Saturday, 5 April 2025

வேத தொன்மங்கள் - ஆர்தர் அந்தோணி மெக்டோனல்

மதமும் தொன்மமும்

மதம் ஒருபுறம் தெய்வீகத்தை பற்றியும் இயற்கையை மீறிய ஆற்றல்களை பற்றியும் மனிதர்கள் கொண்டுள்ள கருத்தாக்கத்தை உள்ளடக்கியுள்ளது. இன்னொருபுறம், மனிதன் தன்னுடைய இனத்தின் நலன்கள் அந்த ஆற்றல்களை சார்ந்திருப்பதை உணர்ந்து, அவ்வுணர்வை பல்வேறு வழிபாடுகளில் வெளிப்படுத்தியதை உள்ளடக்கியுள்ளது. தொன்மவியல் முதலில் சொல்லியதுடன் தொடர்புடையது. அது கடவுள்கள் மற்றும் நாயகர்கள் பற்றிய தொன்மக்கதைகளை கொண்டது. அவர்களின் குணம், தோற்றுவாய், செயல், சூழல் ஆகியவற்றை விவரிக்கக்கூடியதாகவும் உள்ளது. இந்த தொன்மங்களின் ஊற்றுமுகம் என பண்படாத மற்றும் அறிவியல்-அறிவு அற்ற காலத்தில் மனிதன் தான் எதிர்கொண்ட பல்வேறு விசைகளையும் இயற்கையின் புரிந்துகொள்ள முடியாத நிகழ்வுகளையும் விளக்க முற்பட்டதையும் குறிப்பிடலாம். தொன்மங்கள் பண்படாத மனதுடைய கற்பனையை காட்டுகின்றன. ஒரு பண்பட்ட மனதிற்கு உருவகங்களாக தெரியும் கூற்றுகள் அனைத்தும் முந்தைய காலத்திலிருந்து அவதானிக்கப்பட்ட நிகழ்வுகளின் விளக்கங்களாகும். வானில் நிகழும் நிகழ்வுகள் பற்றியும் (உதாரணமாக இடி, மின்னல், புயல் போன்றவை) மற்றும் உலகம் எவ்வாறு தோன்றியது எவ்வாறு கட்டமைக்கப்பட்டது போன்ற அறிவார்ந்த கேள்விகளும் எழுந்த போது அதற்கான விடைகள் தொன்மத்தில் கதைகளாக பெறப்பட்டன. தொன்மங்களுக்கான அடிப்படையானது இயற்கையை உயிருள்ள கூறுகளின் தொகுதியாக கருதும் மனிதனின் பண்படாத மனநிலையில் உள்ளது. ஒரு தொன்மம் எப்போது உருவாகிறது என்றால் மனித கற்பனை ஒரு இயற்கை நிகழ்வை ஆளுமையாக உருவகித்து அல்லது மனிதப்பண்பேற்றி விளக்கம் கொடுக்கும்போது உருவாகிறது. உதாரணமாக நிலவு சூரியனை முந்திச்செல்லாமல் தொடர்ந்து செல்வதை அவதானித்த மனிதன் அதை ’ஆண் ஒருவனால் நிராகரிப்பட்டு அவனை தொடர்ந்து செல்லும் பெண்’ என்ற தொன்மமாக ஆக்கியிருக்கலாம். இந்த நேரடியான தொன்மம் அடுத்தநிலையில் கவித்துவமேற்றப்பட்டு படைப்பூக்க கற்பனை கொண்டவர்களால் கையாளப்படத் துவங்குகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கதை கடத்தப்படுகையில் கதைசொல்லியின் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப அதில் பல்வேறு கூறுகள் சேர்க்கப்படுகின்றன. தொன்மக்கதையில் உள்ள இயற்கை நிகழ்வின் இடத்தை பின்னர் விரிவாக சேர்க்கப்பட்ட மனிதப்பண்பு பற்றிய குறிப்புகள் எடுத்துக்கொள்ளும்போது அந்த நேரடியான இயற்கை நிகழ்வு கதையிலிருந்து மங்கத் தொடங்குகிறது. பிறகு காலம் செல்லச்செல்ல அந்த தொன்மக்கதையின் இயல்பான அடிப்படையான இயற்கை நிகழ்வு மறக்கப்படும்போது அதன் அசலான அர்த்தத்திற்கு தொடர்பே இல்லாத புதிய கூறுகள் அந்த தொன்மத்தில் சேர்க்கப்படலாம் அல்லது வேறு தொன்மங்களிலிருந்தும் கூறுகள் இதற்கு மாற்றப்படலாம். தொன்மத்தை அதனுடைய வளர்ச்சியின் இறுதிப்படிநிலையில் பார்க்கும்போது அதன் அசலான வடிவத்திற்கு தொடர்பற்ற சேர்க்கைகளுடன் இணைந்து அந்த தொன்மம் பெரிதாக வளர்ந்திருக்கலாம். அதை ஆய்வு செய்வது மிகக்கடினமானதாக அல்லது சாத்தியமற்றதாக மாறியிருக்கலாம். யூரிப்பிடீஸ் நாடகங்களில் உள்ள மனிதப்பண்பேற்றப்பட்ட தெய்வங்களை நமக்கு தெரியும் என்றாலும் கூட, அந்த ஹெலெனிய கடவுள்களின் பண்புகளில் அல்லது செயல்களில் உள்ள அடிப்படையான இயற்கை கூறுகளை கண்டுபிடிப்பது நிச்சயம் கடினமாகத்தான் இருக்கும்.

வேத தொன்மங்களின் பண்புகள்

மதங்களின் வரலாறு பற்றிய ஆய்வில் வேத தொன்மம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. வேறெந்த தொன்மையான நூல்களையும் விட வேதங்கள் இயற்கை நிகழ்வுகளை மனிதப்பண்பேற்றி வழிபாடு செய்வதன் தொடக்க நிலையை நமக்கு அளிக்கின்றன. தற்காலத்தில் இந்தியர்கள் பின்பற்றும் பெரும்பாலான மத வழிபாடுகளில் துவங்கி, தொடக்கநிலை வழிபாடு (அதாவது தொல் வழிபாடு) வரை எந்த அறுபடலும் இல்லாமல் நாம் கோடிழுக்க முடியும். முதலில் கருதியது போல வேத தொன்மம் மிகமிகப் பண்படாததன்மை கொண்டது அல்ல. எனினும் இயற்கை நிகழ்வுகள் மனிதப்பண்பேற்றப்பட்டதன் மூலம் கடவுள்களாக ஆக்கப்படுவதை தெளிவாக காணும் அளவிற்கு தொன்மையானதே. இந்த செயல்பாடு ஏனைய தொல் நூல்களில் அவ்வளவாக பதிவாகவில்லை. தொன்மத்திற்கும் மொழிக்குமான உறவு மிக அதிகம். வேதத்தில் தொன்மம் பல இடங்களில் கடவுள்களுக்கும் அவர்களின் பெயர்களுக்குமான உறவை பொருண்மை (physical) தளத்தில் காட்டும் அளவிற்கு தெளிவாகவே உள்ளது. பல இடங்களில் மனிதப்பண்பேற்றம் தொடக்க நிலையிலும் உள்ளது. உதாரணமாக உஷஸ் அதாவது விடியலின் கடவுள். இவளின் மனிதப்பண்பேற்றம் மிக மெல்லியதாகவே உள்ளது. ஆனால் அக்னி தெய்வத்தின் ஆளுமையில் முற்றிலுமாக பொருண்மை அம்சம் ஊடுருவியுள்ளது.

‘தன்னை சூழ்ந்துள்ள எல்லா பொருட்களும் இயற்கை நிகழ்வுகளும் தெய்வீகமானவை உயிருள்ளவை’ என்ற மனிதனின் நம்பிக்கையை அடித்தளமாக கொண்டு வேத தொன்மம் நிற்கிறது. அந்த நம்பிக்கை நம்மால் தொடமுடியாத அளவு தொல்காலத்திலிருந்து வருகிறது. விந்தை கலந்த பெருவியப்பில் (awe) ஆன்மாவை ஈர்த்த அனைத்தும் மற்றும் மனிதன் மீது நன்மையான தீமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையும் வேதகாலத்தில் வணக்கத்திற்குரியவையாக மட்டுமல்லாமல் வழிபாட்டிற்குரியவையாகவும் இருந்துள்ளன. வானம், பூமி, மலைகள், நதிகள், தாவரங்கள் ஆகியவை தெய்வங்களென கருதப்பட்டு வேண்டுதல்கள் செய்யப்பட்டிருக்கலாம். குதிரை, மாடு, பறவை மற்றும் பிற விலங்குகளும் வழிபாட்டில் வைக்கப்பட்டிருக்கலாம். மனிதன் கட்டமைத்த பொருட்கள், ஆயுதங்கள், தேர், முரசு, ஏர் போன்றவையும்; சடங்குகளில் வைக்கப்பட்ட கல், கம்பம் போன்றவையும் வணங்கப்பட்டிருக்கலாம். 

இத்தகைய வழிபாடுகள் வேத மதத்தில் குறைவான இடத்தைத்தான் கொண்டுள்ளது. வேதத்தின் உண்மையான கடவுள்கள் மகத்துவம் ஏற்றப்பட்ட மனித அம்சம் கொண்டவர்கள். இந்த தெய்வங்கள் மனிதர்களிலுள்ள விருப்பங்கள், அவர்களின் நோக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவர்கள். மனிதர்கள் போலவே பிறந்தவர்கள், ஆனால் நித்யமானவர்கள். எனினும் எந்த விதிவிலக்கும் இல்லாமல் இவர்களும் இயற்கை நிகழ்வுகள் அல்லது இயற்கை அம்சத்தின் தெய்வீகமாக்கப்பட்ட பிரதிநிதிகளே. அவர்கள் எந்த அளவு மனிதப்பண்பேற்றப்பட்டர்கள் என்பதில் ஒவ்வொருவருக்கும் கணிசமான அளவு வேறுபாடு உள்ளது. அவற்றை பார்க்கலாம்: 

(1) ஒரு கடவுளின் பெயரும் அவரது இயற்கை-அடிப்படையும் ஒன்றாக இருந்தால் மனிதப்பண்பேற்றம் தொடக்க நிலையை தாண்டவில்லை என்று பொருள். உதாரணமாக தயுஷ் - வான், பிருத்வி - பூமி, சூர்ய - சூரியன், உஷஸ் - விடியல் போன்ற கடவுள்கள். இவற்றின் பெயர்கள் இரண்டு அம்சத்தை காட்டுகிறது - ஒன்று இயற்கை நிகழ்வு, இரண்டாவது அந்த நிகழ்வின் மீது ஏற்றப்பட்ட ஆளுமை. இதுபோலவே சடங்குகளுடைய இரண்டு பெரிய கடவுள்களான அக்னி மற்றும் சோமன் ஆகியவையும் முறையே தெளிவாக காணக்கூடிய தீ மற்றும் வேள்வியில் ஊற்றப்படும் அவிப்பொருளின் மனிதப்பண்பேற்றப்பட்ட உருவகங்களே. அவற்றின் பெயரிலேயே அத்தெய்வங்களும் அழைக்கப்படுகின்றன. 

(2) எந்த தெய்வத்தின் பெயர் அவரின் பொருண்மை தளத்திலிருந்து வேறாக உள்ளதோ, அவர் பொருண்மையிலிருந்து பிரிந்து செல்கிறார், அவரின் மனிதப்பண்பேற்றம் அதிக வளர்ச்சியடைந்திருக்கும். உதாரணமாக, மருத்துக்கள் எனப்படும் காற்றுத்தெய்வங்கள் ’வாயு’வை விட தங்களது தோற்றுவாயிலிருந்து அதிகம் விலக்கப்பட்டுள்ளனர். எனினும் வேத கவிகள் அக்கடவுள்களின் தோற்றுவாய் பற்றிய பிரக்ஞையுடனே உள்ளனர்.

(3) கடவுளின் பெயரானது இயற்கை நிகழ்வு அல்லது இயற்கை அம்சத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும் போது மற்றும் அந்த கடவுளின் கருத்துருவாக்கம் வேத காலத்திற்கு முந்தைய காலத்தில் இருக்கும் போது, பொருண்மை தளத்திற்கும் அவருக்குமான துண்டிப்பு முழுதாக நிகழ்ந்துள்ளது எனலாம். வருணன் அவ்வாறுதான். வேதத்திற்கு முந்தைய காலத்திருந்து வரும் தொன்மக்கூறுகளை வைத்தே வருணனின் தொடர்பை புரிந்துகொள்ள முடியும். இங்கு நுண்மையாக்கம் (abstraction) ஆழமாக நிகழ்ந்துள்ளது. ஏனென்றால் ஓரிறை வழிபாட்டில் இருக்கும் தெய்வீக ஆட்சியாளனின் இயல்பை வருணன் ஒத்துள்ளார். எனினும் வேத தொன்மத்தில் உள்ள மனிதப்பண்பேற்றமானது ஹெலனிய கடவுள்கள் போல முழுக்கமுழுக்க மனித பண்புகளை மட்டும் கொண்ட நிலையை அடையந்திருக்கவில்லை. வேத கடவுள்கள் சொற்ப அளவே வேறுபட்ட பண்புகளை கொண்டிருக்கின்றனர். எல்லா கடவுள்களும் ஒரே மாதிரியான பல அம்சங்களையும் ஆற்றல்களையும் பகிர்ந்துகொள்கின்றனர். இதற்கு ஒரு காரணம் என்னவென்றால், வேத தெய்வங்கள் பிரதிநிதிப்படுத்தும் இயற்கை அம்சங்கள் தங்களுக்குள் பொதுவான பலவற்றை கொண்டிருப்பதே. அதேசமயம், அந்த தெய்வங்களின் மனிதப்பண்பெற்றம் ஒப்புநோக்க அவ்வளவாக வளர்ச்சியடையாததும் இன்னொரு காரணம். உதாரணமாக இடியின் கடவுள், நெருப்பின் கடவுள் (அவர் தனது வடிவங்களில் ஒன்றான மின்னல் வடிவில் இருக்கும் போது), மற்றும் காற்றின் கடவுள் ஆகியோரின் செயல்களை எளிதாக ஒரே மாதிரியாக விவரிக்க முடியும். வேத கவிகளின் பார்வையில் அந்த தெய்வங்களின் முக்கியமான செயல் என்பது மழை பொழியச் செய்வதே. இதன்மூலம் வேதத்தின் பல்வேறு தெய்வங்கள் ஒரே தோற்றுவாயிலிருந்து வந்தன என்றும், அந்த தோற்றுவாயில் உள்ள ஒவ்வொரு அம்சமும் தனித்தனி பெயர்கள் இட்டு வேறுபடுத்தப்பட்டு படிப்படியாக அவை அந்த குறிப்பிட்ட தனித்தபண்பு மட்டுமே கொண்டவை என கருதப்பட துவங்கின என்றும் அறியலாம். இதற்கு உதாரணம் சூரியக் கடவுள். கடவுள்களின் செயல்பாடுகளை பாடும் வேத கவிகளின் சொற்கள் பற்றிய ஒரு தெளிவை நாம் அடிக்கடி நினைவில்கொள்ள வேண்டும். தொன்மங்கள் என்பவை நேரடியாக தொடர்புறுத்துபவை அல்ல, அவை சங்கேதங்கள் (alludance), மறைபொருள் கொண்டவை. மேலும் இதில் ஒழுங்கானவொரு தொடர்ச்சியை எதிர்பார்க்கக்கூடாது. தொன்ம சங்கேதங்கள் வெவ்வேறு கவிகள் பலரால் உருவாக்கப்பட்டவை என்பதையும், அவை மிகநீண்ட காலமாக நூல்களில் இருந்துவருபவை என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். 

வேத தொன்மத்தின் தோற்றுவாய்

வேத தொன்மத்தின் மிக முக்கியமான தோற்றுவாய் என்பது இந்திய நூல்களில் மிகப்பழமையானதான ரிக் வேதம் ஆகும். இதிலிருக்கும் தொன்மங்கள் ஒன்றையொன்று ஒத்த இயற்கை கடவுள்கள் பலரை பற்றியது. நுண்மையாக்கம் செய்யும் போக்கு அதிகரித்துச் செல்வதன் காரணமாக, ரிக்வேதத்தில் உள்ள இந்த பல்லிறைவாதம் ரிக்வேத காலகட்டத்தின் இறுதியில் அதன் கடைசி பகுதியில் ஏகத்துவத்தின் தொடக்கங்களையும் அனைத்திறைவாதத்திற்கான அறிகுறிகளையும் வெளிக்காட்டுகிறது. இத்தொகுப்பின் பாடல்கள் வேள்விச் சடங்குகளை கருத்தில் கொண்டு இயற்றப்பட்டவை. முக்கியமாக சோம வேள்வியை கருத்தில் கொண்டு இயற்றப்பட்டவை. இத்தொகுப்பு அக்காலத்தின் தொன்மம் பற்றிய ஆவணத்தை தருகிறது. சோம வேள்வியிலும் செல்வந்தர்களின் வழிபாட்டிலும் முக்கிய இடம் வகித்த பெருந்தெய்வங்கள் முக்கியமானவையாக இருந்தன. ஆனால் ஆன்மா, பூசகர், இறப்பிற்கு பிறகான வாழ்வு ஆகியவற்றுடன் தொடர்புடைய தொன்மங்கள் எதுவும் அந்நூலில் இல்லை. இவைசார்ந்த நம்பிக்கைகளுக்கும் சோம சடங்கிற்கான பாடல்களுக்கும் தொடர்பில்லை. இந்த பாடல்களில் கடவுள்களின் பண்பு முழுமையாக சித்தரிக்கப்பட்டுள்ளன, அவை கடவுள்களுக்கு பாடப்பட்டவை, அவர்களின் பண்பியல்புகளை விதந்தோதுபவை. ஆனால் ஒவ்வொரு கடவுளும் அவர்கள் முதன்மையாக என்ன நன்மை வழங்குவார்கள் என்பதை தவிர்த்து வேறெந்த செயல்பாடும் தீர்க்கமாக விவரிக்கப்படவில்லை. மிகக் குறைவான கதைக்கூறல் அம்சம் கொண்ட வேள்விப் பாடல்களின் தொகுப்பான இந்த நூல், சிதறலான துண்டுபட்ட தொன்மத்தையே வழங்க முடியும் என்பது இயல்பான ஒன்றே. ஆன்மா, இறப்பிற்கு பிறகான வாழ்வு ஆகியவை பற்றி ரிக்வேதம் அளிக்கும் குறைவுபட்ட தரவுகள் கூட அதன் பிந்தைய பகுதிகளில் அளிக்கப்படுபவையே. ஆகவே நெறிபிறழ்ந்தவர்களின் இறப்புக்கு பின்பான விதி குறித்துக் கூட பெரிய குறிப்புகள் என ஏதும் இல்லை. கடவுள்களை வழிபடுவதுடன் இறந்த முன்னோர்களை வழிபடுவதும், ஒரு எல்லை வரை உயிரற்ற பொருட்களை தெய்வமாக்கி வழிபடுவதும் ரிக்வேத மதத்தில் இடம் வகிக்கின்றன.

ரிக்வேதத்தில் இல்லாத எழுபத்தி ஐந்து பாடல்களைக் கொண்ட சாமவேதம் வேததொன்மத்தில் எந்த முக்கியத்துவத்தையும் வகிக்கவில்லை.

மிகப்பிரபலமான அதர்வவேதம் இல்லம்சார் சடங்குகளுடனும் மாயசடங்குகளுடனும் தொடர்புடையது. அதர்வவேதத்தின் பிந்தைய பகுதியும் கௌசிக சூத்திரத்தின் சடங்கு பகுதியும் ஆத்மா மற்றும் துர்சக்திகளின் உலகைக் குறித்த தரவுகளின் சுரங்கமாக உள்ளது. அதர்வவேதம் தொல்கால கருத்துக்கள் பற்றி ரிக்வேதத்தை விட அதிகமாக குறிப்பிடுகிறது. அதேநேரம் வேதமதத்தின் பெரிதும் மேம்பட்ட நிலையையும் அதர்வவேதம் குறிக்கிறது. அதர்வவேதத்தின் பிற்கால வளர்ச்சி நிலையில் தனிஆளுமை கொண்ட கடவுள்கள் வருகின்றனர். மற்றும் சில புதிய நுண்கருத்தாக்கங்கள் தெய்வமாக்கப்படுகின்றன. எனினும் வேதமதத்தின் பொதுவான பண்பு என்பது அனைத்திறைவாதமாக உள்ளது. தனிப்பட்ட கடவுள்களை போற்றும் பாடல்கள் ஒப்புநோக்க அரிதாகவே உள்ளன. பல தெய்வங்களை ஒரே நேரத்தில் அழைத்தல் இதிலுள்ள பாடல்களின் இயல்பாக உள்ளது. எனினும் அப்பாடல்களில் தெய்வங்களின் சாராம்ச இயல்பு தொடப்படவில்லை. ரிக்வேதத்திலுள்ள அதே பாணியில் கடவுள்களின் செயல்பாடுகள் விதந்தோதப்பட்டுள்ளன. ரிக்வேத தொகுப்பில் காணப்படாத முக்கியமான தொன்ம அம்சத்தை எதையும் அதர்வவேதம் அளிக்கவில்லை. 

யஜுர்வேதம் இன்னும் பிற்கால படிநிலையை குறிக்கிறது. சடங்கிற்காக உருவாக்கப்பட்ட இதன் பாடல்கள் நேரடியாக கடவுள்களை நோக்கியவை அல்ல. கடவுள்கள் வேள்வியுடன் மெல்லியவொரு தொடர்பை கொண்டு மறைமுகமாகவே இருக்கின்றனர். யஜுர் வேதத்தின் பிரதானமான பண்புக்கூறுகள் என்பவை பிரஜாபதி என்ற ஒரு முதன்மை கடவுளின் இருப்பு, விஷ்ணுவிற்கு அதிமுக்கியத்துவம் அளிப்பது, ரிக் வேதத்திலுள்ள ஒரு பழைய கடவுள் ‘சிவ’ என்ற புதிய பெயருடன் முதல் முறையாக தோன்றுவது ஆகியவை. எனினும் சடங்குகளுடன் ஒப்பிடுகையில் கடவுள்கள் முக்கியத்துவமற்ற இடத்தையே வகிக்கின்றன. இக்காரணத்தால் யஜுர் வேதம் குறைந்த தொன்ம தகவல்களையே கொண்டுள்ளது.

யஜுர் வேதத்திற்கும் பிராமணங்களுள் முக்கியமான ஐத்ரேய மற்றும் சதபத பிராமணங்களுக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு இல்லை. இவற்றில் வேள்விவே பிரதானமாக உள்ளது. கடவுள்களின் தனிப்பட்ட பண்புகள் மிகக்குறைவாகவே உள்ளன. சில தெய்வங்களின் பொதுவான பண்பியல்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பிற கடவுள்களின் முக்கியத்துவம் குறைந்தோ அல்லது கூடியோ உள்ளது. பிராமணங்களின் பல்லிறைதன்மையும், ரிக் மற்றும் அதர்வ வேதங்களின் பல்லிறைத்தன்மையும் பெரும்பாலும் ஒன்றாகவே உள்ளது. உயிரற்ற பொருட்களின் வழிபாட்டை இதிலும் காணமுடிகிறது. ரிக் வேதத்திற்கும் பிராமணங்களுக்கும் இடையில் உள்ள முக்கியமான வேறுபாடு என்பது பிராமணங்களில் பிரஜாபதி அல்லது தந்தை தெய்வம் முதன்மை தெய்வமாக அடையாளப்படுத்தப்பட்டதுதான். மேலும், பிராமணங்களின் அனைத்திறைவாதம் வெளிப்படையானது. ஆகவே, பிரஜாபதியே அனைத்தும் அல்லது அவரே அனைத்தும் சர்வமும் என்று உள்ளது. 

கடவுள்கள் அவர்களது தனித்துவமான பண்புகளை இழந்துவிட்டனர். அவர்களை குழுக்களாக பிரிக்கும் போக்கு வெளிப்படையாகத் தெரிகிறது. இது ஒரு காலகட்டத்தின் இயல்பு. இதன் விளைவாக ஆற்றல்கள் தங்களை ஒருபக்கம் தேவர் அல்லது கடவுள்கள் என்றும், மறுபக்கம் அசுரர் அல்லது அரக்கர் என்றும் இரண்டு எதிர் தரப்புகளை உருவாக்குகிறது. கடவுள்கள் மேலும் மூன்றாக பிரிக்கப்படுகிறார்கள் - நிலத்துக்குரிய வசுக்கள், வானிற்குரிய ருத்திரர்கள், விண்ணிற்குரிய ஆதித்யர்கள். இதில் நெருப்பு, காற்று, சூரியன் ஆகிய மூவரையும் கொண்டது மிகமுக்கியமான குழு. இந்த குழுக்களிலுள்ள தனி தெய்வங்களின் ஒவ்வொரு குணங்களுக்கும் மனிதப்பண்பேற்றி அவை தனித்தனி தெய்வங்களாக ஆக்கப்படுவதால் மேலும் உட்பிரிவுகள் ஏற்படுகின்றன. உதாரணமாக அக்னியை ‘அக்னியே, அன்னத்தின் இறைவனே’, ’அக்னியே, பிராத்தனையின் இறைவனே’ என்று சொல்லிக்கொண்டே செல்கின்றன.

பிராமணங்கள் அவற்றின் பிரதான பேசுபொருளின் சித்தரிப்பில் பல தொன்மங்களை தொடர்புறுத்துகிறது. இவற்றில் சில சம்ஹிதைகளில் குறிப்பிடப்படவில்லை. தொன்மங்கள் அவற்றின் பழைய வடிவின் வளர்ச்சியடைந்த நிலைகளாகவே பிராமணங்களில் தோன்றுகின்றன. அவை அவற்றின் அசலான வடிவத்தை பற்றிய தெளிவை ஏற்படுத்தும் என்று சொல்வதற்கில்லை. இவை பழைய வேதகாலகட்டத்தின் தொன்மங்களுக்கும் வேதத்திற்கு பிந்தையக் காலகட்டத்தின் தொன்மங்களுக்குமான இணைப்பாகவே உள்ளன.

வேததொன்மவியல் ஆய்விற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறை

வேததொன்மம் என்பது நம்மிலிருந்து மிகவும் வேறுபட்ட சமூக மற்றும் சூழல்நிலை கொண்ட ஒரு காலகட்டம் மற்றும் ஒரு நிலப்பரப்பின் ஆக்கம். நாம் இங்கு நேரடியான உண்மைத்தரவுகள் மேல் கவனம்கொள்ளப் போவதில்லை. மாறாக, இன்றைய மனிதர்கள் இயற்கையை பார்க்கும் மனநிலையிலிருந்து பெரிதும் மாறுபாடு கொண்டுள்ள கவிகளின் கற்பனை படைப்புகளையே பார்க்கவுள்ளோம். சிக்கலானதும் சிந்தனையின் முதல்கட்டத்தை குறிக்கக்கூடியதுமான விஷயத்தை அணுகுவதில் உள்ள சிரமம் அச்சிந்தனை பொதிந்துள்ள கவிதையின் பண்புகளால் மேலும் அதிகரிக்கிறது. ஆகவே, அறிவியல்பூர்வமான செயல்முறை மட்டும் போதாது. அச்செயல்முறையுடன் கவித்துவ உள்நோக்கும் இணைய வேண்டியிருக்கிறது. தீர்மானமெடுப்பதில் எச்சரிக்கையும் நிதானமும் தேவைப்படுகிறது. எனினும் வேததொன்ம ஆய்வில் இருந்தேயாகவேண்டிய அத்தியாவசியமான கறார்தன்மை இங்கு பெரிதும் குறைபடுகிறது. 

வேத ஆய்வின் முதல் காலகட்டத்தில் ஆய்வை தவறான இடத்திலிருந்து தொடங்குவதற்கான மனப்போக்கு இருந்தது. அப்பொழுது, ஒப்பீட்டு தொன்மவியலின் (comparative mythology) சொற்பிறப்பியல் (etymology) வழிமுறை தொடக்கப்புள்ளியாக அமைந்தது. இந்த முறைமை இப்போது முழுவதுமாக தவிர்க்கப்பட்டிருந்தாலும் இது வேதத்தின் தொன்மங்களை விளக்குவதில் இன்றும் அதிக தாக்கத்தை செலுத்திவருகின்றன. ஆனால் இந்த சொற்பிறப்பியல் கருத்துக்களைத் தவிர, பொதுவான மனப்பதிவுகளை அடிப்படையாக கொண்ட கருத்துக்களும் அறிஞர்கள் இரண்டாம்நிலையில் வைத்த மற்றும் தவிர்த்த கருத்துக்களும், சிலசமயம் சான்றுகளை சரியாக பிரித்து எடுக்கப்பட்ட முதன்மை கருதுகோள்களுக்கு இணையாக அழுத்தம் கொடுத்தன. மேலும், ஒரு குறிப்பிட்டவகையான விளக்கமுறை மீதான சார்பும் இருந்தது. இதனால் பல தொன்ம ஆளுமைகள் விடியல், மின்னல், சூரியன் அல்லது நிலவிலிருந்து பெறப்பட்டதாக தேவையற்று விளக்கப்பட்டன. இந்த சாய்வுபோக்கு ஆதாரத்தை பிரக்ஞையின்றியே ஒருபக்கச் சார்புடன் கையாள்தலுக்கு இட்டுச் செல்கிறது.

சூழ்நிலை இப்படி இருக்க, எச்சரிக்கை கொண்ட வழிமுறையை பின்பற்றுவதற்கு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சில குறிப்புகளை சொல்வது பயனுள்ளதாக இருக்கும். நன்றாக தெரிந்தவற்றிலிருந்து குறைவாக தெரிந்தவற்றுக்கு முன்னகர வேண்டும் என்பது அறிவியல் ஆய்வுகளின் கொள்கை. அக்கொள்கையின்படி, வேத கடவுள்களின் பண்பையும் செயல்களையும் பற்றிய உண்மைச் சித்திரத்தை முன்வைக்க விரும்பும் ஆய்வாளர்கள் ஒப்பீட்டு தொன்மவியலின் சொற்பமான தெளிவற்ற முடிவுகளிருந்து ஆய்வை தொடங்கக் கூடாது. மாறாக, இந்திய தொன்மத்தின் தொடர்ச்சியான பதிவை அதன் மிகப்பழைய மூலமான ரிக் வேதத்திலிருந்து நவீன காலகட்டம் வரை கொண்டிருக்கும் இந்திய நூல்களில் இருந்து தொடங்கவேண்டும். எல்லா தெய்வங்களின் மீதும் அல்லது தொன்மங்களின் மீதும் உள்ள பதிவுகள் திரட்டப்பட்டு தொகுக்கப்பட வேண்டும். எந்த ஒரு முடிவுக்கும் வரும் முன்னர் இணையான பதிவுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கப்பட வேண்டும். இந்த செயல்முறையில் இயற்கை நிகழுவுகளின் மனிதப்பண்பேற்றத்தை கட்டமைத்த அடிப்படை அம்சங்களை அதன் பிந்தைய வளர்ச்சியிலிருந்து பிரித்துவைக்க வேண்டும்.

கற்பனையில் இயற்கைவிசையின் இடத்தை ஒரு ஆளுமை எடுத்துக்கொள்ளும் பொழுது கவித்துவ மனப்பாங்கு இரண்டாம்கட்ட தொன்மத்தைப்பற்றிய வலையை பின்னத் தொடங்குகிறது. காலப்போக்கில் அசலான படைப்பிற்கு தொடர்பற்ற வேறிடத்திலிருந்து இரவல் பெறப்பட்ட விஷயங்கள் அப்படைப்பில் சேர்க்கப்படுகின்றன. தொன்மங்கள் குறுகியதாக இல்லாதபட்சத்தில் அதை தன்னையே மறுஉருவாக்கம் செய்துசெய்து தங்களை மூலத்தில் இருந்து சற்று மாற்றி அமைத்துக்கொள்கின்றன. உதாரணமாக, விருத்திராசூரனுக்கும் இந்திரனுக்குமான போர் பற்றிய தொன்மம். இதில் அடிப்படையான விஷயம் இந்திரனுக்கும் விருத்திரனுக்குமான சண்டை. ஆனால் ஒருபாடல் வரியில் விருத்திரனின் அன்னையை இந்திரன் இடியால் தாக்கினான் என்று உள்ளது. இது நாடகியத்திற்காக ஒரு தனிப்பட்ட கவியால் சேர்க்கப்பட்டது என்பது தெளிவாகவே தெரிகிறது. ‘விருத்திரனின் வதம்’ என்பது ரிக் வேதத்தில் சந்தேகமின்றி இந்திரனுக்கு மட்டுமே உரியது. ஆனால், அது பல முறை சோமனுக்கும் சொல்லப்படுகிறது. சோமம் என்பது இந்திரன் சண்டைக்கு முன் அருந்தும் பானம். இதை தரும் தாவரம் ‘விருத்திரனை வதம் செய்யும் மதுவை வழங்கும் தாவரம்’ என குறிப்பிடப்படுகிறது. இதன் அடிப்படையில் அந்த தொன்மம் இந்திரனிலிருந்து சோமனுக்கு மாற்றப்பட்டது என்பது தெளிவு. இதுபோன்ற பண்புமாற்றத்தை ரிக்வேதத்தில் அடிக்கடி காணலாம். ஏனென்றால் கடவுள்கள் ஒரே அருஞ்செயல்களையும் தன்மைகளையும் பகிர்ந்துகொள்ளும்போது கவிகள் அவர்களை இரட்டையர்களாக கொண்டாடுவதில் பிரியம் கொள்கிறார்கள். அவ்வாறு பெறப்பட்ட பண்புகள் (ஆய்வின்போது) அடிப்படையான பண்புகளிலிருந்து கண்டிப்பாக பிரித்துவைக்கப்பட வேண்டும். இது பல கடவுள்களின் பண்புகளுக்கும் ஆற்றல்களுக்கும் பொருந்தும். அந்த பண்புகளும் ஆற்றல்களும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்கு மட்டுமானது அல்ல. இவை எப்போது ஒரு தனி கடவுளின் முதன்மை பண்பாக உள்ளதோ அப்போது மட்டும் அவற்றை வலுவான ஆதாரங்களாக எடுத்துக்கொள்ளலாம். சிலவற்றில் அந்த பண்பு அதை முதன்மையாக கொண்டுள்ள தெய்வத்திடம் இருந்து படிப்படியாக மற்ற தெய்வங்களுக்கும் செல்கிறது. எப்படியிருந்தாலும் ஒரு உண்மையை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அது என்னவென்றால், ஒரு சில கடவுள்கள் பிறரைவிட அதிகமான பாடல்களில் கொண்டாடப்படுகிறார்கள். ஒவ்வொரு தெய்வமும் எவ்வளவு முறை வருகிறது என்பதை மற்ற தெய்வங்களுடன் ஒப்பிட்டு மதிப்பிடப்பட வேண்டும். உதாரணமாக, வருணனுக்கான பாடல்களைவிட பத்து மடங்கு அதிகமான பாடல்களில் இந்திரன் அழைக்கப்படுகிறான். ஆனால் வருணன் மற்றும் இந்திரனுக்கு பொதுவாக சுட்டப்படும் பண்புப்பெயர்கள் பெரும்பாலும் இந்திரனைவிட வருணனின் இயல்பிற்கே பொருந்துகின்றன. எந்தவொரு வரியின் மதிப்பும் அது இடம் பெற்றுள்ள பாடல் மற்ற பாடல்களில் இருந்து எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை பொறுத்தது. பிந்தையபகுதியில் முதன் முறையாக வரும் கூற்று பழைய கருத்தையே மீண்டும் குறிப்பதாக இருக்கலாம். ஆனால் காலவரிசையில் பழைய பாடலில் உள்ளவற்றுடன் வேறுபட்டால் அது பெரும்பாலும் பிற்கால வளர்ச்சியையே குறிக்கிறது எனலாம். ரிக்வேதத்தின் பெரிய பகுதியான பத்தாவது காண்டம் பிற காண்டங்களை விட பிற்கால கருத்தாக்கங்களை அதிகமாக கொண்டிருப்பதற்கு வாய்ப்பு அதிகம். மேலும், சோம-பவமான’த்துடன் ரிக்வேதத்தின் ஒன்பதாவது காண்டம் கொண்டுள்ள பிரத்யேகமான தொடர்பு ரிக்வேதத்தின் வேறு காண்டங்களிலுள்ள தொன்மத்திற்கு வித்தியாசமான பண்பை அளிக்கிறது. ஆகவே விவஸ்வத் மற்றும் த்ரிதா ஆகிய கடவுள்கள் சோம உருவாக்கத்தில் சிறப்பானதொரு வகையில் தொடர்புறுத்துப்படுகின்றனர். பிராமணங்களை பொருத்தவரை, வரலாற்றுரீதியான பழைய கருத்துக்களை கண்டடைவதில் எச்சரிக்கை வேண்டும். அவை நம்பமுடியாத கற்பனைகளும் ஊகங்களும் கண்டடைவுகளும் நிறைந்தவை.

வேதத்திற்குள் இருக்கும் இணையான பகுதிகளில் ஒன்றை மற்றொன்றுக்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளும்போது அதன் அமைப்பிற்கு சரியான கவனம் அளிக்கப்பட வேண்டும். இணைப்பகுதிகளின் சூழலை நுட்பமாக கருத்தில் கொள்ளவேண்டும். அவற்றுக்கு முன்புள்ளவற்றுடனும் பின்புள்ளவற்றுடனும் அவற்றை இணைக்கும் கருத்துக்களையும் சேர்த்து ஆராய வேண்டும். இதன் மூலமே இணைப்பகுதிகளின் உண்மை மதிப்பு உறுதிப்படுத்தப்படும். வேதத்திற்கு உள்ளேயே இருக்கும் ஆதாரங்களை பிற்கால இந்திய நூல்களின் உதவியுடன் கவனமாக மதிப்பிட்ட பிறகு, இந்தியாவிற்கு நெருங்கிய தொடர்புடைய ஈரானிய தொன்மங்களின் உதவியை தேட வேண்டும். ஈரானியத் தொன்மத்துடன் ஒப்பிடுகையில் அது இந்திய வேதத்திலிருந்து நாம் பெற்றதை உறுதி செய்யலாம். அல்லது இந்திய ஆதாரம் முடிவுக்கு இட்டுச்செல்லாதபோது, எது பழையது எது பிந்தையது என்று முடிவெடுப்பதற்கு நமக்கு உதவலாம். மேலும் வேதகருத்தாக்கங்களில் அதிக தெளிவை பெறுவதற்கு உதவலாம். எனவே அவெஸ்தாவின் (Avesta) உதவியின்றி மித்ரா போன்ற தெய்வங்களின் உண்மை இயல்பு மற்றும் இதுபோன்ற ஆய்வுகள் பற்றி உறுதியான முடிவுகளுக்கு வருவது சாத்தியமற்றது.

இந்தோ-ஐரோப்பிய காலகட்டத்தில் இருந்துவரும் வேதமரபு, அம்மரபின் உண்மையான முக்கியத்துவம் என்ன போன்றவற்றை உறுதி செய்வதற்காக ஒப்பீட்டு தொன்மவியலின் முடிவுகளை ஆய்வதில் மேலும் ஒரு அடி முன்னாள் எடுத்துவைக்கலாம். இறுதியாக, மனித வளர்ச்சியின் துவக்கத்தில் தொடமுடியாத அளவு பழைய காலத்திலிருந்த எந்த கூறுகள் இன்று உள்ளது என்பதை உறுதிசெய்ய இனப்பண்பாட்டியல் (ethnology) தேவையாக இருக்கும்போது, அதன் படிப்பினைகளை நாம் புறக்கணிக்க முடியாது. இவ்வாறு நாம் வேதத்தைக் கடந்து ஆதாரங்களை தேடும் செயலானது பின்வரும் இரண்டு நிலைப்பாடுகளில் இருந்து நம்மை காக்கும். பல தொன்மங்கள் இந்தியாவிலிருந்து மட்டுமே தோன்றியவை என்ற நிலைப்பாடு மற்றும் இந்திய-ஐரோப்பிய காலகட்டமே எல்லா தொன்மக் கருத்துக்களுக்கும் தொடக்கப்புள்ளி என்ற நிலைப்பாடு.

அவெஸ்தா மற்றும் வேத தொன்மம்

அவெஸ்தா நூலின் ஆதாரங்களை வேததொன்ம ஆய்வாளர் புறக்கணிக்க முடியாது என்பதை நாம் பார்த்துவிட்டோம். அவெஸ்தா மொழியின் பழைய வடிவத்திற்கும் வேதத்தின் மொழி வடிவத்திற்கும் வாக்கிய அமைப்பு, சொல், உச்சரிப்பு முறை, ஓசையொழுக்கு மற்றும் அவற்றின் பொதுவான கவிதைப் பாணி ஆகியவற்றில் ஒற்றுமை உள்ளது. அவ்வொற்றுமை எந்த அளவு உள்ளது எனில், ஓசையமைப்பை பயன்படுத்தியே அவெஸ்தாவின் வரிகளை வார்த்தை வார்த்தையாக வேதத்திற்கு மொழிபெயர்க்கலாம். சரியான வடிவம் மட்டுமின்றி சரியான கவித்துவ ஆன்மாவுடன் பாடல்களை மொழிபெயர்க்க முடியும். தொன்மம் சார்ந்த களத்தில் இரண்டுக்குமான நெருக்கம் அவ்வளவு பெரிதாக இல்லை. ஜராதுஷ்டிரரின் மத சீர்திருத்தம் தொன்ம கருத்தாக்கத்தில் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டுவந்தது. ஆகவே ரிக்வேதம் அளவிற்கு தொன்மையான அவெஸ்தா நூல் நம்மிடம் இருந்திருந்தால் மிக அதிகமான ஒற்றுமைகளை நம்மால் கண்டுபிடித்திருக்க முடியும். இருந்தாலும், இந்த மரபில் உள்ள தொன்மங்களுக்கும் வேததொன்மங்களுக்கும் ஒற்றுமைகள் நிறையவே உள்ளன. சடங்கு தொடர்பான பல சொற்கள் ஒத்தவையாக உள்ளன. உதாரணத்திற்காக முக்கியமான சில சொற்களை மட்டும் பார்க்கலாம்: யக்ஞ = எஸ்ன, ஹோத்ர = ஜோதர் (பூசகர்), அதர்வன் = ஆத்ரவன் (பூசகர்), ரித = அஸ. இவை எல்லாவற்றிக்கும் மேலாக சோம தாவரத்தில் இருந்து பெறப்படும் சோமத்தை குறிக்கும் சோம = ஹோம என்ற சொற்களின் ஒற்றுமை. சோமம் இரண்டு மரபுகளிலும் சடங்கில் பயன்படுத்தக்கூடிய முக்கியமான படையல். இது சோம தாவரத்தில் இருந்து பிழிந்தெடுக்கப்பட்டு, சுத்தமாக வடிக்கப்பட்டு, பாலுடன் கலந்து படைக்கப்படுகிறது. இந்த தாவரம் தாவரங்களின் தலைவன் என அழைக்கப்படுகிறது. மலையில் வளரக்கூடிய தாவரமாகவும் கழுகால் கீழே கொண்டுவரப்படக்கூடியதாகவும் சொல்லப்படுகிறது. சடங்குசார்ந்த இத்தகைய சொற்களை தவிர தொன்மம் சார்ந்த சொற்களும் ஒத்தவையாக உள்ளன. இரண்டு மதங்களிலும் அசுர = அஹுர என்ற சொல் உயர்நிலை கடவுள்களை குறிப்பது. இரண்டிலும் அவர்கள் வலிமைவாய்ந்த மன்னர்களாக கருதப்படுகிறார்கள். போரின்போது காற்றால் உருவாக்கப்பட்ட தேரில் விரைந்தோடும் குதிரைககளை பூட்டி செல்பவர்களாவும், தயவு குணம் உள்ளவர்களாகவும், வஞ்சம் மற்றும் அறமற்ற பண்புகளிலிருந்து மொத்தமாக விலகியவர்களாகவும் இருக்கிறார்கள். ஈரானியர்கள் இந்தியர்கள் இருவருமே நெருப்பின் வழிபாட்டை கொண்டிருந்தனர், அதை அக்னி = ஆதர் என்று வெவ்வேறு பெயர்களில் அழைத்தனர். அடிக்கடி இல்லையென்றாலும் நீர் வழிபாட்டை (ஆபஹ் = ஆபோ) இருவரும் கொண்டிருந்தனர். வேதத்திலுள்ள மித்ர என்பதும், அவெஸ்திய மித்ர என்பதும் சூரியக் கடவுளே (மித்ர என்பதில் சிறிய உச்சரிப்பு வேறுபாடு மட்டும் உள்ளது - வேதத்தில் Mitra, அவெஸ்தியாவில் Mithra). வேதத்தில் பொதுவானவொரு கடவுளான ஆதித்ய-பகன் அவெஸ்தியாவில் பக என்ற கடவுளுக்கு இணையானவன். வாயு என்பது வயு. நீர்களின் மைந்தனான அபம் நாபத் (Apām napāt) இரண்டிலும் சற்று ஒலி வேறுப்பாட்டுடன் அவ்வாறே அழைக்கப்படுகிறது. கந்தர்வ = கந்தரேவ மற்றும் க்ருஷானு = கேரேஷாணி என்பவர்கள் ’சோம = ஹோம’த்துடன் தொடர்புள்ளவர்கள். வேதத்தின் த்ரித ஆப்த்ய என்பது அவெஸ்தியாவில் த்ரித மற்றும் ஆத்வ்ய என்ற இரண்டு ஆளுமைகளை ஒத்துள்ளது. வேதத்தில் விவஸ்வத்தின் மகனாகிய யமன் மரணத்தின் அரசன், அவெஸ்தியாவில் விவன்வன்த்தின் மகனாகிய யிமா சொர்கத்தின் அரசன். பெயரில் ஒற்றுமை இல்லையென்றாலும் வேதத்தின் வருணன் அவெஸ்தியாவின் அஹுர மஜ்தாவுக்கு இணையான பண்புகளை கொண்டவர். இரண்டு மதங்களும் தீய ஆத்மாக்களுக்கு பொதுவான பெயர்களையே தருகின்றன த்ருஹ் = த்ருஜ் மற்றும் யாது. 

ஒப்பீட்டு தொன்மவியல்

இந்தோ-ஐரோப்பிய காலகட்டம் பற்றி எந்த உறுதியும் நம்மிடம் இல்லை. கண்டடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் செய்யப்பட்ட பல பெயர் ஒற்றுமைகள் மறுக்கப்பட்டு அவற்றுள் சில மட்டுமே தற்போது உறுதியான அடித்தளம் மேல் நிற்கின்றன. தயுஸ் (வேதம்) = ஜூயுஸ் (கிரேக்கம்) என்பது மட்டுமே எந்த சந்தேகமும் இல்லாமல் நிற்கிறது. வருணன் = உரனோஸ் (கிரேக்கம் - ουρανός) என்பதில் உச்சரிப்பில் சிரமம் இருந்தாலும் இவை இணையாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளது. பர்ஜன்ய என்ற வேத மழைக்கடவுள் லித்துவேனிய இடிக்கடவுள் பெர்குனஸ் உடன் பொருள் அளவில் ஒத்துள்ளது, இருந்தாலும் சொற்களின் ஓசையில் வேறுபாடு பெரிதாக உள்ளது. பகா என்பது ஸ்லாவோனிய போகு உடனும், பாரசீக பகா உடனும் ஒத்துள்ளது; ஆனால் ஸ்லாவோனிய மற்றும் பாரசீக சொற்களுக்கு கடவுள் என்று பொருள், இந்தோ-ஐரோப்பிய சொல் பகா என்பது தனிப்பட்ட கடவுளுக்கு அளிக்கப்பட்டதல்ல. உதயத்தின் சொற்களான உஷஸ், அரோரா (ரோம்) மற்றும் உயுஸ் (கிரேக்கம்) ஆகியவை ஒன்றிலிருந்து வந்திருந்தாலும், விடியலை இறைவியாக வழிபடுவது இந்தியாவிற்கே உரிய வளர்ச்சி. இந்தோ-ஐரோப்பிய குடும்பத்தின் பல கிளைகளில் உள்ள இடிக்கடவுள்களின் தொன்ம பண்புகளுடைய ஒற்றுமையிலிருந்து (அந்த இடிக்கடவுள்களுக்கு பொதுவான ஒரு பெயர் இல்லையென்றாலும்) இந்தோ-ஐரோப்பிய காலகட்டத்தில் ஒரு இடிக்கடவுள் இருந்தார் என்பதை அறிய முடிகிறது. பண்புகளில் மட்டுமே ஒற்றுமை கொண்ட ஒன்றிரண்டு கடவுள்கள் உள்ளன (எனினும் அவற்றை பொருத்துவது சிரமமாகவே உள்ளது). உதாரணமாக, ஒளி மற்றும் வான் ஆகியவற்றை தனது பண்பாக கொண்ட உயர்நிலை கடவுள்கள் தெய்வோ என்ற பொதுவான பெயரால் சுட்டப்படுகின்றனர் (சம்ஸ்க்ருதம் - தேவ, லுதுவேனியம் - தேவ, லத்தீன் - தெயு), அவர்கள் இந்தோ-ஐரோப்பிய காலகட்டத்திலும் இருந்துள்ளனர். பூமியை தாயாகவும் (வேதம் மற்றும் கிரேக்க தொன்மத்திற்கு பொதுவானது), வானை தந்தையாகவும் (சம்ஸ்க்ருதம் - தயுஸ் பித்தர், கிரேக்கம் - ஜூயுஸ் பிதர், லத்தீன் - ஜு-பிடர்) பார்க்கும் கருத்தாக்கம் தொடமுடியாத பழமையில் உள்ளதாக தெரிகிறது. வானும் பூமியுமே அனைத்திற்கும் பெற்றோர் என்ற கருத்து சீன மற்றும் நியூசிலாந்து தொன்மங்களில் உள்ளது; இதை எகிப்து வரை கூட கோடிழுக்கலாம். வேதத்தில் இன்றும் வாழும் சடங்குகள் மற்றும் உயிரற்றவைகளை வழிபடுவது ஆகியவை சந்தேகம் இன்றி இதற்கு இணையான மனிதஉள வளர்ச்சியுடன் சேர்ந்தே தொடமுடியாத அளவு தொன்மையில் இருந்து வந்துள்ளன. 

=================

மூலம்: ஆர்தர் அந்தோணி மெக்டோனல் (A. A. Macdonell) எழுதி 1897-ல் வெளிவந்த Vedic Mythology நூலின் முன்னுரை இது - Vedic mythology: Macdonell, Arthur Anthony, 1854-1930: Internet Archive

மொழிபெயர்ப்பு - சியாம்


ஆர்தர் அந்தோணி மெக்டோனல் (A. A. Macdonell - 1854-19) சம்ஸ்க்ருத அறிஞர். சம்ஸ்க்ருத ஆங்கில அகராதியை உருவாக்கினார். இவர் எழுதிய சம்ஸ்க்ருத இலக்கிய வரலாறு நூல் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

Arthur Anthony Macdonell - Wikipedia



சியாம், மொழிபெயர்ப்பாளர். தஞ்சாவூரைச் சேர்ந்தவர், தற்போது சென்னையில் பணிபுரிகிறார். இலக்கிய வாசகர்.