Monday 29 July 2024

பௌத்த வினாவல் - 3, ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

பகுதி இரண்டு - தர்மம் அல்லது கோட்பாடு (தொடர்ச்சி)

பிரதித்ய சமுத்பாதாம்

168. புத்தருடைய கோட்பாட்டின் முழு ஆன்மாவையும் ஒரே வார்த்தையில் பிரதிநிதித்துவம் செய்ய முயற்சித்தால், எந்த வார்த்தையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்?

தர்மம்.

169. ஏன்?

ஏனென்றால் ஒருபோதும் பிழைக்காத கர்ம விதிகளின் செயல்முறைப்படி எல்லா மனிதருக்கும் தங்கள் செயல்களுக்கேற்ப நற்பலன் அல்லது தண்டனை சரியான அளவில் கிடைக்கும் என அது கற்பிக்கிறது. எந்த நற்செயலும் அல்லது தீச்செயலும் அது எத்தனை முக்கியத்துவமற்றது மற்றும் எத்தனை ரகசியமாக செய்யப்படினும் கர்மத்தின் தராசிலிருந்து தப்பமுடியாது.

170. கர்மம் என்றால் என்ன?

அறம், பௌதிகம் மற்றும் பல பரப்புகளில் செயல்படும் காரணகாரிய இயக்கம். மானுட விவகாரங்களில் அற்புதம் என சொல்லத்தக்க எதுவும் இல்லை என பௌத்தர்கள் கூறுகின்றனர்: வினை விதைப்பவன் வினை அறுப்பான்.

171. பௌத்தத்தின் சாராம்சத்தை வெளிப்படுத்த பயன்படுத்தும் வேறு நல்ல வார்த்தைகள் என்ன?

மெத்தா, கருணா, முதித்தா, உபேக்சா (அன்பு, கருணை, பிறர் மகிழ்வில் மகிழ்தல், சமநிலை)

172. எந்த கோட்பாடு பௌத்தத்தை மற்ற உலக மதங்களின் மத்தியில் தனித்து உயர்த்திக் காட்டுகிறது?

மெத்தா அல்லது மைத்ரேயா - அன்பு. இனி வரவிருக்கும் புத்தருக்கு ’மைத்ரி’ (கருணையானவர்) என்னும் பெயர் கொடுக்கப்படுவதன் மூலம் இக்கோட்பாட்டின் முக்கியத்துவம் மேலும் வலியுறுத்தப்படுகிறது.

173. நீங்கள் விளக்கிய இந்த கோட்பாடுகள் ஆனைத்தும் புத்தரால் போதி மரத்தின் அருகே தியானித்து அறியப்பட்டவையா?

ஆம், இதுவும், மேலும் பெளத்த நூல்களில் நாம் படிக்கும் பலதும். பௌத்தத்தின் ஒட்டுமொத்த அமைப்பும் அவர் மகாஞானம் அடைந்தபோதே அவருடைய மனதில் உதித்தது.

174. எத்தனை காலம் புத்தர் போதி மரத்தின் அருகிருந்து நீங்காது இருந்தார்?

நாற்பத்தி ஒன்பது நாட்கள்.

175. புத்தர் போதித்த முதல் பிரசங்கத்தை நாம் எவ்வாறு அழைக்கிறோம், அதாவது தனது முன்னால் நண்பர்களுக்கு போதித்த முதல் பிரசங்கம்?

தம்மசக்க-பவத்தனா சூத்திரம் - தம்மத்தின் விதிகளை வறையறுக்கும் சூத்திரம்.

சிங்கள பாலி அறிஞரான விஜேசிங்க முதலியார் இதை ”தம்மத்தின் ஆட்சியை ஸ்தாபித்தல்” என சொல்வது மேலும் சிறந்தது என்கிறார். ரைஸ்-டேவிட்ஸ் இதை “தர்மத்தின் ராஜ்ஜியத்திற்கான அடித்தளம்” எனக் குறிப்பிடுகிறார்.

176. இந்தப் பிரசங்கத்தில் அவர் போதித்த பாடங்கள் என்னென்ன?

“நான்கு உன்னத உண்மைகள்” மற்றும் “அஷ்டாங்க மார்க்கம்”. துறவிகள் உடலை மிகவும் வருத்துவதையும், மற்றொரு பக்கம் இல்லறத்தவர்கள் அதீத புலனின்ப நாட்டங்களில் ஈடுபடுவதையும் கண்டிக்கிறார். அஷ்டாங்க மார்க்கத்தை அந்த இரண்டு பாதைகளுக்கும் அல்லாத மத்திய பாதையாக பரிந்துரைத்தார்.

177. புத்தர் உருவ வழிபாட்டை ஏற்றுகொண்டாரா?

இல்லை, அவர் அதை எதிர்த்தார். கடவுள்கள், அசுரர்கள், மரங்கள் மற்றும் பல வழிபாடுகளையும் அவர் கண்டனம் செய்தார். புறவயமான வழிபாடுகள் நம்மை கட்டுக்குள் பிணைக்கும் தன்மையுடையவை. ஒருவர் முன்சென்று உயர விரும்பினால் அத்தகைய வழிபாடுகளைத் தகர்த்துவிட்டு செல்லவேண்டும்.

178. ஆனால் பௌத்தர்கள் புத்தரின் சிலை மற்றும் அவரது குறியீட்டு வடிவங்களை வழிபடுகின்றனரே, மேலும் வழிபாட்டிடங்களும் கட்டுகின்றனர்?

ஆம், ஆனால் இது உருவ வழிபாடு செய்பவர்களின் அதே உணர்வுகள் போன்றதல்ல.

179. என்ன வேறுபாடு?

உருவ வழிபாடு செய்யும் நமது சகோதரர் தனது தெய்வ உருவங்களை கண்களுக்குப் புலனாகாத தெய்வத்தின் கண்களுக்கு புலனாகும் வடிவமாக மட்டும் எடுத்துக்கொள்வதில்லை. அவர் தனது தெய்வ உருவத்தை வழிபடும் போது அந்த உருவமானது எங்கும் நிறைந்திருக்கும் இறை அம்சத்தின் ஒரு பகுதியை கொண்டுள்ள ஒன்றாகக் கருதி வழிபடுகிறார். 

180. பௌத்தர்கள் என்ன நினைக்கிறார்கள்?

பௌத்தர்கள் புத்தரின் சிலைகள் மற்றும் நீ சொல்லிய குறியீடுகள் ஆகியவற்றை இந்த உலக-காலத்தில் (கல்பம்) தோன்றிய உயரிய, அறிவார்ந்த, மிகவும் அன்பும் கருணையுமுடைய மனிதரின் நினைவுசின்னங்களாக மட்டுமே எண்ணுகின்றனர். எல்லா இனங்களும், எல்லா மக்களும் தங்களால் உயர்ந்தவர்கள் என்று எண்ணப்பட்ட ஆண் மற்றும் பெண்ணின் நினைவுசின்னங்களை மதிப்புடன் பொக்கிஷம் போல பாதுக்காத்தும் பத்திரப்படுத்தியும் வந்துள்ளனர். எங்களைப் பொறுத்தவரை புத்தர் துக்கத்தை அறிந்த ஒவ்வொரு மனிதராலும் வேறெவரையும் விட மிக அதிகமாக போற்றப்படுபவர் மதிக்கப்படுபவர்.

181. இது குறித்து புத்தரே உறுதியாக ஏதேனும் சொல்லியுள்ளாரா?

நிச்சயமாக. மஹாபரிநிர்வாண சூத்திரத்தில் ”அஷ்டாங்க மார்க்கத்தின் படி தூய வாழ்வை வாழ்வதன் மூலமே ஒருவர் விடுதலையை அடையமுடியுமே தவிர வழிபாடுகளால் அல்ல. என்னையோ, மற்றவைகளையோ, எந்த உருவங்களையோ வழிபடுவதால் அல்ல” என்கிறார்.

182. சடங்குகள் குறித்து புத்தரின் மதிப்பீடு என்ன?

தொடக்கம் முதலே அவர் சடங்குகள் மற்றும் புறவயமான சமய பழக்கங்களைக் கண்டனம் செய்துள்ளார். அவை அனைத்தும் நமது ஆன்மீகக் குருட்டுத்தன்மையை அல்லது அறியாமையை மேலும் அதிகரிப்பதுடன் ஜட உருவங்களின் மேல் அதீத பற்றுகொள்ளவும் செய்யும்.

183. இதற்கு மாற்று என்ன?

அவருடைய பல பிரசங்கங்களில் இந்த பழக்கவழக்கங்கள் பெருங்கேடு விளைவிக்கும் என வெளிப்படையாக மறுப்புதெரிவித்துள்ளார். கோட்பாடுகள் மற்றும் மீபொருண்மை நுண்மைகள் மீது விவாதம் நிகழ்த்தி தங்கள் உயரிய உள்ளுணர்வை தளரச்செய்தும் மற்றும் நேரத்தை வீணாக்கும் பிக்குகளுக்கு அவர் தவத்தைப் பரிந்துரைத்தார்.

184. மந்திர உச்சாடனம், நல்ல நேரம் பார்த்தல், ஆவி நடனம் இவையெல்லாம் பௌத்தத்தில் உள்ளனவா?

இவை பௌத்தத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானவை. இவை பேகன் மற்றும் அயல் மதங்களின் எஞ்சியிருப்பவை. பிரம்மஜத சூத்திரத்தில் புத்தர் இவைகளையும் பிற மூடநம்பிக்கைகளையும் பாகன், தாழ்ந்தவை, மற்றும் பொய்யானவை என வகைப்படுத்துகிறார்.

185. பௌத்ததிற்கும் மதம் (religious) என்னும் பெயரில் உள்ளவைகளுக்குமான முதன்மையான முரண் என்ன?

மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் பௌத்தம்: 

  • ஒரு கடவுளின் இருப்பின்றி உயரிய நன்மைகளைக் கற்பிக்கின்றது.
  • வாழ்வின் சுழற்சியை மூடநம்பிக்கைகள், ’நித்யம்’ என்ற தன்னலக் கோட்பாடு, உடலை விட்டு நீங்குகின்ற ‘ஆத்மா’ ஆகியவை இன்றி கற்பிக்கின்றது.
  • சொர்க்கம் என்ற குறிக்கோளின்றி மகிழ்ச்சியை கற்பிக்கின்றது.
  • பிறரை காக்கும் ரட்சகர் இன்றி விடுதலையை கற்பிக்கிறது
  • மீட்பர் இன்றி ஒருவன் தனக்கான முக்தியை அடைய கற்பிக்கிறது
  • எந்தவிதமான சமய சடங்குகள், பிராத்தனைகள், கடும்தவங்கள், மதகுரு மற்றும் துறவிகளின் இடைபடலின்றி வீடுபேறு அடையும் முறைகளை கற்பிக்கின்றது.
  • எல்லா உயிர்களிடத்தும் கருணைகொண்டு தூய தன்னலமற்ற வாழ்வை வாழும் அறிவைப் பெற்றால் இந்த வாழ்வில் இந்த உலகத்திலேயே நிர்வாணம் அடையலாம் என கற்பிக்கின்றது.

186. தியானத்தின் இரண்டு முக்கிய பிரிவுகளை சுட்டிகாட்டுங்கள், அதாவது ஆசையை அழித்து அறிவை எய்தும் முறை?

சமதா மற்றும் விதர்சமா.

  • சமதா: ஆசை தேய்வுறும்படி தூய வாழ்வை மேற்கொண்டு விடாமுயற்சியுடன் புலன்களை கட்டுக்குள் வைத்தல்.
  • விதர்சமா: தன்விழிப்படைவதன் மூலமாக உயர்நிலையிலான ஞானம் அடைதல். 

இவை ஒவ்வொன்றும் இருபது அம்சங்களை கொண்டுள்ளன. அவற்றை இங்கு குறிப்பிட தேவையில்லை.

187. ஒருவர் அடையவேண்டிய நான்கு வழிகள் அல்லது நிலைகள் என்னென்ன?

  • சோதப்பன்னா- நான்கு உன்னத உண்மைகளை சரியாக புரிந்துகொண்ட பிறகு உள்ளே நுழைதல் அல்லது துவங்குதல்.
  • சகதகாமி - முழுமையாக காமம், வெறுப்பு மற்றும் மாயையை வென்றவரின் பாதை. இவர் மீண்டும் ஒருமுறை மட்டுமே உலகில் பிறப்பெடுப்பார்.
  • அநகாமி - சுயத்தை வென்றவரின் பாதை, இவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறப்பெடுக்க வேண்டியதில்லை.
  • அராகதம் - மதிப்புமிக்க தூய அராகதர்களின் பாதை. இவர்கள் மறுபிறப்பெடுக்க வேண்டிய தேவையிலிருந்து விடுபட்டவர்கள். மேலும் இவர்கள் சரியான ஞானத்தை அனுபவிக்கும் திறனை அடைந்தவர்கள், அறியாமையும் துயரமும் கொண்டவர்களிடம் பிணைப்பில்லாமல் இரக்கம் கொள்பவர்கள், மற்றும் எல்லா உயிர்களிடமும் அளவில்லா அன்பு கொண்டவர்கள்.

188. வெகுவாக அறியப்பட்ட பௌத்தத்தில் ’உண்மை’யைத் தவிர வேறு எதுவுமே கிடையாதா? 

நூற்றாண்டுகளாக இருந்துவரும் மற்ற எல்லா மதங்களையும் போல இதிலும் நிச்சயமாக உண்மையுடன் பொய்களும் கலந்துள்ளன, பொன்னிற்குள் கசடுகள் கலந்திருப்பது போல. வெவ்வேறு காலகட்டங்களில் நிலங்களில் பௌத்தர்கள் கொண்டிருந்த கவித்துவ கற்பனைகள், வீரியம் (ஆற்றல்) மற்றும் பெளத்த பக்தர்களின் நீண்டகால நம்பிக்கைகள் ஆகியவை புத்தரின் உன்னத தர்ம கோட்பாடுகளில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பொய்களை கலக்க காரணமாகின. அவை களையப்பட வேண்டியவை. அவற்றைக் களைவது நன்மைபயக்கும்.

189. இத்தகைய திரிபுகளை கண்டடையும்போது அக்கறையுள்ள உண்மையான பௌத்தர் ஒருவரின் விருப்பம் என்னவாக இருக்கவேண்டும்?

ஒரு உண்மையான பௌத்தர் உண்மையிலிருந்து பொய்களை கண்டறிந்து களையவோ அல்லது களைவதற்கு உதவவோ எந்நேரமும் தயாராக இருக்கவேண்டும், அவரால் இயலுமானால். சங்கத்தின் மூன்று பேரவைகள் புத்தரின் போதனைகளில் உள்ள தவறான திரிபுபட்ட இடைச்செருகல்களை களைவதற்காக நடத்தப்பட்டுள்ளன.

190. எப்போது?

முதலாவது பேரவை சட்டப்பண்ணி குகையில் சரியாக புத்தரின் இறப்புக்கு பிறகு நடத்தப்பட்டது. இரண்டாவது வைசாலியிலுள்ள வலுகராமாவில். மூன்றாவது புத்தரின் மறைவுக்குப்பின் 235 ஆண்டுகள் கழிந்து பாடாலிபுத்திரத்திலுள்ள அசோகரம விகாரத்தில் நடந்தது.

191. எந்த பிரசங்கத்தில் இத்தகைய திரிபுகள் உண்மையான கோட்பாடுகளில் கலப்பதை நாம் எதிர்கொள்ள நேரிடும் என புத்தரே எச்சரிக்கிறார்?

சம்யுத்த நிகாயத்தில்

192. பௌத்தத்தில் வரட்டு நம்பிக்கை ஏதேனும் உள்ளதா? இருப்பின் அதை நம்பி ஏற்கவேண்டுமா?

இல்லை. நாங்கள் எந்த நம்பிக்கையும் அது நூல்களில் இருந்தாலோ அல்லது எங்கள் முன்னோர் சொல்லியிருந்தாலோ அல்லது ஞானிகள் சொல்லியிருந்தால் கூட ஏற்க வேண்டாம் என அக்கறையுடன் கட்டளையிடப்பட்டுள்ளோம்.

193. அது புத்தரே கற்பித்த உன்னத விதியா?

ஆம். ஒரு விஷயம் சொல்லப்பட்டிருப்பதாலேயே வெறுமனே அதை நம்பக்கூடாது; மரபை நம்பக்கூடாது, அது தொன்மையான காலத்தில் இருந்து தொடர்ந்து கையளிக்கப்பட்டு வருபவை; அது போன்று பரவிய பொய்களையும் நம்பக்கூடாது; ஒரு முனிவர் ஒன்றை எழுதிவிட்டார் என்பதாலேயே வெறுமனே அதை நம்பக்கூடாது; நமக்கு ஏற்படும் ஆன்மீக உளமயக்கம் ஒரு தேவனின் தூண்டுதலால் அளிக்கப்பட்டது என நாம் நினைத்து அதையும் நம்பக்கூடாது; நம்முடைய அரைகுறை ஊகங்களால் நாம் உருவாக்கும் அனுமானங்களை நம்பக்கூடாது; ஒப்பாய்வு செய்த முடிவுகளை நம்பக்கூடாது; நமது ஆசிரியர் என்பதால் அவர் சொல்லியவற்றை வெறுமனே நம்பக்கூடாது என்கிறார் புத்தர். 

194. அப்படியானால் எப்போதுதான் நம்புவது?

எழுதப்பட்ட அல்லது கேட்கப்பட்ட கோட்பாடுகள் நமது தர்க்க அறிவிற்கும் பிரக்ஞைக்கும் உடன்படும்போது நாம் நம்பலாம். இவ்வாறு சொல்லி அவர் நிறைவுசெய்தார்: “நீங்கள் கேட்டுவிட்டதாலேயே அதை வெறுமனே நம்புங்கள் என நான் உங்களுக்கு கற்பிக்கவில்லை. பிரக்ஞைபூர்வமாக உங்களுக்குள் நீங்களே உணரும் போது நம்புங்கள், பின்னர் அதற்கேற்ப செயல்படுங்கள்” 

(பார்க்க: அங்குத்தர நிக்கயத்திலுள்ள கலம சூத்திரம் மற்றும் மஹா பரிநிர்வாண சூத்திரம்)

195. புத்தர் தன்னை என்னவாக அறிவித்துகொள்கிறார்?

தானும் மற்ற எல்லா புத்தர்களும் பாதையை சுட்டிக்காட்டும் உண்மையின் பரப்பாளர்கள் மட்டுமே என அறிவிக்கிறார். பயணிப்பதற்கான முயற்சியை நாம்தான் செய்ய வேண்டும் என்கிறார்..

196. இது எங்கே சொல்லப்பட்டுள்ளது?

தம்மபதம். அத்தியாயம் இருபது.

197. பௌத்தம் வெளிவேடத்தை எவ்வாறு எதிர்கொள்கிறது?

தம்மபதம் “செய்கையில் காட்டாமல் ஒருவன் மதுரமாக மட்டும் பேசுவது, வாசனையற்ற அழகிய வண்ண மலர்போல பயனற்றவை” என்கிறது. (தம்மபதம் 4 - 51)

198. தீமைக்கு தீமை செய் என்று பௌத்தம் கற்பிக்கிறதா?

தம்மபதத்தில் புத்தர் “ஒரு மனிதன் தனது மூடத்தனத்தால் எனக்கு தவறிழைக்கும் போதும் அவருக்கு என்னுடைய உட்பகையில்லாத அன்பான பாதுகாப்பையே திருப்பித்தருவேன். எத்தனை தீமை அவரிடமிருந்து வருகிறதோ அதற்குமேலான நன்மை என்னிடமிருந்து செல்லும்” இதுவே அராகதர்களின் பாதை. தீமைக்கு தீமை பௌத்தத்தில் நேர்மறையாக விலக்கபட்டுள்ளது.

199. பௌத்தம் இரக்கமின்மையை ஊக்குவிக்கிறதா?

நிச்சயமாக இல்லை. ஐந்து கட்டளைகள் மற்றும் அவருடைய பல பிரசங்கங்களிலும் எல்லா உயிர்களிடத்தும் கருணையுடன் இருக்குமாறும், அவைகளை மகிழ்விக்கவும் அன்புடன் இருக்கவும் கற்பிக்கிறார். மேலும் உயிர் கொலை, அதற்கு துணைநிற்பது, அதை ஊக்குவிப்பது முதலானவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் புத்தர் கூறுகிறார்.

200. எந்த பிரசங்கத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது?

தம்மிக சூத்திரம் சொல்கிறது: “அவன் (இல்லறத்தான்) எந்த உயிரை அழிக்கவும் அல்லது அதன் அழிவிற்கு காரணமாகவும் வேண்டாம், அப்படி செய்பவரின் செயலை அனுமதிக்கவும் வேண்டாம். அவன் எந்த உயிருக்கும் ஊறுசெய்யவும் வேண்டாம்.”

201. மதுமயக்கத்தை அங்கீகரிக்கிறதா?

அவருடைய தம்மிக சூத்திரத்தில் நாங்கள் மது அருந்துவதற்கும், மற்றவர்களை அருந்த தூண்டுவதற்கும், அருந்துபவரின் பழக்கத்தை அனுமதிப்பதற்கும் எதிராக எச்சரிக்கப்பட்டுள்ளோம். பஞ்சசீலத்தின் ஐந்தாவது சீலமும் இதை குறிப்பிடுகிறது. 

202. மதுபழக்கம் நம்மை எங்கே இட்டுச்செல்லும் என சொல்லப்பட்டுள்ளது?

தரக்குறைவு, குற்றம், பிறழ்வு மற்றும் அறியாமை - இதுவே மறுபிறப்பிற்கான முக்கிய காரணம்.

203. திருமணம் குறித்து பௌத்தம் என்ன கற்பிக்கிறது?

முழுமையான தூயஒழுக்கம் அல்லது பிரம்மச்சர்யம் நிறைவான ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும் ஒரு பெண்ணுடனான திருமணமும் அவளுக்கு உண்மையாக இருப்பதும் ஒரு விதமான ஒழுக்கமாகவே கருதப்படும். பலதார மணங்கள் புரிவது அறியாமை மற்றும் காமத்தை உள்ளடக்கிருப்பதால் புத்தர் அதை பழிக்கிறார்.

204. எந்த பிரசங்கத்தில்?

அங்குத்தர நிக்காயம், அத்யாயம் 4, 55.

205. பிள்ளைகளிடத்து பெற்றோர்களின் கடமை என்னவென்று பௌத்தம் கற்பிக்கிறது?

தீயஒழுக்கங்களிலிருந்து அவர்களை காக்கவேண்டும், நல்லொழுக்கங்களை பழக்க வேண்டும், கலை மற்றும் அறிவியல் கற்க செய்யவேண்டும், பொருத்தமான துணையை தேடித்தரவேண்டும், அவர்களின் வழியுரிமையை கொடுக்க வேண்டும்.

206. பிள்ளைகளின் கடமையென்ன?

பெற்றோரின் முதுமைப் பருவம் மற்றும் அவர்களுக்கு உதவிதேவைப்படும்போது உடனிருந்து உதவுதல், நியமிக்கபட்ட குடும்ப பொறுப்புகளை ஏற்றுநடத்துதல், குடும்ப சொத்துகளை பாதுகாத்தல், பெற்றோரின் வாரிசுகளாக தங்களை தகுதிப்படுத்திகொள்ளுதல், அவரின் மறைவுக்குப்பின் அவர்களை நன்மதிப்புடன் நினைவுறுதல்.

207. ஆசிரியரிடம் மாணவர்களின் கடமை என்ன?

அவருக்கு மரியாதையளித்தல், அவரின் தேவைகளை கவனித்தல், கீழ்ப்படிதல், அவரின் அறிவுரைகளை கேட்டுநடத்தல்.

208. மனைவியிடம் கணவனின் கடமையென்ன?

அவளை மகிழ்வித்தல், அவளை மரியாதையுடனும் அன்புடனும் நடத்துதல், அவளுக்கு உண்மையாய் இருத்தல், அவளை பிறர் போற்றும்படி செய்தல், அவளுக்கு தகுந்த நகைகள் மற்றும் துணிகள் வாங்கித்தருதல்.

209. கணவனிடம் மனைவியின் கடமையென்ன?

அவனுடன் நேசமாக இருத்தல், இல்லறத்தை சரியாக ஒழுங்குபடுத்துதல், விருந்தினரை உபசரித்தல், ஒழுக்கமாக இருத்தல், சிக்கனமாக இருத்தல், எல்லாவற்றிலும் திறமையும் சுறுசுறுப்பும் காண்பித்தல்.

210. எந்த சூத்திரத்தில் இந்த விதிகள் கற்பிக்கபட்டன?

சிகலோவாடா சூத்திரம்

211. மனிதனின் எதிர்கால மகிழ்ச்சிக்கு செல்வங்கள் உதவுமா?

தம்மபதம் சொல்கிறது “ஒரு பாதை செல்வத்திற்கும் இன்னொரு பாதை நிர்வாணத்திற்கும் இட்டுசெல்கிறது”. (தம்மபதம் 5 - 75)

212. அப்படியென்றால் எந்த செல்வந்தனும் நிர்வாணம் அடையமுடியாதா?

அவர் எதை அதிகம் விரும்புகிறார் என்பதை பொறுத்தது. அவருடைய செல்வத்தை துயருற்றவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், அறியாமையிலிருப்பவர் என மானுட நன்மைக்காக உபயோகித்தால் அவரது செல்வம் அவருக்கு மதிப்பை பெற்றுத்தரும்.

213. அவர் செல்வத்தை விரும்பினால்?

அவர் செல்வத்தை விரும்பி அதை பேராசையுடன் பதுக்கி கையகப்படுத்தினால் அது அவரின் அறவுணர்வை நலியச்செய்து தீமையை தூண்டி இந்த வாழ்வில் பெரும்சாபத்தைக் கொண்டுவரும், அதன் விளைவுகள் அவரின் அடுத்த பிறப்பிலும் உணரப்படும்.

214. அறியாமையைப் பற்றி தம்மபதம் என்ன சொல்கிறது?

அந்த அழுக்கு ஒரு மனிதன் தன்மேல் போட்டுக்கொள்ளும் அனைத்து அழுக்குகளில் மிக மோசமான அழுக்கு. (தம்மபதம் 18 - 243)

215. மற்றவர்களிடம் காட்டும் கடுமையை பற்றி பௌத்தம் என்ன சொல்கிறது?

மற்றவர்களின் தவறுகளை எளிதாக கண்டுகொள்ளலாம், ஆனால் ஒருவர் தன்னுடைய தவறுகளை தானே காண்பது சிரமம். மனிதன் தன் சுற்றத்தாரின் தவறுகளை உமியை புடைத்து களைவதுபோல கண்டுவிடுகிறான், ஆனால் தன்னுடைய தவறுகளை சூதாட்டத்தில் சூதாடியிடமிருந்து அதிர்ஷ்டமில்லாத சீட்டை மறைப்பதுபோல் தந்திரமாக மறைத்துவிடுகிறான் என்கிறது.

216. இல்லாதவர்களுக்கு மனிதன் செய்யக்கூடிய கடமைகள் பற்றி புத்தர் நமக்கு கூறும் அறிவுரை என்ன?

அவர் மனிதனின் மொத்த வருமானமும் நான்காக பிரிக்கப்பட்டு அதில் ஒரு பங்கு முழுமையாக தர்ம காரியங்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்கிறார்.

217. எந்த ஐந்து தொழில்கள் மிகவும் தாழ்ந்த மற்றும் கீழானவை என்று சொல்லப்படுகிறது?

மது விற்பனை, கொல்வதற்கு விலங்குகளை வளர்த்து விற்றல் மற்றும் விஷம், கொலைக்கருவிகள், அடிமைகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய தொழில்கள்.

218. யாரெல்லாம் ஆன்மீக வளர்ச்சியடைய திறனற்றவர்கள்?

பெற்றோர் மற்றும் புனித அராகதர்களை கொன்றவர்கள், சங்கத்திற்குள் வேற்றுமையை விதைக்கும் பிக்குகள், புத்தரை ஒத்த மனிதரை காயப்படுத்துதல், எதிர்கால இருத்தலின்மீது தீவிர மறுப்புவாத கொள்கையுடையோர் மற்றும் தீவிர புலனின்பநாட்டம் உடையவர்கள்.

219. தீய மனிதர்களின் கர்மவினை அவர்கள் இவ்வுலக வாழ்வை நீங்கியபின் அவர்களை இட்டுச்செல்லும் இடம் பற்றி அல்லது அவர்களை வதைக்கும் நிலைகள் பற்றி பௌத்தம் குறிப்பிடுகிறதா?

ஆம். அவை: சஞ்சிவா, கலசுத்ரா, சங்கதா, ரெளரவா, மஹா-ரௌரவ தபம், பிரதாபா, அவிச்சி.

220. அந்த வதை முடிவில்லாததா?

நிச்சயமாக இல்லை. அதன் காலம் ஒருவரின் கர்மவினையின் அளவை பொருத்தது.

221. புத்தரின் மீது நம்பிக்கையற்றவர்கள் அவர்களது அவநம்பிக்கையின் பொருட்டு முடிவில்லா தண்டனைக்குரிய நரகத்தில் வருந்துவர் என பௌத்தம் அறிவிக்கிறதா?

இல்லை. நற்செயல்களின் விழைவால் அவர்கள் சிறிதுகாலம் மகிழ்ச்சியாய் வாழக்கூடும். ஆனால் அவர்களின் தணியாத தன்ஹா (வேட்கை) மீண்டும் மறுபிறப்பை கொண்டுவரும். மறுபிறப்பிலிருந்து மீள ஒருவர் கண்டிப்பாக அஷ்டாங்க மார்க்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

222. பௌத்தர்கள் மத்தியில் பெண்களின் ஆன்மீக நிலையென்ன?

எங்கள் மதத்தை பொறுத்தவரை பெண்கள் ஆண்களுக்கு சமமாக நிற்கக்கூடியவர்கள். சுல்லவேதலா சூத்திரத்தில் புத்தர் சொல்கிறார் “ பெண் ஆணுக்கு சாத்தியமான உயர்ந்த புனிதத்தன்மையான அராகதர் தன்மையை அடையக்கூடும்”.

223. பெண்கள் மீது பௌத்தம் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி ஒரு நவீன விமர்சகர் என்ன சொல்வார்?

“வேறெந்த சமயத்தைவிடவும் பௌத்தம் பெண்களுக்கு மகிழ்ச்சியையும் உரிமையையும் அளித்துள்ளது” என்கிறார் சர் லெபெல் கிரீஃபின் (Sir Lepel Griffin)

224. சாதியை பற்றி புத்தர் என்ன கற்பித்தார்?

செயலாலன்றி பிறப்பின் அடிப்படையில் ஒருவர் சாதியை அடைவதில்லை, அது தாழ்ந்தநிலையிலுள்ள பறையரானாலும் அல்லது மேலுள்ள பிராமணனானாலும். அவர் சொல்கிறார் “செயலின் மூலமாகவே ஒருவன் தாழ்ந்தநிலை அடைகிறான், செயலின் மூலமாகவே ஒருவன் பிராமணனாகிறான்” 

(பார்க்க வாஸ்ஸலா சூத்திரம்).

225. இதை விளக்கும் ஒரு கதையை சொல்லுங்கள்?

புத்தரின் சீடர் ஆனந்தர் கிணற்றோரமாக நடந்து செல்கையில் தாகம் ஏற்பட்டு அங்கிருந்த மாதங்கா என்ற தாழ்ந்த சாதி பெண்ணிடம் தண்ணீர் தர கேட்டார். அந்த பெண் தான் தாழ்ந்த சாதியென்றும் தன்னிடம் நீர் பெறுவதால் அவர் அசுத்தம் அடையக்கூடும் என்று சொன்னாள். அதற்கு ஆனந்தர் “நான் உன் சாதியை கேட்கவில்லை தண்ணீர்தான் கேட்டேன்” என்றார். அப்பெண் மனமகிழ்ந்து அவருக்கு அருந்த நீர் கொடுத்தாள். புத்தர் அச்செயலுக்கு அவளை வாழ்த்தினார்.

226. வாஸ்ஸலா சூத்திரத்தில் புத்தர் தாழ்ந்த குலத்தை சேர்ந்த சோபகாவை பற்றி என்ன சொல்கிறார்?

சோபகா தனது நற்செயல்களால் உச்ச புகழ்பெற்றார், சத்திரியர்களும், பிராமணர்களும் அவருக்கு சேவை செய்தனர். அவருடைய இறப்புக்குப்பின் பிரம்மலோகத்தில் பிறந்தார். மற்றொருபுறம் பல பிராமணர்கள் தீசெயல்களால் நரகத்தில் பிறந்தனர்.

227. ஆன்மாவின் அழிவின்மையை பௌத்தம் கற்பிக்கிறதா?

“ஆன்மா” - பொய்யான ஒரு கருத்தை குறிப்பிட அறிவிலிகளால் பயன்படுத்தப்படும் சொல் அது ன்கிறது பௌத்தம். அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டது. அப்படியென்றால் அதில் மனிதனும் அடங்குவான், அவனுடைய எல்லா பௌதிக பகுதிகளும் மாற்றத்திற்கு உட்படவேண்டும். எது மாறுதலுக்கு உட்பட்டதோ அது நிரந்தரமானதல்ல, ஆதலால் மாறுகின்ற பொருளிலிருந்து எஞ்சுகின்ற அழியாத தன்மை கொண்ட எதுவும் இல்லை. 

(ஆன்மாவிற்கு இணையான கிரேக்க சொல்லான ‘சூக்கி’ (Psuche) என்பதும் இங்கு விமர்சிக்கப்படுகிறது.)

228. ”ஆன்மா” எனும் சொல்லில் அப்படியென்ன ஆட்சேபனை?

மனிதன் பிற எல்லாவற்றிலிருந்தும் பிரபஞ்சத்தின் மொத்த இருப்பிலிருந்தும் தனித்தது என்னும் கருத்து அதில் அடங்கியுள்ளது. இந்த தனியிருப்பு கருத்து பகுத்தறிவிற்கானது அல்ல, தர்க்கத்தால் நிரூபிக்க கூடியது அல்ல, அறிவியலுக்கு ஏற்றதல்ல.

229. அப்படியானால் தனியான “நான்” அல்லது ”எனது” என்று எதுவும் இல்லையா?

ஆம் மிகச்சரியாக.

230. தனிப்பட்ட மனித ”ஆன்மா” என்னும் கருத்து நிராகரிக்கப்பட வேண்டுமென்றால், எது மனிதனில் அவன் ஒரு நிரந்தரமான ஆளுமை என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது?

தன்ஹா அல்லது இருத்தலின்மீது நிறைவுறாத ஆசை அல்லது வேட்கை. இதன் மூலம் அவ்வுயிர் எதிர்காலத்தில் வெகுமதிக்கோ தண்டனைக்கோ நிச்சயமாக உட்படுத்தப்படும். தன்ஹாவை கொண்டிருப்பதால் அவ்வுயிருக்கு கர்மவினைகளின் தாக்கத்தின் மூலம் மறுபிறப்பு கிடைக்கும்.

231. எது பிறப்பெடுக்கிறது?

இறக்கும் மனிதனில் கடைசியாக தோன்றும் எண்ணங்களால் ஏற்படும் புதிய ஆளுமை அல்லது ஸ்கந்தங்களின் சேர்க்கை.

232. எத்தனை ஸ்கந்தங்கள் உள்ளன?

ஐந்து.

233. அவைகளின் பெயரென்ன?

ரூபம், வேதனா, சன்னா, சம்கரா மற்றும் விஞ்ஞான.

234. சுருக்கமாக அவைகளை விளக்குங்கள்?

  1. ரூபம் - பௌதிக குணங்கள்
  2. வேதனா - உணர்வு
  3. சன்னா - அருவ கருத்துக்கள்
  4. சம்காரா - மனப்போக்கு
  5. விஞ்ஞானம் - மனோபலம் அல்லது பிரக்ஞை. 

இவைகள் மூலமே நாம் உருவாகிறோம். இதன் மூலமே இருத்தலை உணர்கிறோம், உலகுடன் நம்மைபற்றி தொடர்பேற்படுத்துகிறோம்.

235. மற்ற தனிஉயிர்களிடம் இருந்து ஒவ்வொரு தனிஉயிரையும் வேறுபடுத்தி உருவாக்குவது ஐந்து ஸ்கந்த கலவைகளின் மாறுபாடு. இந்த ஸ்கந்த கலவை மாறுபாட்டிற்கு காரணமாவது எது?

தனிஉயிர் ஒன்றுடைய முற்பிறப்புகளின் கர்மா.

236. கர்மத்தின் வழிக்காட்டலுடன் புது உயிர்களை பிறப்பிக்கும் விசையாற்றல் எது?

தன்ஹா - இருத்தலுக்கான விழைவு.

237 எதனடிப்படையில் மறுபிறப்பு கோட்பாடு நிறுவப்பட்டது?

தர்மம், சமவயம், இணக்கம் ஆகியவை இயற்கையின் பிரபஞ்ச அமைப்பிலேயே உள்ளடங்கியுள்ளது என்னும் பார்வையில் இருந்து நிறுவப்பட்டது. ஒரு மனிதனின் செயல்களுக்குண்டான வெகுமதி அல்லது தண்டனையை தீர்ப்பதற்கு ஒரு பிறவி போதும் என பௌத்தர்கள் நம்பவில்லை, அந்த பிறவி நூறு வருடங்கள் அல்லது ஐநூறு வருடங்கள் நீடித்தாலும்கூட போதாது. மாபெரும் மறுபிறப்புச்சுழற்சி ஒரு தனிஉயிருடைய வாழ்க்கைகளின் தூய அல்லது தூய்மையற்ற செயலுக்கேற்ப விரைவாகவோ அல்லது மெதுவாகவோ கடந்துசெல்லும்.

238. ஸ்கந்தங்களின் புதிய சேர்க்கையுடன் அதாவது புதிய ஆளுமையுடன் பிறப்பெடுக்கும் உயிர் முற்பிறவியின் அதே உயிர்தானா? முற்பிறவியின் தன்ஹாவே அந்த உயிரை மீண்டும் இருப்புக்கு கொண்டுவருகிறது, ஆகவே பிறப்பெடுப்பது அதே உயிரா?

ஒரு விதத்தில் ’புது உயிர்’, வேறொரு விதத்தில் ’புது உயிர் அல்ல’. பாலியில் இதை “நச்சா ஸோ நச்சா அந்நோ” என்பார்கள், இதற்கு அர்த்தம் “அதுவல்ல அதுவல்லாததும் அல்ல”. இந்த வாழ்கையில் ஸ்கந்தங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. உளவியல் சார்ந்து சொல்வதென்றால், மனிதனின் உடல் ஒவ்வொரு ஏழு வருடங்களுக்கு ஒருமுறை முழுவதுமாக மாறுகிறது. நாற்பவதாவது வயதில் ஒருவர் தன்னுடைய தனித்தன்மையில் தன் பதினெட்டு வயது இளம்பருவத்தை ஒத்திருந்தாலும், உடலின் தொடர்ச்சியான வளர்சிதை மாற்றங்களாலும் மனம் மற்றும் குணங்களின் மாற்றங்களாலும் அவர் ஒரு புதிய உயிர்தான். எப்படி ஒருவர் தன்னுடைய முதிய வயதில் தன்னுடைய முந்தைய கால செயல்கள் மற்றும் எண்ணங்களின் விளைவாக துயரத்தை பெறுகிறாரோ, அதுபோலவே மறுபிறப்பெடுக்கும் புதிய உயிர் முந்தைய உயிர்தான் என்றாலும் புது உருவில் அல்லது புது ஸ்கந்தங்களின் சேர்க்கையில் முற்பிறப்பின் செயல்கள் மற்றும் எண்ணங்களின் விளைவுகளை அனுபவிக்கும்.

239. ஆனால் முதிய மனிதன் உடல் மற்றும் மன மாற்றங்களுக்கிடையில் அவருடைய இளமை பருவ நிகழ்வுகளை நினைவுகூற முடிகிறது. பின்னர் ஏன் நம்முடைய முந்தைய பிறப்புகளின் நினைவுத்தொகுப்பு இப்பிறப்பிற்கு கடத்தப்படவில்லை?

ஏனென்றால் நினைவுகள் ஸ்கந்தங்களுக்குள் அடங்கியுள்ளன. புது பிறப்பில் ஸ்கந்தங்கள் மாற்றமடைந்துள்ளதால் புதிய நினைவுத்தொகுப்பும் அதனை சார்ந்த பதிவுகளும் மட்டுமே வளர்ச்சியுறும். எனினும் இப்புவி வாழ்கையின் முந்தய பதிவுகள் அனைத்து எஞ்சியிருக்கும். இளவரசன் சித்தார்த்தன் புத்தனானபோது அவருடைய முந்தைய பிறப்புகளின் தொடர்வரிசையை காணமுடிந்தது. முந்தைய நிகழ்வுகளின் தடம் இல்லையேல் அவரால் காண்பதற்கு எதுவுமே இருந்திருக்காது. தியானத்தின் நான்காம் நிலையை (மனதை உள்நோக்கி காணும் நிலை) அடையும் எவரும் தங்களின் முற்பிறவி தொடர்ச்சியை காணமுடியும்.

240. இப்படி தொடர்ந்து மாற்றமடையும் உருவங்களின் அறுதி குறிக்கோள் என்ன?

நிர்வாணம்.

241. நிர்வாணம் அடையும் எண்ணத்துடன் நாம் நற்செயல்கள் செய்யவேண்டும் என பௌத்தம் கற்பிக்கிறதா?

இல்லை. பணம், பதவி அல்லது புலனின்பத்திற்கான எதிர்பார்ப்பை போல இந்த எண்ணமும் முழுமையான சுயநலம்தான். நிர்வாணம் இவ்வகையில் அடைய முடியாதது, இவ்வாறு எதிர்பார்க்கும் அறிவிலி ஏமாற்றமே அடைவார்.

242. இதை மேலும் தெளிவுபடுத்துங்களேன்?

நிர்வாணம் தன்னலமற்ற சொல்லுக்கு நேர்பொருளாகும், அனைத்து சுயநல நாட்டமும் உண்மையிடம் சரணடைதல். அறியாமையால் மனிதன் அதன் இயல்பறியாமல் நிர்வாண இன்பமடைய ஆசைப்படுகிறான். சுயநலமின்மையே நிர்வாணம். புத்தர் கட்டளையிட்ட உன்னத வாழ்க்கை நல்லதை செய்து வெகுமதிகளை எதிர்பார்க்கவோ அல்லது புனித வாழ்வின் வழியாக சொர்க்கலோக மகிழ்ச்சியை அனுபவிக்க அல்ல. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உன்னத வாழ்வு வாழப்படவேண்டும் அதுவே உயர்ந்த வாழ்வு. உலகில் வாழும்போதே ஒருவர் நிர்வாண நிலையை அடையமுடியும்.

243. முன்னேற்ற பாதையிலுள்ள பத்து மாபெரும் தடைகள் அல்லது சன்யோஜனம் என்னும் தடங்கல்கள் என்னென்ன?

  1. சுய அடையாளக் காட்சிகள் - சக்காயா தித்தி
  2. நிச்சயமற்ற தன்மை, சந்தேகம் - விசிகிச்சா
  3. கட்டளைகள், நடைமுறைகள், மூடநம்பிக்கைகளை பற்றிக் கொள்ளுதல் - சிலப்பத பரமாசம்
  4. புலன் மற்றும் உடல் இன்பங்கள் - காம ராகம்
  5. வெறுப்பு, நோய்மை உணர்வுகள், எதிர்ப்பு - வியாபாதா
  6. உலகவாழ்வுக்கான ஆசை - ரூப ராகம்
  7. சொர்கலோக வாழ்வுக்கான ஆசை - அரூப ராகம்
  8. அகந்தை - மானா
  9. தன்நேர்மையுணர்வு - உத்தக்கா
  10. அறியாமை - அவிஜ்ஜா (அவித்யை)

244. அராகதர் ஆவதற்கு இதில் எத்தனை தடைகளை கடக்க வேண்டும்?

அனைத்தும்.

245. ஐந்து நிர்வாரனங்கள் அல்லது இடையூறுகள் என்ன?

பேராசை, காழ்ப்பு, மந்தம், செறுக்கு மற்றும் சந்தேகம்.

246. ஏன் புத்தர் கற்பித்தவைகளில் உணர்வுகள், ஆன்மீக தூண்டுதல்கள், மனதின் செயல்பாடுகள், தடைகள் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுபவை போன்றவைகளின் மிக நுட்பமான பிரிவுகள் அதிகம் வருகின்றன? இது புதியவரை மிகவும் குழம்பச்செய்கிறது.

இது நமக்கு நம்மை பற்றிய அறிவை அடைய உதவும், எல்லா தளங்களிலும் ஆழ்ந்து சிந்திக்க நம் மனதை பழக்குவதன் வழியாக இதை அடையலாம். இந்த சுயபரிசோதனை முறையை பின்பற்றுவதன் மூலம் நாம் இறுதியாக அறிவை அடைகிறோம், உண்மையை உள்ளது உள்ளபடி காண்கிறோம். இதுவே ஒவ்வொரு சிறந்த ஆசிரியரும் தங்களுடைய சீடர்களின் மனம் வளர்ச்சியடைய முன்வைக்கும் பாடத்திட்டமாகும்.

247. புத்தருடைய நேரடி சீடர்களில் எவ்வளவு பேர் தங்களின் மேம்பட்ட குணங்களுக்காக புகழ்பெற்றவர்கள்?

எண்பது சீடர்கள் அவ்வாறு தனித்துவம் வாய்ந்தவர். அவர்கள் ’அஸிதி மஹா சாவகர்கள்’ எனப்படுகின்றனர்.

248. புத்தரின் ஞானம் எத்தகையது?

அவருக்கு அறியக்கூடியவை மற்றும் அறிய இயலாதவைகளின் இயல்பு தெரியும். சாத்தியமானவை மற்றும் சாத்தியமற்றவை தெரியும். தகுதி மற்றும் தகுதியின்மையின் காரணமும் தெரியும். உயிர்களின் எண்ணங்களை அவரால் படிக்க இயலும். இயற்கையின் விதிகளை, புலன்களின் மயக்கத்தை அறிந்தவர். ஆசைகளை கட்டுக்குள் வைக்கவும் தெரிந்தவர். தனிமனிதர்கள் மற்றும் எல்லா உயிர்களின் பிறப்பையும் மறுபிறப்பையும் வேறுபடுத்தி அறியக்கூடியவர்.

249. ஒட்டுமொத்தமாக புத்தர் கற்பித்தவை எந்த அடிப்படை கொள்கையை அடித்தளமாக கொண்டு ஒட்டி கட்டி எழுப்பப்பட்டது?

அது பிரதித்ய சமுத்பாதா.

250. அது எளிதாக உள்வாங்ககூடியதா?

அது மிகவும் கடினமானது. உண்மையில், அதன் முழு அர்த்தமும் விரிவும் சரியாக பக்குவப்படாத மனதின் திறனுக்கு அப்பாற்பட்டது. 

251. மகத்தான உரையாசிரியர் புத்தகோஷர் அதைப்பற்றி என்ன சொன்னார்?

இந்த விரிந்த சிந்தனை கடலில் அவர் கடலின் நீரோட்டங்களில் அடித்து செல்லப்படுவதுபோல கைவிடப்பட்ட நிலையிலிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

252. பின்னர் ஏன் புத்தர் பரிநிபாண சூத்திரத்தில் “ஒரு ஆசிரியர் தன் கைக்குள் எதையும் ஒளித்துக்கொள்வதில்லை, தனக்கு பின்னால் எதையும் மறைத்து வைப்பதில்லை” என்று சொன்னார்? அவர் கற்பித்தவை அனைத்தும் எல்லோருக்குமானது மற்றும் யாராலும் உள்வாங்க கூடியது என்றால், ஏன் மகத்தானவரும் நன்கு கற்றவருமான புத்தகோஷ் அந்த சிந்தனை உள்வாங்க கடினமானது என அறிவிக்கவேண்டும்?

இதில் புத்தர் தான் கற்பித்தவைகள் அனைத்தும் எல்லோருக்குமானது என வெளிப்படையாக சொல்கிறார். அதேசமயம் இதற்கு இணையாகவே, தர்மத்தின் மெய்யான உள்ளடுக்குகளை தன்னுடைய அறிதல் திறனை நிறைவாக வளர்த்தெடுதவராலேயே புரிந்துகொள்ளமுடியும் என்று சொன்னதும் நிஜமே. ஆகையால் சராசரிகளாலும் அகஒளியில்லாதவர்களாலும் அதை புரிந்துகொள்ள முடியாது.

253. புத்தர் கற்பித்தவைகள் இந்த கண்ணோட்டத்தை எப்படி ஆதரிக்கிறது?

புத்தர் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் நன்கறிந்து, கேட்பவரின் தனிப்பட்ட குணத்திற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் ஏற்றவாறே போதித்தார்.

அடிக்குறிப்பு:

கர்மம்: கர்மம் என்பது ஒரு மனிதனுடைய செயல்களின் ஒட்டுமொத்தம். காரண-காரிய விதி ‘பிரதித்ய சமுத்பாத தர்மம்’ என அழைக்கப்படுகிறது. அங்குதார நிகயத்தில் புத்தர் "என்னுடைய செயல்களே என்னுடைய உடமை; என்னுடைய செயல்களே என்னுடைய வழியுரிமை; என்னுடைய செயல்களே என்னை பெற்றெடுக்கும் கருவறை; என் செயலகளே என் உறவினர்; என் செயல்களே என் புகலிடம்" என்று கற்பிக்கிறார்.

அராகதர்கள்: அராகதர்கள் என்பவர்கள் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டம் வழியாக ஆன்மீகத்திலும் அறிவிலும் உச்சநிலையை அடைந்தவர்கள். அராகதர்களை பொதுவாக இரண்டாக பிரிக்கலாம் - சமதயானிகர்கள் மற்றும் சுக்க விபாசகர்கள். சமதயானிகர்கள் உணர்ச்சிகளை முற்றாக அழித்து அறிவு அல்லது மறைஞான உள்ளுணர்வை முழுமையாக வளர்த்துக்கொண்டவர்கள். சுக்க விபாசகர்கள் முழுமையான உணர்ச்சியை அடைந்தவர்கள், மன ஆற்றலை அவ்வளவாக அடையாதவர்கள். தீக நிகாயத்தில் புத்தர் இவ்வாறு சொல்கிறார் “சுபத்ரா, கேள்! இந்த உலகம் அராகதர்கள் இல்லாமல் இருக்காது, எனது சங்கத்திலுள்ள பிக்‌ஷுகள் எனது போதனைகளை சரியாகவும் உண்மையாகவும் கடைபிடித்தார்கள் என்றால்”.

பிரதித்ய சமுத்பாதா: இது பாலியில் நிதானா என அழைப்பக்கடுகிறது. இதற்கு காரணகாரிய தொடர் என்று பொருள். பன்னிரெண்டு நிதானங்கள் உள்ளன. அவை

  1. அவித்யா - அறியாமை
  2. சம்ஸ்காரா - காரணகாரிய செயல், கர்மம்
  3. விக்ஞானா - தன்னுணர்வு
  4. நாமரூபா - மன-உடல் தொகுப்பு
  5. சதாயதானா - ஆறு அறிவுகள்
  6. பாசா (ஸ்பர்ஷம்) - தொடர்பு, தொடுதல்
  7. வேதனா - உணர்ச்சி
  8. தன்ஹா - வேட்கை 
  9. உபாதனா - பற்று
  10. பாவா - இருப்பு
  11. ஜாதி - பிறப்பு
  12. ஜராமரணா - வயதடைதல், இறத்தல்

ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

தமிழில் - விஷ்ணுகுமார், தாமரைக்கண்ணன் அவிநாசி


ஹென்றி ஸ்டீல் ஆல்காட்


விஷ்ணுகுமார்

ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (ஆகஸ்டு 2, 1832 - பிப்ரவரி 17, 1909) எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் பிரம்மஞான சபையின் (Theosophical society) இணை நிறுவனர் ஆவார். பௌத்தை மீட்டுருவாக்கம் செய்தவர்களுள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

ஆல்காட் நியூயாரக் ட்ரைபியூன் (newyork tribune) செய்தித்தாளின் வேளாண்மை ஆசிரியராக 1858 முதல் 60 வரை பணிபுரிந்தார். பின்னர் கர்னல் பதவியுடன் அமெரிக்க போர் மற்றும் கடற்படை துறையில் சிறப்பு ஆணையராக 1863 - 66 வரை பணிபுரிந்தார். வழக்கறிஞராக 1966 முதல் பணிபுரிய தொடங்கினார். ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்க்ஸ்கி (Helena petrovna blavatsky), வில்லியம் ஜட்ஜ் (William q Judge) மற்றும் சிலருடன் இணைந்து 1875-ல் பிரம்மஞான சபை நிறுவி அதன் தலைமை ஏற்றார். 1878-ல் அவரும் பிளாட்வஸ்கியும் இந்தியா வந்தனர். 1879 முதல் இந்தியாவிலேயே வசிக்க முடிவுசெய்தனர். 1882-ல் பிரம்மஞான சபையின் நிரந்தர தலைமையகமாக சென்னை அடையாறில் நிலைப்படுத்தினர். அன்னி பெசன்டுடன் (Annie Besant) இணைந்து வாரணாசியிலுள்ள பெனாரஸில் இந்து கல்லூரி நிறுவ உதவினார். பெசன்டுடன் இணைந்து பிரம்மஞான சபையின் கருதுகோள்களை இந்திய மற்றும் இலங்கையில் நேரில் சென்று விளக்கினார்.  இலங்கை பௌதர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆல்காட் அவரது முயற்சியால் அங்கே மூன்று கல்லூரிகளும் முப்பதிமூன்று பள்ளிகளும் நிறுவ செய்தார். பௌதர்கள் மத்தியில் அவர் மிகுந்த செல்வாக்கும் வரவேற்பும் பெற்றார். கிழக்கத்திய தத்துவங்களுடன் நெருக்கமாக அறியப்பட்டாலும் இந்து தத்துவ புத்தூக்கத்திற்கும் தன் பங்களிப்பை அளித்துள்ளார். ஆல்காட் தனது 74-வது வயதில் சென்னையில் காலமானார்.

இக்கட்டுரை ஹென்றி ஸ்டீல் ஆல்காட் எழுதிய The Buddhist catechism (1891) என்ற உலக புகழ் பெற்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. வெளிவந்த நாள் முதல் பல  மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

https://www.britannica.com/biography/Henry-Steel-Olcott

https://en.wikipedia.org/wiki/Henry_Steel_Olcott

https://scroll.in/magazine/1047687/how-an-american-helped-revive-buddhism-in-sri-lanka-after-moving-to-india

Catechism என்பது கிறிஸ்துவத்தில் கேள்வி-பதில் வடிவில் மத நம்பிக்கைகளையும்  அதன் கொள்கைகளையும் கற்பிப்பதற்கு  பயன்படுத்தப்படும் நூல் வடிவம். இச்சொல் தமிழில் வினாவல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.