Saturday, 8 June 2024

தன்னிச்சைத்தன்மைதான் சாக்கியார்கூத்தின் இலக்கணம் - கலாமண்டலம் ஈஸ்வர உண்ணி நேர்காணல் - பகுதி 2

கலாமண்டலம் ஈஸ்வரன் உண்ணி - விதூஷகன் வேடத்தில்

சாக்கியார்கூத்து” இந்து புராண இதிகாசங்களை பகடியாகவும் விமர்சனத்தன்மையுடன் அணுகக்கூடிய கதைசொல்லல் வடிவம். அதில் சமகால சமூக விமர்சனமும் உண்டு. இந்தியாவில் பலவகையான மரபான கதைசொல்லல் வடிவங்களில் இது தனித்தன்மையானது.

கலாமண்டலம் ஈஸ்வரன் உண்ணி ‘மிழாவு’ இசைக்கலைஞர். புராண இதிகாசங்களுடன் சமகால சமூக விமர்சனமும் கலந்த ‘சாக்கியார் கூத்து’ என்ற கதைசொல்லல் வடிவத்தை நிகழ்த்தக்கூடிய கலைஞர். ஈஸ்வரன் உண்ணி 1959ல் ஆண்டு பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணாபுரத்தில் பிறந்தார். தாய் மண்ணம்பட்ட பார்த்தல வாரியத்து சின்னம்மு வார்யஸ்யார். தந்தை பச்சையில் வாரியத் கிருஷ்ணன் வாரியார். 13 வயது வரை பள்ளிக்கல்வி கற்றார். அந்த கல்வியை நிறுத்திவிட்டு ஷொர்ணூரில் உள்ள கேரள கலாமண்டலத்தில் சேர்ந்தார். மிழாவுக்கான ஐந்து வருட கல்வி கற்ற பின்னர், மத்திய அரசின் உதவித்தொகையில் மேலும் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கலாமண்டலத்தில் பயின்றார். மொத்தம் கலாமண்டலத்தில் இருந்த 8 ஆண்டுகளில் கூடியாட்டத்திற்கான மிழா இசைபோக சாக்கியார் கூத்து, பாடகம் போன்ற கதைசொல்லல் சார்ந்த கலைவடிவங்களையும் கற்றுக்கொண்டார். மனைவி ஷோபா, இரண்டு மகள்கள். தற்போது ஷொர்ணூரில் வசிக்கிறார்.

பைங்குளம் ராமசாக்கியாரிடமும், மாணி மாதவ சாக்கியாரிடமும் சாக்கியார் கூத்தையும், மாணி மாதவ சாக்கியாரின் மகன் நாராயணன் நம்பியாரிடம் மிழா இசையையும் கற்றுக்கொண்டார். சம்ஸ்கிருத இலக்கணத்தையும் காவிய நாடகங்களையும் கற்றுக்கொடுத்தது பேராசிரியர் உண்ணிகிருஷ்ணன் இளயது. அச்சுண்ணி பொதுவாளிடமும் செண்டை கற்றுக்கொண்டார். திமிலை என்ற தாள இசைக்கருவியை வைத்து நிகழ்த்தப்படும் ’பஞ்சவாத்திய-திமிலை’ என்ற இசைவடிவத்தை அப்பு மாராரிடமும், கோங்காடு விஜயனிடமும் கற்றுக்கொண்டார். 

1981ல் திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்கி என்ற நிகழ்த்துகலைகளை கற்றுக்கொடுக்கும் அமைப்பில் மிழா கற்றுத்தந்த முதல் ஆசிரியர் ஈஸ்வரன் உண்ணி. 1982ல் கேரள கலாமண்டலத்தில் மிழா கற்றுத்தரும் வகுப்பில் விரிவுரையாளராக ஆனார். கேரள கலாமண்டலத்தின் மிழா கற்றுக்கொடுக்கும் துறையின் தலைவராக இருந்து பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றார்.

பைங்குளம் ராமச்சாக்கியார் கூடியாட்டத்தை கேரள கோவில்களுக்குள் மட்டுமே நிகழ்த்தப்படும் கலை என்ற நிலையை மாற்றி அதை வெளியே கொண்டுவந்தவர். அதன் பகுதியாக 1980ல் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெய்ன் போன்ற நாடுகளில் கூடியாட்டம் நிகழ்த்தப்பட்டது. ஈஸ்வரன் உண்ணியும் அந்த கூடியாட்ட அணியில் மிழா இசைத்தார். மிழா, கூடியாட்டத்திற்கான பங்களிப்பிற்காக கேரள சங்கீத நாடக அகாதமி விருதையும், 2014ல் சாக்கியார் கூத்திற்கான கலாசாகர் விருதையும் பெற்றார். 

‘மிழா’ சாக்கியார் கூத்திற்கும், கூடியாட்டத்திற்கு பின்னணி இசைக்கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. 1993ல் ஈஸ்வரன் உண்ணி மிழாவை வைத்து தனி இசைவெளிப்பாடான மிழா தாயம்பகாவை நிகழ்த்தினார். 2005ல் மிழாவின் எல்லாவகையான தாளவகைமைகளும் அவற்றின் சாத்தியங்களையும் நிகழ்த்திக்காட்டும் ‘’மிழா கேளி’’ என்ற கலைவடிவத்தை உருவாக்கினார். மிழாவின் அழகியல் சாத்தியங்களையும், அந்த கருவியின் தொழில்நுட்ப அம்சங்கள், தாளவடிவங்களை ஆராய்ந்து மிழவொலி என்ற நூலையும் எழுதியிருக்கிறார்.

ஈஸ்வரன் உண்ணி
சாக்கியார்கூத்து என்ற கதைசொல்லல் வடிவம் எப்படி உருவானது? சிலப்பதிகாரத்தில் சாக்கியார்கூத்து பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆம், சிலப்பதிகாரத்தில் சிவன் முப்புரம் எரித்த கதையை (திரிபுர தகனம்) பரவூர் குட்டச்சாக்கியன் என்பவன் கதைசொல்லலாக நிகழ்த்தினான் என்ற குறிப்பு வருகிறது. கொல்லம் அருகே பரவூர் என்ற ஊர் இருக்கிறது.

சாக்கியார்கூத்து உருவாகக்காரணமானவர் சேரமான் பெருமாள் அரசவழியில் வந்த அரசர் குலசேகரவர்மன் (கிபி.9-ஆம் நூற்றாண்டு) சம்ஸ்கிருத நாடகங்களில் அங்கதத்தை பிரதான இயல்பாகக்கொண்ட ”விதூஷகன்” என்ற கதாப்பாத்திரத்தை கூடியாட்டத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த கதாப்பாத்திரத்தின் சாத்தியங்களை இன்னும் விரிவாக்கினார். அவர் ‘தபதி சம்வரணம்’ ‘சுபத்ரா தனஞ்செயம்’ என்ற இரண்டு சம்ஸ்கிருத நாடகங்களை எழுதியிருக்கிறார். அந்த நாடகங்களில் விதூஷகன் மிக முக்கியமான கதாப்பாத்திரம். அவர் எழுதிய சுபத்திரா தனஞ்சயம், தபதி சம்வரணம் என்ற நாடகங்களை கூடியாட்டமாக நிகழ்த்தும்போது கதையின் மையக்கதாப்பாத்திரத்தை போலவே விதூஷகனுக்கும் புறப்பாடும், நிர்வஹனமும் உருவாக்கினார். (கேரள நிகழ்த்துகலைமரபில் நாடகத்தின் மையகதாப்பாத்திரம் நடனத்திற்கான நுட்பமான அடவுகளுடன் அறிமுகம் ஆவதை புறப்பாடு என்று சொல்வார்கள். அந்த கதாப்பாத்திரம் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த முந்தைய நிகழ்வுகளை நினைவுகூர்வது நிர்வஹனம்). சம்ஸ்கிருத நாடகங்களில் உள்ளதைப்போல ’விதூஷகனை’ வெறும் பகடிசெய்பவனாக மட்டுமல்லாமல் சமூகத்தின் மீதும், கலாச்சாரம் மீதும், தனிநபர்கள் மீதும் கூரிய விமர்சனத் தன்மையும் கொண்டவனாக, சமூகத்தையும் தனிநபர்களையும் அறிவுறுத்துபவனாக ஆக்கினார். கூடியாட்டத்தின் ஒருபகுதியாக விதூஷக கூத்து என்று ஒன்றை அறிமுகப்படுத்தினார். அது ஒரு கதைசொல்லல் வடிவம், அதில் எந்த அபிநயமும் இல்லை. விதூஷகன்தான் கதைசொல்லி. 

நம் மரபில் தர்ம, அர்த்த, காம, மோட்சம் (அறம் பொருள் இன்பம் வீடுபேறு) என நான்கு வாழ்க்கைநோக்கங்களை (புருஷார்த்தங்கள்) சொல்கிறது. அது ஒரு லட்சிய உருவகம். அதை பகடி செய்வதுபோல வினோதம் (கேளிக்கை), அஷனம் (உணவு), வஞ்சனம் (சூழ்ச்சி), ராஜசேவா (அரசனுக்கு சேவை செய்வது) என்ற நான்கு புருஷார்த்தங்கள் கூடியாட்டத்தில் உருவாக்கப்பட்டது. அது புருஷார்த்தகூத்து என்றும், விதூஷகக்கூத்து என்று சொல்லப்பட்டது. அது கூடியாட்டத்தின் கதைப்போக்கிலிருந்து விலகி புருஷார்த்தங்களை பொதுவான விஷயங்களை பேசுவது. விதூஷகக்கூத்து ஐந்து நாட்கள் நிகழும். வினோதம், அஷனம், வஞ்சனம், ராஜசேவா என்ற கூடியாட்டம் சொல்லும் நான்கு புருஷார்த்தங்களும், கூடவே விவாதம் என்ற ஐந்தாவது அம்சமும் நிகழ்த்தப்படும்.

'விவாதம்’ என்றால் விதூஷகன் கதாப்பாத்திரங்கள் யாரிடமாவது விவாதிப்பது போன்றதா?

இல்லை. இந்த பகுதியில் விதூஷகன் மட்டும்தான் இருப்பான். நம் மரபில் வெவ்வேறான தத்துவவார்த்தமான தரப்புகள் விவாதித்துக்கொண்டன. அந்த விவாதத்திற்கான நெறிமுறைகளை நியாயசாஸ்திரம் விரிவாக அளிக்கிறது. தத்துவம் தவிரவும் நம் பொதுவாழ்க்கையில் நாம் விவாதித்துக்கொண்டே இருக்கிறோம். அதன் பயன்கள் இருந்தாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கசப்புகளும், ஏமாற்றங்களும், நேரவிரயம் ஏற்படவும் செய்கிறது. அதனால் விதூஷகன் விவாதித்திற்கான நெறிகளை, செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, தர்க்கப்பிழைகள், பிழைப்புரிதல்கள் இவற்றையெல்லாம் விரிவாக விளக்குவதுதான் ‘விவாதம்’ என்ற புருஷார்த்தம்.

உதாரணமாக அதில் ஒருபகுதியை மட்டும் சொல்கிறேன். விதூஷகன் யாரோடு விவாதிக்கலாம், யாரோடு கூடாது, எங்கு விவாதிக்கலாம், எங்கு விவாதிக்கக்கூடாது என்பதற்கான வரையறையை அளிக்கிறான். ”அசமான சமானேன விவாதோ நைவா, பரராஷ்ட்ரே, பரக்ருஹோ, யாத்ராமத்யே, நதிமத்யே (உங்களுக்கு நிகர் இல்லாதவர்களுடன், வேறு அரசை சேர்ந்தவரிடம், வேறு இல்லத்தில், பயணத்தின் இடையே, நதியின் நடுவில் நீங்கள் விவாதிக்கக்கூடாது).

சாக்கியார் கூத்து
விவாதம் தவிர்த்த மற்ற புருஷார்த்தங்கள் பற்றி விளக்கமாக சொல்ல முடியுமா?

ஓரளவு சுருக்கமாக சொல்கிறேன்.

வினோதம்: மனிதன் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும், திருமணம் செய்தால் மட்டும் போதாது, சில சந்தர்ப்பங்களில் மனைவியை ஏமாற்ற வேண்டும், பிற பெண்களை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் பிறனுக்கு மனைவிகளாக உள்ள பெண்களை ஏற்கக்கூடாது என ஆண்பெண் உறவு அதன் அகங்காரச்சிக்கல்கள் சார்ந்தும்; காதல், பாலியல், பாலியல் திரிபு சார்ந்தும் விதூஷகன் பகடியாகவும், சிருங்காரத்துடனும் விவரிக்கும்பகுதி. மேலும் விலைமாதர்கள் பற்றியும் பேசப்படும். எப்படிப்பட்ட விலைமாதர்களை ஏற்கவேண்டும், உண்மையில் விலைமாதர் யார்? எப்படிப்பட்ட பெண்களை விலைமாதராக வகைப்படுத்தமுடியும் போன்ற விஷயங்கள் பார்வையாளர்களை பொறுத்து மிக விரிவாக பேசப்படும். இதை வேஸ்யாவினோதம் என்று சொல்வார்கள். அது பொழுதுபோக்குக்கான பகுதி. சமயங்களில் இது ஆபாசத்தை நோக்கியும் நகரும் அபாயமும் உண்டு. இதை ஒருவகையான பாலியல் கல்வி என்றுகூட சொல்பவர்கள் இருக்கிறார்கள். சமூகத்தை அறிவுறுத்தவேண்டிய சாக்கியாரின் இம்மாதிரியான ஆபாசமான வெளிப்பாடுகள் எப்படி கல்வி என்றும், பொழுதுபோக்கு என்றும் சொல்லமுடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

அடுத்து வஞ்சனம். சூழ்ச்சி. என்னென்ன வகையான சூழ்ச்சிகள் உண்டு. தண்டிக்கப்பட வேண்டிய எதிரிகள் யார்? போன்றவை இதன் பேசுபொருள். யாரை ஏமாற்றுவது? எப்படி துரோகம் செய்யவேண்டும்? சூழ்ச்சியின் வெளிப்பாடுகள் என்னென்ன? இந்தபகுதி மக்களுக்கு சூழ்ச்சியை கற்பிப்பதுபோல ஆகி, ஒருகட்டத்தில் ஊரில் சூழ்ச்சி அதிகமாகியது. அதனால் அரசன் சூழ்ச்சி என்ற புருஷார்த்தத்தை நிகழ்த்தவேண்டாம் என்று ஆணையிட்டார் என்ற செவிவழிச்செய்து உண்டு. அரசன் நிகழ்த்தவேண்டாம் என்றாலும் கூடியாட்டம் ஒரு சடங்கும்கூட என்பதால் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்த ஒன்றை அப்படியே நிறுத்துவதும் சாத்தியமில்லை. அதனால் விதூஷகன் “நான் ஏமாற்றிவிட்டேன்” என்ற ஒரே சொற்றொடரை மட்டும் சொல்லி நிறுத்திக்கொள்வார். சூழ்ச்சி என்ற புருஷார்த்தத்தை முழுமையாக பேசப்பட்டுவிட்டது என்று கற்பிதம் செய்யப்படும். 

அஸனம்: என்பது உணவு சார்ந்தது. வெவ்வேறு பருவங்களுக்கான உணவுகள், வெவ்வேறு பண்டிகைகளுக்கான உணவு, அவற்றை பயிர்செய்யவேண்டியது எப்போது; பிறப்பு சடங்குகள், திருமணம், இறப்புசடங்களில் சமைக்கவேண்டிய உணவுகள் என்ன, என்னென்ன சமைக்கக்கூடாது, சமைக்கும் முறைமைகள், பந்தி, பந்தியில் கடைபிடிக்கவேண்டிய முறைமைகள் இவை விதூஷகனால் விரிவாக விளக்கப்படும்.

நீங்கள் புருஷார்த்தக்கூத்து அல்லது விதூஷகக்கூத்தில் என்னென்ன விஷயங்கள் பேசப்படும் என்பதை விளக்கினீர்கள். இதைத்தான் சாக்கியார்கூத்து என்று அழைக்கிறார்களா? சாக்கியார்கூத்து ஏன் கூடியாட்டத்தின் பகுதியாக அல்லாமல் தனியாக நிகழ்த்தப்படுகிறது?

சாக்கியார்கூத்து என்ற கதைசொல்லல் வடிவம் புருஷார்த்தக் கூத்திலிருந்துதான் உருவானது. அப்படி தனியாக ஏன் உருவானது, எந்த காலகட்டத்தில் உருவானது என்பதற்கு தெளிவான பதில்கள் இல்லை. முன்பு கூடியாட்டத்தில் புருஷார்த்தக்கூத்து கிட்டத்தட்ட 5 நாட்கள் இரவில் விதூஷகனால் சொல்லப்படும். அடுத்து நங்கையார்கூத்து என்ற நம்பியார் சாதியைச்சேர்ந்த பெண் கலைஞர்களின் அபிநய வடிவம் ஒருநாள். பின்புதான் கூடியாட்டத்தின் மையக்கதையின் அபிநயம் ஆரம்பிக்கும். மொத்தமாக பார்த்தால் 20 நாட்கள். இன்று அவ்வளவு நாட்கள் நிகழ்த்தப்படுவதில்லை. மொத்தமாகவே கூடியாட்டமே 5 மணிநேரம். அதில் மையக்கதை மட்டுமே அபிநயிக்கப்படுகிறது. புருஷார்த்தக்கூத்து சொல்லப்படுவதில்லை, நங்கையார்கூத்தும் நிகழ்த்தப்படுவதில்லை. அவை இரண்டு தனி கலைவடிவங்களாக நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒருவகையில் புருஷார்த்தக்கூத்து என்ற கதைசொல்லல் வடிவம்தான் சாக்கியார்கூத்து என்ற கதைசொல்லல் வடிவமாக ஆனது என்று சொல்லலாம்.

சாக்கியார்கூத்து இரண்டு அடுக்குகளால் ஆனது. முதல் அடுக்கில் புராண இதிகாசங்களின் முக்கியமான கதைச்சந்தர்ப்பங்களை எடுத்துக்கொண்டு அதன் நாடகீயத்தையும், கதாப்பாத்திரங்களையும் ஆராய்ச்சி நோக்கிலும், கவித்துவமாகவும், விமர்சனப்பூர்வமாகவும், பகடியாகவும் கதைசொல்லல் போல விரிவாக்கி சொல்லப்படுவது.

இரண்டாவது அடுக்கு சமகால சமூக விமர்சனமும் தனி மனித விமர்சனமும், அவர்களுக்கான அறிவுறுத்தல்களையும் கொண்டது. 

ஆனால் அந்த சமகால விமர்சனம் நேரடியாக இருக்காது. புராணங்களில் உள்ள கதாப்பாத்திரங்கள் வழியாக ,கதைச்சந்தர்ப்பங்கள் வழியாக நுட்பமாக சமகால ஆளுமைகளை, சம்பவங்களை விமர்சிக்கும் கலையை அறிந்தவர்தான் சாக்கியார்.

அது எப்படி நிகழ்கிறது? உதாரணம் சொல்லமுடியுமா? 

இரண்டு நாட்களுக்கு முன் பள்ளுயுருத்தி சிவன் கோவிலில் அர்ஜுனன் சிவனிடம் பாசுபதம் வாங்கும் கிராதம் கதையை சாக்கியார்கூத்தாக சொன்னேன். 

அர்ஜுனன் தன் நிபுணத்துவம் மீதான அகங்காரம் கொண்டவன். ஆனாலும் அவன் கிருஷ்ணன் மேல் பெரிய மதிப்பும் பக்தியும் கொண்டவன். கிருஷ்ண பக்தர்களில் சிறந்தவன் அர்ஜுனன். பெண்களில் தீவிரமான கிருஷ்ணபக்தை பாஞ்சாலிதான். 

அர்ஜுனன் கிருஷ்ணனின் தோழன் (ஸகாவ்). மலையாளத்தின் பொது அர்த்தத்தில் சகாவு என்றால் நண்பன், ஆனால் இடதுசாரி அரசியலில் ’சகாவு’ என்று சொல்வதன் அர்த்தம் இன்னும் விரிவானது. (தமிழில் இடதுசாரி இயக்கங்களில் இருப்பவர்கள் ஒருவரையொருவர் ‘தோழர்’ என்ற சொல்லிக்கொள்வதுபோல கேரள இடதுசாரிகள்  ’ஸகாவ்’ என்னும் சொல்லிக்கொள்வார்கள்) சாக்கியார்கூத்தில் அந்த சொல்லை பயன்படுத்திய உடனேயே அது சமகால விஷயத்தை ஆராய்வதாக ஆகிவிட்டது அல்லவா! 

பார்த்தன், ஸ்வேதாஸ்வன், ஃபால்குனன், சவ்யசாசி, விஜயன், தனஞ்செயன் என அர்ஜுனனுக்கு பலபெயர்கள். நான் சமகால விஷயத்தை எடுத்துக்கொள்வதற்காக சகாவு விஜயன் என்று சொன்னேன். கேட்பவர்கள் அதை பினராயி விஜயன் என்று எடுத்துக்கொள்வார்கள் விஜயனின் சகாவு அச்சுதன் (கிருஷ்ணனின்). அச்சுதன் என்றால் அச்சுதானந்தன் நினைவுக்கு வருவார். அச்சுதானந்தன் வென்றாலும் முதலமைச்சர் ஆனது விஜயன் அல்லவா? அச்சுதன் இருக்கும்வரைதான் விஜயனுக்கு ஆற்றல் உண்டு. கிருஷ்ணன் விண்புகுந்ததும் அர்ஜுனனால் தன் காண்டீபம் என்ற வில்லை பயன்படுத்தவே முடியவில்லை அல்லவா? காண்டீபம் ஆற்றல் கொண்டது. ஆனால் அதை தனியாக பயன்படுத்தக்கூடிய ஆற்றல் அர்ஜுனனுக்கு இல்லை. அச்சுதன் என்ற சொல்லுக்கு கள்ளம் இல்லாதவன் என்று பொருள். ஆனால் அச்சுதன் செய்ததெல்லாம் கள்ளங்கள் தான் இல்லையா? கிருஷ்ணனின் சதியில்தானே பாரதப்போரே நடந்தது? 

இப்படி அச்சுதன், விஜயன் ஒரேசமயம் புராண கதாப்பாத்திரங்களாகவும், சமகால அரசியலாளர்களாகவும் தோன்றச்செய்யும்படியான மொழிபு சாக்கியார்கூத்தில் இருக்க வேண்டும். நல்ல மொழியறிவும், அங்கத நோக்கும், கூர்மையும் வேண்டும். அச்சுதன் பேசாமல் இருப்பதால்தான் இன்னும் விஜயன் ஆள்கிறான். விஜயன் என்றால் வெல்பவன் என்று பொருள். ஆனால் எல்லாமே தோல்விகள்தான்.

இப்படிதான் நான் சமகால விஷயங்களை சாக்கியார்கூத்தில் கொண்டுவருகிறேன். எனக்கு என்று எந்த அரசியல் தரப்பும் இல்லை, நான் எந்த தலைவரையும் ஆதரிக்கும் மனநிலைகொண்டவன் அல்ல. மேலும் இதை முன்பே யோசித்துவைத்து அதை நிகழ்த்துவதில்லை, சாக்கியார்கூத்தில் தன்னிச்சையாக அதுவாகவே நிகழவேண்டும். அதற்கு கடவுள் அருள் வேண்டும், கலையை உபாசனை செய்யும் மனநிலை இருக்க வேண்டும், நல்ல ஆசிரியர் அமைந்திருக்க வேண்டும், அவரின் அருள் வேண்டும். இது என்னுடைய திறனை மட்டும் வைத்து நிகழ்த்தப்படுவதில்லை அல்லவா? சாக்கியார்கூத்தில் எந்த கதை அரங்கில் வெற்றிபெறும் என்று நம்மால் சொல்லமுடியாது. சாக்கியார்கூத்தில் அர்ஜுனனை, அவனது இயல்புகளை விவரிக்கும் சம்ஸ்கிருத செய்யுளை சொல்லிமுடிக்கிறேன். உடனே என் சிந்தனையில் இந்த சமகால விஷயம் (விஜயன், அச்சுதன்) தோன்றுகிறது. என்ன காரணம்? அதை கண்டுபிடிக்கவே முடியாது. இப்படி நிகழ்ந்ததால்தான் அது கலைத்தன்மையோடு இருக்கும். அப்படியில்லாமல் இதை முன்பே ஆலோசித்து வைத்து நிகழ்த்தினால் மிக செயற்கையாக இருக்கும். ‘காகம் உட்கார பனம்பழம் விழந்தது’ என்ற பழமொழி உண்டு. சாக்கியார்கூத்தின் செயல்பாட்டை விளக்க சரியான உவமை. காகம் அமர்வது, பனம்பழம் விழுவதும் ஒரே கணத்தில் தன்னிச்சையாக நிகழ்வது. அது போல சமகால சமூகம் சார்ந்த எண்ணங்கள் தோன்றுவதும், அதை சொல்வதும் ஒரே கணத்தில் நிகழ்கிறது. மாறாக இதையெல்லாம் சொல்லலாம் என யோசித்துவைத்து அதை பின்னர் சொல்லமுடியாது. 

இன்று சாக்கியார்கூத்து கேட்க யாரும் வருவதில்லை. இந்து மரபு, தொன்மங்கள், கதைகள், உபகதைகள் என நிறைய தெரிந்துவைத்திருக்க வேண்டும். அவை தகவல்களாக தெரிந்தால்போதாது அதன் கலைத்தன்மை சார்ந்தும், கதாப்பாத்திர மனநிலைகள் சார்ந்தும் ஆழமான அறிதல் வேண்டும். சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும், அந்தந்த பகுதிகளின் அரசியல் தெரிந்திருக்கவேண்டும்.

மாணி மாதவ சாக்கியார்
நீங்கள் கேரளத்தின் வெவ்வேறு இடங்களில் சாக்கியார்கூத்து நிகழ்த்துகிறீர்கள், அந்தந்த பகுதிகளின் அரசியல் தெரிந்திருக்க வேண்டுமா?

தெரிந்திருந்தால் சாக்கியார்கூத்து இன்னும் சிறப்பானதாக இருக்கும். உதாரணமாக நான் போன மாதம் எர்ணாகுளம் சிவன் கோவில் உற்சவத்தில் சாக்கியார்கூத்து நிகழ்த்துவதற்காக போயிருந்தேன். அங்கு கொச்சி தேவஸ்வம் போர்ட்டிற்கும் கோவில் கமிட்டிக்கும் இடையில் பூசல், வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதற்கான ஆலோசனைக்குழு ஏற்படுத்தினர், அது தொடர முடியாமல் கலைந்தும்விட்டது. 

எனக்கு அது தெரியாது. நான் அந்த கோவிலுக்கு கொஞ்சம் தள்ளியிருக்கும் கடையில் தேநீர் குடிக்க சென்றேன். அப்போது அந்த ஆலோசனைக்குழுவில் இருந்த ஒருவர் கடைக்காரரிடம் இந்த சம்பவத்தை சொல்கிறார். நான் அதை கடைக்காரரிடம் கேட்டு ஓரளவு புரிந்துகொண்டேன், போதுமே  அதைவைத்து சாக்கியார்கூத்தை நிகழ்த்திவிடலாம். 

சாக்கியார்கள் யார்? அவர்கள் பூர்வீகம் என்ன?

தமிழ்நாட்டிலிருந்து சூதர்கள் என்ற பெயர்கொண்ட உயர்சாதியை சேர்ந்தவர்கள் கல்வியிலும் கலைகளிலும் நிபுணத்துவம் கொண்டவர்கள். அவர்கள் பரசுராமன் காலத்தில் கேரளத்திற்கு இடம்பெயர்ந்தனர். அவர்கள் புராண இதிகாசங்களில், இலக்கியங்களில் தேர்ச்சிகொண்டவர்கள். 
‘ஸ்லாக்கிய’ என்ற சம்ஸ்கிருத சொல் மருவி சாக்கியார் என்ற சொல்லாக ஆகியது. அவர்கள் தங்களை ஸ்லாக்கிய கீதம் பாடுபவர்கள் என்று சொல்லிக்கொண்டனர் - ஸ்லாக்கிய என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு மேன்மையான, புகழ்மிக்க என்று பொருள். மேன்மையான பாடல்களை பாடுபவர்கள் சாக்கியார் (ஸ்லாக்கியர்). அவர்கள்தான் சாக்கியார்கூத்து என்ற கதைசொல்லல் சார்ந்த கலைவடிவத்தை உருவாக்கினார்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டுதான் அவர்களின் வேர், பழைய தமிழ் கலாச்சாரத்திலிருந்துதானே கேரளம் உருவாகியது.


சாக்கியார்கூத்து என்ற தனி கலைவடிவம் உருவாவதற்கான காரணம் என்ன?

அதை வரலாற்றுரீதியில் சொல்லமுடியாது. சாக்கியார்கூத்து சார்ந்த அடிப்படையான தொன்மக்கதையை வைத்து அந்த கலைவடிவம் ஏன் உருவாகிவந்தது என்பதை விளக்குகிறேன்.

சனகன், சனந்தன், சனாதனன், சனத்குமாரன் என்ற முனிவர்கள் நைமிஷாரண்ய வனத்தில் புராணங்களை கதைகளாக சொன்னார்கள். பக்தி வழியாக மக்களை வீடுபேறு நோக்கி செலுத்துவதற்கான வழி இது. அவர்களை விதூஷகன் என்று சொல்வார்கள். சமஸ்கிருதத்தில் விஷேஷ + தூஷகன் = விதூஷகன். அதாவது குற்றங்களை (தூஷணங்களை) நுட்பமான முறையில் (விஷேஷமான முறையில்) சுட்டிக்காட்டக்கூடியவர்கள் என்று பொருள். உதாரணமாக ஒரு திருடன் இந்த முனிவர்களின் கதைகளை கேட்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவன் கையில் அப்போது திருடிய பணப்பொதி இருக்கிறது. முனிவர்களுக்கு அவனை யார் என்றே தெரியாது. அந்த முனிவர்கள் தங்கள் கதைசொல்லல் வழியாக எல்லா வகையான மனிதர்களின் எல்லாவகையான பிழைகளையும் சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த பொதுவான சுட்டிக்காட்டுதல் எப்படியோ ஒவ்வொரு தனிமனிதனின் பிழைகளை அந்தரங்கமாக சுட்டிக்காட்டியதாக ஆகிவிடுகிறது. அந்த அந்தரங்கமான சுட்டுதல் அந்த திருடனை ஆழமான குற்றவுணர்விற்கும், சுயபரிசோதனைக்கு கொண்டுசெல்கிறது. அவன் தன்னை மிகமிக அருவருத்து, ஆன்ம சுத்தீகரணம் அடைந்து திருட்டை கைவிடுகிறான். இது ஒரு உருவகக்கதைதான். ஆனால் அன்று மானுடன் தன் அகத்தீமைகளை களைந்து நல்லவழியில் செலுத்துவதற்கான ஒரே கலைவடிவம் இந்த சாக்கியார்கூத்து மட்டும்தான்.

சாக்கியார்கூத்தின் கதைசொல்லலுக்கு என்னென்ன புராணங்களையும், இலக்கியங்களையும் எடுத்துக்கொள்கிறீர்கள்?

கேரளத்தில் இந்து புராண இதிகாசங்களில், சம்ஸ்கிருத இலக்கியங்களிலும் நிபுணத்துவம் கொண்ட அறிஞர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் இவற்றின் மீதான அலசல்களை விரிவாக்கங்களும் பொழிப்புரைகளையும் சேர்த்து  சம்ஸ்கிருதத்திலும் மணிப்பிரவாள மலையாளத்திலும் செய்யுள் வடிவில் எழுதியிருக்கிறார்கள். அவற்றை மலையாளத்தில் பிரபந்தங்கள் என்று சொல்கிறோம். அப்படி பிரபந்தங்கள் எழுதிய முன்னோடி மேல்பத்தூர் நாராயண பட்டத்திரிப்பாடு (1560- 1666).

உங்களைப்பற்றிய அறிமுகக் குறிப்பில் நீங்கள் மேல்பத்தூர் நாராயண பட்டத்திரிப்பாடின் பிரபந்தங்களுக்கு விளக்கவுரை எழுதியிருப்பதாக வாசித்தேன். அதைப்பற்றி விரிவாக சொல்ல முடியுமா?

முதலில் மேல்பத்தூர் நாராயண பட்டத்திரியைப்பற்றி சொல்கிறேன். குட்டஞ்சேரியில் இரவிச்சாக்கியார் என்ற சாக்கியார்கூத்தை நிகழ்த்துபவர் இருந்தார். ஒருமுறை அவர் சாக்கியார்கூத்தில் மூக்கும், முலையும் அறுபட்ட சூர்ப்பனகை ராவணனிடம் செல்லும் கதைச்சந்தர்ப்பத்தை சொல்லிக்கொண்டிருந்தார். அந்த தருணத்தை ”மாசாட் சதா நிரண நாசிகம் ஏவம் மூசே“ என்று சொல்லி சாக்கியார்கூத்தை நிறுத்திவிடுகிறார். மூக்கு வெட்டப்பட்டு விட்டதால் சூர்பனகையால் மூக்கு வழியாக உச்சரிக்கப்படும் எழுத்துகளை (ங,ஞ,ண) உச்சரிக்கமுடியாது. அதனால் அந்த எழுத்துகள் இல்லாமல் அவள் ராவணனிடம் சொல்லவேண்டியதை சொல்லிமுடித்தாள் என்று மட்டும் சாக்கியார் சொல்கிறார். ஆனால் அவள் என்ன சொன்னாள் என்பதை நாளை சொல்கிறேன் என்கிறார், ஏனென்றால் மூக்கு வழியாக உச்சரிக்கப்படும் எழுத்துகள் (அனுநாசிகங்கள்) இல்லாமல் செய்யுள்களை எழுதுவது எப்படி என்று அவருக்கு தெரியவில்லை. அந்த சமயத்தில் மேல்பத்தூர் நாராயணன் பட்டத்திரி இரவோடு இரவாக செய்யுள்களை எழுதினார், அதன் பெயர் சூர்பநகா ப்ரலாபம் அல்லது நிர் அனுநாசிகம். மூக்கு வழியாக உச்சரிக்கப்படும் சொற்கள் (அனுநாசிகம்) அல்லாத பிரபந்தம். அடுத்தநாள் அதை சாக்கியாருக்கு கொடுக்கிறார். மாலைக்குள் சாக்கியார் அதை படித்து நிகழ்த்துகிறார். அதுதான் மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி எழுதிய முதல்பிரபந்தம். பின் ராமாயணம் மூலத்திலிருந்தும், மகாபாரதம் மூலத்திலிருந்து பல பிரபந்தங்களை எழுதியிருக்கிறார். அவை அல்லாதவையும் உண்டு சிவபுராணத்திலிருந்து பிரபந்தங்களை எழுதியிருக்கிறார். 

சாக்கியார்கூத்தை நிகழ்த்துபவர் பிரபந்தங்களை அப்படியே கதைசொல்லலாக ஆக்கினால் போதாது, அவற்றில் ஆழமான வாசிப்பும் அவற்றை விரிவாக்கும் கற்பனையும் வேண்டும். அதனால் நான் மேல்பத்தூர் நாராயணன் பட்டத்திரி எழுதிய பிரபந்தங்களுக்கான விளக்கவுரைகளை எழுதியிருக்கிறேன். அவை 43 புத்தகங்களாக வெளிவந்திருக்கிறது. மேல்பத்தூர் எழுதியவை அனைத்தும் சம்புக்கள். சம்ஸ்கிருத இலக்கியத்தில் சம்பு என்ற காவிய வடிவம் பழைமையானது. யாப்பில் எழுதப்பட்ட செய்யுள்களும் உரைநடையும் கலந்த காவிய வடிவம். அதன் சிக்கலான வடிவம் காரணமாக இதை யாரும் வாசித்திருக்கவே வாய்ப்பில்லை, யாரும் படித்திருப்பதாக சொல்லியும் நான் கேள்விப்பட்டதில்லை. சம்ஸ்கிருத செய்யுள்களுக்கு அன்வயார்த்தம், விபக்தி, பின் பரிபாஷை உண்டு. வெறுமனே ஒவ்வொரு பகுதிக்குமான சாராம்சமான பொருளை மட்டும் எழுதலாம். ஆனால் சம்புக்களில் சம்ஸ்கிருதத்தின் அழகான சொல்லாட்சிகளும், மொழிநுட்பங்களும், பொருள்மயக்கங்களும் உண்டு. அவற்றை சுட்டிக்காட்ட விரிவான விளக்கவுரை தேவை. மேல்பத்தூர் பட்டத்திரியின் பிரபந்தங்களுக்கு நான் எழுதிய விரிவான விளக்கவுரைகள் 42 புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. தற்போது 43-வது நூலின் பணியில் இருக்கிறேன். 
 

சாக்கியார்கூத்து எப்படி நிகழும்? அதன் பார்வையாளர்கள் யார்? 

சாக்கியார்கூத்து எப்படி நிகழும் என்று சொல்கிறேன்.சாக்கியார்கூத்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது. பார்வையாளர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நடுவே யாராவது புதிய பார்வையாளர் வந்தால் சாக்கியார் அவரையும் தான் நிகழ்த்தும் கதையின் பகுதியாக ஆக்குவார். அவரை பகடியும் செய்வார். உதாரணமாக, சாக்கியார் ராமாயணத்தை சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். ராமன் அவன் தம்பி லட்சுமணன், இரண்டாமவன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது புதிதாக பார்வையாளர் வந்தால் அவரை சுட்டி இவரும் இரண்டாமவன் தான் போலிருக்கிறது. இரண்டாமவனின் துக்கம், புறக்கணிப்பு இதை இவரும் அறிந்திருப்பார் என நினைக்கிறேன், அவருக்கு மூத்தவன் மேல் எவ்வளவு வெறுப்பு என்று தெரியவில்லை, வெளியே சிரிக்கிறார் என்று அவரையும் கதையின் பகுதியாக ஆக்குவார். ஏற்கனவே இருக்கும் பார்வையாளர்களுக்கு புரியும், அவர்கள் சிரிப்பார்கள். புதிதாக வரும் பங்கேற்பாளருக்கு ஏன் தன்னைப்பார்த்து சிரிக்கிறார்கள் என்று ஒன்றும் புரியாது. புதிதாக பார்வையாளர் வருவது அவரை சாக்கியார் தன் கதையின் பகுதியாக ஆக்குவதும் தன்னிச்சையாக நிகழவேண்டும். அந்த தன்னிச்சைத்தன்மைதான் சாக்கியார்கூத்தின் இலக்கணம். நான் ஏற்கனவே குறிப்பிட்ட காகம் பனைமரத்தில் வந்து அமர்வதும், பனம்பழம் கீழே விழுவதும் ஒரே சமயம் தன்னிச்சையாக நிகழ்வதுபோல. சாக்கியாருக்கு நல்ல விமர்சனப் பிரக்ஞையும் அங்கத நோக்கும் இருந்தால் மட்டும்தான் இந்த தன்னிச்சையான வெளிப்பாடு சாத்தியம். 

நீங்கள் சாக்கியார்கூத்தை எப்போது கற்றுக்கொண்டீர்கள்?

நான் கலாமண்டலத்தில் கூடியாட்டத்திற்கான மிழா கற்றுக்கொள்ளும்போது சம்ஸ்கிருத கல்வியும் இருந்தது. கூடியாட்டத்திற்கு சம்ஸ்கிருத கல்வியும் அவசியம். அதனால் சம்ஸ்கிருத இலக்கியத்தில், புராண, இதிகாசங்களில் ஓரளவு பரிச்சயம் உருவானது. என் ஆசிரியர் பி.கே.நாராயணன் நம்பியாரின் தந்தை மாணி மாதவ சாக்கியார் கூடியாட்டம், சாக்கியார்கூத்து இரண்டையுமே நிகழ்த்துபவர். அவரிடமும் பைங்குளம் ராமச்சாக்கியாரிடமும் சாக்கியார்கூத்தை, அதை நிகழ்த்துவதில் உள்ள நுட்பங்களை, அதை நிகழ்த்தும் கலைஞன் எப்படி தனிவெளிப்பாடுகளை அதில் நிகழ்த்தமுடியும் என்று கற்றுக்கொண்டேன்.

மேலும் என் ஆசிரியர் பி.கே.நாராயணன் நம்பியார் பாடகம் என்ற அழிந்துவிட்ட கலைவடிவத்தை மீட்டு அதை தொடர்ந்து நிகழ்த்தினார். அவரிடம் பாடகம் கற்றுக்கொண்டு நான் பாடகத்தையும் அப்போது நிகழ்த்திக்கொண்டிருக்கிறேன். பாடகம் சாக்கியார்கூத்தைப்போன்ற கதைசொல்லல் வடிவம்தான்.

சாக்கியார்கூத்து இருக்கும்போது ஏன் இன்னொரு கதைசொல்லல் வடிவம் தேவைப்பட்டது?

பாடகம் சாக்கியார்கூத்து போன்ற இன்னொரு கதைசொல்லல் வடிவம். சாக்கியார்கூத்து கோவிலின் கூத்தம்பலங்களில் மட்டுமே நிகழும். அந்த கோவில்களில் நாயர்களுக்கு ஆலய அனுமதி இல்லை. அதனால் அவர்களுக்குக்கான கதைசொல்லல் வடிவமாக பாடகம் உருவானது. இது கோவிலுக்கு வெளியே நிகழ்த்தப்படும். இதை நம்பியார் சாதியை சேர்ந்தவர்கள்தான் நிகழ்த்தமுடியும் அவர்களுக்கு பூணூல் கிடையாது. மாறாக சாக்கியார்கூத்தை நிகழ்த்தும் சாக்கியாருக்கு பூணூல் உண்டு.

பாடகத்தை நிகழ்த்துவது யார்?

நம்பியார், நங்கையார், அம்பலவாசி ஜாதியை சேர்ந்தவர்கள் (பிஷாரடி, நம்பீசன், பொதுவாள், வாரியார், மாரார்). இவர்களிலும் சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே நிகழ்த்தமுடியும். அதனால் சமஸ்கிருத கல்வி அவசியம்.



அப்போது சாக்கியார் இவர்களிலிருந்தெல்லாம் தனியானவர்களா?

ஆம். சாக்கியாருக்கு மட்டும் கூடியாட்ட அபிநயத்திலும், சாக்கியார்கூத்தை நிகழ்த்துவதிலும் அனுமதி உண்டு. அவர்களுக்கு பூணூல் உண்டு. கோவிலில் புழங்கக்கூடிய ஜாதி என்றாலும் சாக்கியர்கள் நம்பூதிரிகளுடன் சேர்ந்து பந்தியில் உண்ண முடியாது. நம்பூதிரிகளின் பந்திக்கும் சாக்கியார்களின் பந்திக்கு இடையே திரை வைப்பார்கள். நம்பூதிரிகள் சாப்பிடுவதை அவர்கள் பார்க்கக்கூடாது. 

நம்பியாரும் சாக்கியாரும் ஒரே பந்தியில் சாப்பிடுவார்கள். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளமுடியாது. நம்பியார் பெண்களை சாக்கியார் திருமணம் செய்துகொள்வார்கள். ஆனால் சாக்கியார் குல பெண்களான ‘இல்லோத்தம்மா’வை நம்பியார் திருமணம் செய்யமுடியாது. கேரள சாதி வழக்கம் மிக விசித்திரமானது, சிக்கலானது. 

உதாரணத்திற்கு எனது ஆசிரியர் நம்பியார் அவரது தந்தை சாக்கியார், அவர் நம்பியார் ஜாதி பெண்களை திருமணம் செய்துகொண்டார் என்பதால் மகன் நம்பியாராக ஆகிவிட்டார். இங்கு இருந்தது மருமக்கத்தாய வழக்கம் என்பதால் ஜாதி அம்மா வழியிலிருந்துதான். 

பாடகமும் சாக்கியார்கூத்து எடுத்துக்கொள்ளும் கதைகளையே எடுத்துக்கொள்ளுமா? அதன் கதைசொல்லலில் ஏதேனும் வித்தியாசம் உண்டா? 

பாடகத்திற்கு பாஷா சம்பு அடிப்படையாக இருந்தது (மலையாளமும் சமஸ்கிருதமும் கலந்தது). சம்பு என்பது முழுக்க சம்ஸ்கிருதம். சாக்கியார்கூத்திற்கு அது அடிப்படை. பாஷா சம்பு மணிப்பிரவாள மலையாளத்தில் இருக்கும். நான் முன்பு குறிப்பிட்டதுபோல சாக்கியார்கூத்தில் பார்வையாளர்களையும் கதையின் பகுதியாக ஆக்கும், அவர்களையும் விமர்சிக்கும்தன்மை உண்டு. பாடகத்தில் அதற்கு அனுமதி இல்லை. பார்வையாளர்கள் யாரையும் கதையின் பகுதியாக ஆக்கமுடியாது. 

கடந்த நூற்றாண்டில் பாடகமும் சம்ஸ்கிருத சம்புவின் கதைகளையே எடுத்துக்கொண்டார்கள். அந்த நிலை வந்தபோது பாடகம் சொல்பவரும், சாக்கியார்கூத்தை நிகழ்த்துபவரும் ஒரே சம்ஸ்கிருத செய்யுளைத்தான் சொல்வார்கள். சில சந்தர்ப்பங்களில் ஒரே சமயம் கோவிலின் கூத்தம்பலத்தில் சாக்கியார்கூத்தும், கோவிலுக்கு வெளியே ஆனால் மிக பக்கத்திலேயே பாடகமும் நிகழும். ஒரே கதை ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களிலும்.

மேலும் பாடகம் பார்வையாளர்களுக்கு மிக உவப்பானதாக இருக்கும். அதை நிகழ்த்துபவரும் நிபுணத்துவம் கொண்டவராக இருப்பார். சாக்கியார்கூத்தை சொல்பவர் வயதாலோ, அறிவாலோ இன்னும் ஆழமானவர் என்றாலும் நிகழ்த்தும்போது சாக்கியார்கூத்தில் பார்வையாளர்களால் உள்நுழைய முடிவதில்லை, பாடகம் அப்படியில்லை, ரசிகர்கள் எளிதில் உள்நுழைய முடியும். 

ரசிகர்கள் எளிதில் உள்நுழையக்கூடியது என்று சொல்வதால்  ’பாடகம்’ கேளிக்கை வடிவம் என்று எடுத்துக்கொள்ளவேண்டாம். அதுவும் கலைவடிவம்தான். அதன் இயல்பு வேறு, சாக்கியார்கூத்தின் இயல்பு வேறு. ஓரளவு நுண்ணுணர்வும், மொழி அறிமுகமும், புராண இதிகாச அறிமுகம் கொண்டவர்கள் பாடகத்தை ரசிக்கமுடியும்.  ஆனால் சாக்கியார்கூத்தை ரசிக்க அந்த அறிமுகம் மட்டும்போதாது.  புராண-இதிகாசங்களில் ஆழமான வாசிப்பும், கதாப்பாத்திரங்கள் சார்ந்த நுட்பமான அறிதலும் வேண்டும், கொஞ்சம் சம்ஸ்கிருத புலமையும் வேண்டும். அதனால் அது அவ்வளவு எளிதில் ரசிகர்களால் உள்நுழையமுடிவதில்லை.   ரசிகர்களால் உள்நுழைய முடிவதால் பாடகம் கேளிக்கை என்றோ, சாக்கியார்கூத்து கலைப்படைப்பு என்றோ சொல்லமுடியுமா என்ன? உதாரணமாக, நவீன இலக்கியம் வாசிப்பவரால் கூடியாட்ட அபிநயத்தை ஓரளவுக்குமேல் ரசிக்கமுடியாது.  மரபின்  அறிமுகமும், அபிநய சாத்தியங்களும், கைமுத்திரைகளும், சம்ஸ்கிருத மொழி அறிவும், சம்ஸ்கிருத இலக்கிய அறிவும் வேண்டும். ஆனால் இரண்டுமே கலைவடிவங்கள்தான், அவற்றின் இயல்புவேறு அவ்வளவுதான்.

சாக்கியார்கூத்தில் அதன் கதைசொல்லும்முறையில் நவீன காலத்திற்கு ஏற்ப ஏதேனும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதா, ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா?

இல்லை, சாக்கியார்கூத்து எப்போதுமே சமகால சமூகத்தை, தனிமனிதர்களை பேசுபொருளாக எடுத்துக்கொள்வதால் அப்படியான புதிய அம்சங்கள் சேர்க்கவேண்டிய தேவை இல்லை. ஆனால் பழைய அளவுக்கு சாக்கியார்கள் விமர்சனத்தன்னையுடன் வெளிப்படுவதில்லை, வெளிப்படமுடிவதில்லை. இன்றைய  சமூகம் விமர்சனங்களை ஒரு எல்லைக்குமேல் விரும்புவதில்லை, அதன் மீது இவ்வளவு அச்சம், அதற்கு அவ்வளவு தடைகள்.  முன்பு இவ்வளவு விருப்பமின்மையும், அச்சமும் தடையும் இருந்ததில்லை. 
புதிய முயற்சிகள் என்று பார்த்தால் கூடியாட்டத்தில் புதிய கதைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. காளிதாசனின் ”சாகுந்தலம்” மரபான கூடியாட்டத்தில் இல்லை. அதை ஜி.வேணு என்ற கூடியாட்ட கலைஞர் உருவாக்கி நிகழ்த்தியிருக்கிறார்.

மேலும் இன்று  மரபான கலைவடிவங்களில் நிறைய சோதனை முயற்சிகள் நிகழ்கின்றன. கதகளியிலும் அப்படி நிகழ்கிறது. கர்நாடக இசையில் அப்படி நிகழ்வதாக கேள்விப்பட்டேன். நீங்கள் கலைவெளிப்பாட்டிற்கு எந்த வடிவத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம், அதில் எந்த வகையான சோதனை முயற்சியை செய்யவும் ஒவ்வொரு கலைஞனுக்கு சுதந்திரம் உண்டு.
ஆனால் ’சாமாஜிக ஆஸ்ரயோ ரஸ’ என்கிறது நாட்டிய சாஸ்திரம். சாமாஜிகர் என்றால் பார்வையாளர்கள். கலையனுபவம் பார்வையாளர்களில்தான் உருவாகிறது. நாம் எதை வேண்டுமானாலும் நிகழ்த்தலாம், என்ன வேண்டுமானாலும் அபிநயிக்கலாம், ஆனால் கடைசியாக அது பார்வையாளனில் கலையனுபவமாக ஆகவேண்டும் என்கிறது நாட்டிய சாஸ்திரம். கலையில் செய்யப்படும் எல்லா சோதனைமுயற்சிகளும் கடைசியில் ’கலைத்தன்மை’கொண்டதாக இருக்கவேண்டும், அதுதான் அளவுகோல். ரசிகனின் ஆழத்தில் அவன் அதை கலையனுபவமாக உணரவேண்டும், அவனில்தான் அது தன் கலைத்தன்மையை அடைகிறது. அது நிகழாமல் கலைகளில் செய்யப்படும் சோதனைகளுக்கும், புதுமைகளுக்கும், உழைப்பிற்கும் எந்த பயனும் இல்லை, அவற்றை எந்தவகையிலும் நியாயப்படுத்தமுடியாது. 

நேர்காணல் - அழகிய மணவாளன், தாமரைக்கண்ணன் புதுச்சேரி

கலாமண்டலம் ஈஸ்வர உண்ணி நேர்காணல் பகுதி- 1


அழகிய மணவாளன் தமிழ் மொழிபெயர்ப்பாளர். மலையாளத்தில் இருந்து கட்டுரைகள், கதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறார். தமிழில் கட்டுரைகள் எழுதி வருகிறார். பி.கே. பாலகிருஷ்ணனின் நாவலெனும் கலைநிகழ்வு எனும் நூல் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.