Sunday, 12 January 2025

முத்தமிழும் உள்ள கலை தெருக்கூத்து மட்டும் தான் - புரிசை கண்ணப்ப சம்பந்தன் நேர்காணல்

    

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புரிசை கிராமம் தெருக்கூத்திற்காக புகழ்பெற்றது. இங்கு "கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் நினைவு நாடகக் கலை விழா” நடைபெறுகிறது. 2024ம் ஆண்டில் அக்டோபர் 5, 6 தினங்களில் ‘புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்’ சார்பில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நாடக கலை விழா மறைந்த புகழ்பெற்ற தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப தம்பிரான் பெயரில் நடைபெறுகிறது. கண்ணப்ப தம்பிரான் மற்றும் அவரது (பெரியப்பா மகன்) மூத்த அண்ணன் நடேச தம்பிரான் காலத்தில் தான் புரிசை தெருக்கூத்து குழு பெரியளவில் வெளியே தெரிய ஆரம்பித்தது. நா.முத்துச்சாமி ‘கூத்துப்பட்டறை’யை உருவாக்க ஒருவிதத்தில் காரணமாக இருந்தவர் கண்ணப்ப தம்பிரான்.

கண்ணப்ப தம்பிரான்

நா.முத்துசாமியுடன் இணைந்து நாடகம், கூத்து சார்ந்து சில முக்கியமான முயற்சிகளை செய்தார் கண்ணப்ப தம்பிரான். சங்கீத நாடக அகாடமியின் தேசிய விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது ஆகிய விருதுகளை பெற்றவர். இன்று இக்குழு பரவலாக அறியப்படும் தெருக்கூத்து குழுவாக உள்ளது. 2009-ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பு பேரணியில் புரிசை குழு பங்கெடுத்தது. பல வெளிநாடுகளிலும் இக்குழு தெருக்கூத்தை நிகழ்த்தியிருக்கிறது. இன்று குழுவின் ஐந்தாவது தலைமுறையை சேர்ந்தவரும் கண்ணப்ப தம்பிரானின் மகனுமான 71 வயதான கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தனை ஆசிரியராக கொண்டு இந்த குழு இயங்கி வருகிறது.

புரிசை கண்ணப்ப சம்பந்தன் (படம்: மனோ பாஸ்கரன்)

2004-ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைக்கப்படும் இந்த விழா இடையில் சில வருடங்கள் கோவிட் தொற்று போன்ற காரணங்களால் நடக்கவில்லை. இந்த முறை 400க்கும் அதிகமான பார்வையாளர்களுடன் நடந்த நாடக கலை விழாவில் தமிழக குழுக்களின் நிகழ்ச்சிகள் மட்டுமல்ல கேரளா குழு ஒன்றின் நாடகம், ஜார்கண்ட் மாநில சாவ் நடனம் போன்றவற்றுடன் புரிசை குழு சார்பில் அர்ஜுனன் தபசு தெருக்கூத்து நாடகம் விடிய விடிய நடந்தது. அர்ஜுனன் தபசு தெருக்கூத்தில் சிவனும் பார்வதியும் அர்ச்சுனனுக்கு காட்சியளித்து பாசுபதம் அளிக்கும் பகுதி சிறிய இடைவேளைக்கு பிறகு இரண்டாவது நாள் காலை 8 மணிக்கு ஆரம்பித்து கிட்டத்தட்ட மதியம் வரை நடந்தது. விழா முடிந்த பிறகு வாத்தியாரை (கண்ணப்ப சம்பந்தன்) சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. நீலி இதழின் ஆசிரியை ரம்யாவையும் நானும் இணைந்து எழுதி நேர்காணலை எடுத்துள்ளோம்.

புரிசை கண்ணப்ப சம்பந்தன் (P.K.சம்பந்தன்) கண்ணப்ப தம்பிரானின் இளைய மகன். முந்தைய தலைமுறையின் ஆளுமைகள் பலரோடும் இணைந்து செயல்படக்கூடிய வாய்ப்பு அவருக்கு அமைந்தது. கூத்தில் பரிசோதனை முயற்சிகளையும் சம்பந்தன் செய்திருக்கிறார். உலகக்கலைஞர்களோடு இணைந்து பணியாற்றியிருக்கிறார். 1996 ஆம் ஆண்டு கொலம்பியாவில் நடந்த சர்வதேச நாடக விழாவிற்காக கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் 'ஆன் ஓல்ட் மேன் வித் ஹூஜ் விங்ஸ்' கதையின் கூத்து பதிப்பை இயக்கியவர்.

கூடவே புரிசையின் ஆறாவது தலைமுறையை சேர்ந்தவரும் கண்ணப்ப சம்பந்தனின் மருமகனுமான பழனி முருகனிடமும் பேச வாய்ப்பு அமைந்தது. பழனி முருகன் தெருக்கூத்து கலைஞராகவும் திரைப்பட நடிகராகவும் இருக்கிறார். முந்தைய நாள் கூத்தில் அர்ச்சுனன் வேஷம் கட்டியவரும் அவரே. புரிசை நாடகத் திருவிழாவை முன்னின்று ஒருங்கிணைப்பவர் அவர். பழனி முருகன் சுவாரஸ்யமான உரையாடல்காரர், வெளிப்படையாக தனது கருத்துக்களை சொல்பவர் ஆகவே அவருடனான விரிவான உரையாடல் தனி நேர்காணலாக செய்துள்ளோம். இதன் மூலம் அடுத்தடுத்த இரு தலைமுறைகளை சேர்ந்த தெருக்கூத்து கலைஞர்களுடனான உரையாடல்களையும், பார்வைகளையும் பதிவு செய்ய முடிந்துள்ளது. இந்த இதழில் வெளிவரும் நேர்காணலின் முதல் பகுதி வாத்தியார் புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களுடானது

ஜெயராம்

******************************************

ஜெயராம்: உங்களை பற்றியும் உங்கள் பரம்பரை பற்றியும் பகிர முடியுமா?

எங்கள் குடும்பம் முதலில் தோல் பாவை கூத்தை கிராமத்தில் நடத்திக் கொண்டிருந்தார்கள். கிராமம் கிராமமாக சென்று நடத்தவில்லை. வீட்டின் திண்ணையிலேயே இருந்த பஜனைபட்டடியில் நடத்தினார்கள். எங்கள் அப்பாவின் தாத்தாவான வீராசாமி தம்பிரான் காலத்தில் தான் கூத்து தொடங்கியது. வீராசாமி தம்பிரான் சதிராட்டத்திற்கு நட்டுவாங்கம் செய்பவராகவும் இருந்தார். அவர் தோல் பாவை கூத்து செய்து கொண்டிருந்ததால் பாவைகளுக்கு பதிலாக ஏன் மனிதர்களே கூத்து ஆடக்கூடாது? என்று ஆட்களை சேர்த்து கம்பெனி உருவாக்கி கூத்து நடத்த ஆரம்பித்தார். வீராசாமி தம்பிரானுக்கு 4 மகன்கள். ராகவ தம்பிரான், விஜய தம்பிரான், கிருஷ்ணன் தம்பிரான், துரைசாமி தம்பிரான். இதில் ராகவ தம்பிரான் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த திறன் வாய்ந்த கூத்து கலைஞராக இருந்தார். ராகவ தம்பிரானுக்கு ஆண் வாரிசு இல்லை. ஒரே ஒரு பெண் குழந்தை தான். விஜய தம்பிரானுக்கு ராஜு என்று ஒரு மகன். கிருஷ்ணன் தம்பிரானின் மகன் நடேச தம்பிரான். துரைசாமி தம்பிரானுக்கு கண்ணப்ப தம்பிரான், ஜானகிராமன் என்று இரு ஆண் வாரிசுகள். இதில் கிருஷ்ணன் தம்பிரானின் மகன் நடேச தம்பிரானும், துரைசாமி தம்பிரானின் மகன் கண்ணப்ப தம்பிரானும் அடுத்த தலைமுறை கூத்து கலைஞர்கள். நான் கண்ணப்ப தம்பிரானின் மகன் புரிசை கண்ணப்ப சம்பந்தன் (பி.கே. சம்பந்தன்). ஐந்தாவது தலைமுறையை சேர்ந்தவன். அக்டோபர் 16 மாதம் 1953 அன்று பிறந்தேன். அம்மா பெயர் கண்ணம்மாள். நான்கு சகோதரிகள், ஒரு சகோதரர்- கண்ணப்ப காசி. கண்ணப்ப காசியும் கூத்து கலைஞராக இருந்தார்.

கண்ணப்ப காசி

நான் எட்டாவதுடன் படிப்பை நிறுத்திவிட்டு 1971க்கு பிறகு ஒரு மூன்று வருடங்களுக்கு மேல் சென்னையில் அஞ்சல் துறையில் போஸ்ட்மேன்கள் விடுமுறைக்கு செல்லும் போது அவர்களின் பணியை ஏற்கும் side postman ஆக தற்காலிக பணியில் இருந்தேன். என்‌ அண்ணனும் (கண்ணப்ப காசி) போஸ்ட்மாஸ்டராக தான் இருந்தார். என்னையும் என்‌ அண்ணனையும் எங்கள் அப்பா-அம்மா கூத்திற்கு வர வேண்டாம் என்று தான் சொன்னார்கள். ஆனால் கூத்தின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக 1975-ல் இருந்து இந்த கலைக்கே வந்து விட்டேன். எனக்கு திருமணமாகி ஐந்து பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். என் மூத்த மகள் பாரதியின் கணவர் பழனி முருகன் (கண்ணப்ப தம்பிரானின் மகள் வயிற்று பேரன்) தான்‌ புரிசையின் ஆறாவது தலைமுறை கூத்து கலைஞராக இருக்கிறார். என் நான்காவது மகள் கௌரியும் கூத்தில் நடிக்கிறார். அவர் கர்நாடக சங்கீதம் கற்றவர். ஆனால் தன் முனைவர் பட்ட படிப்பிற்காக 'இரண்ய சம்ஹாரம்' கூத்தை தான் ஆய்வு செய்தார்.

ஜெயராம்: உங்கள் அப்பாவின் தாத்தா வீராசாமி தம்பிரான் கூத்திற்குள் வருவதற்கு முன் தோல் பாவை கூத்து கலைஞராகவும், சதிருக்கு நட்டுவாங்கம் செய்பவராகவும் இருந்தார். உங்கள் குழுவின் கூத்து பாணியில் இந்த கலைகளின் தாக்கம் உண்டா?

மற்ற கூத்து குழுக்களில் சதிரின் அடவுகள் இருக்கிறதா என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் எங்கள் குழுவின் அடவுகளில் சதிரின் தாக்கம் உண்டு. பொதுவாகவே எங்கள் பாணிக்கும் மற்ற குழுக்களின் பாணிக்கும் வித்தியாசங்கள் உள்ளன.

ஜெ: உங்கள் மகள் கர்நாடக சங்கீதம் கற்றவர் என்று சொன்னதால் கேட்கிறேன். கூத்துக்களில் பாடல்கள் உண்டு. கூத்து பாடல்களில் கர்நாடக சங்கீதத்தின் தன்மைகள் உண்டா?

கர்நாடக சங்கீதத்தில் சொல்லப்படும் முகாரி, நாட்டை, காம்போஜி போன்ற ராகங்கள் கூத்து பாடல்களிலும் உண்டு. சோக காட்சி என்றால் முகாரி பயன்படுத்துவோம். வீரத்திற்கு நாட்டை ராகம்...இது போல... ஆனால் கூத்தில் இவை பாடப்படும் பாணியில் சில வேறுபாடுகள் உள்ளன.

கௌரி (கண்ணப்ப சம்பந்தனின் மகள்)

ஜெ: கூத்தில் பயன்படுத்தப்படும் இசை கருவிகள் பற்றி சொல்ல முடியுமா?

மிருதங்கம், ஹார்மோனியம், முகவீணை, தாளம் ஆகிய நான்கு இசை கருவிகளை கூத்தில் பயன்படுத்துவோம். மிருதங்கம், ஹார்மோனியம், முகவீணை ஆகிய கருவிகளை அதற்கென்று பயிற்சி பெற்றவர்கள் இசைப்பார்கள். தாளத்தை நடிகர்களே தாங்கள் நடிக்காத போது போட்டுக் கொள்வார்கள். இசைக் கருவிகள் வாசிப்பவர்களில் சிலர் கூத்தாட தெரிந்தவர்களாகவும் இருப்பதுண்டு.

முகவீணை வாசிப்பவர் (நடுவில்)

ரம்யா: தெருக்கூத்து கலைஞர்கள் பற்றி கோ.பழனி அவர்கள் தொகுத்திருந்த களஞ்சியத்தில் உங்களுடைய பதிவை தான் முதலில் வாசித்தேன். தமிழில் நாடக மரபு 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் செழிப்பாக இருந்தது. அதற்கும் முன்னாலிருந்து கூத்து தான் இங்கே இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் நாடகம் வந்தபின் கூத்து அருகிவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் 1950களில் இருந்து கூத்தை பார்த்து கொண்டிருக்கிறீர்கள். ஐம்பதுகளில் கூத்து எந்த நிலையில் இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? நிஜமாகவே நாடகம் வந்த பிறகு கூத்து குறைந்து விட்டதா?

நான் 1953-ல் தான் பிறந்தேன். இன்றும் பலர் கூத்து அழிந்து வரும் கலை, அருகிவிட்ட கலை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை அந்த கலை இதுவரை அழியவில்லை. எதை வைத்து சொல்கிறேன் என்றால் முன் காலங்களில் கூத்து நடத்தும் குழுக்கள் குறைவாக இருந்தது. இன்று கூத்து குழுக்கள் அதிகமாகி இருக்கிறது. பத்து குழுக்கள் இருந்த இடத்தில் இன்று நான்கு குழுக்கள் தான் இருக்கிறது என்றால் சரிவு என்று எடுத்துக் கொள்ளலாம். மாறாக ஐம்பது குழுக்கள், அறுபது குழுக்கள் என்று எண்ணிக்கை ஏறிக் கொண்டே வருகிறது. உங்களிடம் கேட்கிறேன்.... அப்படி குழுக்கள் அதிகமாகி இருக்கும் போது அதை கூத்தின் அழிவு என்று எடுத்துக் கொள்வீர்களா? இல்லை வளர்ச்சி என்று எடுத்துக் கொள்வீர்களா? முன்னோர்கள் கூத்தை கோவில் சடங்காக உருவாக்கினார்கள். கோவில் சடங்குகள் இருப்பது வரை இந்த கலை அழியாது என்பது என் கருத்து. ஒரே ஒரு பிரச்சினை. அன்று குழுக்கள் குறைவாக இருந்த போது வருமானம் அதிகமாக இருந்திருக்கும். இன்று குழுக்கள் அதிகமாக இருப்பதனால் வருமானம் குறைகிறது. இந்த காரணத்தால் கலைஞர்கள் தங்களுக்கு வருமானம் இல்லை என்று சொல்லும் போது மற்றவர்கள் அதை கலையின் அழிவு என்று எடுத்துக் கொள்கிறார்கள்.

: நீங்கள் குழுக்களின் எண்ணிக்கையை வைத்து கூத்து அழியவில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் ஒரு உயர்கலை என்ற அளவுகோலை வைத்து கொள்வோம். சமீபத்தில் பெங்களூர் சென்ற போது கர்நாடகத்தின் முகமாக யக்ஷகானம் இருப்பதை பார்த்தேன். அதேபோல தெருக்கூத்து தான் தமிழ்நாட்டின் முகமாக இருந்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் இந்த கலையின் மதிப்பு அதிகமாகியிருக்கும். குழுக்களின் எண்ணிக்கை அதிகமானாலும் கூட வருமானமும் அதிகமாகி இருக்கும். ஒரு ஒப்பிட்டுக்காக சொல்வதானால் சதிர் பரதநாட்டியத்தில் இணைந்து உயர்கலையாக ஆகியது என்றால், கூத்து இவை யாவற்றின் மூலமாக இருந்தும் ஏன் தமிழ்நாட்டில் அதற்கு உரிய இடம் கிடைக்கவில்லை?

குழுக்களின் எண்ணிக்கை அதிகமானவுடன் கூத்துகளில் கொச்சையாக பேச ஆரம்பித்தார்கள். எதுக்கு 'க்யாஜியாட்' அடிப்பது என்று தெரியாமல் எல்லாத்திற்கும் அடித்து கொண்டிருக்கிறார்கள். கொச்சை பேச்சு, இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவை மக்களை உற்சாகப்படுத்தும் என்று கூத்து கலைஞர்கள் நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் கூட கூத்து அழிகிறது என்று நான் சொல்வேன். இதையெல்லாம் எந்த கூத்திற்கு பேச வேண்டும், எதுக்கு பேச கூடாது என்ற வரைமுறை உள்ளது. எல்லா கூத்திற்கும் இப்படி பேசினால் மக்களால் அதை ஜீரணிக்க முடியாது. உதாரணத்திற்கு நேற்று இரவு நாங்கள் நடத்திய (அர்ஜுனன் தபசு) கூத்தில் இரட்டை அர்த்தங்கள் எல்லாம் இருந்தது. ஏனென்றால் அந்த கதைக்கு அது தேவைப்பட்டது. ஒருவன் (அர்ஜுனன்) தவம் செய்ய போகிறான். அப்போது அவன் மனதை மாற்ற மோகினி, பேரண்டிச்சி ஆகிய கதாபாத்திரங்கள் வருகின்றன. நாங்கள் முதலிலேயே சொல்லி விடுவோம்: 'மோகினி வருகிறாள்! அவள் எப்பேர்பட்டவள் என்றால்... இளைஞர்களின் மனதை கிளுகிளுப்பு ஊட்டக்கூடியவள். அவள் இடத்தில் நான் என்ன செய்தாலும் என்னை மன்னிச்சிடுங்கோ!' இப்படி சொல்லி தான் ஆரம்பிப்போம். அர்ஜுனன் தன் தவம் செய்யும் நோக்கில் மாறாமல் இருக்கப் போகிறானா? அல்லது மோகினி போன்ற கிளுகிளுப்பூட்டும் பெண்ணால் மனம் மாறிவிடுகிறானா? என்று அர்ஜுனனின் மனநிலையை காட்ட இது தேவைப்படுகிறது. அதனால் 'அர்ஜுனன் தபசு' கூத்தில் வரும் மோகினியும், பேரண்டிச்சியும் அந்த மாதிரி விஷயங்களை தான் பேசும்.

மோகினி

இதைப்போல அக்ஞாத வாசம் வரும் 'விராட பருவ'த்தில் கீசகன் என்ற கதாபாத்திரம் திரௌபதி மேல் ஆசைப்படுவான். அப்போதும் கட்டியங்காரன் இரட்டை அர்த்தத்தில் பேசுவான். இந்த கூத்துக்களில் இரட்டை அர்த்த வசனங்கள் தேவைப்படுவதால் பேசப்படுகிறது. எங்கள் குழு நடத்தும் மற்ற எந்த கூத்துக்களிலும் அப்படி பேச மாட்டோம். எல்லா கூத்துகளிலும் அப்படி பேசினால் அது கொச்சையாகி விடும்.

பேரண்டிச்சி

ர: கூத்தில் மகாபாரத கதைகள் தான் பிரதானம் என்கிறார்கள். இராமாயணம் அவ்வளவாக இல்லையா?

எங்கள் குழுவை பொறுத்தவரை 1980 வரை மகாபாரத கதைகளை மட்டும் தான் நடத்திக்கிட்டு இருந்தோம். அதற்கு அப்புறம் தான் கம்பராமாயணத்தின் அடிப்படையில் இராமாயண கதைகளை எடுத்து கூத்துக்களை உருவாக்கினோம். அதில் ஒரு கதை 1990-ல் உருவாக்கப்பட்ட 'இந்திரஜித்'. அது இதுவரை 1500 மேடைகள் ஏறியிருக்கிறது.

கண்ணப்ப சம்பந்தன் இயக்கத்தில் ரஷ்யாவில் நடந்த இந்திரஜித் கூத்து

ஜெ: கூத்து எந்தெந்த கோவில்களில், சடங்குகளில் ஆடப்படுகிறது என்பது பற்றி சொல்ல முடியுமா?


திரௌபதி அம்மன் கோவில்கள், மாரியம்மன் போன்ற சிறுதெய்வ கோவில்களில் திருவிழா நடக்கும் போது கூத்து நடைபெறும். மகாபாரத கதைகள், இராமாயண கதைகள், புராண கதைகள் கூத்தில் ஆடப்படும். திரௌபதி அம்மன் கோவில்களில் மகாபாரத கூத்துக்கள் மட்டும் நடக்கும். மற்ற கோவில்களில் எல்லா கூத்துக்களும் நடக்கும். மாரியம்மன் கோவில்களில் அம்மன் கதாபாத்திரம் உள்ள கூத்துக்களை நடத்த கேட்பதுண்டு.

ஊர் கோவில் திருவிழாக்கள் அல்லாமல் தனிப்பட்ட சடங்குகளிலும் கூத்து ஆடப்படுவதுண்டு. இறந்த வீடுகளில் பதினாறாவது நாள் காரியம் நடத்தும் அன்று கர்ண மோட்சம், வாலி மோட்சம் போன்ற கூத்துக்களை மட்டும் தான் நடத்துவார்கள். வேறு கூத்துக்கள் நடத்த மாட்டார்கள். இறந்த வீடுகளில் கூத்து நடத்துவது இன்றும் தொடர்கிறது. திருப்பதிக்கு போய் வந்தவர்கள் வேண்டுதலாக அரிசேவை என்ற பெயரில் இரண்ய சம்ஹாரம் கூத்து நடத்தும் வழக்கம் உண்டு. இப்போது அந்தளவிற்கு நடத்தப்படுகிறதா என்பது தெரியவில்லை.

ஜெ: தெருக்கூத்தில் தேசிங்கு ராஜா கூத்து, கிருஷ்ணதேவராயன் சேந்தவராயன் சண்டை போன்ற ராஜாக்களை மையமாக வைத்து ஆடப்படும் கூத்துக்கள் உண்டல்லவா? 

இருக்கிறது நிறைய குழுக்கள் நடத்துகிறார்கள். நாங்கள் நடத்துவதில்லை. இராமாயணம், மகாபாரதம் மட்டும் தான் நடத்துகிறோம்.

: நீங்கள் வடக்கத்திய பாணி கூத்து மரபை சேர்ந்தவர்களா? உங்கள் குழுவின் பாணி வடக்கத்திய பாணி கூத்தில் இருந்து கொஞ்சம் மெருகேற்றப்பட்டது என்று சொல்லியிருக்கிறீர்கள்?

கூத்தில் ‘பாணிகள்’ மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட வெவ்வேறு பாணிகள் உண்டு. தமிழகத்தில் கூத்து இல்லாத மாவட்டங்களும் உண்டு. பொதுவாக கூத்தை தெற்கத்திய பாணி, வடக்கத்திய பாணி என்று வகைப்படுத்துவார்கள். காஞ்சிபுரம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் உள்ள கூத்துக்கள் வடக்கத்திய பாணிக்குள் வரும். செஞ்சி போன்ற பகுதிகளில் உள்ளது தெற்கத்திய பாணி. எங்களது வடக்கத்திய பாணி. வடக்கத்திய பாணிக்குள்ளேயே பல தரப்புகள் உள்ளன. உதாரணமாக, நேற்று விழாவில் நல்லான் பிள்ளை பெற்றாள் என்ற கிராமத்தை சேர்ந்த மூத்த கூத்து கலைஞர் (லட்சுமிபதி) ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்தோம். அவருடைய குழு நடத்தும் 'இரண்ய சம்ஹாரம்' என்ற கூத்தை எடுத்தோம் என்றால் நரசிம்மன் கதாபாத்திரத்தை தவிர இரண்யன், கட்டியங்காரன், லீலாவதி, பிரகலாதன் என்று அனைத்து பாத்திரங்களும் இரண்டு இரண்டாக ஒரே சமயத்தில் தோன்றுவார்கள். இரண்டு இரண்யன்கள் ஒரே சமயத்தில் தோன்றுவது அந்த குழுவின் சிறப்பு. ஒன்று ஆடி பாடும் போது மற்றது வசனம் பேசும். ஆடிப்பாடி கொண்டிருப்பது வசனம் பேச ஆரம்பித்தால் வசனம் பேசுவது ஆடிப்பாடும். இது அவர்களின் பாணி. இது போன்று கதாபாத்திரங்கள் இரண்டாக வருவது மற்ற குழுக்களில் கிடையாது.

மூத்த தெருக்கூத்து கலைஞர்கள் நல்லாண் பிள்ளை பெற்றாள் லட்சுமிபதி (நடுவில் மைக்கில் பேசுபவர்) மற்றும் கொம்மந்தாங்கல் புருஷோத்தமன் (இடதுபுறம் அமர்ந்திருப்பவர்)

: கோ.பழனியின் கூத்து கலைக்களஞ்சியத்தில் திருவண்ணாமலை, வேலூர், செய்யாறு போன்ற பகுதிகளில் உள்ள கூத்து கலைஞர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். மதுரை, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் கூத்து பெரிதாக நடப்பது இல்லையா?

வடதமிழகத்தை சேர்ந்த மாவட்டங்களில் தான் கூத்து உண்டு. தஞ்சாவூரில் ஆர். சுத்திப்பட்டு, நார்த்தேவன்குடிகாடு ஆகிய பகுதிகளில் கூத்து உண்டு. ஆனால் அவர்கள் பெரும்பாலும் தொழில்முறை கலைஞர்கள் அல்ல. இரணியன் கூத்தை மட்டும் நரசிம்மர்‌ ஜெயந்தி அன்று ஆடுபவர்கள். இப்போது கொஞ்சம் அதற்கு வெளியே வளர ஆரம்பித்திருக்கிறார்கள். தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் கூத்து இல்லை. மதுரையில் இசை நாடகங்கள் உண்டு. ஆனால் தெருக்கூத்து இல்லை. 

: நீங்கள் கூத்து பிரதிகளுக்கு எந்த பிரதிகளை பயன்படுத்துகிறீர்கள்? உங்களுடைய பிரதிகளை நீங்களே எழுதுவது உண்டா?

என் முன்னோர்கள் எல்லாருமே மகாபாரத கூத்துகளை தான் நடத்தினார்கள். அதற்கு ஏற்கனவே எழுதப்பட்ட பிரதிகள் இருந்தன. அதை வைத்து கூத்துகளை நடத்தினோம். 1980க்கு பிறகு தான் கம்பராமாயணத்தை அடிப்படையாக கொண்டு இராமாயண கூத்துகளை எழுத ஆரம்பிச்சோம். அந்த கூத்துக்களை எஸ்.எம். திருவேங்கடம் என்ற ஒரு ஆசிரியர் எழுதி கொடுத்தார். செய்யாறு வட்டத்தில் உள்ள பெரிய செங்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் அவர். அவரும் கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக இருக்கும் கதாசிரியர் குடும்பத்தை சேர்ந்தவர். எங்களுக்கு என்ன கதை வேண்டும் என்பதையும், அந்த கதையில் தேவையான உள்ளடக்கம், சொல்லப் போகும் விஷயம் என்று அனைத்தையும் கதாசிரியரிடம் தெரிவித்து விடுவோம். மட்டுமல்லாமல் ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் சூழ்நிலைக்கு ஏற்றது போல் மெட்டுகளை கொடுத்து அதற்கு ஏற்றது போல் கதைகளை எழுதிக் கொள்வோம்.

கூத்து வாத்தியார் திருவேங்கடம்

: கூத்தின் பரிணாமத்தை சொல்லும் போது முதலில் ஆடல் அதிகமாக இருந்ததாகவும், பிறகு இசையின் இடம் அதிகமாக இருந்ததால் பாடல்கள் அதிகமாக பாடுவார்கள் என்றும், அதற்கு அடுத்ததாக வசனங்கள் அதிகமாகியது என்றும் சொல்வார்கள். ஆடல், இசை, வசனம் ஆகியவற்றில் எது இப்போது கூத்தில் பிரதானமாக உள்ளது?

தமிழில் இயல், இசை, நாடகம் என்று மூன்றையும் சேர்த்து முத்தமிழ் என்று சொல்வார்கள். முத்தமிழும் உள்ள கலை தெருக்கூத்து மட்டும் தான். இது எல்லா தெருக்கூத்து பாணிகளுக்கும் பொருந்தும். நான் மற்ற கலைகளை குறை சொல்வதாக எடுக்க வேண்டாம். சில கலைகளில் இயல் இருக்காது, நாட்டியம் இருக்கும். சிலதில் இசையும், இயலும் இருந்தாலும் நாட்டியம் இருக்காது. ஆனால் தெருக்கூத்தில் இவை மூன்றுமே உள்ளது.

: உங்கள் கூத்து அனுபவம் சார்ந்தோ, இல்லை நீங்கள் தெருக்கூத்தில் செய்ய விரும்பும் பாத்திரங்கள் சார்ந்தோ பகிர முடியுமா?

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை உள்வாங்காமல் முழுமையாக செய்ய முடியாது. சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் பெரிய கதாபாத்திரமாக இருந்தாலும் அதை விருப்பம் இல்லாமல் முழுமையாக செய்ய முடியாது. கலைஞனுக்கு எல்லா பாத்திரங்களும் ஒன்று தான். ஆனால் பார்வையாளர்கள் தான் 'சம்பந்தன் இந்த கதாபாத்திரத்தை செய்தால் நன்றாக இருக்கும்', 'துரியோதனன் வேஷத்தை முனிசாமி நல்லா செய்வார்' என்றெல்லாம் சொல்வார்கள். அது பார்வையாளர்களை பொறுத்து வேறுபடும். இரவு முழுவதும் கூத்து நடக்கும் என்பதால் சில பார்வையாளர்கள் 'இந்த வேஷம் வரும்போது என்னை எழுப்பு' என்று பக்கத்தில் இருப்பவரிடம் சொல்லிக் கொண்டு தூங்கி விடுவது உண்டு. ஏனென்றால் அவருக்கு அது பிடித்தமான வேஷமாக இருக்கும். சிலருக்கு முனிசாமி துரியோதனன் வேஷத்தில் வந்தால் கூட முதலில் இருந்து பார்க்க மாட்டார்கள். முனிசாமியின் குறிப்பிட்ட சில அடவுகள் வரும்போது மட்டும் தன்னை எழுப்ப சொல்லிவிட்டு படுத்து கொள்வார்கள்.

தெருக்கூத்து கலைஞர் சித்தாமூர் முனுசாமி

இந்தந்த கலைஞர்களுக்கு இந்தந்த வேஷங்கள் சேரும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள். கலைஞர்கள் அல்ல!

எனக்கு எல்லா வேஷங்களும் போட பிடிக்கும். ஆனால் நான் அப்போதிலிருந்து ஆண் வேஷங்கள் போட்டு பழகியதால் பெண் வேஷங்களை மட்டும் நடிப்பதில்லை. அது தவிர எல்லா வேஷங்களையும் போடுவேன். பெண் வேஷங்கள் நடிப்பதில்லை என்றாலும் கற்றுக் கொடுக்கிறேன். 

ஜெ: கூத்தின்‌ முக்கியமான அடையாளங்களில் ஒன்று கட்டியங்காரன் பாத்திரம். தெருக்கூத்தில் கட்டியங்காரனின் பங்கை விளக்க முடியுமா?

நாடகங்களில் 'சூத்திரதாரி' (நாடகங்களை நடத்தி செல்பவர்), விதூஷகன் (சிரிப்பூட்டுபவர்) என்று சொல்வார்களே. இவை இரண்டும் சேர்ந்தது தான் கட்டியங்காரன். 'ஆதவன்' என்ற ஒரு பெயரை கூத்தில் சொல்றாங்கன்னு வச்சுக்குவோம். படிக்காதவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது இல்லையா? அதனால் அது சூரியனின் பெயர்களில் ஒன்று என்று விளக்குவார் கட்டியங்காரன். கடைசியில் சூரியனை பற்றி எதையாவது 'காமெடி'யாகவும் சொல்வார். கட்டியங்காரன் கூத்து பார்க்கும் மக்களுக்கானவராகவும், நகைச்சுவைகள் சொல்பவராகவும், கூத்தை நடத்தி செல்பவராகவும், அடுத்தடுத்து வரும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துபவராகவும் இருக்கிறார்.

கட்டியங்காரன்

ஜெ: என்னுடன் வந்திருக்கும் புகைப்பட கலைஞர் மனோ பாஸ்கரன் ஒரு விஷயத்தை சொன்னார். சமீபத்தில் ஈரோடு அருகில் மதுரைவீரன் கூத்தை இவர் பார்க்க சென்றிருக்கிறார். பார்க்க சாதுவாக இருந்த கலைஞர் ஒருவர் மதுரை வீரன் பாத்திரத்தை ஏற்று ஆட ஆரம்பித்தவுடன் சன்னதம் வந்து சுற்றியிருந்த மக்களை பயமுறுத்தவும் அடிக்கவும் முனைந்திருக்கிறார். என் கேள்வி என்னவென்றால் கூத்தில் நடிப்பு மட்டும் தான் உள்ளதா? இல்லை சன்னதம் வருவது போல நம்மை மீறி நடக்கும் விஷயங்கள் உண்டா?

நம்மை மீறிய சம்பவங்கள் இருந்திருக்குனு என் முன்னோர்கள் சொல்லி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். என்‌ அனுபவத்தில் இருந்து ஒரு நிகழ்வை சொல்கிறேன். ஹரிச்சந்திரா என்ற நாடகத்தில் நிகழ்ந்தது அது. அதில் என் அப்பா தான் ஹரிச்சந்திரன். வேறொரு கலைஞர் சந்திரமதியாக நடித்தார். நான் கட்டியங்காரனாக இருந்தேன். லோகிததாஸை எரிப்பதற்கு தன்னிடம் முழந்துண்டு, காவகாசு, வாய்க்கரிசி போன்றவை இல்லாமல் சந்திரமதி அழும் காட்சி வந்தபோது திடீரென பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்த வயதான மூதாட்டி ஒருவர் தன் முந்தானையில் இருந்து துணியை கிழித்து, கூடவே காசையும் எடுத்து சந்திரமதியிடம் கொடுத்துவிட்டு 'முழந்தண்டு கேட்டாங்கல்ல...இந்தா! காவகாசுக்கு இந்தா காசு! வாய்க்கரிசி என்கிட்ட இல்ல (ஏனென்றால் அந்த மூதாட்டி வீட்டில் இருந்து வரும்போது அரிசி எடுத்து வரவில்லை). நீ அத (வாய்க்கரிசி) மட்டும் குடுத்துட்டு எரிச்சிட்டு போ!' என்றார். இது மேடையிலேயே நடந்தது.

மதுரைவீரன் கூத்து

இன்னொரு நிகழ்வு. விராட பருவம் கூத்து ஒன்றில் திரௌபதியை கீசகன் துரத்தும் காட்சி வந்த போது பார்வையாளர் ஒருவருக்கு தெய்வம் வருவது போல் மிரட்சி வந்து கீசகனாக நடித்தவரின் காலை பிடிக்க வந்தார். அப்புறம் நாங்கள் சேர்ந்து அவரை விலக்க வேண்டியிருந்தது. இவையெல்லாம் பார்வையாளர்கள் தரப்பிலிருந்து நிகழ்ந்தது.

நடிப்பவர்களுக்கும் இந்த அனுபவங்கள் நிகழ்ந்திருக்கிறது. 1987ல் டெல்லியில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் (National School of Drama) ஒரு மாணவனுக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தோம். ஒத்திகையில் துச்சாதனன் வேஷம் தரித்து முழுமையாக நடித்து முடித்து விட்டான் அந்த மாணவன். ஆனால் நாடகம் முடிந்த பிறகும் அவனால் துச்சாதன வேஷத்தில் இருந்து வெளிவர முடியவில்லை. சுயநினைவு வராமல் அந்த நிலையிலேயே இருந்தார். சுற்றி இருந்தவர்கள் அவரை இயல்புக்கு கொண்டுவர ஏதேதோ முயற்சித்தார்கள். பிறகு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு ஒரு வழியாக இயல்பு நிலைக்கு வந்தார். நாங்கள் அவர் அப்படி இருந்ததுக்கான காரணத்தை விசாரித்த போது, அவர் கொஞ்சம் 'எமோஷனல்' ஆகிவிட்டதால் இப்படி நடந்து விட்டது என்று ஏதோ சொன்னார்கள்.

அடுத்த நாள் நான் அவனை நடிக்க விடவில்லை. வெறும் பார்வையாளனாக இருக்க சொல்லிவிட்டு நான் துச்சாதனன் வேஷத்தை நடித்து காண்பித்தேன். துச்சாதனன் திரௌபதியை அழைத்து வர செல்லும் இடத்தில் தான் தன் உணர்ச்சிகள் கட்டுக்குள் நிற்காமல் ஏறுகிறது என்றான் அந்த மாணவன். மூன்றாவது நாள் மறுபடியும் துச்சாதனன் திரௌபதியை அழைத்து வரும் காட்சியில் அவனை நடிக்க வைத்தேன். இந்த முறை ஒரு தாம்பாளத்தை வைத்து... அதில் ஒரு கற்பூரம் ஏற்றி...ஒரு பாட்டும் பாடி...அவன் டென்ஷனை குறைத்தேன். இதை செய்த பிறகு அடுத்த நாள் முதல் எந்த பிரச்சினையும் இல்லாமல் மிக நன்றாக அவனால் நடிக்க முடிந்தது. இதில், பாடப்பட்ட பாடலையும் குறிப்பிட வேண்டும். முதலில் அவன் உணர்ச்சி கொந்தளிப்பு அடைந்ததற்கு அப்போது பாடப்பட்ட பாடலும் ஒரு காரணம். அந்த கூத்திற்கு தேவையான உணர்ச்சிகரமான பாடல் அது. அந்த பாடல் மாணவனின் உணர்வு நிலையை மேலே மேலே உயர்த்தி கொண்டே சென்றது. அடுத்த முறை அவனை நடிக்க வைத்த போது பாடப்பட்ட பாடல் கடவுள் வாழ்த்து போன்ற ஒரு சாந்தமான துதிப்பாடல். அது அந்த மாணவனின் உணர்ச்சிகளை கீழிறக்கி அவனை குளிர்விக்க உதவியது.

இதைப்போல் பாத்திரங்களின் உணர்ச்சிகளை கீழிறக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே சிலவற்றை நாங்கள் கூத்தில் செய்வதுண்டு. துச்சாதனன் திரௌபதியை அழைக்க செல்லும் முன் 'நான் திரௌபதியை அழைக்க போகிறேன். நீயும் வருகிறாயா?' என்று ஆக்ரோஷமாக கட்டியங்காரனிடம் கேட்பான். துச்சாதனன் உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் தருணம் அது. ஆனால் கட்டியங்காரன் 'வருகிறேன்' என்று சொல்வதற்கு பதிலாக மிக சாதாரணமாக 'எனக்கு என்ன மயிரு புடுங்குற வேலையா?' என்று எதிர் கேள்வி எழுப்புவான். இதை கேட்டவுடன் துச்சாதனின் உச்ச வேகம் கொண்ட கோபம் கம்மென்று இறங்கி இயல்புக்கு வந்து 'நான் என்ன அதுக்காகவா போறேன்' என்பான். அதற்கு கட்டியங்காரன் நிதானமாக 'இல்லிங்க...நீங்க போய் அந்த அம்மாவை (திரௌபதியை) முடியை பிடிச்சு இழுப்பீங்கோ! அந்த அம்மா வரமாட்டேன்னு திமிறுவாங்க. நீங்க விடாம மறுபடியும் இழுக்கும் போது நாலு முடி கையில வந்துடும். இதை பாக்கிறவங்க உங்களை 'போடா...மயிர புடிங்கினு' பேசுவாங்கல்ல' என்பான். பாத்திரங்களின் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைப்பதில் கட்டியங்காரனின் பங்கும் உள்ளது. ஒரே தன்மையில் சென்று கொண்டிருக்கும் பாத்திரங்களின் இயல்பை உடைக்கும் வழிமுறைகள் கூத்தில் ஏற்கனவே உள்ளது தான்.

கட்டியங்காரன்

ஜெ: கலை இயக்குநரும், ஓவியருமான பி.கிருஷ்ணமூர்த்தி எனக்கு ஆசிரியரும் கூட. அவர் சொல்லி தான் முதன் முதலில் புரிசை தெருக்கூத்து பற்றியும் உங்கள் அப்பா கண்ணப்ப தம்பிரான் பற்றியும் கேள்விப்பட்டேன். அவர் தெருக்கூத்தை கருவாக வைத்து வரைந்த ஓவியங்களை காட்சிப்படுத்தி இருக்கிறார்...

நன்றாகவே தெரியும் அவரை! நான் பி.கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில் தான் முதன் முதலில் 'சுவரொட்டிகள்' என்ற நவீன நாடகத்தில் நடித்தேன். ந.முத்துசாமி எழுதிய நாடகம் அது. 'காளி' என்ற மற்றொரு நாடகத்திற்கான கதை, பாடல், வசனம் ஆகியவற்றை என் அப்பா கண்ணப்ப தம்பிரான் எழுதினார். ஒரு mythஐ உருவாக்கி உடைப்பது தான் அந்த நாடகத்தின் அடிப்படை. ஒரு கிராமத்தில் உருவாகிய தெய்வ நம்பிக்கை. பிறகு அப்படி ஒன்றும் கிடையாது என்று முடியும்... பெரியாரிய இடதுசாரி சிந்தனை உள்ள நாடகம். அதையும் கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். அந்த நாடகத்திலும் நான் நடித்தேன். அவர் கூத்து ஓவியங்களை வரையும் போது கூடவே இருந்தவன் நான்.

கலை இயக்குநர் பி. கிருஷ்ணமூர்த்தி

ஜெ: கூத்து ஆடும் போது விரதமிருப்பது போன்றவற்றை கடைபிடிப்பது உண்டா? கோவில்களில் கூத்து ஆடும் போது அல்லது குறிப்பிட்ட சில வேஷங்கள் கட்டி ஆடும் போது அசைவம் சாப்பிடாமல் இருப்பது உண்டா? 

நாங்கள் அப்படி விரதம் எல்லாம் இருப்பதில்லை. அர்ஜுனன் தபசு நடக்கும் அன்று மட்டும் அர்ஜுனன் வேஷம் போட்டு தபசு மரம் ஏறுபவர் அசைவம் எல்லாம் சாப்பிடாமல் விரதம் இருப்பார். மற்றவர்கள் யாரும் விரதம் இருப்பதில்லை.

தபசு மரத்தின் உச்சியில் ஏறி நிற்கும் அர்ஜுனன் வேஷக்காரர்

ஜெ: ஒவ்வொரு கூத்து தொடங்குவதற்கு முன்னால் நடத்தப்படும் பூஜைகள், சடங்குகள் பற்றி சொல்ல முடியுமா?

கூத்து ஆரம்பிப்பதற்கு முன்பு பூஜை போடுவோம். மகாபாரத கூத்தாக இருந்தால் பூஜை முடிந்தபிறகு திரௌபதி அம்மன் கோவிலுக்கு போய்...அங்கே பாட்டு பாடிய பிறகு மேடைக்கு வந்து தான் கூத்து ஆரம்பிப்போம். ஒரு நாள் மட்டும் போடும் தனி நாடகங்கள் (கூத்தை தான்‌ இங்கே நாடகம் என்று குறிப்பிட்டார்) என்றால் மேக்-அப் போடுவதற்கு முன்பு அங்கேயே பூஜை போடுவோம். அதுக்கு அப்புறம் தான் மேளம் கட்டுதல். மேளம் கட்டுதல் என்றால் எத்தனை வகை தாளங்களை அந்த கூத்தில் பயன்படுத்துகிறோமோ அதை எல்லாம் வாசித்து காட்டுவார்கள். மிருதங்ககாரர் வாசிக்க அதுக்கு ஏற்றது மாதிரி முகவீணை, ஹார்மோனியம் வாசிப்பார்கள். இதன் பிறகு கடவுள் துதி பாட்டுகள் வரும். அப்புறம் தான் கட்டியங்காரன் வருவார்.

தபசு மரம் ஏறுவதற்கு முன் திரௌபதி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தும் அர்ஜுனன் வேஷக்காரர்

ஜெ: தெருக்கூத்தில் மிகப்பெரியது திரௌபதியம்மன் கோவில் திருவிழாக்களில் 18 நாள் நடக்கும் மகாபாரத கூத்து என்று நினைக்கிறேன். இதுபோன்ற கூத்துக்களை நீங்கள் நடத்தியிருக்கிறீர்களா? இந்த 18 நாள் மகாபாரத கூத்து நடக்கும் விதத்தை சுருக்கமாக சொல்ல முடியுமா?

பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி போன்ற மாதங்களில் இது போன்ற  மகாபாரத கூத்துக்கள் திரௌபதியம்மன் கோவில்களில் நிகழும். நாங்கள் சமீப காலத்தில் அது போன்ற கூத்துக்களை நடத்தவில்லை. கடைசியாக 2016-ஆம் ஆண்டு கோவிலூரில் நடத்தினோம். புரிசையில் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. என்னுடன் இருந்தவர்கள் எல்லாம் வெளியேறி விட்டார்கள். புதிதாக குழுவை உருவாக்கி வருகிறேன். புதிய ஆட்களுக்கு ஒவ்வொரு கூத்தாக இப்போது தான் சொல்லி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அது முழுமையான பிறகு அடுத்த வருடம் இந்த கூத்தை ஏதாவது ஒரு ஊரில் (அழைப்பின் பேரில்) நடத்த வாய்ப்புள்ளது. 

படுகளத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள துரியோதனன் உருவம்

கிராமங்களை பொறுத்து திருவிழா நடக்கும் கால அளவு மாறுபடும். சில இடங்களில் பதினெட்டு நாட்கள் நடக்கும். சில கிராமங்களில் ஒரு மாதம் கூட நீளும். திருவிழா நடக்கும் எல்லா நாட்களிலும் (மகாபாரத) சொற்பொழிவு நடத்துவார்கள். ஆனால் கூத்து தோராயமாக திருவிழாவின் கடைசி பத்து நாட்கள் மட்டும் தான் நடக்கும். 18 நாள் திருவிழா என்றால் முதல் 8 முதல் 10 நாட்கள் கோவில்களில் மகாபாரத சொற்பொழிவு மட்டும் நடக்கும். பகல் 2 மணி முதல் ஆரம்பித்து மாலை 5 அல்லது 5:30க்குள் இது முடியும். அதற்கு அடுத்தகட்டமாக முதல் தெருக்கூத்து ஆரம்பிக்கும் ஒன்பதாவது நாள்‌ அன்று பகலில் வழக்கம் போல நடக்கும் சொற்பொழிவில் 'திரௌபதி கல்யாணம்' பற்றி பிரசங்கியார் சொல்வார். அன்று இரவில் அதே திரௌபதி கல்யாணம் கதையை 'திரௌபதி வில்வளைப்பு' என்ற பெயரில் கூத்தாக நடத்துவார்கள். ‌திரௌபதி கல்யாணத்திற்கு பிறகு அடுத்தடுத்த நாட்களின் இரவுகளில் சுபத்திரை கல்யாணம், ராஜசூய யாகம், திரௌபதி வஸ்திராபகரணம், அர்ஜுனன் தபசு, கீச்சக வதம், கிருஷ்ணன் தூது, அபிமன்யு, கர்ண மோட்சம், பதினெட்டாம் போர் ஆகிய கூத்துக்கள் நடக்கும். கடைசி நாள் காலையில் 'படுகளம்' நிகழ்த்தப்படும். படுகளம் என்றால் துரியோதனனுக்கும் பீமனுக்கும் சண்டை நடக்கும் நாள். பூமியில் படுத்திருக்கும் விதத்தில் துரியோதனின் உருவத்தை திரௌபதி அம்மன் கோவிலருகே பெரிதாக மண்ணில் உருவாக்குவார்கள். துரியோதனன் மற்றும் பீமன் வேஷதாரிகள் ஆடிப்பாடி கொண்டே கிராமத்தின் தெருக்களை சுற்றி வந்து, கடைசியில் கோவிலருகே துரியோதனின் உருவம் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அங்கே பாட்டெல்லாம் பாடி இறுதியாக பீமன் துரியோதனனை சாகடிப்பது தான் படுகளம். கிராமங்களை பொறுத்து ஓரிரு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரம் வரை இந்த கூத்து நிகழும்.

படுகளம்

ஜெ: தெருக்கூத்தில் துரியோதனன் போன்ற‌ ஆக்ரோஷமான கட்டைவேஷங்கள் தான் பெரிய கிரீடம், பெரிய மீசை, அழுத்தமான வண்ண அலங்காரங்களுடன் பார்க்க கவர்ச்சியாக உள்ளது. கிருஷ்ணர், ராமர் போன்ற சாத்வீகமான வேஷங்கள் அலங்காரங்கள் குறைவாக கொஞ்சம் சாதாரணமாக உள்ளது. இக்காரணத்தால் ஆக்ரோஷமான வேஷங்களின் படங்களை தான் தெருக்கூத்தை பிரதிநிதப்படுத்துவதற்கும், போஸ்டர்கள், விளம்பரங்கள் போன்றவற்றிற்கும் எல்லாம் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இந்த வேஷங்கள் தெருக்கூத்தின் அடையாளமாகவே ஆகிவிட்டது. தெருக்கூத்தில் ஆக்ரோஷம் நிறைந்த வேஷங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் உண்டா?

எப்படி துரியோதனன் போன்ற வேஷங்களுக்கு புஜம், கிரீடம், மீசை எல்லாம் இருக்கிறதோ அதே போல ஒரு காலத்தில் இராமர், கிருஷ்ணர் போன்ற வேஷங்களுக்கும் இருந்திருக்கிறது. பின்னர் காலண்டர் ஓவியங்களின் செல்வாக்கால் இல்லாமல் ஆனது. நாங்கள் 1985-க்கு பிறகு இராமாயண கூத்துகளை நடத்த ஆரம்பித்த போது இராமர் வேஷத்திற்கு மீசை, தாடி ஆகியவற்றை நான் கொடுத்தேன். ஆனால் கிராமங்களுக்கு கூத்தாட சென்ற போது இராமர் ஏன் மீசை, தாடியுடன் இருக்கிறார் என்று மக்கள் கேள்வி எழுப்பினார்கள். மக்கள் காலெண்டர் ஓவியங்களில் இருப்பதை போல இராமரும், கிருஷ்ணரும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள். அத்துடன் எங்கள் நடிகர்களே மீசை, தாடியை எடுத்து விட்டார்கள். மீசை, தாடி மட்டும் தான் இல்லை. ஆனால் கிளி, களிகை ஆகியவை உண்டு.

துரியோதனன் (படம்: @midhunprabhu & @cropsandgrains)

குறிப்பிட்ட சில பெண் வேஷங்களுக்கும் ஒரு காலத்தில் கிளி, களிகை போன்ற ornaments-கள் இருந்தது. இன்று பொதுவாக சாதாரண உடைகளுடன் தான் பெண் வேஷங்கள் இருக்கிறது. ஆண் வேஷங்கள் மட்டும் தான் கிளி-களிகை கட்டி கொள்கிறார்கள். நான் இப்போது அந்த குறிப்பிட்ட பெண் வேஷங்களுக்கு மட்டும் தலையில் கிளி-களிகை கட்டி இவற்றை திருப்பி பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறேன். எல்லா குழுக்களிலும் இதை செய்வதில்லை. எங்கள் பரம்பரையில் ஒரு காலத்தில் இவை எல்லாம் இருந்தது. அதனால் விட்டுப்போனதை மறுபடியும் நான் கொண்டு வந்திருக்கிறேன். 

கிருஷ்ணர் வேஷத்தில் தெருக்கூத்து கலைஞர் இருங்கூர் இராமலிங்கம்
துரியோதனன் மற்றும் கிருஷ்ணன்

ஜெ: அப்போது சிகரேக்கும், கிளிகளிகையும் வேறு வேறா?

கிரீடம், சிகரேக்கு, கிளி, களிகை ஆகியவற்றை தலையில் அணிவார்கள். சிகரேக்கில் குச்சிகள் இருக்கும். அந்த குச்சிகளில் பூ சுற்றி இருக்கும். கூடவே பக்கத்தில் கிளி, களிகை ஆகிய இரண்டும் இருக்கும். இதில்லாமல் வெறும் கிளி, களிகை மட்டும் அணிவதை தான் நான் கிளி-களிகை என்று குறிப்பிட்டது.

தலையில் கிளி, களிகையுடன் பெண் வேஷக்காரர்

தலையில் சிகிரேக்குடன் தெருக்கூத்து கலைஞர்

கிரீடம்

ஜெ: 1960-களில் உங்கள் பெரியப்பா நடேச தம்பிரானும், உங்கள் அப்பா கண்ணப்ப தம்பிரானும் டெல்லியில் இணைந்து கூத்து ஆடியதை முதன்முறையாக பார்க்க நேர்ந்த அனுபவத்தை வெங்கட் சாமிநாதன் பதிவு செய்திருக்கிறார். இரண்டு பேரும் பெரிய கலைஞர்கள் என்று வெ.சா வியந்து எழுதியிருக்கிறார். நீங்கள் நடேச தம்பிரானும், கண்ணப்ப தம்பிரானும் இணைந்து ஆடியதை பார்த்திருப்பீர்கள் அல்லவா? இருவரின்‌ பாணியிலும் என்ன வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறீர்கள்?

அவர்கள் இணைந்து கூத்தாடியதை பார்த்திருப்பது மட்டுமல்ல அவர்களுடன் சேர்ந்து நடித்தும் இருக்கிறேன். இரண்டு பேருமே பெரிய நடிகர்கள் தான். ஒரே மரபில் இருந்து வந்தவர்கள் ஆதலால் ஒரே பாணியை கொண்டவர்கள். கீச்சகன், துச்சாதனன், இரணியன் போன்ற வேஷங்களை நடேச தம்பிரான் போடுவார். ஆனால் கிருஷ்ணர் போன்ற வேஷங்களை அவர் போட மாட்டார். கண்ணப்ப தம்பிரான் பெண் வேஷம் முதற்கொண்டு அனைத்து வேஷங்களையும் போடுவார். 'தோட்டியில் இருந்து துரை வரைக்கும்' என்று ஒரு பழமொழி சொல்வார்களே. அது போல.

புரிசை கண்ணப்ப சம்பந்தன் & ஜெயராம்

நேர்காணல் : ரம்யா, ஜெயராம்


புகைப்படங்கள்: மனோ பாஸ்கரன், புரிசைகூத்து இணையதளம் (purisaikoothu.org), ‘Therukkoothu’ Facebook page


மேலும் வாசிக்க:


நேர்காணல் எடுத்தவர்கள் குறிப்பு:

ரம்யா. எழுத்தாளர். நீலி மின்னிதழ் ஆசிரியர். தமிழ்விக்கி கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர். சிற்றிதழ்களில் சிறுகதைகள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதிவருகிறார். நீலத்தாவணி சிறுகதைத்தொகுப்பு 2024-ல் வெளிவந்துள்ளது.

ஜெயராம். ஓவியர்/வடிவமைப்பாளர். ஊர் குலசேகரம், கன்னியாகுமரி மாவட்டம். பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார்.