Sunday, 28 April 2024

சங்கத் தமிழில் வேதநெறி - மு. சண்முகம் பிள்ளை


மறை, வேதம், வாய்மொழி (பரி.3:11-12), எழுதாக் கற்பு (குறுந்.156), கேள்வி (பதிற்.21:1, பரி.2:24,61;3:48, பரி.தி.1:19), முதுமொழி (பரி.3:42,47;8:11;13:10), முதுநூல் (புறம்.166.4) என்றெல்லாம் ‘வேதம்’ சங்க இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது. நான்கு கூறுபாடாக அமைந்தது. ஆறு அங்கத்தாலும் உணரப்பட்டது. பழமையான ஒரு நூல் (புறம்.166:3-4), அருமறை (பரி;1:13,2:57,3:14,4:65), நான்மறை (புறம்.26:13;93:7;362:9; பரி.9:12), நால் வேதம் (புறம்.2:18;15:17), அருமை நான்கு என்னும் அடை மொழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தணரால் ஓதப்படுவது என்னும் கருத்தில் அந்தணர் வேதம், அந்தணர் வேதம் (மது.654-656), அந்தணர் அருமறை (பரி1:13,2:57, 3:14, 4:65), அந்தணாளர் நான்மறை (புறம்.363:8-9), என்றும் குறிக்கப்படுகிறது. நீண்ட சடையையுடைய முதுமுதல்வனது வாக்கை விட்டு நீங்காது உறைவது வேதம் (புறம்.166:12), இது எழுதாமல் செவிவழிக் கேட்டுக் கற்கப்படும் நூல் (குறுந்.156:5). வேதம் இசையோடு பாடப்பெறுவது என்பது,

தாதுஉண் பறவை போது முரன்றாங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாட (மதுரைக்காஞ்சி 655-656)

என்பதனால் விளங்கும். 'சிறந்த வேதம் விளங்கப் பாடி” (மதுரைக்காஞ்சி.468) என்னும் மதுரைக்காஞ்சித் தொடருக்கு, ''அதர்வ வேதம் ஒழிந்த முதன்மைப்பட்ட வேதங்களைத் தமக்குப் பொருள் தெரியும் படி ஓதி' என்று பழைய உரைகாரர் பொருள் எழுதியுள்ளார். இங்கே 'சிறந்த' என்பது வேதங்கள் நான்கையும் குறிக்கும் பொது அடை மொழியாகவும் கொள்ளத்தக்கது. ஆயினும், வேதங்களுள் சாமவேதம் சிறப்பாகக் கூறப்படுவதனாலும் வேதங்களுள் கானம் செய்யப்படுவதற்கு ஏற்ப அமைந்தது இதுவே ஆதலானும், 'சிறந்த வேதம் என்னும் அடைமொழியும் ’'பாடி” என்னும் தொழிலும் குறிக்கப்பெறுவதனாலும் இது சாமவேதத்தைக் குறிப்பதாகக் கருதலாம் என்று தோன்றுகிறது.

வேதம் ஓதுதல் சிறப்பால் அந்தணர் "நான்மறைப் புலவர்” எனச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

'நான்மறை விரித்து , நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவர் ' (பரி.9:12-13)

என்கிறார் குன்றம் பூதனார். 'மறைகாப்பாளர்' என்றும் வேதத்தை அழியாது வழிவழியாக அந்தணர் காப்பாற்றிவரும் பெருமையும் சுட்டப்படுகிறது. அந்தணர் ஓதும் மறையைக் கேட்ட அவர் இல்லத்தில் உறையும் கிளியும் கூட வேதத்தினது ஓசையை இசைக்கின்றதாம்.

'வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
மறைகாப் பாளர் உறைபதி' (பெரும்பாண்.300-301)

என்பது பெரும்பாணாற்றுப்படை. வேதங்கள் உயர்ந்தோராகிய ஞானிகளால் ஆராயப்படுவது. இந்த ஞானிகள் தவறு இல்லாத விரதங்களை உடையோராவர்.

'வடுஇல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த கெடுஇல் கேள்வி'
என்பது பரிபாடல் (2:24-25)

ஆறு அங்கங்கள் கொண்டு உணரத்தக்கது வேதம் என்னும் கருத்தைப் பின்வரும் புறநானூற்றுப் பகுதி விளக்கும்.

"நன்று ஆய்ந்த நீள் நிமிரிசடை 
முதுமுதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈர் - இரண்டின்
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்' (புறம்.166:1-4)

இங்கே வேதம் முதுநூல் என்று குறிக்கப்படுகிறது. வேதப் பொருள் விளக்கத்திற்குத் துணை செய்வன இந்த ஆறு அங்கங்கள்.

"சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம் என்று ஐந்துடன் போற்றி அவைதுணையாக எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை' (பதிற்.21:1-3)

எனவரும் பதிற்றுப்பத்துப் பகுதியில் கேள்வி என்னும் பெயருடைய வேதத்திற்குத் துணை அங்கமாகச் சொல், பெயர், நாட்டம் என மூன்று குறிக்கப்படுகிறது. இவை முறையே சொல்லிலக்கணம் சொல்லும் நூல், பொருள், சோதிடநூல் ஆகியவற்றைக் குறிக்கும் என்பது பழைய உரைகாரர் கருத்து. இவற்றைப் பொதுவாக வேதத்திற்கு உபகாரப்படும் சாத்திரங்களைக் குறிப்பனவாகக் கொள்ளலாம்*.

வேதத்துள் இலைமறை காய்போல் மறைந்து கிடக்கும் பொருள்களை விளக்கும் பகுதியை 'உபநிடதம்’ என்றும், வேதத்தின் ஞானகாண்டம் என்றும் உரைப்பர்.

'அறத்தினுள் அன்புநீ: மறத்தினுள் மைந்துநீ:
வேதத்து மறைநீ: பூதத்து முதலும்நீ' (பரி.3:65-66) 

என்னும். பரிபாடல் பகுதியில் 'வேதத்து மறை’ என்பது 'உபநிடதம்' என்பதைக் குறிக்கும் என்பர். மறை - உபநிடதம் என்பது பரிமேலழகர்-உரை.

வேத வேள்வி

செந்தீப் பேணி வேள்வி செய்து வழிபடும் முறை மூவேந்தர் நாட்டிலும் மிகப் பரவியிருந்ததாகத் தெரியவருகிறது. அந்தணர் வேள்வி நடத்துதற்கு உரியராகக் கூறப்படுகின்றனர். காடுகளில் முனிவர் செய்யும் வேள்வியைப் பற்றிய குறிப்பும் உண்டு. சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் பாரி, அதியமான் முதலிய குறுநில மன்னர்களும் ௮ந்தணரைக் கொண்டு வேள்வி செய்வித்து வழிபாடு நிகழ்த்தினர் என்பது புறநானூறு, முதலியவற்றிலிருந்து தெளிவாகத் தெரிய வருகின்றது.

வேள்வி செய்த முறைமையும் அதில் நெய் முதலியன வார்த்து வழிபட்டமையும் ஒருசில பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. முக்கியமாகப் 'பார்ப்பன வாகை' என்னும் துறையில் அமைந்த 166-ஆம் புறப்பாட்டைச் சான்றாகக் குறிப்பிடலாம். இருபத்தொரு துறைகள் வேள்வியுள் உண்டு என்பது,

'மூவேழ் துறையும் முட்டு இன்று போகிய
 உரைசால் சிறப்பின் உரவோர் மருக !' (புறம். 166:8-9)

எனவரும் இந்தப் புறநானூற்றுப் பாடல் பகுதியால் புலப்படும். வேள்விக்கு முதன்மையாக இருந்து நடத்திவைப்பவன் வேள்வி ஆசான் எனப்படுவான் (பரி.2:61). வேள்வி நிகழ்த்தும் போது, யாக பத்தினியர் உடனமர்ந்து ஏவல் செய்தலும் மான்தோல் அணிதலும் உண்டு. வேள்விச்சாலை வட்டவடிவமாயும், வேள்விக் குண்டம் பருந்து விழுங்குவது போன்ற வடிவத்திலும் தூண் நடப் பட்டதாயும் அமைக்கப்பெற்றிருந்ததாகத் தெரிய வருகிறது (புற.229, பெரும்பாண்.315-319). இவற்றைப் பின்வரும் பகுதி நன்கு விளக்கும்.

'முறை நற்கு அறுயுநர் முன்னுறப் புகழ்ந்த 
தூஇல் கொள்கைத் துகள்அறு மகளிரொடு
பருதி உருவின் பலபடைப் புரிசை,
எருவை நுகர்ச்சி, யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்' (புறம் 224.5-9)

வேள்வியில் காட்டுள்ளும் நாட்டுள்ளும் வாழும் பதினான்கு வகைப் பசுக்களிலிருந்து கிடைக்கும் நெய்யை நீர் நாணும்படியாக மிகுதியாகச் சொரிந்து எண்ணற்ற பல வேள்விகளைச் செய்தனராம். கொழுப்புடன் கூடிய ஊன் கலந்த சோற்றைப் பலியாகத் தீயில் சொரிந்தனர்.

காடு என்றா நாடு என்று ஆங்கு 
நீர்-ஏழின் இடம் முட்டாது
நீர் நாண நெய் வழங்கியும் 
எண் நாணப் பல வேட்டும்
மண் நாணப் புகழ் பரப்பியும் ' (புறம்.166:19-23)

“நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை, 
மண் நாணப் புகழ் வேட்டு,
நீர் நாண நெய் வழங்கிப் 
புரந்தோன்........ " (புறம்.384:15-18)

"நல்பனுவல் நால் வேதத்து 
அருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை 
நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பல்மாண் 
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி:
யூபம் நட்ட வியன்களம் பலகொல்.” (புறம்.15:17-21)

“உருகெழு மரபின் கடவுட் பேணியர் 
கொண்ட தீயின் சுடர் எழுதோறும் 
விரும்புமெய் பரந்த பெரும்பெயர் ஆவுதி
(பதிற்.21:5-7) 

மேலே காட்டிய பாடற்பகுதிகள் வேள்வி செய்த முறைமைகளை விளக்குகின்றன. மந்திர விதிகளின் முறைப்படிச் செய்யப்படுவது இவ்வேள்வி என்பது, 'மந்திர விதியின் மரபுரி வழா அந்தணர் வேள்வி முருகு.95-96) என்பதால் பெறப்படும். பதிற்றுப் பத்தில் வரும், 'கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது வேள்வி வேட்டனை' என்று தொடங்கும் பதிற்றுப்பத்துப் பாடலிலும் (74) வேள்வி செய்யும் வகை நன்கு விளக்கப்பட்டிருக்கிறது. பெருஞ்சேரலிரும்பொறை தன் மனைவியோடு அமர்ந்து யாகம் செய்வித்த பயனால் அவனுடைய தேவியின் கருவில் சால்பு, செம்மை முதலிய நற்குணங்கள் நிரம்பிய புதல்வனைப் பெற்றான் என்று தெரிவிக்கப்பெற்றிருக்கிறது.

யாகம் செய்தார் சுவர்க்கம் புகுவர் என்னும் நம்பிக்கையும் காணப்படுகிறது. ஆவுதி மண்ணி, மா விசும்பு வழங்கும் பெரியோர் போல மதுரைக். 494-495) என்னும் மதுரைக் காஞ்சி அடிகள் இதனைக் குறிப்பிடுகின்றன. பாலைக் கெளதமனார் என்னும் புலவர் விருப்பின்படி பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஒன்பது பெருவேள்வி செய்வித்துப் பத்தாம் பெருவேள்வியில் அப்பார்ப்பனப் புலவரும் அவர் பத்தினியும் சொர்க்கம் பெற்றார்கள் என்பது பதிற்றுப்பத்து மூன்றாம் பத்துப் பதிகத்தில் காணும் செய்தி.

வேள்வி செய்கின்ற. களங்களுக்கு மக்கள் சென்று ஆங்கு நிகழும் காட்சிகளைக் காணுதலும் வழிபடுதலும் உண்டு என்பதை,

“வேள்வியின் அழகுஇயல் விளம்புவோரும்' (பரி.19:43)
என வருவது கொண்டு அறியலாம்.

பரிபாடலில் திருமால் வேள்வியின் உருவமாக வெளிப்படுதல் வருணிக்கப்பட்டிருக்கிறது.

“செவ்வாய் உவணத்து உயர்கொடியோயே! 
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும், 
படிநிலை வேள்வியுள் பற்றி ஆடுகொளலும்,
புகழ்இயைந்து இசைமறை உறுகனல் முறைமூட்டித் 
திகழ்ஒளி ஒண்சுடர் வளப்பாடு கொளலும்
நின் உருபுடன் உண்டி 
பிறர் உடம்படு வாரா 
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு ' (பரி. 2: 60-68)

இப்பாடற் பகுதியுள் பொதிந்த கருத்தை டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களின் பின்வரும் பொருட்சுருக்கப் பகுதியால் நன்கு உணரலாம். அது வருமாறு:

கருடக் கொடியை உடையோய்,வேள்வியாசானது
உரை நின் உருவம்: வேள்விக்குரிய பசுவைக் கொள்ளல்
யூப உருவாகிய நினக்கு உணவு: வேள்வித்தீயை முறையாக 
மூட்டிச் சுடரினது பெருக்கத்தை உண்டாக்கிக் கோடல் 
அந்தணர் காணுகின்ற நின்வெளிப்பாடு; கடவுள் இல்லை 
என்பாரும் அதுகண்டு உண்டென்பர்.

முருகப்பெருமானின் ஆறுமுகங்களுள் ஒன்று வேத விதிப்படி செய்கின்ற அந்தணர் யாகங்களில் தீங்கு வாராதபடி நினைக்கும் என்றும், மற்றொருமுகம் அரிய நூற்பொருள்களை ஆராய்ந்து முனிவர் இன்புறும்படி இசைகளை விளங்கச்செய்யும் என்றும் கூறுகிறார் நக்கீரர். 

"காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே, ஒருமுகம் 
மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி 
ஓர்க்கும்மே, ஒருமுகம், 
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி,
திங்கள் போலத் திசை விளக்கும்மே, (முருகு. 94-98)

முருகப்பெருமான் விளங்கும் திருப்பரங்குன்றத்தில் வேள்வி வழிபாடு மிகுதியாக நிகழ்ந்தமையை ஒரு பரிபாடல் கற்பனை முறையில் தருகிறது. இக்குன்றம் வசை இன்றி அமைந்த புகழ்ப் பெருக்கினாலும் வேள்வி நடைபெறும் சிறப்பினாலும் திக்கு எங்கணும் பரந்த பெருமையையுடையது. இங்கே முருக பூசையின் பொருட்டுப் புகைக்கும் அகிற்புகையும் வேள்வியின் புகையும் மேலே மண்டி எழுகின்றன. இப்புகைகள் சூரிய உலகில் தெரியாதபடி வானம் முழுவதும் இருள் பரப்பிவிடுகின்றன. வானுலகு வரையிலும் புகை செல்ல, ஆண்டு உறையும் இமையா நாட்டமுடைய தேவரும் புகை தம் கண்களை வந்து முட்டுகையினால் இமை முகிழ்த்து விலகிச் செல்கின்றனராம்.

'வசை நீங்கிய வாய்மையால், வேள்வியால், 
திசை நாறிய குன்று அமர்ந்து, ஆண்டு ஆண்டு 
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ்புகை 
வாய்வாய் மீபோய்,உம்பர் இமைபுஇறப்ப:.
தேயா மண்டிலம் காணுமாறு இன்று' (பரி.17:28-32)

இவ்வாறாக இமையாரையும் இமைக்கச் செய்யும் வகையில் எழுந்தது வேள்விப்புகையும் அகிற்புகையும் எனக் கற்பனை செய்யும் அளவுக்கு அங்கு: வேள்விகள் மிகுதியாக. நடை பெற்றிருக்க வேண்டும் அன்றோ?

அரசரும் பிறரும் அந்தணரைக் கொண்டு வேள்வி பல செய்வித்த செய்திகள் பலவாக உள்ளன. அரசருள் முதுகுடுமிப் பெருவழுதி சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவன். இவன் பல வேள்விகளைச் செய்தமையால், 'பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்று சிறப்பிக்கப்படுகிறான்.

'பல்சாலை முதுகுடுமியின் 
நல்வேள்வித் துறை போகிய 
தொல் ஆணை நல் ஆசிரியர் 
புணர் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின், 
நிலம்தரு திருவின் நெடியோன் போல, '
(மதுரைக்.759-763)

என வரும் மதுரைக்காஞ்சி அடிகள் இவன் ஆற்றிய பல யாகசாலைகளைக் குறிப்பிடுகின்றன.

'யூபம் நட்ட வியன்களம் பலகொல்’ (புறம்.15:21) என வரும் புறநானூறு இவனுடைய யாகசாலையில் நாட்டப்பட்டுள்ள தூண்களை வியந்து போற்றுகிறது. இவன் யாகம் செய்த பெருஞ்சிறப்பால், 'நெடியோன்' என்று போற்றப்படுகிறான். இவனைத் தவிர, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், நான்மறை முனிவர் சுற்றமாகவும் மன்னர் ஏவல் செய்யவும் வேள்வி செய்தான் (புறம். 26: 12-15). சோழர்களில் கரிகாலன் செய்த வேள்வியும் (புறம். 224:4-9), சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் செய்த வேள்வியும் (புறம்.-397:20-21) குறிக்கப்பெற்றுள்ளன. கிள்ளிவளவன் நாட்டில் வேள்வி பலவாக நிகழ்ந்தது என்பதனை, 

"அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த 
தீயொடு விளக்கும் நாடன்' (புறம். 397:20-21)
என இவன் போற்றப் பெறுதலால் நன்கு புலனாகும்.

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்பானைப் பற்றிய குறிப்பு புறநானூற்றிலே நான்கு பாடல்களில் காணப்படுகிறது (16,125,367,377). இவன் இராசசூயம் என்னும் பெருவேள்வி செய்தான் என்பதனை இவனது பெயருக்குரிய சிறப்பு அடைமொழி தெரிவிக்கும். இதுவன்றிப் பாடல்களில் தெளிவான சான்று இல்லை. 377- ஆம் புறப்பாட்டில்,

‘அவி யுணவினோர் புறங்காப்ப
அறநெஞ் சத்தோன் வாழ நாள் '(புறம்.377:5-6)

என்று இவன் வாழ்த்தப் பெறுகிறான். இதிலிருந்து இவன் அவியுணவினோராகிய தேவரை வேள்வியாற் போற்றினான் என்பது குறிப்பால் பெறப்படும்.

பல்யானைச் செல்கெழுகுட்டுவன், செல்வக்கடுங்கோ வாழியாதன், பெருஞ்சேரலிரும்பொறை என்னும் சேரமன்னர் மூவர் செய்த வேள்வியைப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது (பதிற்.21,70,74). இவர்களுள் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் வேள்வியால் தேவர்களையும், ஆள்வினை வேள்வியால் விருந்தாய் வரும் மக்களையும் பேணினான் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான் (பதிற்.21:1-15). பாலைக்கெளதமனார் என்னும் புலவர் வேண்ட பத்துப் பெருவேள்விகளை வேட்பித்தவனும் இவனே.


அதியமான் நெடுமானஞ்சி (புறம்.99:1, 350:1), பாரி வள்ளல் (புறம். 122:), கரும்பனூர் கிழான் (புறம். 384) என்னும் குறுநில மன்னர்கள் அமரர்ப் பேணியும் ஆவுதி அருந்தியும் வழிபட்டனர் என்று தெரியவருகிறது. தென்னவன் மறவன் பண்ணி என்பான் செய்த பயங்கெழு வேள்வியை அகநானூறு குறிப்பிடுகின்றது (அகம்.13:11). 

அரசர்களேயன்றி நீரினும் நிலத்தினும் சென்று பொருளீட்டி வந்து, நாட்டின் செல்வ நிலையைப் பெருக்கும் வணிகப் பெருமக்களும் வேள்விக்கு வேண்டுவன செய்து வந்துள்ளமையைப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.

'அமரர்ப் பேணியும். ஆவதி அருத்தியும், 
நல் ஆனொடு பகடு ஓம்பியும்,
நான்மறையோர் புகழ் பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும் 
புண்ணியம். முட்டாத் தண்நிழல் வாழ்க்கை
 (மதுரைக். 200-204)

என்று இவ்வணிகரின் வாழ்க்கைச் சிறப்புப் பேசப்பட்டுள்ளது.

காட்டில் தவமுனிவர் இயற்றும் வேள்வியும் சில இடங்களில் சிறப்பிக்கப்பெற்றிருக்கின்றது. முனிவர் இயற்றும் வேள்விக்கு யானை, மந்தி முதலிய பிராணிகளும் உதவி செய்கின்றனவாம்.

கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல் 
மஞ்ஞை ஆலும் மரம்பயில் இறும்பின், 
கலைபாய்ந்து உதிர்த்த மலர்வீழ் புறவின்,
மந்தி சீக்கும் மாதுஞ்சு முன்றில்
செந்தீப் பேணிய முனிவர்,வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கும்
ஒளிறு இயங்கு அருவிய மலைகிழ வோனே!
(பெரும்பாண்.494-500)

முனிவர்களின் வேள்விப் பயனால் உலகிற்கு நன்மை விளைதல் உண்டு. இருங்கோவேளின் குலமுதல்வன் வட பக்கத்தில் ஒரு முனிவனுடைய ஓமகுண்டத்தில் நின்று தோன்றியதாக ஒரு குறிப்புக் காணப்படுகிறது (புறம். 201:8-12) வேளிர்கள் எல்லாருமே இவன் வழியினர் என்று கொள்வர்.

நீயே,
வடபால் முனிவன் தடவினுள் தோன்றி,
செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும்புரிசை, 
உவரா ஈகை, துவரை ஆண்டு,
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த 
வேளிருள் வேளே விறற்போர் அண்ணல்.।
(புறம்.201:8-12)

என்று கபிலர் இருங்கோவேளின் குடிச்சிறப்பைப் பேசுகின்றார்.

முனிவர்களுள் சிறந்தவராகிய பரசுராமன் செய்த வேள்வி நிகழ்ச்சியை அகநானூற்றின் பாடற்பகுதி விளக்குகிறது.

மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் 
முன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி, 
கயிறு அரை யாத்த காண்தரு வனப்பின், 
அருங்கடி நெடுந்தூண்போல, யாவரும்
காண லாகா மாண்எழில் ஆகம் ! (அகம். 220:5-9)

இப்பாடற்பகுதியில், யாவராலும் காணக்கூடாத தலைவியின் எழில் நலத்திற்குப் பரசுராமன் ௮ரிதின் முயன்று செய்த வேள்விக் குண்டத்துத் தூண் உவமிக்கப்பட்டிருக்கிறது.

அவியுணவை 'நாற்ற உணவு’ (புறம். 62:17) என்றும், எங்கும் பரந்த புகழைத் என்னும் சொல் 'திசை நாறிய புகழ்’ (பரி.17:29) எஎன்றும் நாற்றம் என்னும் சொல் உயர்வு கருதி வழங்கிய வழக்கிற்கு எதிர்மாறான பொருள் இப்பொழுது வழங்குவது யாவரும் அறிந்ததே. இதுபோன்றே கடவுளை அக்கினிவழி வழிபடும் முறைக்கு அமைந்த வேள்வி என்னும் புனிதமான பெயரை விருந்தோம்புதலுக்கும் வழங்குவதாயினர். பின்னூலோர் (புறப்பொருள் வெண்பாமாலை, 215). விருந்து புறந்தருதலை, 'அடுநெய் ஆவுதி’ (பதிற்.21:13) என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.

போர்க்களத்தில் பகைவர்களைக் கொன்றழித்துப் பேய்களுக்கு விருந்து வைத்தலையும் களவேள்வி எனச் சங்கப்பாடல்கள் குறிக்கின்றன. இவையெல்லாம் காலப்போக்கில் நேர்ந்த வழக்கு விநோதங்களா என்பது ஆராய்தற்குரியது.

வேள்வி செய் அந்தணர்

வேள்வி செய்யும் அந்தணர்கள் நன்கு போற்றப்படுகின்றனர். அரசர்களும் வணங்கிப் போற்றுவதோடு அவர்களைக் கொண்டு வேள்வி செய்தும், அவர்களுக்கு நிலம், பொருள்கள் முதலியன தானம் செய்தும் அவர்களைப் பேணி வந்துள்ளனர்.

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே என்பது பதிற்றுப்பத்து ( 63:1)

அத்தணர்களது தோற்றமும், அவர்களது இயல்பும், கல்வி அறிவு ஒழுக்கங்களும் அங்கங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன. இவர்கள் பசுக்களைப் போன்ற இயல்பு வாய்ந்தவர்கள் (புறம்.9:1). இருபிறப்பாளர் என்று போற்றப்படுபவர்கள் (முருகு.182, புறம்.367:13). ‘இருபிறப்பு, இருபெயர், ஈரநெஞ்சத்து, ஒருபெயர் அந்தணர்' என்பது பரிபாடல் (பரி.14:27-28). காலையில் குளிர்ந்த நீரில் நீராடுவார்கள் (பரி.6:43-45) ஈர ஆடையொடு வழிபாடு இயற்றுவர் (முருகு.182-185). மார்பில் பூணூல் அணிபவர்கள் பரி.11:83). மிகுந்த நூற்கேள்விகளையும் ஐம்புலன்கள் அடங்கிய விரதங்களையும் நான்கு வேதங்களையும் உடையவர்கள். 'ஆன்ற கேள்விஅடங்கிய கொள்கை நான்மறை முதல்வர்’ (புறம்.26:12-13), 'மறைகாப்பாளர்’ (பெரும்.301), 'வேதியர்’ (பரி.11:84), 'வாய்மொழிப் புலவர்’ (பரி.9:13) என்றும் குறிக்கப்படுகின்றனர். கேள்விச் செல்வம் மிகுதியும் உடையவர்கள். 'கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வி” கலி. 36:25-26).

நெருப்பை ஓம்பி வழிபடுபவர்கள் (புறம்.122:3). இவர்கள் ஓம்பும் நெருப்பு மூன்று வகைப்படும். அதனால் இவர்கள் முத்தீச் செல்வமுடையவர்கள் என்றும் கூறப்படுவர். முத்தீ (புறம். 2:22; புறம்.367:13: முருகு.181) என்னும் குறிப்புக் காணத்தக்கது. இவர்கள் முத்தீயை வலம் செய்து வழிபடுதலை, 'ஓதுடை அந்தணன் எரிவலம் செய்வான்போல்' (கலி.69:5) என்பது புலப்படுத்தும். 

இவர்கள் நாற்பத்தெட்டு ஆண்டுகள் பிரமசரிய வாழ்க்கை நடத்தும் இயல்பினர் (முருகு.179-180). பிரமசாரிகள் புரசமரத்தின் மட்டை நீக்கிய தண்டும் கமண்டலமும் கைகளில் கொண்டு விரத உணவை உண்பர் (குறுத்.156:2-5). பார்ப்பனரின் மக்கள் குடுமித் தலையராயிருந்தனர் மிகவும் அடர்த்தியாகத் தலைமயிரை இவர்கள் வளர்த்து வந்தனர். குதிரையின் தலை மயிருக்கு இவர்களுடைய தலைமயிரை ஒப்புக் கூறுவதிலிருந்து இதனை உணரலாம் (ஐங்.202:2-4). இதனால் பார்ப்பாரும் குடுமித் தலையராயிருந்தனர் என்பது தெரியலாம்.`

அந்தணர் இல்லம் சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும். வழிபடு தெய்வங்களும் அங்கு உண்டு. இல்லத்தை அடுத்த குறுங்கால் பந்தலில் பசுங்கன்று கட்டப்பட்டிருக்கும். வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளும் நாயும் இவர்களுடைய இல்லத்தில் சேர்வதில்லை. அங்கு வாழும் கிளிகள் வேத ஒலி செய்யும். பார்ப்பன மகள், பறவைப் பெயர்ப்படுவத்தத்தால் ஆக்கிய (இராசான்னம் என்னும் பெயர் பெற்ற நெல்) சோற்றைச் சமைப்பாள். கொம்மட்டி மாதுளையின் பசுங்காயோடு மிளகுப்பொடி சேர்த்து, கருவேம்பின் இலையும் கலக்கப்பட்டு, சிவந்த வாசனையோடு கூடிய பசுவின் மோரையும் ஆகாரமாய்க் கொள்வர். மாவடுவினால் ஆக்கிய ஊறுகாயும் சேர்த்துக்கொள்வர். இவ்வாறு அந்தணர் இல்லம் பெரும்பாணாற்றுப்படையில் சித்திரிக்கப் படுகிறது (பெரும்பாண். 297-310).

அந்தணர் எல்லாருமே உணவு முறையில் இந்நிலையிலே இருந்தனர் என்றும் கருதக்கூடவில்லை. அந்தணப்புலவராகிய கபிலர் கள்ளும் ஊனும் பாரிவள்ளல் தரத் தாம் உண்டு இனிது இருந்தமையைச் சுட்டுகின்றார். இப்புலவர் தம்மை, 'யானே பரிசிலன் மன்னும் அந்தணன்' (புறம். 200:13) என்றும், 'அந்தணன் புலவன் கொண்டுவந் தன்னே' (புறம்.201:7) என்றும் தம்மை விச்சிக்கோனுக்கும் இருங்கோவேளுக்கும் அறிமுகப்படுத்துகிறார். தம் உயர்வும் பெருமிதமும் தோன்ற அந்தணன் என்றும் புலவன் என்றும் இவர் கூறிக்கொள்ளுதல் வெளிப்படை. பாரி இறந்தபின் கபிலர் அவர்தம் மகளிரை அழைத்துக்கொண்டு அம்மலையை விடுத்து நீங்கும்போது,

மட்டுவாய் திறப்பவும், மைவிடை வீழ்ப்பவும், 
அட்டு ஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன்சோறும் 
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி 
நட்டனை மன்னோ, முன்னே, இனியே
பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று 
நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும் - வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே-
 கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர் 
நாறுஇருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே

என்னும் புறப்பாட்டால் (113) கபிலர் பாரியின் பறம்பு மலையில் ஊனும் கள்ளும் உண்டு வாழ்ந்தமை தெரியவரும்.

இவர்களுக்கு ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழில் உண்டு. அதனால் இவர் 'அறுதொழில் அந்தணர்' எனப்படுவர் (புறம். 397:20)

“ஓதல், வேட்டல், அவைபிறர்ச் செய்தல்
ஈதல், ஏற்றல்.என்று ஆறுபுரிந்து ஒழுகும்
அறம்புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி”

என்பது பதிற்றுப்பத்து (24:6-8). இதில் அந்தணர்க்கு அரசர் வழிபாடு செய்து ஒழுக வேண்டும் என்பதை வழிமொழிந்து ஒழுகி என்னும் பகுதி குறிக்கிறது.

சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணனார் என்னும் பார்ப்பனப் புலவரும் வட்டாடும் இடத்துச் சோழன் வெகுண்டு அவர்மேல் வட்டுக் கொண்டு எறிய, அப்பொழுது புலவர்,

“ஆர்புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் 
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்றுஇது 
நீர்த்தோ நினக்கு?” (புறம். 43:13-15)

என வெறுப்பக் கூறினர். கபிலர் என்பார் பாரிமகளிரை இருங்கோவேளிடத்து அழைத்துச்சென்று, அவரை மணஞ்செய்துகொள்ள வேண்டும் என்று வேண்டுமிடத்து,

“இவர் யார்? என்குவை ஆயின், இவரே,
………………………..
நெடுமாப் பாரி மகளிர்: யானே
அந்தணன், புலவன் கொண்டுவந் தனனே. (புறம்.201:1-7) 

எனத் தமது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்குத் தாம் ஒர் அந்தணப் புலவர் என்பதை நினைவு படுத்துகிறார்.

அந்தணர்க்கு நிலமும் பொன்னும் பிறபொருள்களும் தானமாக அளித்து மன்னர் முதலியோர் அவர்களைப் பாதுகாத்து வந்தனர். காரிவள்ளல் தமதுநாட்டின் பகுதிகளை அந்தணர்க்கு உரிமையாக்கினான் (புறம். 125:1-3).

ஏற்கின்ற பார்ப்பார்களுக்குப் பொன் முதலியவற்றை நீரட்டித் தானமாகக் கொடுப்பது மரபு

ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து (புறம். 367:4-5) என வரும் புறநானூற்று அடிகளும்,

கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு 
அருங்கலம் நீரொடு சிதறிப் பெருந்தகைத் 
தாயின நன்று பலர்க்கு ஈத்து. (புறம்.361:4-6)
அறம் கரைந்து வயங்கிய நாவின்,பிறங்கிய 
உரைசால் வேள்வி முடித்த கேள்வி, 
அந்தணர் அருங்கலம் ஏற்ப, நீர்பட்டு,
இருஞ்சேறு ஆடிய மணல்மலி முற்றத்து. ' (பதிற். 64:3-6)

எனவரும் பதிற்றுப்பத்து அடிகளும் மேலதற்குச் சான்றாம்.

இங்கே குறிக்கப்பெற்ற அந்தணர்தம் மரபுக்கு ஏற்ற வண்ணம் நடக்கும் ஒழுக்கசீலர்களாவர். இவரே வேள்வி முதலியன புரிதற்கும், அரசர்க்கும் பிறர்க்கும் அறிவுரை கூறுதற்கும் தகுதி படைத்தவர். இவர்கள் ஓரளவு முற்றத் துறந்த முனிவர்க்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றத் தக்கவர்களாயுள்ளனர். அந்தணர் குடியில் பிறந்தும் வேதம் ஓதுதல் முதலிய நெறிபிறழ்ந்தாரும் வேள்வி செய்யாதாரும் 'வேளாப் பார்ப்பார்'. எனப்படுவர். இவருக்குச் சங்கறுத்தல் போன்ற தொழில்கள் உள எனத் தெரியவருகிறது.

வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன, 
தளை பிணி அவிழாச் சுரிமுகப் பகன்றை. (அகம். 24:1-3)

இவரைப் போன்றே தலைவற்குத் தோழனாக அமர்ந்து, தூது செல்லும் தொழில் புரிவோரும், பிற உலகியல் தொழில்களில் சிக்கி உழல்வோரும் சாதாரண நிலையில் உள்ள பார்ப்பனராவர். பார்ப்பான் தூது செல்லும் நிகழ்ச்சியை அகநானூற்றுப் பாடல் ஒன்று நன்கு விவரித்து உரைக்கின்றது (337). தூது செல்லும் தொழில் பூண்ட பார்ப்பான் ஒருவன் கையில் கொண்ட வெள்ளிய ஓலைச்சுருளுடன் பாலை நிலத்து வழியே வருகிறான். அவன் உண்ணாமையால் வாடிய விலாப்புறத்தை உடையவனாயிருந்தான். அவன் கையிடத்தே உள்ள பொதியை அந்நிலத்து வாழும் வழிப்பறி செய்யும் கொடுந்தொழில் மறவர் கண்டு, 'இவன் கையில் உள்ளது பொன்னாகவும் இருத்தல் கூடும்' என்று கருதி, அவனைக் கொன்று வீழ்த்திவிடுகின்றனர். அப்பார்ப்பான் உடுத்துள்ள கந்தையைத் தவிர, அவனிடம் பொன் ஒன்றும் இல்லாமை கண்டு, தமது கொலைத்தொழிலால் பயன் சிறிதும் இல்லாமற் போகவே கையை நொடித்து அப்பாற் போய் விடுகின்றனராம். இந்நிகழ்ச்சியை,

தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப் 
படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி,
உண்ணா மருங்குல் இன்னோன் கையது 
பொன் ஆகுதலும் உண்டு. எனக் கொன்னே 
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கன்! மழவர், 
திறன்இல் சிதாஅர் வறுமை நோக்கி
செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயர.
(அகம். 337:8-14) 

என வரும் அகநானூற்றுப் பாடல் தருகிறது.

ஒரு தலைவி இரவுக் குறியிடத்துச் செல்ல, அங்குப் புலிக்கு வைத்த வலையில் ஒரு குறுநரி அகப்பட்டது போன்று, கருங்குட்டத்தினாலே காலும் கையும் குறைந்து முடமாகிய நிலையில் உள்ள ஒரு முதுபார்ப்பான், தலைவியினிடம் காதல்வேட்கை கொண்டான் போல் பேசுதலும், தலைவியின் சாதுரியச் செய்கையால் அவளை ஒரு பெண் பிசாசு என்று அஞ்சி அவன் ஓலமிட்டு ஓடுதலும் ஆகிய நிகழ்ச்சிகள் நாடகச் சுவைபடக் கலித்தொகையில் (கலி.65) சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.

இப்பாடலில் அந்த முதிய பார்ப்பான் எந்நாளும் தனி நிற்கும் மகளிரைக் கண்டால், இவ்வாறு காம வேட்கையால் பேசி அணுகும் இயல்புடையோன் என்று அவனைக் சுட்டித் தலைவி

என்றும் தன்
வாழ்க்கை அதுவாகக் கொண்ட முதுபார்ப்பான்வீழ்ச்கைப் 
பெருங் கருங்கூத்து. (கலி. 65:27-29)

என்று பேசுவதும் கவனிக்கத்தக்கது.

இவ்வாறாக வேதம் வல்ல வேள்விசெய் அந்தணர் முதல் அந்தணர்தம் நெறிதவறிய வேளாப்பார்ப்பானையும், பாங்கனாயும், அரசர்க்கு உறுசுற்றமாயும், ஊனும் கள்ளும் உண்பவனாயும், தகாத வழிகளில் செல்பவனாயும் உள்ள பல்வேறு வகையில் வேறுபட்ட நிலையினரான அந்தணர்களையும் சங்கநூல்வழி நாம் காணலாகும். 

அடிக்குறிப்பு:

வேதத்திற்கு உபகாரப்படும் சாத்திரங்கள்:

ஆறுஅறி அந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் தீமடுத்து
கூறாமல் குறித்ததன்மேல் செல்தும் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண்கையாய!
(கலித்.கடவுள் வாழ்த்து)

வியாகரணம், ஜோதிடம், நிருத்தம், சந்தம், சிக்கை, கற்பம் என்னும் ஆறினையும் வேதாங்கம் என்பர்:

கற்பமகை, சந்தம்கால், எண் கண்
தெற்றென் நிருத்தம் செவி, சிக்கை மூக்கு
உற்ற வியாகரணம் முகம் பெற்று 
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு
ஆதி அந்தம் இல்லை: அது நெறி 
(மணி.27:100-104)

------------------------------------------------------------


மு. சண்முகம் பிள்ளை

இக்கட்டுரை சங்கத் தமிழரின் வழிபாடுகளும் சடங்குகளும் (1996) நூலிலிருந்து மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

மு. சண்முகம் பிள்ளை, வையாபுரிப்பிள்ளை அவர்களுடன் இணைந்து சமாஜ பதிப்புகளைப் பதிப்பித்தவர். கவிமணியின் “மலரும் மாலையும்” நூலைத் தொகுத்தவர். திருக்குறளின் பாடவேறுபாடுகளை ஆராய்ந்துள்ளார். சிற்றிலக்கிய வகைகள் மற்றும் அவற்றின் வளர்ச்சி குறித்தும் விரிவாக ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழாராய்ச்சியில் அவரது முதன்மைப் பங்களிப்பாக பல்வேறு நிகண்டுகளை ஆராய்ந்து பதிப்பித்தது குறிப்பிடப்படுகிறது. சென்னை, மதுரை, தஞ்சை பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்திருக்கிறார். 

மு. சண்முகம் பிள்ளையின் சில நூல்கள்

  1. திருக்குறள் ஆராய்ச்சி- 1: யாப்பு அமைதியும் பாட வேறுபாடும் (1971)
  2. சிற்றிலக்கிய வகைகள் (1982)
  3. நிகண்டுச் சொற்பொருட் கோவை: தெய்வப்பெயர் (1982)
  4. சங்கத் தமிழரின் வழிபாடுகளும் சடங்குகளும் (1996) உலக தமிழாராய்ச்சி நிறுவனம்.
  5. வேதகிரியார் சூடாமணி நிகண்டு (1997)