உதயசங்கர் |
தொல்லியலை இணையம் வழியாக அனைவருக்கும் கொண்டுசெல்லும் தன்னார்வலர் உதயசங்கர். தனது இணையதளத்தின் மூலம் தமிழ் கல்வெட்டுகளை அனைவரும் ஒரே இடத்தில் படிக்கும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார். பயனர் தனக்குத் தேவையான கல்வெட்டுகளை அரசு, நிலவியல், செய்தி போன்றவற்றின் அடிப்படையில் எளிதாக தேடி எடுக்கும்படி 8500 கல்வெட்டுக்களுக்கான தேடுபொறியை இணையத்தில் பொதுப்பயன்பாட்டுக்கு செய்தளித்துள்ளார். கல்வெட்டுகளை எளிதாக புரிந்துகொள்ள கல்வெட்டு அகராதி, சொற்களஞ்சியம் , கல்வெட்டு காலவரிசை ஆகியவையும் அவரது வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
உதயசங்கரின் சொந்த ஊர் மதுரை. இயந்திரவியல் (Mechanical Engineering) படித்தவர், தற்போது சென்னையில் ஆர்க்கிடெக்சுரல் 3D ரெண்டரிங் அண்ட் எஸ்டிமேஷன் (கட்டிட முப்பரிமாண உருவாக்கம் மற்றும் மதிப்பீடு) பணி புரிகிறார்.
உங்களுக்கு மரபார்ந்த விஷயங்கள் மீது ஆர்வம் எப்போதிருந்து துவங்கியது ?
ஒவ்வொரு காலகட்டத்திலும் எனக்கு புதிதாக ஒன்றை செய்துபார்ப்பதில் ஆர்வம் இருந்துகொண்டே இருக்கிறது. சிறுவயதில் செய்தித்தாள் துண்டுகளை சேகரிப்பது எனக்கு மிகவும் பிடித்தபொழுதுபோக்கு. எனக்கு தேவையான செய்திகளை நாளிதழ்களில் இருந்து கத்தரித்து வைத்துக்கொள்வேன், குறிப்பிட்ட தலைப்புகளாக அந்த கத்தரிப்புகளை தொகுத்து வைத்திருந்தேன், உதாரணமாக அப்துல் கலாம் குறித்த செய்திகள், கார் குறித்த செய்திகள் எல்லாம் தொகுத்து ஒரு கோப்பாக வைத்திருந்தேன்.
செய்தித்தாள் தொகுப்பிற்குப்பிறகு 2002 காலகட்டத்தில் பொன்னியின் செல்வன் படித்தபோது அது சொல்லும் இடங்களை ஒரு வரைபடமாக தயாரித்து வைத்திருந்தேன். அப்போது கூகுள் மேப்பிங் எல்லாம் இல்லை. ஒரு பெரிய தமிழ்நாட்டு வரைபடத்தை வாங்கி எப்படியெல்லாம் பயணித்திருப்பார்கள் என்று வரைந்து பார்த்திருக்கிறேன். நண்பர்களிடம் வந்தியத்தேவனின் பயணத்தை அதை வைத்து விவரிப்பேன். எப்போதும் நிறைய வார்த்தைகள் சொல்வதை ஒரு வரைபடம் காட்டிவிடும். பொன்னியின் செல்வனுக்குப்பிறகு கடல்புறா நாவல் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த கப்பலை முப்பரிமாண ஓவியமாக மாற்றிப்பார்க்க வேண்டும் என்பது எனது நெடுங்கால கனவாக இருந்தது. இதுபோல ஆசைப்படுவதும் அவற்றை நண்பர்களுடன் விவாதிப்பதும் தான் நம்முடைய கற்பனைத்திறனை முழுமையாக்குகிறது. இன்று நான் செயல்படுத்தியுள்ள பல யோசனைகள் அவ்வாறுதான் உருவாகியிருக்கிறது.
கல்லூரி படிக்கும்போது ஆட்டோகேட் (Autocad) என்ற மென்பொருள் கற்றுக்கொண்டேன். படித்தது இயந்திரவியலாக இருந்தாலும் எனக்கு இந்த மென்பொருள் பயிற்றுவித்தவர்கள், உடன்பயின்றவர்கள் எல்லோரும் கட்டிடவியல் சார்ந்த பின்னணி கொண்டவர்கள். ஆகவே அவர்கள் எனக்கு இயந்திரவியல் படங்கள் மட்டுமின்றி ஆட்டோகேட் மென்பொருளில் கட்டிடவியல் தொடர்பான வரைகலையையும் கற்பித்தார்கள். எனக்கு இந்த மென்பொருளில் உள்ள பல்வேறு சாத்தியங்கள் ஆர்வம் வந்தது.
(குறிப்பு - ஆட்டோகேட் என்பது பொறியியலில் இருபரிமாண ஓவியங்கள் வரைய பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள். இயந்திரவியல், மின்னியல், கட்டிடவியல் ஆகிய பல்வேறு பொறியியல் துறைகளுக்கான படங்கள் வரைய இந்த மென்பொருள் பயன்படுகின்றது)
வரைந்து பழக கொடுக்கப்பட்ட புத்தகங்களில் இருக்கும் படங்கள் தாண்டி, நானும் புதிதாக ஏதேனும் முயற்சிக்கலாம் என்று சில மாதிரிகளை வரைய ஆரபித்தேன். கேட் இருபரிணாம படங்களில் வளைந்துசெல்லும் கோடுகளுக்கான ஆணையை எனது கற்பனைகளுக்கேற்ப பயன்படுத்திப்பார்க்க துவங்கினேன்.
எனது அம்மாவின் கோலப்புத்தகத்தை எடுத்து வரையத்துவங்கினேன். படித்து முடிக்கையில் 500 கோலங்களை கேட் மென்பொருளில் வரைந்திருந்தேன். ஓரளவு எளிதில் கிடைக்கக்கூடிய கோலங்களை வரைந்தபின். கிராமங்களில் உள்ள கோலங்கள், கோவில் கோபுரத்தில் வரைந்திருந்த கோலங்கள் என்று தேடிப்பதிவு செய்தேன். 2001-ல் இதை செய்யத்துவங்கி 2007ம் ஆண்டுக்குள் நான் 5000 கோலங்களை கணினியில் வரைந்து முடித்திருந்தேன்.
எனது இணைய சேவைகளின் துவக்கமாக 2009-ல் உதயம் என்ற வலைத்தளத்தை ஆரம்பித்தேன். அழிந்துவரும் நமது மரபு தொடர்பான புகைப்படங்களை இந்த வலைத்தளத்தில் பதிவேற்றுவது தான் முதலில் எனது எண்ணமாக இருந்தது. அப்படியென்றால் ஏன் கோலங்களை அவற்றுடன் வெளியிடக்கூடாது என்று தோன்றியதும் எனது கோலங்கள் தொகுப்பை வலைதளத்தில் வெளியிட்டேன். அப்போதெல்லாம் நீங்கள் இணையத்தில் இப்படி ஒரு படத்தை எடுத்தால் அதன் பின்னணியை நீக்க, போட்டாஷாப் மென்பொருள் உதவி தேவைப்படும். ஆனால் நான் எனது தளத்தில் உள்ள கோலங்களை ஏற்கனவே பின்னணி இன்றி வைத்திருந்தேன். பயனாளர் யாராக இருந்தாலும் உடனே இந்தக்கோலங்களை தனக்கு வேண்டிய பின்னணியில் பொருத்திக்கொள்ள முடியும். எனது இந்த முயற்சியின் மூலம் இதே ஆர்வம் கொண்ட நண்பர்கள் அறிமுகம் கிடைத்தது, பின்னர் நான் எழுத்துருக்களை உருவாக்கும் முயற்சியை துவங்கினேன்.
என்னை பொறுத்தவரை மொழி என்பது வெறும் 247 எழுத்துக்கள் இல்லை. அதற்கென்று ஒரு பண்பாடும் கலைப்பின்புலமும் இருக்கிறது. கோலங்களை ஏன் யாரும் கொண்டாடுவதில்லை என்ற கேள்வி என்னிடம் இன்னமும் இருக்கிறது. கோலங்கள் போலவே கோவில்களில் விதானங்களில் செதுக்கப்பட்டுள்ள அழகிய கொடிக்கருக்கு போன்ற விஷயங்களை பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறேன். இதற்காக நிறைய கோவில்களுக்கு பயணிக்கிறேன். வேப்பத்தூர், திருவெள்ளறை, சிதம்பரம் முதலிய கோவில்களின் முற்றுப்பெறாத பகுதிகளை முப்பரிமாண படங்களாக முழுமை செய்து அளித்திருக்கிறேன்.
நான் பல எழுத்துருக்களை உருவாக்கியிருக்கிறேன், உருவாக்க உதவியிருக்கிறேன். கோலத்தை வைத்து ஒரு எழுத்துரு செய்திருக்கிறேன். ஒரு வடிவமைப்பாளராக நான் பல கற்பனை உடையவன். இதன்மூலம் நமது மரபார்ந்த கலைகளை தொடரச்செய்ய வேறு ஒரு தளத்தை அடிப்படையாகக்கொண்டு நான் முயற்சிக்கிறேன். இன்று நம்மில் பலரும் கோலம் போடுவதில்லை. இனி கோலம் என்ற ஒன்று இல்லாமலும் ஆகலாம். ஆனால் இந்த எழுத்துரு அவர்களை மரபில் இருந்து வெளியேறாமல் வைக்க உதவும்.
தமிழ் பிராமி எழுத்துகளுக்கு கணினி எழுத்துருவை (font) வடிவமைக்கும் எண்ணம் எப்படி வந்தது?
இரண்டாயிரத்துக்குப் பிறகான கணினி அறிவியல் வளர்ச்சியில், தமிழ் எழுத்துருக்கள், வலைப்பூக்கள் என்று வெவ்வேறான மாற்றங்கள் நடந்து வந்தது. எனது வலைதள முயற்சிகளை பார்த்த நண்பர்கள் வினோத் ராஜன், ரமண ஷர்மா ஆகியோர் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களை கணினிக்கு கொண்டுவரவேண்டும் என்ற யோசனையை சொன்னார்கள். முதலில் எழுத்துரு (font) என்ற விஷயத்தை யோசிக்கவில்லை. பின்னர் நான் தமிழின் முதல் வரிவடிவமான தமிழ் பிராமியின் எழுத்துருவை உருவாக்க முயற்சிகளை துவங்கினேன்.
ஒரு எழுத்துருவில் சவால் என்பது அதன் அகலம் அல்ல. அகலம் மாறுதலுக்குட்பட்டது, எழுத்துக்களின் உயரத்தை நிர்ணயிப்பதுதான் உண்மையான சவால். எழுத்துக்களின் உயரத்தை நிர்ணயிக்க கடினமாக இருந்தது. ஏனெனில் இதற்கு முன்னர் இப்படி தமிழ் பிராமிக்கு அச்சு எழுத்துக்களே அதிகம் இல்லை. கல்வெட்டுக்களின் புகைப்படங்களை எடுத்து அப்படியே பதிப்பித்திருப்பார்கள். மைப்படி, கையெழுத்துப்படி இவற்றின் புகைப்படங்களை எடுத்தே புத்தகங்களிலும் பயன்படுத்தியிருந்தார்கள்.
முதலில் தமிழ் பிராமி வடிவை புரிந்துகொள்ள Early epigraphy in tamil என்ற புத்தகத்தில் ஐராவதம் மஹாதேவன் குறிப்பிட்டிருந்த இடங்களுக்கு பயணித்தேன். எனக்கு ஏற்கனவே புகைப்படக்கலையில் ஆர்வம் இருந்தது. பிராமி எழுத்துக்களை புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். தமிழ் பிராமி அல்லது தமிழி என்பது பொ.யு.மு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு வரையான நானூறு ஆண்டுகாலம் புழக்கத்தில் இருந்த எழுத்து வடிவம். இந்த பிராமி கல்வெட்டு எழுத்துக்கள் அனைத்தும் ஒன்றே போல இருக்காது. நேரில் பார்க்க, நமது கையெழுத்து வெவ்வேறாக இருக்கிறதில்லையா அதுபோலத்தான் வேறுபாடுகள் இருந்தது. ஆகவே நான் அந்த நானூறு ஆண்டுகால கல்வெட்டுகளின் பொதுவடிவத்தை தான் எனது எழுத்துருவுக்கு எடுத்துக்கொள்ளமுடியும். பிறகு அந்த பிராமி வரிவடிவத்தை யுனிகோடு (unicode) அமைப்புக்கு கொண்டுவரவேண்டும்.
அதற்கு முன்னர் முதலில் யூனிகோடு ஏன் தேவைப்படுகிறது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். பழைய தமிழ் எழுத்துருக்களில் ‘அ’ என்னும் தமிழ் எழுத்தை ‘A’ என்னும் ஆங்கில எழுத்தில் இமேஜாக அமைத்திருப்பார்கள் இருப்பார்கள். நீங்கள் தட்டச்சு செய்கையில் A - அ வாக அமையும். பாமினி போன்ற பழைய எழுத்துருக்களில் இவ்வாறுதான் இருக்கும். மாறாக இது முழுக்க தமிழிலேயே இருக்க வேண்டும் என்று நாங்கள் பிராமி எழுத்துக்களை யூனிகோடு முறையில் உருவாக்க முயற்சிகள் துவங்கினோம். அதற்கான உழைப்பு ஆறுமாதங்கள் எடுத்துக்கொண்டது. ஓபன் சோர்சிங் (open Source) என்னும் முறையில் நாங்கள் பொதுமக்களிடமும் இந்த திட்டம் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டோம். பின்னர் பலர் இதைப் பின்பற்றி எழுத்துருக்களை உருவாக்கினர்.
தமிழ் எழுத்துரு முயற்சிகளுக்கு வரவேற்பு இருந்ததா ?
2012-ல் தமிழி (தமிழ் பிராமி)க்கான எழுத்துருவை (font) நாங்கள் கொண்டுவந்தபோது அதை நாங்கள் சிதைப்பதாககூட கருத்துக்கள் எழுந்தன. உண்மையில் பல்வேறு கல்வெட்டுகளின் வடிவத்தை பொதுமைப்படுத்தி ஒரு வடிவை முதலில் உருவாக்க வேண்டியிருந்தது. அதை யூனிகோடு வடிவில் கொண்டு வரவேண்டும் அடிப்படையாக வைத்து நீங்கள் எண்ணற்ற தமிழி வடிவங்களை உருவாக்க முடியும். உதாரணத்திற்கு தமிழியில் மாங்குளம் பாணி என்ற ஒரு எழுத்துருவை நீங்கள் உருவாக்க முடியும். ஆனால் தொல்லியலில் நீண்டகாலம் பணியாற்றியவர்களுக்கு கூட எனது முயற்சி குறித்த புரிதல் துவக்கத்தில் இல்லை. தமிழி வரிவடிவங்களின் தனித்தன்மையை கணினி எழுத்துரு பாதிக்கும் என்று நினைத்தார்கள். பின்னர் எங்கள் எழுத்துரு பலருக்கும் சென்றடைந்தது, புதியவர்களுக்கு வகுப்பெடுத்தல் முதற்கொண்டு பலவகையில் பயன்பட்டது. எனக்கே ஒரு அலுவலர் தமிழி எழுத்துருவை பரிந்துரைத்தார். இலவசம்தான் சார் வேணும்னா பயன்படுத்திக்கோங்க என்றார், சரி என்று கேட்டுக்கொண்டேன்.
2014ம் ஆண்டு எனது திருமணம் நடந்தது. அதற்கு நானே அழைப்பிதல் தயாரித்தேன். அதற்கு வட்டெழுத்துக்களை முதலில் பயன்படுத்தினேன். யாருக்கும் அது புரியவில்லை, எதிர்மறை கருத்துக்களே கிடைத்தன. சீன மொழியா என்று கிண்டல் செய்தனர். தினம்தோறும் பேசும் மொழியின் ஆரம்பகால வரிவடிவங்களே உங்களுக்கு தெரியவில்லையே என்று நினைத்துக்கொண்டேன். அதையே காரணியாக்கிக்கொண்டு எனது திருமண அழைப்பிதழை தமிழியில் அச்சடித்தேன். எனது திருமண மோதிரங்களில் தமிழி எழுத்துகளை பொறிக்க செய்தேன், தமிழியில் பதாகைகள் வைத்தேன். அழைப்பிதழை பெறும் ஒவ்வொருவரும் இது என்ன என்று கேட்டனர். இது ஒரு சிறிய வட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழி அழைப்பிதழை நானே வடிவமைத்துக்கொடுத்தேன். அந்த அழைப்பிதழில் பார்த்து விட்டு வீட்டின் முகப்பில் பெயர்களை போடுவதற்கும் தங்கள் முகப்பு அட்டைகளிலும் தமிழி பயன்படுத்தியவர்கள் உண்டு. தொல்லியல் ஆய்வுகளை செய்துவரும் தென்கொங்கு சதாசிவம் எங்களது எழுத்துருவை பயன்படுத்தி ஒரு வலைப்பூவையே உருவாக்கியுள்ளார். 2013ல் இருந்து நான் பார்த்து வருபவர்களில் சதாசிவம் தொடர் செயல்பாடுகள் மூலம் தன்னை மேம்படுத்திக்கொண்டே செல்பவர்.
தமிழி எழுத்துருவை நான் உருவாக்கி பல காலம் கழித்து 2019ம் ஆண்டில் தான் அதற்கான அங்கீகாரங்கள் கிடைத்தன. ஒருவகையில் கீழடி ஆய்வுகள் உருவாக்கிய தாக்கம் எனலாம். தமிழ் பிராமிக்கு எனது உழைப்பு ஆறுமாதம், கோலம் எழுத்துருவுக்கு எனது உழைப்பு இரண்டரை வருடம். ஒவ்வொரு எழுத்துமாக 247 எழுத்துக்களுக்கும் இதை செய்து முடிப்பது பெரிய சவாலாக இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழி எழுத்துக்களுக்கும் கோலத்தை பயன்படுத்தியிருக்கிறேன். தமிழ் கோலங்கள் தவிர ஓரிகாமி எழுத்துரு செய்திருக்கிறோம். அடுத்தடுத்து மரபு சார்ந்த 13 எழுத்துருக்கள் வெளியிட திட்டம் உள்ளது.
கல்வெட்டுகளுக்கான தேடுபொறி(Search) உங்களுடைய பெரிய முயற்சி. கல்வெட்டுக்களுக்கான தகவல்களை சேகரிப்பதிலும் அவற்றை தொகுப்பதிலும் என்னனென்ன சவால்கள் இருந்தன?
முதலில் கல்வெட்டுக்களுக்கான OCR (Optical Character Recognition - புகைப்படங்களில் இருந்து எழுத்துக்களை கண்டெடுத்தல்) முயற்சிகளில் இறங்கினோம். உதாரணமாக ராஜராஜன் கல்வெட்டுகளை தொகுக்க வேண்டும் என்றால் தஞ்சை பெரியகோவில் தவிர்த்து கல்வெட்டு உள்ள பிற கோவில்களை உடனே சொல்வது நமக்கு கடினமாக இருக்கிறது. அப்போது இதை எளிமையாக்க கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களை வாசித்து பதிவு செய்த தரவுசேகரம் (database) தேவைப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு கல்வெட்டு புத்தகங்களையும் தொகுக்க ஆரம்பித்தேன். மாவட்ட ரீதியாக தமிழக தொல்லியல் துறை, இந்திய தொல்லியல் துறை, பல்கலைக்கழகங்கள் பதிப்பித்தவை, தனிநபர்கள், பத்திரிக்கைகளில் பதிப்பித்தவை என்று அனைத்தையும் தொகுக்க ஆரம்பித்தேன். முதலில் தமிழ்நாடு (மாநில) தொல்லியல் புத்தகங்களிலிருந்து எனது பணியை துவங்கினேன். தரவுசேகரம் என்பது வெறும் புத்தகத்திலுள்ள விஷயத்தை மின்னாக்கம் செய்வது அல்ல, நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்தன. மொத்தம் 100 வெவ்வேறு மன்னர்களின் கல்வெட்டுகள் இங்கு இருக்கின்றன என்றால் அனைத்தையும் ஒரே நேரத்தில் பதிவு செய்வதில் சிரமம் இருந்தது. ஒரே காலகட்டத்தை சேர்ந்த கல்வெட்டுக்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் வெவ்வேறு மன்னர்களை பதிவு செய்ய வேண்டியிருந்தது. எனவே முதலில் எந்த கல்வெட்டுகளுக்கு முக்கியத்துவம் அதிகம் இருந்ததோ அதை முதலில் பதிவுசெய்யலாம் என்று முடிவு செய்தேன். அதே போல் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டுகளிலேயே முழுமையற்றவை பல இருந்தன இவை போல பல சவால்கள்.
கல்வெட்டுக்கள் முதலில் பதிவு செய்யப்பட்ட போது அவை வடஆற்காடு, தென்ஆற்காடு மாவட்டம் என்று அந்த காலகட்டத்திய நிர்வாக முறையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கும். பிரிட்டிஷ் காலகட்டத்தில் தேனி என்பது ஒரு ஊர் மட்டும்தான், செங்கல்பட்டு பகுதிக்கு உட்பட்டுத்தான் சென்னை வேளச்சேரி கல்வெட்டுகள் பதிவுசெய்யப்பட்டன. மெட்ராஸ் பிரசிடென்சி காலகட்டத்தில் மொத்தமே தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் தான் இருந்தன. அப்போது படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் அந்த இடங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இன்று இவை எல்லாமே மாறிவிட்டன.
தமிழகத்தில் இன்று 38 மாவட்டங்கள் உள்ளன. நான் தொகுக்க ஆரம்பித்த காலத்திற்கு பின்னரும்கூட மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் உருவாகின. பொதுவாக தமிழகத்தில், ஒவ்வொரு 30 வருடங்களுக்குள்ளும் ஒரு ஊரின் மாவட்டம், வட்டம், தாலுகா ஆகியவை நிர்வாகக்காரணங்களுக்காக மாற்றப்பட்டு வந்துள்ளன. விடுபடல் இன்றி முழுமையாக கல்வெட்டுகளை தொகுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு மாறுதல் நடந்த காலகட்டத்தையும் அடிப்படையாகக்கொண்டு கல்வெட்டுகளை சரிபார்க்க வேண்டும்.
கல்வெட்டுகள் பல்வேறு அரசுசார் அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ளன: ARIE - Annual Report of Indian Epigraphy, SII - South Indian Inscriptions, EI - Epigraphica India முதலியவை வெளியிட்ட கல்வெட்டுகளையே நாம் ஆதாரங்களாக எடுத்துக்கொள்கிறோம். அதுபோல 1887-1915 வரையில் அன்றைய மதராஸ் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் 'A Topographical List of the Inscriptions of the Madras Presidency' என்ற பெயரில் ரங்காச்சார்யா என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. Topographical Inscriptions புத்தகங்களிலேயே நான்கு வகைகள் உள்ளன. தேசிய அளவில் மற்றும் சென்னை மாகாண அளவில் அச்சிடப்பட்ட துவக்ககால புத்தகங்களில் கல்வெட்டுகளின் பெயர்ப்பட்டியல், கல்வெட்டுகளின் சுருக்கமான குறிப்பு மட்டும் இருக்கும், கல்வெட்டுகளின் வரிகள் அங்கு நேரடியாக இருக்காது. இதே போன்ற சுருக்கமான பட்டியல் கொண்ட கல்வெட்டு துணைவன் என்ற புத்தகம் இரா.நாகசாமி அவர்களால் தமிழுக்கு மட்டும் தொன்னூறுகளில் செய்யப்பட்டது. பிற்காலத்தில் மாநில தொல்லியல் துறை கல்வெட்டுகளை படியெடுத்து பதிப்பிக்கும்போது அவர்களுக்கு கள ஆய்வுக்கான வாய்ப்புகள் இன்னும் அதிகமாக இருந்தன. அவர்கள் பதிப்பித்த புத்தகங்கள் இன்னும் மேம்பட்ட தரவுகளோடு இருந்தன. சில தனிநபர்கள் கோவில்களுக்கு வெளியேயுள்ள நடுகல் கல்வெட்டுகள், செக்குக்கல்வெட்டுகள், தூம்புக்கல்வெட்டுகள் போன்ற விடுபட்ட கல்வெட்டுக்கள் பலவற்றை கண்டறிந்து பதிவு செய்திருக்கிறார்கள். ஆவணம் போன்ற புத்தகங்களில் அதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வருகின்றன. இவை அனைத்துக்கும் பட்டியல் வரிசை (index) இடப்பட்டால்தான் பொதுப்பயன்பாட்டுக்கான தகவல்கள் ஓரளவேனும் தெளிவானவையாக இருக்கும். இன்று அப்படி ஒரு சுருக்கமான புத்தகம் வெளியிடப்பட்டாலே அது ஆறு வால்யூம்கள் அளவு கொண்டதாக இருக்கும்.
கல்வெட்டுகளில் பல இடங்களில் கிரந்தம் மட்டுமல்ல குறியீடுகளும் இடம்பெறுகின்றன. கன்னியாகுமரியை சேர்ந்த சிவா இதுபோன்ற 300 குறியீடுகளை சேகரித்துள்ளார். உலக அளவிலேயே குறியீடுகளின் பயன்பாடு உண்மையில் மிகப்பெரிது. கணிதத்தில் வெர்னாகுலர் (Mathematical Vernacular) என்ற முறையில் குறியீடுகள் பயன்படுகின்றன. இவற்றை சேகரிக்க எப்போதும் SVG - scalable vector graphic என்ற வடிவத்தை பயன்படுத்த நான் பரிந்துரைப்பேன். இது உங்களுக்கு தேவையானபோது ஒரு படமாக பயன்படுத்தவும் அளவிடுவதற்கும் உதவும்.
இதுவரை கல்வெட்டு சார்ந்த நான்கு வெவ்வேறு தேடு கருவிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டிற்கு அளித்திருக்கிறேன். இன்னும் நான்கு திட்டங்கள் செய்துகொண்டுள்ளேன், விரைவில் அவை வரவிருக்கின்றன. மொத்தமாக எனது பணி தொல்லியலை எளிமைப்படுத்துவதுதான் என்று நான் நம்புகிறேன்.
வரைகலை ஆலயம் |
கல்வெட்டுக்கான தேடுபொறியின் உருவாக்கம் மற்றும் பயன்பாடு குறித்து மேலும் விளக்க முடியுமா?
இந்த செயல் மிகவும் கடினமானது அல்ல. இப்படி வைத்துக்கொள்வோம், நீங்கள் ஒரு கல்வெட்டு புத்தகத்தை பதிப்பிக்கிறீர்கள், கல்வெட்டு ஒவ்வொரு சொல்லாக படிக்கப்பட்டு விட்டது, பதிப்பிக்கப்பட்டு விட்டது. நான் அந்த புத்தகத்தின் தரவுகளை பல்வேறு வகைமைகளாக பிரித்துக்கொள்கிறேன், அது எந்த நிலப்பகுதியை சேர்ந்தது, எந்த அரசைச்சேர்ந்தது, அதன் காலகட்டம் இப்படி கிட்டத்தட்ட 130 வகைகளாக ஒவ்வொரு கல்வெட்டையும் பிரிக்கிறேன். இதில் நான் எதையும் யோசிக்க வேண்டியதில்லை, அனைத்தும் பதிப்பித்த தகவல்களே. நான் அவற்றை சரியாக அட்டவணைப்படுத்துகிறேன். இது முதன்மை தயாரிப்பு ஒன்றின் உபரி அல்லது துணை பொருள் என்று எடுத்துக்கொள்ளலாம்.
உதாரணத்திற்கு அக்கசாலை என்ற சொல் ஒருகல்வெட்டில் வருகிறது. முதலில் அக்கசாலை என்றால் நாணயம் தயாரிக்கும் இடம் என்பது புரிந்திருக்க வேண்டும். இதுபோன்ற கல்வெட்டு கலைச்சொற்களை அறிந்துகொள்ள நான் ஒரு கையேடு தயாரித்திருக்கிறேன். அடுத்து எந்த மன்னருடைய காலம் என்பதை நிர்ணயிக்க கணக்கீடுகள் உள்ளன. கல்வெட்டில் சக வருடம், கலி ஆண்டு இவ்வாறெல்லாம் குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் பொ.யு அல்லது பொ.மு என்று மாற்றிக்கொள்ளவேண்டும். இதற்கு நான் ஒரு காலக்கோடு உருவாக்கி வைத்திருக்கிறேன். இப்படி நான் உருவாக்கிய துணைக்கருவிகளை மேம்படுத்தி பொதுப்பயன்பாட்டிற்கும் அளித்திருக்கிறேன்.
’அக்கசாலை வரி’ என்ற வரி (tax) கல்வெட்டுகளில் வருகிறது. அதற்கு நான் நிர்வாகம் என்ற பகுப்பின் (category) கீழ், வரிகள் (taxes) என்னும் பகுப்பில் (category) ‘அக்கசாலை வரி’ என்பதை சேர்க்கிறேன். இதோடு சேர்ந்து நான் வகைப்படுத்தியுள்ள வரிகள் (taxes) மொத்தம் அறுபதாகிறது. அதுபோல கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்கள் பெயர்கள், ஆயிரத்துக்கும் மேல் கிடைக்கிறது. இப்போது இந்திய அரசு நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம், ஊர், சிற்றூர் என்று ஒரு மேலிருந்து கீழ் வரிசையை நிர்வாகத்திற்காக ஏற்படுத்தி இருக்கிறது. அதுபோல கல்வெட்டுகள் வளநாடு, கூற்றம், மண்டலம், நாடு, கிராமம், பிடாகை என்ற வரிசையை பின்பற்றுகின்றன. இவை அனைத்துமே முதன்மை தரலிருந்து கிடைக்கும் சங்கிலித்தொடர் தரவுகள். அந்த அனைத்தையுமே நான் மேலும் மேலும் ஒன்றன்கீழ் ஒன்றாக பகுத்துச்செல்வதன் மூலம் உபரிப்பொருள்களை மட்டுமே கண்டடைகிறேன், இங்கு வீண் பொருள் என்ற ஒன்றில்லை. இப்படியாக உங்களுக்குக் கிடைக்கும் ஒரு முதன்மைத்தரவு, அடுத்தடுத்து பணியாற்ற ஒரு பெரும் வெளியை அளிக்கிறது, உங்கள் செயல்களத்தை முடிவிலி வரை நீட்டிக்கிறது.
ஒரு கல்வெட்டுத்தரவு பதிவேற்றப்பட்ட பிறகு அந்த தரவில் மாறுபாடுகள் கண்டறியப்பட்டால் அதை எவ்விதம் சரி செய்வீர்கள்?
அடிப்படையான ஒன்றை முதலில் புரிந்துகொள்ளவேண்டும், கல்வெட்டுகளுக்கு இன்றுவரை துல்லியமான அட்டவணை இல்லை. அரசு வெளியிடும் நூல்கள் ஆசிரியர் குழுவால் பலமுறை ஒப்புநோக்கப்பட்டு பிழைதிருத்தப்பட்டு வெளியிடப்படுகின்றன. இவையே எனது முதன்மை ஆதாரங்கள். ஒரு கல்வெட்டு தரவு பிற்காலத்தில் மாறுபடும் என்றால், அதை தெரிவிக்க எனது தேடுபொறியில் Prepublished என்ற பகுதியை ஏற்படுத்தியுள்ளேன். சமயங்களில் பிற நூல்களில் மேம்பட்ட வாசிப்போ, கண்டடைவுகளோ இருந்தால், அவற்றை தகுந்த ஆதாரங்களுடன் பிழைகளும் திருத்தங்களும் பயனாளர்களுக்கு புரியும்படி கொடுக்கப்பட்டுள்ளன.
உங்களது எண்ணங்களுக்கான முன்னோடிகள் குறித்து சொல்லமுடியுமா?
வினோத்ராஜன் எனக்கு முன்னோடி. அவர் சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர். அவரது தளங்கள் விர்ச்சுவல் வினோத் மற்றும் தமிழ் ஜினவாணி ஆகியவை. அவர் தற்போது ஜெர்மனியில் தரவு அறிவியலாளராக (data scientist) பணிபுரிகிறார். எழுத்துருக்களில் நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறார். கொங்கன், கிரந்தம் உள்ளிட்ட பல எழுத்துருக்களை வெளியிட்டுள்ளார்.
எனது திட்டங்களுக்கான எண்ணங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. கோலங்கள், தமிழ் எழுத்துரு, மரபுசார் புகைப்படங்கள், கல்வெட்டு தரவுகள் இவை அனைத்துக்குமான ஆதர்சங்கள் பலர். எனது தரவுகளுக்கான ஒவ்வொரு மூலப்புத்தகமும் அதை புரிந்துகொள்ள உதவும் வாசிப்பும் முக்கியமானவை. அதற்குக்காரணமான அனைத்து ஆய்வுகளும், ஆய்வாளர்களும் எனக்கு சமஅளவில் முக்கியம்தான்.
எனது பெரும்பாலான முயற்சிகள் யாவும் நண்பர்கள் உதவியுடன் நானே செய்பவை. எனது கனவுகளை செயலாக்க 2013 லிருந்து 2020 வரை நிறைய தொழில்நுட்ப வல்லுனர்களிடம் தொடர்ந்து பேசியிருக்கிறேன். பலருக்கு நான் என்ன சிந்திக்கிறேன் என்று புரியவைக்க முடியவில்லை. எனது படிப்பு இயந்திரவியல், எனது பணி கட்டிடவியல் சார்ந்த வரைகலை. ஆனால் நான் தொல்லியல் மற்றும் மரபு சார்ந்து செய்யும் எனது தொகுப்பாக்க முயற்சிகளுக்கு தேவையான PHP, Java போன்ற கணினி மொழிகளை நானே முயன்று கற்றிருக்கிறேன். எனது நண்பர்கள் வினோத்ராஜன், கணியன் சீனிவாசன், செல்வமுரளி, நீச்சல்காரன் முதலியவர்களின் உதவியும் தமிழ்மரபு அறக்கட்டளை, ரீச் அறக்கட்டளை, வரலாற்று குழுமங்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதும் மிகவும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக ரீச் அறக்கட்டளையுடன் 50 மலைகள் பயணம் சென்றிருக்கிறேன். ஏதோ ஒருவகையில் தொடர்ந்து பயணிப்பது எனக்கு தேவையான தரவுகளை திரட்டிக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது, தனியாக என்னால் இவ்வளவு பயணிக்க முடியாது இல்லையா…
பிறமொழிகளில் உள்ள இதுபோன்ற தொகுப்பாக்க முயற்சிகள், தேடுபொறிகள் அனைவருக்குமானவை அல்ல, பெரும்பாலும் ஆய்வாளர்களுக்கு மட்டுமானவை. எனது எண்ணம் இதை எளிமைப்படுத்தி அனைவரும் உபயோகிக்கும்படி செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் ஆய்வு சார்ந்த யோசனைகளை எல்லா இடங்களிலிருந்தும் தொகுத்து எனது திட்டங்களை மேம்படுத்திக்கொள்கிறேன். எனது முயற்சிகளுக்கு பிறகு அதே போன்று தமிழில் இன்னும் சில அமைப்புகளும் முயற்சிகள் மேற்கொள்கின்றன, அவையும் பாராட்டத்தக்கவைத்தான். அதனால் நான் இன்னும் எனது எல்லைகளை விரிவாக்கிக்கொள்கிறேன். தமிழகத்தில் கிடைக்கும் பிற மொழிக் கல்வெட்டுகள், உலகத்தி்ன் பிற இடங்களில் கிடைக்கும் தமிழ் கல்வெட்டுகள் இவற்றையும் தொகுத்துக்கொண்டிருக்கிறேன்.
உதயசங்கர் |
கல்வெட்டுக்கான தேடுபொறிகளை (searching tool) 2022ம் ஆண்டிலிருந்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தோம், தற்போது தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்களிலும் இந்திய அளவில் நடக்கும் ஆய்வுகளில் எனது தேடுபொறியின் பயன்பாடு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. முகநூல், கருத்தரங்குகள் வழியாக எனது தேடுபொறிகளை தெரிந்து கொண்டு அதை முன்மாதிரியாக கொண்டு செயல்பட ஆர்வம் காட்டுகின்றனர். பெங்களூரிலிருந்தும் இலங்கையிலிருந்தும் சிலரது தொல்லியல் சார்ந்த பணிகளுக்கு நான் ஆலோசகராக இருக்கிறேன்.
தமிழகம் தாண்டி கல்வெட்டுகள் சார்ந்த விழிப்புணர்வு மிகவும் குறைவு. பிற மாநிலங்களில் சுற்றுலாத்துறை என்ற நோக்கில் அஜந்தா எல்லோரா போன்ற பெரிய தளங்களை முன்னிலைப்படுத்துகின்றனர். ஆனால் மரபு என்ற நோக்கில் சிறிய கோவில்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வருங்காலத்தில் இந்த விழிப்புணர்வு அதிகரிக்க எனது செயல்கள் தூண்டுதலாக அமையும் என்று நம்புகிறேன்.
இன்று நாம் என்ன தேட வேண்டும், என்ன பார்க்கவேண்டும் என்பதை கூகுள் தான் முடிவு செய்கிறது. கன்யாகுமரிக்கு நீங்கள் சுற்றுலா சென்றால் பார்ப்பதற்கான முதல் பத்து இடங்களை அது காட்டுகிறது. அதில் நீங்கள் ஐந்து இடங்களை தேர்வு செய்கிறீர்கள். ஆனால் கன்யாகுமரியில் சோழர்கள் கல்வெட்டு உள்ள கோவில் உள்ள இடங்களை தேடிப்பார்க்க நீங்கள் முயற்சி செய்ய எனது தேடுபொறி உதவியாக இருக்கும்.
தமிழ் தாண்டிய பிறமொழி கல்வெட்டுகளை நீங்கள் தொகுப்பதற்கு என்னென்ன தயாரிப்புகளை செய்துவருகிறீர்கள்?
பெரும்பாலான கல்வெட்டு தகவல்கள் ஆங்கிலத்திலேயே கிடைக்கின்றன. தமிழ்நாடு எனில் தமிழ் மற்றும் ஆங்கிலம், வெளிநாடுகளில் உள்ள கல்வெட்டுகள் என்றால் ஆங்கிலம். மேலும் நான் diacritic அடையாளங்களை உபயோகிக்கிறேன். இதற்காக நான் ஒரு எழுத்துருவை உருவாக்கியிருக்கிறேன். தெலுங்கு மற்றும் கிரந்தம் ஆகியவற்றை குறித்த செய்திகளை தொகுக்க முடியும். ஆனால் பிறமொழி கல்வெட்டு வரிகளை தட்டச்சிட அந்தந்த மொழி தெரிந்த நண்பர்களை நான் சார்ந்திருக்கிறேன். கிரந்தத்தை online மற்றும் offline தட்டச்சுப்பலகை முயற்சிகள் செய்து வருகிறோம், நண்பர் வினோத் ராஜன் இதற்கான உதவிகள் செய்கிறார். யோசனை என்ற அளவில் நான் ஆர்வலர்களுக்கு எப்போதும் உதவியிருக்கிறேன், அது எனக்கு எப்போதும் எளிதுதான். ஆனால் அவற்றை திட்டமாக துவங்க இங்கே நிதித்தேவை உள்ளது.
உங்கள் வருங்கால திட்டங்கள், திட்டங்களுக்கான தேவைகள் என்ன?
நான் சில வருங்கால திட்டங்களுக்காக சில திட்ட முன்மொழிவாக அணுகியிருக்கிறேன். இந்த உதவி கிடைத்தால் நான் தொகுத்துள்ள 8000 கல்வெட்டுகளின் தகவல்களை கல்வெட்டுப்படிகளுடன் ஒப்பிட முடியும். மேலும் தரவுகளின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை மேம்படுத்த முடியும். இவற்றால் பல வருங்கால திட்டங்களை செயல்படுத்தவும், அரிய புத்தகங்களை மீள்பதிப்பு செய்யவும் முடியும்.
மேலும் இரண்டு தேவைகள் உள்ளன, ஒன்று ஆய்வாளர்களின் உதவி. எனது திட்டங்களின் முக்கியத்துவம் தெரிந்து எனக்கு உதவக்கூடிய மூத்த ஆய்வாளர்கள் இருக்கின்றனர். இன்னொன்று வருங்கால திட்டங்களுக்கு தேவையான மென்பொருள்கள். தற்போது Python, VuJs, NodeJs போன்ற மென்பொருள்களை நான் பயன்படுத்த திட்டமிடுகிறேன். உதாரணமாக எனக்கு வருங்காலத்தில் கல்வெட்டுகளுக்கான வரைபடங்கள் தயாரிக்கும் திட்டம் உள்ளது. தற்போதும் அப்படியான வரைபடங்கள் உள்ளன. ஆனால் நான் உருவாக்க விரும்புவது குறிப்பிட்ட காலக்கோட்டில் இருந்த வெவ்வேறு மன்னர்களுக்கான மாறுபடும் எல்லைகளை கொண்ட வரைபடங்களை. இதற்கு தேவைப்படும் மென்பொருள்களை இப்போது சேகரித்துக்கொண்டிருக்கிறேன், இப்படி ஒவ்வொரு திட்டத்திற்கும் தேவை என்ற அடிப்படையில்தான் நான் வேண்டுவனவற்றை நோக்கி செல்கிறேன்.
முன்பை விட பலர் இப்போது மரபார்ந்த இடங்களுக்கு தொல்லியல் தளங்களுக்கு பயணிக்கின்றனர், புகைப்படங்கள் எடுக்கின்றனர். அவற்றை சமூகவலைத்தளங்களில் பதிவிடுகின்றனர், பிறகு அவ்வளவுதான். ஆனால் இவற்றை தொகுக்கும் என் போன்றவர்களுக்கு இந்தப்படங்கள் மிகவும் முக்கியமானவை, அவர்கள் என்போன்ற ஆர்வலர்களுக்கு அவற்றை அனுப்பலாம். அவர்களின் பெயரோடு இந்த தகவல்களை தரவுகளை சேமித்து வைத்துக்கொள்கிறேன், அவற்றை வெளியிடுகையில் நான் அவர்கள் பெயரையும் குறிப்பிட தயாராக இருக்கிறேன். பழங்காலச்சின்னங்கள் சிதைக்கப்படவும் மாற்றங்கள் செய்யப்படவும் வாய்ப்புள்ள இந்தக்காலக்கட்டத்தில் இதுபோன்ற ஆவணப்படுத்தும் முயற்சிகள் மூலமாகத்தான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்த முடியும். எனவே இதுபோன்ற தன்னார்வலர்களின் உதவிகள் தேவைப்படுகிறது.
மற்றபடி எனது திட்டங்களுக்கு ஆதரவு என்பதைத்தாண்டி அவற்றுக்கு யாரும் தடைசெய்யாமல் இருந்தால் போதும் என்ற மனநிலை தான் எனக்கு உள்ளது. எந்த அமைப்பையும் சாராது நான் தனியாக இயங்கக்காரணம், எனக்கான சுதந்திரம். இதுதான் எனது அடிப்படையான தேவைகளில் முக்கியமானது.
உங்களது தொடர்முயற்சிகளுக்கான பயணம் எதை நோக்கியது ?
எனது முதன்மையான பணி மரபுசார்ந்த தரவுசேகரம் (database). இதுவரை நான் வெளியிட்டுள்ள கல்வெட்டுகள் தேடுபொறி (searching tool) மட்டுமின்றி நடுகல் ஆய்வுக்கான தரவுகள், பாறை ஓவியங்கள், கிராமக்கோவில்கள், கோட்டைகள் போன்று தொல்லியல், வரலாறு, மரபு, கலை சார்ந்தவைகளை தொகுத்துக்கொண்டிருக்கிறேன். இவை அனைத்துமே எனக்கு ஒன்றோடொன்று தொடர்புடையவை.
இந்த முயற்சிகளுக்கு கிடைக்கும் புகழோ அங்கீகாரமோ எனக்கு முதன்மை கிடையாது. இவை அனைத்தையும் பொதுவெளிக்குதான் செய்தளிக்கிறேன். பெயர் புகழ் விருதுகளோடு நான் சுருங்கிப்போனால் அது எனது முயற்சிகளுக்கு நான் செய்யும் அநீதி. இந்த சமூகத்திற்கான எனது பங்களிப்பாகத்தான் இதை செய்கிறேன், தொடர்ந்து செயல்படுதல் எனக்கு ஒருபோதை போல. அனைத்திற்கும் மேலாக இறுதியில் நான் அடையும் அன்றைய நாளின் தன்னிறைவே எனக்கு முக்கியம்.