல அதுதான் அதோட வேராக இருக்கணும்.
சுனில்: இதில் ஒரு முக்கியமான கோணம் இருப்பதாக பார்க்குறேன். ஒரு இடைக்கால நரேஷன் ஒன்னு இப்போ இருக்கு. அதாவது அடித்தள மக்களுக்கு பண்பாட்டு பங்களிப்புனு ஒன்னு இல்லை அப்படின்னு சொல்லி சாதி அடுக்குகளை உரைநிலைல வெச்சிருக்குறது. அது ஒரு விதமான திராவிட இயக்க நெரேஷன் அல்லது கொலோனியல் நெரேஷன். இதுல அயோத்திதாசர்கிட்ட இருந்து ஸ்டாலின் வரைக்குமானவங்களுடைய தனித்துவமான பங்களிப்பு என்னன்னா இந்த பண்பாட்டுப் பங்களிப்பு அப்படிங்குறதுல அடித்தளம்னு நாம சொல்லக்கூடிய மக்கள்தான் மிக முக்கியமான விஷயங்களை பண்ணிட்டு வர்ராங்க அப்படிங்குற வரலாற்றை அவர் மறுக்க முடியாத அளவுக்கு நிறுவுறாரு. இந்த இன்டென்ஷன் உங்களுக்கு இருக்கா?
ஸ்டாலின்: நிச்சயமாக இருக்கு. நான் என்னை ஒரு பண்பாட்டு வாசிப்பாளன் என்று தான் சொல்லிக்க விரும்புவேன். அதுக்கு அர்த்தம் நான் மற்றதிலிருந்து விலகிக்குறேன்னு இல்லை. ஆனால் மக்களுடைய பண்பாட்டு வரலாறு தான் முக்கியமா இருக்கு. ஆனால் இதை யாருமே முதன்மையாக கருதுவது இல்லை. ஒரு காலத்தில் இடதுசாரி ஆய்வாளர்கள் இதை செய்தார்கள் ஆனால் அவர்களே கூட இப்போதெல்லாம் செய்வது இல்லை. அவங்ககிட்ட இருந்து அது எப்போ கல்விப்புலத்துக்கு போனதோ அப்போதே அது சுருங்கி போச்சு. அவங்க அதை எளிமைப்படுத்தி விட்டார்கள்.
சுனில்: இந்த மொத்த பண்பாட்டையுமே ஒரு மூடநம்பிக்கையா பார்க்குறது இருக்குல்ல. இந்த பண்பாட்டு நிராகரிப்பு அல்லது மறுப்புக்கு வந்து ஒரு அரசியல் விளைவும் இருக்கு. அதைப் பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க?
ஸ்டாலின்: இந்த ஒரு விஷயத்தை அறிவுப்பூர்வமா பார்க்குறதுங்குறது நம்ம மரபுலேயும் இருந்திருக்கு. வைதீக மரபிலும் இருந்திருக்கு. அவைதீக மரபிலும் நிறையவே இருந்திருக்கு. ஆனால் ஒரு விஷயத்தை அறிவுப்பூர்வமா பார்க்குறதுங்குற பெயரில் எல்லாத்தையும் நேரடியா பொருள்கொள்வது நடக்குது. இந்த புரிதலே நாம தாமதமாக வந்தடைத்த இடம்தான். சில விஷயங்களை உணர்வது எல்லாம் அறிவுக்கு எதிரானது கிடையாது.
 |
காரைக்குடி மரப்பாச்சி இலக்கிய வட்ட கலந்துரையாடலில் ஸ்டாலின் (29-9-2024) |
சுனில்: இப்போ நீத்தார் சடங்குகள் எல்லாம் ரொம்பொ எமோஷனலாவும் இருக்கு ஆர்டிஸ்டிக்காவும் இருக்கு.
ஸ்டாலின்: ஆமாம். எவ்வளவு தான் நாம பகுத்தறிவுவாதத்தை நம்புறவங்களாக இருந்தாலும் ஒருவர் நீத்து போனபின்பு அவரை ஏதோவொரு விதத்தில் நினைவுகூர வேண்டுமென்று நாம நினைக்குறோம். எப்போது இவை மூடநம்பிக்கைங்குற விஷயமாக தலையெடுக்கிறது என்றால், மதத்தின் பெயரால, நம்பிக்கையின் பெயரால் முறைமீறிய, கட்டற்ற, மனிதப் பண்புக்கு எதிரான விஷயங்கள் நியாயப்படுத்தப்படும்போது அதை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இங்கு வந்தது. அதுக்கு இடத்தை உருவாக்கிக் கொடுத்தது நவீனத்துவமும் மேற்கத்திய பகுத்தறிவுவாதமும். அதை நான் குறைச்சு மதிப்பிடுற ஆள் இல்லை. ஏனென்றால் நான் இன்னைக்கு வரைக்கும் நாத்திகன். ஆனால் நம்பிக்கைகளால் சில நல்விளைவுகளும் இருக்கு, சில விஷயங்களை எப்படி தட்டையா மாற்றுதுங்குறதும் இருக்கு. அது தட்டையா மாற்றுனதுனால நாம அது விஞ்ஞானத்தைக் கொண்டு வந்ததையோ சில வாய்ப்புகளை கொண்டு வந்ததையோ மறுக்க முடியாது. ஆனால் அதை எப்படி பார்க்கணும்னு சொன்னால் நம்ம சமூகத்துல சில விஷயங்களை நேரடியாகவும் செய்கிறார்கள். மறைமுகமாகவும் செய்றாங்க. அது ஒரு விஷயத்தை குறியீட்டு ரீதியாக மாற்றி தக்கவைத்துக்கொள்வது. இது இலக்கிய வாசிப்புக்கு நெருக்கமானது என்று நம்புறேன். எல்லாவற்றையுமே பிம்பங்களாக, அடையாளங்களாக மாற்றி தக்க வைத்துக்கொள்வது. இப்போ கண்ணகி முலை இழப்பதுன்னா என்ன? அவள் இடது முலையை திருகி எரிஞ்சிருக்க முடியுமா? அறிவுப்பூர்வமா பார்த்தால் முடியாது. நாம அதை அப்படி கேக்கவும் கூடாது. அப்போ அதுக்கு வேற ஏதோ ஒரு மீனிங் இருக்கு. அந்த மீனிங் நமக்கு மறந்திருக்கலாம். ஆனால் அந்த இமேஜ் நமக்கு நினைவிருக்கும். அந்த அர்த்தம் திரிக்கப்பட்டிருக்குன்னோ, தப்பா பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றோ சொல்லலாம். ஆனால் அது தேவைன்னு புரிஞ்சுக்கணும். இப்போ மணிமேகலை தட்டு வெச்சிருக்குறா அதுல சோறு கிடைக்குதுன்னு நேரடியா பொருள் கொள்ள முடியாது. அது என்னன்னா பசித்தவர்கள் யாரா இருந்தாலும், எப்படிப்பட்ட பின்புலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு உணவளிக்கனும்ங்குற லட்சியவாதத்தைச் சொல்லக்கூடிய குறியீடா நாம எடுத்துக்கலாம். அந்த மாதிரித்தான் நாம நீத்தார் சடங்குகளையும் பார்க்கணும். இறந்த ஒருவரின் செயலை அல்லது நடை, உடை, பாவனைகளை செய்றதன் மூலமா அவருக்கான ஒரு மரியாதையை வழங்குறதுங்குற இடத்துல இருந்துதான் இது தொடங்கி இன்னைக்கு இவ்வளவு பெரிய சடங்கா மாறியிருக்கணும்.
இன்றைக்கும் நீத்தார் சடங்குகளில் இருக்குற விஷயங்கள் வந்து சடங்குத்தன்மை குறைந்த விஷயங்களாத்தான் இருக்கும். இப்போ விளக்கேத்துறோம், விளக்கேத்துறதுங்குறது நீ இறந்துட்டாலும் நீ காட்டுன பாதையில, நீ காட்டுன வெளிச்சத்துல நாங்க போவோம்ங்குறதுக்கான குறியீடுதான். நெல்லு வைக்கிறோம், அது என்ன? நெல்லு விளையக்கூடியது. அப்போ நீத்தலும் செழிப்பதும் என்பதாக ஆகிடுது. இறந்தவர் இறப்பது கிடையாது. இப்போது கூட நம்ம வீட்டில் ஒரு குழந்தை பொறந்தா என்ன சொல்லுவோம்? அவங்க தாத்தா போல இருக்கிறான் என்று சொல்லுவோம். தாத்தா வந்து பொறந்துட்டாருன்னுவோம், தாத்தா பெயரை வெப்போம். அப்போ நம்ம மரபில் நம்ம நினைவுகள் வந்து அழிஞ்சிடுறதா நினைக்குறது இல்லை. அது ஒரு மறுசுழற்சிக்கு உள்ளாகுறதா நினைக்குறோம். இந்த சிவராத்திரி அப்போ மசானக்கொள்ளை நடத்தி அந்த சாம்பலை எடுத்து வயல்ல தூவுறதன் மூலமா அது திரும்ப விளையும்னு நம்புறாங்க. இப்போ ஒரு பெரிய தலைவர் இறந்துட்டாருன்னு அவர் சாம்பலை நாடு முழுக்க தெளிக்குறாங்கல்ல. அப்போ அது என்னன்னா ஒன்னு அழிந்து இன்னொன்னு செழிக்குறதுதான். அது ஒரு சிம்பல்னு நான் நினைக்குறேன். அதுக்கு பின்னாடி அது என்ன என்னவாவோ மாறி வந்திருக்கலாம், அது வேற. நான் அதை அப்படித்தான் புரிஞ்சுக்குறேன். அதை தட்டையா பார்க்காமல் இருக்கணும். அதுனாலதான் மக்கள் அதோட எமோஷனலா இணைந்து இருக்காங்க.
இந்த நேர்காணல் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் காரைக்குடியில் ஒருங்கிணைக்கும் மரப்பாச்சி இலக்கிய வட்டத்தின் சார்ப்பாக 29-9-2024 அன்று நடந்த கலந்துரையாடலின் எழுத்து வடிவம்.
நன்றி: எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்
எழுத்தாக்கம்: விக்னேஷ் ஹரிஹரன்