பௌத்தத்தின் எழுச்சியும் பரவலும்
277. பெருவாரியான மக்கள் பின்பற்றும் மற்ற மதங்களை ஒப்பிடும் போது பௌத்ததை பின்பற்றும் மக்கள் எவ்வளவு இருப்பர்?
புத்த தர்மத்தை பின்பற்றுவோரின் எண்ணிக்கை வேறெந்த மதங்களை பின்பற்றுவோரையும்விட மிகுதிதான்.
278. எவ்வளவு மக்கள் பின்பற்றுகின்றனர் என்ற எண்ணிக்கையை கூறமுடியுமா?
சுமார் ஐந்நூறு கோடி. இது உலக மக்கள் தொகையில் 5:13 என்ற விகிதத்தில் உள்ளது. அல்லது உலக மக்கள் தொகையில் சரிபாதி அளவிற்கு குறைவாக உள்ளது.
279. புத்த தர்மத்தின் பரவலுக்காக பெரும் போர்களும், பல நாடுகள் கைப்பற்றப்பட்டதும், பெரும் மனிதக் குருதியும் சிந்தப்பட்டுள்ளனவா?
வரலாறு அப்படி கொடுமைகளும் குற்றங்களும் எங்கள் மதத்தின் பரவலுக்காக நிகழ்த்தப்பட்டது என்று ஆவணப்படுத்தவில்லை. இன்றளவும் நாங்கள் அறிந்தவரையில் ஒரு துளி இரத்தம் சிந்தவும் அது காரணமாகவில்லை.
பேரராசிரியர் கோல்ப் (kolb) தனது History of culture நூலில் இவ்வாறு சொல்கிறார்: ”போர்க்கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கும், கைப்பற்றப்பட்ட நிலங்களில் வாழ்ந்த மக்கள் சிறைபிடிக்கப்படுவது நிறுத்தப்பட்டதற்கும் நாம் பௌத்தத்திற்கு நன்றி சொல்லியாக வேண்டும்”
280. பிறகு எவ்வாறு அது பிரம்மிக்கத்தக்க வகையில் பரவியது. அதன் பரவலுக்கான ரகசியம் என்ன?
பௌத்தத்தினுள்ளிருக்கும் அதன் சிறப்பை தவிர வேறெந்த காரணமுமில்லை. மெய்மையை அடிப்படையாக கொண்ட அதன் தரிசனம், உயரிய அற போதனைகள், மற்றும் மனிதர்களின் அனைத்து தேவைகளுக்கும் நிறைவளிக்கும் அதன் தன்மை ஆகியவையே.
281. எவ்வாறு பௌத்தம் பரப்பப்பட்டது?
புத்தர் தனது நாற்பதாண்டு கால ஆசிரிய வாழ்க்கையில் இந்தியாவின் பல நிலங்களுக்கு பயணம் செய்து தம்மத்தை போதித்தார். அவரின் அறிவார்ந்த மற்றும் சிறந்த சீடர்களை இந்தியாவெங்கும் பயணம் செய்ய வைத்து தம்மத்தை பரப்பினார்.
282. புத்தர் தனது மாணவர்களை எப்போது அனுப்பினார்?
புரட்டாசி மாதத்தின் ஒரு முழுமதி நாளன்று.
283. அவர்களிடம் புத்தர் என்ன கூறினார்?
புத்தர் அவர்கள் அனைவரையும் அழைத்து “செல்லுங்கள் பிக்குகளே, சென்று உலகிற்கு தர்மத்தை உபதேசம் செய்யுங்கள். பிறர் நலனுக்கும் உங்கள் நலனுக்கும் உழைத்திடுங்கள். இந்த நற்செய்தியை ஒவ்வொரு மனிதனுக்கும் சுமந்துசெல்லுங்கள். ஆனால் நீங்கள் யாரும் ஒரேவழியை பின்பற்ற வேண்டாம், ஒவ்வொருவரும் படைப்பூக்கத்துடன் செயல்படுங்கள்”.
284. கிறித்துவ யுகத்திலிருந்து எத்தனை ஆண்டுகள் முன்னர் இது நிகழ்ந்தது?
சுமார் ஆறு நூற்றாண்டுகள் முன்னர்.
285. அரசர்கள் என்ன உதவி செய்தனர்?
தாழ்ந்தநிலை மக்களுடன் பேரரசர்களும் மதம் மாறி பௌத்தம் பரவ தங்கள் செல்வாக்கை வழங்கினர்.
286. யாத்ரீகர்கள் பங்கென்ன?
கற்றறிந்த யாத்ரீகர்கள் வெவ்வேறு நூற்றாண்டுகளில் இந்தியா வந்து இங்கிருந்து அரிய நூல்களையும் போதனைகளையும் தங்கள் நாட்டிற்கு கொண்டுசென்றுள்ளனர். ஆகவே படிப்படியாக பல நாடுகள் தங்கள் பழைய நம்பிக்கைகளை கைவிட்டு பௌத்தர்களாக மாறினார்.
287. புத்த மதம் ஆழமாக வேரூன்றியதற்கு மற்ற யாரையும் விட எந்த ஒரு மனிதருக்காக உலகு கடன்பட்டுள்ளது?
அவர் பேரரசர் அசோகர். இவர் பியாதாசி என்றும் தர்மசோக்கா என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவர் மகத மன்னர் பிந்துசாராவின் மகன். கிரேக்கர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றிய சந்திரகுப்தரின் பேரன்.
288. அவரின் ஆட்சிக்காலம் எப்போது?
பொ.மு மூன்றாம் நூற்றாண்டு. புத்தரின் காலத்திற்கு இரண்டு நூற்றாண்டுகள் பின்னர். வரலாற்று ஆசிரியர்கள் இந்த காலக்கணிப்பை மறுக்கின்றனர், எனினும் அவ்வளவு உறுதியாக அல்ல.
289. எது அவரை உயர்ந்தவர் ஆக்கியது?
அவர் இந்திய வரலாற்றில் மிகவும் ஆற்றல்மிக்க பேரரசர், மாவீரர் மற்றும் இராஜதந்திரியாக அறியப்படுகிறார். ஆனால் அவரின் உன்னத குணங்கள் என்பது உண்மை மற்றும் அறத்தின் மீதான பற்று, மத நல்லிணக்கம், அனைவருக்கும் சமமான அரசு, கருணை - நோய்வாய்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் விலங்குகள் மீதான அவரின் கருணை. அவரின் புகழ் சைபீரியா முதல் சிலோன் வரை மரியாதையுடன் நினைவுகூறப்படுகிறது.
290. பிறப்பிலேயே அவர் பௌத்தரா?
இல்லை. அவரின் பட்டாபிஷேகம் முடிந்து தன்னுடைய பத்தாம் வயதில் அவர் பௌத்த மதத்திற்கு நிஃரோத சமனீரா என்னும் அராகதரால் மாற்றப்பட்டார்.
291. அவர் பௌத்தத்திற்கு என்ன செய்தார்?
அவர் போலி பிக்குகளை வெளியேற்றி நல்லவர்களை ஊக்குவித்தார், மடாலயங்கள் மற்றும் டகோபாக்கள் எழுப்பினார், நந்தவனங்கள் நிறுவினார், மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கும் மருத்துவமனைகள் ஏற்படுத்தினார், பாடலிபுத்திரத்தில் தர்மத்தை மறுபரிசீலனை செய்யவும் மீளுருவாக்கம் செய்யவும் மன்றம் நிறுவினார், பெண்களுக்கும் மதக்கல்வி கற்கும் உயர்வளித்தார். ஐந்து கிரேக்க அரசர்கள், அவரது நட்பு நட்டுகள், மற்றும் இந்தியாவின் பேரரசர்களுக்கும் புத்தரின் சித்தாந்தத்தை போதிக்க தூதரக அதிகாரிகளை அனுப்பிவைத்தார். அவரே எங்கள் முதன்மை யாத்திரை நகரங்களான கபிலவஸ்து, புத்தகயா, இசிபட்டானா மற்றும் குசினராவில் ஸ்தூபிகளை எழுப்பினார். மேலும் பல ஆயிரம் கட்டிடங்களை எழுப்பினார்.
292. அவரின் உன்னத குணங்களை நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கிறது?
கடந்த சிறு காலத்திற்குள்ளேயே இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அவரின் பதினான்கு அரசாணைகள் பாறை கல்வெட்டிலும் அவரின் கட்டளைகளால் எழுப்பப்பட்ட எட்டு தூண்களிலும் கண்டுபிடிக்கப்பட்டன. அவையனைத்தும் அவரை இப்புவியில் வாழ்ந்தவரில் விவகமும், உயர் மனமும் கொண்ட பேரரசர் என நிரூபிக்கின்றன.
293. இந்த கல்வெட்டுக்கள் பௌத்தத்திற்கு என்ன பண்புகளை அளிக்கிறது?
இவை பௌத்தத்தை பெரும் சகிப்புத்தன்மை கொண்ட மதமாகவும், உலக சகதோரத்துவம், உயர் நெறி மற்றும் தர்மத்தை கடைபிடிக்கும் மதமாகவும் காட்டுகின்றன. இது சுயநலமோ, வகுப்புப்பிரிவினையோ அல்லது சகிப்பின்மையோ கொண்டதாக எங்கும் ஒரு சுவடும் இல்லை. அந்த கல்வெட்டுகள் மேற்கின் பெரும் பண்டிதர்களால் மரியாதையுடன் போற்றப்படுகின்றன.
294. தர்மசோகா என அழைக்கப்படும் அசோகர் பௌத்தத்திற்கு அளித்த மதிப்புமிக்க பரிசென்ன?
தன் அன்பிற்குரிய மகன் மஹிந்தா மற்றும் மகள் சங்கமித்ரையை புத்த சங்கத்திற்கு அளித்தார். மேலும் அவர்களை இலங்கைக்கு அனுப்பி புத்த மதத்தை அறிமுகம் செய்வித்தார்.
295. இந்த உண்மை தகவல் சிலோனின் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளதா?
ஆம். அரசு நிகழ்வுகளை பதிவுசெய்யும் மகாவம்சம் என்னும் நூலில் சமயப்பரப்பாளர்களின் பணியை நேரில் கண்டவர்களால் இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.
296. சங்கமித்ரை மேற்கொண்ட சமயப்பணி குறித்தான ஆதாரம் ஏதேனும் இன்றுள்ளதா?
உள்ளது. அவர் சிலோன் செல்கையில் புத்தர் எந்த போதி மரத்தடியில் ஞானமடைந்தாரோ அதே மரத்தின் ஒரு கிளையை தன்னுடன் கொண்டுசென்றார். அது இன்றும் வளர்ந்துகொண்டிருக்கிறது.
297. எங்கு?
அனந்தபுரம் என்னும் இடத்தில். அதன் வரலாறு இன்றும் அதிகாரபூர்வமாக பாதுகாக்கப்படுகிறது. பொ.மு. 306-ல் நடப்பட்ட இம்மரமே வரலாற்றில் பதிவாகிய பழம்பெரும் மரம்.
298. அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த பேரரசர் யார்?
தேவனாம்பிரியா தீசா. அவரின் துணைராணி அனுலா சங்கமித்ரையை வரவேற்று பிக்குணிகளுக்கான சங்கத்தை நிறுவுமாறு கூறினார்.
299. சங்கமித்ரையுடன் வந்தவர்கள் யார்?
பல பிக்குணிகள் உடன்வந்தனர். அவர் குறுகிய காலத்தில் அரசியையும் மற்றும் அவருடன் இருந்த மகளிர்களையும் மேலும் ஐந்நூறு கன்னி பெண்களையும் சங்கத்தில் உட்புகுத்தினார்.
300. அசோகரின் மறைபணியாளர்கள் அந்நிய நிலத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்னென்ன?
அவரின் மகனும் மகளும் பௌத்தத்தை இலங்கையில் அறிமுகம் செய்தனர். அவரின் துறவிகள் பௌத்தத்தை வடஇந்தியா மற்றும் தங்களின் எல்லைக்கப்பாற்பட்ட பதினான்கு இந்திய நிலங்களிலும், ஐந்து கிரேக்க அரசர்களுக்கும் மற்றும் ஏற்கனவே தங்கள் சமய பணியாளர்களை அனுமதிக்கும் ஒப்பந்தம் கொண்ட நட்பு நாடுகளுக்கும் கொண்டுசென்றனர்.
301. அவர்களை பெயர் கூறமுடியுமா?
சிரியாவின் அண்டியோசிஸ் (Antiochus), எகிப்தின் படோலேமி (Ptolemy), மாசிடோனின் ஆன்டிகோன்ஸ் (Antigonus), சிரேனின் மர்கஸ் (Margas), எபிரோசின் அலெக்ஸாண்டர் (Alexander).
302. இதை எங்கே அறிந்துகொள்வது?
பேரரசர் அசோகர் அவராலேயே பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலும் கல்தூண்களிலும் உள்ள அரசாணைகளில் காணலாம். அவை இன்றும் அவ்விடங்களுக்கு செல்வோர் அனைவரும் காணும்வகையில் நிலையாக இருக்கின்றன.
303. மேற்கின் எந்த இணை மதங்களோடு புத்த தர்மம் மேற்கத்திய சிந்தனையோடு ஒன்றுசேர்கிறது?
எகிப்தின் தேராபெட்ஸ் (Therapeuts) மற்றும் பாலஸ்தீனத்தின் எஸ்சென்ஸ் (Essenes).
304. சீனாவில் பெளத்த நூல்கள் எப்போது அறிமுகம் செய்யபட்டன?
சமந்த பசதிக்க (samanta pasadika) மற்றும் சாரத்த திபானி (sarattha dipani) ஆகிய இரண்டு பாலி நூல்கள் பொ.மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தர்மசோகரின் ஐந்து பிக்குகளால் சீனாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டன என கூறப்படுகிறது.
305. எங்கிருந்து எப்போது கொரியா தேசத்திற்குள் சென்றது?
சீனாவிலிருந்து பொ.யு. 372-ல் சென்றது.
306. ஜப்பானிய நாட்டிற்கு எப்போது எங்கிருந்து சென்றது?
கொரியாவிலிருந்து பொ.யு. 552-ல் ஜப்பானிற்கு சென்றது.
307- எங்கிருந்து எப்போது கொச்சின்சீனா (Cochinchina - வியட்நாம்), ஃபார்மோசா (Formosa), ஜாவா, மங்கோலியா, யோர்கண்ட் (Yorkand), பால்க் (Balk), போகாரா (Bokhara), ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்றது?
உறுதியாக பொ.யு. நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் சென்றது.
308. இலங்கையிலிருந்து எங்கெங்கே எப்போது பௌத்தம் பரவியது?
பொ.யு. 450-ஆம் ஆண்டில் பர்மாவிற்கும், பின்னர் அங்கிருந்து படிப்படியாக அரகன் (Arakan), கம்போயா (Kamboya) மற்றும் பெகுவிற்கும் (Pegu) பரவியது. ஏழாம் நூற்றாண்டில் (பொ.யு. 638) சியாமிற்கும் (தாய்லாந்து) பரவியது. அன்று முதல் இன்று வரை அது சியாமின் அரச மதமாகவே உள்ளது.
309. காஷ்மீரிலிருந்து சீனா தவிர்த்து கூடுதலாக வேறெங்கு பரவியது?
நேபாளம் மற்றும் திபெத்.
310. ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும்பான்மை மதமாக இருந்த பௌத்தம் ஏன் இப்போது இந்தியாவில் அழிவின் நிலையிலுள்ளது?
துவக்கத்தில் பௌத்தம் ததாகதரின் போதனைகளின் புனிதமும் உன்னதமும் கொண்டிருந்தது; சங்கம் உயர் ஒழுங்குடனும் தர்ம விதிகளை பின்பற்றியும் நடந்தது; அது எல்லோர் மனதையும் வென்று காலை ஒளி மலர்களை உயிர்த்தெழுப்புவது போல பல நாடுகளெங்கும் மகிழ்ச்சியை பரவ செய்தது. ஆனால் சில நூற்றாண்டுகள் கழிந்து தீய பிக்குகள் உபசம்வதா (துறவு) ஏற்றனர், அதன்பிறகு சங்கத்தில் செல்வமும், சோம்பலும் மற்றும் புலன் நாட்டமும் வந்துசேர்ந்தது, தர்மம் நலிவுற்றது. ஆகவே இந்திய தேசம் அதை கைவிட்டது.
311. இந்த வீழ்ச்சி வெகு விரைவாக நடைபெற பொ.யு ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் ஏதேனும் நடந்ததா?
ஆம்
312. ஆன்மீகத்தில் ஏற்பட்ட குறைபாடு, சங்கத்தின் சீரழிவு, மற்றும் உயர் விழுமியம் கொண்ட மக்கள் பின் மூடத்தனமான உருவவழிபாட்டிற்கு மாறிய விளைவு இவைகளல்லாமல் வேறேதும் காரணங்கள் உண்டா?
ஆம். இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்சல்மான்கள் தாங்கள் சென்ற இடெமெல்லாம் பெரும் சேதம் உண்டாக்கி எங்கள் மதத்தை இல்லாமலாக்கினர்.
313. எத்தகைய கொடுஞ்செயல் அவர்கள் மீது சாட்டப்பட்டுள்ளது ?
எங்கள் விஹாரைகளை எரித்து அல்லது இடித்துத்தள்ளி அழித்தனர், பிக்குகளை கொன்றழித்தனர், எங்கள் புனித மத நூல்களை நெருப்பிற்கு இரையாக்கினர்.
314. நம்முடைய நூல்கள் மொத்தமாக இந்தியாவில் அழிந்துவிட்டதா?
இல்லை. பல பிக்குகள் எல்லை கடந்து திபெத் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்கள் நூல்களுடன் தஞ்சமடைந்தனர்.
315. சமீப காலங்களில் இந்த புத்தகங்கள் பற்றி ஏதேனும் தடயங்கள் கண்டறியபட்டதா?
ஆம். ராய்பகதூர் சரத்சந்திரதாஸ் என்னும் வங்காள அறிஞர் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை திபெத்தின் நூலகங்களில் கண்டு அவற்றில் மிகவும் முக்கியமானவற்றை நகல் எடுத்து தன்னுடன் கொண்டுவந்தார். அவர் தற்போது இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு அப்புதகங்களை தொகுத்து பிரசுரிக்கும் பணியில் உள்ளார்.
316. எந்த நாட்டில் துவக்ககால பௌத்ததின் புனித நூல்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு குறைந்த அளவே சிதைக்கப்பட்டுள்ளது என நாம் நம்புவதற்கு காரணமாகிறது?
இலங்கை. பிரிட்டானிக்காவின் கலைக்களஞ்சியம் இப்படி சொல்கிறது “இந்த தீவில் பௌத்தம் அதன் அப்பழுகற்ற தூய நிலையில் இந்த நவீன காலத்திலும் தக்கவைக்கப்பட்டுள்ளது”.
317. நவீன காலகட்டத்தில் பிடகங்கள் திருத்தம் செய்யபட்டுள்ளனவா?
ஆம். இலங்கையில் மிகவும் கவனமாக சுமங்கலா (H Sumangala) மற்றும் பிரதன ஸ்தவீரா (Pradhana sthavira) ஆகியோரின் தலைமையில் கற்றறிந்த பிக்குகளால் பொ.யு 1875-ல் வினய பிடகம் திருத்தம் செய்யப்பட்டது.
318. தெற்கு மற்றும் வடக்கு என பிரிவாக உள்ள பெளத்த நாடுகள் பௌத்ததின் நன்மைக்காக தங்களுக்குள் நட்பார்ந்த உறவு கொள்வதுண்டா?
பொ.யு. 1891-ல் இந்த இருபெரும் பிரிவினரின் ’பிரதான நாயகர்’களிடையே பதினான்கு கருத்துக்கள் பௌத்தத்தின் அடிப்படை நம்பிக்கை கூறுகளாக ஏற்கப்பட்டு இருபிரிவினரும் கற்க வேண்டும் என்ற வெற்றிகரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கலோனல் ஆல்காட் அவர்களால் வரைவு செய்யப்பட்ட இக்கருத்துக்கள் பர்மா, சிங்களம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒவ்வொன்றாக விவாதித்து தலைமை பிக்குகளால் ஒருமனதாக ஏற்கப்பட்டு கையொப்பம் பெற்று தை மாதம் 1892 ஆம் ஆண்டு பிரசுரமானது.
319. இதனால் என்ன நல்விழைவு ஏற்பட்டது?
இருவருக்குமான நற்புரிதலின் விழைவால் எண்ணற்ற ஜப்பானிய பிக்குகள் மற்றும் சமநேரர்கள் (புதிய ஆண் பிக்கு மாணவர்கள்) சிலோன் மற்றும் இந்தியாவிற்கு பாலி மற்றும் சமஸ்கிருதம் பயில அனுப்பப்பட்டனர்.
320. புத்த தர்மம் பௌத்தம் அல்லாத நாடுகளிலும் பிரபலம் ஆவதற்கான தடயங்கள் ஏதேனும் உள்ளதா?
உள்ளது. எங்களின் மதிப்புமிக்க நூல்களின் மொழிபெயர்ப்புகள் மற்றும் பல கட்டுரைகள் சிற்றிதழ்களிலும் நாளிதழ்களிலும் பிரசுரிக்கப்படுகிறன்றன. மற்றும் சிறப்பான சமய ஆய்வுக்கட்டுரைகள் தலைசிறந்த எழுத்தாளர்களால் அச்சிதழ்களில் வெளியிடப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மேற்கு நாடுகளில் பௌத்தர்களும் அல்லாதவரும் பெளத்த கருத்துக்களை பொதுவெளியில் பெரும் கூட்டத்தின் முன் சொற்பொழிவு செய்கின்றனர். ஷின் ஷூ (shin shu) பிரிவை சேர்ந்த ஜப்பானிய பௌத்தர்கள் ஹொனோலுலு, சான்பிரான்ஸிஸ்கோ, சக்ரமெண்டோ மற்றும் பிற அமெரிக்க நிலங்களில் தங்கள் சமயகுழுக்களை அமைத்துள்ளனர்.
321. நம்முடைய எந்த இரண்டு முதன்மை கருத்துக்கள் மேற்கத்திய மனதை ஆக்கிரமித்துள்ளது?
கர்மா மற்றும் மறுபிறப்பு. இதனை அவர்கள் ஏற்றுகொண்டதன் விரைவு ஆச்சர்யமயளிக்கிறது.
322. இந்த ஏற்பிற்கான விளக்கம் எது என நம்பப்படுகிறது?
அவை இயற்கையாக உள்ளுறைந்திருக்கும் அறத்திற்கு முக்கியத்துவம் தருவதும் மற்றும் அவற்றின் தெளிவான நியாயத்தன்மையுமே காரணம்.
ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
தமிழில் - விஷ்ணுகுமார், தாமரைக்கண்ணன் அவிநாசி
ஹென்றி ஸ்டீல் ஆல்காட் |
விஷ்ணுகுமார் |
ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (ஆகஸ்டு 2, 1832 - பிப்ரவரி 17, 1909) எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் பிரம்மஞான சபையின் (Theosophical society) இணை நிறுவனர் ஆவார். பௌத்தை மீட்டுருவாக்கம் செய்தவர்களுள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.
ஆல்காட் நியூயாரக் ட்ரைபியூன் (newyork tribune) செய்தித்தாளின் வேளாண்மை ஆசிரியராக 1858 முதல் 60 வரை பணிபுரிந்தார். பின்னர் கர்னல் பதவியுடன் அமெரிக்க போர் மற்றும் கடற்படை துறையில் சிறப்பு ஆணையராக 1863 - 66 வரை பணிபுரிந்தார். வழக்கறிஞராக 1966 முதல் பணிபுரிய தொடங்கினார். ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்க்ஸ்கி (Helena petrovna blavatsky), வில்லியம் ஜட்ஜ் (William q Judge) மற்றும் சிலருடன் இணைந்து 1875-ல் பிரம்மஞான சபை நிறுவி அதன் தலைமை ஏற்றார். 1878-ல் அவரும் பிளாட்வஸ்கியும் இந்தியா வந்தனர். 1879 முதல் இந்தியாவிலேயே வசிக்க முடிவுசெய்தனர். 1882-ல் பிரம்மஞான சபையின் நிரந்தர தலைமையகமாக சென்னை அடையாறில் நிலைப்படுத்தினர். அன்னி பெசன்டுடன் (Annie Besant) இணைந்து வாரணாசியிலுள்ள பெனாரஸில் இந்து கல்லூரி நிறுவ உதவினார். பெசன்டுடன் இணைந்து பிரம்மஞான சபையின் கருதுகோள்களை இந்திய மற்றும் இலங்கையில் நேரில் சென்று விளக்கினார். இலங்கை பௌதர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆல்காட் அவரது முயற்சியால் அங்கே மூன்று கல்லூரிகளும் முப்பதிமூன்று பள்ளிகளும் நிறுவ செய்தார். பௌதர்கள் மத்தியில் அவர் மிகுந்த செல்வாக்கும் வரவேற்பும் பெற்றார். கிழக்கத்திய தத்துவங்களுடன் நெருக்கமாக அறியப்பட்டாலும் இந்து தத்துவ புத்தூக்கத்திற்கும் தன் பங்களிப்பை அளித்துள்ளார். ஆல்காட் தனது 74-வது வயதில் சென்னையில் காலமானார்.
இக்கட்டுரை ஹென்றி ஸ்டீல் ஆல்காட் எழுதிய The Buddhist catechism (1891) என்ற உலக புகழ் பெற்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. வெளிவந்த நாள் முதல் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
https://www.britannica.com/biography/Henry-Steel-Olcott
https://en.wikipedia.org/wiki/Henry_Steel_Olcott
Catechism என்பது கிறிஸ்துவத்தில் கேள்வி-பதில் வடிவில் மத நம்பிக்கைகளையும் அதன் கொள்கைகளையும் கற்பிப்பதற்கு பயன்படுத்தப்படும் நூல் வடிவம். இச்சொல் தமிழில் வினாவல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.