பகுதி 1: தொன்மங்களின் ஆற்றல் - 1: ஜோசப் கேம்ப்பெல்
மோயர்ஸ்: ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தை என் இளைய மகன் பன்னிரண்டாவது அல்லது பதிமூன்றாவது முறையாக பார்த்தபோது நான் அவனிடம் "ஏன் இத்தனை முறை இப்படத்தைப் பார்க்கிறாய்?" என்று கேட்டேன். உடனே அவன் "நீங்கள் ஏன் பைபிளின் பழைய ஏற்பாட்டை வாழ்க்கை முழுவதும் வாசிக்கிறீர்களோ அதே காரணத்திற்காகத்தான்" என்று பதிலளித்தான். அவன் புராணத்தின் ஒரு புதிய உலகில் இருந்தான்.
கேம்ப்பெல்: ஸ்டார் வார்ஸ் திரைப்படத்திற்கு ஒரு ஏற்கத்தக்க புராணப்பார்வை நிச்சயம் உண்டு. அப்படம் அரசை ஒரு இயந்திரமாகக் காட்டி "இயந்திரம் மானுடத்தை நசுக்கப்போகிறதா அல்லது மானுடத்திற்கு சேவையளிக்கப்போகிறதா" என்று கேட்கிறது. மனிதம் இதயத்திலிருந்து தோன்றுகிறது, இயந்திரத்திலிருந்து அல்ல. ஸ்டார் வார்ஸ் படத்தில் நான் கண்ட அதே பிரச்சினையை ஜெர்மன் நாட்டுபுறக்கதை ஒன்றில் வரும் ஃபாஸ்ட் (Faust) எனும் கதாபாத்திரமும் காட்டுகிறது. அக்கதையில் வரும் மெபிஸ்டோபிளீஸ் (Mephistopheles - சாத்தானை போன்ற ஒன்று) நமக்கு தேவையானதை அளிக்கிறது, ஆனால் நமது வாழ்க்கையின் இலக்கை தீர்மானித்துவிடுகிறது. எனினும் ஃபாஸ்ட் எதிர்பார்ப்பது ஒரு இயந்திரத்தின் பார்வையிலான இலட்சியத்தை அல்ல. ஃபாஸ்ட்டின் இந்த குணமே அவரை ரட்சிக்கப்பட தகுதிகொண்டவராக ஆக்குகிறது. இப்போது ஸ்டார் வார்ஸ் படத்தின் ஒரு கதாபாத்திரமான லியூக் ஸ்கைவாக்கர் (Luke Skywalker) தன் தந்தையின் முகமூடியை கழற்றுவதன் மூலமாக தன் தந்தை இதுவரை வகித்து வந்த இயந்திரத்தின் பாத்திரத்தை அகற்றுகிறார். அவர் தந்தை ஒரு அடையாளமாக இருந்தார். அதுதான் அதிகாரம், அரசுடையது.
மோயர்ஸ்: உலகம் நம்முடைய கனவிற்கேற்ப உருவாக்கப்பட வேண்டும் எனும் நமது எண்ணத்தை பூர்த்தி செய்வதற்கு இயந்திரங்கள் நமக்கு உதவுகின்றன. உலகம் எப்படி இருக்கவேண்டும் என நாம் சிந்திக்கிறோமோ அப்படி இருக்கவேண்டும் என விரும்புகிறோம்.
கேம்ப்பெல்: ஆம். ஆனால் அதன் பிறகு இயந்திரங்கள் நமக்கு ஆணையிடத் தொடங்கும் காலம் வரும். உதாரணத்திற்கு, நான் ஒரு அற்புதமான இயந்திரம் ஒன்றை வாங்கினேன் - அது கணினி. நான் அந்த இயந்திரத்தை இவ்வாறு கண்டுகொண்டேன் - நிறைய விதிகள் கொண்ட ஆனால் கருணை அற்ற பழைய ஏற்பாட்டின் ஒரு தெய்வம் போல. ஆகவே இப்போது நான் அந்த தெய்வத்தின் மீதே ஓரளவு அதிகாரம் கொண்டவன்.
மோயர்ஸ்: ஆரம்ப காலகட்ட கணினிகளுடன் பிரசிடெண்ட் ஐசன்ஹவரின் அனுபவத்தைப் பற்றி ஒரு கதை இருக்கிறது.
கேம்ப்பெல்: ஆம். ஐசன்ஹவர் கணினிகள் நிறைந்த ஒரு அறைக்குள் சென்று அவற்றை நோக்கி "கடவுள் இருக்கிறாரா" என்று கேட்கிறார். உடனே அங்கிருந்த கணினிகள் இயங்கத் தொடங்கியது. அதன் விளக்குகள் ஒளிர்ந்து அணைந்தன. சக்கரங்கள் சுழன்றன. சிறிது நேரம் கழித்து ஒரு குரல் சொல்லியது "இப்போது இருக்கிறார்" என்று.
மோயர்ஸ்: ஆனால் ’அனைத்தும் கடவுளை சுட்டுகின்றன’ என்று சொல்லும் பழங்குடித் தலைவனின் அதே மனப்பான்மையை உங்கள் கணினிக்கும் உருவாக்கலாம் அல்லவா? இது ஒரு தனித்துவமான வெளிப்பாடாக இல்லாமலிருந்தால், கடவுள் அவருடைய அனைத்து படைப்புகளிலும் இருக்கலாம் அல்லவா, கணினி உட்பட?
கேம்ப்பெல்: நிஜம்தான். கணினியின் திரையில் தோன்றுவதெல்லாம் ஒரு அதிசயம்தான். நீங்கள் என்றைக்காவது கணினியின் உள்ளே பார்த்திருக்கிறீர்களா?
மோயர்ஸ்: இல்லை. அதற்கு நான் முனைந்ததில்லை.
கேம்ப்பெல்: நீங்கள் நம்ப மாட்டீர்கள். அதனுள் தேவதைகளின் அணிவரிசை போல இருக்கும் அந்த உலோகப் பட்டைகள், அந்த சிறு குழாய்கள் - உண்மையிலேயே அற்புதம்தான்.
நான் எனது கம்ப்யூட்டரிலிருந்து தொன்மங்கள் குறித்த ஒரு திறப்பை அடைந்தேன். நீங்கள் குறிப்பிட்டவொரு மென்பொருளை வாங்குகிறீர்கள், அதில் உங்களுக்கு தேவையானதை பெறுவதற்கு வழிகாட்டக்கூடிய சமிக்ஞைகளின் முழுத்தொகுப்பு இருக்கும். ஒருவேளை நீங்கள் வேறொரு மென்பொருளின் சமிக்ஞைகளைக் கொண்டு ஏமாற்ற விரும்பினால், அது வேலை செய்யாது.
அதைப்போலவே தொன்மத்திலும். ஒரு தொன்மத்தில் பிரபஞ்சமர்மத்தின் உருவகமாக தந்தை இருக்கும்போது உங்களுக்கு கிடைக்கும் சமிக்ஞைகள், பிரபஞ்சமர்மம் மற்றும் ஞானத்தின் உருவகமாக அன்னை இருக்கும் தொன்மங்களின் சமிக்ஞைகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். அந்த இரண்டு உருவகங்களுமே முழுமையான சரியான உருவகங்கள்தான். ஆனால் இரண்டுமே நிதர்சன உண்மை அல்ல. அவைகள் உருவகங்கள் மட்டுமே. இப்பிரபஞ்சம் எனக்கு தந்தையைப் போன்றது என்பது ஒரு உருவகம். மற்றொன்று, இப்பிரபஞ்சம் எனக்கு அன்னையைப் போன்றது என்கிறது. இயேசு சொல்கிறார், "என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" என்று. அவர் கூறிய தந்தை விவிலியம் காட்டும் தந்தை. இயேசுவின் வழியாக செல்வதால் மட்டுமே நீங்கள் தந்தையை அடைபவராக இருக்கலாம். ஆனால் ஒருவேளை நீங்கள் அன்னையின் வழியில் செல்பவரானால், பெண் தெய்வமான காளியை, தேவியின் துதிப்பாடல்களை, நீங்கள் விரும்பலாம். உங்கள் வாழ்வின் ரகசியத்தை அல்லது ஞானத்தை அடைவதற்கு இது இன்னொரு வழி மட்டுமே. ஒவ்வொரு மதமும் ஒரு மென்பொருளைப் போல தனக்கே உரித்தான சமிக்ஞைகளைக் கொண்டுள்ளது, அவை அங்கு செயல்படும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு மனிதன் உண்மையாகவே ஒரு மதத்துடன் இணைந்து, அதன் மீதே தன் வாழ்க்கையை கட்டமைத்துக்கொண்டிருந்தால், அவன் தனக்கு கிடைத்திருக்கும் அந்த மென்பொருளுடன் இருப்பதே நல்லது. ஆனால் என்னைப்போல ஒரு குறும்புக்காரன், மென்பொருளுடன் விளையாட விரும்புபவன், வெறுமனே அலைந்து திரியலாம். ஆனால் ஒருபோதும் ஒரு மகானின் அனுபவத்திற்கு இணையான ஒன்றை அடையமுடியாது.
மோயர்ஸ்: ஆனால் சில மகத்தான மகான்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்றுக் கொள்கிறார்களே? பல இடங்களிலிருந்து எடுத்துக்கொண்டு அவர்கள் புதியவொரு மென்பொருளை கட்டமைக்கிறார்கள்.
கேம்ப்பெல்: அதுதான் ஒரு மதத்தின் விரிவாக்கம் எனப்படுகிறது. நீங்கள் இதை பைபிளில் காணலாம். ஆரம்ப காலத்தில் ’கடவுள்’ எளிய சக்திவாய்ந்த எண்ணற்ற தெய்வங்களில் ஒருவராகத்தான் இருந்தார். அவர் ஒரு சாதாரண பழங்குடித் தெய்வம். அதன் பிறகு பொ.மு ஆறாம் நூற்றாண்டில், யூதர்கள் பாபிலோனில் இருந்தபோது 'உலக இரட்சகர்' என்ற கருதுகோள் தோன்றியது. விவிலியத்தின் தெய்வீகத்தன்மை வேறொரு பரிமாணத்திற்கு நகர்ந்தது.
ஒரு தொல்கால மரபை தற்கால சூழலுக்கேற்ற வகையில் புதுப்பிப்பதன் மூலம்தான் நீங்கள் அதை தொடர்ந்து வைத்திருக்க முடியும். பழைய ஏற்பாட்டின் காலகட்டத்தில் இந்த உலகம் ஒரு சிறிய மூன்றடுக்கு ரொட்டி போல் இருந்தது. மத்தியதரைக்கடலின் கிழக்குபகுதியை மையமாகக் கொண்ட சில நூறு மைல்கள் பரப்பை மட்டுமே சுற்றமாகக் கொண்டிருந்தது. யாருமே ஆஸ்டெக் (Aztecs - மத்திய மெக்ஸிகோ மக்கள்) பற்றியோ அல்லது சீனர்களைப் பற்றியோ ஒருபோதும் கேள்விப்பட்டிருக்கவில்லை. உலகம் மாறுகையில் மதமும் மாற்றப்பட வேண்டும்.
மோயர்ஸ்: ஆனால் உண்மையில் நாமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன்.
கேம்ப்பெல்: உண்மையில் நாம் அதை நன்றாகவே செய்துகொண்டிருந்தோம். ஆனால் இன்றைய உலகின் அச்சமூட்டும் சூழல் பற்றி நான் சொல்வதை நீங்கள் பெய்ருத்தில் (லெபனானின் தலைநகர்) பார்க்கலாம். யூதம், கிறித்துவம் மற்றும் இஸ்லாம் என மூன்று உன்னதமான மேற்கத்திய மதங்கள் பெய்ருத்தில் உள்ளன. ஒரே விவிலியத் தெய்வத்திற்கு மூன்று பெயர்களை அம்மூன்று மதங்களும் கொண்டிருப்பதால் அவர்களால் ஒன்றிணைய முடியவில்லை. அவர்களுடைய இறை உருவகங்களுக்குள்ளேயே அவர்கள் சிக்கிகொண்டிருப்பதால் இம்மூன்றிற்கும் உள்ள தொடர்பை அவர்களால் உணரமுடியவில்லை. அவர்களைச் சுற்றியிருக்கும் அந்த வளையத்தைத் திறக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. அது முழுக்க மூடப்பட்டவொரு வளையம். ஒவ்வொரு குழுவினரும் "நாங்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு. நாங்கள்தான் கடவுளை பெற்றிருக்கிறோம்" என்று சொல்கிறார்கள்.
Oliver Cromwell |
அயர்லாந்து நாட்டை கவனியுங்கள். 17ஆம் நூற்றாண்டுவாக்கில் குரோம்வெல் (Oliver Cromwell) என்பவர் கிறித்துவ சீர்திருத்தவாத குழு ஒன்றை அயர்லாந்திற்கு அனுப்பினார். அக்குழு அங்கிருந்த கத்தோலிக்க பெரும்பான்மையினருடன் ஒருபோதும் இணையவில்லை. இப்போது அங்கே முற்றிலும் வேறுபட்ட இரண்டு சமூக அமைப்பினை, இரண்டு இலட்சியங்களை கத்தோலிக்கர்களும், சீர்திருத்தவாதிகளும் முன்மொழிந்து கொண்டிருக்கிறார்கள்.
மோயர்ஸ்: ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய தொன்மம் தேவைப்படுகிறது.
கேம்ப்பெல்: ஒவ்வொருவருக்கும் அவரவர்க்குரிய தொன்மம் தேவைப்படுகிறது, எல்லாவகையிலும். “உங்கள் எதிரி மீது அன்பு செலுத்துங்கள்”, “திறந்த மனதுடன் இருங்கள்”, “அவர்களை மதிப்பிடாதீர்கள்” இவை அனைத்துமே புத்தருடயவை. இதுவும் தொன்மத்தில் உள்ளது. முன்பிருந்தே உள்ளது.
மோயர்ஸ்: கிறித்துவ மிஷனரிகளை நோக்கி உள்ளூர் பழங்குடி ஒருவர் பேசியதைப் பற்றிய கதை ஒன்றை நீங்கள் முன்பு கூறினீர்கள். “உங்கள் கடவுள் வயதானவரைப் போலவும் பலவீனமானவரைப் போலவும் தன்னை ஒரு வீட்டுக்குள் அடைத்துக்கொள்கிறார். எங்கள் கடவுள் மழை வரும்போதும் காடுகளிலும், வயல்களிலும், மலைகளிலும் இருக்கிறார்.“ அது ஒருவேளை உண்மையென நான் நினைக்கிறேன்.
கேம்ப்பெல்: ஆம். இதுதான் நீங்கள் விவிலியத்தில் உள்ள ’அரசர்கள்’ (Book of Kings) மற்றும் ‘சாமுவேல்’ (book of samuel) ஆகிய பகுதிகளை படிக்கும்போது ஏற்படும் சிக்கல். பல்வேறு ஹீப்ரு அரசர்கள் மலையுச்சியில் பலி கொடுப்பவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் யஹோவாவின் பார்வையில் தவறிழைத்தவர்கள். ஹீப்ரு இனத்தில் ’யஹோவா குறுங்குழு’ குறிப்பிடத்தக்கவொரு நகர்வு. இறுதியில் அது வெற்றியடைந்தது. இயற்கைத்தெய்வ வழிபாட்டிற்கு எதிராக ஆலயத்தெய்வம் ஒன்றை முன்னிறுத்தியவொரு செயல் இது. எல்லா இடங்களிலும் இது ஏற்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
சில குறிப்பிட்ட ’குழு’-வின் இத்தகைய ஒற்றை ஆதிக்க முன்னகர்வு மேற்குலகில் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் அது தற்போதிருக்கும் சூழலுக்கு ஏற்றாற்போல் தன்னைத் திறந்துகொள்ள வேண்டும். அப்படித் திறந்து கொண்டால் அதற்கு அங்கே எல்லா சாத்தியங்களும் உள்ளன.
மோயர்ஸ்: ஆம் நிச்சயமாக. நவீனர்களாகிய நாம் இயற்கையையும் இயற்கையின் வெளிப்பாட்டையும் உரித்துப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். காட்டில் அழகாகப் பாடிக்கொண்டிருந்த ஒரு பறவையை வீட்டிற்கு கொண்டு வந்த சிறுவனின் கதையை நான் எண்ணுகிறேன். இக்கதை கிரேக்க தொன்மம் ஒன்றில் உள்ளது.
கேம்ப்பெல்: அப்பறவைக்கு உணவு கொண்டுவருமாறு தன் தந்தையிடம் அச்சிறுவன் கேட்கிறான். ஒரு எளிய பறவைக்கு உணவளிக்க அவன் தந்தை விரும்பவில்லை. ஆகவே அதைக் கொன்றுவிடுகிறார். பறவையைக் கொன்ற அந்த மனிதன் பறவையுடன் அந்த பாடலையும் கொன்றுவிட்டான். அந்த பாடலுடன் அவன் தன்னையும் கொன்றுவிட்டான். அவன் இறந்துவிட்டான், முழுவதுமாக இறந்துவிட்டான், என்றென்றைக்குமாக இறந்துவிட்டான் என்று அந்த கிரேக்க தொன்மம் சொல்கிறது.
மோயர்ஸ்: இது மனிதர்கள் சூழலையும், உலகத்தையும், இயற்கையையும், அதன் வெளிப்பாடுகளையும் அழித்தால் என்ன நிகழும் என்பதைப் பற்றிய கதையல்லவா?
கேம்ப்பெல்: ஆம். அவர்களின் சொந்த இயற்கையையே அவர்கள் அழிக்கிறார்கள். அதன் பாடலையும் அவர்கள் அழித்துவிடுகிறார்கள்.
மோயர்ஸ்: ’பாடலின் கதை’ ஒரு தொன்மம், இல்லையா?
கேம்ப்பெல்: தொன்மம்தான் அப்பாடல். உடலின் ஆற்றல்களால் கவரப்பட்ட கற்பனையின் பாடல் அது. ஒருமுறை ஜென் குரு ஒருவர் தன் மாணவர்கள் முன்பு சொற்பொழிவு ஒன்றை ஆற்றுவதற்காக எழுந்து நின்றார். முதல் சொல்லை உதிர்ப்பதற்காக அவர் தன் உதடுகளை திறந்தபோது எங்கிருந்தோ ஒரு பறவை இசைத்தது. உடனே அவர் "சொற்பொழிவு வழங்கப்பட்டுவிட்டது" என்றார்.
மோயர்ஸ்: நாம் புதிய தொன்மங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்று நான் சொல்ல விரும்புகிறேன். ஆனால் நீங்கள் இல்லை என்கிறீர்கள். இன்று நாம் சொல்லும் ஒவ்வொரு தொன்மத்திற்கும் தொடக்கப்புள்ளி நமது கடந்த கால அனுபவத்தில் இருக்கிறது என்கிறீர்கள்.
கேம்ப்பெல்: தொன்மங்களின் முதன்மை நோக்கம் ஒரே மாதிரியானவை. மேலும் அது எப்போதுமே ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறது. உங்களுக்கான தொன்மத்தை நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், அதற்கான திறவுகோல் நீங்கள் சார்ந்திருக்கும் சமூகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு தொன்மமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில், ஒரு வரையறுக்கப்பட்ட தளத்தில் இருந்தே வளர்ந்திருக்கிறது. பிறகு அவை ஒன்றுடன் ஒன்று மோதி, உறவு கொண்டு, ஒன்றாக இணைந்து மிகவும் சிக்கலான தொன்மங்களாக உங்களுக்கு கிடைக்கிறது. ஆகவே தொன்மங்களுக்கிடையே இன்று எல்லைகள் இல்லை. இன்றைக்கு செல்லுபடியாகக்கூடிய ஒரே தொன்மம், இந்த புவிக்கான தொன்மம்தான். ஆனால் அப்படி ஒரு தொன்மம் நம்மிடம் இல்லை. புவியின் தொன்மத்திற்கு நெருக்கமாக நான் அறிவது பௌத்தம் மட்டுமே. அதுதான் அனைத்து உயிர்களையும் புத்த உயிர்களாக காண்கிறது. நமக்கிருக்கும் ஒரே இடர் என்பது இதுபற்றி அறிந்துகொள்வதுதான். வேறொன்றும் நாம் செய்வதற்கில்லை. ஆகவே நாம் செய்யவேண்டியது என்னவென்றால், அதை அறிந்துகொள்வதும், பிறகு இவ்வனைத்து உயிர்களுடனும் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்வதும்தான்.
மோயர்ஸ்: சகோதரத்துவம்?
கேம்ப்பெல்: ஆம். நான் அறிந்த பெரும்பாலான தொன்மங்களில் சகோதரத்துவம் சமூகத்தின் எல்லைக்குள்ளேயே அடக்கிவைக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்கு வெளியே ஆதிக்ககுணமே கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக, தோரா நூலில் உள்ள பத்து கட்டளைகளில் ஒன்று "நீங்கள் கொலை புரியலாகாது" என்பது. ஆனால் அடுத்த அத்தியாயம், "கேனான்க்கு (தற்கால இஸ்ரேல், லெபனான் பகுதிகள்) செல்லுங்கள், அங்கிருக்கும் அனைவரையும் கொல்லுங்கள்" என்கிறது. அதுதான் எல்லையுள்ள சமூகம். அன்பு, பங்குகொள்ளுதல் போன்ற தொன்மங்கள் சமூகத்திற்கு உள்ளே மட்டும்தான். வெளிச்சமூகங்கள் முற்றாக வேறுதான். இதுதான் "Gentile" (யூதர் அல்லாத இனம்) என்ற சொல்லிற்கான உணர்வு .
மோயர்ஸ்: மற்றும், எங்களுடைய சமூக ஆடையை நீங்கள் அணிந்து கொள்ளாத வரை நாம் ஒரே சமூகத்தினர் இல்லை.
கேம்ப்பெல்: ஆம். இப்போது, தொன்மம் என்றால் என்ன என்றொரு கேள்வி வருகிறது. அகராதிகள் அதற்கு கடவுளைப் பற்றிய கதைகள் என்று அர்த்தம் அளிக்கின்றன. உடனே நீங்கள் அடுத்த கேள்வியை கேட்க வேண்டும். கடவுள் என்றால் என்ன என்று. கடவுள் என்பது மனிதவாழ்வு மற்றும் பிரபஞ்சத்தில் செயல்படும் ஒரு உந்துசக்தி அல்லது ஒரு விழுமிய கட்டமைப்பின் மனிதப்பண்பேற்றப்பட்ட வடிவம். உங்கள் உடல் மற்றும் இயற்கையில் உள்ள ஆற்றல்களின் மனிதப்பண்பேற்றப்பட்ட வடிவம். தொன்மங்கள் என்பவை மனிதனுக்குள் இருக்கும் ஆன்மிகவளத்தின் உருவகங்கள். நமது வாழ்க்கையை உயிர்ப்பிக்கும் அதே சக்திகள்தான் இவ்வுலகத்தின் வாழ்க்கையையும் உயிர்ப்பிக்கின்றது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமேயான தொன்மங்களும் தெய்வங்களும் உள்ளன. அந்த சமூகத்திற்கு மட்டுமே உரிய காவல்தெய்வங்கள் கூட உள்ளன. வேறுவிதமாக சொல்வதென்றால் முற்றிலும் வேறுபட்ட முறைமையை உடைய இரண்டு வகையான தொன்மங்கள் இங்கே உள்ளன.
முதல்வகை, நீங்கள் ஒரு பகுதியாக இருக்கும் இயற்கையுடனும், இயற்கை உலகத்துடனும் உங்களை தொடர்புபடுத்தும் தொன்மங்கள். இரண்டாவது வகை உங்களை ஒரு குறிப்பிட்ட சமூகத்துடன் மட்டுமே தொடர்புபடுத்தும் கண்டிப்பான சமூகவியல் தொன்மங்கள். நீங்கள் ஒரு எளிய இயற்கையான மனிதன் மட்டும் அல்ல, ஒரு குறிப்பிட்ட இனத்தின் உறுப்பினரும் கூட என்று அவை சொல்லும். இந்த இரண்டு வகையான அமைப்புகளின் உரையாடல்களை நீங்கள் ஐரோப்பிய தொன்மவரலாற்றில் காணலாம். பொதுவாக சமூகம் சார்ந்த அமைப்பு, அலைந்து திரியும் நாடோடி மனிதர்களால் ஆனதாக இருக்கும். ஆகவே சமூகம் என்ற அம்சம்தான் அக்குழுவில் உங்களை பிணைத்திருக்கும் மையம் என்பதை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். இயற்கையுடன் ஒருங்கிணைந்திருக்கும் புராணம் நிலத்தை உழுது பயிரிடும் வேளாண்மக்களால் ஆனதாக இருக்கும்.
இப்போது கவனியுங்கள், விவிலிய மரபு என்பது சமூகம் சார்ந்த புராணத்தை உடையது. எனவே இயற்கை அங்கே கண்டிக்கப்படுகிறது. புராணங்களும் சடங்குகளும் இயற்கையை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சி என 19ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் நினைத்தார்கள். ஆனால் அது மாயாஜாலத்தால் நிகழலாமோ என்னவோ. புராணமோ மதமோ அவ்வாறு செய்யாது. இயற்கைமதங்கள் இயற்கையை கட்டுப்படுத்த முனைவதில்லை. மாறாக இயற்கையுடன் நீங்கள் இசைவு கொள்வதற்கு உதவிபுரிகின்றன. ஆனால் இயற்கை தீயசக்தியாக கருதப்படும்போது, நீங்கள் அதனுடன் இசைவு கொள்ளாமல் அதை அடக்குவீர்கள் அல்லது அதற்கு முயல்வீர்கள், அதன் விளைவாக பதட்டமும், மனஉளைச்சலும், காடுகளை அழிப்பதும், பூர்வகுடிகளை நிர்மூலமாக்குவது என அனைத்தும் நிகழ்கிறது. மேலும் இந்த குரல் இங்கே நம்மை இயற்கையிலிருந்து பிரிக்கிறது.
மோயர்ஸ்: இதனால்தானோ நாம் இயற்கை மீது மிக எளிதாக ஆதிக்கம் செலுத்துவது அல்லது அதை பணிய வைப்பது நிகழ்கிறது? நமக்கு அதன் மீது அவமதிப்பு இருக்கிறது. ஏனெனில் நாம் இயற்கையை நமக்கு சேவையளிக்கும் ஒன்றாகத்தான் காண்கிறோம்.
கேம்ப்பெல்: ஆம். நான் ஜப்பானில் இருந்தபோது பெற்ற ஒரு அனுபவத்தை ஒருபோதும் மறக்க மாட்டேன். அந்த இடம் ஏதேனின் தோட்டத்தில் மனிதன் அடைந்த வீழ்ச்சியை ஒருபோதும் அறிந்திராத இடம். ஷிண்டோ (Shinto) நூலின் சில வரிகள் ‘இயற்கையின் செயல்பாடுகள் தீயசக்தியாக இருக்க முடியாது, இயற்கையான துடிப்புகள் அனைத்தும் திருத்தப்படக்கூடாது, மாறாக உன்னதமாக்கப்பட வேண்டும், அழகாக்கப்பட வேண்டும்’ என்று சொல்கிறது. இயற்கையின் அழகிலும் இயற்கையுடன் ஒத்திசைந்து போவதிலும் ஒரு ஒளிமிக்க நாட்டம் உள்ளது. ஆகவே அங்கிருக்கும் சில பூந்தோட்டங்களில் எங்கே கலை முடிவடைந்து இயற்கை தன்னை தொடங்கியுள்ளது என்பதை நீங்கள் அறியமுடியாது - அது ஒரு பிரம்மாண்டமான அனுபவம்.
மோயர்ஸ்: ஆனால் இன்று டோக்கியோ இந்த இலட்சியத்தை வெளிப்படையாகவே மறுதலிக்கிறது. விதிவிலக்காக சிறிய பூந்தோட்டங்கள் சில மக்களால் இன்னமும் வளர்க்கப்படுவதைத் தவிர்த்தால், இயற்கை சுத்தமாக மறைந்துவிட்ட நகரம் அது.
கேம்ப்பெல்: “அலைகளுடன் சேர்ந்தாடு” என்றொரு சொலவடை ஜப்பானில் உண்டு. நமது குத்துச்சண்டை விளையாட்டில் “குத்துக்களுடன் முன்னேறு” என்று நாம் சொல்வதைப்போல. வெறும் நூற்றி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் மேத்யூ பெர்ரி (Matthew Calbraith Perry) ஜப்பானைத் திறந்து ஊடுருவுகிறார். அப்போதுதான் அவர்கள் இயந்திரங்களின் பயங்கரமான சுமையை உள்வாங்குகிறார்கள். ஆனால் ஜப்பானில் நான் கண்டுகொண்டது இன்னொன்று. அவர்கள் தங்கள் முகத்தை இதற்கெதிராக திருப்பிய வண்ணம் இந்த இயந்திர உலகுடன் ஒன்றிக்கொண்டிருந்தார்கள். நீங்கள் கட்டடங்களுக்கு உள்ளே சென்றால் நீங்கள் ஜப்பானில் இருப்பீர்கள். ஆனால் வெளிப்புறத்தில் அவை நியூயார்க் போலவே தோற்றமளிக்கும்.
மோயர்ஸ்: “முகத்தைத் திருப்பிக்கொண்டு” அது ஒரு ஆர்வமூட்டும் கருத்து. ஏனெனில், நகரங்கள் அவர்களை சுற்றி வளர்ந்துகொண்டிருந்த போதும், தங்கள் ஆன்மாவிற்குள், அகமனிதன் வாழும் ஓரிடத்தில் அவர்கள் இன்னமும் நீங்கள் சொல்வதைப்போல இயற்கையுடன் இசைவு கொண்டிருக்கிறார்கள்.
கேம்ப்பெல்: ஆனால் பைபிளை பொருத்தவரையில் ‘நித்யம்’ பின்னடைந்துள்ளது. இயற்கை களங்கப்பட்டுள்ளது, மேலும் அது வீழ்ச்சியடைந்துள்ளது. பைபிளின் சிந்தனையில் நாம் தாயகம் நீங்கிய வாழ்வை வாழ்கிறோம் (living in exile).
மோயர்ஸ்: நாம் இங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் வேளையில், பெய்ருத்தில் (லெபனானின் தலைநகரம்) கார் குண்டுவெடிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்கின்றன. கிறித்தவர்களால் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்களால் கிறித்தவர்களுக்கும், கிறித்தவர்களாலேயே கிறித்தவர்களுக்கும் இவை நிகழ்கின்றன. இதைக் காணும்போது, தொலைக்காட்சி இந்த உலகத்தை ஒரு உலகளாவிய கிராமமாக மாற்றியிருக்கிறது என்று மார்ஷல் மெக்லூஹன் (Marshall McLuhan) கூறியது சரிதான் என்று எனக்கு படுகிறது. ஆனால் அந்த உலகளாவிய கிராமம் பெய்ருத்தாக இருக்கும் என்பது அவருக்கு தெரியவில்லை. உங்களுக்கு எப்படி தோன்றுகிறது?
கேம்ப்பெல்: தங்கள் மதக்கருத்துக்களை தங்கள் இன மக்களைத் தவிர்த்து இன்றைய எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கைக்கும் பொருத்திப்பார்க்க அவர்களுக்கு தெரியவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. நவீன உலகை எதிர்கொள்வதில் மதம் அடைந்த தோல்விக்கான பயங்கரமான உதாரணம் இது. இந்த மூன்று புராணங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்கின்றன. அவர்கள் எதிர்காலத்திற்கு தங்களைத் தாங்களே தகுதியற்றவர்களாக்கிக் கொண்டனர்.
மோயர்ஸ்: என்ன வகையான புதிய புராணங்கள் நமக்கு தேவை?
கேம்ப்பெல்: தனிமனிதனை அவனுடைய இனக்குழுவுடன் அல்லாமல் இந்த பூமியுடன் அடையாளப்படுத்தக்கூடிய புராணங்கள் நமக்கு தேவை. அதற்கு ஒரு முன்மாதிரிதான் இந்த அமெரிக்கா. இங்கேதான் பதிமூன்று குட்டி காலனி தேசங்கள் தங்கள் தனிப்பட்ட விருப்புகளை இழக்காமல் அதேசமயம் பரஸ்பர விஷயங்களில் இணைந்து செயல்பட முடிவெடுத்தது.
மோயர்ஸ்: இதைப்பற்றி "ஜக்கிய அமெரிக்க மாகாணங்களின் பெருமுத்திரை" (Great Seal of the United States)-யில் ஏதோ இருக்கிறதே.
கேம்ப்பெல்: அதுதான் அமெரிக்காவின் பெருமுத்திரை. நான் அந்த பெருமுத்திரையின் ஒரு பிரதியை டாலர் தாளின் வடிவில் எனது சட்டைப் பையில் வைத்திருக்கிறேன். இதில் அமெரிக்காவின் உருவாக்கம் குறித்தான இலட்சியங்களின் அறிக்கை உள்ளது. இந்த டாலர் தாளை பாருங்கள், இங்கு அமெரிக்காவின் பெருமுத்திரை உள்ளது. இந்த தாளில் இடதுபக்கத்தில் இருக்கும் பிரமிட் வடிவத்தை கவனியுங்கள். ஒரு பிரமிட் என்பது நான்கு பக்கங்களை உடையது. இந்த நான்கு பக்கங்களும் திசைகாட்டியின் நான்கு முனைகள். ஒவ்வொரு பக்கங்களிலும் அல்லது முனைகளிலும் ஒவ்வொரு இனத்தவர் இருப்பர். நீங்கள் இந்தப் பிரமிடின் கீழ்த்தளத்தில் இருக்கும்வரை ஏதாவது ஒரு பக்கத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். ஆனால் இதன் உயரத்திற்கு நீங்கள் சென்றால், எல்லாப் பக்கங்களும் சந்திக்கும் இடத்தை அடைவீர்கள். அங்கேதான் கடவுளின் விழி திறக்கிறது.
மோயர்ஸ்: அதுதான் அவர்களுக்கு பகுத்தறிவுக் கடவுள்.
கேம்ப்பெல்: ஆம். இந்த நாடுதான் இவ்வுலகில் போரின் வழியாக அல்லாமல் பகுத்தறிவின் அடிப்படையில் நிறுவப்பட்ட நாடுகளில் முதலாவதாகும். பதினெட்டாம் நூற்றாண்டு இறையேற்பாளர்களால், அந்த மாமனிதர்களால் இது இவ்வண்ணம் உருவாக்கப்பட்டது. "நாம் கடவுளில் நம்பிக்கை கொள்கிறோம்" என்று இங்கே நாம் முன்மொழிகிறோம். ஆனால் அது பைபிள் கூறும் கடவுளல்ல. ஏனெனில் இம்மனிதர்கள் வீழ்ச்சியில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. மனிதனின் மனம் கடவுளிடமிருந்து துண்டிக்கப்பட்டது என அவர்கள் நினைக்கவில்லை. மனிதனின் மனம் என்பது இரண்டாம்பட்ச மற்றும் தற்காலிக விஷயங்களில் இருந்து சுத்திகரிக்கப்பட்டு, தூய கண்ணாடியின் பிரகாசத்துடன் கடவுளின் பகுத்தறிவு மனதின் பிரதிபலிப்பாக இருக்கிறது. பகுத்தறிவு உங்களை கடவுளுடன் தொடர்பில் இருக்கவைக்கிறது. இம்மனிதர்களுக்கு எங்கேயும் இறைவெளிப்பாடு (Revelation) இல்லை, எவரிடமும் அவர்களுக்கு மட்டுமே தோன்றும் தனியிறைவெளிப்பாடு (Special Revelation) தேவையில்லை. ஏனெனில் மனிதமனம் அதன் தவறுகளைக் களைந்து கடவுளின் அறிவைப் பெற போதுமான அளவிற்கு தகுதி கொண்டிருக்கிறது. இவ்வுலகின் அனைத்து மக்களும் இவ்வகையில் தகுதியுள்ளவர்களே. ஏனெனில் இவ்வுலகின் அனைத்து மக்களும் பகுத்தறிவிற்கு தகுதியுடையவர்களே. அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடு. ஏனெனில் அனைவரின் மனமும் மெய்யான அறிவிற்கு தகுதியுடையென்பதால் நீங்கள் ஒரு சிறப்பு அதிகாரம் ஏதும் பெற்றிருக்க வேண்டியதில்லை. அல்லது இவைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் தனியிறைவெளிப்பாடும் தேவையில்லை.
மோயர்ஸ்: எனினும் இந்த குறியீடுகளும் தொன்மங்களில் இருந்துதான் வருகின்றன.
கேம்ப்பெல்: ஆம். ஆனால் அவை தொன்மங்களின் குறிப்பிட்டவொரு பண்பில் இருந்து வருகின்றன. அது தனியிறைவெளிப்பாட்டின் புராணமல்ல. உதாரணத்திற்கு இந்துக்கள் இந்த தனியிறைவெளிப்பாட்டினை நம்புவதில்லை. மாறாக அவர்கள் பிரபஞ்சகீதத்திற்காக செவிகள் திறந்திருக்கும் ஒரு நிலையைப் பற்றி பேசுகிறார்கள். இங்கே கடவுளுடைய மனதின் பிரகாசத்தைக் காண்பதற்காக கண்கள் திறந்திருக்கின்றன. இதுதான் அடிப்படையான இறைவாத கருத்து. நீங்கள் "தோட்டத்தில் வீழ்ச்சி" (Fall in the Garden) என்ற கருத்தினை நிராகரிக்கும்போதுதான் மனிதன் தனது தோற்றுவாயிலிருந்து துண்டிக்கப்பட்டவன் இல்லை என்பதை உணர்வீர்கள்.
இப்போது பெருமுத்திரைக்குத் திரும்புவோம். இந்த பிரமிடில் உள்ள அடுக்குகளை எண்ணினால் 13 இருப்பதை காணலாம். அதன் கீழே ரோமன் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அது 1776. இந்த எண்களின் கூட்டுத்தொகை 21. அதுதான் ஒரு மனிதன் பகுத்தறியத் தொடங்கும் வயது, இல்லையா? 1776 ஆம் ஆண்டில்தான் 13 மாகாணங்கள் சுதந்திரத்தை பிரகடனம் செய்தன. இந்த எண் 13, மாற்றத்திற்கும் மறுபிறப்பிற்குமான எண். 'இறுதி இரவுணவு’ (Last Supper)-ன் போது பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் கிறிஸ்துவும் இருப்பார்கள். அதில் கிறிஸ்து இறந்து மறுபிறப்பெடுக்கப்போகிறவர். பன்னிரெண்டின் எல்லைகளின் களங்களில் இருந்து வெளியேறி அனைத்தும் கடந்த நிலைக்கு செல்லக்கூடிய எண்தான் பதிமூன்று. உங்களுக்கு பன்னிரண்டு ராசிகளும் ஒரு சூரியனும் உள்ளன. இந்த மனிதர்கள் பதிமூன்று என்ற எண்ணின் மீது மிகக்கவனமாக இருந்தனர். ஏனெனில் அதுதான் உயிர்த்தெழுதலுக்கும், மறுபிறப்பிற்கும், புதிய வாழ்விற்கும் ஆனது. மேலும் அவர்கள் எல்லா வழிகளிலும் இதைக் கொண்டாடினர்.
மோயர்ஸ்: ஆனால் நடைமுறையில் அங்கே பதிமூன்று மாகாணங்கள் இருந்தன.
கேம்ப்பெல்: ஆம். ஆனால் அது குறியீடு இல்லையா? இது எளிய தற்செயலல்ல. இந்த பதிமூன்று மாகாணங்கள்தான் அவை என்னவாக இருந்ததோ அதன் குறியீடாகவும் இருந்தது.
மோயர்ஸ்: இது இதற்கு கீழே இருக்கும் "நோவஸ் ஆர்டோ செக்ளோரம்" (NOVUS ORDO SECLORUM) என்ற வாக்கியத்தையும் விளக்கும்.
கேம்ப்பெல்: “புதிய உலகின் விதிமுறை” (A new order of the world) என்பது அதன் அர்த்தம். இது உலகிற்கான ஒரு புதிய ஒழுங்கு ஆகும். அதற்கு மேலே இருக்கும் இன்னொரு சொல், “ANNUIT COEPTIS” அதற்கான அர்த்தம் 'நமது சாதனைகளைக் கண்டு அவர் புன்னகைத்தார்' அல்லது 'நமது செயல்களைக் கண்டு அவர் புன்னகைத்தார்' என்பதாகும்.
மோயர்ஸ்: அவர் என்பது…
கேம்ப்பெல்: அவர் என்பது அந்த கண், அதாவது அந்த கண்ணால் குறிக்கப்படுவது எதுவோ அது. பகுத்தறிவு. லத்தீன் மொழியில் அதை “அவர்” என்று சொல்ல வேண்டியதில்லை. ‘அது’ அல்லது ‘அவள்’ அல்லது ‘அவன்’ என அது எப்படி வேண்டுமானலும் இருக்க முடியும். ஆனால் அந்த தெய்வீகசக்தி நம் செயல்களைக் கண்டு புன்னகைக்கிறது. ஆகவே இந்த புதிய உலகம் கடவுளின் அசலான படைப்புணர்வோடும், கடவுளின் அசலான படைப்பின் பிரதிபலிப்போடும், பகுத்தறிவு மூலமாக கட்டப்பட்டுள்ளது.
அந்த பிரமிட் சின்னத்தின் பின்னால் ஒரு பாலைவனம் இருக்கும். முன்னால் தாவரங்கள் வளர்ந்திருக்கும். பாலைவனம் என்பது ஐரோப்பிய கலவரத்தையும், போர்கள் சூழ்ந்த வாழ்க்கையையும் குறிக்கும். அந்த சூழலில் இருந்து நாம் நம்மை விடுவித்துக்கொண்டு வலிமையினால் அல்லாமல் பகுத்தறிவினால் புதியவொரு சூழலை உருவாக்கியுள்ளோம். இதிலிருந்து புதிய வாழ்க்கையின் வசந்தகாலம் வரும். அதுதான் பிரமிடின் அப்பகுதி உணர்த்துவது.
இப்போது அந்த டாலர் தாளின் வலதுபக்கத்தை பாருங்கள். ஸீயஸ் (Zeus) கடவுளின் பறவையான கழுகு அங்கே இருக்கிறது. காலத்தின் செயற்களத்திற்கு கடவுள் இறங்கி வருவதைக் குறிக்கிறது இந்த கழுகு. கடவுளின் பிறப்பு என்ற கருத்தையும் சுட்டுகிறது இந்த பறவை. இது ஒரு வெண்தலைக் கழுகு, அமெரிக்கக் கழுகு. உயர்தெய்வமான ஸீயஸின் கழுகிற்கு இணையான அமெரிக்க கழுகு இது. முரணியக்க களத்தினுள், அதாவது இந்த உலக செயல்களின் களத்தினுள் கடவுள் இறங்கி வருகிறார்.
செயலுடைய ஒரு வகை போர், மற்றொரு வகை அமைதி. ஆகவே கழுகு தன் ஒரு பாதத்தில் பதிமூன்று அம்புக்களை பிடித்திருக்கிறது – அது போருக்கான கொள்கை. மறு பாதத்தில் அது பதிமூன்று லாரல் இலைகளை வைத்திருக்கிறது – அது அமைதிப்பேச்சிற்கான கொள்கை. கழுகு தன் பார்வையை லாரல் இலைகள் இருக்கும் திசையை நோக்கி வைத்திருக்கிறது. நாம் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்று நமது நாட்டிற்கு அடித்தளமிட்ட இந்த இலட்சியவாதிகள் விரும்புகிறார்கள் - நாடுகளுக்கு இடையேயான உறவை பரஸ்பர உடன்படிக்கைகள் வழியாக பேணுதல். ஆனால் ஒருவேளை அது சரிவரவில்லை என்றால் இன்னொரு பாதத்தில் அம்புகள் வைத்திருப்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லலாம்.
இப்போது இந்த கழுகு எதைக் குறிக்கின்றது? அதன் தலைக்குமேல் இருக்கும் இந்த ஒளிப்பிழம்பில் உள்ளவற்றை இது முன்மொழிகிறது. நான் ஒருமுறை வாஷிங்டன்னில் உள்ள அயல்தேசத்து சேவை நிறுவனம் ஒன்றில் இந்து புராணங்கள், சமூகவியல் மற்றும் அரசியல் இவைகளைப் பற்றி உரையாற்றிக்கொண்டிருந்தேன். அரசியலுக்கான இந்து நூல் ஒன்றில் ’ஒரு ஆட்சியாளன் தனது ஒரு கரத்தில் போர்க்கருவியான நீண்ட கோலையும், மறுகரத்தில் கூட்டுச்செயலுக்கான அமைதியின் பாடலையும் கொண்டிருக்க வேண்டும்’ என சொல்லப்பட்டிருக்கின்றது. அங்கே நான் எனது இரண்டு கைகளையும் இதைப்போல் வைத்துக்கொண்டு நின்றிருந்தபோது அறையில் இருந்த அனைவரும் சிரித்தனர். ஏனென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பின்னர் அவர்கள் சொல்லத்தொடங்கியபோது நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். அங்கே இந்த கழுகின் படம் நான் இருக்கும் அதே நிலையில் என்னுடைய தலைக்குப் பின்னால் உள்ள சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் நான் அதைப் பார்த்தபோது அதன் தலைக்கு மேலே உள்ள அந்த குறியீடையும் அதன் வாலில் ஒன்பது இறகுகள் இருந்ததையும் கவனித்தேன். ஒன்பது என்ற எண் தெய்வீக சக்தி இந்த உலகிற்கு இறங்கி வந்ததை குறிக்கிறது. தேவாலயங்களில் வழிபாட்டு அழைப்பு மணி ஒன்பது முறை ஒலிக்கும்.
இப்போது, இந்த கழுகின் தலைக்கு மேல் டேவிடின் நட்சத்திர வடிவத்தில் பதிமூன்று நட்சத்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.
மோயர்ஸ்: அது சாலமனின் முத்திரை எனப்படும்.
கேம்ப்பெல்: ஆம். ஏன் அது சாலமனின் முத்திரை எனப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?
மோயர்ஸ்: இல்லை.
கேம்ப்பெல்: சாலமன் கொடிய விலங்குகளையும் அரக்கர்களையும் ஒரு ஜாடிக்குள் போட்டு அடைத்து வைப்பவராக இருந்தார். அரேபிய இரவுகள் கதைகளில் ஒரு ஜாடியைத் திறந்ததும் அதிலிருந்து பூதம் வெளிவருவது உங்களுக்கு நினைவிருக்கிறதல்லவா? நான் இந்த சாலமனின் முத்திரையைக் கவனித்தேன், அது பதிமூன்று நட்சத்திரங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. நட்சத்திரத்தின் ஒவ்வொரு முக்கோணங்களும் ஒரு பித்தாகரஸ் டெட்ராக்டிஸ் (Pythagoras Tetractys) என்பதையும் நான் பார்த்தேன்.
Pythagoras Tetractys |
மோயர்ஸ்: நாற்கரம் எதற்காக ?
கேம்ப்பெல்: பத்து புள்ளிகளால் உருவாக்கப்பட்ட ஒரு முக்கோணம் இது. நடுவில் ஒரு புள்ளி, முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு புள்ளிகள் என ஒன்பது – ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு / ஐந்து, ஆறு, ஏழு / எட்டு, ஒன்பது. இதுதான் பித்தாகரீயன் தத்துவத்தின் அடிப்படைக் குறியீடு. ஒன்றிற்கொன்று தொடர்புடைய புராணவியல், பிரபஞ்சவியல், உளவியல் மற்றும் சமூகவியல் புரிதல்கள் போன்றவற்றுடன் எளிதில் உருவகப்படுத்தக்கூடியது. அமரமுனையில் இருக்கும் புள்ளி இப்பிரபஞ்சமும் பிற அனைத்தும் தோன்றியிருக்கும் படைப்புமையத்தை குறிக்கிறது.
மோயர்ஸ்: அது ஆற்றல் மையம் தானே?
கேம்ப்பெல்: ஆம். அந்த ஆதி ஒலி, (கிறித்தவர்கள் அதை படைப்புச்சொல் என சொல்லலாம்) அதிலிருந்துதான் இந்த மொத்த உலகமும் வெளிவந்தது. பெருவெடிப்பால் ஆழ்நிலையின் (transcendent) ஆற்றலை தனக்குள் ஊற்றிக்கொண்டும் காலத்தின் களத்தின் தன்னை விரிவாக்கிக்கொண்டும் வெளிவந்தது. காலத்தினுள் நுழைந்தவுடன் அது முரண்களின் இணையாக உடைந்தது. ஒன்று இரண்டானது. இரண்டு விஷயங்கள் உங்களிடத்தில் இருந்தால் அவை மூன்று வழிகளில் தங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொள்ள முடியும். முதல் வழி, ஒன்று இன்னொன்றின் மேல் ஆதிக்கம் செய்வது; அடுத்த வழி, அந்த இன்னொன்று இந்த ஒன்றின் மேல் ஆதிக்கம் செய்வது; மூன்றாவது வழி, இரண்டுமே ஒரு சமநிலையில் இணைந்திருப்பது. பின்னர் இறுதியாக, அனைத்து பொருட்களும் இந்த மூன்று வழிகளால் ஆன உறவுடன் வெளியின் நான்கு பரிமாணங்களில் அமைந்தது.
லாவோ சீ யின் தாவோ தே சிங் நூலில் ஒரு பாடல் வருகிறது. தாவோவின் ஆழ்நிலையில் (transcendent) இருந்து அந்த ஒன்று வருகிறது. அந்த ஒன்று இரண்டாகிறது. பின் அந்த இரண்டிலிருந்து மூன்று வருகிறது. மூன்றிலிருந்து அனைத்துமே வருகிறது. அமெரிக்கவின் பெருமுத்திரையில் உள்ள இரண்டு குறியீட்டு முக்கோணங்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருப்பதைக் கண்டபோது நான் திடீரென்று உணர்ந்ததென்னவென்றால் நமது அசலான பதிமூன்று மாகாணங்களுக்காக பதிமூன்று புள்ளிகள் இப்போது நம்மிடையே இருக்கின்றன என்பது. மேலும் இப்போது அங்கே கூடுதலாக ஆறு அமரமுனைகளுக்கு குறைவில்லாமல், மேலே ஒன்று, கீழே ஒன்று, மற்றும் நான்கு, நான்கு கால்பகுதிகளுக்காக (அப்படிச் சொல்லலாம்) இருக்கிறது. இதன் உணர்வென்பது, மேலிருந்தோ அல்லது கீழிருந்தோ அல்லது திசைக்காட்டியின் ஏதாவது புள்ளியிலிருந்தோ ஜனநாயகத்தின் மகத்தான சித்தாந்தமான படைப்புச்சொல் கேட்கப்படலாம் என்று எனக்கு தோன்றியது. எவராக இருப்பினும் அவர் எந்த கால்பகுதியை சார்ந்தவராக இருப்பினும் அவர் சத்தியத்தைப் பேசமுடியும். ஏனெனில் அவர் மனம் சத்தியத்திலிருந்து துண்டிக்கப்பட்டதில்லை என்று ஜனநாயகம் கருதுகிறது. அவர் செய்யவேண்டியதெல்லாம் தன்னுடைய பற்றினை (Passion) நீக்கிவிட்டு பேசுவது மட்டுமே.
எனவே டாலர் தாளில் இருக்கும் அந்த கழுகு, ஆழ்நிலையில் இருக்கும் ஒன்று தன்னை இவ்வுலகில் வெளிப்படுத்திக்கொள்ளும் அருமையான படிமத்தை முன்மொழிகிறது. அதன் மீதுதான் ஐக்கிய அமெரிக்கா கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் சரியான முறையில் ஆட்சி செய்ய விரும்பினால் முக்கோணத்தின் அமரமுனையில் இருந்து, உச்சியிலிருக்கும் உலகவிழியின் உணர்வில் ஆட்சி செய்ய வேண்டும். நான் சிறுவனாக இருந்தபோது ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களின் பணிஓய்வுஉரை எங்களுக்கு அளிக்கப்பட்டு அதிலிருக்கும் ஒவ்வொரு கூற்றினையும் பிறிதொன்றுடன் தொடர்புபடுத்தி ஒரு ஒட்டுமொத்த வரைவை அளிக்கும்படி சொல்லப்பட்டது. எனவே அதை நான் முழுவதுமாகவே நினைவுகூர்வேன். "நம்முடைய புரட்சியின் விளைவாக நாம் ஐரோப்பிய குழப்பங்களில் இருந்து நம்மை விடுவித்துக் கொண்டிருக்கிறோம்" என்று அவர் சொன்னார். அவருடைய இறுதிவரியாக இருப்பது ”நாம் அயல்தேச கூட்டணியில் இணைவதில்லை” என்பது. நன்று. நாம் முதலாம் உலகப்போர் வரை அவருடைய சொற்களை கைக்கொண்டிருந்தோம். அதன் பிறகு நாம் சுதந்திர பிரகடனத்தை தள்ளுபடி செய்து பிரிட்டன் படையுடன் மீண்டும் இணைந்துவிட்டோம். அதனால் நாம் இப்போது பிரமிடின் ஒரு பக்கத்தில் இருக்கிறோம். ஒன்றிலிருந்து இரண்டிற்கு நகர்ந்துவிட்டோம். அரசியல்ரீதியாகவும், வரலாற்றுரீதியாகவும் ஒரு வாதத்தின் ஒரு பக்கத்தின் உறுப்பினராக மட்டுமே நாம் இப்போது இருக்கிறோம். அங்கே நாம் அந்த விழியின் கோட்பாட்டினை பிரதிபலிக்கவில்லை. மேலும் நம்முடைய கவனம் எல்லாம் பொருளாதாரம் மற்றும் அரசியல் மீதுதான் உள்ளது, பகுத்தறிவின் குரலாக அல்ல.
ஜார்ஜ் வாஷிங்டன் |
மோயர்ஸ்: 'பகுத்தறிவின் குரல்' அதுதான் இந்த புராணக்குறியீடுகள் பரிந்துரைத்த தத்துவவழியா?
கேம்ப்பெல்: மிகச்சரி. இங்கேதான் பொ.மு.500-களில் நிகழ்ந்த ஒரு முக்கியமான மாற்றத்தை உங்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது. அக்காலம்தான் புத்தரின், பிதாகரசின், கன்பூசியஸ் மற்றும் லாவோ ட்சூ-வின் (லாவோ ட்சூ என்றொருவர் இருந்திருந்தால்) காலம். இதுதான் மனிதனின் பகுத்தறிவு விழித்துக்கொண்ட காலகட்டம். விலங்காற்றலால் அவன் ஆளப்படுவதையும் கற்றுக்கொண்டதையும் நிறுத்தத் தொடங்கிய காலம். படைக்கப்பட்ட பூமி என்ற கொள்கையாலும், கோள்களின் நிலைமாற்றம் சார்ந்தும் வழிநடத்தப்படாமல் பகுத்தறிவே அனைத்திற்கும் அடிப்படை என்று சொல்லத்தொடங்கிய காலம்.
மோயர்ஸ்: யாருடைய வழியில்?
கேம்ப்பெல்: மனிதனுடைய வழியில். பற்றுதான் (passion) பகுத்தறிவை அழிக்கிறது. அரசியலில் பற்று என்பது பேராசை. அதுதான் உங்களை கீழிறக்குகிறது. மேலும் அதனால்தான் நாம் பிரமிடின் உச்சியில் இருப்பதற்கு பதிலாக கீழே ஏதோ ஒரு பக்கத்தில் இருக்கின்றோம்.
மோயர்ஸ்: அதனால்தான் நமது நிறுவனர்கள் மத சகிப்புத்தன்மையின்மையை எதிர்த்தார்கள்.
கேம்ப்பெல்: தற்போது அது முழுவதுமாக வெளியேறிவிட்டது. மத சகிப்புத்தன்மையின்மையை அவர்கள் எதிர்த்ததால்தான் வீழ்ச்சி எனும் கருதுகோளையும் நிராகரித்தார்கள். அனைத்து மனிதர்களும் கடவுளின் மனதை அறிய தகுதி உடையவர்கள். எவருக்கும் அவர்களுக்கு மட்டுமே நிகழும் தனிஇறைவெளிப்பாடு தேவையில்லை.
மோயர்ஸ்: உங்களுடைய பல்லாண்டுகாலக் கல்வியிலும், தொன்மவியல் குறியீடுகளில் உள்ள ஆழ்ந்த புலமையினாலும் நீங்கள் அமெரிக்க பெருமுத்திரையை அவ்வண்ணம் படிக்கிறீர்கள். நீங்கள் சொல்வதுபோல, இதை உருவாக்கிய பெரும்பாலானவர்கள் இறையேற்பாளர்கள். ஒரு புது நாட்டை உருவாக்குவதற்கான அவர்களின் பிரயத்தனம் மீது தொன்மவியல்நோக்கினைக் கண்டுபிடிப்பது அவர்களுக்கே ஆச்சர்யமாக இருக்குமல்லவா?
கேம்ப்பெல்: அப்படியென்றால் அவர்கள் ஏன் அந்த குறியீடுகளைப் பயன்படுத்தினார்கள்?
மோயர்ஸ்: அவற்றில் பெரும்பாலானவை மேசன் (Masonic Symbols) குறியீடுகளல்லவா?
கேம்ப்பெல்: அவை மேசன் குறியீடுகள்தான். மேலும் பல நூற்றாண்டுகளாகவே பிதாகரஸ் நாற்கரத்தின் பொருள் இங்கு அறியப்பட்ட ஒன்றுதான். இந்த தகவல்கள் எல்லாம் தாமஸ் ஜெஃபெர்சன் நூலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். மேலும் அவர்கள் அனைவருமே கற்றறிந்தவர்கள். 18ஆம் நூற்றாண்டின் அறிவொளியானது அறிஞர்களின் உலகத்தால் உருவானது. அரசியலில் நாம் அவர்களுக்கு இணையான தகுதியாளர்களை அதுவரை பெற்றிருக்கவில்லை. திரளான அந்த உயர்ந்த மனிதர்கள் அதிகாரம் கொண்டிருந்ததோடல்லாமல் அக்காலகட்டத்தின் நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் இடத்திலும் இருந்தனர் என்பது நமது நாட்டின் மிகப்பெரிய நல்லூழ்.
The main emblem of the Freemasons |
மோயர்ஸ்: இந்த குறியீடுகளுக்கும் மேசன்களுக்கும் உள்ள உறவை எது விளக்குகிறது? மேலும் இவ்வாறு அடித்தளமிட்டுக் கொடுத்த தந்தையர்களில் பெரும்பாலானோர் மேசன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் எப்படி விளங்கிக்கொள்ளலாம்? ஒருவேளை இந்த மேசன் அமைப்பே எவ்வண்ணமோ தொன்மரீதியான சிந்தனையின் ஒரு வெளிப்பாடா?
கேம்ப்பெல்: ஆம். நான் அப்படித்தான் நினைக்கிறேன். இது தீட்சை கொடுக்கும் சடங்கின் ஒரு அறிவார்ந்த முயற்சி, இதுவும் ஆன்மீக அனுபவத்தை அடைவதையே நோக்கமாக கொண்டது. மேசன்களான அந்த நிறுவனர்கள் எகிப்திய நாட்டுப்புறக் கதைகளில் இருந்து அவற்றை பெற்றுக்கொண்டனர். நைல்நதியின் ஆண்டுவெள்ளப்பெருக்கு வடியத் தொடங்கியபின் தோன்றும் முதல் குன்று இவ்வுலகின் மறுபிறப்பு அடைவதன் குறியீடு. அதைத்தான் இந்த முத்திரை சுட்டுகிறது.
மோயர்ஸ்: நீங்கள் சிலசமயம் உங்களுடைய சொந்த நம்பிக்கை மீதே ஏற்படும் முரண்பாட்டால் என்னை குழப்புகிறீர்கள். அதாவது ஒருபக்கம், நீங்கள் பகுத்தறிவுக் காலகட்டத்தால் உருவாக்கப்பட்டவர்களும் அதிலிருந்து உத்வேகம் அடைந்தவர்களுமான இவர்களை புகழ்கிறீர்கள். இன்னொருபக்கம், ஸ்டார் வார்ஸ் படத்தில் லியுக் ஸ்கைவாக்கர் "கம்ப்யூட்டரை அணைத்துவிட்டு உங்கள் சொந்த உணர்வுகளை நம்புங்கள்" என்று கூறியதற்காக அந்த பாத்திரத்தை மதிக்கிறீர்கள். எப்படி நீங்கள் அறிவியலின் செயல்பாட்டிற்கும் (அதாவது பகுத்தறிவுக்கும்) மதத்தின் செயல்பாட்டிற்கும் (அதாவது நம்பிக்கைக்கும்) இடையே ஒத்திசைவைக் காண்கிறீர்கள்?
கேம்ப்பெல்: இல்லை.. இல்லை. நீங்கள் பகுத்தறிவையும் சிந்தனையையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
மோயர்ஸ்: பகுத்தறிவையும் சிந்தித்தலையும் பிரித்துக்கொள்வதா? சிந்திக்கும் போது நான் விஷயங்களை பகுத்தறிவதில்லையா?
கேம்ப்பெல்: ஆம். நீங்கள் பகுத்தறிவது ஒரு வகையான சிந்தனைதான். ஆனால் நீங்கள் ஒன்றைப் பற்றி சிந்திப்பது பகுத்தறிதல் என்றாக வேண்டியதில்லை. உதாரணமாக ஒரு சுவரை தகர்த்து உள்நுழைவது எப்படி என சிந்திப்பது பகுத்தறிவு அல்ல. ஒரு எலி அதை செய்துவிடும். தன் மூக்கால் அந்த சுவரை உரசி ஏதேனும் ஒரு வழியைக் கண்டுபிடித்து உள்ளே சென்றுவிடும். நாம் யோசிப்பது போல அதுவும் யோசிக்கிறது. ஆனால் அது பகுத்தறிவு அல்ல. பகுத்தறிவு என்பது பிரபஞ்சத்தின் இருத்தலுக்கான அடிப்படையையும், பிரபஞ்ச ஒழுங்கின் அடிப்படைக் கட்டுமானத்தையும் கண்டுகொள்வது.
மோயர்ஸ்: அப்படியானால், அவர்கள் ’கடவுளின் விழியாக இருப்பது பகுத்தறிவு’ என பேசிக்கொள்ளும் போது, நாம் ஒரு சமூகமாக நாகரீக இனமாக மக்களாக இருப்பது பிரபஞ்சத்தின் அடிப்படை குணத்தில் இருந்து வருகிறது என்று அவர்கள் சொல்கிறார்களா?
கேம்ப்பெல்: அதைத்தான் அந்த முதல் பிரமிட் சொல்கிறது. அது இந்த உலகத்திற்கான பிரமிட், நமது சமூகத்தின் பிரமிட். உலகமும் சமூகமும் ஒரே ஒழுங்கில் இருப்பவை. கடவுளின் படைப்பு இது, நமது சமூகம் இது.
மோயர்ஸ்: விலங்காற்றலின் வழியிலான தொன்மங்கள் நம்மிடம் உண்டு. பூமி கருவாக இருந்தது (seeded earth) என்ற தொன்மங்கள் உண்டு - அதாவது கருவுறுதல், படைத்தல், அன்னைத்தெய்வம் ஆகியவை பற்றிய தொன்மங்கள். மேலும் விண்னொளி, சொர்க்கம் ஆகியவற்றிறின் வழியிலான தொன்மங்கள் உண்டு. ஆனால் இன்றைய நவீன காலத்தில் நாம் விலங்காற்றலையும், இயற்கையையும், கருவாக இருந்த பூமியையும் கடந்து சென்றுவிட்டோம். நட்சத்திரங்கள் நமக்கு விண்வெளிப் பயணத்திற்கான களம் என்பதைத் தவிர ஆர்வமூட்டுவதில்லை. மனிதனுடைய வழியிலான தொன்மமும் நம்மிடம் உண்டு, அதில் நாம் இப்போது எங்கிருக்கிறோம்?
கேம்ப்பெல்: நீண்டகாலத்திற்கு வருமாறு ஒரு தொன்மத்தை நாம் வைத்திருக்க முடியாது. விஷயங்கள் தொன்மங்களாக ஆவதற்கு மிகவிரைவாக மாறிக்கொண்டிருக்கின்றன.
மோயர்ஸ்: பிறகு, தொன்மங்கள் இல்லாமல் நாம் எப்படி வாழ்வது?
கேம்ப்பெல்: தனிமனிதன் தன் வாழ்க்கைக்கு பொருந்தும் ஒரு புராணஅம்சத்தை கண்டறிய வேண்டும். அடிப்படையில் தொன்மங்கள் நான்கு பணிகளை ஆற்றுகின்றன. முதல் பணி, மறைஞான செயல்பாடு - இதைத்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன், பிரபஞ்சம் எவ்வளவு அற்புதமானது என்பதையும் நீங்கள் எவ்வளவு அற்புதமானவர் என்பதையும் உணர்வது, மேலும் இந்த மர்மங்களுக்கு முன் நின்று அதன் பிரமிப்பை அனுபவிப்பது. தொன்மங்கள் மர்மத்துடைய பரிமாணத்தை திறக்கிறது, அனைத்திற்கும் அடியில் திகழும் மர்மங்களையும் திறக்கிறது. அதை நீங்கள் இழந்தால், உங்களுக்கு தொன்மம் இருக்காது. ஒருவேளை, மர்மங்கள் அனைத்தின் வழியாகவும் வெளிப்படும் என்றால், இந்த பிரபஞ்சம் முன்பு இருந்ததைப் போலவே ஒரு புனிதச்சித்திரமாக ஆகும். நீங்கள் எப்போதுமே உங்களின் நிஜவுலகநிலை வழியாகவே ஆழ்நிலையின் (transcendent) மர்மங்களை அடைகிறீர்கள்.
இரண்டாவது பணி, பிரபஞ்சப்பார்வை. விஞ்ஞானம் அக்கறை கொண்டுள்ள பார்வை. பிரபஞ்சம் தான் என்ன வடிவில் உள்ளதோ அதை உங்களுக்கு காட்டுகிறது, ஆனால் அவ்வாறு காட்டிக்கொண்டிருக்கும் போதே, மர்மமும் சேர்ந்துவிடுகிறது. இன்று நாம் அறிவியலாளர்களிடம் அனைத்து விடைகளும் இருப்பதாக எண்ணிக்கொள்ள முனைகிறோம். ஆனால் மகத்தான அறிவியலாளர் ஒருவர் இதற்கு பதிலளித்தார்: "இல்லை. நாங்கள் எல்லா விடைகளையும் அடையவில்லை. எவ்வாறு ஒன்று செயல்படுகிறது என்பதை நாங்கள் கூறுகிறோம். ஆனால் அது என்ன என்பதையல்ல" நீங்கள் ஒரு நெருப்புக்குச்சியை உரசுகிறீர்கள், தீ வருகிறது. தீ என்பது என்ன? ஆக்சிஜனேற்றம் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நீங்கள் உண்மையில் தீ என்பது என்ன என்று சொல்லவில்லை.
மூன்றாவது பணி சமூகவியல் சார்ந்தது. ஒரு குறிப்பிட்ட சமூகஒழுங்கைத் தாங்கிப்பிடிப்பதும் அதை உறுதிசெய்வதுமாகும். இங்கேதான் தொன்மங்கள் இடத்திற்கு இடம் பெருமளவில் வேறுபடுகின்றன. பலஇணை மணவாழ்க்கைக்கான தொன்மங்களும் உண்டு, ஒருஇணை மணவாழ்க்கைக்கான தொன்மங்களும் உண்டு. இரண்டில் ஒன்று உங்களுக்கு ஏற்புடையது, அது நீங்கள் இருக்குமிடத்தைப் பொருத்தது. தொன்மங்களின் இந்த சமூகப்பயன்பாடுதான் நம்முடைய உலகில் மிக அதிகமாக இருப்பது. ஆனால் அது காலாவதியானது.
மோயர்ஸ்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
கேம்ப்பெல்: நடத்தை நெறிகள். ஒரு நல்ல சமூகத்தில் இருக்கும் சட்டங்களைப் போல வாழ்க்கைக்கான சட்டங்கள் இருக்க வேண்டும். யஹோவாவின் புத்தகத்தின் பலப்பல பக்கங்களில் இருக்கும் நெறிமுறை குறிப்புகள் போல, எந்த வகையான ஆடைகளை அணிய வேண்டும், ஒவ்வொருவரிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதுபோல பல குறிப்புகள், அவை பொ.மு. முதல் ஆயிரம் ஆண்டுகளைச் சேர்ந்தவை.
ஆனால் புராணங்களின் நான்காவது பணி ஒன்று உண்டு. அதனுடன்தான் இன்று ஒவ்வொருவரும் தொடர்புகொள்ள முயலவேண்டும் என நான் நினைக்கிறேன். அதுதான் 'கற்றல் நோக்கு' (Pedagogical) - எந்தவொரு சூழலிலும் மனிதவாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதை கற்கும் செயல்பாடு. தொன்மங்கள் உங்களுக்கு அதை கற்றுத்தர முடியும்.
மோயர்ஸ்: ஆகவே நாம் இவ்வளவு நீண்டகாலமாக அறிந்திருந்த மற்றும் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்ட பழங்கதைகள் இப்போது வேலை செய்யவில்லையா? நாம் புதிய ஒன்றை இன்னமும் கற்றுக்கொள்ளவில்லையா?
கேம்ப்பெல்: மேற்குலகில் இப்போதுவரை நமக்கு இருக்கும் கதை என்பது விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் பார்வையிலான பிரபஞ்சம் பொ.மு. முதல் ஆயிரம் ஆண்டுகளை சேர்ந்தது. பிரபஞ்சம் அல்லது மனிதனின் மாண்பை பற்றி இன்று நாம் கொண்டுள்ள கருதுகோளுடன் அக்கதைகள் இசைவுகொள்வதில்லை. அது முழுவதுமாக வேறெங்கோ உள்ளது. இயற்கையின் ஞானத்துடன் மீண்டும் இசைவுகொள்வதற்கு நாம் கற்க வேண்டும். மேலும் விலங்குகளுடனும், நீருடனும், கடலுடனும் நாம் கொண்டிருந்த சகோதரத்துவத்தை மீண்டும் உணரவேண்டும். தெய்வீகம் உலகத்திலும் அனைத்திலும் உள்ளது என்ற பார்வையை 'அனைத்திறைவாதம்' (pantheism) என சொல்லி கண்டிக்கின்றது. ஆனால் அனைத்திறைவாதம் என்பது ஒரு திசைதிருப்பும் சொல். அச்சொல் கூறுவது என்னவென்றால், இவ்வுலகில் உள்ளுறைந்த தெய்வம் ஒன்று உள்ளது என்பது. ஆனால் இதுவல்ல அக்கருத்து சொல்வது. அதன் கருத்தென்பது ’அனைத்திற்கும் அப்பால் உள்ள இறை’ (Trans-theological). அது வரையறுக்க முடியாத, அறிந்துகொள்ளவும் முடியாத மர்மம். அதை ஒரு ஆற்றலாக கருதிக்கொண்டால் அதுதான் அனைத்து உயிர்களுக்கும் வாழ்க்கைக்கும் ஊற்றுமுகமாகவும், ஆதாரத்தளமாகவும், முடிவாகவும் இருக்கிறது.
மோயர்ஸ்: இயற்கை தெய்வீகமானது என்னும் தொல்காலக் கருத்தை நவீன அமெரிக்கர்கள் நிராகரித்துவிட்டதாக நீங்கள் எண்ணவில்லையா? ஏனெனில் அக்கருத்து நம்மை இயற்கையை ஆக்கிரமிப்பதிலிருந்து விலக்கி வைக்கும். கடவுளைக் கொல்லாமல் நீங்கள் எப்படி மரங்களை வெட்டவும், நிலவளத்தை வேரோடு அழிக்கவும், நதிகளை குடியிருப்பு மனைகளாகவும் மாற்ற இயலும்?
கேம்ப்பெல்: ஆம். ஆனால் அது நவீன அமெரிக்கர்களின் வெறும் ஒரு குணம் அல்ல. அது அவர்கள் சொந்த மதங்களிலிருந்து பெற்றது, தாங்கள் கொண்டுவந்தது, குறிப்பாக இங்கிலாந்திலிருந்து கொண்டுவந்தது. அது விவிலியத்தின் இயற்கை மறுப்புவாதம். கடவுள் இயற்கையிலிருந்து வேறுபட்டவர், இயற்கை கடவுளால் மறுதலிக்கப்பட்டிருக்கிறது. நாம் இவ்வுலகின் அதிபர்களாக வேண்டும் என்பது தொடக்கநூலிலேயே (Genesis) உள்ளது. ஆனால் நாம் எங்கிருந்தோ இந்த பூமிக்கு வந்தவர்கள் என்று எண்ணாமல் இந்த பூமியில் இருந்தே தோன்றியவர்களாக நம்மை எண்ணுவோமேயானால், நாம்தான் இந்த பூமி, நாம்தான் இந்த பூமியின் மனசாட்சி என்பதை நீங்கள் உணர்வீர்கள். நம் விழிகள்தான் பூமியின் விழிகள். நம் குரலே பூமியின் குரல்.
மோயர்ஸ்: அறிவியலாளர்கள் இப்போது கயா (GAIA) கோட்பாட்டைப் பற்றி மிக வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
கேம்ப்பெல்: சரியாகச் சொன்னீர்கள். இந்த மொத்த பூமியையே ஒரு வாழும் உயிரினமாகக் கருதுவது.
மோயர்ஸ்: அன்னை பூமி. இந்த படிமத்திலிருந்து புதிய தொன்மங்கள் தோன்றுமா?
கேம்ப்பெல்: ஏதாவது தோன்றலாம். நீங்கள் இன்றிரவு காணப்போகும் கனவை கணிப்பதைவிட அதிகமாக இனிவரப்போகும் தொன்மங்களைப் பற்றி கணித்துவிட முடியாது. தொன்மங்களும் கனவுகளும் ஒரே இடத்தில் இருந்துதான் வருகின்றன. குறியீட்டு வடிவில் தன்னை வெளிப்படுத்தவேண்டும் என்று உணர்ந்துகொண்ட ஏதோவொன்றிலிருந்து இவை வருகின்றன.
இந்நகரத்தைப் பற்றியோ, இம்மக்களைப் பற்றியோ அல்லாமல் அனைவரையும் உள்ளடக்கிய இந்தப் புவியைப் பற்றி பேசுகின்ற தொன்மம் மட்டும்தான் இனி உடனடியாக வருகின்ற காலத்தில் நாம் எதிர்பார்க்கக்கூடிய ஒரே தொன்மம்.
எதிர்காலத் தொன்மம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய என்னுடைய முதன்மை எண்ணமும் இதுதான்
மேலும் அது எவற்றை கையாள வேண்டுமோ மிகச்சரியாக அவற்றை ஏற்கனவே அனைத்து புராணங்களும் கையாண்டுள்ளன. அவை என்னவென்றால், தனிமனிதனின் முதிர்வு - அதாவது, சார்ந்துவாழும் குழந்தை மற்றும் இள நிலையிலிருந்து பருவவயது, பின் முதிர்ந்த வயது வழியாக வெளியேறுதலை நோக்கி செல்லுதல்; மேலும் சமூகத்துடன் தொடர்பு கொள்வது மற்றும் இந்த சமூகத்தை இயற்கை மற்றும் பிரபஞ்ச உலகத்துடன் தொடர்புபடுத்துவது போன்றவைதான். இவைகளைப் பற்றித்தான் புராணங்கள் அனைத்தும் பேசியிருக்கின்றன. இனி உருவாகப் போகும் புதிய புராணமும் பேசுவதற்கு இருப்பது இதுதான். ஆனால் சமூக அளவில் அது பேசவேண்டியது இந்த பூமிக்கான சமூகத்தைப் பற்றித்தான். இது நடக்கும்வரை, உங்களுக்கு எந்த தொன்மமும் இல்லை.
மோயர்ஸ்: ஆகவே இதிலிருந்து நமது காலத்திற்கான புதிய தொன்மங்கள் தொடங்குகிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
கேம்ப்பெல்: ஆம். இதுதான் ஒரு தொன்மம் இருக்க வேண்டியதற்கான தளம். இது முன்னரே இங்கிருக்கின்றது. அதுதான் பகுத்தறிவின் விழி. ’பகுத்தறிவின் விழி’ என்னுடைய நாட்டினுடையதல்ல; ’பகுத்தறிவின் விழி’ என்னுடைய மதக்குழுவினுடையதல்ல; ’பகுத்தறிவின் விழி’ என்னுடைய மொழிக்குழுவினுடையதல்ல. புரிகிறதா உங்களுக்கு? இது இந்த புவிக்கான தத்துவம். இந்த குழுவிற்கோ, அந்த குழுவிற்கோ அல்லது எந்தவொரு குழுவிற்கோ சொந்தமானதல்ல. நீங்கள் இந்த பூமியை நிலாவில் இருந்து காணும்போது இதில் நாடுகளாலோ மாநிலங்களாலோ ஆன பிரிவுகள் எதுவும் உங்கள் பார்வைக்கு தென்படாது. இதுவே ஒரு புதிய தொன்மம் உருவாவதற்கான குறியீடாக இருக்கலாம். அப்படி ஒரு நாட்டைத்தான் நாம் கொண்டாட முனைவோம். அந்த மக்களுடன்தான் நாம் ஒன்றாகியிருப்போம்.
Chief Seattle |
மோயர்ஸ்: ’சீய்ஃப் சியாட்டில்’ (Chief Seattle) அவர்களுக்கு பிறகு வேறு யாரும் இந்த நெறிகளை எனக்கு இவ்வளவு தெளிவாக சொல்லியதில்லை.
கேம்ப்பெல்: தொல்காலத்து நெறிகளை பற்றி இறுதியாகப் பேசியவர்களில் ஒருவர் ’சீய்ஃப் சியாட்டில்’. 1852-ல் அமெரிக்க அரசாங்கம் புதிய மக்களின் குடியேற்றத்திற்காக பழங்குடி மக்களின் நிலங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக அற்புதமானவொரு கடிதத்தை சியாட்டில் எழுதினார். உண்மையில் அவருடைய கடிதம் வெளிப்படுத்திய நெறிகளை பற்றியதே நமது இந்த முழு உரையாடலும்.
"வாஷிங்டனிலிருந்து ஜனாதிபதி நமது நிலங்களை விலைக்கு வாங்க விரும்புவதாக கடிதம் அனுப்பியிருக்கிறார். ஆனால் அவர் எவ்வாறு இந்த ஆகாயத்தை வாங்கவோ விற்கவோ முடியும்? நிலத்தை எப்படி வாங்க முடியும்? இந்த கருத்தே நமக்கு அந்நியமாக உள்ளது. காற்றின் பொலிவும் நீரின் மிளிர்வும் நம்முடையதல்லாத போது அவற்றை நாம் எவ்வாறு விலைக்கு வாங்கமுடியும்?”
“இந்த புவியின் ஒவ்வொரு பகுதியும் என் மக்களுக்கு புனிதமானது. மின்னும் ஒவ்வொரு ஊசிமரங்களும், ஒவ்வொரு கடற்கரை மணற்பருவும், அடர்ந்த காட்டின் ஒவ்வொரு பனிமுகிலும், ஒவ்வொரு புல்லிதழும், ரீங்கரிக்கும் ஒவ்வொரு பூச்சிகளும் என அனைத்தும் என் மக்களுக்கு புனிதமானது. என் மக்களின் நினைவிலும் அனுபவத்திலும் நிறைந்திருக்கும் இவையனைத்தும் புனிதமானது. நாளங்களில் ஓடும் குருதியை நாம் அறிவது போல மரங்களுக்குள் ஓடும் சாற்றையும் நாங்கள் அறிவோம். நாங்கள் இப்பூமியின் ஒரு பகுதியினர். பூமி எங்களில் ஒரு பகுதி. நறுமணம் பரப்பும் மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும், கரடியும், கழுகும் எங்களது சகோதரர்கள். பாறைமுகடுகளும், பசும்புல்லின் சாறும், குதிரையின் உடற்சூடும், மனிதனும் ஒரே இனத்தவை”
“நதிகளிலும் ஓடைகளிலும் பளபளத்து ஓடுவது வெறும் நீரல்ல, எங்கள் மூதாதாயர்களின் குருதி. நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்போமேயானால் அது புனிதமானது என்பது உங்கள் நினைவில் இருக்க வேண்டும். ஏரியின் தூய நீரில் ஆடும் ஒவ்வொரு பிரதிபலிப்பும் என் மக்களின் நினைவுகளையும், வாழ்க்கை நிகழ்வுகளையும் சொல்கிறது. ஓடும் நீரின் சலசலப்போசை என் முதுதந்தையின் குரல்.
நதிகள் எங்களது உடன்பிறப்புகள். எங்கள் தாகத்தை அவர்கள் தணிக்கிறார்கள். எங்கள் படகுகளை ஏந்திக்கொள்கிறார்கள், எங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கிறார்கள். ஆகவே நீங்கள் உங்கள் சகோதரரிடம் காட்டும் அதே கனிவை நதியிடமும் காட்டவேண்டும்.
நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்போமேயானால் நினைவில் கொள்ளுங்கள், அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக இருந்து தன் ஆன்மாவைப் பகிர்ந்து கொள்ளும் காற்று எங்களுக்கு பொக்கிஷமாகும்.
எங்கள் மூதாதையாருக்கு முதல் சுவாசத்தை அளித்த காற்று அவர்களின் இறுதி மூச்சையும் பெற்றுக்கொள்கிறது. அதே காற்றுதான் எங்கள் குழந்தைகளுக்கு வாழ்வுணர்வையும் அளிக்கிறது. ஆகவே நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்போமேயானால் நீங்கள் அதை பாதுகாத்து புனிதமாகக் கருதி புல்வெளிமலர்களால் இனிதாக்கப்பட்ட காற்றை சுவைக்க மனிதர்கள் அங்கு வந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.
நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு கற்பித்தவற்றை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கற்பிப்பீர்களா? இந்த பூமி நமது அன்னை என்று? எது பூமியை தோற்றுவித்ததோ அதுவே இந்த பூமியின் குழந்தைகள் அனைவரையும் தோற்றுவித்திருக்கிறது.
பூமி மனிதனைச் சார்ந்து இருக்கவில்லை. மனிதன்தான் பூமியை சார்ந்து இருக்கின்றான் என்பதை நாங்கள் அறிவோம். நாமனைவரையும் இணைக்கும் குருதி போல இங்கிருக்கும் ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டிருக்கிறது. மனிதன் இந்த வாழ்க்கை வலையை நெய்யவில்லை. அவ்வலையில் அவன் ஒரு இழை மட்டுமே. இந்த வலைக்கு அவன் செய்யும் ஒவ்வொன்றும் அவன் தனக்குத்தானே செய்துகொள்வதுதான்.
ஒன்று மட்டும் நாங்கள் அறிவோம். எங்கள் கடவுள் உங்களுக்கும் கடவுளே. இந்த பூமி அவருக்கு மதிப்பு மிக்கது. பூமிக்கு தீங்கிழைப்பதென்பது அதைப் படைத்தவர் மேல் அவமதிப்பை குவிப்பதாகும்.
நீங்கள் சென்றடையும் எல்லை எங்களுக்கு புதிராக உள்ளது. உணவிற்காக அனைத்து எருதுகளும் வெட்டப்பட்டால் என்ன ஆகும்? காட்டுக்குதிரைகள் அடிமைப்படுத்தப்பட்டால்? வனங்களின் இரகசிய மூலைகள் மனிதஉடல்களின் வாசனைத் திரவியங்களால் நிரப்பப்பட்டாலோ, கனிந்த மலைகள் தந்திக்கம்பிகளால் கறையாக்கப்பட்டாலோ என்ன நிகழும்? செறிந்த புதர்கள் எங்கிருக்கும்? மறைந்துபோகும். கழுகுகள் எங்கிருக்கும்? தொலைந்துபோகும். மேலும் விரைந்தோடும் குதிரைகளுக்கும், கானாடல்களுக்கும் விடையளித்துவிட்டால் என்ன ஆகும்? அதுதான் வாழ்தலின் முடிவும் பிழைத்திருப்பதன் துவக்கமும் ஆகும்.
இறுதிப் பூர்வகுடி மனிதனும் தனது கானக வாழ்க்கையுடன் மறைந்து, அவன் நினைவுகள் மட்டும் புல்வெளி கடக்கும் முகிலின் நிழல் போல் ஆகுமேயானால், கடற்கரைகளும் காடுகளும் இங்கே நீடிக்குமா? என் மக்களின் ஒரு ஆன்மாவாவது எஞ்சுமா?
தாயின் இதயத்துடிப்பை விரும்பும் சிசு போல் நாங்கள் இந்த பூமியை நேசிக்கின்றோம். ஆகவே நாங்கள் இந்த பூமியை உங்களுக்கு விற்போமேயானால், நாங்கள் இதை நேசித்ததைப் போலவே நீங்களும் நேசியுங்கள். நாங்கள் அக்கறையுடன் இருந்ததைப் போலவே நீங்களும் இதன் மீது அக்கறை கொள்ளுங்கள். நீங்கள் இதைப் பெறுகையில் இருந்த நிலத்தின் நினைவுகளை உங்கள் மனதில் இருத்திக்கொள்ளுங்கள். நம் பிள்ளைகளுக்காக இந்நிலத்தை பத்திரப்படுத்துங்கள். கடவுள் நம்மை விரும்புவதைப்போல நீங்கள் இதை விரும்புங்கள்.
நாங்கள் இந்நிலத்தின் ஒரு அங்கம் என்பதைப்போல நீங்களும் இதன் ஒரு அங்கம்தான். எங்களுக்கு இப்பூமி விலைமதிப்பற்றது. உங்களுக்கும் இது விலைமதிப்பற்றதே. ஒன்று மட்டும் நாங்கள் அறிவோம். இங்கே இருப்பது ஒரே ஒரு கடவுள். மனிதனாக இருப்பவன் அவன் ஐரோப்பியனோ அல்லது அமெரிக்கப் பூர்வகுடியோ, தனித்திருக்க முடியாது. எல்லா வழியிலும் நாம் அனைவரும் சகோதரர்களே.”
(தொடரும்…)
மொழிபெயர்ப்பு - பூபதி துரைசாமி
--------------------------------------------------------------
மோயர்ஸ் மற்றும் கேம்ப்பெல் |
பூபதி துரைசாமி |
பூபதி துரைசாமி. கோவையில் வசிக்கிறார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகளில் இருந்து கலை, இலக்கியம், வரலாறு, தத்துவம் இவற்றில் ஆர்வம் பெற்று தேடல் கொண்டிருப்பவர்.