Sunday, 12 January 2025

அம்பை மணிவண்ணின் சிற்பக்கலை : நூல் அறிமுகம் 1 - கடலூர் சீனு


இந்தியாவில் குறிப்பாக தமிழ் நிலத்தில் 2000த்தில் கோயிலை நோக்கிய பக்தர்களின் இணைப்பில் ஒரு பெரிய எழுச்சி நிகழ்ந்தது. பொருளாதார மாற்றம், இணைய தொழில்நுட்ப அறிவியல் சார்ந்த வேலை வாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றால் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் அன்றாடம் தாண்டியும் பயணிக்க முடிந்தது.

பெருவாரியான மக்கள் ஒரு பண்பாட்டில் எதை கைகொண்டாலும் உடன் நிகழ்வாக அந்த பண்பாட்டில் கணிசமான சாரமான பகுதி ஒன்று புறக்கணிக்கப்படும் நிலையும் நிகழும். அதுவே இம்முறையும் நிகழ்ந்தது. கோயில் புனர் நிர்மானங்கள் என்ற பெயரில் கோயிலின் பண்பாட்டு தடங்கள் பல அது என்ன என்றே தெரியாத ஆட்களால் சிதைக்கப்பட்டன. முக்கிய கோயில்களில் அளவுக்கு மீறிய மக்கள் வருகையை கட்டுப்படுத்த கோயில் வழிபாட்டு முறைமையை மீறி எங்கெங்கும் தடுப்பு கம்பி வேலிகள், கோயில் மதில் உள்ளேயே உணவு கடைகள், கழிப்பறைகள் எல்லாம் முளைத்தன.

அம்பை மணிவண்ணன்

2000க்கு பிறகு நிகழ்ந்த இணைய எழுச்சியால் திரண்ட கூட்டம். கோயில் என்றால் என்ன, அங்கே என்ன என்ன இருக்கும், அதை எப்படி அணுகுவது இதையெல்லாம் கற்று தரும் ஆசிரியரை உதறி, இவை எல்லாம் என்ன என்றே அறியாத மேம்போக்கான விழுந்து கும்பிடுத்தல், வேண்டுதல் பிரார்த்தனை செய்தல், பரிகாரம் கழித்தல் இவற்றுக்கு மட்டுமே கோயில் என்று நம்பிய, நுகர்வு மனநிலை மட்டுமே கொண்ட சராசரி மனிதர்களால் கிட்டத்தட்ட எல்லா கோயில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

கோயில் என்பது பக்தர்களுக்கானது மட்டுமே அல்ல. அடிப்படையில் அது ஆத்மீக தேடல் கொண்ட சாதகனுக்கான குறியீட்டு வெளி. ராஜ கோபுரம் துவங்கி கோயிலுக்குள் உள்ள ஒவ்வொரு மூர்த்தியும் மெய்மை நோக்கிய மானுட நகர்வில் ஒவ்வொரு நிலை. அந்த ஆத்மீக சாரத்தை என்ன என்றே அறியாத பாமரர்கள் வந்து நிறைந்து நசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையை மாற்றும் முயற்சிகள், வரும் தலைமுறை நோக்கி கோயில் பண்பாட்டை அறிய செய்யும் சில முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்றும் வருகின்றன. அந்த ஆக்கபூர்வமான செயலின் ஒரு பகுதியாக, ஒரு அறிவார்ந்த மனம் கோயில் பண்பாட்டை, குறிப்பாக அதன் அடிப்படை அலகான சிற்பவியல் குறித்து அறிந்து கொள்ள வசதியாக கணபதி ஸ்தபதி எழுதிய சிற்ப செந்நூல், சரஸ்வதி மகால் வெளியிட்ட திருவாவடுதுறை ஆதீன நூல்கள் போன்ற சில நல்ல நூல்கள் வாசிக்க கிடைக்கின்றன. அந்த செவ்வியல் நூல்களுக்கு அடுத்தபடியாக அவ்வப்போது நல்ல சில ஆய்வு நூல்களும் வெளியாகின்றன. அந்த வரிசையில் இந்து அற நிலையத்துறை வழியே முனைவர் அம்பை மணிவண்ணன் எழுதி சிற்பக்கலை ஆய்வு அணுகுமுறைகள் எனும் தலைப்பில் வெளியாகி இருக்கும் ஆய்வுகள் முக்கியமானவை.

******

முனைவர் அம்பை மணிவண்ணன் முன்னதாக தமிழகக் கோயிற் கலை, கோயில் ஆய்வு முறைமைகள், போன்ற ஆலயப் பண்பாடு சார்ந்த முக்கியமான சில நூல்களை எழுதியவர். அவர் எழுதிய தென் தமிழக கோயில் சிற்பங்கள்; ஒரு ஊடு பிரதி ஆய்வு எனும் ஆய்வே, சிற்பக்கலை ஆய்வு அணுகுமுறைகள் எனும் தலைப்பில் நூல்வடிவம் கண்டிருக்கிறது.

இந்த ஆய்வு நூலுக்குள் சிறு குறிப்பாக இடம்பெறும் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வாஸ்து சாஸ்திர உபநிஷத் எனும் நூல்தான் முதன் முதலாக சிற்பக்கலை குறித்து அணுகி ரசிக்க தேவையான வகைமைகளை பேசுவதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். இது ஒரு முக்கியமான குறிப்பு. இந்திய கோயில் சிற்ப மரபை அணுகி ரசிக்க தனியே 'ரசிகன்' என்றோ அதற்கான வழிமுறை என்றோ முடிமன்னர் காலத்தில் ஒன்றில்லை. கோயிலின் ஒவ்வொரு அலகும் ஒன்றுடன் ஒன்று பிரிக்கஇயலா வகையில் பிணைந்த ஒன்றாகவே இருந்திருக்கிறது. நூலாசிரியரே பண்டைய சிற்ப சாஸ்திர சிறப்பம் அமைய வேண்டிய இடம், சிற்ப அமைதி, அளவீடுகள் இவை குறித்து மட்டுமே பேசுவதாக தெரிவிக்கிறார்.

காலனியாதிக்கம் வழியே நவீனமாக்கலும், அச்சு வழியே அறிவுத்துறை விரிவும், உலக இலக்கியம் உலக கலைகள் போன்ற கருத்துருவாக்கம் மேலை சிந்தனை இதன் வழியாகவே தனித்த கலைஞன் தனித்த ரசிகன் போன்ற நிலைகள் இங்கே பிறந்தன. கீழைத்தேயவியல் எனும் பெரிய அறிவு மரபின் வழி இந்திய சிற்ப கலை புதிய முறைமைகள் வழியே புறவயமாக, மதம் சாராத ஒரு ரசிகனும் அணுகும் வண்ணம் அறியக் கிடைத்தது. இந்திய அளவில் ஆனந்த குமாரசாமி போன்ற முன்னோடிகள் சிலர் ஒரு ரசிகன் இந்திய சிற்பக்கலை வழியே, அதன் கதைகள் வழியே, அதன் அழகு வழியே, அதன் தத்துவம் வழியே அதன் அத்மீக சாரத்தை அணுகும் வழி வகைகளை உருவாக்கினர். இன்றும் தொடரும் புதிய வகைமைகள் வழியே இந்திய சிற்ப கலையை அணுகி அறியும் அந்த நோக்கு தொழிற்படும் ஆய்வு நூலே இந்த சிற்பக்கலை ஆய்வு அணுகுமுறைகள் நூல்.

*******

நான்கு அத்தியாயங்கள் கொண்ட இந்த ஆய்வு நூலில் முதல் அத்தியாயத்தின் தலைப்பு மெய்ப்பாடும் சிற்பங்களும்.

தொல்காப்பியம் வகுத்த மெய்ப்பாடுகளின் அடிப்படையில் தமிழக சிற்பங்கள் சிலவற்றை அடையாளம் கண்டு வகைப்படுத்தும் முயற்சி கொண்ட ஆய்வு.

சதிர் என்பதிலிருந்து வளர்ந்த பரதம், அதன் அடிப்படைகளை வகுத்த பரத முனிவர், அதன் அடிப்படைகளில் ஒன்றான ரசம், சிற்பவியலுக்கும் பரத சாஸ்திரத்துக்கும் உள்ள உறவு இதை விவரித்துத் துவங்கும் அத்தியாயம், ரசம் என்பதற்கு இணையாக தொல்காப்பியத்தின் மெய்ப்பாடுகளின் எவ்விதம் இணையாக இருக்கின்றன என்பதை விவரித்து, 126 மன விகாரங்கள் வழியே 32 நிலைகளன்களில் எழும் 8 மெய்ப்பாடுகளை கோட்பாட்டு ரீதியாக விளக்கி, அந்த வரிசையில் தமிழக சிற்பங்கள் சிலவற்றை அடையாளம் காண முயல்கிறது.

தொல்காப்பியத்தின் ஒவ்வொரு மெய்ப்பாட்டுக்கும் அது எழும் நான்கு நிலைகளனுக்கும், அதற்கு இணையான பரத சாஸ்திர ரசத்தின் ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கி ஒவ்வொரு மெய்ப்பாடு சார்ந்தும் சிற்பங்களை அணுகுகிறார் நூலாசிரியர்.

நகை எனும் மெய்ப்பாட்டினை ஒரே ஒரு நிலைகளனில் வைத்து அதை திரிபுராந்தகர் படிமம் எவ்விதம் வெளிப்படுத்துக்கிறது என நூல் விவரிக்கிறது.

அழுகை எனும் மெய்ப்பாடு அமங்கலம் என்பதால் அது கோயிலுக்குள் இடம் பெறாது எனும் நிலை, ஆனால் அழகர் கோயில், தஞ்சை கோயில் ஓவியங்களில் அழுகை இடம்பெற்றிருக்கும் விதத்தை கூறும் நூல், அசைவு எனும் நிலைகளனில் வைத்து அழுகை எனும் மெய்ப்பாட்டுக்குள் ராவணன் கயிலை மலையை தூக்கும் படிமத்தைப் பொருத்தி விவரிக்கிறது.

இளிவரல் எனும் மெய்ப்பாட்டை மூப்பு எனும் ஒரே ஒரு நிலைகளனில் வைத்து, அதில் ஜேஷ்டா தேவி படிமையை பொருத்தி விவரிக்கிறது.

மருட்கை எனும் மெய்ப்பாடு விஸ்மையா எனும் ரசத்துடன் முரணின்றி முயங்கும் வகையை சொல்லி, அதில் தஞ்சை பெரிய கோயில் துவார பாலர் படிமத்தை பொருத்தி விவரிக்கிறது.

பெருமிதம் எனும் மெய்ப்பாட்டை மூன்று நிலைகளனில் வைத்து, அதில் தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், கண்ணப்ப நாயனார் படிமங்கள் பொருந்தி நிற்கும் வகையை சொல்கிறது.

வெகுளி எனும் மெய்ப்பாட்டை இரண்டு நிலைகளனில் வைத்து, அதில் சூர்ப்பனகை அங்க பங்கம், அனுமன் நிசும்பன் யுத்தம் படிமங்கள் பொருந்தி நிற்கும் வகையை கூறுகிறது.

உவகை எனும் மெய்ப்பாட்டை, புலன், புணர்ச்சி என்ற இரண்டு நிலைகளனில் வைத்து, நர்த்தன கணபதி, உத்திஷ்ட கணபதி, கலவி சிற்பங்கள் இவை அதில் பொருந்தி நிற்கும் வகையை விவரிக்கிறது.

அருளல் எனும் மெய்ப்பாட்டின் கீழ் சண்டேச அனுக்ரக மூர்த்தி, கஜேந்திர வரதர் போன்ற படிமைகள் பொருந்துவதை நூல் விவரிக்கிறது.

மெய்ப்பாடு ரசம் இரண்டிலும் சேராத சாந்தம் எனும் நிலையில் அமைத்த தீர்த்தங்கரர் படிமைகளை குறித்தும் பேசப்படுகிறது.

குறியீடுகளும் சிற்பங்களும் என்ற தலைப்பிலான இரண்டாம் அத்தியாயம் முறையே மேலை குறியியல் கோட்பாடு, அதன் வரைவிலக்கணம், தமிழ் குறியியல் கோட்பாடு போன்றவற்றை விரிவாக விளக்கிய பின் துவங்குகிறது.

இதில் குறியீட்டு ரீதியாக (சட்டை நாதர் சிற்பங்கள் போல) சிவனின் உயர்வு எவ்விதம் சுட்டப்படுகிறது, சோமாஸ்கந்தர் வழியே நன்மக்கட்பேறு, பிற படிமங்கள் வழியே துறவரத்துக்கு எதிரான இல்லறம் போன்றவை எவ்விதம் தொழில்படுகின்றன என்பது விவரிக்க படுகிறது.

ஸ்ரீ தேவி பூதேவி படிமை ஒரே போல இருந்தாலும், கச்சு அணியாத பூதேவி கச்சு அணித்த ஸ்ரீதேவி வழியே சுட்டப்படும் உயர்வு தாழ்வு நிலை, வாலி சுக்ரீவன் ஒரே போல இருந்தாலும் சுக்ரீவன் அணிந்த மாலை வழியே சுட்டப்படும் வேறுபாடு, இவை விவரிக்க படுகின்றன. ஜலந்த்ர வதை மூர்த்தி வெறுமனே கீழே இருக்கும் ஜலந்தரனை சுட்டி காட்ட மட்டும் செய்கிறார் அதன் குறியீட்டு விளக்கம், மதுரை கோயிலில் தடாதகை சிலை குறியீட்டு ரீதியாக அளிக்கும் அர்த்தம் என விரிகிறது இந்த அத்தியாயம்.

இயக்க ஆற்றலும் சிற்பங்களும் என்ற மூன்றாம் அத்தியாயம், இலக்கியத்தில் சந்தம் போன்ற விஷயங்கள் வழியே இயக்க ஆற்றல் எவ்விதம் நிகழ்கிறது, சிற்பங்களில் அது எவ்விதம் வெளிப்பட கூடும் என்பதை விளக்கி, மைய மூர்த்தி அசைவற்று இருக்க சுற்றி நிகழும் இயக்கங்களை திருமெய்யம் சயன பெருமாள் படிமத்தை முன்வைத்தும், மைய படிமத்தை சேர்த்து படிம தொகையில் உள்ள அனைத்தும் இயங்கும் வகைக்கு, திருக்குறுங்குடி மகிஷாசுர மர்த்தினி படிமத்தையும், இணை படிம இயக்கத்துக்கு, ராம ராவண யுத்தம், அனுமன் நிசும்பன் யுத்தம் போன்ற பல படிமங்கள், தனி சிற்ப இயக்கத்துக்கு நடராஜர், பூவராகர் போன்ற பல சிற்பங்கள் தேர்வு செய்யப்பெற்று இயக்கத்தின் நான்கு நிலைகளும் விவரிக்கப் பெறுகின்றன.

சிலேடை சிற்பங்கள் என்ற இறுதியான நான்காவதான அத்தியாயம் தமிழ் இலக்கியத்தில் சிலேடை பயின்று வரும் நிலையை விளக்கி, அதே போல சிற்பத்தில் நிகழ்ந்தால் அது எவ்விதம் இருக்கும் என்பதை மாமல்லை பகீரதன் தவ சிற்ப தொகுதி கொண்டு விளக்குகிறது

சிற்ப கலையை அணுகி அறிய விரும்பும் எவருக்கும் ஒரு புதிய பாதையை திறக்க முயலும் இந்த ஆய்வு நூலின் பலம், இது விவரிக்க எடுத்து கொள்ளும் எல்லா சிற்பங்களையும் அதன் புராண பின்புலத்துடன் விளக்குவதே. ஒவ்வொரு படிமையும் அதன் முதல் சிலை எங்கே உள்ளது, கலை வரலாற்றுப் போக்கில் பல்லவர், சோழர், நாயக்கர் காலம் என அந்த சிலை மெல்ல மெல்ல எவ்விதம் விரிவாக்கம் கண்டது என்பதை விளக்குகிறது. நூல் பேச எடுத்துக்கொள்ளும் சிலைகள் அனைத்தையும் அது எங்கே எந்த கோயிலில் உள்ளது என்பதை, அதன் புகைப்படத்துடன் விளக்குகிறது. எனவே இந்த நூலை ஒரு கையேடாக கையில் எடுத்துக்கொண்டு அந்தந்த கோயில்களில் சென்று சிற்பங்களை காணலாம். இந்த நூல் கையில் இல்லாவிட்டால் இந்த நூல் சேரன்மா தேவி கோயிலில் இருப்பதாக காட்டும், அனுமன் ராமர் காலை முத்தமிடும் அரிய புடைப்பு சிற்பத்தை தவற விடவே வாய்ப்பு மிகுதி. அந்த வகையில் இது முக்கியமான நூல்.

இங்கே துவங்கி வாசகர் மேலதிகமாக பயணிக்க தேவையான எல்லா பாதைகளையும் சுட்டி காட்டும் அம்பை மணிவண்ணன் அவர்களின் இந்த ஆய்வு நூல் பெரிய அளவில், கெட்டி அட்டையில், நிறைய கருப்பு வெள்ளை புகைப்படங்களுடன் குறைந்த விலையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

நூல் குறித்த தகவல்கள்: 

  • நூல்: சிற்பக்கலை ஆய்வு அணுகுமுறைகள்
  • நூலாசிரியர்: முனைவர் அம்பை மணிவண்ணன்
  • பதிப்பகம்:  இந்துசமய அறநிலையத்துறை, சென்னை
  • விலை: ரூ.280

கடலூர் சீனு


கடலூர் சீனு கலை விமர்சகர், எழுத்தாளர்.  தமிழ் நவீன இலக்கிய வாசிப்பு குறித்த இவரது பார்வைகள் முக்கியமானவை. நவீன இலக்கியம் மட்டுமன்றி மரபான பண்பாட்டுத்தளங்கள் குறித்தும், சினிமா ஆவணப்படங்கள் குறித்தும் விரிவாக தொடர்ந்து எழுதுபவர். கவிதைகள் குறித்த இவரது கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் பரவலான வாசிப்பை பெற்றவை.