நூல் அறிமுகம்
ஜோசப் கேம்ப்பெல் அவர்களின் 'தொன்மங்களின் ஆற்றல்' (Power of Myth) எனும் இந்நூல் ஒரு அமெரிக்க தொலைக்காட்சி தொடருக்கான காணொளிப்பதிவின் நேரடியான எழுத்து வடிவம். நூலின் ஆசிரியரான ஜோசப் கேம்ப்பெலிடம் தொலைக்காட்சி நிருபர் பில் மோயர் தொன்மங்கள் குறித்து கேட்கும் கேள்விகளாலும் அதற்கு கேம்ப்பெல் அளிக்கும் பதில்களாலும் ஆன இந்த உரையாடல்கள் 1985-86 ஆம் ஆண்டில் பல அமர்வுகளாக நிகழ்த்தப்பட்டது. 24 மணி நேரம் நீளும் இக்காணொளிப்பதிவு ஆறு மணி நேரமாக சுருக்கப்பட்டு தொலைக்காட்சித் தொடராகவும் நூலாகவும் வெளிவந்தது.
ஜோசப் கேம்ப்பெல் |
ஜோசப் கேம்ப்பெல் (1904-1987) சாரா லாரான்ஸ் எனும் அமெரிக்கக் கல்லூரியில் 40 ஆண்டுகள் விரிவுரையாளராக பணிபுரிந்தவர். தன் வாழ்நாள் முழுவதும் உலக தொன்மங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர். ஒப்பீட்டு தொன்மவியலில் ஆர்வமும் புலமையும் கொண்டு பெரும் பணிகள் ஆற்றியவர். 'A Skeleton Key to Finnegans Wake', 'The Hero with a Thousand Faces', உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்.
நவீன மனிதர்களின் உலகில் தொன்மங்கள் ஆற்றக்கூடிய பணி என்ன என்பதை இந்நூல் விரிவாக விவாதிக்கின்றது. பழங்குடி மனிதர்களின் கதைகளில் துவங்கி நவீனத் திரைப்படங்கள் வரையிலும் உருவாகி வந்திருக்கும் பெருமானுடர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பதற்கான காரணிகளை விளக்குகிறது. சமூகங்களாக வாழும் இன்றைய நாகரீக மக்களுக்கு தொல் சடங்குகளின் முக்கியத்துவத்தையும், அவைகள் ஆழுள்ளத்துடன் உரையாடும் விதத்தையும் எடுத்துச் சொல்கிறது. தொன்மங்கள் என்பவை வெறும் கட்டுக்கதைகளல்ல, அவைகள் மானுடப் பண்பாட்டின் சீர்திருத்தங்களுக்கான விதைகள் என்றும், அறிய முடியா காரணங்களைக் கொண்ட வாழ்க்கைத் துயர்களினால் மனிதன் உடைந்து வீழும் போது வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ளவும், எதிர்காலத்தை கனவுக்குள்ளிருந்து மீட்டடுக்கவும் அவனுக்கு இருக்கும் ஒரே குறிப்புகள் என்றும் இந்த நூல் நம்மிடம் வாதிடுகிறது. மேலும் திருமணம், சந்ததிப்பெருக்கம் போன்ற செயல்பாடுகள் அவற்றில் இருக்கும் துயர் நிறைந்த பயணம் காரணமாக பொருளிழந்து வரும் இந்த நவீன யுகத்தில் அச்செயல்பாடுகளின் அடிப்படை நோக்கத்தை நமக்கு புரிய வைப்பதன் வாயிலாக அவைகள் குறித்த புதியதோர் கோணத்தை முன்வைக்கின்றது இந்த புத்தகம்.
மோயர்ஸ் |
பூபதி துரைசாமி (மொழிபெயர்ப்பாளர்)
--------------------------------------------------------------
பகுதி 1. தொன்மமும் நவீன உலகமும்
“நாம் அனைவரும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தேடிக்கொண்டிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. நாம் தேடுவது வாழ்தலின் அனுபவத்தை என்று நான் நினைக்கிறேன், ஆகவே பௌதிகத் தளத்தின் மீதான நமது வாழ்வனுபவங்கள் நமது அகஇருப்பிற்கும் புறயதார்த்தத்திற்கும் இடையே ஒரு ஒத்திசைவைப் பெற்று வாழ்தலின் பேரானந்தத்தை நம்மை உணரவைக்கின்றது.”
மோயர்ஸ்: தொன்மங்கள் எதற்கு? தொன்மங்களை நாம் ஏன் பொருட்படுத்தவேண்டும்? அவைகளுக்கும் என் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்?
கேம்ப்பெல்: இக்கேள்விக்கு என்னுடைய உடனடியான பதில், "வாழ்க்கை இனிமையானது. உங்கள் வாழ்க்கையை வாழ உங்களுக்கு தொன்மங்கள் தேவையில்லை" என்பதுதான். ஒரு விஷயம் முக்கியமானது எனப்படுவதாலேயே அதன் மீது ஆர்வமாக இருக்கவேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் தொன்மங்கள் ஏதாவதொரு வகையில் தானே வந்து நம்மை பற்றிக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். அப்போது அவற்றை உரிய முறையில் அறிமுகப்படுத்திக்கொண்டால், தொன்மங்கள் உங்களை கவர்ந்துகொள்ளும் என்பதை நீங்கள் கண்டடைவீர்கள். அப்படி அது உங்களை கவர்ந்துகொண்டால் அது உங்களுக்கு என்ன செய்யும்?
இன்றைய நமது சிக்கல்களில் ஒன்று ஆன்மிகம் குறித்து எழுதப்பட்டவைகளைப் பற்றி நாம் போதுமான அளவிற்கு அறிந்திருக்கவில்லை என்பது. நமது கவனமெல்லாம் அன்றாடத்தின் செய்திகள் மீதும், உடனடி பிரச்சனைகள் மீதும்தான். நம்முடைய பல்கலைக்கழகங்கள் காற்றுகூட புகாத வண்ணம் இறுக்கமாக மூடப்பட்ட இடங்கள் போல உள்ளன. அன்றாடச்செய்திகளால் அவை உங்கள் அகவாழ்க்கை மீதும், வாழ்க்கையின் சாரமான அழியா விழுமியங்களை பேசிய பிளாட்டோ, கன்பூசியஸ், புத்தர், கதே மற்றும் பலர் அடங்கிய நம் மகத்தான மரபின் மீதும் உங்கள் கவனத்தை செலுத்தவிடாமல் முட்டுக்கட்டை போடுகின்றன. நீங்கள் முதுமையில் உங்களுடைய அனைத்து உலகியல் தேவைகளும் சிக்கல்களும் தீர்க்கப்பட்ட பின்னர் உங்கள் அகவாழ்க்கையை நோக்கி திரும்புகையில் அவ்வாழ்க்கை என்னவென்றும் அது எங்கிருக்கிறதென்றும் நீங்கள் அறியாதிருப்பீர்கள் என்றால் நீங்கள் பெரும் வருத்தத்திற்கு உள்ளாவீர்கள்.
முன்பெல்லாம் கிரேக்க, லத்தீனிய, விவிலியக் கதைகள் நமது கல்விப்பாடங்களின் ஒரு பகுதியாக இருந்தன. இன்று அது கைவிடப்பட்டதும், தொன்றுதொட்டு வந்த தொன்மங்கள் சார்ந்த தகவல்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. அக்காலத்தில் மக்களுடைய மனங்களில் அக்கதைகள் இருந்தன. அவை மனதில் இருக்கையில், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழும் ஒரு சம்பவத்துடன் அக்கதை பொருந்துவதை நீங்கள் காண்பீர்கள். அதன் மூலம் நிகழ்பவை குறித்த ஒரு பரந்த கண்ணோட்டத்தை நீங்கள் அடைவீர்கள். அப்படியான எந்த ஒரு தொன்மக்கதையும் தற்போது நம்முள் இல்லாததால், நாம் உண்மையிலேயே ஏதோவொன்றை இழந்துவிட்டோம். அதை நிரப்பக்கூடிய அதற்கு இணையான நூல்களும் இன்று நம்மிடம் இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக மனித வாழ்க்கைக்கும், நாகரீகங்களின் கட்டமைப்பிற்கும், மதங்களுக்கும் உறுதுணையாக இருந்த கருப்பொருட்களை உருவாக்கிய அந்த பழங்கால தகவல் துணுக்குகள், நமது அகசிக்கல்களுக்கும், மர்மங்களுக்கும், ஆழ்மனதின் நுழைவாயில்களுக்கும் வழி காட்ட முடியும். ஆனால் அவ்வழியில் இருக்கும் வழிகாட்டிப் பலகைகளை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையெனில், பிறகு உங்களுக்கானதை நீங்களேதான் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இவற்றினால் நீங்கள் ஈர்க்கப்பட்டால், இம்மரபுகளில் ஏதோ ஒன்றிலிருந்து பெறக்கூடிய ஆழமும் செழிப்பும் நிறைந்த அறிதலுணர்வையும் உயிரோட்டமான வாழ்வுணர்வையும் நீங்கள் கைவிட விரும்பமாட்டீர்கள்.
மோயர்ஸ்: ஆகவே இவ்வுலகுடன் ஒரு புரிதலுக்கு வர முயற்சிக்கும் பொருட்டும், நமது வாழ்க்கையை உண்மையுடன் ஒத்திசையச் செய்யும் பொருட்டுமா நாம் கதைகளை சொல்ல வேண்டியிருக்கிறது?
கேம்ப்பெல்: ஆம், நான் அவ்வாறுதான் நினைக்கிறேன். புதினங்கள் அதிலும் பெரும்புதினங்கள் அபாரமான அறிவுரைகளாக அமைய முடியும். என்னுடைய இருபது மற்றும் முப்பது ஏன் நாற்பது வயதிலும் கூட ஜேம்ஸ் ஜாய்ஸ்சும், தாமஸ் மன்னும் எனக்கான ஆசிரியர்களாக இருந்தார்கள். நான் அவர்கள் எழுதிய அனைத்தையுமே வாசிப்பேன். இருவருமே புராணமரபு என சொல்லப்படும் வகைமையில் எழுதிக்கொண்டிருந்தார்கள். உதாரணமாக, தாமஸ் மன்னின் 'டோனியோ க்ரோகர்' (Tonio Kroger) நாவலில் வரும் டோனியோவின் கதையை எடுத்துக்கொள்ளுங்கள். டோனியோவின் தந்தை ஒரு பெரும் வியாபாரி. அவர் பிறந்த ஊரின் முக்கியமான குடிமகன். இளையவன் டோனியோ தன் கலையார்வத்தினால் முனிச் நகரத்திற்கு சென்று உலகியலாளர்களை விட தங்களை மேலானவர்களாக கருதும் இலக்கியவாதிகளாலான ஒரு குழுவுடன் இணைந்து கொள்கிறான்.
இப்போது டோனியோ இரு வகையான வாழ்க்கைக்கு நடுவில் நிற்கிறான். ஒன்று அவன் தந்தையைப் போல் பொறுப்புள்ள நல்ல தந்தையாக, ஆனால் தன் வாழ்நாளில் தான் விரும்பியது எதையும் செய்திராதவராக வாழ்வது. இன்னொன்று தன் பிறப்பிடத்திலிருந்து வெளியேறி அவ்வகை வாழ்க்கையை விமர்சிப்பவனாக ஆவது. ஆனால் டோனியோ தன் பிறப்பிடத்து மக்களை உண்மையாக நேசித்தான். மேலும் அறிவியக்கத்தில் அவர்களைவிட தன்னை சற்று மேலானவனாக எண்ணி கூரிய முறையில் அவர்களை வரையறுத்துக்கொள்ள முடிந்தபோதிலும் அவன் இதயத்தில் அவர்களுக்கென்று ஒரு இடம் இருந்தது.
ஆனால் அவன் அக்கட்டற்ற கலைஞர்களுடன் வாழ கிளம்பிச் சென்றபிறகு வாழ்க்கை குறித்த அவர்களின் கீழான எண்ணங்களால் அவர்களுடன் இணைய முடியாது என்று அறிகிறான். எனவே அவன் அவர்களிடமிருந்து விலகி அக்குழுவில் உள்ள ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். "மனிதகுலத்தை நிராகரித்து உன்னதமும் ஆத்மார்த்தமான அழகும் கொண்ட பாதைகளில் துணிவுடன் பயணிக்கும் பெருமைமிகு மனிதர்களை நான் மதிக்கின்றேன். ஆனால் நான் அவர்கள் மீது பொறாமைகொள்ள மாட்டேன். ஒரு இலக்கியவாதியை கவிஞனாக ஏதாவது ஒன்று மாற்றக்கூடுமென்றால் அது என் பிறப்பிடத்தில் வாழும் சாமான்ய மனிதர்களின் நேசம்தான். இந்த இதமான உணர்வனைத்தும் இந்த அன்பிலிருந்தும், நேசத்திலிருந்தும், புன்னகையிலிருந்தும் தான் உருவாகிறது. உண்மையில் எனக்கு இது இப்படிகூடத் தோன்றுகிறது. மனிதமும் தெய்வாதீனமும் இணைந்த குரலில் ஒருவன் சொல்வதை போன்றது அன்பு. அன்பின்மை என்பது பித்தளையின் ஓசை அல்லது சைம்பல் (cymbal) தாளத்தகடுகளின் ஓசை போன்றது”
மேலும் அவன் சொல்கிறான், "எழுத்தாளன் உண்மைக்கு உண்மையானவனாக இருக்க வேண்டும்." அப்படி இருத்தல் ஒரு கொலைக்கருவியை ஏந்தியிருப்பதுபோலாகும், ஏனென்றால் ஒரு மனிதனை உண்மையாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவனுடைய குறைபாடுகளை விவரிப்பதுதான் ஒரே வழி. மிகச்சரியான மனிதன் என்பவன் உலகியல் ஆர்வமற்று இருப்பவன், புத்தர் உலகியலைத் துறந்தார், நீங்கள் அறிவீர்கள். வாழ்க்கையின் குறைபாடுகளே விரும்பத்தக்கவை. எழுத்தாளன் உண்மையெனும் குத்தூசியை எறிகையில் அது புண்படுத்துகிறது. ஆனால் அது அன்புடன்தான் எறியப்படுகிறது. இதைத்தான் தாமஸ் மன் "அன்பின் முரண்நகை" (Erotic irony) என்றழைத்தார். அதாவது அன்பிற்காக இரக்கமற்ற பகுத்தறியும் சொற்களால் நீங்கள் செய்யும் கொலை எனலாம்.
மோயர்ஸ்: பிறப்பிடத்தை விட்டு அகன்றிருந்தாலும் அல்லது மீண்டும் அங்கு வரப்போவதில்லை என்றாலும் அங்கிருந்து பெறப்பட்ட உணர்வான பிறப்பிடத்து-நேசம் என்னும் படிமத்தை நான் ரசிக்கின்றேன். அங்கிருந்துதான் நீங்கள் முதன் முதலாக மக்களைப் பற்றி அறிந்து கொள்கிறீர்கள். ஆனால் நீங்கள் மக்களை நேசிப்பது அவர்களின் குறைபாடுகளுக்காகத்தான் என்று சொல்வது ஏன்?
கேம்ப்பெல்: குழந்தைகள் அவ்வப்போது கீழே விழுவதாலும், சிறிய உடலில் பெரிய தலையைக் கொண்டிருப்பதாலும் நாம் குழந்தைகளை விரும்பாமல் இருக்கிறோமா? இதை அறியாமலா வால்ட் டிஸ்னி ’Snow White and Seven Dwarfs’ திரைப்படத்தை உருவாக்கியிருப்பார்? மேலும் இந்த குறும்புக்கார செல்லகுட்டிகளை அவர்களின் குறைபாடுகளுக்காகத்தானே மக்கள் விரும்புகிறார்கள்.
மோயர்ஸ்: அப்படியானால் ஒழுங்கு அல்லது கச்சிதம் என்பது சலிப்பானது, இல்லையா?
கேம்ப்பெல்: அப்படித்தான் இருக்க வேண்டும். மேலும் அது மனிதனின் இயல்பான பண்பல்ல. எது உங்களை தெய்வமாகவும் அழிவற்றதாகவும் ஆக்காமல் மனிதனாக ஆக்குகிறதோ அதுதான் விரும்பத்தக்கது. அதனால்தான் சிலருக்கு கடவுளை நேசிப்பது சிரமமாக உள்ளது. ஏனென்றால் அங்கே குறைபாடுகள் இல்லை. அங்கே நீங்கள் பக்தியுடன் இருக்கலாம், ஆனால் உண்மையான அன்புடன் இருக்க முடியாது. சிலுவையில் ஏற்றப்பட்ட கிறிஸ்துவே அன்புக்குரியவராகிறார்.
மோயர்ஸ்: நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?
கேம்ப்பெல்: துயருறுதல். துயருடன் இருப்பதென்பது ஒரு முழுமையற்ற நிலை. இல்லையா?
மோயர்ஸ்: மனிதனின் துயரம், போராட்டம், வாழ்க்கை …
கேம்ப்பெல்: … போல உள்நுழைந்து செல்ல வேண்டியவை பற்றிய அறிதலுக்கு இளைஞர்கள் வரவேண்டும்.
மோயர்ஸ்: மனிதகுலத்திற்கு பொதுவானவை புராணங்களில் வெளிப்படுகிறது என்று உங்கள் நூல்களை வாசிப்பதன் மூலம் நான் புரிந்துகொண்டேன். உதாரணமாக 'கடவுளின் முகத்திரைகள்' (The Masks of God) அல்லது 'ஆயிரம் முகங்கள் கொண்ட நாயகன்' (The Hero with a Thousand Faces) போன்ற நூல்களைச் சொல்லலாம். தொன்மங்கள் என்பது மெய்மைக்காகவும் ஒட்டுமொத்த அர்த்தத்திற்காகவும் முக்கியத்துவத்திற்காகவும் நீண்ட காலமாக நாம் மேற்கொண்ட தேடலின் கதைகள் அடங்கியவை. நாமனைவரும் நமது கதைகளை சொல்லவும் அவைகளைப் புரிந்து கொள்ளவும் தேவையிருக்கிறது. நாம் அனைவரும் இறப்பை புரிந்து கொள்வதுடன் இறப்புடன் ஒரு இசைவையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. நம் அனைவருக்கும் பிறப்பிலிருந்து இறப்புவரையிலான நமது வழித்தடத்தில் உதவி தேவைப்படுகிறது. நாம் நமது வாழ்க்கையை முக்கியமானதாக ஆக்கிக்கொள்ளவும், அதன் நித்தியத்தை சென்றடையவும், அதன் மர்மங்களை புரிந்துகொள்ளவும், நம்மைப் பற்றி அறிந்துகொள்ளவும் வேண்டியிருக்கிறது.
கேம்ப்பெல்: நாம் அனைவரும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தேடிக்கொண்டிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. நாம் தேடுவது வாழ்தலின் அனுபவத்தை என்றுதான் நான் நினைக்கிறேன், ஆகவே பௌதிகதளத்தின் மீதான நமது வாழ்வனுபவங்கள் நமது அகஇருப்பிற்கும் புறயதார்த்தத்திற்கும் இடையே ஒரு ஒத்திசைவைப் பெற்று வாழ்தலின் பேரானந்தத்தை நம்மை உணரவைக்கின்றது. அதுதான் நமக்குள் இருப்பதை கண்டறிய உதவும் குறிப்புகள்.
மோயர்ஸ்: தொன்மங்கள்தான் அந்த குறிப்புகளா?
கேம்ப்பெல்: தொன்மங்கள்தான் மனிதவாழ்வின் ஆன்மிக ஆற்றல்களுக்கான துருப்புச் சீட்டுகள்.
மோயர்ஸ்: அதாவது நம்மால் அறியமுடிபவைக்கும் நமக்குள் அனுபவித்துக்கொண்டிருப்பதற்கும். இல்லையா?
கேம்ப்பெல்: ஆம்.
மோயர்ஸ்: நீங்கள் ஒரு தொன்மத்திற்கான வரையறையை 'வாழ்வின் பொருளிற்கான தேடல்' என்பதிலிருந்து 'பொருளின் அனுபவம்' என்பதற்கு மாற்றிவிட்டீர்கள்.
கேம்ப்பெல்: வாழ்க்கையின் அனுபவம். மனம் எதையுமே அர்த்தப்படுத்திக்கொண்டுதான் செயல்படமுடியும். ஒரு மலருக்கான அர்த்தம் என்ன? ஒரு ஜென் கதை உள்ளது, புத்தர் ஒரு பிரசங்கத்தின் துவக்கத்தில் ஒரு மலரை மட்டும் உயர்த்தி காண்பித்து விட்டு அப்படியே பிரசங்கத்தை முடித்துவிடுகிறார். அங்கிருப்பவர்களில் ஒரேயொரு மனிதன் மட்டுமே அந்த போதனையை புரிந்துகொண்டதை அவன் விழிகளில் இருந்து அறிந்த புத்தர் "அந்த ஒருவன் வந்துவிட்டான்" என கூறுகிறார். எவற்றிற்கும் எந்த அர்த்தமும் இல்லை. பிரபஞ்சத்தின் அர்த்தம் என்ன? ஒரு பூச்சிக்கு என்ன அர்த்தம்? அது அங்கே இருக்கிறது. அவ்வளவுதான். உங்களுக்கான அர்த்தம் நீங்கள் அங்கு இருக்கிறீர்கள் என்பதுதான். நாம் புறவய மதிப்பிற்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கான செயலில் ஈடுபடுகையில் அகஇருப்பின் மதிப்பையும் வாழ்தலின் பேரானந்தத்தையும் மறந்துவிடுகிறோம்.
மோயர்ஸ்: எப்படி அந்த அனுபவத்தை பெறுகிறீர்கள்?
கேம்ப்பெல்: புராணங்களை வாசியுங்கள். நீங்கள் உள்முகமாகத் திரும்ப இயலும் என்பதை அவை கற்றுத்தரும். மேலும் நீங்கள் குறியீடுகளைப் பற்றிய தகவல்களை பெறத்துவங்குவீர்கள். உங்கள் மதத்துடையது மட்டுமல்லாமல் பிற மதத்துடைய தொன்மத்தையும் வாசியுங்கள். ஏனெனில் உங்கள் மதத்தை நீங்கள் நிதர்சனமான ஒன்றாக கருத முற்படுவீர்கள். ஆனால் பிற மதத்தின் தொன்மங்களை வாசிக்கையில், நீங்கள் அறிதல்களை அடையத் தொடங்குவீர்கள். புராணங்கள் வாழ்வனுபவத்தின் மீது உங்கள் மனம் படிவதற்கு உதவி புரிகின்றன. அந்த அனுபவம் என்னவென்று அது உங்களுக்கு சொல்கிறது. உதாரணமாக திருமணத்தை எடுத்துக்கொள்வோம். திருமணம் என்பது என்ன? தொன்மங்கள் அதை விளக்குகின்றது. பிரிந்திருக்கும் இணையர்களை மீண்டும் இணைப்பதுதான் திருமணம் என்கிறது அது. ஆதியில் நீங்கள் ஒருவராக இருந்தீர்கள். இப்போது இந்த உலகில் நீங்கள் இருவராகுகிறீர்கள், அந்த தெய்வீக அடையாளத்தின் அங்கீகாரம்தான் திருமணம். காதலிப்பதிலிருந்து அது வேறுபட்டது. புராணங்கள் அதைப் பற்றி குறிப்பிடுவதில்லை. அது இன்னொரு அனுபவத்தின் கதைத்தளம். நீண்டகாலக் காதலர்கள் திருமணம் செய்கையில் விரைவிலேயே விவாகரத்தும் பெற்றுவிடுகிறார்கள். ஏனெனில் அனைத்துக் காதல்களும் ஏமாற்றத்தில் முடிகின்றன. ஆனால் திருமணம் என்பது ஒரு தெய்வீக அடையாளத்திற்கான அங்கீகாரம். நாம் முறையான வாழ்க்கையை வாழ்வோமென்றால், நமது மனங்கள் எதிர்பாலினத்தவருக்கான உரிய தகுதி கொண்டிருக்குமேயானால், நாம் நமக்குரிய சரியான துணைவரையோ துணைவியையோ கண்டடைவோம். ஆனால் நாம் சில புலன் ஆர்வத்தால் சிதறுண்டிருந்தால், தவறான நபரை திருமணம் செய்து கொள்வோம். சரியான துணையை அடைவதன் மூலமாக நாம் கடவுளின் ஒரு அவதாரத்தை மறுஉருவாக்கம் செய்கிறோம். அதுதான் திருமணம் என்பது.
மோயர்ஸ்: சரியான நபரா? ஒருவர் சரியான நபரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
கேம்ப்பெல்: உங்கள் ஆழ்மனம் உங்களுக்குச் சொல்லும். அதை நோக்கி செல்ல முனையும்.
மோயர்ஸ்: ஆழ்மனம் எப்படி?
கேம்ப்பெல்: அதுதான் புதிரானது.
மோயர்ஸ்: நீங்கள் உங்களின் இன்னொரு பாதியை அடையாளம் கண்டுகொள்கிறீர்கள்.
கேம்ப்பெல்: இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு பொறி தோன்றுகிறது. அது என்னவென்றால் ’உங்களுக்குள் இருக்கும் ஒன்று இதுதான் அந்த ஒன்று என்பதை அறியும்’ என.
மோயர்ஸ்: திருமணம் என்பது சுயம் தனது எதிர்பாலின சுயத்துடன் மறுஇணைவு கொள்வதுதான் என்றால் ஏன் அது நமது நவீன சமுதாயத்தில் நிலையற்றதாக இருக்கிறது?
கேம்ப்பெல்: ஏனெனில் அவை திருமணத்திற்குரிய இலக்கணத்துடன் இல்லை. திருமணத்திற்கு உங்கள் வாழ்க்கையில் முதலிடம் இல்லையென்றால் நீங்கள் திருமணம் ஆகாதவர் என்றே நான் கூறுவேன். திருமணம் என்றால் இருவர் ஒன்றாவது. இருவர் ஓருடலாக மாறுவது. ஒருவேளை திருமணம் நீண்ட காலம் நீடித்து, நீங்கள் அதில் உங்கள் தனிப்பட்ட ஆசைகளைத் துறந்து, தொடர்ந்து எவ்வித எதிர்ப்புமின்றி இசைவுடன் இருக்கையில் இந்த உண்மையை நீங்கள் உணர்வீர்கள். இருவரும் உண்மையில் ஒருவரே.
மோயர்ஸ்: உடல்ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் ஒருவர் இணைந்திருக்கவேண்டும்.
கேம்ப்பெல்: முதன்மையாக ஆன்மிகரீதியாகத்தான். பாலியல் ஈர்ப்பு கவனச்சிதறலை ஏற்படுத்தி உங்களை தவறான அடையாளத்திற்கு இட்டுச் செல்லலாம்.
மோயர்ஸ்: அப்படியானால் திருமணத்தின் இன்றியமையாத செயல்பாடாகிய குழந்தைகள் மூலம் நம்மை நிலை நிறுத்திக்கொள்வது என்பது முதன்மையானதல்ல.
கேம்ப்பெல்: இல்லை, அது உண்மையில் திருமணத்தின் ஆரம்ப நிலை அம்சம் மட்டுமே. ஒரு திருமணத்தில் முற்றிலும் வேறுபட்ட இரண்டு நிலைகள் உள்ளது. முதல் நிலை என்பது சந்ததிகளை உருவாக்க ஈடுபடும் பாலியல் சார்ந்த உடலிணைவுகளின் போது இயற்கை அளித்திருக்கும் அற்புதமான கிளர்ச்சிகள் கொண்ட இளமை ததும்பும் வாழ்க்கை. ஆனால் அந்நிலையில், குழந்தைகள் குடும்பத்திலிருந்து வெளியேறும்போது தம்பதியினர் விலகிச்செல்லும் காலம் வரும். என்னை ஆச்சயரியப்படுத்திய ஒன்று என்னவென்றால் எனது நண்பர்களில் பலர் அவர்களுடைய 40 அல்லது 50 வயதுகளில் பிரிந்து செல்வது. உண்மையில் அவர்கள் குழந்தைகளுடன் கூடிய ஒரு முழுமையான கட்டுக்கோப்பான வாழ்க்கையைத்தான் பெற்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் அந்த இணைப்பை குழந்தை மூலமாக ஏற்பட்ட உறவின் வழியாகவே புரிந்து கொண்டார்கள். தங்கள் இருவருக்குமிடையிலிருந்து உருவாகும் ஒரு தனிப்பட்ட உறவின் அடிப்படையில் அவர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை.
திருமணம் என்பது ஒரு உறவுமுறை. திருமணத்தில் நீங்கள் தியாகம் செய்கையில், அதை ஒருவருக்காக மற்றொருவர் செய்யாமல், இருவரும் ஒரு உறவில் இணைந்திருப்பதற்காக செய்கிறீர்கள். சீன மதமான தாவோயிசத்தில் இருக்கும் ஒரு படிமமான யின்யாங்-ல் ஒளிக்குள் ஊடுருவியிருக்கும் இருளைப்போல ஆணும் பெண்ணும் இருப்பதுதான் திருமணம் என்பது. மேலும் திருமணத்திற்கு பின்பு நீங்கள் அவ்வண்ணமே ஆகுகிறீர்கள். அதன் பிறகு அது மட்டும் நீங்கள் அல்ல; உங்கள் அடையாளமே ஒரு உறவுக்குள் வந்துவிடுகிறது. திருமணம் என்பது எளிய காதல் உறவல்ல. அது வலிகள் உடையது. இருவர் இணைந்து ஒருவராகும் உறவில் ஆணவத்தை துறப்பதினால் ஏற்படும் வலி அது.
மோயர்ஸ்: அப்படியானால் திருமணம் என்பது ஒருவர் தன் தனிப்பட்ட எண்ணங்களுடன் செயலாற்றுவதற்கு முற்றிலும் எதிரானதுதானே.
கேம்ப்பெல்: இது வெறுமனே ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தை பற்றியதல்ல. இது ஒரு வகையில் இருவரை உள்ளடக்கிய ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தைப் பற்றியது என்று சொல்லலாம். மேலும் இது ஒரு ஆழ்ந்த நன்மைக்காக புறவயமானவற்றை தியாகம் செய்வதை புராணப்படிமமாக குறிப்பிடுவது. உண்மையில் இது திருமணத்தின் இரண்டாம் நிலையில் அதாவது இருவர் ஒருவராகும் ரசவாதத்தின்போது அழகாக உணரப்படுவது. ஒருவேளை அவர்கள் திருமணத்தின் ஆரம்ப நாட்களில் இருந்ததைப்போலவே இரண்டாம் நிலையிலும் இருப்பார்கள் என்றால், குழந்தைகள் அவர்களிடமிருந்து வெளியேறும்போது இவர்களும் ஒருவரையொருவர் பிரிந்து செல்வார்கள். தந்தை ஒரு கவர்ச்சியான இளம்பெண்ணிடம் காதல்வயப்பட்டு அவள் பின்னால் ஓடுவார். தாய் காலியான இல்லத்தில் வெறுமை நிறைந்த இதயத்துடன் தனிமையாக்கப்பட்டு தன்னைத்தானே தனக்கான வழியில் செலுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.
மோயர்ஸ்: திருமணத்தின் இரண்டு நிலைகளை நாங்கள் புரிந்து கொள்ளாததால் நிகழவிருப்பது இதுதான்.
கேம்ப்பெல்: உங்களுக்கு அர்ப்பணிப்பென்பது இல்லை.
மோயர்ஸ்: நாங்கள் நன்மையோ தீமையோ எங்களை அர்ப்பணித்துக்கொண்டதாக எண்ணிக்கொள்கிறோம்.
கேம்ப்பெல்: அது ஒரு சடங்கின் மீதம் மட்டுமே.
மோயர்ஸ்: சடங்கு அதன் விசையை இழந்துவிட்டது. ஒருகாலத்தில் அகமெய்மையை கடத்திய சடங்கு இப்போது அர்த்தமற்றதாகிவிட்டது. இதேநிலைதான் சமூகம் சார்ந்த சடங்குகளிலும், திருமணம் மற்றும் மதம் சார்ந்த சடங்குகளிலும் உள்ளது.
கேம்ப்பெல்: திருமணத்திற்கு முன் எத்தனை பேர் திருமணத்தை விளக்கும் ஆன்மிகமான அறிவுரைகளை பெறுகிறார்கள்? ஒரு நடுவர் முன் நின்று பத்து நிமிடங்களில் நீங்கள் மணமானவராக ஆக முடிகிறது. இந்தியாவில் திருமண விழாக்கள் மூன்று நாட்களுக்கு நீடிக்கின்றன. அதன் மூலம் அவ்விணையர் வலுவாக பிணைக்கப்படுகின்றனர்.
மோயர்ஸ்: திருமணம் என்பது வெறும் ஒரு சமூக ஏற்பாடு அல்ல, அது ஒரு ஆன்மிகசாதகம் என்கிறீர்கள்.
கேம்ப்பெல்: ஆன்மிகசாதகம் என்பதுதான் முதன்மையானது. ஆனால் அந்த உணர்தலை அடைவதற்கு நமக்கு சமூகம் உதவ வேண்டியிருக்கும். சமூகத்தின் சேவையில் மனிதன் இருக்கக்கூடாது. மாறாக மனிதனின் சேவையில் சமூகம் இருக்க வேண்டும். மனிதன் சமூகத்தின் சேவையில் இருக்கையில், நீங்கள் ஒரு கட்டுக்கடங்காத நிலையைப் பெற்றிருப்பீர்கள், அதுதான் இக்கணத்தில் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
மோயர்ஸ்: ஒரு சமூகம் ஒரு வலுவான தொன்மத்தை கைவிடுகையில் என்ன நிகழும்?
கேம்ப்பெல்: அதைத்தான் நாம் இப்போது அடைந்திருக்கிறோம். சடங்குகளற்ற சமூகத்தைப் பற்றி நீங்கள் அறிய விரும்பினால், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையை படியுங்கள்.
மோயர்ஸ்: நீங்கள் அறிந்துகொண்டீர்களா?
கேம்ப்பெல்: பண்பட்ட சமூகத்தில் செயல்படத் தெரியாத இளைஞர்களின் ஆக்கக்கேடும் வன்முறையும் கொண்ட செயல்களை உள்ளடக்கிய இன்றைய நாளின் செய்திகளால் அறிகிறேன்.
மோயர்ஸ்: ஒரு பழங்குடி இனத்தின் வழித்தோன்றல்கள் என தங்களை கருதும் விதமாக அவர்களுக்கு சமூகம் எந்த சடங்குகளையும் வழங்கியிருக்கவில்லை. அனைத்துக் குழந்தைகளும் தங்கள் சிறுபிள்ளைத்தனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, இன்றைய உலகில் அறிவார்ந்து செயல்படக் கற்றுக்கொள்ள இரண்டு முறை பிறந்தாகவேண்டும். கொரிந்தியன்களின் (Corinthians) முதல் நூலிலிருந்து ஒரு பத்தியை நான் நினைவு கூர்கிறேன். "நான் ஒரு குழந்தையாக இருந்தபோது, ஒரு குழந்தையைப் போல் பேசினேன், ஒரு குழந்தைக்கான புரிதலைக் கொண்டிருந்தேன், ஒரு குழந்தையைப் போலவே சிந்தித்தேன்: ஆனால் நான் மனிதனான பிறகு குழந்தைத்தனத்தை தள்ளி வைத்து விட்டேன்."
கேம்ப்பெல்: மிகச்சரியாக அதுதான். பருவமடையும் சடங்கின் முக்கியத்துவமே அதுதான். ஆதிச்சமூகங்களில், பற்களை பிடுங்குதல் குலக்குறிகளை உடலில் செதுக்கிக்கொள்ளுதல் ஆணுறுப்பின் முன்தோல் நீக்குதல் போன்ற பல செயல்கள் நிகழ்த்தப்பட்டது. அதன்வழியாக உங்கள் மழலையுடல் உங்களுக்கு இனிமேல் இல்லை. நீங்கள் முற்றிலும் வேறொருவர் என்று கூறப்பட்டது.
நான் சிறுவனாக இருந்தபோது, நாங்கள் குட்டையான கால்சட்டைகளை அணிந்தோம். முழங்கால் வரை உள்ள ஆடைகளை நீங்கள் அறிவீர்கள். அதன் பிறகு நீளமான கால்சட்டையை நீங்கள் அணியும் அற்புதமான காலம் வந்தது. சிறுவர்களுக்கு இப்போது குட்டை கால்சட்டைகள் கிடைப்பதில்லை. ஐந்து வயது சிறுவர்கள் கூட நீண்ட கால்சட்டையுடன் அலைவதை நான் காண்கிறேன். ஆனால் அவர்கள் இப்போது ஆண்கள் என்பதையும் சிறுபிள்ளைத்தனத்தை கைவிட வேண்டும் என்பதையும் எப்போது அறிந்து கொள்ளப்போகிறார்கள்?
மோயர்ஸ்: நகரங்களில் வளரும் குழந்தைகள், உதாரணமாக பிராட்வே 125வது தெருவில் வளரும் குழந்தைகள் அவர்களுக்கான தொன்மங்களை இன்று எங்கிருந்து பெறுகிறார்கள்?
கேம்ப்பெல்: அவர்கள் தாங்களாகவே அவைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். இதற்காகத்தான் நகரெங்கும் சுவரோவியங்கள் உள்ளன. இந்த சிறுவர்கள் தங்களுக்கேயான குழுக்களையும், தங்களுக்கென்ற முன்னெடுப்புகளையும், ஒழுக்கங்களையும் கொண்டு தங்களால் இயன்ற சிறந்ததை செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய சட்டங்கள் நகரத்தினுடையதல்லாததால் அவர்கள் அபாயகரமானவர்கள். அவர்கள் நமது சமூகத்திற்குள் முன்மொழியப்படுவதில்லை.
மோயர்ஸ்: இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் கண்களுக்கு அப்பால் உள்ள உலகுடன் தொடர்புபடுத்திக்கொள்ளவோ அல்லது அவ்வுலகைப் புரிந்துகொள்ளவோ உதவிட சிறந்த புராணங்கள் ஏதுமில்லை என்பதால் இன்றைய அமெரிக்கச் சமுதாயத்தில் வன்முறை நிறைந்திருக்கிறது என்கிறார் ரோலோ மே.
கேம்ப்பெல்: ஆம், ஆனால் அமெரிக்காவில் அடிப்படை பண்பாட்டுக்கூறு என ஏதும் இல்லாததும் உச்சகட்ட வன்முறைக்கு இன்னொரு காரணம்.
மோயர்ஸ்: விளக்கமாக கூறுங்களேன்.
கேம்ப்பெல்: உதாரணமாக, அமெரிக்க கைப்பந்தட்டாத்தின் விதிமுறைகள் மிகக் கறாராகவும் சிக்கலாகவும் இருக்கிறது. அதே சமயம், நீங்கள் இங்கிலாந்து சென்றால் அங்குள்ள ரக்பி விளையாட்டின் விதிமுறைகள் அவ்வளவு கண்டிப்பானதல்ல என்பதை நீங்கள் காண்பீர்கள். என்னுடைய இருபதுகளில் நான் மாணவனாக இருந்தபோது, கைப்பந்து விளையாட்டில் இரு இளம்வாலிபர்கள் பந்தை முன்னோக்கி வீசுவதில் அபாரமான ஜோடியாக திகழ்ந்தார்கள். அவர்கள் கல்வி உதவித்தொகையின் வழியாக ஆக்ஸ்போர்ட் சென்று அங்கிருந்த ரக்பி விளையாட்டு குழுவில் இணைந்து ஒருநாள் பந்தை முன்னோக்கி வீசும் முறையை அறிமுகப்படுத்தினார்கள். உடனே அங்கிருந்த ஆங்கிலயே விளையாட்டு வீரர்கள் "இதற்கு இங்கே விதிமுறைகள் இல்லை. எனவே இப்படி விளையாடாதீர்கள். நாங்கள் அவ்விதம் விளையாடுவதில்லை" என்றனர்.
இப்போது, குறிப்பிட்ட காலம் ஒருங்கிணைந்ததாக இருக்கும் ஒரு பண்பாட்டில் நிறைய புரிதல்களுடனும் எழுதப்படாத விதிகளுடனும் மக்கள் வாழ்கிறார்கள். அப்போது அங்கே அடிப்படைக்கூறுகளும் செயல்முறைகளும் அமைந்து "நாங்கள் அதை அப்படி செய்வதில்லை" என்றவொரு புரிதல் உருவாகிறது.
மோயர்ஸ்: அது ஒரு தொன்மம்.
கேம்ப்பெல்: சொல்லப்படாத தொன்மம் எனலாம். இப்படித்தான் நாம் முட்கரண்டியையும், கத்தியையும் பயன்படுத்துகிறோம். இப்படித்தான் நாம் மனிதர்களையும் மேலும் பலவற்றையும் எதிர்கொள்கிறோம். இவையனைத்தும் நூல்களில் எழுதப்படவில்லை. ஆனால் அமெரிக்காவில், மக்கள் அனைத்துவகை பின்புலங்களை சார்ந்தவர்களாகவும், அனைவரும் ஒன்றிணைந்து ஒரு குழுவாகவும் இருக்கிறார்கள். விளைவாக இந்நாட்டில் சட்டம் வெகு முக்கியமானதாக ஆகிவிட்டிருக்கிறது. சொல்லப்போனால் வக்கீல்களும் சட்டமும்தான் நம்மை ஒன்றாகப் பிணைத்திருக்கிறது. எந்த பண்பாட்டு அடிப்படை கூறுமல்ல. நான் சொல்வது புரிகிறதல்லவா?
மோயர்ஸ்: ஆம். இதைத்தான் டி டாக்குவில்லி (Alexis De Tocqueville) "ஒழுங்கின்மையின் பெருங்கலகம்" என்று நூற்றியறுபது ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முறையாக இங்கு வந்த போது வரையறுத்தார்.
கேம்ப்பெல்: இன்று நமக்கிருப்பது தொன்மங்கள் நீக்கப்பட்ட ஒரு உலகம். விளைவாக நான் சந்திக்கும் மாணவர்கள் தொன்மங்கள் மீது பேரார்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் அது அவர்களுக்கு செய்திகளைத் தருகிறது. தொன்மவியல் எத்தகைய செய்திகளை இளம்மாணவர்களுக்கு அளிக்கிறது என இப்போது என்னால் கூற முடியாது. ஆனால் என்னை அது என்ன செய்தது என்பதை நான் அறிவேன். அவர்களுக்கு அது வேறொன்றை செய்துகொண்டிருக்கிறது. நான் உரையாற்றுவதற்காக எந்த கல்லூரிக்கு சென்றாலும், அதன் வகுப்பறை நான் கூறவிருப்பதை கேட்க வந்திருக்கும் மாணவர்களால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியர் எனக்கு ஒதுக்கும் அறையானது உண்மையில் இருக்க வேண்டிய அளவைவிட சிறியது. ஏனெனில் அங்கு மாணவர்கள் அடையும் பரவசத்தின் அளவை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
மோயர்ஸ்: உங்களிடமிருந்து அவர்கள் கேட்கும் கதைகள், புராணங்கள் அவர்களை என்ன செய்யும் என்று ஊகிக்க முடியுமா?
கேம்ப்பெல்: வாழ்க்கையின் ஞானத்தைப் பற்றிய கதைகள் அவை. உண்மையாகவேதான். பள்ளிக்கூடங்களில் நாம் கற்றுக்கொண்டிருப்பது வாழ்க்கை ஞானம் அல்ல. நாம் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டிருக்கிறோம், தகவல்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம். அங்கு கற்பிக்கப்படும் பாடங்களின் வாழ்க்கை மதிப்பை சுட்டிக்காட்ட ஆசிரியர்களிடம் ஒரு வினோதமான தயக்கம் உள்ளது. மானுடவியல், மொழியியல், மதக்கல்வி மற்றும் மேலும் பலவற்றை உள்ளடக்கிய இன்றைய நமது அறிவியல் நிபுணத்துவப்போக்கு கொண்டதாக உள்ளது. மேலும் நிபுணரான ஒரு அறிஞர் தகுதியான நிபுணத்துவத்தை அடைய எவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்தால் இந்தப் போக்கை புரிந்து கொள்ள முடியும். ஒரு உதாரணத்திற்கு பௌத்தத்தைப் பற்றி படிக்க வேண்டுமென்றால், கிழக்கின் உரையாடல்கள் அமைந்திருக்கும் ஐரோப்பிய மொழிகளான பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மானிய மற்றும் இத்தாலிய மொழிகள் மட்டுமல்லாமல் சமஸ்கிருத, திபேத்திய, சீன, ஜப்பானிய மற்றும் மேலும் பல மொழிகளையும் நீங்கள் கையாள வேண்டியிருக்கும். இப்போது இது ஒரு மாபெரும் பணி. எந்த ஒரு வல்லுநராலும் கூட அமெரிக்க சிறப்பு மொழிக்கும் வடஅமெரிக்க பூர்வீக மொழிக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ள இயலாது.
நிபுணத்துவம் பிரச்சினைகளின் களத்தை நிபுணரின் அக்கறைக்கேற்ற வகையில் குறுக்க முனைகிறது. இப்போது என்னைப் போன்ற நிபுணரல்லாத ஆனால் பொதுமைவாதி ஒருவர், ஒரு நிபுணரிடமிருந்து அறிந்ததை விட மேலதிகமாக சிலவற்றை இங்கேயும், மற்றொரு நிபுணரிடமிருந்து அறிந்ததை விட இன்னும் அதிகமான சிலவற்றை அங்கேயும் காண்கிறார். மேலும் இவ்வாறு நிகழும் பிரச்சினையை இருவருமே பொருட்படுத்தியிராததையும் காண்கிறார். ஆகவே அந்த பொதுமைவாதி (அது சற்று கண்ணியமற்ற சொல், வாதத்திற்காக மட்டுமே) பண்பாடு குறித்ததென்று நீங்கள் சொல்லக்கூடியவற்றைவிட மனிதனுக்கான நியாயமான வேறு பல பிரச்சினைகளுக்குள் தலையிடுகிறான்.
மோயர்ஸ்: பின் செய்தியாளர்கள், சட்டரீதியான அனுமதியுடன் தங்களுக்கு புரியாதவற்றை விளக்க வருகிறார்கள்.
கேம்ப்பெல்: அது அனுமதி மட்டுமல்ல, அவர் மீது ஏற்றப்படும் ஏதோ ஒன்றும் கூட - பொதுவெளியில் தனக்கே கற்பித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. நான் இளைஞனாக இருந்தபோது ஹென்ரிச் ஜிம்மர் (Heinrich Zimmer) அவர்களின் சொற்பொழிவைக் கேட்கச் சென்றதை நினைவுகூர்கிறேன். அவர்தான், நான் அறிந்தவர்களிலேயே "தொன்மங்கள் என்பவை அறிஞர்கள் பிறரை மூடர்களாக்குவதற்கான ஆர்வமூட்டும் விஷயங்களை மட்டும் கொண்டிராமல் வாழ்க்கைக்கு செல்லுபடியாகும் தகவல்களையும் உள்ளடக்கியவை" என்று சொன்னவர்களில் முதல் மனிதர். மேலும் அது நான் சிறுவயதிலிருந்தே பெற்றிருந்த ஒரு உணர்வில் என்னை உறுதிப்படுத்தியது.
Heinrich Zimmer |
கேம்ப்பெல்: நான் ஒரு ரோமன் கத்தோலிக்கனாக வளர்க்கப்பட்டேன். ஒரு ரோமன் கத்தோலிக்கராக வளர்க்கப்படுவதன் பெரும் நன்மைகளில் ஒன்று என்னவென்றால், தொன்மங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளவும், அவை உங்கள் வாழ்க்கையை இயக்க அனுமதிக்கவும், புராணக் கருத்துக்களின் அடிப்படையில் வாழ்க்கையை வாழவும் நீங்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறீர்கள். கிறிஸ்து இவ்வுலகிற்கு வருதல், தன் போதனையை நிகழ்த்துதல், இறத்தல், உயிர்த்தெழுதல் மற்றும் விண்ணுலகிற்கு திரும்புதல் ஆகிய நிகழ்வுகளின் சுழற்சிகாலத்துடன் இணைந்திருக்கும் வகையில் நான் வளர்க்கப்பட்டேன். ஆண்டு முழுதும் நடைபெறும் இவ்விழாக்கள், காலத்தில் மாறும் அனைத்திலும் மாறாதிருக்கும் மையத்தை கவனத்தில் கொள்ளுமாறு உங்களை வைத்திருக்கிறது. அந்த ஒத்திசைவுடன் கொள்ளும் தொடர்பினாலேயே பாவங்கள் எளிதாக வெளியேறிவிடுகிறது.
Buffalo Bill's Wild West |
பின்னர் நான் அமெரிக்கபூர்வகுடிகள் மீது அன்புடையவனானேன். ஏனென்றால் பஃபலோ பில் (Buffalo Bill) ஒவ்வொரு ஆண்டும் மேடிசன் ஸ்கொயர் பூந்தோட்டத்திற்கு (Madison Square Garden) பூர்வகுடிகள் பற்றிய தனது அற்புதமான வைல்ட் வெஸ்ட் (Wild West) கண்காட்சியுடன் வருவார். மேலும் நான் அவர்களைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள் விரும்பினேன். என் அப்பாவும் அம்மாவும் தாராள மனப்பான்மை கொண்ட பெற்றோர்கள், அச்சமயத்தில் சிறுவர்களுக்காக அமெரிக்கபூர்வகுடிகள் பற்றி எழுதப்பட்டுக்கொண்டிருந்த புத்தகங்களைக் கண்டுபிடித்தனர். எனவே நான் அமெரிக்கபூர்வகுடி தொன்மங்களை படிக்க ஆரம்பித்தேன். கல்விக்கூடத்தில் கன்னியாஸ்திரிகளால் எனக்குக் கற்பிக்கப்பட்டவைகளின் மையப்பண்பையே அமெரிக்கபூர்வகுடி தொன்மங்களிலும் நான் கண்டேன் என்றறிய எனக்கு வெகுகாலமாகவில்லை.
மோயர்ஸ்: படைத்தல் --
கேம்ப்பெல்: -- படைத்தல், இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல், விண்புகுதல், கன்னிப்பிறப்பு - போன்றவைகளை நான் அறிந்திருக்கவில்லை, ஆனால் அச்சொற்களை நான் அறிந்துகொண்டேன். ஒன்றன் பின் ஒன்றாக.
மோயர்ஸ்: பிறகு என்ன நடந்தது?
கேம்ப்பெல்: நான் உற்சாகமடைந்தேன். ஒப்பீட்டு தொன்மவியல் (Comparative Mythology) மீதான என் ஆர்வத்தின் தொடக்கம் அதுதான்.
மோயர்ஸ்: "பைபிள் அதை அவ்வாறு கூறுகையில் இது ஏன் இவ்வாறு சொல்கிறது?" என்று வினவத் துவங்கினீர்களா?
கேம்ப்பெல்: இல்லை, பல வருடங்கள் பின்னால் வரை நான் ஒப்பீட்டு பகுப்பாய்வைத் தொடங்கவில்லை.
மோயர்ஸ்: பூர்வகுடிகளின் கதைகளைக் குறித்து உங்களைக் கவர்ந்தது எது?
கேம்ப்பெல்: சென்றகாலத்தில் பூர்வகுடிகளின் கதைகள் காற்றில் கலந்தே இருந்தன. பூர்வகுடிகளும் சுற்றி இருந்தனர். இப்போதும் கூட உலகின் அனைத்துப் பகுதிகளையும் சார்ந்த தொன்மங்களை நான் எதிர்கொள்கையில் அமெரிக்கபூர்வகுடிக் கதைகளும் எழுத்துக்களும் மிகவும் செழிப்பானதாகவும் நன்கு வளர்ச்சியடைந்ததாகவும் இருப்பதைக் காண்கிறேன். மேலும் எனது பெற்றோர்களுக்கு டெலாவேர் (Delaware) பூர்வகுடிகள் வாழ்ந்திருந்த காட்டில் ஒரு இடம் இருந்தது. அங்குதான் இரோகுயிஸ் (Iroquois) மக்கள் கீழிறங்கி வந்து அவர்களுடன் போரிட்டிருந்தனர். அங்கிருந்த பெரும் பாறைத்திட்டுக்களை பூர்வகுடிகளின் அம்புமுனைகளுக்காகவும் அதைப் போன்ற பொருட்களுக்காகவும் எங்களால் குடைய முடிந்தது. மேலும் பூர்வகுடிக் கதைகளில் இடம்பெற்றிருந்த ஏராளாமான விலங்குகள் அக்காட்டில் என்னைச் சுற்றி இருந்தன. அது இக்கதைகளுக்கான ஒரு மிகப்பெரிய அறிமுகமாக இருந்தது.
மோயர்ஸ்: இக்கதைகள் உங்கள் கத்தோலிக்க நம்பிக்கையுடன் மோத ஆரம்பித்ததா?
கேம்ப்பெல்: இல்லை, மோதல் என்று எதுவும் இல்லை. என் மதத்துடனான எனது மோதல் காலத்தால் மிகப்பிந்தி விஞ்ஞான ஆய்வுகளாலும் அதைப் போன்ற பிற விஷயங்களாலும் ஏற்பட்டது. பின்னர் நான் இந்து மதத்தின் மீது ஆர்வமுடையவனானேன். அதே கதைகள் அங்கும் இருந்தன. மேலும் என்னுடைய பட்டப்படிப்பின் போது நான் ஆர்தரியன் இடைக்கால நூல்களுடன் புழங்கிகொண்டிருந்தேன். அங்கும் அதே கதைகள் இருந்தன. ஆகவே அவை ஒரே மாதிரியான கதைகள் அல்ல என்று நீங்கள் என்னிடம் சொல்ல முடியாது. என் வாழ்நாள் முழுவதும் நான் அவைகளுடன் இருந்திருக்கிறேன்.
மோயர்ஸ்: அவை ஒவ்வொரு பண்பாட்டிலிருந்தும் தோன்றுகின்றன, ஆனால் காலம் கடந்த கருப்பொருட்களுடன்.
கேம்ப்பெல்: கருப்பொருட்கள் காலமற்றவை, பண்பாடுதான் தொனிமாற்றம் அடையும்.
மோயர்ஸ்: ஆகவே கதைகள் அதே உலகளாவிய கருப்பொருளைக் கொண்டிருக்கலாம், ஆனால் மக்களின் வட்டாரவழக்கைப் பொறுத்து அதை சற்றே வேறுவிதமாக பயன்படுத்தலாமா?
கேம்ப்பெல்: ஆம். இணையான கருப்பொருள்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், அவைகள் முழுவதும் வேறுபட்ட கதைகள் என நீங்கள் ஒருவேளை நினைக்கலாம், ஆனால் அப்படி இல்லை.
மோயர்ஸ்: நீங்கள் முப்பத்தெட்டு ஆண்டுகளாக சாரா லாரன்ஸ் (Sarah Lawrence) கல்லூரியில் தொன்மங்களை கற்பித்தீர்கள். மரபார்ந்த மதங்களில் இருந்து கல்லூரிக்கு வந்த நடுத்தர குடும்பப்பின்னணி கொண்ட இளம்பெண்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்? தொன்மங்களில் அவர்களுக்கு எப்படி ஆர்வத்தை ஏற்படுத்தினீர்கள்?
கேம்ப்பெல்: இளம்வயதினர் இந்தவகையான விஷயங்களை எளிதாக கைப்பற்றிக்கொள்கிறார்கள். இலக்கியம் மற்றும் கலைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை புராணங்கள் உங்களுக்கு கற்பிக்கிறது. உங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் அது உங்களுக்குக் கற்பிக்கிறது. இது ஒரு சிறந்த, உற்சாகமான, வாழ்க்கையை செழிப்பாக்கும் துறை. நீங்கள் குழந்தைப்பருவத்திலிருந்து வாலிபப்பொறுப்புகளை ஏற்கையிலும் பிரம்மச்சரியத்திலிருந்து சம்சார வாழ்க்கைக்கு வருகையிலும் முன்னெடுக்கப்படும் விழாக்களுக்கும் வாழ்க்கையின் பல்வேறு படிநிலைகளுக்கும் புராணங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அச்சடங்குகள் அனைத்தும் தொன்மங்களின் சடங்குகள். நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் புதிய பரிணாமத்திற்கான உங்கள் அங்கீகாரத்தையும், பொறுப்புள்ள பணிகளில் நுழைவதற்காக பழையவற்றை களைந்து புதியவற்றில் வெளிப்படவேண்டிய செயல்முறைகளையும் உருவாக்கும் பொறுப்பு இச்சடங்குகளுக்கு இருக்கிறது.
நீதிபதி ஒருவர் அறைக்குள் நுழைகையில், அனைவரும் எழுந்து நிற்கிறார்கள், நீங்கள் எழுவது அவர் அணிந்திருக்கும் மேலங்கிக்காகவும் அவர் வகிக்கப் போகும் பாத்திரத்திற்காகவும்தானே தவிர நீதிபதி எனும் அந்த மனிதருக்காக அல்ல. அவருடைய கட்டுப்பாடு, அந்த பாத்திரத்தின் கொள்கைகளின் பிரதிநிதியாக இருத்தல், மேலும் அவருக்கென்று சொந்த முன்முடிவுக்கற்றைகள் இல்லாதிருப்பது இவைகள்தான் அவரை அந்த பாத்திரத்திற்கு தகுதியானவராக ஆக்குகிறது. எனவே உங்கள் முன்னால் நிற்பது ஒரு புராணக் கதாபாத்திரம். நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய அதீத மூடர்களாகவும், அபத்தமாகவும், மந்தமாகவும் இருக்கும் சில அரசர்களையும், அரசிகளையும் நான் எண்ணிப்பார்க்கிறேன். குதிரைகள் மீதும் பெண்கள் மீதும் மட்டுமே ஆர்வமுள்ள அவர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்களின் அத்தகைய ஆளுமைகளுக்காக நீங்கள் எதிர்வினையாற்றுவதில்லை, மாறாக அவர்களின் அந்த புராணப்பாத்திரத்திற்கு நீங்கள் எதிர்வினையாற்றுகிறீர்கள். ஒருவர் அமெரிக்காவின் நீதிபதியாகவோ அல்லது அதிபராகவோ ஆகுகையில், அவர் அதுவரை இருந்த மனிதரல்லாமல் என்றுமழியாத ஒரு பதவியின் பிரதிநிதியாகிறார். அவர் தன் தனிப்பட்ட விழைவுகளையும், வாழ்க்கை சாத்தியங்களையும் கூட தற்போது அவர் கொண்டிருக்கும் பொறுப்பிற்காக துறக்க வேண்டும்.
மோயர்ஸ்: ஆகவே புராணகாலச் சடங்குகள் நம் சமூகத்தில் புழக்கத்தில் உள்ளன. திருமணச்சடங்கு அதிலொன்று. ஜனாதிபதி அல்லது நீதிபதி பதவியேற்பு விழா மற்றொன்று. வேறு என்ன சடங்குகள் இன்று சமுதாயத்திற்கு முக்கியமானவை?
கேம்ப்பெல்: ராணுவத்தில் சேர்வதும், சீருடை அணிவதும் இன்னொன்று. அதில் நீங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைத் துறந்து, நீங்கள் உறுப்பினராக உள்ள சமுதாயத்திற்கு சேவை செய்யும் வகையில் ஒரு சமூகரீதியாக வரையறுக்கப்பட்ட வாழ்க்கைமுறையை ஏற்றுக்கொள்கிறீர்கள். இதனால்தான் போர்க்காலத்தில் மக்கள் வெளிப்படுத்திய செயல்திறனைக் கொண்டு குடிமைச்சட்டத்தின் அடிப்படையில் மக்களை கணிப்பது அருவருக்கத்தக்கது என நான் நினைக்கிறேன். அவர்கள் தனிமனிதர்களாக செயல்படாமல் தங்களுக்கு மேலான ஏதோவொன்றின் கையாட்களாக செயல்பட்டனர். மேலும் அதற்காக அவர்கள் தங்களையே அர்ப்பணித்துக்கொண்டனர். அவர்களை தனிமனிதர்களைப் போல் மதிப்பிடுவது முற்றிலும் முறையற்றது.
மோயர்ஸ்: ஆதிப்பழங்குடி சமூகங்கள் வெள்ளை மனிதனின் குடியேற்றத்தால் கலைக்கப்படுகையில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அவைகள் துண்டுபடுகின்றன, சிதறுண்டுபோகின்றன, நோய்வாய்ப்படுகின்றன. நமது தொன்மங்கள் மறையத் துவங்கியதால் நமக்கும் இதேதான் நிகழ்கிறதல்லவா?
கேம்ப்பெல்: நிச்சயமாக அதேதான்.
மோயர்ஸ்: ஆகவேதான் இன்று மரபார்ந்த மதவாதிகள் சென்றகாலத்தைய மதத்தை கைக்கொள்கிறார்கள். அப்படித்தானே ?
கேம்ப்பெல்: ஆம், மேலும் அவர்கள் ஒரு பயங்கரமான தவறையும் செய்கிறார்கள். வாழ்க்கைக்கு உதவாத ஒரு பயனற்ற எச்சத்தை நோக்கி அவர்கள் திரும்பிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
மோயர்ஸ்: ஆனால் அது எங்களுக்கு உதவவில்லையா?
கேம்ப்பெல்: நிச்சயமாக இல்லை.
மோயர்ஸ்: நான் அந்த ஏக்கத்தை புரிந்துகொள்கிறேன். எனது இளமைகாலத்தில் நான் நிலையான நாயகர்களைப் பெற்றிருந்தேன். அவர்கள் தங்களின் நிலைத்திருக்கும் தன்மையால் என்னை ஆற்றுப்படுத்தினார்கள். அறிந்த எல்லைகளை எனக்கு அளித்தார்கள். மேலும் அவர்கள் அன்பும் கனிவும் கொண்ட தந்தை என்னை குனிந்து நோக்கிகொண்டு இருப்பதாக, என்னை ஏந்திக் கொள்ளத்தயாராக, எல்லா நேரங்களிலும் என்னுடைய கவலைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு இருப்பதாக சொன்னார்கள். இப்போது அத்தகைய நம்பிக்கைகளை அறிவியல் ஒழித்துவிட்டதாக சால் பெல்லோ (Saul Bellow) கூறுகிறார். ஆனால் நான் இதைப்போன்ற விஷயங்களின் மீது மதிப்புடன் இருந்தேன். இன்று நான் யாராக இருக்கிறேனோ அது அவ்வகையான நம்பிக்கையால்தான். இத்தகைய நிலையான நாயகர்களற்ற, அறிந்த எல்லைகளில்லாத, தொன்மங்களும் இல்லாத குழந்தைகள் என்ன ஆவார்கள் என்று வியக்கிறேன்.
கேம்ப்பெல்: நன்று. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் நான் சொன்னதைப்போல செய்தித்தாள் வாசிப்பதுதான். இது ஒரு சிக்கல். தற்போதைய இந்த வாழ்க்கைத்தளம் மற்றும் அதன் கட்டமைப்பிற்கான வாழ்க்கை-மாதிரிகளை புராணங்கள் வழங்குகின்றன. ஆனால் அம்மாதிரிகள் நாம் வசிக்கும் காலத்திற்கு பொருந்துவதாக இருக்க வேண்டும். மேலும் சென்ற 50 ஆண்டுகளுக்கு முன்னால் சரியாக இருந்தது இன்று சரியில்லாததாக இருக்கும்படி நமது காலம் அதிவிரைவாக மாறியிருக்கிறது. கடந்த காலத்து நற்குணங்கள் இன்று தீயகுணங்களாகிவிட்டிருக்கிறது. மேலும் கடந்தகாலத்தின் தீங்கு என்று கற்பிக்கப்பட்டவைகளில் பெரும்பாலானாவை இன்றைய தேவைகளாகிவிட்டது. நீதியமைப்பு உண்மையான வாழ்க்கையின் நீதி சார்ந்த தேவைகளை நோக்கி இப்போதே வந்து சேரவேண்டும். அதைத்தான் நாம் செய்யவில்லை. சென்றகாலத்து மதங்கள் வேறொரு காலத்தை வேறொரு மக்களை வேறுவிதமான மனிதவிழுமியங்களை வேறொரு பிரபஞ்சத்தைச் சார்ந்தது. பின்னோக்கி செல்வதால் நீங்கள் வரலாற்றுடனான ஒத்திசைவிலிருந்து உங்களை வெளியேற்றிக்கொள்கிறீர்கள். நமது பிள்ளைகள் அவர்களுக்கு கற்பிக்கப்பட்ட மதங்களின் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள். மேலும் அவர்கள் உள்ளடங்கிப் போகிறார்கள்.
மோயர்ஸ்: பலசமயங்களில் போதைமருந்துகளுடன்.
கேம்ப்பெல்: ஆம். போதைமருந்தில் செயற்கையாக தூண்டப்பட்ட ஆன்மிக அனுபவமே உங்களுக்கு கிடைக்கிறது. ஆன்மிக அனுபவத்திற்கும், உளச்சிதைவிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் விளக்குகின்ற ஏராளமான உளவியல் கருத்தரங்குகளில் நான் பங்குகொண்டிருக்கிறேன். அந்த வேறுபாடு என்னவென்றால், உளச்சிதைவடைந்தவன் நீரில் மூழ்குபவனைப்போலவும் ஆன்மிக அனுபவம் அடைந்தவன் நீரில் நீந்துபவனைப் போலவும் இருப்பதே. நீங்கள் இவ்வனுபவங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.
மோயர்ஸ்: நீங்கள் இந்த போதைக்கலாச்சாரம் வளர்ந்துகொண்டிருப்பதையும் பூர்வகுடிகள் தங்கள் பெருமைகளையும் பழைய வாழ்க்கைமுறையையும் இழந்ததன் விளைவாக அவர்களிடையே இது ஆதிக்கத்துடன் இருப்பதையும் பற்றி பேசுகிறீர்கள்.
கேம்ப்பெல்: ஆம். எந்த ஒரு நாகரீக தேசத்தின் பூர்வகுடிகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் நமது வரலாறு மிக மோசமானவைகளில் ஒன்றாக இருக்கிறது. நம் பூர்வகுடிகள் அடையாளமற்றவர்கள். அமெரிக்காவின் ஓட்டுரிமை பெற்றவர்களின் புள்ளிவிவரங்களில்கூட அவர்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அமெரிக்கப்புரட்சிக்கு பின்னர் வந்த உடனடியான காலகட்டம் அமெரிக்க அரசிலும் வாழ்க்கையிலும் பங்கு கொண்ட ஏராளமான அமெரிக்கபூர்வகுடிகளை உள்ளடக்கியதாக இருந்தது. அந்த பூர்வகுடிகள் நமது பண்பாட்டின் உறுப்பினர்களாக இணைக்கப்படவேண்டும் என்று ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington) சொன்னார். ஆனால் மாறாக, அவர்கள் கடந்தகாலத்தின் அடிச்சுவடுகளாக மாற்றப்பட்டார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்கிழக்கு பகுதியைச் சேர்ந்த பூர்வகுடிகள் அனைவரும் இராணுவக் காவலுடன் கூடிய இரயில் பெட்டிகளில் ஏற்றப்பட்டு பூர்வகுடிப்பிராந்தியம் (Indian Territory) என அழைக்கப்பட்ட, அவர்களின் சொந்த உலகத்தைப் போல நிரந்தரமாக அளிக்கப்பட்ட ஒரு இடத்திற்கு அனுப்பப்பட்டனர் – சில வருடங்கள் கழித்து அந்த இடம் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டது.
அண்மையில், மானுடவியலாளர்கள் வடமேற்கு மெக்ஸிகோவில், உளப்பிரமையை உருவாக்கக்கூடிய பேயோட் (Peyote) எனும் தாவரங்கள் இயற்கையாக வளரும் ஒரு பெரிய நிலத்தின் ஒரு சில மைல்பரப்பிற்குள் வாழும் பூர்வகுடிகளின் ஒரு குழுவை ஆராய்ந்தனர். அவர்கள் அந்த பேயோட் தாவரத்தை மான் போல உருவகப்படுத்திக் கொள்வதால் அதை அவர்களின் விலங்கு என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்கள் பேயோட்டை சேகரிக்கவும் மீட்டுக்கொண்டு வரவும் வைத்திருக்கும் திட்டங்கள் மிகச்சிறப்பானது.
இந்த திட்டங்கள் ஒரு முன்னுதாரண மர்மப்பயணத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய மர்மமான பயணங்கள். முதலில் அவர்களுக்கு உலகியல் வாழ்க்கையிலிருந்து துண்டிப்பு நிகழ்கிறது. பின் இந்த புறப்பாட்டில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அவனுடைய அல்லது அவளுடைய சமீபத்திய வாழ்க்கையின் தவறுகள் அனைத்தின் மீதும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யவில்லையென்றால் இந்த தந்திரம் பலிக்கப்போவதில்லை. பின்பு அவர்கள் பயணத்தை தொடங்குகிறார்கள். அவர்களின் மொழிகூட தனித்தன்மையான, எதிர்மறையான, ஒன்று. உதாரணத்திற்கு ‘ஆம்’ என்று சொல்வதற்கு பதிலாக அவர்கள் ‘இல்லை’ என்கிறார்கள். அல்லது ‘நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம்’ என்று சொல்லுமிடத்தில் ‘நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம்' என்கிறார்கள். அவர்கள் வேறொரு உலகத்தில் இருக்கிறார்கள்.
பிறகு அவர்கள் அந்த சாகசத்தின் நுழைவாயிலுக்கு வருகிறார்கள். பயணத்தில் நிகழும் உளமாற்றங்களை குறிப்பிடுவதற்கு சிறப்பான நினைவு மண்டபங்கள் அங்கே உள்ளன. அதன் பிறகுதான் பேயோட்டை சேகரிக்கும் மேலான கட்டம் வருகிறது. பேயோட் ஒரு மானைப் போல கொல்லப்படுகிறது. அவர்கள் அதன் முன் பதுங்கியிருந்து ஒரு சிறு அம்பை அதன் மீது செலுத்தி பேயோட்டை சேகரிக்கும் சடங்கினை நிகழ்த்துகிறார்கள்.
இவையனைத்தும் புறவுலகிலிருந்து வெளியேறி ஆன்மிகமான இருப்புகளின் பேரரசுக்குள் நுழையும் அகப்பயணத்துடன் தொடர்புடைய அனுபவத்தை முற்றாக பிரதி செய்வதாகும். அவர்கள் ஒவ்வொரு சிறு நிலையையும் ஒரு ஆன்மிக நிலைமாற்றமாக அடையாளப்படுத்துகிறார்கள். எல்லாவகையிலும் அவர்கள் ஒரு தெய்வீகமான இடத்தில் இருக்கிறார்கள்.
மோயர்ஸ்: அவர்கள் ஏன் இத்தகைய ஒரு சிக்கலான செயல்முறையை மேற்கொள்கிறார்கள்?
கேம்ப்பெல்: ஏனெனில் பேயோட்டை ஒரு எளிய உயிரியல் இயந்திர வேதியியல் விளைவாக அல்லாமல் ஒருவகையான ஆன்மிக நிலைமாற்றமாக பார்க்க வேண்டியிருக்கிறது. ஒருவேளை நீங்கள் எதிர்பார்த்திராதபோது ஒரு ஆன்மிக நிலைமாற்றத்திற்கு உள்ளானால், அந்த அனுபவத்தை எப்படி மதிப்பிட வேண்டும் என்று அறிந்திருக்கமாட்டீர்கள். மேலும் நீங்கள் அதை ஒரு மோசமான பயணமாகக் கருதி கொடூரமான அனுபவத்தை பெறுவீர்கள். அதைத்தான் அவர்கள் போதைப்பயணம் என்கிறார்கள். அதேசமயம் அப்பயணத்தின் இலக்கு உங்களுக்கு தெரியுமேயானால் அது உங்களுக்கு ஒரு மோசமான பயணமாக இராது.
மோயர்ஸ்: எனவே இதனால்தான் இது ஒரு உளவியல் நெருக்கடி எனப்படுகிறது. நீரில் மூழ்குகையில் நீங்கள் நீந்தவேண்டும் என்பதைப்போல.
கேம்ப்பெல்: நீங்கள் நீந்தும் முனைப்பிலிருக்கிறீர்கள், ஆனால் அதற்கு நீங்கள் தயாராக இல்லை. எப்படியாயினும் அதுதான் ஆன்மிக வாழ்க்கையின் உண்மை. உங்கள் பிரக்ஞையை மாற்றக்கூடிய பயங்கரமான அனுபவம் இது.
மோயர்ஸ்: நீங்கள் பிரக்ஞையைப் பற்றி நிறைய பேசுகிறீர்கள்.
கேம்ப்பெல்: ஆம்.
மோயர்ஸ்: எப்படி அதை நீங்கள் பொருள் கொள்கிறீர்கள்?
கேம்ப்பெல்: தன்னுணர்வு என்பதை மூளையின் விநோதம் என்று எண்ணுவது கார்டீசியன் சிந்தனையின் ஒரு தரப்பாக இருக்கிறது. அதாவது மூளை எனும் உறுப்பு தன்னுணர்வை உற்பத்தி செய்கிறது. அது அப்படியில்லை.
ஒரு உறுப்பு எனும் அடிப்படையில் மூளை தன்னுணர்வை ஒரு குறிப்பிட்ட திசையிலோ அல்லது ஒருசில குறிப்பிட்ட நோக்கங்களுக்காகவோ மாறுபடுத்திக் காட்டுகிறது. ஆனால் தன்னுணர்வு உடலுக்குள் இருக்கிறது. தன்னுணர்வால்தான் இந்த உயிர்ப்பான உலகம் முழுவதும் அறியப்படுகிறது.
தன்னுணர்வும் ஆற்றலும் ஒன்றுதான் என்ற உணர்வு எவ்வண்ணமோ எனக்கு உண்டு. எங்கே நீங்கள் உண்மையில் வாழ்வாற்றலைக் காண்கிறீர்களோ அங்கே தன்னுணர்வு இருக்கிறது. நிச்சயமாக காய்கறி உலகம் தன்னுணர்வு உடையது. மேலும் நீங்கள் காட்டில் வாழ்ந்தால் - ஒரு குழந்தையாக இருக்கையில் நான் செய்ததைப்போல - வேறுபட்ட அனைத்து தன்னுணர்வுகளும் தங்களுக்குள் தொடர்பு கொண்டிருப்பதை நீங்கள் காண முடியும். அங்கே தாவரங்களுக்கான ஆழ்மனம் இருக்கிறது, விலங்குகளுக்கான ஆழ்மனம் இருக்கிறது, மேலும் இவ்விரண்டையும் நாம் பகிர்கிறோம். நீங்கள் குறிப்பிட்ட உணவுகளை உண்கிறீர்கள், அதில் சத்தாக மாற்றப்படுவதற்கு ஏதேனும் உண்டா என்பதை உங்கள் ஜீரணநீர் அறியும். இந்த முழு செயல்பாடும் தன்னுணர்வு எனப்படுகிறது. அதை எளிய இயந்திரமயமான வார்த்தைகளில் புரிந்துகொள்ள முயன்றால் வேலைக்காகாது.
மோயர்ஸ்: எப்படி நாம் நமது தன்னுணர்வை மாற்றுவது?
கேம்ப்பெல்: அது எதிலிருந்து உங்களை அகற்றிக்கொள்ள நினைக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது. மேலும் அதற்காகத்தான் தியானம் இருக்கிறது. வாழ்க்கையின் அனைத்துமே ஒரு தியானமாகும். அவற்றில் பெரும்பாலானவை தன்னிச்சையாக நிகழ்பவை. ஒரு கணிசமான அளவிலான மக்கள் தங்கள் செல்வத்தின் வரவு செலவு குறித்து தியானம் செய்வதில் பெருமளவு வாழ்க்கையை செலவிடுகிறார்கள். முன்னேற்றப்பட வேண்டிய ஒரு குடும்பம் உங்களுக்கு இருக்குமேயானால் நீங்கள் குடும்பத்திற்காக அக்கறை கொள்வீர்கள். இவையனைத்தும் மிக முக்கியமான கவலைகள்தான், ஆனால் அவைகள் பெரும்பாலும் பௌதிக தளத்தில் அணுகப்பட வேண்டியவை. ஆனால் ஆன்மிகரீதியான தன்னுணர்வு உங்களுக்குள் இல்லாவிடில், உங்கள் குழந்தைகளுக்கு அதை எப்படி நீங்கள் கடத்துவீர்கள்? நீங்கள் எப்படி அதைப்பெறுவீர்கள்? ஆன்மீகமான தன்னுணர்வு நிலைக்கு நம்மை உயர்த்துவதற்கு நம்மிடம் உள்ள தொன்மங்கள் எவை?
உதாரணத்திற்கு, நான் 51வது தெருவின் ஐந்தாவது அவென்யூவில் இருந்து வெளியேறி செய்ன்ட் பேட்ரிக் தேவாலயத்திற்குள் நுழைகிறேன். இந்தப் பூமியிலேயே பொருளாதாரரீதியாக வியக்கவைக்கும் நகரங்களில் ஒன்றான பரபரப்பு மிக்க ஒரு நகரத்தை விட்டு நான் விலகியிருக்கிறேன். அந்த தேவாலயத்திற்குள் நான் நுழைகையில் என்னைச் சுற்றியிருக்கும் அனைத்தும் ஆன்மீகமான மர்மத்தைப் பேசுகின்றன. அந்த சிலுவைக்குறியின் மர்மமும், பிற அனைத்தும் எதைக் குறிக்கின்றன? கறைபடிந்த கண்ணாடி சன்னல்கள் வேறொரு சூழலை கொண்டுவருகிறது. மொத்தத்தில் என்னுடைய தன்னுணர்வு வேறொரு நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. மேலும் நான் ஒரு மாறுபட்ட தளத்தில் இருக்கின்றேன். பிறகு நான் அங்கிருந்து வெளியேறி மீண்டும் தெருவின் சந்தடிக்கு திரும்புகிறேன்.
இப்பொழுது நான் தேவாலயத்தின் தன்னுணர்விலிருந்து சிலவற்றை கொண்டிருக்கமுடியுமா? சிலவகை பிரார்த்தனைகள் அல்லது தியானங்கள் உங்கள் தன்னுணர்வை தன்போக்கில் கீழிறங்கவிடாமல் அதே நிலையில் வைத்திருப்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளன. இதன் பிறகு நீங்கள் இறுதியாக செய்யக்கூடுவதென்னவென்றால், இது ஒரு மேலான தன்னுணர்வின் எளிமையான தாழ்ந்த நிலை என்று அறிந்துகொள்வதுதான். உதாரணமாக, அங்கே வெளிப்படுத்தப்பட்ட அந்த புதிர்சக்தியானது இங்கே உங்கள் பொருளாதாரக்களத்தில் செயலாற்றிகொண்டிருக்கிறது. செல்வங்களனைத்தும் ஆற்றலின் உறைவிடமே. அதுதான் உங்கள் தன்னுணர்வை மாற்றுவதற்கான குறிப்பு என நான் எண்ணுகிறேன்.
மோயர்ஸ்: இக்கதைகளை நம்புவதால் பிறரின் கனவுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் சிலசமயம் எண்ணவில்லையா?
கேம்ப்பெல்: நான் பிறரின் கனவுகளுக்கு செவியளிப்பதில்லை.
மோயர்ஸ்: ஆனால் இந்த தொன்மங்கள் அனைத்துமே பிற மக்களின் கனவுகள்தானே.
கேம்ப்பெல்: ஓ, இல்லை. அவைகள் இவ்வுலகின் கனவுகள். அவைகள் மனிதர்களின் மிகப்பெரிய இடர்களை கையாளக்கூடிய அடிப்படையான கனவுகள். நான் இந்த நுழைவாயில்களில் ஒன்றிற்கு இப்போது வருகையில் நான் அறிகிறேன். ஏமாற்றங்கள், மகிழ்ச்சி, தோல்விகள், வெற்றிகள் போன்ற உச்சங்களின் போது நான் எப்படி எதிர்வினை ஆற்றவேண்டும் என்பதை எனக்கு இந்த தொன்மங்கள் சொல்கின்றன. நான் இருக்கும் நிலை என்னவென்று அவை எனக்கு உரைக்கின்றன.
மோயர்ஸ்: மக்கள் மாமனிதர்களாக மாறும்போது என்ன நடக்கிறது? உதாரணமாக, ஜான் வெய்ன் (John Wayne) ஒரு தொன்மமாக ஆனதைப் பற்றி நீங்கள் கூற முடியுமா?
கேம்ப்பெல்: ஒரு மனிதன் பிற மனிதர்களின் வாழ்க்கைக்கு ஒரு முன்மாதிரியாக மாறுகையில், அவன் புராணமாக்கப்படலின் வட்டத்திற்குள் வந்துவிடுகிறான்.
மோயர்ஸ்: திரைப்பட நடிகர்களுக்கு இது அடிக்கடி நிகழ்கிறது. ஏராளமான முன்மாதிரிகள் உள்ளன.
Douglas Fairbanks |
Adolphe Menjou |
கேம்ப்பெல்: இல்லை. நான் பார்த்ததில்லை.
மோயர்ஸ்: எங்கிருந்தோ வரும் ஒரு அந்நிய மனிதன் தன்னைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு நன்மைகள் செய்து அதற்கு எவ்வித பிரதிபலன்களும் எதிர்பாராமல் அகன்று செல்வதை பற்றிய உன்னதமான கதை. இவ்வாறான திரைப்படங்கள் ஏன் நம்மை இப்படி பாதிக்கின்றன?
கேம்ப்பெல்: திரைப்படங்களில் ஒரு மாயத்தன்மை உண்டு. நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதன் அதே சமயத்தில் வேறொரு இடத்திலும் இருப்பதுண்டு. அதுதான் கடவுளின் நிலை. ஒரு திரைப்பட நடிகன் திரையரங்கிற்கு வந்தால் அனைவரும் திரும்பி அவனைக் காண்பர்கள். அவன்தான் அந்நிகழ்வின் உண்மையான கதாநாயகன். அவன் அங்கு இன்னொரு தளத்தில் இருக்கின்றான். அவன் ஒன்றிற்கு மேற்பட்ட இருப்புள்ள ஒருவன். நீங்கள் திரையில் காணும் அவன் உண்மையான அவனல்ல, ஆனால் உண்மையான அவன் அங்கு வந்திருக்கிறான். பல்வேறு உருக்களின் வழியாக, இவையனைத்தும் இங்கே வருவதற்கான உருக்களினுடைய உருவாக.
மோயர்ஸ்: திரைப்படங்கள் இப்படியான பேருருவங்களை தோற்றுவிக்கும்போது, தொலைக்காட்சி பிரபலங்களைத்தான் உருவாக்குகிறது. அவர்கள் வதந்திக்கான பேசுபொருளாக ஆவதல்லாமல் முன்மாதிரிகளாக ஆவதில்லை.
கேம்ப்பெல்: அதனால்தான் என்னவோ நாம் தொலைக்காட்சி நடிகர்களை திரையரங்கெனும் ஒரு பிரத்யேக ஆலயத்தில் சந்திக்காமல் வீட்டில் காண்கிறோம்.
ராம்போ கதாபாத்திரம் |
Minotauromachy |
கேம்ப்பெல்: அவைகள் இரண்டுவிதமான புராண வடிவங்கள். மினோடாரோமக்கி (Minotauromachy) எனும் பிக்காசோவின் ஓவியம் இப்போது என் மனதில் தோன்றுகிறது. கொலைமிருகமான காளை ஒன்று பாய்ந்து வருவதை சித்தரிக்கும் செதுக்கோவியம் அது. அதில் ஒரு தத்துவவாதி தப்பியோடுவதற்காக பீதியுடன் ஒரு ஏணி மீதேறிக் கொண்டிருப்பான். கொல்லப்பட்ட குதிரை ஒன்று காளைவளையத்திற்குள் கிடக்கும். காளைச்சண்டை வீராங்கனை ஒருத்தி உயிர்ப்பலி அளித்த அந்த குதிரையின் மீது விழுந்துகிடப்பாள். அவளும் கொல்லப்பட்டிருப்பாள். அந்த கொலைமிருகத்தை எதிரேற்று நின்றிருக்கும் ஒரே உயிர், கையில் ஒரு மலருடன் இருக்கும் ஒரு சிறுமி. இவைதான் நீங்கள் சற்று முன் சொன்ன இரண்டு உருவகங்கள் - எளிய கள்ளமற்ற குழந்தையுருவம் ஒன்று, அச்சுறுத்தும் அதிபயங்கரம் இன்னொன்று. நவீன காலத்தின் சிக்கல்களை நீங்கள் இப்போது காண்கிறீர்கள்.
மோயர்ஸ்: நாம் ஒரு மகத்தான கிறித்துவ மரபின் இறுதிக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக கவிஞர் யீட்ஸ் (W.B. Yeats) நினைக்கிறார். அவருடைய 'இரண்டாவது வருகை' (The Second Coming) எனும் கவிதை இவ்வாறு தொடங்குகிறது,
The falcon cannot hear the falconer;
Things fall apart; the centre cannot hold;
Mere anarchy is loosed upon the world,
The blood-dimmed tide is loosed, and everywhere,
The ceremony of innocence is drowned."
என்று நீளும் இக்கவிதையின் இறுதி வரியான
"slouching towards Bethlehem to be born"?
என்பதில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்?
கேம்ப்பெல்: வருவதென்ன என்று கவிஞர் யீட்ஸ் அறிந்ததைவிட அதிகமாக எதுவும் நானறிய மாட்டேன். ஆனால் ஒரு காலத்தின் முடிவிற்கும் இன்னொரு காலத்தின் துவக்கத்திற்கும் நீங்கள் வருகையில் அது பெரும் வலியையும் ஒழுங்கின்மையையும் கொண்ட காலகட்டமாக இருக்கும். நாமும் மற்றவர்களும் உணரக்கூடிய அச்சுறுத்தலானது உண்மையில் ஒரு ஊழிக்காலத்தின் வருகையின் குறியீடாக இருக்கும்.
மோயர்ஸ்: "நான் உலகங்களை அழிப்பவனாக, மரணதேவனாக மாறிவிட்டேன்" என்று ஓப்பன்ஹைமர் முதல் அணுகுண்டு வெடிப்பைக் கண்டபோது கூறினார். அதுதான் நமது முடிவு என்று நீங்கள் எண்ணவில்லையா?
கேம்ப்பெல்: அது நமது முடிவாக இருக்காது. ஒருவேளை இந்த கிரகத்தின் மீதான வாழ்க்கையின் முடிவாக இருக்கலாம், ஆனால் அது இப்பிரபஞ்சத்தின் முடிவாக இருக்காது. பிரபஞ்சத்தின் அனைத்து சூரியன்களிலும் நிகழ்ந்துகொண்டிருக்கும் எல்லா வெடிப்பையும் போல இதுவும் ஒரு எளிய தவறுதலான வெடிப்பாகத்தான் இருக்கும். இந்த பிரபஞ்சமே நமது சூரியனைப் போல வெடிக்கும் அணுஉலைக்கூட்டங்களால் ஆனது. எனவே இது அந்த ஒட்டுமொத்தமான பெரும்பணியின் ஒரு சிறு பிரதிபலிப்பு மட்டுமே.
மோயர்ஸ்: இப்பிரபஞ்சத்தில் வேறெங்காவது உயிரினங்கள் இருந்துகொண்டு, தங்களின் குறுகிய வாழ்வை நமது தொன்மங்களும் மகத்தான கதைகளும் காட்டும் முக்கியத்துவத்திற்காக செலவிட்டுக்கொண்டிருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
கேம்ப்பெல்: இல்லை. பூமியின் வெப்பமானது ஐம்பது பாகை செல்சியசிற்கு சென்று அங்கேயே நிலைத்துவிட்டால் பூமியில் உயிர்களின் வாழாது, வெப்பம் கீழிறங்கி நூறு பாகை குறைந்து நின்றுவிட்டாலும் உயிர்கள் வாழாது. மேலும் இப்புவியிலிருக்கும் நீரின் அளவு அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. இவையனைத்தையும் நீங்கள் உணர்கையில் இந்த சமநிலை எத்தகைய நுண்ணிய ஒன்று என்பதையும் உணர்வீர்கள். இந்த சூழலின் மீது நிகழ்ந்த அனைத்து விபத்துக்களும் மனித வாழ்க்கைக்கு அடித்தளமிட்டிருக்கிறது என்பதை நீங்கள் எண்ணும் பட்சத்தில் இந்த பிரபஞ்சத்தில் வேறெந்த துகளின் மீதாவது நாமறிந்த வாழ்க்கை இருக்கலாம் என்று எப்படி நினைக்கமுடியும்? எத்தனை செயற்கைகோள்கள் நட்சத்திரங்களை சுற்றி வந்தாலும் அது ஒரு பொருட்டல்ல.
மோயர்ஸ்: இந்த பலவீனமான வாழ்க்கை எப்போதும் பயங்கரமான மற்றும் முற்றழிவை உருவாக்கக்கூடிய உலைக்கலத்தில்தான் இருக்கிறது. மேலும் மிருதுவான பஞ்சுப்பொதி பொம்மையும் கொடூரமான ராம்போவும் ஒன்றின் இருபக்கங்களாகத் தோன்றும் படிமம், தொன்மங்கள் வழியாக நாமறிந்த வாழ்க்கையிலிருந்து வேறுபட்டதாக இல்லை.
கேம்ப்பெல்: இல்லை. வேறுபட்டதாக இல்லை.
மோயர்ஸ்: பழைய பிரபஞ்ச உண்மைகளுக்கான புது உருவகங்கள் ஒரு நவீன ஊடகத்தில் எழுந்துவருவதை நீங்கள் காண்கிறீர்களா?
கேம்ப்பெல்: நான் புது உருவகங்களுக்கான சாத்தியங்களை காண்கிறேன். ஆனால் அவைகள் தொன்மங்களானதாக நான் இன்னமும் காணவில்லை.
மோயர்ஸ்: இந்த புதிய யுகத்தில் இயந்திரங்களை உள்ளிழுத்துகொண்ட தொன்மங்கள் என்னவாக இருக்கும் என நீங்கள் எண்ணுகிறீர்கள்?
கேம்ப்பெல்: தானியங்கி ஊர்திகள் தொன்மத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. கனவுகளுக்குள்ளும் அவை நுழைந்துவிட்டது. மேலும் வானூர்திகள் கற்பனையின் சேவைகளுக்கு பெரிதும் இடமளித்துள்ளன. விமானத்தின் பறத்தல் என்பது இப்புவியில் இருந்து விடுபடும் கற்பனைக்கு ஒரு சிறந்த உதாரணம். இதையேதான் பறவைகளும் வேறொரு விதத்தில் குறிப்புணர்த்துகின்றன. பறவை என்பது பூமி மீதுள்ள பிடிப்பிலிருந்து ஆன்மாவை விலக்கிக்கொள்வதற்கான ஒரு குறியீடு. எப்படி பாம்பு என்பது நிலத்தின் மீது நாம் கொண்டுள்ள பற்றிற்கான குறியீடு என்பதைப்போல. இன்று விமானங்கள் அப்பணியைச் செய்கின்றன.
மோயர்ஸ்: வேறு எதாவது?
கேம்ப்பெல்: ஆயுதங்கள். கலிபோர்னியாவிற்கும் ஹவாய்க்கும் நான் பயணம் செய்கையில் விமானத்தில் காணும் திரைப்படங்களிலெல்லாம் மனிதர்கள் துப்பாக்கியோடுதான் இருக்கிறார்கள். இறப்பிற்கான தெய்வம் தன் கையில் ஆயுதத்துடன் இருக்கிறது. காலாவதியாகிவிட்ட சென்றகாலத்து உபகரணங்களின் இடத்தை இப்போது வேறு உபகரணங்கள் எடுத்துக்கொள்கின்றன. ஆனால் அதைத்தாண்டி மேலதிகமாக எதையும் நான் காணவில்லை.
மோயர்ஸ்: ஆகையால் புதிய புராணங்கள் பழைய கதைகளைப் பரிமாறுகின்றன. நான் ஸ்டார் வார் திரைப்படத்தைக் கண்டபோது அப்போஸ்தலர் பால் அவர்களின் சொற்களை நினைவு கூறுகிறேன். “நான் நெறிகளுக்கும் அதிகாரத்திற்கும் எதிராக போரிடுகிறேன்.” இதை அவர் சொன்னது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. மேலும் பழங்கற்காலத்தைய வேட்டைமனிதர்களின் குகைகளில், நெறிகளுக்கும் அதிகாரத்திற்கும் எதிராக சண்டை நடைபெறுவதாக ஓவியங்கள் உண்டு. இங்கே நமது நவீன புராணங்களில் நாம் இன்னமும் போர் புரிந்துகொண்டிருக்கிறோம்.
கேம்ப்பெல்: வெளியிலிருந்து ஏவப்படும் அதிகாரத்திடம் மனிதன் அடிபணியக்கூடாது. மாறாக அதை ஆள வேண்டும். எப்படி அதைச் செய்வது என்பதுதான் அதிலிருக்கும் சிக்கல்.
(தொடரும்…)
மொழிபெயர்ப்பு - பூபதி துரைசாமி
--------------------------------------------------------------
மோயர்ஸ் மற்றும் கேம்ப்பெல் |
பூபதி துரைசாமி |
பூபதி துரைசாமி. கோவையில் வசிக்கிறார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகளில் இருந்து கலை, இலக்கியம், வரலாறு, தத்துவம் இவற்றில் ஆர்வம் பெற்று தேடல் கொண்டிருப்பவர்.