Sunday 15 September 2024

அச்சிலிருந்து திரைக்கு - தியடோர் பாஸ்கரன்

ஜெயகாந்தனின் திரை உலகம்

பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு அரசியலுடன் சினிமா பிணைந்திருக்கும் தமிழ்ச் சூழலில், இடதுசாரி தரப்பிலிருந்து சில தற்காலிக இடையீடுகள் நடந்துள்ளன. அவற்றுள் ஜெயகாந்தனின் முயற்சிகள் நாம் கவனிக்கவேண்டிய தகுதிவாய்ந்தவை. அதிக தாக்கத்தை உண்டாக்கிய அவரது விரிவான இலக்கியப் படைப்புகளின் வெளிச்சத்தால், தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு பலசமயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. தமிழ் சினிமாவுக்கும் வெள்ளித் திரைக்குமான அர்த்தப்பூர்வ உரையாடலை தொடங்கி வைத்ததே அவர்தான். அவ்வப்போது நிகழும் சில தெறிப்புகளை தவிர அவ்வுரையாடல் தொடர்ந்து நிகழவில்லை என்பது வேறு விஷயம். அவருடைய பல கதைகள் படமாக்கப்பட்டிருக்கும் நிலையில், தன் சொந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு, அவர் இயக்கிய இரு படங்களுமே தமிழ் சினிமாவின் வரலாற்றில் முக்கியமானவை. 1965 இல் அவர் உருவாக்கிய உன்னைப் போல் ஒருவன், பின்னர் அடுத்த வருடமே அவர் இயக்கிய யாருக்காக அழுதான் (1966) ஆகிய படங்கள், ஒரு எழுத்தாளர் தன் சொந்த இலக்கிய ஆக்கங்களை தானே படமாக்கிய அரிய நிகழ்வுகளுள் முக்கியமானவை.

இதுபோன்று தன் சொந்த நாவலைத் தழுவி படம் இயக்கிய, என் நினைவுக்கு வரும் பிற எடுத்துக்காட்டுகள் என்றால், எம்.டி. வாசுதேவன் நாயர் இயக்கிய நிர்மால்யம் (1973) மற்றும் வங்காள திரை-இயக்குனரும் கவிஞருமான புத்ததேவ் தாஸ்குப்தா இயக்கிய கல்புருஷ் (2005) ஆகியவற்றை சொல்வேன். இந்த எழுத்தாளர்களைப் போன்று ஜெயகாந்தனும் தன் இலக்கிய ஆக்கத்தின் ஆன்மாவை காட்சிகளின் வழியே கடத்துவதில் சிறப்பாக வெற்றிபெற்று, மறக்கமுடியாத சில படங்களை விட்டுச் சென்றுள்ளார்.

திரைப்பட அறிஞர் நீல் சின்யார்ட் வெற்றிகரமான தழுவல்களுக்கு இலக்கணமாக மூன்று இயல்புகளைக் குறிப்பிடுகிறார். சிறப்பாக படமாக்கப்பட்ட அனைத்து இலக்கிய தழுவல்களிலும் இம்மூன்றில் ஏதேனும் ஒன்று அல்லது அனைத்து இயல்புகளுமே இருக்கும் என்கிறார். முதலாவதாக, திரைப்படம் நாவலின் வரிவடிவத்தை நோக்கியதாக அல்லாமல் அதன் ஆன்மாவை நோக்கியதாக இருக்கும். இரண்டாவதாக கதையை விவரிப்பதை விட நாவலின் உட்பொருளை வெளிப்படுத்தவே காமிரா அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். கடைசியாக திரை இயக்குனரும் நாவலாசிரியரும் ஒரே கருத்தியல் சார்புடையவர்களாக இருப்பார்கள் - அது படங்களில் வெளிப்படவும் செய்யும். ஜெயகாந்தனின் படங்களில் மேற்குறிப்பிட்ட மூன்று இயல்புகளையும் நாம் காணலாம். இலக்கிய ஆக்கத்தை அர்ப்பணிப்புடன் படமாக்குவதற்கு சினிமா மற்றும் இலக்கியம், ஆகிய இரண்டிலும் இயக்குனர் நுண்ணுணர்வுடன் இருக்க வேண்டும். அதுவே வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான கூறு.


ஐம்பதுகளில் சிறுகதை எழுத்தாளராகப் புகழ்பெற்று வளர்ந்து வரும் போதே, மார்க்சிய கொள்கைகளால் உந்தப்பட்ட ஜெயகாந்தனுக்கு சினிமாவில் ஆர்வம் உண்டாகியிருந்தது. கே.ஏ. அப்பாசஸின் ஆக்கங்கள் அவரை மிகவும் ஈர்த்தன, ரேயின் இயக்கத்தில் வெளியான 'அப்பு வரிசை' படங்களின் யதார்த்தத்தன்மையாலும் அவர் கவரப்பட்டார். சமூகத் தேவைகளிலிருந்து வெகுதூரம் விலகி, வழக்கமான பாடல்-நடனங்களுடன் மிகையுணர்ச்சி காட்சிகள் மலிந்த, நட்சத்திரங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த சமகால தமிழ் சினிமா அவருக்கு சலிப்பூட்டியது. சமகால இலக்கிய ஆக்கங்கள் வழியே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர இயலும் என அவர் நம்பினார். மரபான தமிழ் எழுத்தாளரகள் போல் அல்லாமல், ஜெயகாந்தனின் பாத்திரங்களாக தினக்கூலிகள், விலைமகளிர், பிக்கைக்காரர்கள் என விளிம்புநிலை மக்களின் வாழ்வை ஒட்டி எழுதினார். 

அவருடைய உன்னைப்போல் ஒருவன் கதை ஒரு இதழில் வெளிவந்ததும் அது திரை இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழ் சினிமாவில் நட்சத்திரங்கள் கோலோச்சிக் கொண்டிருந்த சமயம், ஒரு தயாரிப்பாளர் சிவாஜி கணேசன் மற்றும் சாவித்ரியுடன் ஒப்பந்தம் செய்து அக்கதையின் அடிப்படையில் 6000 அடிக்கான படத்தையும் எடுத்துவிட்டார். அதைக் கண்டு அதிருப்தியுற்ற ஜெயகாந்தன், அப்படத்தை தானே எடுப்பதாக முடிவு செய்தார். 1964 ஆம் ஆண்டு, அவ்வருடம் நேரு இறந்ததன் நினைவை ஒட்டி தன் தயாரிப்பு நிறுவனத்தை ஆசியாஜோதி ஃபிலிம்ஸ் எனும் பெயரில் தொடங்கினார். திரள் நிதிதிரட்டலின் (crowd-funding) ஆரம்ப வடிவமாக, தன் நண்பர்களிடம் பணம் வசூலித்து படத்தை உருவாக்கினார்.

பாணியிலும் உள்ளடக்கத்திலும் முற்றிலும் புதிய தொடக்கமாக அமைந்த உன்னைப்போல் ஒருவன் யதார்த்தமாகவும், இயல்பான உண்மைத்தன்மையுடனும் எடுக்கப்பட்டிருந்தது. பாடல்களை திட்டமிட்டு தவிர்த்ததன் மூலம், உள்ளடக்கத்தின் மீதான கவனம் சிதறாமல் திரைப்படத்தின் தாக்கத்தை ஜெயகாந்தன் அதிகப்படுத்தியிருந்தார். அக்காலத்தின் தமிழ் சினிமா பாத்திரங்கள் பேசிய பகட்டான செயற்கை மொழி பிரயோகத்திலிருந்து வசனங்கள் முற்றிலும் மாறுபட்டிருந்தன. அச்சமயம் இந்தியாவில் இருந்த பிரெஞ்சு திரை விமர்சகர் ஜார்ஜ் சாதுல் (Georges Sadaoul) படத்தை பார்த்துவிட்டு, ஒளி-ஒலி அமைப்பில் சில தொழில்நுட்ப போதாமைகள் இருந்தாலும் இப்படம் ஒரு நவ-யதார்த்தவாத காவியம் என பாராட்டினார். ஒரு தனி திரையிடலில் இப்படத்தை பார்த்த காமராஜர், பள்ளி கல்லூரிகளில் இதை திரையிட்டுக் காட்ட பரிந்துரை செய்தார்.


திரையரங்கிற்கு வந்திருந்த பார்வையாளர்களிடம் ஒரு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அதில் ஜெயகாந்தனின் சொற்களாக இவ்வாறு எழுதியிருந்தது: “நீங்கள் வெறுமனே பொழுது போக்குவதற்காக இங்கு வரவில்லை. நீங்கள் புதுவகை ரசனையை பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள்”. அவ்வாண்டு தேசிய அளவில் மூன்றாவது சிறந்த திரைப்படமாக இப்படம் தேர்வாகி விருது பெற்றது. அக்காலத்தில் இப்படியான விருதுவகை ஒன்று இருந்தது. ரேயின் சாருலதா முதல் பரிசை வென்றிருந்தது. துரதிர்ஷ்டவசமாக உன்னைப்போல் ஒருவன் படத்தின் தெளிவான பிரதிகள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை. அப்படத்தை இழந்துவிட்டோம் என்றே சொல்ல வேண்டும்.

இயக்குனராக அவருடைய இரண்டாவது முயற்சி யாருக்காக அழுதான். வீதிவீதியாக பிரச்சாரம் செய்யும் ஒரு மதபோதகரின் உதவியாளனாக இருக்கும் ஜோசப் என்பவனை சுற்றி நகர்கிறது படம். போதகர், மக்களின் மனதை ஈர்க்க வீதியோர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கையில், பெட்ரோமேக்ஸ் விளக்கை தலையில் சுமந்திருப்பதே ஜோசப்பின் பணி. அவர்கள் இருவரும் சிறிய விடுதி ஒன்றில் தங்கும் போது, அங்கு ஒரு திருட்டு நடந்துவிடுகிறது. ஜோசப் மீது சந்தேகம் விழுகிறது. ஜோசப்புக்கு குற்றவாளி யாரென தெரிந்திருந்தும், விசாரிக்கப்படுகையில் பேச மறுத்துவிடுகிறான். இறுதியில், அவன் திருடவில்லை என்பது நிரூபணம் ஆகும்போது யாராலும் ஆற்றுப்படுத்த இயலாத வகையில் உடைந்து அழுகிறான்; அழுத்தமிக்க உச்சக் காட்சியான இதுவே படத்தின் இறுதிக் காட்சியுமாகும். உணர்ச்சிகரத்தை அதிகப்படுத்த விஷேசமாக எதுவும் செய்யப்படவில்லை, தன்னிரக்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாடு மட்டுமே. அதிகம் கவனிக்கப்படாத இப்படத்தை, வெளியான முதல் சில நாட்களிலேயே சென்னையில் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த நிமாய் கோஷ் ஐயமற தன் திறனை நிரூபித்தவர், அவரும் இடதுசாரி முகாமைச் சேர்ந்தவர். உணர்ச்சிகளை கோடிட்டுக் காட்ட ஒளியமைப்பை மிகுந்த படைப்பூக்கத்துடன் பயன்படுத்தியிருந்தார்.

ஜெயகாந்தன் தன் பாத்திரங்களுக்கு நடிகர்களைத் தேர்வு செய்வதில் புரிந்துணர்வோடு செயல்பட்டு அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதுவே அவரது படங்களை வித்தியாசப்படுத்தியது. மையப் பாத்திரமான ஜோசப்புக்கு அவர் நாகேஷை தேர்ந்தெடுத்தார். நடிகர் நாகேஷின் திரைவாழ்வில் ஆகச்சிறந்த பாத்திரமாக அது அமைந்தது. பழைய நடிகரான வகாப் காஷ்மீரி மற்றும் டி.எஸ். பாலையா பிற பாத்திரங்களில் நடித்தனர். கே.ஆர். விஜயா பாலியல் தொழிலாளியாக சிறிய வேடத்தில் தோன்றினார். சரியான நடிகர்களை தேர்வு செய்யும் இந்த உணர்வே, அவரது பலம். அதுபோல் முதல் படமான உன்னைப்போல் ஒருவன் படத்திலும், மைய பாத்திரத்தில் காந்திமதி அவர்களையும், ஜோதிடராக பிரபாகரனையும் நடிக்க வைத்திருந்தார்.

இந்த இரு படங்களைத் தவிர, ஜெயகாந்தன் இயக்குனராக இல்லாவிட்டாலும் நாம் கவனிக்கத்தக்க மற்றொரு படத்தை குறிப்பிட வேண்டும். ஜெயகாந்தன் 1979 இல் அதே பெயரில் எழுதிய நாவலின் அடிப்படையில் வெளியான வண்ணப்படமான ஊருக்கு நூறுபேர் (2001). மரணதண்டனையை அழுத்தமாக விமர்சிக்கும் படம். படத்தின் இயக்குனர் பி. லெனின், பாத்திரங்களின் உரையாடல்களைக் குறைத்து ஒளிப்பதிவாளர் அல்போன்ஸ் ராய் உதவியுடன் அபாரமான காட்சி பிம்பங்களை உருவாக்கியிருக்கிறார். இப்படம் லெனினுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது.

ஜெயகாந்தனின் கைவிலங்கு எனும் இன்னொரு நாவல், காவல் தெய்வம் எனும் பெயரில் 1969இல் படமாக்கப்பட்டது. ஒரு சிறை அதிகாரி மற்றும் ஒரு கைதியை பற்றியது இப்படம். தமிழ்நாட்டின் நாட்டார் கலைகளான தெருக்கூத்தும் வில்லுப்பாட்டும் இப்படத்தில் இடம் பெற்றிருந்தன. மேலும் தெருக்கூத்தின் முன்னணி கலைஞரான புரிசை நடேச தம்பிரான், அவரே படத்தின் ஒருபகுதியில் இடம்பெறும் ஹிரண்யவத படலத்தை நடித்திருந்தார். அறுபதுகளின் தொடர் சராசரி படங்களின் வரிசையில், கே. விஜயனின் இயக்கத்தில் இப்படம் வடிவத்திலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி, தனித்து நின்றது. ஒன்றின் தொடர்ச்சியாக இன்னொன்று வந்த அவரது இரு கதைகளை அடிப்படையாகக் கொண்டது சில நேரங்களில் சில மனிதர்கள் (1977). முதலில் 1966இல் வெளியான அக்னிபிரவேசம் எனும் சிறுகதை சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, அதன் விமர்சனங்களுக்கு பதிலளிப்பது போல் அவர் எழுதிய கதைதான் சில நேரங்களில் சில மனிதர்கள். முந்தைய கதையிலிருந்து வேறு பாதையை எடுத்துக் கொண்டு அதில் வெகுதூரம் பயணித்திருப்பார். ஏ. பீம்சிங் இயக்கிய இப்படம் நாவலின் ஆன்மாவை சரியாக பிரதிபலிக்கவில்லை என்றாலும், மைய பாத்திரத்தில் லக்ஷ்மியும் தாய் வேடத்தில் நடித்திருந்த சுந்தரிபாயும் மிளிர்ந்தனர். ஜெயகாந்தன் எழுத்தின் இயல்புகளுள் ஒன்றான பாத்திரங்களின் நீண்ட உரையாடல்கள் படத்திலும் தக்கவைக்கப்பட்டிருந்ததால், செவி வழி கேட்டல் உணர்வே மேலோங்கி இருந்தது. ஓர் இலக்கிய ஆக்கத்தை திரைக்கு கொண்டு வரும்போது பாத்திரப்பேச்சின், சொற்களின் எல்லைகளிலிருந்து இயக்குனர் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள வேண்டும். நாவலில் பாத்திரங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லும் படத்தில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எனவே வசனங்கள் நிறைந்த படத்தில் பேசும்-தலைகளையே பெரும்பாலும் பார்வையாளர் காணவேண்டி உள்ளது.


சினிமா உலகின் பின்னணியில் சில தமிழ் எழுத்தாளர்கள் புனைவுகளை எழுதியுள்ளனர், தற்செயலாக அதன்வழி தமிழ் சினிமா குறித்து நமக்கு கிடைக்கும் அவதானிப்புகளும் உண்டு. அசோகமித்திரன் தன் கரைந்த நிழல்கள் நாவலின் வழியே பகட்டான அற்ப உலகிற்குள் வாழும் தொழிலாளிகளின் நிலையை காட்டியிருப்பார். ஜெயகாந்தன் எழுதிய சினிமாவுக்குப் போன சித்தாளு கட்டிட வேலை செய்யும் ஒரு பெண்ணின் கதை, மக்களை சினிமா நட்சத்திரங்கள் வசியம்போல ஆட்கொண்டு வைத்திருக்கும் எதிர்மறை பிடிப்பைப் பற்றியது. குறிப்பாக பெண் ரசிகர்களிடம் எம்ஜிஆருக்கு இருந்த செல்வாக்கை பரிசீலித்திருப்பார். திமுகவிலிருந்து விலகி எம்ஜிஆர் தனிக்கட்சியாக அதிமுகவை ஆரம்பித்த பிறகு, எம்ஜிஆரை தாக்கும் பொருட்டு திமுக இந்த கதையை நாடகமாக தங்கள் சில மாநாட்டு மேடைகளில் அரங்கேற்றியது. ஜெயகாந்தன் தன் கதை அவ்வாறு பயன்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அது நிறுத்திக்கொள்ள பட்டது.

தமிழ் சினிமாவுடனான தன் உறவை ஜெயகாந்தன் ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். சினிமா வரலாற்றை கற்கும் மாணவர்களுக்கு அது மதிப்புவாய்ந்த சில பார்வைகளை கொடுக்கக் கூடியது. அறுபது எழுபதுகளின் சினிமாவை கற்க விரும்பும் எவருக்கும் அது முக்கியமான ஆவணமே. முன்னர் அவர் தமிழ் சினிமா குறித்து திரைக்கு ஒரு திரை எனும் தலைப்பில் தீபம் என்ற நடுவாந்திர இதழில் கட்டுரை தொடர் ஒன்றை எழுதினார். அது அறுபதுகளின் சினிமாவை விமர்சன நோக்கில் காட்டுவது. ஒட்டுமொத்தத்தில் தமிழ் சினிமாவின் நிலை மீது விமர்சனத்துடன் இருந்த அவர், மைய வணிக சினிமாவின் நீரோட்டத்திலிருந்து எப்போதும் ஒதுங்கியே இருந்தார்.

வசனம் மற்றும் பாடலாசிரியராக

அவர் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். பல திரைப்பாடல்களும் எழுதியிருக்கிறார், அவற்றுள் பாதை தெரியுது பார் படத்தில் இடம்பெற்ற தென்னங்கீற்று ஊஞ்சலிலே எனும் பாடல் என்றும் நினைவில் நீடிப்பது.

திரைப்பட பட்டியல்

இயக்குனராக

உன்னைப்போல் ஒருவன் (1965)
யாருக்காக அழுதான் (1966)

கதை:

உன்னைப்போல் ஒருவன் (1965)
யாருக்காக அழுதான் (1966)
காவல் தெய்வம் (1969)
சில நேரங்களில் சில மனிதர்கள் (1977)
ஊருக்கு நூறுபேர் (2001)
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)
புது செருப்பு கடிக்கும் (வெளியாகவில்லை)


***************


பாயசம்: அச்சிலிருந்து திரைக்கு

சென்னையில் உள்ள அமெரிக்க தகவல் மையம் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் ஹெமிங்வேயின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைவிழாவை ஒருங்கிணைத்தது. அங்கு திரையிடப்பட்ட கிழவனும் கடலும் படமும், அக்கதை காட்சிப்படுத்தப் பட்டிருந்த விதமும் அச்சமயம் என்னுள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. தமிழ் கதைகளை ஆதாரமாக கொண்டு அத்தகைய தரத்திலான படங்களை என்றேனும் காண்பேனா என எண்ணிக் கொண்டேன்.

சென்றவாரம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான நவரசா எனும் கதைக்கோவையின் ஒன்பது கதைகளில் ஒன்றான பாயாசம் குறும்படத்தை பார்த்ததும் ஹெமிங்வே திரைவிழா நினைவுகள் எழுந்து வந்தன. 1965 ஆம் வருடம் கும்பகோணத்தில், ஒரு திருமண நிகழ்வின் பின்னணியில் விரியும் இப்படம், தி. ஜானகிராமனின் சிறுகதையை ஒட்டி எடுக்கப்பட்டது. அந்நகரில் உள்ள பிராமண சமுதாயத்தின் வாழ்வை தன் நுண்ணிய அவதானிப்புகளால் ஜானகிராமன் வெளிப்படுத்தியிருப்பார். திரை இயக்குநரான வசந்த் சாய், தன் திரையாக்கத்தில் மூல ஆசிரியரை உயிரோட்டத்துடன் திரையில் கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இலக்கிய நுண்ணுணர்வு இருப்பதோடு மட்டுமில்லாமல், ஒரு திரை இயக்குனர் சினிமாவின் சாத்தியங்களையும் அறிந்து வைத்திருக்க வேண்டும், இலக்கிய படைப்பை வெளிப்படுத்துவதற்கு ஏற்ப திரைமொழியின் நுட்பங்களையும் இலக்கணத்தையும் அமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். எழுத்தாளனுக்கு பேனா எப்படியோ, அப்படியே திரை இயக்குனருக்கு கேமரா. அவர் கதையை காட்சிப்படுத்தவில்லை; மாறாக அவர் உருவாக்குவது புதியதொரு கலைப்படைப்பு.

காவிரியின் மேல் ஒரு ட்ரோன் காட்சியுடன் தொடங்கும் படம், அங்கிருந்து பிரதான கதைசொல்லியான சாமநாதுவிடம் நகர்கிறது. ஆற்றங்கரையோரம் அரசமரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை அவர் வழிபட்டுக் கொண்டிருக்கிறார். அந்த அகன்ற-வெளி முழுவதும் காலை சூரியனின் பொன்னிற ஒளியால் கழுவப்பட்டிருக்க, பின்னணியில் பைரவி ராகத்தில் நாதஸ்வரம் இசைக்கிறது. பின்னர் கல்யாண வீட்டின் சூழலுக்கு நாம் அழைத்து செல்லப்படுகிறோம், அதன் பரவசங்களும் சடங்குகளும் படைப்பூக்கத்துடன் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு காட்சியும் மனிதர்களாலும் அவர்களின் அசைவுகளாலும் நிறைந்திருக்க, எதன் மீதேனும் உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு இயக்குனர் அண்மைக் காட்சிகளை பயன்படுத்துகிறார். சுறுசுறுப்பான நகர்வுகள் இறுதிக் காட்சி வரை குன்றாமல் தொடர்கிறது.

சில வருடங்களுக்கு முன் தன் மனைவியை இழந்துவிட்ட சாமநாது, குடும்பத்தில் நடக்கும் திருமண நிகழ்வில் பட்டும் படாமல் இருக்கிறார். குறிப்பாக அவரது பொறாமை தன் அண்ணன் மகனான சுப்புவின் மீது, இந்நிகழ்வை நடத்துவதே அவர்தான். சாமநாது தன் சொந்த வாழ்வை திரும்பிப் பார்க்கிறார். திருமணமான மூன்று மாதத்திலேயே மகள் கணவனை இழந்தது பற்றியும், மனைவியின் இறப்பை பற்றியும் நினைவுகள் எழுகின்றன. உடனே அதிருப்தியால் சீற்றம் கொள்கிறார். எரிச்சல் கொண்ட கிழவராக வரும் டெல்லி கணேஷ் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். சுப்புவை பார்க்கும் பார்வையிலேயே மனதில் தோன்றும் பொறாமையை காட்டிவிடுகிறார்.

எழுத்தை தழுவி எடுக்கப்படும் படங்களின் முக்கியமான அம்சம் திரைக்கதை. அச்சு வடிவிலிருந்து திரைக்கு மாறும் உருமாற்றம் நடைபெறுவது இந்த இலக்கிய உத்தியின் வழியாகவே. வழக்கமாக ஒரு எழுத்தாளரைக் கொண்டே திரைக்கதை எழுதப்படும். உதாரணமாக ஜான் ஃபாவுல்ஸ்- இன் பிரெஞ்சு லெஃப்டினன்ட்ஸ் வுமன் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட அதே தலைப்பைக் கொண்ட படத்திற்கு (1981) திரைக்கதை எழுத, பிரபல நாடகாசிரியர் ஹெரோல்டு பைண்ட்டர் பணிக்கு அமர்த்தப்பட்டார். இங்கு வசந்த் சாய், அவ்வேலையை தாமே மிகுந்த கற்பனையுடன் திறம்பட செய்திருக்கிறார். மூலக் கதையில் குரலாக மட்டும் ஒலித்த சாமநாதுவின் மறைந்த மனைவி வாலாம்பாள், திரையில் முழு உருவில் தோன்றுகிறார். இயக்குனரின் மிகச்சிறந்த நகர்வு இது என்று சொல்வேன். அவளது (ரோஹிணி) திரைத் தோற்றம் ஒரு வாழும் கதாப்பாத்திரத்தைப் போன்ற இயல்புடனும் நம்பகமாகவும் இருந்தது. அதேசமயம் அவள் கற்பனையான உருத்தோற்றம் மட்டுமே. ஆனால் இங்கு பார்வையாளனை ஏமாற்றும் காட்சி யுக்திகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.

தழுவல்களை பொறுத்தமட்டில், இயக்குனர் கட்டியெழுப்புவதற்கு எழுத்தாளர் அமைத்து கொடுக்கும் நாடகீய அடித்தளம் தயாராக கிடைத்துவிடுகிறது. திரையின் சாத்தியங்களை பயன்படுத்தி, எழுத்தாளர் சொற்களாலும் வரிகளாலும் கடத்த முயற்சிப்பதை இயக்குனர் காட்சிகளால் கடத்த வேண்டும். பல மகத்தான திரைப்படங்கள் நாவல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்திய சினிமாவிலிருந்து சரியான உதாரணமாக தாகூரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ரேயின் சாருலதாவை சொல்லலாம். சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது வாங்கிய படங்களில் எண்பது சதவீத படங்கள் இலக்கிய ஆக்கங்களை அடிப்படையாக கொண்டவையே.

பார்வையாளரை தூண்டும் இயல்பு காட்சிகளுக்கு இருப்பதால் அதனுடன் சரியான ஒளியமைப்பு, குறியீடுகள் போன்ற திரைப்படத்தின் பிற கருவிகளும் இணையும் போது, எழுத்தாளர் தொட நினைக்கும் விஷயங்களை இன்னும் மேம்படுத்திக் காட்ட முடியும். திரை இயக்குனர் மூல படைப்பிலிருந்து சுதந்திரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அவர் திரைப்படத்திற்காக சில பாத்திரங்களை சேர்க்கலாம் அல்லது சிலரை நீக்கவும் செய்யலாம். பாயாசம் குறும்படம், அத்தகைய படைப்பூக்க விவாதத்தின் மூலம் உருவாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவுக்கும் இலக்கியத்துக்குமான உரையாடல் மேலோட்டமாகவே இருந்து வந்துள்ளது; சில விதிவிலக்குகளைத் தவிர்த்து பார்த்தால், குறிப்பிடும்படியான தழுவல்கள் அரிதானதே. கே. ராம்நாத் இயக்கத்தில் வெளியான ஏழை படும் பாடு (1952) படம் விக்டர் ஹியூகோவின் லே மிஸ்ரபில் நாவலை ஒட்டி எடுக்கப்பட்டது. நினைவுக்கு வரும் மற்றொரு எடுத்துக்காட்டு ஜெயகாந்தன் தன் கதையைக் கொண்டு எடுத்த யாருக்காக அழுதான் (1966). எழுத்தாளர் தன் சொந்த இலக்கிய படைப்பைக் கொண்டு தானே படம் இயக்கிய அபூர்வமான நிகழ்வு இது.

இலக்கிய ஆக்கத்தை ஒட்டி திரைப்படம் எடுக்கப்படும் போது, அக்கதையின் அடிப்படையில் தன்னளவில் அசலான ஒரு படைப்பையே இயக்குனர் உருவாக்குகிறார். சினிமாவின் பிரத்யேக பண்புகளை பயன்படுத்தியும், படைப்பூக்கத்துடனும், கேமராவின் வழி கதைக்கு தன் சொந்த அர்த்தத்தை அளிக்கிறார். எனவே இலக்கிய மூலத்தை திரைப்படத்துடன் ஒப்பிடுவது சரியல்ல. அடிப்படையில் இரண்டு வெவ்வேறு இயல்புகளைக் கொண்ட ஊடகங்களின் படைப்புகள் அவை. பாயாசம் மூலம் வசந்த் சாய் இதை வெற்றிகரமாக சாதித்திருப்பதால், இப்படம் நம் நினைவில் வெகுநாள் நீடிக்கும்.

தியடோர் பாஸ்கரன்

தமிழில் டி.ஏ. பாரி

குறிப்பு - ஜெயகந்தனின் திரை உலகம் - Frontline இதழில் 2015இலும், பாயசம்: அச்சிலிருந்து திரைக்கு - Frontline இதழில் 2021இலும் ஆங்கிலத்தில் வெளியானவை.

(பாயசம்: சிறுகதை)

தி. ஜானகிராமன் தமிழ்விக்கி


தியடோர் பாஸ்கரன் தமிழின் முன்னோடி சூழலியல் ஆளுமை. தமிழில் சூழலியலை முதன்மைப்படுத்தி எழுதியவர். சூழலியலுக்கான சொற்றொடர்களை உருவாக்கியவர். சினிமாவின் மீது பண்பாட்டு நோக்கில் ஆய்வுகள் செய்திருக்கிறார். நாடகங்களை பற்றியும் ஆய்வுகள் செய்திருக்கிறார். தன்னுடைய இளமை முதல் வரலாற்றில் ஆர்வமுடைய பாஸ்கரன், பிரபல ஆங்கில பத்திரிக்கைகளில் வரலாற்றுக் கட்டுரைகளை 1967 முதல் தொடர்ந்து எழுதி வருகிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான தொடர் செயல்பாடுகளின் மூலம் அவர் இத்துறைகளுக்கு பெரும் பங்களித்திருக்கிறார். பொதுவாக இந்த தளங்களில் எழுதப்படும் மிகை உணர்வுகள் தவிர்த்து தரவுகளின் அடிப்படையில் அழகியல் ரசனையுடன் எழுதியவர்.



டி.ஏ.பாரி இலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர். ஈரோட்டில் வசிக்கிறார். ஆங்கில சிறுகதைகளை, பிரதானமாக ஐசக் பாஷாவிஸ் சிங்கரின் கதைகளை மொழியாக்கம் செய்து வருகிறார்.