நவீன மொழியியல் அதன் அடிப்படைக் கருதுகோள்களை சசூர், ப்ளூம்பீல்ட், சபிர், டிருபிட்ஸ்கி, ஜேக்கப்சன், லூயிஸ் ஜெல்ம்ஸெவ், நாம் சாம்ஸ்கி, ஹாலிடேபைக் முதலிய சிந்தனையாளர்களின் கருத்துக்களை ஒட்டி உருவாக்கிக் கொண்டுள்ளது. இன்றைய மொழியியல் பொதுவாக செயல்முறை மொழியியல் (applied linguistics) என்று அழைக்கப்படுகிறது. ’மொழி எப்படி இருக்க வேண்டும்’ என்பதற்குப் பதிலாக ’மொழி எப்படி இயங்குகிறது’ என்பதுதான் இதன் கேள்வி. மொழியியல் மொத்தக் கலாச்சார இயக்கத்தையும் கணக்கில் கொண்டு பேச வேண்டியுள்ளது. ஏனெனில் மொழியே அனைத்து ஞானத்திற்கும் விளைநிலமாகவும், பின்னணியாகவும், சேமிப்புக் கிடங்காகவும் உள்ளது.
முதலில் மொழியியலை பொதுவாக இரண்டாகப் பிரித்துப் படித்து வந்தனர். பொது மொழியியல் (Macro linguistics) நுண் மொழியியல் (Micro linguistics). நுண் மொழியியலாளர்கள் மொழியின் இயங்குவிதிகளைப் பற்றி மட்டும் பேசினர். இலக்கண ஆசிரியர்கள், அகராதி வல்லுனர்கள் முதலியோர் இவ்வகைப்பட்டவர்கள். பொது மொழியியலாளர்கள் மொழியின் அனைத்து அறிவுச் செயல்பாடுகளையும் கணக்கில் கொண்டு பேசுபவர்கள். இவர்களில் அவர்கள் அழுத்தம்தரும் துறை சார்ந்து பற்பல வகையினர் உண்டு.
நவீன மொழியியல் தன்னை தத்துவத்திலிருந்து பிரித்துக்கொண்டு விஞ்ஞானம் நோக்கி நகர்கிறது. எல்லைகளை வகுத்துக்கொண்டு ஆய்வு செய்வது, ஊகங்கள், பகுப்பாய்வு, பொதுவிதிகளை உருவாக்குதல், அதன் அடிப்படையில் முழுமையைக் கற்பிதம் செய்தல், பரிசீலனை செய்தல், நிரூபித்தல் அல்லது நிராகரித்தல், விதி உருவாக்கம் - இவ்வாறு விஞ்ஞானம் இயங்குகிறது. இவ்வணுகுமுறையை நவீன மொழியியலும் கைக்கொள்கிறது. உளவியல், சமூகவியல், தொடர்பியல், இலக்கியம், கல்வி முதலிய துறைகளுடன் அது கொண்ட உறவின் விளைவாக சமூக மொழியியல் (Socio linguistics), உளமொழியியல் (Psycho linguistics), தொடர்பு மொழியியல் (discourse linguistics), நடையியல் (stylistics), கல்வி மொழியியல் (educational linguistics) போன்ற துறைகள் உருவாகி வேகமாக வளர்ந்து வருகின்றன.
இந்த இருபது வருடத்தில் மொழியியல் ஆய்வுத்துறையில் நடந்த மாற்றம் என்ன என்று கேட்டால் ஒரு வரியில் தன்னிலைக்கு பதிலாக முன்னிலையை முதன்மைப்படுத்தி மொழியை அறிய ஆரம்பித்ததுதான் என்று கூறலாம். ஒவ்வொரு தளத்திலும் மொழியை பயன்படுத்துபவர்கள் முக்கியப்படுத்தப்படுகிறார்கள். இலக்கிய அணுகுமுறைகளில் வாசகர்களும், கல்வி அணுகுமுறைகளில் கற்பவரும் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். மொழி ஒர் அமைப்பாக அணுகப்படுவதில்லை. அது ஒரு நிகழ்வாக அணுகப்படுகிறது. எனவே அதை நிகழ்த்துபவர்கள்தான் முக்கியமானவர்கள். அவர்களிடமிருந்து விலகி தனியாக மொழிக்கென்று தன்னிலை - சுயம் - எதுவும் இல்லை.
நவீன மொழியியல் பொதுவாக சிந்தனையில் உள்ள இருமைகளை (அல்லது) எதிரினைகளை (Binary) திட்டவட்டமாக வகுத்துக்கொள்ள விரும்பவில்லை. சித்தாந்தம் x நடைமுறை, தனிமனிதன் x சமூகம் போன்ற இருமைகளை அது ரத்து செய்துவிட விரும்புகிறது. சித்தாந்தம் என்பது அனைவருக்கும் பொதுவானதும் புறவயமானதுமான விதிமுறை என்றும், நடைமுறையானது சித்தாந்தத்தினை தனிமனிதர் செயல்படுத்தும் விதம் என்றும் பொதுவாகக் கூறப்படுகிறது. லூசியன் கோல்ட்மான் என்ற மொழியியலாளர் “சித்தாந்தம் நடைமுறை இரண்டுக்கும் நடுவே தருக்கபூர்வமான வேறுபாடு வகுப்பது மொழியியலில் சாத்தியமல்ல. சித்தாந்தம் நடைமுறையில் முன்வரைவாகவும், நடைமுறை சித்தாந்தத்தின் சுயமான இயங்குமுறையாகவும் உள்ளது” என்கிறார். இதன் தொடர்ச்சியாகவே சமூகம் - தனிமனிதன் என்ற இருநிலையையும் மொழியியல் ஏற்க முடியாது போகிறது. இவை விவாத உருவகங்கள் மட்டுமே. தனிமனிதன் ஒரு கலாச்சாரச் சூழலில், மொழிச் சூழலில் நின்றபடி அனைத்தையும் பார்க்கிறான். அச்சூழல் அவனால் கட்டுப்படுத்தப்படுவது அல்ல. அதை புரிந்து கொள்ளவும் மாற்றியமைக்கவும் அவன் விரும்புகிறான். இந்நிலையில் அவனது சுயம் அல்லது தன்னிலையை (subject) நாம் மறுக்க முடியாது. அது பொதுவானது புறவயமானது என்பதையும் மறுக்க முடியாது. ஒருவர் அகவயமாகவோ புறவயமாகவோ தன்னை முழுமையாக அடையாளம் காண்பது சாத்தியம் அல்ல. ஊடாடும் பல்வேறு கூறுகள் இந்த எல்லையை மங்க வைத்து விடுகின்றன. நவீன மொழியியல் ஒரு தனிமனிதனையோ குழுவையோ தனித்த அலகாகக் கண்டு ஆய்வு செய்வது இல்லை. அந்த தன்னிலைக்கு உள்ளே அதன் எல்லையைத்தாண்டிய பல அம்சங்கள் ஊடாடி இயங்குகின்றன. அதாவது ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்தின் ஒரு கூறாக உள்ளான். அதே சமயம், அத்தனிமனிதனுக்குள் உள்ள பொதுமனித அம்சம் (transindividual) தான் அச்சமூகத்தையே உருவாக்குகிறது. இது ஒரு பெரிய முரணியக்கம் (i ஆகும். பொதுவாக நமது சிந்தனையில் உள்ள பல இருமைகளை (அகவயம் x புறவயம், கருத்து x பொருள், எண்ணம் x செயல்) இவ்வாறு புரிந்து கொள்வது மொழியின் இயங்கு முறைகளை விரிவாகப் புரிந்துகொள்ள மிகவும் அவசியமானதாகும்.
|
சசூர் |
இருநிலைகளை இவ்வாறு ரத்துசெய்ய வேண்டிய அவசியம் சசூரின் மொழியியல் கொள்கைகள் பேசப்பட்டபோது உருவாயிற்று. சசூர் மொழியை பொதுமொழி (Langue), தனிமொழி (Parole) என்று பிரிக்கிறார் (அல்லது அகமொழி x வெளிமொழி என்று இதை மொழிபெயர்க்கலாம்). அகமொழி அல்லது பொதுமொழி அது “மொழியின் சமூகத்தளம் தனி மனிதனுக்கு வெளியே உள்ளது. அவன் அதை மாற்றவோ உருவாக்கவோ முடியாது. சமூக உறுப்பினர்களின் பொது ஒப்புதலின் அடிப்படையில் அது உருவாகிறது.” என்கிறார் சசூர். அதே சமயம் வெளிமொழி அல்லது தனிமொழி “தனி மனிதனைச் சார்ந்தது தனிமனிதனே எப்போதும் அதன் உரிமையாளன்.” என்கிறார். ஆனால் விவாதத்தின் பொருட்டுகூட நாம் இந்தப் பிரிவினையை ஒரு சூழலில் நிஜமாக நிகழ்த்திக் காட்ட முடியாது. தனிமனிதனில் இயங்கும் பொதுமனிதன் தனிமொழியிலிருந்து பொதுமொழியை உருவாக்குகிறான். தனிமனிதனிலிருந்து அவனுள்ளே இயங்கும் சமூகப் பொதுமனிதன் எப்படி, எந்தத் தருணத்தில் பிரித்து அறிய முடியும்? யீட்ஸின் கவிதை வரிபோல நடனமும் நடனக்காரியும் எப்படி பிரித்தறியப்படக்கூடும்? ஆகவே மொழியியல் முதலில் இருநிலைகளை உருவகம் செய்கிறது. அதனூடாக எழும் பிரச்சினைகளை ஆராய்கிறது. பிறகு இருநிலைகளை ரத்து செய்துவிட்டு ஆய்வைத் தொடர்கிறது.
சமூகவியலுக்கும் மொழியியல் ஆய்வுகளுக்கும் இடையே நீண்டகால உறவு உண்டு. மொழி ஒரு சமூக உருவகம். லோக்கே முதலிய அறிஞர்கள் மொழியை சமூகத்தை அளக்கும் கருவியாகப் பயன்படுத்தியுள்ளார்கள். சமூகம் என்பதைப் போலவே மொழி என்பதும் மிகத் தோராயமான ஓர் உருவகமே. தமிழ் என்று நாம் கூறும்போது அது ஒரு அடையாளம் மட்டுமே. அதற்குள் பல்வேறு உபமொழிகள், குறியீட்டு மொழிகள், துறைசார் மொழிகள், பல்வேறு உரையாடல் முறைகள் அடங்கியுள்ளன. மொழி சமூகத்தையும் சமூகம் மொழியையும் மாறிமாறி உருவகித்துக் கொள்கின்றன. இவ்வுறவின் தளங்களை விரிவாக ஆய்வு செய்வது சமூக மொழியியல். சமூகத்தில் மொழிக்கு உள்ள பங்கை ஆராய்வதல்ல இதன் நோக்கம்; சமூகத்திற்கும் மொழிக்கும் இடையேயான உறவை ஆராய்வதேயாகும். மொழியும் சரி, சமூகமும் சரி, அமைப்புகளல்ல; சிக்கலான தொடர் நிகழ்வுகள் மட்டுமே என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.
|
ஜான் லோக்கே |
மொழியின் சமூகச் செயல்பாட்டில் கீழ்க்கண்ட பிரதான அம்சங்கள் உள்ளன.
1. தொடர்புறுத்துவதற்கான முயற்சி
மொழியினூடாக சமூகம் தனிமனிதனிடமும் தனி மனிதன் சமூகத்திடமும் உறவுகொள்கிறார்கள். மொழி என்பது ஒரு சமூகப் பழக்கம்.
2. சமூக இயக்கத்திற்கான காரணி
மொழி உடனடித் தன்மை கொண்டதாகவும் (வாய்மரபு சார்ந்ததாக) புழக்கத்தைச் சார்ந்ததாகவும் இருப்பது சமூக இயக்கத்திற்குக் காரணமாகிறது. அனைத்து சமூகச் செயல்பாடுகளும் மொழியினூடாக - மொழிக்குள் - தான் நிகழ்கிறது.
3. புறவயமானதும் பொதுவானதுமான தளம்
மொழி அனைத்து மக்களும் சந்திக்கும் பொதுமை. உள்ளுணர்வு சாராதது. மரபு சார்ந்தது. குறியீடுகளின் மூலமும் முறைமை மூலமும் உருவானது.
4. வளரும் தன்மை
மொழி மானுடத் தன்மைகள் அனைத்தும் கொண்டது. அதன் ஒரு நுனி திறந்து கிடப்பது. திருத்திக் கொள்ள, விரிவடையச் செய்ய முடிவற்ற சாத்தியங்கள் உடையது.
5. பல அடுக்குத் தன்மை
மொழி எந்நிலையிலும் அறிந்ததும் அறியாததுமான பற்பல அடுக்குகளினால் ஆனதாக உள்ளது. இது சமூகத்தின் சிக்கலான இயக்கம் நிகழ உதவிகரமாக உள்ளது.
சமூக மொழியியலாளன் தன் சித்தாந்தங்களைப் போட்டுப் பார்த்து நிரூபிக்க உறுதியான ஒரு ஆய்வுக்களம் இல்லாதவனாக உள்ளான். எனவே சித்தாந்தங்களை உருவாக்கி அவற்றை நடைமுறையில் படிப்படியாக நிராகரிப்பது அவனுடைய வழிமுறையாக உள்ளது. பின்-அமைப்பியல் மொழியியலாளர் பலர் தங்கள் கருத்துக்களை மிகமிக உறுதியற்ற தளங்கள் மீதுதான் எழுப்பியுள்ளனர். உறுதியான தளம் என்பது வெறும் கற்பனைதான், அரை உண்மைகள் மூலம் உருவாக்கப்படுவதுதான் என்பது அவர்கள் கருத்து, காரணம் சமூகம் என்பது ஒரு கணமும் நிலைக்காத பெரிய சலனப் பிரவாகம் ஆகும். பற்பல மொழியியல் சித்தாந்தங்கள் நிரூபண தளம் நோக்கி நகரவே இல்லை என்பதையும் காணலாம்.
இப்பிரச்சினையை எதிர்கொள்ளும் சாம்ஸ்கி ஒரு கற்பனை சமூகம், கற்பனை மொழி ஆகியவற்றை உருவாக்கி அவற்றை மாதிரிகளாகக் கொண்டு தன் ஆய்வு முறைகளை நிரூபிக்க முற்பட்டார். அவரது இலட்சியப் பேச்சாளன் - சபை (ideal speaker - hearer) என்ற உருவகம் இத்தகையது. இங்கு ஒரு பேச்சுக்காக சமூகமும் மொழியும் ஒரு குறிப்பிட்ட தளத்தில் நிலையானவையாகவும் திட்டவட்டமான உள் அலகுகள் கொண்டவையாகவும் உருவகிக்கப்பட்டன. மீண்டும் நிஜ சமூகத்துடன் இந்த மாதிரியை நாம் இணைத்துப் பார்த்தாக வேண்டியுள்ளது. அப்போது இந்த மாதிரிகளுக்குள் நாம் நிறுவிய அனைத்தும் கலைய நேரிடுகிறது. ஆனால் இம்மாதிரி ‘மாதிரி மொழி’களை உருவாக்குவது இரு துறைகளில் உதவிகரமானது. ஒன்று: விஞ்ஞானத்தின் புதிய துறைகளில் அவற்றுக்குரிய தனி குறியீட்டு மொழியை உருவாக்கிக்கொள்ள இது உதவும். இரண்டு: கணிப்பொறித் துறையில் கணிப்பொறி மொழிகளை உருவாக்கிக்கொள்ள இதன் வழிமுறைகள் வழிகாட்டக்கூடும். சாம்ஸ்கியின் ஆய்வுகள் கணிப்பொறி மொழியியல் தளங்களில் பெரிய புரட்சிகளை உருவாக்கியவை என்று கூறப்படுகின்றன. ஆனால் சமூக மொழியியலில் இதனால் பயன் ஏதுமில்லை. சமூக மொழியியல் நீர்மேல் எழுதும் கலைதான்.
சமூக மொழியியல் மூலம் கவனத்திற்கு வந்த முக்கியமான விஷயம் மொழியில் இலக்கணத்திறனுக்கும் (linguistic competence) தொடர்புத் திறனுக்கும் (Communicative competence) இடையேயான உறவு ஆகும். முன்பு இவையிரண்டும் ஒன்றே என்று கருதப்பட்டது. கச்சிதமான இலக்கணமும் நல்ல அகராதியும் மொழியின் தொடர்புறுத்தும் திறனுக்குப் போதுமானவை என்றும் கருதப்பட்டன. சமகால தமிழறிஞர் பலரும் இப்படி நம்புபவர்கள்தாம். சமூக மொழியியல் மொழியின் தொடர்புத்திறன் என்பது சமூகத்திற்கும் அதற்கும் இடையிலான குறியீட்டு ரீதியான உறவிலிருந்து உருவாகக் கூடியது என்று அறிந்தது. இதற்காகத்தான் பேச்சுமொழி தொடர்ந்து புதிய சொற்படிமங்களை, சொல்லாட்சிகளை கண்டுபிடித்தபடியே உள்ளது. தொடர்ந்து இலக்கணத்தை மீறியபடியே உள்ளது. இலக்கணத்திறன் எழுத்துமொழி சார்ந்ததாகவே பெரிதும் உள்ளது. தொடர்புறுத்தும் திறன் பேச்சுமொழிக்கு அதிகம். எழுத்துமொழி, பேச்சுமொழியைப் பின்தொடரும்போதுதான் அதிகத் தொடர்புறுத்தும் தன்மையை அடைகிறது. நமது செய்திமொழி தொடர்ந்து இவ்வாறு மாறுவதைக் கவனிக்கலாம் (கருணாநிதி சூடு! வாஜ்பாய் குட்டு!). இலக்கணத்திறன் அல்லது எழுத்து மொழி உண்மையில் மொழியின் பலதரப்பட்ட இயக்கத்தில் ஒரு சிறிய பங்கை மட்டுமே பொருட்படுத்துகிறது என்பது சமூக மொழியியலாளர் கருத்து. எனவே அவர்கள் பேச்சுமொழியே முக்கியமானது, முதன்மையானது என்று கருதுகிறார்கள். சசூர், பக்தின் முதலியோர் இப்படிக் கருதியவர்கள்.
பேச்சுமொழியானது தொடர்புறுத்தும் தன்மையை அடைவதற்காகவும், மேம்படுத்திக் கொள்வதற்காகவும் தொடர்ந்து உருமாறியபடியே உள்ளது (பத்து வருடம் முன்பு அமெரிக்கா சென்ற தமிழர் திரும்பி வந்தால் சமகாலப் பேச்சுமொழியில் பாதிப் பங்கு புரியாமல் ஆகிவிட்டிருக்கும்). சமூகச்சூழல், உரையாடலின் தரப்புகள், சந்தர்ப்பம், பிற உடல் / குரல் சமிக்ஞைகள் ஆகியவை சார்ந்து பேச்சுமொழி மாறுபடுகிறது, உருவாகிறது. எழுத்துமொழி பேச்சுமொழியைப் பின் தொடராவிடில் இறந்துவிடும் (பண்டிதநடை செத்த நடையாக இருக்கிறது). ஆகப் படைப்பூக்கம் கொண்ட இலக்கிய நடை பேச்சுமொழியின் செவ்வடிவம்தான்.
|
டெல் ஹைம்ஸ் |
அதாவது மொழியின் தொடர்புறுத்தும் திறன் அதன் இலக்கணத்திறனையும் உள்ளடக்கி, வேறுபல விஷயங்களையும் சேர்த்துக்கொண்டு, உருவாகக்கூடிய ஒன்று. சாம்ஸ்கி முதலிய மொழியியலாளர்கள் மொழியின் இலக்கணத்திறனை மொழியியல் ஆய்வுக்குள் கொண்டுவரவே தேவையில்லை என்கிறார்கள். இங்கு ஒரு விவாதம் உண்டு. ’டெல் ஹைம்ஸ்’ போன்ற மொழியியலாளர்கள் இலக்கணம் என்பது மொழியின் அன்றாடச் செயல்பாட்டை கவனித்து, சில பொது அம்சங்களைப் பிரித்து அறிந்து, அவற்றை விதிமுறைகளாக மாற்றுவதன் மூலம் உருவாகக் கூடிய ஒன்று என்கிறார்கள். இதனால்தான் ஒரு மொழியின் இலக்கணம் தொடர்ந்து மாறுபடுகிறது. ’விட்டௌசன்’ முதலிய மொழியியலாளர்கள் மொழியின் இலக்கண விதிகளை நடைமுறைக்கு ஏற்ப எளிமைப்படுத்தி விரிவுபடுத்துவதன் மூலமே அதன் பிற தொடர்புறுத்தும் இயல்புகள் உருவாகின்றன என்கிறார்கள். இதில் முதல் அணுகுமுறையே வலுவாக உள்ளது. இதன் விளைவாகவே 'சரியான மொழி' என்ற கருத்து பின்வாங்கி 'சாத்தியமான சிறந்த மொழி' என்ற கருத்து வலுப்பட்டிருக்கிறது.
|
விட்டௌசன் |
சமூக மொழியியல் கவனத்திற்குக் கொண்டு வந்த இன்னொரு அம்சம் உணர்வுமொழி (Phatic communion) பற்றியது. நமது மொழியில் உணர்வை வெளிப்படுத்தும் ஓசைகள் மிகமிக முக்கியமானவை. அதேபோல மௌனத்தைத் தவிர்க்கும் பொருட்டு சொல்லப்படும் உபச்சாரச் சொற்களும் பேச்சைத் தொகுக்கும் பொருட்டு வரும் இடைச்சொற்களும் மிக முக்கியமானவை. இவை சில சமயம் மொத்தப் பேச்சையே மாற்றியமைத்து விடும். இவற்றை சமூக மொழியியல் விரிவாக ஆராய்கிறது. சமூக மொழியியலின் ஆய்வுகள் இன்று ஒரு பெரும் விஞ்ஞானத் துறையாக உள்ளன. இலக்கிய ஆக்கத்துடன் நேரடி சம்பந்தம் உடைய சில விஷயங்கள் மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
மனமும் மொழியும் கொள்ளும் தொடர்பு நவீன மொழியியலின் மிக முக்கியமான ஆய்வுக்களமாகும். மனதில் மொழி எப்படி உருவாகிறது என்ற வினா மிக அடிப்படையான ஒன்று. பதினேழாம் நூற்றாண்டு சிந்தனையாளரான ஜான் லோக்கே குழந்தை பிறக்கும் போது அதன் மனம் எதுவும் எழுதப்படாத ஏடாக உள்ளது (tabula rasa) என்றார். ஜான் கட்பிரைட் வான் ஹெர்டர் என்ற அறிஞர் மொழியானது இயற்கையின் மகத்தான சுய வெளிப்பாட்டுக்கு போதாததாக உள்ளது என்றார். எனவே அது எல்லைகளை மீறிச் செல்ல எப்போதும் துடித்தபடியே உள்ளது. மாறாக சார்லஸ் டார்வின் ’மனிதனின் ஆக்கம்’ (Descent of man) என்ற நூலில் பிற மிருகமொழிகளுக்கும் மனிதமொழிக்கும் இடையேயான வேற்றுமை ஒப்பீட்டளவில் மிகச் சிறியதே என்றார். ’பி.எஃப் ஸ்கின்னர்’ தன் ’சொற் புழக்கம்’ (verbal behaviours) என்ற நூலில் மொழியானது சூழலில் இருந்தே கற்கப்படுகிறது என்பதை விரிவாகப் பேசுகிறார். ஆனால் ’நாம் சாம்ஸ்கி’ தன் ’மொழிப் பிரயோக அமைப்புகள்’ என்ற பிரபல நூலில் (Syntactic structures) சூழலில் இருந்து குழந்தை சொற்களையே கற்கிறது, மொழியின் அமைப்பு அதன் மூளைக்குள் ஏற்கனவே உள்ளது என்கிறார்.
|
ஜான் கட்பிரைட் வான் ஹெர்டர் |
1951-ல் சமூக விஞ்ஞான ஆய்வு அமைப்பு (Social science research council) சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களினூடாகவே உளமொழியியல் என்ற புதிய துறையின் உருவாக்கம் நிகழ்ந்தது. முன்பு பழக்க உளவியலில் (Behaviouristic psychology) மொழியின் வெளிப்பாடு மனத்தின் வெளிப்பாடாகவே கருதப்பட்டது. ’நான் அஞ்சுகிறேன்’ என்று ஒருவன் சொன்னால் அந்த உளநிலையின் வெளிப்பாடாகவே அது கருதப்பட்டது. ஆனால் பிற்பாடு அந்த மொழிச்சூழலில் அச்சொற்கள் தரும் பொருள் முக்கியமானது என்ற கருத்து வலுப்பெற்றது. அதற்கு நடைமுறையில் ’நான் தவிர்க்க விரும்புகிறேன்’ என்றோ, ’நான் தாக்கப் போகிறேன்’ என்றோ, ’தனக்கு முடிவு எடுக்க முடியவில்லை’ என்றோ அர்த்தம் வரக்கூடும். ஏனெனில் மொழி ஒருபோதும் நேரடியானதல்ல. ஒருபோதும் அதற்கு திடமான புறவய அர்த்தம் இருப்பதில்லை. ’ஒரு உணர்வுக்கு இணையாக ஒரு சொல்’ என்ற அடிப்படையில் மனம் இயங்குவதில்லை. ’ஓர் உணர்வுக்குப் பதிலாக ஒரு சொல்’ என்ற அடிப்படையில் மனம் இயங்குகிறது. அதாவது மொழியை மனிதன் மனதின் பிரதிநிதியாகக் கொள்வதில்லை. மனதின் பதிலீடாகவே கொள்கிறான். மொழி என்பது பதிலீடுகளினாலான ஆட்டம். இந்நிலையில் உளவியலும் மொழியியலும் பிரிக்க முடியாதவை ஆகின்றன. மொழியினூடாக உள்ளமும் உள்ளத்தில் மொழியும் இயங்குகின்றன. இதன் விளைவே உளமொழியியல்.
|
பி. எஃப். ஸ்கின்னர் |
உளமொழியியல் மொழி 1.அடையப்படும் விதம், 2.அறியப்படும் விதம், 3.உருவாக்கப்படும் விதம் என்ற மூன்று தளங்களை ஆராய்கிறது. முதல் தளம் வளர்ச்சி சார் உளமொழியியல் (developmental psycholinguistics) என்றும் பிற இரு தளங்கள் சோதனை உளமொழியியல் (experimental psycholinguistics) என்றும் வகுக்கப்பட்டுள்ளன. குழந்தை எப்படி மொழியை அடைகிறது என்பது முக்கியமான வினா. பொருட்களை ஒலிகளுடன் குழந்தை அடையாளப்படுத்திக்கொள்கிறது, இதற்கு பெரியவர்கள் உதவுகிறார்கள். பிறகு ஒலிகளை இணைத்து, பொருள்வய உலகை பெரிய வலையாகப் பின்னி உருவாக்குகிறது. தன்னை அந்த வலையில் பிரதிபலித்து அறிகிறது. அதாவது குழந்தையின் சுயம் மொழியினூடாக அறியப்படும் ஒன்று ஆகும். 1950களில் நாம் சாம்ஸ்கி இத்துறையில் மிக முக்கியமான ஆய்வுகளை செய்தார். அவருடைய ’மாறுதல் சார்ந்த ஆக்கமுறை இலக்கணம்’ (transformational generative grammar) எவ்வாறு மொழி உருவாக்கப்பட்டு அறியப்படுகிறது என்பதை வகுக்க முயன்றது. இது பிற்பாடு செயற்கை மொழிகளை உருவாக்கும் அறிவுத்துறைகளில் (குறிப்பாக கணிப்பொறித் துறையில்) பெரிய புரட்சியை நிகழ்த்தியது.
|
நாம் சாம்ஸ்கி |
சாம்ஸ்கி என்ன சொல்கிறார்? பழக்கமுறை உளவியல் (behavioristic psychology) உருவாக்கிய கொள்கைகளே அதுவரை குழந்தைக்கும் மொழிக்குமான உறவுகளை அறிய ஒரே பாதையாக இருந்தன. மொழியானது வெளியேயிருந்து குழந்தைக்குள் செலுத்தப்படுகிறது என்றும், குழந்தை அதைப் பழகிப் பழகி தனது ஆளுமையை உருவாக்கிக் கொள்கிறது என்றும் இவ்வணுகுமுறை கூறியது. அதாவது அத்தனை மொழி நிகழ்வுகளும் சமூகப் பழக்க வழக்கத்தின் நேரடி விளைவுகளே என்றது இவ்வணுகுமுறை. இவ்வணுகுமுறையை முற்றாகமறுக்கிறார். குழந்தைக்கு ஒலிக்குறிப்பான்கள் (signifiers) மட்டுமே சமூகத்தால் அளிக்கப்படுகின்றன. அதாவது சொற்கள். அச்சொற்களை இணைத்து தன் மொழிப் பரப்பை அதுவே தன் உள்ளார்ந்த இயல்பால் உருவாக்கிக் கொள்கிறது. ஐம்பது சொற்கள் மட்டும் அறிந்த இரண்டு வயதுக் குழந்தை அதுவரை மானுடகுலம் உருவாக்காத புதிய புதிய சொல்லிணைவுகளை பல்லாயிரணக் கணக்காக உருவாக்கும். இந்த திறன் அதன் மூளைக்குள் உள்ள ஒரு நரம்புத் திறன் ஆகும். அது வெளியேயிருந்து சமூகத்தால் தரப்படும் திறன் அல்ல. பிறவித் திறன். இந்த அகமொழியமைப்பு உலகப் பொதுவானது, இதை சாம்ஸ்கி ‘மொழிப் பொதுமை’ (Language universals) என்கிறார். இன்னொரு இடத்தில் இதை ’அகவய அறிவுக் கட்டுமானம்’ என்கிறார் (Latent knowledge structures). இவ்வமைப்பே மொழியையும், மொழியினூடாக பொருள்வய உலகத்தையும் அறிகிறது. இதற்கான விளக்கத்தை நரம்பியலிலேயே தேட வேண்டும். மூளையின் நரம்பமைப்பிற்கும் சமூகத்திற்கும் இடையேயான பொதுவெளியாக மொழி உள்ளது.
சாம்ஸ்கி சமீபகாலமாக மேலும் முன்னகர்ந்து வெளிமொழி (External language, E-language), அகமொழி (Internal language, I-language) என்று இரு பிரிவுகளை கற்பிதம் செய்கிறார். அவருடைய ஆய்வு மேன்மேலும் உளம் சார்ந்ததாக ஆகிவருகிறது. பொதுவாக உளமொழியியலின் அறிதல்களை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.
1. மானுட மனம் என்பது உலகத்தின் பிரதிபிம்பங்களை உருவாக்கியும், வளர்த்தும், மாற்றியமைத்தும் இயங்கும் சிக்கலான இயங்குமுறை கொண்ட ஓர் அமைப்பு. மொழியறிவு என்பது மேற்கண்ட இயங்குவிதிகளின் ஒலிரீதியான மறுவடிவம் மட்டுமே.
2. மொழி சமூகத்திலிருந்து மனதிற்குள் செலுத்தப்பட்டால்தான் மொழியறிவு ஏற்படும். ஆனால் ஏற்கனவே உள்ளே இருக்கும் சிக்கலான அறிதலுக்கான அக அமைப்பைத்தான் இம்மொழி தொட்டு உசுப்பி உயிர்பெறச் செய்கிறது. உள்ளே இருப்பது அகமொழி. வெளியே இருந்து செல்வது வெளிமொழி. நாம் மொழி என்று சொல்வது இவை இரண்டும் சந்திக்கும் புள்ளியையே ஆகும்.
3. மொழியறிவு என்பது புறவய உலகு பற்றிய அறிதலில் இருந்து வேறுபட்டது. மானுடப் பிரக்ஞை புறயதார்த்தத்தை வகுத்துக் கொள்ளும் பொருட்டு மொழியைப் பயன்படுத்துகிறது. ஆனால் மொழியிலிருந்து சுதந்திரமாகவே அது இயங்குகிறது.
4. நமது மொழிச் செயல்பாடு மொழியறிவின் இயங்குமுறை மட்டுமல்ல. நமது புறவய அறிதல், அகவய உந்துதல்கள், மொழி என்ற அமைப்பு முதலியவை ஒன்றோடொன்று ஊடுருவி இயங்குவதன் மூலம் ஏற்படக்கூடிய சிக்கலான ஒரு நிகழ்வு அது. மொழியை நாம் பயன்படுத்தும் விதத்தில் இத்தகைய பல்வேறு அக அமைப்புகளுக்கு இடையேயான உரசல்களின் மூலம் உருவாகும் சிதைவுகளையும் போதாமையையும் காண முடியும். உதாரணம் மறதி, கச்சிதமற்ற வெளிப்பாட்டு முறை முதலியவை.
5. அகமொழி என்பது ஒரு தனிநபரில் உள்ள விசேஷமான மன அமைப்பின் ஒரு பகுதி ஆகும். மனம் என்பது அந்த அகமொழியைப் போலவே வேறு பல அக அமைப்புகள் உடையது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிராந்தியம். இவை பரஸ்பரம் ஊடறுத்தும், பரஸ்பரம் முழுமை செய்தும் இயங்குகின்றன. தொகுத்தல், பகுத்தல், எண்ணிக்கை, புதிர் அவிழ்ப்பு, சித்தாந்தப் படுத்தல் முதலிய பல்வேறு அறிதல் முறைகளில் ஒன்றுதான் மொழியும் என்று 1975-ல் குறிப்பிட்டார்.
|
பியாகெட் |
சாம்ஸ்கியைப் போலவே முக்கியமான உளமொழியியலாளர் பியாகெட். இவர் குழந்தை தன் மொழியை அடையும் நிலைகளை ஐந்து கட்டங்களாக வகுத்துக் குறிப்பிட்டார்:
1. புலன்களினூடாக வரும் பிம்பங்களைத் தொகுத்துக்கொள்ளுதல்
2. பிம்பங்களை அர்த்தப்படுத்திக்கொள்ளும் நிலை
3. பகுப்பு, பிரிப்பு, பொதுமைப்படுத்தல் முதலியவற்றைச் செய்ய ஆரம்பிக்கும் நிலை
4. திட்டவட்டமான மன இயக்கம் உருவாகும் நிலை
5. மன இயக்கம் ஒரு பழக்கமாக மாறி இயல்பாக நிகழும் நிலை.
பியாகெட், சாம்ஸ்கி இருவருக்கும் இடையே 1975-ல் பாரீஸ் நகரில் உலக மொழியியல் / உளவியல் அறிஞர் முன்பு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் விவாதம் உளமொழியியலில் மிக முக்கியமான நிகழ்வு. அங்கு நடைபெற்ற விவாதத்தின் கருத்துக்களைப் பொதுவாக இவ்வாறு தொகுத்துக் கூறலாம். உளமொழியியலில் இன்றும் இவ்விவாதம் தொடர்கிறது.
1. மானுட மனம் என்பது செயலூக்கம் கொண்ட ஓர் அமைப்பு என்று பியாகெட் கூறினார். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தியபடி தன் சிறந்த இயல்புகளை அடையும் பொருட்டு அது நகர்கிறது என்றார்.
சாம்ஸ்கி இதை மறுத்து மனித மனம் என்பது குறிப்பிட்ட வகையில் செயல்படும்படி கட்டமைக்கப் பட்ட சிறு சிறு அக அமைப்புகளின் தொகுப்பு என்றார். இது நரம்பு அமைப்பின் சிறப்பியல்போ அல்லது வேறு காரணங்களின் விளைவோ ஆகலாம். மொழி அவற்றின் இயக்கத்தைத் திட்டவட்டமாக மாற்றக் கூடிய ஓர் அமைப்புதான். மொழி என்பது சூழல் சார்ந்த ஒரு புறத்தூண்டல் மட்டுமே. சாம்ஸ்கி அறிவு என்பது பெரும்பாலும் பிறப்பில் வருவதுதான், அறிவின் இயங்குமுறைகள் இயற்கையைச் சார்ந்தவை என்றார். அனுபவம் மூலம் மனிதன் எதையும் கற்பதில்லை, அடிப்படையில் அவன் உலகை அறியும் விதம் முற்றிலும் அவனுடைய அக இயற்கையை சார்ந்ததுதான், அந்த அறியும் உந்துதல் மற்றும் அறியும் முறைதான் மானுட மொழியையும் வடிவமைக்கிறது என்றார். யாரும் எதுவும் கற்றுத் தருவதற்கு முன்பே குழந்தை உலகை அறிய ஆரம்பித்துவிடுகிறது. மொழி பிறகு வந்து அந்த அறிதலைத் துலக்குகிறது. அதாவது குழந்தை மனம் தூய ஏடு அல்ல. அதில் ஏற்கனவே அதன் இயங்குமுறை உள்ளது.
2. பியாகெட் குழந்தைகளுக்கு பெரியவர்களின் சிந்தனை முறையானது பல்வேறு படிநிலைகளினூடாக அளிக்கப்படுகிறது என்றும், அவர்கள் அவற்றில் உகந்த அறிதல் முறைகளை ஏற்று தங்கள் சூழலுக்கு ஏற்ப விரிவுபடுத்திக் கொள்கிறார்கள் என்றும் கூறினார்.
சாம்ஸ்கி இதை மறுத்து மானுட மனம் இயங்கும் முறை இத்தகைய பரிணாம வாதம் மூலம் விளக்கப்பட முடியாத ஒன்று என்றார். காரணம் தத்துவார்த்தமாகப் பார்த்தால் வலுவற்ற தருக்க முறைகளில் இருந்து வலுவான தருக்க முறைகள் உருவாக முடியாது. மனித குலத்தின் தருக்க ஞானம் வளர்ந்தபடியே வருகிறது. தனி நபரின் அறிதல் முறை அவனுக்குள் இருந்து வருவது. அது மானுடப் பொதுவான இயல்புகள் கொண்டிருப்பது மானுட அகமும் பொது இயல்புகள் கொண்டுள்ளது என்பதனாலேயே என்றார்.
3. நமது மனம் படிமங்களினால் ஆனது. பியாகெட் நாம் நமது புற உலகை பிரதிநிதித்துவம் செய்யும் படிமங்களினால் நமது மனதைப் படிப்படியாக உருவாக்கிக் கொள்கிறோம் என்கிறார். இந்த மன உருவாக்கம் நமது சமூக / மொழிச் சூழலின் விளைவு என்கிறார். குழந்தையின் இரண்டாம் வயதில் புலன்கள் தெளிவு பெறுவதுவரை இந்த பிரதிநிதித்துவப் படிமங்கள் உருவாவதில்லை. இது உருவான பிறகுதான் குறியீடுகளினாலான பெரும் ஆட்டமாக மனம் இயங்கத் தொடங்குகிறது என்றார்.
சாம்ஸ்கி மனதின் பிம்ப விளையாட்டையும் மொழியையும் ஒருபோதும் இணைத்துக் கொள்ளக் கூடாது என்கிறார். அவை வேறு வேறு பிராந்தியங்கள். மொழியை அறிவதற்கு முன்பே குழந்தையின் மனதின் பிம்ப இயக்கம் தொடங்கிவிடுகிறது. அப்பிம்பங்கள் படிமங்களே. (அம்மாவின் உடையின் நிறம் பசியின் குறியீடாக குழந்தை மனதில் இருக்கலாம்) குழந்தை பிம்பப் பிரதிநிதித்துவம் உருவாக்கிக் கொள்ளும் மூளையமைப்புடன்தான் பிறக்கிறது.
4. பியாகெட் மானுட மனத்தில் பல்வேறு அக அமைப்புகள் உள்ளன என்று எண்ணுகிறார். மனதின் அகப்படிம அமைப்புகள்மீது பிற்பாடு அமையப் பெற்ற மொழி அமைப்பும் தருக்க அமைப்பும் ஏறி உட்கார்ந்திருக்கின்றன. அவை பரஸ்பரம் போராடுகின்றன, பரஸ்பரம் உரையாடுகின்றன, பரஸ்பரம் அர்த்தப்படுத்திக் கொள்கின்றன. இந்த சிக்கலான ஊடாட்டத்தின் விளைவே சிந்தனை என்பது (அதாவது சிந்திக்கும்போது அகமனதின் படிமங்கள் தருக்கங்களையும் மொழிப் பிரயோகங்களையும் உருவாக்குகின்றன. அகமனதின் படிமங்களோ மொழியமைப்பாலும் தருக்கங்களாலும்தான் தொகுக்கப்பட்டுள்ளன.)
சாம்ஸ்கி மனதின் அகபிம்ப இயக்கமும், மொழியும், தருக்கமும் வெவ்வேறு பிராந்தியங்களாகவே இயங்குகின்றன என்கிறார். ஒவ்வொரு அறிதல் முறையும் ஒவ்வொரு பிராந்தியம். மூளையின் வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்தவை அவை. வளர்ச்சியின் போக்கில் அவற்றுக்கு இடையேயான உறவின் சமநிலைகள் அமைகின்றன. மூளை இதயத்தைப் போலவே சுயமான கால அட்டவணை உடைய ஓர் உறுப்பு ஆகும்.
உளமொழியியலில் ’குழந்தைப் பேச்சு’ மிக முக்கியமான ஒரு விஷயம் ஆகும். அதிலிருந்து மானுடமனம் மொழியைப் பயன்படுத்தும் விதம் பற்றிய பல தெளிவுகள் கிடைக்கின்றன. குழந்தை தன்னிடமுள்ள குறைந்த சொற்களை வைத்து ஆகச் சிறந்த வெளிப்பாட்டைக் கண்டடைகிறது. முதலில் அது பெயர்களையும் வினைகளையும் ஒரு புள்ளியில் குவிக்கிறது (பூனையை மியா என்கிறது). பெயர் வினைகளினாலான ஒரு வலையைப் பின்ன ஆரம்பிக்கிறது பல சமயம் குழந்தை மொழியில் அமையும் சிறந்த வெளிப்பாடுகள் பெரியவர்களின் மொழியால் எடுத்தாளப்படுகின்றன (உதாரணம்: why daddy no go?). இன்னும் கூறப் போனால் பெரியவர்களிடமிருந்து குழந்தை கற்பதைவிட குழந்தைகளிடமிருந்து பெரியவர்கள் கற்பது அதிகம்.
குழந்தை தன் மொழியை அறியும் விதம் பற்றி விரிவான விவாதம் உள்ளது. அர்த்தங்களிலிருந்துதான் குழந்தை சொல்லிணைவுகளைப் பெறுகிறது என்று ஒரு தரப்பு. சொல்லிணைவுகளிலிருந்தே குழந்தை அர்த்தங்களைப் பெறுகிறது என்பது இன்னொரு தரப்பு (Semantic bootstrapping, syntactic bootstrapping). முதல் சாரார் குழந்தைக்கு முதலில் சொற்களும் அர்த்தங்களும் கற்றுத் தரப்படுகின்றன, அவை சொற்பிரயோகங்களை அவற்றிலிருந்து உருவாக்குகின்றன என்பர். அனுபவங்களுக்கு ஏற்ப குழந்தை தன் சொற்பிரயோகங்களை மாற்றியபடியே வருவதைக் குறிப்பிடுகிறார்கள். மறுதரப்பினர் குழந்தையின் உள்ளார்ந்த மொழியமைப்பு (அகமொழி) அதற்கு சொற்றொடர்களை உருவாக்கும் திறனை அளிக்கிறது என்றும், அந்த சொற்றொடர்களிலிருந்து அவை சொற்களின் அர்த்தத்தைச் செம்மை செய்தபடியே செல்கின்றன என்றும் குறிப்பிட்டார்கள். உதாரணமாக முற்றிலும் விழியிழந்த குழந்தைகள் மொழியினூடாகவே பார்த்தல், காண்தல், கவனித்தல், கண்ணில் படுதல் போன்ற சொற்களை தனித்தனியாக அடையாளப் படுத்திப் புரிந்துகொண்டு பயன்படுத்துகின்றன. அதாவது அனுபவம் வழியாக குழந்தை அர்த்தங்களை அடைவது இல்லை. அகமொழியினூடாகவே அர்த்தங்களை அடைகிறது. இவ்விவாதம் முடிவுற்றது.
உளமொழியியலில் உள்ள இன்னொரு முக்கியமான பிரச்சினை ஞாபகம் பற்றியது ஆகும். நாம் அறிபவை எப்படி நம் ஞாபகத்தில் உள்ளன? அவை எப்படி திரும்பப் பெறப்படுகின்றன? அதில் மொழியின் பங்கு என்ன? ஞாபகம் இருவகை. குறுகியகால ஞாபகம். நீண்டகால ஞாபகம். குறுகியகால ஞாபகத்தில் விஷயங்களின் அமைப்பு அதேபடியாகத் திரும்ப வருகிறது. நீண்டகால அனுபவத்தில் அது சாராம்சப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு கவிதையை இவ்வாறு சாராம்சம் செய்வது எது? இதில் நரம்பமைப்பு மேற்கொள்ளும் பங்கு என்ன? இன்றும் விவாதம் நிகழும் ஒரு தளம் இது. ஒருவர் பேசும்போது புறவய மொழியுடன் அகவயமொழியும் (சாம்ஸ்கியின் அர்த்தத்தில்) அவ்வுரையாடலில் ஈடுபடுகிறது. அகமொழியே சாராம்சத்தை உருவாக்குகிறது போலும். உளமொழியியல் பலவகையிலும் மொழியின் இயக்கத்தைப் பகுத்து ஆய்வு செய்கிறது. இங்கு மிக முக்கியமான ஒரிரு கருத்துக்கள் மட்டுமே இவ்வாய்வு முறையின் போக்கை அறிமுகம் செய்யும் பொருட்டு தரப்பட்டுள்ளன.
சொல்லாடல் (discourse) என்பது மொழியியல் மூலம் கவனத்திற்கு வந்த ஒரு சிந்தனை முறை. மொழியில் நிகழும் ஒவ்வொரு சலனமும் ஒரு வலையின் அசைவு போன்றது. சூழலை அதைப் புரிந்துகொள்ள அம்மொழி நிகழ்வின் மொத்தப் பின்புல இயக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஒரு ’மொழிதல் சூழலை’ உருவகித்துக்கொள்ளுதலே சொல்லாடல் எனப்படுகிறது. அதாவது சொல்லாடல் என்பது மானசீகமாக உருவகிக்கப்படும் ஒரு அர்த்தப் பிராந்தியம் ஆகும். முன்பு மொழியியலில் எழுதப்பட்ட மொழிவழித் தொடர்புகளை பிரதி (Text. எம்.டி.எம். தமிழாக்கத்தில் மேலும் குறிப்பாக பனுவல்) என்றும் பேசப்படும் தொடர்புமுறையை சொல்லாடல் (வேறு ஒரு அர்த்தத்தில் சொற்களின், சொல்லாடல் என்பது வேரூன்றிவிட்டது) என்றும் குறிப்பிட்டு வந்தனர். வான் டிஜிக் (1977) பொதுவான மொழித் தொடர்புக்கான களத்தை சொல்லாடல் என்றும், அதில் குறிப்பாக நிகழும் எல்லைக்குட்பட்ட சொற்தொகுப்பை பனுவல் என்றும் வகுக்கிறார். விட்டௌசன் சொற்களின் 'சாத்தியமான’ இணைவுநிலைகள் அனைத்தையும் அடக்கியது சொல்லாடல் என்றும், 'பயன்படுத்தப் படும்' சொற்களும் பொருட்களும் மட்டும் அடங்கியது. பனுவல் என்றும் வகுக்கிறார். நடைமுறையில் பனுவல் என்பது ஒரு மொழி அமைப்பு அல்லது எல்லைக்குட்பட்ட (இரு அட்டைகளால் தொகுக்கப்பட்ட?) ஒரு மொழிக் களம். சொல்லாடல் என்பது ஒரு புள்ளியிலிருந்து விரிந்துகொண்டே போகும் ’மொழி நிகழ்வுச் சூழல்’ இவ்வேறுபாடு பொதுவாக அத்தனை துல்லியமானது அல்ல.
|
வான் டிஜிக் |
சொல்லாடல் ஆய்வுமொழியின் அர்த்த நிகழ்வை 'ஊடாட்டம்' என்று கூறுகிறது (interaction). அதாவது ’அர்த்தம்’ பகிரப்படுதலினூடாக தாற்காலிகமாக உருவாகக் கூடிய ஒன்று என அது கருதுகிறது. இது சொல்லிக் கேட்டல் / எழுதிப் படித்தல் என்று இரு நிலைகளில் நடைபெறுகிறது. மொழியியல் ஆய்வின் துவக்கநிலைகளில் எழுத்துவழி சொல்லாடல் செயற்கையானது என்றும் பல்வேறு ஊடாட்டங்களுக்கு வாய்ப்பு இல்லாது இறுகியது என்றும் கருதப்பட்டது. வாய்மொழிச்சொல்லாடல் விரிந்த ஊடாட்டத் தன்மை கொண்டது என்று கருதப்பட்டது. பக்தின், டி.சசூர் போன்றவர்கள் இவ்வாறு கருதியவர்கள். (இக்கருத்துக்கள் தமிழிலக்கிய விமரிசனத் துறையில் மிதமிஞ்சிய உற்சாகத்துடன் முன்வைக்கப்பட்டது ஞாபகமிருக்கலாம். எல்லாம் படைப்பே, எல்லாரும் படைப்பாளிகளே என்ற அதிஜனநாயக கோஷத்திற்கும் இது வழிவகுத்தது). இன்று இக்கருத்து மொழியியலில் ஏற்புடையதாக இல்லை. எழுதப்பட்ட மொழி நிகழ்வில் உள்ளூர மாறுபட்ட குரல்கள் ஒலித்தபடி விரிய சாத்தியம் உள்ளது இதை ஊடாட்டச் செயல்பாடு (interactivity) என்கிறது மொழியியல். ஆனால் வாய்வழி மொழி நிகழ்வில் ஊடாட்டம் (interaction) மட்டுமே நிகழ முடியும். அதாவது பன்முக வாசிப்புத் தன்மை, அல்லது உள்விரிவு, அல்லது ’ஆழம்’ எழுத்து வடிவ வெளிப்பாட்டுக்கு அதிகம். அதில் நாம் பல்வேறு உட்குரல்களைக் கேட்க முடியும்.
|
கிரிஸ் |
சொல்லாடலை ஒரு சமூகத் தொடர்பு முறையாக மொழியியல் விரிவாக ஆய்வு செய்கிறது. இதில் கிரிஸ் (Gries 1975) என்பவரது ஆய்வுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது. ஆஸ்டின் (Austin 1962) முக்கியமான முன்னோடி ஆய்வாளராகக் கருதப்படுகிறார். ஆஸ்டினின் ’சொற்களைப் பயன்படுத்துவது எப்படி’ (How to do things with words) என்ற நூல் ஒரு சொல்லாடல் உருவாகி வரும்விதம் பற்றிய அடிப்படையான விதிகள் சிலவற்றை வகுக்க முயல்கிறது. கிரிஸ் இவற்றை முழுமைப்படுத்தித் தொகுத்தார். மொழிதல் கோட்பாடுகள் (Maxims of conversation) என்று அவற்றை அவர் குறிப்பிடுகிறார். தகவல் அளவு, உண்மை மதிப்பு, சமூக உறவு, வெளிப்பாட்டு முறை ஆகியவற்றைச் சார்ந்து சொல்லாடல் களனில் மொழி நிகழ்வுகள் சாத்தியமாகும் முறைபற்றி விரிவாக ஆய்வு செய்கிறார்.
|
ஆஸ்டின் |
சொல்லாடல் சார்ந்த மொழியியலாய்வு முன் வைக்கும் முக்கியமான ஒரு கருத்து மன உருவகங்கள் (mental models) ஆகும். மிகச் சமீபகாலமாக இலக்கிய விமரிசனத் துறையிலும் இக்கருத்து பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. மொழியின் உருவாக்கம் நிகழும் போதே புரிதல் சார்ந்த பொதுமன உருவகம் ஒன்றும் நம் மனதிற்குள் நிகழ்ந்துவிடுகிறது. கண்ணுக்குத் தெரியாத கோடுகளினாலான ஒரு களம் இது. பிறகு மொழியினூடாக அடையும் விஷயங்களை மனம் இந்த ’கோடு’களுக்கு ஏற்ப அடுக்கிவைத்துத்தான் புரிந்து கொள்கிறது. பொதுவாக மானுட குலத்திற்கே உரிய ஒரு பொதுமன உருவகம் அனைத்து மொழிகளுக்கும் பொதுவானதாக உண்டு. எனவேதான் மொழிபெயர்ப்பு சாத்தியமாகிறது. அதற்குள் ஒவ்வொரு மொழிக்கும், ஒவ்வொரு வகை அறிவுத்துறைக்கும் தனித்தனியாக மன உருவகங்கள் உண்டு. உதாரணமாக, நவீன இலக்கியம் சார்ந்த மன உருவகம் வேறு, மரபிலக்கியம் சார்ந்த மன உருவகம் வேறு. மன உருவகம் என்பது மனதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள சில முன்முடிவுகள் அல்லது முன்னறிதல்கள் (இந்திய மரபின் மொழியியலில் இவ்விஷயம் ‘சமாந்தர பூர்வபத்யம்' எனப்படுகிறது. முன்னறிதலின் ஒரு அம்சம் இன்றி எதையும் புதிதாக அறிய முடியாது என்கிறது இத்தரிசனம். பௌத்த சிந்தனை மரபில் பிரதான இடம் வகிப்பது இது). இந்த மன உருவகத்தை ஒரு சமூகம் கூட்டாகப் படைத்து, தொடர்ந்து மாற்றியமைத்தபடியே உள்ளது. (இதை லாங் எனும் அகமொழியுடன் குழப்பிக் கொள்ளலாகாது). ஜான் லெயர்ட் (1983) எனும் மொழியியலாளர் ஒரு சொல்லாடலில் பங்குபெறும் பல்வேறு தரப்பினர் பல்வேறு வகையான மன உருவகங்களுடன் இருக்கிறார்கள் என்றும் பேசுபவர் இவையனைத்தையும் கணக்கில் கொண்டபிறகுதான் தன் சொல்லிணைவுகளை உருவாக்குகிறான் என்றும் கூறுகிறார். அதாவது ஊடாட்டம் பொதுவான ஒரு மன உருவகத்தின் உள்ளே அல்ல பல்வேறு மன உருவகங்களுக்கு இடையேதான் நடை பெறுகிறது. இரு வகையான தளங்கள் சொல்லாடலுக்கு உள்ளன. ஒன்று மேலோட்டமான ஒப்புமைத்தளம். இன்னொன்று மன உருவகத்தின் தளம். மன உருவகம் என்பது ஏற்கனவே உள்ளே இருக்கும் முன் அமைப்புகளுக்கும் புதிய தகவல்களுக்கும் இடையேயான உறவினூடாக ஒவ்வொரு தருணத்திலும் உருவாக்கப்படுகிறது.
|
ஹால்லிடே |
இக்கருத்தின் விரிவாக்கமே ’பொதுப் புரிதல்’ (Scheme) என்ற கருத்தாக மொழியியலில் கையாளப்படுகிறது. ’ஒவ்வொரு தனிப் புரிதலும் சம்பந்தப்பட்டவரின் ஒட்டுமொத்த வாழ்க்கைப் புரிதலின் மூலம்தான் அடையப்படுகிறது.’ என்பது இக்கருத்தின் சுருக்கம். புரிதலுக்கான பின்னணி அல்லது அர்த்தக் களம்தான் ஸ்கீமா என்பது என ஓரளவு கூறலாம். எந்தப் பொதுவான அர்த்தப் பின்புலத்தில் பொருத்தி ஒவ்வொன்றையும் நாம் புரிந்துகொள்கிறோமோ அது தான் இது. இப்பொதுப் புரிதலை மொழியியல் மிக விரிவாகவும் மாறுபட்ட தளங்களில் வைத்தும் பேசுகிறது. வடிவச் சட்டகங்கள் (Frames) லிபிகள் (scripts) சித்தரிப்புச் சூழல்கள் (scenarios) என்றெல்லாம் இது விளக்கப்படுகிறது. ஆனால் இவை இம்மன உருவகத்தினை விளக்கப் பயன்படுத்தப்படும் உவமைகள்தான். மொழியின் மூன்று செயல்நிலைகளில் பொதுப்புரிதல் முக்கியப் பங்கு ஆற்றுகிறது என்று ஹால்லிடே குறிப்பிடுகிறார். அவை கருத்துருவாக்கம், பரிமாற்றம், பிரதியுருவாக்கம் ஆகியவை. கணிப்பொறியியல் சார்ந்து செயற்கை மொழிகளை உருவாக்க முனைபவர்கள். பொதுப் புரிதல் என்பது ஒவ்வொரு சொல்லாடலுக்கும் திட்டவட்ட அர்த்தம் தரும் ஒரு பின்புல அர்த்த சட்டகம் அல்லது லிபி என்கிறார்கள். பொதுப் புரிதல் மேலும் சலனத்தன்மைகொண்ட ஒரு அக நிலைப்பரப்பு என்ற புரிதல் இலக்கியம் சார்ந்த ஒன்று. உதாரணமாக ’அறுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.’ என்ற சொற்றொடரை எப்படி புரிந்துகொள்கிறோம்? இணைவு, அறுத்தல், வருதல், இருத்தல் என்று பல வகையான அகவயயாந்திரீக இயக்கத்தின் உருவகம் ஒன்று நமக்குள் உள்ளது. அதாவது ஒரு சட்டகம், அச்சட்டகம் அச்சொற்களுக்கு அர்த்தம் தருகிறது. ஒரு கணிப்பொறியில் அந்தச் சட்டகத்தை ஒரு நிரலாகத் தொகுத்துக் கொடுத்திருந்தால் அது இச்சொற்றொடரை படித்துப் ’புரிந்துகொள்ள’ முடியும். அதே சமயம் மனித உறவுகளை மிக விரிவான ஒரு வலைப்பின்னலாக, உதாரணமாக கொடிகளின் பின்னல்போல, உருவகித்துள்ள ஒரு தமிழ்மனம் கொள்ளும் அர்த்தம் மேலும் விரிவானது. இங்கு ஸ்கீமா ஒரு அகவயச் சித்தரிப்பாக உள்ளது. விட்டௌசன் இப்பிரிவினையை வேறு ஒரு தளத்தில் விரிவாக ஆராய்ந்து முறைப்படி அறிதல் (systemic knowledge) என்றும், அக உருவக அறிதல் (schematic knowledge) என்றும் இரண்டாகப் பகுத்துக்கொள்கிறார். அவரைப் பொருத்தவரை புரிதல் என்பது இரு அக உருவக உலகங்களுக்கு இடையேயான உறவு ஆகும். இலக்கியப் படைப்புகளைப் படிக்கும்போது ஒன்றுக்குள் ஒன்றாகப் பற்பல அக உருவக உலகங்கள் செயல்பட வேண்டியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட ’அறுத்துக்கொண்டு விட்டேன்’ என்ற சொற்றொடரை ஒரு கவிதையில் காண நேர்ந்தால் அதை புரிந்துகொள்ள இலக்கியச் சூழல் உருவாக்கும் தனித்த மன உருவகத்தை நாம் கொண்டிருக்க வேண்டும். இது ஒரு ஸ்கீமா ஆகும். அதற்குள் கவிச்சூழலும், அதற்குள் அந்த குறிப்பிட்ட கவிச் சூழலும், அதற்குள் அக்குறிப்பிட்ட கவிஞனின் கவியுலகும் உருவாக்கும் தனித்தனியான அகமன உருவகங்கள் (ஸ்கீமாக்கள்) தேவையாகின்றன. இவ்வாறு பார்க்கும்போது ஒரு பனுவலுக்கு சர்வ தேசத்தளம் (Global structure) ஒன்று உண்டு. இந்தப் பக்க எல்லையில் அகவயமானதும் உடனடியானதும் ஆன தளம் ஒன்றும் உண்டு. இவை மாறுபட்ட அர்த்தங்களை ஒரேசமயம் பெற்றுக்கொள்கின்றன. அதாவது ஒரு பனுவலுக்கு முடிவற்ற சொற்களன்கள் உண்டு. விமர்சன நவீன இலக்கிய அணுகுமுறைகள் பல இப்பார்வையின் விரிவாக்கங்கள்தான்.
பனுவல்தன்மை (textuality) பற்றி நவீன மொழியியல் விரிவாக ஆராய்கிறது. டிரெஸ்லர் (1981) ஒரு பனுவல் எவ்வாறு உருவாகிறது என்று கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்: 1.ஒருங்கிணைவு (Cohesion) பனுவலின் முதல் குணம். அதில் உள்ள விஷயங்கள் அனைத்தும் ஏதோ ஒரு அம்சத்தால் பரஸ்பரம் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த அம்சமே பனுவலின் நோக்கம் இந்த வரி ஏன் இதில் உள்ளது என்று கேட்டால் அப்பனுவலில் அதற்கு பதில் இருக்கவேண்டும். இல்லையேல் அது வெறும் சொற்குவியல் மட்டுமே. 2.ஒத்திசைவு (Coherence) பனுவல் அளிக்கும் அர்த்தங்களுக்குள்ளும் ஒரு ஒருங்கிணைவு இருக்க வேண்டும். அதாவது உள்ளார்ந்த ஒருமை தேவை. இதை ஒத்திசைவு என்கிறது மொழியியல். 3.பனுவலுக்கு நோக்கமும் (intentionality) ஏற்புத் தன்மையும் (Acceptability) இருக்க வேண்டும். நோக்கம் அதை முன்வைப்பவர் சார்ந்தது. ஏற்பு அதை வாசிப்பவர் அல்லது அறிபவர் சார்ந்தது. அதாவது ஒரு நோக்கம் படைப்பினூடாக ஈடேற வாய்ப்பு இருக்க வேண்டும். 4.அறிவுறுத்தும் தன்மை (Informativity) பனுவலுக்கு அவசியம். பனுவல் அறிபவரை மேன்மேலும் அறியத் தூண்டி அவ்வாவலை திருப்தி செய்கிறது. 5.சூழலுடன் இசைவு (situationality) பனுவலின் இன்றியமையாத குணம் இது. இப்பனுவலின் இயல்புகளை அது பேச முற்படும் சந்தர்ப்பமே தீர்மானிக்கிறது. ஒரு பனுவல் முற்றிலும் சம்பந்தமற்ற சூழலில் பனுவல் அல்லாமல் ஆகிவிடக் கூடும். 6.ஊடு பிரதித்தன்மை (intertextuality) ஒரு பனுவலை வாசகத் தரப்பு ஊடுருவி தனக்குரிய பிரதிகளை உருவாக்குகிறது. இவ்வியல்பு பனுவலின் அடிப்படையாகும். அர்த்தம் என்பதே இந்த ஊடாட்டம் மூலம் ஏற்படுவதுதான் என்று பின் அமைப்பியலாளர், குறிப்பாக தெரிதா, கூறுகிறார். ”ஒரு பனுவலின் ஒவ்வொரு அம்சமும் அதில் அடங்கியுள்ள பிற அம்சங்கள் பற்றிய குறிப்புணர்த்தலினூடாகவே தீர்மானிக்கப்படுகின்றது. இந்த இணைப்பே அர்த்தத்தையும் பனுவலையேகூட உற்பத்தி செய்கிறது. ஒரு பனுவல் இன்னொன்றாக மாறுவதனூடாகவே அர்த்தம் உருவாகிறது.” என்கிறார் தெரிதா.
|
தெரிதா |
ஜேக்கப்சன் என்ற (R.Jackobson) மொழியியல் அறிஞரின் கூற்றுப்படி மொழியின் கவித்துவ சாத்தியங்கள்பற்றிய அறிதல் இல்லாத மொழியியலாளரும், மொழியின் மொழியியல்ரீதியான இயக்கம்பற்றிய பிரக்ஞை இல்லாத இலக்கியவாதியும் முழுமையற்றவர்களே. மொழியியல் இலக்கியம் என்றால் நிர்ணயித்துக்கொள்வதற்கு எப்போதும் முயன்றபடி உள்ளது. பரவலாகத் தமிழில் கூறப்படுவதைப்போல இலக்கியமும் இலக்கியமல்லாதவையும் ஒன்றுதான் என்று அது கருதுவதில்லை. இப்படி ஒரு சித்திரம் எப்படித் தமிழில் உருவாயிற்று என்பது ஆச்சரியம் தரும் கேள்விதான். ஜார்ஜ் ஸ்டீனர் (1968) இலக்கியத்தை சில எதிர்மறைகளின் அடிப்படையில் விளக்க முயன்றார். அ) இலக்கியம் தகவல்களுக்காக அல்லாமல் படிக்கப்படும் ஒன்று. ஆ) இலக்கியத்தின் செய்தி தவறா சரியா என்று திட்டவட்டமாக அளந்துவிடவோ சோதித்துப் பார்க்கவோ முடியாததாக இருக்கும். இ) இலக்கியத்தின் மொழி நிர்ணயத்தன்மை இல்லாதது. விஞ்ஞானம் மற்றும் அறிவுத்துறைகளின் மொழி திட்டவட்டமானது (cryptic) இலக்கிய மொழி வளர்ந்து மாறும் தன்மை உடையது (Delphic).
|
ரோமன் ஜேக்கப்சன் |
ரோமன் ஜேக்கப்சன் படைப்பு மொழிபற்றி விரிவாக ஆய்வுசெய்த அறிஞர். இலக்கியத்தன்மை மொழி சார்ந்தது. ஆனால் இலக்கியம் மொழியல்ல, அது அதிமொழி அல்லது மீமொழி (Language plus) என்றார் அவர். இலக்கியம் ஆக மாறும்போது மொழியில் என்ன நிகழ்கிறது என்பதை ஆராயும் மொழியியல் துறையே நடையியல் (stylistics) எனப்படுகிறது. நடையியலின் ஆய்வுகளின் துவக்கம் புராதன கிரேக்க இலக்கண நிபுணர்கள் சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு மொழிநடைபற்றி வகுத்தறிந்த விதிகள் ஆகும். அன்று உரைவீச்சு (Rhetoric) கவித்துவம் (Poetics) இரண்டும் ஒன்றாகவே கருதப்பட்டன. அரிஸ்டாட்டில் நடையழகு என்பது ’சிந்தனையின் அணி’ என்று குறிப்பிட்டார். (வடமொழி இலக்கண மரபில் அலங்கார சாஸ்திரமும் இப்படிக் கருதுகிறது. தமிழில் இது அணியிலக்கணமாக ஆயிற்று) பிற்பாடு மொழிநடையை ஒருவரின் மன இயக்கத்துடன் நேரடியாகப் பிணைக்கும் போக்கு உருவாயிற்று ’நடையே மனிதன்’ (style is the man - Buffon) போன்ற தரிசனங்கள் உருவாயின. முதல் அணுகுமுறையில் அணியிலக்கணம் புறவயமாக வகுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இரண்டாம் வகை அணுகுமுறை பெரிதும் அகவயமானது. இதில் நடை என்பது மொழியைப் பயன்படுத்தி மனதை அறியும் முயற்சி என்று கருதப்பட்டது. மூன்றாவது அணுகுமுறை புதிய விமரிசன மரபால் ஏற்படுத்தப்பட்டது. இதில் மீண்டும் புறவய அணுகுமுறை உருவாயிற்று. படைப்புகளை மொழியால் அமைப்புகளாகவும் மொழி நிகழ்வுகளாகவும் அணுகும் போக்கு இது. இந்த மூன்றாவது போக்கு புதிய மொழியியல் ஒரு கோர்வையான தோற்றம் கொண்டபிறகு உருவானது என்பதை நாம் அறிவோம்.
ஆரம்ப முதலே நவீன நடையியல் இரு பெரும் போக்குகளைக் கொண்டுள்ளது. பிரெஞ்சு மொழிமைய வாத அணுகுமுறை (stylistique) மற்றும் ஜெர்மனிய தத்துவ மைய அணுகுமுறை (Stilforchung). பிரெஞ்சு மரபு மொழியியல் நடையியலையும் அதன் அடுத்த கட்டமாக அமைப்பியலையும் (சசூர்) பிறகு பின் அமைப்பியலையும் வளர்த்தெடுத்தது. ஜெர்மானிய நடையியல் பிராக் மரபு (Prague School) என்று கூறப்பட்டது. இது செயல்முறை நடையியல் (functional stylistics) எனும் அணுகுமுறையை வளர்த்தெடுத்தது. அதன் அடுத்த கட்டமாக மாறுதல்சார் நடையியல் (transformational linguistics) என்ற அணுகுமுறை உருவாயிற்று. இது முதலில் குறிப்பிட்ட படைப்புக்கும் (actualised system) ஒட்டு மொத்த மொழிச் சூழலுக்கும் (Virtual system) இடையேயான உறவைப்பற்றிய ஆய்வாக தொடங்கியது. பிற்பாடு பொதுமொழி படைப்பு மொழியாக மாறும் விதம் பற்றிய ஆய்வாக மாறியது.
1916-ல் பெர்டினன்ட் டி சசூரின் மொழியலாய்வுகள் வெளியாகி அமைப்பியலுக்கு அடித்தளமிட்டன. இவை தமிழில் பலவாறாக அறிமுகமாகியுள்ளன. அதே தருணத்தில், 1915-ல் மாஸ்கோ மொழியியல் வட்டம் உருவாக்கப்பட்டது. மொழியின் புறவய வடிவத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்டு அதை ஆராயும் வடிவவாத அணுகுமுறை (Formalism) இவ்வட்டத்தின் பிரதான அணுகுமுறையாக மலர்ச்சி பெற்றது. இலக்கியம் பற்றி ஒரு ’விஞ்ஞான’த்தை உருவாக்க இவர்கள் முயன்றனர். இக்குழு பிறகு அரசியல் காரணங்களினால் சிதறி பிராக் நகரில் மீண்டும் குவிந்தது. இவர்களில் தலைமையிடம் கொண்டவராக ரோமன் ஜேக்கப்சன் இருந்தார். இக்குழுவின் முக்கியமான கண்டுபிடிப்பாக செயல்முறை நடையியல் கொள்கைகளைக் கூறலாம்.
நடையின் முக்கியமான செயல்முறைகளாக வெளிப்பாடு (expression), வேண்டுகோள் (appeal), குறிப்பீடு (reference) ஆகியவை குறிப்பிடப்பட்டன. முதல் இரண்டும் உணர்வுரீதியானவை. இறுதி அம்சம் தகவல் சார்ந்தது. இச்செயல்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கம் கொண்டவை. இலக்கியம் தன் செயல்பாட்டை எப்படி நிகழ்த்துகிறது என்பதை பிராக் அணுகுமுறை கீழ்க்கண்டவாறு வகுக்க முயல்கிறது. பழக்கம் காரணமாகவும், சகஜத்தன்மை காரணமாகவும் நாம் அனிச்சையாக அர்த்தங்களை அடைகிறோம். இலக்கியம் சில விஷயங்களை அழுத்தி முன்னிறுத்துவதனூடாக அந்த அனிச்சையான அர்த்த உருவாக்கத்தைத் தடைசெய்து விசேஷமான அர்த்தம் உருவாகச் செய்கிறது. இந்த முன்னிலைப்படுத்தல்தான் (foregrounding) இலக்கியத்தின் கருவி ஆகும். இக்கருத்தை முகரோவ்ஸ்கி என்ற (Mukarovsky) மொழியியல் அறிஞர் முன்வைத்து விரிவாகப் பேசுகிறார். ஜெ.ஜெ. சில குறிப்புகளில் பழக்கத்தின் பாசியை மனக்குளத்தில் படியவிடாது தொடர்ந்து விலக்கிவிட்டபடியே இருப்பதே படைப்புத் தன்மை என்று கூறப்படுவதை இங்கு நினைவு கூறலாம். படைப்புமொழி தகவல்தரும் தன்மை இல்லாதது. தகவல்களைத் தன்மீது கவனத்தை ஈர்க்கவே அது பயன்படுத்துகிறது. இலக்கியமொழி வேறு எதையும் முன்வைக்காது தன்னையே முன்வைப்பது, (Self referential), சுதந்திரமானது (autonomous) என்கிறார் ஜேக்கப்சன். இலக்கிய மொழிக்குப் பிறவகை இலக்கிய மொழிகளுடன் உள்ள உறவைக் கணக்கில் கொள்ளும்போது இலக்கியமொழியின் சுதந்திர இயக்கத்தையும் எப்போதும் கவனப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார். கவிதையில் மொழி முன்னிலைப் படுத்தல் அர்த்தரீதியான தொடர்பைப் பின்னுக்குத் தள்ளுகிறது என்கிறார் முகரோவ்ஸ்கி. ஹாலிடே (Halliday) இத்தகைய முன்னிலைப்படுத்தலின் பல்வேறு படிநிலைகளையும் இயல்புகளையும் விரிவாக ஆய்வு செய்கிறார்.
|
முகரோவ்ஸ்கி |
முகரோவ்ஸ்கி இவ்வாறு குறிப்பிடுகிறார்: ”கவித்துவ மொழியில் முன்னிலைப்படுத்தல் அதிக பட்ச செறிவை அடைகிறது; தொடர்புறுத்தலை பின்னுக்குத் தள்ளிவிடும் அளவுக்கு கவிமொழி வெளிப்பாட்டுக்கான வழிமுறையாகவும்கூட தன்னையே முன் வைக்கும் தன்மை கொண்டது ஆகும். எனவே அது விஷயங்களை சொல்லிப் புரியவைப்பதற்குப் பயன்படுவதில்லை. முன்னிலைப்படுத்துவதையே அது தன் கூறல் முறையாகக் கொண்டுள்ளதனால் அதுவே அதன் உரையாடலும் கருத்தும் ஆகிறது.” இதை மேலும் விளக்கலாம். ஒரு கவிதையில் கூறப்படுவது என்ன என்பது அல்ல அதன் ’செய்தி’. அக்கவிதை தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதன் மூலம் நம்மில் உருவாக்கும் உணர்ச்சியே அதன் 'செய்தி' ஆகும். ”எத்தனை உற்சாகம் சின்னஞ்சிறு கூழாங்கல்லுக்கு. தன்னந்தனியாக இப்பாதையில் உலவுகிறது.” என்று கூறும் எமிலி டிக்கன்சன் கூழாங்கல்லைப்பற்றி கூறவில்லை. கூழாங்கல்லை முன்னிலைப்படுத்துகிறார். அதன் மூலம் நம்மில் அது பலவிதமான உணர்வெழுச்சிகளை உருவாக்கச் செய்கிறார். அவ்வுணர்ச்சிகளையே அக்கவிதையின் செய்தியாகக் கூற வேண்டும். ஆகவே கவிதையை நேரடியாக எடுத்துக் கொள்வது ’இக்கவிதை கூறும் செய்தி யாது?’ என்று கேட்பது அக்கவிதையை நிராகரிப்பதற்குச் சமம். ஹாலிடேயில் இருந்துதான் நடையியலின் ’செயல்முறை மொழிக் கொள்கை’ (Functional theory of language) உருவாயிற்று. இது பிற்பாடு நாம் சாம்ஸ்கியின் உற்பத்திமுறை இலக்கணத்தை (Generative grammar) ஏற்றுக்கொண்டு விரிவான வளர்ச்சி பெற்றுள்ளது. படைப்பின் படைப்புச் செயல்பாடும் வாசிப்புச் செயல்பாடும் அடங்கியதுதான் அப்படைப்பு என்று கருதி அச்செயல்பாடுகளை மட்டும் வைத்து படைப்பை அணுக முயலும் ஒரு ஆய்வுமுறை இது. இதன் வளர்ச்சிக்கட்டமே வாசிப்பை மட்டும் முதன்மைப்படுத்தும் ’தெரிதா’வின் அணுகுமுறைகள். சாம்ஸ்கியின் இலக்கண அணுகுமுறைகளை இத்தளத்திற்குக் கொண்டு வந்து இணைத்தவர் ரோஜர் ஃபௌலர் ஆவார்.
எங்க்விஸ்ட் (1973) போன்ற மொழியியல் நிபுணர்களால் முன்வைக்கப்பட்ட ’இணைப் பனுவல் (co-text) கொள்கை’ மொழியியலின் பல புதிய இடங்களுக்கு நடையியலை விரிவுபடுத்தியது. வாசகன், படைப்புக்கு ஓர் ’இணைப்படைப்பாளி’ என்கிறது இக்கொள்கை. இந்த இணைப்படைப்பு படைப்பின் உள்ளுறை, காலகட்டம், வகைபேதங்கள், மொழியியல் பாடபேதங்கள், தனிநபர் தொடர்பு போன்ற கூறுகளின் மூலம் உருவாக்கப்படுகிறது. இவையனைத்தையும் கணக்கில் கொண்டே நாம் படைப்பு எப்படி வாசிக்கப்படுகிறது என்று கவனிக்க முடியும் என்று வகுக்கிறது இவ்வணுகுமுறை. நடையியலில் 1970 முதல் பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன. விளைவுகளை முன்னிலைப்படுத்தும் முறை (affective stylistics), உள்வாங்குதலை முன்னிலைப்படும் முறை (reception theory), வாசக முன்னிலை முறை (reader response criticism), கட்டவிழ்ப்பு முறை (deconstruction) முதலியவை. இவை ஒன்றோடொன்று உறவு உள்ளவையும் ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைத்தவையும் ஆகும்.
|
ரோலான் பார்த் |
மொழியியலின் இலக்கிய அணுகுமுறையின் ஒரு வளர்ச்சிக் கட்டமான அமைப்புமையவாதம் (structuralism) உருவாயிற்று. இது பக்தின், டி.சசூர், ரோலான் பார்த் முதலிய மொழியியலாளர்களின் சிந்தனைகளும் அல்தூஸர் முதலிய அமைப்பு முறை மார்க்ஸியர்களின் சிந்தனைகளும் பரஸ்பரம் கொண்ட நீண்ட விவாதத்தின் விளைவு ஆகும். அனைத்தையும் மொழியின் அமைப்புகளாக மட்டும் கருதி அணுகுவது அமைப்புமைய வாதத்தின் இயல்பு ஆகும். சமூகத்தின் அனைத்து அமைப்புகளும் மொழியால் கட்டமைக்கப் பட்டுள்ளவை என்றும் அவற்றை வெறும் மொழிக் கட்டுமானங்களாக மட்டும் கருதி ஆய்வு செய்வதன் மூலம் அவற்றை அறிவதும் பகுத்தாய்வதும் எளிதாகிறது என்பது இவர்களுடைய கொள்கை. இது ஆரம்பத்தில் ஒரு அசாதாரணமான உற்சாகத்தை கிளப்பியது. அந்த உற்சாகம் தமிழவனினூடாக தமிழ்நாட்டிலும் பிரதிபலித்தது. தமிழவனின் ’ஸ்டக்சுரலிசம்’ என்ற நூல் அவ்வகையில் மிகவும் முக்கியமான ஒன்றேயாகும். குடும்பம் ஒரு சமூக அமைப்பு. அவ்வமைப்பு மொழியின் நிபந்தனைகளாலும் இணைவுமுறைகளாலும் தான் உண்மையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பர் அமைப்புமையவாதிகள். கணவன், மனைவி, கற்பு, பாசம் என பல நூறு சொற்கள் குடும்பத்துடன் சம்பந்தப்பட்டுள்ளன. இவற்றை பகுத்தும் தொகுத்தும் ஆராய்ந்து குடும்பத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். இவற்றை மாற்றி அமைப்பதனூடாக குடும்பத்தை மாற்றியமைக்கவும், செய்யலாம் என்று நம்பிய மொழியியலாளர் உண்டு. இங்கும் அந்நம்பிக்கை சில காலம் பேசப்பட்டதை நாம் அறிவோம்.
|
அல்தூஸர் |
|
பக்தின் |
பிற்பாடு பின்-அமைப்பியல் வந்தது - ஷாக் லக்கான், ஷாக் தெரிதா, மிஷெய்ல் ஃபூக்கோ ஆகிய மூவரையும் முக்கியமான பின் அமைப்புவாதிகள் என்று கூறுகிறார்கள். மொழி அமைப்பு என்பது உண்மையில் ஒரு தருணத்தில் கூட நிலைத்திராது மாறிக் கொண்டே இருக்கும். மொழியியக்கமேயாகும் என்றனர் இவர்கள். மொழியமைப்பு என்பதும் சரி அவ்வமைப்பை நிகழ்த்தும் மொழியின் இயங்குவிதிகளும் சரி மொழியைப் பற்றி விவாதிப்பதன் பொருட்டு நாம் வெறுமே உருவாக்கிக் கொண்ட மன உருவகங்கள் அன்றி வேறல்ல. குடும்பம், கணவன், மனைவி, கற்பு என்ற எந்த சொல்லுக்கும் நிலையான பொதுவான அர்த்தம் ஏதும் இல்லை. பல்வேறு சமூக, தனிமனித காரணிகளால் இவை பல்வேறு விதமாக அறியப்படுகின்றன. அந்த அறிதல் கணம்தோறும் மாறுபட்டபடியும் உள்ளது. பின் அமைப்புவாதம் விவாதத்தை மீண்டும் நாம் சாம்ஸ்கியின் ’உற்பத்திமுறை இலக்கணம்’ சார்ந்ததாக மாற்றியது.
|
ஷாக் லக்கான் |
|
மிஷெய்ல் பூஃக்கோ |
'அமைப்பியலை’யும் ’பின்-அமைப்பியலை’யும் பற்றிய இங்கு ஏராளமாகப் பேசப்பட்டுள்ளது. அவற்றை இந்தப் பின்னணியில் வைத்து விரிவாக ஆராயலாம். அது இக்கட்டுரையின் விஷயமல்ல.
இங்கு அதிகமாக பேசப்படாததும் ஆனால் இலக்கிய விமரிசனத்துடன் நெருங்கிய தொடர்பு உடையதுமான ஒரு துறை கதையியல் (narratology) என்பதாகும். ஒரு விஷயம் விரிவாகக் கூறப்பட்டு வாய்மொழியாகவோ எழுத்திலோ ஒரு பனுவல் உருவாக்கப்படும் போதுதான் அதை நாம் கதையாடல் (narration) என்கிறோம். 1969-ல் பிரெஞ்சு அமைப்பியலாளரான தோடரோவ் (இவர் போலந்து வம்சாவளியினர்) என்பவர் கதையியல் என்ற சொல்லையும் ஆய்வு முறையையும் உருவாக்கினார். கதையியல் அகராதி (1987) ஒன்றை உருவாக்கிய
கதையியலானது கதையின் இயங்குமுறை, கதையின் சாத்தியங்கள், கதையின் பொதுக் கூறுகள் முதலியவற்றை அறியும் ஒரு அறிவுத்துறை என்கிறார். கதையியல் ஏற்கனவே பேசப்பட்டுவந்த கதைக் கருவியல் (thematology) இல் இருந்து வேறுபட்டது. கதையின் கரு அல்லது மையம் பற்றி இது கவலைப்படுவதில்லை. கூறுமுறை பற்றி மட்டுமே இது அக்கறை கொள்கிறது. கதையின் பிராதன முன் மாதிரிகளை, குறிப்பாக நாட்டார் மரபுக்கதைகளை வைத்து கதையின் இயங்குவிதிகளை அறிய முயல்கிறது இந்த அறிவுத்துறை. ருஷ்ய அறிஞரான (Propp) புரோப் எழுதுய ’நாட்டார் கதைகளின் உருமாற்றவியல்’ (1968) என்ற நூல் சிறந்த முன்னுதாரணமாக கூறப்படுகிறது.
|
ஜெரால்ட் பிரின்ஸ் |
|
புரோப் |
மிக எளிமையான இந்த அறிமுகம் மொழியியலின் ஒரு மேலோட்டமான சித்திரத்தினை அளிக்கும் பொருட்டு எழுதப்பட்டது. இங்கு சொல்லப்பட்ட ஒவ்வொரு அறிவுத் துறையும் பலநூறு உட்பிரிவுகளுடனும், புதுப்புது கொள்கைளுடனும் விரிவு பெற்று வருகிறது. இங்கு கூறப்பட்ட அடிப்படை விவாதங்கள் வருடந்தோறும் புதிய தளங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. இவ்விவாதங்களின் நுணிய தளங்களை இத்துறையில் முறையான பயிற்சியும் ஈடுபாடும் உடையவர்களே அடைய முடியும். அவற்றின் பொதுப் போக்குகள் மட்டுமே பொதுவான அறிவுத் தளத்திற்கு வரவேண்டும். இங்கு இலக்கியம் சார்ந்து மட்டும் அவ்விவாதங்கள் பேசப்பட்டுள்ளன. எனவே கல்வியியல் அல்லது பயிற்றியல் (Pedagogy) சார்ந்த சிந்தனைகள் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளன.
ஜெயமோகன்
சொல்புதிது - ஜூலை-செப், 1999
**********
எழுத்தாளர் ஜெயமோகன் உலக அளவில் மிக முக்கியமான படைப்பாளி, தமிழின் அரிதான நிகழ்வு. உலகின் மிக நீண்ட நாவல்களில் ஒன்றான வெண்முரசு தவிர்த்து பத்திற்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள், விமர்சன நூல்கள் வெளியாகியுள்ளன.
இலக்கியம் மட்டுமின்றி, பண்பாட்டு தளத்திலும் அறிவுத்தளத்திலும் இவர் பங்களிப்பு அளப்பரியது. இவரது வாசகர்கள் நடத்தும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பல இலக்கிய செயல்பாடுகளை முன்னெடுக்கிறது. தமிழ் எழுத்தாளர்களை உலகத்திற்கும், இந்திய, உலக எழுத்தாளர்களுக்கு தமிழ் இலக்கியத்தையும் அறிமுகம் செய்கிறது. ஆர்வமுள்ள நண்பர்களுக்கு தொடர்ந்து பல்வேறு கலை பண்பாட்டுத் தளங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழின் முக்கியமான ஆளுமைகளை ஆவணப்படுத்த
தமிழ் விக்கி என்ற இணைய கலைக்களஞ்சியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் நிறைய இளைஞர்கள் இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் ஆற்றுப்படுத்தப்படுகிறார்கள்.
இக்கட்டுரை சொல்புதிது ஜூலை-செப் 1999-ல் இதழில் வெளியானது. சொல்புதிது இதழ் எழுத்தாளர் ஜெயமோகனின் முன்னெடுப்பில் துவங்கப்பட்ட சிற்றிதழ். இதழின் ஆசிரியராக எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் இருந்துள்ளார். சொல்புதிது இதழில் தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள், தத்துவ ஆசிரியர்களின் நீண்ட நேர்காணல்கள் வெளிவந்தன. புத்தக்கப்பகுதியில் மொழியியல், அறிவு, என சிறப்பு தலைப்புகளுடன் புனைவு அல்லாத பிற துறைகளை பற்றி நீண்ட தனி கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகளும் வெளியிடப்பட்டன. கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு என புனைவும் புனைவல்லாத துறைகளும் இதழில் சம அளவில் முக்கியத்தும் அளித்து வெளிவந்தது.
**********
சில கலைச்சொற்கள்
linguistic- மொழியியல்
Applied linguistics - செயல்முறை மொழியியல்
Macro linguistics - பொது மொழியியல்
Micro linguistics - நுண் மொழியியல்
Socio linguistics - சமூக மொழியியல்
Psycho linguistics - உள மொழியியல்
Discourse linguistics - தொடர்பு மொழியியல்
Stylistics - நடையியல்
Educational linguistics - கல்வி மொழியியல்
Dialectical movement - முரணியக்கம்
Langue - பொதுமொழி
Parole - தனிமொழி
Linguistic competence - மொழியியல் இலக்கணதிறன்
Communicative competence - தொடர்பு திறன்
Phatic communion - உணர்வுமொழி
Behaviouristic psychology - பழக்க உளவியல்
Developmental psycholinguistics - வளர்ச்சிசார் உளமொழியியல்
Experimental psycholinguistics - சோதனை உளமொழியியல்
Latent knowledge structures - அகவய அறிவு கட்டுமானம்
Systemic knowledge - ஆராய்ந்து அறிதல்
Schematic knowledge - அக உருவக அறிதல்