Saturday, 5 April 2025

அம்மையின் கதை: தாமரைக்கண்ணன் புதுச்சேரி


வில்லாலடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்

கல்லா லெறியப் பிரம்பாலடிக்க இக்காசினியில்

அல்லர் பொழில்தில்லை அம்பலவாணற்கொர்  அன்னைபிதா

இல்லாத தாழ்வல்லவோ இங்ஙனே எளிதானதுவே

காளமேகம் பின்னாளில் வசை பாடும் முன்னரே அடியார் ஒருவரை தனது அன்னையாக வரித்துக்கொண்டார் சிவபெருமான். அண்டம் முழுதும் பிறப்பித்தவர் ஆயினும் தனக்கும் அம்மை ஒருத்தி வேண்டும் என்று தோன்றியிருக்கலாம். தன்னை தரிசிக்க கயிலை வந்த காரைக்காலம்மையை 'நம்மைப் பேணும் அம்மை காண் இவள்' என்று ஈசன் உமையிடம் சொல்வதாக  பெரியபுராணம் உரைக்கிறது. உலகின் தந்தை, உலகன்னையிடம் இதோ வரும் இந்த பெண்மணி என் தாய் என்கிறார்.

சிலம்பு நா செல்வராசு

சைவ சமயக்குரவர்களில் காலத்தால் மூத்தவர்கள் அப்பரும் ஞானசம்பந்தரும். இவர்கள் காலகட்டத்திற்கு முற்பட்டவராக 17 நாயன்மார்களை குறிப்பிடுகிறார் இராசமாணிக்கனார். கண்ணப்பரும், சண்டேசரும், காரைக்கால் பேயாரும் அதன்படி முன்பே பெரும் சைவத்தொன்மமாகி விட்டவர்கள், பின்வந்த சைவ சமயக்குரவர்களால் பாடப்பட்டார்கள். சைவ அடியார்களான அறுபத்து நான்கு நாயன்மார்களுள் மூத்தவராக காரைக்காலம்மையாரே கருதப்படுகிறார். அவ்வகையில் இவர் பாடிய பதிகங்களும் அந்தாதியுமே காலத்தால் மூத்த சைவ இலக்கியமாகும். காரைக்காலம்மை இயற்றியவையாக பதினோராம் திருமுறையில் வைக்கப்பட்ட திருவாலங்காட்டு பதிகங்கள் இரண்டும், திரு இரட்டை மணிமாலையும், அற்புதத்திருவந்தாதியும் நமக்கு கிடைக்கின்றன. அவரது கதை பெரிய புராணத்தில் கூறப்படுகிறது.

வைரத்தை ஒரு திசையிலிருந்து மட்டும் பார்ப்பதுபோல, தொன்மங்கள் அனைத்தையும் பக்திக்கண்ணோட்டத்தில் மட்டுமே காண்பது அவற்றின் முழுதுருவை உணர உதவாது. அவற்றை ஏற்றும் மறுத்தும் பேச வேண்டும், வெவ்வேறு தளங்களில் இருந்து அறிஞர்கள் தங்களது பார்வையில் அத்தொன்மத்தை ஆராய வேண்டும். அவ்வகையில் சிலம்பு நா செல்வராசு எழுதிய 'காரைக்காலம்மையார் தொன்மம் சமூக மானிடவியல் ஆய்வு ' என்னும் நூல் முக்கியமானது. எழுபத்தி ஒன்பது பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகமான இது காலச்சுவடு பதிப்பகத்தால் 2023ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் சிலம்பு நா செல்வராசு புதுச்சேரியை சேர்ந்தவர், மரபிலக்கியம் நாட்டுப்புறவியல் ஆகியவை குறித்த சமூகவியல் நோக்கிலான ஆய்வுநூல்களை எழுதியுள்ளார். சங்க இலக்கியம் மறு வாசிப்பு, கண்ணகி தொன்மம் ஆகியவை இவரது முக்கியமான நூல்கள்.

இந்த நூல் நான்கு பகுதிகளை கொண்டுள்ளது. முதல் பகுதி காரைக்காலம்மையார் புராண வரலாற்றை சுருங்கச்சொல்கிறது. அடுத்த பகுதி காரைக்கால் அம்மையார் படைப்புகளில் இடம்பெற்றுள்ள, சிவ பெருமானின்  உருவங்கள் , அவரது வீரச்செயல்கள், சைவத்தொன்மங்கள் குறித்து பேசுகிறது. புதிய வாசகர்களுக்கான அறிமுகப்பகுதி இது எனலாம். மேம்பட்ட வாசிப்புக்கு எழுத்தாளர் சுப்புலட்சுமி மோகனின் 'காரைக்கால் அம்மையார் பாடல்கள் ஓர் ஆய்வு' என்ற நூலை இப்பகுதியுடன் இணைத்து வாசிக்க பரிந்துரைக்கிறேன்.

மூன்றாவதாக இடம்பெறும் காரைக்காற்பேய் சமூக மானுடவியல் ஆய்வு என்னும் பகுதி சிற்ப சான்றுகள் மற்றும் இலக்கிய சான்றுகள் வழியாக காரைக்காலம்மையின் பேய் வடிவை சங்க கால பேய் மகளிர் என்னும் தொன்மத்துடன் ஒப்பிட்டு இதற்கான தொடர்ச்சியை காட்ட முயற்சிக்கின்றது. பேரன்னை வழிபாடு, கொற்றவை மரபு இவை குறித்து விளக்குவதன் மூலம் தாய் தெய்வ வழிபாட்டு மரபின் கூறுகள் சைவத்தில் கலந்தமை குறித்த பார்வையை ஆசிரியர் முன்வைக்கிறார். நான்காவது பகுதி, சிவனடியாராக வந்த இறைவனுக்கு காரைக்காலம்மை உணவு பரிமாறிய விருந்தோம்பல் பண்பாட்டை மிக விரிவாக சமூகவியல் நோக்கில் விளக்குகிறது. மிக விரிவான ஒப்பீடுகள் வழியே இப்பகுதி ஆராயப்பட்டுள்ளது.

நூலின் அமைப்பானது முதலில் காரைக்காலம்மையின் கதையை சுருங்கச்சொல்லுவதும், பின்னர் அவரது பாடல்களில் காணப்படும் சைவத்தொன்மங்களை கூறுவதுமாக அமைந்துள்ளது. மூன்றாவது நான்காவது பகுதிகளே இந்த நூலின் தனிச்சிறப்பு. எந்த தொன்மமும் தனக்கான தொடர்ச்சியை கொண்டிருக்கும். அதை முன்சென்று பார்க்கும்  பார்வையே ஆய்வாளருக்கு முக்கியமானதாகின்றது. இந்த பார்வையை அடுத்து மேற்கொண்டு விரித்துச்செல்ல முடியும், இதை அடிப்படையாக வைத்து ஒப்பீடுகளை செய்ய முடியும் உதாரணமாக பேயாரையும் இடைக்கால அவ்வையாரையும் ஒப்பிடலாம். பேய் மகளிர் பண்பாடு போர்க்களத்திலிருந்து பக்தி இலக்கியத்திற்குள்  வந்த பாதையை இன்னுமே விரித்துப்பார்க்கலாம்.

அழகுரு அழிதல் என்பது வாய்மொழிக்கதைகளில் ஒரு சாபமாகவே உருவகிக்கப்படுகின்றது,  இக வாழ்வின் அடிப்படையான அழகை துறப்பது குறித்து காரைக்காலம்மையை ஒரு முன்மாதிரியாக நமக்குக்காட்டுகிறது சைவ சமயம். மேலுமொரு பார்வையில் அழகும் அழகின்மையும் சமமாக பாவிக்கப்படும் தன்மை, பக்தியின் அடிப்படை அலகுகளில் ஒன்றான வேற்றுமைகளை களைவதை வெளிப்படுத்த உதவுகின்றது. காரைக்காலம்மையின் காலம் சமணம் இங்கு தீவிரமாக பரவிய, நிலைபெற்ற காலமுமாகலாம். இந்த அடிப்படையில் அழகு கெடுதல் பேயுரு பெறுதல் என்னும் நிகழ்வுகளை இன்னும் விரித்துப்பார்க்க முடியும். 

துவக்க வாசிப்பின்வழி இலக்கியம் பண்பாடு இவற்றை அறிந்துகொள்ளும் எவரும் மேலும் ஆழ்ந்த வாசிப்பிற்கு தங்களை தயார் செய்துகொள்ளவேண்டும். மரபான பார்வை அடித்தளம் என்றால் அதை மீறிச்செல்ல உதவும் ஆய்வு நூல்களும் அடுத்த படிநிலையில் தேவையாகிறது. இந்த இடத்தில் கருத்தியல் சார்பு நிலையற்ற எழுத்தின் அவசியம் முக்கியத்துவம் பெறுகின்றது. இரண்டாம் நிலையில் வாசிப்பவனை அறிவாளியாக்கிக்காட்ட உதவுவதாக பாவிக்கும்  நூல்கள், ஆய்வாளரின் கருத்தியலை புகுத்துவதால் இன்னும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். இந்த சார்புகளற்ற சமநிலையை பேணுவதாலேயே காரைக்காலம்மையார் தொன்மம் நூலை தவறாது வாசிக்கலாம். நீண்டகாலம் பேசுபொருளாக இருக்கும் தொன்மத்தின் மீதான சமூகவியல் பார்வைகளை  கூர்மையாகவும் எளிமையாகவும் முன்வைப்பதால் இந்நூல் முக்கியமான ஒன்றாகிறது.

தொன்மம் ஒரு துளி தேன். பல மலர்களின் இனிமை தான் அந்த ஒரு துளியில் தொகுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் மணங்களை ஆயிரம் அழகுகளை ஆயிரம் இனிமைகளை அழிவற்ற துளியாக ஆக்கியுள்ளது இந்த பிரபஞ்சம். தேனை ருசிக்கையில் அந்தத் தீரா மலர்வெளியை அகக்கண்ணில் காண்பவன், அவற்றின்  மணத்தை நுகர்பவன் தானும் ஒரு தேனீயாக மாறும் சாத்தியம் கொண்டவனாகிறான். 

தாமரைக்கண்ணன் புதுச்சேரி

நூல்: காரைக்காலம்மையார் தொன்மம் சமூக மானிடவியல் ஆய்வு ஆசிரியர்: சிலம்பு நா செல்வராசு வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்