Saturday, 30 December 2023

ஆடல் - 5: செவ்வேள் ஆடல் - தாமரைக்கண்ணன், புதுச்சேரி


போர் நடனம் 

சங்கம் மருவிய காலம் என்று காப்பியகாலத்தை சொல்கிறோம். தமிழின் ஐந்து பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் பல்வேறு நிகழ்த்துக்கலைகளை பதிவு செய்கிறது எனலாம். அவற்றில் முக்கியமானது மாதவியின் ஆடல் அரங்கேற்றம். புகார் நகரில் மாதவியின் அரங்கேற்றம் நிகழ்கிறது. நடனம் நிகழும் மேடையின் நீளம் அகலம் உயரம் இவை குறிப்பிடப்பட்டுள்ளது, மூன்று வகை திரை (எழினி) விளக்கப்படுகிறது. அரங்கத்தில் நாட்டப்படும் தெய்வம் சொல்லப்படுகிறது. மக்கள் மத்தியில் சூழன்றாடும் வட்ட வடிவ களத்துக்கு மறுதிசையில் அமைவது மேடைக்கலை. துவக்க கால மேடைக்கலைகள் பொதுமக்களுக்காக அன்றி அரசன் முதலிய உயர்குடிக்காக நிகழ்த்தப்பட்டது என்றே கருதவேண்டியுள்ளது. அதனாலேயே அதற்கான இலக்கணம் மிக விரைவில் அமைக்கப்பட்டுள்ளது எனலாம். மாதவி தான்கற்ற நடனநூல் இலக்கணப்படி பழுதின்றி ஆடுகிறாள்.

தமிழில் முதன்முதலில் 'மேடை’ என்னும் அரங்க அமைப்பை பற்றி விரிவாக கூறப்படுவது சிலப்பதிகாரத்தின் இப்பகுதியில்தான். ‘நிகழ்த்துக் கலைகள்’ மேடைக்கு மேல் நிகழ்வது, கீழே நிகழ்வது என்று பிரிந்து விட்டதையும், மேடையிலும் நிகழ்த்துபவர் பார்ப்பவர் இடையேயும் திரைகள் தோன்றியுள்ளதையும் சிலப்பதிகார காலத்தில் பார்க்க முடிகிறது. திருவள்ளுவர் இதே கருத்தில் கூத்தாட்டு அவையை தற்காலிக உறவுக்கு உவமையாக்குகிறார். அதேசமயம் கலை செவ்வியல் என்னும் தன்மை நோக்கி நகரும்தோறும் அதற்கான அங்கீகாரமும் மதிப்பும் அதன்வழி வருவாயும் கிடைப்பதை உறுதிசெய்தது என்பதை மாதவியின் கதையிலே நாம் பார்க்கிறோம். கோவலனுக்கும் கண்ணகிக்கும் தரப்படும் துவக்க மதிப்பீட்டை விட, மாதவியின் சிறப்புகளை விரிவாகவே அடிகள் கூறுகிறார். பொதுமகளிர் மீதிருந்த நீண்டகால தலைவியரின் வெறுப்போடு, இந்த அங்கீகாரத்தின் மீதான பொறாமையும் சமூகத்தில் ஒருசாராரிடம் இருந்திருக்கலாம்.

நடன ஆசிரியர், வாத்தியக்கலைஞர்கள், பாடுபவர் இவர்களுடைய தகுதிகள் என்னென்ன என்று விரிவாக அரங்கேற்றுகாதையில் சொல்லப்படுகிறது. சங்ககால பாணர் கூத்தர் மரபிலிருந்து எத்தனை தூரம் கலைஞர்கள் மரபு உருமாறியிருக்கின்றது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இதே காதையில், மாதவி நடன அரங்கேற்றத்திற்கு தகுதிப்படுத்திக்கொள்ள பல்வேறு கூத்துக்களை பயில்கிறாள். அவ்வாறு பயின்று ஆடிய கூத்துக்களில் பதினோராடல் என்பதும் அடக்கம், இதற்கு கடவுள்கள் ஆடிய பதினோரு வகை நடனங்கள் என்று பொருள்.

இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு

பாண்டரங்கம், கொடுகொட்டி, அல்லியம், மல்லியம், துடி, குடை, பாவை, குடம், பேடி, மரக்கால், கடையம் ஆகிய நடனங்களை மாதவி குறைவர பயின்று ஆடினாள். இந்த பதினொன்றையும் பாண்டரங்கம் முதல் குடை வரையிலான ஆறு மற்றும் ஏனைய ஐந்து என்று இரண்டாக பகுக்க முடியும். பாகவத கதையின் படி வாணாசுரன் என்ற அசுரன் கண்ணனின் பெயரனான அநிருத்தனை சிறையில் வைக்கிறான், அவனை மீட்க வெவ்வேறு தந்திரங்களை கண்ணன், லட்சுமி, இந்திராணி, துர்க்கை, காமன் ஆகியோர் மேற்கொள்கின்றனர், அசுரர்களின் கவனத்தை திரும்புகின்றனர். கண்ணன் குடங்களை உயர வீசி வேடிக்கை காட்டுபவன் போல குடக்கூத்து செய்கிறான், லட்சுமி பாவை எனும் பெயருக்கேற்ப பொம்மை போல் ஆடுகிறாள், காமனான பிரத்தியும்னன் ஆணிலி என வேடமிட்டு பேடிக்கூத்து நிகழ்த்துகிறான், விஷ ஜந்துக்கள் அண்டாமலிருக்க மரக்கால்களை கட்டிக்கொண்டு துர்க்கை நடமிடுகிறாள், இறுதியாக இந்திராணி உழத்தி என வேடமிட்டு கடையம் ஆடுகிறாள். இவை ஐந்தும் ஒரே கதையை ஒட்டி நடக்கும் வெவ்வேறு நடன வடிவங்கள்.

பதினோராடலின் முதல் ஆறு நடனங்கள் மூன்று பெருந்தெய்வங்களின் போர்த்தருணங்களை நினைவுறுத்துபவை, கொடுகொட்டியும் பாண்டரங்கமும் சிவபெருமான் முப்புரம் எரித்த காலத்தில் ஆடியவை, அல்லியமும் மல்லியமும் கண்ணபெருமான் மதுரா நகரில் யானையை கொம்பொடித்து கொன்றதையும், சாணுரன் முஷ்டிகன் என்ற மல்லர்களை மற்போரிட்டு வென்றதையும் நினைவுறுத்துபவை.

இறுதியாக உள்ள குடையும் துடியும் முருகன் ஆடியவை. மேடைக்கலையில் முதன்முதலில் நிகழ்த்தப்பட்ட முருகன் ஆடிய இவ்விரண்டு செவ்வியல்பானி நடனங்களும் அசுரர்களுடனான முருகனின் போர் தொடர்பானவை.

மாக்கடல் நடுவண்
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற 
சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்,
படைவீழ்த்து அவுணர் பையுள் எய்தக்
குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்

சிலம்பின் அரங்கேற்றுகாதையில் பதினோராடல் என்ற பெயர் மட்டுமே வருகின்றது கடலாடுகாதையில் அவை என்னென்ன என்ற விளக்கமும் தரப்படுகிறது. அதன்படி முருகன் இரண்டு நடனங்கள் ஆடுகிறான். ஒன்று துடி, மற்றது குடை. துடி என்பது ஒரு இசைக்கருவி, சற்று பெரிய வடிவ உடுக்கை எனலாம். அதன் வடிவத்தை உவமையாக்கித்தான் துடியிடை என்கிறோம். நாம் பறை முழக்குகையில் பெறும் உற்சாக உணர்வு போல அன்று துடி என்னும் இசைக்கருவி பயன்பட்டிருக்கிறது. அதற்கு சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன, பின்னர் அது நடுகல் வழிபாட்டிலும், விழாக்களிலும் இசைக்கப்பட்டது. பக்திக்காலத்தில் சிவன் ஆடுவதற்கு துடியிசை துணைசெய்கிறது, பின் ஆடல்வல்லானின் கரத்திலும் துடி சென்று குடியேறிவிடுகிறது.

கடுமுனை அலைத்த கொடுவில் ஆடவர்
ஆடுகொள் பூசலின் பாடுசிறந்து எறியும்
பெருந்துடி வள்பின் வீங்குபு நெகிழா... (அகநானுறு)

செவிக்கும் உடலுக்குமான துடியின் பிணைப்பை முன்னிறுத்தும் பல வார்த்தைகள் தமிழில் உள்ளன, உடலோ மனமோ அதிர்வதை துடித்தல் என்கிறோம். துடியான பையன் என்றால். சுறுசுறுப்பானவன், கொடுத்த வேலையை முடிப்பவன் என்று பொருள். துடியான தெய்வம் என்றால், சக்திமிக்க தெய்வம், அதனிடம் பணிந்திரு என்று அர்த்தம்.

கடலில் சென்று மறைந்துகொண்ட சூரனை கண்டபின் கடல் அலைகளையே மேடையாக்கி ஆடிய நடனம் துடி என்கின்றனர் உரையாசிரியர்கள். கடலில் எழுந்து வீழும் பேரலைகளின் மீது நிற்பவனின் நடனம், எதிரியை கொல்லும் கணத்தில் ஆடிய வெறிமிக்க நடனம், நாமறியா தொல்தெய்வமொன்றின் கொல்லும் போர் ஆவேசத்தினை காட்டும் நடனம் துடிக்கூத்து. 


இரண்டாவது நடனம் குடை, தன் படைமுன்பு தோற்றோடும் அசுரர் படையின் குடைகளை எடுத்து அவற்றையே தனது மேடை திரையாக ஆக்கி முருகன் ஆடிய நடனம் குடை. நாட்டையாளும் மன்னனுக்குக் கொடி, குடை, முரசு, தார்(மாலை), முடி ஆகிய ஐந்தும் சின்னங்கள், சங்கப்பாடல்கள் மன்னனின் குடைச்சிறப்பை வாழ்த்துகின்றன, போரில் வென்ற மன்னன் தனது வெற்றிக்கு அடையாளமாக தோற்ற மன்னர்களுடைய முரசு, குடை இவைகளை எடுத்துச் செல்வது வழக்கம். 

குடை வாழ்த்து 

..விசும்புதோய் வெண்குடை நுவலும்
பசும்பூண் மார்ப பாடினி வேந்தே. (பதிற்றுப்பத்து ) 

...ஒன்னார்
மண் மாறு கொண்ட, மாலை வெண் குடை,
கண் ஆர் கண்ணி, கடுந் தேர்ச் செழியன் (சிறுபாணாற்றுப்படை )

குடை கைக்கொள்ளல்

எழுவர் நல்வலம் அடங்க ஒருபகல்
முரசொடு வெண்குடை அகப்படுத் துரைசெலக (அகநானுறு) 

வென்றவன் தோற்றவனின் பொருள்களை கையில் எடுத்து அவனை பரிகாசம் செய்யும்படியான நடனம் இது. வெற்றியின் உற்சாகத்தோடு இளையோனாகிய முருகன் ஆடிய நடனம் குடை. 

********

சூரஸம்ஹார விழா

பத்துப்பாட்டு நூல்களில் முதலாவதாகிய திருமுருகாற்றுப்படை முருகனுடைய அருள்பெற அடியவர்களை ஆற்றுப்படுத்தும் நூல், சங்க இலக்கிய நூல்களில் ஒரு கடவுளுக்காக மட்டும் பாடப்பட்ட தனி நூலாக இதை கொள்ளலாம். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் மொத்தம் எழுபது பாடல்கள் இருந்தன, செவ்வேள் என்ற பெயரில் முருகன் மீது பாடப்பட்ட முப்பத்தியொரு பாடல்கள் கொண்டதாக அமைந்தது பரிபாடல். இன்று நமக்கு அவற்றில் எட்டு நெடும்பாடல்கள் மட்டும் கிடைக்கின்றன. முருகக்கடவுளை முதன்மைப்படுத்தும் இரண்டு சங்ககால நூல்கள் இவை இரண்டும் எனலாம். அருள், ஞானம் முதலிய தெய்வத்தின் பல்வேறு குணாதிசயங்களில் முருகனின் தனித்த கூறாக சங்கஇலக்கியம் சொல்வது அவனது சினம். காப்பியக்காலத்திற்கு முன்பு சங்க காலத்தில் முருகன் என்னும் கடவுள் சினம் மிகுந்தவனாக, செவ்வாடையும் செம்மலர்களும் அணிந்தவனாக, அசுரர்களை தனது வேலால் அழித்தவனாக கருதப்பட்டான்.

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே

குறுந்தொகையின் முதல் பாடலான இது திப்புத்தோளார் பாடியது. முருகனது குன்றத்தின் செங்காந்தள் மலர்களை குறித்து, தோழி தலைவனிடம் காந்தள் மலர்களை மறுக்கிறாள். செந்நிறம் மிகுந்த இப்பாடலில், இரத்தம் பெருகும் களத்தில் முருகன் அரக்கர்களை கொன்றழித்த செய்தி தரும் பாடலை முதலாகக்கொண்டு குறுந்தொகை தொகுக்கப்பட்டுள்ளது. 


பாலைக் கெளதமனார் பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தில் சேரமன்னன் பல்யானை செல்கெழுகுட்டுவனை பாடியவர். மன்னனது படைகள் பகை நாட்டை அழிக்க செல்லுமிடத்தில், முருகன் சினந்து மூதூர்களை அழித்த செய்தி குறிப்பிடப்படுகின்றது 

காடுறு கடுநெறி யாக மன்னிய
முருகுடன்று கறுத்த கலியழி மூதூர்

இவை தவிர பிற சங்க இலக்கியங்களான அகநானுறு, புறநானுறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை ஆகியவற்றின் பல பாடல்களில் முருகன் சூரனை வென்ற கதை சொல்லப்படுகிறது.

சூரனுடனான முருகனின் போர் குறித்த மூன்று தகவல்கள் மீண்டும் மீண்டும் சங்கப்பாடல்களில் சொல்லப்படுகின்றன. 

1.முருகன் கிரெளஞ்ச மலை என்னும் மலையை தனது வேலால் அழித்தான்

குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,
மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை (பரிபாடல்)

2.முருகன் சூரனையும் அவனுடன் நின்ற அசுரர்களையும் அழித்தவன்

ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச்
சூர் கொன்ற செவ்வேலாற் பாடி, பல நாளும் (கலித்தொகை) 

தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து,
நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து,
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய
கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை
மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல் (பரிபாடல்)

3.முருகன் கடலில் மாமரமாக நின்ற சூரனை அழித்தான்

பார் முதிர் பனிக் கடல் கலங்க உள் புக்கு,
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் (திருமுருகாற்றுப்படை)

அவுணர் நல் வலம் அடங்க, கவிழ் இணர்
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து,
எய்யா நல் இசை, செவ் வேல் சேஎய் (திருமுருகாற்றுப்படை)

வைகாசிவிசாகம், ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்கள் முருகனுக்கு உரிய திருவிழா நாட்கள். இந்த திருவிழாக்களோடு ஒவ்வொரு ஆண்டும் முருகன் கோவில்களில் ஐப்பசி மாதம் கந்த ஷஷ்டி திருவிழா ஆறுநாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றது, ஐப்பசி மாதஅமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஷஷ்டி வரையிலான ஆறு வளர்பிறை நாட்களே கந்தசஷ்டி. இந்த திருவிழாவில் முருகன் சூரனை போரிட்டு வென்ற நிகழ்வு சூரசம்ஹாரம் என்ற பெயரில் நிகழ்த்தப்படுகின்றது. திருச்செந்தூரில் நடைபெறும் கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆறுநாட்கள் விரதமிருக்கும் பக்தர்கள், கடற்கரையில் சூரசம்ஹாரம் முடிந்து அடுத்த நாள் நடைபெறும் திருக்கல்யாணத்தை பார்த்துவிட்டு தங்கள் விரதத்தை முடித்துக்கொள்வார்கள். 
 
திருப்பரங்குன்றம் முதலான ஆறுபடைவீடுகளிலும் தமிழகத்திலுள்ள பல்வேறு முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெறுகின்றது. முருகனது உற்சவ திருமேனி அலங்காரமாக எடுத்துச் செல்லப்படும், சூரன் பொம்மையானது உடல் தனியாகவும், தலைகள் மாற்றக்கொள்ளக்கூடியபடியும் அமைந்திருக்கும். தாருகன், சிங்கமுகன் மற்றும் சூரபத்மன் என்ற மூன்று அசுரர்களை வெற்றி கொண்டதை குறிக்க இந்த ஏற்பாடு. முருகனின் படைத்தலைவரான வீரபாகு அசுரர்களிடம் தூது செல்கிறார், அவர்கள் தூதை இகழ்ந்து சமாதானத்தை மறுக்கின்றனர். முருகனை சுற்றிவந்து பல்வேறு மாயங்களை செய்கின்றனர் அசுரர். முருகன் அன்னையிடம் பெற்ற தன் கைவேலினால் அவர்கள் ஒவ்வொருவராக அழிக்கிறார். தாருகன் முதலில் வீழ்கிறான், சிங்கமுகன் அடுத்து இறக்கிறான்.

மூன்றாவதாக சூரன் போருக்கு வருகிறான், வெவ்வேறு மாயங்கள் காட்டி இறுதியில் கடல் நடுவே சென்று மறைந்து கொள்கிறான், தனது உருவத்தை விட்டுவிட்டு ஒரு மாமரத்தின் வடிவில் நிற்கிறான், முருகன் தனது வேலினால் மரத்தை இரு கூறாக்க அது மயிலாகவும், சேவலாகவும் மாறி முருகனின் கொடியாகவும், வாகனமாகவும் மாறுகின்றது. இந்த காட்சிகளையே தற்போது முருகன் மற்றும் சூரனின் உருவங்களை கொண்டு சூரசம்ஹார சடங்காக கோவிலில் நிகழ்த்துகின்றனர். திருசெந்தூரில் சூரசம்ஹாரம் ஒருநாளில் நடந்தாலும், வேறு சில கோவில்களில் சூரசம்ஹாரம் ஒவ்வொரு அசுரனுக்கு ஒருநாள் என்றபடி மூன்று நாட்கள் நடக்கின்றன. 
**********

கந்த புராணம்

சங்க பாடல்களில் சுருக்கமான குறிப்புகளாக, பல இடங்களில் உவமையாக சொல்லப்பட்ட சூரன் போர் விரிவாக நிகழ்ந்தது கந்தபுராணத்தில்தான். கந்த புராணத்தின் காலம் பதினான்காம் நூற்றாண்டு அல்லது அதற்கு சற்று முன்னதாக இருக்கவேண்டும் என்று தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய மு. அருணாசலம் கருதுகிறார். முருகன் சூரன்பதுமனின் போர் விரிவாக புனையப்பட்டது இந்த காலத்தில்தான். சூரனின் சகோதரர்களும், முருகனுக்காக போர் செய்த வீரபாகு முதலிய நவவீரர்களும் இந்த காலத்தில்தான் இலக்கியத்தில் தோன்றுகிறார்கள். 

கச்சியப்ப சிவாசாரியார் காஞ்சிபுரத்தில் வசித்தவர், மெய்கண்டாருக்கும் அருணகிரி நாதருக்கும் இடைப்பட்ட காலத்தை ( பொ யு 1350 - 1420) சேர்ந்தவர். வடமொழியிலுள்ள ஸ்காந்த புராணத்தின் ஒருபகுதியை மூலமாக கொண்டு தமிழில் கந்தபுராணமாக இயற்றியுள்ளார். ஸ்காந்த புராணத்தில் 6 சம்ஹிதைகள் உள்ளன, குமார சம்ஹிதை, சூத சம்ஹிதை, பிரம்மா சம்ஹிதை, விஷ்ணு சம்ஹிதை, சங்கர சம்ஹிதை, சூர சம்ஹிதை. சங்கர சம்ஹிதையில் முப்பதினாயிரம் ஸ்லோகங்களும் பன்னிரண்டு காண்டங்களும் உள்ளன. அவற்றுள் ஒன்று சிவரகஸ்ய காண்டம். இதில் பதிமூன்றாயிரம் ஸ்லோகங்கள் உள்ளன. இதில் ஏழு காண்டங்கள் உள்ளன, அவற்றில் உபதேச காண்டம் தவிர்த்து மீதமுள்ள ஆறு காண்டங்கள் கச்சியப்பரால் தமிழில் கந்த புராணத்துக்கு மூலமாக எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆயினும் நமது சங்ககாலம் முதலான தொன்மங்களை கருத்தில் கொண்டு வடமொழியில் இல்லாத வள்ளிக்கதையை தமிழ் கந்தபுராணத்தில் கச்சியப்பர் சேர்த்திருக்கிறார்.

தமிழ் கந்த புராணத்தில் ஆறு காண்டங்களும் 125 படலங்களும், அவற்றில் மொத்தமாக 10436 பாடல்களும் உள்ளன. படிக்காசு புலவர் இயற்றிய தொண்டை மண்டல சதகத்தில், கச்சியப்பர் மரியாதைகளோடு, கந்த புராணம் அரங்கேற்றியமையை ஒரு பாடல் குறிக்கின்றது. 

அந்தப் புரமு மறுநான்கு கோட்டகத் தாருமொன்றாய்க்
கந்தப் புராணம்பன் னீராயிரஞ் சொன்ன கச்சியப்பர்
தந்தப்பல் லக்குச் சிவிகையுந் தாங்கியச் சந்நிதிக்கே
வந்தப் புராண மரங்கேற்றி னார்தொண்டை மண்டலமே

தமிழ் கந்தபுராணம், பலவகைகளில் கம்ப இராமாயணத்தை முன்மாதிரியாகக் கொண்டது. கதை நிகழ்வுகள் பலவும் இராமாயண பாதிப்பில் உருவானவை. ராமாயண சூர்ப்பனகையிலிருந்து கந்தபுராண அசமுகி வருகிறாள், கும்பகருணனை சிங்கமுகன் பிரதி செய்கிறான், இலக்குவனையும் அனுமனையும் முன்மாதிரியாக்கி வீரபாகு படைக்கப்பட்டிருக்கிறார். ஆயினும் கந்தபுராணம் தமிழின் பெரும்படைப்புகளில் ஒன்றுதான். இதை இங்கிருந்த நமது பழைய தொன்மங்களை விரிவாக்கி எழுதபட்ட புராண அமைப்பெனலாம். அதுவரை தமிழ் நிலத்தில் வழங்கப்பட்டு வந்த முருகனது கதையை தொகுத்தும் விரித்தும் சொல்ல வந்த நூல்.

கந்த புராணத்தின் உற்பத்திக்காண்டத்தில், சிவன் உமை திருமணம், முருகன் பிறப்பு, நவ வீரர்கள் பிறப்பு, முருகனின் பிள்ளை விளையாடல்கள், சூரனை அழிக்க முருகன் படை கொண்டு எழுதல், தாருகன் வதம், முருகன் பல்வேறு தலங்களை தரிசித்து செந்தில் நகரில் தங்குதல் ஆகியவை கூறப்பட்டுள்ளது. அசுர காண்டத்தில் அசுரர்கள் தோன்றி வரம்பெற்று, நகரமைத்து ஆட்சி செய்தலும், அசமுகி இந்திராணியை பலவந்தம் செய்ய, மாகாளர் அவள் கை துண்டிப்பதும் பாடப்பட்டது, இடையே அகத்தியரின் கதை கூறப்படுகின்றது. 

மகேந்திர காண்டம், இராமாயணத்தின் சுந்தர காண்டத்தை போன்றது. வீரபாகு தூதனாக சூரனை கண்டு மீளுதல் மகேந்திர காண்டம், யுத்த காண்டத்தில், சூரனின் சுற்றத்தார் வீரபாகுவாலும், முருகனாலும் வதைக்கப்படுகின்றனர். சூரன் முருகனால் ஆட்கொள்ளப்படுகிறான். தேவகாண்டத்தில் தெய்வயானை திருமணமும், தட்ச காண்டத்தில் வள்ளி திருமணமும் அதற்கு முன்பாக விரிவாக தட்ச யாகம் அழிதலும் சொல்லப்படுகிறது. முருகன் கதையுடன் அகத்தியர், தட்சன், மார்க்கண்டேயர் முதலிய பல கிளைக்கதைகள் கந்த புராணத்தில் இணைந்துள்ளன.

*********

சங்ரதாஸ் சுவாமிகள்

இருபதாம் நூற்றாண்டில் கந்தபுராண நாடகங்கள் 

ஆடலும் நடிப்பும் கலந்த கூத்து முறையே நமது கதைசொல்லல் மரபாக இருந்தது, அதிலிருந்து நடனமும் நாடகமும் பிரிந்து எழுந்துவந்தன. தமிழின் பல இலக்கியங்கள் பாடி ஆடப்பட்ட செய்திகளை கல்வெட்டுகளில் காண்கிறோம். அரையர் மரபு பிரபந்த பாடல்களை அபிநயத்துடன் பாடி ஆடும் முறையை இன்றும் தொடர்கிறது. திருவெம்பாவை பாடல்களை கோவிலில் தேவரடியார்கள் ஆடியிருக்கின்றனர். சோழர் காலத்தில் அரசனின் பெருமைகளை கூறும் நாடகங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன, இராஜராஜ விஜயம் என்ற நாடகம் நடத்த அளிக்கப்பட்ட நிவந்தம் குறித்து தஞ்சை பெரியகோவில் கல்வெட்டு உள்ளது. நாடகம் நிகழ்த்திய ஆசிரியர் விருத்தாசலத்தை சேர்ந்த சாந்திக்கூத்தன் விஜய ராஜேஸ்வர ஆசார்யன். தஞ்சை வைகாசி பெருவிழாவில் நடந்த இந்த நாடகத்திற்காக 120 கலம் நெல் அளிக்கப்பட்டது, நெல்அளந்த கலத்தின் பெயர் ஆடவல்லான். 

திருபுவனையை சேர்ந்த கவிகுமுத சந்திர பட்டன் என்ற புலவர் இயற்றிய குலோத்துங்க சோழ சரிதை என்னும் நூலும் நாடகமாக நடிக்கப்பட்டிருக்க கூடும். கோவில்களுடன் பிணைந்த தலபுராணக்கதைகள், பெரியபுராண கதைகள் நெடுங்காலம் நாடகமாக நடிக்கப்படுவதை திருக்குறுங்குடி கைசிக புராண நாடகம், சிறுத்தொண்ட நாயனார் நாடகம், திருப்புறம்பயம் வன்னி நாடகம் இவற்றின் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். தாசி மரபை சேர்ந்தவர்களே பல நாடகங்களை முன்னெடுத்தனர், இதற்காக அரசர்கள் காலத்தில் அவர்களுக்கு நிலக்கொடை அளிக்கப்பட்டிருந்தது. திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடக்கும் வேடுபறி உற்சவத்தில் வள்ளி திருமணத்தை தாசிகள் கூத்தாக நிகழ்த்தும் வழக்கத்தை பம்மல் சம்பந்த முதலியார், அவரது காலத்திலும் நடந்த ஒன்று என பதிவு செய்திருக்கின்றார். 

வள்ளி, வள்ளிமலை

நாடகங்கள் பெருகியதற்கு மராட்டிய அவை அவற்றை ஆதரித்தது முக்கியமான காரணம், பல நாட்டிய நாடகங்கள் மேடையேறின. குறவஞ்சி, பள்ளு, நொண்டி முதலிய சிற்றிலக்கியங்கள் நாடகமாகவே வெகுகாலம் நிகழ்த்தப்பட்டன. வீரலிங்கபாரதி, நாராயண கவி ஆகியோர் அக்காலகட்ட நாடக ஆசிரியர்கள். சாரங்கதார முதலிய நாடகங்கள் இக்காலத்தவை. அகவல், விருத்தம், தரு, சிந்து முதலிய பகுதிகள் கொண்ட நாடக அமைப்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்த சுபத்திரை கல்யாணம் என்ற நாடகம் இக்காலத்தை சேர்ந்தது, இதை இயற்றியவர் நன்னிலம் நாரணன். பதினெட்டாம் நூற்றாண்டில் இராம நாடக கீர்த்தனைகள் இயற்றப்பட்டன. தொடர்ந்து கவிராயர்களால் புராண நாடகங்கள் பாரதம், இராமாயணம் சார்ந்து அதிகம் நாடகம், விலாசம் என்கிறபெயரில் எழுதப்பட்டன. கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் பலகாலம் நாடக மேடைகளை விட்டு நீங்காமல் இருந்தது. 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக்காலம் துவங்கி தமிழ் மேடை நாடகங்கள் பெருகின, பொது மக்களால் பரவலாக ரசிக்கப்பட்டன. மூல புராணங்களில் இருந்து அரிச்சந்திரன் கதை , ருக்மாங்கதன் கதை முதலிய கிளைக்கதைகள் நாடகமாயின. காத்தவராயன், மதுரைவீரன் முதலிய நாட்டார் தெய்வங்கள் கதைகள் நாடகமாக மேடையேறின. பிரதாப சந்திர விலாசம், டம்பாச்சாரி விலாசம் முதலிய சமூக நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, வேணுகோபாலாசார்யார் முதலியவர்கள் பிறமொழிகளிலிருந்து தமிழுக்கான நாடக மொழிபெயர்ப்புகளை துவக்கி வைத்தனர். ராமசாமி ராஜா, TT.ரங்காச்சாரியார், பம்மல் சம்மந்த முதலியார் ஆகியோர் சமூக நாடகங்களை எழுதத்துவங்கினர். பரிதிமாற் கலைஞர் நாடகங்கள் எழுதியதோடு நாடக இலக்கண நூல் ஒன்றும் எழுதியுள்ளார். 

முருகக்கடவுள் தொடர்பாக தமிழில் நீண்ட காலம் பேசப்படும் கதைகள் வள்ளி கதையும், சூரன் கதையுமே. அவை இரண்டுமே நாடகமாக நடிக்கப்பட்டிருக்கின்றன. கந்தபுராணத்தை அடிப்படையாக வைத்தே இந்த நாடகங்கள் எழுதப்பட்டன 

தமிழகத்தில் பிரபலமாக நடத்தப்பட்ட நாடகம் வள்ளி திருமணம். வேடுவ ராஜாவான நம்பிராஜனுக்கு வள்ளி மகளாக கிடைப்பதிலிருந்து, முருகனை வள்ளி மணம் செய்யும் வரையிலான கதை இது. பல நாடக மூல ஏட்டுப்பிரதிகள், ஓலைச்சுவடிகளில் இருந்தன. அவற்றை பரம்பரையாக வைத்திருந்தவர்கள் சிலர் மூடத்தனத்தாலும், சுயநலத்தால் அவற்றை பிறரிடம் தரத்தயங்கி அவை எங்கும் பதிவாகாமல் அழித்துவிட்டனர். இதுபோன்ற சம்பவங்களை பம்மல் சம்பந்த முதலியார் பதிவுசெய்திருக்கிறார், அவற்றில் ஒன்று வள்ளி நாடகம். இதை வைத்திருந்த காஞ்சிபுரம் ஆலயங்களில் ஒன்றில் நட்டுவனாராக இருந்த சுப்பராய நட்டுவன் என்னும் நடன ஆசிரியர் பம்மலுக்கு தரமறுத்து விட்டார். 

சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வள்ளித்திருமணம் 1936ம் ஆண்டு மு கிருஷ்ண பிள்ளையால் அச்சிடப்பட்டது, மீண்டும் வள்ளித்திருமணத்தை 1947ல் பி நா சிதம்பர முதலியார் பிரதர்ஸ் அச்சிட்டனர். சுவாமிகள் எழுதிய 68 நாடகங்களில் ஸ்காந்தம் என்ற ஒரு நாடகமும் உள்ளது, ஆனால் அதன் பிரதி கிடைக்கவில்லை. சங்கரதாஸ் சுவாமிகள் காலத்திலேயே கந்தபுராண கதைகளை ஒட்டி பல சிறிய நாடகங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன. அதற்கு காரணம் கந்தபுராணத்தில் உள்ள எண்ணற்ற கிளைக்கதைகள், இவை முந்தைய புராணங்களில் இருந்தும் சமகால வாயமொழி மரபிலிருந்து பெறப்பட்டவை என்று ஆய்வாளர் அ கா பெருமாள் கருதுகிறார். கூடலூர் வரதா வாத்தியார் எழுதிய முருகன் பிரம்மாவை சிறை வைத்த நாடகம் 1937ல் சென்னை பெரியநாயகி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.

சங்கரதாஸ் சுவாமிகளுக்கு முன்பாக இருந்த முருக நாடகங்கள் சிலவற்றை பம்மல் சம்பந்த முதலியார் பதிவு செய்திருக்கிறார், கந்தர் நாடகம் என்ற நாடகம் கந்தபுராணத்தை அடிப்படையாகக்கொண்டு கந்தன் பிறப்பிலிருந்து வள்ளி திருமணம் வரை உள்ள காட்சிகளை கொண்டது. ஏறத்தாழ 1819ம் ஆண்டு இதை அரங்கேற்றியவர் பாலசுப்ரமண்யக் கவிராயர் என்பவர். இவற்றில் பாடல்கள் மூலமாக வாதம் செய்யும் தர்க்கக் காட்சிகள் அதிகம் இருந்தன. இவையில்லாமல் குமரபிள்ளை என்பவர் வள்ளியம்மை நாடகம் என்னும் நாடகம் எழுதியிருக்கின்றார். சுப்பிரமணிய விலாசம் அல்லது சுப்பராய விலாசம் என்ற நாடகம் ஒன்றும் இருந்துள்ளது. இவற்றின் பிரதிகள் எதுவும் இன்று இல்லை. 


ஒருகட்டத்தில் தமிழ் நாடக உலகில் தந்திரக்காட்சிகளும், பிரம்மாண்டமான அரங்க அமைப்புகளும் கொண்ட புராண நாடகங்கள் தமிழில் அதிகரித்தன. இவ்வகையில் தமிழில் பக்தி நாடகங்களை நடத்திய நவாப் இராசமாணிக்கம் பிள்ளை கந்தபுராணத்தை ஒட்டி குமார விஜயம் என்னும் நாடகத்தை நடத்தியுள்ளார், முருகன் நெருப்புப்பொறிகளின் வழி ஆறு தாமரை மலர்களில் தோன்றுவதை நாடக மேடையில் காட்சியாக காட்டியிருக்கிறார் இவர். எதிர்மறை பாத்திரங்களை முதன்மை பாத்திரங்களாக மேடை நாடகத்தில் ஆக்கிக்கொண்ட R.S.மனோகர் சூரபத்மன் என்ற நாடகத்தை தனது நேஷனல் தியேட்டர்ஸ் குழுவின் மூலம் நடத்தியிருக்கின்றார். இந்த இரண்டு நாடகங்களின் தாக்கங்களோடு தமிழில் கந்தன்கருணை என்ற திரைப்படம் ஏ பி.நாகராஜன் இயக்கத்தில் 1967ம் ஆண்டு வெளியாகியது. தற்காலத்தில் சென்னை தமிழரசன் தியேட்டர்ஸ் என்ற நாடகக்குழு சூரபத்மன் புராண நாடகத்தை நடத்துகிறது. 2023ம் ஆண்டு டில்லி தமிழ்ச்சங்கத்திலும், சென்னை வானொலி நிலையத்திலும் இந்நாடகத்தை இருமுறை இக்குழு நடத்தியிருக்கின்றது. கே.பி.அறிவானந்தம், பாலசுந்தரம் ஆகியோர் இக்குழுவை நடத்தி வருகின்றனர். 

மேடைக்கலை எப்படி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டதோ அதுபோல மக்கள் நிலத்தில் தன்னியல்பாக இணைந்து ஆடிய கூத்துக்களும் நிகழ்ந்தன. மாதவி, முருகன் ஆடிய துடியும், குடையும் நூல்முறைப்படி மேடையில் ஆடினாள். அதே சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்தில் செவ்வியல் மேடைக்கலைக்கு எதிர் திசையில் நூலொன்றும் கற்காத மலைக்குறவர் முருகனை துதித்து குன்றக்குரவை ஆடுகின்றனர். முருகன் கிரௌஞ்ச மலையை துளைத்து, சூரனை அழித்ததை குழுவாக இணைந்து ஆடிப்பாடுகிறார்கள், முருகனது வேலின் வன்மையை வாழ்த்துகின்றனர்.   

சரவணப்பூம் பள்ளியறைத் தாயமார் அறுவர்
திருமுலைப்பால் உண்டான் திருக்கைவேல் அன்றே
வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து
குருகுபெயர்க் குன்றம் கொன்ற நெடுவேலே 
(குன்றக்குரவை, சிலப்பதிகாரம்)

கடல் அலைகளில் துடிக்கூத்து ஆடிய முருகனின் கதையை, மலைக்குறவர் ஆடிப்பாடியதுபோல. முருகன் சூரனை வென்ற கதை தெருக்கூத்து வடிவிலும் ஆடப்படுகிறது.

மேலும்...

தாமரைக்கண்ணன், புதுச்சேரி

ஓவியம் - விஷ்ணு ராம்

ஆடல் :: தொடர்