Sunday, 3 September 2023

ஆடல் - 4: செவ்வேள் ஆடல் - தாமரைக்கண்ணன், புதுச்சேரி


சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மும்
கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்து எம்மை நன்றும் அருள்செய்வார்
அந்தண் வடுகூரில் ஆடும் அடிகளே

 - திருஞானசம்பந்தரின் வடுகூர் தேவாரம் 

கணநாதர்

திருஞானசம்பந்தருக்கும் சுந்தரருக்கும் இடைப்பட்ட காலத்தில் கணநாதர் என்னும் சிவனடியார் சீர்காழியில் வாழ்ந்தார். பெரியபுராணம் கூறும் அறுபத்திமூன்று நாயன்மார்களுள் இவரும் ஒருவர். கணநாதர் சீர்காழி தோணியப்பர் ஆலயத்திற்கு திருத்தொண்டுகள் செய்து வந்தார்.  நந்தவனத்தை பராமரிப்பது, இறைவனுக்கு மலர் தொடுத்து அளிப்பது, கோவிலை தூய்மை செய்வது, திருமஞ்சன சடங்குக்கு உதவுதல் போன்ற  கோவில்பணிகளுடன்  பதிகங்களைப் பாடவும், பதிகங்களை ஏட்டில் இருந்து ஏட்டிற்கு படி எடுக்கவும் செய்தார். அப்பணிகளுக்கு தன்னுடன் சிவனடியார்களையும் ஆட்படுத்தினார். கணநாதர் சீர்காழி தோணியப்பரை வழிபட்டதோடு திருஞானசம்பந்தரையும் நாள்தோறும் மூன்றுபொழுதும் அர்ச்சனை செய்து வழிபட்டார். 

 கணநாதர் பதிகங்கள் பயிற்றுவைத்தல், தாராசுரம்

இப்பெரும் சிறப்பு எய்திய தொண்டர்தாம் ஏறுசீர்வளர்காழி
முப்பெரும் பொழுது அர்ச்சனை வழிபாடு மூளும்  அன்பொடுநாளும்
ஒப்பில் காதல்  கூரும் களிச்சிறந்திட ஒழுகினார் வழுவாமல் 
மெய்ப்பெரும் திருஞானபோனகர் கழல் மேவிய விருப்பாலே

 -   பெரியபுராணம்

பெரிய புராணம் கூறும் கணநாதர் வாழ்விலிருந்து இரு தகவல்களை நாம் விரிவாக்கிப் பார்க்கலாம். முதலாவது, தேவார பாடல்கள் தொகுப்பாக்கக் காலத்திற்கு முன்பிருந்தே  பதிகங்களுக்கு இருந்த செல்வாக்கை அறியமுடிகிறது. பதிகங்களை ஆலயத்தில் பாடும் மரபும், பதிகங்களை ஏட்டில் எழுதி வைத்தல் இவை இரண்டுக்குமான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி இதன்மூலம் அறியப்படுகிறது. 


ஆலயங்களில் பதிகங்களைப் பாடுதல், திருப்பதிய விண்ணப்பம் எனப்பட்டது. பல்லவர்களின் காலத்திலேயே இது துவங்கிவிட்டதை மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் கல்வெட்டு மூலம் அறிந்துகொள்ளலாம். சோழ மன்னர்களில் முதலாம் ஆதித்தன் துவங்கி அதிராஜேந்திரன் வரை ஆலயங்களில் திருப்பதிக விண்ணப்பம் நடந்ததை கல்வெட்டுகளில் அறியமுடிந்தாலும், ராஜராஜன் காலம் அதன் உச்சமாக இருந்தது.  இதுதொடர்பான ராஜராஜன் ஆட்சிக்கால கல்வெட்டுக்கள் 16 இடங்களில் காணப்படுகின்றன. சோழர் ஆட்சியில் கண்பார்வை அற்றவர்களுக்கு  பதிய விண்ணப்பம் பாடும் பணி ஆலயங்களில் வழங்கப்பட்டதை இரண்டு இடங்களில் கல்வெட்டுகள் சொல்கின்றன.   பதிகங்கள் அரசர்களின் கொடையால் ஆலயங்களில் பாடப்பட்டன  என்பதோடல்லாமல், மக்களிடையே அவற்றின் செல்வாக்கும் மிகுதியாக இருந்திருக்கிறது.

அப்பர், மாணிக்க வாசகர், சம்பந்தர் - நஞ்சன்கூடு கற்சிற்பம்

 தேவாரப்பதிகங்களின் பரவல்  மற்றும் செல்வாக்கு 

பதிகப்பாடல்களை நேரடியாக கல்வெட்டில் பொறித்து வைப்பது,  பதிகங்களில் உள்ள பெயர்கள், பதிகம் பாடியவர்கள் தொடர்பான பெயர்களை பொதுமக்கள் சூட்டிக்கொள்வது, ஊர்களுக்கு பதிகங்கள் தொடர்பான பெயர்களைச் சூட்டுவது ஆகியவை வெகுகாலமாக வழக்கத்தில் இருந்திருக்கின்றன. இவற்றில் தேவார மூவரின் பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பது இன்றளவும் தமிழ் மக்களிடம் வழக்கமாகத் தொடர்கின்றது .

மூவர் முதலிகள், தென்பரங்குன்றம் குடவரை

சம்பந்தரின் ‘வாழ்க அந்தணர்’ என்னும் பதிகப்பாடல், கோவிந்தப்புத்தூரில் உள்ள ஆலயத்தின் மூன்றாம் இராஜேந்திரசோழனின் கல்வெட்டு ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. சம்பந்தர் பாடிய பதிகங்களில் "ஆணை நமதே"  என்று நான்கு இடங்களில் இடம்பெறுகின்றது, இதையொட்டி நம்பியாண்டார் நம்பி தனது ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையில் ‘ஆணை நமது என்ன வல்லான்’ என்று சம்பந்தரை அழைக்கிறார். சம்பந்தரின் இந்த ‘ஆணை நமதென்ற பெருமாள்’ என்னும் பெயரைக்கொண்ட வெவ்வேறு நபர்கள்  பிரான்மலைக் கல்வெட்டிலும், விராச்சிலை, நார்த்தாமலை கல்வெட்டுகளிலும் இடம்பெறுகின்றனர். சம்பந்தாண்டான், சிவஞான சம்பந்தத் தலைக்கோலி என்ற பெயர்களையும் கல்வெட்டுகளில் காணமுடிகிறது.  சம்பந்தருக்கு பரசமயக்கோளரி என்ற பெயர் உண்டு, ஆச்சாள்புரக் கல்வெட்டில் பரசமயக்கோளரி நல்லூர் என்ற ஊர் குறிக்கப்பட்டுள்ளது. முதல் குலோத்துங்கனின் 49ம் ஆண்டு திருமாணிக்குழி கல்வெட்டில் ‘ஸ்ரீ காழி நாடுடையான் திருமடம்’ என்ற சம்பந்தருடைய பெயர்கொண்ட மடம் ஒன்று குறிப்பிடப்படுகிறது.

அடியார்கள் வழிபாட்டு நிலைக்கு உயர்தல்

சம்பந்தருடைய பதினாறாவது வயதில் நடந்த அவருடைய திருமணத்தன்றே  நல்லூர் பெருமணம் ஆலயத்தில், சம்பந்தரும் அவரது உறவினரும், பிற அடியார்களும் இறைவனோடு கலந்துவிட்டனர்.  அதற்குப் பின்னர் சீர்காழியில் சம்பந்தரும் வழிபாட்டு நிலைக்கு உயர்த்தப்பட்டார் என்றே கணநாத நாயனார் புராணத்தின்வழி பெரியபுராணம் சொல்கின்றது.

அடியார்கள், மடங்களில் இருந்து ஆலய வழிபாட்டு நிலைக்குச் செல்வது இயல்பாக இருந்திருக்கிறது. பெரியபுராணம்  அப்பர், சம்பந்தர் காலத்தில் பல மடங்கள் இருந்ததைச் சொல்கிறது. திருஞானசம்பந்தர் பெயரிலான பல மடங்கள் தமிழகத்தில் இருந்துள்ளன. குலோத்துங்கன் காலத்தில் நடந்த குகையிடிக்கலகத்தில் பெரும்பாலானவை மறைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.    

பல்லவர் காலத்தின் இறுதியில் இருந்தே செப்புத்திருமேனிகள் தமிழகத்தில் கிடைக்கின்றன.  சோழர் தலைநகரான தஞ்சை பெரியகோவில்  ராஜராஜேச்சுரத்தில் அந்தக்கோவிலுக்கு அளிக்கப்பட்ட சிலைகளைப் பற்றிய துல்லியமான தகவல்கள் அந்தக்கோவிலின் கல்வெட்டுகள் வாயிலாகக் கிடைக்கின்றன. சிவபெருமானின் திருமேனிகள் இராஜராஜனின் காலத்திற்கு முன்பிருந்த சோழர்களால் செய்யப்பட்டிருந்தாலும், சண்டேஸ்வரருக்கும், தேவார மூவர்களான  திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோருக்கும் செப்புத்திருமேனிகள் செய்து கோவிலுக்கு கொடை அளிக்கப்பட்ட செய்தி ராஜராஜன் காலத்தில் தான் நமக்குக் கிடைக்கின்றது. பராந்தகன் காலத்திலேயே தேவார மூவருக்கு உலோகத் திருவுருவங்கள் எடுக்கப்பட்டதற்கு திருவிடைமருதூர் கல்வெட்டில் குறிப்பு ஒன்று உள்ளதாக குடவாயில் பாலசுப்ரமணியன் கூறுகிறார்.   திருவெண்காடு முதலான பேராலயங்களில் சோழ அரசர்களும், அவருடைய குடும்பத்தினரும், அவரது படைத்தலைவர்களும், அவர்கள் அரண்மனைப்பணியாளர்களும் கூட செப்புத்திருமேனிகள் செய்தளித்த கல்வெட்டுச்செய்திகள் கிடைக்கின்றன. 

முதல் குலோத்துங்கன் அரசின் படைத்தலைவனாகிய மனவிற்கூத்தன் காலிங்கராயன் என்பவர் திருஞானசம்பந்தர் மீது அதீத பற்றுள்ளவர். இவருக்கு நரலோக வீரன் என்ற பெயரும் உண்டு. சிதம்பரம் ஆலயத்தின் உள்ளேயே திருஞானசம்பந்தருக்குத் தனி ஆலயம் எடுத்திருக்கிறார், சம்பந்தர் பதிகங்களைப்பாட மண்டபம் ஒன்றைக் கட்டியிருக்கின்றார். அழகிய கல்வெட்டுப் பாடல்கள் மூலம் இச்செய்தி அறியப்படுகிறது. 


தென்வேந்தன் கூனிமிர்த்த செந்தமிழர் தென்கோயில்
பொன்மேய்ந்து திக்கைப் புகழ்வேய்ந்தான் - ஒன்னார்க்குந் 
குற்றம் பல கண்டோம் கோளிழைக்கும் வேற்கூத்தன்
சிற்றம்பலத்திலே சென்று 

இவர் செப்பேட்டில் தேவாரம் பொறித்தும் பதிகங்களை அழியாது காத்திருக்கின்றார்.

திருஞானசம்பந்தரின் வடிவங்கள்

சம்பந்தருடைய உருவ வடிவங்கள் குறித்து உலோக வார்ப்புச் சிலைகள் தவிர நமக்கு மூன்று விதமான சான்றுகள் கிடைக்கின்றன. அவை தமிழக ஆலயங்களில் உள்ள ஓவியங்கள், கல் சிற்பங்கள், சுதை சிற்பங்கள். தேவார மூவர் ஓவியங்களில்  காலத்தில் மூத்த ஓவியமாக நமக்குக் கிடைப்பது சுந்தரர் ஓவியம் மட்டுமே. தஞ்சை பெரியகோவிலில் உள்ள சாந்தார அறையில் இரு இடங்களில் சுந்தரர் வரையப்பட்டுள்ளார். கயிலைக்கு வெள்ளை யானை ஏறி சேரமான் பெருமாளுடன் செல்லும் ஓவியம் ஒன்றும், சிவபெருமான் முதியவராக வந்து சுந்தரரது திருமணத்தை நிறுத்தி வழக்குரைத்த ஓவியம் ஒன்றும் சாந்தார அறை ஓவியத்தொகுதிகளில் உள்ளன. அங்குள்ள ஓவிய மிச்சங்களில் காணப்படும் சுந்தரர் உருவம், சோழர்கால உலோக வார்ப்புச்சிலைகளுடன் ஒப்பிடத்தகுந்ததாக இருக்கிறது. இவை அல்லாமல் நாம் காணும் சுவர் ஓவியங்கள் நாயக்கர்கள் மற்றும் மராட்டியர் காலத்தைச் சேர்ந்தவையே. சுந்தரர் மராட்டியர் உடைகளை அணிந்து நிற்கும் ஓவியம் ஒன்றையும் பார்க்க முடிகிறது.


சுந்தரர், தஞ்சை பெரியகோயில் சாந்தார அறை ஓவியம்

மராட்டியர் உடையில் சுந்தரர்

சம்பந்தர் ஓவியங்களில் முக்கியமானவை என  திருக்களம்பூர், திருப்புடைமருதூர் மற்றும் ஆவுடையார்கோவில் ஆகிய இடங்களைச் சொல்லலாம். திருவாரூர் ஆலய தேவாசிரிய மண்டபத்தில் தேவார மூவர் சிலைகள், திருவிழாவின்போது  திருவீதி உலாவாக எடுத்துச்செல்லப்பட்டமை ஓவியமாக வரையப்பட்டுள்ளது.  

 மூவர் முதலிகள்  உலாச் செல்லும் தேவாசிரிய மண்டபஓவியம், திருவாரூர் 

சிதம்பரத்தில் உள்ள முதல் குலோத்துங்கன் கல்வெட்டொன்று ஞானசம்பந்தருக்குப் பொன் திருமேனி செய்து, அவருக்குப் பால் உணவு நிவேதித்ததைச் சொல்கிறது. மூன்றாம் இராஜராஜன் காலத்தில் ஆளுடைய பிள்ளையார் (சம்மந்தரின் குழந்தை வடிவம்) திருமேனி ஊர்வலம் செய்தது  பிற ஆலயங்களிலும் சம்மந்தர் வழிபாடு பரவ காரணமாகியது.

குழந்தை ஞானி

இந்திய மரபில் ஒரு கதைப்பாணி உள்ளது. பக்தன் நெடுங்காலம் தனக்குக் குழந்தை பிறக்க பேறு இல்லை என்று வருந்துகின்றான். இறைவனை வேண்டுகின்றான். கடவுள் அவனுக்கு இரண்டு தெரிவுகள் அளிப்பார். ஒன்று நீண்ட ஆயுள் கொண்ட அறிவற்ற குழந்தை,  அல்லது    குறைந்த ஆயுள்  கொண்ட அறிவில் சிறந்த குழந்தை. இவற்றில் பக்தர்கள் பெரும்பாலும் குறையாயுள் கொண்டாலும் அறிவிலும் பக்தியிலும் சிறந்த குழந்தை தான் வேண்டும் என்றே கேட்பார்கள். குறையாயுள் கொண்ட குழந்தை பதினாறு வயதுவரை மட்டுமே வாழும். மார்க்கண்டேயன் கதை போன்ற வேறு சில கதைகளும் இதே பாணியிலானவை. திருஞானசம்பந்தரின் வாழ்நாள் பதினாறு ஆண்டுகள் என்று சொல்வதை இங்கு இணைத்துப்பார்க்கலாம். குழந்தை ஞானம் மிக்கது, எனவே நீண்ட ஆயுள் இல்லை என்ற கருத்தை வலுப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது. 

அறிவாற்றல் மிக்க சிறுகுழந்தை என்ற உருவகத்தை உலகமெங்கிலும் உள்ள கதைகளிலும் நேரிலும் பார்க்கமுடியும். இந்திய மரபில் துருவன் பக்தியில் சிறந்த சிறுவன், நசிகேதஸ் தர்மதேவனை கேள்விகளால் துளைத்தவன். வேத கதைகளில் சிறுவனான ஆருணி அறிவில் சிறந்தவன். வழக்கத்துக்கு மாறான, இயல்பை விஞ்சிய அறிவாற்றல் அல்லது திறமை கொண்ட குழந்தையை குழந்தை மேதை (Child Prodigy) என்கிறது அறிவியல். 

இசை மேதை மொசார்ட் ஒரு குழந்தை மேதை.  தமிழ் இலக்கியங்களில் தலையாலங்கானத்துப் போரில் பாண்டியன் சிறுவயதாகையிலேயே பகைவரை வென்றவன் என்று பாடப்படுகிறான், இது வீரத்தைப் பாடியது. சோழ மன்னனான கரிகாலன் இளவயதிலேயே இருசாராரிடத்தில் வழக்கை விசாரித்து நியாயத்தீர்ப்பு வழங்கியவன் என்ற குறிப்பு உள்ளது, இது இளம்வயதில் அறிவாற்றல் மிகுந்தவன் என்னும் கருத்தை முன்வைக்கின்றது. இதையொட்டி மிகச்சிறுவயதில் ஞானம் மிகுந்த குழந்தையாக திருஞானசம்பந்தரை தமிழக வரலாற்றில் காண்கிறோம். 

திருஞானசம்பந்தர் புகழ்பெற காரணமான இறைவனே நேரில் வந்து பால் கொடுத்த கதைக்கும் முன்னுதாரணம் சைவத்தில் உண்டு, உபமன்யு என்னும் முனிகுமாரன் பால்வேண்டி அழ சிவபெருமான் பாற்கடலையே அவனுக்கு அளிக்கின்றார். இதைத் திருஞானசம்பந்தரே  பாடியிருக்கின்றார்.

ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணி

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது. சிற்பக்களஞ்சியமான இந்தக்கோவில் இரண்டாம் இராஜராஜ சோழ மன்னனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஒட்டக்கூத்தர் இந்த மன்னனின் காலத்தில் வாழ்ந்திருக்கிறார். இராஜராஜனோடு அவருக்கு முன்பிருந்த இரு சோழ அரசர்களையும் சேர்த்து மூவர் உலா பாடியிருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ அரசின் முக்கியப்புலவர், அவர் இயற்றியவை கோவை, உலா, பிள்ளைத்தமிழ், பரணி போன்ற சிற்றிலக்கியங்கள். கம்ப இராமாயணத்தின் இறுதிப்பகுதியாக உத்தரகாண்டம் எழுதியவர் ஒட்டக்கூத்தர் என்பது நம்பிக்கை. 

சோழ மன்னர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டும் அவர்களை வாழ்த்தியும் ஒட்டக்கூத்தர் தனது பெரும்பாலான நூல்களைச் செய்திருக்கிறார். இவரது நூல்களில் இருந்தே  நமக்கு அதிகப்படியான சோழர் சரித்திரச் செய்திகள் கிடைக்கின்றன.  குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் இயற்றியதன் மூலம், பெரியாழ்வார் தனது பிரபந்தங்களில் பாடிய பிள்ளைத்தமிழை, தனித்த இலக்கியமாக ஒட்டகூத்தர் மாற்றியிருக்கிறார். ஒட்டக்கூத்தர் கவிச்சக்கரவர்த்தி கவிராட்சதன் ஆகிய பட்டங்களைப் பெற்றிருந்தும்கூட, அதிகமும் மன்னர்களைப் பாடியதாலும், கடினமான மொழிநடையாலும் இவரது நூல்கள் பெரிதும் மக்களிடையே சென்றடையவில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஒட்டக்கூத்தர் நூல்களில் முக்கியமானது தக்கயாகப்பரணி. 

பரணி இலக்கியம் போரினைப் பாடும் நமது புறத்திணை மரபின் நீட்சி. "வெங்களத்தில் குருதிப் பேராறு பெருகும் செங்களத்து ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே "  என்று பரணிக்கு இலக்கணம் சொல்கிறது பன்னிரு பாட்டியல். இலக்கண விளக்கம் என்ற நூல்  "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி " என்கிறது. 

பரணி இலக்கியத்துள் கொப்பத்துப்பரணி காலத்தால் முந்தையது. ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி இவ்வகை பரணிகளுள் முன்மாதிரியாகத் திகழ்வது. இவை யாவும் அரசர்களின் போரை முன்வைத்து இயற்றப்பட்டவை. இந்த இரண்டிற்கும் பின்னால் எழுதப்பட்ட தக்கயாகப்பரணி அரசனின் நிஜமான போரைப்பாடாமல், புராணத்தில் கடவுள் செய்த போரைப் பாடுகிறது. தக்கயாகப்பரணிக்கு பிறகு எழுதப்பட்ட பரணி நூல்கள் கடவுள் செய்த போர்குறித்தோ அல்லது  அஞ்ஞ வதைப்பரணி போன்று அறியாமை அழிந்து ஞானம் வென்றதைக் குறித்தோ எழுதப்பட்டன. பெரும்போர்களின் காலம் ஓய்ந்துபோனதும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

 தக்கன் யாகம் அழிக்கும் வீரபத்திரர், தாராசுரம்

தக்கயாகப்பரணி வீரபத்திரக்கடவுளைத் தலைவனாகக்கொண்டு பாடப்பட்டது. தக்கன் (தக்ஷன்) தனது வேள்விக்கு சிவபெருமானை அழைக்காமல் அவமதிக்கின்றான். அவனை தண்டிக்க சிவன் தனது அம்சமாகிய வீரபத்திரக்கடவுளை அனுப்புகிறார். வேள்வியில் அமர்ந்த தேவர்களை எல்லாம் வென்று துரத்தி, தக்கனை  தலைகொய்து கொன்றுவிடுகிறார் வீரபத்திரர். பின் அவனது மனைவியின் வேண்டுதலுக்கு இரங்கி ஆட்டின் தலையை தக்கனுக்குப் பொருத்தி உயிர் அளிக்கிறார் சிவன். 

தேவாரத்தில் தக்கன் வேள்வி அழிந்தது பல பதிகங்களில் இடம்பெறுகிறது, மாணிக்கவாசகர் நேரடியாகவே 'விண்பட்ட பூதப்படை வீரபத்திரரால் புண்பட்ட வாபாடி பூவல்லி கொய்யாமோ' என்கிறார். கந்தபுராணத்தில்  தக்கனின் வேள்வி அழிவு கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் வீரபத்திர வடிவத்தை தனியே பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் பரணி பாடியிருக்கிறார். ஒட்டக்கூத்தர் சைவ சமயத்தைச்சேர்ந்தவர். தக்கயாகப்பரணி வாயிலாகவே சம்ஸ்கிருத நூல்களும், சாக்த மரபின் நூல்களும் பயின்றவர் கூத்தர் என்று அறிய முடிகிறது. தாராசுரம் ஆலயத்தில் தக்கன் தலை பறித்த காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. மும்முகம் கொண்ட வீரபத்திரரின் சிலையும் தமிழகத்தில் இங்குதான் முதலில் நிறுவப்படுகிறது. வீரசைவ மரபின் லிங்காயத்தவர்களுக்கு வீரபத்திரர் மிக முக்கியமான கடவுள். வீரசைவ மடம் ஒன்று கும்பகோணத்தில் நெடுங்காலம் இருந்து வருகிறது.    நாயக்கர் காலத்தில் தமிழகத்தில் அக்கினி வீரபத்திரர் மற்றும் அகோர வீரபத்திரருக்குப் பெரும் சிலைகள் வடிக்கப்பட்டன.

தக்கயாகப் பரணி   கடவுள் வாழ்த்துப் பகுதியானது பைரவர், சிவபெருமான், விநாயகர், முருகன், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரையும் காப்பாகக் கொண்டு சோழனின் ஆட்சி செழிக்க வேண்டும் என்று துதித்துத் துவங்குகிறது.

வழுவேறு குடகூடல் வடஆறு  
வழிமாற மணலால் ஓரோர் 
கழுவேறும் அமண்மூது கருமாள
வருமீளி கழல் பாடுவோம் 

எருதோடு கலையோடு சிலையோட 
மலையோட இபமோடவே 
விருதோடு பொருதேறு புலிநேமி 
கிரிசூழ விளையாடவே     

முருகனின் அவதாரம் திருஞானசம்பந்தர் 

கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து கடை திறப்பு, காடு பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது ஆகிய பரணியின் உறுப்புகள் உள்ளன. அடுத்ததாக வரும் கோவில் பாடியது பகுதியில் காளியிடம் சரஸ்வதி திருஞானசம்பந்தர் சமணரை வாதில் வென்ற கதை 52 பாடல்களில் முழுமையாகச் சொல்லப்படுகிறது. தக்கன் வேள்வி அழியும் கதையில் திருஞானசம்பந்தர் வருவதற்குத் தேவை ஏதும் இல்லாவிட்டாலும் ஒட்டக்கூத்தர் திருஞானசம்பந்தர் மீதுள்ள பற்றுதல் காரணமாக அவரது கதையை இதில் சேர்த்திருக்கிறார். அதன் உச்சமாக திருஞானசம்பந்தர் முருகனுடைய அவதாரம் என்றும் இந்தப்பகுதியில் சொல்கிறார். 

முதல் பாடலில் கலைமகளிடம் காளி திருஞானசம்பந்தரது கதையைச் சொல்லும்படி கேட்கிறாள். இரண்டாவதில் கலைமகள் அதை ஒப்புக்கொண்டு துவங்குகிறாள். இரண்டுமே வள்ளி கணவனான முருகன், சம்பந்தனாக வந்து சமணரை வாதில் வென்ற செய்தியைச் சொல்கின்றன.  

வருகதை தெய்வமகள் என்மருமகள் வள்ளி வதுவை 
வனமகிழ்பிள்ளைநிமுருகன் மதுரையில் வெல்லும் இனிது 
ஒருகதை சொல்லு தவள ஒளிவிரி செவ்வி முளரி 
ஒளிதிகழ் அல்லி கமழும் ஒருமனை வல்லி எனவே 

எழுமலை சொல்லும் அசனி இளமயில் வள்ளிகணவன்
இறைமலை வில்லி புதல்வன் இகல்மகள் ஐயைகளிறு
கழுமலம் உய்ய விரவு கலியுக எல்லை பொருத
கதைகளில் உள்ளது அமணர் கழுமிசை கொள்வதிதுவே


அருளாளர்களை, கவிஞர்களை, ரிஷிகளை கடவுள் அவதாரமாக அல்லது முன்பிருந்த அருளாளரின் அவதாரமாகப் பார்க்கும் மரபு இந்து மதத்தில் உண்டு. வியாசரை விஷ்ணுவின் அம்சம் என்றும் வால்மீகியை நாரதர் அம்சம் என்றும் சொல்வதுண்டு. நம்மாழ்வார் விஷ்ணுவின் படைத்தலைவரான விஷ்வக்ஷேனரின் அம்சம் என்பது வைணவர்களின் நம்பிக்கை.   சைவத்தில் , சிவபெருமான் பிறப்பும் இறப்புமற்றவர் எனவே அவதாரம் என்னும் கருத்து அங்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஆனாலும் சிவனின் மனைவியான பார்வதி பிறவிகள் எடுத்த கதை உண்டு. இதுவுமன்றி திருவிளையாடல் புராணத்தில் சிவதம்பதியான சுந்தரேசருக்கும் மீனாட்சிக்கும் பிறக்கும் குழந்தையான உக்கிரகுமார பாண்டியன் முருகனின் அவதாரம் என்றே கூறப்பட்டுள்ளது.  

சூர் முதல் தடிந்த தங்கள் தோன்றலே இவன் என்று எண்ணிக் 
கார் முக மயிலும் வேலும் கை விடாக் காக்கு மா போல் 
வார் முக முலையினாரும் வடிக் கணும் மருங்கு மொய்ப்பக் 
கூர் முக வேலான் இன்ன கொள்கையன் ஆகத் தாதை

தந்தை மேல் ஆடும் முருகன், வைத்தீஸ்வரன் கோவில்

இவ்வாறு பன்னிரண்டாம் நூற்றாண்டில் சம்பந்தர் முருகனின் அவதாரம்  என்னும் கருத்து ஒட்டக்கூத்தரால் பதிவு செய்யப்படுகின்றது. ஒட்டக்கூத்தருக்கு பின்வந்தவரான  முருகனின்  தீவிர பக்தரான  அருணகிரிநாதரும் திருஞானசம்பந்தர் முருகனே என்று திருப்புகழில் பல இடங்களில் பாடுகிறார். மாசிலாமணி தேசிக மூர்த்திகளின் திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழும் இந்தக்கருத்தையே கூறுகின்றது. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த முருக பக்தரான அழகிய சிற்றம்பலக்கவிராயர் தான் இயற்றிய கீர்த்தனை ஒன்றில் முருகனை 'சம்பந்தமூர்த்தியாகவே அவதாரஞ் செய்தோரே' என்று பாடுகிறார். அதே காலகட்டத்தைச் சேர்ந்த  நீலகண்ட தீட்சிதர் செய்த சம்ஸ்கிருத நூலான சிவலீலார்ணவம்  சம்பந்தரை முருகனின் அவதாரம் என்கிறது. அதே சமயம் இந்தக்கருத்து அனைத்துப் புலவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. குமரகுருபரர் முதலியோர் சம்பந்தரை அருளாளர் என்னும் நிலையில் மட்டுமே வைக்கின்றனர், தெய்வ நிலைக்கு உயர்த்துவதை வலியுறுத்தவில்லை.

புத்தர் அமணர்கள் மிகவே கெடவே,
தெற்கு நரபதி திருநீறு இடவே,
புக்க அனல் வயம் மிக ஏடு உயவே,......உமையாள்தன்
புத்ரன் என இசை பகர்நூல்,மறைநூல்,
கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்
பொற்ப! கவுணியர் பெருமான் உருவாய் ..வருவோனே!

 -  அருணகிரிநாதர் திருப்புகழ் (நெய்த்த சுரிகுழல் - வயலூர் )  

அன்னை அளித்த ஞானப்பால்

திருஞானசம்பந்தர் இரண்டு வகைகளில் முருகனாக உருவகிக்கப்படுகிறார். அவர் சிவபெருமானிடத்தில் சத்புத்திர மார்க்கம் என்ற நெறியின் வழி பக்தி கொண்டிருந்தார், அதாவது இறைவனை தனது தந்தையாக  பாவிப்பது.  அவர் உமையிடம் பால் அருந்திய கதை அவர் கடவுளின் குழந்தை என்னும் கருத்தை வலுப்படுத்துகிறது. சமயக்குரவர் நால்வரில் பிற மூவரும் சிவனருள் பெற்றவர்கள், சம்பந்தர் ஒருவரே  உமையம்மை  வழியே சிவஞானம் அடைகிறார். முருகன் என்னும் தொல்கடவுள் கொற்றவையின் குழந்தையாக மீண்டும் மீண்டும் கூறப்படுவதை இங்கு இணைத்துப்பார்க்க வேண்டும். முருகன் என்னும் தனிக்கடவுள், சைவம் பெருமதமாக ஆகும் முன்பிருந்து சாக்தத்தின் கொற்றவையின் மகன் என்னும் கருத்து இங்கு உள்ளது. பின்னர் சைவம் மேலெழுந்து வரும்போது சாக்தம் அதனுள் செல்கையில் கௌமாரமும் சைவத்தில் இணைகிறது. தாய்வழிச் சமூகத்தின் கூறுகளை முருகனுக்கும் கொற்றவைக்கும் உள்ள தொடர்பில் பார்க்க முடிகிறது. வீரமும் அழகும் மிக்க ஒர் இளமகன் ஆற்றல் மிக்க ஒரு பெண்ணின் மகன் என்பதே முருகன்  கொற்றவைக்கு மகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஞானசம்பந்தர் சிவனடியாராக இருந்தாலும் கதைவழியே பார்வதியின் மடியிலிருந்து பாலருந்திய ஒரு குழந்தை என்னும் படிமம் நமது மரபில் ஆழ ஊன்றப்பட்டிருக்கிறது. 

ஒன்பதாம் நூறாண்டினரான ஆதிசங்கரர் தனது சௌந்தர்யலஹரியில் , உனது கருணையால் முலைப்பால் அருந்திய திராவிட (தமிழ்!) சிசு கவிஞர்களுள் உயர்ந்தவனானான் என்று குறிப்பாக சொல்கிறார். 

தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்றுதயதஃ
பயஃ பாராவாரஃ பரிவஹதி ஸாரஸ்வதமிவ |
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு -ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானா மஜனி கமனீயஃ கவயிதா

(பார்வதி! உன்னுடைய முலைப்பால் அமுது. அதில் சொல் அரசியான கலைமகளே குடிகொண்டிருக்கிறாள். ஏனென்றால் உன்னால் கருணையோடு அளிக்கப்பட்டு, உன் முலைப்பால் அருந்திய திராவிடக்குழந்தை கவிஞர்களில் தலைசிறந்த கவிஞனாக ஆகிவிட்டான்.) 

அன்னை குழந்தை சம்பந்தருக்கு கிண்ணத்தில் பால் அளிக்கிறாள்

16ம் நூற்றாண்டு வீரைக்கவிராச பண்டிதர் செய்த சௌந்தர்ய லஹரி மொழிபெயர்ப்புப்பாடல் இதன் பொருளில் நேரடியாகவே சம்பந்தரைக் குறிக்கின்றது  

தருண மங்கலை உனது சிந்தை தழைந்த பால் அமுதூறினால் 
அருண கொங்கையில் அது பெரும் கவி அலை நெடுங்கடல் ஆகுமோ 
வருண நன்குறு கவுணியன் சிறு மதலை அம் புயல் பருகியே 
பொருள் நயம் பெரு கவிதை என்று ஒரு புனித மாரி பொழிந்ததே

சம்பந்தரின் மதுரை அருட்செயல்கள் 

தனது தந்தையின் தோளில் ஏறி ஒவ்வொரு ஊராக சென்ற சம்பந்தர் அவரே நடந்து செல்ல முற்படுகிறார். சிறுபிள்ளை கால்நோக நடப்பது பொறாமல்  இறைவனால் முத்துச்சிவிகை  திருநெல்வாயில் அரத்துறை என்னும் தலத்தில் சம்பந்தருக்கு வழங்கப்பட்டது என்பது அவர் குறித்த அற்புதக்கதைகளுள் ஒன்று. எனவே சம்பந்தர் ஓவியங்களில் சிவிகையில் செல்பவராகவே காட்சியளிக்கிறார். இளவயதினரான சம்பந்தர் மதுரையில் நிகழ்த்திய அற்புதங்களை ஓவியங்களாக மேற்சொன்ன ஆலயங்களிலும் மதுரை மீனாட்சி ஆலய பொற்றாமரைக்குள ஓவியங்கள் வழியாகவும் அறியலாம். 

சம்பந்தர் சிவிகையில் செல்லுதல், திருப்புடைமருதூர் ஓவியம்
பாண்டிய அரசன் சமண சமயத்தைத் தழுவியிருக்கிறான். அவனது மனைவியான சோழ இளவரசி மங்கையர்க்கரசியார் அவனது படைத்தளபதி குலச்சிறையார் ஆகியோர் சைவ நெறியினர். பாண்டிய நாட்டில் சமணத்தை வீழ்த்தி, சைவத்தை நிலைநிறுத்த சம்பந்தரை அரசியார் அழைக்கின்றார். சம்பந்தர் அவ்வாறே சோழநாட்டில் இருந்து மதுரைக்குச் செல்கின்றார். இரவு சம்பந்தர் தங்கிய மடத்திற்கு சமணர் தீ வைக்கின்றனர், சம்பந்தர் இறையருளால் தப்பி அந்தத்தீ பாண்டியனைப்பற்றுக என்று பாடுகிறார், பாண்டிய மன்னனுக்கு நோய் உண்டாகிறது. சமணர்கள் அரசனை குணப்படுத்த முயல்கிறார்கள், முடியவில்லை.
சம்பந்தர் சமணர்களுடன் அனல்வாதம் செய்தல், திருப்புடைமருதூர் ஓவியம்

சம்பந்தர், சமணர்களுடன் புனல் வாதம் செய்தல், தாராசுரம்

சம்பந்தர் அரசனின் மாளிகைக்கு வருகிறார். இருசாராரும் அரசனின் உடலில் பாதி பாதியாக குணப்படுத்த முயல்கின்றனர், சம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடி பாண்டியன் உடலில் விபூதியைப் பூச அப்பகுதியில் வெப்பு நோய் நீங்குகின்றது. மறுபகுதியை சமணர்களால் நோய் நீக்க முடியாமையால் அரசனின் வேண்டுதலுக்கேற்ப சம்பந்தர் அப்பகுதியையும் குணப்படுத்துகின்றார். சமணர்கள் சம்பந்தரை வாதிட அழைக்கின்றனர், அனல்வாதம் புனல்வாதத்தின் வழி வாதிட முயற்சிக்கின்றனர், சம்பந்தரின் பதிக ஏடு அனல்வாதத்தில் எரியாது நிற்கின்றது, புனல்வாதத்தில் பதிக ஏடு வைகை நீரோட்டத்தை எதிர்த்து மேலேறிச்செல்கிறது, சம்பந்தர் வாதில் வென்று சைவத்தை ஸ்தாபிக்கிறார். சமணர்கள் முன்பே ஒப்புக்கொண்டபடி குலச்சிறையாரால் கழுவேற்றப்படுகிறார்கள். இது பெரியபுராணம் தெரிவிக்கும் சம்பந்தரது மதுரைப்பயணக் கதை. 

சமணர் கழுவேற்றம்

சம்பந்தர் அனல்வாதம் புனல்வாதம் செய்வதையும் பாண்டிய மன்னனது நோய் நீக்கியதையும் ஆலய  ஓவியங்கள் காட்சிப்படுத்துகின்றன. சுதைச்சிற்பங்களிலும், ஓவியங்களிலும் இடம்பெறும் மற்றோரு காட்சி சமணர் கழுவேற்றம். பண்டைய காலத்தில் குற்றம் செய்தவர்களுக்கு கழுவேற்றம் என்ற தண்டனை தரப்பட்டது. கூரான மரத்தடியில் குற்றவாளி அமரவைக்கப்படுவான், எடையால் உடல் கீழிறங்க கழுவின் கூர்முனை உடலில் பயணித்து கழுத்தின் வழி துளைத்து உயிர் பிரியும். சம்பந்தர் சமணர்களை கழுவேற்றினாரா என்பது தமிழ்ச்சமூகத்தில் நீண்ட காலம் நிலவிய விவாதம். சம்பந்தர் மீது சில ஆய்வுகள் தமிழகத்தில் நடந்திருக்கின்றன. ஒன்று  ஆத்திகர்களால் சைவக்கண்ணோட்டத்தில் அவர் நிகழ்த்திய அற்புதங்களை சுட்டிக்காட்டி அமைந்தவையும் ,  இரண்டு  சமணர்களோடு வாதம் செய்து அவர்களை வென்று கழுவேற்றிய கொடும்செயலை கண்டித்து பிறரால் எழுதப்பட்டவை.  சமணர் கழுவேற்றம் குறித்து விழுப்புரம் கோ. செங்குட்டுவன் எழுதிய சமணர் கழுவேற்றம் என்ற நூல் பல கேள்விகளை எழுப்புகிறது, ஒருபோதும் சமணர்கள் ஒப்புக்கொள்ளாத, சைவர்கள் பேசிப்பெருக்கிய கதையாடல் நிகழ்வு தான்  கழுவேற்றம் என்பது அந்தப்புத்தகம் சொல்லும் செய்தி .

சமணர் கழுவேற்றம் 

சம்பந்தர் பாடல்களில் அவர் சமணர்களை வாதிட்டு வென்ற செய்தி மட்டுமே உள்ளது. அவர் காலத்திற்குப் பின்வந்த நம்பியாண்டார் நம்பிதான் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாக தனது பாடல்களில் சொல்கிறார், அவருக்குப் பின்வந்த சேக்கிழார் இயற்றிய பெரியபுராணமோ சம்பந்தர் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றினார் என்றது. சங்க காலம் துவங்கி நீண்ட காலம் வீரகதைப்பாடல்களில் திளைத்திருந்த தமிழ்ச்சமூகம் வீரத்துக்கு முக்கியத்துவம் தரும் புறத்திணைகளை பக்திமரபில் ஏற்றிப்பாடியது. சிவனின் வீரச்செயல்களை வாழ்த்திப்பாடும் விதமாக அதை மாற்றி உருவகித்துக்கொண்டது. அதுபோலவே அகத்திணைக் கருக்களை இறைவன் இறைவி காதலாகவும், புலவர் தம்மை பெண்பாலாகக்கருதி இறைவனை நோக்கிப்பாடும் பாடல்களாகவும் மாற்றிக்கொண்டது. இதன் ஒரு பகுதியாகவே சம்பந்தர் சமணர்களை வாதில் வென்ற கதை வீரச்சுவை புகுத்தப்பட்டு சமணர் கழுவேற்றிய வெற்றி என்னும் பெரிய கதையாடலானது என்று கருதலாம்.

அதே போல் சம்பந்தரை முருக அவதாரம் ஆக்கியது இந்த வீரத்தின் சுவைகருதி உருவாக்கப்பட்ட கருத்தியல். ஒட்டக்கூத்தர் அதையே பாடுகின்றார்.  கூத்தரின் பின் வந்த புலவர்கள் அதைப்பாடுகையில் முருகனின் ஞான வடிவமாகவும் சம்பந்தரைக் கருத்தில் கொண்டனர், வள்ளலார் அத்தகையவர். 

சம்பந்தர் வார்ப்புச்சிலைகள்  

சைவ அடியார்களில் சம்பந்தர் கால்களில் சதங்கை, இடையில் மணிகள், கண்டிகை  போன்ற அணிகளுடன் ஆடையற்ற குழந்தையாகக் காணப்படுவார். அவரது உலோகச்சிலைகளை மூன்று வகையாகப் பார்க்கலாம். அவர் கைகளில் தாளம் ஏந்தி நிற்கும் சிலை அவர் ஈசனிடம் பொற்றாளம் பெற்றதைக் குறிக்கின்றது எனலாம். சுந்தரர் பாடல்களில் இந்த சான்று கிடைத்தாலும் அக்காலத்தில் பண்ணிசை பாடிய மூவர் சிலைகளும் தாளம் தாங்கியவையாக இருந்திருக்கின்றன. தாராசுரம் ஆலய சிற்பங்களில் சுந்தரரின் தாளம் தாங்கிய கற்சிலையைக் காணலாம். அப்பரின் சில செப்புத்திருமேனிகளும் அவ்வாறு அமைந்துள்ளது. எனவே சம்பந்தரின் தாளம் தாங்கிய உலோகச்சிலைகளைத் தனித்துவம் மிக்கவையாக இனம் காண்பதில் வேறுபட்ட கருத்துக்கள் இருந்திருக்கக்கூடும்.  

சம்பந்தர் தாளத்துடன்- வார்ப்புச்சிலை


கையில் தாளத்துடன் சம்பந்தர், கற்சிலை - திருமூலஸ்தானம் ஆலயம் 

சம்பந்தர் தாளத்துடன்

திருநாவுக்கரசர்  கையில் தாளத்துடன் - காமரசவல்லி, திருவீழிமிழலை

திருவெண்ணைய் நல்லூர் கோயிலின் முன் இருவர் பதிகம் பாட கையில் தாளத்துடன் சுந்தரர்- தாராசுரம்

ஞான போனகர்

சம்பந்தரது பெயர்களில் ஒன்று ஞான போனகர், சிவ ஞானம் உமையால் பாலாக அளிக்கப்பட்டதை நினைவுகூரும் பெயர். போனகம் என்ற சொல்லுக்குப் பால் உணவு என்றும் அப்ப வகைகள் என்றும் நிகண்டுகள் பொருள் சொல்கின்றன. வலக்கையில் ஒற்றை விரலைச் சுட்டிக்காட்டும் சூசிமுத்திரையும் இடக்கையில் பால்கிண்ணமும் கொண்டு  நின்ற நிலையில் உள்ள குழந்தை வடிவ சம்பந்தர், ஞான போனகர் வடிவில் உள்ளார் எனலாம். தனது தந்தையிடம் பெம்மான் இவனே என தோணிபுர ஈசனைச் சுட்டிக்காட்டும்படி நிற்கும் இந்த வடிவமே சம்பந்தரின் மூன்று வகை வடிவங்களில் தனித்துவம் மிக்கது. சீர்காழி, மதுரை முதலிய பழங்கோவில்களில் இந்த உலோகத்திருமேனியே வழிபாட்டில் உள்ளது. சம்பந்தர் அருட்செயல்களை கோவில்களில் விழாவாக கொண்டாடும் இடங்களில் இந்த வடிவ சிலைகள் முதன்மை பெறுகின்றது.


தனது தந்தையிடம் பெம்மான் இவனே என தோணிபுர ஈசனைச் சுட்டிக்காட்டும் சம்பந்தர்


அச் சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண் துளி பெய்து
உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திருக்கை விரல் சுட்டி

விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடைமேலே
பண் நிறைந்த அருமறைகள் பணிந்து ஏத்தப் பாவை உடன்
எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞானத் திருமொழி ஆல்

ஞான போனக சம்பந்தர், சீர்காழி

செம்மை பெற எடுத்த திருத் தோடுடைய செவியன் எனும்
மெய்ம்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார்
தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்கு
எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே' என இசைத்தார்

பெம்மான் இவனே என தோணிபுர ஈசனைச் சுட்டிக்காட்டும் சம்பந்தர்

ஞான போனக சம்பந்தர்

நடன சம்பந்தர்

மூன்றாவதாக சம்பந்தர் ஆடும்படி உள்ள உலோகச்சிற்பங்கள் புகழ்பெற்றவை. நாம் கவனிப்பதும் அவற்றையே. சோழர் கலைப்படைப்புகளில் இதுவும் ஒரு தனிச்சிறப்புள்ள வடிவம்தான். அதேசமயம் சிலைக்கான இலக்கணத்தைப் பார்த்தால், சம்பந்தர் சிலையானது, ஆடும் கிருஷ்ணனது வடிவங்களான காளிங்கநர்த்தனம், வெண்ணைக்காடும் பிள்ளை முதலியவற்றுடன் இருகை நர்த்தன கணபதியுடனும்  மிகவும் ஒத்திருக்கிறது. நின்ற வடிவில் சம்பந்தர் ஒரு மனிதக்குழந்தை போலவும், ஆடும் வடிவில் சம்பந்தர் கேச மகுடத்துடன் மிகுதியாக அணிகள் பூண்டு தெய்வக்குழந்தை போலும் வேறுபட்டிருக்கிறார். இருகரங்களில் ஒன்று இறைவனைச் சுட்டும் முத்திரையான சூசியில் உள்ளது, மற்றோன்று நீட்டி தொங்கும்படி கஜ ஹஸ்தமாக இருக்கின்றது, ஒரு கால் ஊன்றியும் மற்றோன்று உயர்த்தியும் உள்ளது. 

சைவ வைணவ சமயங்களில்  சிலை  வடிவங்கள் இவ்வாறு ஒப்பிடத்தகுந்தபடி செய்யப்பட்டிருப்பதை ராமர் - திரிபுராந்தகர்  - வில்லேந்திய முருகன்  ,  ராஜகோபாலன் - சுந்தரர் ,  ஆனாய நாயனார் - வேணுகோபாலன்  ஆகிய உதாரணங்கள் மூலம் அறியலாம். 

ஆடும் கண்ணன், கணபதி, சம்பந்தர்

இந்த மூன்று வகை உருவங்களில் சம்பந்தரின் ஆடும் சிலைகள் பல இடங்களில் காணக்கிடைக்கின்றன. ஆலயங்களில் சம்பந்தரது நின்ற கோல சிலையும் ஆடும் சிலையுமாக  இரு சிலைகளும் வழிபாட்டில் உள்ளன. அதுபோல நாயன்மார் வரலாற்றின் புடைப்புச்சிற்பங்கள் திருப்பனந்தாள், மேலக்கடம்பூர், தாராசுரம், புரிசை ஆகிய இடங்களில் உள்ளன. தாராசுரத்தில் வைகையில் ஏடு எதிரேறும் காட்சி குலச்சிறை நாயனார் வரலாற்றுப் பகுதியில் காட்டப்பட்டுள்ளது. அதில் இளவயது சம்பந்தர் நிற்கின்றார். இவையன்றி இதே ஆலயத்தில் கந்த புராணக் காட்சிகள் தூண் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தின் கோபுர வாயில், தூண்கள், விதானம் என ஏறத்தாழ பத்து இடங்களில் ஆடும் சம்பந்தரின் கல்சிலை செதுக்கப்பட்டுள்ளது. இரு விரல்கட்டை அளவில் இருந்து இரண்டடிப் பலகையில் உள்ள உருவம் வரை பல வகைகளில் ஆடும் சம்பந்தர் வடிக்கப்பட்டுள்ளார்.


தாராசுரம் ஆலயத்தில் சம்பந்தரின் ஞான போனகர் மற்றும் ஆடும் சம்பந்தர்  இரு செப்புத்திருமேனிகளும் உள்ளன. கூடுதலாக ஞான போனகர் வடிவம் கல்சிற்பமாகவும் வடிக்கப்பட்டுள்ளது. ஒரே கோவிலில் சம்பந்தரின் இருவகையான சிலைகளைப் பார்க்கையில், சமயத்தின் மையத்தெய்வங்களைப் போல வடிவபேதத்தோடும் சம்பந்தரை வழிபட்டிருக்கின்றனர் என்று உறுதிசெய்யமுடிகிறது. அனைத்திற்கும் மேலாக ஆடும் சம்பந்தரின் வடிவம் சிற்பிகளின் கலைரசனைக்கான சான்றாக பல ஆலயங்களில் செய்யப்பட்டிருக்கின்றது.    


தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தின் காலகட்டமே ஒட்டக்கூத்தரின் காலகட்டமும், தனது தக்க யாகப்பரணியை இந்த இராசராசபுரியை வாழ்த்தியே கூத்தர் துவங்குகிறார், இந்த ஆலயத்தின் எதிர்ப்புறத்தில் அவருக்கான சமாதிக்கோவில் உள்ளது. தாராசுரம் ஆலயத்தைக் கட்டிய இரண்டாம் இராசராசனின் இந்த ஆட்சிக்காலம் சம்பந்தரை முருகக்கடவுளோடு ஒப்பிட்டு பிற அடியவர்களிலிருந்து அவரை உயர்த்தி அவரை இறைமையாக்கம் செய்த காலகட்டம் எனலாம், சான்றாக இந்த அரசனின் காலத்தில் சீர்காழி ஆலயத்திற்குச் செய்தளித்த  "நட்டப்பெருமாள் ஆளுடைய பிள்ளை" என்னும் சிலை குறித்த கல்வெட்டு வரிகள் நிற்கின்றன. சோமாஸ்கந்த முருகன் வடிவமோ என்று  நினைக்கத்தக்க ஆடும் சம்பந்தரும் தாராசுரம் ஆலயம் முழுக்க நிறைந்திருக்கிறார்.   

தாராசுரம் கோவிலில் பல்வேறு இடங்களில் காணப்பெறும் ஆடும் சம்பந்தர் சிற்பங்கள்  

1.அதிகார நந்திக்கு மேலுள்ள மகர தோரணத்தில் தந்தையுடன் சம்பந்தர் 

2.தூணில் உள்ள குறுஞ்சிற்பம்

3.தூணில் உள்ள குறுஞ்சிற்பம்

4.விதானத்தில் ஆடும் சம்பந்தர் 
  
5.கோபுர வாயிலில்  மகர் தோரணத்தில் ஆடும் சம்பந்தர் 


தாமரைக்கண்ணன், புதுச்சேரி

ஆடல் :: தொடர்


உதவிய புத்தகங்கள் 

  • பெரிய புராணம் ஓர் ஆய்வு - இரு தொகுதிகள்,  அ.ச.ஞானசம்பந்தன்
  • பெரிய புராணம் ஆய்வு - மா இராசமாணிக்கனார் 
  • திருஞான சம்பந்தர் ஆய்வு ,இரு தொகுதிகள் - வை இரத்தின சபாபதி 
  • சைவ இலக்கிய வரலாறு - அவ்வை துரைசாமிப்பிள்ளை 
  • திருஞானசம்பந்தர் இறைமையாக்கம் - இரா வசந்தமாலை 
  • கல்வெட்டில் தேவார மூவர் - கா. ம. வேங்கட ராமையா
  • நால்வர் காலம் - குடந்தை என் சேதுராமன் 
  • தேவார மாண்பும் ஓதுவார் மரபும் - குடவாயில் பாலசுப்ரமணியம் 
  • சைவ நாயன்மார்களின் புடைப்புச்சிற்ப சித்தரிப்புகள் - முனைவர் தேன்மொழி 
  • சமணர் கழுவேற்றம் - விழுப்புரம் கோ செங்குட்டுவன் 
  • தமிழ்நாட்டு செப்புத்திருமேனிகள் - மே சு இராமசுவாமி 
  • தக்கயாகப் பரணி- வளவ. துரையன் உரை சந்தியா பதிப்பகம்

புகைப்படங்கள் நன்றி 

  • திரு. அகில் - வைத்தீஸ்வரன் கோவில்
  • திரு. வேலுதரன் - நஞ்சன் கூடு மூவர்   
  • மூவர் ஓவியங்கள், தாளத்துடன் அப்பர் - தேவாரமாண்பும் ஓதுவார் வரலாறும், இராஜராஜேச்சுரம் புத்தகங்கள் 
  • முருகன் தஞ்சாவூர் ஓவியம் - கனகலக்ஷ்மி, காரைக்குடி 
  • தாராசுரம் நடன சம்பந்தர் படங்கள் - தாமரைக்கண்ணன், பார்க்கவி 
  • சம்பந்தர் வார்ப்புச்சிலை படங்கள் - இணையம்  
  • திருப்புடைமருதூர் ஓவியங்கள் - இணையம்