Monday, 25 November 2024

முதல்வினா- அனங்கன்


இந்தியர்களாகிய நம்மில் ‘வேதம்’ என்ற சொல்லை கேள்விப்படாதவர்கள் மிகச் சிறிய அளவில் தான் இருப்பார்கள். நேர்நிலையாகவோ எதிர்நிலையாகவோ வேதம் என்பதை அறிகிறவர்கள் எவ்வளவு பேர் அதை மேலும் அறிய முற்பட்டிருப்பார்கள்  என்று தெரியாது. சொற்பொழிவுகள் அறைகுறை தத்துவ நூல்கள் மூலம் அறிபவர்கள்  வேதங்கள் முக்திக்கான வழிமுறை மற்றும்  நல்லொழுக்கங்கள் ஆகியவற்றால் ஆனது என்று நினைக்கிறார்கள். ஒருமுறை எனது நண்பர் வேதத்தில் முக்தியை பற்றி என்ன சொல்லிருக்கிறது என்று கேட்டார்.  வேதங்கள் {முக்தி} விடுதலையைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று சொன்னேன். அவரால் அதை நம்பமுடியவில்லை. நீங்கள் இன்னும் ஆழ்ந்து வாசித்துப்பாருங்கள் எங்காவது சொல்லப்பட்டிருக்கும். வேதத்தில் சொல்லப்படாத கருத்து எவ்வாறு இத்தனை பெரிய அளவில் வளர்ந்திருக்க முடியும் என்று வாதிட்டார். இதே எண்ணம் பலருக்கும் இருக்கலாம் ஆனால் வேதம் சொல்வது அவற்றை அல்ல.

அப்போது வேதங்கள் விடுதலையையும் {முக்தி}, நல்கருத்துகளையையும் பேசவில்லை என்றால் அவை எதைப் பற்றி சொல்கின்றன. வேதம் என்ற சொல் ‘வித்’ என்ற சம்ஸ்க்ருத வேர்ச் சொல்லிலிருந்து வந்தது. அதன் பொருள் ‘அறிதல்’ என்பதாகும். அடுத்த வினா நம்மில் எழுவது இயல்பே, எதைப் பற்றிய அறிதல் வேதம்? என்பது. அறிவு, அறிதல் என்பதை இருவகையாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒன்று வாழ்க்கையை இனிதாக வாழ்வதற்கான அறிவை அடைவது. இரண்டு ‘வாழ்க்கை என்பது என்ன?’ என்று அறிய முற்படுவது. வேதங்கள் முதல் வினாவிலிருந்து தொடங்கி இரண்டாவதை வந்தடைந்தது.

வேதங்களில் ஆரம்ப நாட்களில் ரிஷிகள் பூமியில் உள்ள வாழ்க்கையை மட்டுமே அறிவதும், அதில் பொருந்தி இனிய வாழ்க்கையை அமைத்துக்கொள்வதையே வாழ்வாகக் (நோக்கமாக)கொண்டிருந்தனர். இனிய  வாழ்க்கை அமைத்துக்கொள்வதன் வழியே இயற்கையை நுட்பமாக அறிய முற்பட்டனர். இயற்கையை அறிதல் என்பதை பல நிலையாக கண்டடைந்தனர். உதாரணமாக ‘எரி’யை சொல்லலாம். எப்பொழுதோ வான் மின்னல் பூமியைத் தீண்ட ‘எரி’ மானுடனுக்கு கிடைத்தது. அதை அவன் விண்ணின் கருணை என்று பேணி தன்னுடன் வைத்துக்கொண்டான். தன்னை இருளிலிருந்தும் விலங்குகளிடமிருந்தும் காப்பாற்றும் கருவியாக்கிக்கொண்டான். தன் குடிலில் நண்பனாக இருக்கச்செய்தான். பின் தன் குடிகளை காக்கப் போகும்  இறை என வழிபட்டான். அதன் தொடர்ச்சியாக தன்னை காத்த இறைக்கு, அவன் அளித்ததை அவனுக்கே மீண்டும் அளித்து நிறைவடைந்தான்.

எதோ கட்டத்தில் அவ்வெரியை தன்னை சுற்றியுள்ள பிரபஞ்சத்திலும் காண ஆரம்பித்தான். நின்று எரியும் மரத்தில். வெயிலின் வெம்மையை தாங்கி நிற்கும் பாறையில், அவை உரச அதில் எழும் ‘தீ’யில். அப்பாறைகள் பல்லாயிரங்காலம்  உறங்கிய ஆறுகளில். அதன் இறுதியில் மழைக்கால மின்னலில் பெற்ற ‘எரி’யை பிரபஞ்சமாகவும் உருவகித்தான்.  அதே எரி தன்னிலும் அவன் உயிர் என இருப்பதை கண்டான். அதற்கு ‘அக்னி’ என்று பெயரிட்டான். இதன் அடுத்தகட்ட கண்டடைதலில் 'மண்ணையும் நீரையும் காற்றையும்'  கூட அவன் எரியின் தன்மையிலேயே இப்பிரஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆற்றலாக, இறையாகக் கண்டடைந்தான்.

வேள்வியின் தலைவன்
அக்னியை போற்றுவோம்.
தொல்கால ரிஷிகள் போற்றிய
அவனை
இன்றைய ரிஷிகள் போற்றுவர்.
அக்னியே 
எங்கள் அவிஸை
தேவர்களிடம் சேர்ப்பாயாக.

அக்னியே
அங்கிரஸனே
இரவிலும் 
பகலிலும்
உன்னை மனத்தால்வணங்குகிறோம்.
நீ நன்மையை
அளிப்பவன்.
இருளை அகற்றி
உலகை துலங்கச்செய்பவன்.
நெறிகளை வழிநடத்துபவன்.
இருக்குமிடமிருந்து உலகெங்கும்
வளர்பவன்.
மகனை காக்கும் 
தந்தை என
எங்களை காப்பாற்றுவாய்.

அக்னி
மானுடத்தின் தலைவனான நீ
எங்கள் மேல்
ஒளியோடு எழுகிறாய்.
நீ
நீரில் 
பாறையில்
காடுகளில் 
ஒளஷதிகளில்
எழுகிறாய்.
நீ
தன்னளவில் 
தூயவன்.
நீ
எங்கும் 
ஓளியை விளங்கச்செய்பவன்.

இந்த அறிதல்கள் (வேதங்கள்) ஏன் இத்தனை முக்கியமாக இருக்கிறது? அதன் பின் தான் எத்தனையோ தரிசனங்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் வந்து விட்டதே? என்று கேட்கலாம். அதற்கான பதிலை நம் ஒவ்வொருவர் வாழ்க்கைக்குள்ளேயே இருக்கிறது. நாம் பிறந்த உடன் நமக்கு நம்முடைய தாய் தந்தையர் தங்கள் வாழ்க்கையில் கண்டடைந்த அனைத்தையும் அளிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அவை அவர்கள் அடைந்த வாழ்க்கை அனுபவமும், அவர்கள் தாய் தந்தையர்களுடைய வாழ்வனுபவமும் சேர்ந்து அடைந்தது. இப்படி அவர்கள் முன்னோர்கள் வந்தடைந்த வாழ்க்கை பற்றிய அறிவு அவர்களிடம் இருக்கும். அதை நமக்கும் அளிக்கிறார்கள், இருப்பினும் வாழ்க்கை நமக்கு, ஓர் குழந்தைக்கு புதிதாகவே இருக்கும். அக்குழந்தையே அடைகின்ற அனுபவங்களே அதை வளர்ச்சியடைந்தவனாக ஆக்குகின்றது. அக்குழந்தையின் மனம் கொண்டு ரிஷிகள் இப்பிரபஞ்சத்தை அறிய முற்பட்டனர். தூய மனம் கொண்டதால்  வேத வரிகள் கவித்துவம் நிறைந்ததாக இருக்கிறது. அதன் மேல் வாழ்க்கையின் எந்த எடையும் இல்லாமல் இருக்கிறது. அதனாலேயே அதற்கு வாழ்வை  அறிந்துகொண்டிருக்கும் படிநிலைகள்  இருக்கிறது. மொத்தத்தில் வேதங்களில் உள்ள அறிதல் என்பது ‘மானுடம்’ குழந்தையாக இருந்தபோது அடைந்ததனால் மானுட அறிவில் மிக முக்கியமானதாக ஆகிறது.

இப்போது வேதம் என்று ரிக், யஜுர், ஸாம, அதர்வம் ஆகிய நான்கை சொன்னாலும், மிகத் தொன்மையான ‘ரிக்’ வேதத்தையே அறிஞர்கள் வேதமாக கூறுகிறார்கள். ரிக் வேதத்திற்கு பின் வந்த மூன்று வேதங்கள் அதன் விரிவாக்கமாக, நீட்சியாகவே பார்க்கப்படுகிறது. வேதங்கள் ஒரே  காலகட்டதில் ஆக்கப்பட்டவை அல்ல. அவை பல  ரிஷிகளின் மனவெழுச்சியில் தோன்றி, பாடப்பட்டு வேத ரிஷிகளால் ஒன்றுகூடி விவாதித்தும் பாடியும் தலைமுறை தலைமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. ரிக் வேதம் பத்து மண்டலங்களைக் கொண்டது. ஒவ்வொரு மண்டலமும் ஒவ்வொரு ரிஷிகுலங்களால் ஆக்கப்பட்டு  தொகுக்கப்பட்டன. தனியொரு ரிஷியல்ல ஒரு குருகுலமே சேர்ந்து தொகுக்கிறது. ரிக் வேதத்தின் இரண்டாவது மண்டலம் முதல் ஏழு மண்டலங்கள் ஆறு குருகுலங்களால் பாடி தொகுக்கப்பட்டது. இரண்டாவதை பாடியது ப்ருகு குலம், மூன்றாவதை பாடியது விஸ்வாமித்திர குலம். முதல் மண்டலமும் எட்டாவது மண்டலமும் அத்ரி குலத்தால் பாடப்பட்டது. பத்தாவது மண்டலத்தை பாடிய ரிஷிகுலம் அறியப்படவில்லை.

இந்த தொகுப்பு முறையை  அஜந்தா  குகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். லாட வடிவ மலையை ஒரு எல்லையிலிருந்து ஆரம்பித்து மறு எல்லை வரை நூற்றாண்டுகளாகக் குடைந்து  புத்த விகாரங்களை செதுக்கிருப்பார்கள். தலைமுறைகளாக குகைகளை குடைந்த அந்த மனம் போல ரிஷிகளின் மனமும் தலைமுறைகளாக வேதத்தை பாடி ஒன்று கூடி விவாதித்து வேதத்தைத் தொகுத்துக்கொண்டே இருந்தது. ஏன் வேதம் இப்போதும் முக்கியமானதாக இருக்கிறது? அதன் பின் எத்தனையோ சிந்தனைகள் வந்து விட்டதே என்று கேட்கலாம். வேதத்தில் உள்ளவை சிந்தனைகள் அல்ல, அவை ஆதி மானுட மனம் இயற்கைக்கு மிக அண்மையில் இருக்கையில் அறிந்த தூய தரிசனங்கள். அத்தூய குழந்தை மனத்தால் மட்டுமே அடையக்கூடிய அறிதல்கள் .

இப்போது நம்மிடம் இருக்கும் மெய்மைகள், ஆறு தரிசனங்கள், மதங்கள் அனைத்தும் வேதத்தில் விதைகளாக இருந்தன. அதிலிருந்தே  ருத்திரனும், விஷ்ணுவும் பெரும் தெய்வங்களாக  பிரபஞ்சத்தில் உள்ளும், புறமும் நிறைந்திருப்பவர்களாக ஆனார்கள். வேதம் மானுடம், இப்பிரபஞ்சம் என்பது என்ன? மானுடமும் உயிர்க்குலங்களும் எங்கிருந்து வந்தன? அவை வாழ்க்கையை எப்படி கண்டடைந்தன?  என்று அறிந்த முதல் அறிதல்களும், வினாக்களும் நிறைந்த அறிவு தொகுதி.

வேதங்களின் உட்பிரிவுகள் ஸம்ஹிதைகள், பிராம்மணங்கள், ஆரண்யங்கள், உபநிஷதங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. ஸம்ஹிதை மந்திர பாகம் என்றும் கூறப்படுகிறது. ஸம்ஹிதை என்றால் ‘தொகுப்புகள்’ என்று பொருள். ரிக் வேத மந்திரங்கள்  அக்னி, இந்திரன், ஸோமன், வருணன், மித்திரன், ஸவிதா, வாயு, அஸ்வினிகள், விஸ்வேதேவர்கள், மருத்துக்கள், பிரம்மனஸ்பதி, ரிபுக்கள், ரிதுக்கள், பூஷணன், ருத்திரன், உஷை, சூரியன், பூஷா, விஷ்ணு, பலதேவர்கள், பர்ஜன்யன், பூமி, பிருஹஸ்பதி, ஸரஸ்வதி, ஆதித்தியர்கள், புருஷன், பித்ருக்கள், யமன் ஆகியோரை துதித்து பலன் வேண்டிப் பெறுவதற்காகப் பாடலாக உள்ளது. மந்திர பாகம் பெரும்பாலும் துதிப்பாடலாகவும் , பலன் வேண்டிப் பெறுவதற்கான வேள்விச்  சடங்குகள் நிறைந்ததாகவும் இருக்கிறது.

ரிக் வேத்தின் இறுதி மண்டலமான பத்தாவது மண்டலத்தில்  ரிஷியின் மனம் தன் இருப்பை நொக்கிச் சென்றது. இன்று இந்திய ஞானம், இந்திய தத்துவம் என்று சொல்லும் அனைத்தும் தொடங்கியது எங்கோ எப்போதோ தொல்பழங்காலத்தில் வரலாற்றுக்கும் முந்திய காலத்தில் ரிஷி ஒருவருக்கு ஏற்பட்ட ஓர் வினாவிலிருந்து தொடங்கியது என்று சொல்லாம். அந்த ரிஷி எப்போதோ முதல் முறை ஒருதருணத்தில் மண்ணிலிருந்து தன் கருத்தை விண்ணை நோக்கிச்செலுத்தினான்.. விண்னுக்கு அப்பால் உள்ளதையும் நோக்கினான். எதனால் எப்போது எவ்வாறு அவருக்கு அவ்வுள எழுச்சி எழுந்தது என்று புனைவாக்கி தான் அறிய முடியும். அந்த  ரிஷி எழுப்பிய வினா என்பது ரிக்வேதத்தின் 10ஆம் காண்டத்தில் பாடப்பட்ட சிருஷ்டி கீதம் என்று சொல்லப்படும் புகழ்பெற்ற வேதப்பாடல் வரிகள். பத்தாவது மண்டலத்தில் சிருஷ்டி கீதம் பாடப்பட்டுள்ளது. சிருஷ்டி கீதமே பின்னாளில் அனைத்து ஞானத்தேடல்களுக்கும் தத்துவ தரிசனங்களுக்கும் ஊற்றுமுகமாக , முதல் துளியாக  அமைந்தது.  

அது மானுட ஞானத்தின் வரலாற்றில் பொற்கணங்களில் ஒன்று. அவன் தான் யார், இப்புடவி எங்கிருந்து வந்தது, மீண்டும் எங்கு செல்கிறது, இந்தப் பிரபஞ்சம் எங்கிருந்தது, எதனிடத்திலிருந்து தோன்றியது என்ற திகைப்பை அடைந்தான். அது ஓர் வினாவாக வெளிப்பட்டது, அவ்வினாவிற்கு மானுடம் இன்றுவரை பதிலை தேடிக்கொண்டிருக்கிறது. அதிநவீன உற்றுநோக்கும் கருவிகளைக்கொண்டு (James space telescope) விண்ணில் பார்வையை செலுத்தி தேடிக்கொண்டிருக்கிறது.  இன்னும் எத்தனையோ விதமான அறிவியல் சாதனங்களைக்கொண்டும் இந்த விண் தேடல் தொடரப்போகிறது. அந்த வினாவிற்கான விடையை அறிந்துகொள்ளுமா என்பது இன்னொரு வினா. 



சிருஷ்டி கீதம்

அப்போது அசத் இருக்கவில்லை
சத்தும் இருக்கவில்லை
உலகம் இருக்கவில்லை
அதற்கப்பால்
வானமும் இருக்கவில்லை
ஒளிந்துகிடந்தது என்ன?
எங்கே?
யாருடைய ஆட்சியில்?
அடியற்ற ஆழமுடையதும்
மகத்தானதுமான நீர்வெளியோ?
மரணமிருந்ததோ
மரணமற்ற நிரந்தரமோ?
அப்போது இரவுபகல்கள் இல்லை
ஒன்றேயான அது
தன் அகச்சக்தியினால்
மூச்சுவிட்டது
அதுவன்றி ஏதுமிருக்கவில்லை
இருட்டால் போர்த்தப்பட்ட வெளி
வேறுபடுத்தலின்மையால்
ஏதுமின்மையாக ஆகிய வெளி
அது நீராக இருந்தது
அதன் பிறப்பு
வெறுமையால் மூடப்பட்டிருந்தது!
தன் முடிவற்ற தவத்தால்
அது சத்தாக ஆகியது
அந்த ஒருமையில்
முதலில் இச்சை பிறந்தது
பின்னர் பீஜம் பிறந்தது
அவ்வாறாக அசத் உருவாயிற்று!
ரிஷிகள்
தங்கள் இதயங்களை சோதித்து
அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர்
அதன் கதிர்கள்
இருளில் பரந்தன
ஆனால் ஒருமையான அது
மேலே உள்ளதா?
அல்லது கீழே உள்ளதா?
அங்கு படைப்புசக்தி உண்டா?
அதன் மகிமைகள் என்ன?
அது முன்னால் உள்ளதா?
அல்லது பின்னால் உள்ளதா?
திட்டவட்டமாக யாரறிவார்?
அதன் மூலகாரணம் என்ன?
தேவர்களோ
சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!
அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?
யாருக்குத்தெரியும் அது?
அதை யார் உண்டுபண்ணினார்கள்
அல்லது உண்டுபண்ணவில்லை?
ஆகாய வடிவான அதுவே அறியும்
அல்லது
அதுவும் அறியாது!

அனங்கன்

தமிழில் சிருஷ்டிகீதம் -  எழுத்தாளர் ஜெயமோகன்

photo courtesy: Nasa