Sunday, 15 September 2024

ஆடல் 7, செவ்வேள் ஆடல் -கம்பப்பாடல்கள் , தாமரைக்கண்ணன் புதுச்சேரி

குக்கே சுப்ரமண்யர்

சூரசம்கார கூத்து

அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்
கந்திக் கடலிற் ...... கடிதோடா
அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
றஞ்சப் பொருதுற் ...... றொழியாதே
செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்
சென்றுற் றவர்தற் ...... பொருளானாய்
சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
செந்திற் குமரப் ...... பெருமாளே.

தனது சேனையை விட்டு கடலை தாண்டி சூரன் நகரான மகேந்திரபுரத்தில் தூது சென்று, அசுரர்கள் அஞ்ச போர் புரிந்து சிவந்த கிரணங்களை உடைய சூரியனை ஒத்து கடலிலிருந்து திரும்பி வந்த வீரபாகுவின் ஆவியான முருகா, பொழில் சூழ்ந்த செந்தூரில் உறையும் குமரா

(கொங்கைப் பணையிற் என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)

சங்கப் பாடல்களில் சொல்லப்பட்ட முருகனுக்கும் சூரனுக்கும் நடந்த போர் பக்தி மரபில் புகுந்து கோவில் பண்பாட்டின் ஒரு பகுதியாக, வருடாந்தர சடங்காக மாறிவிட்டது. தமிழகம், புதுச்சேரி, இலங்கை பகுதிகளில் நடத்தப்படும் சூரசம்கார விழா ஒன்றே போல இருப்பதில்லை அவற்றில் வேறுபாடுகள் உள்ளன. திருச்செந்தூர் ஷஷ்டி விழாவில், சம்காரம் ஒருநாள் மட்டும் நடைபெறுகின்றது என்றால் வேறு சில கோவில்களில் மூன்று நாட்களும், ஐந்து நாட்களும் சம்காரம் நடக்கிறது. இன்னும் சில இடங்களில் சம்காரம் ஐப்பசி சஷ்டியில் நடைபெறுவதில்லை, மாசி மாத ஷஷ்டியின் போது நிகழ்கின்றது. திருப்போரூரில் இரண்டு சம்கார விழாக்கள் நடைபெறுகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஷஷ்டி விழாக்கள் வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடப்படுகின்றன, ஆனி மாதத்தில், கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய ஷஷ்டி திதிகளை ஒட்டியும் விழாக்கள் நடைபெறுகின்றன. தென் கர்நாடகத்தின் புகழ்பெற்ற குக்கே சுப்ரமண்யர் ஆலயத்தில் கார்த்திகை மாத சம்ப ஷஷ்டியின் போது விழாவும் தேரோட்டமும் நடக்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிகழும் கந்த ஷஷ்டி விழாக்களில் நடக்கும் சூரசம்காரத்தை மூன்று வகையாக பகுத்து பார்க்கலாம். ஆலயத்தின் உற்சவ முருகன் சிலை மற்றும் சூரனின் பொம்மையை கொண்டு நடத்திக்காட்டப்படும் சம்கார நிகழ்வு, இன்னொன்று பக்தர்கள் மத்தியில் கதைப்பிரசங்கமாகவும் பாடல்களாகவும் போரையும் சூரனை முருகன் ஆட்கொண்டதையும் விளக்குதல், இவை இரண்டும் தனித்தனியாகவோ ஒன்றிணைந்தோ நிகழ்பவை. பெரும்பாலான கோவில்களில் இவற்றோடு விஷேஷ பூஜைகளும் நடைபெறுகின்றன. 

இறுதியாக வடதமிழகத்தில் மிகச்சில கோவில்களில் மட்டும் கந்த ஷஷ்டி விழாவில் சூரசம்காரம் கூத்தாகவும் ஆடப்படும். சூரன் வேடமிடுபவர்களும், நவவீரர்களாக வருபவர்களும் சேர்ந்து நடத்தும் நிகழ்வாக இது அமையும், முருகக்கடவுளின் உற்சவ மூர்த்தியே கூத்திலும் முருகனாக பிரவேசிப்பார். முருக வழிபாட்டுடனான இந்த நாட்டார் கூத்து மரபின் தொடர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ‘வடக்கிலிருந்து தமிழகம் மேல் நிகழ்ந்த படையெடுப்புகளால் பெருங்கோவில்கள் பாதிக்கப்பட்டன, கொள்ளையடிக்கப்பட்டன விழாக்கள் வழிபாடுகள் இல்லாமலாகின. ஆனால் நாட்டார் பண்பாட்டில் வழிபாடுகளும் கலைகளும் பெரும்பாதிப்புக்குள்ளாகவில்லை அவை எந்தவித அறுபடலுமின்றி தொடர்ந்தன’ என்கிறார் ஆய்வாளர் அ.கா.பெருமாள்.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

1.1 கந்தஷஷ்டி சம்கார கூத்து அறிமுகம்

தென்னாற்காடு பகுதியில் கந்த ஷஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் கூத்தாக நடைபெறுவதற்கும், சென்றபகுதியில் நாம் பார்த்த இலங்கையின் மட்டக்களப்பு சம்மார கூத்து நிகழ்வுக்கும் வித்தியாசங்களும் உண்டு. தொழில்முறை கூத்துக்கலைஞர்கள் நிகழ்த்துவது மட்டக்களப்பு சம்மாரக்கூத்து, இது மேடை நிகழ்வு. இதைத்தாண்டி குறிப்பிட்ட கோவிலுடன் மட்டும் இணைந்தது அல்லது சடங்குகளுடன் பிணைந்தது என்று கூற இடமில்லை. தமிழ்நாட்டு தெருக்கூத்தில் பெரும்பாலும் அங்காளம்மன் முதலிய பெண்தெய்வங்கள் சூரனை அழிக்கும் கூத்துக்கள் தான், அதிகம் ஆடப்படுகின்றன. 

ஷஷ்டி விழாவின் போது மட்டும் நடைபெறும் சூரசம்கார கூத்து அந்தந்த ஊரின் பொதுமக்கள் பங்கேற்புடன் நடைபெறுகின்றது, விழாவில் இந்தக்கூத்தை ஒட்டி கம்பம் ஏறுதல் என்ற சடங்கும் நடத்தப்படுகின்றது. இந்தச்சடங்கு இன்று அதிகபட்சம் பதினைந்து ஊர்களுக்கு மேல் வழக்கிலில்லை. முருகனது படைத்தலைவர்களான வீரபாகு மற்றும் அவரது சகோதரர்களான நவவீரர்கள் இந்த நிகழ்வில் முக்கிய இடம்பெறுகிறார்கள். அத்துடன் கந்தபுராண பாத்திரமான வஜ்ரபாகுவும் இந்த சடங்கின் மையமாக இருக்கிறான்.

கூத்தில் இடம்பெறுபவர்கள் அனைவரும் கடுமையான விரதம் மேற்கொள்கின்றனர். முருகனது துணைவர்களாக வருபவர்களுக்கு நவவீரர்கள் என்று பெயர். ஐதீகப்படி முருகனின் படைத்தலைவரான வீரபாகுவும் அவரது சகோதரர்களுமான ஒன்பது பேர் கூத்தில் இடம்பெறவேண்டும். இவர்களே முருகனது தரப்பில் கூத்தாடுபவர்கள், இவர்களுக்கு பெரிதாக ஒப்பனைகள் எதுவும் கிடையாது, வேட்டி அணிந்து திருநீறு பூசி கையில் வேல் ஆயுதம் ஒன்றை வைத்துள்ளனர். திருவிழாவின் போதும் சம்கார நிகழ்வின்போதும் இவர்கள் பூணூல் அணிகிறார்கள். மாறாக சூரன் வேடமிடுபவர்களுக்கு ஒப்பனை உண்டு, அவர்கள் தெருக்கூத்து பாணியில் அரிதாரம் பூசி, மகுடமும் புஜகீர்த்தியும் ஆடைகளும் அணிந்து கையில் கதையோ வாளோ ஏந்தி நிற்கிறார்கள். 

கூத்து என்று கூறினாலும் வழக்கமாக கூத்தில் இடம்பெறும் வாத்தியக்கருவிகள் இதில் இடம்பெறுவதில்லை. நவவீரர்களுக்கும் அசுரருக்கும் நடக்கும் தர்க்கமே முக்கிய இடம் வகிக்கின்றது. கூத்தின் மத்த உறுப்புக்களான கொலு, தாளக்கட்டுக்கள் இவற்றை காணமுடிவதில்லை. பாத்திரங்களை சுருக்கும் விதமாக இக்கதையில் இடம் வகிக்கும் நாரதர் உள்ளிட்டோர் அசுரரும் வீரரும் பேசும் வசனங்களில் மட்டும் வந்து போகின்றனர்.

கோவிலை சுற்றிலும் வெவ்வேறு இடங்களில் இந்த சம்கார நிகழ்வு நடக்கின்றது, ஆகவே களம் மாறிக்கொண்டேயிருக்கின்றது, நிலையான மேடை இல்லை. சூரனுடைய பொம்மை மற்றும் முருகனுடைய சிலைக்கு அருகாமையில் நின்று அந்தந்த தரப்பினர் பாடவும் வசனங்களை பேசவும் செய்கின்றனர். குறிப்பிட்ட தூரத்தில் இரு வண்டிகளும் ( சகடை ) நின்றுகொள்ள, நவவீரர்கள் அசுரர்கள் இந்த இடைவெளியில் மாறி மாறி முன்சென்றும் பின்வந்தும் போர் செய்வதாக கூத்தாடுவர். உணர்ச்சிகரமான நடிப்பை எல்லாரிடத்திலும் எதிர்பார்க்க முடியாது, சிலர் தங்கள் வசனங்களை பார்த்து படிக்க மட்டும் செய்கின்றனர்.

1.2 கோவில்கள் அறிமுகம்

கம்பம் ஏறுதல் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் மட்டும் நீடிக்கும் சடங்காகும். தென்பேர் புதுப்பாளையம், கண்டாச்சிபுரம், ரெட்டணை, கெடார், கல்யாணம்பூண்டி, சென்னக்குணம், சித்தாத்தூர், கரிக்கலாம்பாக்கம், நெட்டப்பாக்கம், திருவாமாத்தூர் முதலிய ஊர்களிலும் புதுச்சேரி நகரில் உள்ள கதிர்காமம், முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, பெத்துசெட்டிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் இந்த சடங்கு கந்த சஷ்டி விழாவில் நடைபெறுகின்றது. இவற்றிலிருந்து கீழ்க்கண்ட மூன்று ஊர்களில் உள்ள கோவில்களில் நிகழும் சஷ்டி விழா ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

1.அபிராமேஸ்வரர் ஆலயம் - திருவாமாத்தூர் 
2.இராமநாதீஸ்வரர் ஆலயம் - நெட்டப்பாக்கம் 
3.சித்தி விநாயகர், சுப்ரமணியர் ஆலயம் - முத்தியால்பேட்டை,புதுச்சேரி

கம்பம் ஏறும் சடங்கு இந்த மூன்று கோவில்களிலும் இன்று வரை நடைபெற்றுவருகிறது.

முத்தியால்பேட்டை ஸ்ரீ சுந்தரவிநாயகர் சுப்பிரமணியர் சுவாமி சித்தி விநாயகர் தேவஸ்தானம்

இன்று புதுச்சேரி நகரின் முக்கியமான பகுதிகளில் ஒன்று முத்தியால்பேட்டை, முன்பு தனி கிராமமாக இருந்தது. முத்தியால்பேட்டையில் சுந்தரவிநாயகர் -சுப்பிரமணியர் ஆலயம் உள்ளது. தனியார் பொறுப்பில் உள்ள இந்த ஆலயம், இருநூறாண்டுகள் பழமை கொண்டது, அதற்கான சான்றுகளை அறங்காவலர்கள் வாயிலாக அறிய முடிந்தது. செங்குந்தர் மரபினர் இக்கோவிலை பொறுப்பேற்று விழாக்களை சிறப்பாக நடத்திவருகின்றனர். ஆரம்பத்தில் விநாயகர் ஆலயமாக இருந்தது பின்னர் முருகன் ஆலயமாகவும் மாறியுள்ளது. திண்டிவனம் அருகிலுள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலான மயிலம் கோவிலுடன் இக்கோவிலை இணைத்து கதைகள் சொல்லப்படுகின்றன.

புதுச்சேரி நகர நிர்மாணம் பதினேழாம் நூற்றாண்டில் துவங்குகிறது. பிரெஞ்சு அரசின் வணிகத்திற்காக இந்தியா வந்த பிரான்சுவா மார்த்தேன் 1675ல் (05.05.1675) புதுவையின் வணிகத்திற்கு பொறுப்பேற்கிறார், மார்த்தேன் காலத்தில் தெருக்கள் அமைத்தல் மற்றும் கோட்டைப்பணிகள் துவங்கின. அப்போது புதுவை பகுதிகள் செஞ்சி நாயக்கர் மற்றும் பிஜப்பூர் சுல்தானின் கவர்னர் இவர்கள் அதிகாரத்தில் இருந்தது. மார்த்தேனின் சாமர்த்தியமான நடவடிக்கைகளால் சுல்தானகம் மற்றும் மராட்டியர்களிடமிருந்து புதுவையின் வணிக உரிமையும், சுங்கம் வசூலிக்கும் உரிமையும் பிரெஞ்சியருக்கு கிடைக்கின்றன. இடையே டச்சுக்காரர்கள் புதுவையில் பிரெஞ்சியரின் வளர்ச்சியைக்கண்டு படையெடுத்து 1693ல் இப்பகுதியை கைப்பற்றுகின்றனர், இக்காலத்தில் தோல்வியுற்ற மார்த்தேன் சிறைபிடிக்கப்பட்டார். 1697ல் பிரெஞ்சியர்களுடன் ஏற்பட்ட ரிஸ்வீக் ஒப்பந்தத்தின்படி டச்சுக்காரர்கள் இப்பகுதியை கைவிடுகின்றனர். சிறை மீண்ட மார்த்தேன், போர் அனுபவம் காரணமாக புதுவையின் பாதுகாப்பை வலுப்படுத்த நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்ட புனித லூயி கோட்டையை நிர்மாணித்தார், இக்கோட்டை 1706-ல் கட்டிமுடிக்கப்பட்டது. மார்த்தேனின் முயற்சியும், டச்சுக்காரர்களின் நகர நிர்மாண முயற்சிகளும்தான் புதுச்சேரி என்ற புதிய நகர் உருவாக்கத்தில் முக்கியக்காரணிகள்.

முத்தியால்பேட்டை

ஐரோப்பாவில் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் துணி வணிகத்திற்கான வாய்ப்புகள் பெருகியது, இந்தியாவில் இருந்து அதிகமான துணியை இறக்குமதி செய்ய பிரெஞ்சு வணிகர்கள் முனைந்தனர். பிரெஞ்சியர் வருகைக்கு முன்னரே புதுச்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில் நெசவாளர்கள் பரம்பரையாக இருந்தனர். சோழமண்டலக்கடற்கரையின் இந்த பகுதி கைத்தறிநெசவுக்கும், நீலச்சாயம் தோய்த்த கினியா துணிகளுக்கும் பெயர் பெற்றிருந்தது. வியாபாரத்தை அதிகரிப்பதற்காக துணி வணிகத்தில் அனுபவம் வாய்ந்த பூந்தமல்லியை பூர்விகமாகக்கொண்ட முதலியார்களை பிரான்சுவா புதுச்சேரியில் குடியமர்த்தினார். மேலும் மார்த்தேன் கூடலூர், பரங்கிப்பேட்டை, ஆரணி, காஞ்சிபுரம், லாலா பேட்டை முதலிய இடங்களில் இருந்தும் நெசவு, சாயமிடுதல் மற்றும் அது சார்ந்த தொழில்களை மேற்கொள்ளும் கைவினைஞர்களை வரவழைத்தார். இக்காலகட்டத்தில் கைவினைஞர்கள் தச்சர்களுக்கு தேவை ஆச்சரியப்படும் அளவிற்கு மிகுதியாக இருந்தது,

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் புதுவையில் இருந்து இதே காலகட்டத்தில் மஸ்கரேனஸ், மொரீஷியஸ் தீவுகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைவினை தொழிலாளர்கள் கப்பலில் பயணித்தனர். இக்காலகட்டம் கைத்தறி நெசவு உற்பத்தியின் உச்சம் எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆளுநர் தெபாசன் காலத்தில்தான் இயந்திர நூற்பாலைகள் மற்றும் விசைத்தறி நெசவுக்கான முயற்சிகள் புதுவையில் துவங்கின.

லூயி கோட்டை பாண்டிச்சேரி
அவ்வாறு மதராஸிலிருந்து புதுவைக்கு வந்த தானப்ப முதலியாரை புதுவை பிரெஞ்சு அரசு தனது வணிக முகவராக, தரகராக இருக்கச்செய்தது. தானப்ப முதலியாரே இவ்வரசின் முதல் துபாஷியென கருதப்படுகிறார், இவர் துபாஷியாக பதவியேற்றது 1676ல். உண்மையில் மொழிபெயர்ப்பாளர் என்பதைக் குறிக்கும் பெயர்தான் துபாஷ், ஆனால் பிரெஞ்சு புதுவை அரசில் வணிக அதிகாரமிக்க பதவியாகவும் இது விளங்கியது. தானப்ப முதலியாருக்கு பிரெஞ்சு அரசு லாசார் தெ மொத்தோ என்ற பட்டமளித்திருந்தது. இவரது மகன் ஆந்த்ரே முத்தப்ப முதலியார் தானப்பர் மறைவுக்குப்பிறகு 1691ல் துபாஷி பதவியை ஏற்றுக்கொண்டார். தானப்ப முதலியாரின் காலகட்டத்தில் முத்தியால்பேட்டை என்ற கிராமம் தறி நெசவுக்கான குடியேற்றமாக அமைந்தது என்றும், அவரது மகன் ‘முத்தப்ப’ முதலியாரின் பெயராலேயே இப்பகுதி ‘முத்தியாலு பேட்டை’ என்று அழைக்கப்பட்டதாகவும் புதுவை நகரின் வீதிப்பெயர்களை ஆய்வு செய்த நா.இராசசெல்வம் கருதுகிறார். புதுச்சேரி நகருக்கு வெளியே இருந்தமையால் படையெடுப்பு, சண்டைகள் நடந்த காலங்களில் முத்தியால்பேட்டை பகுதி சிலகாலம் மக்களால் கைவிடப்பட்டும் இருந்துள்ளது. பிரெஞ்சு குடியிருப்புகளை சுற்றியிருந்த பகுதிகளில் ஒன்றாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள திருவெந்திப்பாக்கம் என்ற பகுதி இன்றைய முத்தியால்பேட்டை பகுதியாக மாறியிருக்கலாம் என்றும் இராசசெல்வம் தெரிவிக்கிறார்.

நெட்டப்பாக்கம் இராமலிங்கநாமர் ஆலயம்

நெட்டப்பாக்கம் இராமலிங்கநாதர் ஆலயம்

புதுச்சேரி மாநிலத்தில் நெட்டப்பாக்கம் என்ற ஊரில் உள்ளது இராமலிங்கநாதர் ஆலயம். பாண்டிச்சேரியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது நெட்டப்பாக்கம், விழுப்புரம், கடலூர், பண்ருட்டி இங்கிருந்தெல்லாமும் கிட்டத்தட்ட 20 - 30 கிமீ தூரத்தில்தான் நெட்டப்பாக்கம் உள்ளது.

சோழர் காலத்தில் பூபால சுந்தர நல்லூர் என்று அழைக்கப்பட்ட ஊர் இது. நேரடியாக கோவிலில் கல்வெட்டுகள் இல்லை எனினும், திருமாணிக்குழி, திருக்காஞ்சி, தீர்த்தனகிரி ஆகிய இடங்களில் கிடைத்துள்ள பிற ஆலயக்கல்வெட்டுக்களில் நெட்டைப்பாக்கம் என்ற ஊர் குறிப்பிடப்படுகின்றது. பல்வேறு கோவில்களுக்கு இவ்வூர் நிலங்கள் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. பொதுவாக புதுச்சேரிப்பகுதிகளில் நிறைவான தண்ணீர்வளம் இருக்கிறது, நெல்வயல்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் நெட்டப்பாக்கம் பகுதியும் ஒன்று.

மழை வந்தது மனம்போல
தண்ணீ வந்தது தவளக்குப்பம்
மடை திறந்தது மரப்பாலம்
சேடை வச்சது சேதராப்பட்டு
வெத வாங்குனது வில்லியனூரு
நாத்து போட்டது நல்லூரு
புடுங்கி நட்டது புதுக்குப்பம்
கள எடுத்தது காலாப்பட்டு
ஒரம் போட்டது ஒதியம்பட்டு
நெல்லு வெளஞ்சது நெட்டப்பாக்கம்

(புதுவை பகுதியில் இருந்து தொகுக்கப்பட்ட நாட்டார்பாடல்களில் ஒன்று)

முதல் குலோத்துங்க சோழன் காலத்தின் படைத்தலைவர்களில் ஒருவனான ‘பூபால சுந்தரனான சோழகோனார்’ என்பவர் பெயரால் இவ்வூர் பூபால சுந்தர நல்லூர் என அழைக்கப்பட்டுள்ளது. விக்கிரமசோழன் உலாவில் இந்த படைத்தலைவன் புகழப்படுகிறான். திருபுவனை ஏரிக்கரையில் கல்லிட்டு செப்பனிட்ட செலவுத்தொகைக்கு ஈடாக பூபால சுந்தரனுக்கு நெட்டப்பாக்கம் அளிக்கப்பட்டது.

இப்பகுதி மந்தாரவனம் என்று அழைக்கப்பட்டதாகவும் சுயம்புத்திருமேனியான இறைவனை இராமரும் அகத்தியரும் வழிபாடு செய்தார்கள் என்றும் புராணக்கதைகள் வழங்குகின்றன. இக்கோவில் 1953 மற்றும் 1983ம் ஆண்டுகளில் குடமுழுக்கு கண்டுள்ளது. அடித்தளத்துமேல் செங்கல்தளியாக கட்டப்பட்ட கோவில் அதிகமும் சிதிலமடைந்ததால் தற்போது முழுவதும் புனரமைக்கப்பட்டு 2017ம் ஆண்டில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. பொங்கலை ஒட்டிய மாடு விரட்டும் விழா, நவராத்திரி விழா, ஆற்றுத்திருவிழா, கந்தசஷ்டி விழா ஆகிய காலங்களில் உற்சவர் புறப்பாடு வழக்கமாக இருந்தது. 2017ம் ஆண்டு குடமுழுக்குக்குப் பிறகு புதிய தேர் செய்யப்பட்டு சில ஆண்டுகளாக வைகாசி மாதம் பத்துநாள் பிரம்மோற்சவம் ஊராரால் நடத்தப்படுகின்றது.


திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் ஆலயம்


அபிராமம் என்றால் அழகு. அருணகிரிநாதர் செந்தூர் திருப்புகழில் ராமனை அபிராமா என்று ஓரிடத்தில் கோசலை அழைப்பதாக பாடுகிறார். அபிராமி, அபிராமவல்லி, அபிராமாம்பிகை என்றெல்லாம் தமிழக ஆலயங்களில் தேவி அழைக்கப்படுகிறாள். 

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர்-அழகியநாதர் ஆலயம் தேவார மூவரால் பாடப்பட்டது, பம்பையாற்றங்கரையில் அமைந்துள்ள அழகியநாதர் ஆலயத்திற்கு நேரெதிரே பார்த்ததுபோல முக்தாம்பிகை ஆலயம் உள்ளது. அப்பர் ஆமாத்தூர் அம்மானான சிவனை, இராமர் வழிபாடு செய்த பிரான் என்று பாடியிருக்கிறார். ராமனின் சில பழஞ்சிற்பங்களையும் இங்கு காணமுடிகின்றது. விழுப்புரத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது திருவாமாத்தூர்.


மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்

    மணிமிழலை மேய மணாளர் போலுங்

கொழுங்குவளைக் கோதைக் கிறைவர் போலுங்

    கொடுகொட்டி தாள முடையார் போலுஞ்

செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலுந்

    தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்

அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும்

    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே


-அப்பர் தேவாரம்



தனிக்கோவிலிலுள்ள முக்தாம்பிகை விழுப்புரம் கடலூர் பகுதியிலுள்ள பலருக்கு குலதெய்வம், முக்தாம்பிகை ஆலயத்திலுள்ள வட்டப்பாறை அம்மன் ஒரு நாட்டார் தெய்வம். இங்கு யாராவது பொய் சத்தியம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்பதற்கு வாய்மொழிக்கதைகள் உள்ளன. பசுக்கள் கொம்புபெற தவம் செய்ததாகவும் பிருங்கி முனிவர் வழிபட்டதாகவும் புராணக்கதைகளை வழங்குகின்றன. பங்குனி உத்திரத்தை ஒட்டி பத்து நாள் திருவிழா ஒவ்வொரு வருடமும் நடக்கின்றது. 


இது பல்லவர்கால ஆலயம் என்று ஆய்வாளர்கள் இங்குள்ள சிற்பங்களை சான்றாக வைத்து சொல்கின்றனர். சோழர்காலத்தில் கற்றளியாக மாறியிருக்கலாம், கோட்டசிற்பங்களின் அமைப்பும் கோவிலை சுற்றியும் அமைந்துள்ள சிற்பங்களும் வெவ்வேறானவை. நடுநாட்டில் நீண்டகாலம் சோழர்களால் பேணப்பட்ட இந்த சைவ ஆலயத்தில் பராந்தகன் முதலான பல்வேறு அரசர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன. கோவில் அருகிலுள்ள பம்பை ஆற்றுப்பகுதியில் உறைகிணறு முதலான பழங்கால சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன.


பக்திக்காலத்திலிருந்து தொடர்ச்சியான இலக்கியச்சான்றுகள் இக்கோவிலுக்கு உண்டு. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப்பட்ட ஊர் இது. அருணகிரிநாதர் திருப்புகழில் 4 பாடல்கள் பாடியுள்ளார், அவற்றில் இவ்வூரை மாதை நகர் என்கிறார். திருவாமாத்தூர் கலம்பகம் இரட்டைப்புலவர்களால் பாடப்பட்டது. தமிழ்க்கவியும் அருளாளருமான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இந்த நூற்றாண்டில் இக்கோவிலை பாடியவர், நீண்டகாலம் திருவாமாத்தூரில் தங்கி இத்தல இறைவன் மீது ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இலக்கியப்பணி செய்து இங்கேயே அடக்கமானவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். இவர் வள்ளலாரின் சமகாலத்தவர் (1839-1898). 

திருவாமாத்தூர்

மேலே சொன்ன மூன்று கோவில்களில் பழைமையானது திருவாமாத்தூர் , ஏழாம் நூற்றாண்டு முதலே இருப்பது. நெட்டைப்பாக்கம் என்ற ஊரின் காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு, ஆனால் கோவிலின் காலம் அறியக்கூடவில்லை. இவை இரண்டும் அந்தப்பகுதிகளின் பெரிய சிவன் கோவில்கள், ஆலயத்தின் மூலக்கடவுளான சிவனுக்கு தேர்த்திருவிழா உள்ளிட்ட பத்துநாட்கள் திருவிழா நடைபெறுகின்றது. அக்கோவில்களில் உள்ள முருகனுக்கு தனியே நடைபெறும் சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் மற்றும் கம்பம் ஏறுதல் சடங்கு நடக்கின்றது. 


முத்தியால்பேட்டை கோவிலின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கமாக இருக்கலாம், இன்று புதுச்சேரி நகரின் ஒரு பகுதியாக இக்கோவில் இருப்பதோடு வெவ்வேறு காலகட்டத்தில் சன்னதிகள் அமைத்து விரிவாக்கப்பட்ட கோவிலாக இருக்கின்றது. இங்கு முருகன் பிரதான தெய்வமாக வணங்கப்படுகிறார். 


பாலமுருகன்- திருவாமாத்தூர்

தன் வாழ்நாளில் திருவாமாத்தூரை சுற்றியிருந்த பல கோவில்களை பாடியவர் வண்ணச்சரபம் சுவாமிகள். நாம் குறிப்பிட்ட மூன்று கோவிலைகளையுமே வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடியிருக்கிறார்.


இந்தச்ச கத்திற்பல விளையாடல் செயநண்ணி எய்த்துள்ளஎன்

அந்தக்க ரணவாத னைத்துன்பம் அறுநாளும் அவிறுங்கொலோ

கந்தக்க டம்பன்ற னைப்பெற்ற நெற்றிக்க னற்கண்ணுளாய் 

சந்தப்ப சுஞ்சோலை வளநீடு மாதைத்த லத்தையனே


திருவாமாத்தூர் பதிகச்சதகம்


சீரூரும் தமிழ்ப்பணிபோல் சிறந்தபணி இல்லையென்று 

ஆரூரன் செவிகுளிர அறைந்ததனை மறந்தனையோ 

தேரூர்ந்து சிலையேந்தி சிரித்தெயில் மூன்றெரித்தனையோ 

நீரூரும் பழனமிகு நெடும்பாக்கத்து உறைவோனே


-நெட்டப்பாக்கம் பதிகம்


நலந்திகழ் முத்தாலு நகர்முருக வேளே

சலந்தரனைக் கொன்றார் தனயா - வலிந்தடியேன்

பட்டதுயர் ஓர்ந்தும் பாராமுகமேன் செய்கின்றாய் 

இட்டமுற்றும் ஈந்தருள்இன் னே 


- முத்தியால்பேட்டை முருகப்பெருமான் பதிகம்


(தண்டபாணி சுவாமிகள் இத்தல முருகன் மீது குமரகுருபரன் வகுப்பு, திருப்புகழ், பதிகம் ஆகியவற்றை பாடியுள்ளார்)


தாமரைக்கண்ணன் புதுச்சேரி


ஆடல் : தொடர் 


உதவி நூல்கள்

  • கல்வெட்டுகளில் புதுவைப்பகுதிகள் - பாகூர் புலவர் சு.குப்புசாமி
  • காலனிய வளர்ச்சிக்காலம் - எஸ்.ஜெயசீல ஸ்டீபன்
  • புதுச்சேரியின் அடையாளங்கள் - அ.இராமதாசு
  • புதுவை நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் - ஆ.திருநாகலிங்கம்
  • பிரெஞ்சியர் காலப் புதுச்சேரி நகரமும் அதன் தெருக்களும் - நா.இராசசெல்வம்


தாமரைக்கண்ணன் புதுச்சேரி