ஓ.ரா.ந. கிருஷ்ணன் பௌத்த தத்துவ அறிஞர். அவருடைய குடும்பம் பௌத்த மரபை சேர்ந்ததில்லை என்றாலும் பௌத்த தத்துவங்களின் மேல் ஈடுபாடு கொண்டு பௌத்தராகவே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். பௌத்த தத்துவம், தியானம், சடங்குகள் ஆகியவற்றை பற்றி அறுபதுக்கும் மேல் நூல்களை எழுதியுள்ளார். பௌத்த நூல்களை வெளியிடுவதற்கு 2005-ல் ‘மெத்தா பதிப்பகம்’ என்ற பதிப்பகம் ஒன்றை தொடங்கி பௌத்தம் சார்ந்த நூல்களையும், பௌத்தத்தின் மூல நூல்களையும் தமிழில் வெளியிட்டு வருகிறார். பௌத்தத்தையும் அதன் தத்துவங்களை பரப்புவதற்கும் 2006-ல் ‘தமிழ்நாடு பௌத்த சங்கம்’ நிறுவி பௌத்தம் சார்ந்த கூட்டங்களை நடத்தி வந்துள்ளார். 2014ல் ‘போதி முரசு’ எனும் மாத இதழை தங்கவயல் வாணிதாசன் என்பவருடன் இணைந்து தொடங்கி அதில் பௌத்தம் பற்றி எழுதி வருகிறார். இவரது முதல் நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. In search of reality (Motilal Banarsidass Publishers, Delhi, 2003) தமிழில் வெளியான முதல் நூல் ‘பௌத்தத் தத்துவங்களும் தியான முறைகளும்’ (அகிம்சை பெண்ணிய பெட்சி நிறுவனம் 2007).
ஓ.ரா.ந. கிருஷ்ணன் , மனைவி ஜெயா கிருஷ்ணன் |
ஓ.ரா.ந. கிருஷ்ணன் - 1955 |
பரூச் ஸ்பினோசா |
பௌத்த தத்துவத்தில் உங்களுடைய ஆசிரியர் யார்?
ஆசிரியர்ன்னு யாரும் இல்லை. ஆங்கில நூல்கள் படித்து தெரிந்து கொண்டது தான். நான் ‘தமிழ்நாடு பௌத்த சங்கம்’ நிறுவின போது பிக்கு ‘போதிபாலா’வுடன் தொடர்பு ஏற்பட்டது. அவருடன் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன். அந்த உரையாடல்கள் பௌத்ததை தெளிவு படுத்தியது. அவரை ஆசிரியர் என்று சொல்லலாம்.
பின் கோ. சந்திரசேகரன் என்பவர் ‘தம்ம பேரவை’ என்று வெள்ளிக்கிழமைதோறும் பத்திருபது பேர் கூடி பௌத்தம் பற்றி பேசும் அமைப்பு ஒன்று வைத்திருந்தார். அதில் 2010-முதல் பத்து வருடமாக பௌத்தம் பற்றி பேசியிருக்கிறோம், தியான பயிற்சிகளும் செய்து வந்திருக்கிறோம்.
இந்திய தத்துவ தரிசனத்தில் பௌத்தத்தின் தாக்கம் என்ன பங்களிப்பாற்றியது என்று சொல்ல முடியுமா?
சாங்கியம், யோகம், வைஷேஷிகம், நியாயம் இவற்றில் பிராம்மனீயத்தை என்னதான் புகுத்தினாலும் இந்த தரிசனங்கள் பௌத்தத்தை சேர்ந்தது தான். இந்த தரிசனங்கள் சிரமண மரபை சேர்ந்தவைகள். சாங்கியத்தில் புருஷ தத்துவம் பின்னால் இணைக்கப்பட்டதே. முதலில் எனக்கு சாங்கியத்தின் பரிணாமக் கொள்கை விளங்காமலே இருந்தது. பௌத்தத்தையும், மணிமேகலையில் 27-ஆம் காதை ‘சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை’யையும் வாசித்த பிறகு தான் சாங்கியத்தை புரிந்துகொள்ள முடிந்தது.
சாங்கியத்திலிருந்தும், வைஷேஷிகத்திடமிருந்தும் புத்தர் அடிப்படை தத்துவங்களை பெற்றுக்கொண்டுள்ளார். சாங்கிய தத்துவ கருத்துக்களை புத்தருக்கு போதித்த ஆசிரியர்களான ஆலாரகாலாமர், உத்தக இராமபுத்திரர் ஆகியவர்களிடமிருந்து அவர் யோக முறைகளையும் கற்றறிந்ததாக தெரிகின்றது. ஆனால் புத்தர் அவற்றோடு தனது புதிய கண்டுபிடிப்புகளான விபாசனா உள்நோக்கு தியான முறைகளையும் இணைத்து தியானத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளார்.
அத்வைதத்தின் ஆசிரியரான கௌடபாதரிடம் மகாயானத்தின் குறிப்பாக யோகாசார தத்துவ மரபின் தாக்கம் மிக அதிமாக உள்ளது. அவரிலிருந்து தான் அத்வைதம் வளரத்தொடங்கியது. அத்வைதமே பௌத்தத்தின் தாக்கத்தால் உருவானது என்று சொல்லாம். இவ்வாறு ஒவ்வொரு தத்துவ தரப்புகளும் பௌத்தத்துடன் உரையாடி வளர்ந்தவையே.
பௌத்தம் வேதாந்திகளின் ஒற்றை முழுமைவாதத்தை முற்றிலும் நிராகரிக்கின்றது. உண்மையில் ஒற்றை முழுமைவாதம் அனைத்து பன்மைகளையும் அழிக்கும் குறிக்கோளை கொண்டதாக அமைகின்றது. எல்லாம் ஒன்றாகவே இருக்க வேண்டும், அதுவும் தாங்கள் கூறும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது இந்த வாதத்தை பற்றி கொண்டிருப்பவர்களின் நிலைப்பாடாக அமைந்து விடுகின்றது.
இதுவே உலகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாகி விடுகின்றது. அதனால் பௌத்தம் பன்முகத்தன்மையை முன்வைத்து மற்ற தத்துவ தரிசங்களுடன் பேசியது. இந்திய ஞான மரபு என்று நாம் கூறும் தத்துவ தரிசனங்கள் அனைத்திலும் பௌத்தத்தின் தாக்கம் உண்டு. பௌத்தம் இல்லாமல் இந்த தரிசனங்கள் இத்தனை வளர்ச்சி அடைந்திருக்காது.
ஓ.ரா.ந - 1965 |
அவ்வாறு பௌத்தம் இந்தியாவில் செழித்திருக்கின்றது. பின் இந்தியாவில் பௌத்தம் நலிவடைந்ததற்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.
பௌத்தம் இந்தியாவில் நலிவடைந்ததற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. மிக முக்கியமானது முகலாயப் படையெடுப்பு. 13ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் செல்வம் குவிந்திருந்தது. அதை சூறையாடுவதற்கு தொடர்ந்து இந்தியாவின் மேல் முகலாயர்கள் படை எடுத்து வந்தனர். இந்தியாவின் வடகோடியிலிருந்து தென்முனை வரை உள்ள புத்த விகாரங்களையும் கோயில்களையும் முகலாயர்கள் இடித்து தள்ளி அதில் இருந்த செல்வங்களை சூறையாடினர்.
அப்போது இந்தியாவில் இருந்த புத்த விகாரங்கள் கைவிடப்பட்டன. இந்தியாவில் இருந்த புத்த பிக்ஷுக்கள் திபெத்திற்கும் தாய்லாந்துக்கும் பர்மாவிற்கும் புலம் பெயர்ந்தனர். மற்ற பௌத்தர்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் விட்டு சென்றதை எடுத்துச் செல்ல யாரும் இங்கு இருக்கவில்லை. பிராம்மணீயத்திலும், கோவில் அச்சகர்களுக்கும் அவர்களுடைய வாரிசுகள் பிள்ளைகள் இருந்தனர். பௌத்தர்களுக்கு ஒருத்தரும் இல்லை. பிக்ஷுக்களின் சீடர்களும் அவர்களுடன் போய்விட்டனர். அதனால் பௌத்த தத்துவங்களை வளர்க்க ஒருத்தரும் இல்லாமல் போய்விட்டனர்.
இரண்டாவது காரணம் பௌத்தத்திற்கும் பிராம்மணீயத்துக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒரு முரண் இருந்து வருகின்றது. அம்பேத்கர் சொல்லுவார் பௌத்தத்திற்கும் பிராமணியத்துக்கும் இடையேயான போராட்டம் தான் இந்திய வரலாறு என்று. 16ஆம் நூற்றாண்டு வரைக்கும் பௌத்தம் இந்தியாவில் இருந்திருக்கு. அப்புறம் தான் அழிஞ்சு போயிருக்கு அது என்ன பண்ணி இருக்காங்கன்னா, முன்னயே சொன்ன மாதிரி பல கருத்துக்கள் பௌத்தம் சொன்னதுக்கு அப்புறம் தான் இந்தியாவில் தெரிய வந்தது. ஆனால் பிராம்மணீயம் பௌத்த கருத்துக்கள் ஒன்றும் புதிது ஒன்றும் இல்லை ஏற்கனவே இங்கிருக்கிறது தான் என்று அதை விமர்சித்தது. அதே சமயம் பக்தி இயக்கம் இந்தியாவில் பேருருக் கொண்டெழுந்தும் காரணம்.
மூன்றாவது காரணம் சம்ஸ்க்ருதத்தில் பௌத்த மூல நூல்கள் பல இருந்திருக்கிறது. எண்பத்தி நாலாயிரம் சூத்திரங்கள் இருந்திருக்கலாம் என்கிறார்கள் அறிஞர்கள். அவை படையெடுப்புகளில் கைவிடப்பட்டு மறைந்துவிட்டன. அந்த நூல்களையாவது பாதுகாத்திருந்தால் அதை கொண்டு பௌத்தம் இங்கே நிலைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்.
இந்தியாவிலிருந்து பாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பௌத்த மூல நூல்கள் திபேத், சிலோன், பர்மாவில் பாதுகாக்கப்பட்டிருந்தது. அந்த நூல்களை வாசித்த இங்கிலீஷ்காரங்க அந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தாங்க. அப்படித்தான் பௌத்தம் உலக அளவில் மீண்டும் மறுமலர்ச்சி கண்டது.
ஓ.ரா.ந. தொடங்கிய போதி முரசு இதழ் |
அப்போது பௌத்தத்தின் இரட்டை மதம் என்று சொல்லக்கூடிய சமணம் மட்டும் எப்படி இந்தியாவில் (தமிழ்நாடும் சேர்த்து) இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கிறது?
சமணம் எப்போதும் பிராம்மணீயத்துடன் தான் இருந்து வருகிறது. ‘ஆத்மா உண்டு’ என்பது போன்ற பல பிராம்மணீய கருத்துக்களை சமணமும் கொண்டுள்ளது. அந்த இரண்டு மதங்களுக்கும் எப்போதும் அணுக்கம் உண்டு. சமணம் பௌத்தம் போல பிராம்மணீயத்தை எதிர்த்ததில்லை. பௌத்தம் மேல் இங்கே ஒரு எதிர்மறை தன்மையை உண்டாக்கிட்டாங்க. பௌத்தமும் பிராம்மணீயமும் எப்போதும் ஒன்றாக முடியாது. அது என்றும் பிராம்மணீயத்திற்கு எதிரானதாகவே இருக்கும்.
சமணத்திற்கு நிறைய வணிகர்கள் இருந்தாங்க. அனைவரும் செல்வந்தர்கள். படையெடுப்புக்குப் பின் மீண்டும் சமணத்தை அவர்கள் கட்டி எழுப்பினர். பௌத்தத்திடம் செல்வம் இருக்கவில்லை. பௌத்தம் கீழ்நிலை மக்களிடமே இருந்து வந்தது. அதனால் இந்த தாக்குதல்களிலிருந்து மீண்டு வர முடியவில்லை.
ஓ. ரா. ந - 1975 |
இன்றைய வணிக நுகர் கலாச்சாரத்தில் பௌத்தத்துடைய இடம் என்னவாக உள்ளது? அதன் தேவை எவ்வாறு உள்ளது?
பௌத்தம் சொல்லுவது தேவைக்கு ஏற்ற அளவு பொருள் நுகர்வும், நடுவழி-யும். (sufficiency, middle path). பொதுவாக எந்த இரண்டு எல்லைகளுக்கும் போகக்கூடாது, கலாச்சாரத்திலும் இரண்டு எல்லைகளுக்கும் போகக்கூடாது.
‘நடுவழி’ புத்தர் காட்டிய அற்புதமான வழி. அதிகமாக கோபம் கூடாது, கோபம் கட்டுக்குள்ளும் இருக்க வேண்டும் அதே சமயம் கோபமே படாமலும் இருக்கக் கூடாது.
இன்னும் முக்கியமான ஒன்று sufficiency-economy. இப்ப பூமியின் நிலவளங்களை காலி பண்ணா வருங்கால சந்ததிகளுக்கு அது இல்லாமல் போய்விடும். உதாரணத்துக்கு இரும்பு தாது எடுத்துக்கிட்டா பணத்திற்காக அதை பூமியிலிருந்து எடுத்துக்கொண்டே இருக்கோம் என்று வைத்துக்கொள்வோம். அதையே நிறைய பண்ணிட்டா நூறு வருஷம் கழிச்சு இரும்பு தாதுவே இருக்காது. அப்போது என்ன பண்ணுவீங்க. இப்பவே தங்க சுரங்கங்கள் அழிந்துகொண்டிருக்கிறது. நாம் எல்லாத்தையும் அழிச்சிக்கிட்டு இருக்கோம். வருங்கால சந்ததியர் பற்றி நினைக்கிறது இல்லை. உங்கள் தேவைக்கு எடுத்துக்கிட்டு வருங்கால சந்ததிக்காக விட்டுவைக்க வேண்டும். நுகர்வு கலாச்சாரத்தில் பௌத்தத்தின் தேவை மிக முக்கியமானது. அதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதை நன்கு புரிந்து கொண்ட தாய்லாந்து போன்ற நாடுகள் sufficient economy, மூலம் முன்னேறிக் கொண்டு வருகிறன.
பௌத்தம் உலக அளவில் பரவி இருக்கிறதா?
பௌத்தம் இப்போது உலகம் முழுக்க பரவி இருக்கிற மாதிரி தெரிகிறது, ஆனால் அதன் தத்துவத்தை தெரிந்து கொண்டிக்கிறார்களா என்று தெரியவில்லை. அதன் விபாஸனா போன்ற தியான, யோக முறைமைகளால் அமேரிக்கா ஐரோப்பாவில் பரவி இருக்கிறது.
ஓ.ரா.ந. மனைவி ஜெயா கிருஷ்ணனுடன் - 1983 |
திபெத்திய பௌத்த தலைவர் ‘தலாய் லாமா’ பற்றி சொல்ல முடியுமா? நீங்கள் அவருடைய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறீர்களே.
அவர் திபெத்திலிருந்து வெளிவந்தது ஒரு விதத்தில் உலகத்திற்கு நல்லது. அதுவே பௌத்தம் உலகம் முழுக்க பரவ காரணமாகியது. அவர் திபெத்திலிருந்து வெளிவந்தார், பௌத்தம் உலகத்தை அடைந்தது.
அவர் தன் தாய் நாட்டை இழந்தார். ஆனாலும் அஹிம்சையை மட்டுமே வெளிப்படுத்தினார். உலகிற்கு அமைதியை கொண்டு வர முயற்சித்தார். உலகமே அவருக்கு தாய் நாடாகியது. உலகம் முழுக்க பயணம் செய்கிறார். மத போதகர்களிடம், விஞ்ஞானிகளிடம் மாணவர்களிடம் என அவர் உலகில் உள்ள அனைவருடனும் உரையாடுகிறார்.
தலாய் லாமாவுடன் - 2010 |
தியானம் பற்றி?
பௌத்தம்ன்னா தியானம், தியானம்ன்னா பௌத்தம்.
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலுக்கு 'பௌத்தத்தின் பார்வையில்’ என்ற எதிர்வினை நூல் ஒன்று எழுதியிருந்தீர்கள். நவீன தமிழ் இலக்கியம் வாசிப்பதுண்டா?
இப்போது தத்துவம் தவிர்த்து எதையும் வாசிப்பதில்லை. ஜெயமோகனின் நாவலை படிக்கும்படி நண்பர் ஒருவர் சொன்னார். அவர் சொல்லி நீண்ட நாட்கள் ஆகிய பின் ஒரு ரயில் நிலையத்தில் வைத்து விஷ்ணுபுரத்தை வாசித்தேன். நான் பிடிக்க வேண்டிய ரயில் பிளாட்பாரத்தில் வந்து சென்றது தெரியாத அளவு நாவலில் ஆழ்ந்துபோய்விட்டேன். நாவலை வாசித்தவுடன் நான் சொல்லுவதற்கு ஒரு தரப்பு இருப்பதாக நினைத்தேன். அதை அந்த நூலில் எழுதியுள்ளேன்.
கல்லூரி நாட்களில் நிறைய வாசித்திருக்கிறேன். கல்கி மேல் பெரிய ஈடுபாடு இருந்தது. அவரது நாவல்கள் அனைத்தையும் வாசித்துவிடுவேன். மு. வரதராசனார், லட்சுமி, அகிலன், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், க.நா.சுப்பிரமணியன் இவர்களை வாசித்திருக்கிறேன். ஒரு காலகட்டத்தில் காண்டேகரின் (Vishnu Sakharam Khandekar) பரம ரசிகனாக, பக்தனாக கூட இருந்திருக்கிறேன்.
ஓ.ரா.ந. - பணி ஓய்வு விழாவில், மெக்கான் - 1991 |
ஓ.ரா.ந. - 2000 |
நீங்கள் ஆரம்பித்த ‘தமிழ்நாடு பௌத்த சங்கம்’ மற்றும் மெத்தா பதிப்பகம் பற்றி சொலுங்கள்?
நான் பௌத்த தியான முறைமைகளை பரப்புவதற்கு ‘தமிழ்நாடு பௌத்த சங்கம்’ என்ற அமைப்பை ஆரம்பித்தேன். அதில் தோற்றுவிட்டதாகவே நினைக்கிறேன். அதை பெரிய அளவில் கொண்டு செல்ல என்னிடம் அத்தனை பணம் இல்லை. என்னுடைய நூல்களை யார் படிக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. அச்சடித்த புத்தகங்களை நூலகங்களுக்கு மட்டும் தவறாமல் அனுப்பி விடுவேன். யாராவது பௌத்தம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் என் புத்தகங்கள் இருக்கிறது. அதுவே எனக்கு நிறைவை அளிக்கிறது.
நீங்கள் பௌத்த தியான முறைமைகளின் தத்துவத்தையும் செய்முறைமையும் பற்றி விரிவாக எழுதியுள்ளீர்கள். இந்த நூல்களை மட்டும் படித்த ஒருவர் இதை பயில முடியுமா? ஆசிரியர் இல்லாமால் இவற்றை பயிற்சி செய்யலாமா?
பயிற்சி செய்ய முடியும் என்று தான் நினைக்கிறேன். எனக்கு ஆசிரியர் இல்லை, முழுவதும் படித்து பயிற்சி செய்தது தான். இயல்பாகவே தியானம் வரக்கூடியது தான். இது நம்பிக்கை சார்ந்த ஒன்று இல்லை, முழுக்க பகுத்தறிவு சார்ந்து இயங்குவது.
உங்களுடைய நூல்களில் பௌத்த தத்துவ பிரிவுகள் மகாயான பௌத்தம், வஜ்ஜிராயன பௌத்தம் என பௌத்த தத்துவ நூல்களை அடிப்படையாக கொண்டு தியான முறைமைகளை விவரிப்பதாக சொல்லுகிறீர்கள். இவ்வாறு தத்துவ பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து சொல்லும் போது தத்துவங்களின் அடிப்படை கொள்கைகளில் குழப்பம் ஏற்படாதா?
குழப்பம் ஏற்படாது என்று தான் நினைக்கிறேன். அடிப்படையில் இந்த தத்துவ பிரிவுகள் ஒன்று தானே, புத்தர் போதித்தது தானே. ஒரு பெரிய ஆலமரம் நிறைய கிளையுடையது. அதன் எல்லா கிளையும் ஒன்று போல் இருக்காதில்லையா, அவரவர்களுக்கு ஏற்றார் போல அவர்களுடைய இயல்புக்கும் தன்மைக்கும் ஏற்றார் போல அதை அறிகிறார்கள். தங்களுடைய தத்துவத்தை சேர்த்து அதை வளர்க்கிறார்கள். இவ்வாறு தான் நான் பௌத்தத்தை புரிந்துகொள்கிறேன்.
மகன் அமுதன் கிருஷ்ணன் கல்யாணம் குடும்பத்துடன் ஓ. ரா. ந - 1999 |
நீங்கள் சமீபத்தில் கொண்டுவந்துள்ள பௌத்த பைபிள், புத்த ஜாதக கதைகள் நூல்கள் பற்றி சொல்ல முடியுமா?
நிறைய பேர் கேட்டாங்க எதற்கு பௌத்த பைபிள்ன்னு இந்த புத்தகத்திற்கு பெயர் வைத்தீர்கள் என்று. இதை எழுதும் போது சிறிதாகத் தான் ஆரம்பித்தேன் ஆனால் நூல் அதுவாகவே பெரிதாகி விட்டது. பைபிளில் வருவது போல அரசர்களின் வம்சாவளி கதைகள், அஜாத சத்ரு ஆகிய அரசர்களின் கதைகளை நிறைய சேர்த்திருக்கிறேன். வரலாற்று தகவல்களை கூடிய மட்டும் இணைத்துள்ளேன்.
இந்த நூல்களை படித்தால் பௌத்தம் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். குழந்தைகள் நிச்சயம் படிக்க வேண்டும். அவர்கள் மனதில் அன்பு மற்றும் கருணை மலர வேண்டும். சின்ன வயதிலேயே அவர்கள் மனதில் அறம் விதைக்கப் பட வேண்டும். அதை புத்த ஜாதக கதை கொடுக்கும்.
ஆறாம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை உயிர்ப்புடன் இருக்கும் பக்தி இயக்கம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பக்தி தேவை தான். மக்களுக்கு பக்தி வேண்டிருக்கிறது, எல்லோராலும் பகுத்தறிவை கொண்டிருக்க முடியாது. அவரவர் மன இயல்பு எதுவோ அதை பின் பற்ற வேண்டியது தான். பௌத்தத்தில் மகாயான பிரிவில் பக்தி இருக்கிறது. பக்தி, கடவுள் இல்லை, ஆனாலும் அவை தேவைப்படுகிறது.
பௌத்தம் மீண்டும் இந்தியாவில் எழுச்சி பெருமா?
பௌத்தம் இந்தியாவில் மீண்டும் எழுச்சி பெற வாய்ப்பில்லை என்று தான் நினைக்கிறேன். அவ்வளவு ஆழமாக இந்து மதம் இங்கே வேரூன்றிவிட்டது. மீண்டும் ‘ஆத்மா இல்லை’ போன்ற தத்துவ கருத்துக்கள் மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்தியாவில் புத்தரையும், பௌத்தத்தையும் வைத்து அரசியல் செய்தவர்களில், செய்பவர்களில் அம்பேத்கர் தவிர பௌத்த மதத்திற்குள் வந்தர்கள் மிக சொர்ப்பமாகவே இருந்திருக்கிறார்கள். திபெத்திலிருந்து அகதிகளாக வந்த பௌத்தர்கள் இந்தியாவில் பரவி இருக்கிறார்கள், அவர்களால் புத்த மதம் எழுச்சி பெரும்ன்னு சொல்ல முடியாது. இந்தியாவில் ஜாதியும் வலிமையுடன் உள்ளது. ஜாதி அழிய வேண்டும் என்று சொல்லக் கூடியது பௌத்தம். பௌத்தம் வந்தா தான் ஜாதி அழியும், ஆனால் இங்கே மீண்டும் பௌத்தம் வர வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
சந்திப்பு - அனங்கன்
நன்றி - எழுத்தாளர் அமலன் ஸ்டேன்லி
ஓ.ரா.ந. கிருஷ்ணனின் நூல்கள் சில:
- பௌத்த பைபிள் - மெத்தா பதிப்பகம்
- புத்த ஜாதக கதைகள் - மெத்தா பதிப்பகம்
- பௌத்த தியானம் - காலச்சுவடு
- பௌத்த வாழ்க்கை முறையும் சடங்குகளும் - காலச்சுவடு
- இந்திய ஞான மரபுகள் பௌத்தத்தின் பார்வையில் - மெத்தா பதிப்பகம்
- பௌத்த பாவனை மனவள தியான பயிற்சிகள் - மெத்தா பதிப்பகம்
நூல்கள் கிடைக்கும் இடம்:
மெத்தா பதிப்பகம் 1848 / 8 6th AvenueAnna nagar westChennai- 600040Cell - 9710430600 (சங்கர்)