Sunday, 25 June 2023

உலகில் எதன்மீதாவது பக்தி செலுத்தாத ஒருவர் கூட இல்லை: சடகோப முத்து ஶ்ரீநிவாசன் - நேர்காணல்

சடகோப முத்து ஶ்ரீநிவாசன் விசிஷ்டாத்வைதி, (வைணவ தத்துவவாதி) வைணவ தத்துவ உரையாசிரியர். வேதாந்தத்தில் உபநிஷதங்கள், பிரம்ம ஸூத்திரம், பகவத் கீதை,  ஆகிய   மூன்றும்   ப்ரஸ்தான த்ரயம் என்னும் மூன்று முதன்மை நூல்கள். இவற்றிற்கு சங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகிய பெரும் தத்துவ ஆசிரியர்கள் தங்களின் தரிசனத்தை முன்வைத்து உரை எழுதியிருக்கின்றனர். ராமானுஜர் அவருக்கு முன்  இயற்றப்பட்ட பிரம்ம சூத்திர உரைகளை திரட்டி விரிவாக விசிஷ்டாத்வைத தத்துவத்தை முன்வைத்து பிரம்ம ஸூத்திரத்திற்கு உரை எழுதினார். அந்த  பிரம்ம சூத்திர உரை 'ஶ்ரீபாஷ்யம்' என அறியப்படுகிறது. ஶ்ரீபாஷ்யம், ராமானுஜர் காலத்தில் இருந்த தத்துவ தரப்புகளான அத்வைதம், பௌத்தம், சாங்கியம் உட்பட அனைத்து தத்துவ பிரிவுகளையும் எதிர் தரப்பாகக்கொண்டு, மறுத்து விசிஷ்டாத்வைதத்தை முன்வைக்கிறது. 

முத்து ஶ்ரீநிவாசன் ஶ்ரீபாஷ்யம் உட்பட ராமானுஜர்  இயற்றிய  வேதார்த்த சங்க்ரஹம், கத்யத்ரயம் மற்றும் அஷ்டச்லோகி, ஸந்தியாவந்தனம் ஆகிய நூல்களுக்கு மரபான வைணவ தத்துவ அடிப்படையில் தமிழில் உரை எழுதியுள்ளார். அவ்வுரைகளை அனைவரும் வாசிக்கும் படி எளிய தமிழில் செய்துள்ளார். பத்துவருடத்திற்கும் மேலாக பிராமணர், வைணவர்களுக்கு மட்டும் அல்லாது அனைவருக்கும் ஶ்ரீபாஷ்யம் உட்பட வைணவ தத்துவ பாடங்களைப் பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். 

முத்து ஶ்ரீநிவாசன்
முத்து ஶ்ரீநிவாசன் விருதுநகர் மாவட்டத்தில் நதிக்குடி கிராமத்தில் 1939ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி பிறந்தார். தந்தை சடகோபன் அய்யங்கார், அன்னை கோமளவல்லி. ஶ்ரீரங்கத்தில் பள்ளி படிப்பு, திருச்சி நேஷ்னல் காலேஜில் B.A MATHS முடித்து  ரயில்வேயில் வேலையில் சேர்ந்து, பணி நிறைவும் பெற்றுவிட்டார். மனைவி செல்லம்மாள், தற்போது ஶ்ரீரங்கத்தில் வசிக்கிறார். 
முத்து ஶ்ரீநிவாசன் 1959

நீங்கள் தத்துவ பாடம் கற்ற குரு மரபு பற்றி சொல்லுங்கள். நீங்கள் தத்துவ பாடத்திற்குள் எவ்வாறு வந்தீர்கள் என்றும் சொல்லுங்கள்.

எனது தாத்தா நதிக்குடியில் கோவிலோடு விவசாயமும் பார்த்துக்கொண்டிருந்தார். கடினமான பஞ்சகாலம் வந்த பொழுதுகூட அவர் அந்த ஊரைவிட்டு வெளிவரவில்லை. ஆனால் என்னுடைய அப்பாவால் அவ்வாறு இருக்கமுடியவில்லை. எங்களது குடும்பம் பெரியது அப்பாவை நம்பியே இருந்தது. அதனால் அவர் அங்கிருந்து ஶ்ரீரங்கம் வந்து தளிகை (சமையல்) செய்து எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி மேலெழச் செய்தார்.

அவர் கஷ்ட்டப்பட்டதனாலோ என்னவோ என்னை கோவில் பக்கம் கூட அனுப்பாமல் ஆங்கிலக் கல்வி படிக்கவைத்து வேலைக்கு அனுப்பிவைத்தார். நான் ஓய்வு பெற்ற பின்பு ஶ்ரீரங்கத்தில் மீண்டும் வந்த பின் தினமும் கோவிலுக்கு பெருமாளை சேவிக்க சென்று வந்துகொண்டிருந்தேன். அப்போது திருப்பாணாழ்வார் சன்னதி கைங்கர்யத்திற்கு (தொண்டு செய்ய) என்னை திருவேங்கடாச்சாரியார்  என்பவர் அழைத்துச் சென்று நெறிப்படுத்தினார். 

அந்த சன்னதியில் மாதம் முழுவதும் உபந்யாசங்கள் நடைபெற அவரே ஏற்பாடும் செய்திருந்தார். அங்கு உபந்யாசம் செய்பவர்களுள் என்னுடைய ஞானாசிரியர் நரசிம்மாச்சாரியரும் ஒருவர். அவருடைய தந்தை ஶ்ரீபாஷ்யம், திவ்ய பிரபந்தத்திலும் விற்பன்னர். நரசிம்மாச்சாரியர் அவர் தந்தையிடமும் உத்தமசீலி ரங்காச்சாரியார், கோவிந்தாச்சாரியார் ஆகியோரிடமும் தத்துவ பாடம் கேட்டிருக்கிறார். கோவிந்தாச்சாரியார் என்பவர் ஶ்ரீரங்கம் கோவில் பாஞ்சராத்திர பாரமேஸ்வர ஆகம கிரியைகளை ஏட்டிலிருந்து பதிப்பித்தவர். ஆகம அறிஞர். 
 
நரசிம்மாச்சாரியர் பள்ளியில் முதலில் சமஸ்க்ருத ஆசிரியராக இருந்தார். பள்ளியிலிருந்து சமஸ்க்ருதத்தை நீக்கினார்கள், அவர் இந்தி ஆசிரியராக ஆனார். பின் அதையும் பள்ளியிலிருந்து எடுத்த பிறகு துவக்கப் பள்ளி ஆசிரியராக ஆகிவிட்டார். அவரிடம் தத்துவப் பாடம் கேட்ட அனைவருமே பணி ஓய்வு பெற்றவர்கள் தான், ஆனாலும் எங்களுக்குப் பாடம் சொல்லித் தரும் பொழுதும், கண்டிக்கும் போதும் அவர் எங்களை ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மாதிரி தான் நடத்துவார். 

நரசிம்மாச்சாரியர் வசதியுடன் வாழ்ந்தவர் இல்லை. ஆனால் அதைப் பற்றி எந்தக் குறையும் அவருக்கு இருக்கவில்லை. எங்களை ஆரம்பப் பள்ளி மாணவர்கள் போல நடத்துவார் என்று சொன்னேன் இல்லையா, அவர் கோபம் தாங்காமல் அவரிடம் பாடம் கேட்க வந்த இருபது பேரில் ஐந்து பேர் மட்டுமே முழுவதுமாக பாடம் கேட்டு முடித்தோம். 

அவரிடம் கற்கும் போது எனக்கு சமஸ்க்ருதம் தெரியாது. அவர் பாடம் கேட்டதை மறுநாள் சொல்லச் சொன்னால் என்னசெய்வது என்று ஒருபக்கம் சமஸ்க்ருத மூலமும் மறுபக்கம் தமிழ் அர்த்தமும் எழுதிக்கொண்டு வந்தேன். பின்னால் அவற்றைக்கொண்டு தான் என் நூல்கள் எழுதப்பட்டன. 

நரசிம்மாச்சாரியாருடன் முத்து ஶ்ரீநிவாசன்
நீங்கள் பாடம் கேட்ட(கற்ற) தத்துவ நூல்கள் எவை ? 

நரசிம்மாச்சாரியரிடம் முதன்முதலில் கேட்டது பராசர பட்டரின் அஷ்டச்லோகி. பின் யதிராஜ விம்சதி. ராமனுஜரின் வேதார்த்த சங்கரஹம், ஶ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், கத்யத்ரயம், கோபிகா கீதம், திருவாய்மொழி. 

கோமடம் சம்பத்குமாரர் என்பவரிடம் ஆசார்ய ஹ்ருதயம். நரசிம்மாச்சாரியரின் தம்பி திருமலாச்சாரியாரிடம் ஸ்தோத்திர ரத்னம், சதுஸ்லோகி ஆகிய நூல்களை பாடம் கேட்டிருக்கிறேன். இதில் ஶ்ரீபாஷ்யம் மட்டும் ஐந்தரை ஆண்டு ஆகியது மற்ற அனைத்தும் சேர்த்து பத்து வருடம் ஆகியது. காலையில் எழுந்து, வீட்டு வேலைகள் முடித்துக்கொண்டு பாடம் கேட்க சென்றால் மதியம் ஆகிவிடும். பின் சாப்பிட்டுவிட்டு சாயங்காலம் பாடம் கேட்கப் போவேன். ஒரு நாளில் ஆறுமணி நேரம் இதிலேயே கழித்திருக்கிறேன்.

மனைவி செல்லம்மாள், முத்து ஶ்ரீநிவாசன் 1999
நீங்கள் எப்போது உரை எழுத ஆரம்பித்தீர்கள் ?

எனது ஆசிரியர் பாடம் சொன்னதை எனக்காக தமிழில் எழுதிவைத்துக்கொள்வேன் என்று சொல்லியிருந்தேன். அவ்வாறு முதலில் பாடம் கேட்டது வேதார்த்த சங்க்ரஹம் அதை என்னுடைய மருமகன் எடுத்துப் பார்த்தார். அவர் தீவிர கம்யூனிஸ்ட். நிறைய வாசிப்பார். எனது கையெழுத்துப்பிரதியை படித்துவிட்டு இவை என்ன என்று கேட்டான். நான் படித்துப் பார்த்தால் தான் தெரியும் என்று சொன்னேன். அதை கொண்டுபோய் வாசித்தவன் அந்நூலை பிரசுரம் பண்ணுகிறேன் என்று சொல்லி செம்பகா பதிப்பகம் மூலம் வெளியிட்டார். அப்படித் தான் வேதார்த்த சங்க்ரஹம் வெளிவந்தது. 

பிறகு அஷ்டச்லோகி பிரசுரமாகியது. அதையும் கைப்பிரதியாகக் குறித்து வைத்திருந்தேன். என்னுடைய ஆசிரியரின் எண்பதாவது விழாவின் முன்னேற்பாட்டில் எனக்குத் தெரியாமலேயே அந்நூல் விழாவில் வெளியிடப்படும் என்று அறிவித்து அழைப்பிதழில் அதைக் குறிப்பிட்டிருந்தார்கள். நான் அப்போது சென்னைக்கு சென்றிருந்தேன். உடனே அங்கிருந்து வந்து பிரசுரிப்பதற்குத் தகுந்தார்போல் அந்நூலை எழுதிக்கொடுத்தேன். 

அதே சமயம் ஶ்ரீபாஷ்யமும் எழுதிக்கொண்டிருந்தேன். அந்த சமயம் என் மனைவி காலமாகிவிட்டார். அந்த விரக்தியில் ஒரு வருடம் ஒன்றும் எழுதாமலேயே இருந்தேன். எனது நண்பர்கள் என்னைத் தேற்றி மீண்டும் எழுதத்தூண்டினர். 

ஶ்ரீபாஷ்யம் வாசிக்கும் போதெல்லாம் எனக்குத் தோன்றும் எத்தனை அருமையான நூல் இது என்று. எனக்கு ஶ்ரீபாஷ்யம் கற்றுக்கொள்ளும் பொது சமஸ்க்ருதம் தெரியாது. வைணவர்கள் எத்தனையோ பேர் சமஸ்க்ருதம் தெரியாமல் ராமானுஜர், விசிஷ்டாத்வைதம் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். ஶ்ரீபாஷ்யத்தையும் வாசிக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் இருந்தது. விசிஷ்டாத்வைதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டாமா. எத்தனை அழகாக ராமானுஜர் தர்க்கத்துடன் இதில் பேசுகிறார். ஒரு ஆசிரியரிடம் பாடம் கேட்கும் போதே என்னால் சம்ஸ்க்ருத வார்த்தைகளை புரிந்துக்கொள்ள முடியவில்லை என்றால், வெளியில் எத்தனைப்பேர் சாதாரண வேலையில் இருந்துகொண்டு வைணவத்தின் மேல் ஈடுபாட்டுடன் ஶ்ரீபாஷ்யம் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் எவ்வாறு வாசிப்பார்கள் என்று நினைத்தேன். 

அதனால் முடிந்த அளவு சமஸ்க்ருதத்துடன் எளிய தமிழில் ஶ்ரீபாஷ்ய உரையை எழுதினேன். இன்று அச்சாகி இருக்கும் நூல் நான் ஐந்தாவது முறையாக எழுதி இந்த வடிவத்தில் கொண்டுவந்தது. ராமானுஜர் ஒரு சம்ஸ்க்ருத சொல் அதன் இலக்கணத்தின் படி எவ்வாறு பொருள் கொள்ள வேண்டும் என்று மிக விரிவாக எழுதியிருக்கிறார். பிற தரப்புகளை மீண்டும் மீண்டும் சொல்லி தன் தரப்புகளைச் சொல்கிறார். அது அனைத்தும் சேர்த்து 1800 பக்கங்கள் வந்தன. அத்தனையும் கொடுத்தால் வாசகன் நிச்சயம் குழம்பிப்போய் விடுவான். இத்தனை அழகான நூலை அனைவரும் புரியும் படி எழுத வேண்டும் என்று என் ஆசிரியரின் வழிகாட்டலால் ஆசியால் ஶ்ரீபாஷ்ய விளக்க நூலை இன்று உள்ள வடிவில் எழுதி முடித்தேன். 


நீங்கள் எத்தனை வருடமாக பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். எப்போது பாடம் சொல்ல ஆரம்பித்தீர்கள். (பாடம் சொல்லுதல் - கற்பித்தல்) 

இன்றைக்கு பாடம் சொல்ல(கற்பிக்க) ஆரம்பித்து பத்து வருடம் ஆகிவிட்டது. என்னுடைய நண்பர் வெங்கடராகவன் என்பர் வேதார்த்த சங்க்ரஹம் வாசித்து விட்டு என் வீட்டிற்கு வந்து அதைப் பற்றி பேசினார். நான் அதை விரிவாக அவருக்குப் புரியும்படி விளக்கிச்சொன்னேன். அவருக்கு அது பிடித்திருந்தது. சில நண்பர்களுடன் ஆன்லைனில் பாடம் கேட்க ஆரம்பித்தார். அது அப்படியே பரவி நிறைய நண்பர்கள் சேர்ந்துவிட்டார்கள். ஶ்ரீபாஷ்யம் மட்டும் நான்கு முறை முழுவதுமாக பாடம் சொல்லியிருக்கிறேன். உலகின் எங்கெங்கோ மூலைகளில் இருந்தெல்லாம் கேட்கிறார்கள். திவ்ய பிரபந்தம் நான் பாடம் கேட்ட வரைக்கும் பாடம் சொல்கிறேன். இவை தவிர கம்பராமாயணம், ஈடு வியாக்கியானம், ஆகியவற்றையும் ஆன்லைனில் தினமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். 

ஏன் இவ்வாறான தத்துவ நூல்களை பாடங்களை ஆசிரியர் மூலம் கற்க வேண்டும்? நூல்கள் தான் இருக்கிறதே வாசித்துக்கொள்ளலாம் இல்லையா?

இதற்கு நம்முடைய மரபு இவ்வாறு சொல்கிறது: 

மாடில்லான் வாழ்வு மதியில்லான் வாணிபம் நன் 
நாடில்லான் செங்கோல் நடாத்துவது - கூடும் 
குருவில்லா வித்தை குணமில்லாப் பெண்டு 
விருந்தில்லான் வீடு விழல்.

நீங்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும் படித்துக்கொள்ளலாம். ஆனால் படித்தவற்றை உள்வாங்கிக்கொள்ளவும் சரியான முறையில் பொருள் உணர்ந்து புரிந்துகொள்ளவும் அவற்றை வாழ்வில் செயலாக்கவும் ஒரு நல்லாசிரியரின் வழிகாட்டல் மிக முக்கியமானது. உதாரணமாக சிறு நிகழ்வுவொன்றை சொல்கிறேன்.

ராமானுஜருக்கு அப்போது ஆசிரியராக இருந்த யாதவபிரகாசர் சாந்தோக்கிய உபநிஷத்திலிருந்து ஒரு வாக்கியத்தை பொருள் கூறிக்கொண்டிருந்தார். ‘ 'தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ’ 

இதில் கப்யாஸம் என்ற பதத்திறகு கபி+ஆஸம் என்று பிரித்து பொருள் கொண்டார். கபி என்றால் குரங்கு, ஆஸம் என்றால் உட்காரும் இடம். அதானால் பிரம்மத்தின் கண்கள் குரங்கின் பின்பகுதி போல் சிவந்திருந்தது என்று பொருள் உரைத்தார். அப்போது அவருக்கு எண்ணை தேய்த்துவிட்டுக்கொண்டிருந்த ராமானுஜரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி யாதவபிரகாசரின் தொடையில் சொட்டியது. யாதவபிரகாசர் ராமானுஜரிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்டார். 

அதற்கு ராமானுஜர் நீங்கள் பொருள் கூறியவிதம் சரியில்லை என்று கூறினார். ஒரு பொருளை எடுத்துகாட்டாக (உபமானமாக) சொல்லும் பொழுது உயர்ந்த பொருளை சொல்லுவார்களே தவிர தாழ்ந்த பொருளை சொல்லமாட்டார்கள். ஆஸம் என்பதை ‘அலர்த்தல்’ என்றும் இருக்கை என்றும் பொருள் கூறலாம். ‘கபி’ என்ற சொல் ‘கம் பிபதி இதி கபி’ என்ற சொல் அமைவால் வருவது. அதாவது ‘கம்’ என்றால் தண்ணீர், பிபதி என்றால் குடிப்பது. தண்ணீரை உரிஞ்சுபவன் சூரியன், அவனால் அலர்த்தப்படுவது தாமரை. அதே போல் தண்ணீரை குடிப்பது தாமரைத்தண்டு, அதை இருக்கையாகக் கொண்டது தாமரை. இவ்வாறாக இரண்டு வித்ததில் பொருள்கொண்டால் , பிரம்மத்தின் கண்கள் அப்போது அலர்ந்த தாமரை போன்று இருந்தன என்றே உபநிஷத் வரிகள் சொல்கின்றன என்று ராமானுஜர் கூறினார்.

இவ்வாறு அனேக எடுத்துக்காட்டுதல்களைக் கூறமுடியும். தத்துவத்திலும் ஆன்மீகப் பயணத்திலும் நல்வழியை, நற்பொருளை எடுத்துரைப்பதற்கு ஓர் நல்லாசிரியனால் தான் முடியும். அவ்வாறு நல்லாசிரியன் இல்லையெனில் நீங்களாக ஒன்றை நினைத்துக்கொண்டு தவறான வழியில் செல்ல வாய்ப்பு தத்துவத்திலும், ஆன்மீக தேடலிலும் மிகுதியாக உள்ளது.

அவ்வாறெனில் ஒர் நல்லாசிரியரை எவ்வாறு நாம் கண்டுகொள்வது? 

நமக்கு இருக்கும் ஒரே வழி பலரை அணுகி அவர்களைக் கேட்டு நீங்களே மதிப்பிட்டுக் கொள்வதுதான். 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

என்று வள்ளுவம் கூறும். இது தத்துவத்திற்கும் ஆன்மீகத்திற்கும் மிகவும் பொருந்தும். தத்துவத்தில் ஆர்வமுடைய ஒருவன் தனக்கான நல்லாசிரியனை அடைவது அவனது கடமை ஆகும்.

அப்போது மாணவன் ஆசிரியரை அறிந்து அவரை அணுகுவதற்கு சுதந்திரம் இருக்கிறது இல்லையா?

நிச்சயமாக. வைணவ குருபரம்பரையில் சிஷ்யன் ஆசிரியரிடம் தந்தை என பழகியே அவரை அறிந்துகொள்கிறான். மணவாளமாமுனிகள் ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்

ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடைய
னான, குருவை அடைந்தக்கால்- மாநிலத்தீர்
தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும்.

ஒருவர் ஞானவானாக இருக்கலாம். ஆனால் அவரிடம் ஆசிரியருக்கான நடத்தை இல்லை என்றால் அவரை ஆசிரியராகக் கொள்ளவேண்டாம் என்கிறார். ஞானம் ஒழுக்கம் இரண்டையுமே கொண்டுள்ள ஒருவரே ஆசிரியர். பலபேரிடம் அணுகி அவரின் சொல் கேட்டே நமக்கான ஆசிரியரை நாம் அறிந்துகொள்ள முடியும்.

மணவாளமாமுனிகள்
நீங்கள் எப்போது வைணவர் அல்லாதவர்க்கும் ஶ்ரீபாஷ்யம் பாடம் கற்றுக்கொடுக்க முன் வந்தீர்கள்?

வைணவ கிரந்தங்களுள்(நூல்) சில கிரந்தங்கள் ஶ்ரீவைணவர்களுக்கு மட்டும் தான் பாடம் சொல்லவேண்டும் என்று இருக்கிறது. ‘பஞ்ச சம்ஸ்காரம்’(சமாஸ்ரயனம்) செய்துகொண்டவர்கள் அனைவரும் வைணவரே, அவர்களுக்கு பாடம் சொல்லலாம். அவர்களிடமிருந்தும் பாடம் கேட்டும்கொள்ளலாம். 

சில கிரந்தங்கள் சமாஸ்ரயனம் செய்தவர்களுக்கு தான் சொல்லவேண்டும் என்று இருக்கிறது. அவ்வாறு வலியுறுத்தப்பட்ட கிரந்தங்களை நான் அனைவருக்கும் பாடம் சொல்லுவதில்லை.  பிற கிரந்தங்களை அனைவருக்கும் சொல்லலாம்.

அதே போல் ஶ்ரீபாஷ்யம், கத்யத்ரயம் ஆகிய நூல்கள் அனைவருக்கும் சொல்லக்கூடிய தத்துவ நூல்கள். அதற்கு அவ்வாறான கட்டுப்பாடு இல்லை. ஶ்ரீபாஷ்யம் ராமானுஜரின் காலத்திலிருந்த அனைத்து வித தத்துவங்களையும் உள்வாங்கிக்கொண்டு பேசுகிறது. அதை தத்துவத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் அறிந்துகொள்ளலாம். அதே வைணவ ரகசிய நூல்களை அறி்ந்துகொள்ள வைணவத்தின் உள்ளே வருவது அவசியமாகிறது. 

என்னிடம் ஶ்ரீபாஷ்யம் கற்க ஆர்வம் இருக்கிறது என்று சொன்னவர்கள் அனைவருக்குமே ஶ்ரீபாஷ்யம் பாடம் சொன்னேன். அவர்களிடம் நான் ஆர்வத்தை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. 


தத்துவத்தின் மேல் எவ்வாறு ஈடுபாடு வந்தது?

நான் அடிப்படையில் கணிதவியல் மாணவன். தத்துவத்தில் உள்ள தர்க்கம் (logic) என்னை மிகவும் கவர்ந்தது, அதனால் தத்துவ மாணவனும் ஆனேன். 

உங்களுடைய உரைகளை எளிமையாக எழுத வேண்டும் என்றும், பாடம் சொல்லும் போது புரியும் அளவிற்கு சொல்ல வேண்டும் என்றும் ஏன் நினைக்கிறீர்கள்?

நான் ரயில்வேயில் வேலையில் இருந்தபோது எனக்கு கீழ் வசதிக்குறைவானவர்கள் நிறைய பேர் வேலை செய்தனர். அவர்களுடைய குழந்தைகள் என்ன வகுப்பில் இருக்கிறார்கள் என்று கூட அவர்களுக்குத் தெரியாது. அவர்களுடைய குழந்தைகள் சில பாடங்களில் பெயில் ஆகிவிட்டார்கள் என்று என்னிடம் வருத்தப்படுவார்கள். நான் அவர்களை என்னிடம் அனுப்பிவைக்குமாறு சொல்லி அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பேன். அவர்களுக்கு பாடம் நடத்தும் போது அவர்களுக்குப் புரியும் படி சொல்லவேண்டும் என்று நினைப்பேன். அதற்காக முயற்சி எடுத்துக்கொள்வேன். அவர்களில் பலர் பரீட்சையில் நன்கு தேர்வாகினர். அவர்களுக்குப் புரியும் படி சொல்லவேண்டுமே தவிர, எவரும்  கற்றுக்கொள்ள முடியாதவர்கள் அல்ல என்று அறுதிப்பட்டது. 

இதையே தான் ஶ்ரீபாஷ்யம் பாடம் சொல்லும் போதும் பின்பற்றுகிறேன். இத்தனை அழகான நூலை அனைவரும் புரிந்துகொள்ளுமாறு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நான் சொல்லுவது கேட்பவர்களுக்குப் புரியவேண்டுமே தவிர என்னுடைய அறிவைக் காட்டுவதாக அது இருக்கக்கூடாது.

இந்தியாவில் பரவியிருக்கும் புஷ்டிமார்கம் போன்ற பிற வைணவ தத்துவங்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா?

அந்தந்த வைணவ தத்துவங்களையும் வாசித்திருக்கிறேன், ஆனால் அவற்றை ஆழமாகக் கற்றிருக்கிறேன் என்று சொல்லமுடியாது. இந்தியாவில் வைணவ வழிபாடுகள் அத்வைதம், விசிஷ்ட்டாத்வைதம், த்வைதம் ஆகிய தத்துவ அடைப்படையில் தான் அமைந்துள்ளன. வல்லபாச்சாரியரை ‘வைணவ-அத்வைதி’ எனலாம், இஸ்கான் பிரபுபாதா கொண்டுள்ளதை ‘வைணவ-த்வைதம்’ என்று கூறுலாம். தத்துவ அடிப்படையில் சிறுமாற்றம் இருந்தாலும் அவற்றின் நோக்கம் முக்தியைத் தான் கொண்டுள்ளது. எனக்கு நாம் வந்திருப்பது நல்ல வழி அதன் வழியிலேயே செல்லலாமே என்று தோன்றுவதால் விசிஷ்ட்டாத்வைதத்தையே பின்பற்றுகிறேன்.

பொதுவாக வைணவ சம்பிரதாயம் வெளியில் அறியப்பட்ட அளவு வைணவ தத்துவம் அறியப்படவில்லையே ஏன்?

‘தாயம்’ என்றால் தந்தை மகன் வழிவழியாக வளர்ந்து வருவது. ‘ப்ர-தாயம்’ என்றால் நன்கு வளர்ந்து வருவது. ‘சம்-ப்ரதாயம்’ என்றால் நம் முன்னோர்களாலே நன்கு தொகுத்து தரப்பட்டது என்று பொருள். இப்போது சாஸ்திரத்திற்கும், சம்பிரதாயத்திற்கும் உள்ள வேற்றுமையை பார்க்கவேண்டும். சாஸ்திரம் ஏகப்பட்ட சடங்குகளின் வழியாக ஒருவரின் வாழ்க்கையைக் கட்டமைக்கிறது. அந்தக் கட்டமைப்பு இன்றைய வாழ்வுமுறைக்கு சாத்தியப்படாது.  

அதனால் சம்பிரதாயம் நமக்கு சொல்லக் கூடியதை நாம் பின்பற்றுகிறோம். அது சரியா என்று கேட்டால் அவையும் சரி தான். ஏனென்றால் தைத்திரிய உபநிஷத் ‘உன் தந்தையர்கள் செய்ததை பின்பற்று, அந்த வழியில் நீயும் செல்’ என்கிறது. இதுவே சம்பிரதாயம். பொதுவாக ஶ்ரீவைணவர்கள் அதற்கே முதன்மை அளிக்கின்றனர். மணவாளமாமுனிகள் இதை 

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாதே

என்று உபதேச ரத்தினமாலையில் சொல்கிறார். அதே சமயம் விசிஷ்டாத்வைத்ததை அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பர்களுக்கு அது எப்போதும் தன் வழியைத் திறந்தே வைத்துள்ளது.

தத்துவத்தில் அனேக பள்ளிகள் உள்ளன அவ்வாறு இருக்க, ஒருவர் ஏன் விசிஷ்டாத்வைத்ததை தெரிந்துகொள்ள வேண்டும்?

சுருக்கமாக இவ்வாறு சொல்லலாம். பிற தத்துவப் பள்ளிகள் ஞானத்தை, அறிதலை முதன்மையாகச் சொல்கிறது. விசிஷ்டாத்வைதம் அதிலிருந்தும் முக்தனை விடுவித்து சமர்ப்பணத்தை(சரணாகதியை) முன்வைக்கிறது. அதனால் உலகியலிலிருந்தும் ஞானத்திலிருந்தும் அவன் விடுபடுகிறான். அதற்காக அவன் தன் கடமையை செய்யாமல் வெறுமனே இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அவன் செய்யும் செயல் அதனால் அவன் அடையும் ஏற்ற இறக்கங்கள் என அனைத்தும் பரமாத்மாவால் செய்யப்படுவதே, அதனால் அதன் விளைவும் அவனையே சார்ந்தது என்று சொல்லி அவனை அனைத்து இன்ப துன்பங்களிலிருந்தும் விடுபட்டவனாக முக்தனாக ஆக்குகிறது விசிஷ்டாத்வைதம்.

ஓர் வைணவன் எத்தனை தூரம் கர்மாவையும், ஞானத்தையும் பின்பற்ற வேண்டும் எப்போது சரணாகதியை மட்டும் நினைக்க வேண்டும்?

ஒருவர் உலகத்தில் கர்மாவை, தன் செயலை செய்யாமல் இருக்கமுடியாது. கர்மாவும், செயலும் பரமாத்மாவால் அளிக்கப்பட்டவை. அவற்றில் உறைந்திருப்பவனும் அவனே என்று நினைக்கவேண்டும். அப்போது அந்த செயல்கள் செவ்வனே செய்யப்படும் போது அது அவனுக்கான அர்ச்சனையாகத்தானே இருக்கும். அதுவே நாம் அவனுக்குச்செய்யும் அர்ப்பணம். இவ்வாறு பக்தன் நினைப்பான் என்றால் அது ஞானத்தை நோக்கி அவனைச் செலுத்துகிறது. ஞானத்தை அறிந்து அவற்றிலும் அவனையே காண்பவன் தன்னளவில் முக்தியை நோக்கி சரணாகதியை நோக்கி செல்கிறான். விசிஷ்டாத்வைதம் எவற்றையும் துறந்து மற்றவற்றை பற்றச் சொல்லவில்லை, எவர் எதில் இருக்கிறாரோ அவற்றிலிருந்துகொண்டே முக்திக்கான வழியை முக்தியை அடைமுடியும் என்றே சொல்கிறது. 


விசிஷ்டாத்வைதம் கூறும் பக்தி பற்றி சொல்லுங்கள்?

பக்தி உலகில் எங்கும் நிறைந்திருக்கிறது. உலகில் எதனிடமாவது பக்தி செலுத்தாமல் ஒரு மனிதர் கூட இல்லை. ஒருவர் தன் மனைவிக்குப் புடவை வாங்கித்தருகிறார் என்று வைத்துக்கொள்வோம், அதுவும் பக்தி தான். இன்னொருவரின் நன்மைக்காக செய்யப்படும் செயல் அனைத்தும் பக்தி தான். ஆனால் இது ‘இக பக்தி’ என்று கூறப்படுகிறது. இது செயல்கள் மூலம் வரும் நன்மைகளை எதிர்பார்த்துச் செய்வது. மனைவியை மகிழ்விக்க புடவை வாங்கித் தருவதில் நமக்கான நன்மையும் உள்ளே உள்ளது. அவ்வாறு பிறருக்கு செய்யும் நன்மையிலும், நம்முடைய செயல், கடமையை செய்வதிலிருந்து அடையும் பயன், பலன் இவற்றை எதிர்பார்க்காமல் செய்யும் போது அது பரமாத்மாவிற்கு செய்யும் கைங்கர்யமாகிறது, பக்தியாகிறது. 

வைணவன் என்பன் யார்?

‘பர துக்க துக்கித்வம்’ என்றால் பிறர் துன்பத்தை தனதாகக்கொள்பவன். பிறர் என்றே இல்லாமல் இருப்பவன். ஏனெனில் இந்த உலகமாக இருப்பவனும் அவற்றில் உயிராக இருப்பவனும் பரமாத்மாவே. மரம், புழு, பூச்சி என அனைத்து உயிருக்குள்ளும் அவனே உறைகிறான். 

ஒர் உயிர் பூமியில் மனிதனாகப் பிறப்பது என்பது அரிதினும் அரிது. ஶ்ரீபாஷ்யத்தில் பஞ்சாக்னி வித்தை என்று வருகிறது. அதாவது மேகங்களில் ஆத்மா உறைகிறது. அது மழை நாட்களில் மேகங்களோடு உரசி மழையாக பூமியில் பெய்கிறது. பூமியில் பெய்த நீரானது நெல்லாக மாறி ஆணின் உடலில் சேர்கிறது. அங்கிருந்து பெண்ணிடம் சேர்ந்து உயிராக மனிதர்கள் பிறக்கிறார்கள் என்று சொல்கிறது. 

இதில் எத்தனை சதவிகிதம் ஓர் மனித உயிர் பிறக்க சாத்தியம் இருக்கிறது என்று பாருங்கள். மழை சரியான காலத்தில் பூமியில் பெய்ய வேண்டும், அம்மழை நெல் விளையும் நிலத்தில் பெய்ய வேண்டும். அந்நீரானது தண்டாகவோ இலையாகவோ மாறாமல் நெல்லாக மாறவேண்டும். அந்நெல் சரியான வாலிப வயதில் இருக்கும் ஆணிடம் சேர்ந்து அவன் சரியான சமயத்தில் தன் மணைவியை அணையவேண்டும். அப்போதும் எத்தனை லட்சம் அணுக்களிலிருந்து ஓர் அணு உயிராக மாறும் வாய்ப்பை அடைகிறது. இவ்வாறாக ஓர் உயிர் பூமியில் பிறக்க பரமாத்மாவின் எத்தனை பெரிய கருணை வேண்டும். அப்படிப்பட்ட பிறவியை யார் ஒருவர் வீணாக்காமல் முக்தி அடைய செலவிடுகிறானோ அவனே வைணவன்.

சந்திப்பு - அனங்கன்


முத்து ஶ்ரீநிவாசன்  நூல்கள்:

  1. ஶ்ரீபாஷ்யம் - செம்பகா பதிப்பகம் (2011)
  2. கத்யத்ரியம் - செம்பகா பதிப்பகம் (2020)
  3. வேதார்த்த சங்க்ரஹம் - செம்பகா பதிப்பகம்(2005)