ஆகமம் என்னும் சொல்லுக்கு ’முறையாக தொகுக்கப்பட்டு, மரபார்ந்து கையளிக்கப்பட்ட ஞானம்’ என்று பொருள். இந்த ஞானம் பல்வேறு வகைகளில் நம்மை வந்தடைகிறது. நேரடியாக கிடைக்கும் அறிதல், ஊகங்களினூடாக பெறும் அறிதல் மற்றும் ஞானிகளின் வாக்குகளிலிருந்து பெறும் அறிதல் என. இது மனிதனின் இம்மைக்கும் மறுமைக்கும் பலனளிப்பது. ஆகமம் என்னும் சொல்லுக்கான மற்றொரு வரையறை - வேதம் அறிந்தோரின் சொற்கள் படி, அறத்தையும் அறமின்மையையும் கூறுவது, மனிதனின் உயர்ந்த இலக்கை பற்றிய விரிவான அறிவை தருவது.
இவை இரண்டும் ஆகமங்களுக்கான பொதுவான வரையறைகள். ஆகமங்கள் அவை சார்ந்துள்ள மதங்களின்படி மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன - சைவ ஆகமங்கள், வைணவ ஆகமங்கள், சாக்த ஆகமங்கள். சைவ ஆகமங்கள் ’சிவன் தன் திருவாயால் உரைத்து, பார்வதி செவி மடுத்து, வாசுதேவரால் (அதாவது விஷ்ணுவால்) உள்வாங்கப்பட்ட ஞானம்’ என வரையறுக்கப்படுகின்றன. சாக்த ஆகமங்கள் ’பார்வதி சிவனுக்கு உரைத்த ஞானம்’ என வரையறுக்கப்படுகின்றன. மேலும் சில ஆகமங்கள் சிவன் வேறுசிலருக்கு உரைத்ததாக சொல்லப்படுகின்றன. உதாரணமாக மதங்கமுனிவர் (மதங்க-பரமேஸ்வராகமம்), ருரு (ரௌரவாகமம்), விஷ்ணு (அஜிதாகமகம்) போன்றோருக்கு சிவன் உரைத்தவை.
இந்த வரையறைகளை கவனித்தால் ஆகமங்கள் உரையாடல் வடிவில் அமைந்திருப்பவை என ஊகித்துவிடலாம். ஆகமங்கள் சிவன், பார்வதி, விஷ்ணு ஆகியோரால் உருவாக்கப்பட்டவை என நம்பப்பட்டாலும் இன்றிருக்கும் ஆகம அறிவுத்தொகை புராணரீதியாக பார்த்தாலும் வரலாற்றுரீதியாக பார்த்தாலும் ஆசிரிய மரபுகளில் இருந்து வாய்மொழியாக அல்லது நூல்கள் வழியாகவே நம்மை வந்தடைந்துள்ளன.
பிரபஞ்சம் தோன்றிய போதே ஆகமங்களும் தோன்றின என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக, சைவஆகமங்கள் முழுமுதலான (நிஷ்கலம்) சிவனில் இருந்து முதல் ஒலியான நாதம் வெளிப்பட்டது என்கிறது. சிவன் ஓங்காரத்தை (பிரணவம்) எழுப்பினார். ஓங்காரத்திலிருந்து முதன்மையான ஒலிக்கூறுகள் (நாஸ்திரிகைகள்) பிறந்தன. அவற்றிலிருந்து மொழி (சத-ராசி) உருவாகியது. மொழியின் முதல் வெளிப்பாடென்பது ஆகமங்களே. வைணவ ஆகமங்களை வாசுதேவருடன் தொடர்புபடுத்துகின்றனர். முழுமுதலான வாசுதேவரில் இருந்து முதல் வியூகவடிவமான சங்கர்ஷணர் வெளிப்படுகிறார். சங்கர்ஷணர் ஆகமங்களை உருவாக்கினார் என சொல்லப்படுகிறது.
இவை காட்டுவது என்னவென்றால் ஆகமங்கள் மிக தொன்மையானவை, நினைப்புக்கெட்டா காலந்தொட்டு இருந்துவருபவை. இதை ஒப்பிட்டால் இவற்றின் எழுத்துவடிவம் சமீபகாலத்தில்தான் உருவாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு நிலப்பகுதியில் தெளிவான வடிவமற்று பொதுவாக பரவி இருந்த அறிதல்கள் சடங்காக வறையறுக்கப்பட்டு பிறகு முறையாக தொகுக்கப்படுகின்றன. இதன்படி, ஆகமம் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் குறிப்பிடப்படுவதை காணலாம். ஒன்று மரபார்ந்த ஞானம், இன்னொன்று நூல்கள்.
இதுபோலவே, ’தந்திரம்’ என்ற சொல்லும் ‘ஆகம’த்திற்கான ஒரு அர்த்தமாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு வேறுபல அர்த்தங்கள் உள்ளன. ’தந்திரம்’ என்பது ஒரு சிந்தனை அமைப்பு, பயிற்சி முறைகளின் தொகுப்பு மற்றும் நூல்களின் தொகுப்பு ஆகியவற்றை சுட்டுகிறது. இதன் மூலச்சொல் நூலிழைகளை விரிக்கும் அல்லது நீட்டும் தறியை குறிக்கிறது (’தந்’ என்பது தறிக்கான வடமொழி மூலச்சொல்). இவ்வாறு நீட்டப்பட்ட அல்லது விரிவாக்கப்பட்டவற்றில் இருந்து வரும் வடிவமைப்பை ’தந்திரம்’ என்ற சொல் குறிக்கிறது. சிலசமயம் இச்சொல் கூர்ந்த கவனத்துடன் கூடிய ’விளக்கம்’ என்றும் பொருள்படும். ஆகவே குறிப்பிட்டவொரு விஷயத்தை அல்லது பேசுபொருளை விளக்கவும் விரிக்கவும் செய்யும் நூல்களும் தந்திரம் என அழைக்கப்படுகின்றன. உதாரணமாக ஷஷ்டி-தந்திரம், பஞ்சதந்திரம் போன்றவை. இதைத்தொடர்ந்து, பயிற்சி முறைகள் மற்றும் அதுசார்ந்த நுட்பங்கள் திறன்களை குறிப்பிடும் மத-சடங்கு நூல்களை குறிப்பதாகவும் ‘தந்திரம்’ என்ற சொல் ஆகியது.
இதற்கு காத்யாயனர் (பொ.மு 3ஆம் நூற்றாண்டு) தரும் விளக்கம் சுவாரஸ்யமானது: ’தந்திரம் என்பது பல்வேறு செயல்களின் இணைநிகழ்வு’ என்கிறார். இது செயல்களின் அமைப்பு என்றும் சொல்லப்படுகிறது. உதாரணமாக, ஆயுர்வேதம் நம் உடலையே தந்திரம் என கூறுகிறது. ஏனென்றால் நம்முடைய உடல் பல்வேறு உறுப்புக்களின் கூட்டு மட்டும் அல்ல. தாதுக்கள், தோஷங்கள், மலங்களையும் கொண்ட விசைகளின் அமைப்பாகும். மீமாம்ஸம் குறிப்பிட்ட தேவைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் தகுந்த சடங்குகளை தந்திரம் என வரையறுக்கிறது. ஒர் சிந்தனை முறை (தரிசனம்) என்பதும் பல்வேறுபட்ட கருத்துக்கள், கோட்பாட்டு அனுமானங்கள் மற்றும் அவற்றின் பயிற்சிமுறை ஆகியவற்றை கொண்டவொரு ஒத்திசைவமைப்பாகும்.
’தந்திர’த்திற்கு இரண்டு மூலச்சொற்கள் உள்ளன. ‘தந்’ மற்றும் ‘தரா’. தந் என்றால் பல்கிபெருகுதல் அல்லது பல்வகைப்படுத்துதல் என்றும், தரா என்றால் ‘எது காக்கிறதோ அது’ என்றும் பொருள். மந்திரங்களையும் யந்திரங்களையும் தந்திரம் பயன்படுத்திக்கொள்கிறது. இவற்றைகொண்டு ஒருவர் ஊழ்கம் செய்யும்போது அவரின் திறன் மற்றும் அவருடைய ஆசிரியர் அவருக்களித்த ஞானத்திற்கு ஏற்றவாறு ஆழமான அகத்தரிசங்கள் தூண்டப்படுகின்றன. மேலும் அவை அவருடைய அகசிக்கல்களை தீர்த்துக்கொள்வதற்கும், அவருடைய இலக்கை அடைவதற்கும் உதவுகின்றன. வேதத்திற்கு உரையும் விளக்கமும் எழுதிய ஸாபரர் (பொ.யு. முதல் நூற்றாண்டு) ’தந்திர’த்திற்கு அமைத்த வரையறையும் முக்கியமானது: ’மாணவர்களின் மனதில் ஏற்றப்படும் தீபம் போல, எந்த ஒன்றை ஒருமுறை செய்யும்போது பல நோக்கங்களை நிறைவுசெய்கிறதோ அதுவே தந்திரம்’.
தந்திரம் வாழ்க்கைக்கான இருவித அணுகுமுறையை கொண்டது என்கிறது புகழ்பெற்ற அகராதியான சப்தஸ்தோம மாஹநிதி: மனிதனின் உள்ளார்ந்த விசைகளை சீரமைப்பதன்மூலம் ‘அது இவ்வாழ்விற்கான இன்பத்தையும், மறுமைக்கான விடுதலையையும் அளிக்கிறது’. இது தனிமனிதனுடைய உடல் அமைப்பு, மனதின் செயல்பாடுகள், பிரக்ஞையின் நிலைகள், புலன் தூண்டல்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதால் அவருடைய நடைமுறை திறனை செம்மைப்படுத்துவதோடு ஆன்மீக திறனையும் மேம்படுகிறது.
தந்திரத்திற்கான மற்றொரு முக்கிய விளக்கத்தை நியாய-பாஷ்யம் அளிக்கிறது: ‘ஒரு பேசுபொருளின் பல்வேறு அம்சங்கள் எவ்வாறு ஒத்திசைந்து ஒருங்கிணைக்கின்றன என்பதை பயிற்றுவிக்கும் முறையே தந்திரம்’. இது ஒருங்கினைக்கும் அம்சம். மேலும் இது வெவ்வேறு பகுதிகள் மற்றும் நிகழ்வுகளுக்கு அடியிலுள்ள பொதுவான மற்றும் சாராம்சமான கூறுகளின் மீது கவனம் செலுத்துவது. ஒரு நூலிலுள்ள வெவ்வேறு பகுதிகள் அல்லது ஒரு சடங்கிலுள்ள வெவ்வேறு நிகழ்வுகள் எவ்வாறு அடுக்கப்பட்டு ஒன்றமைக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறது. ஆகவே தந்திரம் என்பது முதன்மையாக ஒரு முறைமைபடுத்தும் கருவியாகும். விஷ்ணு சம்ஹிதையில் உள்ள வரையறை: ‘எது தந்திரத்தை தந்திரமாக ஆக்கும் அம்சம் என்னவென்றால் ஒரு சடங்கின் சிந்தனை முறையில் உள்ள அர்த்தங்களையும் முக்கிய அம்சங்களையும் விரித்து விளக்குவது ஆகும்’. அந்த அர்த்தங்கள் சடங்கின் ஒவ்வொரு பகுதிக்கும் அதன் நிகழ்வுகளுக்கும் மட்டுமானதாக இல்லாமல், முழுமையாக அந்த சடங்கிற்கானதாக இருக்கும். இத்தகைய அர்த்தங்களை விரித்துரைப்பதற்கான முறையானது ஒன்றைபிறவற்றுடன் தொடர்புபடுத்துவது, சமரசப்படுத்துவது, இணைப்பது ஆகியவற்றில் ஒன்றாக நிச்சயம் இருக்க வேண்டும்.
ஆகமம் என்பது மரபையும், தந்திரம் என்பது செயல் முறையையும் குறிப்பவை. எனினும் இவை இரண்டும் ஒரே கருத்தியலை பகிர்ந்துகொண்டவை. ஆகமம் என்ற சொல் அதிகமாக சைவம் மற்றும் வைணவத்தில் குறிப்பிடப்படுகிறது. சாக்தம் தாந்திரீகம் என குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் ஆகம நூல்கள் அனைத்துடைய முதல் பகுதியும் ‘தந்த்ராவதாரா’ என்றே அழைக்கப்படுகின்றன. இதற்கு ’தந்திரத்தின் வழிவந்தது’ என்று பொருள். பல நூல்களில் இந்த இரண்டு சொற்களும் அவற்றின் பொருளை மற்றொன்றுக்கு மாற்றி பயன்படுத்துகின்றன. ஆலயத்தின் தலைமை பூசகர் ஆகமி என்றோ அல்லது தந்திரி என்றோ அறியப்படுகிறார். ஆனால் இந்த இரண்டு பெயர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது.
ஆகம நூல்களும் தந்திரமும் ஒரே பேசுபொருளையே கையாள்கின்றன, ஒரே கோட்பாட்டையே சார்ந்துள்ளன. ஆனால் ஆகமவிதிகள் பரந்துபட்ட அளவிலானது. அது தத்துவார்த்த, விவாததிற்குரிய மற்றும் ஊகத்திற்குள்ளாக்கக்கூடிய விஷயங்களையும் கொண்டுள்ளது.
உதாரணமாக புருஷோத்தம சம்ஹிதை ஆகமத்தை இவ்வாறு வரையறுக்கிறது: ’ஆகமம் என்பது வழிகாட்டுநெறிகள், உயர்நிலை இருப்பைப் அடைதல், தெய்வத்தின் மகத்துவம் ஆகியவற்றை பேசுவது’. இந்த வரையறையின் படி, மூன்று பதங்கள் சேர்ந்து ஆகமம் என்னும் சொல்லை தோற்றுவிக்கின்றன. முதல் பதம் ‘ஆ’ வழிகாட்டுநெறியை (ஆசாரம்) குறிப்பது. இரண்டாவது பதம் ‘க’ அடையவிருக்கும் நிலைகளையும் (கதி), மூன்றாவது பதமான ‘ம’ மகத்துவத்தையும் (மஹாத்மியம்) குறிக்கின்றன. இந்த மூன்று அம்சங்களும் பரந்துபட்ட பேசுபொருட்களை உள்ளடக்கியுள்ளன.
ஆகமம் ஏழு பகுதிகளை கொண்டது என சொல்லப்படுகிறது. படைத்தல் (சிருஷ்டி), அழித்தல் (பிரளயம்), தெய்வ வழிபாடு (தேவதாரச்சனை), ஆன்மீக பயிற்சிகள் (சாதனா), மந்திர உச்சாடனம் (புரஸ்கரனம்), ஆறு பயிற்சிகள் (ஷட்கர்ம-சாதனா), தியான முறைகள் (தியானம்-யோகம்). தந்திரம் பயிற்சி அம்சங்களிலும் செயல்முறை சிக்கல்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இந்த பொருளில்தான் தந்திர-யுக்தி என்னும் சொல்லாட்சியை கௌடில்யரும் (அர்த்தசாஸ்திரம், அதிகாரம் 15), சரகரும் (சரக சம்ஹிதை, சித்திஸ்தானா 12, 40-45), சுஸ்ரிதரும் (சுஸ்ரித சம்ஹிதை, உத்தர-தந்திரம், 65) பயன்படுத்துகின்றனர். இதற்கு ஒரு அமைப்பு அல்லது முறைமையை வெளிப்படுத்தி விளக்குவதற்கான விதிகள் என்று பொருள்.
தந்திரம் அதன் இயல்பிலேயே இரு அடுக்கை கொண்டதாக ஆகம நூல்கள் குறிப்பிடுகின்றன: ஆகமம் மற்றும் நிகமம் (ஆகமம் நிகமம் சைவ தந்த்ர ஶாஸ்த்ரம் த்வைத மடம்). நிகமம் வேதங்களையும், ஆகமம் பெரும்பாலும் தந்திரத்தையும் (செயல்முறை) சுட்டுகிறது. வேதம் தந்திரத்துடன் சேர்க்கப்படுவது மிகவும் புதிரானதே. ஏனென்றால் அவை இரண்டும் ஒன்று மற்றொன்றுடன் இணையாதது மட்டுமல்ல, ஒன்றை மற்றொன்று நிராகரிப்பவையும் கூட.
குல்லூகபட்டரின் விஷ்ணுபுராண விரிவுரை (பாண்டுரங் வாமன் காணே என்பவர் இந்த நூல் பொ.யு.1150-பொ.யு.1300-க்குள் எழுதப்பட்டிருக்கலாமென குறிப்பிடுகிறார்) வேதமும் தந்திரமும் இந்திய சிந்தனை மரபின் இரு மைய ஓட்டங்கள் என குறிப்பிடுகிறது. ஆகம-தந்திர மரபு வேதமரபு போலவே முக்கியத்துவம் கொண்டது. இந்த இரண்டு மரபுகளும் சிலவற்றில் வேறுபட்ட பார்வைகள் கொண்டவை. உதாரணமாக இறை, இறைக்கும் மனிதனுக்குமான உறவு, வீடுபேறுக்கான பாதை, வழிபாட்டு முறைகள் போன்றவை. வேத கருத்தின் படி இறை எங்கும் நிறைந்திருப்பது, அனைத்தையும் அறிந்தது, வடிவமற்றது, இயற்கை நிகழ்வுகளிலும் விசைகளிலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்வது. ஆகமம் இறையை காணக்கூடிய வடிவமும் குண அம்சங்களும் உடைய ஒரு தனிப்பட்ட தெய்வமாக காட்டுகிறது.
வேதமரபு நெருப்பையும் வேள்வியையும் முன்வைக்கிறது. ஆகமம் சடங்குகள் (தந்திரம்) மற்றும் மந்திரங்கள் உடன் தெய்வ உருவங்களை வழிபடுதலையே விடுதலைக்கான ராஜபாதையாக காட்டுகிறது. ஆகமம் தெய்வத்தின் மீதான பக்தி அல்லது வழிபாட்டை விடுதலைக்கு மிகமுக்கியமானது என முன்னிறுத்துகிறது. விடுதலைக்கான பாதையில் ஞானம் இறுதி படியாகவே உள்ளது. இது இருமைவாத அணுகுமுறை கொண்டது. அதாவது, மனிதன் கடவுளை அடைய முயற்சிக்கிறான், கடவுளே உயர்ந்தது, அதன் அருள் மட்டுமே மனிதர்களை உலகியல் துக்கங்களிலிருந்து காக்க முடியும்.
இந்த பக்தி அம்சம்தான் ஆலய மரபையும் வழிபாட்டு மரபையும் எழுச்சியுறச் செய்தது. சடங்கு செயல்பாடு (கர்மம்) மற்றும் விடுதலைகான ஞானம் ஆகிய அணுகுமுறைகள் ஆழ்ந்த பக்திக்கு கீழ்நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. ஆகம நூல்கள் ஞானத்தை புகழ்ந்தே கூறுகின்றன மற்றும் சடங்குகளை பரிந்துரைக்கின்றன என்றாலும், பக்தி இல்லாமல் அவை பயனற்றது மற்றும் பொருத்தமற்றது என்றும் கூறுகிறது. ஆகமத்தை பொருத்தவரை பக்தி என்பது வழிபாட்டில் தீவிரமாக ஈடுபடுவது மற்றும் அதை தொடந்த செயல்பாடுகள் அடங்கியது.
நிகமமரபு (வேதமரபு) தெய்வங்களை பற்றிய அறிவுக்கு அதிக கவனம் செலுத்துகிறது. எனினும் அந்த அறிதல்கள் முறைப்படுத்தவில்லை. அறிதல் உள்ளது ஆனால் முறையான வடிவத்தில் இல்லை. ரிக்வேத பாடல்கள் அதன் இயல்பிலேயே உயர்கவித்துவமானது, இனிமையானது. சற்றேறக்குறைய விவரணைகளையும் கொண்டது. யஜுர்வேதமும் சாமவேதமும் அதன் அமைப்பிலேயே சடங்கு தன்மை அதிகம் கொண்டவை. வேள்வி மற்றும் பலவகை சடங்குகளுக்கான பரிந்துரைகள் கொண்டவை, இவை அனைத்தும் உலகியல் பயன்களுக்கானவை. வேதத்தின் அணுகுமுறை என்பது தெய்வங்களை மக்கள் திரளாக அணுகுவது. ஒரு நிகழ்வை வேதம் ஓதக்கூடியவர்கள் மற்றும் நிபுணர்கள் பலர் சேர்ந்து நிகழ்த்துகின்றனர். வேள்வி எப்போதும் ஒரு பொது இடத்தில் பெரிய மக்கள் திரள் பார்க்குமாறே நிகழ்த்தப்படுகிறது.
இதற்கு மாறாக, தாந்திரீக மரபு அதன் இயல்பிலேயே தனிமனிதனுக்கானது. பொதுவெளியில் நிகழ்த்தப்படும் சடங்குகளுக்கு மாறாக, இது யோக நூல்கள் கூறுவதன்படி அமைதியான தியானம் மற்றும் தனிமனித ஒழுக்கத்தை பரிந்துரைக்கிறது. தாந்திரீக சடங்குகள் இல்லறத்தில் இருப்பவரால் தனிமையில் ரகசியமாக ஆற்றப்படுகின்றன. ஆகமங்களும் நிகமங்களும் ஒன்றுடன் மற்றொன்று கலந்ததையே ஆலயமரபின் வளர்ச்சி காட்டுகிறது. ஆலயம் என்பது வழிபாட்டுக்கான பொது இடம். அங்கு பல வழிபாட்டு நிகழ்வுகள் பக்தர்கள் பலரின் முன்னிலையிலும் மக்களின் முன்னிலையிலும் நிகழ்கிறது. எனினும் பல முக்கியமான சடங்குகள் மூடிய கதவுக்கு பின்னாலேயே எப்போதும் நிகழ்த்தப்படுகிறது.
பிராமணங்கள் உலகியல் நன்மைக்காக இயற்கை ஆற்றல்களை தெய்வத்தன்மை ஏற்றி வருணன், இந்திரன், சூரியன் போன்ற தெய்வங்களாக்கி சடங்குரீதியாக வழிபடுவதை முன்வைக்கிறது. வரலாற்றின் போக்கில் இது நெகிழ்ந்து ஆரண்யகங்கள் என்னும் சிந்தனைகளுக்கு (கருத்தியலுக்கு) இடமளிப்பதாக ஆகிறது. பண்டைய ரிஷிகள் மரபார்ந்த சடங்கு நெறிகளை பற்றி சிந்திக்கத் தொடங்கினர். மந்திரங்களை தத்துவ மற்றும் ஆன்மீக ரீதியாக விளக்கினர். வேத மரபில் சொல்லப்பட்டுள்ள வேள்விகள் அனைத்திற்கும் குறியீட்டு அர்த்தம் உள்ளது என்றும், வேள்விப்பாடல்கள் புறவயமான ஆற்றலை குறிப்பிடவில்லை, மனிதர்களுக்கு உள்ளிருக்கும் அக ஆற்றலையே குறிப்பிடுகின்றன என்றும் எடுத்துக்கொண்டனர். இதன்பிறகு, பிரபஞ்சத்தின் இயல்புகள் மனிதர்களிலும் உயிர்களிலும் பிரதிபலிக்கும் என்ற கருத்து வளர்ச்சியடைந்தது. உபநிஷதங்களில் இந்த சிந்தனை உச்சத்தை அடைந்தது. இதில் தன்னறிதல் (ஆத்மஞானம்) என்ற ஞானமே முழுமையாக முன்வைக்கப்பட்டது. இதுவே மானுட தேடலின் உச்சம் என்றும் அறுதி என்றும் முன்வைத்தது. இதில் தனிப்பட்ட கடவுள் அல்லது பிரபஞ்ச கடவுள் மீதான பக்திக்கு எந்த இடமும் இல்லை. (இது வேதத்தின் இறுதியாக வருவதால் வேதாந்தம் என அழைக்கப்படுகிறது).
தீட்சை பெற்றவர்கள் மட்டுமே இலக்கை அடைய முடியும் என்ற கருத்து நிலவும் இடத்தில் வேதாந்தத்தின் அணுகுமுறைக்கு இடமில்லை. வேதாந்தத்தில் குரு வழிகாட்டுபவர் மட்டுமே. ஆனால் தந்திர மரபில் குருவிற்கு மிக முக்கியமான இடம் உள்ளது. அவர் வழிகாட்டுபவர் மட்டுமல்ல, புதியவர்களுக்கு தீட்சை அளித்து தொடங்கி வைப்பவரும் கூட. தீட்சை என்பது மிகவும் விரிவான அவசியமான குறியீட்டு செயலாகும். வேதமரபிலும் தீட்சை அம்சத்தை காணமுடியும். ஆனால் வேதமரபில் இது ஒருவர் வேள்வி நிகழ்த்தவதற்கான தகுதியை பெறுவதற்கு செய்யப்படும் ஒரு ஆரம்ப சடங்கு மட்டுமே. இதில் தந்திர மரபில் இருப்பது போல எந்த ஆழமான குறியீடும் கிடையாது. தந்திர மரபில் குரு அல்லது ஆச்சாரியர் தன் மாணவனுக்கு தீட்சை அளித்து, மாணவரின் ஆன்மீக வளர்ச்சியில் மிகமுக்கியமானவராக திகழ்கிறார். ஆகவே இங்கு கடவுள் மீதான பக்தி ஆசிரியர் மீதான பக்தியால் நிரப்பப்படுகிறது. இதில் பக்தி என்ற கருத்து தெய்வ-பக்தி மற்றும் குரு-பக்தி ஆகிய இரண்டையும் கொண்டது. மேலும் குருவே பக்தனை இறைவனிடம் அழைத்துச்செல்வதால் குருபக்தியே இறைபக்தியை விட முக்கியமானதாக உடனடியாக செலுத்தப்பட வேண்டியதாக உள்ளது.
ஆகம மற்றும் நிகம மரபுகள் இத்தகைய வேறுபட்ட அணுகுமுறைகளை கொண்டிருந்தாலும் காலப்போக்கில் ஒன்று மற்றொன்றிடம் இருந்து பெற்றுக்கொண்டும் உள்ளன. தந்திரமரபு வேதமரபிலிருந்து பலவற்றை எடுத்துக்கொண்டது. வேதமரபில் சூரிய கடவுளை பாடும் காயத்ரி மந்திரத்தை (ரிக்வேதம்) அன்னைதெய்வ வழிபாட்டு மரபின் தேவைக்காக எடுத்துக்கொண்டது. காயத்ரியில் இருந்து பின்வரும் வடிவத்தை உருவாக்கிக்கொண்டது “திரிபுரயைவித்மஹே, பைரவ்யை தீமஹி தன் நோ தேவி பிரசோதயாத்”. ஆசி வழங்குவதற்கான ரிக் வேத பாடல் 1.89.6-ஐ சக்தி வழிபாட்டு மரபு எடுத்துக்கொண்டது. வேதமரபின் பொழுதிணைவு (சந்தியா) சடங்குக்கு இணையாக அதேபோல சடங்கு மற்றும் மந்திரங்களுடன் தாந்ரீக-சந்தியாவை தந்திரமரபு அமைத்துகொண்டது. தந்திரமரபின் கௌலா சடங்குகளுக்கு ஆதரவான வேத பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
வேதமரபினர் பின்பற்றும் சம்ஸ்காரங்களுக்கு (நெறிமுறைகள்) இணையாக தாந்ரீக மரபினருக்கான சம்ஸ்காரங்களும் இருந்துள்ளன. நெருப்பை முன்னிறுத்தி செய்யப்படும் யாகங்கள் தாந்திரீகமரபில் இணைக்கப்பட்டன. ஜெயக்ய சம்ஹிதை கூறும் அந்திம சடங்கும் (ஆந்த்யேஷி), வாதுல தந்திரம் கூறும் பரிகார சடங்கும் (பிராயசித்தம்) வேதமரபை ஒட்டி அமைந்துள்ளன. சில தந்திரமரபுகள் தங்களை வேதங்களில் இருந்து தோன்றியவை என சொல்கின்றன. தந்திரத்தில் இருந்தே வேதங்கள் வந்துள்ளன என நாராயணிய-தந்திரம் சொல்கிறது: ருத்ர-யாமலத்தில் இருந்து ரிக்வேதமும், விஷ்ணு-யாமலத்தில் இருந்து யஜுர்வேதமும், பிரம்ம-யாமலத்தில் இருந்து சாமவேதமும், சக்தி-யாமலத்தில் இருந்து அதர்வவேதமும் வந்தன என்கிறது.
வேதமரபின் ஆரம்ப காலத்தில் வேள்வி வடிவில் நிகழ்த்தப்பட்ட அக்னி வழிபாடு மிக விரிவானதாக இருந்தது மட்டுமல்ல பொருளியல் செலவுமிக்கதாகவும் இருந்தது. உயர்குடிக்கு மட்டுமானதாக இருந்தது. ஸ்ம்ருதிகளின் காலகட்டத்தை அடையும்போது வேத வேள்விகள் மெல்லமெல்ல இந்த வழக்கத்திலிருந்து வெளியேறியது. மேலும் இதற்கு மாற்றாக நாகர், விருட்க்ஷம், யக்ஷர் உருவங்களின் வழிபாடுகள் பெருமளவில் நிகழ்த்தப்பட்டன. இத்தகைய வழிபாடுகள் மற்றும் மனிதன் உருவாக்கிய குறியீடு-உருவ வடிவங்களை தெய்வமாக வழிபடுதல் ஆகியவை இல்வாழ்வில் இருப்பவர்களுக்கு கட்டாயம் என மனு, யாக்ஞவல்கிய, மரீசி போன்ற ஸ்ம்ருதிகள் கூறுகின்றன. இயல்பிலேயே இந்த வழிபாட்டுமுறைகள் எளிமையானதாக இருந்தது மட்டுமல்லாமல், நம்பிக்கை (ஸ்ரத்தா) மற்றும் பக்தி ஆகியவற்றையே முக்கியமானதாக கருதியதால் இதன் செயல்முறை பொருளியல் செலவு அற்றதாக இருந்தது.
வழிபாடு எந்த குலத்தை சேர்ந்தவராலும் எந்த வயதுடையவராலும் நிகழ்த்தப்படலாம். ஸ்ம்ருதிகள் பரிந்துரைக்கும் மந்திரங்கள் பெரும்பாலும் புராணங்களிலிருந்து பெறப்பட்டவை (அந்த மந்திரங்கள் வேதமந்திரங்களைவிட பரவலாக இருந்தன). இந்த வழிபாட்டில் சில வேத பாடல்களும் இடம் பெற்றிருந்தன. வேத வேள்வியில் இருந்த கண்டிப்பான விதிமுறையும் விரிவான தன்மையும் இதில் தளர்த்தப்பட்டன. துவக்ககாலத்தில் பூசகர்கள் வேத பின்னணி கொண்டவர்களாக இருந்தனர். பிற்காலத்தில் பூசகர்கள் சடங்கு-நிபுணத்தன்மை கொண்ட வேதமரபுக்கு வெளியே தங்களுக்கென்று ஒரு வகுப்பை அமைத்துக்கொண்டனர்.
ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ள தெய்வவழிபாடுகளே (அனைவருக்கும் பொதுவான தெய்வங்கள் மற்றும் குடும்ப வழிபாட்டிற்கான தனி தெய்வங்கள்) ஆகம நூல்கள் எழுந்ததற்கான உடனடி காரணமாக சொல்லப்படுகிறது. இப்போது வழிபாட்டுடன் தெய்வங்களுக்கு பலவிதமான சேவைகளை (உபசாரங்கள்) இணைத்ததன் மூலமாக வழிபாடு மேலும் ஈர்ப்புடையதாக ஆகியது. மேலும் இசை, நடனம், நாட்டியம் மற்றும் பிற கலைகளை தெய்வத்தின் முன் நிகழ்த்தி பல வண்ணங்கள் கொண்டதாக வழிபாடு ஆகியது.
ஆகமங்களை வளர்த்தவர்கள் அது கேள்விகளற்ற ஏற்ப்பையும் முக்கியத்தையும் அடைவதற்காக தங்களை மிகத்தொன்மை வாய்ந்த வேதமரபுடன் இணைத்துக்கொள்ள விரும்பினர். மேலும் நிகமத்தில் இருந்து இது வந்தது என்று அவர்கள் கூறுவதற்கான ஆதாரத்தையும் தேட முயன்றனர். காலம் செல்லச்செல்ல வேத கட்டமைப்புக்குள் ஒரு துணை மரபாக ஆகமம் கருதப்பட துவங்கியது.
உதாரணமாக, ஆலய வழிபாட்டில் அபிஷேகம் போன்ற சில சடங்குகள் நிகழ்த்தப்படும் போது மரபார்ந்தமுறையில் வேத மந்திரங்கள் ஓதப்படுகின்றன. ஏற்கனவே சொல்லியது போல ஆகமம் ஒரு இல்லத்தில் குடும்பத்திற்காக நிகழ்த்தப்படும் தனிவழிபாட்டிற்கு இடமளிப்பது போல ஆலயங்களில் நிகழ்த்தப்படும் கூட்டுவழிபாட்டிற்கும் இடமளிக்கிறது. எனினும் ஆலயத்தில் வழிபாட்டிற்காக ஒன்றிணையும் மக்கள் பெரும்பாலும் பார்வையாளர்களாகவே பங்கெடுக்கின்றனர், ஆலய பூஜைகள் பூசகர்களாலேயே நிகழ்த்தப்படுகிறது. சில சடங்குகளில் மட்டும் மக்கள் பங்கெடுக்க முடியும் என்றாலும் பிற நிகழ்வுகளை அதற்கான பூசகர்கள் மட்டுமே நிகழ்த்துவதற்கான உரிமையை கொண்டுள்ளனர்.
ஒரு பழமையான கூற்று இவ்வாறு சொல்லப்படுவதுண்டு - மதம் மற்றும் உலகியல் நடவடிக்கைகள் முதல் யுகமான கிருதயுகத்தில் வேதத்தின்படி, இரண்டாவதான திரேதாயுகத்தில் ஸ்ம்ருதிகளின்படி, மூன்றாவதான துவாபரயுகத்தில் புராணங்களின்படி, தற்போதைய கலியுகத்தில் ஆகமங்களின்படி நடத்தப்பட வேண்டும் என. காலம் மாறும் போது எது அந்த காலகட்டத்திற்கு முன்வைக்கப்பட்டது என்பதை இந்த சொலவடை காட்டுகிறது. வேதங்கள் மிகத்தொன்மையான காலத்தை குறிப்பவை, ஸ்மிருதிகள் மத்திய காலத்தையும், புராணங்கள் நமக்கு சற்றி பிந்தைய காலத்தையும், ஆகமங்கள் சமகாலத்தையும் குறிக்கின்றன. இவை காட்டுவது என்னவென்றால், ஆகமங்கள் புராணங்களின் நேரடி பின்னணியையும், தூரத்தில் ஸ்மிருதிகளின் பின்னணியும், தொலைதூரத்தில் வேத அடிப்படையையும் கொண்டவை.
கிருதயுகத்தில் (தூய அறத்தின் காலம்) ஆலயங்கள் இருக்கவில்லை, நேராகவே தெய்வங்கள் மக்களின்முன் தோன்றி அவர்களுக்கு உதவின என புராணங்கள் கூறுகின்றன. இரண்டாவது யுகமான திரேதாயுகத்தில் அறம் அதன் தரத்திலும் இயல்பிலும் குறைவுபட்டது. இந்த யுகத்தில் தெய்வங்கள் அவற்றின் இயல்பான வடிவிலும் (உயர் அறத்தை உடையவர்களுக்கு), குறியீட்டு-உருவ வடிவிலும் (பிறருக்கு) தோன்றின. இப்பொழுதும் ஆலயங்கள் கட்டப்படவில்லை. பக்தியுள்ள மக்கள் தங்களின் இல்லங்களில் தெய்வங்களின் உருவ வடிவங்களை (கிருஹ-பிரதிஷ்டா) நிறுவி வழிபட்டனர். மூன்றாவதான துவாபரயுகத்தில் அறமும் அறமின்மையும் ஒன்றுக்கொன்று இணையான தீவிரத்துடன் போட்டியிட்டன. ரிஷிகள் அறம் மற்றும் ஆற்றல்மிக்க மக்களுக்காக கானகங்களில் தெய்வங்களின் குறியீட்டு-உருவ வடிவங்களை நிறுவி (ஆரண்யேஷு ரிஷிபிஹ்) அதன்மேல் ஆலயங்களை அமைத்தனர். மக்கள் அத்தகைய புனிதத்தலங்களுக்குச் செல்வதிலுள்ள சிரமத்தை எதிர்கொள்ளத் தயாரானார்கள். இறுதியாக அறமின்மை அறத்தின்மேல் ஆதிக்கம் செய்யும் கலியுகம் பிறந்தது. இந்த சீர்குலைந்த காலகட்டத்தில் குறியீட்டு-உருவ வடிவில் அமைந்த தெய்வ இருப்பு மட்டுமே நன்மையை வழங்கும் என்பதால் எல்லா மக்களும் வழிபடுவதற்கு ஆலயங்களுக்கான அவசியம் கிராமங்களிலும் நகரங்களிலும் வெகுவாக பெருகுகியது. வரலாற்று சான்றுகளின் படி பார்த்தால், இல்லங்களில் தெய்வத்தின் குறியீட்டு-உருவ வடிவங்களை வைத்து வழிபட்டது பொது யுகத்திற்கு முன்னர் எழுதப்பட்ட நூல்களில் பதிவாகியுள்ளது (உதாரணமாக, பாணிணியின் அஷ்டாத்யாயி மற்றும் பதஞ்சலியின் மஹாபாஷ்யம்). (ஆகமமுறையிலான) ஆலயமரபின் காலம் பொ.யு. மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டுக்கு முன்னர் செல்லாது.
ஆலயமரபு வளர்ச்சியுற தொடங்கிய பிறகு முதன்முதலில் உருவான தொழில்முறை பூசகர்கள் என சொல்லப்படும் வைகானஸர்கள் தங்களை வேதமரபுடன் நெருக்கமாக்கிக் கொண்டனர். அதேசமயம் ஆலயவழிபாட்டையும் இணைத்துக்கொண்டனர். ஆகவேதான் வைகானசம் வைதீகாகமம் என்றும், சிரௌதாகமம் என்றும் அழைக்கப்படுகிறது. இது எதை காட்டுகிறதென்றால், பூசகர்களின் ஒரு பகுதியினர் வேதமரபு தங்கள் மரபுக்கு நெடுதொலைவில் இருந்தாலும் வேத பின்புலத்துடனும் ஸ்ம்ருதிகளின் தொகுப்புடனும் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருந்தனர் என்பதை காட்டுகிறது.
ஜமதக்னிஸ்ம்ருதி கடவுளை வேத சடங்குமுறையுடன் வணங்க வேண்டும் என்றும், வேதமந்திரங்கள் கிடைக்காத போது பஞ்சராத்ர ஆகமத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ள ஆலய வழிபாட்டு முறைமையை பின்பற்றலாம் என்றும் கூறுகிறது. மாறிவரும் காலத்திற்கு ஏற்றவாறான சலுகை இது என்பது வெளிப்படையாக தெரிகிறது. மேலும் இது வேதமந்திரங்கள் கிடைக்காமல் போவது அதிகரிக்கிறது என்ற நிலைமையையும் காட்டுகிறது. ஏனென்றால் வேதமரபு ஏற்கனவே தன்னுடைய இடத்தை ஆகமமரபுக்கு கொடுத்துவிட்டது. வேத அங்கீகாரத்தை முன்வைக்கும் ஸ்மிருதி ஆகமங்களின் மதிப்பையும் அதன் தேவையையும் ஏற்றுக்கொண்டது. இவை பஞ்சராத்ரம் மற்றும் சைவ ஆகமங்கள் வேத பாடல்களை சில வழிபாடுகளில் பயன்படுத்தினாலும் அவை இயல்பில் தாந்ரீகமரபையே அதிகம் சார்ந்தவை என்பதை காட்டுகிறது.
எஸ்.கே. ராமச்சந்திர ராவ்
தமிழில் - கோ. வீரராகவன், தாமரைக்கண்ணன் அவிநாசி
************************************
குறிப்பு: இந்த கட்டுரை எஸ்.கே. ராமச்சந்திர ராவ் அவர்கள் எழுதிய 12 தொகுதி நூலான ‘The Agama Encyclopedia'-வின் முதல் நூலில் உள்ள அறிமுக பகுதியின் மொழிபெயர்ப்பு
எஸ்.கே. ராமச்சந்திர ராவ் |
கோ. வீரராகவன் இலக்கியம் மற்றும் தத்துவத்தை பயின்று வருகிறார். தற்போது சென்னையில் வசிக்கிரார். எழுத்தாளர் ஜெயமோகனை தன் ஆசிரியராக கருதுகிறார்