Sunday, 28 April 2024

தனி-அறிவியல் துறைகளிலுள்ள தத்துவ சிக்கல்கள் - 2: உயிரியல் - சமீர் ஒகாஸா

உயிரியல் சிற்றினங்கள் (Species) என்றால் என்ன?

அறிவியலாளர்கள் தாங்கள் ஆராயும் பொருள்களை வகைப்படுத்த பொதுவாக விரும்புவார்கள். நிலவியலாளர்கள் பாறைகள் எவ்வாறு உருவாயின என்பதைப் பொருத்து அவற்றை அனற்பாறை (igneous), படிவுப்பாறை (sedimentary), அல்லது உருமாற்றப்பாறை (metamorphic) என வகைப்படுத்துகின்றனர். பொருளியலாளர்கள் வரிவிதிப்பை அதன் கடினத்தன்மையைப் பொருத்து சரிவிகித வரி (proportional), வளர்விகித வரி (progressive) அல்லது தேய்வுவீத வரி (regressive) என வகைப்படுத்துகின்றனர். வகைப்படுத்தலின் முக்கிய செயல்பாடு தகவலை தெரிவிப்பது. வேதியியலாளர் ஒரு பொருளை உலோகம் என்று சொன்னாலே அது அப்பொருளின் பெரும்பாலான பண்புகளை நமக்கு தெரியப்படுத்திவிடும். அடிப்படையிலேயே பொருள்கள் பல வழிகளில் வகைப்படுத்தக் கூடிய தன்மை கொண்டவை. இதை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தலில் சில சுவாரஸ்யமான தத்துவ சிக்கல்கள் எழும்புகின்றன. உதாரணமாக, வகைப்படுத்தல் முறைகளில் ஒன்றை எப்படி தெரிவு செய்ய வேண்டும்? வகைப்படுத்த ஒரு ‘சரியான’ வழிமுறை உள்ளதா? இல்லை அனைத்து வகைப்படுத்தல் வழிமுறைகளும் எதேச்சையானது தானா? போன்றவை. இக்கேள்விகள் உயிரியல் வகைப்பாடு (Classification) அல்லது வகையியல் (taxonomy) சூழலில் அதிக கவனம் பெறுகின்றன. இதையே இங்கு நாம் பார்க்கவிருக்கிறோம். 

கார்ல் லின்னியஸ் 1707-78

உயிரியல் வகைப்பாட்டின் அடிப்படை அலகு சிற்றினம் (Species). மரபான வகையியலில் ஒவ்வொரு ’உயிரி’யும் (Organism) முதலில் ஒரு சிற்றினத்திற்கு ஒதுக்கப்படுகிறது. அந்த சிற்றினம் இரு பகுதிகளைக் கொண்ட ஒரு லத்தீன் பெயரில் குறிக்கப்படுகிறது. இதற்கு இருசொல்முறை (Binomial) என்று பெயர். இதன்படி, நீங்கள் ஹொமோ செப்பியன்ஸ் (Homo sapiens) சிற்றினத்தை சேர்ந்தவர். உங்கள் வளர்ப்பு பூனை ஃபெலிஸ் கேட்டுஸ் (Felis catus) மற்றும் உங்கள் வீடு அலமாரியில் இருக்கும் எலி முயூஸ் முயூஸ்குலுஸ் (Mus musculus) ஆகிய சிற்றினங்களைச் சேர்ந்தவை. பிறகு ஒவ்வொரு சிற்றினமும் உயர் வகைப்பாட்டில் (Higher taxa) ஒதுக்கப்படுகின்றன, பேரினம் (genus), குடும்பம் (family), குடும்பக்குழு (order), வகுப்பு (class), தொகுதி (phylum), பெருந்தொகுதி (kingdom) என படிநிலையாக (hierarchical) அடுக்கப்படுகின்றன. இதன்படி, ஹோமோ செப்பியன்ஸ் சிற்றினம் ஹோமோ பேரினம், ஹோமினிட் (Hominid) குடும்பம், உயர்பாலூட்டி (primate) குடும்பக்குழு, பாலூட்டி (mammalian) வகுப்பு, முதுகுத்தண்டுள்ள (chordate) தொகுதி மற்றும் விலங்கு பெருந்தொகுதி (Animal kingdom) என அடுக்கப்படுகிறது. இந்த வகைப்படுத்தல் அமைப்புக்கு லின்னியன் (Linnean) முறை என்று பெயர். 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவீடன் இயற்கையியல் அறிஞர் (naturalist) கார்ல் லின்னியஸ் (Carl Linnaeus, 1707-78) இந்த முறையை உருவாக்கினார். இது இன்றும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 

இங்கு நாம் கவனம் செலுத்தவிருப்பது வகைபாட்டாளர்களின் முதல் கட்ட பணியில். அது உயிரிகளை எப்படி சிற்றினத்திற்கு ஒதுக்குவது என்பதைப் பற்றியது. பார்ப்பதற்கு இது எளிமையாக தோன்றினாலும் அப்படி இல்லை. ஏனென்றால் உயிரியலாளர்கள் உண்மையில் ’ஒரு சிற்றினம்’ என்றால் என்ன என்பதை ஒருமித்தமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஒரு சிற்றினத்தை அடையாளம் காண்பதற்கு என்னென்ன அளவுகோள்களை பயன்படுத்த வேண்டும் என்பதிலும் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. நிஜமாகவே ’உயிரியல் சிற்றினங்கள்’ அல்லது ‘சிற்றின கருத்து’ என்பதற்கு பல வரையறைகள் நவீன உயிரியலில் காணப்படுகின்றன. அவை ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. இப்படி ஒன்றுக்கொன்று உடன்படாமல் இருப்பதே ‘சிற்றினப்பிரச்சனை’ (Species problem) எனப்படுகிறது. 

சிற்றினப்பிரச்சனை என ஒன்று இருப்பதை கேட்டு நீங்கள் ஆச்சர்யப்படலாம். ஒரு சாதாரண மனிதரின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது உயிரிகளை சிற்றினத்திற்கு ஒதுக்குவதில் எந்த பிரச்சனையுமே இல்லாதது போலத் தோன்றும். அதேசமயம் எல்லா உயிரிகளும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை நம்முடைய சாதாரண அவதானிப்பில் இருந்தே அறிந்துகொள்ளலாம். அவை பன்முகத்தன்மை கொண்டவை, அதாவது சில உயிரிகள் மிகப் பெரிதாகவும், மற்றவை சிறியதாகவும் உள்ளன; சில உயிரிகள் நகர்கின்றன, மற்றவை நகர்வதில்லை; சில உயிரிகள் நீண்ட நாள் வாழ்கின்றன, மற்றவை சில மணி நேரங்கள் மட்டுமே வாழ்கின்றன. கூடவே, இந்த பன்முகத்தன்மை ஒவ்வொரு உயிரி குழுவுக்கும் வேறுபட்டுக் காணப்படும் என்பதையும் அறிகிறோம். உயிரிகளை தனித்தனி வகைகளாக பிரிக்க முடியும். அந்த வகைகள் பலவற்றை குழந்தைகளால் கூட அடையாளம் காண முடியும். உதாரணமாக, பூங்காவில் வேறுவேறு வகையைச் (Breed) சார்ந்த இரு நாய்கள் உள்ளன. ஒரு 3 வயது குழந்தையால் அவை இரண்டையும் நாய் என நம்பிக்கையுடன் மதிப்பீடு செய்ய இயலும், அவை வெவ்வேறு வகையைச் சார்ந்ததாக இருந்தும் கூட. ஒரு உயிரியலாளர் அவை இரண்டும் கனிஸ் ஃபெமிலியரிஸ் (Canis familiaris) என்ற ஒரே சிற்றினத்தைச் சார்ந்தவை என சொல்லி அக்குழந்தை கூறியதை சரியென உறுதிசெய்வார். இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால், ’வாழும் உயிரிகளுக்கு இடையில் புறவயமான பிரிவினைகள் உள்ளன, அவற்றை கண்டறிவதே உயிரியலாளர்களின் வேலை’ எனக் கருதுவது இயல்பே. இந்த பார்வையின் படி, உயிரியலாளர்கள் சிற்றினங்களுக்கு இடையிலான பிரிவுகளை அவர்களுக்கு ஏற்றார் போல திணிக்க முடியாது. மாறாக அவை ‘வெளியில் இருக்கின்றன’, கண்டறியப்படுவதற்காக காத்திருக்கின்றன. உயிரியல் அறிஞர்கள் அல்லாத பலர் இப்பார்வையை கேள்வியே இல்லாமல் ஏற்றுக் கொள்வதாகத் தெரிகிறது. 

இந்த பொதுப்பார்வையானது ‘இயற்கையான வகைகள்’ (Natural kinds) என்ற தத்துவ கோட்பாடுடன் பொருந்துகிறது. இது அரிஸ்டாடில் காலம் முதல் பிரபலமாக இருந்துவரும் வகைப்பாடு. இக்கோட்பாடின் படி, பொருள்களை குழுக்களாக வகைப்படுத்துவதில் மனிதர்களின் விருப்பங்கள் பிரதிபலிக்கக்கூடாது, மாறாக வகைப்படுத்துவதற்கான வழிகள் இயற்கையாகவே இவ்வுலகில் உள்ள பிரிவினைகளை ஒத்துள்ளன. வேதியியலின் தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் ’இயற்கையான வகை’க்கு நல்ல உதாரணங்கள். இந்த பிரபஞ்சத்தில் உள்ள சுத்தமான தங்கங்களின் மாதிரிகள் அனைத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த மாதிரிகள் அனைத்தும் ‘தங்கம்’ என்ற வகைக்குள் வருபவை. ஏனென்றால் அவை ஒரு அடிப்படை அம்சத்தில் ஒத்திருக்கின்றன: அது அவற்றில் உள்ள அணுக்களின் அணு எண் 79. இதற்கு மாறாக, மூடனின் தங்கம் (Fool’s gold - iron pyrite) என அழைக்கப்படுவதன் ஒரு மாதிரி சில அம்சங்களில் தங்கத்தை ஒத்திருந்தாலும் தங்கம் என்ற வகைக்குள் சேராது. ஏனென்றால் அது வேறு வகையான அணுக்களால் (Iron and sulphur) உருவாக்கப்பட்ட ஒரு சேர்மம். எந்த அறிவியலாக இருந்தாலும் அதன் பணிகளின் ஒன்று அத்துறையில் உள்ள இயற்கையான வகைகளைக் கண்டறிவதே என ரியலிசத்தை தழுவிய தத்துவவாதிகள் சொல்கின்றனர். 

சிற்றினங்களை உயிரியலுடைய ’இயற்கையான வகை’யாக எடுத்துக்கொள்ளலாம் என்ற யோசனை நன்றாகத் தான் உள்ளது. இருந்தாலும் இந்த யோசனை பல சவால்களை சந்திக்கிறது. அதில் ஒன்று, எதை ஒரு சிற்றினம் என சொல்கிறோம் என்பதில் எதர்ச்சையான தன்மை இருக்கக்கூடும் என்பது. ஏனென்றால் உயிரியலாளர்கள் சிற்றினத்தை வகைகள் (Breed), ரகங்கள் (Variety) மற்றும் உட்சிற்றினம் (Sub-species) என்று உட்பிரிவுகளாக பிரிக்கின்றனர். உதாரணமாக, தங்கநிற கழுகான அக்குலியா க்ரைசேடொஸ் (Aquila chrysaetos) ஐரோப்பிய, அமெரிக்க, மற்றும் ஜப்பானிய தங்கநிற கழுகு போன்ற ஆறு உட்சிற்றினங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உட்சிற்றின குழுவை உருவாக்குவதற்கான நோக்கம் என்னெவென்றால் சில உயிரிதொகைகள் மற்ற உயிரிதொகைகளுடன் அடையாளம் காணத்தக்க வகையில் வேறுபட்டிருக்கும், தனி சிற்றினமாக எடுத்துக்கொள்ளும் அளவிற்கு மிகவும் வேறுபட்டிருக்காது. இதை எப்படி துல்லியமாக பிரிப்பது? இது பற்றி உயிர்சிற்றினங்களின் தோற்றம் (origin of species) என்ற நூலில் டார்வின் ஒரு உரையாடலைக் தருகிறார். அதில் சிற்றினங்கள், உட்சிற்றினங்கள் மற்றும் ரகங்கள் ஆகியவற்றிற்கு இடையில் தெளிவான பிரிவினை இல்லை என வாதிடுகிறார். டார்வின் இவ்வாறு சொல்லி உரையாடலை முடிக்கிறார்: ’சிற்றினம் என்ற சொல்லை ஒன்றுக்கொன்று நெருக்கமாக ஒத்திருக்கும் தனித்தனி உயிரிகளின் ஒரு தொகுப்புக்கு எதேச்சையாக மற்றும் வசதிக்காக கொடுக்கப்படும் ஒன்றாக நான் பார்க்கிறேன். இது ரகம் எனச் சொல்லப்படுவதுடன் அடிப்படையில் வேறுபடுவதில்லை. ரகம் என்பது குறைவான வேறுபாடுகளையும் அதிக மாறுபட்ட வடிவங்களையும் கொண்ட உயிரிகளின் தொகுப்புக்கு கொடுக்கப்படுவது.’

தனித்தனி உயிரிகளின் ஒரு தொகுப்பை சிற்றினம் எனச் சொல்வது எதேச்சையானது என டார்வின் சொல்லியது ஆச்சர்யமாக உள்ளது. இது சிற்றினம் என்பது ’இயற்கை வகைகளில்’ ஒன்று என்ற கருத்தாக்கத்துடன் பொருந்தவில்லை. ஆனால் டார்வின் சொல்லியது சரிதானா? 20ஆம் நூற்றாண்டில் பல உயிரியலாளர்கள் சிற்றினம் என்பது நிஜமாகவே இயற்கையில் உள்ள ஒன்று, எதேச்சையாக பிரிக்கப்பட்ட குழு அல்ல என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இவ்வாறு இவர்கள் ஏற்றுக்கொண்டதற்கு அடிப்படை ’சிற்றினம் இனப்பெருக்கம் செய்வதில் தனித்து செயல்படும்’ (Reproductively isolated) என்பதே. ’தனித்து இனப்பெருக்கம் செய்த’லின் அடிப்படையில் உயிரியல் சிற்றினங்களை வரையறை செய்வது இர்ன்ஸ்ட் மேயர் (Ernst Mayr) என்ற ஜெர்மன் உயிரியலாளரால் பிரபலப்படுத்தப்பட்டது. இது ‘உயிரியல் சிற்றின கருத்தாக்கம்’ (Biological species concept - BSC) எனப்படுகிறது. இதன் ஆதரவாளர்கள் ரகம் / சிற்றின வேறுபாடு எதேச்சையானது என்ற டார்வினின் வாதத்தை நிராகரிக்கின்றனர். இந்த பார்வையின் படி, ஐரோப்பிய தங்கநிற கழுகும் அமெரிக்க தங்கநிற கழுகும் அடிப்படையில் இனக்கலப்பு செய்யகூடியவை, மேலும் தக்க சந்ததிகளை உருவாக்கக்கூடியவை (அவை அரிதாகவே அவ்வாறு செய்தாலும் கூட) என்பதால் அவை ரகங்கள், தனித்தனி சிற்றினங்கள் அல்ல. மாறாக புள்ளி கழுகுகளும் (spotted eagle) தங்கநிறக் கழுகுகளும் இனக்கலப்பு செய்யக்கூடியது அல்ல என்பதால் அவை தனித்தனி சிற்றினங்கள். 

BSC தற்கால உயிரியலில் பரவலாகப் பயன்படுகிறது. ஆனால் இதற்கு ஒரு எல்லை உண்டு. இது பாலுறவு வழியாக இனப்பெருக்கம் செய்யும் உயிரிகளுக்கு மட்டுமே பொருந்தும். இன்றுள்ள பல உயிரிகள் பாலுறவற்ற இனப்பெருக்கமே செய்கின்றன. உதாரணமாக, பல ஒரு செல் உயிரிகள், சில தாவரங்கள் மற்றும் பூஞ்சைகள், மற்றும் சில விலங்குகள். எனவே சிற்றின சிக்கலுக்கு BSC சிறந்த பகுதியளவு தீர்வு மட்டுமே. மேலும் ’தனித்த இனப்பெருக்கம்’ என்பது நிலையான திட்டவட்டமான விஷயமாக எப்போதும் இருந்ததில்லை. ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய இரு சிற்றினங்கள் அருகருகே வாழும் போது அப்பகுதியில் ‘கலப்பின மண்டலங்கள்’ (Hybrid zones) இருக்கும். அது அச்சிற்றினங்கள் தனித்தனியாக வாழும் பகுதிகளின் எல்லைகள் சந்திக்கும் இடம். அந்த மண்டலங்களில் ஒரு குறிப்பிட்ட அளவிலான கலப்பினமாக்கம் (hybridization) நடைபெறும், இதன்மூலம் சிலசமயம் வலிமையான சந்ததிகள் கூட உருவாகும். ஆயினும் ஆவ்விரு சிற்றினங்களும் தனித்த அடையாளத்துடனேயே இருக்கும். ஒரு சிற்றினம் இரண்டாக பிரியும் செயல்பாடு நடக்கும் இடங்களில் கலப்பின மண்டலங்கள் உருவாகும். குறிப்பாக, தாவரங்களில் தெளிவான வேறுபாடுகள் கொண்ட சிற்றின உயிரிகளுக்கு இடையே கலப்பினமாக்கம் சாதாரணமாக நடைபெறும். 

வளையச் சிற்றினங்கள் (Ring species) என்ற நிலை BSCக்கு மேலும் ஒரு சிக்கலைத் தருகிறது. ஒரு சிற்றினத்தில் உள்ள ஒன்றுக்கொன்று தொடர்புடைய உயிரிதொகைகளை நிலவியல் படி ஒரு வளையமாக சங்கிலித் தொடராக அடுக்கும் போது அச்சிக்கல் வருகிறது. ஒவ்வொரு உயிரிதொகையும் அதன் உடனடி அருகாமை உயிரிதொகையுடன் இனக்கலப்பு செய்யும், ஆனால் அந்த சங்கிலித் தொடரின் இரு முனைகளில் உள்ள உயிரிதொகைகள் இனக்கலப்பு செய்யாது. உதாரணமாக, உயிரிதொகை A ஆனது B யுடன் இனக்கலப்பு செய்யும், B ஆனது C யுடனும், C ஆனது D யுடனும், D ஆனது E யுடனும் இனக்கலப்பு செய்யும். ஆனால் A ஆனது E யுடன் இனக்கலப்பு செய்யாது (கீழேயுள்ள படத்தைப் பார்க்கவும்). வளையச் சிற்றினம் BSCக்கு புதிரானது. ஏனென்று பார்க்க Aவும் Eயும் ஒரே சிற்றினமா இல்லையா என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அவை இனக்கலப்பு செய்ய முடியாது என்பதால் அதற்கான பதில் ‘இல்லை’ என்று இருக்க வேண்டும். இனக்கலப்பு அளவுகோளின் படி Aவும் Bயும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. அது போலவே Bயும் Cயும், C மற்றும் D, C மற்றும் E ஆகியவை. எனவே Aயும் Eயும் ஒரே இனமாக இருக்க வேண்டும் தானே? இதற்கு என்ன பதில் சொல்வது என்று BSCக்கு தெளிவாகத் தெரியவில்லை. எனவே ’எது ஒரு சிற்றினமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதில் ஒரு தெளிவற்ற தன்மை உள்ளது’ என டார்வின் சொல்லியது ‘தனிப்பட்ட இனப்பெருக்கம்’ என்ற கருத்தாக்கத்தால் முற்றிலும் நிராகரிக்கப்படவில்லை.

வளைய சிற்றினம். இரு அம்புக்குறியிட்ட கோடு இனக்கலப்பை சுட்டுகிறது

சிற்றினச்சிக்கலின் அடிப்படை பரிணாமமே. டார்வினை பின்பற்றி நவீன உயிரியல் நமக்கு கற்பிப்பது என்னவென்றால் தற்போதுள்ள அனைத்து உயிரிகளும் ஒரு பொது மூதாதையில் இருந்தே வந்தது என்பதே. மரபான லின்னியன் வகைப்பாடு படைப்புவாதம் (Creationism) உலகநோக்காக ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் உருவானது. படைப்புவாத பார்வையின் படி, கடவுள் ஒவ்வொரு சிற்றினத்தையும் தனித்தனியாக படைத்தார். ஆகவே சந்தேகமே இல்லாமல் எல்லா உயிரிகளையும் சிற்றினத்திற்கு ஒதுக்க முடியும் என எதிர்பார்ப்பது இயல்பானதே. ஆனால் பரிணாம பார்வையின் படி இவ்வாறு எதிர்பார்க்க முடியாது. பரிணாம மாற்றம் படிப்படியாக நிகழும் ஒன்று - அதாவது ஒரு மூதாதை சிற்றினம் ஒரு சந்ததி இனத்தை உருவாக்கும் நிகழ்வு பல ஆயிரம் ஆண்டுகள் நடைபெறும். பரிணாம மாற்றத்தில் பெரும்பாலும் ஒரு சிற்றினம் படிப்படியாக இன்னொன்றாக பிரிகிறது, இறுதியாக அவ்விரு சிற்றினங்களுக்கும் இடையில் உள்ள இனப்பெருக்கத் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. எனவே இதிலிருந்து ’பரிணாமப் பாதையில் இடையில் உள்ள வடிவங்கள்’ மற்றும் ’ஒரு சிற்றினம் என தெளிவாக சொல்லிவிட இயலாத உயிரிதொகை’ ஆகியவற்றை மட்டுமே பெற இயலும். மேலும் ஒரு தனித்த சிற்றினத்திற்கு மட்டுமான வரையறை பாக்டீரியா முதல் பல செல் விலங்குகள் வரை எல்லா உயிரிகளுக்கும் பொருந்தும் என கருத முடியாது, அப்படிக் கருதுவதற்கு எந்த காரணங்களும் இல்லை. 

உயிரிகளுக்குள் பரந்துபட்ட வேறுபாடுகள் உள்ளன என்பது பரிணாமம் நமக்கு கற்றுக்கொடுக்கும் மற்றொரு விஷயம். வேறுபாடே இயற்கைத் தேர்வை (Natural selection) இயக்குகிறது, அதாவது ஒரு சிற்றினத்திற்குள் உள்ள உயிரிகள் வேறுபடவில்லை என்றால் இயற்கைத் தேர்வால் செயல்பட இயலாது. இதன் முக்கியத்துவம் பின்வரும் பொதுபுத்தி கருத்தின் அடிப்படையை அழிக்கிறது: ’ஒரு உயிரியல் சிற்றினத்தில் உள்ள அனைத்து உயிரிகளும் கண்டிப்பாக சில முக்கியமான பொது அம்சங்களைக் கொண்டிருக்கும், உதாரணமாக சில மரபணு பண்புகள். இவையே அச்சிற்றினம் அல்லாத பிற உயிரிகளில் இருந்து அவற்றை வேறுபடுத்துகின்றன’. இந்த கருத்து ‘இயற்கையான வகை’ பார்வையின் ஒரு பகுதி. இதையே உயிரியல் அறிஞர் அல்லாத பலர் நம்பத்தலைப்படுகின்றனர். ஆனால் புலனறிவின் படி, ஒரு சிற்றினத்தில் உள்ள தனித்தனி உயிரிகளுக்கு இடையில் விரிவான மரபணு வேறுபாடுகள் உள்ளன. அவை சிலசமயங்களில் நெருங்கிய தொடர்புடைய சிற்றினங்களுக்கு இடையிலுள்ள மரபணு வேறுபாட்டையும் தாண்டியதாக இருக்கும். இருந்தாலும் ஒரு உயிரியின் DNAவைக் கொண்டு அது என்ன சிற்றினம் என்பதைச் சொல்ல முடியும் என உயிரியலாளர்கள் சொல்வதை மறுக்க முடியாது. ஆனால் இது எல்லா சமயங்களிலும் சாத்தியமாவதில்லை. மேலும் இது ஒரு சிற்றினத்தில் உள்ள உயிரிகள் ஒரு நிலையான ‘மரபணு பண்பால்’ தீர்மானிக்கப்படுகின்றன என்பதையும் காண்பிக்கவில்லை. 

எனவே பரிணாமம் குறிப்பிடத்தகுந்த வகையில் வகைப்பாட்டியலை சிக்கலுக்கு உட்படுத்துகிறது. இருந்தாலும் வகைப்படுத்தும் செயல்பாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது, ஏனென்றால் உயிரிகளை சிற்றினங்களாக பிரிப்பது நடைமுறையில் தவிர்க்க முடியாதது. உதாரணமாக, ஒரு பறவையியல் அறிஞர் தான் அறிந்திராத ஒரு பறவையைக் கொண்டுவருகிறார் எனக்கொள்வோம். அது என்ன சிற்றினத்தில் இருந்து வந்தது என்பதே அவர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது. இதுவே அப்பறவையின் பண்புகள், நடத்தை, மற்றும் அதன் சூழல் போன்ற மதிப்பு மிக்க தகவல்களைக் கொடுத்துவிடும். இந்த நிலைமையை ஜான் மேய்னர்ட் ஸ்மித் (John Maynard Smith) என்ற ஆங்கில உயிரியல் அறிஞர் அற்புதமாக வரையறுத்துள்ளார். அவர் இவ்வாறு எழுதுகிறார்: ‘சென்ற காலங்களில் வாழ்ந்த உயிரியாக இருந்தாலும் தற்காலத்தில் வாழ்கின்ற உயிரியாக இருந்தாலும் அவற்றை இடைப்பட்ட நிலைகள் எதுவுமே இல்லாமல் துல்லியமாக பிரிக்கும் முயற்சி தோல்வியையே தழுவும். இது முன்னரே நிச்சயிக்கப்பட்ட ஒன்று. எனவே சிற்றினங்கள் துல்லியமாக வகைப்படுத்தப்பட வேண்டிய நடைமுறை தேவைக்கும், கோட்பாட்டு ரீதியாக துல்லியமாக வகைப்படுத்த இயலாத தன்மைக்கும் இடையே உள்ள முரணை வகைப்பாட்டாளர்கள் சந்தித்து வருகின்றனர்.’ எனவே நடைமுறையில் உயிரியலாளர்கள் சிற்றினங்களை துல்லியமாக வரையறுக்கப்பட்ட ஒரு வகையாக எடுத்துக்கொள்கின்றனர், கூடவே அது நிஜத்திற்கு (reality) அருகில் வரும் அளவிற்கு தோராயமானது மட்டுமே என்பதை அறிந்தும் உள்ளனர். 

1960களின் பிற்பகுதியில், வகைப்பாடு பரிணாமத்துடன் ’ஒத்துப்போகும்’ வகையில் செய்யப்பட வேண்டும் என்ற கருத்துக்கு பரிணாம உயிரியல் வந்துசேர்ந்தது. இதுவே ‘மரபுவழி வகைப்பாட்டியல்’ (Phylogenetic systematics) என்ற இயக்கத்தின் மைய கீதம் (Leitmotif). இந்த இயக்கம் ஜெர்மனைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுனர் (Entomologist) வில்லி ஹென்னிக் (Willi Hennig) என்பவரால் நிறுவப்பட்டது. இதன் மையக் கருத்து என்பது ஒற்றைமரபுவரிசையிலான (monophyletic) உயிரியல் குழுக்களை மட்டுமே உண்மை என அங்கீகரிப்பது. ஒற்றைமரபுவரிசை குழு என்பது சில பொது மூதாதையில் இருந்து வந்த அனைத்து சந்ததிகளையும் மற்றும் அச்சந்ததிகளை மட்டுமே கொண்ட ஒரு குழு. இதன்படி ரெப்டிலியா (Reptilia - ஊர்வன) போன்ற பல மரபான வகைப்பாட்டு குழுக்கள் ஒற்றைமரபுவரிசை அல்ல, எனென்றால் ஊர்வனவற்றின் மூதாதை இனங்கள் அனைத்தும் பறவைகளுக்கும் மூதாதைகளாகும் (கீழேயுள்ள படத்தைப் பார்க்கவும்). எனவே ரெப்டிலியா என்பது ஒரு உண்மையாக வகைப்பாடு அல்ல மற்றும் ஒரு சரியான வகைப்பாட்டில் அதற்கு எந்த இடமும் இல்லை என மரபுவழி வகைப்பாட்டின் ஆதரவாளர்கள் சொல்கின்றனர். மரபுவழி வகைப்பாட்டியல் சிற்றினத்தில் கவனம் செலுத்தாமல் எவ்வாறு உயர் வகையை (Higher taxa) வரையறுப்பது என்பதில் கவனம் செலுத்துகிறது. இருந்தாலும் ஒற்றைமரபுவரிசை அளவுகோளை தனி சிற்றினங்களுக்கும் பொருத்த முடியும். இதுவே ’மரபுவழி சிற்றின கருத்தாக்கம்’ (Phylogenetic species concept) என அழைக்கப்படுகிறது. இந்த கருத்தாக்கம் ’ஒரு சிற்றினத்தில் உள்ள உயிரிகள் பிற சிற்றினங்களில் உள்ள உயிரிகளுடன் கொண்டுள்ள தொடர்பை விட தங்களுக்குள் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும்’ என்ற உள்ளுணர்வு யோசனையை துல்லியமான வகுக்கும் ஒரு முயற்சி.

ஊர்வனவைகள், முதலைகள் மற்றும் பறவைகளின் மரபுவரிசைத் தொடர்பு

தத்துவக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது மரபுவரிசை அணுகுமுறையின் முக்கியத்துவம் என்னவென்றால் சிற்றினமாக இருந்தாலும் அல்லது உயர் வகையாக இருந்தாலும் ஒரு குழுவைச் சேர்ந்த இரு உயிரிகளுக்கான தொடர்பு அவற்றின் பொது மூதாதையாகவே இருக்கும், அவற்றின் இயற்கையான ஒற்றுமைகளாக இருக்காது. இதைப் புரிந்துகொள்ள ஒரு சிந்தனை-சோதனை உதவும். அறிவியலாளர்கள் செவ்வாயில் ஒரு உயிரியைக் கண்டுபிடிக்கின்றனர் எனக் கொள்வோம். அது நாம் வாழும் பூமியில் உள்ள எவற்றாலும் உருவானதல்ல. ஆனால் அதை சாதாரண ’ஈ’யில் இருந்து பிரித்தறிய முடியாது. (நிச்சயமாக இப்படி நம்புவதற்கு எந்த சாத்தியமும் இல்லை தான். ஆனால் தர்க்கரீதியாக கற்பனை செய்யலாம்.) செவ்வாயில் கண்டெடுத்த அவ்வுயிரி ஒரு ஈ போலவே தோற்றமளிக்கிறது. அது பூமியில் உள்ள ஈக்களுடன் இனக்கலப்பு செய்யக்கூடியது. மேலும் மரபணு சோதனை ’அவ்வுயிரி ஈ தான், வேறு உயிரி அல்ல’ என்று சொல்கிறது. ஆகவே அது ஒரு ’ஈ’யா? சிற்றினம் ‘இயற்கையான வகை’யைப் பொருத்தது என்றால் இதற்கான பதில் ’ஆம்’ என்று இருக்கும். ஆனால் மரபுவழி வகைப்பாட்டின் படி, இதற்கான பதில் ‘இல்லை’ என்பதே. ஒரு உயிரி ஈ சிற்றினமாக (Musca domestica) இருக்க வேண்டுமென்றால் அது பொருத்தமான மூதாதை மரபுவழியைக் கொண்டிருக்க வேண்டும், அவ்வுயிரி என்ன அம்சங்களைக் கொண்டிருந்தாலும் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

இது 1970களில் மைக்கேல் கிசெலின் (Michael ghiselin) மற்றும் தத்துவவாதி டேவிட் ஹுல் (David hull) ஆகியோர் கொடுத்த ஒரு சுவாரஸ்யமான ஆலோசனைக்குப் பொருந்திச் செல்கிறது. மரபான ஊகம் சொல்வது போல ஒரு உயிரியல் சிற்றினத்தை ஒரு வகையாக எடுத்துக்கொள்ளக்கூடாது என அவர்கள் வாதிட்டனர். மாறாக அது காலம் மற்றும் வெளியில் நீட்டிக்கபட்ட ஒரு சிக்கலான தனிஇருப்பு (Entity). ஒரு தனிப்பட்ட உயிரியைப் போல ஒரு சிற்றினம் ஒரு குறிப்பிட்ட கால-இடத்தில் இருந்து இருப்புக்கு வருகிறது. அதற்கு ஒரு வரையறுக்கப்பட்ட வாழ்நாள் உள்ளது. பிறகு அது அழிந்து விடுகிறது. இதற்கு மாறாக ஒரு உண்மையாக வகைப்பாடு கால-வெளிசார் வரம்பற்றது. தங்கத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு பருப்பொருளின் அணு எண் 79 ஆக இருக்கும் வரை பிரபஞ்சத்தில் எங்கு இருந்தாலும் அதை தங்கமாக எடுத்துக்கொள்ளப்படும். அப்பருப்பொருள் எங்கு உருவானது என்பது பற்றிக் கவலையில்லை. எனவே கொள்கையளவில் பார்த்தோம் என்றால் பிரபஞ்சத்தில் உள்ள தங்கங்கள் அனைத்தும் அழிந்துவிடலாம், பின்னர் பல ஆண்டுகள் கழித்து தனிமங்கள் இணைந்து மேலும் சில தங்கம் உருவாகக்கூடும். ஆனால் சிற்றினங்கள் இது போன்றதல்ல என கிசெலினும் ஹுல்லும் வாதிடுகிறார்கள். நீங்களோ நானோ மரணத்தில் இருந்து தப்பிக்க முடியாதது போல ஒரு சிற்றினம் ஒரு முறை அழிந்துவிட்டால் அது மீண்டும் இருப்புக்கு வராது என்பதும் தர்க்கத்திற்கு உட்பட்ட விஷயமே. 

’சிற்றினங்கள் என்பது தனித்த இருப்பு’ என்ற கருத்தை முதலில் கேட்கப்படும் போது விசித்திரமாக தான் இருக்கும். ஆனால் அப்படி எடுத்துக்கொள்வதில் இருக்கும் பலன்கள் சற்றுகழித்து தெரியவரும். ஒரு சிற்றினம் என்பது நாம் கருதுவது போல ஒன்றல்ல, அது பல தனித்தனி பகுதிகளைக் கொண்டிருக்கும். அதாவது சிற்றினத்தில் உள்ள உயிரிகள் ஒன்றாக இணைதிருக்கவில்லை, வேறுபட்டிருக்கின்றன. எனினும் இந்த வேறுபாடு மேலோட்டமானது தான். உதாரணமாக, எறும்புக்கூட்டில் வாழும் எறும்புகள் ஒன்றுடனொன்று இணைந்திருப்பதில்லை, ஆயினும் நாம் அந்த எறும்புக்கூடு மொத்தத்தையும் தனித்த ஒன்றாகத் தானே சொல்கிறோம். சிற்றினத்தை தனித்த இருப்பாக எடுத்துக்கொள்வதில் தனித்துவமான நன்மைகள் இருக்கின்றன. அதில் ஒன்று, இது மரபுவழி வகைப்பாடின் கொள்கைக்கு நன்கு பொருந்துகிறது. மற்றொன்று, ’சிற்றினங்கள் இயற்கையில் ’நிஜமான’ அலகுகள், எதேச்சையாக பிரிக்கப்பட்ட குழு அல்ல’ என்ற உள்ளுணர்வையும், ‘ஒரு சிற்றினத்திற்குள் மரபணு வேறுபாடுகள் பரவலாக இருக்கும் மற்றும் அச்சிற்றினத்திற்கென்று ஒரு மரபணு அடிப்படை இருக்காது’ என்ற உண்மையையும் இணக்கமாக இணைத்துக்கொள்ள உதவுகிறது. சிற்றினங்களை சிக்கலான தனி இருப்பு என எடுத்துக்கொண்டால் இந்த உண்மைகள் நன்கு பொருள்படுகின்றன. ஆனால் சிற்றினத்தை ‘இயற்கை வகை’யாக எடுத்துக்கொண்டால் பொருள்படுவதில்லை.

=================

அறிவியல் தத்துவ வரலாறு பேராசிரியரான Samir Okasha எழுதிய Philosophy of science நூலில் இருந்து சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்ட பகுதி

மொழிபெயர்ப்பு: தாமரைக்கண்ணன், அவிநாசி

அறிவியல் தத்துவம் :: சமீர் ஒகாஸா - தொடர்