Thursday, 14 March 2024

நாட்டார் மரபில் விஷ்ணு - அ.கா.பெருமாள்


தமிழக நாட்டார் தெய்வங்கள், வழிபாடு, நாட்டார் சடங்குகள் பற்றி ஆராய்ந்தவர்களில் பெரும்பாலோர் இவற்றை சைவச்சார்புடன் தொடர்புபடுத்திப் பேசுவது வழக்கமாக உள்ளது. நாட்டார் தெய்வங்களின் வழிபாட்டு மரபில் சிவன், பார்வதி தொடர்பான கதைகளே அதிகம் உள்ளன. சைவத்தை ஒப்பிடும்போது வைணவம் அல்லது விஷ்ணு தொடர்பான கதைகள், தெய்வங்கள், வழிபாட்டு முறைகள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இராமாயண, பாரதக் கதைகள் தமிழகத்தில் வழக்கிலிருந்தன. இவை பற்றிய சில சான்றுகள் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. இராமாயணத்தின் முழுக்கதையும் அல்லது வான்மீகியின் மூலவடிவமும் சங்க காலத்தில் வந்து சேர்ந்ததா என்பதை சரியாகச் சொல்ல முடியவில்லை. அதே சமயத்தில் சங்கப்பாடல்களில் காணப்படுகின்ற இராமாயணத் துணுக்குகள், வாய்மொழியாகப் பேசப்பட்டவற்றின் அறுபட்ட துண்டுகளும் அல்ல.

ஆரம்பகாலத்தில் தமிழ் மக்கள் வழங்கிய இராமாயணக் கதை உவமை, உருவகத்திற்குப் பயன்படும் அளவுக்குப் பரவலாக அறியப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரம், பரிபாடல் போன்ற இலக்கியங்களின் காலத்தில் பாகவதக் கதைகள் பரவலாகிவிட்டன. இவ்விரு இலக்கியங்கள் மட்டுமல்ல, பெரும்பாணாற்றுப்படை, தொல்காப்பியம் போன்றவற்றிலும் குறிப்பிடப்படும் மாயோனும்- விஷ்ணுதான் என்று கூறுவது மரபாகிவிட்டது. ஐங்குறுநூறு நூல் கூறும் விண்டு விஷ்ணுவே என்பர் உரையாசிரியர்கள். உரையாசிரியர்களின் கணக்குப்படி சங்க கால விஷ்ணு வைதீகக் கடவுளாகவே காட்டப்படுகின்றான். இவன் ஆயிரம் தலைகளை உடைய பாம்பின் மேல் பள்ளி கொண்டவன். ஆமை, பன்றி வடிவங்களை எடுத்தவன். தேசி என்னும் அரக்கனை அழித்தவன். கம்சனுடன் போர் செய்தவன். திருமகள் கணவன். இவனது மகன் மன்மதன், இரணியனைக் கொன்றவன். இப்படிப் பல புராணத் துணுக்குகள் தமிழகத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. சிவன், திருமால் என இரண்டு தெய்வங்களிலும் வைதீகச் சார்புடன் காட்டப்படுவது திருமால்தான்.

சிவன் ஆரம்ப காலத்திலிருந்தே நாட்டார்மரபுடன் இணைக்கப்பட்டே பேசப்படுகிறான். சாதாரண மக்களின் கடவுள் என்ற அடையாளத்தைப் பெறுவதற்குரிய கூறுகள் அவனிடம் உள்ளன. திருமாலின் நிலை வேறு. நகரமயமாக்கப்பட்ட இடத்தில் வாழும் மக்களுடன் இணைக்கப்பட்டுப் பேசப்படுகின்றான். தமிழக வழிபாட்டு மரபுச் செய்திகளில் விஞ்சி நிற்பது சிவனா, விஷ்ணுவா என்று ஒரு பட்டிமன்றம் நடப்பதாக வைத்துக் கொண்டால் அதற்குத் தலைமை தாங்குபவர் நியாயமாக முடிவு சொன்னால் அது சிவனுக்குத்தான் வந்து சேரவேண்டும்.


இதற்கான சான்றுகளைத் தமிழகத்தில் பரவலாகத் தேடமுடியும் என்றாலும் சைவ ஆச்சாரியர்களோ சித்தாந்திகளோ நாட்டார் வழிபாட்டை ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆறுமுக நாவலர் கண்ணகியின் வழிபாட்டை வெறுத்ததும், ‘செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள்’ என ஒரு பிரபந்த ஆசிரியர் கூறியதும் தமிழுலகம் அறியும். தமிழகத்தில் நாட்டார் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு என எல்லாவற்றையும் ஒருசேர வைத்துப் பார்த்து ஒரு பொதுப்பண்பை உருவாக்கும் ஆய்வு நடந்ததாகத் தெரியவில்லை.

நாட்டார் வழிபாட்டில் பழம் தமிழர் மதத்தையோ சமயத் தாக்கத்தையோ தேடும் முயற்சி ஆரம்பகாலத்தில் நடந்திருக்கிறது. இத்தகு ஆய்வாளர்களில் பெரும்பாலோர் நாட்டார் மரபில் வைணவத் தாக்கம் அல்லது திருமால் வழிபாடு பற்றிய செய்திகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. இதற்கு முக்கியக் காரணம் சான்றுகள் குறைவு என்பதால் இருக்கலாம்.

தென் மாவட்ட நாட்டார் மரபில் திருமால் அல்லது வைணவத் தாக்கம் குறித்த செய்திகளை 16க்கும் மேற்பட்ட கதைப்பாடல்களில் தேட முடியும். நாதன் குடிபெயர்ந்த கதை தொடர்பான பெருமாள்சாமி காவியம் என்ற கதைப்பாடலுக்கு மட்டும் பத்து வாய்மொழி வடிவங்கள் உள்ளன. இவற்றில் ஏழு வாய்மொழி வடிவிலும், ஏட்டு வடிவிலும் உள்ளன. பெருமாள்சாமி காவியத்தில் வரும் பெருமாள் என்ற நாட்டார் தெய்வத்திற்கு தென் மாவட்டங்களில் வழிபாடு உள்ளது. நாஞ்சில் நாட்டில் மட்டும் இலந்தவிளை, புல்லுவிளை என 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் வழிபாடு பெறுகிறது. இலந்தவிளை கிராமத்தில் சங்கு சக்கர தாரியாக நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் பெருமாள் சாமி இருக்கிறார். இது பஞ்சலோகப் படிமம். இவர் அண்மைக்காலம் வரை ஆடு பலிவாங்கிக்கொண்டிருந்தார். 

திருவனந்தபுரத்திற்குத் திருவரங்கன் வந்த வரலாறு அல்லது பெருமாள்சாமி காவியம் என்ற வில்லிசைப்பாடல் தென் மாவட்டக் கோவில்களில் இன்றும் வில்லிசை நிகழ்ச்சியில் பாடப்படுகிறது. திருவரங்கத்தில் குடிகொண்ட ரங்கன் தன் பூசகன் ஒருவனை பிற பூசகர்கள் பழித்ததால் திருவரங்கத்திலிருந்து குடிபெயர்ந்து திருவனந்தபுரத்தில் கோவில் கொண்டான் என்ற வாய்மொழிக் கதையின் அடிப்படையில் இந்த வில்லுப்பாட்டு உருவானது. இதே கதை காஞ்சி வரதராஜப் பெருமாளுடனும் சார்த்திக் கூறப்படுகிறது. இக்கதை திருமழிசை ஆழ்வாருடனும் தொடர்புடையது.

திருவரங்கம் அல்லது காஞ்சிபுரத்திலிருந்து பெருமாள் தென் மாவட்டத்துக்கு குடிபெயர்ந்தான் என்ற வாய்மொழி மரபுக்குத் திருமழிசையாழ்வார் கதை மூலமாயினும், பெருமாள்சாமி கதை அதிலிருந்து சற்று வேறுபட்டது, அதோடு தென்மாவட்ட வாய்மொழி மரபின் இணைப்பும் அதில் உண்டு.

தென் திருவிதாங்கூர் பகுதிகளில் மட்டுமல்ல, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தொடர்பான கதைகளில்கூட ரங்கனாதனின் குடிப்பெயர்ச்சி செய்தி வருகிறது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தொடர்பான வாய்மொழிக் கதைகளை ராணி கவுரிலட்சுமிபாய் தொகுத்திருக்கிறார் (Sree Padmanabhaswamy Temple Bharatiya Vidya Bhavan Bombay 1995).

பத்மநாப சுவாமி கோவிலில் கிடைத்த அனந்தசயனம் மகாத்மியம் என்னும் ஏடு அக்கோவில் தொடர்பான ஒரு கதையைக் கூறுகிறது. இது திவாகர முனிவருடனும் குஜராத் மாநிலத்தில் குடிபெயர்ந்த ஒரு சாதியினருடனும் தொடர்புடையது. இதே கதை இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் வாய்மொழியாகவும் பேசப்படுகிறது.

குஜராத் (துவாரகை), காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் ஒன்றிலிருந்து தென் திருவிதாங்கூருக்கு வைஷ்ணவக் குடும்பங்கள் சில குடிபெயர்ந்தது பற்றிய ஒன்பது கதைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் மேற்குப் பகுதியில் வாழும் கிருஷ்ணவகை (குருப்பு) என்னும் சாதியினர் பற்றி டாக்டர் கே.கே.பிள்ளை ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அவர் இச்சாதியினர் கிருஷ்ணனின் வகையினர், அதனால் இப்பெயர், இவர்கள் துவாரகையிலிருந்து கிருஷ்ணப் படிமத்தைச் சுமந்து திருவனந்தபுரத்திற்குக் கொண்டு வந்தார்கள். இந்தக் கதை 18 ஆம் நூற்றாண்டிலேயே சேகரிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

இந்தச் சாதியினர் தமிழ், மலையாளம் என இரு மொழிகளையும் பேசுகின்றனர். இவர்களிடம் மருமக்கள் வழியினரும் உண்டு. இவர்களிடம் சேகரித்த செய்திகளின் அடிப்படையில், வைணவச் சார்பு உடைய அரச வம்சத்தினர் என்கின்றனர்.

பிரமானந்த புராணமும் சுவாதித் திருநாள் பிரபந்தமும், திவாகரமுனி என்னும் துளு பிராமணர் தொடர்பான கதையைக் கூறுகின்றன. ஒருமுறை இவர் தன் பூஜை அறையில் இருக்கும்போது குழந்தை ஒன்று சாளக்கிரமத்தை எடுத்துக் கொண்டு ஓடியதாம் திவாகரம் குழந்தையின் பின்னே ஓடினார். குழந்தை புலையர் குடியிருப்பு இருந்த இடத்திற்குச் சென்றது. சாளக்கிரமத்தை ஒரு இலுப்பை மரத்தின் அடியில் போட்டுவிட்டு மாயமாய் மறைந்தது. திவாகர் அந்த இடத்தில் ஒரு கோவில் கட்ட ஏற்பாடு செய்தார். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் உருவானதற்கான கதை இது. இந்த நிகழ்ச்சி கொல்ல வருஷம் 222 இடவ மாதம் (மே - ஜூன் கி.பி. 1050) என்பது பழைய ஆவணக் கணக்கு.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுடன் தொடர்புடைய இரண்டு கதைகளை பரவலாகக் கேட்க முடியும். இவை வழக்காற்றுக் கதைகள். ஒன்று ஸ்ரீரங்கம் அல்லது காஞ்சிபுரத்திலிருந்து கிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் குடியேறியது. இரண்டு அப்படிக் குடியேறும்போது புலையர் வழியே கிருஷ்ணன் அறிமுகமாகிறான். முதல் செய்திக்குக் கதைப்பாடல் சான்று. இரண்டாவது வாய்மொழியாக வழங்குவது.

திருவனந்தபுரம் அனந்தங்காடாய் இருந்த சமயம். இலுப்பை மரங்கள் நிறையவே அடர்த்தியாக நின்றன. அந்தக் காட்டில் ஒருநாள் புலையன் புலைச்சி இரண்டு பேர் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது இலுப்பை மரத்தின் கீழே குழந்தை ஒன்று அழுதுகொண்டு நிற்பதைக் கண்டனர்.

குழந்தை பசியால் அழுகிறது என்பதைப் புலைச்சி புரிந்து கொண்டாள். குழந்தைக்கு முலைப்பாலைக் கொடுத்தாள். குழந்தை பால் குடித்தது. சிரித்தது. புலையன் பசும்புல்லைச் சேகரித்து மெத்தை போல் ஆக்கினார். புல் மெத்தையில் குழந்தையைக் கிடத்தினாள் புலைச்சி. குழந்தை உடனே கிருஷ்ணனின் சிற்பமாக ஆனது. இலுப்பை மரம் ஐந்துதலைப் பாம்பாக மாறியது. இதைப் பார்த்ததும் புலையனும் புலைச்சியும் பயந்துபோனார்கள். அங்கிருந்து வேகமாய் ஓடிவிட்டனர். இந்த விஷயத்தைத் தன் எஜமானனிடம் கூறினான் புலையன். அதை அரசனும் அறிந்து விட்டான். அங்கே ஒரு கோவில் கட்டினான் அரசன். அதுதான் பத்பநாப சுவாமி கோவில்.

அனந்தனை முதலில் கண்ட புலையனை அரசனால் மறக்க முடியவில்லை. கோவில் பக்கத்திலுள்ள ஒரு வயலைப் புலையனுக்குக் கொடுத்தான். அந்த வயலில் விளையும் நெல்லை அரிசியாக்கி பத்மநாபனுக்கு நைவேத்தியமாகக் கொடுக்க வேண்டும் என்றும் அரசன் புலையனுக்குக் கட்டளை இட்டான். அந்த வயல் புத்தரிக்கண்டம் எனப்பட்டது.

பத்மநாப சுவாமி கோவிலில் கன்னிப்பூ நிறை சடங்கிற்கு இந்த வயலிலிருந்து கதிரை அறுத்துச்செல்வது வழக்கம். இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில்கூட இந்த நிகழ்ச்சி நடந்தது. திருவனந்தபுரம் கிழக்கே, கோட்டை எதிரே இப்போதுள்ள மைதானமே ஒரு காலத்தில் புத்தரிக்கண்டமாக இருந்தது. மகாத்மா காந்தி திருவனந்தபுரம் வந்தபோது, புத்தரிக்கண்டம் வயலில் புலையர்கள் நின்று பார்த்திருக்கிறார்கள்.

பத்மநாபசுவாமி கோவில் உருவான கதைகளில் வில்வமங்கலம் சாமியார் கதையும் ஒன்று. இதனுடனும் புலையர் ஒருவர் தொடர்புபடுத்தப்படுகிறார். வில்வமங்கலம் நம்பூதிரி என்பவர் ஒருவரல்லர், இவர்கள் மூன்று கால கட்டங்களில் வாழ்ந்தவர்கள் என்று சொல்லுகிறார்கள். மலையாள மகாகவியும் இலக்கிய வரலாற்றாசிரியருமான உள்ளூர் பரமேஸ்வர அய்யர் வில்வமங்கலம் நம்பூதிரி ஒருவரே, அவர் பத்மநாபசுவாமி கோவில் தொடர்பானவர் என்கிறார். 9ஆம் நூற்றாண்டில் வில்வமங்கலம் சாமியார் ஒருவர் இருந்தார், 1588ல் ஒருவரும் இருந்தார். இவர்களைப் பற்றிய வாய்மொழிக் கதைகளே பின்னர் தல புராணத்தில் நுழைந்தது. இவர்களின் கதை திவாகரமுனிவர் கதை போன்றது.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலும் திருவட்டாறு ஆதிகேசவர் கோவிலும் ஒரே அமைப்பை உடையது. இங்கு இருக்கின்ற அம்பாடி கிருஷ்ணன் கோவில் பற்றிய கதைகள் மகாபாரதத் தொன்மத்துடன் இணைக்கப்பட்டு பேசப்படுகிறது. இந்தக் கதைகள் தென் திருவிதாங்கூரிலும் வாய்மொழியாகப் பேசப்படுகின்றன.

அர்ஜுனன் தீர்த்தயாத்திரை சென்றபோது ராமேஸ்வரத்திற்குச் சென்றான். அங்கே ஒரு கல்பாலத்தைக் கண்டான். பாலம் அருகே ஒரு குரங்கு நின்றது. அர்ஜுனன் குரங்கிடம் இந்தப் பாலத்தைக் கட்டியது யார்? என்று கேட்டான். குரங்கு இராமனின் கட்டளையால் குரங்குகளும் கரடிகளும் பாலத்தைக் கட்டின என்றது.

அர்ஜுனன் கிருஷ்ணனின் பெயரைச் சொல்லி தன் வில்லின் உதவியால் பாலம் கட்ட முடியும் என்றான். குரங்கு “செய் பார்க்கலாம்” என்றது. அர்ஜுனன் வில்லை வளைத்து அம்பைப் பொருத்தி ’கிருஷ்ணா’ என வாய்விட்டுச் சொல்லி சரத்தைச் செலுத்தினான். சரங்கள் சென்றன. பாலம் உருவானது. குரங்கு ”அப்பனே நீ யார்?” எனக் கேட்டது. "நான் பாண்டு மைந்தன் அர்ஜுனன்” என்றான். இதே சமயத்தில் குரங்கு அனுமனாக உருமாறியது.

அனுமனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே கிருஷ்ணன் குழந்தையாக நின்றான். இருவரும் கிருஷ்ணனை வணங்கினர். கிருஷ்ணன், “திருவரங்கத்தில் ரங்கனுக்குப் பூசை செய்வோரிடம் மாறுபாடு வரப்போகிறது அதனால் ரங்கனாதன் அங்கிருந்து குடிபெயர்ந்து அனந்தங்காட்டுக்கு வரப்போகிறான். நானும் அவனுடன் சேர்ந்து கொள்வேன்” என்றான்.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலயம் உருவான கதை பெருமாள்சாமி கதையுடன் தொடர்புடையது. இராம வழிபாட்டிற்கு எதிராக அல்லது அதை அகற்றிவிட்டு கிருஷ்ண வழிபாடு தொடங்குவது இந்த வாய்மொழிச் செய்தியின் சாராம்சம் என்று ஊகிக்கலாம். தென் மாவட்டங்களில் குறிப்பாக திருவிதாங்கூரில் கிருஷ்ண வழிபாடு நாட்டார் மரபில் நுழைந்ததற்கு இது போன்ற வேறு கதைகளும் உண்டு.


ஸ்ரீரங்கத்திலிருந்து ரங்கநாதன் திருவனந்தபுரத்திற்கு வந்தபோது தனியாக வரவில்லை மூன்று பூதங்கள், சில தெய்வங்களுடன் வந்தார். ஸ்ரீரங்கத்திலிருந்து அனந்தபுரம் வரையுள்ள ஊர்களில் உள்ள கோவில்களுக்குச் சென்றார். சிதம்பரம் நடராசன், மதுரை மீனாட்சி, நெல்லை காந்திமதி தெய்வங்களை அளவளாவினார். இதெல்லாம் பெருமாள்சாமி காவியம் கூறும் செய்தி. வில்லிசைக் கலைஞர் தங்கமணி, ரங்கநாதன் ஸ்ரீரங்கத்திலிருந்து பெரும் செல்வங்களுடன் தங்க நகைகளுடன் பட்டு பீதாம்பரங்களுடன் ஆடம்பரமாக வந்தார் என வில்லிசை நிகழ்ச்சியில் பாடுகிறார்கள்.

அனந்தங்காட்டில் கிருஷ்ணன் (பெருமாள்) வந்தபோது புலையன் ஒருவனே முதலில் கண்டான் என்னும் செய்தி வேறு வேறு வடிவங்களில் உள்ளது. ரங்கன் குடிப்பெயர்ச்சி மூலக்கதை மட்டுமன்றி தென் திருவிதாங்கூரில் பெருமாள் சாமி அல்லது திருமால் குடிபெயர்ச்சி மட்டுமல்ல வைணவத்தாக்கம் உள்ள வேறு கதைகளும் வழக்கில் உள்ளன.

  1. காஞ்சிபுரத்திலிருந்து கருடன் பறக்கை மதுசூதனப் பெருமாள் ஆலயத்துக்கு வந்த கதை
  2. இராமாயண காவியம் தொடர்பான இராவணன் வழிபட்ட பத்திரகாளி வழிபாடு, இராவணன் பூஜா விதி என்ற நூல்.
  3. இடைகரை புலை மாடசாமி கதை
  4. பிணமாலை சூடும் பெருமாள் கதை
  5. திருநெல்வேலி மாவட்டம் வாகைக் குளம் உலகளந்த பெருமாள் கோவில் அருகே உள்ள வைணவ பிராமணர் குடிப்பெயர்ச்சி

தென் மாவட்டங்களில் வழக்கில் உள்ள தோல்பாவைக் கூத்து, கண்ணன் ஆட்டம் என்னும் இரு கலைகள். இச்சான்றுகள் எல்லாமே தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி இவற்றுடனான வைணவத் தொடர்புகளைக் கூறுவன.

ஒருமுறை காஞ்சிபுரத்து அரசன் ஒருவனின் பிறந்தநாள் சனிக்கிழமை வந்தது. சோதிடர்கள் அரசனிடம் இதனால் தோஷம் வரும், பரிகாரம் செய்யலாம் எனச் சொன்னார்கள். அரசன் “என்ன பரிகாரம்" எனக் கேட்டான். ஜோதிடன் மரத்தால் கருடன் செய்து அதைத் தென் திருவிதாங்கூரில் உள்ள பறக்கை மதுசூதனர் ஆலயத்திற்குக் கொடுக்க வேண்டும் என்றான்.

அரசனின் கட்டளைப்படி திறமையான தச்சர் ஒருவர் கருடன் செய்தார். அது தத்ரூபமாக இருந்ததால் வானில் பறக்க யத்தனித்தது. ஆசாரி தன் கை உளியை அதன் மேல் எறிந்தான். உளி கருடனின் சிறகில் பட்டது என்றாலும் கருடன் வானில் பறந்தது. ஆசாரி அதன் பின்னே ஓடினான். அரசனும் பரிவாரங்களும் கருடன் பின்னே சென்றனர். கருடன் பறக்கை கோவிலில் தஞ்சமடைந்தது. தச்சனும் அங்கே போனான். கருடன் கோவிலில் தென்மேற்கு மூலையில் அமர்ந்தது.

இந்தக் கதை மேலும் தொடருகிறது. பறக்கை மதுசூதனர் கோவில் தலபுராணத்தில் இக்கதை வருகிறது. இக்கோவில் திருவிழாவில் 5 ஆம் நாளில் கருடனுக்குக் கண் திறப்பது என்ற சடங்கு நடக்கிறது. இப்போதும் நடக்கும் இந்நிகழ்ச்சியை ஆசாரி ஒருவரே செய்கிறார். இவரது குடும்பத்தினர் தங்களைக் காஞ்சிபுரத்திலிருந்து குடிபெயர்ந்தவர்களாகச் சொல்லிக் கொள்கின்றனர்.


நாஞ்சில் நாட்டில் பறக்கை, மருங்கூர், இரவிபுதூர், காடேத்தி என்னும் கிராமங்களில் காஞ்சிபுரத்திலிருந்து அரசன் ஒருவன் வந்ததான கதை வழங்குகிறது. இவன் வைணவச் சார்பாளன். இவனுக்கு இரவிபுதூரில் வழிபாடு உள்ளது. இவன் தொடர்பான கதை வில்லிசை நிகழ்ச்சியில் பாடவும் செய்கின்றனர்.

இராமாயணக் கதையுடன் தொடர்புடைய பாத்திரங்களுக்கு வழிபாடு நிகழ்வது பொதுவானது. இவற்றில் வட்டார ரீதியான வேறுபாடு உண்டு. தென் திருவிதாங்கூரில் இப்படியான வழிபாடுகள் சிலவற்றை அடையாளம் காண முடியும். இதுவும் இப்பகுதியின் வைணவச் சார்பின் சான்று.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் தெக்குறிச்சி உட்பட 14 கிராமங்களில் கோவிலூட்டம்மை வழிபாடு உள்ளது. இந்த வழிபாடு தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடம் ஊரிலிருந்து குடிபெயர்ந்த வைணவர்களால் பரவியதாகச் சொல்கிறார்கள். தட்டார் மடம் கோவில் வடதமிழ்ப் பகுதியில் ஓர் ஊருடன் தொடர்புடையது என்ற ஒரு கதை உண்டு. அந்த ஊர் பெரும்பாலும் காஞ்சிபுரம் அல்லது ஸ்ரீரங்கமாக இருக்கலாம்.

கோவிலூட்டம் என்ற பெயர் காளியைக் குறிப்பது. இவள் சுக்கிராச்சாரியார் கூறிய அறிவுரைப்படி இராமனை வெல்ல இராவணனால் பூசை செய்யப்பட்ட தெய்வம். இந்த வழிபாட்டை அனுமனும் அங்கதனும் அழித்தனர். கோவிலூட்டம்மை வழிபாட்டினரிடம் ஒரு சிறிய கதைப்பாடல் உள்ளது. 238 வரிகள் கொண்ட இதை இவர்கள் காவியம் என்கின்றனர். இராவணன் இராமனை ஜெயிக்க காளியிடம் வாள்வேண்டி எட்டாவது கோட்டையில் யாகம் செய்கிறான். இதை விபீஷ்ணன் வழி அறிந்த அனுமன் தன் வீரர்களுடன் அந்த இடத்திற்குப் போகிறான்.

அனுமன் காளியிடம் இராம அவதாரப் பெருமையையும் திருமாலின் சிறப்பையும் விவரிக்கிறான். உடனே காளி வீரவாளை அனுமனிடம் கொடுத்துவிடுகிறாள். தன்னைத் திருமால் அடியவனாகப் பிரகடனப்படுத்துகிறான். தன்னை யார் வணங்குகிறார்களோ அவர்களுக்குத் திருமாலின் அருள் கிடைக்கும் என்கிறான்.

இராமன் காளியிடம் பெற்ற வாளால் இராவணனை வெட்டுகிறான். இந்த வாள் திருமாலின் அம்சமாகக் கொள்ளப்பட்டது. இராம ராவணப் போர் முடிந்ததும் காஞ்சிபுரத்தில் உள்ள சிலர் காளியை வழிபட்டனர். இதற்கு அடையாளமாக ஒரு வாளை நட்டனர். இது கோயிலூட்டம்மை எனப்பட்டது.

இராவணன் யாகம் செய்து காளியை வருவித்த கதை தமிழ் ராமாயணங்களிலோ வான்மீகியிலோ இல்லை. ஆழ்வார்களும் சொல்லவில்லை. வட இந்திய ராமாயணங்கள் சிலவற்றிலும் (அத்யாத்ம ராமாயணம்) தெலுங்கு இராமாயணங்களிலும் (ரங்கநாத ராமாயணம், ஆனந்த ராமாயணம்) பரோடா சமஸ்தானத்தில் கிடைத்த சமஸ்கிருத ராமாயண ஏட்டிலும் இந்தக் கதை நிகழ்ச்சி உள்ளது.

தோல் பாவைக்கூத்து நிகழ்ச்சியில் இராவணனின் தம்பி ஒருவன் இராமனைக் கொல்ல யத்தனிக்கும் கதை காட்டப்படும். இது மயில்ராவணன் கதை எனத் தனியாகவும் காட்டப்படுகிறது.

இடைகரை புலை மாடசாமி என்னும் நாட்டார் தெய்வம் தொடர்பான கதையும் அனந்தன்காட்டு கிருஷ்ணன் கோவில் பூசகருடன் தொடர்புடையதுதான். பிணமாலை சூடிய பெருமாள் கதை சுடலைமாடன் தொடர்புடையது. பெருமாள், மாடனாக மாறிய இந்தக் கதை திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதி கிராமங்களில் வழக்கில் உள்ளது.

இப்படியாக தென் மாவட்டங்களில் வழிபாடு பெறுவதும், வில்லிசை நிகழ்ச்சில் பாடப்படுவதும், வாய்மொழி வடிவில் இருப்பதுமான தெய்வங்களின் கதைகள் பெருமாள் சாமி காவியத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவை என்பதை மறுக்க முடியாது. இவற்றின் வழி சில விஷயங்களை ஊகிக்க முடியும்.

நாட்டார் மரபில் வைணவத் தாக்கம் முழுதும் இல்லை என்ற முந்தைய கருத்தாக்கத்திற்கு எதிரான சான்றுகள் உள்ளன. நாட்டார் தெய்வங்களில் சிவன் பார்வதி தொடர்பானவை மிக அதிகம் என்றாலும் பெருமாளும் நாட்டார் தெய்வமாக இருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஸ்ரீரங்கம் அல்லது காஞ்சிபுரத்திலிருந்து குடிப்பெயர்ச்சி நடந்திருக்கிறது. இப்படி வந்தது தொடர்பான திருமழிசை ஆழ்வாரின் கதையை மூலமாக வைத்து ஒரு கதைப் பாடல் உருவாகியிருக்கிறது. பெருமாள் சாமி காவியம் என்னும் இக்கதைப் பாடல் வேறு பல கிளைக் கதைகள் உருவாகவும் காரணமாயிருக்கிறது.


திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் உருவானதற்காகச் சொல்லப்படும் கதைகளில் ஸ்ரீரங்கம் குடிப்பெயர்ச்சி முக்கியமானது. அதோடு நாட்டார் மரபின் தாக்கத்துடனேயே அனந்தன் காட்டு பத்மநாபன் உருவாகியிருக்கிறான் என்று சொல்லும் அளவுக்கு கதைகள் வழக்கில் உள்ளன.

திருவனந்தபுரம் கோவில் உருவான கதைகளில் புலையர் சாதியினருக்கும் பங்குண்டு. ஸ்ரீரங்கத்திலிருந்து குடிபெயர்ந்த பெருமாள், முதலில் அனந்தன் காட்டில் புலையர் தம்பதிகளைத்தான் சந்திக்கிறான். புலையர் வாழும் குடியிருப்பில்தான் பெருமாளுக்கு வழிபாடு நடந்திருக்கிறது. அப்போது பூசை செய்த நம்பூதிரி, புலைப் பெண்ணை விரும்பியதால் கொலைப்பட்டார் என்ற ஒரு கதை உண்டு (இடைகரை புலை மாடசாமி)

தென் மாவட்டங்களில் வைணவத் தாக்கம் உடைய கண்ணன் ஆட்டம், கிருஷ்ணனாட்டம், தாதராட்டம், தோல்பாவைக் கூத்து எனச் சில நாட்டார் கலைகளும், பெருமாள் சாமி காவியம், கோவிலூட்டம்மன் கதை, அயோத்தி கதை, இரண்யசம்ஹாரம், குகலவர்சாமி கதை என அச்சில் வந்த கதைகளும், இடைகரை புலை மாடசாமி கதை, பிணமாலை சூடும் பெருமாள் கதை, கோமாண்டி கதை எனச் சில வாய்மொழிக் கதைகளும் உள்ளன. தோல்பாவைக் கூத்து ஆந்திர இராமாயணத்தின் செல்வாக்குடையது.

*********

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம், குறத்தியறை அருகே மலையடிவாரத்தில் ஒரு சிறு குடைவரைக் கோவில் உள்ளது. இதைப் பார்க்க நானும் செந்தீ நடராசன், செல்வதரன் ஆகியோரும் போனோம். இந்த அனுபவம் மறக்க முடியாதது. குறத்தியறை மேல்நிலைப் பள்ளியின் பின்னே நீண்டு கிடக்கும் மலையடிவாரத்தில் அந்தக் குகைக் கோவில் உள்ளது.

இந்த இடத்தைச் செந்திட்டப்பாறை என்றும் அவ்வையாரம்மன் கோவில் என்றும் அழைக்கிறார்கள். இந்தப் பெயர்கள் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கின்றன. ஆடிமாத செவ்வாய்க் கிழமைகளில் இந்தக் கோவிலில் அவ்வையாரம்மனுக்கு வழிபாடு நடக்கிறது. இந்த மாதத்தில் இதுபோல் வழிபாடு நடக்கும் இன்னொரு இடம் சீதப்பால் அவ்வையாரம்மன் கோவில்.

சீதப்பால் ஊர்க் கோவிலில் அவ்வையார் சிற்பமே உள்ளது. குறத்தியறை ஊர்க்கோவிலின் நிலைவேறு. இந்தக் குடைவரையில் புடைப்புச் சிற்பமாக விஷ்ணு சிற்பம் உள்ளது. நின்ற கோலம் நான்கு கைகள் பின் கைகளில் சங்கு பிரயோகச் சக்கரம் முன்கைகள் அபயஹஸ்தம் கடிஹஸ்தம்.

இந்தக் குகையை ஆராய்ந்த எச்சர்கார் இங்குள்ள விஷ்ணு சிற்பம் விழுப்புரம் மாவட்டம் கீழ்மாவிலங்கையில் உள்ள விஷ்ணு சிற்பத்தை ஒத்துக் காணப்படுகிறது; அதனால் குறத்தியறை குகை விஷ்ணு சிற்பம் ஐடில பராந்தகன் நெடுஞ்சடையன் (கி.பி. 768-815) முதல் வரகுணன் ஸ்ரீமாறன், ஸ்ரீவல்லபன் (815-862) ஆகிய அரசர்களில் ஒருவன் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்.

இந்தப் பழைய குடவரை கோவில் பற்றி தகவல் சேகரிக்க கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை சென்றிருக்கிறார். இது தற்செயல் நிகழ்வு. நாஞ்சில் நாட்டின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்த முதலியார் வம்சா வழியினர் வீட்டில் பழைய ஆவணங்களைச் சேகரிக்கப்போன சமயத்தில்தான் குறத்தியறை குறவன் திட்டுப்பாறை குடைவரைக் கோவிலைப் பார்க்கப் போனார்.

கவிமணி அங்கு போன சமயம் ஆடிமாத செவ்வாய்க் கிழமை வழிபட்டிருக்கிறார்கள். விஷ்ணுவிற்கு வெள்ளி மார்புக் கவசமும், குடைவரைக் கோவில் விஷ்ணுவை அவ்வையாராக அலங்கரித்து அணிகலன்களும் - அணிவிக்கப்பட்டிருந்ததைக் கண்டிருக்கிறார். இந்தக் குகையின் முன்பு விஷ்ணு சிற்பம் ஒன்றும் இருந்ததைக் கண்டிருக்கிறார். இந்தக் களஆய்வு நிகழ்ச்சி 1903-04ல் நடந்திருக்கலாம். பின்னர் முதலியார் ஆவணங்கள் பற்றி நீண்ட கட்டுரை ஒன்றை Kerala Society Papers இதழில் (Series 7-1931) எழுதியிருக்கிறார். இக்கட்டுரையின் முன்னுரையில் இந்தக் குடைவரை விஷ்ணுவைக் குறிப்பிடுகிறார்.

விஷ்ணு எப்படி அவ்வையாராக மாறினார்? இது எப்போது நடந்தது? இங்கு லேசாக சிதைந்ததும், உடைந்ததும் ஆகிய இரண்டு விஷ்ணு சிற்பங்கள் உள்ளன. இந்தக் குடைவரைக் கோவிலின் முன் உள்ள வட்டப்பாறையில் உள்ள கல்வெட்டு, 'இரும்பைத் தங்கமாக மாற்றும் ரகசியம்' எனப் பரவலாக நம்பப்பட்ட கதையைக் கவிமணியும் நம்பியிருக்கிறார். அங்குள்ள கல்வெட்டு தொடர்பான கதை இன்றும் வழங்குகிறது.

நாஞ்சில் குறவன் ஒருவன் இரும்பைத் தங்கமாக்கும் மூலிகையையும் அதுகுறித்த ரசாயன ரகசியத்தையும் அறித்து பெரும் பணக்காரனானான். நாஞ்சில் நாட்டு அரசனும் ஆனான். அவன் மகனுக்கு சைவவேளாள குடும்பத்தில் பெண் கேட்டான். அதனால் குறவ அரசன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான். குறவ அரசன் தன் ரகசியத்தை ஒரு கல்லில் எழுதி வைத்திருந்தானாம். இந்தக் கதை 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டிலும் பரவலாக வழங்கியது. இதனால் இதைப் படித்து அறிய சித்தவைத்தியர்கள் இங்கே படையெடுத்திருக்கின்றனர்.


இங்கே 3 வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் உள்ளன. இரண்டு 10 ஆம் நூற்றாண்டினது. இவற்றில், விஷ்ணு “வண்டுற வீற்றிருந்தருளின எம்பெருமாள்” எனக் குறிப்பிடப்படுகிறார். இவை நிவந்தக் கல்வெட்டு, விஷ்ணுவிற்கு நிவந்தம் இதனால் இந்தக் குகை மட்டுமல்ல இங்குள்ள விஷ்ணு சிற்பங்களும் 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டன என்று தெரிகிறது.

குறவன் தட்டுப்பாறை குடைவரைக் கோவிலுக்கு ஆறு ஏழு முறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கவிமணி குறிப்பிட்ட விஷ்ணு சிற்பத்தைத் தேடினேன். செந்தீ நடராசனுடன் ஒரு முறை சென்றபோது இடதுபுறம் உள்ள தோட்டத்தில் சுடலைமாடன் கோவிலில் அந்தக் குறத்தியறை ஊரிலிருந்து கடுக்கரை ஊருக்குப் போகும் சாலையில் சிற்பம் உள்ளது என்று அறிந்தேன்.

குறத்தியறை மேல்நிலைப் பள்ளியின் அருகே குடியிருந்த ஒருவரின் உதவியுடன் அந்தச் சுடலைமாடன் கோவிலுக்குப் போனேன். இது வெட்டவெளியில் அமைந்த சுடலைமாடன். ஆஜானு பாகுவாய் சுடலைமாடன் நின்றுகொண்டிருந்தார். மாடனுக்கென்று பொதுவாக உள்ள வடிவம் அது. அரைவட்டத்தலை, சாய்வான செவ்வக வடிவம். சுமார் 7 அடி உயரம். மஞ்சணை என்றும் மணமுள்ள சாந்துப்பூச்சு களபம் என்ற சந்தனக் கலவையால் மணந்து கொண்டிருந்தார். உயரமான அந்த வடிவத்தின் முன்பகுதியில் வெட்டுக்கத்தியின் படம். சுடலை மாடன் அருகே குண்டாந்தடி கழுத்தில் பிச்சி, அரளி மாலைகள்.

சுடலைமாடனின் அருகே துணைமாடன்கள், இசக்கி எனச் சில தெய்வங்கள். எல்லோரும் மாடனின் வடிவில் இருந்தனர். அருகே சுடுமண் விளக்கு. நாங்கள் சென்றது ஒரு சனிக்கிழமையில். அதனால் முந்திய நாள் சிறப்பு வழிபாட்டின் அறிகுறி தெரிந்தது. சுடலை மாடனுக்கு அருகே விஷ்ணுவும் நின்றார். நான்கு கரங்கள். பின்கைகளில் சங்கு சக்கரம். ஒரு கை அபயஹஸ்தம் இன்னொரு கை கடிஹஸ்தம். நின்ற கோலம். அவர் கையிலுள்ள பியோகச் சக்கரம், அந்தச் சிற்பத்தின் காலத்தைக் காட்டியது.

தொல்லியலாரின் கணக்குப்படி கி.பி. 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டினது. முற்காலப் பாண்டியன் அமைத்தது. நாட்டார் தெய்வங்களுக்கு பூசப்படும் மஞ்சணை சாந்து மணத்துடன் விஷ்ணு நின்றார். அவரது ஒப்பனையும் கிராமத் தெய்வத்திற்குரிய அம்சங்களுடன் இருந்தது.

நாங்கள் விஷ்ணுவைப் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது அந்தக் கோவிலுடன் தொடர்புடைய ஒருவர் வந்தார். எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம் பாதகமில்லாதவர்கள் என்று நினைத்தாரோ தெரியவில்லை. விரிவாகப் பேசினார். "..இந்த நாராயணன் கல் உருவம் குறவன் தட்டுப்பாறையில் தோட்டத்துல கவனிப்பாரற்றுக் கிடந்தது. இவர எப்படியாவது காப்பாத்தணுன்னு கொண்டு வந்தேன். இல்லேன்னா மேலஊத்து ஓடைக்கு பாலமாவோ காம்பவுண்டு எல்லைக்கல்லாவோ ஆகிருப்பார். இவருக்குன்னு தனியாவா வழிபாடு பூசை நடக்கும் சுடலை மாடன் புண்ணியத்துல பூசை இவருக்கும் நடக்கும். வெள்ளி செவ்வாய் பூச எல்லாஞ் சாமிதானே” என்றார். அந்த விஷ்ணுவிற்கு மாடன் வாழ்வு கொடுத்தது மாதிரி அவர் பேசினார்.

திருவிதாங்கூர் தொல்லியல் வரிசை 8ல் உள்ள குறவன் திட்டு (குறத்தியறை) கல்வெட்டு எனக்கு நினைவுக்கு வந்தது. 13 வரிகள் கொண்ட அந்தக் கல்வெட்டில் முதல் பராந்தக சோழன் தன் 31ஆம் ஆண்டில் இந்த விஷ்ணுவைக் கவனிக்க குன்றப்பள்ளி இப்பிக்க விசியன் சாத்தன் சிரவணன் என்பவனை நியமித்த செய்தி வருகிறது. இதற்குப் பொன் கொடையாக வழங்கியிருக்கிறான். கல்வெட்டில் குறிப்பிடப்படும் வண்டுற வீற்றிருந்தருளின எம்பெருமாள் இப்போது பெருமாள் மாடனாகப் பெயர் பெற்றுப் பாதுகாப்பாக இருக்கிறார்.

அ.கா. பெருமாள்

*********

இக்கட்டுரை அ.கா. பெருமாள் எழுதி வெளியாகியுள்ள 'தென்குமரிச் செய்திகள்' என்ற நூலிலிருந்து மிள்பிரசுரம் . 

நன்றி - நியு சென்சுரி புக ஹவுஸ்




அ.கா. பெருமாள் (1947) நாட்டாரியலாளர், ஆய்வாளர், பதிப்பாளர். தமிழகத்தில் உள்ள ஆய்வாளர்களில் முதன்மையானவர். தென்குமரி நாட்டார் ஆய்வு, குமரி மாவட்ட வரலாற்று ஆய்வு, இலக்கிய ஆய்வு என தொண்ணூறுக்கும் மேல் நூல்கள் எழுதியுள்ளார். பழைய சுவடிகளை பதிப்பித்தும் உள்ளார். தொல்லியல் துறை, ஆய்வுத்துறை, தமிழக வளர்ச்சித் துறை என ஆய்வு சம்பந்தப்பட்ட முக்கியமான துறைகளில் தொடர்ந்து, தனது ஆய்வு பங்களிப்பை தருபவராகவும் ஆலோசகராகவும் உள்ளார். 

அ.கா. பெருமாள் - Tamil Wiki