Monday 29 July 2024

அறிவியலும் அதன் மீதான விமர்சனங்களும் - பகுதி 1 - சமீர் ஒகாஸா


அறிவியலை நல்ல விஷயம் என்று பலர் கருதுகின்றனர். எனென்றால் அதுதான் நமக்கு மின்சாரம், சுத்தமான குடிநீர், பென்சிலீன், கருத்தடை, விமானப் பயணம் போன்ற பலவற்றை கொடுத்தது. இவை அனைத்தும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் மனித இனத்திற்கு பயனளிக்கின்றன. மனித நலனுக்கு இதுபோன்ற பங்களிப்புகளை கொடுத்த போதிலும் அறிவியல் அதன் மீதான விமர்சனங்களைக் கொண்டிராமல் இல்லை. சமூகங்கள் கலைக்கு செலவளிக்கும் பணத்தை விட அறிவியலுக்கு அதிக அளவு செலவு செய்வதாக சிலர் வாதிடுகிறார்கள். வேறு சிலர்,  பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்தல் போன்ற அறிவியல் கொடுத்த தொழில்நுட்பத் திறன்கள் இல்லாமல் இருந்திருந்தால் நாம் நன்றாக இருந்திருப்போம் என்கிறார்கள். அறிவியல் அதன் இயல்பிலேயே ஆண் தன்மைக்கு சார்பானது என சில பெண்ணியவாதிகள் சொல்கிறார்கள். மத நம்பிக்கை கொண்டவர்கள் தங்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் ஒன்றாக அறிவியலை கருதுகின்றனர். மேலும் உலகில் உள்ள பல பழங்குடி பண்பாடுகளின் நம்பிக்கை மற்றும் அறிவை விட மேற்கத்திய அறிவியல் தன்னை உயர்வாக கருதுவதால் மானுடவியளாலர்கள் அதை ஆணவமுடையது என குற்றம் சாட்டுகின்றனர். இவை மட்டுமே அறிவியல் மீதான விமர்சனங்கள் அல்ல. எனினும் இந்த பகுதியில் தத்துவ கவனம் பெற்ற மூன்று விமர்சனங்களை மட்டும் நாம் பார்க்கப் போகிறோம். 

அறிவியலிசம் (Scientism):

’அறிவியல் பூர்வமான’ என்ற வார்த்தை நவீன காலகட்டத்தில் ஒரு தனித்த முத்திரையை பெற்றுள்ளது. நீங்கள் ’அறிவியல் பூர்வமற்று’ நடந்துகொள்ளவதாக ஒருவர் சொன்னால் அவர் உங்களை விமர்சிக்கிறார் என்று பொருள். அறிவியல் பூர்வமாக நடப்பது பகுத்தறிவானது, போற்றத்தக்கது; அறிவியல் பூர்வமற்று நடப்பது பகுத்தறிவற்றது, அவமதிப்பிற்குறியது. ’அறிவியல் பூர்வமான’ என்ற சொல் ஏன் இவ்வளவு அர்த்தங்களை சூடிக்கொண்டுள்ளது என தெரிந்துகொள்வது கடினம். நவீன சமுதாயத்தில் அறிவியல் பெற்றுள்ள உயர்ந்த அந்தஸ்து இதற்கு காரணமாக இருக்கலாம். சமூகம் அறிவியலாளர்களை நிபுணர்களாக நடத்துகிறது. முக்கியமான விஷயங்களில் அவர்களுடைய அபிப்ராயங்கள் கேட்கப்படுகின்றன, மேலும் அந்த அபிப்ராயங்களின் பெரும்பகுதி கேள்வியே இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அறிவியலாளர்களின் அபிப்ராயங்கள் சில நேரங்களில் தவறாகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும் - உதாரணமாக, பிரிட்டனின் அறிவியல் ஆலோசகர்கள் 1990ல் mad cow disease மனிதர்களுக்கு ஆபத்தானதில்லை என அறிவித்தனர். பின்பு அது தவறு என நிரூப்பிக்கபட்டது. ஆனால் அவ்வப்போது வந்து போகும் இது மாதிரியான பிரச்சனைகள் மக்கள் அறிவியல் மீது வைத்துள்ள நம்பிக்கையை அசைப்பதில்லை, அறிவியலாளர்கள் மீதுள்ள மதிப்பையும் குறைப்பதில்லை. பல நாடுகளில் அறிவியலாளர்கள் மதத்தலைவர்களைப் போல பார்க்கப்படுகின்றனர்: பாமர மக்களால் எட்ட முடியாத தனித்துவமான அறிவை கொண்டவர்கள் என அவர்கள் கருதப்படுகின்றனர். 

அறிவியல் மீதான வழிபாட்டுணர்வைக் குறிக்க அல்லது நவீன அறிவியல் மீதான அதீத-பயபக்தியைக் குறிக்க ’அறிவியலிசம்’ (scientism) என்ற இழிவுபடுத்தும் சொல்லை சில தத்துவவாதிகள் பயன்படுத்துகின்றனர். அறிவியலிசத்திற்கு எதிரானவர்கள் அறிவியல் மட்டுமே அறிவார்ந்த முயற்சிகளை செய்வதற்கான ஒரே வடிவம் அல்ல என்றும் உலகைப் புரிந்துகொள்வதற்கான ஒரே வழி அல்ல என்றும் சொல்கின்றனர். தாங்கள் அறிவியலுக்கு எதிரானவர்கள் கிடையாது என்பதையும் இவர்கள் அழுத்தமாக சொல்கின்றனர். ஒவ்வொரு விஷயத்திலும் அறிவியல் முறைகளை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற கற்பிதத்தையே அவர்கள் எதிர்க்கிறார்கள். ஆகவே இவர்களின் நோக்கம் அறிவியலை தாக்குவதல்ல, அறிவியல் அறிவு மட்டுமே ஒரே அறிவு என்ற கருத்தை நிராகரிப்பதன் மூலம் அறிவியலை அதன் இடத்தில் வைக்கிறார்கள். 

அறிவியலிசம் ஒரு தெளிவற்ற கோட்பாடு என்பதாலும், இந்த சொல் இழிவுபடுத்தும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது என்பதாலும் இதை நம்புவதை யாரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இருந்தாலும் அறிவியல் வழிபாடு போன்றவொரு விஷயம் அறிவுசார் வட்டாரங்களில் தன்னியல்பான அம்சம். இது மோசமான விஷயமாக இருக்க வேண்டும் என்பதில்லை - ஏனென்றால் அறிவியல் வழிபடப்படுவதற்கு தகுதியானதே. இதுவே உண்மையும் கூட. அறிவியல் வழிபாடு என பெரும்பாலும் குற்றம்சாட்டப்படும் துறை சமகால ஆங்கிலோபோன் (anglophone) தத்துவம் (அறிவியல் தத்துவம் இதன் ஒரு கிளை மட்டுமே). தத்துவம் வரலாற்றுரீதியில் கணிதத்திற்கும் அறிவியலுக்கும் நெருக்கமானதாக இருந்தாலும் அது பெரும்பாலும் வாழ்வியல் சார்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது. அறிதல், நெறி, பகுத்தறிவு, மனித நல்வாழ்வு போன்ற பலவற்றுடைய இயல்பின் மீதான கேள்விகளுக்கு தத்துவம் பதிலளிக்கிறது. இவற்றில் எதையும் அறிவியல் முறைமைகள் வழியாக தீர்க்க முடியாது. அறிவியலின் எந்த துறையும் நாம் எப்படி வாழ்கையை நடத்துவது, அறிவு என்றால் என்ன அல்லது மகிழ்ச்சி என்றால் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாது. இவை அடிப்படையிலேயே தத்துவக் கேள்விகள். 

Bertrand Russell

சில தத்துவவாதிகள் அறிவியல் மட்டுமே அறிவுக்கான முறையான ஒரே வழி என சொல்கின்றனர். அறிவியலால் தீர்க்க முடியாத கேள்விகள் அசலான கேள்விகள் அல்ல என்று அவர்கள் வாதிடுகின்றனர். இந்த பார்வை 20ஆம் நூற்றாண்டின் மிக புகழ்பெற்ற ஆங்கில தத்துவவாதியான பெர்ட்ரண்ட் ரஸ்சலால் முன்வைக்கப்பட்டது. அவர் இவ்வாறு எழுதியுள்ளார்: ‘அடையக்கூடிய அறிவு எதுவாக இருந்தாலும் அது அறிவியல் முறைமைகளால் அடையப்பட வேண்டும், அறிவியலால் கண்டறிய முடியாத எதையும் மனித குலத்தால் தெரிந்துகொள்ள முடியாது’. இந்த பார்வைக்கான அடித்தளம் இயற்கைவாதம் (naturalism) என்ற கோட்பாடில் உள்ளது. இது மனிதர்களாகிய நாம் இயற்கை உலகத்தின் பகுதி மட்டுமே என வலுவாகச் சொல்கிறது. ஒரு காலத்தில் நம்பியது போல மனிதர்கள் இயற்கை உலகத்தை கடந்தவர்கள் என்பதை மறுக்கிறது. அறிவியல் இயற்கை உலகத்தை முழுவதும் ஆராய்ச்சி செய்வதால் அது மனிதர்களைப் பற்றிய முழு உண்மைகளையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும், ஆகவே அது தத்துவம் தீர்ப்பதற்கென்று எந்த விஷயத்தையும் விட்டு வைக்காது அல்லவா? இந்த பார்வையின் படி, தத்துவத்திற்கு என்று தனித்த இடம் எதுவும் கிடையாது. எனினும் தத்துவம் ’அறிவியல் கோட்பாடுகளை தெளிவுபடுத்துதல்’ என்ற பயனுள்ள பங்களிப்பை இன்று வரை செய்துவருகிறது - அதாவது அறிவியலாளர்கள் பயன்படுத்தும் கருவிகளை சுத்தப்படுத்துவது மட்டுமே தத்துவத்தின் வேலை.

தங்களுடைய துறைகளை அறிவியலுக்கு அடிபணியச் செய்வதை பல தத்துவவாதிகள் எதிர்க்கின்றனர். இது அறிவியலிச மறுப்பிற்கான காரணிகளில் ஒன்று. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. தத்துவ விசாரணை அதற்கே உரிய தனித்த முறைமைகளை கொண்டுள்ளது, அவை அறிவியலால் தொடமுடியாத இடங்களை பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டுவரும் என்கின்றனர். இந்த பார்வையின் ஆதரவாளர்கள் தத்துவம் அறிவியலுடன் ஒத்துப்போவதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள். அதாவது அறிவியல் நமக்கு கற்றுக்கொடுப்பவைகளுடன் முரண்படும் விஷயங்களை முன்வைக்காத வகையில் தத்துவம் இருக்க வேண்டும். மேலும் மனிதர்களாகிய நாம் இயற்கையின் ஒரு பகுதியே, எனவே அறிவியலின் எல்லையைத் தாண்டி நாம் இல்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் உலகைப் பற்றிய அறிவுக்கு அறிவியல் மட்டுமே ஒரே முறையான மூலாதாரம் என்பதை மறுக்கின்றனர்.  

தத்துவ விசாரணை முறைமை என்பது என்ன? தத்துவ விசாரணையில் தர்க்கம் வழியாக பகுத்தறிதல், சிந்தனை-பரிசோதனைகளின் பயன்பாடுகள், மற்றும் கருத்துரீதியான பகுப்பாய்வு (Conceptual analysis) ஆகியவை உள்ளன. கருத்துரீதியான பகுப்பாய்வு ஒரு கருத்தாக்கத்தை வரையறுக்க முயற்சி செய்கிறது. எப்படியென்றால், ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கத்தின் கீழ் வருமா என்பது பற்றிய நமது உள்ளுணர்வின் அடிப்படையில் அக்கருத்தாக்கத்தை வரையறுக்க முயற்சிக்கிறது. உதாரணமாக, பழமையான ஒரு தத்துவ கேள்வியை எடுத்துக்கொள்வோம், அது ’அறிவு நம்பிக்கையை ஒத்திருக்குமா’ என கேட்கிறது. பல தத்துவவாதிகள் இதற்கு ‘இல்லை’ என்றே பதில் சொல்வார்கள். எதன் அடிப்படையில் என்றால், ’ஒருவர் ஒரு குறிப்பிட்ட கூற்றை உண்மையாக நம்புகிறார், ஆனால் அவர் அக்கூற்றை அறிந்துள்ளார் என சொல்லமுடியாது’ என்பது போன்ற நிகழ்ச்சிகளைக் கட்டமைப்பதன் மூலமாக அவ்வாறு சொல்கிறார்கள். (உதாரணமாக, பின்வருமாறு ஒரு நிகழ்ச்சியை கற்பனை செய்யுங்கள்: ’உங்களது கடிகாரம் இயங்கவில்லை, அது 6.10 என காட்டுவதால் நேரம் 6.10 ஆக இருக்கும் என நம்புகிறீர்கள்; தற்செயலாக அப்போது உண்மையான நேரமும் 6.10 ஆக உள்ளது!’ ஆகவே இங்கு உங்களது நம்பிக்கை சரியானது தான். ஆனால் நேரம் 6.10 என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. அப்படி இருந்தது உங்களுடைய அதிர்ஷ்டம்தான்.) எனவே கருத்துரீதியான பகுப்பாய்வு மூலம் நாம் ’அறிவு நம்பிக்கையுடன் ஒத்திருக்கவில்லை’ என்பதை நிலைநிறுத்திவிட்டோம் - இது ஒரு தீர்க்கமான தத்துவ உண்மை. இது ஒரு உதாரணம் மட்டுமே. ஆனால் இதுவே தத்துவவிசாரணை அதற்கே உரிய அறிவியல்-சாரா முறைமைகளைப் பயன்படுத்துவதன் மூலம் உண்மையான அறிவைக் கொடுக்கும் என்ற கருத்தை விளக்குகிறது. 

இந்த விவாதம் எப்படி மதிப்பிடப்பட வேண்டும்? ஒரு தரப்பு, உண்மையான தத்துவ கேள்விகளாக தென்படுகின்ற கேள்விகளை உதாரணமாக முன்வைக்கிறது. அக்கேள்விகள் எந்த அறிவியல் துறையின் வட்டத்திற்குள்ளும் இல்லாமல் வெளியே இருக்கின்றன. மற்றும் அவைகளுக்கு தத்துவவாதிகளுக்கே உரிய தனித்த முறைமைகளின் மூலம் பதில் அளிக்க முடியும். மற்றொரு தரப்பு இதற்கு எதிரானது. அது தத்துவத்தின் வரலாற்றை எடுத்துப்பார்க்கும் போது அதில்  பேசப்பட்ட கேள்விகள், உதாரணமாக கண்ணோட்டம், கற்பனை, நினைவு போன்றவை புலனறிவு அறிவியல்களில் குறிப்பாக உளவியலில் பேசப்படும் விஷயங்களாக மாறிவிட்டன என சொல்கிறது. நிஜமாகவே ‘தத்துவம்’ என வகைப்படுத்தப்பட்ட கேள்விகளின் தொகுப்பு பல நூற்றாண்டுகளாக சுருங்கிக்கொண்டே வருகிறது. மற்றும் அக்கேள்விகள் அறிவியலுக்கு உரியதாக மாறிவருகின்றன. மேலும் இவர்கள் தத்துவ விசாரணை மற்றும் அறிவியல் விசாரணை ஆகியவை தனித்து செயல்படுபவை மற்றும் அவை ஒவ்வொன்றும் அவற்றிற்கே உரிய முறைமைகளை சார்ந்துள்ளன என்ற கருத்தை விருப்பக்கற்பனை (wishful thinking) என விமர்சிக்கின்றனர்; அறிவியலில் முன்னேற்றம் நிகழ்கின்ற அதேசமயம் தத்துவத்தில் முன்னேற்றத்தைக் காண்பது கடினம் என்பதையும் குறிப்பிடுகின்றனர். 

அறிவியலிச சிக்கலுக்கு ஒத்த மற்றொரு சிக்கல் இயற்கை அறிவியலுக்கும் சமூக அறிவியலுக்குமான தொடர்பைப் பற்றி விவாதிக்கிறது. தத்துவவாதிகள் தங்களின் துறையில் உள்ள ’அறிவியல் வழிபாட்டை’ பற்றி புகார் செய்வதைப் போலவே சமூக அறிவியலாளர்களும் அவர்களின் துறையிலுள்ள ‘இயற்கை அறிவியல் வழிபாட்டை’ பற்றி புகாரளிக்கிறார்கள். இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவை இயற்கை அறிவியல் துறைகள். பொருளியல், சமூகவியல், மானுடவியல் போன்றவை சமூக அறிவியல் துறைகள். இயற்கை அறிவியல் துறைகளில் அபாரமான கணிக்கும் திறன் கொண்ட துல்லியமான விதிகளை இயற்ற முடியும், ஆனால் சமூக அறிவியல் வழக்கமாக அவ்வாறு செய்வதில்லை. இது ஏன் இவ்வாறு உள்ளது? இயற்கை அறிவியலாளர்கள் சமூக அறிவியலாளர்களை விட திறமையானவர்களாக இருப்பதே இதற்கு காரணம் என்பது சரியான பதிலாக இருக்காது. சாத்தியமான ஒரு பதில் இயற்கை அறிவியலில் உள்ள முறைமைகள் (Methods) மேம்பட்டதாக இருக்கின்றன என்பதே. இது சரியாக இருக்கும்பட்சத்தில் இயற்கை அறிவியலில் உள்ள முறைகளை சமூக அறிவியலும் பின்பற்ற வேண்டும். தற்போதுகூட சமூக அறிவியல் ஒரு எல்லைவரை இயற்கை அறிவியலின் முறைமைகளைப் பின்பற்றிவருகிறது. இதற்கு சமூக அறிவியல் துறைகளில் அதிகரித்துள்ள கணிதத்தின் பயன்பாடு ஒரு காரணமாக இருக்கலாம். இயக்கத்தின் வரையறைக்கு கணித மொழியை கலிலியோ பயன்படுத்தியது இயற்பியலில் ஒரு பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியது. ஆகவே ’இயற்கை அறிவியலில் இருப்பதற்கு ஒப்பான ஒரு கணிதப்படுத்தும் முறை சமூக அறிவியலிலும் கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு இணையான ஒரு பாய்ச்சலை சமூக அறிவியலிலும் ஏற்படுத்த முடியும்’ என சிந்திக்கலாமல்லவா.

இருப்பினும் சில சமூக அறிவியலாளர்கள் இயற்கை அறிவியலைப் பின்பற்ற வேண்டும் என்ற பரிந்துரையை எதிர்க்கிறார்கள். இயற்கை அறிவியலின் முறைமைகள் சமூக நிகழ்வுகளை ஆராய்வதற்கு பொருத்தமானவை அல்ல என வாதிடுகிறார்கள். இரண்டையும் நேருக்கு நேர் வைத்துப் பார்க்கும் போது சமூக அறிவியல் இயற்கை அறிவியலை விட கீழான நிலையில் உள்ளது என்பதை மறுக்கின்றனர். ஏனென்றால் சமூக நிகழ்வுகள் சிக்கலான தன்மை கொண்டவை மற்றும் அதில் ‘கட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனை’களைச் (Controlled experiments) செய்ய முடியாது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், கணிக்கும் திறனைக் கொண்ட துல்லியமான விதிகளை கண்டறிவது மட்டுமே வெற்றிக்கான அளவுகோல் அல்ல. 

Wilhelm Dilthey

இந்த விவாதத்தின் செல்வாக்கு மிக்க வடிவம் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் சமூகவியலாளர்கள் வில்ஹெல்ம் டில்தே (Wilhelm Dilthey) மற்றும் மேக்ஸ் வெப்பெர் (Max Weber) ஆகியோரிடம் இருந்து பெறப்பட்டது. சமூக நிகழ்வுகளை அவற்றிற்கு பொறுப்பாக உள்ள வினையர்களின் (Actors) கண்ணோட்டத்தில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும் என அவர்கள் சொல்கிறார்கள். சமூக நிகழ்வுகளை எது இயற்கை நிகழ்வுகளில் இருந்து வேறுபடுத்துகிறது என்றால் சமூக நிகழ்வுகள் மனிதர்கள் தங்களின் நோக்கங்களுக்காக செய்யப்படும் செயல்களின் விளைவுகளாகும். எனவே வெர்ஸ்டிஹென் (verstehen) என்ற தனிச்சிறப்பு வாய்ந்த புரிதல் சமூக அறிவியல் விசாரணைக்கு தேவை. இது ஒரு சமூக செயல்பாடு வினையர் ஒருவருக்கு எவ்வாறு அகவயமாக பொருள்படுகிறது என்பதை உள்வாங்கிக்கொள்ள முயல்கிறது. உதாரணமாக, ஒரு மானுடவியலாளர் மதச் சடங்கு ஒன்றை ஆராய முயற்சிக்கிறார். இதற்கு அச்சடங்கு அதில் பங்கு பெற்றுவருபவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றிய புரிதல் தேவை. இயற்கை அறிவியல் முறைமைகளில் பயன்படுத்தப்படுவது போன்ற தூய ‘புறவயமான’ பகுப்பாய்வு அச்சடங்கைப் பற்றிய உண்மையாக புரிதலைக் கொடுக்காது. ஏனென்றால் அது அச்சடங்குடைய பொருளின் அவசியத்தை புறக்கணித்துவிடுகிறது. எனவே வெர்ஸ்டிஹென் கோட்பாடு இயற்கை மற்றும் சமூக அறிவியலுக்கு இடையிலான ஒரு கூர்மையான பிரிவைக் கொண்டுள்ளது. இந்தக் கோட்பாடு 20ஆம் நூற்றாண்டில் மானுடவியல் மற்றும் சமூகவியலின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தகுந்த செல்வாக்கை செலுத்தியது. 

Max Weber

அறிவியலிசத்தின் சிக்கலும் இதற்கு இணையாக உள்ள இயற்கை மற்றும் சமூக அறிவியலைப் பற்றிய சிக்கலும் அவ்வளவு எளிமையாக தீர்க்க முடியாதவை. ஏனென்றால் ‘அறிவியலின் முறைமைகள்’ அல்லது ‘இயற்கை அறிவியலின் முறைமைகள்’ என்றால் என்ன என்பது தெளிவாக இல்லை - இதை இந்த வாதத்தில் உள்ள இரண்டு தரப்புகளுமே பெரும்பாலும் கவனிப்பதில்லை. அறிவியல் முறைமைகள் அனைத்து விஷயங்களுக்கும் பயன்படுமா அல்லது எல்லா முக்கியமான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் திறன் கொண்டதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் கண்டிப்பாக நாம் அந்த முறைமைகள் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் முந்தைய அத்தியாயங்களில் பார்த்தது போல இது அவ்வளவு எளிமையான கேள்வி அல்ல. பரிசோதனை மூலமாக சோதித்தல், அவதானித்தல், கோட்பாட்டை கட்டமைத்தல், மற்றும் தொகுத்தல் அனுமானம் போன்ற அறிவியல் அணுகுமுறையின் முக்கியமான அம்சங்களை பற்றி நமக்கு தெரியும். ஆனால் இவை ‘அறிவியல் முறைமைக்கு’ ஒரு துல்லியமான வரையறையை கொடுக்காது, அப்படியொரு வரையறை வழங்கப்படலாம் என்றும் தெளிவாக சொல்ல முடியாது. காலப்போக்கில் அறிவியல் பெரிதாக மாற்றமடைந்து கொண்டே வருகிறது. எனவே அனைத்து அறிவியல் துறைகளுக்கும் எல்லா காலங்களிலும் பயன்படக்கூடிய நிலையான மாறாத ‘அறிவியல் முறைமைகள்’ உள்ளன என்ற ஊகம் எளிதாக நிராகரிக்கப்படும் தன்மையுடையது. ஆனால் இந்த ஊகம் ’அறிவியல் மட்டுமே அறிவுக்கான ஒரே வழி’ என்ற கூற்றிலும் உட்பொதிந்துள்ளது, இதற்கு எதிர் கூற்றான ’சில கேள்விகளுக்கு அறிவியல் முறைமைகளால் பதிலளிக்க முடியாது’ என்ற கூற்றிலும் உட்பொதிந்துள்ளது. எனவே இது ‘அறிவியலிசத்தைப் பற்றிய விவாதம் குறைந்தது ஒரு எல்லைவரையாவது ஒரு தவறான ’ஊகத்தின்’ (presumption) அடிப்படையில் நிகழ்ந்துகொண்டிருக்கலாம்’ என சொல்கிறது.  

அறிவியலும் மதமும்

அறிவியலுக்கும் மதத்திற்குமான பூசல் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெற்று வருகிறது. பிரபலமான ஒரு உதாரணம் என கத்தோலிக்க திருச்சபையுடனான கலிலியோவின் மோதலை சொல்லலாம். 1633ல் நடைபெற்ற மத விசாரணையில் கலிலியோ தன்னுடைய கோபர்னிகஸியன் பார்வையை பகிரங்கமாக திரும்பப் பெற வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டார். மேலும் அவருடைய கடைசி காலத்தை ஃப்லோரன்சில் உள்ள இல்லத்தில் வீட்டுச்சிறையில் கழிக்க வேண்டும் என்றும் தண்டனை வழங்கப்பட்டது. புனித நூலுடன் முரண்படுகிறது என்ற காரணத்தால் கோபர்னிகஸுடைய கோட்பாட்டை திருச்சபை எதிர்த்தது. சமீப காலத்தில் நிகழ்ந்துவரும் முக்கியமான அறிவியல்/மத மோதல் என டார்வினியர்களுக்கும் அமெரிக்காவில் இருக்கும் ’அறிவார்ந்த-வடிவமைப்பின்’ (intelligent design) ஆதரவாளர்களுக்கும் இடையில் நடைபெறும் கசப்பான சர்ச்சையைக் குறிப்பிடலாம். இந்த சர்சையையே இப்பகுதியில் நாம் பார்க்க இருக்கிறோம்.

டார்வினின் பரிணாமக் கொள்கை மீது இறையியலின் எதிர்ப்பு ஒன்றும் புதிய விஷயமல்ல. 1859ல் origin of species நூல் வெளிவந்த உடனேயே பிரிட்டன் திருச்சபையை சேர்ந்தவர்களிடமிருந்து விமர்சனத்தைப் பெற்றது. இதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது: அந்த நூல் மனிதர்கள் முதற்கொண்டு தற்போதிருக்கும் அனைத்து உயிரிசிற்றினங்களும் பல காலத்திற்கு முன்பு பொது மூதாதை இனத்திலிருந்து பரிணாமமடைந்தவை என சொல்கிறது. எல்லா உயிரிசிற்றினங்களையும் கடவுள் ஆறு நாட்களில் படைத்தார் என சொல்லும் தொடக்கநூலுடன் (Book of Genesis) டார்வினின் கோட்பாடு முரண்படுகிறது. சில டார்வினியர்கள் தங்களுடைய பரிணாம நம்பிக்கையுடம் கிறிஸ்துவமத விசுவாசத்தை ஒத்துப்போகச் செய்ய முயற்சிக்கின்றனர். அவர்கள் தொடக்கநூல் சொல்வதை அப்படியே நேரடியான பொருளில் விளக்கமாக எடுத்துக்கொள்ள கூடாது, அதை உருவகமாகவோ (allegorical) அல்லது குறியீடாகவோ தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என சொல்கிறார்கள். இருந்தாலும் அமெரிக்காவில் பல மறுபிரவேச சீர்திருத்தவாதிகள் (Evangelical protestants) தங்களுடைய நம்பிக்கையை அறிவியலின் கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போகும் வகையில் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. பைபிளில் சொல்லப்படும் படைப்பு அப்படியே சரியானது என்றும், டார்வினின் பரிணாமக் கோட்பாடை முற்றிலும் தவறானது என்றும் சொல்கிறார்கள்.

origin of species, 1859 edition

இந்த அபிப்ராயம் ‘படைப்பு நம்பிக்கைவாதம் அல்லது படைப்புவாதம்’ (creationism) எனப்படுகிறது. இதை அமெரிக்காவில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களில் 40% பேர் எற்றுக்கொண்டுள்ளனர். படைப்பு நம்பிக்கைவாதம் அமெரிக்காவில் மிகவும் ஆற்றல் வாய்ந்த அரசியல் தரப்பு. இந்த தரப்பு அங்குள்ள பள்ளிகளில் உயிரியலை கற்பிப்பதில் அறிவியளாலர்களே அதிர்ச்சி கொள்ளும் வகையில் கணிசமான ஆதிக்கத்தை செலுத்துகிறது. அமெரிக்க அரசியல்சட்டம் பொதுக்கல்வி நிலையங்களில் மதத்தை கற்பிக்க இடம் தரவில்லை. இதற்காகவே படைப்பு அறிவியல் கண்டுபிடிக்கப்பட்டது. இது டார்வினின் கோட்பாட்டை விட பைபிளில் வரும் படைப்பு உலகத்திலிருக்கும் உயிர்கள் பற்றிய சிறந்த அறிவியல் விளக்கத்தை கொடுக்கிறது என சொல்கிறது. எனவே பைபிளின் படைப்பு கருத்தை கற்றுக்கொடுப்பது அரசியலமைப்பு சட்டத்தின் தடையை மீறுவதில்லை, ஏனென்றால் இது அறிவியலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது, மதமாக அல்ல! 1981ல் அர்கன்சாஸ் மாகாணம் உயிரியல் ஆசிரியர்கள் பரிணாம கொள்கையை கற்பிப்பதற்கும் படைப்பு அறிவியலை கற்பிப்பதற்கும் ’சம அளவு நேரத்தை’ கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றியது. அடுத்த ஆண்டே ஒரு தலைமை கூட்டமைப்பு நீதிபதியால் இந்த சட்டம் நீக்கப்பட்டது. 1987ல் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி பொது கல்விநிலையங்களில் படைப்புவாதத்தைக் கற்பிப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற விதியைப் பிறப்பித்தார்.

சட்டரீதியான இந்த தகர்ப்பைத் தொடர்ந்து படைப்பு அறிவியல் இயக்கம் ’அறிவார்ந்த வடிவமைப்பு’ என்ற அடையாளத்தின் கீழ் புத்திசாலித்தனமாக தனக்கு மறுபெயரை சூட்டிக்கொண்டது. இந்த பெயர் கடவுளின் இருப்பை பற்றிய ஒரு பழைய வாதத்தைக் குறிக்கிறது. அது ‘வடிவமைப்பு வாதம்’ (Argument from design) என அறியப்பட்டது. ஒரு அறிவார்ந்த தெய்வம் சிக்கலான உடல்கொண்ட உயிரிகளை படைத்தது என கருதினால் மட்டுமே அவ்வுயிரிகளின் இருப்பை விளக்க முடியும் என அந்த வாதம் சொல்கிறது. வழக்கமாக அந்த கடவுள் கிறிஸ்துவ கடவுளாகவே குறிப்பிடப்படுகிறது. டார்வினுக்கு முன்பான காலகட்டத்தில் ‘வடிவமைப்பு வாதம்’ அறிவார்ந்த மைய நோக்கின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் சமகால உயிரியலாளர்கள் இதை நிராகரிக்கின்றனர். ‘அறிவார்ந்த வடிவமைப்பின்’ ஆதரவாளர்கள் அந்த வாதத்திற்கு புத்துயிர் கொடுத்தனர். இதன்படி, உயிரிகள் ’எளிதாக்க இயலா சிக்கல் தன்மை’யை (irreducible complexity) கொண்டுள்ளன, அவை டார்வினியர்கள் சொல்வது போல பரிணாமம் அடையவில்லை, அவை கடவுளின் கைவண்ணத்திற்கான சான்று. ’எளிதாக்க இயலா சிக்கல் தன்மை’ கொண்ட ஒரு அமைப்பு எண்ணற்ற பகுதிகளைக் கொண்டிருக்கும், அவை ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் தொடர்புகொள்ளக்கூடியவை மற்றும் அவை அந்த அமைப்பின் இயக்கத்திற்கு முக்கியமானவை - ஒரு பகுதியை நீக்கினாலோ அல்லது மாற்றினாலோ அந்த அமைப்பு செயலிழந்துவிடும். இது சொல்வது உண்மைதான் - உயிரிகளும், தனித்த செல்களும் சிக்கலானவையே. ஏனென்றால் அவற்றின் இயக்கம் பல உயிர்வேதியியல் பாகங்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டைப் பொருத்தது. இது போன்ற ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதிகளைச் சார்ந்திருக்கும் தன்மை இயற்கைத் தேர்வினால் பரிணாமம் அடைந்திருக்க முடியாது என ‘அறிவார்ந்த வடிவமைப்பு’ பள்ளி சொல்கிறது. 

இதற்கு சமீபத்தில் முக்கியத்துவம் கூடிய போதிலும் இந்த விவாதம் புதிய குடுவையில் பழைய திராட்சை ரசம் இருப்பதைப் போன்றது. முதுகெலும்புள்ள உயிரிகளின் கண் மிகச் சிக்கலான ஒரு உறுப்பு. இது எப்படி இயற்கைத் தேர்வினால் பரிணாமம் அடைந்திருக்கக் கூடும் என ’உயிர்சிற்றினங்களின் தோற்றம்’ நூலில் டார்வின் கூட வியக்கிறார். முதலில் பார்க்கும் போது இது தெளிவற்றதாக தெரியும், இருந்தாலும் பின்வரும் ஒரு தொடர் நிகழ்வைக் கற்பனை செய்வதன் மூலம் இச்சிக்கலை தீர்க்க முடியும் என டார்வின் நம்பினார்: ஒரு எளிய கண் (ஒளியை உணரும் திறன் கொண்ட ஒரு சில செல்கள் மட்டுமாக இருக்கலாம்) நவீன கண்கள் வரை படிப்படியான தொடர் மேம்பாடுகளை அடைகிறது, ஒவ்வொரு நிலையிலும் கண் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை பெறுகிறது. துல்லியமாக சீரமைக்கப்பட்ட பகுதிகளைக் கொண்ட மிகச் சிக்கலான ஒரு உறுப்பு இயற்கைத் தேர்வினால் பரிணாமம் அடையக்கூடியது தான் என்பதை இது காட்டுகிறது. கண் பரிணாமம் அடையும் பாதையில் இடைப்பட்ட நிலைகளில் கண் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்பதற்கு ஊகங்களை மட்டுமே டார்வின் கொடுத்தார். ஆனால் சமீபத்திய அறிவியல் கண் பரிணாம நிலையின் தொடர்ச்சி பற்றிய அதிக சாத்தியம் கொண்ட விரிவான பார்வையைத் தருகிறது. பலதரப்பட்ட, முதுகெலும்புள்ள சிற்றினங்களின் கருக்களில் கண் எவ்வாறு வளர்கிறது என்ற ஆய்வின் மூலமாகவும் அச்சிற்றினங்களை விரிவாக மரபணு பகுப்பாய்வு செய்ததின் மூலமாகவும் அவ்வாறு தரப்பட்டது. எனவே ‘உயிரிகளில் தென்படும் எந்த அம்சமும் ஒரு பரிணாமச் செயல்பாட்டால் விளைந்திருக்க முடியாது என்ற கருத்துக்கு ஆதாரங்கள் இல்லை’ என இந்த வாதத்தை பொதுமைப்படுத்தலாம். 

’குறைக்கமுடியா சிக்கல் தன்மை’யுடன் சேர்த்து அறிவார்ந்த வடிவமைப்பின் ஆதரவாளர்கள் வேறு வழிகளிலும் டார்வினியன் உலகநோக்கை வீழ்த்த முயற்சித்தனர். டார்வினியத்தின் சான்றுகள் ஒரு முடிவைத் தரக்கூடியவை அல்ல, எனவே டார்வினியத்தை ஒப்புக்கொள்ளப்பட்ட மாறாவுண்மையாக (fact) கருதக்கூடாது, அது ‘வெறும் ஒரு கோட்பாடு’ மட்டுமே என்றனர். மேலும், டார்வினியர்களுக்குள் நடைபெற்ற பல கருத்து சச்சரவுகளையும் சில தனிப்பட்ட உயிரியலாளர்களின் கவனக்குறைவான கருத்துக்களையும் தங்களுக்கு சாதமாக எடுத்துக்கொண்டு பரிணாமத்தை மறுப்பது அறிவியல்ரீதியாக மதிக்கக்தக்கதுதான் என்று காட்டும் முயற்சியில் இறங்கினர். டார்வினிசம் வெறும் ஒரு கோட்பாடு மட்டுமே என்பதால் ‘ஒரு அறிவார்ந்த தெய்வம் அனைத்து உயிரிகளையும் படைத்தது’ என்பது போன்ற மாற்று கோட்பாடுகளையும் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தங்கள் வாதத்தை முடித்தனர். 

படைப்பு நம்பிக்கையாளர்கள் சொல்லிய ’டார்வினிசம் நிரூபணமான மாறாவுண்மையல்ல வெறும் ஒரு கோட்பாடு மட்டுமே’ என்பது ஒருவகையில் சரிதான். நாம் பகுதி இரண்டில் பார்த்தது போல துல்லியமான சான்றுகளின் அடிப்படையில் ஒரு அறிவியல் கோட்பாட்டை சரி என நிரூபிப்பது சாத்தியமற்றது. மற்றும் தரவிலிருந்து கோட்பாட்டை அடைவதற்கான அனுமானம் பகுத்தலற்ற முறையிலேயே உள்ளது. ஆனால் இதுவொரு பொதுக்கருத்து - பரிணாம கோட்பாடுக்கு மட்டும் தனிப்பட்டு பொருந்துவது அல்ல. இந்த கருத்தை கொண்டு பூமி சூரியனை சுற்றி வருகிறது என்பது கூட வெறும் ஒரு கோட்பாடே என்று வாதிடலாம். அல்லது நீர் H2O மூலக்கூறால் ஆனது என்பதும் அல்லது பொருள்கள் கீழ்நோக்கி விழும் என்பதும் வெறும் கோட்பாடே என வாதிடலாம். அப்படியானால் இது போன்ற ஒவ்வொன்றுக்கும் மாற்றுக் கோட்பாட்டை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிவரும். ஆனால் அறிவார்ந்த வடிவமைப்பின் ஆதரவாளர்கள் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக அறிவியல் மீது எந்த சந்தேகமும் கிடையாது, பரிணாமக் கோட்பாட்டை மட்டுமே சந்தேகப்படுகிறார்கள். இவர்களின் வாதம் மறுக்க முடியாத வகையில் இருக்க வேண்டும் என்றால் ‘டார்வினியர்கள் கொடுக்கும் தரவுகள் டார்வினுடைய கோட்பாடின் உண்மை தன்மைக்கு உத்தரவாதம் அளிக்காது’ என்று மிக எளிதாக இவர்கள் சொல்லக்கூடாது. இதுவே எல்லா அறிவியல் கோட்பாட்டுக்கும் மற்றும் எல்லா பொதுபுத்தி நம்பிக்கைகளுக்கும் பொருந்தும்.

இவர்களின் மற்றொரு வாதம் புதைபடிம பதிவுகளின் தொடர்ச்சி மிகவும் துண்டுபட்டு இருக்கின்றன என்பது. குறிப்பாக ஹோமோ சேப்பியன்களின் மூதாதை இனம் என சொல்லப்படுவதில். இந்த குற்றச்சாட்டில் சில உண்மைகள் இருக்கின்றன. புதைபடிம பதிவுகளில் விடுபடல்கள் உள்ளன, அவற்றால் பரிணாமவியலாளர்கள் அதிகமாக குழப்பமடைந்துள்ளனர். தொடர்ந்து காணப்படும் ஒரு புதிர் - ’இடைநிலை படிமங்கள்’ (transition fossils) எனப்படும் ’ஒரு உயிரினம் இன்னொன்றாக பரிணாமமடைவதற்கு இடையில் இருக்கும் உயிரினங்களின்’ படிமங்கள் ஏன் மிகச்சிலவே உள்ளன என்பது. டார்வினின் கோட்பாடு சொல்வது போல ஒரு உயிரினம் அதற்கு முன்னாலிருந்த வேறொன்றில் இருந்து பரிணாமமடைந்தது என்றால் இடைநிலை உயிரினங்களின் படிமங்களும் மற்ற உயிரினங்களின் படிமங்கள் அளவுக்கே கிடைக்க வேண்டும் அல்லவா? இந்த வாதம் டார்வினின் கோட்பாட்டுக்கு எதிரான ஒரு நல்ல வாதம் அல்ல. ஏனென்றால் படிமங்கள் மட்டுமே பரிணாமவியலின் சான்றுகளுக்கு ஒரேயொரு முக்கிய மூலாதாரம் அல்ல. ஒப்பீட்டு உடல்கூறியல் (Comparative anatomy), கரு ஆய்வியல் (embryology), உயிர்-புவிப்பரப்பியல் (biogeography) மற்றும் மரபியல் (genetics) ஆகியவையும் மூலாதாரமே. மனிதர்களுக்கும் சிம்பன்சிகளுக்கும் 98% DNA ஒத்துப்போகிறது என்ற மாறாவுண்மையை இதற்கு உதாரணமாக சொல்லலாம். பரிணாமக் கோட்பாடு சரியாக இருக்கும் பட்சத்தில் இதுவும் இதை ஒத்த ஆயிரம் மாறாவுண்மைகளும் மிகச் சரியாக பொருள்படுகின்றன. இதுவே பரிணாம கோட்பாடுக்கு சிறந்த சான்று. நிச்சயமாக, இதற்கும் அறிவார்ந்த வடிவமைப்பின் ஆதரவாளர் ஒருவர் தங்களுடைய விளக்கத்தைக் கொடுக்கக்கூடும்: வடிவமைப்பாளர் (அதாவது கடவுள்) அவருடைய (அல்லது அவளுடைய) சொந்த காரணத்திற்காக மனிதர்களையும் சிம்பஸிகளையும் மரபணுரீதியில் ஒரேமாதிரியாக படைத்தார் என. இந்த மாதிரியான ’விளக்கங்களை’ கொடுப்பதற்கான சாத்தியங்கள் இருப்பது எதைக் காட்டுகிறது என்றால் ’டார்வினுடைய கோட்பாடு ஆதாரங்களுடன் தர்க்கரீதியாக பொருந்தவில்லை’ என்பதை. எனவே டார்வினின் கோட்பாடு அடிப்படையாகவே மற்ற விளக்கங்களையும் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கிறது. அறிவார்ந்த வடிவமைப்பின் இந்த வாதம் சொல்வது சரியானது தான், ஆனால் டார்வினிசத்திற்கு மட்டும் குறிப்பாக உள்ள எதையும் சொல்லவில்லை. 

அறிவார்ந்த வடிவமைப்பு பள்ளியின் வாதம் சீரான ஆதாரங்கள் மற்றும் தர்க்கத்துடன் இல்லை என்றாலும் இந்த சர்ச்சை அறிவியல் கல்வி பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. ஒரு மதச்சார்பற்ற கல்வி முறையில் அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையிலான பதற்றம் எப்படி கையாளப்பட வேண்டும்? உயர்நிலைப் பள்ளி அறிவியல் வகுப்புகளின் பாடத்தை யார் முடிவுசெய்ய வேண்டும்? தங்கள் குழந்தைகள் பரிணாமவியலையோ அல்லது வேறு அறிவியல் விஷயங்களையோ கற்றுக்கொள்ள வேண்டியதில்லை என சொல்லும் பெற்றோர்கள் அரசால் தடுக்கப்பட வேண்டியவர்களா? வழக்கமாக இதுபோன்ற கேள்விகள் பொதுமக்களின் கவனத்தை அரிதாகவே பெறுகின்றன. ஆனால் டார்வினிசம் மற்றும் அறிவார்ந்த வடிவமைப்புக்கு இடையிலான மோதல் இக்கேள்விகளை மக்களின் கவனத்திற்குமுன் கொண்டுவந்துள்ளது.

=================

அறிவியல் தத்துவ வரலாறு பேராசிரியரான Samir Okasha எழுதிய Philosophy of science நூலில் இருந்து சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்ட பகுதி

மொழிபெயர்ப்பு: தாமரைக்கண்ணன், அவிநாசி

அறிவியல் தத்துவம் :: சமீர் ஒகாஸா - தொடர்