Sunday, 12 January 2025

துக்கம்: விழிப்பின்வழி உற்றறிதல் - பன்னீர் செல்வம்

மனித இனம் இதுவரை தோற்றுவித்த தத்துவங்கள் ஒவ்வொன்றும் துக்கம் குறித்தும் அதிலிருந்தான மீட்பு குறித்தும் வெவ்வேறு பார்வைகளை முன்வைக்கின்றன. உதாரணமாக, மார்க்சிய தத்துவம் மானுட துக்கத்துக்கான காரணம் வர்க்க பேதம் என்கிறது. முதலாளித்துவத்தின் பிறப்பிடமான அமெரிக்காவின் அரசியல் சாசனம் இன்பத்தை நாடிச்செல்வதற்கான உரிமை (Pursuit of Happiness) குறித்து பேசுகிறது.

இந்தியாவின் பழமையான தரிசனங்களில் ஒன்று சாங்கியம். சாங்கிய தத்துவம் துக்கத்தின் ஊற்றுமுகத்தை அடிப்படையாக வைத்து அதனை மூன்றாகப் பிரிக்கிறது. நம் இயல்புகளால், மனத்தால், செயல்களால் அதன் விளைவுகளால் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் துக்கம் முதல்வகை. சுற்றத்தால், சமூகத்தால், அமைப்புகளால், அரசால் விளையும் துக்கம் இரண்டாம் வகை. பேரியற்கையின் இயக்கத்தால், மானுட அறிதல்களுக்கு அப்பாற்பட்ட காரண-காரிய வலைப்பின்னல்களின் பிரம்மாண்டத்தால் விளையும் துக்கம் மூன்றாவது. 

துக்கத்தின் தோற்றுவாய் என்னவென்று அறிந்து அதனைத் தெளிவாக வகுத்துக்கொள்வது மீட்புக்கான பாதையில் முக்கியமான படிநிலை.

தத்துவங்களுக்கு இணையாக உலகம் முழுதும் இலக்கியங்களில் துக்கம் எனும் அனுபவம் விதவிதமாக விவரிக்கப்படுகிறது. கில்காமெஷ் முதல் கிரேக்கக் காப்பியங்கள் வரை, ஷேக்ஸ்பியர் முதல் நவீன இலக்கியம் வரை துக்கம் எனும் அனுபவத்தையே இலக்கியங்கள் பேசுகின்றன.

அப்படிப்பட்ட இந்த துக்கம் என்பதுதான் என்ன? ரணமும் வலியும் கண்ணீரும் அரற்றலும் புலம்பலும் இழப்பும் தான் துக்கமா? துக்கம் என்றதும் நம் மனதில் எழும் தொடர் சிந்தனைகள் என்ன? மரணம், விபத்து, நோய், பிரிவு, துரோகம், தோல்வி, ஏமாற்றம், அவமானம் என அதில்தான் எத்தனை வண்ணங்கள். வாழ்வின் மீதான குருட்டு நம்பிக்கைகளை முறித்துப்போடும் துக்கங்கள். உயிர்க்குலத்துக்கெல்லாம் வலியும் துயரும் பொதுவானாலும் இந்த முறிவுக்கணங்கள் மானுடர்க்கு மட்டுமே உரியவை. மனிதன் மட்டுமே வாழ்வின்மீது ‘நம்பிக்கை’ கொள்ள விழைகிறான். எனவே அது முறியும் துக்கத்தை அவன் மட்டுமே அனுபவிக்கிறான்.

முறிவுக்கணங்களில் இருந்து மீட்பளிப்பவை அன்றாடங்களே. பெரும் துயர்களைச் சந்தித்தவர்கள் அத்தனை அவசரமாக, அத்தனை தவிப்போடு அன்றாடத்தினுள் சரணடைகிறார்கள். மீள மீள அன்றாடத்திடம் தன்னை ஒப்புவிக்குந்தோறும் துயர்களில் இருந்து மனிதகுலம் மீள்கிறது. எத்தனை துயருக்குப் பிறகும் பசியும் தாகமும் சோர்வும் தூக்கமும் உண்டு. தன் நண்பன் என்கிடுவின் மரணத்தால் அலைச்சலுறும் கில்காமெஷ் விடைதேடி பயணிக்கிறான். அந்தப் பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் இடர்களும் துயர்களும் எல்லாம் ‘உற்ற உறவின் இழப்பு’ எனும் கொடும் துக்கத்தின்முன் இலகுவாகிறது. பெரும் சவால்களைக் கடந்தபின் மரணதேவனான உத்னபிஷ்டமைச் சந்திக்கிறான். பத்து நாட்கள் தூங்காமல் விழித்திருந்தால் மரணமின்மை எனும் வரத்தை அளிப்பதாக வாக்களிக்கப்படுகிறான். ஆனாலும் பயணக் களைப்பில் தூங்கிப்போகிறான். தோல்வியுற்று திரும்புகிறான். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கில்கமெஷ் எனும் காவியத்தில் இடம்பெறும் கதை இது. எத்தனை பெரிய திட்டமும் கனவும் துக்கமும் இன்பமும் எல்லாம் அன்றாடத்தின் முன் அதன் தேவைகள் முன், அந்த அன்றாடக் கணங்கள் ஒன்றன்மீது ஒன்றென படிந்து படிந்து ஆக்கிய காலத்தின் முன், வரலாற்றின் முன் என்னவாகிறது? பெரும்பாலைவெளியில் ஊற்றப்பட்ட ஒரு குவளை நீர் என ஆகிறது.

சில மாதங்களுக்கு முன் இரட்டையராய் பிறந்த தன் மகவுகளை சாவுக்கு ஈந்த நண்பனுக்கு அருகிலிருக்க நேர்ந்தது. இதற்கும் மேல் ஒரு மனிதனுக்கு என்ன துக்கம் இருக்க முடியும்? இழப்பின் வலியைப் பூரணமாக அனுபவித்துக் கடந்தபின் எஞ்சியது கடும் வெறுமை. அத்தனை தவிப்போடு அவதியோடு அன்றாடச் சுழலுக்குள் தங்களைப் பொருத்திக்கொள்ள விழைந்தனர் அத்தம்பதியர். அன்றாடம் போன்ற அருமருந்து வேறென்ன இருக்கமுடியும் என்று தோன்றியது அப்போது.

மரணம் முதலிய பெரும் துக்கங்களை, முறிவுக்கணங்களை சந்திக்காத மானுடர் யாரும் இல்லை என்று தைரியமாகச் சொல்லலாம். நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் ஓரிரு முறிவுக்கணங்களைச் சந்தித்திருப்போம்; அல்லது வரவிருக்கும் அக்கணங்களுக்காக பதற்றத்தோடு காத்திருப்போம். அந்த ஓரிரு கணங்கள் மட்டும்தான் துக்கம் என்பதா? அக்கணங்களுக்கு முன்பும் பின்பும் துக்கமற்ற நிலையில்தான் இருக்கிறோமா? முறிவுக்கணங்கள் நிகழாத பொழுதுகள் எல்லாம் துக்கமற்ற கணங்களா? 

இந்த துக்கமற்ற நிலை என்பது என்ன? கட்டற்ற இன்பத்துய்ப்பா? இந்த உடலும் மனமும் அதைத் தாங்குமா? சிரிப்பும் மகிழ்வுமா? எனில் எத்தனை நேரம் அது நீள்கிறது? பரிபூரண ஓய்வா? அத்தகைய ஓய்வுக்குப் பின் எழும் அர்த்தமின்மையின் பாரம் ஏன்? பணமும் புகழும் உலகியல் வெற்றிகளும் மட்டுமா? அவ்வெற்றிகளின் நிச்சயமின்மையை பூரணமாக ஏற்கிறோமா நாம்? 

எனவே முறிவுக்கணங்களின் துக்கம் மட்டுமே மானுடர்க்கு வாய்ப்பதில்லை என்று உறுதியாகக் கூறலாம். இக்கணம் நான் சிறுதுளியும் துக்கமற்று இருக்கிறேன் என்று சொல்லமுடியாத கணங்களெல்லாம் அன்றாடங்களின் துக்கத்தின் நிழல் படிந்தவைதான். எனில், இன்பத்துய்ப்பும், சிரிப்பும் மகிழ்வும், பரிபூரண ஓய்வும், பணமும் புகழும் உலகியல் வெற்றிகளும் எல்லாம் வாய்த்த பிறகும் எஞ்சும் துக்கம் என ஒரூ உள்ளது. இந்த அன்றாடத்தின் துக்கம் முறிவுக்கணங்கள்போல் பெருவலி அளிப்பதில்லை. மென்படலம்போல் எல்லா கணங்களின்மீதும் படியும் ஒன்று அது.

எனவே, ஒரு விரிவான பார்வையில் துக்கம் என்பதை இரண்டாக வகுத்துக்கொள்ளலாம்.

  1. முறிவுக் கணங்களின் துக்கம்
  2. அன்றாடங்களின் துக்கம்

காட்டுப்பாதையில் ஒருவன் நடந்துசெல்கிறான். செடிகொடிகள் விலக்கி, முள் தவிர்த்து கவனமாக முன் செல்கிறான். அப்போது ‘விஷ்ஷ்’ என்று சத்தம். காற்றையும் இலைகளையும் கிழிக்கும் கணநேர ஒலி. சத்தம் காதிலிருந்து கவனத்திற்கு வந்துசேரும் முன் அவன் நெஞ்சில் ஓர் அம்பு பாய்கிறது. நிலைகுலைந்து வீழ்கிறான். ஒரு நொடி கழித்து வலியில் வீரிடுகிறான். சற்று ஆசுவாசம்கொண்டு அம்பைப் பிடுங்கி எடுத்து மூச்சு வாங்க மூலிகை இலைகளைத் தேடிப்பறித்து கட்டிடுகிறான். மெல்ல எழுந்து மீண்டும் நடக்கத் தொடங்குகிறான். இப்போது அந்தப் பாதை மீது அவனுக்கிருந்த நம்பிக்கை முற்றிலும் ஒழிந்துபோனது. தூரத்துப் பறவையின் சிறகசைப்பெல்லாம் அம்பு சீறும் ஒலியோ என்று அச்சம்கொள்கிறான். இரண்டாவது அம்பு எப்போது வரும் என்ற பதற்றத்தோடே பயணத்தைத் தொடர்கிறான். இதயத் துடிப்பு அதிகரிக்க கண்ணீரும் பயமும் பீடிக்க வலியோடு நடக்கிறான்.

அவனை அதிகம் வதைத்தது முதல் அம்பா, இன்னும் எய்யப்படாத இரண்டாவது அம்பா? முறிவுக்கணங்களின் துக்கமும் அன்றாடங்களின் துக்கமும் மானுடர்க்கு இவ்வாறே வந்து சேர்கிறது என்கிறார் புத்தர். முதல் அம்பு தாக்கும் முன் அவன் துக்கமற்ற நிலையில் இருந்தானா? அவனைத் தொடர்ந்து அதே காட்டுப்பாதையில் செல்லவிருக்கும் இன்னொருவனுக்கு, அம்பு வரும் என்று தெரிந்துவிட்டபிறகு, அம்பு தாக்கும் முன்பே, துக்கமற்றதாகத்தான் இருக்குமா அவன் பயணம்? இன்னும் எய்யப்படாத அம்புகள் அளிக்கும் துக்கத்தை அன்றாடங்களின் துக்கம் என வரிக்கலாம். 

துக்கமற்ற நிலை என்பது எப்படி இருக்கும் என்பதை அனுபவித்தவர்தான் விவரிக்கமுடியும். நாம் துக்கம் என்றால் என்னவென்பதைப் புரிந்துகொள்ளமட்டும் இங்கே முயல்வோம். 

துக்கம் குறித்த மாபெரும் செய்தியைச் சொன்னவர் புத்தர். அவரது முதல் பேருரையே துக்கம் குறித்தானதுதான். அதில் நான்கு ‘உன்னத உண்மைகளை’ச் சொல்கிறார்.

  1. இங்கே துக்கம் உள்ளது
  2. அந்த துக்கத்துக்கு ஒரு காரணம் உள்ளது
  3. அக்காரணம் நீங்கிட துக்கம் நீங்கும்
  4. எட்டு அங்கப் பாதையே அதற்கான வழி

ஒன்றைத் தொட்டு ஒன்று என பன்னிரு காரணிகளால் துக்கம் எழுகிறது என்கிறார் புத்தர். இது பதிச்ச சமுப்பதா எனப்படுகிறது.

  • அறியாமையில் இருந்து பழக்கவழக்கங்களால் ஆன சங்காரங்கள் எனும் கட்டுருவாக்கங்கள் தோன்றுகின்றன்.
  • சங்காரம் எனும் விதைகளில் இருந்து விஞ்ஞானம் எனும் தன்னுணர்வு தோன்றுகிறது.
  • தன்னுணர்வில் இருந்து உடல்-மனத் தொகுப்பான நாம-ரூபம் தோன்றுகின்றது.
  • நாமரூபத்திலிருந்து ஆறு புலனுணர்வுகள் தோன்றுகின்றன.
  • புலனுணர்வுகளால் தொடர்பு ஏற்படுகிறது.
  • தொடர்பு கொள்வதால் உணர்ச்சிகள் (வேதனா) தோன்றுகின்றன.
  • உணர்ச்சிகளில் இருந்து வேட்கை எழுகிறது.
  • வேட்கை பற்றைத் தோற்றுவிக்கிறது.
  • பற்றுதலில் இருந்து பவ எனும் துய்த்தல்/ஆகுதல் தோன்றுகிறது.
  • துய்த்தலில் (ஆகுதல்) இருந்து பிறப்பு நிகழ்கிறது.
  • பிறப்பு என ஒன்று இருந்தாலே பிணி, மூப்பு, சாக்காடு இயல்விதியாகிறது.

சம்யுக்த நிகாயத்தின் சூத்திரம் ஒன்று இந்தக் காரணிகளைத் தெளிவுற விளங்கிக்கொள்ள உதவும்.

முதுமை மற்றும் மரணம் என்பது என்ன?

இங்கிருப்பவற்றின் வயதடைவு, தளர்ச்சி, உடைவு, நரை, சுறுக்கம், உயிராற்றலின் சரிவு, ஆதாரங்களின் தொய்வு ஆகிய இவையே முதுமை எனப்படும்.

இங்கிருப்பவற்றின் சாவு, விடுபடல், நொறுங்குதல், மறைதல், மரணித்தல், காலம் முடிவடைதல், தொகுப்புகள் சிதறிப்போதல், உடலை விட்டொழித்தல், உயிரியக்கம் தடைபடல் ஆகிய இவையே மரணம் எனப்படும்.

எனில், பிறப்பு என்பது என்ன?

இங்கிருப்பவற்றின் பிறப்பு, தோன்றுதல், மரபுவழித் தொடர்ச்சி, ஆகி வருதல், தொகுப்புகளின் தோற்றம், புலனுணர்வுகளைப் பெறுதல் ஆகிய இவையே பிறப்பு எனப்படும். 

எனில், துய்த்தல் (பவ) என்பது என்ன?

மூன்று வகை துய்த்தல்கள் உண்டு: புலன்-நுகர்ச்சித் துய்ப்பு, ரூப துய்ப்பு, அரூப துய்ப்பு . இவையே துய்த்தல் (ஆகுதல்) எனப்படும். 

எனில், பற்றுதல் என்பது என்ன? 

நான்கு வகை பற்றுதல்கள் உண்டு. உணர்வெழுச்சிகளின் மீது பற்றுதல், கருத்தாக்கம் மீது பற்றுதல், பழக்கம் மீது பற்றுதல், சுயம் குறித்த கருத்து மீது பற்றுதல். இவையே பற்றுதல் எனப்படும்.

எனில், வேட்கை என்பது என்ன?

ஆறு வகை வேட்கைகள் உண்டு. வடிவத்துக்கான வேட்கை, ஓசைக்கான வேட்கை, வாசத்துக்கான வேட்கை, சுவைக்கான வேட்கை, தொடுவுணர்ச்சிக்கான வேட்கை, கருத்துருவங்களுக்கான வேட்கை. இவையே வேட்கை எனப்படும்.

எனில், உணர்ச்சி என்பது என்ன?

உணர்ச்சியில் ஆறு வகைகள் உண்டு. கண் தொடர்புறுவதால் தோன்றும் உணர்ச்சி, காது தொடர்புறுவதால் தோன்றும் உணர்ச்சி, நாசி தொடர்புறுவதால் தோன்றும் உணர்ச்சி, நாக்கு தொடர்புறுவதால் தோன்றும் உணர்ச்சி, உடல் தொடர்புறுவதால் தோன்றும் உணர்ச்சி, மனம் தொடர்புறுவதால் தோன்றும் உணர்ச்சி. இதுவே உணர்ச்சி எனப்படும். 

எனில், தொடர்பு என்பது என்ன?

தொடர்புறுதலில் ஆறு வகைகள் உண்டு. கண்ணின் தொடர்பு, காதின் தொடர்பு, நாசியின் தொடர்பு, நாக்கின் தொடர்பு, உடலின் தொடர்பு, மனதின் தொடர்பு. இதுவே தொடர்பு எனப்படும்.

எனில், ஆறு புலனுறுப்புகள் என்பது என்ன?

கண்-புலன், காது-புலன், நாசி-புலன், நாக்கு-புலன், உடற்புலன், மனப்புலன். இவையே ஆறு புலனுருப்புகள் ஆகும்.

எனில், நாமரூபம் என்பது என்ன?

உணர்வு, அறிதல், நோக்கம், தொடர்பு, கவனம் ஆகிய இவையே நாமம் எனப்படும். புவி, நீர், காற்று, தீ ஆகிய நான்கு பருப்பொருட்களும், இந்நான்கு பருப்பொருட்களை சார்ந்திருக்கும் வடிவம்கொண்ட யாவும் வடிவம் (அ) ரூபம் எனப்படும். இவையே நாமரூபம் எனப்படும்.

தன்னுணர்வு என்பது என்ன? 

தன்னுணர்வில் ஆறு வகைகள் உண்டு. கண் சார் தன்னுணர்வு, காது சார் தன்னுணர்வு, நாசி சார் தன்னுணர்வு, நாக்கு சார் தன்னுணர்வு, உடல்சார் தன்னுணர்வு, மனம்சார் தன்னுணர்வு. இதுவே தன்னுணர்வு எனப்படும்.

எனில், சங்காரம் (அல்லது கட்டுருவாக்கம்) என்பது என்ன? 

சங்காரங்கள் (கட்டுருவாக்கங்கள்) மூன்று வகைப்படும். உள்-வெளி மூச்சு உட்பட்ட உடலின் சங்காரம், எண்ணங்களும் மதிப்பீடுகளும் சேர்ந்த சொற்களின் சங்காரம், உணர்தலும் அறிதலும் சேர்ந்த மனதின் சங்காரம். இவையே சங்காரங்கள் (அ) கட்டுருவாக்கங்கள் எனப்படும்.

எனில், அறியாமை என்பது என்ன?

துக்கத்தை அறியாமை, துக்கத்தின் தோற்றத்தை அறியாமை, துக்கத்தின் முடிவை அறியாமை, அந்த துக்கநிவர்த்திக்கான வழிமுறையை அறியாமை. இதுவே அறியாமை எனப்படும்.“

புத்தருக்குப் பிறகான ஆயிரம் ஆண்டுகளில் இந்தப் பன்னிரண்டு காரணிகளை அடித்துத் துவைத்து, உருட்டி வளைத்து, தத்துவத்தில் பெரும் பாய்ச்சல்களைச் செய்திருக்கின்றனர் பௌத்த தத்துவ அறிஞர்கள். காரணங்களால் எழும் துக்கம் அக்காரணங்கள் நீங்க விலகிவிடும் என்ற தன் அடிப்படை தரிசனத்தை விளக்க மெல்ல மெல்ல உருவாக்கி எடுத்த காரணிகளாக இவை இருக்கக்கூடும். 12 என்ற இந்த எண் கணிதத்தை எல்லாம் புத்தர் கடைபிடித்ததாகத் தெரியவில்லை. சில இடங்களில் 6 காரணிகள், சில இடங்களில் 15 என அது மாறிக்கொண்டே இருக்கிறது. புத்தருக்கு முன்பு நிப்பானம் அடைந்தவர்களான பிரத்யேக புத்தர்கள், இயற்கையில் நிகழும் மாற்றங்களில் இருந்தே பிரதித்த சமுத்பாதத்தை உய்த்துணர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கூற்று புத்தருக்கும் பொருந்தலாம். பிரதித்த சமுத்பாதம் என்றால் 12 காரணிகள் என்பது பௌத்த தத்துவவாதிகள் வகுத்ததே ஒழிய புத்தர் வகுத்ததல்ல. ஆனால் அடிப்படை தரிசனம் ஒன்றுதான்:

  1. இது இருக்கும்போது அது இருக்கிறது
  2. இதன் எழுச்சியினால் அதன் எழுச்சி நிகழ்கிறது
  3. இது இல்லாதபோது அதுவும் இல்லை
  4. இதன் மறைவினால் அதன் மறைவு நிகழ்கிறது

நாற்காலியில் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும்போது உங்கள் கால்கள் ஆடிக்கொண்டிருக்கின்றன. ‘கால்கள் ஆடிக்கொண்டிருக்கின்றன’ என்பது உங்கள் விழிப்புணர்வின் எல்லைக்குள் வந்ததும் ஆட்டம் நின்றுவிடுகிறது. அகவிழிப்பற்ற செயல்களால், அறியாமையால் பழக்கவழக்கங்கள் எனும் சங்காரங்கள் (கட்டுருவாக்கங்கள்) தோன்றுவது இவ்வாறுதான். இங்கிருந்து, அறிதல் எனும் செயல்பாடும், அறிபவன் நான் என ஆகி வரும் தொகுப்பும் தொடர்ந்து நிகழ்வதையே இந்தப் பன்னிரு அடுக்கு காண்பிக்கிறது. நாமரூபம் எனும் தன்னடையாளத்திலிருந்து ஆறு புலன்களின் உணர்வு உள்ளீடுகள் தோன்றுகின்றன. ஒளி என்பது பார்வையாகவும், ஒலி என்பது சத்தமாகவும் ஆகும் ‘தொடர்பு’ அதைத் தொடர்ந்து நிகழ்கிறது. நீர் நீராகவே இருக்கிறது. அது சுடுவதோ குளிர்வதோ ‘தொடர்பு’ நிகழ்வதால்தான். நாமரூபத்திலிருந்து அறுபுலன்வழி உள்ளேறும் செய்திகள் தொடர்புறுதலால் உணர்ச்சிகளாக மாற்றமடைகின்றன.

காற்று வீசுவதும் இலைகள் அசைவதும்போல் இடைவெளி இன்றி ஒன்றைத் தொட்டு ஒன்றென இந்தப் பன்னிரு காரணிகளும் நிகழ்ந்தவண்ணமே உள்ளன. இதில் எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லையே. எனில் துக்கம் என்பது மீட்பற்ற தப்பித்தலற்ற தவிர்க்கமுடியாத நிகழ்வுதானா? 

அறியாமையால் உருவாகும் சங்காரங்களில் இருந்து தோன்றும் விஞ்ஞானமும், அதிலிருந்து தோன்றும் நாம ரூபமும், நாம ரூபம் எனும் மன-உடல் தொகுப்பில் இருந்து தோன்றும் அறுபுலன்களின் செய்தி உள்ளீடுகளும் அவை மானுடன் எனும் எல்லையோடு தொடர்புகொள்வதும் நம் தேர்வால் நிகழ்வதில்லைதான். ஆனால் அந்த உணர்ச்சிகள் வேட்கைகளாகும் இடத்தில் புத்தர் வாளை வீசுகிறார். 

உணர்ச்சிகள் ஏன் வேட்கைகளாக வேண்டும்? அந்தக் கண்ணியை உடைப்பதன்மூலம் இந்தப் பன்னிரு காரணிகளின் முடிவற்ற சுழற்சியை முடிவுக்குக் கொண்டுவரலாம்தானே? எனவேதான் துக்கத்துக்குக் காரணம் வேட்கை என்பதை இரண்டாவது உன்னத உண்மையாகவும் வேட்கையை ஒழிப்பதே துக்கநிவாரணம் என்பதை மூன்றாவது உன்னத உண்மையாகவும் முன்வைக்கிறார்.

அதே நேரம், வேட்கையே துன்பத்திற்குக் காரணம் என்பதைப்போல பன்னிரு காரணிகளை ஒற்றைப்படையாகப் புரிந்துகொள்ளக்கூடாது. தொடர்பால் தோன்றும் உணர்ச்சிகள் வேட்கைகளாகும் இடத்தில் தான் துக்கச் சங்கிலியின் கண்ணியை அறுக்கவேண்டும் என்பதில்லை. பிரதித்த சமுத்பாதத்தின் எந்தப்புள்ளியில் இருந்தும் துக்கநிவர்த்தி நோக்கி செல்லலாம் என்றும் பல சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிலும் பற்பல வகைமாதிரிகளும் புத்தரால் உரைக்கப்பட்டுள்ளன. 

மேலும் இந்தப் பன்னிரு காரணிகளும் அதன் வைப்பு முறைகளும் புத்தர் எனும் அறிவியலாளர் தன் ஆய்வகத்திலுருந்து அளித்த அறிக்கையாக மட்டுமே கொள்ள வேண்டும். ஒரு மருந்து ஆய்வகத்தில் வேலை செய்வதைப்போலவே நோயாளியிடமும் செயல்படும் என்பதில்லை. அது நபருக்கு நபர், சூழலுக்கு ஏற்ப மாறுபடுவது. அவ்வாறே இந்தப் பன்னிரு காரணிகளும் சிக்கலான முறையில் தொடர்புகொள்ளவும் கூடும். 

பௌத்த அறிஞரும் புத்த சூத்திரங்களில் ஆழங்கால் பட்டவருமான தனிஸ்ஸாரோ பிக்கு பிரதித்த சமுத்பாதம் குறித்து மிக விரிவாக எழுதியுள்ளார். பன்னிரு காரணிகளை ஒன்றைத் தொட்டு ஒன்றென எழும் சக்கரம் என இந்திய பௌத்த அறிஞர்கள் உருவகிப்பது ஒற்றைப்படையானது என்கிறார் தனிஸ்ஸாரோ. மையத்தில் வைக்கப்பட்ட விளக்கொளியைச் சுற்றி அமைக்கப்பட்ட பன்னிரு கண்ணாடிகள் என சீன பௌத்த அறிஞர்கள் உரைப்பது ஓரளவு பிரதித்த சமுத்பாதத்தின் சிக்கலான ஊடுபாவுகளை விளக்குவதாகச் சொல்கிறார். விளக்கின் ஒளியை மட்டுமின்றி தம்மையும் பன்னிரு கண்ணாடிகளும் பிரதிபலித்துக்கொள்கின்றன. ஆனால் இந்தப் படிமம் அசைவற்று இருப்பதாகவும் காரணிகளின் தொடர் இயக்கத்தைத் தவறவிடுவதாகவும் சொல்கிறார். 

மேலும் இந்தப் பன்னிரு காரணிகள் தற்கணத்தின் துக்கம் மட்டுமின்றி பிறப்பு இறப்புச் சுழலையும் பிரபஞ்ச இயக்கத்தையும் வெவ்வேறு தளங்களில் விளக்குகிறது. துக்கத்தைப் புரிந்துகொள்வதற்காக மட்டும் இந்த இயற்சார்பண்பு எனும் பிரதித்த சமுத்பாதம் இங்கே விளக்கப்படுகிறது. அவை தமக்குள் எவ்வண்ணம் தொடர்புகொண்டு தற்கணத்தில் துக்கத்தைத் தோற்றுவிக்கின்றன என்பதை தனிஸ்ஸாரோ அவர்கள் கூறும் ஒரே உதாரணம் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

“நான்கு உன்னத உண்மைகள் சார்ந்து சிந்திக்காத அறியாமை கொண்டவர் நீங்கள் என்பதாக வைத்துக்கொள்வோம். உங்களுக்குப் பிடிக்காத உறவுக்காரர் ஒருவரை நினைவுகூறுங்கள். தனிப்பட்ட முறையில் உங்களை நிறையவே காயப்படுத்தி இருக்கும் ஒருவர்; சிறுவயது முதலே உங்களை அவமதிக்கும் ஒருவர். இப்போது நீங்கள் வளர்ந்து, பெரிய மனிதர் ஆகிவிட்டீர்கள். பல ஆண்டுகளாக அவர் குறித்த நினைவே இன்றி நிம்மதியாக வாழ்ந்து வந்தீர்கள். இப்போது, இன்னும் ஓரிரு நாட்களில் உங்கள் பெற்றோரின் அழைப்பின்பேரில் அவர் உங்கள் வீட்டுக்கு வரவிருக்கிறார். இதை எண்ணியபடியே அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கிறீர்கள்.

வரவிருக்கும் அந்நிகழ்வு குறித்த எண்ணங்களோடு (மொழிசார் கட்டுருவாக்கம் (அ) சங்காரம்) வீட்டுக்கு நடந்து செல்கிறீர்கள். அந்த மோசமான உறவினர் உங்களுக்கு இழைத்த காயங்களின் ஞாபகங்கள் மேலெழுகின்றன (மனம்சார் கட்டுருவாக்கம் (அ) சங்காரம்). இது உங்கள் உடலை இறுக்கம்கொள்ளச் செய்கிறது. உங்கள் மூச்சு நீங்கள் அறியாமலேயே வேகம் கொள்கிறது (உடல்சார் கட்டுருவாக்கம் (அ) சங்காரம்). நீங்கள் அசௌகரியம் அடைகிறீர்கள், சங்கடம் கொள்கிறீர்கள் (மனம்சார் கட்டுருவாக்கம் (அ) சங்காரம்). மேலும், நீங்கள் சங்கடமாக இருப்பது குறித்து தன்னுணர்வோடு இருக்கிறீர்கள் (தன்னுணர்வு). கோபம் சார்ந்த உடலின் சுரப்பிகள் ரத்த ஓட்டத்தில் கலக்கின்றன (ரூபம் (அ) வடிவம்). உங்கள் விருப்பின்றியே இந்தச் சூழலில் நீங்கள் சிக்கியிருப்பதை அறிகிறீர்கள் (நாமம்). மனதில் தோன்றும் இந்த எண்ணம் (மனதின் தொடர்பு) நீங்கள் அழுத்தப்படும் உணர்வைத் தருகிறது (உணர்ச்சி). இதிலிருந்து தப்பிக்க விழைகிறீர்கள் (வேட்கை). வரவிருக்கும் விருந்தில் நீங்கள் எத்தகைய பாத்திரத்தை வகிக்கலாம் என்று எண்ணத் தொடங்குகிறீர்கள் (பற்றுதல் மற்றும் ஆகுதல்). இந்த எண்ணத் தொடர்ச்சியில், நீங்கள் அன்றைய நாளில் பெருந்தன்மையானவராக நடந்துகொள்ளலாம் அல்லது அந்த உறவினரை அவமானப்படுத்தி வஞ்சம் தீர்க்கலாம் அல்லது முன்பு அவர் செய்த தீச்செயல்கள் குறித்து கேள்வி எழுப்பி நியாயம் கேட்கலாம் (இந்த ஒவ்வொரு எண்ணத் தொடர்ச்சியிலும் உங்கள் பிறப்பு நிகழ்கிறது). இந்த எண்ணத்தொடர்ச்சிகள் மனதில் மட்டுமே எழுந்தடங்குகின்றன (மூப்பு, மரணம்). மன அழுத்தத்தோடு வீட்டுக்கு நடந்துசெல்கிறீர்கள் (துக்கம்).

மனதில் இந்த எண்ணத் தொடர்ச்சிகள் அலையடிக்க வீடுவந்து சேர்கிறீர்கள் (சங்காரம் (கட்டுருவாக்கம்), தன்னுணர்வு, நாமரூபம்). வரவிருக்கும் நிகழ்வு குறித்த கவலையோடு கதவைத் தட்டுகிறீர்கள். கதவைத் திறப்பது அந்த மோசமான உறவினர். அவர் குரலும் தோற்றமும் உங்கள் முன்னால் (புலனுணர்வுகள், தொடர்பு). ஒருகணம் கழித்து அதிர்ச்சி அடைகிறீர்கள், பின்னர் இந்தச் சூழலில் சிக்கிக்கொண்டதாக உணர்கிறீர்கள் (உணர்ச்சி). அலுவலகத்திலேயே இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியாக இருந்திருக்கலாமே என்று ஏங்குகிறீர்கள் (வேட்கை). எந்தப் பிரச்சனையும் செய்யாதே என்று கண்களால் உங்கள் அம்மா சாடை காட்டுகிறார். அந்த மாலை முழுதும் அன்னையின் ஆனைக்குக் கட்டுப்பட்ட ஒருவராக அமைதியாக நடந்துகொள்கிறீர்கள் (பற்று, ஆகுதல், பிறப்பு). இரவு உணவை முடித்துக்கொண்டு அவர் கிளம்பியதும் நீங்கள் இயல்பு நிலைக்கு மீள்கிறீர்கள். இனி அடக்கமான பிள்ளையாக நீங்கள் இருக்க வேண்டியதில்லை (மூப்பு, மரணம்). இந்த மொத்த நிகழ்வும் உங்களுக்கு அளிப்பது துக்கமே.” 

அறியாமையினாலேயே பன்னிரு காரணிகள் தோன்றுகின்றன. அதுவே வேர். துக்கம் என ஒன்று உள்ளது என்பதையே அறியாமை; மீட்சி வேண்டும், அது சாத்தியம் என்பதை அறியாமை; அதற்கான பாதையை அறியாமை. இந்தச் சுழலில் ஏதாவது ஒரு புள்ளியில் அகவிழிப்பு நிகழ்ந்தால், அறியாமை அகன்றால் இந்தக் காரணிகள் தொய்வுற்று வீழ்கின்றன. 

மேலே குறிப்பிடப்பட்ட உதாரணத்தில் ”இது உங்கள் உடலை இறுக்கம்கொள்ளச் செய்கிறது. உங்கள் மூச்சு நீங்கள் அறியாமலேயே வேகம்கொள்கிறது (உடல்சார் கட்டுருவாக்கம் (அ) சங்காரம்).” என்ற பகுதி அழுத்தமேற்றப்பட்டிருப்பதைக் கவனிக்கலாம். இந்த இடத்தில் அகவிழிப்பைக் கொண்டுவருவதே விபசனா பயிற்சி.

துக்கமற்றதாக இல்லாத, சாதாரணமான ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் பன்னிரு காரணிகளின் சிக்கலான இயக்கத்தால் துக்கம் தோன்றியபடியே உள்ளது. முறிவுக்கணங்களின்போதும் இந்தச் சுழலே நிகழ்கிறது, ஆனால் இன்னும் வேகமாகவும் தீவிரமாகவும் சுழன்றடிக்கிறது. முறிவுக்கணங்களும் அன்றாடமும் தவிர்க்கக் கூடியவை அல்ல. ஆனால் அவற்றால் விளையும் துக்கம் தவிர்க்கக்கூடியதே. ஒன்றைத் தொட்டு ஒன்றென காரணிகள் இயங்குவதை விழிப்பின்வழி உற்றறிதலே அதற்கான வழி என்கிறது புத்தம்.

- பன்னீர் செல்வம்



பன்னீர் செல்வம். இலக்கிய வாசகர். அமலன் ஸ்டேன்லி அவர்களின் வழிகாட்டலில் தியானம் பயில்கிறார். எழுத்தாளர்கள் அமலன் ஸ்டேன்லி மற்றும் ஜெயமோகன் ஆகியோரை ஆசிரியராக கருதுகிறார்.  Digital Marketing துறையில் பணியாற்றுகிறார்.