Saturday, 5 April 2025

டுடன்காமுன் கல்லறை 2 : அகழ்ந்தெடுக்கப்பட்ட அதிசயம்- பொன். மகாலிங்கம்

டுடன்காமுன் கல்லறையைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட கார்ட்டருக்கு, முதலில் தோன்றியது மலைப்பு. எங்கிருந்து தோண்டத் தொடங்குவது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் திண்டாடினார் அவர். குப்பையாகக் கிடக்கும் ஒரு வீட்டைச் சுத்தம் செய்யக் கிளம்பினால், எங்கிருந்து தொடங்குவது என்று திணறுவோமே! அதுபோல இருந்தது, கார்ட்டரின் நிலை அன்று. மலைத்துப்போய் நின்றுவிட முடியுமா ? செய்யவேண்டிய வேலை, மலையாய்க் குவிந்து கிடக்கிறதே. ஏற்கெனவே மன்னர்களின் பள்ளத்தாக்கில், தோண்டித் துருவி ஆய்வு நடத்தியவர்கள் அள்ளிக்கொட்டிய குப்பையே, மலைபோல் குவிந்து கிடந்தது.

பிரமிடைப் போன்ற தோற்றமுள்ள குன்றும் மன்னர்களின் பள்ளத்தாக்கும்

எந்தெந்த இடங்களில், முறையாக ஆய்வுப் பணிகள் நடைபெற்றன என்பது எவராலும் ஆவணப்படுத்தப்படவில்லை. ஒவ்வோர் ஆய்வாளரும், தமக்குத் தோன்றிய இடத்தில் தோண்டிப் போட்டிருந்தனர். அதேபோல், எவ்வித முறைமையும் இன்றித் தாமும் தோண்டத் தொடங்கினால், சில ஆண்டுகள் கழித்துத் தோண்டிய இடத்தையே தாமும் தோண்ட வேண்டியிருக்கும் என்பது புரிந்தது கார்ட்டருக்கு. அதைத் தவிர்க்க ஒரேவழி, முறையாக ஒரு வரைபடத்தை உருவாக்கிக்கொண்டு தோண்டுவதுதான் என்று முடிவெடுத்தார் கார்ட்டர். 

மன்னர்களது பள்ளத்தாக்கின் விரிவான வரைபடத்தை உருவாக்கினார் கார்ட்டர். இதற்குமுன் அகழாய்வு நடைபெற்ற இடங்களை, அதில் குறித்தார். அந்த ஆய்வுகளில் கிடைத்த தடயங்கள் ஒவ்வொன்றும், குறிப்பாக எந்த இடத்தில் கிடைத்தன என்பதையும் துல்லியமாகக் குறித்துக்கொண்டார். அவற்றை ஆராய்ந்தபோது, சில இடங்கள் தோண்டப்படாமல் விடுபட்டுப் போயிருப்பதைக் கண்டார் கார்ட்டர். பழைய அகழாய்வுப் பணியின்போது அகற்றப்பட்ட கற்குவியல், மேலே மேலே கொட்டப்பட்டதால், அந்த இடங்கள் விடுபட்டுப்போயிருந்தன. அதனடிப்படையில், எங்கெங்கு தோண்ட வேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொண்டார். 

ஏற்கெனவே டுடன்காமுனின் தந்தை அக்கினாட்டன் உருவாக்கிய புதிய தலைநகரமான அமர்னாவில், அகழாய்வுப் பணிகளில் ஈடுபட்ட தொல்லியல் ஆய்வாளர் பெட்ரிதான், நமது கார்ட்டருக்கு இதில் ஆசான். அறிவியல்பூர்வமான அகழாய்வை வலியுறுத்திவந்த ஆய்வாளர்களில் ஒருவர் பெட்ரி. அலட்சியமாக மேற்கொள்ளப்படும் அகழாய்வுப் பணிகள் குறித்துக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர் பெட்ரி. ஒரு வரைமுறை இல்லாமல், கண்டபடி தோண்டிப்போடும்போது மதிப்புமிக்க வரலாற்றுத் தடயங்கள் அழிந்துபோகக்கூடுமென அவர் அஞ்சினார்.

டுடன்காமுன் கல்லறையின் அமைவிடம். படம் - நன்றி திரு. ரவிஷங்கர் தியாகராஜன்

எகிப்திலும் மத்திய கிழக்கிலும், ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டவர் பெட்ரி. நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் ஆயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும் எழுதியவர் அவர். எகிப்துக்கு வந்த புதிதில், பெட்ரியைச் சந்தித்திருந்தார் கார்ட்டர். அவரது அகழாய்வு முறையில், தொடக்ககாலத்தில் பயிற்சியும் பெற்றார் கார்ட்டர். அதுதான், தமது அகழாய்வு முறையை வடிவமைத்தது என்கிறார் கார்ட்டர். ஒரு குற்றவியல் புலனாய்வாளரைப் போல், எந்தவொரு சின்னத் தடயத்தையும் விட்டுவிடாமல் முறைப்படி தோண்டுவதற்கு, ஆய்வாளர் பெட்ரியிடம் பெற்ற பயிற்சியே காரணம் என்று, பிற்காலத்தில் கார்ட்டர் குறிப்பிடுகிறார். 

தமது முன்னைய பயிற்சி, அனுபவம், தர்க்கம், கொஞ்சம் உள்ளுணர்வு-இவற்றின்மூலம் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட மூன்று மாமன்னர்களின் கல்லறைகளை இணைக்கும் ஒரு முக்கோணப் பகுதிக்குள்தான், டுடன்காமுன் கல்லறை இருக்கவேண்டுமென ஊகித்தார் கார்ட்டர். அந்தப் பகுதியைக் கட்டம் கட்டமாகப் பிரித்து அடையாளமிட்டு, ஒவ்வொன்றாகத் தோண்டத் தொடங்கினார் கார்ட்டர். 30 மீட்டருக்கு 30 மீட்டர் அளவுள்ள கட்டங்கள் அவை. முதலில் தோண்டியவர்கள் விட்டுச்சென்ற பாறைக் குவியலை அப்புறப்படுத்துவதே, பெரிய வேலையாக இருந்தது. அதன்கீழ்தான், தோண்டவேண்டிய உண்மையான பாறைப் பகுதியே இருந்தது. 

மன்னர்களின் பள்ளத்தாக்கு, சுண்ணாம்புப் பறையால் ஆன குன்றுகளை உள்ளடக்கியது. அதன் சரிவுகளை மேலிருந்து தோண்டும்போது ஏராளமான பாறைத் துண்டுகளும் புழுதியும் உருவாகும். ஏற்கெனவே தோண்டிப் போட்ட பாறைக் குப்பை, நாளடைவில் இறுகிப்போய் சோன்பப்டி மிட்டாய்போல் அடுக்கடுக்காகப் படிந்திருக்கும். மன்னர்களின் பள்ளத்தாக்கு என்பது, ஒருவகையில் வறண்டுபோன ஆற்றுப்படுகைதான். வாராது வந்த மாமணிபோல் மழை பெய்தால், திடீர் வெள்ளமும் அங்கே வருவதுண்டு. அந்த வெள்ளம், பாறைத் துண்டுகள், மணல், புழுதி, குப்பை எல்லாவற்றையும் இழுத்துவரும். டுடன்காமுனை உள்ளடக்கிய பதினெட்டாவது அரசகுலம், தனது இறுதிக் காலத்தை நெருங்கியபோது, மன்னர்களின் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது உருவான சேறு, பாறைப் படிவுகள், சுண்ணாம்புப் பாறைக் கற்கள் முதலியவை, டுடன்காமுன் கல்லறை நுழைவாயிலை, முழுவதுமாக மூடி அடைத்து மறைத்து விட்டன. 

மன்னர்களின் பள்ளத்தாக்கு-ஒரு தோற்றம்

ஒருவகையில், இதுதான் அந்தக் கல்லறையைப் பாதுகாத்தது என்றும் சொல்லலாம். அதற்கு முன்னரே, இருமுறை அந்தக் கல்லறை களவாடப்பட்டு மறுபடியும் மூடப்பட்டு முத்திரை இடப்பட்டது. இந்த வெள்ளம் வந்து மூடிச் சுமார் 200 ஆண்டுகள் கழித்து, ஆறாவது ராம்சிஸ் மன்னருக்குக் கல்லறை (KV 9) தோண்டும்போது, டுடன்காமுனின் கல்லறை (KV 62) இருப்பதே, அங்கு வேலை செய்தவர்களுக்குத் தெரியாத அளவுக்கு அது புதையுண்டு போயிருந்தது. 

அந்தக் கல்லறை நுழைவாயிலுக்கு நேர்மேலே கல்-குடிசை அமைத்துத் தங்கிய ஊழியர்கள், அருகிலேயே ஆறாவது ராம்சிஸ் மன்னருக்கான கல்லறை நுழைவாயிலைக் குடைந்தனர். அவ்வாறு செய்ததன்மூலம், டுடன்காமுனின் கல்லறை மேலும் திருட்டுப்போகாமல் காப்பாற்றிவிட்டனர் அந்த ஊழியர்கள். கார்ட்டர், மற்றோர் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தபோதும் ஒருமுறை திடீர் வெள்ளம் வந்தது. 1916ஆம் ஆண்டு வந்த திடீர் வெள்ளம், கண்ணிமைக்கும் நேரத்தில் உருவானதாகக் குறித்து வைத்துள்ளார் கார்ட்டர். பார்த்துக் கொண்டிருக்கும்போதே மலைச் சரிவுகளில் திடீர் அருவிகள் உருவாகிப் பள்ளத்தாக்கில் கல்லும் மண்ணும் அதிவேகத்தில் அடித்துவரத் தொடங்கியதாம். தாமும் ஊழியர்களும் வேகமாக ஓடி, சரிவின் மேல்பகுதிக்குச் சென்று தப்பியதாக எழுதியிருக்கிறார் கார்ட்டர்.

1917ஆம் ஆண்டு, 200 ஊழியர்களோடு கடினமான அகழாய்வுப் பணிகளைத் தொடங்கினார் கார்ட்டர். வெயில் அதிகமில்லாத பருவத்தில்தான் வேலை நடந்தது என்றபோதும், மற்ற நாள்களிலும் வெப்பம் அதிகமாகத்தான் இருக்கும். 35 டிகிரி செல்சியஸ் என்பதெல்லாம் எகிப்தில் குளிர்காலம். கூடை கூடையாய்க் கல் குப்பையைத் தோண்டி எடுத்த ஊழியர்கள், அவற்றை விதவிதமான சலிப்பான்களில் முறைப்படி சலித்து ஏதும் இல்லை என்று உறுதி செய்தபிறகே, குறிப்பிட்ட இடத்தில் சென்று கொட்டினர். டுடன்காமுன் கல்லறைதான் இலக்கு என்றபோதும், ஏனைய அரும்பொருள்களும் தமது தேடலில் கைக்குச் சிக்கும் என்பதை, கார்ட்டர் உணர்ந்திருந்தார்.

ஒவ்வொரு கூடைப் பாறைக் குப்பையிலும் ஏதேனும் உடைந்த உலோகம், கண்ணாடி, பீங்கான், பானைத் துண்டுகள், மணிகள் முதலியவை இருக்கின்றனவா என்று சோதித்தனர் ஊழியர்கள். இறுகிப்போன பாறைச் சரிவை வெட்டிக் கூடையில் அள்ளித் தூக்கிச் சென்று, தொலைவில் கொட்டினர். அதிகமான பாறைத் துண்டுகளை எடுத்துச் செல்வதற்காக தற்காலிகத் தண்டவாளம் போட்டு அதில் பெட்டிகளை வைத்துத் தள்ளிச் செல்லும் முறையைப் பயன்படுத்தினார் கார்ட்டர். கொஞ்சம் ஓடி முடிந்ததும், பின்னாலுள்ள தண்டவாளத்தை எடுத்து முன்புறம் போட்டு, அதில்தான் பெட்டி தள்ளிச்செல்லப்படும். நிரந்தரத் தண்டவாளப் பாதை இருக்காது. இதே வகையான தண்டவாளப் பாதையைப் பயன்படுத்தித்தான், பின்னாளில் டுடன்காமுன் அரும்பொருள்களைக் கல்லறையிலிருந்து பாதுகாப்பாக அலுங்காமல் குலுங்காமல் எடுத்துச் சென்று, நைல் நதியில் காத்திருந்த படகுகளில் ஏற்றி கைரோவுக்கு அனுப்பிவைத்தார் கார்ட்டர். 

ஆறாவது ராம்சிஸ் கல்லறை நுழைவாயிலின் அடிப்பகுதிவரை உள்ள பாறை மேல் ஓட்டுப் பகுதியை வெட்டித் தேடிவிட்டனர் கார்ட்டர் குழுவினர். அதற்கு மேலும் வெட்டித் தேட விரும்பினால், ஒரு சிக்கல். அப்போதே, ஆறாவது ராம்சிஸ் கல்லறை பிரபலமான சுற்றுலாத் தலம். அந்தப் பகுதியில் தொடர்ந்து தோண்டினால், அது சுற்றுப் பயணிகளுக்குத் தடையாகி ஆறாவது ராம்சிஸ் கல்லறைக்குப் போகமுடியாமல் ஆகிவிடும். வேறு வழியில்லாமல், வேறு இடத்தில் தோண்டும் முடிவுக்குத் தள்ளப்பட்டனர் கார்ட்டரும் கார்னர்வான் பிரபுவும். இன்னும் சில அடிகள் கீழே தோண்டியிருந்தால், அவர்களால் டுடன்காமுன் கல்லறை நுழைவாயிலை அப்போதே கண்டுபிடித்திருக்கமுடியும். 

அதிர்ஷ்டம் இல்லாததால் 5 ஆண்டுகள் தள்ளிப்போனது கண்டுபிடிப்பு. ஒவ்வோர் ஆண்டும் எகிப்துக்குவரும் கார்னர்வான் பிரபு, ஆர்வத்தோடு கார்ட்டர் அருகிலேயே இருந்து, அகழ்வுப் பணிகளைப் பார்வையிடுவார். ஒவ்வொரு பருவத் தோண்டலின்போதும் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அரும்பொருள்கள் கிடைக்கும். அலபாஸ்டர் எனப்படும் ஒருவகைப் பளிங்கால் செய்யப்பட்ட அழகான 13 ஜாடிகள் அகப்பட்டன கார்ட்டருக்கு. ஓவியங்களை வரைந்து பார்க்க, எகிப்தியர்களுக்கு உதவிய சுண்ணாம்புக் கல் தகடுகள் சிலவும் கிடைத்தன. இளம் நிபுணர்கள் ஓவியம் வரைந்து பழகிய கல் தகடுகள், கைரோ, லக்ஸோர் அரும்பொருளகங்களில் இப்போதும் காட்சிக்கு உள்ளன.

இளம் சிற்பிகள், ஓவியர்கள் வரைந்து பழகும் சுண்ணாம்புக் கல் தகடு - லக்ஸோர் அரும்பொருளகம்

நாம் இப்போது வீடு கட்டுவதற்கு வரைபடம் தயாரிப்பதுபோல, கல்லறைச் சுரங்கமோ வேறு முக்கியக் கட்டுமானமோ கட்டுமுன் அவற்றின் வரைபடத்தை,இத்தகைய சுண்ணாம்புக் கற்களில் வரைந்தே அக்காலச் சிற்பிகள் திட்டமிட்டனர். வண்ணத்தில் கோடுகளிட்டு வரையப்பட்ட அத்தகைய வரைபடப் பலகைகளை நான் லக்ஸோர் அரும்பொருளகத்திலும் பார்த்தேன். உலகத்திற்குத் தாள் தானம் செய்தவர்கள் எகிப்தியர்கள். அந்த பப்பைரஸ் இருக்கும்போது, ஏன் கல் தகடுகளைப் பயன்படுத்தினர் என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழலாம். 

ஆனால், பண்டைக் காலத்தில் பப்பைரஸ் என்பது அரசப் பயன்பாட்டுக்கு மட்டும்தான் என்பதை நாம் மனத்தில் கொள்ளவேண்டும். சாமானியர்கள் அதைப் பயன்படுத்த, அப்போது அனுமதியில்லை. புதிய சாம்ராஜ்யம் உருவாகி, தீப்ஸ் (Thebes) என்னும் லக்ஸோருக்கு எகிப்தின் தலைநகர் மாறும்வரை, அதுதான் நிலைமை. மாமன்னர்களுக்கும் அரச செயல்பாடுகளுக்கும் மட்டுமேஅனுமதிக்கப்பட்டுவந்த பப்பைரஸ், பின்னர் நோபிள்ஸ் எனப்படும் பூசகர்கள், எழுத்தர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் பயன்பாட்டுக்கும் அனுமதிக்கப்பட்டது. இப்போதும், இந்த முக்கியப் பிரமுகர்களின் கல்லறைகளில் இருந்து ஏராளமான பப்பைரஸ் சுருள்கள் கண்டெடுக்கப்படுவதுண்டு. 

அத்துடன், பப்பைரஸ் என்பது அந்தக் காலத்தில் மிகவும் விலைமதிப்பு மிக்க பொருள். நாணயங்களோ பணமோ புழக்கத்துக்கு வராத காலத்தில், பப்பைரஸ் ஒரு மதிப்புமிக்க பண்டமாற்றுப் பொருளாகவும் இருந்திருக்கிறது. ஒரு சதுரமீட்டர் பரப்பளவுள்ள பப்பைரஸ் தாள், கட்டித் தங்கத்துக்குச் சமமாம். நாணல் வகையைச் சேர்ந்த பப்பைரஸின் தண்டிலிருந்துதான் தாள் உற்பத்தி செய்யப்பட்டது. அது, நைல் நதிக் கரையில் செழித்து வளரக்கூடியதுதான். ஆனால், அதன் தண்டுக்கு உள்ளிருக்கும் பித்திலிருந்து பப்பைரஸ் தாள் தயாரிக்கும் நுட்பம், மிகச் சிறிய ஒரு குழுவினருக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருந்திருக்கவேண்டும். அதுதான், பப்பைரஸின் விலை மதிப்பைத் தீர்மானித்திருக்கவேண்டும். 

மெல்ல மெல்ல, பப்பைரஸ் தாள் பொதுமக்கள் புழக்கத்துக்கு வந்திருக்கவேண்டும். பாலர் பள்ளிகளிலும் தொடக்கப் பள்ளிகளிலும், பிள்ளைகளுக்கு எழுத, படிக்கக் கற்றுக்கொடுக்க, பப்பைரஸ் தாள்கள் பயன்படுத்தப்பட்டதாக எங்கள் வழிகாட்டி மஹ்முட் சொன்னார். செலவை மிச்சப்படுத்த, பப்பைரஸ் சுருள் மீண்டும் மீண்டும் மறு-பயனீடு செய்யப்பட்டிருக்கிறது. எளிதில் அழிக்கக்கூடிய மையால் எழுத்துகளை எழுதிக் கற்பித்துவிட்டுப் பின்னர் தண்ணீர் ஊற்றிக் கழுவி, மீண்டும் அதைக் கற்பித்தலுக்குப் பயன்படுத்தியுள்ளனர் அக்கால ஆசிரியர்கள். 

மறுபடியும் கார்ட்டருக்கு வருவோம். அவரது தலைமையிலான அகழாய்வுப் பணிகளுக்காக, கார்னர்வான் பிரபு தமது செல்வத்தைச் செலவிட்டுக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும், எதிர்பார்த்த இலக்கு எட்டப்படவில்லை என்பதில் மனம் சோர்ந்து போகத் தொடங்கினார் கார்னர்வான் பிரபு. இன்னும் எவ்வளவு ஆண்டுகள் இப்படியே தோண்டிக்கொண்டு இருக்கப் போகிறோம் என்ற மலைப்பு வந்துவிட்டது அவருக்கு. 

முன்னைய தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னது உண்மைதானோ? இனிமேல் தோண்டி எடுக்க மன்னர்களின் பள்ளத்தாக்கில் ஒன்றும் இல்லையோ? என்ற எண்ணம், நாளுக்குநாள் கார்னர்வானுக்குத் தீவிரமடைந்தது. ஓர் அசுப முகூர்த்தத்தில், போதும், இத்தோடு நிறுத்திக்கொள்வோம் என்ற முடிவுக்குவந்தார் அவர். எகிப்தில் கோடைக்காலம் தொடங்கியதும், லண்டனுக்குச் சென்றுவிடுவார் கார்னர்வான் பிரபு. 1922இல் அப்படிப் போனபோது, அங்கிருந்து கார்ட்டரை லண்டனுக்கு வரச்சொன்னார் அவர். இதுவரை நடந்த பணிகளை, இருவருமாக அமர்ந்து பரிசீலித்தனர். கார்ட்டரின் அயராத தேடலுக்கு நன்றி கூறிவிட்டு, அகழ்வுப் பணிகளை இத்தோடு நிறுத்திக் கொள்ளும் முடிவை அறிவித்தார் கார்னர்வான். இடிந்துபோனார் கார்ட்டர். 

இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம் என்று, எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கார்னர்வான் பிரபுவின் மனத்தைக் கரைக்கமுடியவில்லை. “இன்னும் ஒரு பருவத்துக்கு மட்டும் தோண்டிப் பார்ப்போம், அதிலும் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால், இந்த முயற்சியைக் கைவிடுவோம்” என்று வாதிட்டார் கார்ட்டர். ஒரு கட்டத்தில், நீங்கள் பணம் செலவழிக்க மறுத்தாலும் நான் அந்தப் பணியைக் கைவிடுவதாக இல்லை என்றார் கார்ட்டர். “200 ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க ஏராளமான பணம் வேண்டுமே! அவ்வளவு செலவழிக்க நீங்கள் ஒன்றும் செல்வந்தர் இல்லையே!” என கார்னர்வான் கேட்டபோது, “என் வாழ்நாள் சேமிப்பைச் செலவிடவும் நான் தயங்கப்போவதில்லை” என்றார் கார்ட்டர். “அவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு? இம்முறை டுடன்காமுனைக் கண்டுபிடித்துவிட முடியுமென” என்று கேட்ட கார்னர்வானிடம், “நம்பிக்கை என்று சொல்லமாட்டேன், நான் எடுத்த பணியைப் பாதியில் கைவிடாமல் முடிக்க விரும்புகிறேன்” என்றார் கார்ட்டர். 

மனம் இளகிவிட்டது கார்னர்வானுக்கு. வரைபடத்தைச் சுட்டிக்காட்டிய கார்ட்டர், இன்னும் ஒரே ஓரிடம் மட்டும் தோண்டப்படாமல் எஞ்சியிருப்பதாகச் சொன்னார். ஆறாம் ராம்சிஸ் மன்னரின் கல்லறைக்கு அருகிலுள்ள ஊழியர்களின் கல் குடிசைகளுக்குக் கீழே உள்ள இடம் அது. ஏற்கெனவே அந்த இடத்துக்கு அருகில்வரை தோண்டிவிட்டு, நகர்ந்து வேறு இடத்துக்குச் சென்றிருந்தது கார்ட்டரின் குழு. ஆறாம் ராம்சிஸ் மன்னர் காலத்துக்குப் பின்னர், கல்லறைத் திருடர்களால் தீண்டப்படாதது அந்த இடம் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் கார்ட்டர். ஆகவே, அந்த இடத்தில் அகழாய்வு நடத்துவது வீணாய்ப் போகாது என்ற தர்க்கத்துக்கு இசைந்தார் கார்னர்வான். இன்னும் ஒரு பருவத்துக்குத் தோண்டும் பணிகளுக்கு நிதியாதரவு வழங்க முன்வந்தார், அந்த மகாப் பிரபு. 

1922ஆம் ஆண்டு. நவம்பர் மாதம். மற்ற எல்லாப் பருவங்களையும் போல இல்லை இது. கார்ட்டரின் குழுவிலுள்ள அனைவருக்கும் தெரியும் இதுதான் டுடன்காமுன் கல்லறையைத் தேடும் கடைசி முயற்சி என்று. இம்முறை அது கிடைக்காமற்போனால், இனி ஒருபோதும் அது கிடைக்கப் போவதில்லை. இந்த உண்மை உறைத்ததும், முன்னைக் காட்டிலும் ஆர்வத்தோடு தேடத் தொடங்கினர் ஊழியர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அங்கே இருந்த கல் குடிசைகளுக்குக் கீழே உள்ள பகுதிகளில், இம்முறை அதிக கவனம் செலுத்தப்பட்டது. பாறைச் சரிவுக்கு மேல் சுமார் மூன்று அடி உயரத்தில் கட்டப்பட்ட அந்தக் கல் குடிசைகள், சுமார் 3200 ஆண்டுகளாக அங்கே இருந்துவருகின்றன. அவற்றுக்குக் கீழே ஆறாம் ராம்சிஸ் கல்லறையைத் தோண்டிய ஊழியர்கள், அநேகமாக அங்குதான்தங்கியிருந்திருக்கவேண்டும். 

நவம்பர் 3ஆம் தேதியன்று, ஊழியர்கள் கல் குடிசைகளை அகற்றத் தொடங்கினர். அதற்கு மறுநாள், பாறைச் சரிவுக்கு மேலிருந்த படிவுகளையும் குப்பைகளையும் அகற்றினர். மன்னர்களின் பள்ளத்தாக்கில் அகழ்வுப் பணி நடக்கும்போதெல்லாம், ஊழியர்கள் வேலை செய்யும் சத்தம் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். பாறைப் படிவைக் கொத்தி எடுக்கும் சத்தமும் அதை அள்ளிச் செல்லும் சத்தமும், ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கும். கூடவே ஊழியர்களின் கூச்சலும். 

அன்றைய நாள், திடீரெனச் சத்தம் நின்றது. எப்போதுமே ஓசையைக் கேட்டுப் பழகிய இடத்தில், ஓசை திடீரென நின்றதும் என்னவோ நடந்திருக்கிறது என்பதை ஊகித்துவிட்டார் கார்ட்டர். அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் குடிநீர் வழங்கும் சிறுவன் ஒருவன், எதேச்சையாக ஓரிடத்தில் கிளறிக்கொண்டிருந்தபோது கல்லில் ஆழமான வெட்டு இருந்ததைக் கண்டுபிடித்தான். தண்ணீர் கொண்டுவரும் மண் ஜாடியின் கீழ்ப்புறம் தட்டையாக இல்லாமல் வளைவாக இருக்கும். ஆகவே, அதைக் கீழே வைக்கவேண்டுமானால் ஒரு பள்ளம் தோண்டி அதற்குள் வைத்தால்தான் ஜாடி நிமிர்ந்து நிற்கும். அதற்காக அந்தச் சிறுவன், ஓரிடத்தில் இருந்த கல்குப்பையை அகற்றிக் கொண்டிருந்தபோது, கடினமான பாறை தென்பட்டது. கூடக் கொஞ்சம் தோண்டியபோதுதான், அது ஆழமாக வெட்டப்பட்டிருப்பது தெரிந்தது. 

உடனே கூச்சலிட்டு அருகிலிருந்தவர்களைக் கூப்பிட்டுக் காண்பித்து, மேலும் கிளறியபோது ஆழமான வெட்டு மேலும் உள்ளே செல்வது தெரிந்தது. உடனே சிறுவன் ஓடிச்சென்று, கார்ட்டரை அழைத்துவந்து காட்டினான். அந்தச் சிறுவனின் பெயர் ஹுசேய்ன் அப்துல் ரசூல். நகத்தைக் கடித்தபடி பரபரப்பானார் கார்ட்டர். (பிரபலமான சுரங்கப் படிக்கட்டுகளுக்கு இட்டுச் செல்லும் தொடக்கத்தைக் கண்டுபிடித்தது தண்ணீர் விநியோகிக்கும் சிறுவன் அல்ல, அது கார்ட்டரின் நெருங்கிய அரபு நண்பர் ஹசன் என்று ஒரு தகவல் இருக்கிறது. அந்த ஹசன் குடும்பத்தாரை, நாங்கள் சந்தித்துப் படம் எடுத்துக்கொண்டோம்.) 

பெரும்பாலான புத்தகங்கள் இப்படி நடந்ததாகக் குறிப்பிட்டாலும், கல்லறைக் கண்டுபிடிப்புப் பற்றித் தாம் எழுதிய புத்தகத்தில், இந்தப் பகுதியை மிகச் சுருக்கமாக எழுதிச் செல்கிறார் கார்ட்டர். ஏன் இதுபற்றி அவர் தமது முதல் புத்தகத்தில் விரிவாக எழுதவில்லை என்று தெரியவில்லை. அப்படி எழுதினால், அந்த நபரோ அவரது குடும்பத்தாரோ கல்லறைப் பொருள்களுக்குச் சொந்தம் கொண்டாடத் தொடங்கக்கூடுமெனக் கார்ட்டர் அஞ்சியிருக்கலாம். 

சுரங்கப் படிக்கட்டு தொடங்கும் இடம், தண்ணீர் விநியோகிக்கும் சிறுவன் கண்டுபிடித்தது. படம் - டுடன்காமுன் மாதிரிக் கல்லறை, லக்ஸோர்

நவம்பர் நாலாம் நாள், அகழ்வுப் பணி நடக்கும் இடத்துக்கு வந்த சற்று நேரத்திலேயே, ஓசை நின்றதாகக் கூறுகிறார் கார்ட்டர். அகற்றப்படுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட முதலாவது கல் குடிசைக்குக் கீழேயே பாறை செங்குத்தாக வெட்டப்பட்ட தடயம் இருப்பதாகத் தம்மிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுப் போய்ப் பார்த்ததாகச் சொல்கிறார் கார்ட்டர். முதலில் நம்புவதற்குச் சிரமமாக இருந்தாலும், பாறைப் படிவுகளை அகற்றிவிட்டுப் பார்த்தபோது வெட்டப்பட்ட பகுதி, “கீழே இறங்கிச் செல்லும் நுழைவாயில்தான்” என்பது உறுதியானது. நாலாவது ராம்சிஸ் கல்லறை நுழைவாயிலுக்கு, 13 அடி கீழே இருந்தது அந்த நுழைவாயில். மன்னர்களின் பள்ளத்தாக்கில், நிலவறைக் கல்லறைகளுக்கான படிக்கட்டுகள் எப்படித் தொடங்குமோ அதே இலட்சணம் இந்த நுழைவாயிலிலும் இருந்ததால், ஒருவழியாகத் தேடிய கல்லறையைக் கண்டுபிடித்துவிட்டோம் என்ற உறுதியான நம்பிக்கை துளிர்த்தது கார்ட்டருக்கு. 

அன்றும் மறுநாளும், மேலே மூடியிருந்த கற்களையும் புழுதியையும் அகற்றினார்கள் ஊழியர்கள். 1922ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி, மேலிருந்த குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டுப் படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தின் மேற்புறம், முழுமையாகத் துலங்கிவந்தது. கதிரணைவு நேரத்தில், 12ஆவது படிக்கட்டை அடைந்தபோது, பூசி மெழுகி முத்திரையிடப்பட்ட முதல் கதவின் மேற்புறம் தெரியத் தொடங்கியது. கதவு என்றால் மரக்கதவு அல்ல. கல்லும் சாந்தும் கலந்து கட்டிப் பூசிவைத்த நுழைவாயில். முத்திரையிடப்பட்ட தடுப்புச்சுவர்!அப்படியென்றால்?... மிச்சமிருந்த நகத்தையும் கடித்துத் துப்பினார் கார்ட்டர். 

மேலே கனமான மர உத்தரத்தின் (Lintel) கீழிருந்து தொடங்கிய அந்தத் தடுப்புச் சுவர், கள்வர்களால் உடைக்கப்படாமல் அரச முத்திரையோடு இருந்ததைச் சோதித்து உறுதிப்படுத்திக்கொண்டார் கார்ட்டர். எந்த மன்னரின் பெயராவது அங்கே இருக்கிறதா என்று தேடினார் கார்ட்டர். அப்படி ஏதும் அங்கே இல்லை. ஈரம் காயாத களிமண் பூச்சுமீது, முத்திரையை வைத்து அழுத்தி அழுத்திப் பதித்த ஏராளமான அச்சுத் தடங்கள், தெளிவாக அங்கே காணப்பட்டன. கைகள் பின்னால் கட்டப்பட்ட, எகிப்தின் பாரம்பரிய எதிரிகள் ஒன்பது பேரின் உருவங்களுக்குமேல், முன்னங்காலை நீட்டி ஒய்யாரமாகக் குள்ளநரி ஒன்று அமர்ந்திருக்கும் முத்திரை தெளிவாகத் தெரிந்தது.அனுபிஸ் (Anubis) என்பது இந்த நரியின் பெயர். இது நாய் என்றும் கருதப்படுகிறது. பார்வைக்கு, உயர்ந்த சிறிய முக்கோண வடிவிலான காதுகளோடு காணப்படுவதால், இதை நரி என்றே நாம் கொள்வோம். விடைத்த காதுகளோடுதான் இது எல்லா இடங்களிலும் காட்டப்படுகிறது. மேலே மூன்று, நடுவில் நான்கு, கீழே இரண்டு என மொத்தம் ஒன்பது எதிரிகளைக் கொண்டிருந்தது முத்திரை. விடைத்த காதுகளோடு கூடிய நாயோ நரியோ, விவேகமான விலங்குகள் என்ற நம்பிக்கை உண்டு. 

அனுபிஸ் நரி, கைரோ தேசிய அரும்பொருளகம்

மரணத்துக்குப்பின் மன்னர் மறுபிறப்புக்கான நடைமுறைகளை முடிப்பது, இந்த நரி வடிவில் குறியீடாகக் காட்டப்படுகிறது. அதற்குமுன் மன்னர் சமாளிக்கவேண்டிய தடைகளைத்தான் ஒன்பது எதிரிகளாகக் காட்டுகின்றனர் எகிப்தியர்கள். அரசக் கல்லறைகளின் காவலன் இந்தக் குள்ளநரி. அரசக் கல்லறைகளின் வாயில்கள் மட்டுமே, இந்தவிதமான முத்திரைகளைக் கொண்டிருக்கும். ஆக, இது யாரோ ஓர் அரசகுடும்பத்து முக்கியப் புள்ளியின் கல்லறை என்பதில் ஆசுவாசமடைந்தார் கார்ட்டர். 

கல்லறைத் தடுப்புச் சுவரில் பதிக்கப்பட்ட முத்திரையைச் சோதித்த கார்ட்டர், அதன் மேற்புறக் காரை கொஞ்சம் பெயர்ந்திருப்பதை கவனித்தார். அங்கே ஒரு சிறிய துளையிட்டார் அவர். ஒரு கைவிளக்கு உள்ளே போகுமளவுக்குத் துளையைப் பெரிதாக்கி, அதற்குள் ஆர்வத்தோடு நோக்கினார். தரையிலிருந்து கூரைவரை, கற்களும் பாறைப் புழுதியும் நிறைந்து காணப்பட்டது, தடுப்புச் சுவருக்குப் பின்னாலிருந்த பகுதி. இந்தச் சுவர் முதல் தடுப்புச் சுவர்தான். இதற்குப் பின்னால், இன்னொரு கதவு போன்ற சுவர் இருக்கவேண்டும். அதற்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்குத்தான் இந்தக் கல்லும் மண்ணும் பாதையில் நிறைக்கப்பட்டிருக்கிறது என்று ஊகித்தார் கார்ட்டர். அந்தப் பாதைக்குப் பின்னால், என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். உடனே சுவரை உடைத்து உள்ளேபுகுந்து, அந்தக் கல்லையும் மண்ணையும் அகற்றக் கைகள் பரபரத்தன கார்ட்டருக்கு. 

ஆனால், சிரமப்பட்டுத் தமது ஆர்வத்தை அடக்கிக்கொண்டதாக எழுதுகிறார் கார்ட்டர். இருந்தாலும், அவர் கூடவே பிறந்த சந்தேகம் போகவில்லை. “இவ்வளவு பெரிய மன்னரின் கல்லறை நுழைவாயில் ஏன் இவ்வளவு சிறியதாக இருக்கவேண்டும்?” மன்னர்களின் பள்ளத்தாக்கிலுள்ள பெரும்பாலான கல்லறைகள், அளவிற் பெரியவை. அலங்காரத்தில் சிறந்தவை. கல்லறைச் சுவர் முழுவதுமே, வண்ண ஓவியங்களால் நிறைக்கப்பட்டிருக்கும். பட்டம் கட்டிய உடனேயே, எகிப்திய மன்னர்கள் தங்களுக்கான கல்லறைகளைக் கட்டத் தொடங்கிவிடுவார்கள். அதைக் கட்டியோ குடைந்தோ முடிக்க, சில பத்தாண்டுகள் ஆகும். 

எனவே, இந்தக் கல்லறை அரசகுடும்பத்தைச் சேர்ந்த ஒரு முக்கியப்புள்ளியின் கல்லறை அல்லது மம்மிகள் பலவற்றைச் சேர்த்துப் பாதுகாத்து வைக்கும் சேகரிப்புக் கிடங்காக இருக்கலாம் என்ற எண்ணம் ஓடியது கார்ட்டரின் மனத்திற்குள். அகண்ட எகிப்தைக் கட்டி ஆண்ட ஒரு மாமன்னருடைய கல்லறை, இவ்வளவு சின்னதாகவா இருக்கமுடியும் என்ற அவநம்பிக்கை தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை கார்ட்டரால். தடுப்புச் சுவரில் இதுவரை வெளிப்பட்ட பகுதியில், மன்னர்கள் எவரது பெயரும் தென்படவில்லை. “டுடன்காமுனின் ஒரே ஒரு முத்திரை மட்டும் அந்த முதல் தடுப்புச் சுவரில் பதிக்கப்பட்டிருந்தால், அடுத்துவந்த மூன்று வாரங்கள், நான் நிம்மதியாகத் தூங்கியிருப்பேனே!” என்கிறார் கார்ட்டர். 

நேரம் கடந்து கொண்டிருந்ததால், தடுப்புச் சுவரில் போட்ட துளையை மூடிவிட்டு எல்லாப் படிக்கட்டுகளையும் பழையபடி பாறைக் குப்பைகளைப் போட்டு மூடினார் கார்ட்டர். முதலில் அது எப்படி இருந்ததோ, அதே மாதிரி மூடிவைத்தார். அலிபாபா குகையை மூடியிருந்ததுபோன்ற ஒரு பெரிய பாறையை உருட்டிவந்து, படிக்கட்டுப் பாதையை மூடி வைத்தனர் கார்ட்டரின் ஊழியர்கள். படிக்கட்டின் முதல் பகுதி கண்டுபிடிக்கப்பட்டு சரியாக 48 மணி நேரம் ஆகியிருந்தது. கல்லறை மறைந்துவிட்டது. இப்படி ஒரு சம்பவம் இங்கே நடந்ததா என்று கேட்குமளவுக்கு எல்லாமே பழைய நிலைக்குத் திரும்பின. “நடந்தவை எல்லாமே, கனவல்ல நனவுதான் என்று நம்புவது தனக்கே சிரமமாகத்தான் இருந்தது” என்கிறார் கார்ட்டர். 

இப்படி ஒரு கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட தகவலை, வெளியே சொல்லவேண்டாமென ஊழியர்களை வேண்டிக்கொண்டு வீடு திரும்பினார் கார்ட்டர். போகுமுன், கல்லறைக்கு வெளியே தமது நம்பிக்கைக்கு உரிய பணியாளர்களைக் காவலுக்கு வைத்தார். கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாமல் போய்விடக்கூடாதல்லவா? 

இன்றில்லாவிட்டாலும் விரைவில், கல்லறையைத் திறந்து பார்க்கத்தான் வேண்டும். ஆனால், கார்னர்வான் பிரபு ஊரில் இல்லை. லண்டனுக்குப் போய்விட்டார். அவர் முன்னிலையில் கல்லறையைத் திறப்பதுதான் சரியானது என்று நினைத்தார் கார்ட்டர். நவம்பர் 6ஆம் தேதி கார்னர்வானுக்கு ஒரு தந்தி கொடுத்தார். “ஐயன்மீர்! ஒருவழியாகக் கண்டுபிடித்துவிட்டோம் என்று நினைக்கிறேன். நீங்கள் வந்தால் உடனே உடைத்து உள்ளே புகுந்துவிடலாம்” என்று நாலு வரியில் தகவலைத் தெரிவித்தார் கார்ட்டர். கார்னர்வான் வரும்வரை பொறுமையாகக் காத்திருந்தார். 

காத்திருந்து காத்திருந்து கடிகாரத்தைப் பார்த்தே பொழுதைப் போக்கினார் கார்ட்டர். நாளொற்றித் தேய்ந்தன விரல்கள். கப்பலில்தானே வரமுடியும் கனவான்? மூன்று வாரங்கள் ஆயின கார்னர்வான் வந்துசேர. அலெக்ஸாண்டிரியா நகரம்வரை கப்பலில் வந்து, அங்கிருந்து தரை மார்க்கமாகவும் நைல் நதிப் படகுப் பயணமாகவும் லக்ஸோர் வந்து சேர்ந்தார் கார்னர்வான். கூடவே, அவரது மகள் லேடி ஈவ்லின் ஹெர்பர்ட்டும் வந்தார். அவர்களோடு கார்ட்டரின் நண்பரான ஆர்தர் காலண்டரும் இணைந்துகொண்டார். 

கைரோ சென்று கார்னர்வான் பிரபுவை எதிர்கொண்டு வரவேற்றார் கார்ட்டர். அவர் வந்தவுடனேயே தாமதிக்காமல் வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக, நவம்பர் 18ஆம் தேதி தலைநகர் கைரோ சென்ற கார்ட்டர், தேவையான பொருள்களோடு மூன்று நாள் கழித்து 21ஆம் தேதி லக்ஸோர் திரும்பினார். கார்னர்வான் பிரபு 23-ஆம் தேதி லக்ஸோர் வந்து சேர்ந்தார். 

கார்னர்வான், மன்னர்களின் பள்ளத்தாக்கிற்கு வந்து சேருமுன், படிக்கட்டுகளை மூடி வைத்திருந்த பகுதி மீண்டும் தோண்டிச் சுத்தப்படுத்தப்பட்டது. படிக்கட்டுகளை மூடியிருந்த புழுதியில், வெவ்வேறு மாமன்னர்களின் காலத்தைய எச்சங்கள் கலந்து குப்பையாகக் கிடந்ததை முன்னரே குறித்து வைத்திருந்தார் கார்ட்டர். அதன்மூலம் இந்தக் கல்லறை, ஒன்றுக்கு மேற்பட்ட முறை உடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியானது அவருக்கு. இல்லாவிட்டால், பல காலத்திய குப்பை உள்ளே வந்திருக்கமுடியாதே! உள்ளே இருப்பது டுடன்காமுன் மம்மி என்றால், அது அங்கே வைக்கப்பட்ட பிறகு ஒருமுறையும், கொள்ளையிடப்பட்ட பிறகு ஒருமுறையும் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பினார் கார்ட்டர். 

அப்படியென்றால், முதலில் கல்லறைக்கு உள்ளே வைத்த எல்லாப் பொருள்களுமே, இன்னமும் பத்திரமாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. மதிப்புமிக்க ஆபரணங்களும் மற்ற அரும்பொருள்களும் திருடப்பட்டிருக்கலாம். இருந்தாலும், வெற்றுக் கல்லறையை ஏன் மறுபடி முத்திரையிட்டு மூடி வைக்கப் போகிறார்கள்? என்றும் தோன்றியது அவருக்கு. இதற்குமுன், இப்படி ஆர்வத்தோடு தோண்டிய ஒரு சிறிய கல்லறைக்குள் கல்லும் மண்ணும்தான் இருந்தன. அந்த ஏமாற்றம் நினைவுக்கு வந்து குழப்பியது கார்ட்டரை. இதை முழுமையாகத் திறந்து பார்க்கும்வரை, ஒன்றும் சொல்லமுடியாது. 

16 படிக்கட்டுகள்

நவம்பர் 24ஆம் தேதி, 16 படிக்கட்டுகளும் முழுமையாக வெளிப்பட்டன. (நானும் என்னுடன் வந்த நண்பர் ராஜகோபாலும் அந்த 16 படிக்கட்டுகளில் ஒன்றைத் தொட்டுத் தடவிப் பார்த்தோம். அதனோடு படம் எடுத்துக்கொண்டோம்.) இப்போது, தடுப்புச் சுவரை முழுமையாக ஆராய்ந்தார் கார்ட்டர். அப்போது, அரச கல்லறைக்குரிய முத்திரைகள் தவிர டுடன்காமுனின் பெயர் தாங்கிய முத்திரைகளும் தடுப்புச் சுவரின் கீழ்ப்பகுதியில் இருப்பதைக் கண்டுபிடித்தார் கார்ட்டர். முதலில், அந்த முத்திரைகள் இருக்கும் ஆழம்வரை தடுப்புச் சுவரை மூடியிருந்த கல்குப்பை தோண்டி அகற்றப்படவில்லை. இப்போது, கார்ட்டருக்குப் புதுத் தெம்பு வந்தது. முழுத் தடுப்புச் சுவரையும், முதன் முறையாக நல்ல வெளிச்சத்தில் பார்த்தபோது இரண்டு இடங்களில் அந்தத் தடுப்புச் சுவரில் கன்னமிடப்பட்டு மூடப்பட்ட அடையாளம் தெரிந்தது.

சாதாரணச் சுவரின் ஒருபகுதியை நடுவே துளையிட்டு உடைத்துவிட்டுப் பின்னர் அதைப் பூசினாலும் அந்த இடம் காய்ந்தபிறகு அதன் தடம் தெரியுமல்லவா? அதைப்போல, இரண்டு துளைகள் மூடப்பட்ட தடயம் சுவரில் இருந்தது. ஒரு துளை மூடப்பட்ட இடத்தில், அனுபிஸ் நரியும் எகிப்தின் ஒன்பது எதிரிகளும் கொண்ட அரச கல்லறைக்குரிய முத்திரை இருந்தது. அது, முதல்முறை மூடப்பட்ட பிறகு உடைத்து மூடப்பட்ட பகுதி மீது பதிக்கப்பட்ட முத்திரை. மற்றொன்று, கல்லறை முதல்முறை மூடப்பட்டபோது பதிக்கப்பட்ட டுடன்காமுன் பெயருள்ள முத்திரை. ஆக, ஒன்றுக்கு மேற்பட்ட முறை கல்லறை கொள்ளையிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உள்ளே வைத்த எல்லாமும் கொள்ளை போயிருக்கவும் வாய்ப்பில்லை. அப்படி எல்லாமே கொள்ளைபோயிருந்தால், மறு-முத்திரை இடுவதற்கான அவசியம் இருந்திருக்காதே?

பின்னால் கிடைத்த ஆதாரங்களின்படி, இவ்வாறு கல்லறை மறு-முத்திரை இடப்பட்டது ஹோரெம்ஹெப் (Hor-em-heb) மன்னரது ஆட்சிக்குப் பின் நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் கார்ட்டர். அதாவது, டுடன்காமுன் மம்மி புதைக்கப்பட்ட பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்குள்ளேயே, கல்லறை உடைக்கப்பட்டிருக்கவேண்டும். 

படிகளின் கீழ்ப்பகுதியில் இருந்த குப்பையில், தோலால் செய்யப்பட்ட தண்ணீர்ப் பைகளும் கிடைத்தன. தடுப்புச் சுவர் மீது சாந்து கலந்து பூசி மெழுகுவதற்குத் தேவையான தண்ணீரை, உள்ளே கொண்டுவருவதற்காகப் பயன்படுத்தப்பட்ட தோல் பைகள் அவை. மேலும், ஏராளமான பானையோடுகள், அக்கினாட்டன், ஸ்மென்க்கரே, டுடன்காமுன்-ஆகிய மன்னர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட சில பெட்டிகளும் கிடைத்தன. அவற்றைக்காட்டிலும், மூன்றாம் துட்மோசிஸ், மூன்றாம் அமென்ஹோட்டெப் பெயர் பொறிக்கப்பட்ட புனித வண்டுகளும் கிடைத்தன. எப்படி இத்தனை மன்னர்கள் இங்கே வந்தனர்? 

ஒருவேளை பதினெட்டாம் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த சில அரும்பொருள்களின் கலவையான சேமிப்பகமாக இருக்குமோ இது? தலைநகர் அமர்னாவில் இருந்து எல்லாவற்றையும் சேமித்துவந்து டுடன்காமுன் இங்கே பாதுகாப்பாகக் கொட்டி வைத்தாரோ? இன்னும் ஓரிரு நாள். விடை தெரியப்போகிறது. 

ஏன் அவநம்பிக்கை கொள்ளவேண்டும் என்று நினைத்து, தன்னைத்தானே தேற்றிக்கொண்டார் கார்ட்டர். நவம்பர் 25. கார்னர்வானும் கார்ட்டரும் 16 படிக்கட்டுகளுக்குக் கீழே இருந்த முதல் தடுப்புச் சுவரை மிகுந்த கவனமாக அப்புறப்படுத்தினர். அதற்குமுன், தடுப்புச்சுவரின் தெளிவான குறிப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டுப் புகைப்படமும் எடுக்கப்பட்டது. பதிப்புரிமை காரணமாக என்னால், அந்தச் சுவரின் படத்தை இங்கே தரமுடியவில்லை. கார்ட்டரின் முதல் புத்தகத்தில், அந்த கறுப்பு-வெள்ளைப் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் தேடினால் கிடைக்கிறது. 

முதல் தடுப்புச் சுவர், கரடு முரடான பெரிய கற்களைக்கொண்டு தரையிலிருந்து மேலே உள்ள மர உத்தரம் வரை கட்டப்பட்டிருந்தது. சுவரின் வெளிப்புறம் மட்டும், முத்திரைகள் பதிக்கப்படுவதற்காக, சாந்துகொண்டு அடர்த்தியாகப் பூசப்பட்டிருந்தது. அதை உடைத்து, அடுத்துவரும் நீண்ட இடைவழியை அடைந்தனர் இருவரும். கீழிருந்து மேல்வரை, கற்குப்பையால் மூடப்பட்டிருந்தது அந்தப் பாதை. அதை உற்று கவனித்தபோது, ஒன்றை உணர்ந்தார் கார்ட்டர். சரிவான அந்த இடைவழி ஆறு அடி அகலமும் சுமார் 7 அடி உயரமும் கொண்டது. 

இரண்டு விதமான கல்குப்பைகளால் அந்தப் பாதை நிறைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் பெரும்பாலானவை, வெள்ளைச் சுண்ணாம்புக் கல் துண்டுகள், துகள்கள். எஞ்சியவை அடர்த்தியான நிறமுள்ள ஃபிளிண்ட் எனப்படும் சிக்கிமுக்கிக் கல் வகையைச் சேர்ந்த கல் துண்டுகள், துகள்கள். அவை, இடப்புற மேல்பகுதி ஓரத்தில் கொட்டி அடைக்கப்பட்டிருந்தன. அப்படியென்றால், முழுவதும் சுண்ணாம்புக் கல் துகள்களைக் கொண்டிருந்த இடைவழியின் மேலே, சுரங்கம்போல் ஒருபகுதியைத் தோண்டி உள்ளே கல்லறைக் கள்வர்கள் போயிருக்கவேண்டும். அந்தத் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டபின்னர், கல்லறைப் பகுதி அதிகாரிகள், மேற்கொண்டு கல்லறை சூறையாடப்படுவதைத் தடுக்கும்நோக்கில், புதிய கற்களைக் கொண்டு அந்தப் பகுதியை அடைத்திருக்கவேண்டும். 

உண்மையில், டுடன்காமுனின் மம்மி கல்லறைக்குள் வைக்கப்பட்டு ஈமச் சடங்குகள் நடந்த மிக விரைவிலேயே, முதற்கொள்ளை நடந்திருக்க வேண்டும் என்கிறார் கார்ட்டர். அப்போது, முதலாவது தடுப்புச் சுவருக்கும் இரண்டாவது தடுப்புச் சுவருக்கும் இடைப்பட்ட நீண்ட இடைவழிப் பாதை, கல்லோ மண்ணோ போடப்பட்டு அடைக்கப்படாமல் காலியாகத்தான் இருந்திருக்கும். அதனால்தான், கள்வர்கள் திருடிச் சென்ற கல்லறைப் பொருள்களில் சில, இடைவழியிலும் படிக்கட்டுகளிலும் சிதறிக்கிடந்தன. முதற்கொள்ளை நடந்தது தெரிந்ததும், கூடுதல் பாதுகாப்புக்காக இடைவழியைக் கல்லும் மண்ணும் கொண்டு, முழுதாக நிரப்பி அடைத்துவிட்டனர் அதிகாரிகள்.

அதன் பிறகு, பத்துப் பதினைந்து ஆண்டுகளில் இரண்டாவது கொள்ளை நடந்திருக்கவேண்டும். இடைவழியில் இருந்த கற்குப்பைக்குள், ஒரு சுரங்கம்போல் தோண்டிக் கல்லறைக்குள் புகுந்த கள்வர்கள், கல்லறையின் எல்லா அறைகளுக்குள்ளும் புகுந்து கொள்ளையிட்டனர். ஆனால், கல்லறையைவிட்டு வெளியேவருவதற்கான சுரங்கப் பாதை, மிகக் குறுகலானது என்பதால், சின்னச்சின்னப் பொருள்களை மட்டுமே கள்வர்களால் வெளியே எடுத்துவர முடிந்திருக்கும் என்று ஊகிக்கிறார் கார்ட்டர். 

மன்னர்களின் பள்ளத்தாக்கில் கல் குப்பைகளை அகற்றும் ஊழியர்கள்

இடைவழியில் கொட்டப்பட்டிருந்த குப்பையை அகற்றும்போது, கார்ட்டர் சில அரும்பொருள் சிதைவுகளை அடையாளம் கண்டார். அவற்றையும் பத்திரமாக எடுத்துவைத்தார். அந்தப் பகுதியிலிருந்து அகற்றப்பட்ட கல் குப்பையின் அளவு, ஆயிரக்கணக்கான டன் இருக்குமென மதிப்பிடப்படுகிறது. சுமார் 1.75 லட்சம் டன் கல் குப்பை அகற்றப்பட்டிருக்கலாம் என மதிப்பிடுகிறார், கார்னர்வான் பிரபு. கற்பனை செய்து கொள்ளுங்கள்.. இதைப் படித்துவிட்டு டுடன்காமுன் கல்லறையைக் காண நீங்கள் சென்றால், சரிவான அந்த இடைவழிப் பாதைக்குள் போகும்போது, இது கற்குப்பையால் முற்றாக மூடப்பட்டிருந்தது என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். 

கல் குப்பைகளை அகற்றும் ஊழியர்கள்

1922 நவம்பர் 26. கார்ட்டரின் வாழ்வில் மிக முக்கியமான நாள். இடைவழிப் பாதையிலிருந்த தடைக் கற்களை அகற்றிவிட்டு, இரண்டாவது சுவரை அடைந்தனர் கார்ட்டரும் கார்னர்வானும். இந்த இடத்தில், கார்ட்டரின் வரிகளையே தருகிறேன். “இதுதான் நான் காத்திருந்த நன்னாள். என் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தது இந்த நாளுக்காகத்தான். என்னைப் போன்ற ஒருவருக்கு, இத்தகைய வாய்ப்பு இனியொரு முறை வரும் என்று ஒருபோதும் நான் நம்பவில்லை.” 

முதல் தடுப்புச் சுவரிலிருந்து அவர்கள், 30 அடி தள்ளி கீழே இருந்தனர். கிட்டத்தட்ட முதல் தடுப்புச் சுவர் போலவேதான் இருந்தது இந்த இரண்டாவது சுவர்ப் பகுதியும். கல்லறை முத்திரை, மன்னர் டுடன்காமுன் முத்திரை இரண்டும் பதிக்கப்பட்டிருந்தன இந்தச் சுவர் பூராவும். ஏற்கெனவே ஒருமுறை உடைக்கப்பட்டு மறுபடியும் பூசப்பட்ட இடத்தின் தடம் தெளிவாக இருந்தது இந்தத் தடுப்புச் சுவரில். மறுபடியும், மம்மிகள் பலவற்றைச் சேகரித்து வைத்த இடத்தைத்தான் திறந்து பார்க்கப் போகிறோம் என்ற அவநம்பிக்கை ஏற்பட்டது இருவருக்கும். 

இத்தனை நாள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ள புதையலைத் திறந்து பார்க்கும் கணம். உள்ளே என்னென்ன இருக்கப் போகிறதோ என்ற பதைபதைப்பு இருவருக்கும். கார்னர்வான் பிரபு, அவரது மகள் ஈவ்லின் சீமாட்டி, கார்ட்டரின் நண்பர் காலண்டர்-ஆகிய மூவர் அப்போது கார்ட்டருடன் இருந்தார்கள். (சில புத்தகங்களில், கார்ட்டரின் நண்பர் ஹசனும் உடன் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், கார்ட்டர் அதை உறுதி செய்யவில்லை) தடுப்புச் சுவரின் இடப்பக்க மேல் மூலையில், ஏற்கெனவே கன்னமிட்டுப் பூசப்பட்ட இடத்தில் சிறிய துளையை உருவாக்கினார் கார்ட்டர். கைகள் நடுங்கின அவருக்கு. சுவர் உடைந்து துகள்கள் சிதறும் ஓசை, கல்லறை முழுவதும் எதிரொலித்தது. 

சின்னத் துளைக்குள் ஓர் இரும்புக் கம்பியைவிட்டுப் பார்த்தார் கார்ட்டர். பின்னர், அந்தக் கம்பியால் லேசாகக் குத்திப் பார்த்தார். ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. சுவருக்குப் பின் வெற்றிடம்தான் இருந்தது. கம்பி எதன்மேலும் முட்டவோ முட்டி ஓசையெழுப்பவோ இல்லை. சுவரில் போட்ட துளை வழியாக, 3300 ஆண்டுகள் கல்லறைக்குள் அடைபட்டுத் தேங்கிநின்ற நச்சுக் காற்று வெளியேறுகிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்காக, ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றித் துளை முன்னால் காண்பித்தார் கார்ட்டர். அவரது மனம்போல், சுடரும் நடுங்கியது. கார்ட்டரின் இதயம் துடிக்கும் சத்தம் அவருக்கே கேட்டது. சிறிது நேரம் பொறுத்திருந்து, துளையைப் பெரிதுபடுத்தி அதன் வழியாக உள்ளே நோட்டமிட்டார் கார்ட்டர். 

சற்று நேரத்திற்கு, கார்ட்டரிடம் இருந்து சத்தமே வரவில்லை. கார்னர்வானுக்கு ஆர்வம் தாங்கவில்லை. “ஏதாவது தெரிகிறதா உங்களுக்கு?” என்று கேட்டார். எச்சிலை விழுங்கிக்கொண்டு பதிலளித்தார் கார்ட்டர். “ஆமாம், அற்புதமான பொருள்கள்!” இதுதான் கார்ட்டர் கண்ட முதல் காட்சி. (First view of Tomb-Photo)

மீண்டும் கார்ட்டரின் வரிகளையே இங்கு தருகிறேன் உங்களுக்கு.

“முதலில் எனக்கு ஒன்றும் கண்ணுக்குப் புலப்படவில்லை. கல்லறையில் இருந்து வெளியேறிய சூடான காற்று, மெழுகுவர்த்திச் சுடரை நடுங்கச் செய்தது. ஆனால், என் கண்கள் இருட்டுக்குப் பழகியதும், அந்த அறையிலிருந்த பொருள்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் துலங்க ஆரம்பித்தன. புகைப்படலத்துக்கு உள்ளே பார்ப்பதுபோல இருந்தது. வித்தியாசமான விலங்குகள், சிலைகள், தங்கம்... எங்கு பார்த்தாலும் தங்க நிறத்தின் ஜொலிப்பு. சற்று நேரத்துக்கு, வியப்பில் நான் உறைந்துபோனேன். இதற்குமேலும் பொறுக்கமுடியாத கார்னர்வான் பிரபு, பதற்றத்தோடு என்னிடம் கேட்டார். “ஏதாவது தெரிகிறதா உங்களுக்கு?” என்று. அப்போது என்னால் சொல்லமுடிந்ததெல்லாம், “ஆமாம், அற்புதமான பொருள்கள்!” என்றுமட்டும்தான்.” 

கார்ட்டர் கண்ட முதல் காட்சி. படம் - நன்றி திரு ராஜகோபால்


கட்டுரை மற்றும் புகைப்படங்கள்: பொன். மகாலிங்கம்

ஆசிரியர் குறிப்பு

இராஜபாளையத்தில் பிறந்த பொன் மகாலிங்கம், கட்டடப் பொறியியலில் இளநிலைப் பட்டமும் சுற்றுச்சூழல் பொறியியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். சிங்கப்பூரிலுள்ள தமிழ் வானொலி 96.8 பண்பலையில் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 14 ஆண்டுகள் பணிபுரிந்தவர். சிங்கப்பூர்த் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிவழியான வசந்தத்தில் செய்தித் தயாரிப்பாளராகவும் 11 ஆண்டுகள் பணியாற்றியவர். 

தமிழ்நாட்டில், புதிய தலைமுறை தொலைக்காட்சி உருவான தொடக்ககாலத்தில், அதில் செய்தி ஆசிரியராக ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது ஓய்வு பெற்று சென்னையில் வசிக்கிறார். கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் பேராலயம் பற்றிய இவரது பயணக் கட்டுரை, நூலாக வெளிவந்துள்ளது. பயணம் செய்வதில் அதீத ஆர்வமுள்ளவர்