நெட்டப்பாக்கம் சூரபத்மன் |
ஆடல்- கம்பப்பாடல்கள் பகுதி- 1
1.3 சூரசம்காரம் : முத்தியால்பேட்டை
சித்தேசன் நுதல்விழியில் வருசிறிய பாலனோ
சிற்றாடை யணியுமயில் ஒத்தாடும் இமயமகள்
செப்பாடு முலையில்வரும் அமுத நிகர் வாயனோ
திக்காரன் அமரரெதிர் புகழுமுதல் வீரனோ....
மொய்த்தோகை நிழலில்உல கினைவளையும் வேலனோ
முத்தாலு நகரில்வளர் குமரகுரு நாதனே
- முத்தியாலுப்பேட்டை முருகப்பெருமான் மீது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய குமருகுருநாதன் திருவகுப்பு
முத்தியால்பேட்டை |
முத்தியால்பேட்டை முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி சூரசம்கார விழா தொடர்ந்து நூற்றி ஐம்பது வருடங்களுக்கு மேல் நடக்கிறது. 2023ல் நடந்த சஷ்டி விழா தொடர்ந்து 162ம் ஆண்டாக நடப்பதாக அறங்காவலர்கள் தெரிவித்தனர்.
முதல்நாள் இரவு சந்திரபிரபை, இரண்டாம் நாள் சூரிய பிரபை, மூன்றாம் நாள் கற்பக விருட்ச வாகனங்களில் முருகன் உலா வருகிறார். நான்காம் நாளிலிருந்து ஆறாம் நாள்வரை மூன்றுநாட்கள் சூரசம்ஹாரம் நடைபெறுகின்றது. பின் ஏழாம் நாள் திருக்கல்யாணம், சேனைத்தலைவர் மரபினர் சீர்வரிசை வழங்க நடைபெறுகிறது. எட்டாம் நாள் குதிரை வாகனம், ஒன்பதாம் நாள் புஷ்ப விமானம், பத்தாம் நாள் பஞ்சமூர்த்தி புறப்பாடு இளைஞர்கள் விழா என்று கொண்டாடப்படுகின்றது. இறுதிநாள் கோவிலில் சங்காபிஷேகம் நடக்கின்றது. கொடியேற்றம் முதல் சங்காபிஷேகம் வரை மொத்தம் பன்னிரண்டு நாட்கள் விழா நடக்கிறது.
விழா நாட்களில் நவவீரர்கள் கோவிலில் இருந்து வேலை எடுத்துக்கொண்டு ஊர்வலம் வருகின்றனர். அப்போது முருகன் குறித்த பாடல்களை பாடுவது வழக்கம். முத்தியால்பேட்டை சம்கார நிகழ்வில் அசுரர்கள் மூன்று பேருக்கும் தொழில்முறை கூத்து கலைஞர் ஒருவரே வேடமிடுகின்றார். ஒவ்வொரு அசுரராக யுத்தத்திற்கு வரும் போதும் நவவீரர்களுக்கும் அவருக்கும் தர்க்கம் நடக்கின்றது. இதற்கென வழக்கத்தில் உள்ள பாடல்களை பாடுகின்றனர். சம்பிரதாயமான கூத்து பிரதி ஒன்று முத்தியால்பேட்டையில் உள்ளது.
முத்தியால்பேட்டை ஆலய திருவிழாவில் முருகன் அசுரர்களை வதைக்கும் நிகழ்வு மூன்று நாட்கள் நடக்கின்றது. விழாவின் நான்காம் நாள் பகலில் கஜமுகாசுரன் புறப்பட்டு ஊர்வலம் வருகிறார். இரவில் முருகன் அவனை சம்காரம் செய்கிறார்.
தோர் புத்தியை சொன்னேன்
அந்த பாதகன் அஞ்சிடவில்லை
அமர்செய்ய வருக என்றுரைத்தான்
கந்தனே உந்தன் வேலினை விடுத்து
கயவனை அழித்திட நினைவாய்
அந்தமா எங்கள் ஆறுமுகத்தரசே
அப்பனே ஒப்பிலா மணியே
(கூத்து பிரதியின்படி நாரதரை முருகன் தாருகனிடம் தூது அனுப்புகிறார், முருகன் குறித்த விவரங்களை தாருகன் கேட்டுத்தெரிந்து கொள்கிறான். முருகனிடம் மீண்டு வந்த நாரதர் அசுரன் தூது மறுத்து விட்டதை தெரிவித்து, போர் நடத்துமாறு கூறும் பாடல்)
முத்தியால்பேட்டை பட்டிணப்பிரவேசம் |
சிங்கமுகாசுரன், முத்தியால்பேட்டை |
ஐந்தாம் நாள் பகலில் சிங்கமுகாசுரன் போருக்கு வருகிறான். அன்று சிங்கமுகாசுரன் ஜெயிப்பது மட்டுமல்லாமல் வீரபாகு சகோதரர்களை சிறையில் போட்டு விடுகிறான். அன்று சிங்கமுகனை வெல்லமுடியாத முருகன் இரவு அன்னையிடம் சென்று வேல் வாங்குகிறார். இந்த வேலை அம்மன் சன்னதியிலிருந்து முருகனுக்கு கொடுப்பதற்காக எடுத்துச்செல்லும் அர்ச்சகருக்கு அருள் வருகின்றது. வேலை கொண்டு வரும் அவரை இருவர் பிடித்துக்கொண்டு வரவேண்டியுள்ளது.
வேல்தனை நம்பி என்னால் வீணாக மடிய வேண்டாம்
வேல்தான் கொல்லாதென்னை உன்னை சுமந்து ஈன்றெடுத்த
மால் சகோதரியான மாதாவிடம் போய்ச்சேர்வாயே
சிங்கமுகன் முருகனிடம் சொல்லும் பாடல்
ஆறாம்நாள் காலை முருகன் அன்னையிடம் வாங்கிய வேலைக் கொண்டு சிங்கமுகனை வதம்செய்து விடுகிறார். மதியம் தாரகாசுரன் களத்துக்கு எழுகிறார் (சூரபத்மனை அவ்வாறே முத்தியால்பேட்டையில் குறிக்கின்றனர்) அன்று அதிகாலை முதல் மூலவரான முருகனுக்கு ஊரார் மாவிளக்கு படைத்து வழிபடுகின்றனர்.
வருடா வருடம் முத்தியால்பேட்டையில் மாவிளக்கு இடுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. விற்பனையான மாவிளக்கு வழிபாட்டு சீட்டின் அடிப்படையில் 2023ம் ஆண்டில் 1500 பேர் முருகனுக்கு மாவிளக்கு இட்டு வழிபட்டதாக விழாக்குழுவினர் சொல்கின்றனர். கம்பம் ஏறும் சடங்கில் ஈடுபடும் பக்தர்களின் குடும்பத்தினர் கம்பத்தடியில் மாவிளக்கு போடுகின்றனர். அனைவரும் மாவிளக்கை மீண்டும் வீட்டுக்கு எடுத்துச்சென்று அங்கு மீண்டும் முருகனை வணங்கிய பிறகு மாவிளக்கை உண்டு தங்கள் விரதத்தை முடித்துக்கொள்கின்றனர்.
ஐந்தாம் நாள் பகலில் கம்பம் நடப்படுகின்றது, ஆறாம் நாள் சிங்கமுகனை முருகன் ஜெயித்தபிறகு கம்பம் ஏறும் சடங்கு நடக்கின்றது. அதன்பிறகே பெரியசூரன் வதைக்கப்படுகிறான். முருகன் புஷ்பவிமானத்தில் சென்று சம்ஹாரம் செய்கிறார், பின்னர் தங்கமயில் வாகனத்தில் உலா வருகிறார்.
முத்தியால்பேட்டையில் பெரிய சூரன் சம்கார நிகழ்வுக்கு முன்னர் பட்டணப்பிரவேசம் நடக்கிறது. பத்தடி உயர சூரன் சிலையோடு சூரன் வேடமிட்டவரும் சேர்ந்து பட்டினம் பார்க்க போகிறார்கள். அப்போது சூரனுடன் குழந்தைகள் இளைஞர்கள் சேர்ந்து ஊர்வலமாக வருவார்கள். சூரன் பட்டினப்பிரவேசம் அனைவருக்கும் உற்சாகமளிப்பதாக இருக்கிறது, வீட்டில் செய்த சுண்டல், கொழுக்கட்டை முதலியவற்றை ஊர்வலக்காரர்களுக்கு தருகிறார்கள். தான் நினைத்தது நடந்துவிட்டால் சூறைவிடுவதாக வேண்டிக்கொள்பவர்கள் இனிப்புகள் பழங்கள் என்று சூறை விடுகிறார்கள். வேடமிட்ட சூரனுக்கும் மரியாதைகள் உண்டு, சூரன் மக்களால் வழிபாட்டு நிலைக்குள்ளே கொண்டு செல்லப்படுகிறார்.
முத்தியால்பேட்டை |
1.4 சூரசம்காரம் : திருவாமாத்தூர்
சமனிலை யேறப் பாறொடு...... கொடிவீழத்
தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல
தசையுண வேல்விட் டேவிய...... தனிவீரா
அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள் முத் தார்நகை
அழகுடை யாள்மெய்ப் பாலுமை...... யருள்பாலா
அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய
அழகர்தென் மாதைக் கேயுறை...... பெருமாளே
கருமுகில் போல் என்று துவங்கும் ஆமாத்தூர் திருப்புகழ்
விண்ணவர் தருவான கற்பகமரத்தை அழிக்கும் வலிமையுடைய அசுரர்கள் தம் சுற்றத்தோடு இறந்துபட, யமன் தொழில் பெருக, பருந்துகளோடு காக்கைகள் போர்க்களத்தில் உண்பதற்கு விரும்பிக்கூட, பேய்கள் மகிழ்ச்சியால் சந்தங்களை பாடியபடி ஊன் உண்ண தனது வேலை செலுத்தியவனே. திருமாலின் தங்கையாகிய முத்தாம்பிகை ஈன்ற புதல்வா. பாம்பும், சிறுபீளை மாலையும், மதியும் சடையில் சூடிய அழகியநாதரின் திருவாமாத்தூரில் உறையும் பெருமாளே
திருவாமாத்தூரை பொறுத்தவரை கந்த ஷஷ்டி திருவிழாவில் சம்காரம் ஒருநாள் மட்டும் நடக்கின்றது. ஆறாம் நாள் மாலை ராஜகோபுரத்தின் கீழே சூரசம்காரம் துவங்கும், ஆனால் ஐதீகமாக அன்று காலைமுதலே கூத்து துவங்கிவிடுகிறது. காலையில் முதலில் கம்பம் ஏறும் சடங்குக்கான கம்பம் நடப்படுகிறது. அதன் பிறகு வீரபாகு தேவர்கள் ஆற்றில் குளித்துவிட்டு அபிராமேஸ்வரர் ஆலயத்துக்கு வெளியே பம்பை ஆற்றங்கரையில் உள்ள திருமால் துயர் தீர்த்த விநாயகர் கோவிலில் வழிபட்டு தங்கள் ஊர்வலத்தை துவங்குகிறார்கள்..
சோதியே போற்றி போற்றி சுடலை நின்றாடி போற்றி
வேதனை சூரனாலே மேதினியிற் படவுமாட்டோம்
தீதரு குமாரரான செல்வரை அனுப்புவீரே..
மாடவீதிகளில் முருகன் துதிப்பாடல்கள், நடராஜப்பத்து முதலிய பாடல்களை பாடியபடி வலம் வருகின்றனர். கௌமாரமடம், கம்பத்தடி இங்கெல்லாம் நின்றுவணங்கியபடி கோவிலுக்கு வந்து அபிராமேஸ்வரர் முன்பு தேவர்கள் படும் துயரை பாடல்களாக சொல்கின்றனர், இவை திருவாமாத்தூர் சம்கார கூத்துப்பிரதியில் உள்ள பாடல்கள்
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகி,
கருணை கூர் முகங்களாறும், கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே,
ஒருதிரு முருகன் வந்து, ஆங்கு, உதித்தனன் உலகமுய்ய
என்ற கந்தபுராணப்பாடலை நவவீரர்கள் கோவில் கருவறை எதிர்நின்று பாடுகையில் முருகன் பிறந்துவிட்டதாக ஐதீகம்.
பிறகு அதே போல எதிரே உள்ள முக்தாம்பிகை கோவிலிலும் சென்று முறையிடுகிறார்கள், மூன்று அசுரர்களை வெல்ல மூன்று வேல்கள் பெறுகிறார்கள். அடுத்ததாக கம்பத்தடியில் வீரபாகு தேவர்களின் வீடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மாவிளக்குகள் இடப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்பின்னர் வீரபாகுவினர் வீட்டிற்கு சென்று விரதத்தை நிறைவு செய்கின்றனர். மாலை இவர்கள் கூத்துக்கு தயாராவதால், மதியமே விரதத்தை முடித்துக்கொள்கின்றனர்.
ஆமாத்தூர் சூரசம்கார கூத்தில் முருகன் கட்சியில் நவவீரர்களும் அவர்களுக்கெதிராக மூன்று சூரசகோதரர்களும் இடம்பெறுகின்றனர். வழக்கமாக கோவில்களில் மூன்று அசுரர்களில் முதலில் யானைமுகம் கொண்ட தாருகனையும் அதன்பின்னர் சிங்கமுகனையும் இறுதியாக சூரபதுமனையும் முருகன் வீழ்த்துவார். திருவாமாத்தூரில் சூரன்சிலை வழக்கத்தில் இல்லை. கூத்தாடும் மனிதர்களே முகமூடி அணிந்து அசுரர்களாகின்றனர். முகமூடி அணிந்து கூத்தாடுவது பழைய கூத்து மரபின் நீட்சியாக இருக்கலாம், தமிழகத்தில் உள்ள நிகழ்த்துக்கலை வடிவங்களில் முகமூடி அணியும் வழக்கம் கைசிக புராண நாடகத்திலும், இரணிய சம்கார நாடகத்திலும், பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்திலும் பின்பற்றப்படுகிறது. திருக்குறுங்குடியில் நடக்கும் கைசிக புராண நாடகத்தில் மரபாக பிரம்மாராட்சதன் வேடமிடுபவர் முகமூடி அணிந்தே ஆடுகிறார். கடவுள் அல்லாத எதிர்மறைப்பாத்திரங்களும் முகமூடி அணிவதற்கு இந்த நாடகம் ஒரு உதாரணம். அந்த முகமூடி உள்ளிட்ட பிரம்மராட்சத அணிகலன்கள் விழாநாட்களில் கூத்தாடுபவரால் தனியே பூஜிக்கப்படுகிறது.
திருவாமாத்தூரில் முழுக்க கூத்து வடிவில்தான் சம்காரம் நிகழ்கிறது. முருகனின் உற்சவ மூர்த்தி புறப்பாடாகி கோவிலின் ராஜகோபுரத்தின் அடியில் எழுந்தருள்கிறார், முருகனை துதிக்கும் தோத்திரப்பாடல்களை ஒலிப்பெருக்கி உதவியோடு பாடுகின்றனர். நவவீரர்கள் முருகனது அருகில் ஒன்று சேர்கின்றனர். கோவிலுக்கு எதிரே உள்ள அர்ச்சகரின் வீட்டின் முன்புறத்தில் தாருகன், சிங்கமுகன், சூரபதுமன் என்ற மூன்று அசுரர் வேடமிடுபவர்களுக்கும் ஒப்பனை நடக்கின்றது, அசுரமுகமூடிகளுக்கு தர்ப்பை, பூ இட்டு வெற்றிலை பாக்கு பழம் தட்சிணை வைத்து வணங்கப்படுகின்றது.
அசுரர்களின் வருகைக்காக காத்திருக்கும் திருவாமாத்தூர் மக்கள் |
அசுரர்களின் வருகை |
இன்னிசை நவரத்தினத்தேர்மேல் வீரவாகு தேவர்கள்
மண்மிசை வீரபூதசேனை வாத்தியம் முழங்க
வண்ணமாய் திருச்செந்தூரில் வளமுடன் வந்துசேர்ந்தார்
முருகன் எதிரே ஒரு தற்காலிக மேடையில் மூன்று அசுரர்களும் நின்றுகொள்கின்றனர், அது சூரனின் ‘தேசவிசாரணை’. சூரன் சகோதரர்களிடம் தனது நாட்டுவளம் கேட்கிறான். தாருகனும் சிங்கமுகனும் தமையனிடம் பேசி தங்கள் பிறப்பையும் சிவனாரிடம் வரம்பெற்றதையும் பூர்வாங்கமாக கூறுகின்றனர். முருகன் பக்கம் நிற்கும் நவவீரர்கள் தேவர்களின் நிலைக்கு வருந்தி முருகனின் ஆணைப்படி சூரனிடம் தூது செல்ல கிளம்புகின்றனர். அசுரர்களிடம் வந்து வாதிடுகின்றனர், பாடல்களும் வசனமுமாக இருதரப்பும் சண்டையிடுகிறார்கள். சூரன் சமாதானத்தை ஒப்புக்கொள்வதில்லை, பின்வரும் வீரர்கள் முருகனிடம் நடந்ததை சொல்கிறார்கள்.
சூரனின் தேச விசாரணை |
சூரனிடம் தர்க்கம் புரியும் நவவீரர்கள் |
முருகனுடன் முறையிடும் நவவீரர்கள் |
கிரவுஞ்ச கிரிதனில் கெடிலத்துள் அடைபட்டு மிதிபட்டோம் கந்தவேலா
உதைபட்டு மிதிபட்டு சிறைதனி லடைபட்டோம் என் கந்தனே கந்தவேலா
உபதேசம் எங்களுக் குறைத்திட்ட அய்யனே என் அப்பனே முருகவேலா
தறிகெட்ட தாருகன் சிரமதை எய்திட நீ வருகுவாய் பழனிவேலா
மதிகெட்ட அசுரர்குலம் அடியோ டழித்திட நீ வருகுவாய் குமரவேலா
பச்சைமயில் வாகனா பழனிமலை வேலவா விரைந்து மயிலேறி வருக
அபயமளித்துமே அய்யனே எங்களை உயிர்காத்து இரட்சிப்பாயே!!
தாருகன் சிறையில் நவவீரர்கள் பாடும் அபயப்பாடல்
சிறையெடுக்கப்பட்ட நவவீரர்கள் |
கோவிலின் மாடவீதிகளில் ஊர்வலம் போகின்றது. ஒவ்வொரு மூலையிலும் ஒரு அசுரனை முருகன் எதிர்கொள்கிறார். உண்மையில் அசுரர்களிடம் தர்க்கம் செய்வதும் பொய்ச்சண்டை போடுவதும் நவவீரர் வேடமிட்டவர்கள்தான். இதில் பிரதானமாக இளையவர்கள் பொய் ஆயுதங்களை வைத்து செய்யும் சண்டை சுற்றியுள்ள பெண்கள் குழந்தைகள் அனைவரையும் மகிழ்விக்கிறது. மக்கள் வழக்கில் வீரபாகு, வீரராகு என்று சொல்லப்படுவார். நவவீரர்களையும் வீரராகு என்று சொல்வதுண்டு. புதுச்சேரியில் இதே பெயரில் ஒரு அரசியல்வாதியின் பெயரை சுவரெழுத்துக்களில் பார்க்க முடிந்தது.
தாருகன் பட்டபிறகு சிங்கமுகனை போருக்கு ஏவுகிறான் சூரன், சிங்கமுகனோ அண்ணனைத் திருத்த புத்திசொல்கிறான். அறிவுரையை மறுத்து சிங்கனை கோழையென்று திட்டுகிறான் சூரன். செஞ்சோற்று கடனுக்காக போருக்கு எழுகிறான் சிங்கன்.
வாசமாம் முருகன் தன்னை வணங்கினால் வாழலாமே
ஈசனார் வரத்தால் வந்த இனியதோர் செல்வமெல்லாம்
நாசமாய் போவதற்கு நாள் பார்த்து வைத்துக்கொண்டீர்,
விதிப்படி நடக்குமானால் வேறொன்றும் நடக்கலாது
எனக்குறவாகப்பேசி இயல்வதில் பயனுமில்லை
என்னுடைய இனத்தவரை கூட்டி ஏகுவேன் சமர்க்கு நானே
அசுரர்களில் ஆற்றல் மிக்கவனாக முருகனை எதிர்க்கிறான். பின்னர் முருகனால் ஆட்கொள்ளப்படுகிறான். சிங்கனும் பட்டபிறகு அழுதுபுலம்புகிறான் பெரிய சூரன். பின்னர் போர்வெறியுடன் முருகனை எதிர்கொள்கிறான்.
பரம்பரையாக முருகனை வணங்கும் இந்த அசுரவேடமிட்டவர்கள், கூத்துநேரத்தில் அதே முருகனையும் வீரபாகு சகோதரர்களையும் ஏசுகிறார்கள். அடேய் ஆண்டிப்பண்டாரங்களா, பேயாண்டி பிள்ளைகளா, அறியாப்பசங்களா என்றெல்லாம் திட்டுகிறார்கள்.
சூரன் : குந்த இடமில்லாமல் காலைத்தூக்கி அப்பா கூத்தாடினாரே
வீரபாகு : மதிகெட்ட மூடனே நடமிட்டு காளியின் மமதையை ஒழித்தாரடா
சூரன் : சாதிக்க வந்தியோ ஆண்டிமகன் உன்னையும் சரம் ஒன்றில் வெல்வேனேடா
வீரபாகு : மேதினியில் உந்தனுக்கு எதிர் நிற்க இல்லையென மேட்டிமைகள் பேசாதடா
பெரிய சூரன் வேடமிடுபவர் சட்டி உடைத்து கந்தை கிழிப்பது இந்த கூத்தில் இன்னும் விறுவிறுப்பை கூட்டும் ஒன்று. மண்சட்டியில் கந்தைத்துணியை சுருட்டி வைத்திருப்பார்கள், ஆண்டிப்பண்டாரங்களா உங்களுக்கு கோவணம்தானே வேணும் இந்தாங்கடா உங்களுக்கு கந்தைத்துணி என்று கிழித்து வீசுவார். பொங்கல் வைக்கும் மண்பானைகளை முருகனை நோக்கி வீசி இந்தாங்கடா பிச்சை எடுப்பதுதானே உங்க தொழில் இந்த பொங்கலை தின்னுங்க என்பார் சூரன். வீரபாகு தரப்புக்குத்தான் சமாளிக்க வழியிருக்காது.
சூரபத்மனும் வீரபாகுவும் தர்க்கம் செய்கின்றனர் |
சுட்டி உடைக்கும் சூரன் |
கம்பத்தடியில் சூரன் |
சூரனை வெற்றி கொள்ளும் முருகன் |
பெரியசூரனின் வதம் கம்பத்தடியில்தான் நடக்கிறது, கம்பத்தின் பின்னர் மாமரக்கிளை கட்டப்பட்டிருக்கும், பெரியசூரன் மாமரமாகிறார் முருகன் வேல் வருகையில் அந்த மரக்கிளை ஒடித்துப்போடப்பகிறது. பெரிய சூரனின் முகமூடி மட்டும் முருகனிடம் சென்றுவிடுகிறது. சூரபதுமன் இறப்பின்றி மயிலும் சேவலுமாக முருகனை அடைந்துவிட்டதால் இவ்வாறு செய்யப்படுகின்றது. பெரியசூரன் பட்டவுடன் திருவாமாத்தூரில் கம்பம் ஏறும் சடங்கு நடைபெறுகின்றது. இந்த சடங்கு நெட்டப்பாக்கம் மற்றும் முத்தியால்பேட்டையில் சிங்கமுகனை கொன்றபின்னர், சூரனை இறுதிக்களம்காணும் முன்னர் நடக்கின்றது. சூரசம்காரம் முடிந்தபின்னர் கோபம் தணிய அபிஷேகம் நடந்து முருகனுக்கு தயிர்ச்சோறு படைக்கப்படுகிறது.
1.5 சூரசம்காரம் : நெட்டப்பாக்கம்
நெட்டப்பாக்கம் பல கிராமங்கள் சந்திக்கும் மையப்பகுதி. இங்கு ஆடப்படும் சூரசம்கார கூத்தானது கந்தபுராணத்தின் யுத்தகாண்டத்திற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கின்றது. ஒவ்வொரு அசுரனுக்கும் முருகன் தரப்புக்கும் நடந்த சண்டைகள் விரிவாக நடத்தப்படுகின்றன. பிற இடங்களில் ஒருவரோ அல்லது அதிகம் மூவரோ தான் அசுரர் தரப்பில் வேடமிடுபவர். நெட்டப்பாக்கத்தில் சூரன், சிங்கன், தாருகன் மட்டுமல்லாமல் அசுரேந்திரன், பானுகோபன், அக்கினிமுகன், தருமகோபன் முதலிய வேடங்களையும் புனைகின்றனர். பிற ஊர்களை ஒப்பிடுகையில் இங்கு கூத்தில் பொதுமக்கள் பங்கேற்பு அதிகம். நவவீரர்களாக செங்குந்தர்கள் இருக்க, பிற வேடங்களை இப்பகுதியில் உள்ள வன்னியர், ஆசாரி, நாயுடு, செட்டியார் உள்ளிட்ட பிற சமூகத்தவர்கள் ஏற்று நடிக்கின்றனர். அசுரர்கள் எல்லோரும் தெருக்கூத்து பாணியில் அரிதாரம் பூசி, அணிகலன்கள் அணிந்து கொள்கிறார்கள், இவையெல்லாம் உபயதாரர்கள் மூலம் தொழில்முறை கூத்துக்கலைஞர்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். அசுரர்கள் சகடையில் (சிலை வைத்திருக்கும் வண்டி) நின்று தங்கள் பாடல்களை பாடி நடிக்கிறார்கள்.
நெட்டப்பாகம் |
சரகணத்துதித்தாய் போற்றி
கண்மணி முருகா போற்றி
கார்த்திகை பாலா போற்றி
தண்மளிர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி
பின்மதி வதனவள்ளி வேலவா போற்றி போற்றி
வேல் ஊர்வலத்தில் பாடப்படும் பாடல்
திக்கெல்லாம் விஜயம் செய்து தேவரை ஜெயிக்கவேண்டும்
ஒக்க சாரதியே நீயும் வீறுடன் குபேரன் வாழும்
பக்குவ அளகை நோக்கி பரிகளை நடத்துவாயே
விழாவில் பெரிய சூரன் (சூரபத்மன்) வேடமேற்பவர் அனுபவஸ்தராக இருக்கிறார், பலநேரங்களில் கூத்து வாத்தியார் போல அவரே பிறவேடங்களை நெறிப்படுத்துகிறார். பிற அசுர வேடக்காரர்கள் அவர்களுடைய ஒருநாளில் மட்டுமே வேடமிடவேண்டியது வரும். பெரிய சூரன் வேடமிடுபவரின் பங்களிப்பு மூன்றாம் நாளிலிருந்து ஆறாம் நாள்வரை நீடிக்கிறது. அவரது பங்களிப்புக்கான மரியாதைக்காக பெரிய சூரனுக்கு மட்டும் கோவில் சார்பில் வேட்டியும் சிறுதொகையும் அளிக்கும் வழக்கம் நெட்டப்பாக்கத்தில் உள்ளது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு சந்திரன் குருசாமி என்பவர் பெரிய சூரனாக இருந்தார், சிலகாலம் சுந்தரராசு அந்த வேடமிட்டார், அவர்களுக்கு பின் தற்பொழுது சந்திரன் குருசாமியால் பயிற்றுவிக்கப்பட்ட ராமலிங்கம் பெரிய சூரன் வேடமிடுகிறார்.
பெரிய சூரன் வேடத்தில் ராமலிங்கம் |
சூரன் வேடமிடும் ராமலிங்கம் |
திக்குவிஜயத்தில் தேவர்களையெல்லாம் வென்றுவிடும் அசுர சகோதரர்கள் வெல்லப்பட்ட தேவர்களின் பெண்களை மணந்து கொள்கிறார்கள். நிருதியின் பெண்ணை தாருகன் கடத்தி மணம் செய்கிறான், அதுபோல அக்கினியின் மகளை சிங்கமுகன் மணக்கிறான், சூரன் மணக்கும் பதுமகோமளை விஸ்வகர்மனின் மகள் என்பதெல்லாம் கூத்தில் சொல்லப்படும் தகவல்கள். பின் தனது சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் தனது நாட்டை சுற்றிலுமுள்ள ஒரு தேசத்தை அளித்து தனது நகருக்கு காவலாகவும் இருந்து அவற்றை ஆண்டுவரச்சொல்லி விடை கொடுக்கிறான் சூரபதுமன்.
தொழுதிடா என்னை நீயும் சீருடன் காத்திடாயே
தாருகனிடம் சூரபதுமன் சொல்வது
மாயமாபுரியில் சென்றுநீ கற்றரசாளுவாயே
சிங்கமுகனிடம் சூரபதுமன் சொல்வது
நான்காம் நாள் பகலில் தாரகாசுரன் சம்காரம் நடக்கிறது. ஐந்தாம் நாள் தாருகன் மகன் அசுரேந்திரன் தன் பெரியதந்தையிடம் சென்று தனது தகப்பன் இறந்ததை கூறுவான்.
அசைவிலா எனது தந்தை அந்த அறுமுகன் கையால் மாண்டார்
வசையுறும் தாய்மாரெல்லாம் வளரும் அக்கினியில் வீழ்ந்தார் இதை
இசைவிலார் உன்னிடத்தில் நான் கலங்கியே உரைக்க வந்தேன்.
இதைக்கேட்டவுடன் சூரபதுமன் தாருகனுக்காக அலறுகிறான், முருகனை வெல்வேன் என்று சூளுரைக்கிறான்
தாருகனும் முருகன் கையால் போவதற்கு காரணமோ அறியேன்
இந்த புகழ்மிக்க அசுரேந்திரன் புகன்றபோது
நாவலற விழிசிவக்க கோபமேற நால்வகை சேனைகூட்டி சமரே செய்து
மேவிய சிறுவன் தன்னை மடிக்கிறேன் நொடிக்குள்ளாக
ஐந்தாம் நாள் முழுவதும் பல நிகழ்வுகள் நடக்கிறது. சதமுகன், வச்சிரவாகு, மூவாயிரவர் ஆகியோர் வதம் நடக்கிறது, இப்பகுதிகள் பாடல்களாக பாடிக்கடக்கப்படுபவை. வச்சிரவாகு ‘பட்ட’ பிறகு மதியம் இரண்டு மூன்று மணியளவில் கோவிலுக்கு எதிரே கம்பம் நடப்படுகின்றது.
ஐந்தாம் நாள் பிற்பகலிலேயே பானுகோபன், சூரபத்மன், இரணியன் ஆகியோரோடு யுத்தம் நடக்கிறது. அசுரர் படை பின்னடைகிறது. அப்போது அக்கினிமுகன் சண்டைக்கு எழுகிறான், சண்டையில் ஒரு சிறப்பு உள்ளது. காரணம் அக்கினிமுகன் தீவளர்த்து தனது குலதெய்வமான காளிகாதேவியை வரவழைக்கிறான். தனக்காக தான் வழிபடும் காளியை வீரபாகுவுடன் சண்டைசெய்ய ஏவுகிறான்.
அச்சமும் உன் தனக்கு வேண்டாம்
ஒக்கவே வீரவாகு உடலிரு கூறாய் வெட்டி
தக்கன ஜெயமுனக்கு நான் தருகிறேன் தருகிறேனே
என்ன வேண்டும் பக்தா என்று அக்கினிமுகனிடம் கேட்டுவரும் காளி சூரசம்மார கூத்தில் வரும் ஒரே பெண்பாத்திரம். வீரபாகு எப்படி காளியை எதிர்ப்பது என்று பயப்படுகிறார். முருகனிடம் உனது தாயே இப்படி செய்யலாமா என்று முறையிடுகிறார். நாரதர் வீரபாகுவிடம் வருவது துஷ்டசக்தி எனவே அஞ்சாது போரிடுமாறு அறிவுரை சொல்கிறார். அதன்படி காளியுடன் சண்டைபோட்டு அவளை வென்று தங்களிடம் மீண்டும் யுத்தத்திற்கு வருவதில்லை என்று சாத்தியவாக்கு வாங்கிக்கொள்கிறார் வீரபாகு. வீரபாகு காளி சண்டை கந்தபுராண அக்கினிமுகன் வதைப்படலத்திலும் இடம்பெறுகிறது. இந்த காளி சண்டை சூரசம்காரம் நடக்கும் பிற ஊர்களில் இடம்பெறுவதில்லை. இது நடந்த பின்னர் அக்கினிமுகன் வதையும் நடக்கிறது. நீண்ட அந்நாளின் இரவில் முருகனுக்கு அபிஷேகம் நடந்து பர்வதவர்த்தினி அம்மனிடம் வேல்வாங்குகிறார். ஆறாம் நாள் தர்மகோபன், பானுகோபன், சிங்கமுகன் ஆகியோரது வதம் நடக்கிறது. தர்மகோபன் சூரனின் மந்திரி.
முருகனுடன் வீரபாகு புறப்பாடு |
காட்டியே விட்டு உன்னை களத்திலே மடிந்துபோனார்
மாட்டினில் ஏறும் ஈசன் தந்த வரமதை அழிப்பாயோ போடா
நவவீரரை தனது வேலால் மீட்டபின்னர், தேரை தனது தந்தையிடமே திரும்ப அனுப்புகிறார் முருகன், சூரன் இந்திர ஞாலத்தேர் போனாலென்ன சேம ரதம் என்னும் தேரில் ஏறி உன்னை வெல்வேன் என்று ஆர்ப்பரிக்கிறான்.
செங்கைவடிவேல் முருகனே சேமரதம் எறிவந்துனை வளைத்து
பலசீர் பகழி தனைவிடுத்து பார்முழுதும் அண்டமுறு குலகிரிகளும்
அந்த குமரி பாதாளமுருளவே பகைவர் முடி அற்றுவிழ
வில்லங்கு பாணமழை பொழிந்தோட கொல்லரிவாய் பேய்கள் மகிழ
குலவுநின் சேனைகள் மடித்திடுவேனே வந்துபார் குமரேசனே
அன்று மாலை முருகனது அருளால் வெளிவரும் வீரபாகு தேவர்கள் கம்பம் ஏறி சபதம் முடிக்கிறார்கள். பின்னர் முருகன் சூரனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி அவனை ஆட்கொள்கிறார், இந்த விஸ்வரூப தரிசனமும் நெட்டப்பாக்கம் சம்மார விழாவின் தனிச்சிறப்பு. பின்னர் மயில் வாகனத்தில் முருகன் வீதியுலா வருகிறார். ஏழாம் நாள் கொடியிறக்கப்பட்டு வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறுகிறது. எட்டாம் நாள் மஞ்சள் நீர் உற்சவம், தெப்ப உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.
விண்ணவர்க்கும் அறியாத விஸ்வரூப தரிசனத்தை கண்டேன்
என் கடம்பமலர் புனைந்த திருத்தோளும் கடம்பும் தாரும்
உன் திருவடிக்கீழ் அடியேனுக்கு தக்கவிடமும்
நெட்டப்பாக்கம் இராமநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்வதற்காக கோவில் புனரமைப்பு துவங்கி பல காரணங்களால் நீண்டகாலம் அது நிறைவடையாமல் இருந்தது., அந்த காலகட்டத்தில் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு சூரசம்கார விழா நடக்கவில்லை. அதோடு சேர்த்து கூத்தும் நின்றுபோனது. கோவிலுக்கு மீண்டும் 2017ம் ஆண்டில் குடமுழுக்கு நடந்த பிறகு இவை அனைத்தும் மீண்டும் துவங்கியது. அப்போது ஊரில் இருந்த ராமலிங்கம் போன்ற அனுபவஸ்தர்களைக்கொண்டு மீண்டும் துவங்கப்பட்டது. குறைந்தது ஐந்து தலைமுறைகள் தொடர்ச்சியாக நடந்த நெட்டப்பாக்கம் கூத்தில் இந்த நீண்ட விடுபடல் காரணமாக என்னென்ன இழப்பு ஏற்பட்டது என்று சொல்லமுடியவில்லை.. தற்போது நாம் பார்ப்பது மீண்ட கூத்து வடிவம்தான்,
ஊர்வாசிகளான முதியவர்கள் ‘பழைய திருவிழா’வை இன்னும் நினைவுகூர்கிறார்கள், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பான திருவிழா அவர்களுக்கு வண்ணமயமான கனவாக நினைவுகளில் எஞ்சுகிறது. அப்போது இருந்த மண்தரை கூத்தாடுபவர்கள் மண்டியிட்டு ஆடவும் வசதியாக இருந்தது, தற்போதைய தார்ச்சாலை அதற்கு வசதியாக இல்லை. முன்பு தெப்ப உற்சவம் அருகிலுள்ள செம்படப்பேட்டை குளத்தில் நடந்தது, தற்போது கோவிலிலேயே சிறிய குளம் செயற்கையாக அமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
ஆனால் அன்றும் இன்றும் இது ஊரின் முக்கியமான திருவிழா, சூரசம்காரம் நடக்கும் எட்டு நாட்களும் நெட்டப்பாக்கம் கிராமத்தில் பெரும்பாலானவர்கள் விரதம் இருக்கின்றனர். அந்த சமயத்தில் வெளியூரில் வசிக்கிற நெட்டப்பாக்கத்தை பூர்விகமாகக்கொண்டவர்கள் அனைவரும் திருவிழாவிற்கு வந்து விடுகின்றனர். பாண்டிச்சேரியிலிருந்து, சென்னை, பெங்களூர், மும்பை வரை வெளியூரிலிருந்து திருவிழாவிற்கு வந்தவர்களை பார்க்க முடிந்தது.
அக்னிமுகன் |
1.7 மூன்று ஆலயங்களிலும் நடக்கும் கூத்து ஒப்பீடு
கூத்து என்றவுடன் தெருக்கூத்தை நினைவுகூரும் பங்கேற்பாளர்கள் சிலர். இதை கூத்து என்று சொல்லக்கூடாது சம்மாரம் என்றுதான் சொல்லவேண்டும் என்று வலியுறுத்தினர்.
பொதுவாக தொழில்முறைக் கூத்துக்கலைஞர்கள் அல்லாது ஊரார் பங்கேற்பில் நடக்கும் நிகழ்வு சம்மாரம். இவ்விழா நடைபெறும் இடங்களில் ஊரார் அனைவரும் வெவ்வேறு விழா நிகழ்வுகளில் பங்களிக்கின்றனர், ஊர்ப்பொது நிகழ்வாகிய இது பல்வேறு தரப்பினரும் பங்கேற்கும் ஒரு கூட்டு முயற்சியே.
இந்த மூன்று ஆலயங்களிலும் சூரசம்கார கூத்து நீண்ட காலம் தொடர்ச்சியாக நடக்கிறது. ஆய்வு செய்யும் இந்தக்காலத்தில் முத்தியால்பேட்டை பெருநகர்ப்பகுதி, நெட்டப்பாக்கம் பல ஊர்கள் கூடுமிடத்தில் உள்ள ஊர், திருவாமாத்தூர் விழுப்புரத்திலிருந்து சற்று விலகியுள்ள சிற்றூர். ஊர்களின் அமைவிடத்தின் தன்மை சம்மார நிகழ்விலும் பிரதிபலிப்பதை காணமுடிகிறது.
முத்தியால்பேட்டையில் அசுரன் வேடம் தற்காலத்தில் கூத்துக்கலைஞரால் கட்டப்படுகிறது. இம்முறை வேறுசில ஊர்களிலும் நடைபெறுகிறது. கூத்தாடும் வழக்கம் குறைந்து சடங்குமுறை மட்டும் தொடர்வதை இது காட்டுகிறது.
திருவாமாத்தூரில் மரமுகமூடி அணிந்து கூத்தாடும் வழக்கம் உள்ளது, இது வழக்கமான தெருக்கூத்து நிகழ்விலிருந்தும் தனித்து தெரியும் வழக்கம். இங்கு செங்குந்தர் சமூகத்தவர் மட்டுமே கூத்து நிகழ்வில் பங்கேற்கின்றனர். நான் காணும்போது பெரிய சூரனாகிய சூரபதுமன் வேடம் அப்பாவும் வீரபாகு வேடம் மகனும் போட்டிருந்தனர்.
நெட்டப்பாக்கம் கூத்தில் பல்வேறு சமூகங்களின் பங்கேற்பு உள்ளது, அதிகமான வேடங்கள் கட்டி ஆடப்படுவதும் இந்த ஊரில்தான் நடக்கிறது.
முத்தியால்பேட்டை |
செங்குந்த முதலியார் சமூகத்தினர் அதிகமாக உள்ள ஊர்களில் இவ்விழா தொடர்ச்சியாக நடைபெறுவதை காணமுடிகிறது. நவவீரர்களாக இருந்து முருகனின் வேல் ஏந்தும் உரிமையும், கம்பம் ஏறும் சடங்கும் செங்குந்தர்களுக்கு மட்டுமே உரியது.
சூரனிடம் வீரபாகு தூது செல்வது, நவவீரர்களுக்கும் அசுரர்களுக்கும் நடக்கும் தர்க்கம், தாருகன் நவவீரர்களை சிறையில் வைப்பது, அவர்கள் அபயக்குரல் கேட்டு முருகன் சிறை மீட்பது. சிங்கமுகன் முதல் போரில் முருகனை தோற்கடிப்பது, முருகன் அன்னையிடம் வேல் வாங்கி அவனை வெல்வது. இவை எல்லாம் கூத்தின் பொதுவான கூறுகள். திருவாமாத்தூரில் ஒருநாள் கூத்து என்பதால் அங்கு சிங்கமுகன் வெல்வதும், அடுத்த நாள் போருக்கு வருவதும் நடப்பதில்லை.
கோவில் சடங்குகள், பூஜைகள் ஒருபுறமும் சம்மார கூத்து கோவிலுக்கு வெளியே ஒருபுறமும் என்றபடி தனித்தனியே நிகழ்கிறது. இவற்றை இணைப்பது ஐந்தாம் நாள் நடைபெறும் வேல்வாங்கும் சடங்கு எனலாம். வெளியே சிங்கமுகன் வெற்றிபெறும் நாளின் இறுதியில் ஆலயத்துக்குள்ளே முருகன் அன்னையிடம் சக்திவேல் வாங்குகிறார்.
இந்தத்தலைமுறையில் கூத்துப்பாத்திரங்களை ஏற்க விரும்புபவர்கள் மிகக்குறைவாக இருக்கின்றனர். அசுரர் வேடம் ஏற்பதில் சிலருக்கு தயக்கம் இருக்கின்றது, முருகனை திட்டி நடிப்பதால் தமக்கு எதாவது தீமை வருமோ என்று அஞ்சி முந்தைய தலைமுறையின் வேடத்தை தொடராதவர்கள் இருக்கின்றனர். மாறாக நான் உரையாடிய நெட்டப்பாக்கம் இராமலிங்கமும் திருவாமாத்தூரில் வேடம் ஏற்பவர்களும் அசுர வேடம் ஏற்று நடிப்பதை கடவுளுக்கு செய்யும் சேவையாக கருதுகின்றனர்.
சம்மார நிகழ்வில் வேடமேற்பது இன்னும்கூட கிரமங்களில் பெருமைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது, சில இடங்களில் இவ்வேடத்தை அடையப்போட்டிகள் நீடிக்கிறது.
சிலஆண்டுகள் முன்புவரை திருமணமாகாதவர்கள் கூத்தில் இடம்பெறக்கூடாது என்ற நம்பிக்கை திருவாமாத்தூரில் வழங்கி வந்துள்ளது.
உண்மையாக கூத்தில் ஆர்வம் உள்ளவர்கள், தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் இடமாகவும் இதை பாவிக்கின்றனர். பார்வையாளர்களை இந்த கதைக்குள் கொண்டுவரவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் அவர்களால் முடிகிறது.
இதை சடங்காக மட்டுமே எடுத்துக்கொள்பவர்கள் உண்டு. அவர்கள் தங்கள் வசனங்களை பாடல்களை புத்தகத்தை பார்த்து வாசிக்க மட்டும் செய்கின்றனர்.
பொதுவாக இந்தக்கூத்தில் பங்கேற்பவர்கள் அதே ஊராராக இருக்கவேண்டும் என்பது பொது விதி, சில இடங்களில் இரண்டாவது விதியாக மரபுரிமையாக இந்த வேடங்கள் கட்டப்படுகிறது என்றாலும் இது பொது விதியல்ல.
வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் |
1.8 கூத்துப்பிரதிகள்
சம்மாரம் நடக்கும் ஊர்களில் கூத்துப்பிரதிகள் அந்த அந்த ஊர்களுக்கு தனித்தனியே உள்ளன. இருப்பினும் பல இடங்களில் இந்தப்பிரதியை வைத்திருப்பவர்கள் பிறரிடம் அதைப்பகிர விரும்புவதில்லை.
இந்த கூத்துப்பிரதிகள் கந்தபுராணத்தை ஒட்டி கூத்து வடிவத்தை மனதில்கொண்டு உள்ளூர் புலவர்களால் எழுதப்பட்டவை. கிடைக்கும் பிரதிகள் குறைந்தபட்சம் மூன்று தலைமுறைக்காலம் முந்தையவை என்று உறுதிப்பட அறிய முடிகிறது. ஆகவே தற்போது கிடைக்கும் பிரதிகளின் இவற்றின் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முந்தைய காலகட்டம்.
பாடல்கள் விருத்தங்களாகவும் தர்க்கங்களாகவும் அமைந்துள்ளன, இடையே வசனங்கள் நடிப்பவர்களால் பேசப்படுகின்றன என்றாலும் பிரதியில் பாடல்கள் மட்டுமே உள்ளன, வசனங்கள் உள்ளூர்க்காரர்களான நடிகர்களால் தானே பேசப்படுபவை.
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மூன்று இடங்களில் நெட்டப்பாக்கம், திருவாமாத்தூர் ஊர்களிலுள்ள அச்சுப்பிரதியை முழுவதும் பெறமுடியவில்லை. கட்டுரையில் இடம்பெறும் சிலபாடல்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பவர்கள் உதவியாலும் நேரே சென்று பாடல்களை பதிவு செய்ததாலும் கிடைத்தவை.
நெட்டப்பாக்கம் சம்மாரப்பாடல்கள் எழுதியவர்களில் முக்கியமானவர்கள் அவ்வூரை சேர்ந்த முனுசாமி முதலியார், குமாரசாமி முதலியார் ஆகியோர்.
திருவாமாத்தூர் கூத்து பிரதியை எழுதியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என்பது அவ்வூரார் நம்பிக்கை.
முத்தியால்பேட்டையில் அச்சிடப்பட்ட பிரதி ஒன்று அந்த ஆலய நிர்வாகிகள் மூலம் கிடைத்தது. இது 55 பக்கங்கள் கொண்டது. இதில் சம்மார பாடல்களை எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை
ஒப்பிடுவதற்காக கிடைத்த மேலும் இரு பிரதிகள் நடுவீரப்பட்டை சேர்ந்த பேராசிரியர் வேல்முருகன் அவர்களின் சேகரிப்பில் இருந்து கிடைத்தவை.
முதல் புத்தகம் 80 பக்கங்கள் கொண்ட அச்சுப்பிரதி.கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வம் - எழிலி தம்பதியினரின் மணிவிழா ஆண்டு மலராக 2019ம் ஆண்டு முருகன் 'சூரசம்பாரம் பாடல்கள்’ என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டது.
இரண்டாவது பிரதி CN பாளையம் என்று தற்போது அழைக்கப்படும் சென்னப்ப நாயக்கன் பாளையம் என்ற ஊரை சேர்ந்தது. இதை இயற்றியவர் நல்லா. சு. தெய்வநாயக முதலியார். இந்த கையெழுத்துப்பிரதி 2009ம் ஆண்டில் வேல்முருகனால் படியெடுக்கப்பட்டது.
மூன்று பிரதிகளில் சென்னப்ப நாயக்கன் பாளையம் பிரதி முழுமையானது, முத்தியாலு பேட்டை பிரதி சுருக்கப்பட்ட வடிவமாக இருக்கக்கூடும்.
வண்டிப்பாளையம் பாடல்கள் பதிப்பு சம்மாரப்பாடல்கள் மற்றும் கம்பப்பாடல்கள் முதலியவை அடங்கிய தொகுப்பு. இதில் முழு கதைப்பகுதியும் பதிப்பிக்கப்படவில்லை தர்க்கம் விருத்தம் முதலியவை தனித்தனிப்பகுதிகளாகவும், இடையிடையே பக்திப்பாடல்களோடும் பதிப்பிக்கப்பட்டுள்ள்ளது.
நெட்டப்பாக்கம் ஆலயம் |
இந்தப்பாடல்களின் கதையோட்டம் சூரசகோதரர்கள் தவம் செய்வதிலிருந்து துவங்குகிறது. அவர்கள் வரம்பெறுதல், சூரன் திக்விஜயம் பின் தேவர்கள் புலம்பல், இவையெல்லாம் தொடர்கிறது. நாரதர் சூரனிடம் தூது வருமிடத்தில் முருகன் படைகொண்டு வந்தது சொல்லப்படுகிறது. மூன்று அசுரர்களுடன் தர்க்கம், வீரபாகு தூது, சிங்கமுகன் அறிவுரை கூறுதல், நவவீரர்கள் அசுரர்களால் சிறைபிடிக்கப்படுதல், முருகன் மீட்டு அசுரர்களை வதைப்பது இந்த வரிசையில் பாடல்கள் அமைந்துள்ளன.
இப்பாடல்கள் ஓரிடத்திலிருந்து பிற இடங்களுக்கு பரவியுள்ளன, வெவ்வேறு ஊர்களில் சிலபாடல்கள் ஒற்றுமையாக இருப்பதை காணமுடிந்தது. திருவாமாத்தூர், நெட்டப்பாக்கம் போன்ற ஊர்களை முன்னுதாரணமாக கொண்டு அந்தந்த ஊரார் தங்கள் பாடல்களையும் எழுதியிருக்கலாம், அப்போது முன்னுதாரணமாக அவர்கள் 'எடுத்தாண்ட' பாடல்கள் அவ்வாறே இன்று அச்சுப்பிரதியில் காணக்கிடைக்கின்றன.
கூத்துப்பிரதிகளில் நாரதர், பானுகோபன், அக்கினிமுகன் முதலிய பிற பாத்திரங்களையும் பார்க்கமுடிகிறது. தற்போதைய கூத்தில் இதுபோன்ற துணைப்பாத்திரங்கள் மிகவும் குறைந்துவிட்டன.
சூரனை வாழ்த்துவதும் சூரனின் அன்னையான மாய்கையை பெருமையாக கூறுவதும் இந்த பாடல்களின் வழக்கமாக இருக்கிறது. நெட்டப்பாக்கம் கூத்தில் பானுகோபன் அக்கினிமுகன் இவர்களுக்கு வித்தை கற்பித்தவராக அவரது ஆயா (பாட்டி) மாயையே குறிப்பிடப்படுகிறார்.
மைந்தனாய் வந்த சூரன்
மாதவம் செய்து சிவனாரிடம்
வேண்டிய வரங்களைப்பெற்ற சூரன்
கதிபெற்ற ஆயிரத்தெட்டண்ட புவனங்கள்
காக்கவே வந்த சூரன்
கூத்துப்பிரதியின் வடிவத்தோடு நிஜமாக நடக்கும் சம்மாரம் முரண்படுகின்ற இடங்கள் உண்டு. திருவாமாத்தூர் தவிர ஏனைய இரு இடங்களில் சிங்கமுகனுடனான முதல்நாள் போரில் முருகன் பின்பவங்கும் நிகழ்வு நடக்கிறது. அதன் பிறகு தனது அன்னையான பார்வதியிடம் முருகன் சக்திவேல் பெறுகிறார். மறுநாள் சிங்கமுகனை முருகன் அந்த ஆயுதத்தால் கொல்கிறார். இவையாவும் பிரதியில் இல்லை, நவவீரர்களை சிங்கமுகன் சிறைப்படுத்துவதும், முருகன் அவர்களை மீட்டு சிங்கமுகனை வதைப்பதுமே பிரதியில் எழுதப்பட்டுள்ளது.
கூத்தில் கந்தபுராண மூலத்தைத்தாண்டிய நீட்சிகளும் உண்டு. சூரனை தனது மயில் வாகனமாக்கிக்கொண்ட முருகன் யானைமுகனை அய்யனாருக்கு யானை வாகனமாகவும், சிங்கமுகனை மாகாளியின் சிம்மமாகவும் ஆக வரம்தருகிறார்.
சாற்றியவாறு தந்தேன் தந்தியை அய்யனார்க்கும்
சீற்றமாமுகத்து சிங்கன் தேவி மாகாளியற்கும்
தோற்றும் வாகனமதாக தொடுத்தனன் வாழி வாழி
சம்மாரப்பாடல்களில் சூரன் சேவலாக மயிலாக மாறிய பின்னரும் கூட முருகனை எதிர்த்ததும், மாயையை வாழ்த்துவதும் சொல்லப்படுவது மட்டக்களப்பு கூத்துப்பிரதியுடன் ஒத்துப்போகிறது.
கையெழுத்துப்பிரதியாக இருந்த இந்தப் பாடல்கள் சமீபமாக அச்சாகத்துவங்கியுள்ளன. சமயங்களில் அவை முழுமையாக அச்சிடப்படாமல், கூத்துக்கு தேவையான முக்கியமான பாடல்கள் மட்டுமாக சுருக்கப்படுகின்றன. இதனால் மூலப்பிரதிகள் அழிந்து போகும் அபாயம் உள்ளது.
அந்தப்பிரதிகளை காப்பாற்ற தமிழறிஞர்கள் அதிகம் தோன்றிய முதலியார்கள் வசமுள்ள இப்பிரதிகள் முழுமையாக திரட்டப்பட்டு அச்சிடப்பட்ட வேண்டும். இந்த பெரிய செயல் நடந்து விட்டால் அதன் மூலம் சென்ற நூற்றாண்டின் இறுதியில் துவங்கிய சடங்கு சார்ந்த கலைக்கான பாடல்களை, அவற்றின் மொழியை நாம் இன்னுமே விரிவாக ஆராய வழியுண்டு.
அடுத்த பகுதியில் கம்பம் ஏறுதல் சடங்கு குறித்து விரிவாக பார்ப்போம்.
தாமரைக்கண்ணன் புதுச்சேரி |
தாமரைக்கண்ணன் புதுச்சேரி
நன்றி
சம்மாரப்பாடல்களை பெறுதல் மிகவும் உழைப்பைக்கோரிய விஷயம். இதற்கு உதவிய நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. முதன்மையாக தனது தேடல்களுக்காக சேகரித்து வைத்திருந்த இரண்டு பிரதிகளை இந்த ஆய்வுக்காக பெருந்தன்மையோடு தந்தவர் தமிழ்ப் பேராசிரியர் வேல்முருகன். அவருக்கும் இப்பிரதிகளை அடைய உதவிய சகோதரர் நடுவீரப்பட்டு இதயத்துல்லா அவருக்கும் நன்றிகள்.
திருவாமாத்தூர் நிகழ்வு குறித்த தகவல்கள் தந்ததோடு நிகழ்வு முழுமையும் கூட இருந்து விளக்கியவர் அவ்வூரைச்சேர்ந்த தொல்லியல் ஆர்வலரான நண்பர் கண.சரவணக்குமார். அவருடன் மேலதிக விளக்கம் அளித்த ஊரார்கள், சூரன் வேடமிடும் குருநாதன் அய்யா மற்றும் அவரது மகன் சரவணபவன் ஆகியோருக்கு நன்றி.
முத்தியால் பேட்டை குறித்த தகவல்கள் பெற நண்பர் புதுச்சேரி மணிமாறன் உதவினார், அவ்வூர் அறங்காவலர்கள் தேவையான தகவல்களை அளித்தனர். நெட்டப்பாக்கம் நிகழ்வு குறித்து தகவல்கள் அளித்தவர் அவ்வூர் நண்பர் அன்பு சீனிவாசன் அவர்கள், அவரது தந்தை சேகர் முன்பு சிங்கமுகனாக வேடம் கட்டியவர். பெரிய சூரன் வேடம் கட்டும் ராமலிங்கம் அவர்களும் தேவையான தகவல்களை தந்து உதவினார், இவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
தாமரைக்கண்ணன் புதுச்சேரி |